Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு! 17 Dec, 2025 | 10:54 AM யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (16) எழுவைதீவு பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். எழுவைதீவு ஆரம்ப பாடசலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு மேலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள் ,மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது பாடசாலையின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டனர். மேலும் எழுவைதீவு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்குள்ள ஐந்து கிணறுகளை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அவற்றை மீண்டும் மக்களின் பாவனைக்காக புனரமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. தற்போது நிதி ஒதுக்கீட்டின் கீழ் எழுவைதீவில் நடைபெற்று வருகின்ற வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களினையும் நேரடியாக பார்வையிட்டார். அத்தோடு அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலினால் கண்ணகி அம்மன் இறங்குதுறை பாரியளவில் சேதமடைந்து ஆபத்தான நிலைமையில் காணப்படுவதை அவதானித்த அரசாங்க அதிபர் இது தொடர்பாக மதிப்பீடு தயாரித்து வீதி அபிவிருத்தி திணைக்களத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இக் களவிஜயத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் ,உள்ளக கணக்காய்வாளர் , உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233604
  2. மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு நிதர்ஷன் வினோத் மண்டைதீவு புதைகுழி வழக்கு அறிக்கை ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், செவ்வாய்க்கிழமை (16) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து புதன்கிழமை (17) சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்,மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதாக திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (16) அன்று குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த வழக்கு தொடர்பாக அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடர்பான கிடைக்க பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின் அறிக்கையை எழுத்து மூலமாக நீதிமன்றில் சமர்ப்பித்தனர். கையால் எழுதிய குறித்த அறிக்கையையாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி சமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சில் பிரதியாக்கம் செய்து (17.12.2025) அன்று மீண்டும் அறிக்கை சமர்பிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். முன்பதாக மண்டைதீவு புதைகுழி தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கடந்த செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், கருணாகரன் நாவலன் திருநாவுக்கரசு சிவகுமாரன், செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரின் பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அந்தக் கிணறுகளை சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 புதன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரினால் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து இவ் வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் பல வருடங்கள் கடந்த விஷயம் என்பதால் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியமையால் வழக்கு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு டிசம்பர் 16 ஆம் திகதியான இன்று மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நாளை தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/மண்டைதீவு-புதைகுழி-வழக்கு-தட்டச்சு-வடிவ-அறிக்கைக்கு-உத்தரவு/175-369659
  3. டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும் December 15, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த மே மாதத்தில் மூண்ட போரை நிறுத்தியது தானே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையறாது கூறிவருகிறார். இரு நாடுகளினதும் இராணுவ உயர்மட்டங்களில் இடம்பெற்ற தொடர்பாடல்களை அடுத்தே அன்று மோதல்களை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக புதுடில்லி திட்டவட்டமாக கூறிவருகின்ற போதிலும், ட்ரம்ப் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை. இரு தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாக இதுவரையில் அமெரிக்க ஜனாதிபதி சுமார் 70 தடவைகள் கூறியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. அவர் இறுதியாக கடந்த புதன்கிழமை பென்சில்வேனியா மாநிலத்தின் நகரொன்றில் நிகழ்த்திய உரையில் அதை கூறியிருக்கிறார். இரண்டாவது தடவையாக பதவிக்கு வந்த பின்னரான 10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியிருப்பதாக அவர் பெருமையுடன் உரிமை கோருகிறார். மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான இரு வருடகாலப் போர், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர், தென்கிழக்காசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான போர், ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான போர், எகிப்துக்கும் எதியோப்பியாவுக்கும் இடையிலான போர், சேர்பியாவுக்கும் கொசோவோவுக்கும் இடையிலான போர் மற்றும் ஆபிரிக்க நாடுகளான ருவாண்டாவுக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கும் இடையிலான போர் ஆகியவையே ட்ரம்ப் நிறுத்தியதாகக் கூறும் போர்களாகும். இந்த போர்களை பெரும்பாலும் வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக அல்லது அதிகரிக்கப்போவதாக அச்சுறுத்தியதன் மூலமே நிறுத்தியதாகவும் கூறிய அவர் இந்த சர்வதேச மோதல்களை நிறுத்தி உலகில் சமாதானத்துக்காக பாடுபடுவதற்காக தனக்கு 2025 நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் தானாகவே கேட்டார். அவருக்கு அந்த சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அதற்கு நியமனங்களை செய்வதற்கான காலஅவகாசம் கடந்த ஜனவரியில் முடிவடைந்த பிறகு சிபாரிசு செய்தவர்களில் போர்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு பிறகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவும் ஒருவர். ஆனால், இறுதியில் ட்ரம்பினால் சர்வதேச உதைபந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் சமாதானப்பரிசை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலக உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் நடைபெற்ற விமரிசையான நிகழ்வில் வைத்து வழங்கப்பட்ட அந்த பரிசும் கூட சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதிக்கு சமாதானப் பரிசை வழங்கியதன் மூலம் அரசியல் நடுநிலை தொடர்பிலான சம்மேளனத்தின் ஆட்சிக்குழுவின் விதிமுறைகளை மீறியதாக அதன் தலைவர் கியானி இன்பான்ரினோ மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு சம்மேளனத்தின் ஒழுங்கு கட்டுப்பாட்டுக் குழுவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. தன்னால் நிறுத்தப்பட்டதாக ட்ரம்ப் கூறிய எந்தவொரு போரிலும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையிலான பதற்றநிலை இன்னமும் தணிந்ததாக இல்லை. காசாவிலும் சூடானிலும் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள், உக்ரெயின் மீது ரஷ்யா தொடர்ந்து மேற்கொண்டுவரும் தாக்குதல்கள், கொங்கோவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெறும் சண்டைகள், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள், மியன்மார் இராணுவத்தின் விமானக்குண்டு வீச்சுக்கள் மற்றும் அமெரிக்காவில் அதிகரித்துவரும் அரசியல் வன்முறைகளை அலட்சியம் செய்தால் மாத்திரமே ட்ரம்ப் உலகில் சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று எம்மால் கற்பனை செய்துபார்க்க முடியும். கடந்த ஜூலையில் இராணுவ மோதல்களை நிறுத்திய தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் கடந்த வாரம் மீண்டும் மோதல்கள் மூண்டிருந்தன. ட்ரம்பின் உதவியுடன் பிரகடனம் செய்யப்பட்ட போர் நிறுத்தம் எந்தளவுக்கு சஞ்சலமானதாக இருக்கிறது என்பதை இந்த புதிய மோதல்கள் வெளிக்காட்டுகின்றன. இரு தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையில் மீண்டும் சண்டை மூண்டிருப்பது குறித்து பென்சில்வேனியா உரையில் குறிப்பிட்ட ட்ரம்ப் மோதல்களை நிறுத்துவதற்கு அவற்றின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசவிருப்பதாக அறிவித்தார். ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் போரை நிறுத்தப் போவதாக வேறு எவரினால் கூறமுடியும் என்றும் அவர் கேட்டார். தன்னைத் தவிர வேறு எவரினாலும் அவ்வாறு செய்ய முடியாது என்று அவர் மார்தட்டுகிறார். தனது முதலாவது பதவிக்காலத்தில் உலகின் எந்த பாகத்திலும் போருக்கு அமெரிக்கப்படைகளை அனுப்பவில்லை என்று பெருமையாகக் கூறிய ட்ரம்ப் தற்போது இரண்டாவது பதவிக்காலத்தில் தனது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மூலமாக பல பிராந்தியங்களில் பதற்றநிலை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறார். டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிறீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதற்கும் பனாமா கால்வாயை அமெரிக்காவுக்கு சொந்தமாக்குவதற்கும் படைகளை அனுப்புவதற்கான சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை என்று முன்னர் கூறிய அவர், தற்போது எண்ணெய் வளமிக்க தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையில் இராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறார். போதைப் பொருளுக்கு எதிரான போரில் மெக்சிக்கோவிற்குள் தாக்குதல் நடத்துவது குறித்தும் அவர் ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரானவை என்று கூறிக்கொண்டு கரிபியன் மற்றும் பசுபிக் கடற்பிராந்தியங்களில் கடந்த சில வாரங்களாக தாக்குதல்களை நடத்துவதன் மூலமாக வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மடுரோ மீது அமெரிக்கா நெருக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 1989 ஆம் ஆண்டில் பனாமா ஆக்கிரமிப்பிற்கு பிறகு கரிபியன் கடற்பரப்பில் பெருமளவில் அமெரிக்கப் படைக்குவிப்பு தற்போதுதான் இடம்பெற்றிருக்கிறது. வெனிசூலாவின் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுவிட்டதாக கருதப்பட வேண்டும் என்று இரு வாரங்களுக்கு முன்னர் ட்ரம்ப் கூறினார். கரிபியன் கடற்பரப்பில் வெனிசூலா மீது தாக்குதல் நடத்தக்கூடிய தூரத்திற்குள் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தரித்துநிற்கின்றன. போதைப்பொருளை கடத்திச்செல்வதாக கூறப்படும் படகுகள் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதல்களில் அண்மைய வாரங்களில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று வாஷிங்டனால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குழுமம் ஒன்றின் தலைவராக ஜனாதிபதி மடுரோ செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசாங்கம் அதற்கு திட்டவட்டமான சான்று எதையும் இதுவரை முன்வைக்கவில்லை. வெனிசூலாவுக்கு எதிரான தடைகளை ட்ரம்ப் விரிவுபடுத்தியிருப்பதுடன் ஏற்றுமதிக்கு தடைசெய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் சென்றதாக குற்றஞ்சாட்டி வெனிசூலா கரையோரமாக கப்பல் ஒன்றை அமெரிக்கா டிசம்பர் 10 ஆம் திகதி கைப்பற்றியது. கரிபியனில் ‘கடற்கொள்ளை யுகம்’ ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி தோற்றுவிக்கிறார் என்று மடுரோ குற்றஞ்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற வெனிசூலாவின் வலதுசாரி எதிர்க்கட்சி தலைவியான மரியா கொரினா மச்சாடோ முழுமையாக ஆதரிக்கிறார். ஹியூகோ ஷாவேஸின் மறைவைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் இருந்து வெனிசூலாவின் ஜனாதிபதியாக பதவியில் இருந்துவரும் (சோசலிசவாதி என்று தன்னைக்கூறிக்கொள்ளும் ) மடுரோ 2024 ஜனாதிபதி தேர்தலில் மோசடிகளைச் செய்து வெற்றிபெற்றதாகக் குற்றச்சாட்டப்படுகிறது. அவரது ஆட்சியில் பொருளாதாரம் படுமோசமான பின்னடைவைக் கண்டதையடுத்து இலட்சக்கணக்கில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். வெனிசூலாவின் இன்றைய நிலைமைக்கு மடுரோ பொறுப்பு என்ற போதிலும், வாஷிங்டன் விதித்திருக்கும் தடைகளும் அந்த நிலைமைக்கு பெருமளவில் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. மடுரோவின் அரசாங்கத்தை மலினப்படுத்தும் ஒரு முயற்சியாக அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தரான ஜுவான் குவாய்டோவையே ஜனாதிபதியாக அங்கீகரித்திருந்தன. மடுரோ ஜனநாயக விரோதமாக எதேச்சாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிரான போராட்டத்தை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் துணிச்சலாக முன்னெடுக்கிறார் என்பதற்காகவே எதிர்க்கட்சி தலைவி மச்சாடோவுக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட்டது. கடந்த அக்டோபரில் சமாதானப்பரிசு அறிவிக்கப்பட்ட உடனடியாகவே அதை அமெரிக்க ஜனாதிபதிக்கு சமர்ப்பணம் செய்வதாக மச்சாடோ அறிவித்தார். மடுரோ ஆட்சிக்கு எதிரான ஜனநாயகப் போராட்ட இயக்கத்துக்கு ட்ரம்ப் தீர்க்கமான ஆதரவை வழங்கிவருவதற்காக அவருக்கு மச்சாடோ நன்றி தெரிவித்தார். கடந்த வருட தேர்தலுக்கு பிறகு மச்சாடோ தலைமறைவாக இருந்து வருகிறார். தனது மறைவிடத்தில் இருந்து இரகசியமாக கடல் மார்க்கமாக வெளியேறி நோர்வேக்குச் சென்று நோபல் சமாதானப் பரிசை தானே நேரடியாக சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி ஒஸ்லோவில் நடைபெற்ற வைபவத்தில் பெறுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. உரிய நேரத்துக்கு மச்சாடோவினால் ஒஸ்லோவைச் சென்றடைய முடியவில்லை. அதனால் அவரின் மகளே பரிசைப் பெற்றுக்கொண்டார். ஆனால் காலந்தாழ்த்தியேனும் ஒஸ்லோ சென்ற மச்சாடோவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பாவுக்கு வருவதற்கு அமெரிக்கா செய்த உதவிக்காக அவர் நன்றிகூறினார். வெனிசூலாவுக்குள் அமெரிக்க இராணுவத்தை அனுப்பி மடுரோவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ட்ரம்பின் திட்டத்துக்கு அமெரிக்க காங்கிரஸுக்குள் எதிர்ப்பு இருக்கிறது. கடந்த வாரம் எண்ணெய்க்கப்பல் கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கு பிறகு கருத்து தெரிவித்த ஜனநாயக கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் ட்ரம்ப் ‘நித்திரையில் போருக்குள் நடந்துசெல்கிறார்’ என்று வர்ணித்திருந்தார்கள். கரிபியன் கடற்பரப்பில் அமெரிக்கப்படைகள் நடத்திவரும் தாக்குதல்களில் குடிமக்கள் பலர் கொல்லப்படுவது அப்பட்டமான சர்வதேச சட்டமீறலாகும். மடுரோவின் ஆட்சியில் தன்மை எத்தகையதாக இருந்தாலும், அவருக்கு எதிரான ட்ரம்ப் நிருவாகத்தின் அச்சுறுத்தல்கள் வெனிசூலாவின் சுயாதிபத்தியத்தின் மீதான தாக்குதல்களேயாகும். கடந்த காலத் தவறுகளில் இருந்து அமெரிக்கா படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும். வியட்நாம் போர்க்காலத்தில் ஒரு கட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த றொபேர்ட் மக்னமாரா (பிறகு அவர் உலகவங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார்) ஜேர்மன் தத்துவஞானி ஹெகலின் கூற்று ஒன்றை நினைவு கூர்ந்தார் ; “வரலாற்றில் இருந்து எவரும் படிப்பினைகளைப் பெறுவதில்லை என்பதே வரலாற்றில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் படிப்பினையாகும்.” 9/ 11 தாக்குதல்களுக்கு பிறகு 2001 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்குள் படையெடுத்த அமெரிக்கா இருபது வருடக்களுக்கு பிறகு தலிபானகளுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்து வெளியேறுவதை தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. சதாம்ஹுசெயன் பேரழிவுதரும் ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பிறகு இடம்பெற்றவை உலகில் இடம்பெற்றிருக்கக்கூடிய படுமோசமான மனிதப் பேரவலங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது பல போர்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறி நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் வெனிசூலாவில் அதே தவறைச் செய்வதற்கு தயாராகும் அபத்தத்தைக் காண்கிறோம். https://arangamnews.com/?p=12529
  4. நெடுந்தீவில் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தினை திறந்து வைத்த சிறிதரன் எம்.பி செவ்வாய், 16 டிசம்பர் 2025 05:18 AM டித்வா புயலின் தாக்கத்தினால் நெடுந்தீவுகடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் 10 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்தொழிலாளர் சங்க கட்டடம் நேற்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினரால் , திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து , நாடாளுமன்ற உறுப்பினருடன், கடற்றொழில் சங்கம் மற்றும் சமாசங்களைச் சேர்ந்தவர்கள், தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , சவால்கள், தேவைகள் குறித்து கலந்துரையாடினர் அதன் போது, டித்வா புயலின் தாக்கத்தினால் கடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி தீர்வினை பெற்று தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார். https://jaffnazone.com/news/53261
  5. தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி , தமிழ்த் தேசிய பசுமை இயக்க தலைவர் பொ.ஐங்கரநேசன், ததேமமு செயலாளர் செகஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஷ், உத்தியோகபூர்வ பேச்சாளர் , ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் இவ்வாறு செல்லவுள்ளனர். இது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி கூறியுள்ளதாவது, சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வளண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது. தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக ஸ்ரீலங்கா அரசு, ஐக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது. இந்நோக்கத்திற்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளோம். – என்று தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=352658
  6. லட்சக் கணக்கான பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் அழிவு டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்காக நடமாடும் சேவைத் திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திருமதி. சசிதேவி ஜல்தீபன் தெரிவித்துள்ளார். அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2.2 மில்லியன் மக்களில், பாதிக்கும் மேற்பட்டோர் இந்த முக்கியமான ஆவணங்களை இழந்துள்ளதாக அத்திணைக்களம் மதிப்பிட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் பதிவுச் சான்றிதழ்கள் இலவசமாகவும், ஒரு நாள் துரித சேவை மூலமாகவும் வழங்கப்படுகின்றன. அத்துடன், மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் க்ளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் நடமாடும் சேவைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சான்றிதழ்கள் வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுவரை, கொட்டாவ மற்றும் கண்டி மாவட்டத்தில் நடமாடும் சேவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் குறித்த தரவுகளை மாவட்ட துணைப் பதிவாளர்கள் தற்போது சேகரித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இந்தப் பதிவேடுகளை வழங்கும் பணியை நிறைவு செய்யத் திணைக்களம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். https://www.samakalam.com/லட்சக்-கணக்கான-பிறப்பு-த/
  7. அஸ்திரேலியாவில் தீவிரவாத தாக்குதலை தடுத்தவர் யார்? சிட்னி நகரில் உள்ள போண்டி கடர்கரையில் ‘ஹனுக்கா’ விழாவை யூதர்கள் கொண்டாடிய போது இரண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய இருவரும் அப்பா (50), மகன் (24) என அஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். யார் இந்த அகமது அல் அகமது? - 43 வயதான அகமது அல் அகமது, சிட்னியில் பழக்கடை வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்குதல் நடந்த போது சம்பவ இடத்தில் அவர் இருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே அவர் மறைந்து கொண்டார். தொடர்ந்து தீவிரவாதி ஒருவரை தடுத்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தார். அஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று இரண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் தீவிரவாதி ஒருவரை தாக்குதல் நடந்த போது அங்கிருந்த அகமது அல் அகமது எனும் நபர் தடுத்துள்ளார். அவரது வீர தீர செயலுக்காக இப்போது உலக அளவில் பேசப்படுகிறார். துப்பாக்கியுடன் இருந்த தீவிரவாதியை லாவகமாக பிடித்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, அவரை தரையில் தள்ளினார் அகமது அல் அகமது. அவரின் இந்த செயல் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி, கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் மற்றொரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு கை பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இதன் பின்னர் மற்றொரு தீவிரவாதி நடத்திய தாக்குதலில் அகமது அல் அகமது காயமடைந்தார். அவருக்கு கை பகுதியில் துப்பாக்கி தோட்டா பட்டதில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். “அவர் ஒரு ரியல் ஹீரோ அது 100% உறுதி. அவர் மருத்துவமனையில்தான் உள்ளார். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியவில்லை. அவர் நலமுடன் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம்” என அகமது அல் அகமதுவின் உறவினர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ‘மிகவும் தைரியமான நபர்’ என அகமதுவை அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு ட்ரம்ப் பாராட்டி உள்ளார். அவருக்கு உதவும் நோக்கில் இணையவழியில் நிதி திரட்டும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1.32 லட்சம் டாலர் நிதி இதுவரையில் திரட்டப்பட்டுள்ளதாக தகவல். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அஸ்திரேலியாவில்-தீவிரவாத-தாக்குதலை-தடுத்தவர்-யார்/50-369547
  8. கல்வி மறுசீரமைப்பில் மாற்றமில்லை! நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுப் பாதிப்புகள் காரணமாக, 2026 ஜனவரியில் தொடங்கத் திட்டமிடப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் பாதிக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஜனவரியில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது, முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து மாற்றங்களும் சம்பந்தப்பட்ட வகுப்புகளில் நடைமுறைக்கு வரும் என அவர் கூறியுள்ளார். மேலும் முழுமையான அமுலாக்கம் ஜனவரி 22 ஆம் திகதிக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய கட்டமைப்புக்கு இணங்க செயற்படுமாறு சுற்றறிக்கைகள் மூலம் பாடசாலைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கும் முன் ஆறாம் தர மாணவர்களுக்கு ஒரு வார கால அறிமுக நிகழ்ச்சி (Familiarisation programme) நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை நேர அட்டவணை ஒரு நாளைக்கு 7 கற்பித்தல் காலங்களாக (Teaching periods) மாற்றப்படுவதுடன், ஒவ்வொரு பாடமும் 50 நிமிடங்கள் நீடிக்கும். மேலும் சீர்திருத்தத்தின்படி, சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாகக் குறைக்கப்படவுள்ளது. மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், தாய்மொழி, சமயம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய 5 முக்கியப் பாடங்கள் படிக்க வேண்டும். அத்துடன் தொழில்நுட்பம், அழகியல், முகாமைத்துவம் மற்றும் தொழில்முனைவு, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல், மற்றும் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற பிரிவுகளிலிருந்து மேலும் 2 பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இருப்பினும் பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சீர்திருத்தங்களை இறுதி செய்வதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுக்கு தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் சில பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபடவில்லை என்றும் செயலாளர் களுவெவ தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/கல்வி-மறுசீரமைப்பில்-மாற/
  9. மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன் டித்வா புயலால் தமிழ்த் தரப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையகத் தமிழர்கள்தான். மலையகத்தில் வெள்ளம்,புயல்,மண்சரிவு ஏற்படும்போது அங்கே உறக்கத்திலேயே மண்மூடி இறந்தவர்கள் அதிகமாக ஏழைகள்தான். மேல் நடுத்தர வர்க்கம் அவ்வாறு இறப்பது குறைவு. மலையகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகள்,தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்றன இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் செல்வந்தர்கள் தங்கள் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டுகிறார்கள். ஆனால் ஏழைகள் மலை விளிம்புகளில்,மண் சரியக்கூடிய இடங்களில் வீடுகளைக் கட்டுவதனால் இயற்கை அனர்த்தங்களின் போது முதற் பலியாகிறார்கள். காலாகாலமாக இயற்கை அனர்த்தங்களின் போது மட்டுமல்ல, இன முரண்பாடுகளின் போதும் உடனடியாகச் சுற்றி வளைக்கப்படும் மக்களாக, இன அழிப்புக்கு உள்ளாகும் மக்களாக அவர்களே கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் மலிவான கூலிகளாக இச்சிறிய தீவுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் ஏறக்குறைய அடிமைகள் போலவே கொண்டுவரப்பட்டார்கள். அடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். அங்கிருந்து தொடங்குகிறது இன அழிப்பு. அடுத்த கட்டம் மலையகத் தமிழரின் சனத்தொகையானது தென்னிலங்கைக்குள் ஒரு பெரிய தமிழ்ச் சனத்தொகையாகப் பல்கிப் பெருகுவதைத் தடுப்பதும், அதன்மூலம் ஈழத் தமிழர்களோடு அவர்கள் இணைந்து இலங்கைத் தீவில் மொத்தத் தமிழ்ச் சனத்தொகையைப் பலப்படுத்துவதைத் தடுக்கும் உள்நோக்கத்தோடும், மலையக தமிழர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டது. இப்படிப்பார்த்தால் இலங்கையில்,தமிழ் இனஅழிப்பின் தொடக்கம் மலையகம்தான். அதன்பின் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளின் போது முதலில் பலியாவது மலையக மக்கள்தான். அவ்வாறு பாதிக்கப்பட்ட மலையக மக்கள் வடக்கு கிழக்கு நோக்கி வந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் அவர்கள் கௌரவமாக நடத்தப்பட்டார்கள் என்று கூறமுடியாது. ஏழை மலையகத் தமிழர்கள் வடக்கில் வீட்டு வேலைக்காரர்களாக,கடைகளிலும்ம் வன்னிப் பெருநிலத்தில் வயல்கள் தோட்டங்களிலும் மலிவுக் கூலிகளாக வேலை செய்தார்கள். வடக்கு கிழக்குக்கு வந்த மலையக மக்களை ஒப்பீட்டளவில் கௌரவமான நிலைக்கு உயர்த்திய நகரங்கள் இரண்டு.ஒன்று கிளிநொச்சி. மற்றது வவுனியா. அதிலும் கிளிநொச்சிதான் மலையகத் தமிழர்களை ஒப்பீட்டளவில் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் உயர் நிலைக்கு உயர்த்தியது. அது ஒரு குடியேற்றப் பட்டினம் என்பதனால், அங்கே மலையகத் தமிழர்கள் ஒப்பீட்டளவில் எல்லா வாய்ப்புகளையும் பெற்றார்கள்.கிளிநொச்சியின் பெரிய வியாபாரிகளாக, மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, அதிபர்களாக, கல்வி அதிகாரிகளாக, நிர்வாகிகளாக, பொறியியலாளர்களாக, ஊடகவியலாளர்களாக, இன்னபிறவாக.. மலையகத் தமிழர்கள் அங்கே பலமாகக் காணப்படுகிறார்கள். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படட உத்தியோகப்பற்றற்ற ஒரு கணக்கெடுப்பின்படி அங்கே மொத்த சனத்தொகையில் அவர்களுடைய சனத்தொகை 40% இற்கும் குறையாது. வவுனியாவில் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில், அங்கே மலையகத் தமிழர்களைக் குடியமர்த்தும் வேலைகளை “காந்தியம்” ஒருங்கிணைத்தது. இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் எல்லைப்புறங்களில் சிங்கள குடியேற்றவாதிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் இடையிலான மனிதக் கவசங்களாகக் குடியமர்த்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் காந்தியம் அதை அவ்வாறு கருதிச் செய்யவில்லை என்பது,காந்தியத்தின் முக்கியஸ்தர்களை, அவர்களுடைய வாழ்க்கைக்கூடாக அறிந்து வைத்திருக்கும் எவருக்கும் தெரியும். இன்று வவனியாவில் தமிழ்ச் சனத்தொகையை, குறிப்பாக தேர்தல்களில் தமிழ் வாக்குகளின் ஒரு பகுதியைக் கட்டியெழுப்புவது மலையகத் தமிழர்கள்தான். அதாவது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான எல்லையில் தமிழ்ச் சனத்தொகையைப் பாதுகாப்பதில் மலையகத் தமிழர்களுக்குப் பங்குண்டு. இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மலையக மக்களுக்கு பாதுகாப்பான காணியுரிமையை வழங்குவதற்கு மறுத்தால் மாற்று யோசனையாக மலையக மக்களை வடக்கு-கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்று மனோ கணேசன் கூறியிருக்கிறார். அதேசமயம்,பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை வடக்குக்கிழக்குக்கு வருமாறு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகனும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கிலிருந்து இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவது இதுதான் முதல் தடவையல்ல,புளட் இயக்கத்தில் இருந்தவரும் மூத்த கவிஞரும், இப்பொழுது திரைப்படக் கலைஞராக இருப்பவருமாகிய,வ.ஐ.ச.ஜெயபாலன் இரு தசாப்தங்களுக்கு முன்பு தென்னிலங்கைப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அதைச் சுட்டிப்பாகக் கூடியிருந்தார். மலையகத் தமிழர்களை வடக்கு கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்று. அப்பொழுதும் அந்தப் பேட்டிக்கு எதிர் வினைகள் வந்தன. இப்பொழுதும் சுமந்திரன் மற்றும் ஆறு.திருமுருகனின் அழைப்புகளுக்கு அவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மலையகத் தமிழர்களையும் உள்ளடக்கிய ஈழ வரைபடத்தை வரைந்து வைத்திருந்தது ஈரோஸ் இயக்கம்தான். மலையகத்தையும் உள்ளடக்கிய தமிழீழம் என்பது ராணுவரீதியாக மலையகத்தை முதலில் பலியிடுவதாக முடியும் என்று அப்பொழுது விமர்சிக்கப்பட்டது. ஏனென்றால் மலையகம் நிலத்தால், சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட ஒரு தமிழ் நிலப் பரப்பு. எனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் ஆயுதமயப்படுத்தினால் அது அந்த சமூகத்தை முதலில் பலியிடுவதாக முடியும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. தமிழ் மக்களுடைய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணித் தளபதிகளாக பல மலையகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து எழுச்சி பெற்ற பல தளபதிகள், இடைநிலைத் தளபதிகள், அரசியல் பிரிவு முக்கியஸ்தர்கள் உண்டு. ஈழப் போராட்டம் மலையகத் தமிழர்களுக்கு கௌரவமான,மதிப்பு மிகுந்த இடத்தைக் கொடுத்தது. தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அறிவு ஜீவிகளில் ஒருவராகிய மு.திருநாவுக்கரசு தன்னுடைய “இலங்கை அரசியல் யாப்பு:டொனமூரிலிருந்து இருந்து சிறுசேன வரை” என்ற நூலில் ஓரிடத்தில் பின்வருமாறு கூறுகிறார்….”மலையகத் தமிழரின் பிரச்சினையில்,அவர்கள் வாழும் மாலையகத்தைச் சார்ந்த புவியியல் பின்னணியில், அவர்களுக்குரிய ஓர் அரசியல் நிர்வாகப் பிரிவைக் கோரும் உரிமை அவர்களுக்கு உண்டு. (உதாரணமாக இந்தியாவில் புதுச்சேரி மாநிலம் இருப்பது போன்ற அமைப்பு). அந்த வகையில் அவர்களுக்கான தீர்வு புதிய யாப்பில் உருவாக்கப்பட வேண்டும். அதேவேளை மலையகத் தமிழர் விரும்புமிடத்து, ஈழத்தமிழ் மாநிலத்தின் குடிமக்களாகக் குடியேறும் உரிமை உடையவர் என்பதை ஈழத்தமிழ் மாநிலம் தனது யாப்பில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அவ்வாறு ஈழத்தமிழ் மாநிலத்தில் குடியேற விரும்பும் மலையத் தமிழர்களுக்கு காணி மற்றும் வீட்டு வசதிகளை ஈழத்தமிழ் மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்பதுடன், அவ்வாறு குடியேறிய குடும்பங்களில் ஒருவருக்காவது வேலைவாய்ப்பை வழங்கவேண்டிய பொறுப்பும் ஈழத்தமிழ் மாநில அரசுக்குரியதாகும்.” மலையகத் தமிழர்களை ஈழத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து ஓர் இறுதித் தீர்வில் எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதற்கு திருநாவுக்கரசு முன்வைக்கும் முன்மொழிவு அது. அதேசமயம் மலையகத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக வரையறுத்து இறுதித் தீர்வில் அவர்களுக்கும் ஒரு பொருத்தமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது,கடந்த 16ஆண்டுகளுக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசியத் தரப்பால் முன்மொழிக்கப்பட்ட தீர்வு முன்மொழிவுகளில் கூறப்பட்டுள்ளது. நிலத்தைத்தவிர அதாவது தாயகத்தைத்தவிர, மற்ற எல்லா விடயங்களிலும் ஒரே பண்புகளைக் கொண்டிருக்கும் இரண்டு மக்கள் கூட்டங்களும் தீர்வு முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்படுவதே பலம்.மலையகத் தமிழர் மத்தியில் ஒரு பலமான நடுத்தர வர்க்கம் மேலெழுந்துவிட்டது.ஒரு தேசிய இனமாக மலையகத் தமிழர்களைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியும். ஓர் இணைத் தேசிய இனமாக,ஈழத்து தமிழர்கள் மலையகத்தை நோக்கிச் செல்ல வேண்டியது ஈழத் தமிழர்களுடைய தவிர்க்கப்பட முடியாத ஒரு தேசியக் கடமை.மலையகத் தமிழரை அவர்களுடைய தாயத்தில் வைத்தே பலப்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் அதை நோக்கி தன்னால் முடிந்த எல்லாவறையும் செய்ய வேண்டும் ஒரு பேரிடர் காலம் தமிழ் ஐக்கியத்தை, தமிழ் சகோதரத்துவத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. https://www.nillanthan.com/8007/
  10. புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ? - நிலாந்தன் புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்லது நிவாரண அரசியல் சூழல் எனப்படுவது அதன் தர்க்கபூர்வ விளைவாக அரசாங்கத்தைப் பலப்படுத்தும். அனைத்துலக அளவில் பெரும்பாலான நாடுகள் வரிசைகட்டி நின்று உதவி செய்கின்றன. குறிப்பாக முதலில் உதவியதும் இந்தியா. அதிகம் உதவியதும் இந்தியாதான். தவிர வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் உதவுகிறார்கள். சில புலம்பெயர்ந்த தமிழர்களும் அரசாங்கத்துக்கு நிதி சேர்த்துக் கொடுக்கிறார்கள். அல்லது தாம் சேர்த்த நிதியை தாம் வாழும் நாட்டின் அரசாங்கத்துக்கு ஊடாகக் கொடுக்கிறார்கள். உள்நாட்டில் செழிப்பான ஒரு மனிதாபிமானச் சூழல் மேலெழுந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்,மத நிறுவனங்கள், சிறிய சமூக அமைப்புக்கள் என்று பல்வேறு வகைப்பட்ட அமைப்புகளும் தனி நபர்களும் தன்னார்வமாக முன்வந்து உதவிகளைச் சேகரித்து, தேவைப்படும் மக்களுக்குத் கொண்டு சென்று கொடுக்கிறார்கள். நிவாரணத்தைச் சேகரிக்கும்பொழுது உள்ளூர் வணிகர்களும் காசு உள்ளவர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். சிங்களப் பகுதி ஒன்றில் ஒரு முதிய பெண் தன்னுடைய பங்குக்கு தன்னிடம் இருந்த இரண்டு பனடோல் மாத்திரை அட்டைகளை அன்பளிப்பாகக் கொடுத்தது ஒரு நிகழ்ச்சியான சம்பவமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதேசமயம் தமிழ்ப் பகுதிகளில் தன்னார்வமாக இளையவர்களும் தொண்டு நிறுவனங்களும் நிவாரணங்களை சேகரித்துக் கொண்டு மலையகத்தை நோக்கிச் செல்கிறார்கள். புயல் ஓய்ந்த அடுத்தடுத்த நாட்களில் ஒரு பகுதியினர் தனித்துவிடப்பட்டிருக்கும் முல்லைத்தீவை நோக்கியும் வன்னியின் எனைய பகுதிகளை நோக்கியும் சென்றார்கள். அங்கே தங்களால் முடிந்த உதவிகளைச் செய்த பின் மலையையகத்தை நோக்கித் திரும்பினார்கள். வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் மலையகத்தை நோக்கி உதவிகள் செல்கின்றன. புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலானது தமிழ் சகோதரத்துவத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் தங்களுடைய மதக் கட்டமைப்புகளுக்கு ஊடாகவும் தொண்டு நிறுவனங்களுக்கு ஊடாகவும் பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிச் செல்கிறார்கள். உதாரணத்துக்கு,”கெலி ஓயா அபிவிருத்தி நிதியம்” என்ற அமைப்பு கண்டி மாவட்டத்தில்,உடுநுவர பிரதேச செயலர் பிரிவில்,பள்ளிவாசலை மையமாக கொண்டு இயங்குகிறது. டித்வா புயல் அழிவுகளின் பின் உருவாக்கப்படட அமைப்பு இது. தென்னிலங்கையில் பாதிக்கப்படாத பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி தன்னார்வமாகத் திரண்டு செல்கிறார்கள். அரச கட்டமைப்புகள் உதவிக்கு வரும் அதேவேளை, மக்கள் தாங்களாக முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். வெள்ளம் கட்டுக்கடங்காது ஓடிய பகுதிகளில் வீதிகள்,வீடுகள்,பொது இடங்கள் போன்றவற்றில் சேறு கழி போல மூடிக்கிடக்கின்றது. சில இடங்களில் கால் புதையக் கூடிய அளவுக்கு சேறு. அதனை அரச உதவி வரும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், அயலில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து அகற்றுகிறார்கள். தெருக்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் உள்ள சேற்றைக் கழுவி அகற்றுகிறார்கள். முறிந்து விழுந்த மரங்களையும் குப்பைகளையும் சேகரித்து ஓரிடத்தில் குவிக்கிறார்கள். இதுவிடயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே சமயத்தில் அரச கட்டமைப்புகள், அரசுசாரா கட்டமைப்புகள்,தன்னார்வலர்கள்,இவர்களோடு உதவிக்கு வந்த நாடுகளின் தொண்டர்கள்,படையினர் மற்றும் வெளிநாட்டவர்கள் என்று எல்லாத் தரப்பும் இணைந்து அந்தப் பகுதியை துப்புரவாக்கும் காட்சி அற்புதமானது. சில இடங்களில் உல்லாசப் பயணிகளாக வந்த வெள்ளைக்காரர்களும் காணப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களே மக்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டுச் செயற்பாடுகளில் ஜேவிபியின் அடிமட்ட வலைப்பின்னல் பலமாகச் செயல்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடித்தளமாக இருப்பது ஜேவிபி. அது அடிப்படையில் ஓர் இயக்கம். அடிமட்ட கிராமிய வலைப் பின்னலைக் கொண்ட ஓர் இயக்கம். எனவே அவர்களிடம் உள்ள அடிமட்ட வலையமைப்பு புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலை அரசாங்கத்துக்குச் சாதகமாகக் கட்டமைத்து வருகிறது. இவ்வாறாக டித்வா புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல் என்பது ஒரு விதத்தில் அனுரவுக்குச் சாதகமானதாகவே காணப்படுகிறது. ஒருபுறம் நாட்டை நோக்கி உதவிகள் குவிக்கின்றன. இன்னொருபுறம்,ஒரு பேரிடருக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல் அதிகம் நெகிழ்ச்சியானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் காணப்படுகிறது. ” (நாட்டில் நிலவும் )மிகவும் பலமான ஒரு சகோதரத்துவத்துக்கு நாங்கள் உயர் முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோம். என்னைப் பொறுத்தவரை இது அசாதாரணமானது. நாடு முழுவதும் மக்களும் மக்கள் அமைப்புகளும் ஒன்றாக திரண்டு ஒருவர் மற்றவருக்கு உதவ முன்வருகிறார்கள். இதுபோன்ற சகோதரத்துவத்தை என்னுடைய நாட்டில் காண முடியுமா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது என்பதனை நான் இங்கே கூறவேண்டும். சிறீலங்கர்கள் காட்டும் இந்த வகையான சகோதரத்துவம் அசாதாரணமானது.” இவ்வாறு இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி அண்மையில் தெரிவித்துள்ளார். இது இயற்கைப் பேரிடர் ஒன்றுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல். ஆனால் இங்கு இயற்கை மட்டும் பேரிடரை ஏற்படுத்தவில்லை. மனிதத் தவறுகளும் இதற்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகின்றன. ரணில் விக்கிரமசிங்க இந்த அரசாங்கம் பதவியேற்ற புதிதில் இது ஓர் “எல்போர்ட்” அரசாங்கம் என்று நக்கலடித்திருந்தார். அனர்த்த காலமொன்றை முகாமை செய்ய இந்த அரசாங்கத்தால் முடியவில்லை என்று நிரூபிப்பதற்கு எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன. நுகேகொட பேரணிக்குப் பின் டித்வா புயலானது எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு அதிகரித்த வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது வழமைபோல எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்ப்பதனை ஒரு மரபாகப் பேணுகின்றன என்று அரசுக்கு ஆதரவான அறிவுஜீவிகள் நியாயம் கற்பிக்கின்றார்கள். ஆனால் அது உண்மை அல்ல. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே முன்னெச்சரிக்கைகள் கிடைத்த போதிலும் அரசாங்கம் வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையானதுபோல தெரிகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பாக நொவம்பர் 13ஆம் திகதியே எச்சரித்திருந்தது. நவம்பர் 26வரை அனைத்துத் தகவல்களும் இலங்கையுடன் பரிமாறப்பட்டுள்ளன என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையத்தளம் கூறுகிறது. அதுபோலவே தமிழக வானிலை முன்னறிவிப்பாளர்களில் ஒருவராகிய செல்வக்குமார், தன்னுடைய யூடியூப் தளத்தில் இதுதொடர்பாக இலங்கையை 24ஆம் திகதி எச்சரித்திருந்தார். குறிப்பாக முன்னெப்பொழுதும் ஏற்பட்டிராத வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அதைவிடக்குறிப்பாக,இந்தப் பேரிடரின் காரணமாக இலங்கை அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டி வரலாம் என்றும் செல்வக்குமார் மிகத்துல்லியமாக எதிர்வு கூறியிருந்தார். அது மட்டுமல்ல தன்னுடைய முன்னெச்சரிக்கையை அரசாங்கத்திடம் கொண்டு சென்று சேர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார். அவருடைய முன்னெச்சரிக்கை அடங்கிய காணொளி 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இலங்கை வானிலை என்ற தலைப்பில் அது வெளியிடப்பட்டது அதேபோல,யாழ்ப்பாணத்தில் வசிக்கும்,யாழ் பல்கலைக்கழக,புவியியல் துறையின் தலைவராகிய பேராசிரியர் பிரதீபராஜா ஒரு புயலைக் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அவர் அந்த எச்சரிக்கையை விட்டிருந்தார். அவர் வழமையாக தன்னுடைய முகநூல் தளத்தில் வானிலை அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். அவர் ஒரு புவியியல் துறை பேராசிரியர். இயற்கை அனர்த்தங்களைக் குறித்து எச்சரிப்பது அவருடைய உத்தியோகபூர்வ கடமை அல்ல. அதைச் செய்ய வேண்டியது வளி மண்டலவியல் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவ நிலையம் போன்றனதான். ஆனால் பிரதீபராஜா அதைத் தன்னார்வமாகச் செய்கிறார். இம்முறை பருவ மழையை முன்னிட்டு அவர் முகநூலில் பதிந்த நீண்ட முன்னெச்சரிக்கைகள் அடங்கிய பதிவு ஒன்றில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அதன்பின் மடமாகாண ஆளுநர் வேதநாயகன் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து துறைசார் திணைக்களங்களின் பொறுப்பாளர்களையும் அழைத்து ஒரு கலந்தாலோசனை செய்தார். எனவே ஒரு பேரிடரைக் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று அரசாங்கம் கூறமுடியாது. இந்த முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய பாரதூரத் தன்மையோடு உள்வாங்கியிருக்கவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. மேலும் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கூறியதுபோல திணைக்களங்களுக்கு இடையில் போதிய ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசாங்கம் அனர்த்தமொன்றை வினைத்திறனுடன் முகாமை செய்யவில்லை என்று பொருள் கொள்ளத்தக்கது. எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. எனினும், பேரிடருக்குப் பின்னரான மனிதாபிமான உதவிகளுக்கான சூழலானது,எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை கூர்மையிழக்கச் செய்கின்றது. அதோடு அரசாங்கம் அறிவித்திருக்கும் இழப்பீட்டுத் தொகையும் மிகப்பெரியது. இதுவரையிலும் இருந்த அரசாங்கங்கள் இதுபோன்ற அனர்த்தங்களின் போது அறிவித்திராத பெரிய தொகை இழப்பீடு அது. இந்த இழப்பீட்டின்மூலம் அரசாங்கம் தன்னை ஏழைகளின் நண்பனாக மீண்டும் ஒரு தடவை நிரூபிக்க முயற்சிக்கின்றது. அரசாங்கம் அறிவித்திருக்கும் பெரிய அளவிலான இழப்பீட்டுத் தொகையானது மக்கள் அபிமானத்தை வென்றெடுப்பதற்கு உதவும். இதனாலும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. எனவே புயலுக்கு பின்னரான அரசியல் சூழலைத் தொகுத்துப் பார்க்கும்போது, அது மனிதாபிமானத் தேவைகளை முன்னிறுத்தும் சூழலாக மேலெழுகிறது. இதனால் அனுர அரசாங்கம் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்ததைப் போல பலவீனம் அடையவில்லை, மாறாக பலமடைந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. https://www.nillanthan.com/7999/
  11. நிவாரணங்களை வழங்க கோரி வெருகல் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை 14 Dec, 2025 | 01:30 PM திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்கக் கோரி போராட்டத்தில் மக்கள் நேற்று சனிக்கிழமை (13) ஈடுபட்டனர். சீரற்ற கால நிலை காரணமாகவும் மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுப்பு தொடர்பில் பல சேதங்கள் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணங்களை அலுவலகத்தில் பூட்டி வைக்காது பகிருமாறும் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் பிரதான நுழைவாயிலை மறித்து போராடினர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வெருகல் பிரதேச செயலக வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் கொடுப்பனவுகளை வழங்குமாறும் குரல் எழுப்பிய மக்கள் பிரதேச செயலாளரை வெளிதே விடாது தடுத்தனர். https://www.virakesari.lk/article/233327
  12. ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்! 14 Dec, 2025 | 02:11 PM ஆபாச படம் காண்பித்து மகளை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவத்துடனான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினம் சந்தேக நபர்களான நால்வரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி கல்முனை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 5 மாத காலமாக திரைமறைவில் விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று வழங்கிய தகவலின் படி துரிதமாக செயற்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நிந்தவூர் பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளிடம் நடந்த விடயங்களை குறித்த சிறுமி கூறியுள்ளார். இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக 12 வயது மதிக்கத்தக்க தனது மகளை முதலில் ஆபாச படம் பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை பின்னர் சம காலத்தில் ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்துவந்தமையும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தந்தை உட்பட 5 பேரை தற்போது கைது செய்துள்ள பொலிஸார் தலைமறைவாகிய ஏனைய 3 சந்தேகநபர்களை தேடி வருகின்றனர். சந்தேகநபர்கள் 52,41,24 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் தந்தை சுமார் 05 மாத காலமாக தனது மகளை பல்வேறு நபர்களுடன் பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/233332
  13. காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை 14 Dec, 2025 | 03:07 PM காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் 1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அதன் போது, காங்கேசன்துறை இந்து மயானம் அமைந்துள்ள காணியும், அதனை சூழவுள்ள காணிகளும் விடுவிக்கப்படாது , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த நிலையில் , தற்போது அப்பகுதி அனைத்தும் துறைமுக அதிகார சபையின் ஆளுகைக்குள் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இந்து மயானத்தை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக சுமார் 10 வருட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமது முன்னோர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில் , தமது சொந்த மண்ணில் உள்ள இந்து மயானத்திலையே தமது உடல்களும் தகனம் செய்யப்பட்ட வேண்டும் என அங்குள்ள முதியவர்கள் பலரும் தமது இறுதி ஆசையாக கூறி வரும் நிலையில் , மாயனத்தினையும் அதற்கான பாதையையும் மீள பெற்று தருமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்ததை , அடுத்து , அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் வந்து அவ்விடத்தினை பார்வையிட்டார். அதன் போது , மயானத்தினை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி விரைவில் அதனை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/article/233340
  14. அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை 14 Dec, 2025 | 04:09 PM ‘டித்வா’ புயல் தாக்கத்தையடுத்து நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி சபரிமலை சபரீச ஐயப்பன் ஆலயத்தில் பிரார்த்திக்கப்பட்டது. யாழ்ப்பாணம், கோண்டாவில் அமைந்துள்ள ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (13) விசேட புஷ்பாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்கார பூஜைகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. அதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/233346
  15. மகேஸ்வரன் கொலை வழக்கு: குற்றவாளிக்கான மரண தண்டனை உறுதி 14 December 2025 ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 'வசந்தன்' என்ற ஜோன்சன் கொலின் வலன்டினோ என்ற குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்தநிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை இரத்து செய்யக் கோரி குற்றவாளி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். நீதியரசர்களான யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற ஆயத்தின் முன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை மீளப் பெற அனுமதிக்குமாறு கோரினார். 2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி கொழும்பு - பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் வைத்து மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்போது சுடப்பட்ட மகேஸ்வரன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், சுட்டுக் கொன்றவர் இவர்தான் என்று குற்றவாளியை அடையாளம் காட்டியிருந்தார். அத்துடன், இந்த சம்பவத்தின்போது மகேஸ்வரின் மெய்ப்பாதுகாவலர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளியின் இரத்த மாதிரி மரபணு சோதனை மூலம் குற்றத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த உண்மைகளை மறுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்ட சட்டத்தரணி, மனுவை மீளப் பெற அனுமதி கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை அனுமதித்தது. https://hirunews.lk/tm/435740/maheswaran-murder-case-death-sentence-confirmed-for-the-convict
  16. மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் பலி Janu / 2025 டிசெம்பர் 14 , பி.ப. 04:12 அஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரையில் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மர்ம-நபர்களின்-துப்பாக்கிச்-சூட்டில்-10-பேர்-பலி/50-369515
  17. கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம். பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் திருத்துவதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பதே எமது தற்போதைய முக்கிய இலக்காகும் கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம் எனச் சுட்டிக்காட்டியதுடன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (13.12.2025) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் பிரதியமைச்சரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து நடைபெற்றக் கூட்டத்தின்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வரவேற்புரையின்போது மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக ஜனாதிபதி அவர்களை வரவேற்கின்றேன். சூறாவளி மற்றும் இதனுடன் இணைந்த வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்களை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்காக எடுக்கும் முயற்சிக்காக மன்னார் மக்கள் சார்பாக நன்றி கூறுகின்றேன். பாதிப்புகளிலிருந்து மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டல்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின்- பாதுகாப்பு படையினர்- அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புகளுடன் பாதிப்புகளிலிருந்து விரைவாக மீட்nடுக்கப்பட்டதையிட்டு யாவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றேன். வரவேற்புரையைத் தொடர்ந்து ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவிக்கையில் அனர்த்தத்தின் போது அரச அதிகாரிகள் ஆற்றிய பணிகளைப் பாராட்டினார். ‘பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முதற்கட்ட உதவிகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தற்போது அவர்களின் வாழ்வாதாரத் துறைகளான விவசாயம்இ மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதிலும் உட்கட்டுமானங்களை மீளமைப்பதிலும் எமது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார். இதன்போது ஒவ்வொரு துறை சார்ந்தும் ஜனாதிபதி விரிவாக ஆராய்ந்தார். வீதி அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்திய அவர், மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ள வீதிகள் மற்றும் அவற்றுக்கான நிரந்தரத் திருத்த மதிப்பீடுகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், மன்னார் மாவட்டத்தின் வெள்ள நீர் கடலைச் சென்றடைவதற்கான வடிகால் வாய்க்காலின் அளவு போதாமையாக உள்ளமை குறித்து ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணிப்புரை விடுத்தார். மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதில் நிலவும் சிரமங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகக் கிணறுகள் துப்புரவு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்இ தொலைத்தொடர்பு வசதிகள் மீளமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் அவர் அதிகாரிகளிடம் வினவினார். நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறை குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, பெரும்போகத்துக்கான நீர் விநியோகம், மீள்விதைப்புக்கான ஆயத்தங்கள் மற்றும் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலப்பரப்புகள் குறித்துக் கேட்டறிந்தார். நிவாரணக் கொடுப்பனவுகள் மக்களைச் சென்றடைவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். மரக்கறி மற்றும் தானியச் செய்கை அழிவுகள் தொடர்பிலும் குறிப்பாக வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையாளர்களின் இழப்புகளுக்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதி வினவினார். இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அடுத்த ஆண்டு வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவும் குறுகிய காலத்தில் விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாகாண விவசாய அமைச்சு ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். கால்நடை இழப்பீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி பதிவு செய்யப்படாத கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம் எனச் சுட்டிக்காட்டினார். பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் பதிவு செய்யப்படாதவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும்போது முறைகேடுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இதன்போது மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் இல்லாத தன்மையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் நீரேந்துப் பிரதேசங்களை ஆக்கிரமித்து நெற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணித்தார். மீன்பிடித்துறை தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது. புயல் காரணமாகத் தொழிலுக்குச் செல்லாத மீனவர்களுக்கு இதுவரை எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் எமது கடல் வளத்தைப் பாதுகாக்கக் கடற்படை நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளை, இது இராஜதந்திர ரீதியிலும் கையாளப்பட வேண்டும். வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்’ என உறுதியாகத் தெரிவித்தார். இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான 25இ000 ரூபா கொடுப்பனவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணப் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டார். இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பாடசாலைப் புத்தகங்கள் அழிவடைந்துள்ளமை குறித்துக் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அது தொடர்பில் தனது அவதானத்தை செலுத்தினார். முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகள் அபாய வலயங்களில் வசிப்போரை மீள்குடியேற்றுதல் மற்றும் நிவாரண உதவிகள் பகிர்ந்தளிப்பு குறித்தும் ஜனாதிபதி தெளிவான வழிகாட்டல்களை வழங்கினார். இறுதியாகச் சுகாதாரத் துறை குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கமளித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையிலான முன்னாயத்தக் கூட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் காரணமாகப் பேரிடரால் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்தன எனவும் அவர் தெரிவித்தார். வெள்ள அனர்த்த வேளைகளில் நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற விசேட உயரமான அம்புலன்ஸ் வண்டி மற்றும் அம்புலன்ஸ் படகுத் தேவையை அவர் முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி உடனடித் தீர்வுகள் குறித்தும், எதிர்கால நீண்டகாலத் தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார். இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், ரிசாட் பதியுதீன், காதர் மஸ்தான் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://www.samakalam.com/கால்நடைகளுக்கான-இழப்பீட/
  18. யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்! adminDecember 14, 2025 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை – வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது. அன்ரன் பாலசிங்கம் https://globaltamilnews.net/2025/224165/
  19. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21: ஆபாசமெனத் தள்ளப்பட்டு அருமையான தன்வரலாறாக ஏற்கப்பட்ட ‘கடக ரேகை’ தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21 | ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதிய ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) நாவல் ஆபாசமெனத் தள்ளப்பட்டு அருமையான தன்வரலாறாக ஏற்கப்பட்ட ‘கடக ரேகை’ – அ. குமரேசன் ஒன்று நாவலாக இருக்க வேண்டும், அல்லது தன் வரலாறாக இருக்க வேண்டும், அல்லது மற்றவர்கள் பற்றிய உண்மைக் கதையாக இருக்க வேண்டும் – இலக்கியத்தின் எந்த வகைப்பாட்டுக்குள்ளும் வரவில்லையே என்று தள்ளுபடி செய்யப்பட்டது ஒரு புத்தகம். ஆபாசம் என்றும் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. புத்தகத்தின் வெளியீட்டாளரும் விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத் தீர்ப்பில் அவர்கள் விடுதலையானதோடு, ஆபாசம் குறித்த ஆரோக்கியமான விவாதங்களுக்கும் புதிய புரிதல்களுக்கும் இட்டுச் சென்றது அந்தப் புத்தகம். நவீன இலக்கிய முத்துமணிகளில் ஒன்றாக மதிக்கப்படும் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer)அந்த இடத்திற்கு வந்தது ஒரு சுவையான அனுபவப் பயணம்தான். ஹென்றி மில்லர் (Henry Miller)எழுதிய தன் வரலாறும் சமூக விமர்சனமும் கற்பனையும் கலந்த அந்தப் படைப்பு, தணிக்கை வரலாற்றிலும் இடம் பிடித்தது. 1891இல் பிறந்து 1980இல் விடைபெற்ற (90 ஆண்டுகள்) அமெரிக்கரான ஹென்றி மில்லர் (Henry Miller) இளமைக் காலத்தில் பிரான்ஸ் நாட்டில், குறிப்பாக பாரிஸ் நகரில் வாழ்ந்தார். வறுமை, புறக்கணிப்புகள், பலவகை மனிதர்களோடு தொடர்புகள் என வாழ்ந்த அந்த அனுபவங்களையும், பிற்காலத்தில் அமெரிக்க வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளையும்தான் புத்தகங்களாக எழுதினார். அவரே தன் எழுத்துகளைப் புனைவிலக்கியம் என்று சொல்லிக்கொண்டதில்லை. ஆயினும், உண்மைகளும் கற்பனைகளும் கலந்த வெளிப்பாட்டிற்கு நல்ல முன்மாதிரிகளாக அந்தப் புத்தகங்கள் இன்று எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ‘டிராபிக் கேன்சர்’ தன்வரலாற்றுப் புனைவு என்ற புதிய வகை எழுத்துகளுக்கான ஒரு சான்றாக எடுத்துக்காட்டப்படுகிறது. படைப்பாளிகள் அரவணைப்பு ஆங்கிலத்தில் அவர் எழுதிய இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1934இல் பாரிஸ் நகரில் வெளியானது. அங்கே அது தடையையோ, கடும் நடவடிக்கைகளையோ சந்திக்கவில்லை என்றாலும், கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ளவே செய்தது. ஐக்கியப் பேரரசு (இங்கிலாந்து) தடை விதிக்க முடிவு செய்தது, ஆயினும் டி.எஸ். எலியட் உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்கள் அந்த எழுத்தாக்கத்தை அரவணைத்தார்கள். ஆகவே சட்டப்படி தடை விதிக்கப்படவில்லை. ஆனால், இறக்குமதி செய்வதில் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. கடத்தி வரப்பட்ட புத்தகப் படிகள்தான் வாசகர்கள் கைகளுக்குச் சென்றன. ஹென்றி மில்லர் (Henry Miller) கனடா சுங்கத் துறை புத்தகத்திற்குத் தடை விதித்தது. புத்தகக் கடைகளிலிருந்த படிகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தார்கள். ஆஸ்திரேலியாவில் 1970கள் வரையில் தடை செய்யப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியான விவாதங்களுக்குப் பிறகு, அச்சிடப்பட்ட நூல்களுக்கான தணிக்கை விதிகள் பெரிதும் தளர்த்தப்பட்டன. ஃபின்லாந்து நாட்டில் ஃபின்னிஷ் மொழிப் பதிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆங்கில, ஸ்வீடிஷ் மொழிப் பதிப்புகள் கிடைத்தன. பின்னர் அந்தத் தடையும் விலக்கப்பட்டது. பிற்காலத்தில் துருக்கி அரசு இந்தப் புத்தகத்திற்குத் தடை விதித்தது. கைதுகளும் வழக்குகளும் அமெரிக்காவில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. சமூக ஒழுங்கைச் சீர்குலைக்கும் ஆபாசம் என்ற குற்றச்சாட்டுடன், அதைப் பரப்பினார்கள் என்ற புகாரின் பேரில் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். 60க்கு மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. 1964இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் புத்தகத்தை விடுவித்தது. அந்தத் தீர்ப்பு, பாலியல் வக்கிரங்களைத் தூண்டாத, ஆனால் பாலியல் உண்மைகளையும் சிக்கல்களையும் சுரண்டல்களையும் சித்தரிப்பது எப்படி ஆபாசமாகும் என்ற விவாதங்களுக்கு வழியமைத்தது. “நான் இந்த வாழ்க்கையை எதற்காகக் கண்டறிந்தேன்? எதற்காக உண்மையை மறைக்க வேண்டும்? எப்படி உணர்கிறேனோ அதைத்தான் எழுத முடியும்” என்று மில்லர் கூறியது எழுத்துலகில் பரவலாக எதிரொலித்தது. வழக்கமான நாவல் கட்டமைப்பிலிருந்து விலகிய, நேரடிச் சித்தரிப்பும் கவிதையும் கலந்த அவரது மொழி நடை கவனத்திற்கு உள்ளானதாக இணையப் பதிவுகள் தெரிவிக்கின்றன. கடக ரேகைக் கதை ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) புத்தகம் புத்தகத்தின் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) என்ற தலைப்புக்கு, பூமியின் “கடக ரேகை” என்று பொருள். வறுமையில் வாடும் எழுத்தாளர் ஹென்றி, 1930களில் பாரிஸ் நகரின் வெளிச்சமற்ற பகுதிகளில் தன் இளமைக் காலத்தைக் கடக்கிறார். அந்த வாழ்க்கையில் எதிர்கொள்கிற இன்பங்களும் துன்பங்களுமாக அத்தியாயங்கள் விரிகின்றன. அந்த அனுபவங்களையே தனது கற்பனை வளமும் கவித் திறனும் கலந்து விவரிக்கிறார். ஹென்றி தனது நண்பர்களுடன் நடத்தும் உரையாடல்கள், தேடிச் செல்லும் காதலிகள், பாலியல் உறவுகள், பாலியல் தொழிலாளர்களின் நிலைமைகள், பணத்திற்காக அலையும் அவலங்கள், எதையாவது செய்யத் தூண்டுகிற பசி, யாருமற்ற தனிமை உணர்வு என அவருடைய அன்றாடப் போராட்ட அனுபவங்களை வாசிப்பு அனுபவமாக மாற்றுகிறது இந்த நூல். அழகான ஆரம்பம், கதாபாத்திரங்கள் வருகை, அடுத்தடுத்து விறுவிறுப்பான நிகழ்வுகள், எதிர்பாராத திருப்பத்துடன் முடிவு என்று வழக்கமான நாவல் நடையில் புத்தகம் செல்லாது. பொதுவாக மனிதர்கள் சமகாலக் காட்சிகள், கடந்த கால நினைவுகள், எதிர்காலக் கனவுகன் என்று மாறிமாறிப் பயணிப்பது போலவே ஹென்றியின் வாழ்க்கை செல்கிறது. புத்தகமும் அதை அப்படியே பிரதிபலிக்கிறது. ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) திரைப்பட காட்சி இதில் அவரது மன ஓட்டங்கள், தத்துவச் சிந்தனைகள், சமூக நையாண்டி, அதிர்வூட்டும் உண்மை நிலவரங்கள் ஆகியவற்றின் கலவையாகப் புத்தகம் உருவாகியிருக்கிறது. அதில், சமூகத்தின் பாசாங்குத்தனம் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. மனிதர்களின் அருவருப்பான பக்கமும் திறந்துகாட்டப்படுகிறது. கெடுபிடிக் கலாச்சாரம் கூண்டில் நிறுத்தப்படுகிறது. கதையோட்டமோ, கதாபாத்திரங்களோ, நிகழ்ச்சித் திருப்பங்களோ, மர்ம முடிச்சுகளோ இல்லை என்பதால் புத்தக உள்ளடக்கத்திற்குள் இதற்கு மேல் செல்ல வேண்டியதில்லை. ஒரு தனிமனிதரின் சுய தேடலோடு இணைந்த, கயிறுகளால் கட்டிப் போடப்படாத வெளிப்பாட்டு முனைப்பாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது. இலக்கியம் என்பதற்கான பாரம்பரிய விதிகளை உடைத்து, களித்துக் கடக்கப்படும் வாழ்கையில் கழித்துக் கடக்கப்பட்ட மனிதர்கள் இருப்பதைத் துணிச்சலாகக் காட்டுகிறது. பூமியை அளவிடவும், ஆராய்ந்திடவும் அதன் குறுக்கிலும் நெடுக்கிலும் நாம் கற்பனைக் கோடுகளை வரைந்து வைத்திருக்கிறோம். நில நடு ரேகைக்கு வடக்கே வரையப்பட்டிருப்பது கடக ரேகை. அது எப்படி கற்பனையானதோ அதே போல் மனித எதிர்பார்ப்பு கற்பனையாகிவிடுகிறது. சூரியனை பூமி சுற்றிவருகிறபோது, சூரியப் பாதை வடக்கே நகர்ந்து தெற்கே திரும்பும் எல்லையைக் கடக ரேகை என்று குறிப்பிடுகிறார்கள் புவியியலாளர்கள். மனிதர்களின் வாழ்க்கை அப்படி இருட்டாகிவிடுவதை கடக ரேகை புத்தகம் விவரிக்கிறது. கடக ரேகையின் மறுபகுதியில் ஒளி படர்வது போல, நம்பிக்கைகள் வெளிச்சம் பெறுகின்றன. இப்படிப்பட்ட உட்பொருள்கள் பொதிந்திருப்பதால் ‘‘டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) என்ற தலைப்பு பொருந்துகிறது. ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) திரைப்பட காட்சி கடினமான வேலிகளைத் தாண்டிய புத்தகத்திற்கு முக்கியமான இலக்கிய விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் சார்ந்த முக்கியமான சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்த எழுத்து, பதுங்கிக்கொள்ளாத வெளிப்படையான எழுத்தாக்கத்திற்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த எழுத்து, இவ்வகையான புத்தகமாக்கலுக்கு ஒரு வெற்றிகரமான இலக்கிய முன்னோடி என்ற பெயர்களைப் பெற்றது. டிராபிக் ஆஃக் கேப்ரிகான், பிளாக் ஸ்பிரிங், தி ரோஸி க்ரூசிஃபிகேஷன், தி கொலோசஸ் ஆஃப் மரூசி, கொயட் டேய்ஸ் இன் க்ளிச்சி, தி ஏர்கண்டிஷண்டு நைட்மேர் உள்ளிட்ட நூல்களையும் ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதியிருக்கிறார். அவையும் பல்வேறு கோணங்களில் சமூக விமர்சனம் செய்யும் படைப்புகளே.‘ முற்றிலும் புனைவு அல்லாத ஒரு படைப்புக்கு இலக்கியத் தகுதி அளிக்கப்படுவது அரிதான நிகழ்வு. அதைக் கடக ரேகை சாதித்திருக்கிறது. 1970 இல் இதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமாகவும் வந்து கவனம் பெற்றது. ‘மாடர்ன் லைப்ரரி’ அமைப்பும் ‘தி கார்டியன்’ பத்திரிகையும் வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆங்கில நாவல்கள் பட்டியல்களில் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) இடம் பெற்றுள்ளது கவனிக்கத் தக்கது. ‘தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்’ என்ற நமது பட்டியலில் 21ஆவது புத்தகமாகக் கடக ரேகை இடம் பெற்றதோடு, தற்காலிகமாக விடைபெறுவோம். இந்தியாவிலும் இதர நாடுகளிலும் சவால்களைச் சந்தித்த புத்தகங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டு, ஓர் இடைவெளிக்குப் பின் சந்திப்போம். இடைவேளை……………………… https://bookday.in/a-kumaresans-books-beyond-obstacles-series-about-henry-millers-tropic-of-cancer-novel/
  20. சித்தாந்த வினா விடை- தொடர் 3 - அருணைவடிவேல் முதலியார் இன்மை அளவை அல்லது அபாவப்பிரமாணம் அல்லது அனுபலத்திப்பிரமாணம் : குடத்தைத் தேடிக் காணாத ஒருவன், 'இங்குக் குடம் இல்லை' என்று உணர்தல், குளிர் இல்லாமை கண்டு, 'பனி இல்லை' என்று உணர்தல் அனுபலத்திப்பிரமாணமாகும். இருத்தலை உணர்தல் காட்சியாகும், இல்லாமையை உணர்தல் காட்சியாகாது என்று கொண்டு இவை காட்சியளவையும், அதன் வழியதாகிய அனுமான அளவையோடு சேராமல் வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், இவையும் உண்மையில் காட்சியும் அதன் வழிதான அனுமானமுமேயாகும். பொருளளவை அல்லது அருத்தாபத்திப் பிரமாணம்: ஒருவன் இரவில் மறைந்து உண்டு, 'யான் உண்பதில்லை' என்று கூறினால், அவன் உடல் மெலியாதிருத்தல் கண்டு அவன் இரவில் மறைந்து உண்கின்றான் எனத் துணிதல் அருத்தாபத்திப் பிரமாணமாகும். இவ்வாறு இல்லையாயின் இஃது இயலாது என உணர்தல். இஃது உண்மையை எதிர்மறை முகத்தான் உணரும் அனுமானமேயாகும். உவமையளவை அல்லது உபமானப் பிரமாணம்: காட்டுப் பசு என்பது ஒன்று உண்டு என்று அறியாதவன், காட்டுக்குள் அதனைக் கண்ட பொழுது, நாட்டுப் பசுப்போல இருத்தலால் இது காட்டுப் பசுவாகும் என்று உணர்தல் உபமானப் பிரமாணமாகும். இது, கண்டமாத்திரத்தில் துணியப் படாமையால் காட்சியளவையுமல்ல, பொருளைக் கண்டே துணிதலால் அனுமானமும் அல்ல, வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், காட்சியால் பொதுத்தன்மையைக் கண்டு அதன் மூலம் 'காட்டுப் பசு' என்னும் சிறப்புப் பொருளைக் கருதி உணர்தலால் இதுவும் அனுமானமே ஆகும். ஒழிபளவை அல்லது பாரிசேடப் பிரமாணம்: மூவர் உள்ள இடத்தில் ஒரு பொருள் களவு செய்யப்படின், இருவர் கள்வர் அல்லர் என்பது தெளியப்பட்டால், மீதமுள்ள மற்றொருவனே கள்வன் எனத் துணிதல் பாரிசேடப் பிரமாணமாகும். இஃது ஒருவன் கள்வன் என்பதை அதற்கு உரிய சான்று கொண்டு துணியாது, இருவர் கள்வராகாமையால் அவன் கள்வன் என்பது அனுமானமன்று, வேறோர் அளவையாம் என்பர் சிலர். ஆயினும், மூவருள் ஒருவன் கள்வன் என்பது முன்னரே துணியப்பட்டமையாலும், இருவர் கள்வர் ஆகாமை பின்னர்த் துணியப்பட்டதாலும் இதுவும் அனுமானமேயாகும். உண்மையளவை அல்லது சம்பவப் பிரமாணம்: ஓரிடத்தில் நூறு இருக்கிறதென்றால் அவ்விடத்துப் பத்தும் உண்டென்று உணர்தல் சம்பவப் பிரமாணமாகும். நூறும் பத்தும் காட்சிப் பொருள் இல்லாததால் இது காட்சியளவையும் அதன் வழித்தாகிய அனுமானமும் இல்லை என்பர் சிலர். ஆனால் கருத்துப் பொருளைக் கருத்துப் பொருள் ஏதுவாக ( சான்றாக) உணரும் அனுமானமே இது. வழக்களவை அல்லது ஐதிகப்பிரமாணம்: ஒருமரத்திற் பேய் உண்டென்று வழிவழியாகச் சொல்லிவரும் வழக்குப் பற்றித் தானும் அவ்வாறே உணர்தல் ஐதிகப்பிரமாணமாகும். இது, நூலில் இல்லாததால் உரையளவையாகாது வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், அஃது உண்மை வழக்காயின் உரையளவையே. பொய் வழக்காயின் அளவை இல்லையென்றாகும். இயல்பளவை அல்லது சுபாவப்பிரமாணம் மரம் பூத்தது என்று ஒருவன் கூறக் கேட்டு, அச்சொல்லாலே அப்பொருளை உணர்தல் சுபாவப்பிரமாணம். சொற்கள் பொருளோடு பிரிப்பின்றி நிற்பதில்லை, எனவே அவைகளைக் கொண்டு பொருளை உணர்தல் அனுமானமாகாது, இது வேறோர் அளவை என்பர் சிலர். இருப்பினும் சொல்லுணர்வு பொருளுணர்வோடு இயல்பாய் உடன் நிகழ்வதால் இஃது அனுமானமேயாகும். இவ்வாறு பிறர் வேறு வேறு கூறும் பிற அளவைகளும் காட்சி, கருதல், உரை என்னும் மூன்று அளவைகளுள்ளே அடங்கிவிடும். 4. காட்சியளவையின் வகை மாணவன்: காட்சி முதலிய மூன்று அளவைகளின் இயல்பை பற்றி சுருக்கமாக கூறினீர்கள், அவைபற்றி அறிய வேண்டுவன அவ்வளவுதானா, வேறு எவையேனும் உள்ளதா? ஆசிரியர்: உள்ளது.. வாயிற் காட்சி (இந்திரியப் பிரத்தியட்சம்), மானதக் காட்சி (மானசப் பிரத்தியட்சம்), தன் வேதனைக் காட்சி (சுவவேதனாப் பிரத்தியட்சம்), யோகக் காட்சி (யோகப் பிரத்தியட்சம்) எனக் காட்சியளவை நான்கு வகைப்படும். வாயிற் காட்சி: கண் முதலிய பொறிகள் வாயிலாகப் பொருள்களைப் பொருந்தி உணர்வதே காட்சியளவை என்று முன்பு கூறினோம். அவ்வாறு நாம் உணருமிடத்து அக்காட்சி முதலில் பொதுவாகவும், பின்பு சிறப்பாகவும், அதன் பின்பு அனுபவமாகவும் நிகழும். பொதுவாக நிகழும் காட்சி, 'நிருவிகற்பக் காட்சி' என்று சொல்லப்படும். அஃதாவது, இஃது ஓர் உருவம், இஃது ஓர் ஓசை, இஃது ஒரு சுவை, இஃது ஒரு மணம், இஃது ஓர் உராய்வு என்று மட்டும் தோன்றுவது. இவ்வாறு கண் முதலிய பொறிகளால் பொதுவாக உணரும் உணர்வே, வாயிற் காட்சியாகும் (வாயில்-பொறி). மானதக் காட்சி: பொருள்களை வாயிற்காட்சியால் பொதுவாக உணர்ந்த பின்பு, சிறப்பாக உணர விரும்பினால், நாம் அந்தப் பொதுக்காட்சியை மறவாமல் பற்றி, மேலே மனம் முதலிய உட்கருவிகளைச் செலுத்தி, 'இஃது யாது?, என்று ஆராய்ந்து, 'இன்னது' என்று உணர்வோம்; இவ்வாறு உணர்வதே சிறப்புக் காட்சியாகும். இது, 'சவிகற்பக் காட்சி' எனப்படும். இது மனம் முதலிய உட்கருவிகளாலே உண்டாவதால், 'மானதக் காட்சி' எனப்படுகின்றது. கண் முதலிய பொறி அளவில் பொருள்களைப் பொதுவாக உணர்கின்ற வாயிற் காட்சியோடு நின்றுவிட்டால், அவை இன்னது எனத் தெரியாது, அதனால், அப்பொருள்களைப்பற்றிய நினைவும் பின்னர் உண்டாகாது. மனம் முதலிய கருவிகளைக் கொண்டு, பொருள்களை ஆராய்ந்து சிறப்பாக உணர்கின்ற மானதக் காட்சி நிகழ்ந்த பின்பே, அவை இன்னது என விளங்கும். அவ்வாறு விளங்க உணர்ந்த பொருள்களே பின்னர் நினைவுக்கு வரும். வாயிற் காட்சியால், 'இஃது ஒரு பொருள் தோன்றுகிறது' என்று தெரிந்த பின்பு, அதனை 'இன்னதென அறிதல் வேண்டும்' என்ற எண்ணம் உண்டாகுமாயின், 'இஃது யாது?" என்னும் ஆராய்ச்சி தோன்றும். எடுத்துக்காட்டாக, கண் வாயிலாக 'இஃது ஓர் உருவம் தோன்றுகிறது, என உணர்ந்த பின்பு 'அதனை இன்னதென உணர்தல் வேண்டும்' என்ற எண்ணம் தோன்றினால், 'இவ்வுருவம் யாது?' என்ற ஆராய்ச்சி உண்டாகும். அப்பொழுது, 'இது குற்றியோ? அல்லது மனிதனோ? என்ற ஐயப்பாடுகள் உண்டாகும். (குற்றி! என்பது பசுக்கள் நிற்குமிடத்தில் அவைகள் உராய்ந்து கொள்வதற்காக நடப்படும் மரம் அல்லது கல். அது சில வேளைகளில் ஆள் போலத் தோன்றும்). 'குற்றியோ' என உடன்பாட்டு வகையில் எண்ணுவது ‘சங்கற்பம்' என்றும், இல்லை என்று அதனை எதிர் மறுத்து எண்ணுவது 'விகற்பம்' என்றும் சொல்லப்படும். இச்சங்கற்ப விகற்பங்களாகிய ஐயப்பாடு ஐயக்காட்சியாகும். ஐயப்பாடு நிகழ்ந்த பின்னர், இதனை இன்னதெனத் துணிதல் வேண்டும் என்ற ஓர் எழுச்சி உண்டாகும். அப்பொழுது அப்பொருள் ஐந்து வகையில் வகுத்து உணரப்பட்டு, 'இஃது இன்னது' எனத் துணியப்படும். அவை ”பெயர், சாதி, குணம், தொழில், உடைமை” என்பன. அவ்வைந்து வகையில் வகுத்துணரப்பட்ட உருவம் மனிதனாயின், 'இவன் சாத்தன், மனிதன், கரியன், கடுநடையன் குழையினன்' என்றாற்போல உணர்தலாம். இவ்வாறு வேறு வேறு வகையில் பகுத்து உணர்தல் பற்றியே, இச்சிறப்புணர்வு, 'சவிகற்பக்காட்சி' என்றும், இவ்வாறு உணராத பொதுஉணர்வு ’நிருவிகற்பக்காட்சி' என்றும் சொல்லப்படுகின்றன. சவிகற்பம் வேறுபாட்டோடு கூடியது. நிருவிகற்பம்-வேறுபாடு இல்லாதது. (விகற்பம்- வேறுபாடு). சில சமயங்களில் வேறு பொருட்குரிய பெயர் முதலியவற்றை, காணப்பட்ட பொருட்குரியனவாகக் கருதுதலால், குற்றியை மனிதன் என்றும், மனிதனைக் குற்றியென்றும் மாறித் எண்ணக் கூடும். அது திரிவுக்காட்சி யாகும். ஐயக்காட்சியும், திரிவுக்காட்சியும் குற்றமுடையன. அதனால், அவை பிரமாணமாகாது. பொருள்களை அவ்வவற்றிற்குரிய பெயர் முதலியவற்றால் சவிகற்பமாக உள்ளவாறு உணர்தலே உண்மைக் காட்சி. அதுவே பிரமாணமாகும். தன் வேதனைக் காட்சி பொருள்களை, வாயிற்காட்சியால் நிருவிகற்பமாகவும், மானதக் காட்சியால் சவிகற்பமாகவும் உணர்ந்த பின்னர், அப்பொருளில் மீது உணர்வு உண்டாகுமாயின், இன்ப நுகர்ச்சியோ அல்லது துன்ப நுகர்ச்சியோ உண்டாகும். அந்த நுகர்ச்சி உணர்வே தன்வேதனைக் காட்சியாகும். 'வேதனை என்பதை நாம், 'துன்ப அனுபவம்' என்ற பொருளில் வழங்கினும் அது, துன்ப அனுபவம், இன்ப அனுபவம் இரண்டிற்கும் பொதுவேயாகும். யோகக்காட்சி மேற்கூறிய, வாயிற்காட்சி முதலிய மூன்றும் எல்லாருக்கும் நிகழ்வன. யோகக் காட்சி, அவ்வாறின்றிச் சிலர்க்குமட்டுமே நிகழும். அஃதாவது, யோக நெறியில் உள்ள 'இயமம், நியமம் முதலிய எண்வகை நிலைகளில் நின்று, அவற்றின் முடிந்த நிலையாகிய, 'சமாதி' என்னும் நிலை கைவரப்பெற்றவர்களுக்கே நிகழும் என்பதாம். இவர்கள் உயிர்களைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் கட்டுக்களை சிறிது நெகிழ்த்துக் கொள்ளுதலால், ஏகதேச உணர்வு சிறிது நீங்கி, வியாபக உணர்வு சிறிது உண்டாகும். அதனால் அவர்கள் ஒருகாலத்தில், ஓர் இடத்தில் இருந்தே, எக்காலத்திலும் எல்லா இடத்திலும் உள்ள பொருள்களை உணர வல்லவராவர். அவ்வாறு உணரும் உணர்வே யோகக் காட்சியாகும். நம்மால் உணர முடியாத பலவற்றை முனிவர்கள் தம் யோகக் காட்சியால் உணர்ந்து நமக்கு நூல்கள் வாயிலாகச் சொல்லியிருத்தல் போன்றாகும். இவையே வாயிற்காட்சி முதலிய நால்வகைக் காட்சியளவைகளின் இயல்பாகும். https://www.siddhantham.in/2025/05/3_90.html
  21. யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது 13 Dec 2025, 11:15 AM பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர். வழக்கு விபரம் ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன், சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அந்த வீடியோவை நீக்க 10 லட்சம் பணம் கேட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினர் தயாரிப்பாளர் புருஷோத்தமனை அடித்து அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து விட்டதாகவும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் விளக்கம் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சவுக்கு சங்கர், ” இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய் வழக்கு. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் என்ற யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. இதை எனது விளக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று நவம்பர் 1 ம் தேதி பதில் கடிதம் அனுப்பிவிட்டேன். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று இரவு வெளியிட்டுள்ளதால் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். https://minnambalam.com/youtuber-savukku-shankar-arrested/
  22. யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை சனி, 13 டிசம்பர் 2025 05:46 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த குற்றத்தில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். https://jaffnazone.com/news/53156
  23. மன்னாரிற்கு வரவுள்ள ஜனாதிபதி – வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்களும் பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ள போதும் மீனவர்கள் குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் தெரிவித்தார். மன்னாரிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் தீவை எடுத்துக்கொண்டால் அதிகளவான கிராமங்கள் மீனவ கிராமங்களாக காணப்படுகின்றன. மேலும் தேவன் பிட்டி தொடக்கம் முள்ளிக்குளம் வரை உள்ள மீனவர்களும் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீனவர்களின் பாதிப்புக்கள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பேசப்படவில்லை என்ற முறைப்பாடுகள் கிராம மட்ட மீனவ அமைப்புக்கள் ஊடாக சமாசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளரை சந்தித்து குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம். அரச அதிபரை சந்திக்கும் போது முழுமையான விடையங்களை அரச அதிபரிடம் தெரிவிப்பதாகவும், குறிப்பாக ஜனாதிபதியின் மன்னார் வருகையின் போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மீனவர்கள் பாதிப்பை தான் வெளிக் கொண்டு வருவதாகவும் பாதிப்புகளை முன்வைப்பதாகவும் தெரிவித்தார். இதுவரை மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் சார்பாக 578 முறைப்பாடுகள் கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமாகியமை உள்ளடங்களாக குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 578 நபர்களின் முறைப்பாடுகளை தவிர ஏனையவர்களின் பாதிப்புக்களும் பதிவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எவ்வாறாக இருந்தாலும் பாதிக்கப்பட்டு பதியப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். எமக்கு ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் மாவட்டத்தில் திணைக்களம் சார்பாக தலைவர்கள் கலந்து கொள்வார்கள். மீனவர்கள் சார்பாக கடற்றொழில் உதவி பணிப்பாளர் கலந்து கொள்வார். முழுமையாக மீனவர்களின் விடயம் பேசப்பட வேண்டும். ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். உண்மையிலேயே மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 578 மீனவர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன், கடந்த மாதம் 27 ஆம் திகதியில் இருந்து இன்று வரை கடற்தொழில் செய்ய முடியாத சூழ்நிலை கடலில் காணப்படுகிறது. அனர்த்தம் என்றால் உடனடியாக உரிய திணைக்களங்கள் மீனவர்களுக்கு அறிவித்தல்களை வழங்குகின்றனர். மீனவர்களை தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என்று. ஆனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லாது விட்டால் அவர்களுக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை. இதுவரை மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட போதும் அரசினால் மீனவர்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. எனவே மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ள நிலையில் மீனவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மன்னார் மாவட்டம் மற்றும் வட மாகாணத்திற்குள்ளும் ஊடுருவும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய விடையங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. தற்போது இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையும் அதிகரித்துள்ளது.எமது மீனவர்களின் மீன்பிடி வலைகள் கடும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 27 ஆம் திகதி சுமார் 15 இற்கும் மேற்பட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நண்டு வலைகள் இந்திய இழுவைப்படகுகளினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது. எனவே வடக்கு மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கும் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=352264
  24. வெல்லாவெளி தொல்பொருள் பதாகை விவகாரம்: 56 பேருக்கு வழக்கு December 13, 2025 மட்டக்களப்பு வெல்லாவெளியில் தொல்பொருள் பதாதை வைக்கவிடாமல் தடுத்த 56 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்ன் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தடுத்து கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் 56பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான அழைப்பாணை வெல்லாவெளி பொலிஸ் ஊடாக 35ஆம் கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2025,நவம்பர்,25 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம்கிராமம் கண்ணன்புரம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பெயர்ப்பலகையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெல்லாவெளி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு (11 ) நேற்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிலையில் இவர்கள் அனைவருக்கும் சொந்தப் பிணை வழங்கப்பட்டு எதிர்வரும் 2026.01.09 ம் திகதிக்கு வழக்கு தவணை வழங்கப்பட்டது. இதில் ஒருவர் அண்மையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்திருந்த நிலையில் அவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதுடன், ஒரு குடும்பத்தில் பலருக்கு இவ்வாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/wellaveli-archaeological-banner-issue-56-people-charged/
  25. 13ஆம் திருத்தம் சாத்தியமில்லை: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு December 13, 2025 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற பொய் வாக்குறுதிகள் வழங்க தாம் விரும்பவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யூரியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்த அவர், 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நடக்காத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைபடுத்துவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அதிகாரங்களை கொடுத்தால் தென்னிலங்கையில் அடிவாங்க வேண்டும். கொடுக்காவிட்டால் வடக்கில் அடிவாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. நாங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து உண்மையை கூற வேண்டும். இந்த நாட்டின் வரலாற்றில் அனைத்து தலைவர்களும் தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளனர் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் காலாசாரத்தில் பின்னிப்பிணைந்தவர்கள். இன்று சில தலைவர்கள் வடக்குக்கு சென்றால் சிங்கள கலாசாரத்தை மறுந்து விடுகின்றனர். தமிழ் – சிங்கள கலாசாரங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலையில் இரு இனங்களும் ஒன்றாக இணைய முடியும் என்றால் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வைத் தேடி செல்லலாம் என்று அவர் கூறியுள்ளார். வடக்கில் அனைத்து அபிவிருத்தியும் மஹிந்த ராஜபக்ச காலத்தில் உருவாக்கியதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனோ. ஏனைய தலைவர்கள் உருவாக்கியதோ அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தென் பகுதிக்கு கிடைக்கும் அதிகாரங்கள் வடக்குக்கும் வழங்க வேண்டும். வடக்கில் அரசியல் ரீதியாக பல கோரிக்கைகள் இருக்கின்றன. அதற்கு எமது ஆட்சியில் தீர்வுகள் உண்டு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் https://www.ilakku.org/13th-amendment-is-not-possible-namal-rajapaksa/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.