Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. முனிகளின் இராச்சியம் தி. செல்வமனோகரன் அறிமுகம் மனிதர் சமூக விலங்காக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயற்கையுடனிணைந்த வாழ்வில் தன் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டேயிருப்பது மனிதரியல்பாகும். இயற்கையை வெல்ல முடியாத தருணங்களில் எல்லாம் மனிதர் ‘இயல்பிறந்த’ ஆற்றலாக அதனைக் கருதி அச்சத்துடன் வழிபட, விசுவசிக்க, இறைஞ்சி நிற்கத் தலைப்பட்டனர். தான் நினைத்தது சித்திக்கச் சித்திக்க, மேலும் விசுவசிக்கவும் இறைஞ்சவும் நம்பிக்கை கொள்ளவும், தன் பகுத்தறிவைப் புறந்தள்ளி, அளவற்ற பக்தி கொள்ளவும் தலைப்பட்டனர். அது வயது, குலம், பால் என எல்லாப் பாகுபாடுகளும் கடந்த செயல்நிலையாகப் பரிணமித்தது. குல தெய்வங்களும், குலத்துக்கப்பால் யாவரையும் இரட்சிக்கும் தெய்வங்களும் உருவாயின. ஒவ்வொரு மனிதரும் தனது இருப்புப் பற்றிக் கொண்டிருந்த அச்சமும் வாழ்தலுக்கான உணவுத்தேடலும் ஏனையனவும், பாதுகாப்புச் சார்ந்த உணர்வுந்துதலை மையப்படுத்தின. இனக் குழுத்தலைவர், உயிரைக் காத்த வீரர் என தன்னை, தன்னைச் சூழ உள்ளவரைக் காத்தவர் மரியாதைக்குரியோராகவும்; பிறருக்காகத் தன்னுயிர் நீத்தவர் வழிபடு தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் ஆயினர். அத் தெய்வ உருவாக்கமும், வழிபடும் சடங்கும், கதைகளும், பாடல்களும், கூத்துகளும் சமூக மானிடவியலை புரிந்து கொள்ளவும் எழுதவும் பெரிதும் துணை நிற்கின்றன. பண்பாட்டசைவியக்கத்தை இனவரைவியலை அறியவும் எழுதவும் தூண்டின. இறந்தவர்கள் நன்மை செய்பவர், தீமை செய்பவர், நன்மையும் தீமையும் செய்பவர் என வகைப்படுத்தப்பட்டுக் கருதப்படுவதும் உண்டு. அவற்றுள் பேயாக அச்சத்துடனும் தெய்வமாக பக்தியுடனும் வணங்கப்படுகின்ற தெய்வங்களுள் ஒன்றாக முனி – முனீஸ்வரர் விளங்குகின்றார். முனி – முனீஸ்வரர் – முனியப்பர் ஈழத்துப் புலத்தில் தமிழர் வாழ்கின்ற கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் இன்றுவரை வணங்கப்படுகின்ற நாட்டார் தெய்வங்களுள் முனீஸ்வரருக்குத் தனி இடம் உண்டு. முனீஸ்வரரின் வரலாற்றை எழுத முற்படுகையில் சிலர் ‘ரிக்’ வேதத்தில் ‘முனி’ என்னும் சொல் உள்ளது என்றும் அதற்கு ‘தெய்வ ஆவேசம் படைத்தவர்’ என்பது பொருள் என்றும் குறிப்பிடுவர். உபநிடதங்கள், பகவத்கீதை முதலான நூல்களில் “உலக வாழ்வைத் துறந்து மௌனத்தைக் கைக்கொண்டு ஞானவழியாகிய பரமதியானத்துள் மூழ்கி விருப்பு, வெறுப்புகள் யாவும் நீங்கியவர்கள்” என முனி பற்றிக் குறிப்பிடுவதாகவும் கூறப்படுகின்றது. முனி எனும் சொல்லுக்கு கழகத் தமிழகராதி; கோபம், இருடி, புத்தன், வில், யானைக்கன்று, அகத்தி, தவத்தோன் எனப் பலவாறு பொருள் சுட்டுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே முனிவர் எனும் சொல் பிறந்தது. முனி என்பது ஒருவரல்ல; அது பல தோற்றங்களை உடைய ஏதோ ஒன்றாகவோ அல்லது பலவாகவோ உள்ளது. பல்வேறு காரணங்களால், பெயரில் முன்னடை அல்லது பின்னடைச் சொற்களை உடைய பல முனிகள் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் முனி பேயாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். முனி உலாவுகின்ற நேரம் நடுச்சாமப் பொழுது. அது விரும்பி உறைகின்ற ஆல், புளி மரங்களுக்குக் கிட்டவோ வெளிகளிலோ நடுச்சாமப் பொழுதை அண்மித்துச் செல்பவர் முனியிடம் அடி வாங்குவார். முனியை கண்டு ஏங்கி மரணத்தைத் தழுவிய கதைகளும் அநேகம் சொல்லப்படுகிறது. கந்த சக்ஷ்டி கவசத்தில்: “அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக லங்கிட” என வரும் வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது முனி அது துன்பத்தைத் தருவது புழங்கடை முனி பிள்ளைகளைத் தின்னும் கொள்ளிவாய்ப் பேய்கள் குறளைப் பேய்கள் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர் எனும் கருத்துகளை இவ்வரிகள் உணர்த்தி நிற்கின்றன. இவ்வளவு விடயங்களும் யாழ்ப்பாணத்து மக்களின் நம்பிக்கைகளாக இருந்து வந்துள்ளன. ‘முனி அடிக்கும், பிடிக்கும்’ எனும் தொடர் இன்று வரை வழக்கில் உள்ளது. பிள்ளைகள் குழப்படி செய்தால் பொக்காண்டியிடம் – பொக்காண்டிப்பேயிடம் – முனியிடம் பிடித்துக் கொடுப்பேன் என மிரட்டும் வழக்கம் உள்ளது. தீய சக்திகள் புழக்கடையில் உறையும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. வயல்வெளிகளில், வெறும் வெளிகளில் தெரிகின்ற ஒளிப் பொருட்கள் கொள்ளிவாய்ப் பேய்கள் ஆகவும் பந்தத்துடன் உலாவும் முனிகள் ஆகவும் நம்பப்பட்டு வந்துள்ளன. இன்று இது ‘ஏதேன் வாயு’ என அறிவியலில் கூறுகின்றது. பொழுதுபட்டதன் பின்பு, அந்தியின் பின் இருட்டில் பெண்கள், சிறுவர்கள் வெளியில் செல்லக்கூடாது என்றும் அவர்களை முனி பிடிக்கும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. யுத்த காலம் இந்த நம்பிக்கைகளைக் குறைத்துவிட்டது. யாழ்ப்பாணத்தவர் பலர் கந்தசக்ஷ்டி விரதம் பிடிக்க இந் நம்பிக்கைகளும் காரணமாக இருந்திருக்கலாம். பஞ்சமுனிகளாக வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி என்பன கூறப்படுகின்றன. இவை தவிர பதினெண்முனிகள் பற்றியும் கூறப்படுகின்றன. ஜடாமுனி, இலாடமுனி, நாதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலை முனி, நெல்லாண்டி முனி, வாள் முனி, சின்னமுத்து முனி உள்ளிட்டவை அவற்றுட் சில. இலங்கையில் மலையகப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக குடியேறிய மக்கள் தம் வாழ்வியல் சூழலோடு இணைத்து பல முனிகளை தனித்துவமாக வழிபட்டு வருகின்றனர். ரோதை முனி, தவறணை முனி, கம்பி முனி, கவ்வாத்து முனி என்பன சில உதாரணங்களாகும் (ஜெயசீலன்,எம்.,2020), (மலையகத் தமிழரின் கிராமிய வழிபாடுகள் நாட்டார் வழக்காறுகள், வ. இன்பமோகன், (பதி) குமரன் புத்தக இல்லம், கொழும்பு). தமிழகத்தைப் போலவே இங்கும் முனி எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்ட முனியாண்டி, முனீஸ்வரர், முனியப்பு, முனியம்மா, முனுசாமி போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. முனியைப் பேயாகக் கண்டு பயந்தோடிய தன்மையை நீங்கி முனியப்பராக, முனீஸ்வரராக – தெய்வமாக வழிபடும் மரபு பிற்காலத்தில் உருவாயிற்று. ஆயினும் அச்சத்தை விளைவிக்கின்ற ஆவேசம் மிகுந்த வீரம் மிக்க காவல் தெய்வமாக அவர் கருதப்படுகிறார். பயந்து ஓடுதல் பக்தியாக, வழிபாடாக, மடைபரவுவதாக மாறிற்று. கேட்பது தரும் கடவுள் எனும் நம்பிக்கையுருவாயிற்று. கொள்ளியைக் கையிலேந்தி பன்றி, யானை போன்ற மிருகங்களிடமிருந்தும் பிறமனிதர்களிடமிருந்தும் வயல்களைக் காக்கும் தெய்வம் என்ற நம்பிக்கை நிலைபெறலாயிற்று. தனிவழியே போகும் மனிதரைக் காக்கும் தெய்வமாக, இடர் களைந்து மனதில் நம்பிக்கை தரும் தெய்வமாக முனி கொண்டாடப்படும் நிலையை இன்று அவதானிக்க முடிகிறது. வவுனியா மூலாய்மடு, பேயாடி கூழாங்குள முனியப்பர் மீது த. மனோகரன் எழுதிய பாடலில்: “பெருவீதி மருங்கிருந்து வழிகாட்டும் ஐயா போகும் வழி சீரமைந்து விட வேண்டும் நீயே காவலாய் இருந்தெம்மைக் காத்தருள வேண்டும் பேயாடிக் கூழாங்குளம் உறையும் முனியப்பரே காவல்” எனப் பாடியுள்ளமையும் பயமின்றிப் பயணிக்க, மனவுறுதி கொள்ள, நல்வழி காட்ட வேண்டும் என வேண்டி நிற்பதும் இம்மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. முனிகள் பற்றிய கதைகள் தக்கன் யாகத்தினை அழிக்க சிவன் தனது உக்கிர வடிவமாக வீரபத்திரரை உருவாக்கினார். வீரபத்திரர் யாகத்தையும், அதில் பங்கு பற்றியவர்களையும் மிகுந்த கோபத்தோடு தாக்கியளித்தார். அதேவேளை சிவபெருமான் தன்னிலிருந்து தன்னம்சமாக முனீஸ்வரரை உருவாக்கினார். அவர் காவல் தெய்வமாக நல்லவரைக் காத்தார். அவர் காலந்தோறும் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றார். இவரிலிருந்தே ஏழு முனிகள் தோன்றினர். சிவனும் உமையும் உடனிருந்த காலத்தில் உமையை விடுத்து சிவனை மட்டுமே பிருங்கிமுனிவர் வழிபட்டார். இதனால் கோபமுற்ற உமையம்மை சிவனில் பாதியாகக் கடுந்தவம் செய்ய முற்பட்டார். வாழைத்தோட்டம் அமைத்து சிவலிங்கத்தை அதில் ஸ்தாபித்து, அபிக்ஷேகம் செய்ய முனைந்த போது நீர் இருக்கவில்லை. விநாயகரையும் முருகனையும் அழைத்து நீரெடுத்து வரப்பணித்தார். மலையில் தவம் செய்த முனிவரின் கமண்டலத்தைத் தட்டி அதிலிருந்து கமண்டலவாற்றை விநாயகர் உருவாக்க, முருகனோ மலையில் வேலூன்றி சேயாற்றை உருவாக்கினார். நீர் வரக்காணாத உமையம்மை நிலத்தில் பிரம்பாலடிக்க பிரம்பகவாறு தோன்றிற்று. வெப்பத்தால் சிவந்த அம்மை நீர் வரத்தால் பச்சை நிறத்தினலாயினாள். அன்று தொட்டு பச்சையம்மன் ஆனாள். சிவலிங்கத்துக்கு அபிக்ஷேகம் செய்து விரதமிருந்த காலத்தில் அரக்கர்கள் பலர் அத் தவத்தை குழப்ப முற்பட்டனர். அப்போது சிவனிலிருந்து பஞ்சமுனிகள் தோன்றி பச்சையம்மனுக்குக் காவலாயிருந்தனர். இன்றும் அம்மன் கோயிலில் முனிக்கு இடமுண்டு. தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்த அந்தகாசுரன் எனும் அசுரனை அழித்துத் தம்மைக்காக்கும் படி வேண்டிய அடியார்களைக் காப்பதற்கு முற்பட்ட பராசக்தித் தாயானவள் ‘காத்தாயி’ எனும் பெயரில் பூமியில் அவதரித்ததாகவும் அவள் அந்தகாசுரனை அழிக்க ஏழு முனிகளைப் படைத்தாள் என்றும் அவர்கள் அசுரனை அழித்துக் கலியுகத்தில் மக்களைக் காக்க அவதரித்தனர் என்றும் கூறப்படுகின்றது. பிரம தேவரின் மானச புத்திரர்களான சனகர், சந்தனர், சனாதனர், சந்தனகுமாரர் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் ஞானம் அருளுமாறு வேண்ட அவர்; குருவாக தென்திசை நோக்கி அமர்ந்து ஞானத்தைப் போதித்தார். சிவபெருமானின் ஞான வடிவம் தட்சிணாமூர்த்தி. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தைத் போதித்ததால் அவர் முனீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆக முனி ‘சிவனின் அம்சம்’ எனும் கருத்து வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆயினும் முனீஸ்வரன் சிவனின் அம்சம் என்பது போல சிம்ம முனி, நரசிம்ம (திருமால்) அம்சம் எனவும், நாதமுனி நாரதர் அம்சம் எனவும், வேதமுனி பிரம்மாவின் அம்சம் எனவும், ஏனைய முனிகள் ஏனைய தெய்வங்கள், தேவர்கள் அம்சம் எனவும் சொல்லும் வழக்கமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பேயாக, சிறு தெய்வமாக இருந்த முனிக்கு முனீஸ்வரன் காயத்ரி மந்திரம், பூஜா மந்திரம் என்பனவும் இயற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். ‘மம்மல்’ பொழுதுகளில், உச்சிப் பொழுதுகளில், சாமத்தில் தனித்துச் செல்லும் பெண்களைப் பிடித்து தான் விரும்பியதை அவர்களிடம் பெறுகின்ற பேயாகவும் அவர்களிடம் இருந்து விலகிச் செல்ல முட்டை, கோழி, ஆடு கேட்பவராகவும் இருந்தவர் முனி. சுருட்டுப் பற்றிய படி சாமங்களில் உலாவருபவர். அவரை நேரே காண்பவர் மீது தொற்றுபவராக அல்லது பிடித்து துன்பம் தருபவராக அல்லது இவரைக் கண்டவுடன் அதிர்ச்சியில் கண்டவர் இறந்துவிடுமளவுக்குக் கிலியை ஏற்படுத்த வல்லவராக இருந்த முனி, ஈஸ்வரனாரோடு இணைக்கப்பட்டு முனீஸ்வரனாக எல்லைக் காவல் தெய்வமாக, சுடலைக் காவலராக பைரவருக்கு சம அந்தஸ்து உள்ளவராக்கப்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிக்கு செல்லும்போது வல்லைப் பாலம் தாண்டியவுடன் முனிக்கு ஒரு கோயில் உண்டு. வழிப்பயணம் இடரின்றித் தொடர பயணிகள் அதனை வணங்கிச் செல்வர் (இப்போது அந்த இடத்தை விநாயகரும், சீரடி பாபாவும் ஆக்கிரமித்து வருகின்றனர்). அந்த முனி வல்லைவெளி தாண்டியவுடன் உள்ள புறாப்பொறுக்கி எனுமிடத்தில் உள்ள பெரிய ஆலமரத்தில் வசித்து வந்ததாகவும் அதைத் தறித்ததன் பின் அருகிலிருந்த மருதமரத்தில் உறைவதாகவும் கூறப்படுகிறது. இதுபோல வேறு முனிகளும் வடமராட்சியில் உள்ளன. அவை யாவும் மாதமொரு முறை ஒன்று கூடுவதாகக் கூறப்படுகிறது. புறாப்பொறுக்கியில் உள்ள முனியை, குறித்த நாளில் உயிலங்குன்றடி முனி வந்து சந்தித்து அதனை அழைத்துக்கொண்டு திக்கத்து முனியிடமும், பின்பு முறையே சக்கோட்டைமுனி, பருத்தித்துறை தாமரைக் குளத்தடி முனி என்பவைகளை அழைத்துக் கொண்டு சந்தைப் புளியடி முனியிடமும் வருவார். இவை வரும்போது தத்தம் பரிகலங்களுடன் வரும். சங்கு, சேமக்கலம், எக்காளம், சீழ்க்கை என்பன ஒலிக்கும். எதிரில் யாரேனும் எதிர்பட்டால் பரிகலங்கள் அவர்களை அடித்து விடும். அத்துன்பம் நீங்க மக்கள் நேர்த்திக் கடன் வைத்து நிறைவேற்றுவர் (கணபதிப்பிள்ளை, க. 1962, ஈழத்து வாழ்வும் வளமும், 61 -62). முனியால் பீடிக்கப்பட்ட ஒருவர் நீர்நிலையை அடைந்தாலோ அல்லது நீர்ப்பொருள் ஒன்றைத் தொட்டாலோ முனி அவரை விட்டு விடும் என்றும், தூக்கத்திலே முனி ஒருவரைப் பீடிப்பின் ஈரச்சாக்கை காலால் மிதித்தவுடன் முனி விலகிச் சென்று விடும் என்றும் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. சுருட்டை, கொள்ளியை அதாவது நெருப்பை விரும்பும் முனி, நீரில் வெறுப்புக் கொண்டிருப்பதாகக் (கோபிகா, எழுதுமட்டுவாழ்) கருதப்படுகிறது. மலையகத்தில் தொழில்துறை சார் வழிபாட்டில் முனிகளின் ஆதிக்கம் அதிகமுண்டு (ஜெயசீலன், எம்., 2020,165-173). தேயிலைக் கன்றுகளை நாற்று மேடையிட்டு வளர்க்கும் இடமாகிய தவறணையில் (யாழ்ப்பாண வழக்கில் இச்சொல் கள்ளுக் கொட்டிலைக் குறிக்கும்) பயிரைப் பாதுகாக்க, தொழிலாளிகளைப் பாதுகாக்க தவறணை முனி வழிபடப்படுகின்றார். போக்குவரத்து வளர்ச்சியடையாத பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்து மூடையாகக் கட்டப்பட்டு கம்பிகளின் வழியே தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. அக் கம்பிகள் ‘கம்பிமுனி’ எனும் தெய்வமாக, தங்களையும் தம் தொழிலையும் காக்கும் தெய்வமாக வழிபட்டது. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களால் வழிபடப்பட்ட தெய்வம் ரோதை முனி எனப்பட்டது. இவருக்கான வழிபாடு நேர்த்தியாக நடைபெறாதுவிடின் ரோதை முனி உயிர்ப் பலியோ, இரத்தப்பலியோ எடுத்து விடுவார் எனும் நம்பிக்கை வலிதானதாகக் காணப்படுகிறது. இதைவிட மோட்டுமுனி (மேட்டுமுனி) போன்ற பல முனி வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. துன்பத்திலிருந்து மக்களை காக்கும் தெய்வமாக எல்லா மக்களாலும் வழிபடப்படும் தெய்வமாக முனி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முனியின் அமைவிடங்கள் முனிவழிபாடு இலங்கையில் தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மலையகத் தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் தனிவழிபாட்டு இடங்கள் உண்டு. யாழ்ப்பாணத்திலும் முனி ஊர்கள் தோறும் பரிவாரத் தெய்வமாகவோ தனிக் கோயிலுடையதாகவோ இன்று வரை வழிபடப்படுகின்றது. குறிப்பாக குடிமனைகள் இல்லாத வெளிகளில் தனிக்கோயில்கள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு, அம்பாறைப் பிரதேசங்களில் தனிக்கோயில்கள் இல்லை. அம்மன் கோயில்களில் பரிவாரத் தெய்வங்களுள் ஒன்றாக உள்ளது. உதாரணமாக களுவாஞ்சிக்குடி முனைத்தீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தைக் குறிப்பிடலாம். இதே போல பெரும்படை, ஐயனார் கோயில்களிலும் முனிக்கு தனிப் பரிவாரக் கோயிலோ அல்லது படையலிடமோ காணப்படுகிறது. திருகோணமலை, வன்னிப் பிராந்தியங்களில் தனிக்கோயில்கள் உள்ளன. பெரும்பாலும் நாற்சந்தி, முச்சந்தி, தெருவோரங்கள், ஆளரவமற்ற இடங்கள், ஊர் எல்லைகள், சுடலை போன்ற இடங்களிலேயே முனிக்குத் தனிக்கோயில்கள் இருப்பதை வட இலங்கையில் அவதானிக்க முடிகிறது. சடங்கு முறைகள் கிராமிய வழிபாட்டு மரபில் உள்ள முனியின் தனிக் கோயில்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. பரிவாரமாக இருக்கும் கோயில்களில் பிரதான தெய்வத்துக்கு விளக்கு வைக்கும் நாட்களில் விளக்கு வைக்கப்படுகின்றது. அடியவர்கள் தாம் ஊரை விட்டு வெளியூர் செல்லும்போது, நெடுவழிப் பிரயாணங்களின் போது விளக்கிட்டு வணங்கிச் செல்லும் வழக்கமும் காணப்படுகின்றது. குறித்த கோயிலை ஆதரிப்போரில் ஒருவரே பூசாரியாகவும் திகழ்கின்றார். தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, சித்ராப் பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூசை, மடை பரவுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றன நிகழ்கின்றன. ஐயனார், பெரும்படை மற்றும் அம்மன் கோவில்களில் முனிக்கு தனியான வளுந்துப் பானை வைக்கும் வழக்கம் காணப்படுகின்றது. நீண்ட கால அளவில் ஆடு, கோழி என்பனவற்றை பலியிடுதல் முட்டை, சாராயம், சுருட்டு என்பனவற்றைப் படைத்தல் என்பன முதன்மை பெற்று வந்துள்ளன. இன்னும் சில கோவில்களில் மடையில் சுருட்டு, சாராயம் வைத்தல் நடைபெறுகின்றன. அதேபோல ஆடு, கோழி பலியிடாது நேர்ந்து விடுதலும் உண்டு. உயிர்ப்பலி அருகி வருகின்றது. பூநகரி, சாவகச்சேரி போன்ற பிரதேசங்களில் சைவமடை வைக்கும் மரபே காணப்படுகின்றது (தகவல்: ச. மார்க்கண்டு). நாகர்கோவில், வீரபத்திரர் கோயில், விக்ஷ்ணு கோயில் போன்றவற்றில் சைவமடையே வைக்கப்பட்டு வருகிறது. அங்கு சாராயம் வைத்தாலும் பருகும் பழக்கம் இல்லை (தகவல், அப்பையா அருட்சிவபாலன், கொழும்புத்துறை). பொதுவில், கை பார்க்காத கப்பல் வாழைப்பழங்களை படைக்கும் மரபும் இக்கோயில்களில் காணப்படுகின்றது (தகவல், கோடீஸ்வரன் விஜிதரன், முகாமைத்துவ உதவியாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்). அதேபோல கேரதீவு ஐயனார், தனங்கிளப்பு முனியப்பர் கோவில்களில் காம்பு கிள்ளாத வெற்றிலையும், நாக்கு மூக்குத் தள்ளாத பழங்களும் படைக்கும் மரபு காணப்படுகின்றது. கிராமியக் கோயில்கள் பலவற்றில் பிள்ளையார், மூலவர் போன்றவர்களை அடுத்து முனிக்கு முதன்மையளிப்பதும் மடை வைப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். பொதுவில் வட இலங்கையில் காலமாமுனிக்கே அதிக செல்வாக்கு இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆயினும் பொதுவில் முனீஸ்வரன் என்றே சொல்லப்படுகிறது. கல், சூலம், கருங்காலிக் கட்டையின் வழி ஆரம்பத்தில் வழிபடப்பட்ட முனி இன்று முனீஸ்வரராக பெரிய மீசையும் வாளும் ஏந்திய உருவத்தோடு குதிரையுடன் கூடியவராய் உருவக் கடவுளாக வழிபடப்படுகின்றார். மட்டக்களப்பில் காளமாமுனியையே முதன்மைப்படுத்துகின்ற அதேவேளை அம்மன் கோயில்களில் வாள் முனிக்கும் தனியான இடமுண்டு. அரி ஓம் ஐயும் கிலியும் சௌவும் அங்கிசப் பிறை வடிவமும் ஆவென்ற வாயும் ஈ என்ற பல்லும் ஒரு கையில் கமண்டலமும் புலித்தோல் ஆசனமும் வீர மாணிக்க மாலையும் இலங்கிய மணித் தாவடமுமாக வருகின்றார் எங்கள் ஆதி கால மாமுனி அக்கினி மாமுனி அகத்திய மாமுனி குருவே மாதா பிதா….எனச் சடங்குப் பாடலும் காணப்படுகின்றது. காளமாமுனிக்கு அம்மன் ஆலயங்களில் பரிவாரக் கட்டிடம் உள்ளது (தகவல், பூசாரி கிருபைரத்தினம் சர்வேஸ்வரன், ஆரையம்பதி). முனிக்கு அங்கும் தனிமடை உண்டு. அம்மனுக்குரிய மடையையொத்த மடை, சடங்குகள் என்பன நடைபெறுகின்றன. மந்திரச் சடங்குகளில் காளமாமுனி, வாள்முனி, ஆதிமுனி என்பன முதன்மையாகின்றன. கழிப்புச் சடங்குகளில் காளமாமுனியை ஆட்டி, பின் படையல் படைப்பர். சுடலையில் வைரவருக்கு சமமாக விசேக்ஷமாக முனிக்கும் படையல் வைப்பர். இந்தக் கருத்துகள், மத்திய இந்திய வரலாற்றில் முதன்மை பெற்றிருந்த சைவப் பிரிவுகளில் தாந்திரீக சைவங்களை, குறிப்பாக காளாமுக, கபாலிக சமயங்களை, அவற்றின் சுடலை வாழ்வை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. முனி, கோயிற் சடங்கில் கலையாடி வாக்குச் சொல்லும் மரபு இன்றும் காணப்படுகின்றது. யாழ்ப்பாண மரபில் முனி பொதுவாக கலையாடினாலும் சொத்தி முனியின் ஆட்டம் தனித்துவமானது. கருப்பு நிறத்தில் கீழ் ஆடையும் மேலே கருப்புக் கம்பளியும் போர்த்தி கண்ணாடி போட்டு கையில் பொல்லுடன் ஆடுதல் சிறப்பம்சமாகும். கண்ணாடி போடும் வழக்கம் எப்போது வந்தது என்பதை அறிய முடியாது விடினும், அதற்கு நூற்றாண்டுக்கு உட்பட்ட வரலாறே உண்டு என்பது தெளிவு. இந்தக் கம்பளி, கண்ணாடி, பொல் என்பன மடையில் வைக்கப்படுவது வழக்கம். அதேபோல இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கசையை வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. முனியாக தெய்வமாடுபவர் தனக்குத் தானே கசையால் அடித்தபடி கலை ஆடுவதும் குறி சொல்வதும் குறிப்பிட்ட பிரதேசங்களில் வழக்கமாக இருந்துள்ளது. இந்தப் பண்புகளோடு சொத்தி முனி ஒரு காலைக் கெந்தியபடி அல்லது குறண்டிக் குறண்டி ஆடுவது வழக்கம். முனி ஆடும்போது, விரல் மொத்தத்தில் உள்ள திரியை எண்ணெய்யில் தோய்த்து பந்தம் போல கொழுத்திக் கொடுக்கப்படும். ஆடுபவர் அதனை வாங்கி வாய்க்குள் வைப்பதாகவும், மீளவும் கொழுத்திக் கொடுக்க மீள வாய்க்குள் வைப்பதாகவும், 18 திரிவரை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. நீறு போடுகின்ற வழக்கமும் காணப்பட்டுள்ளது. நீறு இடுவதன் ஊடாகத் தீராத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இன்று வரை காணப்படுகின்றது. மட்டக்களப்பு பிரதேசத்தில் இவ்வழக்கங்கள் மாறுபடுகின்றன. கலை ஆடுபவர் புலித்தோல் ஆடை, உருத்திராக்கம், யோக தண்டம், கமண்டலம், சூலம் என்பனவற்றை தாங்கியபடியே முனியாக ஆடுவார். குறி சொல்லி நீறிடுவார். இங்கு முனி ஆட்டங்கள் பல வகையாக உள்ளன. வாள்முனி வாளேந்தி ஆடுதல் இதற்கு உதாரணமாகும். சடங்கின் போது பாடப்படும் காவியப் பாடல்களில் ஆதிமுனி, காளமாமுனி, வாள்முனி பற்றிய குறிப்புகள் வருவதையும் காண முடிகின்றது. முடிவுரை முனி பேயாக, குலதெய்வமாக, காவல் தெய்வமாக, தொழில் துறை சார் தெய்வமாக இலங்கை வாழ் மக்களிடம் சமய, சமூக, வாழ்வியல் புலத்தில் செல்வாக்குப் பெற்று நிற்கின்றது. பெண்களை, வழிப்போக்கர்களை பிடிப்பதாக – அடிப்பதாக – படையல் கேட்பதாக – படைத்தால் நன்மை செய்வதாக நம்பப்பட்ட முனி, ஈஸ்வரனுடன் இணைக்கப்பட்டு தெய்வமாக்கப்பட்டது. பயிர் பண்டங்களை, ஊரை, நோய் நொடியில் இருந்து மனிதர்களை காக்கும் குலதெய்வமாக, காவல் தெய்வமாக, தொழிலில் ஏற்படும் இடர்களை நீக்கி பாதுகாப்புத் தரும் முனியாக என்றும் வழிபடப்பட்டு வருகின்றது. வழிமறித்து அடிப்பதும், காறித் துப்பினால் விலகுவதும், வணங்கினால் வழித்துணையாய் வருவதுமாக நம்பப்பட்ட முனி, முனீஸ்வரனாக பெரும் தெய்வமாக்கப்பட்டு வருதலை அவதானிக்க முடிகிறது. ஆடு, கோழி பலியிடப்பட்டு வழிபடப்பட்டு வந்த யாழ்ப்பாணக் கோட்டை முனியப்பர் இன்று பெரும் தெய்வமாகி – ஆகமக் கோயிலாக மூன்று கால பூஜை நடைபெறும் தெய்வமாக விளங்குதலும், வடமராட்சி சுப்பர்மடம் முனீஸ்வரன் கோயிலின் மேல்நிலை ஆக்கமும் இதற்குத் தக்க சான்றுகளாகின்றன. கொள்ளி, நெருப்பு, சுருட்டு, திரி வழி நெருப்பை உண்ணும் தெய்வமாக இவர் சித்தரிக்கப்படுவதோடு, நீரினைக் கண்டால் விலகிச் செல்லும் தெய்வமாகச் சுட்டப்படுவதும் சமூக மெய்யியல் ஆய்வுக்குரிய விடயங்கள் ஆகின்றன. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் எங்கும் வழிபடப்படும் இத்தெய்வம் தமிழகத்தில் ‘பொடிகாட்’ முனீஸ்வரனாகவும் மலேசியாவில் ‘ஸ்டெதஸ்கோப்’ முனியாகவும் இன்று விளங்குகின்றது. மலையகத்தில் தவறணை முனி, கம்பி முனி, ரோதை முனி என வழிபடப்படுவது துயரம் நிறைந்த மலையக வரலாற்றின் பெருஞ்சான்றாகின்றது. முனி என்பது ஒரு தெய்வமல்ல; அவை பல. இன்றும் முனிகளின் இராச்சியம் தேசமெங்கும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. https://www.ezhunaonline.com/kingdom-of-sages/
  2. புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) Bookday தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 8 புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) அ. குமரேசன் 1958ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago). ஆனால் அதை உருவாக்கிய எழுத்தாளர் விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். நோபல் பரிசுத் தேர்வுக் குழுவின் அரசியல் நோக்கத்திற்கு இரையாவதைப் புரிந்துகொண்டு, அல்லது உலகில் அப்போது நடந்த ஏதேனும் அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மனசாட்சியின்படி மறுத்தாரா? அல்லது நாவலுக்கு சொந்த நாட்டில் எழுந்த எதிர்ப்புக்குப் பணிந்தாரா? கதையையும், கதை வெளியான கதையையும் தெரிந்துகொண்டால் இந்த வினாக்களுக்கு விடை கிடைக்கும். ரஷ்ய நாட்டவரான போரிஸ் லியோனிடோவிச் பாஸ்டர்நாக் (Boris Pasternak) (1890–1960) ‘தடை வேலிகளுக்கு மேலே மேகங்கள்’, ‘மேகங்களின் நடுவே இரட்டை நட்சத்திரம்’, ’இரண்டாவது பிறப்பு’, ‘கருத்துகளும் வெவ்வேறு வகைகளும்’ ஆகியவை உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியவர். தனது காலகட்டத்தில் ரஷ்யாவில் ஜார் மன்னராட்சியின் கொடுங்கோன்மை, மக்களின் அவலம், முதலாம் உலகப் போர், ஜார் சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்களின் எழுச்சி, ஆட்சியைத் தூக்கி எறிந்து சோசலிச சோவியத் யூனியன் ஆட்சிக்கு அடிப்படை அமைத்த புரட்சி, கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்கள், இரண்டாம் உலகப் போர், சமுதாயத்தில் ஏற்பட்டிருந்த அசைவுகள் ஆகியவற்றின் தாக்கங்களை நேரடி அனுபவங்களாக உள்வாங்கினார். அவற்றில் அவருக்கு மாறுபட்ட சிந்தனைகளும்இருந்தன. அந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்தி அவர் முதலாவதாகவும் கடைசியாகவும் எழுதிய நாவல் இது. 1950ஆம் ஆண்டுகளில் நாவலைப் பகுதி பகுதியாக எழுதி, அப்போதைய வழக்கப்படி இலக்கிய மேடைகளில் வாசித்து வந்தார். முழுப் புத்தகமாகத் தொகுக்கப்பட இருந்த நிலையில் சோவியத் அரசு அதை அச்சிடவும் வெளியிடவும் தடை விதித்தது. ஜார் அரசின் கீழ் நாட்டு மக்கள் வறுமையிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வான நிலைமைகளிலும் மூழ்கடிக்கப்பட்டிருந்தது, அதற்கு எதிராக ஆவேசத்துடன் போராட்டங்கள் வெடித்தது. இவற்றைத் தொடக்கப் பகுதியில் சரியாகப் பதிவு செய்த நாவல், பின்னர் புரட்சி என்றாலே கொடூரமான வன்முறைகள் என்றும், மாற்றங்களுக்கான திட்டங்களை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றும், அரசாட்சியிலும் சமூக வாழ்விலும் கட்டுப்பாடுகளின் பெயரால் கிறிஸ்துவத் திருச்சபைகள் ஆதிக்கம் செலுத்திய காலத்திற்குத் திரும்பிச் செல்வதன் மீது மோகத்தை ஏற்படுத்துகிறது என்றும், சோசலிசக் கட்டுமானத்தின் மேல் மனநிறைவின்மையை வளர்க்கிறது என்றும் தடைக்கான காரணம் கூறப்பட்டது. கடத்தப்பட்டு வெளியீடு சில நண்பர்களின் உதவியோடு தொகுப்பு இத்தாலிக்குக் கடத்தப்பட்டது. அங்கே புத்தகமாக அச்சிடப்பட்டு 1957இல் வெளியிடப்பட்டது. இதில் ஒரு கவனிக்கத்தக்க ஒரு தகவல் – நாவலை வெளியிட்ட ஜியாங்கியாகோமோ ஃபெல்ட்ரினெல்லி ஒரு இடதுசாரிப் பதிப்பாளர், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இயக்கத்தின் லட்சியங்களுக்கு எதிரானதாகவும் எழுதப்பட்ட நாவலை வெளியிட்டதற்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நூலை அச்சிட்டு வெளியிட வைப்பதற்கு சிஐஏ வேலை செய்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க அரசு நடத்தி வந்த கெடுபிடிப் போரில் நாவலும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. பல மொழிகளிலும் கொண்டுவரப்பட்டது. நாவலுக்குப் பல நாடுகளிலும் வரவேற்பளிக்கப்பட்டது. அரசியல், சமூக, பண்பாட்டுத்தள நிலைமைகளைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, சோவியத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது என்று பாராட்டுகள் குவிந்தன. இலக்கியப் படைப்பு என்ற முறையில் எதிர்க் கருத்துகளும் வந்தன. முன்னும் பின்னுமாகப் போகும் கதையின் நடை குழப்பத்தைத் தருகிறது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏராளமான கதாபாத்திரங்கள், ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரத்திற்கும் மூன்று பெயர்கள், பல இடங்களில் அவர்கள் வருகிறபோது ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில் குறிப்பிடப்படுகிறது, அது வாசிப்புக்குத் தடையாக இருக்கிறது என்றும் விமர்சிக்கப்பட்டது. மனித உணர்வுகளும் உறவுகளும் தொடர்பான சித்தரிப்புகள் சிறப்பாக இருக்கின்றன என்ற அங்கீகாரத்துடன், வரலாற்றைத் திரித்துக்கூறுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆயினும், 1958இல் கூடிய நோபல் பரிசுத் தேர்வுக்குழு ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) மிகச் சிறந்த நாவல் என்று அறிவித்தது. நாவலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதில், இலக்கியத் தகுதிகளுக்கு அப்பாற்பட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு சோவியத் யூனியன் மேல் இருந்த அரசியல் காழ்ப்பு ஒரு முக்கிய பின்னணியாக இருந்தது என்று கூறலாம். சோவியத் யூனியனில் உயர்ந்து பறந்த செங்கொடியும், அங்கே மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான நடவடிக்கைகளும் தங்களுடைய நாடுகளிலும் சுரண்டல் அமைப்புக்கு எதிராக மக்களைத் திரட்டும் என்ற அச்சம் முதலாளித்துவக் கும்பல்களுக்கு இருந்தது. ஆகவே சிவப்புச் சிந்தனையைத் தாக்கக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கப்பட்டது. போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) இன்னொரு பக்கத்தில், பாஸ்டர்னாக் தன் சொந்தக் கருத்தின் அடிப்படையில் அல்லது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் எழுதியிருந்தாலும் கூட, அதற்குத் தடை விதித்திருக்கக்கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. நாவலைப் பற்றிய கூர்மையான விமர்சனங்களை நிகிதா குருசேவ் அரசாங்கமோ, கம்யூனிஸ்ட் கட்சியோ, இலக்கிய அமைப்புகளோ வலுவாகச் செய்து மக்களின் முடிவுக்கு விட்டிருக்கலாம். மாறாகத் தடை விதித்ததால், சோசலிசத்தில் கருத்துச் சுதந்திரம் இருக்காது என்ற எண்ணத்தைப் பரப்புவதற்குத் தோதான சூழல் ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. மருத்துவக் கவிஞன் ‘டாக்டர் ஷிவாகோ’ நாவலின் கதைச்சுருக்கம் வருமாறு: மருத்துவரான யூரி ஷிவாகோ ஒரு கவிஞனும் கூட. மன்னராட்சிக் கொடுமைகளைக் கண்டு வளர்ந்தவன் உள்நாட்டுப் போரின் கொந்தளிப்பையும் சந்திக்கிறான். மக்களின் கிளர்ச்சி பெரும் புரட்சியாக மாறுவதையும் காண்கிறான். டோன்யா என்ற பெண்ணை மணந்துகொள்கிறான். முதல் உலகப்போரின்போது ராணுவ மருத்துவராகப் பணியாற்ற ஆணையிடப்படுகிறது. மருத்துவ முகாமில் லாரா என்ற பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்கிறான். ஒரு புரட்சிகர இளைஞனின் மனைவி லாரா. அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாமல் அவனை தேடுகிறவளான அவள் ஷிவாகோ மீதும் அன்பு வைக்கிறாள். புரட்சியை நிலைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஷிவாகோவின் வாழ்க்கையை பாதிக்கின்றன. அந்த நடவடிக்கைகளை ஏற்க மறுக்கிறான். தன் மனைவியையும் குடும்பத்தையும் நேசிக்கிற அவன் தன் காதலைப் பாதுகாக்கவும் போராடுகிறான். கொந்தளிப்பான நிலைமைகளால் துரத்தப்பட்டவனாக வேறோர் இடத்தை அடையும் அவன் தன் எழுத்தாக்கங்களில் ஆறுதல் கொள்கிறான். கவிதைகளை வெளியிட முயல்கிறான். அதற்குத் தடை விதிக்கப்படுகிறது. லாரா–ஷிவாகோ இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும், சூழ்நிலைகள் அவர்களைப் பிரிக்கின்றன. லாரா தனது கணவனைத் தேடிச் செல்கிறாள், ஷிவாகோ தனது குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. (இதனிடையே நாட்டின் அரசியலிலும் சமுதாயத்திலும் பல வேகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மத நிறுவனங்களின் பிடியிலிருந்து அரசு அமைப்புகள் விடுவிக்கப்பட்டன. சமுதாயத்திலும் தலையீடுகள் கட்டுப்படுத்தப்பட்டன.ஆனால், அவற்றை எதிர்மறையாகவே நாவல் சித்தரிக்கிறது). பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தொடர்கின்றன. சோவியத் படையிலிருந்து வெளியேறும் யுரி ஷிவாகோ இறுதியில் மாஸ்கோ நகருக்குத் திருமபுகிறான். மனைவியும் மகனும் வேறெங்கோ இருக்க, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறான், அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. ஆனால் யுரி மகிழ்ச்சியாக இல்லை. 1929ஆம் ஆண்டில், உடல்நலம் குன்றிய நிலையில் ஒருநாள் சாலையில் செல்லும்போது டிராம் விபத்தில் இறக்கிறான் ஷிவாகோ. பல ஆண்டுகளுக்குப் பிறகு யூரியின் சிறுவயது நண்பர்கள் அவனது கவிதைகளைத் தேடியெடுத்து புத்தகமாக வெளியிடுகிறார்கள். அந்தக் கவிதைகள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காதலும் ஏக்கங்களும் நிறைந்த அவனுடைய வாழ்க்கை ஒரு சோகமான காவியமாகப் பேசப்படுகிறது. இலக்கியத்துக்காகவா அரசியலுக்காகவா? ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) சோவியத் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் எழுதப்பட்ட ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக மேற்கத்திய நாடுகளின் அரசுகளாலும் திறனாய்வாளர்களாலும் பார்க்கப்பட்டது. சோவியத் இலக்கியத்திற்கே எதிரான ஒரு குரலாகவும் இந்த நாவலுக்கான பரிசு கருதப்பட்டது. அரசின் அழுத்தத்தை மீறி பாஸ்டர்நாக் தனது படைப்புக்காக நின்றார் என்று போற்றும் குரல்கள் ஒலித்தன. அதில் ஒரு பகுதி உண்மையும் இருந்தது, மறுபகுதி உள்நோக்கமும் இருந்தது. “நோபல் பரிசு வழங்கப்பட்டதில் அரசியல் காரணிகளுக்கு முக்கியப் பங்கு இருந்தாலும், அதன் ஆழமான தத்துவார்த்த சிந்தனைகள், கவித்துவமான மொழி மற்றும் மனித உணர்வுகளை சித்தரிக்கும் விதம் ஆகியவை இலக்கியப்பூர்வமாகப் பாராட்டுக்குரியவை. அன்று நிலவிய உலகளாவிய அரசியல் சூழல் நாவலின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கலாம்,” என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நாவல் புரட்சியின் உன்னத நோக்கங்களை சிறுமைப்படுத்தியது, சுரண்டல் சக்திகளுக்கும் மத நிறுவனங்களுக்கும் ஆதரவாகப் பேசியது என்ற விமர்சனமும் முன்னுக்கு வந்தது.தனிமனிதனின் உணர்வுகள், காதல் மற்றும் ஆன்மீகத் தேடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற நாவல் புரட்சியின் பொதுவான இலக்குகளை விட தனிமனிதனின் சுதந்திரம் முக்கியமானது என்ற கருத்தை மறைமுகமாக முன்வைக்கிறது. இது புரட்சியின் கூட்டு உணர்வுக்கு எதிரானது என்று போராட்டக்களத்தில் நின்றவர்களால் பார்க்கப்பட்டது. நாவலின் கதாநாயகனான ஷிவாகோவின் கவிதைகளில் மதத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இது சோவியத் அரசு வளர்க்க முயன்ற அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக அமைந்தது. அதே போல், நிலப்பிரபுத்துவ கால சமூக அமைப்பின் மீதான ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்று மாற்றங்களுக்காக நிற்பவர்கள் கூறினார்கள். நம் ஊரில் கூட, எதற்கெடுத்தாலும் “அந்தக் காலத்திலேயெல்லாம்” என்று காலாவதியாகிப் போன கலாச்சார, சமூக நிலைகள் மறுபடியும் வர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறவர்ளையும், பழைய சடங்குகளை நியாயப்படுத்திப் புதுப்பிக்க விருமபுகிறவர்களையும் பார்க்கிறோம் அல்லவா?. முடிவுரையாகச் சொல்வதென்றால், படைப்புச் சுதந்திரம் மிக முக்கியமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) நாவலை அன்றைய சோவியத் அரசு தடை செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். அவர்கள் நாவலை கடுமையாக விமர்சித்திருக்கலாம், அதன் கருத்துக்களை மறுத்திருக்கலாம், ஆனால் தடை நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலானது..அதே நேரத்தில் ஒரு பெரிய சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, தனிமனித நோக்கங்களை மட்டும் முதன்மைப்படுத்துவது புரட்சிக்கு எதிரானவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது. பிற்காலத்தில் சோவியத் யூனியனும் அதன் மாண்புகளும் தகர்க்கப்பட்டதற்கு ஆதரவான மனநிலையை வளர்த்ததில் இப்படிப்பட்ட சிந்தனைப் போக்குகளுக்கும் பங்கிருக்கிறது எனலாம். போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) மறைந்தபிறகு, 1965இல் ஓமர் ஷெரீப் மையப்பாத்திரத்தில் நடிக்க, டேவிட் லீன் இயக்கத்தில் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) திரைப்படமாகவும் வந்தது. உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்று பல அமைப்புகளும் சான்றளிக்க, திரையரங்க வசூலிலும் உலக சாதனை நிகழ்த்திய படங்களில் ஒன்றாக தன்னைப் பதித்துக்கொண்டது. நாவலுக்குச் சற்றும் குறையாமல் சோவியத் அரசைக் குறைகூறியது. ஒரு நாவலை வெற்றிகரமான திரைப்படமாக்கிய முயற்சிகளில் ஒன்றாகவும் அடையாளம் பெற்றது. https://bookday.in/books-beyond-obstacles-boris-pasternak-doctor-zhivago-novel-oriented-article-written-by-a-kumaresan/
  3. அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்ட கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருக்கவில்லை – சுங்க இயக்குநர் விளக்கம் June 8, 2025 12:45 pm சுங்க ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும், 323 கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லை என்று சுங்க ஊடகப் பேச்சாளர் கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகொட தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களை விடுவித்தமை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்துவதற்காக இலங்கை சுங்கத்தால் இன்று (08) கூட்டப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், கொள்கலன்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டதாகக் கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், பிளாஸ்டிக், நூல்கள், இரசாயனங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், கால்நடை தீவனம், இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள், சிமெந்து, இரும்பு குழாய்கள், உரங்கள் மற்றும் மரம் ஆகியவை இருந்தன. இந்த கொள்கலன்கள் பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. கூடுதலாக, இந்த கொள்கலன்கள் இந்தோனேசியா, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. இந்தக் கொள்கலன்களை விடுவிப்பதில் நாங்கள் பின்பற்றிய வழிமுறையின் காரணமாக, இறக்குமதியாளர்கள் சுங்கத்திற்கு அறிவித்த பொருட்கள் மட்டுமே இந்தக் கொள்கலன்களில் இருந்ததாக நாங்கள் நம்புகிறோம். இந்தப் பொருட்களை விடுவிப்பதற்கான இறக்குமதிக் குறிப்புகளில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னரே இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. “நாங்கள் ஸ்கிரீனிங் யூனிட் என்ற ஒரு குழுவை நிறுவி, அந்தக் குழுவிற்கு அளவுகோல்களை வழங்கி, ஆய்வு இல்லாமல் சட்டப்பூர்வமாக விடுவிக்கக்கூடிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான அதிகாரத்தை அந்தக் குழுவிற்கு வழங்கியுள்ளோம் அவர்களின் நடைமுறை, இந்தக் குழுவில் சுமார் 25-30 ஆண்டுகளாக சுங்கத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இருப்பதைக் காட்டுகிறது. அவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் நிறைய அறிவும், தெளிவும் உள்ளது. குழுவினரின் அறிவையும் நாங்கள் வழங்கிய அளவுகோல்களையும் பயன்படுத்தி, அதன் அளவுகோல்களுக்கு இணங்கும் கொள்கலன்களை விடுகிக்கின்றோம். ஜூலை 2024 இல் இந்த முறையை செயல்படுத்தத் தொடங்கினோம். ஜனவரி 2025 இல் தான் மேற்குறித்த 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. அதுவரை, பல சந்தர்ப்பங்களில் கணிசமான எண்ணிக்கையிலான கொள்கலன்கள் இந்த வழியில் விடுவிக்கப்பட்டுள்ளன.” எவ்வாயிறும், குறித்த கொள்கலன்களில் ஆயுதங்கள், தங்கம் மற்றும் போதைப் பொருள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனவே இந்தத் தேர்வு முறையை நாங்கள் பின்பற்றியதால், இந்தக் கொள்கலன்களில் எதுவும் இல்லை என்று நாங்கள் நம்பிக்கையுடன் கூறமுடியும். இருப்பினும், இது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடந்ததால், இதற்காக ஒரு பிந்தைய அனுமதி தணிக்கை நடத்த இலங்கை சுங்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பிந்தைய அனுமதித் துறை ஏற்கனவே ஒரு தணிக்கையை நடத்தி வருகிறது. மேலும், நிதி அமைச்சகத்தின் செயலாளரால் நியமிக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழு இந்த முழு செயல்முறையையும் விசாரித்துள்ளது. சுங்க இயக்குநர் ஜெனரல் உட்பட அனைத்து அதிகாரிகளும் இந்தக் குழுவிற்குச் சென்று விவரங்களை வழங்கியுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறைக்கும் நாங்கள் விவரங்களை வழங்கியுள்ளோம், எனவே எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. “மேலும் இந்த கொள்கலன்களை விடுவிக்கும் செயல்பாட்டில் வேறு எந்த தரப்பினரிடமிருந்தும் எந்த உத்தரவும் அல்லது செல்வாக்கும் இல்லை. நான் அதை முற்றிலும் உறுதியாகக் கூற முடியும்.” என்றார். இதேவேளை, அண்மையில் நாடாளுமன்றில் பேசிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், சுங்க ஆய்வு செய்யாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சும் இதனை முற்றாக மறுத்திருந்தது. 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றையும் வழங்கியுள்ளார். இதேவேளை, 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/sri-lanka-customs-issues-clarification-on-contents-of-controversial-containers/
  4. திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்! June 8, 2025 9:08 am அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் பணிகள் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி பிரதமர் தலைமையிலான ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்ற யோசனைகளும் உண்டு. 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களும் அடுத்த நான்கு வருடங்களுக்கு நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இல்லை. மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு அவசியமில்லை என ஜனாதிபதி அநுர கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடுதல் மற்றும் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தல் மாத்திரமே தற்போதைய திட்டமாகவுள்ளது. இப்பின்புலத்தில் புதிய யாப்பு தயாரிப்பு விஷயத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக சுமந்திரன் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும், புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புக்கு அவர் ஒத்தழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும், நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார சக உறுப்பினர் ஒருவரிடம் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். எந்த அடிப்படையில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று நீதியமைச்சா் எதுவும் கூறவில்லை. ஆனால், சத்தியலிங்கம் மிக விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதால், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சுமந்திரன் நியமிக்கப்படலாம் என்று தமிழரசுக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இப்பின்னணியில்தான் உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் விடயத்தில் கஜேந்திரகுமார் அணியுடன் கூட்டு சேராமல், ஈபிடிபியுடன் கூட்டுச் சேர்வதற்கான காய் நகர்த்தல் நடத்திருக்கிறது போல் தெரிகிறது. அதேநேரம், மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின் பிரகாரமே ஈபிடிபி தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஈபிடிபியை ஆட்சி அமைக்குமாறு வலியுறுத்துமாறு, மகிந்த ராஜபக்ச மூத்த பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் கூறியதாகவும், அத் தகவலை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அந்த பத்திரிகை ஆசிரியர் தொலைபேசியில் எடுத்துச் சொன்னதாகவும் கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன. சுமந்திரன் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் ஏற்கனவே நல்ல உறவில் இருக்கும் ஒருவர். அதன் காரண – காரியமாக டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி தமிழரசுக் கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதை மகிந்த ராஜபக்ச, கொழும்பு மைய அரசியல் நோக்கில் விரும்பியிருக்கலாம். சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, அவர்களிடையே கட்சி அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், வடக்கு கிழக்கு ஈழத்தமிழர்களைக் கையாளும் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று செயற்பட்டு வருகின்றனர் என்பது பொதுவான உண்மை. அந்த அடிப்படையில் அநுரகுமார திஸாநாயக்க – சுமந்திரன் ஆகியோர் ஊடான தொடர்புகள் – காய்நகர்த்தல்கள் தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியாக தமக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணம் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லாமலில்லை. கட்சி அரசியல் வேறுபாடுகள் இன்றி அரசியல் தலைவர்களுக்குரிய சட்ட உதவிகளை சுமந்திரன் கடந்த காலங்களிலும் மேற்கொண்டிருந்தார் என்ற பின்னணியில் இந்த நகர்வையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில், கஜேந்திரகுமார் மேற்கொண்ட முயற்சி, எந்தளவு தூரம் நிலையாக இருக்கும் என்ற கேள்விகள் உண்டு. ஆனாலும், 13 பற்றிய பேச்சுக்கள் தற்போதைக்கு எழக் கூடிய நிலைமை இல்லாத ஒரு பின்னணியில், முழுமையான சுயாட்சிக் கட்டமைப்புக்கான ஏற்பாடுகளை, புதிதாக அமைத்த கூட்டின் மூலம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. குறிப்பாக இன அழிப்பு பற்றிய சர்வதேச நீதிக்குரிய ஏற்பாடுகளையும் துரிதமாகக் கையாள வேண்டிய காலம் இது. ஆகவே, கஜேந்திரகுமாரின் அடுத்த கட்ட செயல்பாடு இந்த அடிப்படையில் அமையுமா அல்லது வெறுமனே உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான ஒரு கூட்டா என்பதை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். ஏனெனில், சங்கு அணி உறுப்பினர்கள் சிலரின் கடந்த கால செயற்பாடுகள் கொழும்பு மைய அரசியலுக்குள் பழக்கப்பட்டவை. 13 இல்லாவிட்டாலும், ஒற்றையாட்சியை ஏற்கும் பண்பு சங்கு அணியில் சிலரிடம் தொடர்ச்சியாக நிலவுகின்றது. இப் பின்புலத்தில் மிக இறுக்கமான ஏற்க முடியாத மனக் கசப்புகளோடுதான் கஜேந்திரகுமார், சங்கு அணியுடன் ஒப்பந்தம் செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் கசப்புகள் – சகிப்புத் தன்மைகள் – நெருக்கடிகள் – கடும் விமர்சனங்கள் போன்றவற்றை கஜேந்திரகுமார் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தலைமை ஒன்றிடம் இருக்க வேண்டிய பண்பு இதுதான். அதேநேரம், யாழ்ப்பாணத்தைக் கடந்து வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்ற இயங்கு நிலைக்கு கஜேந்திரகுமார் புத்துயிர் கொடுக்கவும் வேண்டும். சங்கு அணியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலத்துக்குப் பொருத்தம் என்று கூறினாலும், ”சுயநிர்ணய உரிமை” – ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை” என்ற பிரதான இரு உள்ளடக்கங்கள், வெறுமனே பேச்சுடன் மாத்திரம் நின்றுவிடுகின்றதா என்ற கேள்விகள் இல்லாமலில்லை. ஆகவே, இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய அல்லது மேலும் செய்து காண்பிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு உரியது. அது இலகுவான காரியம் அல்ல. ஆனாலும், 2009 இற்குப் பின்னர், அதாவது கடந்த பதினைந்து வருடங்களின் பின்னரான சூழலில், தேர்தல் அரசியலை இடது கையாளும் விடுதலைச் செயற்பாட்டு அரசியலை வலது கையாளும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு உண்டு. ஏனெனில், புதிய அரசியல் யாப்பு என்ற கோசத்துடன் ஈழத் தமிழர் விவகாரம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து அடுத்த ஆண்டு முற்றாக நீக்கம் செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் கசிந்துள்ளன. சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது கட்சி அரசியலுக்கு அப்பால் ஈழத்தமிழர் விவகாரத்தை ஒரு புள்ளியில் நின்று சர்வதேச அரங்கில் கையாண்ட பயன்கள் தான் இவை. கட்சி அரசியலைக் கடந்து தமிழர் விவகாரத்தைக் கையாள ”வெளியுறவுக் கொள்கை” – ”சர்வதேச இராஜதந்திர சேவை” என்ற இரு பிரதான மையங்களையும் சிங்கள தலைவர்கள் வகுத்திருக்கின்றனர். அவர்களின் பிரதான வகிபாகம் அதுதான். ஆகவே அரசு அற்ற சமூகம் என்ற நிலையில், ”வலுவான கட்டமைப்புடன் கூடிய வெளியுறவுக் கொள்கை” – சர்வதேச இராஜதந்திர சேவை” என்ற இரு பிரதான மையங்களைத் தமிழ்த் தரப்பு உருவாக்க வேண்டும். இப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு மாத்திரமல்ல, அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள அணிக்கும் உண்டு. கடந்த கால கொழும்பு மைய அரசியலை கைவிட்டு, அதாவது இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட அரசியல் வழி முறைகளில் கவனம் செலுத்தாமல், 1985 ஆம் ஆண்டு திம்புக் கோட்பாட்டு அடிப்படையிலான கட்டமைப்புக்கு வழி சமைக்க வேண்டும். பூட்டான் (Bhutan) தலைநகர் திம்புவில் இடம்பெற்ற பேச்சில் விடுதலைப் புலிகள், ஈபிஆர்எல்எப். புளொட் ரெலோ உள்ளிட்ட இயக்கங்கள் பங்குபற்றியிருந்தன. அங்கு ஏற்பட்ட இணக்கத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆகவே சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பகிரங்கமாகத் தங்கள் நிலைப்பபாட்டை அறிவிக்க வேண்டும். அருந்தவபாலன், ஐங்கரநேசன் ஆகியோர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவையாக ஒன்றிணைந்துள்ள பின்னணியில், இச் செயற்பாட்டை நகர்த்த முடியும் என்ற நம்பிக்கைகள் மக்களிடம் உண்டு. அ.நிக்ஸன்- https://oruvan.com/sumanthiran-will-cooperate-with-the-new-constitution/
  5. சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல் June 8, 2025 10:13 am மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கங்களின் போது சபாநாயகராகவும், சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு நடத்தும் சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2022 மே ஒன்பதாம் திகதி நடந்த கலவரத்தில் திஸ்ஸமஹாராம, மாகம பகுதியில் உள்ள தனது சொத்து சேதமடைந்ததாகக் கூறி அரசாங்கத்திடம் இருந்து 15.2 மில்லியன் ரூபா இழப்பீடு பெற்ற விவகாரத்தில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. விசாரணைகளில் அந்த சொத்து அவருக்கு சொந்தமானது இல்லை எனவும், அங்கு வசிப்பிட கட்டமைப்பு எதுவும் இல்லை எனவும், வெறுமனே ஒரு நெல் சேமிப்பு களஞ்சியம் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. சொத்து தனது கட்டுப்பாட்டில் உள்ளதாக ராஜபக்ஸ சத்தியப்பிரமாணம் செய்து அளித்திருந்த போதிலும், மேற்கொண்ட விசாரணைகளில் அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2023 ஜூலை மாதம் வெளியான மதிப்பீட்டு அறிக்கையில், அந்த இடத்தில் 14.8 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு இருந்ததாகவும், நெல் களஞ்சியத்துக்கு 222,600 ரூபா சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், பொது நிர்வாக அமைச்சு, தங்கள் அதிகார வரம்பில் இந்த இழப்பீடு வழங்கப்பட முடியாது என தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது. இருப்பினும், முழு தொகையும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், குறித்த மோசடி குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சமல் ராஜபக்ச விசாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த நிதியை செலுத்துவது தொடர்பான சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அரச அதிகாரிகள் மீது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/chamal-rajapaksa-may-be-arrested-at-any-time-state-media-reports/
  6. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர் 08 Jun, 2025 | 10:13 AM (நா.தனுஜா) வட, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ்த்தேசிய கட்சிகளின் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அவற்றின் நிலைவரம் என்பன தொடர்பில் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர், தாம் அம்மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அவ்வாறான திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் இருப்பின், அதனைத் தம்மிடம் வழங்குமாறும், அதுபற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் பின்னரான தமிழ்த்தேசிய கட்சிகளின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய உயர்ஸ்தானிகருக்குப் பதிலளித்த சுமந்திரன், ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றத்திலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத் தாம் முன்வைத்ததாகவும், இருப்பினும் அதற்கு முரணாக இரு கட்சிகள் கூட்டணி அமைத்து தம்வசமே அதிக ஆசனங்கள் இருப்பதுபோல் காண்பித்துக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒரே கொள்கையையே கொண்டிருப்பதாகவும், அணுகுமுறைகளே மாறுபட்டவையாகக் காணப்படுவதாகவும் தெரிவித்த சுமந்திரன், இருப்பினும் அதனை கஜேந்திரகுமார் மறுப்பதற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை எனவும் விசனம் வெளியிட்டார். அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில் 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் தயாரித்த அரசியலமைப்பு வரைபு சிறந்த பல கூறுகளைக் கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எடுத்துரைத்த சுமந்திரன், அதிலுள்ள குறைபாடுகள் பற்றி சகலரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதனை முற்றாக நிராகரிக்கவேண்டும் என கஜேந்திரகுமார் கூறிவருவது ஏற்புடையதன்று என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/216895
  7. தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகள், தற்போது அதன் இயங்கு திறனை முற்றாக பாதிக்கும் நிலையினை நோக்கி நகர்ந்துள்ளன. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அனுசரணையாளர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட இவ்வைத்தியசாலை, இன்று வரை ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு உயிருக்குப்போராடும் வாழ்வதார சிகிச்சையைக் வழங்கி வருகிறது. ஆனால், அப்போதும் இப்போதும் தொடர்ந்து சிலர் மேற்கொள்ளும் மறைமுகமான நடவடிக்கைகள், வஞ்சக போக்குகள் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் இதன் நிரந்தர மேம்பாட்டுக்கும் சேவைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது, பல ஆண்டுகளாக புற்றுநோயாளர்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்திக்கு எதிராக நடக்கும் அவதூறு பரப்பல், சமூக மேடைகளிலான வசைபாடுகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை எமது சங்கம் கடுமையாகக் கண்டிக்கின்றது. அவரை மனதளவில் பாதித்து, சேவையில் இருந்து பின்வாங்க வைக்கவே இது மேற்கொள்ளப்படுவதாக எமது சங்கம் தெளிவாக அறிந்து வருகின்றது. இச்சவாலுக்கு உரிய சூழ்நிலை ஒரு சில தனிநபர்களின் துயரம் மட்டுமல்ல அதுவே நோயாளர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் சமூக மருத்துவப் பின்னடைவுகளுக்கு இடமளிக்கும் நிலை ஆகும். இந்நிலையில், வைத்திய நிபுணர்களுக்கு எதிரான இத்தகைய களங்கப்படுத்தல் ஆனது, ஏழை நோயாளர்களின் உரிமைகளை நேரடியாக தாக்குகின்றது. அத்துடன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் சேவைகள் குறைக்கப்பட்டு, அதன் தரம் சிதைக்கப்படுவதற்கான பின்னணியில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும் சட்டவிரோத ஒழுங்குகள் செயல்படுவதாகவும், அவை உறுதியான தண்டனைவிதிகள் இன்றி தொடர்வதாகவும் எமது சங்கம் ஆழ்ந்த கவலையுடன் , உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. எனவே, புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும் அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடியாக நிர்வாக, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளடங்கலாக பாதுகாக்கப்பட்டு மேம்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அவசியமானால் தீவிரப்படுத்தப்படும். நமது நோக்கம் உன்னத நோக்கம் கொண்ட தனி நபர்களை காப்பது மட்டுமல்ல நோயாளியின் உரிமைகள், வாழ்க்கை தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmbn64q8c01joqpbs833pk06z
  8. புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன் கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று கூறத்தக்க பொருத்தமான கூட்டுக்கள்தான் உண்டு.இப்பொழுது கஜேந்திரக்குமார் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டும் அப்படித்தான். அதுவும் ஒரு சமயோசிதக் கூட்டுத்தான். தந்திரோபாயக் கூட்டுத்தான்.எனினும், தமிழ்த் தேசிய நோக்கு நிலையில், பொது எதிரிக்கு எதிராக ஆகக்கூடிய பட்ஷம் ஒரு தேசமாகத் திரள்வது என்ற அடிப்படையில் அந்த கூட்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள்.அதேசமயம் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள். எனவே நீதிக்கான போராட்டத்தில் யாரைப் பிரதான குற்றவாளியாகக் காணப் போகிறோம்; யாருக்கு எதிராக அணி திரளப் போகிறோம் என்பதில் தமிழ் மக்களிடம் மிகத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.அதாவது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வது.எங்களுக்குள் ஒருவர் மற்றவரை குற்றஞ்சாட்டி நாங்கள் பல துண்டுகளாகச் சிதறிப் போவதா? அல்லது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வதா? என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம். இந்த அடிப்படையில் பார்த்தால் கஜேந்திரக்குமார் டிரிஎன்ஏயோடு கூட்டுக்குப் போவது என்று முடிவெடுத்தது ஒரு திருப்பகரமான மாற்றம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தியாகி-துரோகி வாய்ப்பாட்டுக்கு வெளியே அந்தக் கூட்டு உருவாகியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகால வாய்ப்பாட்டுக்கு வெளியே முன்னணி வந்திருக்கிறது.அது இரண்டு தரப்புக்கும் மெய்யான ஒரு பண்புருமாற்றமாக இருந்தால் கூட்டு நிலைக்கும். அந்தக் கூட்டின் மூலம் அவர்கள் பின்வரும் நன்மைகளை அடைய முயற்சிக்கலாம். முதலாவதாக, பொது எதிரிக்கு எதிராக ஒப்பீட்டளவில் பெரிய கூட்டு. இரண்டாவதாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளை உருவாக்கலாம். மூன்றாவதாக, தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியைத் தனிமைப்படுத்தலாம். நான்காவதாக, மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு பலமான முன்னணியை உருவாக்கலாம். ஐந்தாவதாக, கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தலாம். டிரிஎன்ஏயைப் பொறுத்த்தவரை அவர்கள் யாரோடாவது கூட்டுச் சேர வேண்டும். தனியாக நின்று பிடிக்க முடியாது. தமிழரசுக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்தால் மாகாண சபையிலும் அதற்குப் பின் வரக்கூடிய தேர்தல்களிலும் அதிகரித்த வெற்றி வாய்ப்புகள் அவர்களுக்கு இருக்கக்கூடும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவ்வாறான வெற்றி வாய்ப்புகளை இனிமேல்தான் நிரூபிக்க வேண்டாம். ஆனால் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது தொடர்பாக தமிழரசுக் கட்சியோடு அவர்கள் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளில் திருப்தியான பெறுபேறுகள் இல்லாத ஒரு பின்னணிக்குள் அவர்கள் முன்னணியை நோக்கி வந்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சி தன்னை முதன்மை கட்சியாகவும் பெரிய கட்சியாகவும் கருதி, தனது மேலாண்மையை வலியுறுத்த முற்பட்டதன் விளைவு இது. புதிய கூட்டை எப்படி உளவியல் ரீதியாகவும் நடைமுறையிலும் பலவீனப்படுத்தலாம் என்று சிந்தித்து சுமந்திரன் அணி திட்டமிட்டு வேலை செய்கின்றது.சுமந்திரன் அணி இந்தக் கூட்டைக் கண்டு பதட்டமடைகிறது. எதிர்காலத்தில் தலைமைத்துவம் முன்னணியிடம் சென்று விடக்கூடாது என்ற பயமும் அதில் உண்டு. எனவே இந்தக் கூட்டை உடைப்பதற்காக எந்த ஒரு வெளி எதிரியையும் விடக் கூடுதலாக சுமந்திரன் அணி வேலை செய்கின்றது. ஈபிடிபியுடன் தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தைக்கு போனதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் அதனால் ஏற்படும் பின்னுதைப்பு கட்சியைக் கடுமையாக பாதிக்கக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன. இதில் சுமந்திரனுக்கு ஆறுதலான விடயம் என்னவென்றால்,சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் காணப்படும் சக்திகளுக்கு தலைமை தாங்க இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை தயாரில்லை என்பதுதான். இதனால் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் படிப்படியாக கட்சிக்குள் தன் பிடியை பலப்படுத்தி வருகிறார். மந்திரித்து ஏவி விடப்பட்ட சேவலைப்போல அவர் அங்கலாய்ப்போடு ஓடிக்கொண்டேயிருக்கிறார். ஒரு கட்சியின் பதில் செயலாளர் இவ்வளவுக்குத் தீயாக வேலை செய்வதில்லை. ஆனால் சுமந்திரன் தொடர்ந்து இயங்குகிறார். முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்சியின் எல்லாமுமாக அவர் தோன்றினார். இப்பொழுதும் அந்தப் பாத்திரத்தை எப்படித் தக்க வைப்பது என்று சிந்தித்துத் திட்டமிட்டு உழைக்கிறார்.அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் எப்படியும் மக்கள் ஆணையைப் பெற்று விட வேண்டும் என்ற தவிப்பு அதில் தெரிகிறது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைப் போட்டி என்பது பலமான தலைமைகள் இரண்டு இருப்பதால் ஏற்பட்டது அல்ல. இரண்டுமே பலவீனமான தலைமைகள் என்பதால் ஏற்பட்டதுதான் என்பதைக் கடந்த ஆண்டு நிரூபித்து விட்டது. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தை பலப்படுத்த இதுதான் தருணம் என்று நம்புவதாகத் தெரிகிறது.கடந்த வெள்ளிக்கிழமை கஜேந்திரகுமார் கொழும்பில் நடாத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் சுமந்திரன் அணிக்குப் பொறி வைப்பவை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த 15 ஆண்டுகளாக தன்னை ஒரு மாற்று அணியாகத்தான் ஸ்தாபித்து வந்திருக்கிறது. தன்னை ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாகக் கருதி வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக தன்னை கட்டமைத்துக் கொள்ள அக்கட்சி தவறிவிட்டது. 15 ஆண்டுகளின் பின் கஜேந்திரக்குமார் உடல் ரீதியாகவும் நோய்வாய்ப்பட்டு தேறிய பின், அந்தக் கட்சி அவருக்கு நெருக்கமான சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் தூண்டுதலால் தனது வழமையான வாய்ப்பாட்டிலிருந்து இறங்கி வருவதாகத் தெரிகிறது. ஆனால் வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக அவர்கள் வளர்வதற்கு இதை விடக் கடுமையாக உழைக்க வேண்டும்.அதாவது தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக வளர மேலும் கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் அப்படி உழைக்கும் வரையிலும் தமிழரசுக் கட்சிதான் முதன்மைக் கட்சியாக தொடர்ந்துமிருக்கும். புதிய கூட்டு நிலைத்திருக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சிப் பண்பு மீண்டும் தலை தூக்கும். தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட கூட்டுக்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய கட்சிகளும் சரி ஆயுதப் போராட்ட இயக்கங்களும் சரி தங்களுக்குள்ளேயும் மோதியிருக்கின்றன.தங்களுக்கு இடையிலும் மோதியிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தொடங்கி ஆயுதப் போராட்ட காலத்தில் திம்பு பேச்சு வார்த்தையை நோக்கி உருவாக்கப்பட்ட இயங்கங்களின் கூட்டு. அதன்பின் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதன் பின் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை. அதன்பின் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு வரையிலுமான எல்லாக் கூட்டுக்களும் ஒரு கட்டத்தின் பின் குலைந்து விட்டன. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலான தொகுக்கப்பட்ட தோல்வியென்பது கூட்டுக்களின் தோல்வியுந்தான். இப்பொழுது ஒரு கூட்டு உருவாகியிருக்கிறது. எனினும் இதுகூட பிரம்மாண்டமான ஒரு கூட்டு இல்லை.தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் வடக்கு கிழக்கு தழுவிய பெருங் கட்சியாக, முதன்மைக் கட்சியாகக் காணப்படுகின்றது. எனவே இப்பொழுது ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் ரத்தச் சுற்றோட்டங்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி நிலையை பலப்படுத்துமா? மேற்கத்திய ஜனநாயகங்களில் உள்ளது போல இரு கட்சிப் போட்டி நிலைமை என்பது அங்கு ஆரோக்கியமானது. ஆனால் நீதிக்காக போராடும்,அரசற்ற மக்களாகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த 16 ஆண்டு காலத் தேக்கம், தோல்வி என்பவற்றின் பின்னணியில், அது ஆரோக்கியமானது அல்ல.பொது எதிரிக்கு எதிராகத் தேசம் திரண்டு நிற்காது.இரண்டாக நிற்கும். கட்சி மைய அரசியல் இப்படித்தான் இருக்கும்.கட்சிகளால் மட்டும் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது https://www.nillanthan.com/7451/
  9. த்ரிஷா இருக்கா! அந்த நம்பிக்கையில்தான் படம் பார்க்கப் போகின்றேன்🥰
  10. செல்வம் அருளானந்தம்- நேர்காணல் திராவிடமணி மே 25, 2025 செல்வம் அருளானந்தம் எனும் இயற்பெயரையுடைய இவர் ‘காலம் செல்வம்’ என்றே இன்று எல்லோராலும் அழைக்கப்பெறுகின்றார். இவர் 1953ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாள் யாழ்ப்பாணம் சில்லாலையில் சவேரிமுத்து, திரேசம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தமது தொடக்கக்கல்வியை சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், பின்பு புனித ஹென்றி கல்லூரியிலும் முடித்தார். மேலும், பிரான்ஸ் நாட்டில் பாரிஸில் உள்ள செயின்ட் அகஸ்டின் பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பிரெஞ்சு மொழியையும் கற்றுத் தேர்ந்தார். பிற்பாடு கனடாவில், டொரொண்டோவில் உள்ள செயின்ட் டேனியல் கல்லூரியில் நர்சிங் டிப்ளோமா பெற்றுள்ளார். இவர் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள் தேவராணி என்பரை மணந்தார். இவர்களுக்கு நிரூபன், என்ற மகனும், செந்தூரி, கஸ்தூரி என இரண்டு மகள்களும் உள்ளனர். மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தார். இலங்கையிலிருந்து பாரிஸிக்குப் புலம்பெயர்ந்த இவர் எட்டு ஆண்டுகளுக்குப் பிற்பாடு அங்கிருந்து கனாவிற்குப் புலம்பெயர்ந்தார். 32 ஆண்டுகளாக கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் தம் குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகிறார். இவர் பல்வேறு இலக்கிய அமைப்புகளுக்கு அடித்தளமிட்டதோடு அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார். பாரிஸிலிருந்து கனடாவிற்குக் குடிபெயர்ந்த பொழுது அங்கு மான்றியல் எனும் நகரத்தில் வாழ்ந்தார். அங்கே தமிழ்ஒளி எனும் அமைப்பில் வேலைசெய்தார். அங்கிருந்த காலத்தில் “பார்வை“ எனும் இலக்கிய இதழைத் 1987 இல் தொடங்கி நடத்தினார். அதில் 17 இதழ்கள் வெளிவந்துள்ளன. அங்கிருந்து டொரொண்டோ நகரத்திற்குக் குடிபெயர்ந்த சூழலில் இவ்விதழ் 1989இல் நின்றுபோனது. டொரொண்டோவில் “தேடல்” எனும் இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்த நிலையில், 1990இல் “காலம்” எனும் இலக்கிய இதழை டொரொண்டோவில் தொடங்கி நடத்திக்கொண்டு இருக்கிறார். இது 30 ஆண்டுகளுக்கு மேலாக வெகுசிறப்பாக இயங்கிவருகின்றது. 60க்கு மேற்பட்ட இதழ்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஈழம், தமிழக புலம்பெயர்ந்த படைப்பாளர்கள் தமது ஆக்கங்களைப் படைத்தளித்து வருகின்றனர். காலம் இதழ் வெளியிட்டுள்ள தமிழ் படைப்பாளர்கள் பற்றிய சிறப்பிதழ்கள் குறிப்பிடத்தக்கவை. கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு இதழிலும் இவர் தொடர்ந்து எழுதிவருகின்றார். எஸ் பொன்னுதுரை, ஜெயகாந்தன், ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றோரை தமது இலக்கிய முன்னோடிகளாகக் கொண்டுள்ள செல்வம் அவர்கள், தொடக்க காலத்தில் கவிதைகளையே விரும்பி எழுதினார். பாரிஸில் வாழந்த பொழுது இவரது நண்பர் உமாகாந்தன் நடத்திய “தமிழ்முரசு” இதழில்தான் முதன்முதலில் கவிதைகளை எழுதத்தொடங்கினார். ”கட்டிடக் காட்டிற்குள்“ எனும் கவிதைத் தொகுப்பையும், தமது புலம்பெயர் வாழ்வை மையப்பொருளாகாக் கொண்டு ”எழுதித் தீரா பக்கங்கள்” (தமிழினி, காலச்சுவடு வெளியீடு), சொற்களில் சூழலும் உலகம்” (காலச்சுவடு வெளியீடு) என்ற இரு தன்வரலாற்று நூல்களைப் படைதளித்துள்ளார். மேலும் “பனிவிழும் பனைவனம்” (காலச்சுவடு வெளியீடு) எனும் நூலையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியங்களிலும் அதன் வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு உடைய இவர். கடந்த 30 ஆண்டுகளாக “வாழும் தமிழர்“ எனும் புத்தகக்கண்காட்சியை ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடத்திவருகின்றார். மேலும், இலங்கை, இந்தியா எனப் பல்வேறு நாடுகளில் வாழும் இலக்கிய ஆளுமைகளைக் கொண்டு 300 மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளார். தற்போதும் நடத்திக்கொண்டும் இருக்கிறார். சிறுவயது முதலே யாழப்பாண கத்தோலிக்க மரபு கூத்துகளில் மிகுந்த ஈடுபாடு உடைய இவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து தாய்வீடு, காலம் இதழ்களின் சார்பாக ஏழு கூத்துகளை நிகழ்த்தியுள்ளார். “காலம்“ பதிப்பகத்தின் வாயிலாக கிட்டதட்ட 25 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் N.K. மகாலிங்கத்தினுடைய “சிதைவுகள்“, மணிவேலுப்பிள்ளையின் “மொழியினால் அமைந்த வீடு” “போன்ற நூல்கள் மிகவும் பேசப்பட்ட நூல்களாகும் “தேடகம்“ மற்றும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்“ போன்ற அமைப்புகளில் தொடக்க காலம் முதல் உறுப்பினராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். நேர்காணல் தங்கள் படைப்புகளின் ஊற்று எது? அது எவ்வாறு காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கிறது? எனது படைப்புகளின் ஊற்று என்பது உண்மையில் எனது வாழ்க்கையும், அது உணர்த்திய உண்மைகளும்தான். இதில் எனது அன்னையிடமிருந்து பெற்றவையும், கற்றவையும் அதிகம் என்றே நம்புகிறேன். வாழ்க்கை என்பது என்னளவில் உடல் தேவை மற்றும் மகிழ்ச்சி சார்ந்த லௌகீக வாழ்க்கை பற்றியதல்ல. இது பிற மனிதர்களுடனான தொடர்புகளும் உறவுகளும் அவை உணர்த்தியவற்றையுமே வாழ்க்கை என இங்கு குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக எனது அன்னையின் உறவும், அவரது வாழ்க்கைப்பாங்கும் எனக்கும், என் படைப்புகளுக்கும் ஆதாரமாக இருந்திருக்கின்றன. அம்மா மிகச்சிறந்த வாசகி. கிராமம் நன்கறிந்த அம்மானைப் பாடகி. அதில் அதீத ஈடுபாடு கொண்டவர். அம்மானைப் பாடல்களை மனனம் செய்துவைத்திருந்தார்; உணர்ந்து பாடுவார். கிராமத்து எளிய மனிதர்கள், முதின் பருவத்து மாந்தர்கள் பலரையும் குதூகலப்படுத்தும் வகையில் பாடுவார். இவற்றைச் சிறுவயதிலிருந்தே கேட்டு எனக்கு நானே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இது என்னுள்ளே மெல்ல மெல்ல கவிதை புனையும் ஆற்றலை உருவாக்கி இருக்க வேண்டும். இலங்கையில் இருந்தவரை நான் எதுவுமே எழுதவில்லை. நான் பாரிசுக்கு அகதியாக வந்த பிற்பாடு எனக்கு ஏற்பட்ட அலைச்சலும், சில அனுபவங்களும், சில ஆதங்கங்களும் ஒரு கவிஞனாக என்னை இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தின. ஒரு மொழியின் உன்னதம் அல்லது உச்சம் கவிதை என்றே நம்புகிறேன். இப்போது நான் கவிதை எழுதுவதில்லை. காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும் பேராற்றல் கவிதைக்கு உண்டு என நம்புகிறேன். “மோகமுள்“ நாவலை வெவ்வேறு வயதுகளில் பல தடவைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது அதில் ஒரு சொல் கூட என் நினைவில் இல்லை. ஆனால் கம்பனின் கவிதைகளையும் இளமையில் படித்திருக்கிறேன். அவை அப்படியே பசுமரத்தாணி போல அப்படியே நிற்கின்றன. இதுதான் கவிதையின் வெற்றி என நான் நினைக்கின்றேன். ”வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைத்துக் கொம்பிழை மானின் பின்போய்க் குலப் பழி கூட்டிக் கொண்டீர் அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயுங்காலை உம்பிழை என்பதல்லால் உலகம்செய் பிழையும் உண்டோ?” இது எங்கள் போராட்டத்துக்கும் பொருத்தமாகவேயுள்ளது. இதுதான் கவிதை மொழியின் சிறப்பு என்று நினைக்கிறேன். சில புலமையாளர்கள் உரைநடை வந்த பின்பு கவிதை தேவையில்லை என்கின்றனர். ஆனால் கவிதைதான் தமிழர்தம் வரலாறு; அதுதான் தமிழர்தம் தொன்மை ; அதுதான் தமிழர்தம் சிறப்பு. தங்கள் படைப்புகளுக்கும் தன்னனுபவங்களுக்கும் இடையே இருக்கும் உறவு, ஊடாட்டம் என்ன? உங்கள் படைப்புகளைத் தன்வரலாறு சார்ந்தவை எனச் சொல்வீர்களா? நீங்கள் சொல்வது சரிதான். தன்னனுபவங்கள்தான் என் படைப்புகள். எனது நாடும், எனது வாழ்வும், எனது சிந்தனையிலும், உணர்விலும் முடிவில்லாத துயர்மிகு அனுபவங்களைத் திணித்துக்கொண்டே இருந்தன; இப்போதும் அது முடியவில்லை. இளைஞர்கள் அரசியலைத் தங்கள் கையில் எடுக்கத்தொடங்கிய காலத்தில் எங்கள் மண்ணில் சிறுவனாய், இளைஞனாய் அலைந்தவன்; கோபமும், வேகமும் நிறைந்த இளைஞர்களுடன் பழகியவன்; பல சம்பவங்களைப் பார்த்தவன். ஆயுத அரசியல் தொடங்கியபோது புதியவர்களாய் மனிதர்கள் வேற்று வடிவங்கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடனான உறவுகள் அவற்றை நான் பார்த்த முறைகள் அவற்றுள் புதைந்து கிடந்த பொய்மைகள், போலிகள், துரோகங்கள் இனப்பற்று போன்ற பலவற்றையும் மிக அருகில் பார்த்தவன். இவைதான் எனது “எழுதித் தீராப் பக்கங்கள்“ என்ற என் முதல் நாவல். இவை என் வரலாற்றின் ஒரு பக்கம்தான். இன்னும் நிறையவே இருக்கிறது என் வாழ்வின் பல நிலைகள் பற்றி எழுதுவதற்கு. என் வரலாறு மூன்று கட்டங்கள் கொண்டது. முதலில் புலம் பெயர்வதற்கு முந்திய கிராமிய வாழ்வு. புலம் பெயர்ந்து தொடக்ககாலத்தில் அச்சத்துடனும், பசியுடனும், அவநம்பிக்கைகளுடனும் ஐரோப்பிய நகரங்களில் அலைந்த வாழ்வு இரண்டாவது வாழ்க்கை. கனடாவில் குடும்பமாகவும் நண்பர்களோடும் காலம் இதழ் சார்ந்த பணிகளோடும் வாழ்வது மூன்றாவது வாழ்வு. தங்கள் படைப்புகளில் பிறரது வாழ்வனுபவங்களின் தாக்கம் எவ்விதம் வசப்படுகிறது? மற்றவர்களுடைய அனுபவங்களை அடியொற்றியும் படைப்புத் தரக்கூடிய ” படைப்பாக்க உணர்வுத் தோழமை” என்ற வகையில் எழுத முயற்சித்திருக்கிறீர்களா? எடுத்துக் காட்டாக பலஸ்தீன மக்கள், இனப்படுகொலைகள், ஆதிகுடிகள், பெண்கள் போன்றோரது அனுபவங்கள்? பிறரது வாழ்வனுபவங்களின் நீட்சி, பல மூலங்களிலிருந்து என்மீது தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. 2000- இல் கனடாவுக்கு வந்து சேர்ந்த நான் அதன்பின் தாயகத்துக்குப் பலதடவைகள் சென்று வருவதுண்டு. அங்கு வாழ்கின்ற உறவினர் , நண்பர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரையும் சந்தித்து உரையாடியுள்ளேன். அவர்களது அனுபவங்கள் பல்வேறு வகையானவை. உள் நாட்டிலேயே பல தடைகள், இடம்பெயர்ந்து, குடும்பங்கள் சிதைந்து, சொந்த கிராமங்களை மறந்து வாழ்பவர்களது அனுபவங்கள் பலவற்றை கேட்டுள்ளேன். மனதில் அதிக சுமையோடு அவை நிறைந்து கிடக்கின்றன. சொந்த கிராமங்கள் பலவற்றில், அக்கிராமத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்தவர்கள் அங்கில்லை. கிராமங்களின் பண்பாட்டு முகம் சிதைந்து அங்கொன்று இங்கொன்றுமாக சிலர் வாழ்வது; விரக்தியோடும் பல்வேறு துயர்மிகு அனுபவங்களோடும்; அவநம்பிக்கையோடும் பலர் வாழ்கின்றனர். அவற்றை என் பார்வையில் எழுதியது சிறியதுதான். எனது “பனி விழும் பனைவனம்” நாவல் அத்தகைய ஒருவகை வாழ்வனுபவங்களின் தாக்கம் என்றே கூறவேண்டும். மூன்று தசாப்தங்களாக பல நாட்டு இராணுவத்தினரை எதிர்கொண்ட எளிய மக்கள் உணர்வுகளில் வரட்சியும், கையறுநிலையும் நிறைந்துகிடந்தன. எனது மண், எனது மக்கள், எனது பண்பாட்டு வாழ்க்கை, எனக்குத் தெரிந்த துயரங்கள் என்ற வகையில் அவை கற்பனைகளாவதில்லை. பல இயக்கங்கள் ஒரே இலக்கோடு எனப் போராட்டங்களைத் தொடங்கினாலும் தாய் மண்ணிலும், புலம் பெயர்ந்து தஞ்சமடைந்த நாடுகளின் நகரங்களிலும் அவர்களிடையிலான முரண்பாடுகளும், உட்பகைமையும், இழப்புக்களும் என ஏராளமான கதைகள் சொல்வதற்கு உள்ளன. மனதை முட்டிக் கிடக்கின்றன. பெண்களும், குழந்தைகளும் அங்க வீனர்களான போராளிகளும், தலைவனை இழந்த குடும்பத் தலைவியரும், நீண்ட காலம் வசதிகள் ஏதுமின்றி, வாழ்வை நிலைநிறுத்துவதற்குப் போராடும் குடும்பங்களின் அவநம்பிக்கை நிறைந்த வாழ்க்கையனுபவங்களையும் கேட்டிருக்கிறேன்; அத்தகையவற்றை எழுதும் ஊக்கமும் ஆசைகளும் நிறையவே உள்ளன. கனடாவில் நிரந்தரமாக குடியேறிய பின் இருபது ஆண்டுகளுக்கு முன்பு காலூன்ற முயற்சிகள் மேற்கொண்ட பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளேன். பல பழைய எனது வாழ்விடங்களையும், பழைய நண்பர்கள் சிலரையும் காணும்போதெல்லாம் துயர் நிறைந்த பழைய வாழ்வின் நிகழ்வுகள் வந்து போகும். என்மீதே நான் கழிவிரக்கம் கொள்வதுண்டு. இறந்து போன பல இளைஞர்களையும் அவர்களுடன் பிணைந்திருந்த அக்கால சோகங்களும் நினைவுக்கு வரும். அதிலிருந்து விடுபட சில தினங்கள் ஆகும். காலத்தால் ஆற்ற முடியாத துயரங்களின் கதைக் குவியல்கள் நிறையவே என் மனதில் நிறைந்து கிடக்கின்றன. சிலவற்றை எழுதுகிறேன். எழுதித் தீராதவை ஏராளம் உள்ளன. புலப்பெயர்வால் தங்களது கதை அல்லது பா பொருண்மையில், மொழிநடையில், படிமங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? எனக்கு எண்ணங்கள் வரும்போது எழுதுகிறேன். கல்வி கற்ற புலமையாளர்கள் எழுதுவதுபோல அல்லது அரசியல் தலைவர்கள் எழுதுவது போல எழுதுவதற்கான தனி ஏற்பாடுகள் என ஏதுமில்லை. கதைகளின் மொழி என்பது இயல்பாக எழுதும் போது வந்துவிழுகின்ற எனது மக்களது மொழி, நான் மொழி பயின்ற எனது பண்பாட்டுச் சூழலின் மொழி. இயல்பாகவே என்னுடைய உணர்வுகளை, அனுபவங்களைக் கவிதையாக்கும் போது தானாக வந்து விழுகின்ற மொழிதான் எனது கவிதை மொழி. எனது கவிதைக்கான மொழிநடை கூட அவ்வாறுதான் வடிவம் கொள்கிறது. எங்கள் தொல்தமிழ் இலக்கியங்களின் வழியாகவும் பண்பாடு சார்ந்த ஆய்வாளர்களது மொழியின் வழியாகவும், இனப்படுகொலை பற்றிய புனைவுகளை எழுதியவர்களது உணர்வு வழியான மொழி வழியாகவும்; உரைநடைகளைப் பல மாதிரிகளில் கற்றிருக்கிறேன். இரசித்து வருகிறேன். எனது முதல் நாவலான எழுதித்தீராப் பக்கங்கள் முழுவதும் செயற்கையானதல்ல. நான் வலிந்தும் தேடிப் பாவித்த சொற்களும் அல்ல. ஒவ்வொரு கதாபாத்திரமும் எங்கள் கழனியில் எப்படிப் பேசினார்களோ அப்படியே உள்வாங்கி எழுதியிருக்கிறேன். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழ் இலக்கிய படைப்புகளுக்குத் துணை செய்வதில்லை, வாசிப்பவர்களுக்குப் புரிவதில்லை என்றெல்லாம் 1960 களில் தமிழக இலக்கியவாதிகள் சொல்வதுண்டு. இன்று முத்துலிங்கம், ஷோபாசக்தி, டானியல் போன்றோர்களது எழுத்துக்களும் , புனைவுகளும் தமிழக மக்களாலும், உலகத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனது கதாபாத்திரங்களின் உரைநடையும், பேச்சு மொழியும் விளங்கிக் கொள்ளப்பட்டிருப்பது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. இயன்றளவு எனது கிராமத்து மொழியை வாசிப்பின் வாயிலாக மாற்றியுள்ளேன். அதேபோல் பொருண்மையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன். கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு எனது வாழ்க்கை நகர்ந்துள்ளது. இதேபோல வேலைக்குப் புறம்பான சமூகவாழ்க்கை எனது தாய் மண்ணில் முதன்மையாயிருந்தது. கனடா தொழிலை மையப்படுத்திய வாழ்வு. தொழில் பற்றிய சமூக உணர்வு, தனிமனிதனைப் பாதிப்பிலிருந்து விடுவிக்கிறது; இது கனடிய வாழ்வு பிள்ளைகள் மீதான பெற்றோர் கட்டுப்பாடு சமூக பண்பாட்டிலிருந்தது. கனடாவில் பிள்ளைகளின் முடிவுகளுக்கு இணங்குகின்ற பெற்றோராக வாழ்தல் அவசியமாகிவிட்டது. இத்தகைய புலம் பெயர் வாழ்வு கற்பித்துவருகின்ற சமூகப் பண்பாட்டு அசைவுகள் பற்றியதான பொருண்மைகளில் உடன்பாடு எனக்குண்டு. எனது சம்பாசனைகளில், உரையாடல்களில் மாத்திரமன்றி எனது கதைகளிலும் அவற்றைப் பின்பற்றுகிறேன். பா அல்லது கவிதை அல்லது நாவல்களில் ஊடாடும் மனிதர்கள் மாறும்போது, அவர்களது வாழ்வியலுக்குரிய பண்பாட்டுச் சூழல் மாறும் போது நிச்சயமாக பொருண்மை, மொழி நடை, படிமம் என்பவற்றில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று நம்புகிறேன். அனுபவ முதிர்ச்சி பெற்ற அநேக எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த மாற்றங்கள் இயல்பாக நிகழ்வதாக நான் நம்புகிறேன். ஒரு படைப்பாளராய்த் தாங்கள் உணர்ந்த தருணம் எது? எனது முதல் நாவல் “எழுதித்தீராப் பக்கங்கள்“ பல தடவைகள் மறுபதிப்புச் செய்யப்பட்ட போதும், பல நாடுகளில் படைப்பாளர்களின் கலந்துரையாடல்களில் அதுபற்றி சிலாகித்துப் பேசப்பட்ட போதும், மின்னியல் ஊடகங்களில் பலமாதிரி விமர்சனங்கள் அதுபற்றி வந்தபோதும் ஒரு உணர்வு, தன்னம்பிக்கை துளிர்த்தது. புலம் பெயர் இலக்கியம் என்ற அடையாளத்துடன் இலக்கியங்கள் வகையீடு செய்யப்பட்டபோது, அதற்குள் ஒதுங்குகின்ற படைப்பாக பலரும் பேசுகிறபோது தள்ளி நின்று ரசித்தேன். மெல்ல மெல்ல படைப்பாளனாக உணரத் தலைப்பட்டேன். அநேகமான நண்பர்கள் என்னைக் கவிஞர் செல்வம் என்று அழைப்பதை உள் மனதில் அதிகம் ரசிப்பேன். இதே போல கூத்துக்களை எழுதும்போதும், அதற்கான இசைப் பாடல்களைப் பாடும் போதும் கூட அதிக மனநிறைவை நான் பெறுவதுண்டு. ஆனால் ஏராளமான தொழில்நுட்ப ஆற்றல் மிக்கவர்கள் பலரது துணையோடு ஒரு திரைப்பட நடிகர் பெறுகின்ற அங்கீகாரத்துடன் ஒப்பிடும்போது இலக்கியப் படைப்பாளர்கள் பாவம்தான். அறிவும் தர்க்கமும் ஆக்க இலக்கியத்துக்கு ஊறு செய்யலாம். உணர்வே இன்றியமையாதது எனும் கருத்தியலைப் பற்றிய உங்கள். எண்ணம் என்ன? ஆக்க இலக்கியம் என்பதில் அறிவு, தர்க்கம், உணர்வு போன்றன தொடர்பான கருத்தியல் பற்றி ஏராளமான விவாதங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. ஆக்க இலக்கியம் என்பதன் பரப்பு தொடர்ந்து அகலப்படுத்தப்பட்டே வருகிறது. தலித் இலக்கியம், பெண் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், மின்னியல் இலக்கியம் என்றவாறு ஆக்க இலக்கிய வகையீடு விரிந்து செல்கிறது. இதற்கு அதிகம் தர்க்கமும் துணை செய்ததா? ஊறு விளைவித்ததா? என்ற ஒரு கேள்வி எழுகிறது. உணர்வுகள் பற்றி பேசுகிறபோதுதான் கல்விமான்களின் கட்டுரைகளிலிருந்து ஆக்க இலக்கியம் வேறுபடுகிறது. உணர்வுகள்தான் இலக்கியப் படைப்புகளுக்குத் தனியான அடையாளங்களையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளன. வாசகர்களின் வழியாகவே ஆக்க இலக்கியங்கள் கவனத்தையும், கணிப்பையும் பெற்று வருகின்றன. நியதிகள் எதற்கும் அகப்படாமல், மனிதர்கள் தம் போக்கில் வாழ்க்கையில் குதூகலம் நிறைவாகும் நிலைமைகளிலும், துன்பமும், தோல்வியும் மனித வாழ்வைக் கடித்துக் குதறும் போதும் உணர்வுகள்தான் மேற்கிளம்புகின்றன. அதன் வழியாகவே மொழியும் நடத்தைகளும் வடிவம் பெறுகின்றன. படைப்புச் சூழலின் தனித்தன்மை அதிலிருந்துதான் கட்டமைக்கப்படுகிறது. எங்கள் வாழ்வியல் அனுபவங்களும் சூழல்களும் அச்சமும், அவநம்பிக்கையும், ஏக்கமும், வடிந்துவிடாத துயர்களும் நிறைந்ததாகவே இன்றும் காணப்பட்டுவருகின்றன. யுத்த பூமியிலிருந்து அகதியாக புலம் பெயர்ந்த பிறகு கூட தனது சிதைந்துபோன குடும்ப உறவுகளை ஒன்றிணைப்பதற்கும், புதிய சூழலில் கால் ஊன்றுவதிலான தடைகளும், அதற்குமேல் மாற்றங்களுடன் இசைந்து செல்வதிலான செயல்களும் பலமாதிரி உணர்வுகளையே முன்னிறுத்துகின்றன. இந்தப் போக்கில் உணர்வே முதன்மையானது. குறிப்பாகக் கவிதைகளை எழுதும்போது அறிவு பூர்வமானதைப் பின்தள்ளி உணர்வே சொற்களைத் தருகிறது. தர்க்கம் என்பது பிரிக்கமுடியாத உணர்வுகளின் படிமுறை ஒழுங்கும் நியாயமும். அதை உணர்வின் வழி சொல்லும்போது தர்க்க சிந்தனையில்லாவிடில் கவிதை நிற்காது; நிராகரிக்கப்பட்டுவிடும். அறிவையும், தர்க்க அணுகுமுறையையும் மனித உணர்வுகளின் வழியாக எளிமைப்படுத்தலாம் அப்போது அந்தக் கவிதையோ சிறுகதையோ வாசகர்களின் அதிகரித்த கவனவீச்சைப் பெறுகின்றன. சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன், புதுமைப்பித்தன் படைப்புகளில் உணர்வும், அறிவும், தர்க்கமும் பிரிக்கமுடியாமல் பிணைந்துக் கிடப்பதை அவதானிக்கலாம். இதில் எனக்கு உடன்பாடு உண்டு. தர்க்கம் எதுவுமேயில்லாமல் உணர்வுகளின் வழி படைக்கப்படும் ஆக்க இலக்கியம் தன்னை எப்படி நிலைநிறுத்தமுடியும்?. சிலப்பதிகாரத்திலும் கண்ணகி வழக்குரை காதையில் “தேரா மன்னா?“ என்கிறாள். இது உணர்வுதானா? தர்க்கம் தானா? இரண்டுமே இணைந்ததா? சில பேரிலக்கியங்கள் அறிவு தர்க்கம் என்பவற்றைப் பின்தள்ளி உணர்வு வழியாக சம்பவங்களை விரிப்பதாகவேயுள்ளன என்ற ஒரு விமர்சனப் பார்வையும் உண்டு. என் பார்வையில் தர்க்கமும் உரியவாறு உணர்வுகளைச் சுமந்து மனித உரையாடல்களிலும், சமூக நிகழ்வுகளிலும் படைப்பிலக்கிய மொழியாக எப்போது விரிகிறதோ அப்போது ஆக்க இலக்கியங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். உணர்வு முரண்களே இலக்கிய இரசனைகளில் ஆதிக்கம் செலுத்துவுது இயல்பு என்றே உணர்கிறேன். மாக்சிய இலக்கிய பார்வை கொண்டவர்கள் சிலப்பதிகாரத்தைக் கற்பின் மேன்மை பற்றியதாக பார்க்காமல் சத்திரியர், வைஷியர் போட்டியாக அணுகி, அதன்வழி கண்ணகியின் குரலையும், கோபத்தையும் விளக்குவதை இங்குத் தொடர்புபடுத்தலாம். இது அறிவு மற்றும் தர்க்க சிந்தனை சார்ந்த கருத்தியலுக்கு உட்பட்டதாக இளங்கோவடிகள் காவியத்தை அணுகுவதாகும். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் கதாநாயகியின் பேச்சும் செயலும் எத்துணை அறிவு பூர்வமானவை; எத்துணை தர்க்க ரீதியானவை; அதற்காக உணர்வு வழி நின்று பாத்திரங்கள் பேசவில்லையா? இலக்கிய படைப்பாளிகளில் அறிவு நிலைப்பட தர்க்கிப்பதும், அதேசமயம் உணர்வுகளின் வழி சமுதாய பிரச்சினைகளையும் தனிமனித முரண்பாடுகளையும் இரசனைக்குரியதாக வெளிப்படுத்துவதும் நியாயமான ஒன்றே என நம்புகிறேன். இது ஆக்க இலக்கியத்துக்கு ஊறு செய்வதாகாது என்பது எனது உறுதியான கருத்துநிலை. முரண்பாடுள்ள விவாதங்கள் இவை தொடர்பாக விரிவடைந்தால், ஆக்க இலக்கியம் புதிய பாதையைக் கட்டமைக்கமுடியுமல்லவா? தமிழின் சொற்களஞ்சியங்களுக்குள்ளும் சொற்கிடங்குகளுக்குள்ளும் உரிய சொற்களைத் தேடுவதுண்டா? எப்படி? ஆக்க இலக்கியங்களைப் படைக்கின்ற படைப்பாளிகளது வாழிடங்கள் இன்று தமிழகத்துக்கு வெளியே விரிந்துகிடக்கின்றன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் வெளியே பரந்து கிடக்கின்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற பல வேற்றுமொழிப் பேசும் நாடுகளிலிருந்தும் தமிழ் மொழியில் ஆக்க இலக்கியங்களும், பத்திரிகைகளும் வெளிவருகின்றன. எங்கள் இலங்கைத் தமிழர்களது பண்பாட்டுச் சூழலில் பயன்படும் தமிழ்ச் சொற்கள் பல வகைகளில் மாறிவந்துள்ளன. புதியவகை சொற்கள் சரியாகவும் அல்லது சிதைவடைந்த மாதிரியிலும் புனைவுகளில் நிறைந்து வருகின்றன. பிரெஞ்சு, ஜெர்மனிய, போர்த்துக்கீசியச் சொற்கள் அந்தந்த நாடுகளின் சிறுகதைகளில் தமிழ்ச் சொற்கள் போலவே பேச்சுமொழியாகியிருக்கின்றன: தமிழ்மொழி போலாகின்றது. இலங்கையில் கொழும்பு மற்றும் மலை நாடுகளில் வாழ்கின்ற தமிழ்ப் படைப்பாளிகளின் மொழியில், சொற்களஞ்சியங்களில் சிங்களச் சொற்கள் இயல்பாக விரவிக்கிடக்கின்றன. தமிழ்ச் சொற்களஞ்சியங்களுக்குள்ளிருந்தும் உரிய சொற்களை நான் தெரிவு செய்வதுண்டுதான். திருக்குறள், நாலடியார், பைபிள், திருமந்திரம் போன்றவற்றில் நிறைந்துகிடக்கும் எளிய கருத்தாழம் மிக்க தமிழ்ச் சொற்கள் என்னில் அதிக ஆதிக்கம் செலுத்துவதுண்டு. அவை எனது உடன்பாடில்லாமலேயே எனது புனைவுகளில் ஆங்காங்கே வருவதுண்டு. அது நல்லதென்றே எண்ணுகிறேன். வேண்டுமென்றே சொற்களஞ்சியங்களில் சொற்களைத் தேடுவதில் விருப்பமில்லை : உடன்பாடுமில்லை. ஆயுத கலாச்சாரம் வளர்ந்த சூழலில் அநேக புதுவகைச் சொற்களை இயக்கங்கள் கையாண்டு, அச்சூழலில் வாழ்ந்த புதிய தலைமுறையினரின் பிரயோகங்களாகியுள்ளன. அவை எனது புனைவுகளில் வந்திருக்கலாம். அது தவறானதென்று நான் உணர்ந்ததுமில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபடுவோர்க்கானச் சொற்தொகுதிகளில் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் உள்ளன. இலக்கியவாதிகளுக்கு அப்படி எதுவும் தேவையில்லை. மக்களின் மொழியும், அவர்களது பயன்பாட்டுச் சொற்களும் எனக்கு எப்போதுமே சொற்களஞ்சியங்களாகவும், சொற்கிடங்குகளாகவும் பயன்படுகின்றன. அதில் நான் நிறைவு காண்கின்றேன். தமிழிலக்கிய படைப்புலகம் இன்று எல்லாக் கண்டங்களின் பல நகரங்களிலும் பரந்து கிடக்கின்றது. எல்லாப் பிரதேச பண்பாட்டின் வழிவந்த பல மொழிச் சொற்கள் தமிழாகி வருகின்றன. எனது வாசிப்பின் வழியாக அவை என் படைப்புகளில் வந்துவிடலாம். படைப்பாளிகள் சமூகத்தின் சூழல்களிலிருந்து வளர்கின்ற தாவரங்கள், பயன்தரு மரங்கள், படைப்பாளிகளுக்குரிய, கதைக்குரிய கருவையும், பாத்திரங்களையும், ஊடாட்டங்களின் தனி இயல்புகளையும் பேசுகின்ற மொழியையும் சூழலிலிருந்துதான் படைப்பாளி பெறுகின்றான். அகதிமுகாமில் வாழ்கின்ற படைப்பாளியின் எழுத்து, நியூயோர்க் பெருநகர நவீன ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் ஒருவனது படைப்பாளிக்குரிய எழுத்திலிருந்து நிச்சயம் வேறுபட்டதாகவேயிருக்கும். படைப்பாளிகளின் படைப்புகளுக்குரிய கருப்பை சமூகம்தான் இதனால் அவன் கவிதையோ, கதையோ, நாவலோ, புனைகின்றபோது அதிக பொறுப்புணர்வுடன்தானே படைக்கவேண்டும். காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பேராற்றல் நல்ல படைப்புகளுக்கிருக்கிறது. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் அல்லது சேக்ஸ்பியரின் மெர்ச்சன்ட் ஓஃப் வெனிஸ் இன்றும் நிலைக்கிறது; இரசிக்கப்படுகிறது. படைப்பாளியின் கூர்ந்த அவதானங்களும், சமூகசெயற்பாடுகள் பற்றிய தொலைநோக்கும் பொறுப்புணர்ச்சியும் இதற்கு அடிப்படையாகின்றன. சுந்தர ராமசாமியின் ஜே .ஜே யின் குறிப்புக்கள் எத்துணை விவாதங்களை எத்தனை வருடங்கள் நீட்சியுறச் செய்து வருகின்றன. இதில் படைப்பாளிகளின் பொறுப்புணர்ச்சி மிக மிக முக்கியமானதல்லவா? எனது படைப்புக்கள் செல்வச் செருக்கில் வாழ்கின்ற மேட்டுக்குடியினரை மையப்படுத்தியதல்ல. நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை உரிமைகள் மறுக்கப்படுகிற இனத்தின் இன்னல்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள் பற்றிய புனைவுகளையே செய்து வருகின்றேன். எங்கள் இனத்தின் போராட்ட வரலாறு நேர்மையாக வரலாற்று படைப்பிலக்கியங்களில் பதியப்படவேண்டும் என்பதில் தெளிவும், உறுதியும், பொறுப்புணர்ச்சியும் எனக்குண்டு. கடந்த கால சமூக அனுபவங்களும், வரலாறுகள் தானே! படைப்பாளி என்ற வகையில் உங்கள் பொறுப்புணர்வு என்ன? எங்கள் வாழ்விடங்கள்தான் எங்கள் நிகழ்கால மற்றும் எதிர்கால புனைவுகளின் தேவையையும், மரியாதையையும் நிலைநிறுத்தும். இதன்படி எனது “காலம்“ சஞ்சிகையில் பிரசுரத்திற்காகக் கதைகளையோ, கட்டுரைகளையோ, நாவல்களையோ, கவிதைகளையோ தெரிவு செய்யும்போது அதிக சமூகப் பொறுப்புடன் செயற்படுகிறேன். எனது படைப்பு சிறிதானால் என்ன, பெரிதானால் என்ன வாசிக்கவும், விமர்சிக்கவும் கண்டனம் தெரிவிக்கவும் கனடாவிலேயே நல்ல இலக்கியவாதிகள் உள்ளனர். இலக்கிய இதழ்களும் உயிர்ப்புடன் இயங்குகின்றன. அவை என்னை எப்போதுமே பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு எச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில படைப்புகள் மேற்குலகில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. படைப்பாளி இறந்து பல வருடங்களின் பின்பே வாசகருக்குக் கிடைக்கத்தக்கதாக அவை பிரசுரமாகியிருக்கின்றன. இவை சில எச்சரிக்கைகளைத் தருகின்றன. பள்ளிச் சிறுவன் கையெழுத்துப்பிரதியில் எழுதுவதுபோல் நான் எழுதமுடியாது. எழுதக்கூடாது எனத் தெளிவாக இருக்கின்றேன். பலவாறான மாற்றுச் சிந்தனையுடன் பல இயக்கங்கள் போராட்டங்களில் தூய இலட்சியங்களோடு ஈடுபட்டன. அவை பற்றிப் புனைவுகளைப் படைக்கும்போது பொறுப்புணர்வுப் பற்றிய விமர்சனங்கள் மாறுபட்டத் தளங்களிலிருந்து வெளிவந்துள்ளன; நிச்சயம் வெளிவரும். எங்கள் படைப்பிலக்கிய சூழல், கடந்த நான்கு தசாப்தங்களாக ஒடுக்கப்படும் இனம் சார்ந்த வாழ்வியல் பற்றியதாகவேயுள்ளது. இதில் என்னைப் போன்று இச்சூழலிலிருந்து விலகிவிடாமலே வாழ்கின்ற ஒரு எழுத்தாளன் நிச்சயமாக சமூகபொறுப்புடன்தான் எழுதுவான்; செயற்படுவான். உங்கள் படைப்புக்களின் தலைப்புகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? இது ஒரு நல்ல கேள்வி. இப்போதுதான் யோசிக்கிறேன். எப்படித்தான் தலைப்புகளைத் தெர்ந்தெடுத்தேன்? என்னுடன் பழகுகின்ற சாதாரண மனிதர்களின் உரையாடல்களிலிருந்துதான் தலைப்புகளைத் தேர்வு செய்திருக்கிறேன். இயல்பாக நண்பர்களுடன் படைப்புக்கள், படைப்பாளர் பற்றி உரையாடும்போது சில தொடர்கள் இயல்பாக வெளிப்படும். அவை எனது இதயத்தில் அல்லது மூளையின் எங்கோ ஓரிடத்தில் பதிவாகிவிடுகிறது. உரியபோது அவை என்னை மீறி தானாக வெளியே வந்து விழுந்துவிடுவதுண்டு. திக்குத்தெரியாத காட்டில் அலைகின்ற ஒரு எளிய மனிதனது பயம், உணர்வு, நாதியற்ற நிலை போலவே நான் “கட்டிடக் காடுகள்“ எனும் முதல் கவிதைத்தொகுப்பை வெளியிட்டபோதும் உணர்ந்தேன். உதவியில்லாமல், நம்பிக்கை ஒளி தெரியாமல் சின்னஞ் சிறுவனாக பிரான்சின் நகரங்களில் அலைந்தபோது கட்டிடக்காடுகளுக்குள் அலைகின்ற உணர்வுதான் ஏற்பட்டது. வியப்பும், பயமும், அவநம்பிக்கையும் கட்டிடகாடுகள் என்று பெயர்வைக்க தூண்டின. இப்படித்தான் ஏனைய படைப்புகளுக்குரிய தலைப்புக்களும்; இலக்கியங்களிலிருந்து தலைப்புக்களைத் தேடும் மன ஓட்டமோ, நாட்டமோ எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. எளியவர்களிடமிருந்து பெற்று அவர்களுக்கே சமர்ப்பிக்கும்போது அவர்களது மொழியிலிருந்தே என் தலைப்புக்கள் பிறக்கின்றன. மற்றைய படைப்பாளிகளின் ஆக்கங்களை வாசித்து விட்டு, அட, இதனை நான் எழுதியிருக்கலாமே என ஆதங்கப் பட்டிருக்கிறீர்களா? அப்படியானால் என்ன படைப்பு அது? மாதிரிக்குச் சிலவற்றைச் சொல்ல முடியுமா? எந்தவொரு படைப்பாளிக்கும் இத்தகைய ஏக்கம் அல்லது ஆசை அல்லது தன்னிலை ஒப்பீடு இயல்பாக வரக்கூடியதுதானே! வியப்பு மேலிடச் செய்யும் ஆற்றலும் புனைவுகளின் ஒருவகை வெற்றிதான்! புனைவுகளின் கருவோ கையாளப்படுகின்ற சொற்களோ, சொற்களின் ஒட்டுமுறைகளோ, வெளிப்படும் சந்தங்களோ, ஒத்திசைவோ, கையாள்கின்ற உதாரணங்களின் ரசிப்புக்களோ, தாங்கள் கூறுவது போன்ற ஆதங்கத்தை ஏற்படுத்தலாம். எனக்கும் பல தடவைகள் அவ்வாறு ஏற்பட்டதுண்டு. மீண்டும் மீண்டும் வாசிக்கும் துடிப்பை, ஆவலை இத்தகைய ஆக்கங்கள் ஏற்படுத்தலாம் சிலர் சில நூல்களைத் தமக்கென சொந்தமாக வைத்திருக்கும் ஆசையைக்கூட இத்தகைய நினைப்புக்கள் உருவாக்குவதுண்டு. கட்டிளமைப் பருவத்தில் நான் ஜெயகாந்தனின் “உன்னைப்போல் ஒருவன் “ நாவலை வாசித்தேன். அப்போது எனக்குள் எழுந்த உணர்வு “அட என்னைப் பற்றியல்லவா எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன் என்று எண்ணி வியப்படைந்தேன். பிற்காலத்தில் ஜெயகாந்தன் படைப்புகள் மீது பெரிய உடன்பாடுகள் வளரவில்லை. ஆனாலும் அவரது உன்னைப் போல் ஒருவனின் படைப்பாக்கத்தில் பல அம்சங்கள் என்மீது பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியிருந்தன என்பது உண்மைதான்.. கதாபாத்திரத்தின் பண்புநலன்கள் மற்றும் மொழிநடை என்ற இரண்டுமே என்மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. என்னை அதிக பாதிப்புக்குள்ளாக்கியவன் கம்பன்தான். அவனது சொல்லுகின்ற மானிட மேம்பாடு சார்ந்த கருத்துக்களும் என்னிடம் இத்தகைய இரசனையையும் வியப்பையும் இன்று வரை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. ”அறையும் ஆடு அரங்கும் மடப்பினைகள் தறையில் சீறிடில் தச்சரும் காய்வரோ இறையும் ஞானம் இலாத என்புன்கவி முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ” இந்தப் பாடலில் கம்பனின் கண்ணோட்டம், பொறாமையற்ற பார்வை அதனுள் புதைந்துகிடக்கும் கருத்தாழம் என்பன வியக்கத்தக்கவை. சுந்தரராமசாமியின் கட்டுரைகளின் தனித்தன்மை என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது. பலர் கற்றுக் கொள்ளக்கூடிய சிறப்புப் பண்புகள் கொண்ட புலமைப்பள்ளியாக அவரைப் பார்க்கிறேன். கட்டுரைகளில் கையாளும். சொற்சிக்கனமும் கருத்துக்களின் தொடர்புகளில் நிறைந்துகிடக்கும் ஒழுங்கும், தர்க்கமும் என்னை அதிகம் ஆட்கொள்வதுண்டு. தளைய சிங்கத்தின் சுய சிந்தனையும், ஏ.ஜே. கனகரட்னாவின் இலக்கிய ஞானமும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏ.ஜே.வை எனது நண்பராகவும், வியக்கத்தக்கச் சிந்தனையாளராகவும், மறக்கமுடியாத மேதையாகவும் உணர்வதுண்டு. இந்த உருவகம் அவரது உரையாடல்களின் வழியாக உருவானதொன்றுதான். முத்துலிங்கம், கவிஞர் சேரன், ஷோபசக்தி போன்றவர்களது எழுத்துகளும், படைப்புகளும் எங்கள் மண்ணின் துயரங்கள், தமிழ் மக்களது துயர் சுமந்த வாழ்வின் அப்பழுக்கற்ற பல மாண்புகள் பற்றியதாக உள்ளமை தனித்தன்மைதான். தமிழ் மக்கள் பற்றியும், பிரச்சினைகள் பற்றியும் ஏராளமானவர்கள் எழுதுகிறார்கள். இன்னும் எழுதவருவார்கள். ஆனால் இவர்கள் தனியான அடையாளங்களைப் பதித்திருக்கின்றார்கள் என்பது என்னில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியமைக்குக் காரணமாகின்றது. எஸ்.பொ. முத்துலிங்கத்தின் படைப்புகள் பற்றி இப்படிச் சொல்கிறார், துன்பம் எனும் நாளில் மகிழ்ச்சி எனும் பூக்களைத் தொடுத்த மாலைதான் என்ற அர்த்தப்பட எழுதியிருந்தார். எனக்கு நெருங்கிய நண்பராயுள்ள எழுத்தாளர் முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் பற்றி இதே உணர்வும், கருத்தும் எனக்குண்டு. புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் அணியொன்று உருவாகிக்கொண்டு வருகிறது. ஆர்வமும், ஆற்றலும் கொண்டவராகவும், எதிர்காலத்தில் இலக்கியம், புனைவுகள் தொடர்பான நம்பிக்கையை விதைப்பவர்களாகவும் அவர்கள் வளர்ந்துவருகிறார்கள் என்பதும் மகிழ்ச்சியானதாகும். https://solvanam.com/2025/05/25/செல்வம்-அருளானந்தம்-நேர/
  11. மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு June 7, 2025 10:26 am “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த மாவை.சோ.சேனாதிராஜாவைப் படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் மறைவையொட்டி கொண்டுவரப்பட்ட அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மாவை.சோ.சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் கிராம அலுவலர் சிவராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, தமிழினப் படுகொலைகளைப் புரிந்த இலங்கை அரசின் பங்காளியான டக்ளஸ் தேவானந்தாவும், அவரது ஆயுதக்குழுவும் 2001.11.28 ஆம் திகதி நாரந்தனை – தம்பாட்டிப்பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டதுடன், ஏரம்பு பேரம்பலம், யோகசிங்கம் கமல்ஸ்ரோங் ஆகிய இருவர் அந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டதுடன் 28 பேர் படுகாயமடைந்ததையும், மாவை.சோ.சேனாதிராஜா கொட்டன் பொல்லுககளாலும், துப்பாக்கிகளாலும், வாள்களாலும் சுட்டும், வெட்டியும், அடித்தும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு நினைவிழக்குமளவு காயமுற்றிருந்த கறைபடிந்த சம்பவத்தையும் மீள நினைவூட்டி, அவரது நினைவுகளைப் பதிவு செய்கின்றேன். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரத்தில் பிறந்து, யாழ்.வீமன்காமம் வித்தியாலயத்திலும், யாழ்.நடேஸ்வராக் கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக இளங்கலைமாணி பட்டப்படிப்பையும் மேற்கொண்ட மாவை.சோ.சேனாதிராஜா, ஈழத்தமிழினத்தின் மீதான அடக்குமுறைகளின் எதிர்க்குரல்களுள் ஒருவராக பதின்மங்களிலேயே தன்னையும் இணைத்துக் கொண்டவர். ஈழத்தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கை என்ற அரசியல் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் தனது 19வது வயதிலேயே இணைந்துகொண்ட மாவை அண்ணரின் அரசியல் பிரவேசத்துக்கான காலவெளி அப்போதுதான் மெல்லக் கருக்கொள்ளத் தொடங்கியது. இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளை உச்சம் பெறச் செய்த தனிச்சிங்களச் சட்டம் 1956 இல் அறிமுகம் செய்யப்பட்டு கிடப்பிலிருந்த நிலையில், 1961 ஆம் ஆண்டு அதனை வடக்கு, கிழக்கிலும் நடைமுறைப்படுத்த முனைந்தமைக்கு எதிராக, 1961 ஜனவரி 21 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 7 ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, 1961 பெப்ரவரி 20 இல் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் மாவை சேனாதிராஜாவின் போராட்ட வாழ்வு ஆரம்பித்தது எனலாம். பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராக, ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகக் காலப்பெறுமதி மிக்க அரசியல் பணியாற்றிய இவர், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, மகசின், வெலிக்கடை உள்ளிட்ட எட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டார். 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழரசின் மூத்த தலைவரும் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மறைவின் பின்னர், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி, ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தின் உள்ளும், வெளியும் ஒலிக்கத் தொடங்கினார். ஈழ விடுதலைப் போராட்ட எழுச்சியின் போதும், அதன் வீழ்ச்சியின் பின்னான தமிழ்த் தேசிய அரசியல் தளத்திலும் மாவை சேனாதிராஜாவின் பணிகளின் கனதி மிகப்பெரியது. ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட ஓர் இனத்தின் அரசியல் குரலாக இருந்து, பன்னாட்டு அரசியல் ஒழுங்கிலும், ஜெனிவா அரங்கிலும் தன்னாட்சி உரிமை கோரும் ஈழத்தமிழரின் அரசியல் பயணத்துக்கு அங்கீகாரம் தேடும் வரலாற்றுப் பணியையே அவர் தன் வாழ்வாக்கிக் கொண்டவர். மென்வலுப் போக்கில் நம்பிக்கை கொண்ட செயற்பாட்டு அரசியல்வாதியாக இருந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கத்தின் ஒரு தசாப்பத கால தலைவராக, கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த அவர்தான், இன்று தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் இருக்கும் என் போன்ற பலருக்கும் அரசியல் வழிகாட்டி. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அரசியல் தளம்பல் மிகுந்திருந்த 2014 செப் டெம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டது முதல், தன் அந்திமத்தின் போதான இறுதிக் கணம் வரை எமது கட்சியின் தலைவராக, தெளிவார்ந்த அரசியல் செயற்பாடுகளே அவரது தெரிவுகளாயிருந்தன. வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடக்கம் இன்றைய நாள் வரையும் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் தீர்க்கம்மிகு அரசியல் தீர்வை, எமக்குக் கிடைத்த ஜனநாயக சந்தர்ப்பங்களில் எல்லாம் எமது இனம் ஒருமித்து வெளிப்படுத்தியே வந்திருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பிற்பாடு, பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கு அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யக் கூடிய அர்த்தமுள்ள அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் உலகத்தின் எதிர்பார்ப்பை அங்கீகரித்து, இலங்கை அரசின் போருக்குப் பிந்திய நிலைப்பாட்டாலும், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையினாலும் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிட்ட போதும் அமரர். மாவை.சோ.சேனாதிராஜா எல்லா வகை சமாதான முன் முயற்சிகளுக்காகவும் மிகக் கடுமையாக உழைத்திருந்தார். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருந்த தமிழரசு என்ற அரசியல் ஆலமரம், கிளிநொச்சி மண்ணிலும் விழுதெறிந்து வளர்ந்ததில் மாவை அண்ணனின் பங்கே விரவியிருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் இருப்பையும் இனத்துவ உரித்தையும் அவாவி நிற்கும் ஓர் அரசியல் கட்சியின் பயணம் தடம் மாறாததாக இருக்க வேண்டுமெனில், அது முழுக்க முழுக்க மக்கள் மயப்பட்டதாக, மக்களின் மன உணர்வுகளுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதை தனது அரசியல் அனுபவத்தால் உற்றுணர்ந்த மாவை அண்ணன், ஈழத்தமிழ் சமூகத்தின் இருபெரும் சக்திகளாகிய இளைஞர்களையும், மகளிரையும் சமதளத்தில் இணைத்துப் பயணிக்கும் எல்லா வகைப் பிரயத்தனங்களிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய முதிர்ச்சி மிக்க அவரது செற்பாடுகளின் பயன் விளைவினால்தான், தமிழ்த் தேசியம் அதன் கொள்கை இறுக்கமும், கொதிநிலையும் தாழாது அடுத்த சந்ததியிடத்தே இன்று கையளிக்கப்பட்டிருக்கின்றது. ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்காகவும், நீடித்த செழுமைமிகு இருப்புக்காகவும், தொலைநோக்கான வழிகாட்டலை வழங்குகின்ற பொறுப்பை ஏற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், மக்களையும் கொள்கைப் பற்றுறுதியோடு தீர்க்கமான வழிமுறைகளில் முன்னேற்றிச் சென்ற ஒரு பெருந்தலைவராகவே அவரது மறைவின் பின்னும் மாவை அண்ணருக்கான அடையாளம் மக்கள் மனங்களில் நிலைபெற்றிருக்கிறது. நாங்கள் ஒரு சுதந்திர அரசியல் இயக்கமாக – மக்கள் திரட்சி நிறைந்த தேசமாக எம்மை உருவாக்கிக் கொள்ளாதவரை, பலவீனமான அரசியல் கோரிக்கையாளர்களாகவே இருக்க வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்தவராக, தமிழரசுக் கட்சியை மக்கள் பேரியக்கமாக வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற நேர்த்திமிகு சிந்தனையில் பின்வாங்காத பெருந்தலைவராக இருந்த, எனது அரசியல் வழிகாட்டியும், எமது கட்சியின் மறைந்த பெருந்தலைவருமாகிய அண்ணன் மாவை.சோ.சேனாதிராஜாவின் தடங்களை இறுகப்பற்றியபடி, சரிந்துபோயிருக்கக் கூடிய தமிழரசின் செயலூக்கத்தினை மீள நிலைநிறுத்துவதற்காக தமிழ்த்தேசிய ஆர்வலர்களோடும், தொண்டர்களோடும் இணைந்து ஒழுகி எமது அரசியல் இயக்கத்தை நிலைநிறுத்துவதன் வழி, ஈழத்தமிழினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தை இதயசுத்தியோடு முன்கொண்டுசெல்ல உழைப்பதுவே அன்னாருக்கான உயரிய அஞ்சலி என்பதை உணர்ந்த ஒருவனாக, அத்தகையதோர் மன உறுதியோடு அவரது மறைவுக்கான எனது அஞ்சலிகளையும், அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.” – என்றார். https://oruvan.com/douglas-is-the-one-who-tried-to-assassinate-mavai-sridharan-mp-statement/
  12. யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக முன்னாள் மாவட்ட செயலர் மகேசன் நியமனம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும், முன்னாள் யாழ். மாவட்ட செயலருமான கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் செயற்படும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களில் கலாநிதி ஏ.எம்.பி.என். அபேசிங்கவின் பதவி வறிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு கணபதிப்பிள்ளை மகேசனை நியமிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. உடனடியாகச் செயற்படும் வகையில் எதிர்வரும் 2028 மார்ச் நான்காம் திகதி வரையான காலப்பகுதிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு, இலங்கைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 44(55)ஆம் பிரிவின் கீழான விதிகளுக்கு உட்பட்டதாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழகப்_பேரவை_உறுப்பினராக_முன்னாள்_மாவட்ட_செயலர்_மகேசன்_நியமனம்!#google_vignette
  13. ரி.எம்.வி.பியின் பதில் தலைவர் உட்பட மூவரிடம் CID விசாரணை! adminJune 6, 2025 வாழைச்சேனையில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்கப்படும் நாகலிங்கம் திரவியம் உட்பட 3 பேரை இன்று (06) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், வாழைச்சேனை காவல் நிலையத்திற்கு அழைத்து கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினையடுத்து மட்டக்களப்பு முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியலயத்தை கடந்த 30 ஆம் (30-5-2025) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சுமார் 12 மணித்தியாலம் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். இதன் போது அங்கிருந்து ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி உட்பட 3 கையடக்க தொலைபேசிகள், சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று, கடவுச்சீட்டு ஒன்று, ஐபொட் ஒன்று, 9 மில்லிமீட்டர் ரக கைதுப்பாக்கியின் 5 தோட்டாக்கள் , ரிப்பீட்டர் ரக துப்பாக்கியின் 5 வெற்று தோட்டாக்களை மீட்டனர். இதனையடுத்து கைப்பற்றப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி தொடர்பாக் ரி.எம்.வி.பி கட்சியின் வாழைச்சேனையை சேர்ந்த மார்கண் என்று அழைக்கப்படும் ஜயாத்துரை ரவி மற்றும் அவரின் உதவியாளர் குமரன் ஆகிய இருவரையும் நேற்று (5) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சி.ஐ.டியினர் வரவழைத்து சுமார் 5 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவர்களை விடுவித்தனர். இதனை தொடர்ந்து இன்று (6.06.25) பகல் 11.00 மணியளவில் வாழைச்சேனை பேத்தாளையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவரான ஜெயம் என்பவரது வீட்டை சிஜடியினர் முற்றுகையிட்டு அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை விடுவித்துள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/216424/
  14. சல்லிசல்லியா நொறுக்கீட்டீங்களே.. Thug Life Movie Review in Tamil 6 Jun 2025, 10:30 AM ஒரு திரைப்படம் என்பது பலருக்கு வெறும் கேளிக்கை அல்ல; அப்படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியாவது தொடங்கி, திரையரங்கில் பார்த்தபின்னும் எண்ணமாக, பேச்சாக, தினசரி வாழ்வின் பிரதிபலிப்பாக அதன் தாக்கம் நீண்டுகொண்டே இருக்கும். அதனை மிகச்சரியாகச் செய்த திரைப்படங்களை ‘கிளாசிக்’ என்று சொல்கிறோம்; அதனைத் தந்தவர்களை ஜாம்பவான்களாக கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட ஜாம்பவான்கள் சிலர் ஒன்றிணைகிறபோது உருவாகிற எதிர்பார்ப்பு சாதாரணமானதல்ல. கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஜாம்பவான்கள் பட்டாளமே ஒன்றிணைந்த ‘தக் லைஃப்’ அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கியது. ‘அது போதாது’ என்று படக்குழுவினர் வேறு அதனை மேலும் உயரங்களுக்குக் கொண்டு சென்றனர். ‘கன்னடம்’ குறித்து கமல் பேசியது, ‘தக் லைஃப் படத்தைக் கொண்டாடியே தீர வேண்டும்’ என்கிற எண்ணத்தை அவரது ரசிகர்களிடத்தில் உருவாக்கியது. இப்போது ‘தக் லைஃப்’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. மலையென உயர்ந்திருக்கிற எதிர்பார்ப்பினை அது பூர்த்தி செய்திருக்கிறதா? இதுவும் ‘கேங்க்ஸ்டர்’ படம்தான்..! ‘கேங்க்ஸ்டர்’ கதை என்றால் மும்பை, கொல்கத்தா, சென்னை, கொச்சி, கோயம்புத்தூர் என்று சில நகரங்களைக் காட்டுவது திரையுலகினரின் வழக்கம். அந்த வரிசையில், ’தில்லியில் நடக்கிற கதை இது’ என்று மணிரத்னம் கதை சொல்லத் தொடங்குகிறார். நாமும் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்கிறோம். 1994இல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் காட்டுவதில் இருந்து கதை தொடங்குகிறது. சீட்டுக்கட்டை நிமிர்த்து வைத்தாற் போன்று பழைய கட்டடங்கள். வீடுகள், கடைகள் என்றிருக்கும் அவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலொரு இடத்தில் இரண்டு கேங்க்ஸ்டர் கும்பல் சமாதானம் பேசுகின்றன. ஒருபக்கம் மாணிக்கம் (நாசர்), ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) குரூப் இருக்கிறது. இன்னொரு பக்கம் சதானந்த் (மகேஷ் மஞ்ச்ரேகர்) ஆட்கள் இருக்கின்றனர். என்ன பேசுகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், உடன்பாடு ஏற்பட்டதாகச் சொல்லி மாணிக்கமும் சதானந்தும் கைகுலுக்குகின்றனர். அதில் சிறிதும் உடன்பாடு இல்லை என்பது போல முழிக்கிறார் சக்திவேல். சதானந்த் சென்றபிறகும் யோசித்துக் கொண்டே இருக்கிறார். ஜன்னல் வழியாகப் பார்த்தால், அவர் எதிரே வந்து கொண்டே இருக்கிறது போலீஸ் படை. இன்ஸ்பெக்டர் சாமுவேல் ராயப்பா (பாபுராஜ்) அதிலொருவராக இருக்கிறார். சதானந்தை பார்த்து சமிக்ஞை செய்தவாறே வருகிறார். அடுத்த நொடியே சக்திவேல் உஷாராகிறார். ‘எல்லோரும் தப்பிச்சு போயிடுங்கடா’ எனும் ரேஞ்ச்சில் அவர் அலற, பூட்டப்பட்டிருக்கும் கதவு வழியே ஒரு செய்தித்தாள் வந்து விழுகிறது. உடனே மாணிக்கம் துப்பாக்கியால் சுடுகிறார். ‘வேண்டாம்’ என்று சக்திவேல் சொல்வதற்குள் அது நிகழ்ந்துவிடுகிறது. செய்தித்தாள் விற்பனை செய்யும் நபர் குண்டடி பட்டு கீழே விழுகிறார். வேறு வீடுகள், கடைகளில் செய்தித்தாளை கொடுக்கச் சென்ற அவரது மகளும் மகனும் ‘அப்பா’ என்று ஓடி வருகின்றனர். அதற்குள், அந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர் போலீசார். ‘எப்பா.. இவ்ளோ கூட்டம் இருக்கிற இடத்துல ஷூட் அவுட் பண்ணலாமாப்பா’ என்று ரசிகர்கள் சொன்னாலும், திரையில் இருப்பவர்கள் கேட்பதாக இல்லை. அப்புறமென்ன? செய்தித்தாள் விற்பனை செய்பவரின் சடலத்தைப் பார்த்து அவரது மகன் அழுது கொண்டிருக்கிறார். குண்டு மழைக்கு நடுவே, அவரை தூக்கிக்கொண்டு போகிறார் சக்திவேல். அந்த சிறுவனின் பெயர் அமரன். அவரது தங்கை சந்திரா என்ன ஆனார் என்று தெரியவில்லை. வீடு சென்றதும், அமரனின் பின்னணியைக் கேட்கிறார் சக்திவேல். ‘யாருமில்லாதவர்’ என்று அறிந்ததும், அவரைத் தானே வளர்க்க முடிவு செய்கிறார். குழந்தை சந்திராவைத் தேடிக் கண்டுபிடித்து தருவதாக உறுதியளிக்கிறார். இதன் பிறகு, 2016இல் நிகழ்வதாக கதை தடம் மாறுகிறது. மேற்சொன்ன காட்சியை உள்வாங்கிக் கொண்டதும், அந்த சக்திவேல் எப்படிப்பட்ட ‘கேங்க்ஸ்டராக’ இருந்தார் என்பது தெளிவாகிவிடும். அவர் இப்போது எப்படியிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழும். அவர் வளர்த்து ஆளாக்கிய அமரனுக்குக் குடும்பத்தில் தரப்படுகிற இடம் என்ன என்ற கேள்வி எழும். சக்திவேல் குடும்பம் மட்டுமல்லாமல், அந்த ‘கேங்க்ஸ்டர்’ கும்பல் அமரை எப்படி நோக்குகிறது என்ற எண்ணம் தலை நிமிர்த்தும். ‘ரெட்டை தலை பாம்பு மாதிரி இதுக்கெல்லாம் பதில் சொல்லி, ஒரு கேங்க்ஸ்டர் ட்ராமாவை கிளாசிக்கா மணி சார் மாத்தியிருப்பார்’ என்று எதிர்பார்ப்புடன் இருக்கையில் இருந்து முன்னகர்ந்து அமர்ந்தால், ‘பொளேர்’ என்று நெற்றிப்பொட்டில் அடித்து பின்னுக்குத் தள்ளுகிறது திரைக்கதை. சந்திரா என்ற பெண் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்கிறார் சக்திவேல். அங்கு இந்திராணியை (த்ரிஷா) பார்க்கிறார். ‘நீங்க தேடி வந்த சந்திராவைத்தான் கூட்டிட்டு போவீங்களா. என்ன கூட்டிட்டு போக மாட்டீங்களா’ என்கிறார் இந்திராணி. ‘அவ்ளோதானே’ என்று அவரை அழைத்துச் சென்று தனியே ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். அவருக்குக் காவலாக ஒரு பெண்ணையும் (வடிவுக்கரசி) பணியமர்த்துகிறார். அமரனோ சக்திவேலைத் தனது தந்தையாகக் கருதுகிறார். ஆனால், ‘அண்ணே’ என்று விளிக்கிறார். அவரது குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் அவரை விட ஒருபடி அதிகமாக அக்கறை காட்டுகிறார். சக்திவேல் மனைவி ஜீவாவோ (அபிராமி), ‘அந்த வீட்டுக்கு போனேல்ல. இங்க ஏன் வந்த’ என்று சக்திவேலிடம் வீராப்பு காட்டுகிறார். ‘உங்கப்பனை அடிக்கறதுக்காக நான் வந்தப்போ, குறுக்கே நின்று என்னை ஒரு அடி விட்டப்போ விழுந்தவன் தான்’ என்று ’பழங்கதை’ பேசி ஜீவாவின் மண்டையைக் கழுவுகிறார் சக்திவேல். இவ்வளவும் சொன்னபிறகு, அந்த சதானந்தும் சாமுவேல் ராயப்பாவும் என்ன ஆனார்கள் என்று சொல்ல வேண்டுமே? ’கேங்க்ஸ்டர் வாழ்க்கை போதும்’ என்று சொல்லி, சதானந்த் அரசியலுக்குத் தாவுகிறார். அதனால், சக்திவேலுடன் சமாதானம் பேச மீண்டும் முயற்சிக்கிறார். ஒரு என்கவுண்டரில் குண்டடி பட்டு, படுத்த படுக்கையாகக் கிடக்கிறார் சாமுவேல் ராயப்பா. அவரது ஒரே மகன் ஜெய்யும் (அசோக் செல்வன்) போலீஸ் அதிகாரியாகத்தான் இருக்கிறார். காவல் துறையில் இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, சக்திவேல் பின்னணியைத்தான் அவர் குடைவார் என்பதை தமிழ் சினிமா பார்க்கிற குழந்தையும் சொல்லிவிடும். ‘சரி, இப்படியொரு கதையில் முரண் எங்கே இருக்கிறது’ என்று கேட்டால், ‘வரும்.. பொறுங்க..’ என்று சொல்லி நிதானமாகக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம். திரைக்கதை முடிச்சுகள், அது அவிழ்க்கப்படுதல் என்று இரண்டாம் பாதியை நீட்டியிருக்கிறார். மேற்சொன்ன கதையில் புதிதாக எந்த விஷயங்களும் இல்லை. சுவாரஸ்யம் இருக்கிறதா என்பது அவரவர் முடிவு சார்ந்தது. முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் கமல், மணி ரத்னம் இணைந்து தந்த ‘நாயகன்’ கூட ‘கேங்க்ஸ்டர்’ கதை தான். நேர்கோடாகக் கதை சொல்லாமல், அதில் ஒரு ரௌடியின் ஐம்பதாண்டு கால வாழ்வு இருந்தது. அந்த கதை சொல்லல் ஒரு கண்ணாடி மாளிகையைக் கவனமாகக் கட்டி எழுப்பியிருக்கும். ஏற்கனவே கட்டி வைத்த அந்த மாளிகையின் மீது கல்லெறிந்திருக்கிறது ‘தக் லைஃப்’. ‘இப்படி சல்லிசல்லியா நொறுக்கிட்டீங்களே’ என்று ரசிகர்களான நாம் வருந்துகிற வகையில் இப்படம் அமைந்திருக்கிறது. அரசு எந்திரம் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப்படாமல், ‘தளபதி’யில் சூர்யாவும் தேவாவும் அரங்கேற்றுகிற ரவுடித்தனம் பற்றிய கேள்விகள் எல்லாம் இந்த படத்தைப் பார்க்கையில் விஸ்வரூபமெடுக்கின்றன. அந்த படங்களில் நம்மை வாயடைக்கச் செய்த மணி ரத்னம், ‘தக் லைஃப்’பில் எங்கு சறுக்கியிருக்கிறார். அவரே அசை போட வேண்டிய கேள்வி இது. உயர் தர பொம்மை! கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக்செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, ஜோஜு ஜார்ஜ், மகேஷ் மஞ்ச்ரேகர், அலி ஃபசல் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். இன்னும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தணிகலபரணி, பாபுராஜ், பகவதி பெருமாள், வையாபுரி, சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, அர்ஜுன் சிதம்பரம் என்று பலர் இதில் முகம் காட்டியிருக்கின்றனர். பெரும்பாலான காட்சிகளில் கமல் தலைகாட்டியிருக்கிறார். மீதமிருக்கிற காட்சிகளில் வந்து போயிருக்கிற அனைவருமே சிறப்பாகத் தோன்றியிருக்கின்றனர். ஆனால், ‘உள்ளடக்கம் எப்படி’ என்று கேட்டால் ‘ப்ச்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கமர்ஷிலாகவும் கலைரீதியிலும் கவனம் ஈர்த்த படங்களின் நாயகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மீண்டும் கைகோர்க்கிறபோது ரசிகர்கள் எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். ஆனால், அந்த படம் கமர்ஷியலாகவும் இருக்காது; கலைரீதியிலும் திருப்தி தராது. ஹாலிவுட், பாலிவுட் என்று நாம் பார்க்கிற எந்த மொழிப் படமானாலும் இது போன்றதொரு அனுபவத்தை எதிர்கொண்டிருப்போம். அதைத்தான் ‘தக் லைஃப்’பில் மணி ரத்னம் – கமல் கூட்டணி தந்திருக்கிறது. ஒரு உயர் தர பொம்மையைப் போன்று இத்திரைப்படத்தை அமைத்திருக்கிறது. மேலே சொன்னவாறு இதில் நடிகர் நடிகைகளின் சிறப்பான ‘பெர்பார்மன்ஸ்’ இருக்கிறது. ஒவ்வொரு பிரேமும் உலகத்தரம் என்று சொல்கிற வகையில் ஒளிப்பதிவை அமைத்திருக்கிறார் ரவி கே.சந்திரன். ஒளிப்பதிவாளர் சுற்றிச் சுழன்றாடுகிற வகையில் தயாரிப்பு வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் ஷர்மிஸ்தா ராய். ஒவ்வொரு காட்சியையும் அதன் தன்மைக்கு ஏற்றவாறு தொகுத்திருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத். இன்னும் சண்டைப்பயிற்சி, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று எல்லாமே வியக்கத்தக்க அளவில் திரையில் இடம்பெற்றிருக்கிறது. சரி, அதனால் கதைக்கும் காட்சி வடிவாக்கத்திற்கும் என்ன லாபம் என்று கேட்டால் எந்தப் பதிலும் கிடைக்காது. இப்படியொரு உள்ளடக்கதிற்குத் தன் இசையால் உயிர் கொடுக்க முயன்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். வழக்கத்திற்கு மாறான பின்னணி இசை அனுபவத்தை ரசிகர்கள் பெறட்டும் என்று உழைத்திருக்கிறார். ஆனாலும், ’உயர்தர பொம்மையாகவே’ காட்சி தருகிறது ‘தக் லைஃப்’. சரி, ஏ.ஆர்.ஆர். தந்த 9 பாடல்களையாவது திரையில் பார்த்து மகிழலாம் என்றால் மணி ரத்னம் அதற்கும் இடம் தரவில்லை. ஜிங்குச்சா, சுகர் பேபி, ஓ மாறா பாடல்களின் தொடக்கம் தான் காதில் விழுகின்றன. அதன்பிறகு அவற்றை ரசிக்கிற மனநிலை மறைந்து போகிறது. அத்தனை பாடல்களிலும் இரண்டுக்கும் மேற்பட்ட காட்சிகள் தலைநீட்டுகின்றன. அதனால், அவை பின்னணியில் ஒலிக்கின்றன; பாதியிலேயே மங்கிவிடுகின்றன. ‘விண்வெளி நாயகா’ பாடல் கிளைமேக்ஸில் வரும் டைட்டிலில் ஒலிக்கிறது. ‘முத்த மழை பாடலை தீ பாடியிருக்க வேண்டுமா? சின்மயி பாடியிருக்க வேண்டுமா’ என்ற விவாதத்திற்கான பதிலை அறியலாம் என்று பார்த்தால், அந்த பாடல் படத்திலேயே இல்லை. ‘நியூ’வில் வரும் ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா’ மாதிரியான ரசிகர்கள் நினைவில் இடம்பெறத் தக்க ஒரு பாடலாக ‘அஞ்சு வண்ண பூவே’ அமைந்திருக்க வேண்டும். ‘எனக்கு செண்டிமெண்ட்ல நம்பிக்கை இல்லைங்க’ என்று அதனைப் புறந்தள்ளியிருக்கிறார் மணி ரத்னம். சில நிறைகள் ‘தக் லைஃப்’பில் உண்டு. க்ளோஸ் அப்’ ஷாட்களில் தலைகாட்டியிருக்கும் அனைத்து நடிகர், நடிகையரும் தமது திறமையை ‘பளிச்’சென்று காட்டியிருக்கின்றனர். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்காக மட்டுமே படம் பார்க்க வருபவர்களுக்கு ‘தக் லைஃப்’ நல்லதொரு அனுபவத்தைத் தரும். போலவே, ‘மணி சாரும் கமல் சாரும் சேர்ந்து சீனிகம் மாதிரி ஒரு ரொமான்ஸ் படம் பண்ணலாமே’ என்று சொல்ல வைக்கின்றன சில காட்சிகள். அதே நேரத்தில், இந்த ஜாம்பவான்கள் பட்டாளம் இப்படிப்பட்ட லாஜிக் மீறல்களுக்கு இடம் தந்திருக்கிறதே என்றும் எண்ண வைக்கின்றன சில காட்சிகள். அவை ‘க்ளிஷேக்களின் உச்சம்’ எனலாம். தன்னைத் தொடர்ந்து வந்த ரவுடிகள் வீட்டு வாசலில் காத்துக் கிடக்க, அதற்கடுத்த காட்சியில் ரயில் நிலையத்திற்குச் சென்று அவர்களை கமல் பாத்திரம் பந்தாடுகிற காட்சி அதற்கொரு உதாரணம். இது போன்ற லாஜிக் மீறல்கள், ‘என்ன மணி சார் இது’ என்று கேட்க வைக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் ‘நாயகனைத் தாண்டி நிற்கிற ஒரு கிளாசிக்கான கேங்க்ஸ்டர் படத்தைப் பார்க்க வேண்டும்’ என்று தியேட்டருக்கு வருபவர்களைத் தலையில் தட்டி உட்கார வைக்கிறது ’தக் லைஃப்’. அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பவர்களுக்கும், கமல் – மணி காம்பினேஷனை எப்படி மிஸ் செய்வது’ என்பவர்களுக்கும் இப்படம் பிடிக்கக்கூடும்..! https://minnambalam.com/kamal-haasan-thug-life-movie-review-in-tamil/
  15. ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? Photo, SUNDAY TIMES இலங்கையில் பிரதிநிதித்துவ (நாடாளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் சிறுபான்மை அரசியல் தலைலைமைகள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தை வலியுறுத்தி தனித்துவமாக செயற்பட ஆரம்பித்தன. தமக்கென தனித்துவமான கட்சிகளை உருவாக்கிக் கொண்டன. எனினும், கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள் அவ்வாறல்லாது சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து குறிப்பாக சமசமாஜ மற்றும் கம்யூனிஸ்கட்சிகள் தம் அரசியல் செயற்பாட்டினை வடகிழக்கிலும் முன்னெடுத்து வந்தன. ஆயினும், இடசாரி கட்சிகளாலும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் தமது செல்வாக்கினை விரிவடையச் செய்ய முடியாமற் போய்விட்டது. அறுபதுகளின் பின் இறுதியில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட என். சண்முகதாசன் தலைமையளித்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்த முடியாமற் போய்விட்டது. இப்பின்புலத்தில் எழுபதுகளில் வீரீயம் பெற்ற தமிழ் தேசியம் இடதுசாரி கட்சிகளையும் , வலது சாரி கட்சிகளையும் வட கிழக்கில் பூச்சிய நிலைக்குத் தள்ளியது. ஆயினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தப்பின்னரும் வலதுசாரி கட்சிளும் இடதுசாரி கட்சிகளும் வடகிழக்கில் ஆதிக்கம் செலுத்த முனைந்த போதிலும் தோல்வியைத் தழுவின. ஆயினும், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தென்னிலங்கையின் இடதுசாரி கட்சியென அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பி. – தே.ம.ச. (என்பிபி). தமிழ் தேசியத்தின் ஊற்றுவாய் எனக் கருதப்படும் யாழ்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் அரசியல் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி மூவரை வெற்றி பெறச் செய்துள்ளது. இதேபோல் மலையகத்தில், பெரிதும் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி நான்கு வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்துள்ளது. தமிழ் மக்களது அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய திருப்புமுனையாகும். வடக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் தம் இனத்துவ பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்தும் கொடுத்து தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களையே வெற்றி பெறச் செய்து வந்துள்ளனர். ஆனால், நடந்த பொதுத்தேர்தலின் போதும் அதனைத் தொடாந்து தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தம் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கடைப்பிடித்துள்ளனர். இம்மாற்றம் வடக்கின் தமிழ் தேசியம் எனும் தரிசனம் வலுவிழந்து சரிவினை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதுடன் மலையக மக்கள் நமது தமிழ் தலைமைகள் எனும் நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்கின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர் வடக்கின் தமிழ் தேசிய கட்சிகள் விழிப்புற்றதுடன் தமிழ் தேசிய தரிசனம் சரிவை நோக்கிச் செல்லவில்லை எனக் கூற ஆரம்பித்ததுடன் அண்மைய பிரதேச சபைத் தேர்தலின் போது தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் கைவிடவில்லையென்பதை நிரூபிக்கும் வகையில் வாக்களிக்கும்படி கோரின. அதனை வலியுறுத்தும் வகையில் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து பிரிந்துச் சென்று உருவாக்கப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களம் இறங்கின. தென்னிலங்கை அரசாங்கத்திற்கு குறிப்பாக ஜே.வி.பிக்கு பாடம் புகட்டும் வகையில் வடகிழக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரினர். மலையகத் தலைமைகள் தாங்கள் தனித் தனியே உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியினை பிடிக்க முடியாவிட்டாலும் தேர்தலின் பின் கூட்டுச் சேர்ந்து சபைகளில் ஆட்சி அமைப்போம், ஆகையால் எங்களை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என மலைய மக்களைக் கோரினர். ஆனால், நடந்துள்ளது என்னவெனில் தமிழ் தேசியத்தின் தலையெனக் கருதப்படும் யாழ். மாவட்டத்தின் பதினேழு சபைகளில் அதிகளவு ஆசனங்களைப் பெற்ற போதிலும் பலமான ஆட்சியை உருவாக்கக் கூடியவாறு மக்கள் ஆணையை வழங்கவில்லை. அதனையடுத்து தீவிரமாக தமிழ் தேசியத்தை வலியுறத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வடக்கின் பல சபைகனை தன் வசப்படுத்திக் கொள்ளும் எனக் கருதப்பட்டபோதிலும் இரண்டு சபைகளிலேயே முதன்மைப் வகித்துள்ளது. அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து விலகி தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியும் பல சபைகளை வென்றுக்கொள்ளும் என எதிர்பார்த்த போதிலும் அதுவும் பாரிய வெற்றியைப் பெறவில்லை. தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவத்தைப் பெறவில்லை. ஆனால், வடக்கின் அனைத்து பிரதேச சபைகளிலும், நகர மற்றும் மாநகர சபைகளிலும் தமிழரசுக் கட்சிக்கு அடுத்ததாக ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி கட்சி பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது . கட்சி யாழ் மாநகர சபை வல்வெட்டி துறை நகர சபை பருத்தித்துறை நகரசபை சாவகச்சேரி நகர சபை நெடுந்தீவு பிரதேச சபை இ.த.க. 13 5 4 6 6 அ.இ.த.கா. 12 7 5 6 தே.ம.ச. 10 3 2 3 3 ஜ.த.தே.கூ. 2 2 ஈ.ம.ஜ.க. 4 அதிலும் தேசிய மக்கள் சக்தி சில சபைகளில் இரண்டாம் (பருத்திதுறை, வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தென் மேற்கு, வேலனை, காரை நகர் பிரதேச சபைகள்) இடத்தையும், சில சபைகளில் முறையே யாழ்ப்பாணம் மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்திச் துறை நகரசபை மற்றும் வலிகாமம் மேற்கு, வடமராட்சி தென் மேற்கு, சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்துறை எனும் பிரேதேச சபைகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதேவேளை, ஆசனங்கள் பெற்றதில் தமிழரசு கட்சி முதலாம் இடத்தையும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. தமிழரசு கட்சிக்கு சவாலாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ மூன்றாம் இடத்தையே பெற்றுள்ளது. முறையே தமிழரசு 137 ஆசனங்களையும் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மக்கள் சக்தி 81 ஆசனங்களையும், மூன்றாம் இடத்தைப் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 79 ஆசனங்களையும் பெற்றுள்ளது (கிழக்கின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜே.வி.பி./ தே.ம.ச. அதிகளவு பிரதிநிதித்துத்தைக் கொண்டுள்ளது). கட்சி வலிகாமம் மேற்கு பிரதேச சபை வலிகாமம் தெற்கு பிரதேச சபை வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை சாவகச்சேரி பிரதேச சபை நல்லூர் பிரதேச சபை இ.த.க. 10 13 13 8 7 அ.இ.த.கா. 6 6 7 7 தே.ம.ச. 4 5 6 6 3 ஜ.த.தே.கூ. 3 ஈ.ம.ஜ.க. 6 ஐ.தே.க. 3 கட்சி ஊர்காவற்துறை பிரதேச சபை வேலணை பிரதேச சபை வலிகாமம் வடக்கு பிரதேச சபை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை பருத்தித்துறை பிரதேச சபை இ.த.க. 2 8 11 8 11 9 தே.ம.ச. 3 4 9 6 9 4 அ.இ.த.கா. 3 6 5 ஐ.தே.க. சு.கு 2 ஜ.த.தே.கூ. 5 5 4 த.ம.கூ. 4 ஈ.ம.ஜ.க. 3 கட்சி காரைநகர் பிரதேச சபை தே.ம.ச 2 இ.த.க 2 அ.இ.த.கா 2 சு.கு 2 ஜ.த.தே.கூ 2 சுருக்கம் இ.த.க. – இலங்கை தமிழரசு கட்சி அ.இ.த.கா. – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தே.ம.ச. – தேசிய மக்கள் சக்தி ஐ.தே.க. – ஐக்கிய தேசிய கட்சி சு.கு. – சுயாதீன குழு ஜ.த.தே.கூ. – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி த.ம.கூ. – தமிழ் மக்கள் கூட்டணி ஈ.ம.ஜ.க. – ஈழ மக்கள் ஜன நாயக கட்சி இலங்கையின் தேர்தல் அரசியல் வரலாற்றில் தென்னிலங்கை இடதுசாரி கட்சியொன்று வடகிழக்கின் உள்ளூராட்சி சபைகளில் இந்தளவு வெற்றியைப் பெற்றமை இதுவே முதற் தடவையாகும். ஜே.வி.பி./ தே.ம.ச. கட்சியானது ஏனைய கட்சிகள் போலன்றி முழு நேர களப்பணியாளர்களைக் (Cadre) கொண்ட கட்சியாகும். அக்கட்சி சார்பாக வடக்கில் போட்டியிட்டவர்களில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்களவு காணப்டுகின்றனர். அதன்படி பார்க்கும்போது ஜே.வி.பி./ தே.ம.ச. யினரின் வெற்றியாளர்களில் பெரும்பாலோர் அவ்வவ் கிராமத்தைச் சார்ந்தோர் அல்லது அவ்வட்டாரத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களாவர். ஏனைய கட்சிகளைப் போலல்லாது ஜே.வி.பி. தமது கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் பற்றி தமது அங்கத்தவர்களுக்கு அறிவூட்டல் செய்யும் கட்சியாகும். கட்சியின் தலைமை எடுக்கும் கொள்கை நிலைப்பாட்டினை கட்சியின் கீழ் மட்டம் வரை திட்டமிட்டு கொண்டுச் செல்லும். அவ்வகையில் வடகிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட அனைத்து தமிழ் பிரதிநிதிகளுக்கும் சுயர்நிர்ணய உரிமை தொடர்பில் தம் கட்சியின் நிலைப்பாடு பற்றி அறிவூட்டல் செய்யும். அனைத்து மக்களும் பாராபட்சமின்றி உரிமைகளை அனுபவிக்கும் ஆட்சி முறைமையை உருவாக்குவதே தம் நிலைப்பாடு என்பதனை வெற்றிப் பெற்றோர் மத்தியில் வலியுறுத்தும். மறுபுறம் உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பக்கச்சார்பற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும். தெரிவு செய்யப் பட்டவர்கள் அக்கருத்தினையே தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வர். வட கிழக்கின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இச்செயற்பாடு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழ் தேசியக் கட்சிகள் இத்தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்ளும்? தொடர்ச்சியாக தமிழ் தேசியத்தை வலியுறுத்துவதன் மூலம் ஜே.வி.பியின் வியாபித்தலைத் தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது காணமால் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு அல்லது வடகிழக்கு இணைப்பு மற்றும் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கு எனும் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தமிழ் மக்களது உணர்வினைத் தட்டி எழுப்பி தமிழ் மக்களை தமிழ் தேசியத்துடன் கட்டிவைத்து தமிழ் கட்சிகளுக்கு முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த வாழ்வாதார நிலையையும் உட்கட்டமைப்பு வசதிகளையே எதிர்பார்த்திருக்கின்றனர். பிரதேச சபைகள் மூலம் அபிவிருத்தித் திட்டங்களையும் ஊழலற்ற ஆட்சியை மேற்கொண்டால் ஜே.வி.பி./ தே.ம.ச. மீதான ஈர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறனதாக இருக்கும்? எவ்வாறு வடகிழக்கில் ஜே.வி.பி./ தே.ம.ச. தன் பிரதிநிதித்துவத்தை இத்தேர்தலின் போது நிலை நிறுத்தியுள்ளதே அதேபோல் மலையக உள்ளூராட்சி மன்றங்களிலும் கணிசமான ஆசனங்களை ஜே.வி.பி./ தே.ம.ச. வெற்றிப் பெற்றுள்ளது. வடக்கின் தமிழரசு கட்சி போல் மலையகத்தில் இலங்கை தொழிலளார் காங்கிசும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மலையக மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வரும் கட்சிகளாகும். ஆனால், இவ்விரு கட்சிகளும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சரிவை சந்தித்துள்ளது. மலையகத்தின் நுவரெலிய மாநகர சபை, அட்டன் டிக்கோய நகர சபை, தலவாகெல்லை – லிந்துள்ள நகர சபை மற்றும் அம்பகமுவ, நுவரெலிய, கொத்மலை, அங்குரன்கெத்த, வலப்பனை, மஸ்கெலிய. நோர்வூட், அக்கரபத்தனை, கொட்டகல முதலிய பிரதேச சபைகளில் அதிக ஆசனங்களை ஜே.வி.பி./ தே.ம.ச. பெற்றுள்ளது. இவ்வாறு வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் இளம் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களாவர். இவர்கள் மலையகக் குடியிறுப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி பிரதேச சபைகளை சிறப்புற நடத்தினால் மலையக தமிழ் கட்சிகள் எதனைக் கோருவதன் மூலம் மலையக மக்களை தம்பால் வென்றெடுக்க முடியும் . மேலும், இந்தியா வழங்கும் வீடமைப்புத் திட்டத்தை ஜே.வி.பி./ தே.ம.ச. பக்கச் சார்பற்ற முறையில் முன்னெடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கினால் மலையக மக்களது மனோநிலை எவ்வாறானதாக அமையும். வெறுமனே நாம் மலையகத் தமிழர் என்ற அடையாளத்தையும், சம்பள அதிகரிப்பு என்பனவற்றினை மட்டும் முன்னிறுத்தி மலையக மக்களை தம் கட்சிகளின் பால் இனிமேலும் தக்க வைக்க முடியுமா? மேலும் மலையகக் கட்சிகளின் பால் மலையக இளைஞர்கள் கொண்டுள்ள கருத்துநிலை மலையக கட்சிகளின் பால் எவ்வாறான தாக்கத்தை உருவாக்கும்? கட்சி நுவரெலியா மாநகர சபை ஹட்டன் – டிக்கோயா நகர சபை தலவாக்கலை – லிந்துலை நகர சபை மஸ்கெலியா பிரதேச சபை ஐ.தே.க 3 2 தே.ம.ச 12 6 4 7 இ.தொ.கா 2 2 ஐ.ம.ச 4 5 2 6 சு.கு 3 2 ம.ம.மு 3 கட்சி நோர்வூட் பிரதேச சபை அம்பகமுவ பிரதேச சபை அகரப்பத்தனை பிரதேச சபை கொட்டகலை பிரதேச சபை தே.ம.ச 6 8 4 5 இ.தொ.கா 6 2 4 5 ஐ.ம.ச 5 6 4 4 கட்சி நுவரெலியா பிரதேச சபை கொத்மலை பிரதேச சபை ஹங்குரன்கெத்த பிரதேச சபை வலப்பனை பிரதேச சபை தே.ம.ச 7 22 20 30 இ.தொ.கா 6 8 இ.பொ.மு 4 7 ஐ.ம.ச 17 9 15 சு.கு 5 குறிப்பு – இடம் கருதி சுயாதீனக் கட்சிகள் பெற்ற ஆசனங்களை உட்சேர்க்க வில்லை;. ஐ.தே.க. – ஐக்கிய தேசிய கட்சி ம.போ.மு. – மக்கள் போராட்ட முன்னணி தே.ம.ச. – தேசிய மக்கள் சக்தி இ.தொ.கா. – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இ.பொ.மு. – இலங்கை பொதுசன முன்னணி ஐ.ம.ச. – ஐக்கிய மக்கள் சக்தி சு.கு – சுயாதீன குழு ம.ம.மு. – மலையக மக்கள் முன்னணி வடகிழக்கு மக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் அதிக வாக்கினை வழங்கியுள்ளனர் எனக் கருதி அதனால் தமிழ் தேசியத்திற்கு அச்சுறுத்தலில்லை என வடக்கின் தலைமைகள் கருதுமாயின் எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலின்போது பாரிய சவாலை சந்திக்க நேரிடுவதுடன் தமிழ் தேசியத்தை தக்கவைததுக் கொள்வதும் சவாலாக அமையும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் விளைவாக உருவாக்கிக் கொண்ட பிரதிநிதிகளை ஜே.வி.பி. களப்பணியார்களாக மாற்றிவிடும். எனவே, எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது வடக்கு மற்றும் மலையக கட்சிகள் பாரிய சவாலை எதிர்க்கொள்ள நேரிடும். மாகாண சபையில் இதையொத்த வெற்றியை ஜே.வி.பி. பெறுமாயின் சுயர்நிர்ணய உரிமை தொடர்பான ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டினை தமிழ் மக்கள் ஏற்றுள்ளதாக தேசமும் சர்வதேசமும் கருதும். எனவே, தமிழ் கட்சிகள் புதிய மூலோபாயங்களை உருவாக்கிக் கொள்வது அவசியம். பெ.முத்துலிங்கம் https://maatram.org/articles/12120
  16. டிரம்பு நன்றிகெட்ட மனிதர் – எலான் மஸ்க் குற்றச்சாட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருப்பதாகவும், அவை குழந்தை துஷ்பிரயோக ஊழலின் ஒரு பகுதியாகும் என்றும், அதனால்தான் விசாரணையின் விவரங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலான் மஸ்க் பேஸ்புக் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு குழந்தை துஷ்பிரயோகத்திற்கான விசாரணையை எதிர்கொள்ளும் போது சிறையில் தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பாலியல் வன்கொடுமைகளை எப்ஸ்டீன் வழக்கு உள்ளடக்கியது. இருவருக்கும் இடையிலான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் இப்போது வெளிப்படையாக ஒருவரையொருவர் குறிவைத்து வருகின்றன. டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அவருக்குப் பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிய பதிவை மஸ்க் உடனடியாகப் பகிர்ந்து கொண்டார். ‘எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் டிரம்ப் பெயர் இருக்கின்றது. அவர்கள் பகிரங்கப்படுத்தப்படாததற்கு அதுதான் உண்மையான காரணம். இனிய நாள், டிஜேடி!’ என்று மஸ்க் பதிவில் கூறினார். இந்த பதிவை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கவும். உண்மை வெளிவரும் என்றும் மஸ்க் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். “மஸ்க்கும் எனக்கும் இடையே ஒரு சிறந்த உறவு இருந்தது. மீண்டும் அது எப்போதாவது கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார். எலான் என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் மோசமாகப் பேசவில்லை. ஆனால் அடுத்தது அப்படித்தான் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் டிரம்ப் கணித்தார். நான் இல்லையென்றால், டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். ஜனநாயகக் கட்சியினர் சபையைக் கட்டுப்படுத்தியிருப்பார்கள் என்று மஸ்க் பதிலளித்தார். எம்.பி.க்கள் மசோதாவை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் உதவியிருக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் தோற்றிருப்பார். டிரம்ப் நன்றி கெட்டவர். சிறார் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாலேயே அவர் அதனை வெளியிடவில்லை. நாசா உடனான டிராகன் விண்கலன் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறேன் என மஸ்க் தெரிவித்துள்ளார். மஸ்க் தனது “பெரிய அழகான மசோதாவை” எதிர்த்ததற்காக அவர் ஏமாற்றமடைந்ததாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மஸ்க்கின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. கருத்து வேறுபாடுகள் காரணமாக, டிரம்ப் நிர்வாகத்தின் எரிசக்தித் துறையின் (DoD) தலைவர் பதவியில் இருந்து மஸ்க் கடந்த வாரம் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. கோடீஸ்வரர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் கடந்த ஒன்பது மாதங்களாக பிரிக்க முடியாத ஒருவருக்கொருவர் அபிமானிகளாக இருந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=327610
  17. குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை! June 6, 2025 தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை முல்லைத்தீவு நீதிபதி டி.பிரதீபன் (ஜூலை 5) விடுவித்து விடுதலை செய்தார். குருந்தூர்மலையில் உள்ள தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக விவசாயிகள் மீது தேரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் உள்ள சில காணிகளின் உரிமை தொடர்பாக மாகாணத்தின் தமிழ் மக்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் சர்ச்சையைத் தீர்ப்பதில் முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. அந்த காணி தொல்பொருள் துறைக்குச் சொந்தமானதாக சட்டப்பூர்வமாக்கப்படவில்லை என்பதை காவல்துறையினரும் தொல்லியல் திணைக்களமும் ஒப்புக்கொண்டதாக, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர், சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் ஊடகங்களிடம் தெரிவித்தார். “வழக்குத் தொடுனர் சார்பில் தொல்பொருள் திணைக்களத்தாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன. இந்த இரண்டு சந்தேகநபர்களும் இந்த வழக்கில் இருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த நீதிமன்ற கட்டளையிலேயே, விசேடமாக குறித்த பிரதேசமானது இன்னமும் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத் தொடுனரே ஏற்றுக்கொண்டிருந்ததை நீதவான் சுட்டிக்காட்டியிருந்தார்.” குற்றம் சாட்டப்பட்ட இரண்டு விவசாயிகளின் சார்பாக சாட்சியங்களை முன்வைக்க 12 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் மேலும் தெரிவித்திருந்தார். தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரர் கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, புனித பிரதேசத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மே 10 அன்று மூன்று தமிழ் விவசாயிகளை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது. ஆரம்பத்தில் முல்லைத்தீவின் குருந்தூர்மலை பகுதிக்கு 78 ஏக்கர் பரப்பளவு சொந்தமானது என, மே 12, 1933 அன்று ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மேற்கோள் காட்டி தொல்பொருள் துறை அதிகாரிகள் அறிவித்ததாக அப்பகுதியின் தமிழ் மக்கள் குறிப்பிடுகின்றனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர், தொல்பொருள் கலைப்பொருட்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 229 ஏக்கர் நிலம், குருந்தூர்மலை தொல்பொருள் காப்பகத்திற்காக தொல்பொருள் திணைக்களத்தால் வரையறுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள தன்னிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபடும் அப்பகுதி மக்கள், 229 ஏக்கர் நிலத்தில் அவர்களின் உறவினர்கள் 100 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நெல் வயல்களும் அடங்குவதாக கூறுகின்றனர். மே 10 ஆம் திகதி, குருந்தூர்மலை அடிவாரத்தில், மூன்று தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தின் ஊடாக நிலத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரரான கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் மூன்று பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். மூவரில் பாடசாலை சிறுவனை விடுவிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி டி. பிரதீபன், சந்தேகநபர்களான சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். https://www.ilakku.org/குருந்தூர்மலை-விவசாயிகள/
  18. வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்! பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரித்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுபச்செய்தியை வெளியிடுகின்றேன். மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளது - என்றார். முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 பாதீட்டில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/வட்டுவாகல்_பாலம்_சீரமைப்பு_ஓகஸ்ட்_மாதம்_ஆரம்பமாகும்!
  19. சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு! தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்ட போது சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார். ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது. https://newuthayan.com/article/சிவகுமாரனின்_51ஆவது_ஆண்டு_நினைவேந்தல்_நிகழ்வுகள்_யாழ்._பல்கலையில்_முன்னெடுப்பு!
  20. தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி! யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு தெற்கில் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. எதிர்வரும் 10ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அந்த வழிபாடுகளுக்காகவே, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை வழங்கி ஆட்களைத் திரட்டும் பணியில் சில சிங்கள கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. திஸ்ஸ விகாரைக் காணிகள் தொடர்பான போலியான தகவல்களை வழங்கியே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் ஒவ்வொரு பொசன் தினத்தன்றும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. https://newuthayan.com/article/தையிட்டி_திஸ்ஸ_விகாரையில்_ஆயிரக்கணக்கில்_சிங்கள_மக்களை_களமிறக்குவதற்குத்_தீவிர_முயற்சி!
  21. யுத்த காலத்தில் மீட்கப்பட்ட நகைகளை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்த முடிவு! யுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் மக்களிடம் மீளக் கையளிக்க முடியாத நகைகளை வடக்கின் அபிவிருத்திக்கான நிதியத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட தங்க நகைகளை ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இவ்வேளையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே இராணுவத்தினர் வசமிருந்த கிலோ கணக்கான தங்கம் தற்போது நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை யுத்த காலத்தில் வடக்கில் மீட்கப்பட்டவையாகும். இவை தங்கமாகவே இருக்கின்றன. இவை தொடர்பில் இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்தி எவ்வளவு தங்கம் உள்ளது என்பதனை ஆராய்ந்து அந்த அறிக்கையை பெற்ற பின்னர் அரசாங்கத்தால் மக்களுக்கு அந்த தங்கத்தை தங்களுடையது என்பதனை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கலாம். அத்துடன் யுத்த நிலைமையால் நிருபிக்க முடியாத பகுதியும் இருக்கலாம். மக்கள் பெற்றுக்கொள்ளாதவற்றை வடக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அவற்றில் அந்த தங்கத்தின் பகுதியை போட்டும், அரசாங்கத்தினால் நிதி வழங்கியும் வடக்கிற்கான விசேட அபிவிருத்தி நிதியத்தை அமைக்கவும், அதற்காக தேசிய மற்றும் வெளிநாட்டு ரீதியிலும் வாழும் இலங்கையர்களுக்கும் யுத்தத்தால் நாட்டில் இருந்து சென்ற மக்களுக்கும் இதில் கலந்துகொள்ள வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். https://www.samakalam.com/யுத்த-காலத்தில்-மீட்கப்-2/
  22. சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது adminJune 6, 2025 சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை தரும் விடயம் என வட மாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். சுற்றுச்சூழல் தினம் என்பதால் நிலத்திலே காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொலித்தீன் அகற்றும் பணி யாழ் மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கடலிலே காணப்படும் சட்ட விரோத கடல் அட்டைப் பண்ணைகள் மற்றும் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றாமல் அதனை மீன்களும் உண்டு அதை நாமும்உண்டு பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் இந்த செயற்பாட்டை தடை செய்யாமல் இருப்பது கவலையளிக்கிறது. பருத்தித்தீவிலே அமைக்கப்பட்ட சீன அரசாங்கத்தின் கடல் அட்டைப் பண்ணையில் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன அவை அகற்றப்படவில்லை இதற்கு தற்போது உள்ள அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/216410/
  23. NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா? June 4, 2025 — கருணாகரன் — NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? அதாவது இதுவரையான வரலாற்றில் அதிகாரத்தில் இருந்த சக்திகளை விட NPP தீங்கானதா? மோசமானதா? அப்படியென்றால், NPP யை மக்கள் எப்படி – எதற்காக – ஆதரித்தனர்? ஏன் இன்னும் ஆதரிக்கின்றனர்? இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? அல்லது “இனவாதத்தைக் கடந்து விட்டோம், மாற்றுச் சக்தி நாங்கள், இடதுசாரிகள்..” என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இனவாதத்தையே NPP யும் கைக் கொள்கிறது என்ற கோபமா? சிங்கள இனவாதச் சக்திகளைச் சமாளித்துக் கொள்வதற்காக NPP யும் இனவாதத்தைப் பேச முற்படுகிறதா? அது சரியானதா? NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா? ஊழலுடன் NPP யும் தொடர்பு பட்டுள்ளதா? அல்லது ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அது உறுதியாகவே நிற்கிறதா? NPP செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை? ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன? எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு NPP யின் நடவடிக்கைகள் வேகமாக இல்லையா? அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? இதைக்குறித்து NPP யினர் தெளிவாக்காது இருப்பது ஏன்? “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள். “சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPPயும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்” என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் இதில் எது உண்மை? இரண்டு தரப்பினாலும் குற்றம் சாட்டப்படும் ஒரு தரப்பு எப்படியாக இருக்கும்? சுருக்கமாகக் கேட்டால், சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் ஆட்சி செய்த ஏனைய அரசியற் தரப்பினரை விட NPP மோசமான தரப்பா? என்றால் அது எந்த வகையானது என்று அரசியற்கட்சிகளும் NPP யை எதிர்ப்போரும் தெளிவாகச் சொல்ல (விளக்க) வேண்டும்அல்லவா? NPP யை எதிர்த்து அதனை அதிகாரத்திலிருந்து அகற்றினால் அந்த இடத்தில் வேறு எந்தச் சக்தியை அமர்த்தலாம்? அல்லது எந்தச் சக்தி அதிகாரத்துக்கு – ஆட்சிக்கு – வரும்? 1. ஐ.தே.க 2. ஐக்கிய மக்கள் சக்தி 3. பொதுஜன பெரமுன 4. சிறிலங்கா சுதந்திரக் கட்சி 5. இந்தக் கட்சிகளின் கூட்டு அல்லது கலவைதானே! இவை NPP யை விட சிறப்பான நல்லாட்சியை தமிழ் பேசும் மக்களுக்கோ இலங்கையின் அனைத்துச் சமூகங்களுக்கோ வழங்கி விடுமா? அதற்கான உத்தரவாதம் என்ன? தற்போதைய சூழலில் NPP யை நீக்கினால் அந்த இடத்தில் ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுன அல்லது சஜித் பிரேமதாச தரப்பின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றில் ஒன்றுதான் அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இவை இரண்டும் NPP ஐ விட முற்போக்கானவையா? அதாவது தீங்கற்றவையா? இவற்றுக்கு அப்பால் வேறு புதிய சக்தி ஏதாவது வரக்கூடிய சாத்தியமுண்டா? என்றால் அது, எது? இதற்கெல்லாம் யாரும் பதில் சொல்லத் தயாரில்லை. அப்படியென்றால் எந்த அடிப்படையில் NPP மீதான எதிர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது? தமிழ் பேசும் மக்கள் NPP ஐ எதிர்க்கும்போது அது தவிர்க்க முடியாமல் மேற்சொன்ன ஐந்து தரப்புகளில் ஒன்றுக்கோ அல்லது ஐந்துக்கோதானே ஆதரவாக இருக்கும்? அந்தத் தரப்புகள் கடந்த காலத்தில் இன ஒடுக்குமுறையையும் – பாரபட்சத்தையும் தாராளமாகவே மேற்கொண்டவையல்லவா?மட்டுமல்ல, இப்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளவையே! இதைப் புரிந்து கொண்டும் NPP ஐ எதிர்த்தால் அது மறைமுகமாகவும் நேரடியாகவும் மேற்சொன்ன சக்திகளுக்கே வாய்ப்பாகும் அல்லவா? இதனை யாராவது மறுக்க முடியுமா? அப்படியென்றால் அதைத்தான் தமிழ் பேசும் தரப்புகள் செய்ய விளைகின்றனவா? அவற்றின் அரசியல் தெரிவும் நிலைப்பாடும் இதுதானா? அல்லது தெரிந்த பேயை விட தெரியாத பிசாசு நல்லது என எண்ணுகின்றனவா? அல்லது ஏனைய சக்திகளை விட NPP ஆபத்தானது என விளைகின்றனவா? ஏனைய தென்னிலங்கை அரசியற் கட்சிகள் வடக்குக் கிழக்கில் வலுவாகக் காலூன்றவில்லை. ஆகையால் பிராந்திய அரசியலுக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை. மட்டுமல்ல, பிராந்திய அரசியலுக்கு அந்தச் சக்திகள் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் தாரளமாக வாய்ப்பளித்தன. NPP இதை மறுத்து பிராந்திய சக்திகளின் இருப்பிலும் – பிராந்திய அரசியலிலும் கை வைத்துள்ளது என்ற அச்சத்தின் வெளிப்பாடா? இதெல்லாம் NPP யை எதிர்க்கும் தரப்பினர் மீதான கேள்விகளாகும். இதுபோல இன்னும் பல கேள்விகளுண்டு. இதில் தமிழ் பேசும் மக்களுக்குரிய தனியான கேள்விகளும் உண்டு. இவற்றை எளிதாக புறந்தள்ளி விட முடியாது. NPP ஐ மட்டுமல்ல எந்தவொரு தரப்பை எதிர்க்கும்போது அதற்குரிய போதிய காரணங்களை விளக்குவது அவசியமாகும். அப்பொழுதுதான் அதைக் குறித்து மக்களும் சிந்திக்க முடியும்? உரிய தரப்பும் (NPP) தன்னைப் பரிசீலித்துக் கொள்வதற்கு அதிக வாய்ப்பிருக்கும். இதேவேளை NPP யின் மீதும்கடுமையான விமர்சனங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டே இந்தக் கட்டுரை விடயங்களை விவாதிக்க முற்படுகிறது. NPP தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவும் கவனத்திற் கொள்ளவும் வேண்டிய விடயங்கள் பல உள்ளன. தனக்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பை NPP சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்று அதனால் கண்டறிய முடியாதிருக்கிறது. முதிர்ச்சியும் பக்குவமும் நிதானமும் இல்லாத பலருடைய கைகளில் பொறுப்புகள் பகிரப்படுகின்றன. ஆற்றலுள்ளவர்களையும் NPP யின் மெய்யான ஆதரவாளர்களையும் அது கண்டறிய முடியாமல் தடுமாறுகிறது. அல்லது அவ்வாறானவர்களை அதனால் உள்வாங்க முடியவில்லை. அதற்குள் நிலவுகின்ற உளக் குழப்பங்களே இதற்குப் பெரிய காரணங்களாகும். இதெல்லாம் NPP ஐப் பலவீனப்படுத்துகின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட சிலரைத் தவிர, ஏனையவர்கள் நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர். அதாவது இனவாதத்தை முன்னெடுத்த ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன போன்றன நாட்டை அகரீதியாகப் பிளவு படுத்தியது மட்டுமல்ல, அனைத்துச் சமூகங்களுக்கும் நாட்டுக்கும் பேரிழப்புகளையும் உண்டாக்கியவை. அவற்றின் அரசியல் (இனவாதம்) அந்தக் கட்சிகளையே காப்பற்ற முடியாமல் போய் விட்டது. சரியாகச் சொன்னால், அவை வளர்த்த இனவாதத்துக்கு அவையே பலியாகி விட்டன. அதனால்தான் ஒரு மாற்று சக்தி வேண்டும். மாற்று அரசியல் வேண்டும் என்ற அடிப்படையில் NPP க்கான ஆதரவை மக்கள் வழங்கினர். தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவும் அப்படியானதே. இதை மறந்து விட்டு அல்லது இதைப் புரிய மறுத்து ஏனைய தீய சக்திகளைப்போலவே NPP யும் செயற்படுமாக இருந்தால், அவற்றின் வழியையே தொடருமாக இருந்தால் நிச்சயமாக விரைவில் NPP தோல்வியைச் சந்தித்தே தீரும். தோல்வியை மட்டுமல்ல, அழிவையும்தான். இந்தச் சமரசமெல்லாம் தெற்கில் மேலெழும் அல்லது NPP ஐ பலவீனப்படுத்த முற்படும் சிங்களத் தீவிரவாத சக்திகளையும் திருப்பதிப்படுத்த வேண்டிய சூழலால் செய்யப்படுவது என்று இதற்கு யாரும் சமாதானம் சொல்ல முற்பட்டால் அவர்கள் சமகால வாய்ப்பைச் சீரழிப்பவர்கள் மட்டுமல்ல, நாட்டுக்கும் NPP க்கும் கூட தீமைகளையே சிந்திப்பவர்களாக இருப்பர். வடக்கில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இளங்குமரன் போன்றோர் மிகப் பலவீனமானவர்களாகவும் பாதகமானவர்களாகவுமே இருக்கின்றனர். மக்களுக்கும் NPP க்கும் மாறானவர்களாகவே செயற்படுகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. அல்லது இவர்களை பொறுப்புகளில் இருந்து நீக்கவில்லை என்றால் அதனுடைய பாரதூரமான விளைவுகள் NPP ஐயே பாதிக்கும். மக்களுக்கும் அதனால் பாதிப்பே. சிதறுண்டிருந்த தமிழ்க்கட்சிகளை ஆறுமாதங்களுக்குள் ஒன்றிணைய வைத்த, பிராந்திய அரசியலை வலுவாக்கம் செய்தது NPP யின் நடவடிக்கைகள்தான். அதிலும் சந்திரசேகர் – இளங்குமரன் கூட்டணியே என்பதை NPP யும் அதனுடைய ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். NPP யின் ஆதரவாளர்களும் NPP யும் இதைக்குறித்தெல்லாம் இன்னும் தெளிவாகப் பேசாதிருப்பது ஏன்? இதேவேளை NPP இலகுவில் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அதைப்போல அதனால் இலகுவாக ஆட்சியை நடத்தவும் முடியாது. குறிப்பாக அதிகாரத்துக்கு வந்தபோது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் (கடன் பொறிக்குள்ளும் சர்வதேச நெருக்கடிகளுக்குள்ளும்) தள்ளப்பட்டிருந்தது. அல்லது சிறைப்பட்டிருந்தது. இது போதாதென்று இனவாதம் மிகத் தீவிரமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. அதற்கு இராணுவப் பலமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதாவது இனமுரணும் அதற்கான இராணுவமும் அதற்கான உளநிலையும் உச்ச நிலைக்கு வளர்க்கப்பட்டிருக்கிறது. இவற்றுக்கு மத்தியில்தான், இவற்றைச்சீர்ப்படுத்தும் ஆட்சியை NPP நடத்த வேண்டியுள்ளது. இது எளிய விடயமல்ல. ஆகவே இதையெல்லாம் நாம் எளிதில் மறந்து விடவோ கடந்து விடவோ முடியாது. இருந்தும் தமது தவறுகளுக்கும் பழிகளுக்கும் பரிகாரம் காணாமல், நிவாரணம் தேடாமல் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே அனைத்துத் தரப்பும் முயற்சிக்கின்றன. இது எவ்வளவு பெரிய தவறு? எவ்வளவு பெரிய குற்றம்? ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள NPP இதையெல்லாம் புரிந்து கொண்டு வேண்டும். இதற்கு NPP தன்னைத் தெளிவாக முன்னிறுத்துவது அவசியமாகும். தெளிவென்பது, குழப்பங்கள்,உள் முரண்பாடுகள் அற்ற நிலையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதாகும். ஆனால், அதிகாரத்துக்கு NPP வந்த பின்னரான எட்டுமாத கால நடவடிக்கைகளை அவதானிக்கும்போது அப்படித் தெரியவில்லை. அது தடுமாற்றங்களுக்குள்ளாகியிருப்பதாகவே தெரிகிறது. என்பதால்தான் அதற்கு (NPP க்கு) எதிரான சக்திகள் வலுப்பெறக் கூடியதாக உள்ளது. அதன் மீதான விமர்சனங்களும் உள்ளன. https://arangamnews.com/?p=12060
  24. ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப் 05 JUN, 2025 | 07:47 AM ஈரான், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. கியுபா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் பல கட்டுப்பாடுகளையும் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவினதும் அதன் மக்களினதும் தேசிய பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்யும் எனது கடமையை நான் நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/216626

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.