Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு! December 8, 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது. இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33 பக்க ஆவணம், ஐரோப்பா ‘நாகரிக அழிவை’ எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. அது ரஷ்யாவை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகக் காட்டவில்லை. வெளிநாட்டு செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது, வெகுஜன இடப்பெயர்வை நிறுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தணிக்கை நடைமுறையை நிராகரிப்பது ஆகியவை அறிக்கையில் மற்ற முன்னுரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. “நாங்கள் பார்க்கும் மாற்றங்கள்… பெரும்பாலும் எங்கள் நோக்கத்தோடு ஒத்துப்போகின்றன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்ட பேட்டியில் கூறினார். “இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆவணத்தை ரஷ்யா தொடர்ந்து பகுப்பாய்வு செய்யும் என்றும் அவர் கூறினார். இந்த ஆவணம் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளை சிதைக்கக்கூடும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். ஜேசன் க்ரோ, இந்த உத்தி “உலக அரங்கில் அமெரிக்காவின் நிலைக்கு பேரழிவு” என்று கூறினார். https://www.ilakku.org/russia-welcomes-trumps-new-national-security-strategy/
  2. போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 11:56 AM போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரேன், ரஷ்யா இடையே இன்று திங்கட்கிழமை (டிச. 08) 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரேன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரேன் - ரஷ்யா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம். போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை. அது எனக்கு ஏமாற்றம் தான்’ என்றார். https://www.virakesari.lk/article/232752
  3. கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் 08 Dec, 2025 | 12:43 PM கம்போடியா மீது தாய்லாந்து இன்று (டிச.08) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் கம்போடியா முதலில் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகவே வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. கம்போடியா நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. அதேவேளை, தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த மோதலால் தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232757
  4. ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்! 08 Dec, 2025 | 01:15 PM கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதி நாடகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/232760
  5. அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியான துணைவேந்தர் யாழ் பல்கலைக்கு தெரிவாகுவாரா? 08 Dec, 2025 | 12:14 PM தம்பு லோவி அண்மைய மாதங்களில் பல்கலைக்கழகங்கள் பற்றிய பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய ரீதியான தரப்படுத்தல்கள் வெளியாகியிருந்தன. இவற்றுள் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட டைம்ஸ் உயர் கல்வி தரப்படுத்தல் ( Times Higher Education World University Rankings) முக்கியமானது. இதன்படி, தொடர்ந்து 10 ஆவது வருடமாக இங்கிலாந்தின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் மஸ்ஸாச்சுட்டஸ் இன்ஸ்டிடியூட், மூன்றாம் இடத்தை ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவையும் பெற்றுள்ளன. முதல் 40 இடங்களில் சீனாவின் 5 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன. அதேவேளை இந்தியாவின் பல்கலைக்கழகங்களும் இம்முறை சிறந்த இடங்களை பிடித்துள்ளன. இந்திய பல்கலைக்கழகங்கள் எவையும் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை என்றபோதிலும், அதன் 128 பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் 19 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பிடித்திருந்தன. ஆனால், கடந்த 10 வருடங்களில் இது 7 மடங்காக அதிகரித்துள்ளமை இந்திய பல்கலைக்கழகங்களின் முன்னேற்றப்பாதையை காட்டுகின்றன. இத்தகைய ஒரு பின்னணியில் நாம் இலங்கை பல்கலைக்கழகங்களின் நிலைமையை ஆராய்ந்துபார்ப்போமானால், இலங்கையின் எந்த பல்கலைக்கழகங்களும் முதல் 1000 க்குள் இடம்பிடிக்கவில்லை என்றபோதிலும், 5 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், சிலிட் மற்றும் களனி பல்கலைக்கழகம் ஆகியவையே அவை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எந்த பல்கலைக்கழகங்களும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. இலங்கையின் மூத்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் யாழ் பல்கலைக்கழகம் இருக்கின்றபோதிலும், இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் 7 ஆவது இடத்திலேயே யாழ் பல்கலைக்கழகம் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் வெளியான வெபோமெட்ரிக்ஸ் தரப்படுத்தலின்படி, கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், ருகுணு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் , மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவை முதல் இடங்களை பிடித்துள்ளன. கிழக்கு பல்கலைக்கழகம் 7 ஆவது இடத்திலும், யாழ் பல்கலைக்கழகம் 8 ஆவது இடத்திலும் இருக்கிறன. முன்னர் 13 ஆவது இடத்தில் இருந்த கிழக்கு பல்கலைக்கழகம் 7 ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கின்றமை கவனிக்கத்தக்கது. இது கடந்த சில வருடங்களில், ஆய்வு, கல்வி செயற்பாடுகள் மற்றும் இதர செயற்பாடுகளில் பல்கலைக்கழக நிர்வாகமும் கல்வியாளர்களும் சிறப்பாக செயற்பட்டிருப்பதை காட்டுகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரையில், மாணவர் வளமும், ஆசிரியர் வளமும் மற்றும் பௌதிக வளங்களும் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கின்ற நிலையிலும் புலம்பெயர் தமிழ் மக்களின் கணிசமான உதவிகள் கிடைகின்றநிலையிலும் சர்வதேச மற்றும் தேசிய ரீதியான தரப்படுத்தல்களில் தொடர்ந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பின்தங்கிய நிலையில் இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலைமைக்கான காரணங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய அவசியத்தை இது வெளிப்படுத்துகின்றது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தரை தெரிவுசெய்வதற்காக இன்று நடைபெறும் மதிப்பீடு முக்கியத்துவம்பெறுகின்றது. தமது அரசியல் மற்றும் சுய விருப்பங்களுக்கு இடமளிக்காமல் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தை அதன் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளின் ஊடாக முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்வதற்கும் பிராந்தியத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை வழங்கக்கூடியதுமான சரியான ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை மதிப்பீட்டு புள்ளிகளை வழங்கும் யாழ் பல்கலைக்கழக சபை உறுப்பினர்கள் கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் பல்கலைக்கழக தெரிவில் அரசியல் தலையீடுகள் அதிகளவில் இருந்தமை அனைவருக்கும் வெளிப்படையான ஒரு உண்மை. ஆகவே, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் தகைமை, மற்றும் அவர்கள் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆய்வு செயற்பாடுகளுக்கும் சமூக அபிவிருத்திக்கும் நலன்களுக்கும் எவ்வாறு கடந்த காலங்களில் பங்களித்திருக்கின்றார்கள் என்பதையும் அவர்களின் பற்றுறுதி, தலைமைத்துவப்பண்பு, சர்வதேச தொடர்புகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்து சரியான ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவோம். https://www.virakesari.lk/article/232755
  6. 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு இலங்கையை சமீபத்தில் தாக்கிய திட்வா புயல் புத்தளம் மாவட்டத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளை அழித்து, பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க வைத்துள்ளதாக மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் புத்தளம் மாவட்ட மக்களுடன் உரையாடலை மேற்கொண்ட போது இவ் விடயம் தெரியவந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இறால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் உதவும் என்று அமைச்சர் உறுதியளித்தார். "சமீபத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட எவரையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம்"என்று அவர் கூறினார். மேலும்,கடல் அரிப்பு இறால் வளர்ப்பையும் பாதித்துள்ளதாக தெரிய வந்தது.கடல் அரிப்பை தடுக்க புத்தளம் கடற்கரையில் ஒரு சுவரைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளைஅரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/600க்கும்-மேற்பட்ட-இறால்-பண்ணைகள்-பாதிப்பு/175-369246
  7. மண்சரிவு அனர்த்தங்கள்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் – 10 ஆசிரியர்கள் மரணம்! நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார். அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தின் தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் அனர்த்த நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார். இந்தநிலையில் மாத்தளை மாவட்டத்தில் 8,500 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்போது, அவர்கள் அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/மண்சரிவு-அனர்த்தங்கள்-க/
  8. 🏆 மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை! adminDecember 8, 2025 மன்னார் UCMAS மாணவர்கள் ஜோர்ஜியாவில் பட்டொளி வீசிப் பறந்தனர்! ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து கலந்துகொண்ட 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்! இந்தச் சாதனைப் பட்டியலில், மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் பங்கேற்று, இலங்கைப் பெயரையும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் பெருமையையும் உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனர். 🥇 வெற்றி வாகை சூடிய நட்சத்திரங்கள் மன்னார் மாவட்டத்தின் சார்பில் வெற்றி கிண்ணங்களைப் பெற்ற மாணவர்களில், வின்சென்ட் செஷான் ஜெத்னியல் (மன். புனித சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலை) மற்றும் ராஜநாயகம் ரியானா (தோட்ட வெளி தமிழ்க் கலவன் பாடசாலை) ஆகியோர் 1st Runner Up வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றனர். வின்சென்ட் செகைனா தியோரா (மன்னார் டிலாஷால் ஆங்கிலப் பாடசாலை) 2nd Runner Up வெற்றிக் கிண்ணத்தையும், வின்சென்ட் செலமியா (மன்னார் டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) 3rd Runner Up வெற்றிக் கிண்ணத்தையும் பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். 🌟 உலகக் கோப்பைப் போட்டியில் தலைமை! அத்துடன், அங்கு நடைபெற்ற UCMAS World Cup போட்டிக்குரிய அணியின் தலைவராக மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய மாணவன் வின்சென்ட் செஷான் ஜெத்னியல் தலைமை தாங்கி, வெள்ளிப் பதக்கத்தை (Silver Medal) இலங்கைக்குப் பெற்றுத் தந்துள்ளார். இது இலங்கைக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் கிடைத்த மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரமாகும். இச்சாதனை மாணவர்களுக்கு மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி திரு. நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியை திருமதி. யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதலே அடித்தளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இவர்கள் நால்வரும் மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர் யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இப்போட்டியில் பங்கு பற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/223804/
  9. வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை – து.கௌரீஸ்வரன் adminDecember 7, 2025 வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை ==================================================================================== இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் கிழக்கிலிருந்து பிரகாசித்த ஒரு மூத்த அரசியல்வாதியான திரு செ.இராசதுரை அவர்கள் 07.12.2025 ஆந் தேதி தமிழகத்தின் சென்னையில் இயற்கையடைந்தார் என்ற செய்தி இலங்கையில் அரசியல் பிரக்ஞையுடன் வாழ்வோரின் கவனத்தைப் பெறுவதாக இருக்கிறது. நாம் பிறந்து வாழும் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் நமது மூத்த தலைமுறைகளின் ஆதரவையும், அன்பையும் பெற்ற ஓர் அரசியல் தலைவனுக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு இக்குறிப்பையும் பதிவாக்க விரும்புகிறோம். இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தையும், இலங்கையின் மிதவாதத் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றையும் கற்றறிவதில் ஆர்வங் கொண்ட மாணவர்கள் கவனஞ்செலுத்த வேண்டிய ஓர் அரசியல் ஆளுமையாக, முன்னாள் மட்டக்களப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை அவர்கள் காணப்படுகின்றார் எனலாம். இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியல் செல்நெறியில் தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு முன்னும், பின்னுமான அரசியல் நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கு திரு செ.இராசதுரை பற்றிய கற்கை மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. வடக்கு இலங்கையிலிருந்து வித்தியாசங்கள் மிகுந்த கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் பிரதிநிதித்துவ சனநாயக அரசியலுக்கேயுரிய தன்மைகளுடன் தமிழ்த் தேசியவாத அரசியலை வேரூன்றச் செய்வதில் மிகுந்த பங்களிப்பை நல்கிய முழுநேர அரசியல்வாதியாக சுமார் மூன்று தசாப்த காலமாகத் திரு செ.இராசதுரை அவர்கள் செயலாற்றியுள்ளார். இவருக்குப் பின்னர் மிதவாத அரசியலைச் செய்யவல்ல அடுத்த தலைமுறையைச் சேர்ந்த முழுநேர அரசியல்வாதிகளை இவருடைய அரசியல் நடவடிக்கைகள் மட்டக்களப்பில் உருவாக்கியிருந்ததைப் பற்றியும் அறிய முடிகின்றது. மட்டக்களப்புத் தேர்தல் தொகுதிக்குள் வாழ்ந்த பல்லின, பல்சமூகத் தன்மைகளையும், பல்பண்பாடுகளையும் நன்கு உள்ளார்ந்து ஆய்ந்தறிந்து அதற்குத் தகுந்த வகையில் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த ஒரு பிரபுத்துவ அரசியல் ஆளுமையாக அவர் இயங்கியுள்ளார். இதனால் மூன்று தசாப்த காலம் தொடர்ச்சியாக மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பிரதிநிதியாக இவர் நாடாளுமன்றம் சென்றிருக்கிறார். அப்போதைய தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பிராந்தியத் தலைவராக இவர் மேற்கிளம்பித் தெரிந்துள்ளார். இவ்வாறு, சரி பிழைகளுக்கு அப்பால் ‘தமிழ்த் தேசியம்’ எனும் குடையின் கீழ் மிதவாத அரசியல் அணுகுமுறைமையாலும், தனது தலைமைத்துவத்தாலும் மக்களை அணிதிரட்டிய திரு செ.இராசதுரை அவர்களுக்கு, இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் மாறாத நோயாக இருந்து வரும் தனிநபர்கள் சிலருடைய ஆதிக்கமும், ஏகப்பிரதிநிதித்துவக் கற்பனையும் திட்டமிட்டு வஞ்சனையைச் செய்திருக்கிருக்கின்றமை பற்றி அறியக் கிடைக்கிறது. செ.இராசதுரை எனும் அரசியல்வாதிக்குச் செய்யும் வஞ்சகம் வடக்குக் கிழக்கு ஒருங்கிணைந்த தமிழ்த்தேசியவாதத்திற்கு நீண்ட கால நோக்கில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்பதைத் தெரிந்திருந்தும் அதிகாரத்தைத் தம்பிடிக்குள் வைத்திருப்பதற்காகப் பேராசை கொண்ட சிலர் எந்தவித தூரநோக்குகளுமின்றி இந்த வஞ்சனையைச் செயயத் துணிந்திருக்கிறார்கள். செ.இராசதுரைக்குச் செய்யப்பட்ட வஞ்சகம் முன்னணியிலிருந்த சில தமிழ் மிதவாதத் தலைவர்களின் உண்மையான தமிழ்த் தேசிய அக்கறையினைக் கேள்விக்குரியதாக ஆக்கியதுடன், ‘தமிழ்த்தேசியம்’, ‘தமிழர் விடுதலை’ என்பவை நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் உபாயமாகவும், ஒரு கோசமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்ற கருதுகோளையும் வலுப்படுத்தி நிற்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் அதிகாரத்தைக் கைப்பற்றி அதைத் தக்க வைக்க முயற்சிக்கும் தரப்பினர் தமக்கு ஒத்துவராதவர்களை உள்ளிருந்து வெளியேற்றுவதற்காக உருவாக்கிய ‘துரோகியாக்கல்’ என்ற உத்தியின் துணையுடன் திரு செ.இராசதுரை அவர்களுக்கு எதிரான வஞ்சகம் திட்டமிடப்பட்டிருப்பதைப் பற்றி அறியவும் முடிகிறது. இது இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் ‘துரோகியாக்கல்’ எனும் உத்தி எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதைப் பற்றிக்; கற்றறிய உதவுவதாகவும் இருக்கிறது. 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு செ.இராசதுரை அவர்களைத் தோல்வியுறச் செய்வதற்கான வேலைத் திட்டங்கள் உள்ளிருந்தே நடைபெற்றமை பற்றி அறியக் கிடைக்கிறது. இதற்காக மட்டக்களப்பின் இரட்டை அங்கத்தவர் தன்மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் சவால்கள் மிகுந்த இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு வாக்காளர்கள் செ.இராசதுரை அவர்களைக் கைவிடவில்லை, அவரை வெற்றி பெறச் செய்தார்கள், ஆனாலும் செ.இராசதுரைக்கு எதிரான உள்ளகப் ‘பனிப்போர்’ நின்றுவிடவில்லை. தனது தரப்பினருடன் பனிப்போருக்குச் செல்லாமல் அவர்கள் எதிர்பார்த்த ‘துரோகியாக்கல்’ சூழ்ச்சிக்குள் அகப்பட்டுக் கொண்டார். இத்தோடு தமிழ்த் தேசிய அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவே அவரது வரலாறு தெரிகிறது. அவர் வெளியேறியதன் பின்னர் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக ஒரு ‘கட்சியையோ!’, ஒரு ‘அமைப்பையோ!’ உருவாக்கியதாக அறிய முடியவில்லை, இதனால் எதையும் பகுத்தறிந்து பார்க்கத்தகுந்த மட்டக்களப்பு மக்களின் மனதில் அவர் நிலையாக வாழும் தன்மையினைப் பெற்றுக் கொண்டார் எனலாம். திரு செ.இராசதுரையின் வெளியேற்றம், மிதவாதத் தமிழ்த் தேசிய அரசியலில் வெளித் தோற்றத்திற்கு நிறுவனத் தன்மை காணப்பட்டாலும் அதனுள் தனிநபர்கள் அல்லது குழுக்களின் ஆதிக்கமும், செல்வாக்குகளும், சர்வாதிகாரப் போக்குகளும் மேலோங்கிய நிலைமையின் எதார்த்தத்தை உணரச் செய்தது. இத்தோடு மிதவாதத் தமிழ்த் தேசியத் தலைமைகளிடையே பன்மைத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பின்வாங்கும் தன்மை, உள்ளார்ந்த சனநாயகத்தின் பலகீனம், கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட குறுகியகால, நீண்டகால வேலைத் திட்டங்களில் ஆர்வமின்மை ஆகியவற்றினையும் வெளிப்படுத்தி நின்றது எனலாம். தமிழ்த் தேசியவாத அரசியலில் எதிர்மறை நோக்குடன் ‘பிராந்தியவாதத்தை’ வளர்த்தெடுக்க முனைவோருக்கான வாய்ப்புகளை செ.இராசதுரைக்கு நிகழ்த்தப்பட்ட வஞ்சனையும் அதன் விளைவுகளும் நன்றாக வழங்கி வந்துள்ளன எனலாம். து.கௌரீஸ்வரன், 07.12.2025 https://globaltamilnews.net/2025/223801/
  10. வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன் அனர்த்த காலங்கள் அவற்றுக்கேயான புதிய பேச்சாளர்களை வெளிக் கொண்டு வரும். இறுதிக்கட்டப் போரின்போது வன்னி கிழக்கில் வாழ்ந்த மக்களின் சார்பாக குரல்தரவல்ல அதிகாரியாக மருத்துவர் சத்தியமூர்த்தி காணப்பட்டார். அப்படித்தான் அண்மை ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுக்கும் ஒரு “பப்ளிக் இன்ரலெக்சுவலாக” பேராசிரியர் பிரதீபராஜா மேலெழுந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 03.09.2025 புதன்கிழமை அவர் முகநூலில் எதிர்வரும் மாதங்களுக்கான வானிலை மாற்றங்கள் குறித்து நீண்ட முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நொவம்பர் மாத நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் ஏற்படக்கூடிய தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்கள் ஆகவோ அல்லது புயல்களாகவோ மாறலாம் என்பதை கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்னறிவித்திருந்தார். அரச வளிமண்டலவியல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வானிலை மாற்றங்களை அறிவிக்கும். வரக்கூடிய ஆபத்துக்களையும் முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கும். ஊடகங்கள் அவற்றை உடனுக்குடன் அறிவித்து மக்களை எச்சரிக்கை செய்யும். இம்முறை டித்வா புயல் தாக்கப்போவது குறித்து அரச வளிமண்டலவியல் திணைக்களம் பொருத்தமான எச்சரிக்கைகளை முன்னறிவிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. புயல் அனுராதபுரத்தை அடையும் வரையிலும் அதுதொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பிரதீபராஜா இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களைக் குறித்து ஏற்கனவே சில நாட்களுக்கு அல்லது பல நாட்களுக்கு முன் எச்சரிப்பதுண்டு. அவருடைய எச்சரிக்கைகள் சில சமயங்களில் பிழைக்கலாம். மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம். அதனால் சில சமயங்களில் மீனவர்களுக்கோ விவசாயிகளுக்கோ அல்லது ஏனைய துறையினருக்கோ நட்டங்கள் ஏற்படலாம். ஆனால் அவர் எதிர்வு கூறியதுபோல இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்து அதனால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதங்களோடு ஒப்பிடுகையில், வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பொருட்சேதம் பொருட்படுத்தத்தக்கது அல்ல. மழைக்காலங்களில் மலைகளில் மண் சரிவு ஏற்படுவது வழமை. ஒவ்வொரு பருவ மழைக்கும் மலையக மக்கள் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள். மழை வீழ்ச்சி அதிகரிக்கும்போது,மண் சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வாழும் மக்களை எச்சரிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உண்டு. அந்த மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. இக்கட்டுரையில் முன் கூறியதுபோல வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சிரமங்கள், நட்டங்களை விடவும் அந்த முன்னெச்சரிக்கையின்படி நிகழும் அனர்த்தத்தால் இழக்கும் உயிர்களின் நட்டம் பெரிது. நாடு இப்பொழுது அவ்வாறான உயிர்ச் சேதத்தைத்தான் எதிர்கொண்டிருக்கிறதா?. ஒரு புயல் தாக்கப் போகிறது என்பதனை பிரதீபராஜா ஏற்கனவே தெளிவாகக் கூறியிருந்தார். அதை அவர் வழமைபோல தனது முகநூல் பக்கத்தில் மட்டும் பகிரவில்லை. இந்தமுறை வடமாகாண ஆளுநர் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு உத்தியோகபூர்வமாக அழைத்து உரையாடியுள்ளார். அந்தச் சந்திப்பில் சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பிரதீபராஜா தெரிவித்த தகவல்கள் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்தன. அதன்படி 130 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பேரிடர் நாட்டை நெருங்கி வருவதனை அவர் முன்கூட்டியே எச்சரித்திருந்தார். இந்த விடயத்தில் இப்போதுள்ள வடமாகாண ஆளுநர் வேதநாயகன் பாராட்டப்பட வேண்டியவர். ஏனென்றால் அவருக்கு முன் இருந்த ஒரு பெண் ஆளுநர் பிரதீபராஜாவை பொருட்படுத்தவில்லை. அந்தப் பெண் ஆளுநரின் காலத்தில் நடந்த ஒரு மெய்நிகர் சந்திப்பில் பிரதீபராஜா தனது கருத்தைக் கூற முற்பட்டபோது ஆளுநர் அவரைப் பொருட்படுத்தவில்லை. இதுதொடர்பாக அரச வளிமண்டலவியல் திணைக்களங்கள் தரும் தகவல்களைத்தான் நாங்கள் உத்தியோகபூர்வமாக எடுத்துக்கொள்ள முடியும். உங்களுடைய தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற பொருள்பட அவர் பிரதிபராஜாவை அவமதித்திருக்கிறார். ஆனால் இம்முறை டித்வா புயலுக்கு முன்னரே வடமாகாண ஆளுநர் பிரதீபராஜாவுக்கு உரிய கௌரவத்தை கொடுத்து அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். பிரதீபராஜா எச்சரித்ததை போலவே புயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பிரதீபராஜாவைப் போலவே சென்னையை மையமாகக் கொண்ட செல்வக்குமார் என்ற வானிலை முன்னறிவிப்பாளரும் இலங்கையை நோக்கி முன்னெச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார். “வானிலை அறிவியல்” என்ற யூடியூப் தளத்தில், செல்வகுமார் இலங்கைக்கான வானிலை அறிக்கை என்ற தலைப்பில் ஒரு காணொளியை 24ஆம் திகதி வெளியிட்டார். நவம்பர் 26 தொடக்கம் 28 வரையிலுமான மூன்று நாட்களில் முன்னப்பொழுதும் காணாத பெருமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தார். ( https://youtu.be/p-ayF49Ov7Q?si=lf20WuDgEkL-hr0R ) இந்த இயற்கை அனர்த்தத்தில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு மக்கள் கால்நடைகளையும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் அவசர கால நிலையை பிரகடனம் செய்ய வேண்டிவரும் என்பதையும் செல்வகுமார் முன்கூட்டியே மிகச்சரியாக ஊகித்திருந்தார். தன்னுடைய எச்சரிக்கையை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அந்த காணொளியில் அவர் கேட்டிருந்தார். அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் மிகைப்படுத்தல்கள் இருந்திருக்கலாம். ஆனால் இழக்க கொடுத்தவர்களின் நோக்குநிலையில் இருந்துபார்த்தால் அவை மிகைப்படுத்தலாகத் தெரியாது. அதாவது நாட்டுக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு புவியியல் துறை பேராசிரியரும் நாட்டுக்கு வெளியே அயலில் தமிழகத்திலிருந்து ஒரு துறைசார் வல்லுநரும் எச்சரித்த போதும்கூட அந்த எச்சரிக்கைகள் சம்பந்தப்பட்டவர்களின் காதில் விழவில்லை. அதற்குக் காரணம் என்ன? பொதுவாக சமூக வலைத்தளங்களில் யூடியூப்களில் வரும் செய்திகள், தகவல்கள், எச்சரிக்கைகள் தொடர்பாக பொருட்படுத்தாத ஒரு பொதுப் புத்தி வளர்ந்து வருகிறது. யூடியூப் தலைப்புக்கள் அல்லது எச்சரிக்கைகள் மிகைப் படுத்தப்பட்டவை என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு. வியூவர்ஸை கவர்ந்திழுப்பதற்காக கவர்ச்சியான தலைப்புகளைப் போடும் யூடியூப் பாரம்பரியமானது பாரதூரமான விடையங்களின் மீதான சீரியஸான கவனிப்பைக் குறைத்து விடுகிறது. பல யூடியூப்களில் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இருப்பதில்லை. இதனால் தலைப்பைக் கண்டு உள்நுழைந்து ஏமாற்றமடைந்த வியூவர்ஸ் குறிப்பாக அறிவுதெளிந்த, புத்திசாலித்தனமான வியூவர்ஸ் மீண்டும் ஒரு தடவை யூடியூப்களின் கவர்ச்சியான தலைப்புகளை, எச்சரிக்கைகளைக் கண்டு ஏமாற விரும்புவதில்லை. இந்த யூடியூப் பண்பாடு, வானிலை முன்னெச்சரிக்கை போன்ற விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. யூடியூப் பார்வையாளர்கள் மட்டுமல்ல ஏனைய சமூக வலைத்தள நுகர்வோரும் அவ்வாறுதான். எல்லாவற்றையும் ஸ்குரோல் பண்ணிக் கடக்கும் ஒரு சமூக வலைத்தளச் சூழல் வளர்ந்து விட்டது. உண்மையான எச்சரிக்கை எது உண்மையான ஆபத்து எது என்பதனை பகுத்தறிய முடியாத அளவுக்கு சமூக வலைத்தளச் சூழல் மேலோட்டமானதாக,அதிகம் ஜனரஞ்சகமானதாகக் காணப்படுகிறது. பிரதீபராஜாவையும் செல்வகுமாரையும் தொடர்ந்து அவதானித்துவரும் சீரியசான சமூக வலைத்தளப் பாவனையாளர்கள் அவர்களுடைய எச்சரிக்கைகள் முன்னுணர்த்தும் ஆபத்துக்களை விளங்கிக் கொள்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரட்ன கூறுவதுபோல,இலங்கை அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால், அழிவை ஒப்பீட்டளவில் குறைத்திருக்கலாமா ? நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரட்ன,நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, கம்பளை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்கும், உயிரிழப்புகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார். அது இயற்கை அனர்த்தம் என்ற போதிலும் உயிரிழப்புகள் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணம், உரியநேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்படாமையே என்றும் கூறினார். வழக்கமாக 160 மில்லிமீற்றர் மழை பெய்தாலே மகாவலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உண்டு. ஆனால், இம்முறை 400 மில்லிமீற்றர் மழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், மக்களுக்கு அதுகுறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், குறிப்பாக, நவம்பர் 27ஆம்திகதி ஏற்படவுள்ள ஆபத்தை உணர்ந்து, 26ஆம் திகதி நடைபெறவிருந்த உத்தியோகபூர்வ கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், சாதாரண மக்களுக்கு அந்த ஆபத்துக் குறித்து அறிவிக்கப்படாததற்கு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களே பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டினார். நாவலப்பிட்டி நீர்ப்பாசனத் திணைக்கள உபஅலுவலகம் நீர்மட்டத்தை அளவிட்டிருந்தும்,அந்தத் தகவலை கம்பளை மக்களுக்குப் பரிமாறத் தவறியதே பல உயிர்கள் பறிபோகக் காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறினார். மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கொத்மலை அணை திறக்கப்பட்டமை நிலைமையை மேலும் மோசமாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டினார் புயலுக்கு பின்னரான உரையாடல்கள் அவ்வாறு அரசு திணைக்களங்களின் மீதான விமர்சனங்களாகவே காணப்படுகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பகுதியினர் அரசு திணைக்களங்களில் பிழை பிடிக்கிறார்கள் என்று அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் விரிவுரையாளர்கள் நியாயம் கூறுகிறார்கள். உண்மை. பேரியற்கையோடு ஒப்பிடுகையில் மனிதர்கள் அற்பமானவர்கள். சீனர்களுடைய பாரம்பரிய ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளை இங்கு சுட்டிக்காட்டலாம். அந்த நிலக் காட்சிகளில் இயற்கை மிகப் பிரமாண்டமாக வரையப்படும். மனிதர்களோ மிகச் சிறிய,அற்ப புள்ளிகளாக காட்டப்படுவார்கள். எனவே பேரியற்கையின் போக்கை துல்லியமாக எதிர்வுகூறுவது கடினம்தான். ஆனால் அவ்வாறு சில துறைசார் நிபுணர்கள் எதிர்வுகூறிய போதிலும் அதை சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் கவனத்தில் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்குமா? முன்னெச்சரிக்கை மிக்க வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நட்டத்தை விடவும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இடர் பெரியது.இழப்பு பெரியது. துயரம் பெரியது. https://www.nillanthan.com/7984/
  11. மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன் டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை பெரிய அளவில் உத்தியோகபூர்வமாகத் தடுக்கவில்லை. அதனால் மாவீரர் நாள் தாயகத்தில் பரவலாகவும் செறிவாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லாத் துயிலும் இல்லங்களுக்கும் இப்பொழுது ஏற்பாட்டுக் குழுக்கள் உண்டு. மேலும் இம்முறை உள்ளூராட்சி சபைகளும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டின. புதிய உள்ளூராட்சி சபைகள் இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. இம்முறை மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் உள்ளூராட்சி சபைகள் கணிசமான அளவுக்குப் பங்களிப்பை நல்கின. மாவீரர் நாளையொட்டி நகரங்களை அலங்கரிப்பது,தெருக்களை அலங்கரிப்பது, முதலாக பல்வேறு விடயங்களிலும் உள்ளூராட்சி சபைகள் ஆர்வம் காட்டின. மழை;வெள்ளம் ;புயல் எச்சரிக்கை எனினும் மக்கள் பரவலாக துயிலும் இல்லங்களை நோக்கி வந்தார்கள். பெரும்பாலான துயிலும் இல்லங்களில் மக்கள் குடைகளைப் பிடித்தபடி அஞ்சலி செய்தார்கள். மழை சற்றுக் கடுமையாக இருந்த இடங்களில் சுடருக்குக் குடை பிடித்து அதைப் பாதுகாத்துக் கொண்டு நனைந்தபடி நின்றார்கள். குறிப்பாக ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் சுடர் அணையக் கூடாது என்பதற்காக தமது தலைக் கவசத்தை சுடருக்கு மேல் பிடித்து சுடரைப் பாதுகாத்ததாக ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார். இவ்வாறு பரவலாகவும் செறிவாகவும் பெருமடுப்பிலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டிருந்த ஒரு பின்னணிக்குள், அதுதொடர்பான உரையாடல்களின் மீதான கவனக் குவிப்பை புயல் திசை திருப்பியது. மாவீரர் நாளுக்காக அலங்கரிக்கப்பட்ட சிவப்பு மஞ்சள் கொடிகள் நனைந்து தொங்கிய தெருக்களைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்தது. மாவீரர் நாளுக்காக கட்டப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகள் கழட்டப்படுவதற்கு முன்னரே புயல் நாட்டுக்குள் வந்து விட்டது. புயலின் அகோரம் காரணமாக ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் கவனக்குவிப்பு மாவீரர் நாளில் இருந்து புயலை நோக்கித் திரும்பியது. புயல் வடக்கு கிழக்கில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு உயிரிழப்புகளைத்தான் ஏற்படுத்தியது. அதிக உயிரிழப்பு தெற்கில்தான். வடக்கு கிழக்கில் உட்கட்டுமானங்கள் சிதைவடைந்தன. மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் துண்டிக்கப்பட்டது; மன்னாரில் ஆயிரக் கணக்கில் மாடுகள் இறந்தன. எனினும் வடக்கில் உயிரிழப்பு என்று பார்த்தால் மொத்தம் நான்கு பேர்தான். ஒருவர் தெற்கு நோக்கி பேருந்தில் சென்ற போது பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் உயிரிழந்தவர். மற்றவர் கடற்தொழிலாளி. ஏனைய இருவரும் வவுனியாவிலிருந்து அவர்கள் பயணம் செய்த வாகனம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்கள். ஒருபுறம் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி எதிர்பாராத திசைகளில் இருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்தன. இன்னொரு புறம் வணிகர்களில் ஒருபகுதியினர் மனிதாபிமானமாக நடந்து கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களை நோக்கிப் பல்வேறு தரப்புகளும் உதவிக்கரம் நீட்டின. உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்,மத நிறுவனங்கள்,புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களும் உதவிகளைச் செய்தனர். நாடுகளைப் பொறுத்தவரை முதலில் உதவியது இந்தியா. அதன் பின் அமெரிக்கா, பாகிஸ்தான், மாலை தீவுகள், சீனா உட்பட பெரும்பாலான நாடுகள் உதவி புரிந்தன. ஆனால் உள்ளூரில், வணிகர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினார்கள். மரக்கறி,முட்டை போன்றவற்றின் விலைகளை உயர்த்தினார்கள். புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் யாழ்ப்பாண நகரத்தின் பெரும்பாலான சிலிண்டர் கடைகளில் மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். திடீரென்று சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டது. பாதைகள் அடைபட்ட காரணத்தால் சிலிண்டர்கள் வரவில்லை என்று ஒரு விளக்கம் சொல்லப்பட்டது. அது உண்மையல்ல. ஒவ்வொரு நாளும் தென்னிலங்கையில் இருந்து வரும் சிலிண்டர்களைத்தான் கடைகளில் வைத்து விற்கிறார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தேவையான குறிப்பிட்ட தொகை சிலிண்டர்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அதுதான் வியாபார வழமை.பாதைகள் அடைபட்டதைச் சாட்டாக வைத்து அவர்கள் செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா? சிலிண்டர்களுக்கு நிர்ணய விலை உண்டு. விலை கூட்டி விற்க முடியாது. ஆனால் மரக்கறிகளுக்கு அப்படியல்ல. மரக்கறிகளை விரும்பின விலைக்கு விற்றார்ர்கள். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமான விலைகள். பச்சை மிளகாயில் இருந்து இஞ்சி வரை, விலை சடுதியாக உயர்ந்தது. வெள்ளம் வடிந்த பின்னரும், புயல் ஓய்ந்த பின்னரும், மரக்கறிகளின் விலை குறையவில்லை. ஒரு பகுதி மரக்கறி வியாபாரிகளின் இதயம் இளகவில்லை. மரக்கறிகள் மட்டுமல்ல முட்டை, கோழி இறைச்சி போன்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் பேரண்ட்ஸ் வகை இறைச்சிக் கோழிகள் கிடைக்கவில்லை. ஏன் என்று கேட்டபோது தெற்கில் இருந்துதான் அவை வருகின்றன. பாதைகள் அடைபட்டதால் அவை வரவில்லை என்று சொன்னார்கள். புயலுக்கு முன் முட்டையின் விலை 30 ரூபாய். புயலோடு முட்டை விலை 36ரூபாய். ஏனென்றால் முட்டை ஒவ்வொரு நாளும் வவுனியாவுக்கு அப்பாலிருந்து வருகிறது என்று சொன்னார்கள். ஒரு முட்டை வியாபாரி தெற்கில் தனக்கு வழமையாக முட்டை சப்ளை செய்யும் மொத்த வியாபாரி அனுப்பிய வாட்சப் ஒளிப்படம் ஒன்றைக் காட்டினார். அதில் கோழிப் பண்ணையில் இருந்த கோழிகள் புயலில் அடிபட்டுச் செத்துக் கிடந்தன. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. புயல் வந்து, வெள்ளம் பெருகி பாதைகள் தடைபட்டதும் மரக்கறிகளின் விலை,முட்டை விலை உயர்ந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு. பேரன்ட்ஸ் வகைக் கோழிகள் கிடைக்கவில்லை. அப்படியென்றால் வடக்கின் பொருளாதாரம் மேற்கண்ட பொருட்களுக்காக தெற்கில் தங்கியிருக்கின்றதா? வடக்கிலிருந்து தெற்குக்கான பாதைகள் அடைபட்டால் யாழ்ப்பாணத்தவர்களுக்கு முட்டை, பச்சை மிளகாய், பேரன்ட்ஸ் கோழி இறைச்சி போன்றவை கிடைக்காதா? புயல் எழுப்பிய கேள்விகளில் இது முக்கியமானது. மற்றொரு கேள்வி, தொலைத் தொடர்பு தொடர்பானது. தமிழ் மக்களில் அதிகமானவர்கள் குறிப்பாக கிராமப் பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துவது டயலக் தொலைபேசி அட்டைகளைத்தான். ஆனால் புயலின் போதும் புயலுக்குப் பின்னரும் டயலக் சிம்கள் பெரும்பாலும் வேலை செய்யவில்லை. அந்த சிம்களை பயன்படுத்திய பலர் தொடர்புகளை இழந்து தவித்தார்கள். அனர்த்த காலங்களில் தொலைத் தொடர்பும் ஓர் அத்தியாவசிய சேவைதான். தொலைதொடர்பு இல்லையென்றால் ஆபத்தில் இருப்பவர்கள் தனித்து விடப்படுவார்கள். இது கடந்த புயல் நாட்களில் நடந்தது. அது இயற்கை அனர்த்தம் மட்டுமல்ல தொலைத்தொடர்பு அனர்த்தமும்கூட. டயலக் கொம்பனி உட்பட பெரும்பாலான தொலைத்தொடர்புக் கொம்பெனிகள் சாதாரண மக்களிடம் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி பணத்தை வசூலிக்கின்றன இந்த குற்றச்சாட்டு பரவலாக உண்டு. சிம்மை விற்கும் பொழுது அல்லது சேவையை தொடங்கும் பொழுது நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி அதன் மூலமே அப்பாவி மக்களிடமிருந்து சிறுகச்சிறுக பணத்தைச் சுரண்டுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு. கேள்வி கேட்காத அப்பாவியான ஒரு வாடிக்கையாளரிடம் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ரூபாயை சுரண்டினால் கூட லட்சக்கணக்கானவரிடம் இருந்து ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான ரூபாய்களைச் சுரண்ட முடியும். இவ்வாறு ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் இலக்காகியிருந்த தொலைதொடர்புக் கொம்பனிகள் குறிப்பாக டயலாக் கொம்பனி இம்முறை புயலோடு அதன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது. இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் டயலக் தொலைத்தொடர்பு சீராகவில்லை. பலருடைய டயலாக் இன்டர்நெட் இணைப்பு மோசமாக இருக்கிறது. உயிரிழந்தவர்கள்,பாதிக்கப்பட்டவர்களில் ஒருபகுதியினர் இவ்வாறு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறமுடியும். டயலக் கொம்பனி அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். புயல் தணிந்த காலையில், யாழ்ப்பாணத்தவர்கள் பொருட்களை வாங்க தெருக்களில் தயங்கித் தயங்கி இறங்கிய வேளையில், திருநெல்வேலியில் ஒரு கொலை நடந்தது. கொலைக்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகமானவர்கள் இளவயதினர். சம்பவம் நடந்தது அதிகம் சனப்புழக்கமுள்ள ஓரிடம். திருநெல்வேலி சந்தைக்கு அருகே ஆடியபாதம் வீதி. ஒரு நபரை மூன்று பேர் துரத்தி துரத்தி வெட்டுகிறார்கள். அப்பகுதியில் நின்றவர்கள் அதில் சம்பந்தப்படாமல் விலகி விலகி நிற்கிறார்கள். யாருமே கொல்லப்பட்டவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. அங்கு கிடைத்த சிசிடிவி கமரா பதிவுகளின்படி அங்கு நின்ற அனைவருமே பார்வையாளர்களாக நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் அதைத் தடுக்கும் சக்தியற்றவர்களாக, அதைத் தடுக்கும் துணிச்சலற்றவர்களாக, தங்களைத் தாங்களே தற்காத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்பவர்களாகத்தான் அவர்கள் காணப்பட்டார்கள். இத்தனைக்கும் ஒரு காலம் தன் வீரத்துக்கும் தியாகத்துக்குமாக உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மக்கள் கூட்டம். புயல் தணிந்த வேளை நடந்த கொலை அது. அந்தக் கொலையை விடக் கொடுமையானது, அதை கையாலாகாத சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம். அதேசமயம் அதே மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்துதான் இன்னொரு தொகுதி இளையவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கிப் போனார்கள். ஆபத்தை எதிர்கொண்டு நனைந்து நனைந்து, பாதிக்கப்பட்ட மக்களை, தனித்து விடப்பட்ட மக்களைத் தேடித்தேடி உதவினார்கள். இந்த இரண்டுமே ஒரே சமூகத்தில் காணப்படும் ஒன்றுக்கொன்று முரணான காட்சிகள். ஆனால் இதற்குள்தான் இருக்கிறது தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் யதார்த்தம். ஒருபுறம் தானும் தன்பாடும் என்று கூட்டுப் புழுக்களாகப் பதுங்க முற்படும் கூட்டு மனோநிலை. இன்னொருபுறம் மழை,வெள்ளம்,புயல் என்பவற்றைத் தாண்டி ஆபத்தில் சிக்கியிருக்கும் மக்களைத் தேடிச் செல்லும் இளையோர் கூட்டம். சரியான பொருத்தமான தலைமைகள் இந்த இளையவர்களை ஒருங்கிணைத்து இலட்சிய வேட்கை கொண்டவர்களாக வார்த்தெடுத்தால், அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்பதைத்தான் டித்வா புயலுக்கு பின்னரான மனிதாபிமானச் சூழல் நமக்கு உணர்த்துகின்றது. https://www.nillanthan.com/7971/
  12. பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல - ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவால் நாட்டின் நிர்வாக அதிகாரத்தை கையாள இடமளிக்க முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முரண்பாடான இந்த விடயத்திற்கு தீர்வு காண ஜனாதிபதி உடனடியாக கட்சித் தலைவர்களை அழைத்து முடிவை எடுக்க வேண்டும். இப்போது அரச அதிகாரம் ஜனாதிபதி அலுவலகத்தாலோ அல்லது பிரதமர் அலுவலகத்தாலோ நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு – 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியல் குழுவால் தான் தற்போது நாட்டின் நிதி உள்ளிட்ட அனைத்து நிர்வாகங்களும் தீர்மானிக்கப்படுகிறது. இதனை அனுமதிக்க முடியாது. பாராளுமன்ற அதிகாரத்தை இழிவுப்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளை தடுக்க எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை தீத்வா சூறாவளி அழிவுகளில் இருந்து மீள அரசாங்கத்திற்கு அனுபவம் குறைவாகவே உள்ளது. எனவே பேரிடர் மேலாண்மை மற்றும் புனரமைப்புக்கான கண்காணிப்புக் குழுவை பாராளுமன்றத்தால் நியமிப்பது பொருத்தமானது. அதன் தலைமைப் பதவியை அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வகிக்க வேண்டும். அத்துடன் புனரமைப்பிற்கு வழிகாட்டுவதற்காக, அனைத்து மத மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்கும் பிரமுகர்களை கொண்ட ஒரு சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். இந்தக் குழுவின் முதல் கூட்டத்திற்கு நாட்டின் நான்கு மகாநாயக்க தேரர்கள் தலைமை தாங்கினால், அது ஒரு பெரிய பலமாக இருக்கும். ஏனைய பிரதான மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுச் சமூகத்தில் ஒரு நல்ல நிலைப்பாடு உருவாகும். பேரிடருக்குப் பிறகு, 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால், பேரிடர் பணிகளை ஒப்படைக்கப்பட்ட அனைத்துத் திணைக்களங்கள், அரச பிரிவுகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் செயலற்றவர்களாகி விட்டனர். பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, உதவிகளை வழங்குவதில் அரசியல்மயமாக்கலைச் செய்ய முயற்சிக்கிறது. மற்றொரு சமாந்தரமான நிவாரண நிதியையும் நிறுவியும் உள்ளது. இந்த அழிவை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் ஒரு வியூகம் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும். இன்னும் யார் இறந்தார்கள்? யார் காணாமல் போனார்கள்? என்று கூட முழுமையாக கண்டறியப்படவில்லை என்றார். https://akkinikkunchu.com/?p=351532
  13. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விரைவில் விசேட 'ஒப்பரேஷன்' - அமைச்சர் சந்திரசேகர் 07 Dec, 2025 | 11:15 AM வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல் வளங்களை அள்ளிச் செல்கிறார்கள். இது நியாயமற்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்த விசேட 'ஒப்பரேஷன்' ஒன்று முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் அதில் மேலும் கூறுகையில், நாட்டில் ஒரு பெரும் வெள்ள அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அனர்த்தத்தால் எமது மீனவர்களும் மோசமாக பாதிக்கப்பட்டிருகின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா ஒரு புறம் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றது. அது எமக்கு ஆறுதலைத் தருகிறது. ஆனால் மறுபுறத்தில் இடர் நிலைமையையும் கவனத்தில் கொள்ளாது இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக எமது கடற்பரப்புக்குள் பிரவேசித்து எமது கடல் வளங்களைச் சூறையாடிச் செல்கின்றார்கள். இது நியாயமான ஒரு செயற்பாடு அல்ல. இது குறித்து நாங்கள் பல தடவைகள் பல தரப்புக்களுடனும் பேசிவிட்டோம். ஆனால் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக இல்லை. மாறாக, இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துக்கொண்டே போகிறது. தொப்புள்கொடி உறவுகள் என்கிறார்கள். ஆனால், அந்த தொப்புள்கொடி உறவுகளின் வளங்களை அள்ளிச் செல்வது சரியானதா? தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்து, எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்தி எமது கடல் வளம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுடன் பேசவேண்டும். இவ்வாறு இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடரும் பட்சத்தில் அதனைத் தடுப்பதற்கு எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்து 'விசேட ஒப்பரேஷன்' ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/232650
  14. அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு 07 December 2025 அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களின் அறிவித்தல்கள் அனுப்படுகின்றமை தொடர்பில் எமது செய்தி சேவை வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மத்திய, ஊவா மாகாணம் உள்ளிட்ட தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில், எமது செய்திச் சேவை, அமைச்சரை தொடர்பு கொண்டு வினவியது. இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர், மும்மொழிக் கொள்ளையைப் பின்பற்றுமாறு அனைத்து அரச அலுவலகங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். எனினும், கடந்த நாட்களில் அதனைப் பின்பற்றியிருக்கவில்லை என்றால் அது குறித்து ஆராய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். அதற்கமைய நாளை முதல் அனைத்து அரச அலுவலகங்களிலும் வெளியிடப்படும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்பது தொடர்பில், தாம் பணிப்புரை விடுப்பதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/434640/all-government-announcements-are-mandatory-in-all-three-languages-action-announcement
  15. பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது adminDecember 7, 2025 யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பூங்காவின் (Old Park Jaffna) நிலம், அதிகாரிகளின் குறுகிய சிந்தனையாலும், அரசியல் தலையீடுகளாலும் குதறப்படுவதாக, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். 🏛️ முக்கியக் குற்றச்சாட்டுகளும் கவலைகளும்: பதவிப் பலி: பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினாலேயே பழைய பூங்கா இன்று அழகு இழந்து, அதன் மதிப்பு சிதைக்கப்படுவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார். உள்ளக விளையாட்டரங்கு சர்ச்சை: பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கும் விடயம் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து, தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர் நீதிமன்றத்தையும்நாடியுள்ளனர். பதிலீடற்ற பெரும் சொத்து: பூங்காவின் தொன்மையையும், பெறுமதியையும் உணராமல், ‘அபிவிருத்தி’ என்ற போர்வையில் இத்தகைய பதிலீடற்ற பெரும் சம்பத்துக்கள் பறிபோவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் தன்னிச்சையான அதிகாரம்: ஆட்சிக்கு வரும் அரசுகளும், ஆளுநர்களும் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தங்கள் தனிப்பட்ட அபிலாசைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் அதிகாரங்களைத் தன்னிச்சையாகப் பிரயோகிப்பதாகவும், அதனை அதிகாரிகள் ஆட்சேபணையின்றி நிறைவேற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 🛑 மாவட்டச் செயலராகச் சிவபாலசுந்தரத்தின் நேரடி நடவடிக்கை: யாழ்ப்பாண மாவட்டச் செயலராக அவர் பணியாற்றிய 14 மாத கால அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஆளுநரின் ஆக்கிரமிப்பு முயற்சி: 2023ஆம் ஆண்டுப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, அப்போதைய ஆளுநர் பழைய பூங்காவின் ஒரு பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து, ஏற்கனவே இருந்த ஆளுநர் அலுவலகத்தோடு புதிய கட்டுமானங்களையும் உருவாக்கியிருந்தார். மேலும், காணியைப் பிரித்து வேலியிட்டு அது ஆளுநர் அலுவலகத்திற்குரியது என அத்துமீறலையும்செய்திருந்தார். கனரக இயந்திரங்கள் வெளியேற்றம்: ஒரு அதிகாலையில், மாநகர சபைக்குரிய கனரக இயந்திரங்கள் தனது அனுமதியின்றி ஆளுநரின் உத்தரவின்பேரில் பூங்காவுக்குள் வந்தபோது, உடனடியாக மாநகர ஆணையாளருடன் தொடர்புகொண்டு, “இது அரசாங்க அதிபரின் காணிக்குள் எனது அனுமதியில்லாமல் எவரும் எந்த வேலையும் செய்ய அனுமதியில்லை” என்று கூறி இயந்திரங்களை வெளியேறப் பணித்தார். அபிவிருத்தி ஒப்புதலை நிராகரிப்பு: நடைபயிலும் சாலை அமைக்கும் நோக்கில், ஆளுநர் நேரடியாகத் தொடர்புகொண்டு தடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டபோதும், பழைய பூங்கா அபிவிருத்தி பற்றித் தீர்மானிக்க வேண்டியவர் மாவட்டச் செயலரே என்றும், அதன் முன்மொழிவுகள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆய்விலேயே உள்ளது என்றும் ஆளுநருடன் விவாதித்தார். இறுதிவரை அதற்கான ஒப்புதலை அவர் வழங்கவில்லை, குறித்த வேலையும் நடைபெறவில்லை. 💔 பூங்காவின் இன்றைய நிலை: ஆளுநர் மாளிகை, ஆளுநர் அலுவலகம் போன்ற நகரைச் சுற்றியுள்ள அரியாலை, செம்மணி, கோப்பாய் போன்ற பகுதிகளுக்குக் கொண்டு போயிருக்க வேண்டிய அரச கட்டிடங்களை யாழ். நகரப் பழைய பூங்காவில் அமைத்து, பூங்காவைக் குதறி அலங்கோலப்படுத்தி வைத்திருப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கண்டி, கொழும்பு போன்ற நெரிசல் மிகுந்த நகரங்களில் கூட பூங்காக்கள் தீண்டப்படாமல் பேணப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு பூங்கா இவ்வாறு குதறப்படுவதைத் தடுத்தேயாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2025/223753/
  16. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 : மூர்க்கத் தீவில் மொய்க்கும் ஈக்கள் தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல் மூர்க்கத் தீவில் மொய்க்கும் ஈக்கள் அ. குமரேசன் ஒரு இலக்கியப் புனைவின் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அல்லது அது முன்வைக்கும் விமர்சனங்களைப் பரிசீலிக்க மனமில்லாமல் அதைத் தாக்குவது ஒரு சமூக மூர்க்கம்தான், அதைப் புறக்கணிப்பது ஒரு அரசியல் வன்முறைதான். ஆனால், ஒரு புத்தகம் மனிதர்களின் இயற்கையான குணமே மூர்க்கம்தான் என்று கூறுகிறது; ஒழுங்குபடுத்தும் அரசியல் விதிகளையும் மத நெறிகளையும் கொச்சைப்படுத்துகிறது; வன்முறைகளை நியாயப்படுத்துகிறது; நம்பிக்கையின்மையைப் போதிக்கிறது என்றெல்லாம் கூறி அதற்குத் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாகப் பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் அதைப் படிக்கக்கூடாது என்று அவர்களின் கைகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டில் வெளியோன ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (ஈக்களின் எசமான் – Lord of the Flies) நாவல் இந்த மூர்க்கத் தடைகளை மீறி வாசகர்களின் கைகளுக்குச் சென்றது. அதை எழுதியவர் வில்லியம் கோல்டிங் (1911–1993). அவரது இலக்கியப் பங்களிப்புக்காக 1983ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தகுதியை உறுதிப்படுத்தியதில் இந்த நாவலுக்கும் சிறப்பான பங்கிருந்தது. அதற்கு முன் ‘ரைட்ஸ் ஆஃப் பாஸேஜ்’ (பயணவழிச் சடங்குகள்) என்ற நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்தது. இவற்றுடன் ‘தி இன்ஹெரிட்டர்ஸ்’ (வாரிசுகள்), ‘பின்ச்செர் மார்ட்டின்’ (இது இந்த நாவலில் மையக் கதாபாத்திரத்தின் பெயர்) உள்ளிட்ட படைப்புகளும் சேர்ந்தே நோபல் விருதுக்குரிய இடத்தை நிறுவின. படைப்பாளிக்கொரு பின்னணி வில்லியம் கோல்டிங் (William Golding) இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் பிறந்தவரான வில்லியம் கோல்டிங் (William Golding) ஒரு நாவல் புனைவாளர், கவிஞர், நாடகாசிரியர். அவரது தந்தை ஒரு பகுத்தறிவாளர், அறிவியலாளர், அரசியல் இயக்க ஈடுபாட்டாளர். தாய் அனைத்துப் பெண்களுக்குமான வாக்குரிமைக்காகப் போராடிய களச் செயல்பாட்டாளர். கோல்டிங் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது அன்றைய கட்டாய ராணுவ சேவைச் சட்டத்தின்படி கடற்படையில் சேர்க்கப்பட்டு களத்திற்கு அனுப்பப்பட்டார். வளர்ந்த குடும்பச் சூழலிருந்து மாற்றுச் சிந்தனைகளையும், கட்டாயக் கடற்படைப் பணியிலிருந்து போரின் மோசமான விளைவுகளையும், பள்ளி ஆசிரியர் அனுபவத்திலிருந்து இளையோரின் குண இயல்புகளையும் கூர்மையாக உள்வாங்கினார். மனித வாழ்க்கையும், தத்துவக் கண்ணோட்டமும் சார்ந்த படைப்புகளை உருவாக்கியதில் இந்தப் பின்னணிகளுக்கும் அனுபவங்களுக்கும் அடிப்படையான பங்கிருந்தது என்று இலக்கிய உலகினர் குறிப்பிடுகின்றனர். தடைகளையும் கெடுபிடிகளையும் வென்ற அந்த நாவல் இன்று சிறந்ததொரு குறியீட்டுச் சித்தரிப்பாக, தத்துவப் படைப்பாக, அரசியல் புனைவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஈக்களின் எசமான் எந்தப் ஈக்களைப் பறக்க விடுகிறது? எந்த எசமானை நடமாடவிடுகிறது? தீவில் சிக்கிய சின்னப் பையன்கள் இரண்டாம் உலகப் போர் பின்னணியில், அணுகுண்டுத் தாக்குதல்கள் வெடிக்கும் அபாயத்தில், பிரிட்டிஷ் அரசு பள்ளிச் சிறுவர்களை ஒரு விமானத்தில் ஏற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுகிறது. ஒரு பள்ளியின் மாணவர்கள் செல்லும் விமானம் விபத்துக்கு உள்ளாகி ஆளரவமற்ற, அழகானதொரு தீவில் விழுகிறது. உடன் பயணித்த ஆசிரியர்கள், விமானப் பணியாளர்கள் உள்பட பெரியவர்கள் அனைவரும் உயிரிழக்க, தப்பிப் பிழைக்கிறவர்கள் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மட்டுமே. என்ன செய்வது என்று கலங்கும் சிறுவர்களுக்கு, ஓரளவு முதிர்ச்சியுள்ளவனான ராஃப் தலைமைப் பொறுப்பேற்கிறான். முதலில் அனைவருக்குமிடையே ஒரு நாகரிகத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முயலும் ராஃப், ஒரு சங்கை எடுத்து ஊதி, சிறுவர்களைக் கூட்டி கூட்டம் நடத்துகிறான். அப்போது பகுத்தறிவு கொண்ட, ஆனால் உடல் சார்ந்த இயலாமை உள்ளவனான பிக்கி, ஒரு நாகரிக சமூகத்தில் ஒவ்வொருவருக்குமான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறான். இருவரும் இணைந்து தீவில் ஒரு கட்டுப்பாடான சமுதாயத்தை உருவாக்க முயல்கின்றனர். தீவிலிருந்து தப்பிப்பதற்காக, கடலில் செல்லும் கப்பல்களின் கவனத்தை ஈர்க்க ஒரு சமிக்கை நெருப்பைத் தொடர்ச்சியாக எரிய வைக்க முடிவு செய்கிறார்கள். பிக்கி அணிந்துள்ள கண்ணாடியைப் பயன்படுத்தி, சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு மூட்டுகிறார்கள். பள்ளியில் பாடகர் குழு தலைவனாக இருந்தவனான ஜாக் மெரிடியூ அடங்காத அதிகாரப் பசி கொண்டவன். விலங்குகளிளை வேட்டையாடிக் கொல்வதில் ஆர்வமுள்ள அவனால் ‘ராஃப் தலைமையை சகித்துக்கொள்ள முடியவில்லை. சமிக்கை நெருப்பை எரிய வைப்பதை விட, காட்டுப் பன்றிகளை வேட்டையாடி உணவாகச் சுடுவதே முக்கியம் என அவன் வாதிடுகிறான். சிறுவர்களில் அதிகமானோர் அவனுடைய குழுவில் சேர்கின்றனர். பன்றிகளை வேட்டையாடுவதில் அவர்கள் மனிதத் தன்மையற்ற வன்மமும் மூர்க்கமும் மிக்க ரசனையை வளர்த்துக் கொள்கின்றனர். கொடூர விலங்கு பயம் தீவில் ஒரு கொடூரமான மிருகம் இருக்கிறது என்ற அச்சம் சிறுவர்களுக்கிடையே பரவுகிறது. முதலில் அது ஒரு கற்பனையாகத்தான் இருந்தது என்றாலும் படிப்படியாக அந்த அச்சம் உண்மையானது என்ற கவலை தொற்றுகிறது. ஜாக் அவர்களின் பீதியை சாதகமாக்கிக்கொண்டு, தன்னால்தான் எல்லோரையும் காப்பாற்ற முடியும் என்று சொல்லி, ராஃபிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க முயல்கிறான். ஒரு வேட்டைக்காரன் போலத் தனது முகத்தில் வண்ணக் கோடுகள் வரைந்து மிரளவைக்கும் சடங்குகளை நடத்துகிறான். சமிக்கை நெருப்புப் பராமரிப்பை விட்டுவிட்டு, ஜாக் குழுவினர் வேட்டையாடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தீவுக்கு அருகாமையில் வரும் ஒரு கப்பல், அந்த நெருப்பு அணைந்துவிட்டதால், மக்கள் இருப்பதற்கான சமிக்கை கிடைக்காத நிலையில் திரும்பிவிடுகிறது. இது நாகரிகத்தோடு அணுகும் ராஃப், வன்மம் நிறைந்த ஜாக் இருவருக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்துகிறது. பகுத்தறிவுள்ள பிக்கி, ஆன்மீகச் சிந்தனை கொண்ட சைமன் என சிலர் மட்டுமே இப்போது ராஃப் குழுவில் நிற்கின்றனர். “கொடூர விலங்கு என்பது வெளியே இல்லை, நம் மனதில்தான் இருக்கிறது,” என உணரும் சைமன் அதைப் பிற சிறுவர்களிடம் சொல்கிறான். “எனக்குள்ளேயும் அந்தக் கொடிய விலங்கு இருக்கிறது,” என்ற பொருளில் பேசுகிறான்.. ஆனால் அவன்தான் அந்தக் கொடூர விலங்கு என்று தவறாகப் புரிந்து கொள்ளும் ஜாக் குழுவினர் அவனை ஈவிரக்கமின்றித் தாக்கிக் கொல்கின்றனர். இப்படியாகப் போகும் கதையில், சிலர் மட்டுமே எஞ்சியிருக்க, பிக்கி சங்கை ஊதி மீண்டும் சிறுவர்களை ஒன்றுகூட்டிப் பகுத்தறிவுடன் பேச முயல்கிறான். அதை ஏற்க முடியாத ஜாக் குழுவினர் ஒரு பாறையை உருட்டி அவனையும் கொல்கின்றனர். நாகரிகத்தின் முழு அழிவையும், அநாகரிக வன்மத்தின் வெற்றியையும் குறிப்பது போல, அந்த ஒற்றுமைச் சங்கு உடைந்து நொறுங்குகிறது. இப்போது தனியாக விடப்படுகிறான் ராஃப். அவனை வேட்டையாட முயல்கிறது கும்பல். அவனைச் சுற்றிலும் நெருப்பைப் பற்ற வைக்கிறது. உயிரைப் பணயம் வைத்து ஓடுகிறான். குழுவினர் துரத்துகின்றனர். இறுதியாகக் கடற்கரையை வந்தடைகிறவனை அங்கே முகாமிட்டிருக்கும் கடற்படைத் தலைவர் மீட்கிறார். சிறுவர்களின் தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடையும் அவர், தீவில் நடந்த அட்டூழியங்களைக் கேட்டு உறைந்து போகிறார். அவரைக் கண்டதும் ராஃப், ஜாக் உள்பட எல்லோரும் மறுபடி சிறுவர்களாக மாறி அழத் தொடங்குகிறார்கள். எசமான் யாரெனில்… எஞ்சிய சிறுவர்கள் மீட்கப்படுவது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், அவர்களை மீட்பவரே ஒரு போர்க் கப்பலின் தலைவர்தான். பெரியவர்களின் உலகம் ஏற்கெனவே வேறு வகையான வன்முறை அரசியலால் கட்டப்பட்டிருப்பதைக் கதை உணர்த்துகிறது என்று திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகப் போரின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஆயுதமோகிகள் மானுட மாண்புகளைப் பாதுகாக்கத் தவறிய குற்றவாளிகளே என்று சாடுகிறது. போர் வேண்டாம் எனும் இலக்கியக் குரலாக ஒலிக்கிறது. ஆதியில் மனிதர்கள் மூர்க்கத்தனமாக இருந்தார்கள் (இன்றும் கூட அப்படித்தானே இருக்கிறார்கள்!), படிப்படியாக மாறினார்கள் என்பது உண்மை. அந்த மாற்றத்தைத்தான் நாகரிகம் என்று கூறுகிறோம் என்பதும் உண்மை. அந்த நாகரிகத்தின் காவல் இல்லாமல் போகுமானால், மனிதப் பரிணாமத்தின் மாண்புகள் மறையும், புதைந்து போன தீமைகள் மேலெழும் என்ற எச்சரிக்கைச் சங்கையும் இந்த நாவல் ஊதுகிறது என இணையவழித் திறனாய்வுகள் மூலம் அறிய முடிகிறது. அழுகிப்போன பொருள்களின் மீது ஈக்கள் மொய்க்கும். நாவலில், தரையில் ஊன்றப்பட்ட ஒரு குச்சியில் செருகப்பட்டிருக்கும் ஒரு பன்றித் தலையை ஈக்கள் மொய்க்கின்றன. ஈக்களைப் போல தீமைகள் எங்கும் பரவியிருப்பதைச் சொல்ல முயல்கிறது நாவல். சுயநலமும் வன்மமும் குடியேறிய மனம்தான் அந்த ஈக்களின் எசமான். ஏன் சிறுவர்கள்? ஏன் ஆண்கள்? தீவுக் காட்டுக்குள் சில வழிபாட்டு முறைகளைத் தொடங்குவதாகச் சித்தரித்திருப்பதும், சைமனின் கருத்து ஏற்கப்படாததும் மதத்தின் தோல்வியைக் குறிக்கின்றன, ஆகவேதான், போர் மோக அரசியல் சிந்தனையாளர்களோடு, மதவாதிகளும் இந்த நாவலை எதிர்த்தார்கள் போல! வாழ்க்கை அனுபவத்தின் பிரதிநிதிகளான பெரியவர்களின் வழிகாட்டலும், பாலினத் துணைகளான பெண்களும் இல்லாதபோது மூர்க்கத்தின் இருண்மையில் மூழ்க நேரிடும் எனக் காட்டுவதே ஆண்கள் மட்டுமே உள்ள அந்தக் கூட்டம். அதே போல், இத்தனை தலைமுறைகள் கடந்தும் மனிதர்கள் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பதன் வெளிப்பாடுதான் காட்டாட்சி செய்வோர் சிறுவர்கள் என்ற சித்தரிப்பு. இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக வந்திருக்கிறது. 1963இல் பிரிட்டன் தயாரிப்பபாகக் கறுப்பு வெள்ளையில் வந்த முதல் படம் நாவலுக்கு நெருக்கமாக இருக்கிறது என்ற வரவேற்பைப் பெற்றது. 1990இல் ஹாலிவுட் தயாரிப்பாக, இங்கிலாந்துச் சிறுவர்களை அமெரிக்கர்களாக மாற்றிச் சித்தரித்த பல வண்ணப் படம், நாவலின் ஆழத்தைத் தொடத் தவறிவிட்டது என்ற விமர்சனத்தைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுமே நாவல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தின. படக்கதைப் புத்தகம், கார்ட்டூன் படம் என்ற வடிவங்களையும் இந்த நாவல் எடுத்திருக்கிறது. ஆக்கிரமிப்புப் போர் தொடுப்பவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற நாவல், தீங்குகளுக்குத் தீர்வு காணப் போராடுகிற சக்திகள் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கருத்தும் பகிரப்படுகிறது. இலக்கிய ஆக்கத்தில் அப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த இரு கருத்துகளின் “போர்” நிற்காமல் தொடரும்தான் இல்லையா! https://bookday.in/books-beyond-obstacles-20-about-william-goldings-lord-of-the-flies-written-by-a-kumaresan/
  17. நிவாரணத்தில் ஊழலுக்கு இடமில்லை – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் DilukshaDecember 6, 2025 11:54 am 0 வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவில் எவ்வித ஊழலும் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் படி, 25 மாவட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ் மாவட்டத்தில் 14,624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் பிரகாரம் 365.6 மில்லியன் ரூபா மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னைய சுற்றறிக்கையை விட மேலதிக விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்தக் கொடுப்பனவுக்கான தகுதிகளில் உள்ளடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரின் பரிந்துரை மற்றும் கையொப்பங்களைப் பெற்ற, தகுதியான பயனாளர்களுக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 25,000 ரூபா பெறுவதற்குத் தகுதியான குடும்பங்களைத் தெரிவு செய்கின்றபோது, அவர்களது விபரங்களைக் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்துமாறு அறிவித்துள்ளோம். இந்தக் கொடுப்பனவுகளில் குளறுபடிகளோ, மோசடிகளோ அல்லது ஊழல்களோ இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லையென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். https://oruvan.com/there-is-no-room-for-corruption-in-relief-jaffna-district-government-agent/
  18. யாழ்ப்பாணத்திற்கு அரசின் பணம் தேவையில்லை 36 கோடி ரூபாவையும் மலையகத்திற்கு கொடுங்கள் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை.அதனை தோட்டப்புற மக்களுக்கு கொடுங்கள் என யாழ் மாவட்ட எம்.பி. யான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். அத்துடன் மற்றவர்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் சிப்பாய்கள் என அழைப்பதாக கடும் விசனமும் வெளியிட்ட அவர்,இராணுவ வீரர்கள் என கௌரவமாக அழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், வடக்கு மாகாணத்திற்கு 36 கோடி ரூபா அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமன் மற்றும் சமநிலை என்ற விடயம் தெரியாமலே அரசாங்கம் போய்க்கொண்டிருப்பது மிகவும் கவலையாக இருக்கின்றது. இதில் அனைவருக்கும் 25,000 ரூபா கொடுக்கப்படுகின்றது. முழந்தால் அளவுக்கு தண்ணீர் வந்தவனுக்கும் அதே தொகைதான் வீடு முழுமையான மூடப்பட்டவருக்கும் அதே தொகைதான். 2ஆம் திகதி இடைத்தங்கல் முகாமொன்றை அமைத்துள்ளனர். 30ஆம் திகதி மழை நின்ற பின்னர் 2ஆம் திகதி இடைத்தங்கல் முகாமை அமைத்துள்ளனர். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் படு மோசமான நிலைமையாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அதனை தேசிய மக்கள் சக்தியினருக்கே கொடுக்கின்றீர்கள் .அந்தப்பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை. அதனை தோட்டப்புற மக்களுக்கு விநியோகியுங்கள். நீங்கள் செய்யும் வேலைகள் வெட்கமானது. எனக்கு கொடுக்கும் கெப் வாகனத்திற்கான பணத்தை மக்களுக்கு கொடுங்கள். எனக்கு அந்த வாகனம் அவசியமில்லை. வரவு செலவுத்திட்டம் முடிந்த பின்னர் வேண்டுமென்றால் வடக்கிற்கு வாருங்கள். வேண்டுமென்றால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணத்தை பெற்றுத்தருகின்றேன். தேவைப்பட்டால் தெற்கிற்கும் பகிர்கின்றேன். நான் ஆம் என்று கூறினால் பணம் வரும் வெள்ளத்தில் சிக்கிய என்னை இராணுவ வீரர்களே காப்பாற்றினார்கள்.மற்றவர்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் சிப்பாய்கள் என அழைக்கின்றது . இது எவ்வளவு கீழ்த்தரமான வேலை அவர்களை இராணுவ வீரர்கள் என கௌரவமாக அழைக்க வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=351378
  19. தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது ! 06 Dec, 2025 | 02:03 PM 'டித்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு உடனடி உதவி அளிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. மருத்துவப் பொருட்கள், குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், தங்கும் கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணக் கப்பல், தமிழக அரசின் ஒருங்கிணைப்பில் இலங்கை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில் அங்குள்ள மக்களை ஆதரிக்கும் விதமாக, இரு நாடுகளின் நட்புறவையும் மனிதாபிமான உணர்வையும் வலுப்படுத்தும் இந்த உதவி நடவடிக்கை, பரவலாக பாராட்டப்படுகிறது. இந்த பேரிடரில் உயிரிழந்தோருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்திருந்தார். மேலும், இலங்கை மக்களின் துயரைத் துடைக்க தமிழக அரசு முழுமையான உதவிகளை மேற்கொள்ளும் என்றும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அனுப்ப ஆணையிட்டார். அதனடிப்படையில், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இன்று சனிக்கிழமை ( 6) இலங்கை நோக்கி பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னையில் இருந்து அனுப்பும் கப்பலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கொடியசைத்து அனுப்பினார். புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 950 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு, தேவையான அளவு கூடுதல் நிவாரண உதவிகளையும் வழங்க தயார் நிலையில் இருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/232604
  20. மட்டக்களப்பிற்கு 10,000 கோடி நிதி ஒதுக்குமாறும் கோரிக்கை! "கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத செயற்திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி செயல்படுத்தியுள்ளார்; அதனை வாழ்த்துகிறோம். அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான திட்டத்திற்கு 10,000 கோடி ரூபா நிதியை ஒதுக்க வேண்டும்," என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கையின் புதிய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலத்தில் எந்த அரசும் முன்னெடுக்காத, இயற்கை அனர்த்தம் தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஜனாதிபதி துரிதப்படுத்தியுள்ளார். அதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக அரசாங்க அதிபர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தோடு தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பானதொரு பணியை ஆற்றியதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் பட்சத்தில் பல வெள்ள அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்கால வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகத் திட்டமிடப்பட்டு, கிட்டத்தட்ட 10,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டால், அரைவாசிக்கு மேற்பட்ட வெள்ள அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான சூழல் உருவாகும். வெள்ளம் வடிந்தோடும் காலகட்டத்தில் சில கிராமங்கள் முழுமையாகத் தாழ்நிலைக்குச் செல்கின்றன. குறிப்பாக செங்கலடி, வெல்லாவெளி, வாகரை போன்ற பிரதேசங்களில் சில இடங்கள் இவ்வாறு உள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தையடுத்து, சுமார் 25-26க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காகத் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்வதற்கு முன்வந்துள்ளன. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை வகுத்து, அதற்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் சுனாமியின் போது விட்ட பிழையை நாம் மீண்டும் விடக்கூடாது. சுனாமிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. அந்தப் பாலங்கள் அமைக்கப்பட்டதன் ஊடாகப் போக்குவரத்து மிகவும் இலகுவானது. ஆனால், இன்னும் மேலதிகமாகப் பல பாலங்களை அமைப்பதற்கு நாம் திட்டங்களை முன்வைத்திருந்தால், அவற்றையும் அமைத்திருக்க முடியும். ஆகவே, தயவுசெய்து எதிர்காலத்தில் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய வகையில், வெளிநாடுகளுடன் கைகோர்த்து உதவிகளைப் பெற்று, மாவட்டத்தில் அனர்த்தங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மாவட்ட ரீதியாக ஆராய்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் மூலம் சரியான திட்டங்களை முன்வைத்து, நிதியை ஒதுக்கீடு செய்வதன் மூலம் எதிர்கால வெள்ளத்தைத் தடுக்க முடியும். இயற்கை அனர்த்தம் நடக்கப்போவது பற்றிய செய்தி பலருக்கு முன்கூட்டியே தெரியும். புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறிப்பிட்ட வாரத்திற்கு முன்னரே சிலவற்றை நாம் தீர்மானிக்க முடியும். அந்த வகையில், பாராளுமன்றத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பாகச் சரியாகப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து, அதற்குரிய நிர்வாகச் செயல்வடிவத்தை மேற்கொண்டிருந்தால் சில பாதிப்புகளைத் தவிர்த்திருக்க முடியும். அனர்த்தத்தின் போது, அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களைக் குறித்து நாம் ஏனோதானோவென்று பேசுவது நாகரிகமான செயல் அல்ல. அனர்த்தத்தின் போது அதனை நிர்வகிப்பதற்கும், தடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் ஊடாகத்தான் எதிர்கால அனர்த்தத்தைத் தடுக்க முடியும் என்பதை மக்கள் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், சில விடயங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுகின்றன. வீண்விரயமற்ற செயற்பாடுகளை நாம் கௌரவிக்கின்றோம். ஜனாதிபதி நேரடியாக எல்லா மாவட்டங்களுக்கும் கள விஜயம் மேற்கொண்டு செயற்படுவது ஒரு முன்னேற்றகரமான விடயமாகும். இந்த விடயங்களை அரசாங்க அதிபர் முதல் மாவட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வரை சரியாகப் புரிந்துகொண்டு, இந்த அனர்த்தத்திற்கு உதவி செய்வதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு வரும் வெளிநாடுகளின் உதவியை ஏன் பயன்படுத்த முடியாது? எனவே, சரியான திட்டங்களை வகுக்க வேண்டும். இங்கே ஆளும் தரப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் முதல் அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் வரை சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கியிருந்தார்கள். ஆகவே, எம்மால் ஏன் செய்ய முடியாது என்ற விடயத்தைக் கவனத்தில் கொண்டு, வெளிநாட்டுத் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் இயற்கை அனர்த்தத்தைத் தடுப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும், சரியான திட்டங்களை முன்வைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு நான் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார். https://adaderanatamil.lk/news/cmitspwea02fro29nbsd8g1ox
  21. டொனால்ட் டிரம்பிற்கு 'FIFA சமாதான விருது' வழங்கப்பட்டது செய்திகள் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு 'FIFA சமாதான விருது' வழங்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் (draw)அமெரிக்காவின் வொஷிங்டனில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்ற போதே, இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவினால் இவ்வருடம் முதன்முறையாக இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதற்கமைய அவ்விருதின் முதலாவது வெற்றியாளராக டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 'சமாதானத்திற்காக விசேட மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்ட' மற்றும் 'உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைத்த' ஒருவருக்கே இவ்விருது வழங்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmits1pzx02fqo29n869yjsgx
  22. யாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி adminDecember 5, 2025 யாழ்ப்பாண மாநகர சபையின் பாதீடு 2 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசாவினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்டது. குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். பாதீட்டுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட சில கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.https://globaltamilnews.net/2025/223649/
  23. இலங்கையில் இயற்கை பேரழிவை மீறிய போதை பொருள் கடத்தலும் வியாபாரமும்! adminDecember 6, 2025 கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05.12.25) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போதே, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக காவவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த படகின் உரிமையாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகிறது. https://globaltamilnews.net/2025/223659/
  24. சித்தாந்த வினா விடை - 2 - அருணைவடிவேல் முதலியார் ~ சித்தாந்தம் சித்தாந்தப் பொருள்வகை மாணவன் : ஆசிரியரே நீங்கள் எனக்கு சித்தாந்தப்பொருளை உரைக்க வேண்டும். ஆசிரியர் : நன்று! கேட்பாயாக. சித்தாந்த நூல்கள், எல்லாப் பொருள்களையும் மூன்று வகையுள் அடக்கிக் கூறும்; அவை, 'பதி' 'பசு' 'பாசம்' என்பன. 'பதி' என்பது கடவுள்; 'பசு' என்பது உயிர்; 'பாசம்' என்பது, அவ்வுயிர்களைப் பற்றியுள்ள பிணிப்பு. இவை முறையே, 'இறை, உயிர், தளை' எனவும் கூறப்படும். இம் முப்பொருள்கள் பற்றிய ஆராய்ச்சியை நான்கு வகைகளில் வைத்து சித்தாந்த நூல்கள் கூறும். அவை 1 பிரமாணம், 2 இலக்கணம், 3 சாதனம், 4 பயன், என்பதாகும். பிரமாணமாவது, 'பதி, பசு, பாசம், என்னும் முப்பொருள்களையும், 'உள்ளன' என அளவை முறையால் துணிந்து சொல்லுதல் ஆகும். இலக்கணமாவது 'உள்ளன' எனத் துணிந்து சொல்லப்பட்ட அம்முப்பொருள்களின் இயல்பு இவை எனக் கூறுதல் ஆகும். சாதனமாவது, முப்பொருள்களில் பயனை பெறுவது எதுவென்றும், அதனைப் பெறுதற்கு உரிய வழியையும், அவ்வழியில் செல்லும் முறை பற்றியும் கூறுதல். பயனாவது, 'பயனைப் பெறுதற்குரிய வழியில் முயன்ற பின்னர், அம்முயற்சியால் அடையும் பயன்கள் இவை' எனக் கூறுதல். பிரமாணம்-அளவை இயல் தர்க்கர்கள் முதலியோர் பிரமாணங்களைப் பலவாக விரித்துக் கூறுவர். உலகாயதரும் (நாத்திகர்), பௌத்தரும் ஒன்றிரண்டு பிரமாணங்களை மட்டும் கொண்டு, ஏனையவைகளை விலக்கி விடுவர். சைவ சித்தாந்தம், 'இன்றியமையாத பிரமாணங்களை விலக்குதலும் தவறு, சிறுசிறு வேறுபாடுகொண்டு பிரமாணங்களைப் பலவாக விரித்தலும் தேவையற்றது’ எனக்கூறி, மூன்று பிரமாணங்கள் இன்றியமையாதன எனவும், அவற்றிற்கு வேறாகச் சொல்லப்படும் பிரமாணங்கள் அனைத்தும் அம்மூன்றிலே அடங்கிவிடும் எனவும் சொல்கிறது. மாணவன்: சைவசித்தாந்தம் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள் எவை? ஆசிரியர் : சைவ சித்தாந்தங் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள், 'காட்சி, கருதல், உரை, என்னும் மூன்றுமாம். மாணவன்: தர்கத்தார் முதலியோர் பலவாக விரித்துக் கூறும் பிரமாணங்கள் யாவை? ஆசிரியர் : 1. காட்சியளவை (பிரத்தியட்சப் பிரமாணம்) 2. கருதலளவை (அனுமானப் பிரமாணம்) 3. உரையளவை அல்லது ஆகமப் பிரமாணம் (சத்தப் பிரமாணம்) 4. இன்மையளவை (அபாவப் பிரமாணம் அல்லது அனுபலத்திப் பிரமாணம்) 5. பொருளளவை (அருத்தாபத்திப் பிரமாணம்) 6. உவமையளவை (உபமானப்பிரமாணம்) 7. ஒழிபுஅளவை (பாரிசேடப்பிரமா ணம்) 8. உண்மையளவை (சம்பவப்பிரமாணம்) 9. வழக்களவை (ஐதிகப் பிரமாணம்) 10. இயல்பு அளவை (சகசப் பிரமாணம் அல்லது சுபாவப் பிரமாணம்) ஆகியவை தர்கத்தார் முதலியோர் வேறு வேறாக விரித்துக்கூறும் பிரமாணங்கள். அவற்றுள் காட்சி முதலிய மூன்றினைத் தவிர, ஏனைய பிரமாணங்களும் அக்காட்சி முதலியவற்றின் வகையேயன்றி வேறல்ல என்பதே சைவசித்தாந்தத்தின் துணிபு. பிரமாணங்களின் இயல்பு மாணவன் : பிரமாணங்கள் இவை என ஒருவாறு உணர்ந்தேன், இனி, பிரமாணங்களின் இயல்பு இவை எனக் கூற வேண்டும். ஆசிரியர் : 1. காட்சியளவை அல்லது பிரத்தியட்சப் பிரமாணம் என்பது, இது குடம், இது ஆடை என்றாற்போலக் கண் முதலிய பொறிகள் வாயிலாகப் பொருள்களைப் பொருந்தி நின்று உணரும் உணர்வு. 2. கருதலளவை அல்லது அனுமானப் பிரமாணம் என்பது, புகையைக் கண்டவுடன் நெருப்பு உண்டு என்று சொல்லுதல் போல. இங்கே நெருப்பை கண் முதலிய பொறிகள் பார்க்கவில்லை. ஆனால் அங்கே புகையை கண்ட உடன் நெருப்பு இருக்கிறது என்று சொல்வது, வழி வழியாக புகையை நெருப்போடு பொருத்திப் பார்த்த அனுமானத்தால். இதனால், இது 'வழியளவை' என்றும் சொல்லப்படும். 'அனுமானப் பிரமாணம்' என்று கூறுப்படுகிறது. 3. உரையளவை அல்லது ஆகமப் பிரமாணம் என்பது, மேற்கூறிய இரு வகையாலும் உணர முடியாத பொருளை, பெரியோரது பெரு மொழிகள் கொண்டு உணரும் உணர்வு. பெரியோர்கள் எனப்படுபவர்கள், 'காமம், வெகுளி, மயக்கம்' என்னும் முக்குற்றங்கள் சிறிதும் இல்லாது முற்றும் நீங்கிய தூயோர். காமம் என்பது விருப்பு: வெகுளி என்பது வெறுப்பு; மயக்கம் என்பது ஒன்றை மற்றொன்றாக உணரும் விபரீத உணர்வு. இக்குற்றங்கள் சிறிது இருப்பினும், பொருள்களை உள்ளவாறு உணரவும், உணர்ந்தபடியே சொல்லவும் இயலாது; ஆதால் இக்குற்றங்கள் முற்றும் நீங்கப்பெற்றவரின் உரையே, 'ஆப்த, வாக்கியம்' (நம்பத்தகுந்த சொல்) எனப்படும். இயல்பாகவே இக்குற்றங்கள் இல்லாதவன் இறைவன். அதனால், அவனது திருமொழியே உண்மை ஆப்தவாக்கியமாகும். ஆயினும், அவன் சொற்களை ஒவ்வொரு காலத்திலும் பாட்டாகவும், உரையாகவும் சொல்லுதல் இல்லை, மாறாக அச்சொற்களையெல்லாம் தன்னையே சார்ந்து, தானாய் நிற்கும் பெரியோர் வாயிலாகவே சொல்விப்பான். அதனால் அவரது திருமொழிகளும் அவன் திருமொழியேயாகும் என்று கருத வேண்டும். 'இவர் இறைவனைச் சார்ந்து இறைவனாகவே நின்றார்' என்பது எவ்வாறு தெளியப்படும் எனின், அவரது உண்மை வரலாற்றாலே அது அறியப்படும். அதாவது இறைவன் நேர்நின்று அவர்களை ஆட்கொள்ளுதல், அவர்கள் திருமொழியை விரும்பிக் கேட்டல், தன்னாலன்றிப் பிறரால் இயலாத வியத்தகு செயல்களை அவர்கள் வாயிலாக உலகத்தில் நிகழ்வித்தல், போன்ற முறைமையால் அவர்கள் முக்குற்றங்களும் அகன்று முதல்வனேயாய் நின்றார்கள் என்பது தெளியப்படும். சில பெரியோர்களுக்கு உண்மை வரலாறு இல்லாமல் போனாலும் மரபு வழி தொன்று தொட்டு சொல்லப்படும் உரைகளும் ஆப்த வாக்கியங்களாகும். "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால், மனக்கவலை மாற்றலரிது" எனவும், "அறவாழி யந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்-பிறவாழி நீந்தலரிது" எனவும், "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் - பற்றுக பற்றுவிடற்கு" எனவும் அருளிச்செய்தபடி, இயல்பாகவே குற்றமில்லாத இறைவனைச் சார்தலைத்தவிரக் குற்றங்கள் நீங்குதற்கு வழியில்லாமையால் கடவுள்கொள்கை இல்லாதவர்க்குக் குற்றங்கள் நீங்காது. அதனால், அவர்களுடைய சொற்கள் ஆப்தவாக்கியம் ஆகாது. இனிச் சிலர், பெரியோரது திருமொழிகள் ஆப்தவாக்கியங்களேயாயினும், அவை இயல்பாகவே குற்றம் இல்லாத இறைவன் திருமொழியோடு ஒப்புதல் பிரமாணம் ஆகுமா?" என ஐயப்படுவர். அவை ஏற்கனவே இறைவன் திருமொழியோடு ஒப்பப்பிரமாணம் ஆனது என்பதை பலவிடத்தில் பல்லாற்றாலும் விளங்கியும், இறைவனாலும், பெரியோராலும் விளக்கப்பட்டும் இருக்க , அதன் குற்றம், நன்மை போன்ற விஷயங்களை சாதாரண மனிதர்கள் ஐயப்படக் கூடாது. பெரியோர் திருமொழிகளும், இறைவன் திருமொழிகளும் ஒப்பப்பிரமாணம் தான் என்பதை இனிது விளக்கவே, "கண்டபெரு மந்திரமே மூவர் பாடல்-கைகாணா மந்திரம் கண்ணுதலோன் கூறல்" (திருமுறை கண்ட புராணம்) என்பது போன்ற வாக்கியங்கள் எழுந்தன. பெரியோர் திருமொழிகளைச் சிறந்த பிரமாணமாகக் கொள்ளாதவர்க்கு, காலப்போக்கில் அவை பற்றின கருத்தும், சிந்தனையும், வரலாறும், இல்லாமலாகி, முடிவில் உரையளவையே இல்லாமலாகிவிடும். எனவே காட்சியளவை, கருதலளவை மற்றும் உரையளவை இவை மூன்றுமே சைவ சித்தாந்தம் எடுத்துக் கொள்ளும் பிரமாணங்கள். https://www.siddhantham.in/2025/03/2_14.html
  25. லண்டனில் கத்திக் குத்துத் தாக்குதல்: கரவெட்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு லண்டனில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ் வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இராமச்சந்திரன் ஜெயந்தன் (வயது- 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். லண்டனில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மேற்படி இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்து சிகிச்சைகளுக்காக அங்குள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்த இளம் குடும்பஸ்தர் திருமணமாகி ஒரு வருடமே ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கறுப்பின இளைஞர்கள் சிலரே கொலையுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் லண்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://akkinikkunchu.com/?p=351272

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.