Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. @வாதவூரான் , உங்கள் தெரிவுகளின்படி 75) ஆவது கேள்விக்கான பதில் KKR அல்லது SRH. ஒன்றைத் தெரிவு செய்யுங்கள். அல்லது இப்போது உள்ளமாதிரியே விடலாம் 76) கேள்விக்கு RR (CSK 74 க்கான பதில் என்பதால்) அல்லது 75) க்கான திருத்திய பதிலில் ஒன்றாக இருக்கவேண்டும். மாற்ற விரும்பினால் சொல்லுங்கள்.
  2. அன்பார்ந்த போராளிகளுக்கு..! -மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம். March 17, 2025 அன்பார்ந்த போராளிகளே.! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பல வரலாற்றுச் சாதனைகளை படைத்த காலத்தில் தேசியத் தலைவரின் நேரடி வழிநடத்தலில் களமாடியவர்கள் நீங்கள். தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய புறநானூற்று வரலாறு படைத்த எம் ஒப்பற்ற பெருந்தலைவரின் உள்ளுணர்வாக, தேசியத் தலைவரின் வரலாற்றுப்படிமங்கள் பலவற்றை தாங்கிவரும் ஆக்கங்களை தொகுத்து நூலாக்கி,வரலாற்று ஆவணப்படுத்தல் ஒன்றினை செய்துவிட முயற்சிக்கின்றோம். தேசியத் தலைவரின் தன்னுணர்வுகளை, தூரநோக்கான சிந்தனையை, பட்டறிவின் பண்பினை, பல விடயங்கள் பற்றி அவாவி நிற்கும் அவரது ஆவல்களை, ஒரு பெரும் போரை நடாத்தி அதேசமயம் தமிழ் மக்களின் பல்துறை சார் வளர்ச்சிக்காக தமிழ்த்தேசத்தின் கட்டுக்கோப்பான எதிர்கால விருத்திக்கான அவரது எண்ணப்பாங்குகளை, தமிழ் மக்கள் அனைவருமே மிக்க விருப்புடன் அறியமுற்படும் அறிய விரும்பும் தேசியத் தலைவரின் ஆளுமை, அவரது தனித்த எண்ணங்கள் பற்றிய பூரண வடிவத்தையும், வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகளாக தங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது எம் இளைய தலைமுறையினருக்கு ஒரு அதிசய நூலாக அமையப்பெறவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. ஆக்கங்கள் உண்மையானதும், ஆதாரபூர்வமானதாகவும் அமைவது மிகவும் அவசியமானது. இணைய ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ ஏற்கனவே வெளியான ஆக்கங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வடிவமைப்பு,தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக கருத்தில் மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களை நூலாக்க குழுவினர் மேற்கொள்வார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறோம். தங்கள் ஆக்கங்கள் கணனிப்படுத்தப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுவதோடு, 200 சொற்களுக்கு மேற்படாதவாறு இருப்பதனை வரவேற்கிறோம். ஆக்கங்கள் 05 மே 2025க்கு முன்னர் அனுப்பிவைப்பது காலச்சிறந்தது. அன்பானவர்களே! தங்களின் ஆக்கங்களுடன் தங்களைப் பற்றியதான சிறிய அறிமுக குறிப்பு ஒன்றினை எழுதி அனுப்புமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தங்களால் அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்களில் தெரிவு செய்யப்பட்டவை, எதிர்வரும் 08 மாதம் அளவில் நடக்கவிருக்கும் எமது தேசியத் தலைவரின் “வீரவணக்க நிகழ்வில்” வெளியிடப்படவுள்ள நூல் மூலம் உலகத் தமிழ் மக்களின் கைகளில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து உள்ளோம். தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான ஒரு படைப்பாக்கம் வெளிவர அனைவரும் இணைந்து பயணிப்போம். மின்னஞ்சல் :- methaguvarikal@gmail.com புலனம் :- +61 494 387 427 “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” நிலவன் தொகுப்பாளர் நூலாக்க குழு மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம். https://www.uyirpu.com/?p=19552 அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே…! – மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம். March 17, 2025 அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே! ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இறுதிமூச்சுவரை களமாடி, தாய்மண்ணிலே விதையாகிய மாவீரர்கள் வரிசையில் எங்கள் ஒப்பற்ற தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களும் வீரவரலாறாகினார். தேசியத்தலைவர் படைத்துச்சென்ற வீரமிகு போராட்ட வரலாற்றை பெரும் ஆவணப் பொக்கிசமாக உருவாக்கி அதனை எம் எதிர்காலச் சந்ததிக்கும் உலகமெல்லாம் பரந்துவாழும் தமிழர் தலைமுறைக்கும் கையளிக்கும் உன்னத நோக்கோடு.. “கவிதைத்தொகுப்பு” ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே இந்த மண்ணை, மரபை, மக்களை நேசித்த அந்த மகத்தான மாபெரும் வீரத் தலைவனுக்கு… உங்கள் கவிதைகளால் உயரிய காவியம் படைக்க தங்களிடமிருந்து…உணர்வுபூர்வமான கவிதைகளை வேண்டி நிற்கின்றோம். “இது உங்கள் தலைவனுக்கு நீங்கள் அர்ச்சிக்கும் கவிதைப் பூக்கள் ஆகட்டும்” அந்தக் கவிதைகள் எங்கள் தலைவன் மகிமைதனைக் கூறட்டும். சமர்ப்பிக்கும் கவிதை உங்களுடைய சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும் இணைய ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ ஏற்கனவே வெளியான ஆக்கங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். உங்கள் ஆக்கங்கள் கணனிமயப்படுத்தப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுவதோடு, குறைந்தபட்ச கவிதை வரிகள் : நான்கு வரிகள் அதிகபட்ச கவிதை வரிகள் : நாற்பது வரிகள் மேற்படாதவாறு இருப்பதனை வரவேற்கின்றோம். தங்கள் ஆக்கங்கள் 05 மே 2025க்கு முன்னர் அனுப்பிவைப்பது காலச்சிறந்தது. வடிவமைப்பு,தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக கருத்தில் மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களை நூலாக்க குழுவினர் மேற் கொள்வார்கள் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிக்கிறோம். தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான ஒரு படைப்பாக்கம் வெளிவர அனைவரும் இணைந்து பயணிப்போம். மின்னஞ்சல் :- methagukavitai@gmail.com புலனம் :- +61 494 387 427 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நன்றி நிலவன். தொகுப்பாளர், நூலாக்கக் குழு, மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம். https://www.uyirpu.com/?p=19560
  3. வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற “அமில வதைகளை அம்பலப்படுத்துக” கனகராசா சரவணன் பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மட்டு. ஊடக மையத்தில் திங்கட்கிழமை(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 1988 ஆம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கிறது. 1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன. 37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி யினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது. தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கிறது. எனவே, இது போன்ற வடக்கு, கிழக்கில் பல சட்டவிரோத முகாங்கள் காணப்பட்டன. 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படை முகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் தறடறுதட பெண்கள் உட்பட 186 பொதுமக்களை சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளை தெரிவித்தார் இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கான முக்கியமான முகாமாக இயங்கியது. அவ்வாறே பல முகாங்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டை வெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டன சித்திரவதை என்பது சாதாரண விடயமல்ல: அமிலத் தொட்டிகளில் இளைஞர்களை போட்டு கொலை செய்துள்ளனர். எங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் சார்பாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக இருக்கின்றதால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. எனவே, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டு வர முடியாது. ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்த சித்திரவதை முகாமை கொண்டு வந்திருப்பதாக மற்றவர்களுக்கு கூறாமல் வடக்கு, கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விஷயங்களை நீங்கள் வெளிக் கொண்டு வாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வடக்கு-கிழக்கில்-இடம்பெற்ற-அமில-வதைகளை-அம்பலப்படுத்துக/150-353941
  4. மீனவர்களால் நிராகரிக்கப்பட்ட கடற்றொழில் சட்டம்! தற்போதைய கடற்றொழில் அமைச்சால் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் மீன்பிடி சட்டம் மீனவர் சமூகத்தால் எப்போதோ நிராகரிக்கப்பட்டதாகும். அதனையே மீண்டும் மீன்பிடி அமைச்சு கொண்டுவர முயற்சிப்பதாகவும் வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர்; தடை செய்யப்பட்டதாக அறிவக்கப்பட்டுள்ள 16 மீன்பிடி தொழில்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்கே வாக்களிக்க வேண்டும். ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தது போன்று எதனையும் செய்யவில்லை. இதனாலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிராகரிக்க வேண்டும். அட்டைப் பண்ணை பிரச்சினை உட்பட மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகள் குறித்தும் தற்போதைய ஆளுநருடன் கதைத்தோம். இதன்போது கடற்றொழில் அமைச்சருடன் கதைத்து விட்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு தருவதாக ஆளுநர் கூறினார். இன்றுவரை அதற்கு எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை. எல்லோரும் எங்களை அழைத்து கதைக்கின்றார்கள் ஆனால் பதில் எதுவும் வழங்காமல் கலைப்பதுடனேயே நிறுத்தி விடுகின்றார்கள். பின்னர் மீண்டும் ஆளுநர் உட்பட அதிகாரிகள் இணைந்து கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு கதைத்துள்ளார்கள். மீனவ அமைப்புக்களுடன் கதைக்காமல் இந்த செயற்பாட்டை செய்கின்றனர். கடல் அட்டை பண்ணையை கொடுப்பதற்கு நீங்கள் யார்? குறித்த கடற்பகுதி அமைந்துள்ள கடற்தொழில் சங்கம் முதலில் அனுமதிக்க வேண்டும். பின்னர் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். அந்த இடத்தில் அட்டைப் பண்ணை அமைக்க முடியுமா முடியாதா என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் சிறு தொழிலாளி ஒருவனை அழைத்துச் சென்று அறைக்குள் வைத்து மிரட்டி, அடித்து, காசு தருவதாக கூறி நீங்கள் இலஞ்சங்களை வேண்டி உங்களது பொக்கட்களை நிரப்பி நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை. ஒரு அதிகாரி கூறினார் நாங்கள் அனுமதி கொடுத்தால் நீங்களும் அனுமதி கொடுக்கத் தான் வேண்டுமென்று. ஏனென்றால் அவர் இலஞ்சம் வேண்டும் புலி. அவர் இலஞ்சத்திலேயே பிறந்து, இலஞ்சத்திலேயே வளர்ந்து, இலஞ்சத்திலேயே மூழ்கியுள்ளார். அப்படியாயின் நீங்கள் அதை சொல்வீர்கள் தானே. தேவையில்லாத வேலைகள் பார்க்காதீர்கள். கடற்தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர் முடிவுகளை எடுங்கள்-என்றார். https://newuthayan.com/article/மீன்பிடி_அமைச்சால்_கொண்டுவரவிருக்கும்_கடற்றொழில்_சட்டம்_மீனவர்களால்_நிராகரிக்கப்பட்டது_-_நா.வர்ணகுலசிங்கம்!
  5. யாழ். பல்கலையின் பட்டமளிப்பு விழா நாளை! 4 நாள்கள்: 13 அமர்வுகள் 3,920 பேருக்குப் பட்டங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை புதன்கிழமை முதல் 22ஆம் திகதி சனிக்கிழமை வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நேற்றுத் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: 39ஆவது பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார். பட்டமளிப்பு விழாவில், உயர்பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்படிப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன – என்றார். https://newuthayan.com/article/யாழ்._பல்கலையின்_பட்டமளிப்பு_விழா_நாளை!
  6. சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை – அர்ச்சுனா எம்.பி! சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒருபெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் நாடாளுமன்ற உரையின் போது பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. இந்த விடயம் சம்பந்தமாக அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஒரு இளம் சமுதாயம் அழியும் வகையிலான ஓர் ஆதரன் என்னிடம் வந்த காரணத்தினால் ஒரு சமூகப் பொறுப்புடனேயே இதனை நாடாளுமன்றில் பேசினேன் எனத் தெரிவித்தார். மேலும் சட்டத்தரணி சுவஸ்திகாவை விமர்சித்தமை தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, நான் சுவஸ்திகா குறித்து இதுவரை எந்தக் கருத்தும் நாடாளுமன்றில் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, குறித்த விடயத்தை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு பேசியுள்ளார். நான் குறித்த நபர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசவில்லை. எனவே நான் இல்லாத சந்தர்ப்பத்தில் வேறு யாரேனும் நாடாளுமன்றில் அவர் குறித்து பேசியிருக்கலாம் என நினைக்கிறேன். தவிர சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை எனத் தெரிவித்தார். https://newuthayan.com/article/சட்டத்தரணி_சுவஸ்திகா_மீது_தனிப்பட்ட_கோபம்_எதுவும்_இல்லை_–_அர்ச்சுனா_எம்.பி!
  7. த.மு.கூ தனித்தும் கூட்டாகவும் போட்டி! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி அதன் ஒற்றுமையை சிதற விடாமல் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளன. 2015 இல் உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக அசைக்க முடியாத கூட்டணியாக இருந்து வருவதோடு இதுவரை, மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள், மூன்று பாராளுமன்றத் தேர்தல்கள், ஒரு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சந்தித்து வந்துள்ளதோடு, இரண்டாவது முறையாகவும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாரக உள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் தேசியக் கட்சிகள் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்தன. அதில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்சிகளுக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பாராளுமன்றத்தில் அவர்கள் குரல்கொடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பு, நுவரெலியா, பதுளை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சில இடங்களில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னதிலும், சில இடங்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் “ஏணி” சின்னத்திலும், சில இடங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் “அரிவாள்” சின்னதிலும், தனித்துப் போட்டியிடவுள்ளதோடு, சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் “டெலிபோன்” சின்னத்தில் இணைந்தும் போட்டியிடவுள்ளன. அதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், தேர்தலுக்குப் பிறகு, ஏனைய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பான புரிந்துணர்வு பேச்சுவார்தைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்து முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு வட்டாரத்திலும் மக்களோடு மக்களாக இருந்து, சமூகம் சார்ந்த விடயங்களில் முன்வந்து உதவிகள் வழங்கியும், ஒத்தாசை புரிந்தும் மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளவர்களை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை தம்மோடு சுக துக்கங்களிலும், அரசியல் ரீதிலும், அரசியலுக்கு அப்பாலும் பங்கு கொண்டவர்களையும் எதிர்காலத்தில் மக்களுக்காக செயற்படப் போகின்றவர்களையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களித்து தெரிவு செய்ய வேண்டிய கடமை மக்களைச் சேர்ந்ததாகும். தேர்தல்களில் அரசியல் கட்சிகளோடு, சுயேச்சைக் குழுக்களும் வேட்பாளர்களை நிறுத்துவதற்குத் தயாராக உள்ளன. எனினும், தனி மனித செல்வாக்கே பெரும்பாலும் வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். எது எப்படியோ தமக்கு சேவை செய்யக் கூடியவர்களைத் தெரிவு செய்ய மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார். https://www.samakalam.com/த-மு-கூ-தனித்தும்-கூட்டாக/
  8. யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா! உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார். இதன் போது அர்ச்சுனா எம்பி கருத்து தெரிவிக்கையில்.. வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கபைய யாழிலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாக கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கிறோம். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு எம்மிடம் போதிய நிதி இல்லாததால் போட்டியிடும் வேட்பாளர்களிடமே அதற்கான நிதியை வழங்குமாறு கேட்டிருக்கிறோம். அவ்வாறு அவர்கள் வழங்குமிடத்தே அந்த நிதியை நாம் மீண்டும் அவர்களிடம் கிடைக்கும் என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தும் இருக்கிறோம். எமக்காண பணம் வந்த பின்னர் அந்த நிதியை நிச்சயம் அவர்களிடமே வழங்குவோம். இதனடிப்படையில் வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள சபைகளுக்கு தொடர்ந்தும் நாம் கட்டுப் பணத்தை செலுத்த உள்ளோம். இவ்வாறு அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தி சகல இடங்களிலும் தேர்தலில் போட்டியிடுவோம். இதேவேளை யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக எனது செயலாளர் சட்டத்தரணி கௌசல்யாவை நிறுத்த உள்ளோம். எங்களிடம் ஒழித்து மறைக்கும் எண்ணங்களோ சிந்தனையோ இல்லை. ஆகவே வடகிழக்கில் சகல சபைகளிஙும் நாம் போட்டியிடுகிற போது தமது முழுமையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும். அவ்வாறாக மக்கள் தமது ஆதரவை எமக்கு வழங்குவார்கள் எனவும் எதிர்பார்ப்க்கிறோம் என்றார். https://www.samakalam.com/யாழ்-மேயர்-வேட்பாளராக-கள/
  9. முகநூலில் இருந்து.. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கிறேன் என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சக பா.உ சந்திரசேகரன் அவர்களை சீண்டி மலையக மக்களை இழிவுபடுத்தினார் டாக்குத்தர் அர்ச்சுனா. படிச்சவன் எல்லாம் அறிவுஜீவி என்ற கணக்கில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நீ என்ன படிச்சனி? பல்கலைக்கழகம் போனனியா? உன்ரை கல்வித் தகைமை என்ன? என அசல் யாழ்ப்பாண கல்விப் பவுசு மனநிலையின் கைதியாக உழல்கிறார் அவர். இப்போ பெண் அரசியல் செயற்பாட்டாளரை "விபச்சாரி" என விளித்து ஒரு ஆணாதிக்க ஒழுக்கவாதியாகி தாக்குதல் தொடுக்கிறார். அந்த பெண் செயற்பாட்டாளரின் அரசியல் அறிவுக்கும் தத்துவார்த்த அறிவுக்கும் ஈடுகொடுக்க அவரது டாக்குத்தர் சான்றிதழினதும் மும்மொழி அறிவினதும் போதாமையானது மனித இழிவுபடுத்தலை அவரிடமிருந்து முன்தள்ளுகிறது. நமது இயக்கங்கள் ஒழுக்கவாதங்களை கேள்விக்கு உட்படுத்தி முன்னேறாமல் அதற்குள் சுழன்று திரிந்தவர்கள். வறுமை துரத்தி பால்வினைத் தொழிலுக்குள் தள்ளிய பெண்களை 'சமூக விரோதி' என மின்கம்ப தண்டனை வழங்கியவர்கள். அந்த நிலைக்கு தள்ளிய அரசியல் பொருளாதார சமூக காரணிகளை கட்டவிழ்த்து செயற்பட வக்கில்லாமல் தேங்கிய அறிவுடன் இருந்தது மட்டுமன்றி, பால்வினை செயற்பாட்டை நுகரும் ஆண் பட்டாளமின்றி பால்வினைத் தொழில் எவ்வாறு இயங்குநிலையில் இருக்கும் என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் இருந்தனர். அதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் சட்டத்தாலும் பெண்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்தியதற்கு அப்பால் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியல் போராட்டம் புலிகளின் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் காத்திரமாக இருந்ததில்லை. வளர்ச்சி அடையவுமில்லை. அதனாலேயே தப்பிப் பிழைத்த புலிப் பெண் போராளிகளை இயக்கத்தவர் மட்டுமல்ல சமூகமும் கீழ்நிலைக்கு தள்ளி வாழ்வாதாரத்துக்கு வழியற்றவர்களாக ஆக்கியது. ஆணாதிக்க கற்பிதங்களை நொருக்கிக் காட்டிய அவர்களை பெருமையாக கொண்டாட வேண்டிய சமூகம், போரின் பின் அதே போர்க்குணத்தை 'பெண்மை'க்கு எதிரானதாக நிறுத்திய அவலம் நடந்தது. அவர்களை திருமணம் செய்ய சமூக ஆண்கள் உட்பட ஆண் போராளிகள்கூட பின்னின்றனர். இதன்வழி வந்த இன்றைய கலாச்சார காவலர்கள் யூரியூப் தொடக்கம் பாராளுமன்றம் வரை பேசுகிற பேச்சுகளில் அறிவு கிழிந்து தொங்குகிறது. 'பாலியல் வல்லுறவு' என்ற வார்த்தையை பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு எனவும் 'விபச்சாரம்' என்பதை பாலியல் தொழில், பால்வினைத் தொழில் எனவும் இலங்கையின் தமிழ் செய்திப் பத்திரிகைகள்கூட எழுதத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. புகலிட மாக்சியர்கள் ஒருசிலர் கூட இப்போதும் 'பாலியல் வல்லுறவு', 'விபச்சாரம்' (அரசியல் விபச்சாரம்) என எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க மொழி, ஆணாதிக்க ஒழுக்கவாதம் என்பவற்றை தாண்ட முடியாமல் அவதிப்படுகிற நிலை அவர்களது. சக மனிதரை உடல் அவமதிப்பு அல்லது அறிவு அவமதிப்பு செய்கிற நிலை இன்னொருபுறம் பெரும்பாலானவர்களிடமும் இருக்கிறது. மிருகங்களை உருவகப்படுத்தி பேசுகிற நிலை காணப்படுகிறது. ஒருவேளை நாயோ குரங்கோ பேசும் வல்லமை கொண்டிருந்தால் மனிதர்களுக்கு அவை -தமது தனித்துவம் குறித்து- வகுப்பெடுக்க வேண்டி வந்திருக்கும். இந்த எல்லா கசடுகளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டு மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் போய்வருவதற்கு டாக்குத்தருக்கும் வேறு பலருக்கும் கோட்டும் சூட்டும் வெள்ளை வேட்டியும் பவுசும் வேறு தேவைப்படுகிறது. Ravindran Pa நன்றி https://www.facebook.com/share/p/15vnSeGRsx/?
  10. Israel - Gaza : மீண்டும் போரை தொடங்கியிருக்கும் இஸ்ரேல்... காஸா மீது தாக்குதல்; 300 பேர் பலி VM மன்சூர் கைரி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்குப் பிறகு இஸ்ரேல் நடத்தியிருக்கும் மிகக் கொடூரமான தாக்குதல் இது. குறிப்பாக அகதிகள் தங்ககியிருந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. Isreal - Gaza ஜனவரி மாதம் தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று அதிகாலை முதல் காஸா முழுவதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். காஸா நகரம், டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ், ரஃபா உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்குப் பிறகு இஸ்ரேல் நடத்தியிருக்கும் மிகக் கொடூரமான தாக்குதல் இது. குறிப்பாக அகதிகள் தங்ககியிருந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. Isreal - Gaza இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இஸ்ரேல், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக காஸா சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதேபோன்று சிரியா, லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போரைத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. https://www.vikatan.com/government-and-politics/more-strikes-hit-gaza-death-toll-rises-to-more-than-300
  11. எழுதும் கதை - ஷோபாசக்தி [‘காலம்’ 61|62- பேராசிரியர் நுஃமான் சிறப்பிதழில் வெளியாகிய எனது கட்டுரை] 1997- 2024 காலப்பகுதியில் நான் எழுதிய மொத்தச் சிறுகதைகளும் தொகுப்பாக்கப்பட்டு ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. அதற்கான இறுதிக்கட்டத் தொகுப்புப் பணிகளை இன்று இரவு சென்னையில் முடித்தேன். காலையில் இலங்கை செல்லவிருக்கிறேன். இந்த உற்சாகமான தருணத்தில், நான் எழுத வந்த கதையை வாசகத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்வது பொருத்தமாகயிருக்கும் என நம்புகிறேன். இலக்கியத்தின் மீதான ஈர்ப்பும் மதிப்பும் எனக்கு எந்த வயதில் ஏற்பட்டன என நிதானித்துச் சொல்ல முடியவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்தே கையில் கிடைப்பதை எல்லாம் படித்தவாறே இருக்கிறேன். ஜெயகாந்தனின் கதைகள் மற்றும் வீரகேசரிப் பிரசுர நாவல்கள் எனக்கு இலக்கிய வாசிப்பின் எண்ணற்ற வாசல்களைத் திறந்துவிட்டன எனச் சொல்லலாம். அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியத்தின் மீதான என்னுடைய வெறிகொண்ட நேசமும் இலக்கிய ஆசிரியர்கள் மீதான அளப்பெரிய மதிப்பும் சற்றேனும் குறைந்ததில்லை. மாறாக, அவை மென்மேலும் வளர்ந்துகொண்டே வருகின்றன. என்னுடைய வாழ்க்கையை வடிவமைத்ததில் இலக்கியத்திற்கே முதன்மைப் பங்குண்டு. எனக்கான வாழ்க்கை அறங்களை முதன்மையாக இலக்கியங்களே எனக்கு வகுத்தளித்தன. இவ்வகையில், லியோ டால்ஸ்டாயும் மக்ஸிம் கோர்க்கியும் ஜோன் ஜெனேயும் கே.டானியலும்தான் என்னுடைய முதன்மையான ஆசிரியர்கள். இன்னொருபுறத்தில் எஸ்.பொன்னுத்துரை, கு.அழகிரிசாமி, பிரேம்- ரமேஷ், சாருநிவேதிதா ஆகியோர், எழுதும் கலையில் எனக்கு வழிகாட்டிகள். அவர்களது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டே நான் என் எழுதும் கலையைச் செப்பனிட்டேன். இலக்கியப் பிரதிகள் குறித்த மதிப்பீடுகள், இலக்கியப் பிரதிகள் மீதான பின்நவீனத்துவ வாசிப்புப் போன்றவற்றை எனக்குக் கற்பித்தவர்களில் பேராசிரியர் அ.மார்க்ஸ் முதன்மையானவர். மேலே குறிப்பிட்டவர்கள் இல்லாமல் இலக்கியத்தில் இந்தத் தொலைவுவரை நான் வந்திருக்க முடியாது. என்னுடைய பதினைந்து வயதுவரை என்னுடைய உலகம் ‘அல்லைப்பிட்டி’ என்ற சிறு தீவகக் கிராமத்திற்குள் மட்டுமேயிருந்தது. அங்கிருந்துகொண்டுதான் இலக்கியம், திரைப்படம், நாடகம் என ஏகப்பட்ட மாபெரும் கனவுகளுடன் நான் வளர்ந்தேன். இந்தத் தளங்களெல்லாம் எனக்குச் சிறிதேனும் வசப்படும் என நான் ஒருபோதுமே நினைத்திருந்ததில்லை. என்னுடைய குடும்ப – வாழ்க்கைப் பின்னணி அத்தகைய அதலபாதாளத்திலிருந்தது. படிப்பும் பத்தாவது வரைதான். ஆனாலும், நான் விடாமல் என்னுள் கனவுகளை உருவாக்கிக்கொண்டேயிருந்தேன். அவை நனவாவதற்கான சாத்தியத்தின் நுனிகூட எனக்குத் தென்படவில்லை. படிக்கும் கதைகளை, கவிதைகளைக் குறித்து உரையாடுவதற்குக் கூட எனக்கு ஒரேயொரு ஆள் இல்லாமலிருந்தது. இலக்கியம் குறித்த உரையாடல்கள் ஒருவருடைய இலக்கிய அறிதலுக்கு மிகவும் முக்கியமானவை என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய பதினாறாவது வயதில் முதன்முதலாக உரையாடலுக்குச் சிறுவாசல் திறந்தது. அந்தக் கதவைத் திறந்தவர் கவிஞரும் ஓவியரும் எழுத்தாளருமான நிலாந்தன். நிலாந்தனும் நானும் மட்டுமே ஒரு முகாமில் தங்கியிருந்த நாட்கள் அமைந்தன. அங்கே வைத்துத்தான் அவரின் புகழ்பெற்ற கவிதையான ‘கடலம்மா’வை நிலாந்தன் எழுதினார். அந்தக் கவிதையின் முதல் வாசகன் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். அப்போது நிலாந்தனுக்கு இருபது வயதுதான். ஆனாலும், அவருக்கு யாழ்ப்பாணத்திலிருந்த இலக்கியர்களுடன் நல்ல அறிமுகமிருந்தது. கவிஞர்கள் சு.வில்வரத்தினம், அ.யேசுராசா, ஓவியர் மாற்கு போன்றவர்களை நிலாந்தன் சந்திக்கச் சென்ற சில தருணங்களில் நானும் கூடவே சென்று, ஓர் ஓரமாக நின்று அவர்களது உரையாடல்களைக் ‘கெலி’யோடு பருகிய நாட்களவை. நிலாந்தன் என்னுடைய இயக்க வாழ்க்கையைத் தொடக்கி வைத்தவர் மட்டுமல்லாமல், இலக்கியம் குறித்த எனது அடிப்படைப் புரிதலுக்கு முதல் காரணியாகவுமிருந்தார். என்னுடைய பதினேழாவது வயதில், எனது முதல் கவிதை ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வெளியானது. தொடர்ந்து ‘செய்திக்கதிர்’ என்ற சஞ்சிகையில் கவிதைகள் வெளியாகின. இதே காலப்பகுதியில் சிறுகதைகளை எழுதப் படாத பாடுபட்டேன். ஆனால், நம்பிக்கையின்மையுடன் போராடிப் போராடி எழுதியவற்றைக் குப்பையில் போட்டேன். ‘அரும்பு’ என்றொரு கையெழுத்து – போட்டோகொப்பி பத்திரிகையில் என்னுடைய முதலாவது சிறுகதை வெளியானதற்கு, அப்பத்திரிகையின் ஆசிரியர் நானே என்பது மட்டுமே காரணமாகயிருந்தது. இந்திய அமைதிப்படையின் காலத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து என்னுடைய இருபதாவது வயதில் வெளியேறிக் கொழும்புக்குச் சென்றேன். அப்போதும் கனவுகளுடனேயே சென்றேன். கொழும்பில் அரச படையினரால் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டபோதும் கனவுகளுடனேயே சென்றேன். சிறைக் கொடுமையிலிருந்தும் என் கனவுகளே என்னை ஆற்றுப்படுத்தின. இக்காலப் பகுதியில் படிப்பதற்கு பைபிளைத் தவிர வேறு நூல் எனக்குக் கிடைக்கவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்ததும், பைபிளோடு சேர்த்துப் பாரதியார் கவிதைத் தொகுப்பையும் எடுத்துக்கொண்டு 1990-இல் அகதியாகத் தாய்லாந்துக்குச் சென்றேன். தமிழ் மொழியோடோ எழுத்தோடோ எந்தத் தொடர்புமில்லாத தேசம். அங்கே ‘நெற்றிக்கண்’ என்றொரு கையெழுத்து – போட்டோகொப்பி பத்திரிகையை என்போன்ற அகதிகளிடையே வெளியிட்டேன். என்னுடைய இரண்டாவது சிறுகதை அந்தப் பத்திரிகையில் வெளியானது. என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் பிரான்ஸுக்கு அகதியாகச் சென்றேன். எத்தனையோ நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாதுகாப்பும் நிம்மதியும் மூன்று வேளை உணவும் தூங்குவதற்கு ஓர் இடமும் மட்டுமல்லாமல், என்னுடைய வாழ்க்கையிலேயே முதன்முறையாக எனக்கொரு எழுதும் மேசையும் கிடைத்தது. இலக்கியம் சார்ந்த என்னுடைய கனவுகள் என்னைத் துரத்திக்கொண்டிருந்தன. பாரிஸ் தமிழ்க் கடைகளில் கிடைக்கும் எல்லாப் பத்திரிகைகளையும் வார இதழ்களையும் வாங்கி வெறிகொண்டு வாசித்தேன். 1986-இல் விட்டுப்போன புலிகள் இயக்கத் தொடர்பு, வெளிநாட்டுப் புலிகள் அமைப்பின் மூலம் சாதுவாகப் புதுப்பிக்கப்பட்டது. நான் 1986-ல் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய பின்பு என்னால் எந்தவித அரசியல் செயற்பாட்டையும் தொடர முடியவில்லை. எனது உயிரைப் பாதுகாப்பதற்கான ஓட்டமும், என்னுடைய கனவுகளுமே என்னை இயக்கிக்கொண்டிருந்தன. எனினும், தமிழ்ப் பகுதிகளில் இலங்கை இராணுவம் ஏதாவது கூட்டுப் படுகொலைகளையும் அழிவுகளையும் செய்வதை அறியும் போதெல்லாம், என் மனம் கொந்தளித்து ஊசலாடிக்கொண்டேயிருந்தது. மீண்டும் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்படலாமா என்ற குழப்பம் என்னுடன் இருந்துகொண்டேயிருந்தது. இயக்கத்தின் தலைமைகள் மீது எனக்கு அதிருப்தி இருந்ததே தவிர, தமிழீழ இலட்சியத்திற்கு நான் எனக்குள் விசுவாசமாகவே இருந்தேன். புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஒரேயொரு சொல்லைக் கூட நான் சொன்னதில்லை என்பதற்கு அப்பால், யாராவது புலிகள் இயக்கத்தை அல்லது தமிழீழப் போராட்டத்தை விமர்சித்தால் அவர்களுடன் வம்புச் சண்டைக்கும் போய்விடுவேன். பாரிஸின் புறநகரிலிருந்த ஒரு தொழிலாளர் விடுதியில் கவிஞர். க.வாசுதேவனுடன் நான் இழுத்த வம்புச் சண்டை நண்பர்கள் வட்டாரத்தில் அப்போது பிரபலம். பாரிஸில் இருந்த எனது நண்பர்கள் எல்லோருமே விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். பிரான்ஸ் புலிகள் அமைப்பிலிருந்த எனது முன்னாள் சகாக்கள் சிலர் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி, தங்களுடன் இணைந்து வேலை செய்யுமாறு கேட்டார்கள். 1993-இல் பாரிஸில் புலிகள் நடத்திய மாபெரும் மேதின ஊர்வலத்தில் கலந்துகொண்டேன். நாங்கள் ஊர்வலத்தில் இருந்தபோதுதான், கொழும்பில் ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கிடைத்து. ஊர்வலத்தில் உற்சாகம் கரைபுரண்டோட முழக்கங்களை எழுப்பிச் சென்றோம். இவை எல்லாமே நான் பிரான்ஸ் வந்த ஒன்றரை மாதங்களுக்குள் நடந்து முடிந்த சம்பவங்கள். இந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள், பிரான்ஸில் நடந்த தமிழ் இலக்கியப் போட்டிகள் இரண்டில் ‘அல்லையூர் அன்ரனி’ என்ற பெயரில் கலந்துகொண்டேன். போட்டிக்கு எழுதிய கவிதை- கதை எல்லாமே தமிழீழ விடுதலைப் போரட்டத்திற்கான – குறிப்பாகப் புலிகளுக்கான- பரப்புரை எழுத்துகளே. இவற்றில் ‘நெஞ்சில் உரமுமின்றி’ என்ற கதை மறுபிரசுரமாக ஈ.பி.டி.பி-யின் ‘தினமுரசு’ இதழிலும் வெளியானது அரசியல் ஆச்சரியமே. இரண்டு போட்டிகளிலுமே கவிதைகளுக்குத் தங்கப்பதக்கங்களும் சிறுகதைகளுக்கு வெள்ளிப்பதக்கங்களும் எனக்கு அறிவிக்கப்பட்டன. அந்தப் பதக்கங்களைப் பெறுவதற்கு முன்பே, தெருவில் ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையை விற்றுக்கொண்டிருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத் தோழர்களை நான் சந்தித்தேன். அவர்களுடனான முதல் உரையாடலில் இருந்தே என்னுடைய அரசியல் பார்வை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. தங்கப்பதக்கங்களையும் வெள்ளிப்பதக்கங்களையும் நான் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். அந்தச் சந்திப்புக்குப் பின்பாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் நான் நான்கு வருடங்கள் பயணித்தேன். அந்த அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாக இருந்தது. ட்ராட்ஸ்கியவாதிகளான அவர்கள் சர்வதேசவாதிகள். தேசியவாதத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். அவர்கள் மூலமாகத்தான் நான் தேசியவாதத்திலிருந்து என்னை முற்றாகத் துண்டித்துக்கொண்டேன். இது ஒரு நாளில் நடந்த மாற்றமல்ல. மார்க்ஸிய -லெனினிய – ட்ராட்ஸ்கிய மூல நூல்களையும் ரோஸா லக்ஸம்பேர்க்கையும் லீப்னெக்டையும் டேவிட் நோர்த்தையும் பீற்றர் ஸ்வாட்டையும் நிக் பீம்ஸையும் கீர்த்தி பாலசூரியாவையும் தீவிரமாகப் படித்து எண்ணற்ற கலந்துரையாடல்கள் – வகுப்புகள் – விவாதங்கள் ஊடகத்தான் நான் மாறினேன். இந்தக் காலகட்டத்தில்தான் நான் தேசியவாதத்திற்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கினேன். தமிழ்த் தேசியவாதத்திற்குப் பதிலாக இலங்கைத் தொழிலாளர்களின் வர்க்க அணிதிரட்டலை முன்வைத்தேன். தமிழ்த் தேசியவாதத்தையும் விடுதலைப் புலிகளையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினேன். பாரிஸ் வீதிகளில் நின்று தோழர்களுடன் சேர்ந்து ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையையும் ‘மார்க்ஸிய முன்னோக்கு’ இதழையும் விற்பனை செய்தவாறே மக்களிடம் பேசத் தொடங்கினேன். பாரிஸின் புறநகர்களுக்கு வீடு வீடாகச் சென்று ட்ராட்ஸ்கியத்தையும் சர்வதேசியவாதத்தையும் பரப்புரை செய்தோம். சிறியளவில் பொதுக்கூட்டங்களை நடத்தினோம். அப்போது இலங்கையைப் பொறுத்தவரை எங்களது கட்சியின் நிலைப்பாடு ‘ஸ்ரீலங்கா -தமிழீழம் சோசலிஸக் குடியரசு’ என்பதாக இருந்தது. இலங்கையில் இனபேதங்களைக் கடந்து பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டு புரட்சி செய்யுமென்றும் நிரந்தரப் புரட்சியெனும் உலகப் புரட்சி நெருங்கிக்கொண்டிருக்கிறது எனவும் நாங்கள் மனதார நம்பினோம். நூற்றாண்டுக்கு முந்தைய கம்யூனிஸ நூல்கள் அந்தளவுக்கு எங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை வெட்டியதோடு மட்டுமல்லாமல், அதற்குள் வேகவேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறது எனவும் நம்பினோம். ஒரே வருடத்தில் காட்சிகள் மாறின. 1993 மேதினத்தில் புலிகளின் ஊர்வலத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசிய முழக்கங்களை எழுப்பிய நான் 1994 மேதினத்தில் அதே புலிகளது ஊர்வலத்தின் மத்தியில் நின்று ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையை விநியோகித்துக்கொண்டு, புலிகளின் தேசியவாதத்திற்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டிருந்தேன். அந்த ஊர்வலத்தில் அய்யாயிரத்திற்கும் குறையாத புலி ஆதரவாளர்கள். இவர்களிடயே புகுந்து நாங்கள் ஆறு தோழர்கள் எதிர்ப் பரப்புரை செய்துகொண்டிருக்கிறோம். கண்ணன் என்ற எங்களது தோழர் ஒருவர் புலிகளால் தாக்கப்பட்டார். ஒருகட்டத்தில் நாங்கள் அங்கிருந்து புலிகளால் விரட்டப்பட்டோம். நாங்கள் அந்த ஊர்வலத்திலிருந்து கிளம்பும்போதுதான், சில மணி நேரங்களுக்கு முன்பாகத் தோழர். சபாலிங்கம் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி எங்களுக்குக் கிடைத்தது. தொடர்ந்து வந்த காலம் மிகக் கொடுமையானது. புலிகள் எங்கள் மீது பரவலாகத் தாக்குதலை நடத்தினார்கள். ‘லா சப்பல்’ பகுதியில் ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகை விற்றுக்கொண்டிருந்தபோது, தோழர்கள் ஞானாவும் செழியனும் இரத்தம் வரும்வரை புலிகளால் தாக்கப்பட்டார்கள். சந்திரிகா பண்டாரநாயக்காவின் அரசியல் வருகையை வரவேற்றுப் புலிகள் நடத்திய ‘போரும் சமாதானமும்’ என்ற கூட்டத்திலும் நாங்கள் புலிகளின் உடல்ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டோம். இன்னொருபுறத்தில் ஜே.வி.பி-யினரும் எங்கள்மீது தாக்குதல்களை நடத்தினார்கள். இலங்கையில் எங்களது தோழர்கள் ஏற்கனவே ஜே.வி.பி-யால் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்தக் காலப்பகுதியில் பாரிஸில் ‘சுபமங்களா’, ‘புதிய பார்வை’, ‘கணையாழி’ ஆகிய இதழ்கள் ஒரு கடையில் கிடைக்கும். அந்த இதழ்களைப் படித்துவிட்டுக் கட்சித் தோழர்களிடம் விவாதிப்பேன். அந்த இதழ்கள் மட்டுமல்லாமல், இதழ்களில் எழுதுபவர்களும் குட்டி பூர்சுவாக்கள் என்பதே கட்சியின் நிலைப்பாடு. உங்களுக்கு இதையெல்லாம் நம்ப முடிகிறதா என்று தெரியவில்லை… இந்த இதழ்கள் நடத்தப்படுவதே உலக முதலாளித்துவத்தைக் காப்பாற்றும் ஒரே நோக்கில்தான் என்றளவுக்குத் தோழர்கள் அதிதீவிரமாகப் பேசுவார்கள். அதேபோன்று டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி போன்றவர்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இறையியல்வாதிகள் என்பார்கள். மக்ஸிம் கோர்க்கியை ‘ஸ்டாலினிஸ்ட்’ என்பார்கள். எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் எங்களது கட்சியினர் எவரொருவரையும் இலக்கியவாதியாக ஏற்றுக்கொண்டதில்லை. சிறுவன் என்னையா ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்! அப்போதெல்லாம் நான் கதைகளையும் கவிதைகளையும் எழுதிக் கட்சித் தோழர்களிடம் காட்டுவதுண்டு. நான் எழுதிய பிரதிகளில் தேசியவாதம், கலைப்புவாதம், காட்சிவாதம், அனுபவவாதம், தேசியப்புறநீங்கல்வாதம் எல்லாமே இருக்கின்றன எனச் சொல்லி என்னை இலக்கியரீதியாக நோகடிப்பதைக் கட்சி ஒரு கொள்கையாகவே வைத்திருந்தது. எவ்வாறு இலக்கியம் எழுத வேண்டும் என எனக்கு அறிவுரை சொல்வார்கள். என்னையொரு ட்ராட்ஸ்கிய செ. கணேசலிங்கனாக உருவாக்குவதே அவர்களது வேலைத்திட்டம் என நினைக்கிறேன். இந்த உரையாடல்கள் வழியாக நான் அறிந்துகொண்டதும் கற்றுக்கொண்டதும் ஏராளம் என்பதும் உண்மை. அவர்களோடு இருந்த நான்கு வருடங்களிலும் என்னுடைய ஒரேயொரு கதையோ கவிதையோ எங்கும் வெளிவந்ததில்லை. நான் எழுதியதையெல்லாம் அவர்கள் சிவப்பு மை பேனாவால் கிறுக்கித் தருவார்கள். நானும் அதிதீவிரக் கட்சி விசுவாசி என்பதால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்துவந்தேன். ஆனாலும், ஒரு மீறல் நடந்து போனது. 1996-இல் யமுனா ராஜேந்திரன் புலிகளின் பத்திரிகையான ‘ஈழமுரசு’வில் சினிமாக் கட்டுரைகளைச் சரமாரியாக எழுதிவந்தார். ஒரு பக்கக் கட்டுரையில் நூறு படங்களின் பெயர்களையும் அய்ம்பது இயங்குனர்களின் பெயர்களையும் நாற்பது தத்துவவாதிகளின் பெயர்களையும் முப்பது தவறான தகவல்களையும் உதிர்ப்பார். அடிப்படையிலேயே ஒரு சினிமா ரசிகனான எனக்கு இது எரிச்சலை ஊட்டியது. யமுனா ராஜேந்திரன் எழுதும் வழாவழா எழுத்துகளுக்கு எவரும் எதிர்வினையும் எழுதுவதில்லை. அவரை உண்மையிலேயே ஓர் அறிவாளியாகத்தான் தமிழ் உலகம் கருதுகிறதோ என்று எனக்கு அய்யமே ஏற்பட்டுவிட்டது. பாரிஸில் அப்போது கலைச்செல்வன், சுகன் போன்ற இலக்கியவாதிகள் இருப்பது எனக்குத் தெரியும். அவர்களிடம் இதுபற்றிக் கேட்கலாம் என்றால், இலக்கியவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதை எனது கட்சி விரும்பாது. மணிரத்னத்தை ஆகச் சிறந்த இயக்குநர் எனவும் ‘பம்பாய்’ திரைப்படத்தைப் புரட்சிக் காவியம் எனவும் யமுனா ராஜேந்திரன் எழுதியதையெல்லாம் என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. எனவே, நான் யமுனா ராஜேந்திரனைக் கிண்டலடித்து ‘சோவியத் யூனியனின் சினிமாவும் சில்க் ஸ்மிதாவின் முகங்களும்’ என்றொரு கட்டுரையை அவரைப் போலவே பம்மாத்துப் பண்ணி எழுதி ‘சிவசக்தி’ என்ற பெயரில் ‘ஈழமுரசு’வுக்கு அனுப்பிவைத்தேன். அடுத்த வாரமே அந்தக் கட்டுரை வெளியாகியது. அதற்கு அடுத்த வாரம் இன்னொரு கூத்தும் நடந்தது. ‘அன்புள்ள சகோதரி சிவசக்திக்கு, உங்களது கோபத்தை நான் புரிந்துகொள்கிறேன்…’ என ஆரம்பித்து யமுனா ராஜேந்திரன் ஒரு பதிலை ‘ஈழமுரசு’வில் எழுதியிருந்தார். எனது கட்டுரை அச்சேறிய குறுகுறுப்பை என்னால் தாங்கவே முடியவில்லை. எனவே கட்சியிடம் விஷயத்தைப் போட்டுடைத்துவிட்டேன். என் நல்லகாலத்திற்கோ அல்லது கெட்டகாலத்திற்கோ எங்களது கட்சியின் தலைவர் விஜே டயஸ் அப்போது இலங்கையிலிருந்து பாரிஸ் வந்திருந்தார். ஓர் இரவு நடந்த சந்திப்பில் அவர் என்னைக் கடுமையாக விமர்சித்தார். புலிகளின் பத்திரிகையான ‘ஈழமுரசு’வில் நான் எழுதியதைக் கட்சி கடுமையாகக் கண்டித்தது. அந்த இரவிலேயே கட்சியிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்டுவிட்டு, ‘சிவசக்தி செத்துவிட்டான்’ என அறிவித்தேன். பின்பு கொஞ்ச நாட்கள் நல்லபிள்ளையாக எழுதாமல் இருந்தேன். அதைக் கெடுப்பதுபோல ஒரு நாடகப் போட்டிக்கான அறிவிப்பு வந்தது. பாரிஸில் நம்மவர்கள் நடத்திய பல நாடகங்களைக் கண்டு நொந்திருந்த என்னை அந்த அறிவிப்பு உசுப்பிவிட்டது. ‘அட்டென்ஷன் ப்ளீஸ்’ என்றொரு நாடகத்தை எழுதிப் போட்டிக்கு அனுப்பிவிட்டேன். அப்போதுதான் ‘ஷோபாசக்தி’ என்ற பெயரை எனக்குச் சூடிக்கொண்டேன். அந்த நாடகப் போட்டியில் எனக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. நாடகமும் ‘கலைமுகம்’ இதழில் வெளியானது. ஆனால், அந்த நாடகத்தை எழுதியது நான்தான் என்பது யாருக்கும் தெரியாது. பாரிஸ் இலக்கிய உலகில் அப்போது ஷோபாசக்தி மர்ம நபர். இதைப் போல வேறு சில மர்ம இலக்கிய நபர்களும் அப்போது இருந்தார்கள். இந்த மர்ம நபர்களைக் கண்டுபிடிப்பதை ஒரு வேலையாகவே வைத்துக்கொண்டு சில இலக்கியவாதிகள் திரிந்துகொண்டிருந்தார்கள். இவர்களில் ஓசை மனோ முக்கியமானவர் என்றே சொல்லலாம். அப்போது, கணேசலிங்கம் என்றொரு நண்பர் என்னோடு ‘ஈரோ டிஸ்னி’யில் வேலை பார்த்துவந்தார். அவர் நடித்த நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் கதையோடு கதையாக என்னுடைய நாடகப் பிரதியின் மீதான அவரது அபிப்பிராயத்தைக் கேட்டுப் பார்த்தேன். அருமையான நாடகம் என்றார். இதற்குப் பிறகு என்னால் என்னையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், நான்தான் அந்த ஷோபாசக்தி என்று அவரிடம் சொல்லிவிட்டேன். கணேசலிங்கம் அதை ‘ஓசை’ சஞ்சிகையை நடத்திய மனோவிடம் சொல்லியதோடு மட்டுமல்லாமல், ஒரு நாடக விழாலில் என்னை மனோவிடம் காட்டியும் கொடுத்துவிட்டார். நான் மனோவிடம் பேசிய முதல்வார்த்தை எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகமிருக்கிறது. “நீங்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?” எனக் கறாராகக் கேட்டேன். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு “ஆம்” என்றார். அதற்குப் பின்புதான் நான் அவரிடம் பேசவே தொடங்கினேன். காலம் செல்வம் போன்றவர்தான் ஓசை மனோவும். இவர்கள் இருவருமே தங்களது இதழுக்காகக் கதை, கட்டுரையை ஒருவரிடம் பெற்றுக்கொள்வதற்காகப் பலதரப்பட்ட தந்திர உத்திகளைக் கையாள்வார்கள். அப்போது மனோ ‘அம்மா’ இதழைத் தொடங்குவதற்கான யோசனையுடன் இருந்தார். நானும் தோழர் அசோக்கும் சில மாதங்கள் ஒரே தங்குவிடுதியில் அருகருகாக வசித்தோம். அசோக் தீவிரமான இலக்கிய வாசகராகயிருந்தார். அவரிடமும் நான்தான் ஷோபாசக்தி என்பதை அவிழ்த்துவிட்டிருந்தேன். அவர் மூலமாகத் தோழர் எம். ஆர். ஸ்டாலின் எனக்குப் பழக்கமானார். ஒருநாள் ஸ்டாலினிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. நான் எழுதிய நாடகம் தொடர்பாக என்னைத் தோழியர் லஷ்மி சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். அப்போது நான் அடைந்த பரவசம் கொஞ்சநஞ்சமல்ல. பாரிஸில் நடந்த சில நாடக விழாக்களுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் சென்று அவதானித்து வந்து நான் கட்சிக்கு ‘ரிப்போர்ட்’ வழங்குவதுண்டு. இந்த இடங்களில் லஷ்மி, கலைச்செல்வன், சுகன் போற்றோரைத் தூர நின்று கண்டிருக்கிறேன். குறிப்பாக, லஷ்மி கூட்டங்களில் உரக்க விவாதிக்கும் முறையும் அவரது நடவடிக்கைகளும் அவர்மீது எனக்கு மிகுந்த பிரமிப்பை உண்டாக்கியிருந்தன. நான் என் வாழ்க்கையில் முதன்முதலாக நேரில்கண்ட பெண்நிலைவாதச் செயற்பாட்டாளர் அவர்தான். அவரது செயற்பாடுகளால் கவரப்பட்டே பெண் விடுதலையைப் பேசும் அந்த நாடகத்தை நான் எழுதியிருந்தேன். அவரே என்னோடு பேச விரும்புகிறார் என்றபோது, எனது இலக்கியத் தன்நம்பிக்கை தன்பாட்டுக்கு எகிறத் தொடங்கியது. ஓர் உணவுவிடுதியில் நடந்த அந்தச் சந்திப்புக்கு லஷ்மியோடு விஜியும் ஸ்டாலினும் இன்னொருவரும் வந்திருந்தனர். அந்த இன்னொருவர் மு. நித்தியானந்தன் என்பதை அறிந்தபோது, நான் மயங்கிவிழாத குறைதான். வெலிகடைப் படுகொலையிலிருந்து தப்பித்தவர், மட்டக்களப்புச் சிறையுடைப்பின் நாயகர்களில் ஒருவர், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர், ஆழமான அறிவுஜீவி என எத்தனையெத்தனை விஷயங்கள் அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்! என்னுடைய நாடகப் பிரதியை மு. நித்தியானந்தன் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். ஒரு பிரதியை அல்லது ஒருவரை அவருக்குப் பிடித்துவிட்டால் வானளாவப் பாராட்டுவதிலும் பிடிக்காவிட்டதால் அதலபாதாளத்தில் குப்புறத் தள்ளிவிடுவதிலும் மு. நித்தியானந்தன் அவர்கள் சாரு நிவேதிதாவுக்கே சவால் விடக்கூடியவர். அவரிடம் பாராட்டுப் பெறுவதென்றால் சும்மாவா! நான் எழுதிய நாடகத்தை மேடையேற்றுவதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காகவே அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். இதுதானே நான் சிறுவயது முதலே கண்ட கனவு! மகிழ்ச்சியில் நான் தத்தளித்தாலும் கட்சிக் கட்டுப்பாடு என் கழுத்தில் கத்தியாக இருந்ததால், அடுத்தநாள் பதில் சொல்வதாகச் சொன்னேன். அடுத்த நாளே கட்சித் தோழர்களைச் சந்தித்து இந்தச் சந்திப்புக் குறித்துச் சொன்னேன். ‘குட்டிப் பூர்சுவாக்களுடன் எந்தத் தொடர்பும் கூடாது’ எனத் தோழர்கள் மறுபடியும் கண்டிப்பாகச் சொன்னார்கள். எனவே நான் லஷ்மியைத் தொலைபேசியில் அழைத்து ‘நீங்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளும்வரை உங்களுடன் இணைந்து என்னால் செயற்பட முடியாது’ எனச் சொல்லிவிட்டேன். ‘பரவாயில்லை’ என லஷ்மியும் சொல்லிவிட்டார். இந்தக் காலகட்டத்தில்தான் எனக்குத் தலித் அரசியல் குறித்த அறிமுகம் ‘நிறப்பிரிகை’ இதழ்கள் மூலமாக ஏற்படத் தொடங்கியது. அ.மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ் கவுதமன், பாமா எனத் தேடித் தேடிப் படிக்கத் தொடங்கினேன். வறட்டுவாத மார்க்ஸியத்தையும் அதிகாரம் மையப்படுத்தப்பட்ட கட்சி வடிவத்தையும் கண்டித்து அ.மார்க்ஸ் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தார். பின்நவீனத்துவ அலை தமிழக அறிவுலகை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதித்துக்கொண்டிருந்தது. நான் இது குறித்தெல்லாம் கட்சிக்குள் உரையாடத் தொடங்கினேன். மார்க்ஸிய மூல நூல்களைக் கரைத்துக் குடித்துச் செரித்த தோழர்களால் இந்தப் புதிய போக்கைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “இதெல்லாம் முதலாளித்துவம், என்.ஜி.ஓ” என்பதைத் தவிர அவர்களிடமிருந்து எனக்கு மேலதிக பதில்கள் கிடைப்பதாக இல்லை. இலங்கை – இந்தியச் சமூகங்களை வர்க்கச் சமூகங்கள் என வரையறுப்பதைக் காட்டிலும் சாதியச் சமூகங்கள் என வரையறுப்பதே சரியானது என எனக்கும் தோன்றியது. மேலிருந்து அதிகாரம் செலுத்தப்படும் கட்சி வடிவத்திற்கு எங்களது கட்சியே சாலப் பொருத்தமான உதாரணமாக இருந்தது. கட்சி அதிகாரம் மையத்திடம் குவிக்கப்பட்டு விளிம்புகள் வெறும் போராட்டப் பண்டங்களாகப் பார்க்கப்படுவதாக எனக்குத் தோன்றியது. இப்படிப் பல பல தோன்றிக்கொண்டேயிருந்தன. நான் கட்சியிலிருந்து மெல்ல மெல்ல விலகிச் செல்லத் தொடங்கினேன். அதுகுறித்துக் கட்சித் தோழர்களுக்கும் எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தினந்தோறும் உச்சாடனம் செய்யும் திரிபுவாதம், கலைப்புவாதம் போன்ற சொற்களுக்குத் தக்க உதாரணத்தைக் காட்ட ரஷ்யாவிலோ, சீனாவிலோ அல்லாமல் கண்முன்னேயே ஒருவன் கிடைத்துவிட்டான் என்பதால் அவர்களும் உற்சாகமடைந்திருப்பார்கள் என்பதே உண்மை. இன்றுவரை அவர்கள் என்னை எங்கேயாவது சந்திக்கும்போது, அவர்களது கண்களில் தெரிவது ஏளனமா அல்லது என்மீதான பரிதாபமா எனக் கண்டுபிடிக்கத் தெரியாமல் நான் திணறிக்கொண்டிருக்கிறேன். கட்சியுடனான என்னுடைய இந்த ஊசலாட்ட நிலை நீடிக்கும்போது, மனோ என்னைத் தொடர்புகொண்டு புதிதாகத் தொடங்கப்படவிருக்கும் ‘அம்மா’ இதழுக்குச் சிறுகதையொன்று தருமாறு கேட்டார். தோழர். சபாலிங்கம் கொல்லப்பட்டதற்குப் பின்பாக பிரான்ஸிலிருந்து வெளியான முதல் இலக்கிய இதழ் அம்மாவே. 1997-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதலாவது ‘அம்மா’ இதழில் முதலாவது கதையாக என்னுடைய ‘எலிவேட்டை’ கதை வெளியாகியது. அந்தக் கதையைத்தான் என்னுடைய முதலாவது கதையாக நான் கருதுகிறேன். வெளிவரயிருக்கும் தொகுப்பிலும் அதுவே முதற்கதை. அந்த வருடம் நான்கு கதைகள் எழுதினேன். மூன்று கதைகள் ‘அம்மா’வில் வெளியாகின. மூன்றாவது கதையான ‘மைசூர் ராசா’வில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகக் கட்சியின் மீதே கைவைத்துவிட்டேன். அத்தோடு கட்சியுடனான எனது கடைசி இழையும் அறுந்துபோயிற்று. நான்காவது கதையான ‘தேவதை சொன்ன கதை’ 1997 செப்டெம்பரில் இலக்கியச் சந்திப்பு மலரான ‘இனியும் சூல் கொள்’ளில் வெளியானது. இந்தக் கதையைக் கேட்டு வந்தபோதுதான் சுகன் எனக்கு நண்பரானார். நவீன இலக்கியப் பரப்பில் எழுதுவதற்கு என்னைக் கூட்டி வந்தவர் மனோ என்றால், என்னுடன் கூடவே வந்தவர் சுகன். எங்களது நட்பு அடுத்த இருபது வருடங்களுக்கு நீடித்தது. இருவரும் இணைந்து ஏகப்பட்ட வேலைகளைச் செய்திருக்கிறோம். ‘சனதருமபோதினி’, ‘கறுப்பு’ ஆகிய இரு தொகுப்புகளும் நற்சாட்சி. ‘தேவதை சொன்ன கதை’யை எழுதி நான் இலக்கியச் சந்திப்புக் குழுவினரிடம் கையளித்தேன். ஒருநாள், இலக்கியச் சந்திப்புக் குழுவை வந்து சந்திக்குமாறு எனக்கு அழைப்பு வந்தது. அந்தக் கதை குறித்து என்னிடம் இலக்கியச் சந்திப்புக் குழுவிலிருந்த சிலர் அரசியல் கேள்விகள் கேட்டார்கள். அந்தக் கதையில் என்னுடைய மையப்புள்ளி பெண் போராளிகளைப் பற்றியதாக இருந்தது. வியட்நாம் விடுதலைப் போரில் பங்கெடுத்த தீரமான பெண் போராளிகள் பிற்பாலத்தில் பெண் அடிமைத்தனத்தில் சிக்குண்டு உழன்றதைச் சித்திரித்திருந்தேன். ஈழப் போராட்டத்தில் அரசியல்ரீதியான புரிதலின்றி வெறுமனே ஆயுதப் போராளிகளாகப் பெண்கள் இயங்கினால், போரின் முடிவில் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்படும்போது, பெண்ணடிமைச் சமூகத்திற்குள் அவர்களும் சிக்கிக்கொள்வார்கள் என இலக்கியச் சந்திப்புக் குழுவுக்கு விளக்கமளித்தேன். ஒரு கதையை எழுதினால் அதற்கு இவ்வாறான அழைப்புகளும் விசாரணைகளும் விளக்கங்களும் இருந்த காலமொன்று இருந்தது. புலம்பெயர் இலக்கியச் சூழலில் குட்டி இலக்கிய பீடங்களும் அரைகுறை அரசியல் ஞானிகளும் கோலோச்சிய காலங்களவை. அதை உடைக்க வேண்டும் என்பதும் ஓர் எழுத்துக் கலைஞனாக எனது கனவுகளில் ஒன்றாகயிருந்தது. பின்வந்த காலங்களில், இலக்கியச் சந்திப்பு மலர்களுக்கு நான் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தருணங்களில் இவ்வாறான ‘விசர்’ வேலைகளைச் செய்ய நான் யாரையும் அனுமதிப்பதில்லை. கலைஞர்களுக்கு அரசியல்வாதிகள் தீர்ப்பிடக்கூடாது. நீண்டகாலமாக இந்தப் பரிதாபச் சூழலுக்குள் ஈழ- புலம்பெயர் இலக்கியம் சிக்கிக்கிடந்தது. 2009-க்குப் பின்பு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், பல எழுத்தாளர்களுக்கு இன்னும் விடியவேயில்லை. ‘எதிர்ப்படும் ஒவ்வொருபவரின் கையையும் நக்குபவன்’ என்ற பாலஸ்தீனக் கவிதை வரிகள் இவர்களுக்கும் பொருந்தும். 1998-இல் தமிழகம் சென்றேன். அப்போது தமிழகத்திலிருந்த எந்த எழுத்தாளரும் எனக்கு அறிமுகமில்லை. என்னையும் யாருக்குமே தெரியாது. கையில் அ.மார்க்ஸின் முகவரியிருந்தது. நேராகத் தஞ்சாவூருக்குச் சென்று அதிகாலையில் அவரது வீட்டுக் கதவைத் தட்டினேன். யாரென்றே தெரியாத ஓர் ஈழத்து இளைஞனை முகமலர்ச்சியோடு வரவேற்று அன்று முழுவதும் உரையாடினார். அதுவரையான எனது தடுமாற்றங்களுக்கும் அரசியல் ஊசலாட்டங்களுக்கும் அ.மார்க்ஸ் நல்லதொரு வழிகாட்டினார். அதாவது தடுமாற்றங்களோடும் ஊசலாட்டத்தோடும் இருப்பதே நல்லதென்றார். உறுதியான கோட்பாடுகள், கெட்டியான கட்சி வடிவங்கள், தத்துவங்கள் எல்லாமே பெருங்கதையாடல்கள் என்றார். இப்போது நிதானித்துப் பார்க்கையில் ஒன்று தெரிகிறது. அதாவது, அ.மார்க்ஸ் எனக்குப் புதிய திசை எதையும் காட்டவில்லை. மாறாக, சிறுவயதிலிருந்தே என்னிலிருந்த மீறல்தன்மை, குழப்படித்தனம், கோணங்கித்தனம், பகடிப் பேச்சு எல்லாவற்றையும் நல்லது என எனக்கு அவர் அறியத் தந்தார். அதிகாரத்தைக் கேள்வி கேட்கப் பகடி ஒரு கூரிய ஆயுதமென்றார். அ.மார்ஸின் வழியாகத்தான் நான் தந்தை பெரியாரை சரியான முறையில் அறிந்துகொண்டேன். நாம் அறமென நம்பியிருந்ததைப் பெரியார் அறமில்லை என்றார். கற்றுக்கொள்ளல் என்பது வெளியிலிருப்பதை நம்முள்ளே திணிப்பதில்லை. மாறாக நம்முள்ளே இருப்பதை வெளியேற்றுவதே கற்றல் என்றார். நிறுவப்பட்ட இலக்கியத்தை, பண்பாட்டை, கலாசாரத்தை, அறத்தைக் கவிழ்த்துப்போடு என்றார். இன்றைய உலகச் சூழலில், ஒவ்வொரு தனிமனிதரின் மீதான அரசு இயந்திரத்தின் நெருக்கமான கண்காணிப்புக்குள், பெரு நிறுவனங்களின் அதிகார வலைக்குள் என்னைப் போன்ற தனிமனிதனால் இவ்வாறு கண்டபடியெல்லாம் கவிழ்த்துப்போட முடியாது. நானும் எண்ணற்ற சமரசங்களுடன்தான் வாழ்க்கையை ஓட்டியபடியிருக்கிறேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் என்னால் கவிழ்த்துப் போட முடியாதவற்றை எனது கற்பனைகளில் உருவாகும் சிறுகதைகள், நாவல்களின் மூலமாக என்னால் கவிழ்த்துப்போட முடியும். மனித உயிரிக்கு வாய்த்த ஆற்றல்களிலெல்லாம் ஆகச் சிறந்த ஆற்றல் கற்பனையே என்றுதான் நான் கருதுகிறேன். நிஜ வாழ்வில் சாதிக்க முடியாத சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் இலக்கியக் கதைகளின் வழியே என்னால் மனித மனங்களில் தொற்ற வைக்க முடியும். எனவேதான், வெளிவரயிருக்கும் என்னுடைய ஒட்டுமொத்தச் சிறுகதைத் தொகுப்பின் முதற்பக்கத்தில் நயோமி கிலெய்னின் இந்தச் சொற்களை நான் குறித்துக் காட்டியிருக்கிறேன். “இந்த உலகை மாற்றுவதற்கு நீங்கள் கதைகளை மாற்றியாக வேண்டும்.” [6 டிசம்பர் 2024 – சென்னை] https://www.shobasakthi.com/shobasakthi/2025/03/14/எழுதும்-கதை/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3uiHXhy30yFn0sxnpd8tcRVq2nQz8iy3Z0XynNJcm4tXwQpMwV2BepwDk_aem_PBQadh9hgC4Y7OvCREOVBQ
  12. நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா? மார்ச் 16, 2025 -கு.கணேசன் சிகரெட், பீடி, மது… இவற்றுக்கு மட்டும்தான் இதயத்தோடு தொடர்பு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம் உடல் எடைக்கும் இதயத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. பெற்றோரிடம் பொதுவான ஒரு குணம் உண்டு. குழந்தைகள் ஒல்லியாக இருந்தால், “Tonic எழுதிக் கொடுங்க, டொக்டர். சீக்கிரம் உடம்பு வைக்கணும்” என்று டொக்டர்களிடம் ஓடிவருவார்கள். “நோய் எதுவும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும்; குண்டாக இருக்க வேண்டும் என்பதில்லை” என்று டொக்டர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஊடக விளம்பரங்களில் வரும் குழந்தைகளைப் போன்று தங்கள் குழந்தைகளும் குண்டு குண்டாக இருந்தால்தான் அழகு, ஆரோக்கியம்! அதே பெற்றோர், குழந்தை பருவ வயதுக்கு வந்த பிறகு ஒல்லியாகிவிட வேண்டும் என்பார்கள். “என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான், டொக்டர். எப்பவும் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கான். ஏதாவது மருந்து கொடுத்து உடம்பைக் குறைங்க” என்று மறுபடி டொக்டரிடம் வருவார்கள். அதிலும் பெண் குழந்தையாக இருந்தால் இந்தப் பரபரப்பு அதிகமாகிவிடும். குழந்தை குண்டாக இருப்பதால் வரக்கூடிய திருமணத் தடை, கேலி, கிண்டல் போன்ற சமூகக் கவலைகள் பெற்றோருக்கு அதிகரித்துவிடும். அதேநேரம், உடல் எடை அதிகமானால் சமூகக் கவலைகளைத் தாண்டி மருத்துவரீதியாகக் கவலைப்படுவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. மறந்துபோகும் திசுக்கொழுப்பு: மை இல்லாமல் பேனாவால் எழுத முடியாது. அது மாதிரிதான், கொழுப்பு இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அதேநேரம், வெள்ளைத்தாளில் பேனாமை கொட்டிவிட்டால் பார்க்கச் சகிக்காது. அது மாதிரிதான், கொழுப்பின் அளவு கூடினாலும் அது தரும் ஆரோக்கிய ஆபத்துகளைத் தடுக்க முடியாது. கொழுப்பு என்றதும் வயிற்றுக் கொழுப்புதான் நம் நினைவுக்கு வருகிறது. உள்ளுறுப்புகளில் உறவாடிக்கொண்டிருக்கும் உறுப்புக் கொழுப்பு அல்லது திசுக் கொழுப்பை (Visceral fat) மறந்து விடுகிறோம். குறிப்பாக, இரைப்பை, குடல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளைச் சுற்றித் தேவையில்லாமல் படர்ந்திருக்கிற திசுக்கொழுப்பும் நமக்கு எதிரிதான் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம். கொழுப்பைச் சுமப்பவர் யார்? உடலில் கொழுப்பு கூடுகட்டுவதைப் பொறுத்து நம் உடல் அமைப்பை ‘Apple, pear, inverted triangle, ruler, hour-glass’ என ஐந்து வகையாகப் பிரிக்கிறது நவீன மருத்துவம். இவற்றில் நான்காவது வகையினர்தான் (Ruler) சரியான உடல் அமைப்பைப் பெற்றவர்கள்; தலையிலிருந்து பாதம்வரை அளவெடுத்து வடித்த சிலை மாதிரி இருப்பவர்கள். அதாவது, தேவை இல்லாமல் கொழுப்பைச் சுமக்காதவர்கள். மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் உடலில் கொழுப்பைச் சுமப்பவர்கள்தான் (Obesity). இவர்களில்கூடக் கொழுப்பை வயிற்றில் சுமக்கிறார்களா, இடுப்பில் சுமக்கிறார்களா என்பதுதான் முக்கியம். ஏனெனில், இடுப்பில் கொழுப்பு சேருகிறவர்களுக்குத்தான் இதய நோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் அதிகச் சாத்தியம் இருப்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ‘இடுப்பின் அளவு அதிகரித்தால் வாழும் நாள் குறைந்துவிடும்’ (Increase in waist line will decrease the life line) என்கின்றன இந்த ஆய்வுகள். இதனால்தான் இப்போதெல்லாம் “வயிற்றில் சேரும் கொழுப்பை மட்டும் பார்க்காதீர்கள்; உங்கள் இடுப்பின் அளவையும் கவனியுங்கள்” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். உங்கள் எடை சரியா? மருத்துவத்துறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் உயரத்துக்கு இருக்க வேண்டிய சராசரி எடை அளவு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு கணக்கு இருக்கிறது: ஆண்களுக்கு: உயரம் சென்ரி மீட்டரில் மைனஸ் 100. பெண்களுக்கு: உயரம் சென்ரி மீட்டரில் மைனஸ் 105. உதாரணமாக, நீங்கள் ஆணாக இருந்தால், உங்கள் உயரம் 157 செ.மீ. என்றால், அதிலிருந்து 100ஐக் கழியுங்கள். 57 கிலோ கிராம் என்பது உங்கள் சராசரி உடல் எடை. இதில் 20% எடை அதிகமாக இருந்தால் அதை ‘உடல் பருமன்’ என்கிறோம். எது உடல் பருமன்? ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை சரியாக இருக்கிறதா என்று தெரிவிப்பதற்கு மூன்றெழுத்துச் சமன்பாடு ஒன்றும் இருக்கிறது. அது தான் ‘பி.எம்.ஐ’ (BMI – Body Mass Index). அதாவது, உடல் திண்மக் குறியீடு. பி.எம்.ஐ (BMI) = உடல் எடை (கிலோ கிராமில்) / உயரம் 2 (மீட்டரில்). உலக சுகாதார நிறுவனத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, இந்தியர்களுக்கு ‘பி.எம்.ஐ’ அளவு 23-24.9க்குள் இருந்தால், அது அதிக உடல் எடை (Over weight); 25 இற்கும் அதிகமாக இருந்தால், அது உடல் பருமன் (Obesity). ஆனால், உடல் பருமனை இப்படிக் கணிப்பது துல்லியமானதா என்பது இப்போது விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. ஏன்? என்ன காரணம்? ஒருவருடைய ‘பி.எம்.ஐ’ அளவானது, அவருடைய தசை எடை எவ்வளவு, திசுக்கொழுப்பு எவ்வளவு என்பதைத் தெரிவிப்பதில்லை. உதாரணமாக, எடை தூக்கும் வீரருக்கு அதிக எடை இருந்தால், அதற்கு அவரது கட்டுக்கோப்பான தசைகள் காரணமாகலாம்; திசுக்கொழுப்பு காரணமாகச் சாத்தியமில்லை. இன்னொன்று, ‘பி.எம்.ஐ’ அளவு சரியாகவே இருக்கிறவர்களுக்கும் திசுக்கொழுப்பு கூடுதலாக இருக்கச் சாத்தியம் இருக்கிறது. ஒருவர் உடலில் 10% திசுக்கொழுப்பு இருப்பது இயல்பு. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) 2023 இல் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒல்லியாகவும் இருந்து, ‘பி.எம்.ஐ’ ஆரோக்கிய வரம்புக்குள் இருந்த பலருக்கும் திசுக்கொழுப்பு 20%க்கும் கூடுதலாக இருப்பது தெரிந்தது. இப்படி இருப்பவர்களுக்கு ‘டோஃபி’ (TOFI) என்று தனிப்பெயர் உண்டு. அதாவது, Thin Outside and Fat Inside. இப்படி ஒல்லியாக இருப்பவர்கள், தங்கள் ‘பி.எம்.ஐ’ அளவு சரியாக இருந்தாலும், உடல் பருமன் உள்ளவர்கள்போலவே இதய ஆரோக்கியம் காப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறது அந்த ஆராய்ச்சி. கவனம் கோரும் ஒல்லி உடம்பு: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவை உறுதிப்படுத்தும் விதமாக என்னிடம் வந்தவர் 50 வயதுள்ள மந்திரமூர்த்தி. அவர் ஒல்லியாக இருப்பதால் உடலில் திசுக்கொழுப்பு சேரவும், இதயப் பிரச்சினைகள் ஏற்படவும் தனக்குச் சாத்தியம் இல்லை என்று நம்பினார். அதனால், அவரது வயதுக்குத் தேவையான உடல் பரிசோதனை எதையும் செய்துகொள்ளவில்லை. ஒரு நாள், நடு நெஞ்சில் வலிக்கிறது என்று என்னிடம் வந்தார் மந்திரமூர்த்தி. ‘இசிஜி’ (Electrocardiogram – ECG) எடுத்துப் பார்த்தேன். மாரடைப்பு பாதிப்பு அதில் தெரிந்தது. மற்ற பரிசோதனைகளையும் பார்க்கச் சொன்னேன். அவருக்கு ‘பி.எம்.ஐ’ அளவு 22. இது இயல்பான அளவுதான். ஆனால், இடுப்புச் சுற்றளவு அதிகமாக இருந்தது. இரத்தப் பரிசோதனைகளில் அவருக்குச் சர்க்கரை நோய் இருந்தது; கெட்ட கொலஸ்டிரால் (LDL) கூடியிருந்தது; நல்ல கொலஸ்டிரால் (HDL) குறைவாக இருந்தது. இரத்த அழுத்தமும் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. ஆக மொத்தத்தில், ஒல்லியாக இருந்த மந்திரமூர்த்தி தன்னுடைய உடலைக் கவனிக்கத் தவறியதால், உடலுக்குள் பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை உணரத் தவறிவிட்டார். இதன் விளைவால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சரியான நேரத்தில் கிடைத்த சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்தார். “ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கொழுப்புத்தன்மை இருக்கும்; கொலஸ்டிரால் கூடும்; சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை வரக்கூடும்; இதயம் பழுதாகிற சாத்தியமும் உண்டு” என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மந்திரமூர்த்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். சரியான இடுப்புச் சுற்றளவு: உடல் பருமனை நிர்ணயிப்பதில் ‘பி.எம்.ஐ’ பிரச்சினை ஆனதால், இப்போது இடுப்புச் சுற்றளவைக் (Waist circumference) கணிப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த அளவுக்கும் வயிற்றுக் கொழுப்பு, உறுப்புக் கொழுப்பின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆகவே, இனிமேல் ‘பி.எம்.ஐ’ அளவோடு இடுப்புச் சுற்றளவையும் கவனிப்பது அவசியமாகிறது. ஆண்களுக்குச் சரியான இடுப்புச் சுற்றளவு 90 செ.மீ. பெண்களுக்கு இந்த அளவு 80 செ.மீ. இந்த அளவைத் தாண்டுபவர்களையும் உடல் பருமன் உள்ளவர்களாகவே கருத வேண்டும். இன்னும் சொன்னால், இவர்கள் இதய பாதிப்பு, சர்க்கரைநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும். இன்னும் 3 அளவுகள்! ‘பி.ஆர்.ஐ’ (BRI – Body Roundness Index): உங்கள் உயரம், எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவற்றை, இணையத்தில் இதற்கென உள்ள கல்குலேட்டரில் பதிவேற்றினால், ‘பி.ஆர்.ஐ’ அளவைக் காண் பிக்கும். இது 4.45 – 5.46க்குள் இருக்க வேண்டும். இது 10ஐத் தாண்டினால் உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய பாதிப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்குச் சாத்தியம் உண்டு. ‘பிசிஏ’ (BCA – Body Composition Analysis): எடை பார்க்கும் இயந்திரம் போன்று இருக்கும் இந்த இயந்திரத்தின் மீது நீங்கள் ஏறி நின்றால், உங்கள் உடலுக்குள் இருக்கும் உறுப்புக் கொழுப்பு, தசைக் கொழுப்பு, வயிற்றுக் கொழுப்பு எனத் தனித்தனியாகத் திசுக் கொழுப்பின் அளவைச் சொல்லிவிடும். வயிற்றுப் பகுதி எம்.ஆர்.ஐ (MRI) பரிசோதனையிலும் வயிற்றுக் கொழுப்பின் அளவை அறியலாம். https://chakkaram.com/2025/03/16/நீங்கள்-கொழுப்பைச்-சுமப்/
  13. அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் — March 17, 2025 புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ் அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற்றின் இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் ; இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க’ என்று தலைப்பு. இத்தகையதொரு நூல் வெளிவரப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்துகொண்ட — ஜெயராஜின் எழுத்துக்களை பற்றி நன்கு தெரிந்த அரசியல் ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் அவர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் குறித்து மார்க்சியப் பார்வையில் வர்க்க அடிப்படையிலான ஆய்வு ஒன்றைச் செய்து எழுதியிருக்கிறாரா என்று பதிப்பாளர்களிடம் வினவினார்கள். கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9/3) மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் அந்த கேள்வி எழுந்தது. குறிப்பாக, அங்கு உரையாற்றிய சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம் அந்த விடயம் குறித்து ஒரு வகையான விமர்சன அடிப்படையில் கருத்து வெளியிட்டார். திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்ததையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்ததையும் அரசியல் அதிகாரத்தின் ஒரு வர்க்க மாற்றமாக கருதமுடியாது என்று அவர் கூறினார். தன்னை ஒரு இடதுசாரி என்று அடையாளப்படுத்திக்கொண்டு உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்திருப்பதை இலங்கையில் முதலாளி வர்க்கத்தை தோற்கடித்து தொளிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதாக வியாக்கியானம் செய்தலாகாது என்று கூறிவைக்கவே விரும்பினார் என்று தெரிகிறது. நூலின் தலைப்பே இந்த குழப்ப நிலைக்கு காரணமாகும். ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்’ என்ற தலைப்புடன் நூல் வெளிவரவிருக்கிறது என்று ஜெயராஜுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் தான் அவ்வாறு எந்தவிதமான வர்க்கக் கண்ணோட்டத்தில் திசாநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் எழுச்சியை பார்க்கவில்லை என்றும் அத்தகைய தலைப்பு தன்னை ஒரு அசௌகரியத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடும் என்றும் கூறினார். ஜெயராயை பொறுத்தவரை ‘அநுரா குமார திசாநாயக்கவின் வாழ்வும் அரசியல் எழுச்சியும்’ என்பதே நூலுக்கு பொருத்தமான தலைப்பு. ‘அநுரா குமார திசாநாயக்க இலங்கை வானில் ஒரு இடதுசாரி நட்சத்திரம்’ என்ற தலைப்பிலான முதலாவது கட்டுரையில் ஜெயராஜ் ஜனாதிபதியின் எழுச்சி பற்றிய தனது பார்வையை பின்வருமாறு முன்வைக்கிறார்; “அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் (மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள்) அவரை மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ‘இந்திய விரோதி’ என்றும் ‘தமிழர் விரோதி’ என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர். எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி. ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் அவரை ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது சந்தேகமே. “டொனால்ட் ட்ரம்ப் என்ற பேர்வழி வெள்ளை மாளிகையை அசிங்கப்படுத்துவதற்கு முன்னதாக அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர் ஆபிரகாம் லிங்கனையே சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப்போர் ஒன்றையே நடத்துமளவுக்கு அவர் சென்றார். “லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு’ மரக்கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான ஒரு கதை’ என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே. அவரின் உயர்வையும் கூட ‘மண் வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு வந்த காவியம்’ என்று வர்ணிக்க முடியும்.” இலங்கையில் இதுகாலவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் ரணசிங்க பிரேமதாசவையும் மைத்திரிபால சிறிசேனவையும் தவிர, மற்றையவர்கள் சகலரும் பாரம்பரியமான அரசியல் அதிகார உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பிரேமதாசவும் சிறிசேனவும் கூட அந்த உயர்வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருக்கும ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூலமாகவே ஜனாதிபதியாக வந்தனர். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அந்த அதிகார வர்க்கத்தையும் அதைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளையும் சாராத ஒருவரான, அதுவும் ஒரு காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்திய இடதுசாரி கட்சியொன்றின் இன்றைய தலைவரான திசாநாயக்க ஜனாதிபதியாக வந்ததில் ஒரு தரம்சார்ந்த மாற்றம் (Qualitative Change ) இருக்கிறது. அதை விளங்கிக்கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது. தன்னை ஒரு மார்க்சிய — லெனினியவாதி என்று திசாநாயக்க தற்போது வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்கிறாரோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால், இடதுசாரி இயக்கம் ஒன்றைச் சேர்ந்த — ஒரு காலத்தில் ஆட்சியதிகாரத்துக்கு மாத்திரமல்ல, அரசியலிலும் கூட மிகவும் உயர்ந்த இடத்துக்கு வருவது குறித்து நினைத்துப் பார்த்திருக்க முடியாத ஒரு எளிமையான குடும்பப் பின்புலத்தைக் கொண்ட அவர் நாட்டின் அதியுயர்ந்த பதவிக்கு மக்களால் தெரிவாகக் கூடியதாக இருந்ததை ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்தே ஜெயராஜின் நூலுக்கு அந்த தலைப்பை வெளியீட்டாளர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. திசாநாயக்க ஒரு இடதுசாரிக் கிளர்ச்சி மூலமாக ஆட்சிக்கு வரவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட படுமோசமான பொருளாதார நெருக்கடியை அடுத்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத வகையில் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள். ஆரம்பக்கட்டங்களில் அந்த கிளர்ச்சியில் ஒரு அமைதி வழியிலான அரசியல் புரட்சியின் பரிமாணங்கள் தென்பட்டன. தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முதலாக மக்கள் கிளர்ச்சி ஒரு அரசாங்கத்தை தூக்கியெறிந்த முதல் சந்தர்ப்பமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சி அமைந்தது. கடந்த வருடம் ஆகஸ்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவை நாட்டை விட்டு விரட்டிய கிளர்ச்சிக்காரர்களுக்கு இலங்கையின் கிளர்ச்சி நிச்சயமாக ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பங்களாதேஷில் கிளர்ச்சிக்காரர்களின் பக்கம் நின்ற அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றின் தலைவரான முஹமட் யூனுஸ் இடைக்கால தலைவராக வந்ததைப் போன்று, கோட்டாபய நாட்டை விட்டு தப்பியோடிய பிறகு கிளர்ச்சிக்காரர்கள் ஆட்சிக்கு வரவில்லை. அறகலய கிளர்ச்சியின் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது மக்கள் அவர்களை கருத்தில் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அறகலய கிளர்சியின் விளைவாக நாட்டு மக்கள் மத்தியில் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கும் அதை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளுக்கும் எதிராக மக்கள் மத்தியில் வளர்ந்த உணர்வுகளை மிகவும் விவேகமான முறையில் பயன்படுத்தி திசாநாயக்கவினால் ஜனாதிபதியாகவும் தேசிய மக்கள் சக்தியினால் ஆளும் கட்சியாகவும் வரமுடிந்தது. இதை தொழிலாளர் வர்க்கம் இடதுசாரி இயக்கம் ஒன்றின் தலைமையில் அதிகாரத்துக்கு வந்திருப்பதாக எவரும் கூறவில்லை. ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களில் எவருமோ கூட அவ்வாறு கூறவில்லை. இடதுசாரிகளினால் இலங்கையில் ஒருபோதும் அதிகாரத்துக்கு வரமுடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்ததை அடுத்து தங்களுக்குள் திருப்திப் பட்டுக்கொண்டார்கள். ஆனால், முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களை விடவும் வேறுபட்ட சமூகப் பின்னணியுடனான அதிகப் பெரும்பான்மையானவர்களைக் கொண்டதாக இன்றைய அரசாங்கம் இருக்கிறது. இதை கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையின் முக்கியமான அரசியல் நிபுணரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மிகவும் தெளிவான முறையில் விளக்கியிருந்தார். “இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரா குமார திசாநாயக்க பதவியேற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொடக்கம் ஒன்றை குறித்து நிற்கிறது. அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்களில் ஒரு திடீர் நகர்வை அடையாளப்படுத்துவதாக அந்த தொடக்கம் அமைகிறது. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட — மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வசதிபடைத்த ஒரு சிறிய எண்ணிக்கையான பிரிவினரிடம் இருந்து அதிகாரத் தளங்கள் உயர் வர்க்கத்தைச் சாராத சமூக சக்திகளின் கூட்டணி ஒன்றுக்கு நகர்ந்திருக்கிறது. “காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரமடைந்த நாளில் இருந்து இலங்கையின் ஜனநாயகம் அரசியல் அதிகாரத்தில் உயர் வர்க்கத்தவர்களின் இடையறாத தொடர்ச்சியை உத்தரவாதம் செய்திருந்தது என்றால், இப்போது அது கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகலை ஏற்படுத்தியிருக்கிறது ; அது ஜனநாயகத்தினாலும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களினாலும் அவ்வப்போது தோற்றுவிக்கப்படக் கூடிய ஒரு வியத்தகு தருணமாகும். “குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அமைதியான — இரத்தம் சிந்தாத அதிகார மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. சுமார் ஏழு தசாப்தங்களாக வசதிபடைத்த சமூக வர்க்கங்களின் பிறப்புரிமை போன்று நிலைத்திருந்த ஊழல்தனமானதும் நாட்பட்டுப் போனதுமான அரசாங்க முறைமை ஒன்றை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கான வாக்குறுதியுடன் புதிய ஜனாதிபதி தனது மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார். நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் மீதான வர்க்க ஏகபோகம் ஜனநாயகத்தின் ஊடாக பொதுமக்களினாலேயே இப்போது தகர்க்கப்பட்டிருக்கிறது” என்று பேராசிரியர் உயன்கொட எழுதினார். ‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சி ‘ முறைமை மாற்றத்தையும்’ புதிய அரசியல் கலாசாரத்தையும் வேண்டி நின்றது. அந்த சுலோகங்களை தனது கையில் எடுத்துக் கொண்டு தேர்தல்களைச் சந்தித்த ஜனாதாபதி திசாநாயக்கவிடம் ‘மெய்யான மாற்றம் ‘ ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய ‘புதிய தொடக்கம்’ ஒன்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில் வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தைச் செய்ததன் மூலமாக அந்த புதிய தொடக்கத்தை நோக்கிய திசையில் முதலாவது அடியை இலங்கை மக்கள் எடுத்துக் கொடுத்தார்கள். ஆனால், முறைமை மாற்றம் என்பதையும் புதிய கலாசாரம் என்பதையும் மக்கள் மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூட எவ்வாறானதாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சந்தேகம் எழக்கூடியதாக கடந்த ஆறு மாதகால அரசியல் மற்றும் ஆட்சிமுறை நிகழ்வுப் போக்குகள் அமைந்திருக்கின்றன. இலங்கையில் புதிய அரசியல் கலாசாரம் என்பது வெறுமனே ஊழல் முறைகேடுகளும் அதிகார துஷ்பிரயோகமும் இல்லாத ஆட்சிமுறை என்று மாத்திரம் அர்த்தப்பட்டுவிடாது. சகல சமூகங்களையும் அவலத்துக்கு உட்படுத்திய மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காணவேண்டிய தேவையை தென்னிலங்கை மக்கள் உணரக்கூடிய சூழ்நிலை ஒன்றை உருவாக்குவதும் அந்த புதிய அரசியல் கலாசாரத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் ஏற்றுக்கொள்கின்ற மனநிலை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துக்கு ஏற்படாத பட்சத்தில் புதிய கலாசாரம் என்பதில் எந்தவிதமான அர்த்தமும் இருக்கப்போவதில்லை. இதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புரிந்துகொண்டதற்கான எந்த அறிகுறியையும் கடந்த ஆறு மாதங்களில் காணமுடியவில்லை. பழைய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு காலங்காலமாக சேவை செய்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு பழைய ஒழுங்கை மாற்றுவதை நோக்கிய செயற்பாடுகளை ஒரு இடதுசாரிக் கட்சி முன்னெடுப்பதில் உள்ள சிரமங்களை ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜே வி.பி.யின் தலைவர்களும் இதுவரையில் விளங்கிக் கொண்டிருப்பார்கள். உயர் சமூக வர்க்கங்களைச் சாராத பிரதிநிதிகள் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாற்றத்தை வேண்டி நிற்கும் சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வுகளையும் மதித்துச் செயற்படக்கூடிய ஆட்சியாளர்களாக தங்களால் மாறமுடியும் என்பதை இதுவரையான செயற்பாடுகள் மூலமாக எந்தளவுக்கு நிரூபித்திருக்கிறார்கள் என்ற முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது. https://arangamnews.com/?p=11905
  14. வெளிநாட்டு மதபோதகர்கள் வெளியேற்றம் இலங்கைக்குள் பிரார்த்தனைகளுக்காக வெளிநாட்டு மத போதகர்கள் உரிய மத விசாக்கள் இல்லாமல் நுழைவது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) கடுமையான உத்தரவுக்கு மத்தியில், அதிகாரிகள் வார இறுதியில் நுவரெலியாவில் உள்ள மற்றொரு சபையை சோதனை செய்து, இரண்டு வெளிநாட்டு போதகர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டதாக டெய்லிமிரர் செய்தித்தாளுக்குத் தெரிய வருகிறது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) எந்த அனுமதியும் இல்லாமல் இரண்டு வெளிநாட்டு போதகர்கள் மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொழும்பிலிருந்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் பறக்கும் படை வெள்ளிக்கிழமை மாலை நுவரெலியாவில் ஒரு ஆசீர்வாத விழாவை ஆய்வு செய்ய வந்தது. கடந்த 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை மற்றும் கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இரண்டு தனித்தனி அமர்வுகளாக நுவரெலியா டவுன் ஹால் ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருந்த "இயேசு வாழ்கிறார் சுவிசேஷ சர்வதேசத்தின் 47ஆவது வருடாந்திர பைபிள் கருத்தரங்கு" என்ற நிகழ்வை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் சோதனை செய்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த புலனாய்வாளர் ஒருவர் ஞாயிற்றக்கிழமை (16) டெய்லிமிரரிடம், சபையில் இருந்த இந்திய மற்றும் மலேசிய ஆண் போதகர்களைக் கண்டறிந்ததாகவும், அவர்கள் நாட்டில் மத நடவடிக்கைகளில் பங்கேற்க எந்த ஒப்புதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார். சென்னையைச் சேர்ந்த போதகர் மற்றும் இசைக்கலைஞர் ஜோயல் தாமஸ்ராஜ் மற்றும் மலேசியாவில் உள்ள பெட்ரா எவாஞ்சலிகல் அண்ட் டெலிவரன்ஸ் சர்ச்சின் நிறுவனர் மற்றும் தலைவர் போதகர் மோசஸ் மெல்கிசெடெக் ஆகியோர் ஆசீர்வாத விழாக்களில் பங்கேற்க எளிய வருகையின் போது சுற்றுலா விசாவில் கடந்த வாரம் கொழும்புக்கு வந்ததாகக் கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடந்த ஆசீர்வாத விழாவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் சோதனை செய்ததை டெய்லிமிரர் கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது. அங்கு வருகை விசாக்கள் மட்டுமே வைத்திருந்த இரண்டு இந்திய போதகர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையின் போது, ஒரு வாரம் கழித்து நுவரெலியாவில் ஒரு ஆசீர்வாத விழா திட்டமிடப்பட்டிருப்பதை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் அறிந்து, வெள்ளிக்கிழமை அதைக் கண்டறிந்தனர். சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மத போதகர்களிடம், அவர்கள் நாட்டில் இருப்பது குறித்து விசாரிக்கப்பட்டது, மேலும் இலங்கையில் ஏதேனும் மத விளம்பரப் பணிகளில் பங்கேற்க வேண்டுமென்றால், சிறப்பு மத விசாக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இருவரும் கூறியிருந்தனர். இரண்டு போதகர்களும் முறையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பை விட்டு வெளியேறியதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர்களின் உள்ளூர் அழைப்பாளர்களுக்கு கண்டிப்பாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வெளிநாட்டு-மதபோதகர்கள்-வெளியேற்றம்/175-353864
  15. வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல் பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (17) முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை தொழிலாளி ஒருவர் நாளாந்தம் இரண்டு படகுகளில் 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து கரைவலை தொழில் புரிந்து வருகின்றனர் ஆனால் ஏனைய மீனவர்களின் வலைகள், படகு, இயந்திரங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தொடர்ந்து உருவாகி வருகிறது வெற்றிலைக்கேணியில் இருந்து 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து குறித்த கரைவலை முதலாளி கோவில் கடற்பரப்பு வரை சென்று வருவதால் ஏனைய மீனவர்கள் தொழில் புரிவதற்கு மாலை நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது குறித்த கரைவலை முதலாளியின் செயற்பாட்டால் அவரது கரைவலையில் சிக்குண்ட சிறு தொழிலாளி ஒருவரின் படகு, இயந்திரம் சேதமடைந்துள்ளது ஏனைய பகுதிகளில் சட்டவிரோதமாக குறித்த கரைவலை முதலாளி தொழில் புரிந்து வந்தமையால் அப்பகுதி மக்களால் அகற்றப்பட்டதன் பின்னர் வெற்றிலைக்கேணி விநாயகர்புரம் பகுதியில் தற்பொழுது தொழில் புரிந்து வருகின்றனர். அதிகாலை 06.00 பிறகு கரைவலை தொழில் புரிவதற்கு சட்டம் உள்ள போதும் அவர்கள் சட்டத்திற்கு முரணாக நேர காலத்தை மீறி ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர் இதனால் பாதிப்படைந்த மீனவர்கள் குறித்த கரைவலை முதலாளியுடன் மூன்றாவது நாளாகவும் முறுகலில் ஈடுபட்டுவருகின்றனர் சம்பவம் தொடர்பாக கடற்றொழில் சமாசத்திற்கும், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும் போதிலும் நடவடிக்கை எடுக்க தவறியதால் முறுகல் நிலை வன்முறையாக மாறும் வாய்ப்புள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வெற்றிலைக்கேணியில்-மீனவர்கள்-முறுகல்/175-353868
  16. போட்டியிடுகின்ற சகல சபைகளிலும் தமிழரசுக் கட்சி வெல்லும் editorenglishMarch 17, 2025 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருமான துரைராசா ரவிகரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுமந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே அடுத்த வாரம் வேட்புமனுக்களை தாக்கல் செய்வோம். அந்த வகையில் போட்டியிடுகின்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். https://globaltamilnews.net/2025/213534/
  17. @suvy ஐயா, உங்கள் தெரிவுகளின்படி, இந்தக் கேள்விக்கு பதில் LSG அல்லது CSK. RR 75) வது போட்டியில் வெளியேறிவிடும். பதிலை LSG அல்லது CSK என்று தாருங்கள். அப்படியே RR என்று விட்டாலும் காரியமில்லை! @சுவைப்பிரியன் அண்ணா, உங்கள் தெரிவுகளின்படி முதல் நான்குக்குள் KKR வந்துவிடும் என்பதால் பத்தாவதாக வரச் சாத்தியமில்லை! எந்த அணி பத்தாவதாக வரும் எனக் கணித்துத் தந்தால் பதிலை மாற்றுகின்றேன்.
  18. இதுவரை போட்டியில் பங்குபற்றியோர். எல்லோருடைய பதில்களையும் இன்னமும் தரவேற்றவில்லை. கூகிள் ஷீற் மூலம் பதிந்து வெட்டி ஒட்டினால் தரவேற்ற இலகுவாக இருக்கும் https://docs.google.com/spreadsheets/d/1kcsdXNbmjH_DgikjBBctvJFH2ulbAnjaEcdBUmVBdxI/edit?usp=sharing பதிந்தது போட்டியாளர் 1 வசீ 2 ஈழப்பிரியன் 3 அல்வாயன் 4 வாத்தியார் 5 வீரப் பையன்26 6 நிலாமதி 7 சுவி 8 சுவைப்பிரியன் 9 பிரபா 10 செம்பாட்டான் 11 கந்தப்பு 12 வாதவூரான் 13 ஏராளன் 14 ரசோதரன் 15 நுணாவிலான் 16 தமிழ் சிறி
  19. @வீரப் பையன்26 , மேலேயுள்ள நான்கு கேள்விகளுக்கான பதில்களைத் தாருங்கள்.. இல்லாவிடில் புள்ளிகள் போய்விடும்!
  20. ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை!- நிலாந்தன் adminMarch 16, 2025 சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, யாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் உணர்த்துகின்றது. ஐநா கூட்டத்தொடரில்,கடந்த மாதம் 25ஆம் திகதி,தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையில் ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான பன்னாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்திருந்தார். ”சிறீலங்கா பொறுப்புக் கூறலுக்கான நிகழ்ச்சித்திட்டம்”(Sri Lanka accountability project) எனப்படும் அப்பொறிமுறையானது கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செயற்பட்டு வருகின்றது. போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பலவீனமான ஆனால் பன்னாட்டுப் பொறிமுறை அதுவாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பன்னாட்டுப் பொறிமுறையை நிராகரித்து ஒன்பது நாட்களின் பின், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய் மூல அறிக்கை வெளிவந்து நான்கு நாட்களின் பின், ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நிகழ்ச்சி வெளிவந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியும் சிங்களத் தலைவர்கள் யாராயிருந்தாலும் குற்றங்களுக்குப் பொறுப்புக்குகூற மாட்டார்கள் என்பதைத்தான் உலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் மேற்படி காணொளி வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய காணொளி உள்ளடங்களாக ‘சனல் நாலு’ காணொளிகள் இவ்வாறு ஐநா கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே வெளிவந்தனை என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்கவேண்டும். தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்துக்கு மறைமுகமாக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உள்நோக்கங்கள் இதில் உண்டா என்றும் பார்க்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளிலும் இவ்வாறு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் விளைவாக தமிழ்மக்களுக்கு என்ன கிடைத்தது என்பதையும் தொகுத்துப் பார்க்கவேண்டும். இனி அந்தக் காணொளிக்குள் நுழைவோம். முதலில்,அந்த நிகழ்ச்சி எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். அது ஒரு நேர்காணல் என்பதைவிடவும் குறுக்கு விசாரணையாகவே பெருமளவுக்கு அமைந்திருந்தது. மஹ்தி ஹசன் நன்கு வீட்டுவேலை செய்துகொண்டு வந்திருந்தார். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். வீட்டுவேலை செய்யாமல் கேள்வி கேட்கப்போகும் ஊடகவியலாளர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது புலம் பெயர்ந்த தமிழர்கள் பலமாக உள்ள ஒரு களம். புலம்பெயர்ந்த தமிழர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் ரணில் அநாயாசமாகப் போய் மாட்டிக் கொண்டார். இனி எந்த ஒரு சிங்களத் தலைவரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் ஒன்றுக்கு பலதடவை யோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி அது. ஒரு விதத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பலத்தையும் அது காட்டியது. ரணிலைச் சுற்றிவளைக்கும் கேள்விகள். அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மஹ்தி ஹசன் குறுக்கே பாய்ந்து கேள்விகளைக் கேட்கிறார். சில இடங்களில் ரணில் கூறும் பதில்களைப் பொருட்படுத்தாமலேயே கடந்து போகிறார். சில பதில்களுக்கு மறுத்தான்களை அனாயசமாகத் தூக்கிப்போட்டு விட்டுப் போகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதிலும் மஹ்தி ஹசன் ஒரு குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையிலேயே பெருமளவுக்கு நடந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த கவர்ச்சியும் அதுதான். தமிழ்த் தரப்பு அதை கொண்டாடுவதற்கு பிரதான காரணங்களில் அதுவும் ஒன்று. ஆனால் மஹ்தி ஹசன் எவ்வளவுதான் சுற்றிவளைத்தாலும் ரணில் பெருமளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை என்பதனை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். ரணில் வெகு ‘கூலாக’ பதில் கூறுகிறார். அவருடைய சிறிய தொந்தியில் வழுகும் கழுத்துப்பட்டியை இடைக்கிடை சரிசெய்து நேராக்கியபடி மிகவும் ‘கூலாக’அவர் பதில் கூறுகிறார். ஒரு இடத்தில் மஹ்தி ஹசனைப் பார்த்து “பொறுமையை இழக்காதீர்கள்”என்று சொல்லுகிறார். அதை அவர் மஹ்தி ஹசனுக்குச் சொன்னாரா? அல்லது தனக்குத் தானே சொன்னாரா? அவர் கூறும் பதில்களில் பல இக்கட்டுரையின் நோக்கு நிலையில், அதாவது தமிழ் நோக்கு நிலையில் மோசமானவை. ஆனால் ரணில் முக்கியமான இடங்களில் மிகவும் கூலாகப் பதில் சொல்லுகிறார். சிரித்துக் கொண்டே தன்னை காந்தியோடு ஒப்பிடுகிறார். சிரித்துக்கொண்டே இலங்கை ஒரு வன்முறை இல்லாத நாடு என்று கூறுகிறார். சிரித்துக்கொண்டே சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார். அதே சமயம் அவர் சொன்ன பதில்கள் பலவற்றிலிருந்து உலக சமூகமும் குறிப்பாக ஐநா ஒரு தெளிவான செய்தியைப் பெறக்கூடியதாக இருந்தது. அது என்னவென்றால், சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதுதான். 2015ஆம் ஆண்டு பொறுப்புக் கூறலுக்கான ஐநாவின் தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியது ரணில் விக்ரமசிங்கதான். நிலைமாறு கால நீதிக்கான அந்த தீர்மானத்துக்கு ரணில்-மைத்திரி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதற்கு முன்னரும் பின்னரும் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்களுக்கு எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவில்லை. மட்டுமல்ல,அந்த தீர்மானங்களுக்கு எதிராகவே காணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தீர்மானம்,அதுவும் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்,அதற்கு இணை அனுசரணை வழங்கிய ஒரே ஒரு தலைவர்,ஒரு பகிரங்க நிகழ்வில் வைத்துப் பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதனை வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால் ஐநாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணைக்குப் பொருள் என்ன? பான் கி மூன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மஹிந்த விசாரணைக் குழுக்களை உருவாக்கினார். ஆனால் அவை உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. அல்லது அவை கண்டுபிடித்த அற்ப உண்மைகளையும் கூட மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ரணில் அதைவிட ஒருபடி மேலே சென்று ஒரு தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினார். அதுவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் அவரும் அந்தத் தீர்மானத்துக்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஐநாவைப் பேய்க் காட்டுவதற்காகத்தான் அவர் அவ்வாறு இணை அனுசரனை வழங்கினார் என்பதைத்தான் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. ஆனால் அதற்காக அவர் வெட்கப்படவில்லை.என்பதுதான் இங்குள்ள பயங்கரமாகும். ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது சிங்கள மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சரி,தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி,ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் சரி,அவர் பொறுப்புக்கூறத் தயாராக இருக்கவில்லை.பொறுப்பற்ற தனமாகப் பதில் சொன்னார். இலங்கைத்தீவின் வரலாற்றில் ஒரு முன்னாள் அரசத் தலைவர் அதுபோல எங்கேயும் அவமானப்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ’உன்னுடைய வயதை விட என்னுடைய அரசியல் வாழ்வின் காலம் அதிகமானது’ என்று ரணில் சிரித்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அவ்வளவு அனுபவசாலியான அவர் அதுபோல வேறு எங்கேயும் அவமானப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்திய ஆகப் பிந்திய நிகழ்ச்சி அது. சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்; கொல்லப்பட்ட சிங்கள மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்;முஸ்லிம்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள்;மட்டுமல்ல சிங்களக் கத்தோலிக்கர்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பது அங்கே தெளிவாகத் தெரிந்தது. எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டு கூலாக அவர் சொன்ன பதில்கள் யாவும், இனஅழிப்புச் செய்தவர்களையும் தமது அரசியல் வெற்றிகளுக்காக முஸ்லிம் மக்களை பலியிட்டவர்களையும் அவர் பாதுகாக்கிறார் இன்று நம்பப் போதுமானவைகளாக இருந்தன. அதாவது குற்றங்களைப் பாதுகாக்கும் குற்ற மயப்பட்ட ஒரு அரசுக் கட்டமைப்புக்கு அவர் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினாரா? மகா சங்கத்துக்கு விசுவாசமாக அவர் கூறிய பதிலில் தன்னை ஒரு சிங்கள பௌத்தனாகப் பிரகடனப்படுத்துகிறார். அங்கே அவருடைய லிபரல் முகமூடி பாரதூரமாகக் கிழிகிறது. ஆனால் அவர் கூலாகப் பதில் கூறுகிறார். இதில் தமிழ் மக்களுக்குப் புதிதாக எதுவும் இல்லை. ஏனென்றால் ரணிலைப் பற்றி ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் மிகப்பலமான ஒரு படிமம் உண்டு. அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்ததை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டுவது அந்த அடிப்படையில்தான். எனவே ரணில் யார் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ரணிலோடு இணைந்து நல்லாட்சிக் காலகட்டத்தில் அதாவது 2015 இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில், நிலைமாறு கால நீதிக்காக உழைத்த தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கிறார்களே, அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அவர்கள் ரணிலை மட்டும் பாதுகாக்கவில்லை,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித்தையும் பாதுகாத்தார்கள்.சஜித்தும் ரணிலைப்போலதான்.கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில்தான் ஐநா கூட்டத் தொடரும் நடந்தது.அப்பொழுது சஜித் ஐநா தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார்.ரணில் மட்டுமல்ல சஜித்தும் பொறுப்புக்கூறத் தயார் இல்லை. அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டு பொறிமுறைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இது நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடந்த,பொது வேட்பாளருக்கான கடைசிப் பிரச்சார கூட்டத்தில்,மேடையில் வைத்துப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் தமிழ்மக்களின் வாக்குகளை சுமந்திரன் சஜித்துக்கு வாங்கி கொடுத்தார்.தேசத் திரட்சிக்காக,பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரிய நேத்திரனை சுமந்திரனுக்கு விசுவாசமான மத்திய குழு கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது. அதாவது சிங்களத் தலைவர்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயார் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை அவர்களுக்குச் சாய்த்துக் கொடுக்கும் தமிழ்த் தலைவர்களும் தமிழ்மக்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை. https://globaltamilnews.net/2025/213515/
  21. ஏ.ஆர்.ரகுமான் ஹெல்த் ரிப்போர்ட்… அப்பல்லோ அப்டேட்! 16 Mar 2025, 12:22 PM லண்டனில் இருந்து நேற்று (மார்ச் 15) சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரகுமான், இன்று (மார்ச் 16) காலை நீர்ச்சத்து குறைபாட்டால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சைகள் முடிந்து ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகளுடன் இன்று காலை சென்னை கிரீம்ஸ் மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி, சினிமா பிரபலங்கள் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர் https://minnambalam.com/cinema/ar-rahman-discharged-from-apollo-hospital/
  22. எல்லோரும் கிளி ஜோய்ஸம்தான் பார்க்கின்றவர்கள்! T20 இல் ஒன்றிரண்டு பந்துகளே மட்சை மாற்றிவிடும்! எல்லா ரீமும் கப்படிக்கவே விளையாடுகின்றார்கள்! எனவே யானையைக் கீற முயற்சிப்பதில் பிரச்சினை வராது! நிறைய statistics எல்லாம் பாவித்து இந்தப் போட்டியில் வெல்லமுடியாது. பின்வாங்காமல் கலந்துகொள்ளுங்கள்!
  23. 50, 60, 70 வயது ஒன்றுகூடல்கள் எல்லாம் நமக்கு சரிவராது.. குடுகுடு கிழவன், கிழவிகளோடு கூத்தடிக்க ஏலாது! இது sight seeing ஹொலிடேயும் இல்லை! Relaxing ஹொலிடே!☺️
  24. 300 ஆண்டுகால சாதிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது : முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள் March 13, 2025 2:45 pm மேற்கு வங்காளத்தின் கிராமப்புறப் பகுதியில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் தளைகளை உடைத்து, 130 தலித் குடும்பங்களின் பிரதிநிதிகள் புதன்கிழமை முதல் முறையாக பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கிதேஷ்வர் சிவன் கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கட்வா துணைப்பிரிவில் உள்ள கித்கிராம் கிராமத்தின் தஸ்பாரா பகுதியைச் சேர்ந்த தாஸ் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு (நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண்) காலை 10 மணியளவில் கோவில் படிகளில் ஏறி, சிவலிங்கத்தின் மீது பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, தடையின்றி பிரார்த்தனை செய்தனர். உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் முன்னிலையில், எந்தவொரு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளைகளும் ஏற்படாத வகையில் மிகுந்த பாதுகாப்பிற்கு மத்தியில் வழிபாடுகள் செய்தனர். ‘தாஸ்’ குடும்பப்பெயர்களைக் கொண்ட தலித் குடும்பங்கள், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகக் கருதப்படும் கிதேஷ்வர் சிவன் கோயிலில் வழிபடுவதற்கான அடிப்படைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி மகா சிவராத்திரி விழாவின் போது பாரம்பரியத்தை மீறி கோவிலில் பிரார்த்தனை செய்ய திட்டமிட்டிருந்த குடும்பங்கள், “தாழ்ந்த சாதி”யைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் கோவில் வளாகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து கோவிலில் வழிபடுவதற்கான தங்கள் உரிமைய நிறைவேற்ற உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, கிராமவாசிகளில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரிடமிருந்து பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதையும் எதிர்கொண்டனர். “கோவிலில் பூஜை செய்யும் உரிமை எங்களுக்கு வழங்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அனைவரின் நலனுக்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்,” என்று கோவில் படிகளில் கால் வைக்க தடை விதிக்கப்பட்ட கிராமவாசி சந்தோஷ் தாஸ் கூறினார். “உள்ளூர் பொலிஸார் மற்றும் நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது, அவர்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம்,” என்று மற்றொரு கிராமவாசி எக்கோரி தாஸ் மேலும் கூறினார். கிராமத்திலிருந்து பொருளாதார ரீதியாக விலக்கு அளிக்கும் ஒரு வழிமுறையாக கடந்த சில நாட்களாக தாஸ் குடும்பங்களிலிருந்து பால் கொள்முதல் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு, புதன்கிழமை காலை வரை அமலில் இருந்ததை கிராம மக்கள் உறுதிப்படுத்தினர். “எங்களுக்குச் சொந்தமான வளர்ப்பு கால்நடைகளிடமிருந்து பால் சேகரிக்கத் தொடங்குமாறு பால் கொள்முதல் மையங்களுக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். இன்று மாலைக்குள் சேகரிப்பு மீண்டும் தொடங்கவில்லை என்றால், நாங்கள் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டியிருக்கும்” என்று எக்கோரி தெரிவித்திருந்தார். “கித்கிராமில் உள்ள கோவிலில் வழிபாடு தொடர்பாக இருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தஸ்பராவில் வசிப்பவர்களும் மற்றவர்களைப் போலவே பூஜை செய்ய முடியும். புதன்கிழமை முதல், அனைவரும் கோவிலில் பூஜை செய்வார்கள். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/300-years-of-caste-discrimination-ended-dalits-enter-temple-for-the-first-time/
  25. வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல் நிலைவரங்கள் என்ன?; அறிந்துகொள்வதில் அமெரிக்கா ஆர்வம் தமிழ் பகுதிகளில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நிலைவரங்கள், வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான எம்.ஏ.சுமந்திரனிடம் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் கேட்டறிந்தார் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் கரிசனை உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தன்னிடம் கேட்டறிந்துகொண்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் பகுதிகளில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அமெரிக்கத்துடன் என்னுடன் கலந்துரையாடி கேட்டறிந்தார். இதன்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நிலைவரங்கள், வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் செயற்பாடுகள், பொருளாதார முன்னேற்றங்கள் போன்ற விடயங்களையும் கேட்டறிந்துகொண்டார். கட்சியின் புதிய செயலாளராக அவர் முதற்தடவையாக சந்தித்து கலந்துரையாடியதால் இந்த சந்திப்பு முக்கியத்துவமானதாக உள்ளது. இதேவேளை இந்த சந்திப்புக்கு முன்னர் அவுஸ்திரெலிய தூதுவர், பிரதி தூதுவர் மற்றும் அரசியல் அதிகாரி ஆகியோருடனும் சந்திப்பும் இடம்பெற்றது என்றார். இதேவேளை சுமந்திரனுடான சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர், இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.ஏ.சுமந்திரனை முதற்தடவையாக சந்தித்தேன். இந்த சந்திப்பில் அமெரிக்க – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இலங்கையில் தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரங்கள் குறித்து கலந்துரையாடினோம் என்று குறிப்பிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=316159

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.