Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8743
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் உளவுப்படையான மொசாட்டின் ஆலோசனைகளின் படி செயற்பட்ட லலித் லலித்தும் அவருடன் வந்தோரும் நெடுங்கேணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் அடைக்கலமாகியிருந்த கென்ட் மற்றும் டொலர் எனப்படும் செழிப்பான பண்ணைகளுக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். சிறு தானியப் பயிர்ச்செய்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பேட்டி காண்பதற்கு எமக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமக்குப் போதுமான வருமானம் கிடைப்பதால் தாம் மகிழ்ச்சியாக அங்கு வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அப்பிரதேசமெங்கும் பச்சைப் பசேல் என்று காட்சியளித்தது. காந்தியம் பண்ணையில் அடைக்கலமாகி வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் ஆனால், அதேவருடம் ஆனியில் இப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அவர்கள் விரட்டப்பட்டனர். வவுனியா பொலீஸ் அத்தியட்சகர் ஹேரத் இந்த விரட்டியடிப்பிற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தினார். இப்பண்ணைகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்பட்டு வருவதாக சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு அவர் வதந்திகளைக் கசியவிட்டார். அதன்பிறகு இப்பண்ணைகள் வேலைபார்த்துவந்த மலையகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பஸ்வண்டிகளில் ஏற்றப்பட்டு, மலையகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு தெருக்களில் அநாதரவாக விடப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்களின் தலைவரான தொண்டைமானை இச்செயல் கடும் சினங்கொள்ள வைத்தது. மந்திரிசபையில் இந்த விவகாரத்தை தான் எழுப்பியதாக அவர் என்னிடம் கூறினார். அதற்குப் பதிலளித்த இனவாதியான சிறில் மத்தியூ பண்ணைகளில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்ததாக கர்ஜித்தார். சிறில் மத்தியூவிற்கு ஆதரவாக காமிணி திசாநாயக்கவும் அமைச்சரவையில் தொண்டைமானுடன் தர்க்கித்தார். அங்கு பேசிய லலித் அதுலத் முதலி அரசாங்கத்தின் ஒரே நோக்கம் தமிழ்ப் பயங்கரவாதத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்பதுதான் என்று கூறினார். பின்னர் ஜெயாருடனான தனியான சந்திப்பொன்றில் இப்பிரச்சினை குறித்து தான் பேசியதாக தொண்டைமான் கூறினார். ஆனால், சிரித்துக்கொண்டே தொண்டைமான் கூறிய விடயங்களை அவர் புறங்கையால் தட்டிவிட்டதாக தொண்டைமான் கூறினார். "இதன் பின்னால் இருந்தது ஜெயார் தான் என்பதை நான் அப்போது உணர்ந்துகொண்டேன்" என்று தொண்டைமான் என்னிடம் கூறினார். எஸ் தொண்டைமான் டொலர் பண்ணையிலிருந்து துரத்தப்பட்ட இரு மலையகத் தமிழ்க் குடும்பங்களை தொண்டைமான் சந்தித்துப் பேசினார். அக்குடும்பங்களில் ஒன்றின் தலைவரான‌ பாண்டியன் அவிசாவளையில் அமைந்திருந்த இறப்பர் தோட்டத்தில் பணியாற்றி வந்தவர். அவர் வாழ்ந்துவந்த லயன் அறை 1977 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது சிங்களவர்களால் எரிக்கப்பட்டிருந்தது. சிலகாலம் அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்துவிட்டு பின்னர் வவுனியாவுக்குச் சென்றது அவரது குடும்பம். வவுனியாவில் அவரது குடும்பத்தைப் போலவே சிங்களவர்களால் மலையகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பல இந்திய வம்சாவளித் தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பதை அவர் கண்டார். "நாங்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவந்தோம். எமது பண்ணையில் கடலையும், மிளகாயும் பயிரிடப்பட்டிருந்தன. நல்ல விளைச்சலும் எமக்குக் கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களை இப்பண்ணைகளில் இருந்து பொலீஸார் விரட்டியடித்துவருவதாக எமக்குத் தகவல் கிடைத்தது. வெள்ளியன்று மாலை நான்கு பஸ்களில் பொலீஸார் வந்திறங்கினர். ஒலிபெருக்கியூடாகப் பேசிய பொலீஸார் அப்பகுதியில் இருந்த ஆண்களையெல்லாம் முன்னால் வரும்படி கூறினார்கள். அவர்கள் கூறியதன்படியே வீதியில் நாம் வரிசையில் வந்து நின்றோம். எங்களனைவரையும் மீண்டும் எமது குடிசைகளுக்குச் சென்று அங்கிருந்த மனைவி மற்றும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, உடைமைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் வீதிக்கு வருமாறு பொலீஸார் கட்டளையிட்டனர். ஏன் என்று கேட்ட சிலர் பொலீஸாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்" என்று பாண்டியன் கூறினார். "பின்னர் எங்களை தாம் கொண்டுவந்த பஸ்வண்டிகளில் ஏறுமாறு பொலீஸார் கட்டளையிட்டனர். நாம் மறுக்கத் தொடங்கினோம். உடனடியாக எம்மீது தாக்குதல் நடத்திய பொலீஸார் எம்மைப் பலவந்தமாக பஸ்களில் ஏற்றினர். எம்மீது தாக்குதல் நடத்தப்படுவதைப் பார்த்து அழுதுகொண்டிருந்த எமது குடும்பங்களையும் பொலீஸார் பஸ்களில் பலவந்தமாக ஏற்றினர். இரவோடு இரவாக நாம் அங்கிருந்து மலையகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டோம். காலை புலரும் வேளைக்கு முன்னர் பஸ்களில் இருந்து எம்மை வீதியில் தள்ளி இறக்கிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். பொழுது புலரும்போது நாம் இறக்கிவிடப்பட்டிருப்பது ஹட்டன் நகரம் என்பது எமக்குப் புரிந்தது. பின்னர் அங்கிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்றோம்" என்று பாண்டியன் மேலும் கூறினார். இரண்டாவது குடும்பத்தின் தலைவரான வடிவேலும் இதே சம்பவத்தை தானும் நினைவுகூர்ந்தார். மேலும், பொலீஸார் தம்மை பலவந்தமாக பஸ்களில் ஏற்றிய வேளை தமது குழந்தைகளின் ஒன்று கடும் சுகவீனமுற்று இருந்ததாகவும், பொலீஸார் தம்மீது நடத்திய தாக்குதல்களைக் கண்ணுற்ற அவரது குழந்தை கடுமையான அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டு சில வாரங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். இந்தியாவில் இருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றிற்காக இச்செய்தியை நான் அப்போது எழுதியிருந்தேன். இந்திய வம்சாவளித் தமிழர்களை இப்பண்ணைகளில் இருந்து விரட்டியடிக்கும் கைங்கரியத்தை லலித் மிகவும் சாதுரியமாகக் கையாண்டார். தனது நடவடிக்கைக்கான சூழலை ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரவ விட்டதன் மூலம் உருவாக்கிக் கொண்டார். ஆனால், பொதுக்கூட்டங்களில் பேசிய லலித் தான் மலையகத் தமிழர்களையோ இலங்கைத் தமிழர்களையோ வெறுக்கவில்லை என்று தொடர்ச்சியாகக் கூறிவந்தார். பயங்கரவாதிகளிடமிருந்து அவர்களைக் காக்கவே தான் பாடுபட்டு வருவதாக அவர் வாதாடினார். இந்திய வம்சாவளித் தமிழர்களை அச்சுருத்தி, அவர்களின் பிள்ளைகளைக் கடத்திச் சென்று பயங்கவாத‌ நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தமிழ்ப் பயங்கரவாதிகள் முயன்றுவருவதாக அவர் மேலும் கூறினார். இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்துவரும் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தின் நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவை அரசாங்கத்தால் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறிய லலித், அவற்றினை அரசாங்கம் மீள எடுத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் இப்பகுதி திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டு கைதிகள் குடியமர்த்தப்படுவர் என்றும், அவர்களுடன் அவர்களது குடும்பங்களும் இப்பகுதிகளில் குடியேறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தால் மீளக் கையகப்படுத்தப்பட்டதுடன் அவற்றில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளை அமைப்பதாக விசேட வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசு தெரிவித்தது. சில நாட்களிலேயே சுமார் 450 கைதிகளும் அவர்களது குடும்பங்களும் இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டு செழிப்பாக வளர்க்கப்பட்டு வந்த பயிர்களும், தமிழர்கள் வாழ்ந்து வந்த நிரந்தரக் குடிசைகளும் சிங்களக் கைதிகளுக்கு வழங்கப்பட்டன. சிங்களக் குற்றவாளிகளை வெற்றிகரமாக நெடுங்கேணியின் டொலர் மற்றும் கென்ட் பண்ணைகளில் குடியேற்றிய கையோடு ஒன்றிணைந்த படைகளின் விசேட படையணியின் தலைமையகத்தினை அநுராதபுரத்தில் லலித் நிர்மாணித்தார். இஸ்ரேலிய புலநாய்வுத்துறையான மொசாட்டின் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்திற்கமைய தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டின் அடித்தளத்தினைச் சிதைக்கும் நடவடிக்கைகளை இந்த தலைமையகத்திலிருந்தே லலித் முன்னெடுக்க ஆரம்பித்தார். இஸ்ரேலிய உளவுப்படையான மொசாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைத் திட்டம் பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது, 1. இப்பகுதிகளில் இருந்து தமிழர்களை முற்றாக விரட்டியடிப்பது. 2. தமிழர்கள் வாழும் கிராமங்களை அழிப்பதன் ஊடாக தீவிரவாதிகளுக்கு உதவிகள் கிடைப்பதைத் தடுப்பது. 3. தமிழர்களால் நேற்கொள்ளப்பட்டு வரும் பயிர்ச்செய்கைகளை அழிப்பதுடன் அவர்கள் தொடர்ந்தும் இப்பகுதிகளில் பயிர்ச்செய்களில் ஈடுபடுவதைத் தடுப்பது. இவ்வகையான திட்டத்தினை மலேசியாவை ஆக்கிரமித்து நின்றவேளை பிரிட்டிஷாரும் நடைமுறைப்படுத்தியிருந்தனர். அன்று அவர்கள் பயன்படுத்திய திட்டத்தினை தமக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்த இஸ்ரேலியர்கள், எல்லையோர யூதக் குடியேற்றங்களை உருவாக்கி அப்பகுதியூடாக ஊடறுத்து உள்நுழையும் பலஸ்த்தீனப் போராளிகளை தடுக்க முயன்று வந்தனர். தாம் ஆக்கிரமித்துவரும் பலஸ்த்தீனத்தில் தாம் கைக்கொள்ளும் திட்டத்தினையே இலங்கையும் கைக்கொள்ள வேண்டும் என்று மொசாட் அதிகாரிகள் லலித்திடம் வலியுறுத்திவந்தனர். "பயங்கரவாதிகள் உள்நுழையும் வழிகளை அடைத்துவிடுங்கள், அவர்களுக்கான வளங்களை தடுத்துவிடுங்கள்" என்பதே அவர்களின் தாரக மந்திரமாகும். தமிழர்களின் தாயகத்திற்கான அடித்தளத்தினைச் சிதைத்து ஜெயாருக்குப் பின்னர் ஜனாதிபதியாகும் கனவில் இருந்த லலித்திற்கு மொசாட் அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகள் மிகுந்த திருப்தியைக் கொடுத்தன.
  2. வலி ஓயவாக மாறிய தமிழர்களின் தாயகப்பகுதியான மணலாறு தமிழர் தாயகத்தின் இரு மாவட்டங்களான திருகோணமலைக்கும் முல்லைத்தீவிற்கும் இடையிலான நிலத்தொடர்பினை தந்திரமாக அறுத்தெறிவதுதான் யான் ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தினை வகுத்தவர்களின் நோக்கம் இப்பகுதியூடாகப் பாய்ந்து, திருகோணமலையின் வடக்கில் அமைந்திருக்கும் திரியாய்ப் பகுதிக்கூடாகக் கடலில் கலக்கும் யான் ஓயாவின் கரைகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் இதனைச் செய்வதாகும். யான் ஓயாவின் கரைகளில் சிங்கள விவசாயிகளையும், முல்லைத்தீவின் கரைகளில் சிங்கள மீனவர்களையும் குடியமர்த்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் தோல்வியடைவதை உணர்ந்த மகாவலி அபிவிருத்தி அமைச்சின் தலைவர் பண்டிதரட்ண, மாதுரு ஓயாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள விவசாயிகளைக் குடியமர்த்துவதற்கு வவுனியாவுக்கு அருகில் உகந்த பகுதியொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பணித்து கருணாதிலக்கவை அனுப்பிவைத்தார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி மாத முதல்வாரத்தில் வவுனியாவுக்குச் சென்ற கருணாதிலக்க, வவுனியாவின் பொலீஸ் அத்தியட்சகர் ஆதர் ஹேரத்தையும், வவுனியாவுக்கான மேலதிக அரசாங்க அதிபரான சிங்களவரையும் சந்தித்துப் பேசினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் நெடுங்கேணிக்கு கருணாதிலக்கவை அழைத்துச் சென்ற அவர்கள் இருவரும், அப்பகுதியில் காணப்பட்ட செழிப்பான விவசாய‌ நிலங்களை அவருக்குக் காண்பித்தனர். இப்பகுதியின் பெரும்பாலான நிலங்களில் பாரம்பரிய தமிழ் விவசாயக் கிராமங்கள் காணப்பட்டன. மேலும், மீதியிடங்களில் தமிழருக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் பண்ணைகளை குறுகிய மற்றும் நீண்டகால குத்தகை அடிப்படையில் அமைத்துச் செயற்பட்டு வந்தன. 1965 ஆம் ஆண்டிலிருந்து 99 வருடக் குத்தகைக்கு இக்காணிகள் தமிழர்களுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருந்தன. தனிப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு காணித் துண்டும் சுமார் 10 இலிருந்து 50 ஏக்கர்கள் வரை கொண்டிருந்தது. வியாபா நிறுவனங்கள் பாரிய பண்ணைகளை இப்பகுதியில் அமைத்திருந்ததுடன், இவ்வகையான 16 வியாபாரப் பண்ணைகள் சுமார் 1000 ஏக்கர்கள் அல்லது அதற்கும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்டிருந்தன. அவ்வாறான பாரிய பண்ணைகளில் நாவலர் பண்ணை, சிலோன் தியெட்டர்ஸ் பண்ணை, ரயில்வே குறூப் பண்ணை, போஸ்ட் மாஸ்ட்டர் பண்ணை, கென்ட் பண்ணை, டொலர் பண்ணை ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். 1977 ஆம் ஆண்டு மலையகத்தில் தமிழர்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட படுகொலைகளையடுத்து அங்கிருந்து விரட்டப்பட்ட பல தமிழர்கள் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் வாழ்ந்துவந்தனர். இப்பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட சிறப்பான அறுவடைகளையடுத்து இப்பெயர்கள் அனைவராலும் அக்காலத்தில் அறியப்பட்டிருந்தன. இக்காணிகளை கருணாதிலக்கவிடம் காண்பித்த பொலீஸ் அத்தியட்சகர் இவற்றில் வசிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் என்றும் கூறியதோடு ஈ.பி.ஆர்.எல்.எப் பயங்கரவாதிகள் இந்தப் பண்ணைகளில் தங்கியிருப்பதாகவும் கூறினார். இப்பண்ணைகளினால் பதவிய எனும் சிங்களக் குடியிருப்பின் வடக்கு நோக்கிய விஸ்த்தரிப்பு தடைப்பட்டு நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐப்பசி 12 ஆம் திகதி தனது அறிக்கையினை கருணாதிலக்க மகாவலி அதிகார சபையிடம் கையளித்தார். அவரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் பின்வருமாறு, "சட்டத்திற்குப் புறம்பானதும், தேசியத்திற்கு எதிரானதுமான இத்தமிழ்க் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் குடியேற்றங்களினால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் தட்டுக்கப்பட்டு வருவதோடு, தேசியப் பாதுகாப்பிற்கும் இவற்றால் அச்சுருத்தல் ஏற்பட்டிருக்கிறது". வடக்கு நோக்கி விஸ்த்தரிக்கப்பட்டு வந்த பதவியா சிங்களக் குடியேற்றம் ஆனால், நெடுங்கேணியில் சிங்களவர்களைக் குடியேற்றும் திட்டத்தினை ஜெயாரிடம் கொண்டுசெல்வதில் மகாவலி அபிவிருத்திச் சபைக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஏனென்றால், மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் காமிணியின் தாந்தோன்றித்தனத்தினால் பிசுபிசுத்துப்போனதனால் கோபம் அடைந்திருந்த ஜெயார், யான் ஓயாத் திட்டத்தை லலித் அதுலத் முதலியிடமே கொடுத்திருந்தார். அவரும் அதனை மிகவும் தந்திரமாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருந்தார். 1984 ஆம் ஆண்டு பங்குனி 24 ஆம் திகதி நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சராகவும், உதவிப் பந்தோபஸ்த்து அமைச்சராகவும் லலித் நியமிக்கப்பட்டார். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான கொவி பொல என்பதை மாங்குளத்தில் ஆரம்பித்து வைக்க அப்பகுதிக்குச் சென்றார் லலித் அதுலத் முதலி. அவரது விஜயத்தை செய்தியாக்கும் நோக்குடன் அங்குசென்ற பத்திரிக்கையாளர் குழுவில் நானும் அங்கம் வகித்தேன். லலித்தும், காமிணியும் செய்தித்தாள்களின் முதற்பக்கங்களில் எவ்வாறு இடம்பிடிப்பது எனும் கைங்கரியத்தில் மிகவும் கைதேர்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களிடமிருந்து முக்கியமான செய்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் பத்திரிக்கையாளர்களும் இவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கிச் செய்தி வெளியிட்டனர். இவர்கள் இருவர் பற்றியும் செய்திகளை வெளியிட எனக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. இதற்கிடையில், 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 26 ஆம் திகதி லலித்தின் பிறந்தநாளிற்கு நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார், "சபா, இன்றைக்கு பிரபாகரனுக்கும் பிறந்தநாள் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். நாங்கள் இருவரும் ஒரே நாளில், ஒரே மாதத்தில் பிறந்திருக்கிறோம். அவர் என்னைவிடவும் வயதில் நன்கு இளையவர். நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரம வைரிகளாக மாறியிருக்கிறோம். இருவரில் எவர் வெற்றிபெறப்போகிறோம் என்பது எனக்குத் தெரியாதுவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயம். நாம் இருவரும் இலங்கையின் சரித்திரத்தில் முக்கியமான பங்கினை ஆற்றவே படைக்கப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார். பிரபாகரனோ தமிழரின் தனிநடான ஈழத்தை அமைக்கப் பாடுபட்டு வந்தார். ஆனால் லலித்தோ அந்த ஈழத்திற்கான அடித்தளத்தை அழிக்கப் பாடுபட்டு வந்தார். தமிழர் தாயகத்தின் அடித்தளத்தை அழிக்கும் அவரது முயற்சியின் முதற்பகுதியான மாங்குளம் - நெடுங்கேணிப் பகுதியை அவருடன் சென்று பார்க்க எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடன் பயணித்த ஊடகவியலாளர் குழுவில் நானும் இருந்தேன். வழமைபோல கொவி பொல (விவசாயிகள் சந்தை) சனிக்கிழமை காலை ஆரம்பமானது. தன்னுடன் வந்திருந்த செய்தியாளர்களுக்கு சிறப்பான செய்தியொன்றினை லலித் வழங்கினார். கொழும்பிலிருந்து வெள்ளிக்கிழமை வந்திருந்த செய்தியாளர்களும், வர்த்தகக் குழுவினரும் மாங்குளம் விருந்தினர் மாளிகையின் அன்றிரவு தங்கினர். அங்கு அவர்களுக்கு இரவு விருந்தொன்றும் வழங்கப்பட்டது. வவுனியா பொலீஸ் நிலையத்தின் அத்தியட்சகர் ஆதர் ஹேரத்தும் அந்த இரவுணவில் கலந்துகொண்டார். அவருடன் நீண்ட உரையாடல் ஒன்றில் நான் ஈடுபட்டேன். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் என்பதைத் தெரிந்துவைத்திருந்த ஹேரத், மலையகத் தமிழர்கள் இப்பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளதால் வவுனியாவைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து இப்பகுதியில் குடியேறி வாழும் விவசாயிகளுக்கும் கடுமையான இடைஞ்சல் ஏற்பட்டிருப்பதாக என்னிடம் கூறினார். "இந்த இந்தியர்கள் மிகவும் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளிகள் வேலையின்றித் திண்டாடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்குச் சொந்தமாகவேண்டிய அரச காணிகளை இந்தியத் தமிழர்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்” என்று கூறினார். மறுநாள்க் காலை சந்தை திறந்துவைக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த சில வியாபாரிகளுடன் பேசிய ஹேரத் முன்னாள் இரவு என்னிடம் கூறிய அதே முறைப்படுகளை அவர்களிடமும் கூறினார். இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கெதிராக யாழ்ப்பாணத் தமிழர்களையும், வன்னித் தமிழர்களையும் தூண்டிவிடவே ஹேரத் முயல்கிறார் என்பது எனக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
  3. கைவிடப்பட்ட நிதியம் மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டம் குறித்த தகவல்கள் வெளியே வருவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து காமிணி கவலைப்படவில்லை. தனது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நவீன துட்டகைமுனுவாக சிங்களவரின் முன்னால் தன்னை அவர் காண்பிக்க நினைத்தார். ஆகவே, தனது உத்தியோகபூர்வ‌ வாசஸ்த்தலத்திற்கு முன்னணிச் சிங்கள வர்த்தகர்களை அழைத்த காமிணி தமிழரின் இலட்சியமான தமிழ் ஈழத்தின் அடித்தளத்தை எப்படி அழிக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார். தன்னுடைய‌ அமைச்சான மகாவலி அபிவிருத்திச் சபையில் பணிபுரியும் அதிகாரிகளை தமது இரகசியத் திட்டம் குறித்து வந்திருந்த வர்த்தகர்களுக்கு விளக்குமாறு அவர் கூறினார். தமது இரகசியத் திட்டம் இந்தியாவை உசுப்பேற்றிவிடும் என்பதனால், அரசாங்கத்தின் ஊடாக தமது திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலாது என்று அவர் தெரிவித்தார். ஆகவே தனியாரின் உதவியின் மூலம் பணம் திரட்டப்பட்டு சிங்கள குடியேற்றத் திட்டம் நடத்தப்படவேண்டும் என்று அவர் வாதிட்டார். காமிணி திசாநாயக்க‌ தாச முதலாளி காமினியிடம் பேசும்போது "இந்த இரகசியக் குடியேற்றம் குறித்து ஜனாதிபதி அறிவாரா?" என்று கேட்டார். அதற்கு ஆமென்று பதிலளித்தார் காமிணி. மேலும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து இக்குடியேற்றத்திட்டத்திற்குத் தேவையான பணத்தைத் தரமுடியும் என்று கூறியதாகவும் காமிணி குறிப்பிட்டார். அதன்பின்னர், நிதியத்திற்கான தகுந்த பெயர் ஒன்றினை தேடும்படியும், நல்லநாள் பார்த்து நிதியத்தை ஆரம்பிக்கலாம் என்றும் தாச முதலாளியிடம் கோரினார் காமிணி. தாச முதலாளி நிதியத்தின் தொடக்க நாள் நிகழ்வும் காமிணியின் வீட்டிலேயே நடைபெற்றது. தாச முதலாளி முதலாவதாக பத்து இலட்சம் ரூபாவுக்கான காசோலையினை நிதியத்திற்கு வழங்கினார். அன்று அங்கு வருகை தந்திருந்த ஏனைய சிங்கள வர்த்தகர்களும் தமது பங்களிப்பைச் செய்தனர். மொத்தமாக அன்று 35 லட்சம் ரூபாய்கள் நிதியத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், இவ்வாறு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் மாற்றப்படும் முன்னரே ஜெயவர்த்தன இந்த விவகாரத்தில் தலையிட்டு, திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஹேர்மன் குணரட்ணவைக் கைது செய்ததுடன் தமிழர் காணிகளில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சிங்களவர்களையும் அங்கிருந்து அகற்றினார். பதறிப்போன காமிணி, தனக்கும் மாதுரு ஓயாத் திட்டத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லையென்று நழுவி விட்டார். இந்தியாவிடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்தும் ஜெயார் மீது கடுமையான அழுத்தம் பிரியோகிக்கப்பட்டது. சென்னையில் அப்போது தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இத்திட்டம் குறித்து இந்திரா காந்தியை எச்சரித்திருந்தனர். லண்டனில் இருந்து இந்திராவையும், பார்த்தசாரதியையும் தொடர்புகொண்டு பேசிய அமிர்தலிங்கம், "தமிழருக்கு ஜெயார் கொடுக்கவிருக்கும் இறுதித்தீர்வின் ஒரு அங்கமே அவர் முன்னெடுத்திருக்கும் மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம்" என்று கூறியிருந்தார். என்னுடன் பின்னர் பேசிய அமிர்தலிங்கம் மாதுரு ஓயாத் திட்டம் குறித்து அறிந்துகொண்டபோது இந்திரா கோபப்பட்டதாகக் கூறினார். கொழும்பிலிருந்த இந்தியத் தூதரான சத்வாலிடம் இந்தியாவின் ஆட்சேபத்தினை ஜெயவர்த்தனவிடம் தெரிவிக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை கோரியது. அதன்படி, ஜெயாருடன் பேசிய சத்வால் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை இந்தியா எதிர்க்கிறது என்று கூறினார். இதனால் ஆத்திரப்பட்ட ஜெயவர்த்தன, தனது கோபத்தினை காமிணி மீது காட்டினார். காமிணி தன்னை அவமானப்படுத்திவிட்டதாக அவர் கருதினார். இரகசியமாகத் தான் முன்னெடுக்க விரும்பிய ஆக்கிரமிப்புத் திட்டத்தினை காமிணி வெளிப்படையாகப் போட்டுடைத்து விட்டதாக அவர் உணர்ந்தார். 500 அல்லது 1000 பேருடன் ஆரம்பித்திருக்க வேண்டிய தனது திட்டத்தை, காமிணி ஒரே நேரத்தில் 45,000 சிங்களவர்களைக் குடியேற்ற முற்பட்டதன் மூலம் கெடுத்துவிட்டதாக அவர் காமிணி மீது கோபப்பட்டார். மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் பல கூட்டங்களை ஜெயார் நடத்தினார். ஆக்கிரமிப்புத் திட்டத்தின் முன்னோடியான பண்டிதரட்ணவிடம் அப்பகுதியில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சிங்களவர்களை உடனடியாக விலக்கிவிடுமாறு பணித்தார். அதற்குப் பதிலளித்த பண்டிதரட்ண, "சிங்களவர்களை அங்கு அழைத்துச் சென்றது திம்புலாகலை பிக்குதான்" என்று பதிலளித்தார். இதனால் கோபமடைந்த ஜெயார், "மகாவலி அதிகார சபையினை திம்புலாகலை பிக்குவே நடத்துவதாக இருந்தால், நான் அவரை தலைவராக நியமிக்கிறேன், நீங்கள் எனக்குத் தேவையில்லை, வீட்டிற்குச் செல்லலாம்" என்று கூறினார். பண்டிதரட்ணவும் ஏனைய அதிகாரிகளும் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பினை சிறிய விடயமாகக் காண்பிக்க எத்தனித்தனர். உள்நாட்டுப் பத்திரிக்கைகளிலும், இந்தியாவின் ஊடகங்களிலும் வெளிவரும் அறிக்கைகள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டவை என்று அவர்கள் கூறினர். வெறும் 2000 சிங்கள விவசாயிகளே மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்குச் சென்றதாக அவர்கள் ஜெயாரிடம் கூறினர். ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட லலித் அதுலத் முதலியும் இன்னும் சிலரும் ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைதான் என்று ஜெயாரிடம் வலியுறுத்தினர். மேலும், நேர்த்தியாகச் செய்யப்படவேண்டிய ஆக்கிரமிப்பினை காமிணி போன்றவர்கள் தவறாக வழிநடத்தி வெளிக்கொணர்ந்துவிட்டனர் என்று ஜெயாரிடம் கூறினர். காமிணியுடனான ஜெயாரின் தற்காலிக வெறுப்பினைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஜெயாருடன் நெருக்கமாகலாம் என்று லலித் கணக்குப்போட்டுக் கொண்டார். ஜெயார் செய்துவந்த அரசியல் நடைமுறை அவருக்கான படுகுழியினை அவரே தோண்டும்படி செய்துவிட்டிருந்தது. தனது அமைச்சர்களுக்கிடையே போட்டி மனப்பான்மையினை அவரே தூண்டிவிட்டார். லலித்தும் காமிணியும் இளமையான, அரசியலில் வளர வேண்டும் என்கிற ஆசையைக் கொண்டிருந்த மனிதர்கள். ஜெயாருக்குப் பின் கட்சியின் தலைமைப்பதவிக்குத் தாமே சரியானவர்கள் என்பதை இருவரும் தனித்தனியாக அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருந்தனர். ஆனால், பிரதமாரான பிரேமதாசவும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஆர்வமாக இருந்தார். ஆனால், இவர்கள் மூவரிலும் காமிணியையே ஜெயார் அதிகம் விரும்பினார் என்பது இரகசியமல்ல. அமைச்சுக்களில் முக்கியமான காணிகள் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சு எனும் பதவி காமிணிக்கு வழங்கப்பட்டிருந்தது. லலித்தோ ஆரம்பத்திலிருந்தே எப்படியாவது ஜெயாருக்கு நெருக்கமாக வரவேண்டும் என்று அயராது முயன்று வந்திருந்தார். நான்கு இனவாதிகள் :காமிணி பொன்சேக்கா, லலித், காமிணி திசாநாயக்கா மற்றும் ஜெயார் இக்காலத்தில் ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த ஏ.ஜே.வில்சன் (தந்தை செல்வாவின் மருமகன்) முன்னாள் இந்தியத் தூதுவர் திக்சீத் எழுதிய "கொழும்பில் எனது பணி" எனும் புத்தகத்திற்கான உரையில் ஜெயாரின் இந்த மூன்று அமைச்சர்களிடையேயும் நிலவிவந்த போட்டி மனப்பான்மையினை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். 1998 ஆம் ஆண்டு மாசி மாதம் 8 ஆம் திகதி ஐலண்ட் நாளிதழில் வில்சன் எழுதிய இவ்வுரையில், ஜெயாரின் மைதானத்தில் இந்த மூன்று அமைச்சர்களுக்கிடையேயும் நிகழ்த்தப்பட்டு வந்த சூழ்ச்சிகள் பற்றி எழுதியிருந்தார். "தனக்குப் பின்னர் ஜனாதிபதிப் பொறுப்பு காமிணிக்கே வழங்கப்படவேண்டும் என்று ஜெயார் விரும்பியிருந்தது ஒன்றும் இரகசியமல்ல. தொண்டைமானே ஒருமுறை காமிணி பற்றிப் பேசும்போது அவர் ஜெயாரின் செல்லப்பிள்ளை என்று குறிப்பிட்டிருந்தார். ஜெயாருடனான எனது சம்பாஷணைகளின்பொழுது காமிணிக்கு ஜெயார் தனது இதயத்தில் தனியான இடம் ஒன்றினைக் கொடுத்திருந்தார் என்பதை உணர்ந்துகொண்டேன். 1982 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர் தொல்லைகொடுப்பவரான பிரதமர் பிரேமதாசவை அகற்றிவிட்டு காமிணியைப் பிரதமராக்கும் எண்ணம் ஜெயாருக்கு இருந்தது" என்று வில்சன் எழுதியிருந்தார். ஜெயாருக்குப் பின்னர் தான் தலைமைப் பொறுப்பினை எடுக்கமுடியாது என்பதை லலித் நன்கு அறிந்தே இருந்தார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஒன்றியத்தில் செயலாளராக ஆரம்பத்தில் பதவி வகித்து பின்னர் ஒன்றியத் தலைவராக வந்ததுபோல ஐக்கிய தேசியக் கட்சியில் பின்னாட்களில் இணைந்தபோதும் கூட ஒருநாள் நிச்சயமாக தலைமைப் பதவியினைப் பிடிப்பேன் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் பலமுறை கூறியிருக்கிறார். லலித்திற்குக் கிடைத்த சந்தர்ப்பம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அரசாங்கத்திற்கு அவப்பெயரினை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பாவிக்க லலித் நினைத்தார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் வெளிவந்ததையடுத்து சர்வதேசத்தில் ஜெயாரின் பெயருக்கு இழுக்கு ஏற்பட்டிருப்பதாக ஜெயாரின் காதுகளில் உரைக்கத் தொடங்கினார் லலித். அக்காலப்பகுதியில் இந்தியாவிடமிருந்தும், சர்வதேசத்திடமிருந்தும் மிகக் கடுமையான அழுத்தம் ஜெயார் மீது பிரியோகிக்கப்பட்டு வந்தது. ஆகவே, ஜெயாரின் கோபம் காமிணி மீதும், பண்டிதரட்ண மீதும் திரும்பியது. அவர்களுடன் பேசுவதையே ஜெயார் தவிர்க்கத் தொடங்கினார். அவர்களுக்குச் செவிமடுப்பதையோ அல்லது அவர்கள் கூறுவதை நம்புவதையோ அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். போல் பெரேரா தனக்கு நெருக்கமான இன்னொரு அமைச்சரான போல் பெரேராவிடம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்கு மேலால் உலங்குவானூர்தியில் சென்று, நிலைமைகளை ஆராய்ந்து தனக்கு அறிவிக்குமாறு பணித்தார் ஜெயார். அதன்படி ஐப்பசி 1 ஆம் திகதி அப்பகுதியின் மேலாக வானூர்தியில் வலம் வந்தார் பெரேரா. அவர் கொழும்பிற்கு வந்தவுடன் அவருடன் தொலைபேசியில் நான் உரையாடினேன். உலங்கு வானூர்தியில் இருந்து பார்க்கும்போது சுமார் 20,000 குடிசைகளை அப்பகுதியெங்கும் தான் கண்டதாக பெரேரா என்னிடம் கூறினார். உடனடியாக செயலில் இறங்கிய ஜெயார், பெரேராவை பொலொன்னறுவை மாவட்டத்தில் மேலதிக அமைச்சராக நியமித்ததுடன் மாதுரு ஓயாவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சிங்களவர்களை உடனடியாக அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு பணித்தார். தேவையேற்படின் பொலீஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியினையும் கோரலாம் என்றும் அவருக்குக் கூறப்பட்டது. தன்னார்வ ஆயுதப் படைகளின் அதிகாரியான கேணல் பெனடிக்ட் சில்வா பெரேராவுக்கு உதவியாளராக ஜெயாரினால் நியமிக்கப்பட்டார். ஆனால், பெரேராவோ உடனடியாக செயலில் இறங்க விரும்பவில்லை. தனது பணிக்குச் சார்பான சூழ்நிலையினை ஊடகங்கள் ஊடாக உருவாக்க அவர் நினைத்தார். அவர் என்னிடம் ஒரு விசேட கதையொன்றினைக் கூறினார். அக்கதையின்படி, மாதுரு ஓயாவை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களவர்களிடம் தமது பகுதிகளுக்குத் திரும்புமாறு தான் கேட்கப்போவதாகக் கூறினார். அரசுக்குச் சொந்தமான நிலங்களை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அதிகாரம் தனியாருக்கு இல்லையென்று தான் கூறப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், தனது கோரிக்கைக்கு விவசாயிகள் இணங்காதவிடத்து வேறு வழியின்றி தான் பலத்தைப் பிரியோகிக்க வேண்டி ஏற்படும் என்பதையும் மிகவும் நாசுக்காக அவர் கூறினார். போல் பெரேரா தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை மிகவும் திறம்படச் செய்யத் தொடங்கினார். தனது கோரிக்கையினை நிராகரித்து மாதுரு ஓயாவில் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சிங்கள விவசாயிகளை பொலீஸாரையும் இராணுவத்தினரையும் கொண்டு அகற்றினார். பொலொன்னறுவைக்குச் சென்ற பெரேரா அங்கு இராணுவத்தினருடனும் பொலீஸாருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டார். மிகவும் தந்திரமாக செயற்படுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். "அவர்கள் அனைவருமே தவறாக வழிநடத்தப்பட்ட மக்கள். அவர்கள் மீது தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாம்" என்று அவர் படையினரிடமும், பொலீஸாரிடமும் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அங்கிருந்த சிங்கள விவசாயிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். திம்புலாகலைப் பிக்குவும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் பொலீஸாரை உதாசீனம் செய்து அப்பகுதியில் தொடர்ந்தும் தங்கியிருக்க பிக்கு முயன்றபோதும், ஜெயாரின் கட்டளைக்கு அமைவாகவே தாம் அவரை வெளியேற்றுவதாகப் பொலீஸார் கூறியவுடன் அவர் அங்கிருந்து வெளியேறச் சம்மதித்தார். ஜெயாருக்கு நெருக்கமாகும் தனது முயற்சியில் லலித் சிறிது தூரம் தற்போது பயணித்திருந்தார். தேசியப் பாதுகாப்பிற்கான அமைச்சராகவும், உதவிப் பந்தோபஸ்த்து அமைச்சராகவும் ஜெயாரினால் நியமிக்கப்பட்ட அவர் எட்டு மாதங்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு வைகாசி மாதம், அமைச்சரவையில் மிகப் பலம் பொறுத்தியவராக வலம்வரத் தொடங்கினார். இதனால் பிரேமதாசவுக்கான முதலாவது எதிரியாகவும் அவர் தெரியத் தொடங்கினார். காமிணி சிறிது சிறிதாக வெளிச்சத்திலிருந்து மறைந்து போய்க்கொண்டிருந்தார். தனது முக்கியத்துவத்தினை மீளக் கட்டியெழுப்ப காமிணிக்கு மூன்று வருடங்கள் பிடித்தது. இந்தியாவுக்கு நெருக்கமானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டதுடன், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு இலங்கை அரசு சார்பாக செயற்பட்டவர்களில் முக்கியமானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டதன் மூலமும் அந்நிலையினை அவரால் எய்தமுடிந்தது. மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டத்தை இரத்துச் செய்ய ஜெயார் இட்ட ஆணையினை மீளப் பெறச் செய்யும் நோக்குடன் காமிணியையும், பண்டிதரட்ணவையும் சந்திக்க கொழும்பிற்குச் சென்றார் திம்புலாகலைப் பிக்கு. மகாவலி அமைச்சிற்குச் சென்ற அவரைச் சந்திக்க காமிணியும், பண்டிதரட்ணவும் மறுத்து விட்டனர். அதன்பின்னர் கொழும்பில் இயங்கிய அனைத்துச் செய்திதாள்களின் அலுவலகங்களுக்கும் அவர் சென்றார். லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வந்த அவர் தினமின நாளிதழின் ஆசிரியரைச் சந்தித்தார். பின்னர் ஆசிரியரின் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அவர் ஆசிரியர் அலுவலக ஊழியர்களிடம் பேசினார். தினமின ஆசிரியர்ப் பீடத்தின் அருகிலேயே டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் ஆசிரியர்ப் பீடமும் அமைந்திருந்தது. நான் அன்று அங்கு நின்றிருந்தேன். திம்புலாகலைப் பிக்கு மிகுந்த ஆவேசமாகக் காணப்பட்டார். உச்சஸ்த்தானியில் கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார். சிங்கள நாட்டிற்கும், சிங்களத் தேசியத்திற்கும் எதிராக போல் பெரேரா செயற்பட்டுள்ளதாக அவர் கடுமையாகச் சாடினார். பெரேரா ஒரு கத்தோலிக்கர் என்பதாலேயே சிங்கள பெளத்தர்களுக்கெதிராகச் செயற்பட்டுள்ளதாக பிக்கு குற்றஞ்சுமத்தினார். தான் கொண்டுவந்த பெரிய குடையினை உயர்த்திக் காட்டிய பிக்கு, "அவனைக் கண்டால் இதனாலேயே அவனை அடிப்பேன்" என்று கத்தினார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்துவது ஜெயாருக்கு அன்று தேவையாக இருந்தது. தேவநாயகம் பதவி விலகிச் செல்வதை ஜெயார் விரும்பவில்லை. இன்னொரு இனக்கலவரம் ஆரம்பிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. இவை எல்லாவற்றையும் விட, இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடுவதை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று அவர் கருதினார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்பின் மூலம் இந்திரா காந்தி மிகவும் சினங்கொண்டிருப்பதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்த்தானிகர் பேர்ணாட் திலகரட்ண ஜெயாரிடம் அப்போது கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆகவே, இச்சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சில விடயங்கள ஜெயாரினால் செய்யவேண்டியிருந்தது. முதலாவதாக ஹேர்மன் குணரட்ணவும் இன்னும் 40 மகாவலி உயர் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், ஈழத்திற்கான அடித்தளத்தினைச் சிதைப்பதை ஜெயார் தொடர்ந்தும் முன்னெடுக்க கங்கணம் கட்டினார். தனது இரகசியத் திட்டத்தினைக் குழப்பியதற்காக காமிணி, ஜெயாரினால் ஓரங்கட்டப்பட்டார்.அப்பொறுப்பினை காமிணியின் எதிரியான லலித்திடம் ஜெயார் கொடுத்தார். யன் ஓயா அபிவிருத்தித் திட்டத்தினைக் கையாளும் பொறுப்பு லலித்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்களை அடுத்துவரும் பதிவுகளில் பார்க்கலாம்.
  4. மாதுரு ஓயா அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய அரச இயந்திரம் மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் நாயகர்கள் காமிணியும் ஜெயவர்த்தனவும் மாதுரு ஓயா பகுதியில் பிக்கு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சிங்களவர்களின் அடாத்தான நிலஅபகரிப்பிற்கு அரசால் வெளிப்படையாக ஆதரவு கொடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட கலவரங்களுக்குப் பின்னரும் ஜெயவர்த்தனவை ஆதரித்து நின்ற ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கூட மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்ட இனக்கலவரங்களினால் சர்வதேச அனுதாபத்தினைப் பெற்றுவந்த தமிழர்களுக்கு மாதுரு ஓயாவின் ஆக்கிரமிப்பை அரசு ஆதரிப்பதென்பது அவர்களது நிலையினை இன்னும் பலப்படுத்தியிருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவையும் இது ஆத்திரப்படுத்தியிருக்கும். ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை இரகசியமாக, மெதுமெதுவாகவே செய்ய விரும்பியிருந்தனர். ஆனால், மகாவலி அபிவிருத்திச் சபையில் பணியாற்றிய சிலர் மிகவும் வெளிப்படையாகவும் மூடத்தனமாகவும் மிகப்பெரிய செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்ததன் மூலம் ஜெயாரின் திட்டத்தினைப் போட்டுடைத்துவிட்டனர். இது ஜெயாரின் அரசையும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியிருந்தது. புரட்டாதி 8 ஆம் திகதி தேவநாயகம் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பு அவர் எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. மாதுரு ஓயாவின் சிங்கள ஆக்கிரமிப்பை மகாவலி அபிவிருத்தி அமைச்சு துரிதப்படுத்தியது. திம்புலாகலை பிக்குவை அணுகிய அதிகாரிகள், சிங்களக் குடியேற்றத்தினைத் துரிதப்படுத்துமாறு கோரினர். பிக்குவும் மிக வெளிப்படையாகவே இக்குடியேற்றதைச் செயற்படுத்தத் தொடங்கினார். அதன் ஒரு அங்கமாக தவச எனும் சிங்கள நாளிதழில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்ட திம்புலாகலை தேரை, மகவலி நீர்ப்பசணத் திட்டத்தின் மூலம் நண்மையடையப்போகின்ற காணிகளில் விவசாயம் செய்ய விரும்புவோர் தன்னைத் தொடர்புகொள்ளலாம் என்கிற அறிவிப்பினை அந்த விளம்பரம் தாங்கி வந்தது. மேலும், நாட்டிலுள்ள அனைத்து பெளத்த‌மத பீடங்களின் நாயக்கர்களுக்கும் திம்புலாகலை பிக்கு அனுப்பிய கடிதத்தில் தத்தமது பகுதிகளில் இருந்து குறைந்தது இரு காணிகளற்ற விவசாயிகளையாவது தெரிவுசெய்து தருமாறு கேட்டிருந்தார். இவ்வாறு 700 காணிகளற்ற சிங்கள விவசாயிகளைச் சேர்த்துக்கொண்டு மாதுரு ஓயாவிற்குச் சென்றார் திம்புலாகலை தேரை. இவரது இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மட்டக்களப்பு அரசாங்க அதிபரையும், ஏனைய அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்திருந்தது. தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காணிகளை ஆக்கிரமித்து நின்ற 700 சிங்கள விவசாயிகளையும், பிக்குவையும் அவ்விடத்தில் இருந்து அகன்றுவிடுமாறு அரசாங்க அதிபர் கோரியபோது அவர்கள் அவரைச் சட்டை செய்யவில்லை. அரசாங்க அதிபர் பொலீஸாரின் உதவியை நாடியபோது அவர்களும் கைவிரித்து விட்டனர். ஆகவே, வேறு வழியின்றி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் கல்க்குடா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அமைச்சர் தேவநாயகத்திற்கு இதுகுறித்த கடிதம் ஒன்றினை அரசாங்கதிபர் அந்தோணிமுத்து அனுப்பிவைத்தார். தமிழர் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட திம்புலாகலைப் பிக்குவின் உருவச்சிலையினைத் திறந்துவைக்கும் போர்க்குற்றவாளி சவீந்திர சில்வா மகாவலி அபிவிருத்திச் சபையும் வெளிப்படையாகவே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. திம்புலாகலை விகாரையிலிருந்து மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்கு சிங்கள விவசாயிகளை ஏற்றிச்செல்ல அமைச்சின் பாரவூர்திகளை அமைச்சு அனுப்பி வைத்தது. இப்பகுதியில் அத்துமீறிக் குடியேறும் சிங்கள விவசாயிகள் வீடுகளை அமைக்கவென தடிகள், பிளாத்திக்கு துணிகள், வேயப்பட்ட ஓலைகள் மற்றும் ஏனைய கட்டடப்பொருட்களையும் அமைச்சகத்தின் பாரவூர்திகள் கொண்டுவந்து சேர்த்தன. இதற்கு மேலதிகமாக சீமேந்துப் பக்கெற்றுக்களும் ஏனைய பொருட்களும் அமைச்சகத்திலிருந்து இப்பகுதிக்கு ஏற்றிவரப்பட்டன. மகாவலி ஆற்றில் பணியில் ஈடுபடுத்த வரவழைக்கப்பட்ட உழவு இயந்திரங்களும், புல்டோசர்களும் மாதுரு ஓயாப் பகுதியில் சிங்களவர்கள் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கும் காணிகளை துப்பரவாக்கி சமப்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டன. புரட்டாதி 15 ஆம் திகதி தேவநாயகத்துடன் மீண்டும் தொடர்புகொண்ட அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து, மாதுரு ஓயாவில் அத்துமீறி நுழைந்து, தமிழர் காணிகளைக் கைப்பற்றி இருக்கும் சிங்களவர்களின் தொகை 40,000 ஆக உயர்ந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். ஆகவே தனது இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பினை மறுநாளே கூட்டிய தேவநாயகம் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் இந்த நிலைமையினால் மிகுந்த அதிருப்தியடைந்து வருவதாகவும் மோதல்கள் உருவாகும் சூழ்நிலையொன்று உருவாகி வருவதாகவும் அவர் கூறினார். மகாவலி அபிவிருத்தி அமைச்சு சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தேவநாயகம் குற்றஞ்சாட்டினார். தனது குற்றச்சாட்டினை நிரூபிக்க புகைப்பட ஆதாரங்களை அவர் காட்டினார். மகாவலி அமைச்சுக்குச் சொந்தமான பாரவூர்திகள் விவசாயிகளையும், கட்டடப் பொருட்களையும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குக் கொண்டுவந்து இறக்குவதைப் புகைப்படங்கள் காட்டின. மேலும், மகாவலி அமைச்சின் அதிகாரிகள், பணியாளர்கள், ஒப்பந்தக் காரர்கள் என்று பெரும் பட்டாளமே இக்குடியேற்றத்தை செயற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருவதையும் புகைப்படங்கள் காட்டியிருந்தன. புகைப்படங்களுக்கு மேலாக இந்த செயற்பாடுகளை நேரடியாகக் கண்டவர்களும் ஊடகவியலாளர்களிடம் தமது சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்டனர். மாதுரு ஓயாவில் தற்போது காணப்படும் நிலைமை அப்பகுதியில் பாரிய விழா ஒன்று நடைபெற்றுவருவது போன்று காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். "நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திம்புலாகலை விகாரைக்கு மக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றனர். பாரவூர்திகளும், மினிவான்களும் மக்களை கொண்டுவந்து இறக்கிக் கொண்டிருக்கின்றன. அங்கிருந்து மாதுரு ஓயாவின் பல பகுதிகளுக்கு அம்மக்களை மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளே அனுப்பி வைப்பதோடு அம்மக்களுக்குத் தேவையான கட்டடப் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர். துப்புரவு செய்யப்படும் காணிகளில் மக்கள் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள அதிகாரிகளே உதவுகின்றனர். பல தனியார் அமைப்புக்கள் இம்மக்களுக்கான உணவுப் பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர்" என்று பொலொன்னறுவைக்கான லேக் ஹவுஸின் நிருபர் கூறினார். . திம்புலாகலை விகாரை மகவலி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகளின் திரைக்குப் பின்னரான இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றிய வதந்திகள் கொழும்பின் உயர்வர்க்க மட்டத்தில் பரவிவரத் தொடங்கின. மேலும் இத்திட்டத்தின் நடத்துனராகச் செயற்பட்டு வந்த ஹேர்மன் குணரட்ண மகவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்கவிடம் மாதுரு ஓயாச் சிங்கள குடியேற்றத்திற்கு இராணுவப் பாதுகாப்பினை வழங்குமாறு கோரியபோதும், இராணுவத்தினருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என்று கூறி காமிணி அக்கோரிக்கையினை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. குணரட்ணவிடம் பேசிய காமிணி இராணுவத்திற்குப் பதிலாக வேறு ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இத்திட்டத்தின் பிதாமகர்களில் ஒருவரான பண்டிதரட்ண, பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புகொண்டு ஆடிக் கலவரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்ததற்காகவும் பல தமிழர்களைக் கொன்றதற்காகவும் பதவியிலிருந்து விலக்கப்பட்ட‌ கடற்படைவீரர்களை, சட்டவிரோதமாக நடந்துவந்த மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கேட்டுக்கொண்டதாகத் தெரிய வருகிறது. மிகுந்த கோபத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேவநாயகம் எச்சரிக்கை ஒன்றினையும் அங்கு விடுத்தார். "மீண்டுமொருமுறை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இனமோதல் ஒன்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமானால், மாதுரு ஓயாவில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். எனது கோரிக்கைகுச் சாதகமான பதில் ஒன்றினை இந்த அரசாங்கத்தினால் தரமுடியாது போனால் நான் எனது பதவியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார். தேவநாயகத்தின் இந்த எச்சரிக்கைகள் ஊடகங்களில் வந்ததையடுத்து ஜெயார் கோபப்பட்டார். இன்னொரு இனக்கலவரத்தையோ அல்லது தேவநாயகம் விலகிச் செல்வதையோ ஜெயாரினால் அப்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. தமிழர்கள் தனது ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு தேவநாயகமே ஜெயாருக்கு உதவிவந்தார். தேவநாயகமும், தொண்டைமானுமே தமிழர்கள் மீது ஜெயார் கருணையுடன் இருக்கிறார் என்று காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட நடிகர்களாக அன்று இருந்தார்கள். தேவநாயகத்தின் பதவி விலகலும், இன்னொரு இனக்கலவரமும் மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் பின்னால் தான் இருப்பதை உலகிற்குக் காட்டிவிடும் என்று அவர் அஞ்சினார். ஆகவே, தேவநாயகத்துடன் நேரடியாகப் பேசிய ஜெயார், "நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் பொறுமையாக இருங்கள்" என்று கெஞ்சினார்.
  5. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைத்து, அழித்துவிட உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் தேவநாயகத்தின் பத்திரிக்கையாளர் அழைப்பிற்கு வந்தவர்கள் ஓரளவிற்கு நடுநிலைமையுடன் நடந்துகொணடதுடன் அதற்குத் தேவையானளவு முக்கியத்துவத்தையும் தமது ஊடகங்களில் வழங்கியிருந்தனர். ஆனால், இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மகாவலி அபிவிருத்தி அமைச்சிற்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறிய, ஆனால் பலம்வாய்ந்த குழுவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டுடனான தனிநாட்டுக்கான கோரிக்கையின் அஸ்த்திவாரத்தினை முற்றாகத் தவிடுபொடியாக்கிவிட மகாவலி அபிவிருத்தி என்கிற பெயரில் தாம் எடுத்துவரும் இரகசிய நடவடிக்கைகளை தேவநாயகத்தின் இந்த முயற்சி முறியடித்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர். ஆகவே தமது இரகசியத் திட்டத்தினை துரிதப்படுத்தும் வேலைகளை அவர்கள் ஆரம்பித்தனர். மகாவலி அமைச்சில் செயற்பட்டு வந்த அதிதீவிர சிங்கள அமைப்பினால் இந்த இரகசியத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இக்குழுவிற்கு திட்டமிடல்ப் பிரிவின் இயக்குநர் டி.எச். கருணாதிலக்கவும், மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்கவின் செயலாளர் ஹேமப்பிரியவும் தலைமை தாங்கினர். இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சில் பணியாற்றிய ஏனைய உயர் அதிகாரிகள், சர்வதேச பிரசித்தி பெற்ற சிங்களக் கல்விமான்கள் ஆகியோரும் இத்திட்டத்திற்கு உதவிகளை வழங்கிவந்தனர். தமது திட்டத்தினை செயற்படுத்த மலிங்க ஹேர்மன் குணரட்ணவை இக்குழுவினர் அமர்த்திக்கொண்டனர். அமைச்சகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எனும் பதவியும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அவருக்கு வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு கொழும்பில் அவரது வீட்டில் என்னுடன் பேசிய ஹேர்மன் குணரட்ண, தமது இரகசியத் திட்டத்திற்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்க முழு ஆதரவினையும் வழங்கியதாகக் கூறினார். ஜனாதிபதி ஜெயாரும் இத்திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கியிருந்ததாக தான் நம்புவதாகவும் அவர் கூறினார். தனது நம்பிக்கைக்கான காரணங்களாக பின்வரும் இரு விடயங்களை அவர் முன்வைத்தார். "முதலாவது காரணம், எமது இரகசியத் திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய மூன்று முக்கிய மனிதர்களும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயற்பட்டவர்கள்". அவர் குறிப்பிட்ட அந்த மூன்று முக்கிய நபர்கள், ஜெயாரின் மகனான ரவி ஜெயவர்த்தன, ஜெயார் தனது இன்னொரு மகனாக நடத்திவந்த அமைச்சர் காமிணி திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜெயாரினால் நியமிக்கப்பட்ட பண்டிதரட்ண ஆகியோராகும். இவர்கள் மூவரும் ஜெயாரிடமிருந்து எந்த விடயத்தையும் மறைப்பதில்லை என்று அறியப்பட்டவர்கள். ஹேர்மன் குணரட்ண கூறிய இரண்டாவது காரணம், மாதுரு ஓயா சிங்கள ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யுமாறு ஜெயார் அறிவித்த அதே நாளான ஐப்பசி 6 ஆம் திகதி தனது வீட்டில் நடைபெற்ற நிதிதிரட்டும் நிகழ்வில் தன்னிடம் கேள்விகேட்ட தாஸ‌ முதலாலிக்குத் காமிணி திசாநாயக்க வழங்கிய பதிலாகும். இதுகுறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம். காமிணியிடம் பேசிய தாஸ முதலாளி, "மகாவலி அமைச்சின் இரகசியத் திட்டம் குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா?" என்று வினவியிருந்தார். அதற்குப் பதிலளித்த காமிணி, "ஜனாதிபதிக்கு இத்திட்டம் தெரியும் என்பது மட்டுமல்லாமல், இத்திட்டத்தினை வெற்றிகரமாக பூரணப்படுத்த ஜனாதிபதி நிதியத்திலிருந்தும் பெருமளவு பணத்தினை அவர் வழங்க முன்வந்திருக்கிறார்" என்று பதிலளித்தார். பண்டிதரட்ண 1983 ஆம் ஆண்டின் கறுப்பு யூலை இனக்கொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஒன்றில், பண்டிதரட்ண தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த இரகசியத் திட்டத்திற்கான மூலம் விதைக்கப்பட்டது. அமைச்சகத்தில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளுக்கு இத்திட்டம் தெரியாதவகையில் மிகவும் இரகசியமான முறையில் தீட்டப்பட்டது. இரகசியத் திட்டம் இரு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. முதலாவது, தமீழத்திற்கான அடிப்படையினை முற்றாக அழிப்பது. இதனை அடைவதற்கு தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பினையும், ஒருமைப்பாட்டினையும் உடைக்கும் நோக்கில், தமிழர் தாயகத்தின் மாதுரு ஓயா, யன் ஓயா, மல்வத்து ஓயா ஆகிய நதிகளை அண்டிய பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவது. மாதுரு ஓயா விவசாயக் குடியேற்றத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையே இருந்த நிலத்தொடர்பு முற்றாக அறுத்தெறியப்படும். யன் ஓயாக் குடியேற்றத்திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பு கடுமையாகச் சிதைக்கப்படும். மல்வத்து ஓயா திட்டத்தின் ஊடாக மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்படும். திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் நிலத்தொடர்பை அறுத்தெறியும் மாதுரு ஓயா குடியேற்றத் திட்டம் திருகோணமலை முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினைச் சிதைக்கும் யன் ஓயாக் குடியேற்றம் புத்தளம் மன்னார் ஆகிய மாவட்டங்களைப் பிரிக்கும் மல்வத்து ஓயா குடியேற்றம் இரகசியத் திட்டத்தின் முதலாவது கட்டம் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை விலத்தியே அமுல்ப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. "இறையாண்மை கொண்ட நாட்டினை உருவாக்க" எனும் தலைப்பில் தான் எழுதிய புத்தகம் தொடர்பாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் 1990 ஆம் ஆண்டு ஆவணி 26 ஆம் திகதி, இந்த இரகசியத் திட்டத்தினை முன்னெடுத்தவர் என்கிற வகையில் ஹேர்மன் ஒரு கட்டுரையினை வரைந்திருந்தார். என்னுடன் பேசுகையில் இத்திட்டத்தின் எல்லைகள் குறித்தும் குறிப்பிட்டார் ஹேர்மன். தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்கள் ஒவ்வொன்றிலும் 50,000 சிங்களவர்களைத் தாம் குடியேற்றத் திட்டமிட்டதாகவும், இதன்மூலம் இப்பகுதிகளின் இனப்பரம்பலினை முற்றாக மாற்றிவிடுவதே தமது நோக்கம் என்றும் அவர் கூறினார். குணரட்ணவுடன் பேசும்போது அவர் ஒரு நேர்மையான மனிதர் என்பதனை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தனது திட்டம் வெற்றியடைய வேண்டும் என்று அவர் கொண்டிருந்த உறுதிப்பாடும், அதற்காக அவர் நேர்மையாக உழைத்த விதமும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. அவருடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, "நீங்கள் எதற்காகச் சண்டை பிடிக்கிறீர்கள்?" என்று என்னைக் கேட்டார் ஹேர்மன். "தமிழர்களுக்கென்று தனியான நாட்டினை உருவாக்கவே போராடுகிறோம்" என்று நான் பதிலளித்தேன். "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினையே நாம் அழித்துவிட்டால், அதன்பிறகு தமிழீழத்திற்காக நீங்கள் போராட முடியாது, இல்லையா?" என்று அவர் கேட்டார். பின்னர் சலித்துக்கொண்டே, "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினைச் சிதையுங்கள் என்று அவர்களே எங்களிடம் கூறிவிட்டு, பின்னர் சர்வதேசத்திற்குக் காட்ட எம்மை சிறையில் அடைத்து தம்மை நேர்மையானவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். குள்ளநரிக் கூட்டம்" என்று அவர் மேலும் கூறினார். குணரட்ண உடபட 40 மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் அரசால் தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியாத பொலீஸ் தடுப்புக்காவல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் மீது நீணட தொடர்ச்சியான விசாரணைகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டன. தொண்டைமானின் சுயசரிதையினை நான் எழுதியது குறித்து முன்னர் கூறியிருந்தேன். இதுதொடர்பான மேலதிகத் தகவல்களை சேகரிப்பதற்காக பெருந்தோட்டத்துறையில் ஆரம்பத்தில் பணியாற்றியவர் என்கிற ரீதியில், ஹேர்மன் குணரட்ணவைச் சந்திக்க தொண்டைமான் என்னை அனுப்பியிருந்தார். நான் அவரைச் சந்திக்க வருவது குறித்து தொண்டைமானின் செயலாளர் திருநாவுக்கரசு ஏற்கனவே குணரட்ணவிடம் தெரிவித்திருந்தமையினால், என்னுடன் ஒளிவுமறைவின்றி அவர் பேசினார். தான் எவ்வாறு கைதுசெய்யப்பட்டேன், தொண்டைமான் தன்னை எவ்வாறு பிணையில் விடுவித்தார் என்பது குறித்த பல தகவல்களை குணரட்ண என்னிடம் கூறினார். "காலை 4 மணியிருக்கும், எனது வீட்டுக் கதவினை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்துபார்த்தால் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்க அங்கு நின்றிருந்தார். எனது வீட்டைச் சுற்றிப் பல பொலீஸார் நிற்பதும் எனக்குத் தெரிந்தது. வீட்டில் எனது புதல்விகள் மட்டுமே இருந்தனர். மாதுரு ஓயா இரகசியத் திட்டத்திற்காகவே நான் கைதுசெய்யப்படுவதாக ரொனி என்னிடம் தெரிவித்தார். நான் உடனேயே, இக்கைது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா என்று ரொனியிடம் கேட்டேன். உங்களைக் கைது செய்யச் சொல்லி என்னை அனுப்பியதே ஜனாதிபதிதான் என்று ரொனி பதிலளித்தார். அப்படியானால், காமிணி திசாநாயக்கவுக்கு இக்கைது பற்றித் தெரியுமா என்று நான் மீண்டும் கேட்டேன். நீங்கள் என்னுடன் பொலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், இவைகுறித்து விரிவாக அங்கே பேசலாம் என்று அவர் பதிலளித்தார். என்னைக் கைதுசெய்து ஜீப் வண்டியில் தள்ளி ஏற்றிய விதத்தினைக் கண்ட எனது புதல்விகள் நடுங்கிப் போயினர்" என்று குணரட்ண என்னிடம் கூறினார். பொலீஸ் நிலையத்திலிருந்து காமிணி திசாநாயக்கவையும், பண்டிதரட்னவையும் தொடர்புகொள்ள தான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததாக குணரட்ண கூறினார். ஆனால், பெருந்தோட்டத்துறையில் பணிபுரிந்த நாட்களில் தனக்குப் பரீட்சயமான தொண்டைமானுடன் தன்னால் தொடர்புகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். "எனது அவல நிலையினை அவரிடம் கூறினேன். எனது புதல்விகள் குறித்த எனது கவலையினைனை அவரிடம் கூறினேன். அதன்பின் உடனடியாக என்னைப் பிணையில் விடுவித்தார்கள். ஜனாதிபதியுடன் தொடர்புகொண்ட தொண்டைமான் என்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டதனாலேயே ஜெயார் என்னை பிணையில் செல்ல அனுமதித்ததாக நான் பின்னர் அறிந்துகொண்டேன். நான் தமிழர்களுக்கு எதிராக வேலை செய்கிறேன் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. அப்படியிருந்தபோதும் அவர் எனக்கு உதவினார். அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அவர் கூறினார். இரகசியத் திட்டத்தின் இரண்டாவது கட்டம், முதலாவது கட்டத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட இனப்பரம்பலினைப் பாவித்து இலங்கைக்கான புதிய மாகாண வரைபடத்தினை உருவாக்குவது. பின்வரும் நான்கு மாகாணங்களின் எல்லைகளை மீள உருவாக்குவது இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாகும். அம்மாகாணங்களாவன, வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேற்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியனவவாகும். இந்த நான்கு மாகாணங்களினதும் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் ஐந்தாவது மாகாணம் ஒன்றினை உருவாக்குவதே இதன் நோக்கம். இவ்வாறு உருவாக்கப்படும் புதிய மாகாணம், வட கிழக்கு மாகாணம் என்று அழைக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மாகாணங்களுக்குள் உள்ளடக்கப்படும் மாவட்டங்களாவன, 1. வடக்கு மாகாணம் ‍: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு 2. வட மத்திய மாகாணம் ‍: வவுனியா, அநுராதபுரம், வலி ஓய (மணலாறு, முல்லைத்தீவு மாவட்டத்தை சிதைப்பதன் மூலம் புதிய மாவட்டமான வலி ஓய முல்லைத்தீவிலிருந்து பிரித்தெடுக்கப்படும்). 3. வட மேற்கு மாகாணம் ‍: மன்னார், புத்தளம், குருநாகலை 4. வட கிழக்கு மாகாணம் ‍: பொலொன்னறுவை, திருகோணமலை 5. கிழக்கு மாகாணம் ‍: மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லைகளை இவ்வாறு மீள வரைவதன் மூலம் வட மாகாணம் மட்டுமே தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாக விளங்கும். தற்போதைய வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எஞ்சிய மாவட்டங்கள் சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களாக மாற்றப்படும். தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மாகாணத்தின் தென் எல்லையாக மாங்குளம் அமைந்திருக்கும். குணரட்ண தனது இரகசியத் திட்டத்தில் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார். தனது புத்தகத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர் அச்சிட்டு வெளியிட்டார். தமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணம் அரச மேல் மட்டத்திலிருந்து தொடர்ந்தும் ஆதரவு கிடைக்காது போனமையே என்று அவர் நம்புகிறார். நதிகளை அண்டி உருவாக்கப்படும் புதிய மாவட்ட எல்லைகள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.