Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ரஞ்சித்

  1. பேச்சுக்களில் பங்கெடுத்த தமிழர் தரப்பின் சட்டபூர்வத் தன்மையினைக் கேள்விகேட்ட சிறிலங்கா அரசு தரப்பும், வெளிநடப்புச் செய்த போராளிகளும் 1985 ஆம் ஆண்டு ஆடி 8 ஆம் திகதி பேச்சுக்கள் ஆரம்பமாகின. பத்து உறுப்பினர்கள் அடங்கிய இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு ஜெயாரின் சகோதரன் ஹெக்டர் ஜெயவர்த்தன தலைமை தாங்கினார். 13 உறுப்பினர்கள் அடங்கிய தமிழர்களின் பேச்சுவார்த்தைக் குழுவினர் பலத்த பாதுகாப்புடன் திம்புவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேச்சுவார்த்தைக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வெவ்வேறு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். திம்பு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பூட்டானின் தலைநகரான திம்புவிற்கு அந்நாட்களில் உல்லாசப் பயணிகளோ, பத்திரிக்கையாளர்களோ வருவது தடைசெய்யப்பட்டிருந்தது. இரு இந்தியச் செய்தியாளர்களான இந்திய டுடேயின் சென்னைப் பத்திரிக்கையாளரான வெங்கட்ரமணியும் அவரது புகைப்பிடிப்பாளரும் உல்லாசப் பயணிகள் என்கிற போர்வையில் திம்புவில் தங்கியிருந்த‌வேளை, நடுச்சாமத்தில் அவர்களைத் தட்டி எழுப்பிய அதிகாரிகள் மரியாதையுடன் காலைவிடியுமுன் நகரிலிருந்து அனுப்பி வைத்தார்கள். விடுதியில் தங்கவைக்கப்பட்ட தமிழ்ப் பேச்சுவார்த்தைக் குழுவினரை ஏறக்குறைய பணயக் கைதிகள் போலவே இந்தியா நடத்தியது. வெளியாரைச் சந்திப்பது அவர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது.ஆனால், சென்னையின் கோடாம்பக்கத்தில் இருக்கும் ஒரு இரகசிய இடத்திற்கான நேரடித் தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. சென்னைக்குத் திரும்பியிருந்த தமது தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் பேசும் விடயங்கள் குறித்துப் பிரதிநிதிகள் அவ்வப்போது பேசிக்கொள்ளவே இந்த வசதி செய்துகொடுக்கப்பட்டிருந்தது. சந்திரசேகரனும் ஏனைய ரோ அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளை நெறிப்படுத்தினர். சந்திரசேகரன் போராளிகளுக்கு பேச்சுவார்த்தைகளின்போது உதவிபுரிய ஏனைய அதிகாரிகள் இலங்கையரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு உதவினர். பேச்சுவார்த்தைகளுக்கான தூதுக்குழுவினரை திம்புவிற்கு அனுப்பியபின்னர் போராளித் தலைவர்கள் சென்னைக்குத் திரும்பியிருந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பாலசிங்கத்தை சென்னையில் இருக்குமாறு கூறிவிட்டு, புலிகளின் சேலம் முகாமிற்குச் சென்றார் பிரபாகரன். பத்மநாபா, சிறீ சபாரட்ணம், பாலக்குமார் ஆகிய ஏனைய தலைவர்கள் சென்னையிலேயே தங்கியிருந்தனர். திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்பதனை பிரபாகரன் உணர்ந்தே இருந்தார். இந்தியப் பத்திரிக்கையாளரான வெங்கட்ரமணியின் கூற்றுப்படி, தமிழர்களின் நலன்களும், இந்தியாவின் நலன்களும் ஒன்றிற்கொன்று எதிரானவை என்பது தெளிவாகும்போது, வடக்குக் கிழக்கிற்குச் சென்று மீண்டும் ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்வதற்கு மனரீதியாகத் தன்னைத் தயார் செய்ய பிரபாகரன் உறுதிபூண்டிருந்தார். சேலம் முகாமிற்குச் சென்ற பிரபாகரன் தனது அடுத்த இராணுவத் திட்டத்தினைச் செயற்படுத்த போராளிகளைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடலானார். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடன் தான் கலந்தாலோசித்தது போல, இராணுவ முகாம்களையும், பொலீஸ் நிலையங்களையும் சுற்றி தனது போராளிகளை நிலைவைக்க அவர் முடிவெடுத்தார். கிட்டுவுடன் பேசிய பிரபாகரன், தனது அடுத்த நகர்வு இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குவதுதான் என்று கூறினார். பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சென்னையிலிருந்த தமது தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக் குழுவினர் அறியத் தந்ததுடன், அவர்களிடமிருந்து அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டு வந்தனர்.திம்புவிலும் சென்னையிலும் ஓரணியாக செயற்பட்ட போராளிகளின் தலைவர்கள் ஒருமித்து முடிவெடுத்தனர். சென்னையில் பொராளிகளின் ஒருமித்த அணியின் பேச்சாளராக பாலசிங்கமே செயற்பட்டார். திம்புப் பேச்சுவார்த்தை மேசையில் இப்பணியை திலகர் செய்தார். மேலும், திம்புவில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் புளொட் அமைப்புடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனும் சேர்ந்து செயற்பட்டனர். தற்போதைய (2005) புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் திம்புப் பேச்சுவார்த்தை குறித்து என்னுடன் பேசுகையில் தமிழத் தரப்பினர் ஓரணியாகச் சேர்ந்து இயங்கியது இதுவே முதற்தடவை என்றும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட சிங்கள தூதுக்குழுவே இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது என்றும் கூறினார். "நாம் எமக்கிடையே தர்க்கிப்போம் என்றும், ஒருவரையொருவர் இழுத்து வீழ்த்தும் வேலைகளில் ஈடுபடுவோம் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், நாம் எமது ஒவ்வொரு நகர்வையும் மிகக் கவனமாகத் திட்டமிட்டே செய்தோம். ஒவ்வொருவரும் எந்தவிடயம் குறித்துப் பேசுவதென்றும், அவரே அப்பிரச்சினைகுறித்து தனது பேச்சில் பதிலளிப்பார் என்றும் முடிவெடுத்துச் செயற்பட்டோம்" என்றும் சித்தார்த்தன் கூறினார். பேச்சுக்களுக்கான போராளிகளின் பிரதிநிதிகளை வழிநடத்தும் பொறுப்பில் பாலசிங்கம் இருந்தார். தாம் நடத்தும் கலந்துரையாடல்கள் அனைத்தையும் ரோ வினர் செவிமடுத்து வருகின்றனர் என்பதை அவர் அறிந்தே இருந்தார். ஆகவே, போராளிகளின் பிரதிநிதிகளுடன் வேண்டுமென்றே யாழ்ப்பாண பேச்சுவழக்கில் அவர் பேசினார். இக்கலந்துரையாடல்களை இன்னொரு பக்கத்திலிருந்து செவிமடுத்துக்கொண்டிருந்த ரோ வின் தமிழ் அதிகாரிகள் குழம்பிப் போயிருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவில் ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் சட்டத்தரணிகளான எச் எல் டி சில்வா, எல்.சி.செனிவிரட்ண‌, மாக் பெர்ணான்டோ மற்றும் எச்.எல்.குணசேகர ஆகியோரும் அங்கம் வகித்தனர். ஏனையவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள். தமிழர்களின் பிரதிநிதிகள் குழுவில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சார்பில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோரும், புலிகள் சார்பில் லோரன்ஸ் திலகருடன் சிவகுமாரனும் (அன்டன்), ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் வரதராஜப்பெருமாளுடன் கேதீஸ்வரனும், டெலோ சார்பில் சார்ள்ஸ் அன்டனிதாஸுடன் மோகனும், ஈரோஸ் சார்பில் சங்க ராஜியுடன் இ. இரத்திணசபாபதியும், புளொட் சார்பாக வாசுதேவாவுடன் சித்தார்த்தனும் பங்குகொண்டிருந்தனர். பூட்டான் நாடே பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணைகளை வழங்கியிருந்தமையினையடுத்து, அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் லியொபொனோ தாவா செரிங் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவைத்தார். மிகுந்த அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தஅரச மாளிகையின் விருந்தினர் மண்டபத்தில் இப்பேச்சுவார்த்தைகள் நடந்தன. அங்கு பேசிய தாவா, ஒரு நாட்டில் வாழும் பல்வேறு இனங்களுக்கிடையிலான பிணக்குகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் கூறியதுடன், இப்பேச்சுவார்தைககள் வெற்றியடைய தனது நாட்டின் வாழ்த்துக்களையும் அவர் பேச்சுவார்த்தைப் பிரதிநிகளுக்குத் தெரிவித்தார். பேச்சுவார்த்தையினை ஒழுங்குசெய்தமைக்காக இந்தியாவுக்கும், நடத்த அணுசரணை வழ‌ங்கிய பூட்டானுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஹெக்டர் ஜெயவர்த்தன நன்றி தெரிவித்தார். தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பில் நன்றியுரையினை டெலோ உறுப்பினர் சார்ள்ஸ் வழங்கியது அன்று போராளி அமைப்புக்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமையினைக் காட்டியது. சரித்திர முக்கியத்துவாம் வாய்ந்த பேச்சுவார்த்தையின் முதலாவது நாள் நிகழ்வுகள் முடிவிற்கு வந்தபோது, பூட்டான் வெளிநாட்டமைச்சரின் விருந்தோம்பல் குறித்தே பலரும் பேசிக்கொண்டனர். பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் நாளான ஆடி 9 ஆம் திகதி, இரு குழுக்களும் ஒருவரையொருவர் நேராகப் பார்த்துகொள்ளும் வகையில் நீண்ட மேசையொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. தமிழர் பிரதிநிதிகள் சார்பில் அமிர்தலிங்கமே பேச்சுக்களை ஆரம்பித்தார். தமிழர் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கிடையே அன்றுகாலை கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு அமையவும், தாம் ஏற்கனவே தீர்மானித்திருந்த திட்டத்திற்கு அமைவாகவும் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தமது கரிசணையினைத் தமிழ்த் தரப்பு எழுப்பியது. முதலாவது, பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கும் உண்மையான நோக்கமும், உறுதிப்பாடும். முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தினைக் கொண்டிருக்காத சில சட்டத்தரணைகளையும், வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பியிருப்பதன் மூலம் தாம் உணர்ந்துகொள்வது என்னவெனில், இப்பேச்சுவார்த்தைகளை தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்திற்காகவே ஜெயவர்த்தன பாவிக்கிறார் என்று தாம் சந்தேகிப்பதாக தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அமிர்தலிங்கம் ஜெயாரின் இத்திட்டம் குறித்து மிகவும் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்தார். "அவர்களின் திட்டம் எம்மைப்பொறுத்தவரை புதியதல்ல. கடந்த வருடம் முழுவதும் பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்துக் காலம் கடத்திய அரசாங்கம் இவ்வருடமும் அதனையே செய்ய எத்தனிக்கிறது" என்று அவர் கூறினார். தமிழர்களின் பிரதிநிதிகள் முன்வைத்த விமர்சனத்திற்கு ஹெக்டர் ஜயவர்த்தன பதிலளித்தார். இனப்பிரச்சினைக்கு இறுதியானதும், நிரந்தரமானதுமான தீர்வினை முடிவுசெய்யும் சகல அதிகாரமும் கொண்ட அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே இப்பேச்சுக்களில் தானும் தனது அணியினரும் கலந்துகொள்வதாக அவர் கூறினார். மேலும், பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன தானே திம்புவிற்கு நேரடியாக வருவதாக தன்னிடம் உறுதியளித்திருப்பதாகவும் ஹெக்டர் கூறினார். அடுத்ததாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவில் இலங்கைப் புலநாய்வுத்துறையினைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்திருப்பது குறித்த தமது அதிருப்தியினை தமிழர்தரப்பு எழுப்பியது. உடனேயே குறுக்கிட்ட ஹெக்டர், தமிழ்ப் போராளிகள் பேச்சுவார்த்தைக் குழுவில் பிரதிநிதிகளாக அங்கம் வகிப்பதற்கான தகமை குறித்தும், தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அவர்கள் கோருவது குறித்தும் கேள்வி எழுப்பினார். "நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்? நீங்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார். போராளி அமைப்புக்கள் தம்மை மட்டுமே இங்கு பிரதிநிதித்துவம் செய்வதாக அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களையோ அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களையோ போராளிகள் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று அவர் கூறினார். அவர்கள் முஸ்லீம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால், இலங்கையரசாங்கம் தமிழர்கள் சார்பாகவுமே பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஹெக்டரின் இந்த விசமத்தனமான பேச்சு இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்திற்கு வித்திட்டது. இலங்கையரசாங்கம் தமிழர்களையும் சேர்த்தே பிரதிநிதித்துவம் செய்வதானால், அது தமிழர்களுடன் பேசவேண்டிய தேவையென்ன என்று தமிழ்த்தரப்பினர் கேள்வியெழுப்பினர். "தமிழர்களையும் சேர்த்தே நீங்கள் பிரதிநித்துவம் செய்வீர்களாகவிருந்தால், நீங்களுக்கு உங்களுக்குள்ளேயே பேசி, தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்" என்று தமிழர்களின் பிரதிநிதியொருவர் கிண்டலாகக் கூறினார். இதனையடுத்து, தம்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக இலங்கையரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாம் தொடர்ந்தும் பேச்சுக்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழர் தரப்பு கூறியது. ஆகவே, பேச்சுவார்த்தைகளில் சிறிய இடைவேளை ஒன்றினைக் கோரிய தமிழர் தரப்பு, தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கையரசாங்கம் ஏற்றுகொண்டால் அன்றி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தது. இடைவேளையின்போது தனித்தனியாக தமக்குள் கலந்தாலோசித்த தமிழர் பிரதிநிதிகள் தமக்கான திட்டத்தினை வகுத்துக்கொண்டனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், போராளிகளுக்கும் இடையே பிளவொன்றினை ஏற்படுத்தவே இலங்கையரசாங்கம் முயல்வதை அவர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டனர். ஆகவே, இதனை எப்படியாவது முறையடித்து விட அவர்கள் உறுதிபூண்டனர். அதன்படி, தமது எழுத்துமூல அறிவிப்புக்கள் அனைத்தையும் "தமிழ்மக்களின் பிரதிநிதிகள்" என்கிற தலைப்புடனேயே வெளியிடுவது என்று தீர்மானித்தனர். இடைவேளையின் பின்னர், அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அறிக்கையொன்றினை ஹெக்டர் ஜயவர்த்தன வெளியிட்டார். இரு தரப்பினரும் பிரச்சினைக்கான தீர்வொன்றினை உண்மையாக அடைந்துகொள்ளும் நோக்கிலேயே பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாகவும், பேச்சுக்களில் ஈடுபடுவதென்பதே தேவையானளவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பேச்சுக்களில் பங்கெடுக்கும் தமிழர் தரப்பினை தாம் ஏற்றுக்கொண்டதனால்த்தான் என்றும் கூறினார். அதன்பின்னர், தமது இரண்டாவது கரிசணையான யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழர் தரப்பு கேள்வியெழுப்பியது. கொழும்பு அரசாங்கம் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுகொள்ள மறுத்துவருவதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டினர். இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்த செயற்பாடுகளில் ஒரு பகுதியினை இலங்கையரசாங்கம் கடைப்பிடிக்கத் தவறியிருப்பதாக அவர்கள் கூறினர். குறிப்பாக ஊரடங்குச் சட்டத்தினை நீக்குதல், தமிழர் பகுதிகளில் தேடியழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகியவற்றை அரசு செய்யத் தவறியிருப்பதாக அவர்கள் கூறினர். இரவுநேர ஊரடங்கு உத்தரவும், கைதுகளும் தற்போதும் இலங்கை இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், தமது போராளிகள், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இராணுவம் , பொலீஸார், சிங்கள மக்கள் ஆகிய அனைவர் மீதான தமது தாக்குதல்களையும் முற்றாக நிறுத்திவைத்திருப்பதைச் சுட்டிக் காட்டினர்.
  2. பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும் போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது. ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும் கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது. பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின. யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
  3. சிங்கள பெளத்தராக இருக்கவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லப்படா விட்டலும், பெளத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கையின் சனத்தொகையில் வெறும் 15 20 வீதம் மட்டுமே உள்ள தமிழர்களில் ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கான‌ சந்தர்ப்பங்கள் இல்லை. ஆனால், தமிழர்களின் வாக்குகளைக் கொண்டு எந்தச் சிங்கள ஜனாதிபதி பதவிக்கு வருவார் என்பதை தீர்மானிக்கலாம், இதைத்தவிர ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளுக்கு இருக்கும் பலம் வேறில்லை. அதுகூட 2019 இல் தேவையற்றது என்பதை நிரூபித்துவிட்டார்கள். எப்போதுமே சிங்களவர் ஒருவரே வருவார். அவர்கூட பெரும்பாலும் பெளத்தராக இருப்பார் அல்லது பெளத்தத்திற்கு மதம் மாற்றப்பட்ட கிறீஸ்த்தவச் சிங்களவராக இருப்பார்.
  4. பேச்சுவார்த்தைக்கான ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் திட்டம் போராளிகளின் தலைவர்களுடன் பேசிய சக்சேனா, இறுதியாக எச்சரிக்கை ஒன்றுடன் தனது பேச்சினை நிறைவு செய்தார். " பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகள் எதனையும் விதிக்காது நீங்கள் சமூகமளிக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் பங்குபற்றத் தவறினால் இந்திய மண்ணிலோ அல்லது இந்தியாவின் கடற்பிராந்தியத்திலோ உங்களை நாம் அனுமதிக்கமாட்டோம்.ஆகவே, நான் கூறிய விடயங்கள் குறித்து நீங்கள் ஒவ்வொருவரும் தீர்க்கமாக ஆராய்ந்து நாளைக்குச் சாதகமான முடிவொன்றினை எங்களுக்கு அறிவிக்க வேண்டும்" என்று கூறினார். சக்சேனாவுடனான சந்திப்பு முடிந்து தமது விடுதி நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கையில் சக்சேனாவின் எச்சரிக்கை தொடர்பாகவும், இந்தியாவுடன் ஒத்துப்போக வேண்டும் என்கிற அவரின் கோரிக்கையினையும் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். பாலசிங்கத்தின் கூற்றுப்படி, பிரபாகரன் நேராகச் சிந்தித்தார். அங்கிருந்த மற்றையவர்களுடன் பேசிய பிரபாகரன், "நாங்கள் இந்தியாவை இப்போது ஆத்திரப்படுத்தக் கூடாது. நாம் இந்தியா சொல்வது போலவே செய்யலாம். திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு நிபந்தனையின்றிச் செல்வோம். இந்தியாவுக்கும் எமக்கும் இடையே பிளவொன்றினை உருவாக்க ஜெயவர்த்தனவிற்கு நாம் சந்தர்ப்பம் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தனவை முழுவதுமாக நம்புகிறார்கள், நாம் அந்த நம்பிக்கையினை உடைக்கவேண்டும்" என்று கூறினார். ஆனால், பேச்சுவார்த்தைகளுக்குப் போவதன் மூலம், இலங்கைத் தமிழர்களின் நலன்களை எந்தவிதத்திலும் விட்டுக்கொடுப்பதாக அமைந்துவிட‌க் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். "நாங்கள் திம்புவிற்குப் போகலாம், நிபந்தனைகளின்றியேபோகலாம், ஆனால் எமது மக்களின் உரிமைகள் குறித்து விட்டுக்கொடுக்காமல் அங்கு பேசுவோம்" என்று அவர் கூறினார். அன்று நள்ளிரவு கடந்து நடந்த கலந்துரையாடல்களின்போது, போராளித் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கான திட்டம் ஒன்றினை வகுத்துக் கொண்டார்கள். திட்டம் இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது, ஜெயவர்த்தன மீது ரஜீவ் கொண்டிருக்கும் நம்பிக்கையினைச் சிதைப்பது. தம்மை நாணயம் மிக்கவர்களாகவும், ஜெயவர்த்தனவைத் தந்திரசாளியாகவும் காட்டவேண்டும் என்பதில் அவர்கள் கவனமெடுத்தனர். இதற்காக, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிப்பதென்றும், இராணுவத்தினராலும், பொலீஸாரினாலும் செய்யப்படும் யுத்த நிறுத்த மீறல்களைத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டுவதென்றும் தீர்மானித்தனர். அதன்படி, ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தாயகத்தில் இருந்த தமது போராளிகளுடன் பேசி, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி பணித்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களால் கையொப்பமிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தினை விளக்கி, வடக்குக் கிழக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. ரோ அதிகாரிகளுக்கும் இத்துண்டுப்பிரசுரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களது திட்டத்தின் இரண்டாவது பகுதி, ஜெயவர்த்தனவின் அரசாங்கம் தமிழர்களுக்கு நீதியானதும், சமத்துவமானதுமான தீர்வினை ஒருபோதும் வழாங்கப்போவதில்லை என்பதனைக் காட்டுவது. தமிழரின் பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வான, தமிழர்கள் தனியான ஒரு தேசம் என்பதனையோ, அவர்கள் தமக்கென்றும் பூர்வீகத் தாயகம் ஒன்றினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையோ, அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதனையோ, அவர்களுக்குப் பிரஜாவுரிமை மறுக்கப்படலாகாது என்பதனையோ ஜெயார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் 1980 களில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் நிபந்தனைகள் இன்றி பேச்சுக்களில் பங்குபற்றுவதென்று முடிவெடுத்தார்கள். தமது முடிவினை பாலசிங்கம் உடனடியாகவே சந்திரசேகரனுக்கு அறியத் தந்தார். இது இந்திய அதிகாரிகளுக்குத் திருப்தியைக் கொடுத்தது. உங்களின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் பாலக்குமாரைக் கேட்டபோது, " சிறிலங்கா எமக்குத் தரவிருக்கும் தீர்வு என்னவாக இருக்கும் என்பதைக் கேட்கவே பேச்சுக்களுக்குச் செல்கிறோம்" என்று அவர் பதிலளித்தார். ஜெயாரின் சகோதரர் அடங்கலாக சில சட்டத்தரணிகளையும், சில வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் கொண்ட தூதுக்குழுவினை இலங்கையரசாங்கம் தன் சார்பாகப் பேச்சுக்களுக்குச் செல்வார்கள் என்று அறிவித்தது. இதனை உடனடியாக போராளிகளின் தலைவர்கள் ரோ அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர். சந்திரசேகரனுக்கு இதுகுறித்து முறைப்பாடொன்றினைத் தெரிவித்த பாலசிங்கம், "ஜெயவர்த்தன தனக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே பேச்சுவார்த்தைக்கு வருகிறார் என்று உங்களிடம் நாம் சொன்னோமல்லவா? இப்போது அவர் அனுப்பவிருக்கும் தூதுக்குழுவைப் பாருங்கள். அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்க முடியாத சில வழக்கறிஞர்களை அவர் அனுப்பவிருக்கிறார். இந்த வழக்கறிஞர்களிடமிருந்து எவ்வகையான முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தமக்குக் கொடுக்கப்பட்ட சில விடயங்களைப் பற்றி மட்டுமே அவர்கள் வாதாடிக்கொண்டு இருக்கப் போகிறார்கள். ஆக, தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் என்று எதுவுமே இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பேச்சுவார்த்தைக்கு ஜெயார் அனுப்பவிருக்கும் தூதுக்குழு தொடர்பான தனது அதிருப்தியை இந்தியா டிக்ஷிட் ஊடாக ஜெயவர்த்தனவுக்கு அறியத் தந்தது. அரசியலைப்புத் தொடர்பாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் எவருமே இடம்பெறாத தூதுக்குழு ஒன்றினைப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்புவதன் ஊடாக பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தையே ஜெயார் குறைத்துவிட்டார் என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். வழமைபோலவே இந்தியாவின் இந்தக் கரிசணைக்கும் ஜெயவர்த்தனவால் பொய்யான‌ ஒரு காரணத்தைக் கூற முடிந்தது. தனது இளைய சகோதரரும் சட்டத்தரணியுமான ஹெக்டர் உட்பட சில சட்டத்தரணிகளை தூதுக்குழுவில் அனுப்பியதற்கு நான்கு காரணங்களை ஜெயார் முன்வைத்திருந்தார். தனது இளைய சகோதரரே தனது ஆலோசகர் என்பதாலும், அவர் மீது தான் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாலும் அவரையே தூதுக்குழுவின் தலைவராக நியமித்ததாகக் கூறினார். மேலும், சட்டத்துறையில் பிரசித்திபெற்ற ஹெக்டர், இந்திய சட்டமாதிபருடன் இணைந்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் குறித்து அவர் பல கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதால், அவரைத் தனது அதிகாரம் மிக்க விசேட தூதுவராக அனுப்பியிருப்பதாகவும் கூறினார். ஜெயார் தமக்களித்த பதிலை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாலசிங்கத்திடம் தெரிவித்தனர். ஜெயவர்த்தனவின் பதிலினையடுத்து, போராளிகளின் தலைவர்கள் தமது தூதுக்குழுவை இரண்டாம் நிலைத் தலைவர்கள் அடங்கிய குழுவாக அனுப்ப முடிவெடுத்தனர். அதன் பின்னர், அவர்கள் தமது நேரத்தை தில்லியின் இடங்களைச் சுற்றிப் பார்க்கவும், திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதிலும் செலவிட்டனர். தில்லியின் திரையரங்கு ஒன்றில் கண்பிக்கப்பட்டு வந்த ஆங்கிலத் திரைப்படம் ஒன்றினைப் பார்க்க பிரபாகரன், பாலக்குமார், வரதராஜப் பெருமாள், சாந்தன் ஆகியோர் சென்றனர். திரைப்படத்தின் கதை இரு இளம் காதலர்கள் பற்றியே அமைந்திருந்தமையினால், அதுவரை திருமணம் முடிக்காதிருந்த பாலக்குமார் மிகுந்த தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்திய ரோ அதிகாரிகள் போராளித் தலைவர்களை யமுனா நதிக்கரையில் இருந்த ராஜ் காட் எனும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் மகாத்மா காந்தியின் சமாதி இருக்கிறது. மகாத்மாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது பத்மநாபாவின் காதுகளில் கிசுகிசுத்த பிரபாகரன், "எங்களை ஏன் இங்கு கூட்டிவந்திருக்கிறார்கள் தெரியுமா? எம்மையும் காந்தியைப் போல் அகிம்சையினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லாமல்ச் சொல்கிறார்கள்" என்று கூறவும், குறுக்கிட்ட பாலக்குமார், "என்ன இரகசியம் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். பிரபாகரன் பதில் ஏதும் கூறாமல் பாலக்குமாரைப் பார்த்து புன்னகைத்தார்.
  5. இப்படிச் செய்தால் என்ன? வடக்கில் இருந்து ஒருவரையும் கிழக்கில் இருந்து ஒருவரையும், மலையகத்திலிருந்து ஒருவரையும் வேட்பாளர்களாக ஒரு பொது முன்னணியில் நிறுத்தி, வேட்பாளர்களுக்கன்றி, பொதுவான முன்னணிக்கு மக்களை வாக்களிக்குமாறு கேட்கலாம். வெற்றிபெறும் பட்சத்தில், ஜனாதிபதிக் காலத்தை மூன்று சம பங்குகளாகப் பிரித்து ஒவ்வொருவரையும் ஆளச் சொல்லலாம். வெற்றிபெற்றால் நல்லது. வெற்றிபெறாதுவிட்டாலும், இதனைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் பொதுவான முன்னணியொன்றினை வைத்தே அரசியல் செய்யலாம். இந்த நடைமுறை சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. ஒரு தேர்தலில் இரு பிரதமர்கள். ஒருவர் முதற்பாதியையும், மற்றையவர் இரண்டாவது பாதியையும் ஆட்சி செய்தனர்.
  6. மனிதவுரிமைச் சட்டத்தரணி பெண்ணுரிமைவாதி மனிதவுரிமைச் செயற்ப்பாட்டாளர் இறுதியுத்தகாலத்தில் மகிந்த அரசு நடத்திய போர்க்குற்றங்களைக் கடுமையாக விமர்சித்தவர் தொழிற்சங்க உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர் அரகலயப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் இதிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். பிரதேசவாதம் போதும். வடக்கும் கிழக்கும் என்று தனியே இருந்தால் அழிவோம். தமிழராக இருந்தால் மட்டுமே இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம். ஜனாதிபதி பதவிக்காலத்தின் முதல் பங்கினை கிழக்கைச் சேர்ந்த ஒருவரும், இரண்டாம் பங்கினை வடக்கைச் சேர்ந்த ஒருவரும் வகிக்கலாம் என்று கோட்பாட்டளவில் இருவரை முன்னிறுத்தி இதனைச் செய்துபார்க்கலாம். வெற்றிபெறுகிறோமோ இல்லையோ, குறைந்தது எமக்குள் இருக்கும் வேறுபாட்டினைக் களைந்து முன்னிறுத்திப் பார்க்கலாம்.
  7. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அனுமதியளிக்கப்பட்டு, பின்னர் மறுக்கப்பட்டவர்தானே இவர்? புலிகளைப் பயங்கரவாதிகள் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் என்று அறிந்தேன். தெற்கோடு இணைந்து தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமா? இதை எப்படிச் செய்யலாம் என்று யாராவது இங்கு விளக்கினால் நல்லது.
  8. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் உமா மகேஸ்வரனுடன் கொழும்பிலிருது யாழ்ப்பாணம் சென்று போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சிறந்த செயற்பாட்டாளர். கண்ணீர் அஞ்சலிகள்.
  9. ரஸ்ஸியாவில் பணம்பார்க்கச் சென்று தற்போது மாட்டுப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்குக் கூட்டிவரவும் இதனைப் பயன்படுத்தியிருக்கலாம். சர்வதேச நாடுகளின் பாதுகாப்புத் துறைசார் தலைவர்களின் மாநாடு நடைபெற்று முடிந்ததன் பின்னர் நடைபெற்றிருக்கும் இருதரப்பு மாநாடு என்றுதான் கூறப்பட்டிருக்கு. இதுவே சர்வதேச மாநாடு அல்ல.
  10. நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? புலத்திலா? அப்படியானால், அங்கிருக்கும் மக்களின் மனோநிலையினை இவ்வளவு கீழ்த்தரமாக உங்களால் மதிப்பிட முடிந்திருக்காது. நீங்கள் பழகும் குறுகிய வட்டத்திற்குள், உங்களைப்போன்றே சரணாகதி, இணக்க அரசியல், அடையாளம் துறப்பு எனும் மனோநிலையில் சஞ்சரிக்கின்ற ஒரு சிலரின் மனவோட்டங்களை ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களினதும் மனவோட்டமாக மடைமாற்றப்ப பார்க்கிறீர்கள். உங்களின் மீது வசைமாறி பொழியவேண்டிய தேவை எனக்கு இல்லை. உங்களின் விமர்சனத்தை, என்பக்க நியாயங்களோடு விமர்சிக்கிறேன். அவ்வளவுதான். உங்களைப்போன்ற பலரை நான் பார்த்தாயிற்று. பலருடன் விவாதிப்பதில் பயனில்லை என்று நகர்ந்து சென்றுவிடுவேன். உங்களின் கண்ணியமான எழுதிற்காகத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணினேன். அவ்வளவுதான். நீங்கள் உங்களின் பார்வையில் சரியென்று நினைப்பதை எழுதுகிறீர்கள். அது மற்றையவர்களுக்கும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. நான் எழுதுவதும் அப்படியே. எனக்குச் சரியென்று பட்டதை எழுதிவருகிறேன். நோக்கமொன்றுதான், எனது இனம் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பிலிருந்து என்றோவொருநாள் விடுபடவேண்டும் என்பது. உங்கள் நோக்கமும் அதுவென்றால், மகிழ்ச்சி.
  11. இதை யாரும் மறுக்கவில்லையே? தேசியத்தை விற்று பணம் பார்க்கும் கூட்டம் எப்போதும் போல இருந்துகொண்டு தான் இருக்கும். பல போலிகளை அவ்வப்போது காலம் எமக்குக் காட்டிக்கொண்டே வருகிறது. தமிழ் மக்களும் இவர்களைத் தாண்டி சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையான தேசியவாதிகள் யார், போலிகள் யாரென்பதை அவர்களால் மிக இலகுவாக உணர்ந்துகொள்ளமுடிவது போல, இனத்திற்குள் இருப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு, அந்த இனத்தின் இருப்பையே அரித்துக்கொண்டு, அடக்குமுறையாளனுக்கு சாமரம் வீசும் சிலர் குறித்தும் அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். இதனாலேயே இவர்களைப்போன்றவர்களால் இனத்திற்குள் ஒட்டிவிட முடியாது தனியே பிதற்றவேண்டியிருக்கிறது. ஆக, நான் அனுமானித்ததை உங்களின் இந்தக் கூற்று உறுதிப்படுத்துகிறது என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். நானும் இதைத்தான் சொல்கிறேன். இலங்கையின் ஒற்றையாட்சி யாப்பினை ஏற்றுக்கொண்டு பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பும் அனைவரும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்பவர்கள்தான். அதனால்த்தான், பகிஷ்கரிக்கவேண்டும் என்று கேட்கிறேன். உண்மை. இன்றிருக்கும் தமிழரசுக் கட்சியின் நிலையினால் தமிழர்களின் அரசியல் ஆர்வம் குறைந்துவருவதை மறுக்கவில்லை. அதற்காக, தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதையும், அதன் சரித்திரச் செயற்பாடுகளையும், தமிழ் மக்களின் நலனில் அது கொண்டிருந்த அக்கறையினையும் இன்றிருக்கும் கொழும்புசார் தமிழ் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடமுடியுமா?
  12. நான் மாய உலகில் சஞ்சரிக்கின்றேனா? எப்படி? எமது நலன்களையும், இருப்பையும், தேசத்தையும், மக்களையும் காத்துக்கொள்வதென்பது மாய உலகில் சஞ்சரிப்பதாக உங்களுக்குத் தெரிவது எப்படி? இது, எல்லாச் சாதாரண, தனது இனம் குறித்த அக்கறையும், பிரக்ஞையும் இருக்கின்ற எவருக்கும் வரக்கூடிய ஒரு உணர்வுதானே? இது எப்படி மாய உலக சஞ்சாரமாகிறது உங்களுக்கு? அப்படியானால், நீங்கள் வாழும் நிஜ உலகில் இவைகுறித்துப் பேசவேண்டாம் என்கிறீர்களா? அல்லது இவை எதுவுமே தேவையற்றவை என்கிற முடிவிற்கு வந்துவிட்டீர்களா? நீங்கள் ஒருவிடயம் நோக்கிப் பயணிக்கிறீர்கள். அந்தவிடயம் என்பது உங்களைப்பொறுத்தவரை மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஆகவே, அதனை அடைவதற்கு உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயல்கிறீர்கள். இதுவரையான உங்கள் முயற்சிகள் தகுந்த பலனைத் தரவில்லையென்பதற்காக அந்த விடயத்தை மாய உலகம் என்று விட்டுவிடுவீர்களா அல்லது தொடர்ந்து முயல்வீர்களா? உங்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன். ஏனென்றால், அந்த விடயம் அவசியமானதென்று நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆகவேதான் முயற்சிப்பவர்களை நோக்கி வசைபாடுகிறீர்கள். தமிழரசுக் கட்சி செய்ததெல்லாமே உணர்சியூட்டி மக்களைத் தவறாக வழிநடத்தியமைதான் என்று பந்தி பந்தியாக‌ எழுதியது அவர்கள் மீதான வாழ்த்துபா என்கிறீர்களா? தமிழரசுக் கட்சிகுறித்தும், செல்வநாயகம் குறித்தும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். நீங்கள் கூறும் அந்த "உலகம் அறியும்" என்னும் "அந்த உலகத்தில்" எத்தனை பேர் இருக்கிறீர்கள்? தனிச்சிங்களச் சட்டம் பிறந்து, பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டு, தமிழ் இளைஞர்கள் அவதியுற்றுக்கொண்டிருந்தபோது, அந்த அரசாங்கத்தையே வாழ்த்திப்பாடிய ஒருசிலர் வாழும் உலகமாக அது இருக்க வேண்டும்.
  13. நீங்கள் பேசுவது அரசியல் வரலாறு இல்லை. முற்றான அரசியல் அவதூறு. பல தசாப்த்தங்களாக தமிழரின் நலன்களுக்காக அயராது போராடிய ஒரு அரசியல்த் தலைமையினையும், அரசியல் கட்சியையும் அவதூறு செய்யும் செயல். அதைக்கூட, சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களை ஆதரிப்பதன் மூலம் செய்ய விழைகிறீர்கள். உதாரணத்திற்கு, யாழ் பல்கலைக்கழகத்தை தமிழரின் நலனுக்காகவே சிறிமா கட்டினார் என்பதும், தமிழரின் நலன்களுக்காக சுண்ணக்கற்பாறைகளை அகழ்வதை தமிழர்களின் அரசியல்வாதிகள் அரசியலாக்குகிறார்கள் என்று எழுதினீர்கள். தமிழரின் நலன்குறித்து உண்மையான அக்கறைக் கொண்டிருப்பவராக இருந்திருந்தால், உங்களின் விமர்சனத்தின் அடிப்படை எமது நலன்களை மீளப் பெற்றுக்கொள்வதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அங்கேதான் உங்களின் அடையாளம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம், தமிழர்கள் இனிமேல் எதுவும் செய்யமுடியாது, கல்வியில், தொழில்நுட்பத்தில், வேலைவாய்ப்பில் உங்களை வளர்த்துக்கொள்ள அரசுடன் இணைந்து இலங்கையர்களாக செயற்படுங்கள் என்கிற வாத‌த்தை முன்வைக்கிறீர்கள். எமக்குள் இருப்பது இரு முகாம்கள். நான் ஏலவே கூறியது போல, தமிழர்களின் நலன்களைக் காக்க, அல்லது மிளப்பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் "தமிழ்த்தேசிய இனவாதிகளின்"முகாம். மற்றையது, அதே நலன்களை கைவிட்டு விட்டு சிங்களத்துடன் இணங்கிச்சென்று ஐக்கியமாகிவிடுபவர்களின் முகாம். எனது முகாமை நான் கூறிவிட்டேன், நீங்கள்?
  14. உங்களைப்போன்றவர்களும், ஈழநாடும் முன்வைத்த கருத்துக்களும் விமர்சனங்களும் கேட்கப்பட்டிருந்தால் இப்போதிருக்கும் நிலையினை விடவும் எவ்வாறு இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சிங்களப் பேரினவாதம் மனம் மாறி தமிழர்களுக்கான உரிமைகளையும், அபிலாஷைகளையும் தந்திருக்கும் என்கிறீர்களா? தமிழரசுக் கட்சி செய்த அரசியல் தவறென்றால், சரியான அரசியல் எதுவென்று நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதை இங்கே பகிரலாமே? உரிமைகேட்டதும், மொழிக்கான அந்தஸ்த்துக் கேட்டதும், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதீர்கள் என்று கோரியதும், எம்மீதான அரச ஆதரவிலான தாக்குதலை நடத்தாதீர்கள் என்று கேட்டதும் தவறான அரசியல் என்றால், நீங்களும், ஈழநாடும் முன்வைத்த அரசியல் என்ன? தமிழர்களின் முன்னால் இரண்டு அரசியல் முறைகள் இருக்கிறது. ஒன்று, இனம் சார்ந்து, இனத்தின் நலன் சார்ந்து, இனத்தின் இருப்புச் சார்ந்து செய்வது. இரண்டாவது, இனத்தின் அடையாளம் தொலைத்து, ஆக்கிரமிப்பை அமைதியாக ஏற்றுக்கொண்டு, சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டு, அடையாளத் துறப்பின் மூலம் சொந்த நலனை மட்டும் காத்துக்கொள்வது. இதில் முதலாவதைத்தான் தமிழரசுக் கட்சியும், அதனால் ஆரம்பிக்கப்பட்டதாக நீங்கள் சாடும் தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் மக்களும் செய்ததும், இன்றுவரை செய்துவருவதும். நீங்கள் சார்வது எந்த அரசியல் என்பது ஓரளவிற்கு உங்களின் கருத்துக்களில் இருந்தே தெளிவாகிவருகிறது. அப்படியில்லையென்றால், தமிழருக்கு இதுவரை தெரியாத அந்த மூன்றாவது அரசியல்ப் பாதை குறித்து நீங்களே இங்கு சொல்லிவிடுங்கள்.
  15. நான் எழுதும் மூலை எதுவென்று நீங்கள் தேடவேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். இலங்கையில் தமிழர்களுக்கென்று தனியான மொழியும், கலாசாரமும், தேசமும் இருக்கின்றது என்று முற்றிலுமாக நம்பும் மூலையது. சுதந்திரத்திலிருந்து தனிச்சிங்களச் சட்டம், பல்கலைக்கழக அனுமதி, பிரஜாவுரிமை, குடியேற்றங்கள், காலத்திற்குக் காலம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இன வன்முறைகள் என்கிற பெயரிலான‌ இனக்கொலைகள், 1972,1977,1981,1983 - ‍ 2009 என்று இன்றுவரை நிகழ்த்தப்படும், இலங்கையின் சிங்கள பெளத்த இனவாதிகளால் ஒற்றையாட்சியின் கீழ் நடத்தப்படும் இனவழிப்பில் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கும் மூலையில் நான் இருக்கிறேன். முடிந்தால் நீங்கள் இருக்கும் மூலையைச் சொல்லிவிடுங்கள். அரசியல் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டும்போது நான் அதனைத் தட்டிக்கழிக்கவோ அல்லது அதனை ஏற்றுக்கொள்ள முடியாமலோ விதண்டாவாதம் செய்யவேண்டிய தேவையென்ன இருக்கிறது? இங்கு எது அரசியல் விமர்சனம்? அறையினுள் இருக்கும் வெள்ளை யானை எது? தமிழரசுக் கட்சியின் தந்திரமான தலைமையா அல்லது சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதமா? தமிழரசுக் கட்சியை அவமதிக்கவேண்டும், அவர்களையே இன்றுள்ள தமிழ்த் தேசியம் எனும் அருவருக்கத்தக்க கொள்கைக்கான பிதாமகர்களாகக் காட்டவேண்டும் என்று பகீரதப் பிரயத்தனத்தில் எழுதிய நீங்கள், உங்கள் எழுத்துக்களின் இடையே இழையோடிப்போயிருக்கும் சிங்கள இடதுசாரிப் பேரினவாதத்தின், சிங்கள இனவாதத்தின் பிதாமகத் தம்பதிகளை உங்களையறியாமலேயே வாழ்த்துவதும், பாராட்டுவதும் உங்களின் முயற்சியில் அப்பட்டமாகத் தெரிகிறது. நீங்கள் எழுதும் எல்லா விமர்சனத்திற்கும் "சிங்களவர் திறமோ?" என்று நான் கேட்கவில்லை. நீங்கள் எழுதிய இந்த விமர்சனத்திற்குள்ளேயே சிங்களவர்களை வாழ்த்துகிறீர்கள், அதனால்த்தான் கேட்கிறேன். அடுத்தது, சிங்களவர் திறமோ என்று நான் கேட்பதன் மூலம், தமிழரசுக் கட்சியைப் பற்றி நீங்கள் எழுதும் அவதூறுகளை நான் ஏற்றுக்கொண்டேன் என்று யார் உங்களுக்குச் சொன்னது? நீங்களோ, மீனிளங்கோவோ அல்லது சண்முகமோ அல்லது ஈழநாட்டின் யாரோ இரு எழுத்தாளரோ எழுதினால் அது உணமையென்று ஆகிவிட வேண்டுமா? தமிழரசுக் கட்சிகுறித்தும், தமிழரின் உரிமைப் போராட்டத்தில் அதன் செயற்பாடுகள் குறித்தும் தமிழினத்திற்குள் ஒரு புரிதல் இருக்கின்றது. அந்தப் புரிதல் சிங்கள அடக்குமுறையின் கீழ் அவர்கள் பட்ட இடையறாத அழிவுகளிலிருந்து தமக்கான அரசியல்த் தலைமையாக அவர்கள் உணர்ந்து ஏற்றுக்கொண்ட தலைமை அது. அந்தத் தலைமையின் செயல் தவறானதென்றால் அன்றே அது தமிழர்களால் தூக்கியெறியப்பட்டிருக்கும். உங்கள் போன்றவர்கள் அன்று நிச்சயமாக இருந்திருப்பார்கள். சிங்கள அரசுகளின் செயற்பாடுகளை நிச்சயம் வர‌வேற்றிருப்பார்கள். ஆனால், மக்களால் ஏறெடுத்தும் பார்க்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஏதோவொரு கட்டுரையில், ஏதோவிரு இடத்தில் "சிங்கள அரசியல்த் தலைமை தனது சுயநலத்திற்காக தமிழரசுக் கட்சியைப் பாவித்தது" என்று மிகுந்த சிரமப்பட்டுக் காட்டவேண்டிய தேவையென்ன? இதன்மூலம் ஒருவிடயம் புலனாகிறதே கவனித்தீர்களா? அதாவது உங்களது தமிழரசுக் கட்சிக்கெதிரான, தமிழ்த்தேசியத்திற்கெதிரான விமர்சனங்களில் நீங்கள் தேவைகருதி விதைக்கும் ஓரிரு "சிங்களவர் மீதான விமர்சனம்" என்பது உங்களை நடுநிலையாளன் என்று காட்டுவதற்காக மட்டும்தான் என்பது. நீங்கள் அதைக்கூடச் செய்திருக்கத் தேவையில்லை. விமர்சிப்பது தமிழரசுக்கட்சியையும், அது ஆரம்பித்த தமிழ்த் தேசியத்தையும் தானென்னும் போது, சிங்களவரை விமர்சிக்கவேண்டிய தேவை ஏன் உங்களுக்கு? அவர்களை விடுங்கள், நேராகவே எம்மை விமர்சியுங்கள். ஏனென்றால், உங்களின் சிங்கள விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அது உங்களின் நோக்கமும் அல்ல என்பதும் எமக்கு நன்கு தெரியும்.
  16. இதுதான் நடந்தது, விரும்பியல்ல. மிகத்தவறான முடிவு. கட்டாயம் செய்யப்படவேண்டிய ஒரு விடயம். ஆனால், மீட்பன் இல்லாத மந்தைகள் போல இருக்கின்றது இன்றைய தமிழினத்தின் நிலைமை.
  17. திம்புப் பேச்சுக்களுக்கு முன்னோடியாக, போராளித் தலைவர்களை தில்லிக்கு அழைத்து அழுத்தம் கொடுத்த இந்தியா 1985 ஆம் ஆண்டு ஆடி 3 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களான பிரபாகரன், சிறீ சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரும் அவர்களின் உதவியாளர்களும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதியான அஷோக் ஹொட்டேலில் தங்கவைக்கப்பட்டனர். அஷோக் நட்சத்திர விடுதி, தில்லி போராளிகளின் தலைவர்களுட‌ன், ரோ அதிகாரிகளும் அதேவிடத்தில் தங்கியிருந்ததுடன், அவர்களின் நடமாட்டங்களையும் நெருக்கமாக அவதானித்து வரத்தொடங்கினர். ரோ அதிகாரிகள், பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பலர் போராளிகளின் தலைவர்களுடன் நீண்ட பேச்சுக்களை நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரினதும் நோக்கமாக இருந்தது ஒன்றுதான். அதாவது பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளாக அவர்கள் முன்வைத்திருக்கும் அனைத்தையும் மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் அது. நிபந்தனைகளை முன்வைப்பதன் மூலம் ஜெயவர்த்தன இலகுவாக பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதாகிவிடும் என்பதே அவர்களின் பேச்சாக இருந்தது. இந்திய அதிகாரிகளின் அழுத்தத்திற்குப் பதிலளித்த போராளிகள், ஜெயார் யுத்தநிறுத்தத்திலும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே தனது இராணுவத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக‌த்தான் என்று கூறினார்கள். மேலும், நாங்கள் நிபந்தனைகளை முன்வைத்தாலென்ன இல்லாதுபோனால் என்ன, அவர் எப்படியாவது பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு தனக்கேற்ற‌ தருணத்தில் வெளியேறுவார், தனது இராணுவ பலத்தினால் தமிழ் மக்களின் ஆயுதப் பலத்தினை முற்றாக நசுக்கிவிடமுடியும் என்கிற நிலை வரும்போது அவர் இதனைச் செய்வார் என்றும் கூறினார்கள். மேலும், லலித் அதுலத் முதலி, சிங்களவர்களை இராணுவமயப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்றும், இராணுவத்தினருக்கான ஆட்களைச் சேர்ப்பது, உப இராணுவப் பிரிவான ஊர்காவற்படையினை உருவாக்குவது, சிங்களக் குடியேற்றவாசிகளை ஆயுதமயப்படுத்துவது, இராணுவத்திற்கான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்றும் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினர். போராளிகளின் தலைவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்த இந்திய அதிகாரிகள், இலங்கை அரசின் இராணுவ முயற்சிகள் குறித்து தாமும் அறிந்துவைத்திருப்பதாகக் கூறினர். "எமக்கென்றும் ஒரு திட்டம் இருக்கிறது, அவர் பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்லட்டும் பார்க்கலாம்" என்றும் அவர்கள் கூறினர். தொடர்ந்து பேசிய இந்திய அதிகாரிகள், இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள இந்தியா பின்னிற்கும் எனும் உத்தரவாதத்தையும் அவர்கள் வழங்கினர். "திம்புவிற்குப் போங்கள், நாங்கள் உங்களைப் பார்த்துக்கொள்கிறோம்" என்பதே அவர்களின் அழுத்தமாக இருந்தது. போராளிகளின் தலைவர்களுடன் பேசிய இந்திய அதிகாரிகள் இன்னொரு விடயத்தையும் அழுத்தமாகக் கூறினார்கள். திம்புப் பேச்சுக்களில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு விடுதலைப் போராளிகள் எனும் அந்தஸ்த்தினை இந்தியாவும், இலங்கையும் கொடுக்கும் என்றும், ஆகவே அச்சந்தர்ப்பம் நழுவிச் செல்வதனை அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், ஜெயாரைப் பேச்சுவார்த்தைக்குப் பணியவைப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரொமேஷ் பண்டாரி அதிக நேரத்தையும், சக்தியையும் செலவழித்திருப்பதாகவும் கூறினர். பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேசுவதில்லை எனும் நிலைப்பாட்டில் தனது அரசாங்கம் இருப்பதாக ஜெயவர்த்தன தொடர்ச்சியாகக் கூறிவந்தபோதிலும், பண்டாரி அவருடன் சளைக்காது பேசி பணியவைத்திருப்பதாக அவர்கள் கூறினர். ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவால் ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களில் ஈடுபட்டிருந்த பண்டாரி, சீக்கியப் பிரிவினைவாத போராளித் தலைவரான ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவாலுடன் ரஜீவ் காந்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதைச் சுட்டிக் காட்டி, ஜெயாரும் போராளிகளுடன் பேசவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தார். இதற்கு மேலதிகமாக தனது உதவி வெளியுறவுச் செயலரான குர்ஷீட் அலாம் கானை ஜெயாரிடம் அனுப்பிய ரஜீவ், தான் லொங்கொவாலுடன், பேச்சுவார்த்தைகள் ஊடாக பிணக்கினைத் தீர்ப்பதுபோல, தமிழ்ப் போராளிகளுடன் ஜெயவர்த்தனவும் பிரச்சினைக்கான தீர்விற்காகப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்றும் கோரியிருந்தார். சீக்கியர்களின் பிணக்கினைத் தீர்த்துவைத்தவர் (குறிப்பு :சீக்கியர்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்த்துவைக்கப்படவில்லை என்பது வேறு விடயம்) என்று சர்வதேசத்திலிருந்து பலத்த பாராட்டுக்களை அந்நாட்களில் பெற்றிருந்த ரஜீவ், தனது பெருமைகளுக்கு வலுச்சேர்க்க ஜெயவர்த்தனவையும் தமிழ்ப் போராளிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர முயன்றுகொண்டிருந்தார். சீக்கிய பிரிவினைவாதப் போராளிகளின் பிரச்சினையைத் தீர்த்துவைத்தவர் என்கிற பெருமை உள்நாட்டில் ரஜீவிற்குக் கிடைத்திருந்தது. ஆகவே, இலங்கையில் தமிழருக்கான பிரச்சினையினைத் தீர்த்துவைத்தால் இப்பிராந்தியத்தில் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்கிற பெருமையும் அவரை வந்துசேரும் என்கிற எதிர்பார்ப்பு அவரிடத்தில் இருந்தது. 1985 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் எழுதிய மேர்வின் சில்வா, "தனது முதலாவது பிராந்திய பிணக்கினைக் களையும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த ரஜீவ், அதனை எப்பாடுபட்டாவது வெற்றியடைய வைப்பதில் அதீத பிரயத்தனம் காட்டியிருந்தார்" என்று எழுதுகிறார். போராளிகளுடன் பேசிய இந்திய ரோ அதிகாரிகள், பேச்சுவார்த்தைக்களுக்கான நிபந்தனைகளைப் போராளிகள் முவைத்துக்கொண்டிருப்பது இந்தியாவிற்கு அவமானத்தை ஏற்படுத்திவருவதாகத் தெரிவித்தனர். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்களில் போராளிகளை எப்படியாவது பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவேன் என்று ரொமேஷ் பண்டாரி உறுதியளித்திருந்தார். ஆகவே, அவ்வாறு அவர்களை அழைத்துவரமுடியாத பட்சத்தில், பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு அது பெருத்த அவமானமாக மறிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, போராளிகளை நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவருவதென்பது கெளரவப் பிரச்சினையாக மாறியிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். "ஆகவே, நீங்கள் கட்டாயம் திம்புவிற்குச் சென்றே ஆகவேண்டும்" என்று விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். ஒருபடி மேலே சென்ற சந்திரசேகரன், "நீங்கள் புரியும் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விடும்படி நாங்கள் கோரவில்லை. ஆனால், நீங்கள் கட்டாயம் திம்புப் பேச்சுக்களுக்குச் சென்றே ஆகவேண்டும்" என்று போராளிகளைக் கேட்டுக்கொண்டார். தில்லியில் அமைந்திருக்கும் ரோ வின் தலைமைக் காரியாலயத்தில், அதன் அன்றைய தலைவர் சக்சேனாவிற்கும் போராளிகளின் தலைவர்களுக்குமிடையே உச்சச் சந்திப்பொன்று இடம்பெற்றது. கராரான தொனியில், மிகுந்த அதிகாரத்துடன் பேசிய சக்சேனா, "நீங்கள் இந்தியாவுடன் ஒத்துப்போவதைத் தவிர‌ வேறு வழியில்லை என்று கூறினார். இந்திரா காந்தியின் காலத்தில் நாங்கள் உங்களைப் பார்த்துக்கொண்டோம், உங்களுக்கான முகாம்களையும், மறைவிடங்களையும் அமைக்க எமது நாட்டைத் தந்திருந்தோம், ஆனால் எமது புதிய அரசாங்கமோ தென்னாசியப் பிராந்தியத்தை சமாதானப் பூங்காவாக மாற்ற விரும்புகிறது. அதன் அடிப்படையிலேயே இலங்கையுடனான உங்களின் பேச்சுக்களும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று அவர் கூறினார். "உங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இலங்கையரசாங்கத்தைப் பணியவைப்பதில் மிகக்கடுமையான முயற்சிகளில் பண்டாரி இறங்கியிருக்கிறார். அதனை நீங்கள் ஒரு பெருவெற்றியாகவே பார்க்க வேண்டும். நீங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளால் திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு தனது அணியைனை அனுப்பிவைப்பதிலிருந்து ஜெயார் நழுவிக்கொள்ள சந்தர்ப்பம் ஒன்றினை நீங்கள் வழங்கப் போகிறீர்கள். ஆகவே, இந்தியாவின் முயற்சிகளுக்கு நீங்கள் கட்டாயம் ஒத்துழைப்புத் தந்தே ஆகவேண்டும்" என்று அவர்களைப் பார்த்து சக்சேனா கூறினார்.
  18. இதைக்கூறுவதற்கு தமிழரசுக் கட்சி மீதான மிகுந்த வக்கிரமும், காழ்ப்புணர்ச்சியும் இருக்கும் ஒருவரால்த்தான் முடியும். அல்லாவிட்டால், அக்கட்சியின் அனைத்துச் செயறபாடுகளும் உசுப்பேற்றும், தீண்டிவிடும், உணர்வூட்டிவிடும் வெறும் இனவாத நடவடிக்கைகள் தான் என்று நீங்களும், நீங்கள் மேற்கோள் காட்டும் உங்களது முகாமின் உறுப்பினர்களும் எழுதப்போவதில்லை. அப்படிக் கூறிவிட்டு, உங்களின் முகம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியவுடன் இப்படி எழுதுகிறீர்கள். உண்மையைக் கூறி எழுதுங்கள். ஏன் இவ்வளவு சிரமம்? நான் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவன். இலங்கையின் ஒற்றையாட்சியை நேசிப்பவன். சிங்கள இடதுசாரிகள் எனும் போர்வையில் உலாவரும் பேரினவாதிகளை ஆதரிப்பவன். அதற்காக தமிழ்த் தேசியத்தை ஆதரித்தவர்களை, தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தவர்களை, தமிழரின் பிரதேச நலன்கள் குறித்து செயற்படுபவர்களை என்னால் முடிந்தவரையில் விமர்சித்துச் சிறுமைப்படுத்துவேன் என்று வெளிப்படையாகவே கூறுங்கள். உங்களைப்போல இன்னுமொருவர் முன்னர் இங்கு உலாவந்தார். துல்பேன் எனும் பெயரில் விமர்சனம் எழுதிய அவரும் உங்களின் கருத்துக்களையே முன்வைத்து வந்தார். அவரும் உங்களின் முகாமிலிருந்து வருபவராக இருக்கலாம்.
  19. இணைப்பிற்கு நன்றி. இதுகுறித்து நன்கு அலசப்பட்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் எந்த மூலையிலிருந்து இதனை எழுதுகிறார்கள் என்பதைப்பொறுத்தே விமர்சனம் அமைகிறது. என்னைப்பொறுத்தவரை இவை தமிழரசுக்கட்சியை விமர்சிக்கவும், தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்தவும் எழுதப்பட்டவை என்றே நினைக்கிறேன். இந்த விமர்சனங்களில் ஒரு சிறிய பகுதியேனும் ஆளும் சிங்கள இடதுசாரி இனவாதத்தின் மேல் வைக்கப்படவில்லை என்பது வியப்புத்தான். அதுமட்டுமல்லாமல் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களை நல்லவர்களாகக் காட்டும் கைங்கரியமும் இங்கு எனக்குத் தெரிகிறது. பரவாயில்லை, செய்யுங்கள். தமிழரசுக் கட்சியின் நம்பகத்தனமையினையும், தமிழ்த்தேசியத்தை வளர்த்துவிட்ட அதன் செயல்களையும் தொடர்ச்சியாக விமர்சியுங்கள். ஈற்றில் சிங்களப் பேரினவாதம் என்று ஒன்றில்லை, எல்லாம் இலங்கை நாட்டு மக்களே என்று நிறுவுங்கள். சுபம் !
  20. போராளிகளின் கோரிக்கையினை மீண்டுமொருமுறை நிராகரித்த இந்தியாவும், அமிர்தலிங்கத்தை எச்சரித்த போராளிகளும் போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் எழுதும் பாலசிங்கம், ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அறிக்கையினையடுத்து இந்தியா மிகுந்த கோபம்கொண்டு காணப்பட்டதாகக் கூறுகிறார். இணைந்த அறிவிப்பில் போராளிகளால் கோரப்பட்ட பெரும்பான்மையான கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது. ஆனால், பாலசிங்கத்துடன் பேசிய சந்திரசேகரன், இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து இந்தியா கவனமெடுக்கும் என்று கூறினார். மேலும், போராளிகளின் தலைவர்களுடன் திம்பு பேச்சுவார்த்தை குறித்துப் பேசுவதற்காக தில்லிக்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். போராளிகளின் தலைவர்களை தில்லிக்கு அழைக்கப்போகிறார்கள் என்கிற செய்தி வந்தவுடன் உடனடியாக சந்திப்பொன்றினை அவர்கள் நடத்தினார்கள். முக்கியமான இரு விடயங்கள் அங்கே ஆராயப்பட்டன. முதலாவது, பேசப்பட வேண்டிய அடிப்படைக் கொள்கைகள். இதுகுறித்து தலைவர்களிடையே கருத்தொற்றுமை நிலவியது. தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் என்னவென்பதை ஏற்கனவே பலமுறை முன்வைக்கப்பட்டு வந்திருப்பதுடன், திருகோணமலையில் 1956 ஆம் ஆண்டு தந்தை செல்வா நடத்திய சமஷ்ட்டிக் கட்சியின் மாநாட்டிலும் தெளிவாக பிரகடணப்படுத்தப்பட்டு இருந்தது. அவையாவன, 1. இலங்கைத் தமிழர்களை ஒரு தனி தேசமாக அங்கீகரிக்க வேண்டும். 2. இலங்கையில் தமிழர்களுக்கென்று பூர்வீக தாயகம் இருக்கிறதென்பதை அங்கீகரிக்க வேண்டும். 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்க வேண்டும். 4. இலங்கையைத் தமது நாடாகக் கொண்டு வாழும் அனைத்துத் தமிழருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்படுவதோடு, அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப்பெறுதல் வேண்டும் என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்தனர். அடுத்ததாக அவர்கள் ஆராய்ந்த விடயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தமது முடிவுகளுக்கு இணங்கப் பண்ணுவது. ஆகவே, தாம் முன்வைக்கும் அடிப்படைகளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்க்கக் கூடாது என்று அவர்களை எச்சரிப்பதென்று போராளிகளின் தலைவர்கள் முடிவெடுத்தனர். அமிர்தலிங்கம் ஏற்கனவே தில்லிக்குப் பயணமாகியிருந்தமையினால், சென்னையில் தங்கியிருந்த யோகேஸ்வரனிடம் இதுகுறித்து பேசுவதென்று அவர்கள் முடிவெடுத்தனர். அங்கு பேசிய சிறீ சபாரட்ணம், யோகேஸ்வரனை உடனேயே அங்கு அழைத்து, அவரிடம் நேரடியாக தமது எச்சரிக்கையினை வழங்கலாம் என்று கூறினார். ஏனையோரும் அதனை ஆமோதிக்கவே, பாலக்குமார் யோகேஸ்வரனுடன் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். வி. யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம் யோகேஸ்வரனுடன் பேசிய பாலக்குமார், "அண்ணை, என்னுடன் பிரபா, சிறீ மற்றும் நாபா ஆகியோர் இருக்கிறார்கள். உங்களைச் சந்தித்து அவசரமாக ஒரு விடயத்தைப் பேச அவர்கள் விரும்புகிறார்கள்" என்று கூறினார். யோகேஸ்வரனும் அவர்களைச் சந்திக்க சம்மதம் தெரிவித்ததுடன், "தங்கத்துரையும் என்னுடன் இருக்கிறார், அவரையும் அழைத்து வரவா?" என்று கேட்க, பாலக்குமாரும் அதற்குச் சம்மதித்தார். அங்கிருந்த ஏனையவர்களுடன் பேசிய பிரபாகரன், "உங்கள் எல்லோரையும் தம்பிகள் என்று வெகு இனிமையாக அழைத்து யோகேஸ்வரன் பேசுவார், அந்த நடிப்புகளுக்கெல்லாம் மயங்கிவிட வேண்டாம்" என்று கூறினார். "பாலா அண்ணை பேசட்டும், நாங்கள் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம்" என்று அவர் மேலும் கூறினார். அ. தங்கத்துரை, பாராளுமன்ற உறுப்பினர், திருகோணமலை. சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் யோகேஸ்வரனும், தங்கத்துரையும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். "நாங்கள் பிந்திவிட்டோமா? இந்த இடத்தைக் கண்டுபிடிக்கச் சிரமமாகிவிட்டது" என்று யோகேஸ்வரன் கூறினார். போராளிகளின் தலைவர்கள் எவருமே பதில் கூறாது மெளனம் காத்தனர். பாலசிங்கம், யோகேஸ்வரனையும், தங்கத்துரையினையும் ஆசனங்களில் அமரச் சொன்னார். அவர்கள் இருவரும் சிறீ சபாரடட்ணத்திற்கும் பிரபாகரனுக்கும் இடையே அமர்ந்து கொண்டனர். மேசையின் எதிர்ப்புறத்தே அமர்ந்திருந்த பாலசிங்கம், "உங்களை சொற்ப நேரத்திற்குள் வரவழைத்தமைக்காக வருந்துகிறோம். முதலாவது, நாங்கள் ஆயுத அமைப்புக்கள் அல்லவென்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாம் அரசியல் ‍- ஆயுத முன்னணியினர் ஆகும். நாம் போரிடுவதில் மட்டுமல்ல, அரசியல் பேரம்பேசலிலும் வல்லவர்கள். ஆகவே, எங்கள் சார்பாக வேறு எவரும் பேசத்தேவையில்லை" என்று தீர்க்கமான தொனியில் கூறினார். பாலசிங்கத்தின் முதலாவது பிரகடணமே யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர், தமது தீர்மானங்கள் குறித்த நீளமான விளக்கத்தை பாலசிங்கம் வழ‌ங்கினார். ஒரே சுரத்தில் பேசிய பாலசிங்கம் பின்வருமாறு தனது பேச்சினை நிறைவு செய்தார், " நாம் முன்வைக்கும் தீர்மானங்களுக்கு மாற்றாக வேறு எந்தத் தீர்மானத்தையும் முன்வைக்கக் கூடாது என்று அமிர்தருக்குச் சொல்ல விரும்புகிறோம். நாம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டே அமையவேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானித்திருக்கிறோம். ஆகவே, இதனை ஆதரிக்க வேண்டும் என்று அமிருக்குச் சொல்லுங்கள். இதைவிட வேறு எதனையும் அவர் பேசக்கூடாது" என்று கூறி முடித்தார். பதிலளித்த யோகேஸ்வரன், ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களின் தீர்மானத்தை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆதரிக்கும் என்று உறுதியளித்தார். "அமிர் அண்ணை உங்களின் தீர்மானங்களுக்கு எதிராக ஒருபோதும் செல்ல மாட்டார். உங்களது தீர்மானமே எங்களது தீர்மானமும். எனது சத்தியத்தை நூற்றுக்கு நூறுவீதம் நீங்கள் நம்பலாம்" என்று அவர்களைப் பார்த்து அவர் கூறினார். பதிலளித்த பாலசிங்கம், "உங்களின் சத்தியத்தை நம்புவதும், நம்பாததும் தில்லியில் அமிர்தலிங்கம் எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்பதித்தான் தங்கியிருக்கிறது. ஆகவே, அவரை உடனேயே தொடர்புகொண்டு நாங்கள் உங்களிடம் கூறிய விடயங்களை அவருக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அப்போது, எதேச்சையாகப் பேசிய சிறீ சபாரட்ணம், "அண்ணை, அமிர் எங்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவரைத் திம்புவிலேயே இருக்கச் சொல்லுங்கள்" என்று யோகேஸ்வரனைப் பார்த்து எச்சரிக்கும் தொனியில் கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.