Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. குமுதினிப் படகுப் படுகொலைகள் அநுராதபுரத் தாக்குதலையடுத்துக் கொதிப்படைந்த ஜெயாரும், அதுலத் முதலியும் இதற்கான பதிலை இரு வகைகளில் வகுத்தனர். முதலாவது சிங்கள மக்களின் மனோநிலையினை மீளக் கட்டியெழுப்புதல். இரண்டாவது, பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதன் மூலம் இந்தியாவின் முயற்சிகளைச் செயலிழக்கப்பண்ணுதல். சிங்கள மக்களின் மனோநிலையினை மீளக் கட்டியெழுப்ப அவர்கள் எடுத்துக்கொண்ட முதலாவது நடவடிக்கையினூடாக பல தமிழ் மக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவை செயலிழக்கப்பண்ணும் தமது இரண்டாவது நடவடிக்கை போராளிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அவர்களைப் போகப் பண்ணியிருந்தது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் முதலாவது தொகுதிக் கொலைகள் வைகாசி 15 ஆம் திகதி, அநுராதபுரத் தாக்குதல் நடந்து ஒருநாளின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. அந்நாள் காலை 7:40 மணிக்கு, நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவான் இறங்குதுறை நோக்கிச் செல்லும் தனது நாளாந்தப் பயணத்தை குமுதினி எனும் பெயர் கொண்ட மக்கள் படகு ஆரம்பித்தது. குறிக்கட்டுவானிலிருந்தே யாழ்ப்பாணத்திற்கான பஸ்வண்டிச் சேவைகள் நடந்துவந்தன. மோட்டார் இயந்திரம் கொண்டு இயக்கப்பட்ட அப்படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட 80 பேர் அன்று காலை பயணம் செய்துகொண்டிருந்தனர். காங்கேசு சாந்தலிங்கம், அவரது மனைவி குசலகுமாரி, அவரது மைத்துனி அனுஷியா, அவர்களது சித்தி சரோஜா மற்றும் அவர்களது பிள்ளை லெகி ஆகியோரும் அன்று காலை குமுதினிப் படகில் பயணம் செய்துகொண்டிருந்தனர். கணபதிப்பிள்ளை கணேசபிள்ளை குடும்பமும் அன்று படகில் இருந்த குடும்பங்களில் ஒன்று. சாந்தலிங்கமும் கணேசபிள்ளையும் அன்றைய படுகொலைகளில் உயிர்தப்பி நடந்த அகோரத்திற்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள். நைனாதீவு இறங்குதுறை வைகாசி 25, 2000 இல் ஞாயிறு வீரகேசரிப் பத்திரிகைக்கு அவர்கள் வழங்கிய செவ்வியில் 16 வருடங்களுக்குப் பின் இலங்கையின் சரித்திரத்தில் நிகழ்த்தப்பட்ட மிகவும் அகோரமான கடற்படுகொலை குறித்த விபரங்கள் வெளிக்கொணரப்பட்டன. "நாம் நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு அரை மணிநேரம் ஓடியிருப்போம். நெடுந்தீவுக்கும், நைனாதீவிற்கும் இடையிலான கடற்பகுதியினூடாக நாம் பயணித்துக்கொண்டிருக்கும்போது, எமது படகு நோக்கி Fibre Glass இனால் செய்யப்பட்ட படகு ஒன்று வந்துகொண்டிருப்பதை அவதானித்தோம். அப்படகு எம்மை அண்மித்ததும், அதிலிருந்தவர்கள் எமது படகு செலுத்தியிடம் படகின் இயந்திரத்தை உடனே நிறுத்துமாறு கட்டளையிட்டார். அதன்பின்னர், எமது படகைச் சுற்றி இரண்டுமுறை வட்டமடித்த அவர்கள், இறுதியில் எமது படகுடன் தாம் வந்த படகினை சேர்த்துக் கட்டினர். அப்போது நாம் நைனாதீவை அண்மித்திருந்தோம்" என்று சாந்தலிங்கம் கூறினார். "கறுப்பு நிறத்தில் டீ‍சேர்ட்டும், கட்டைக் காற்சட்டையும் அணிந்த, திடகாத்திரமான ஏழு அல்லது எட்டு நபர்கள், கைகளில் தானியங்கித் துப்பாக்கிகளுடனும், இன்னும் சில ஆயுதங்களுடனும் எமது படகில் தாவி ஏறிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள். அவர்களை நான் முன்னர் கடற்படையினரின் சீருடையில் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவர் இயந்திரத்தின் அறைக்குள்ச் சென்று அதனைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தார்". "பின்னர், உள்ளிருந்த பயணிளையும், படகோட்டியையும் படகின் மேற்தட்டிற்குச் செல்லுமாறு கட்டளையிட்டனர். அவர்கள் கட்டளையிட்டவாறே நாம் எல்லோரும் படகின் மேற்பகுதிக்குச் சென்றோம். பின்னர், படகின் முன்புறத்தில் இருந்த அறை ஒன்றிற்குள் எம்மைப் போகச் சொன்னார்கள். அங்கிருந்த ஆண்களையெல்லாம் வரிசையில் நிற்கும்படி கட்டளையிட்டார்கள். உங்களிடம் அடையாள அட்டைகள் இருக்கின்றனவா என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்கள். நாமும், ஆம், கொண்டுவந்திருக்கிறோம் என்று பதிலளித்தோம். பின்னர் ஆண்களை படகின் இயந்திரம் அமைந்திருந்த பகுதியூடாக, படகின் பின்புறத்திற்குப் போகச் சொன்னார்கள். மற்றையவர்கள் தமது பெயர்களை உரக்கச் சொல்லியவாறே இயந்திரம் இருந்த அறைக்குள் செல்லுமாறு பணிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு பயணியும் இயந்திரத்தின் அறைக்குள் நுழையும்போது துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் எமக்குக் கேட்டது. கூடவே உடல்கள் கடலினுள் விழும் சத்தமும் எமக்குக் கேட்டது". கடற்படையினரால் வேட்டையாடப்பட்ட குமுதினிப் படகுப் பயணிகள் "வரிசையில் நான் நடுவில் நின்றிருந்தேன். எனது முறை வந்தது. நான் இயந்திரத்தின் அறையினுள் நுழைந்தபோது இரத்த வெள்ளத்தில் கிடந்த சில உடல்களைக் கண்டேன். அதிர்ச்சியில் நான் அலறத் தொடங்கினேன். யாரோ பின்னாலிருந்து எனது பின்னந்தலைப் பகுதியில் பலமாகத் தாக்கினார்கள். அங்கே கிடந்த உடல்களின் மீது நான் வீழ்ந்தேன். என்னை இழுத்தெடுத்த அவர்கள், தாம் வைத்திருந்த கோடரியினால் என்னை வெட்டத் தொடங்கினார்கள். நான் இறந்ததுபோல அசைவற்றுக் கிடந்தேன். பின்னர் என்னை அங்கே கிடந்த உடல்களின் மீது எறிந்துவிட்டு எனக்குப் பின்னால் நின்ற ஆணைக் கொல்லத் தொடங்கினார்கள். அவரது உடல் என்மீது வீழ்ந்தது. பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக‌ உடல்கள் என்மீது வந்து விழத் தொடங்கின. இக்கொலைகள் குறைந்தது 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து நடைபெற்றன. பின்னர், ஒரு கடற்படை வீரன் இன்னமும் உயிருடன் யாராவது இருக்கிறீர்களா? இருந்தால் வெளியே வாருங்கள் என்று கத்தினான். நான், என்மீது கிடந்த உடல்களை தள்ளை அகற்றிவிட்டு எழுந்து நின்றேன்". "சித்தி என்னிடம் பேசும்போது, எனது மனைவியையும், மைத்துனியையும் அவர்கள் கொன்றுவிட்டதாகக் கூறினார். எமது படகு மெதுமெதுவாக நெடுந்தீவு நோக்கி மிதந்து சென்றுகொண்டிருந்ததை நாம் அவதானித்தோம். படகிலிருந்த சிவப்பு நிறப் பயணப் பை ஒன்றினை மேலே உயர்த்திப் பிடித்து எம்மால் முடிந்தவரை கூச்சலிட்டோம். தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகிலிருந்தோர் இதனை அவதானித்திருக்க வேண்டும். அவர்கள் தம்முடன் இன்னும் ஒரு பெரிய படகை எடுத்துவந்து எம்மைக் குறிக்கட்டுவானுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து யாழ்பாணம் வைத்தியசாலைக்கு நாம் கொண்டுசெல்லப்பட்டோம்" என்று சாந்தலிங்கம் கூறினார். கணேசபிள்ளை தனது அனுபவத்தைக் கூறும்போது, "எனது முறை வந்தது, நான் இயந்திரத்தின் அறையினுள் நுழைந்தேன். நான் உள்ளே நுழையும்போது பின்னாலிருந்து எனது தலையில் பலமாகத் தாக்கினார்கள். இன்னுமொருவன் கோடரியால் என்னை வெட்டினான். நான் அலறிக்கொண்டே கீழே வீழ்ந்தேன். மூன்றாமவன் எனது வாயினை தான் வைத்திருந்த வாளினால் வெட்டினான். நான் ஒருபுறமாகப் புரண்டு அறையின் கரைக்குச் சென்றேன்". "நான் மீண்டும் எழுந்திருந்தபோது, அவர்கள் சென்றுவிட்டார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். என்னைச் சுற்றி எங்கும் உடல்கள் சிதறிக் கிடந்தன. சிலர் என்னைப்போன்றே குற்றுயிராகக் கிடந்ததை நான் கண்டேன். சிவப்புப் பையொன்றினைத் தூக்கிப் பிடித்து தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகொன்றின் கவனத்தை எம்மால் ஈர்க்க முடிந்தது. எம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிங்களவர்கள் பேசும் கொச்சைத் தமிழில் பேசினார்கள். தமக்கிடையே சிங்களத்தில் பேசிக்கொண்டார்கள். எம்மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவரை நைனாதீவு கடற்படை முகாமில் நான் கண்டிருக்கிறேன். அவர்கள் இருவரையும் சீருடையிலும், சிவில் உடையிலும் பலமுறை கண்டிருக்கிறேன். கறுப்பு நிற டீ சேர்ட்டுக்களையே அவர்கள் பெரும்பாலும் அணிவார்கள். அவர்கள் பாக்கிஸ்த்தானில் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரமானவர்கள் என்று ஊர்ச் சனங்கள் கூறக் கேட்டிருக்கிறேன். என்னால் அவர்களை அடையாளம் காண முடியும்" என்று அவர் கூறினார். இத்தாக்குதலில் ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் அடங்கலாக 48 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். அநுராதபுரத் தாக்குதலுக்குப் பழிவாங்கவே இத்தாக்குதலை அரசாங்கம் நடத்தியது. நன்றாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை இது. ஒவ்வொரு பயணியும் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தம்மால் கொல்லப்படுபவர்களின் ஓலம் வெளியே கேட்காதிருக்க, உயிருடன் இருந்தவர்கள் தமது பெயர்களைச் உரத்துச் சத்தமிடவேண்டும் என்று கடற்படையினர் கட்டளையிட்டிருக்கிறார்கள். சர்வதேச மன்னிப்புச் சபை இப்படுகொலைகள் குறித்துக் கேள்வி எழுப்பியது. படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்களின் கண்ணால்க் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில், படுகொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நைனாதீவு கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் என்கிற விபரங்களுடன் அது அறிக்கை வெளியிட்டது. ஆனால், இப்படுகொலைகளை தமது படையினர் செய்யவில்லை என்று மறுதலித்த பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, "இதனைச் செய்தது யாரென்று கூறுவதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை" என்று கூறினார். சர்வதேசத்திலிருந்து எழுந்துவந்த விமர்சனங்களையடுத்து, இப்படுகொலைகள் குறித்து விசாரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. விசாரணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அவசர அவசரமாக விசாரணைகள் நடத்தப்பட்டு, அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையினை பத்திரமாக தனது ஆவணக் காப்பகத்தில் மறைத்துவைத்த அரசாங்கம் இன்றுவரை அதுகுறித்த விபரங்களை வெளியே விடவில்லை. இப்படுகொலை நடைபெற்று இரு நாட்களுக்குப் பின்னர் நற்பிட்டிமுனைப் பகுதியில் இன்னொரு படுகொலையினை அரசாங்கம் நடத்தியது. இப்படுகொலை குமுதினிப் படுகொலையினை விடவும் குரூரமானதாக இருந்தது.
  2. அநுராதபுரத் தாக்குதல் பெளத்தர்களின் போயா தினமான, 1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதி காலை, விக்டர் தலைமையில் புறப்பட்ட 14 சீருடை தரித்த புலிகள், புத்தளம் - அநுராதபுரம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்வண்டியொன்றைக் கடத்தினார்கள். பின்னர், கிறீஸ்த்துவிற்கு முன் 5 ஆம் நூற்றாண்டிலிருந்து, கிறிஸ்த்துவிற்குப் பின் 10 ஆம் நூற்றாண்டுவரை சிங்கள பெளத்தர்களின் புராதன தலைநகராக விளங்கிய அநுராதபுரம் நகரின் மத்தியில் அமைந்திருந்த பிரதான பேரூந்துத் தரிப்பிடத்திற்குச் அதனை ஓட்டிச் சென்றார்கள். பேரூந்துத் தரிப்பிடத்தில் காத்துநின்ற பயணிகள் மீது தாம் கொண்டுவந்த இயந்திரத் துப்பாக்கிகளால் அவர்கள் சரமாரியாகச் சுட்டபோது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அடங்கலாக சுமார் நூறு பொதுமக்கள் இறந்துவீழ்ந்தார்கள். பின்னர் உலக பெளத்தர்களால் கொண்டாடப்படும் புனித வெள்ளரசு மரம் அமைந்திருந்த பகுதிநோக்கி அவர்கள் சென்றார்கள். பெளத்த மதத்தை ஆரம்பித்த புத்தர் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கூறப்படும் வெள்ளரசு மரத்தின் கிளையினை ஊன்றியே இந்த வெள்ளரசு மரமும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதால் இம்மரமும் பெளத்தர்களால் புனிதமானதாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறீஸ்த்துவிற்கு முன் 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னனின் மகளான சங்கமித்தையே இந்த வெள்ளரசுக் கிளையினை இலங்கைக்குக் கொண்டுவந்ததாக சிங்கள பெளத்தர்கள் கூறுகிறார்கள். அப்பகுதியில் இருந்த சிங்கள பெளத்த குருக்கள், பெண் குருக்கள், வெள்ளையுடையணிந்த சாதாரண பெளத்தர்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் வில்பத்து வனப்பகுதி நோக்கிச் சென்ற தாக்குதல் அணி, போகும் வழியில் இருந்த பொலீஸ் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தியவாறே சென்றது. வில்பத்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வன இலாகா முகாம் மீது புலிகளின் தாக்குதல் அணி நடத்திய தாக்குதலில் நான்கு ஆயுதம் தரித்த காவலாளிகள் கொல்லப்பட்டார்கள். அன்று மட்டும் புலிகளால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை 148 ஆகும். தாக்குதலையடுத்து உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, புலிகளைத் தேடி வேட்டையாட விசேட பொலீஸ் கொமாண்டோக்களை அரசு வரவழைத்தது. ஆனால், அவர்கள் வருவதற்கிடையில் தாக்குதல் அணி அங்கிருந்து அகன்று சென்றிருந்தது. அநுராதபுரம் விமானப்படை முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற உலங்குவானூர்தியொன்று வில்பத்துக் காட்டுப் பகுதியூடாக புலிகளின் பஸ் வண்டி சென்றுகொண்டிருப்பதை அவதானித்துவிட்டு அதன்மீது தாக்குதல் நடத்தியது. உடனடியாக பஸ்ஸை விட்டிறங்கிய புலிகள் உலங்குவானூர்தி மீது திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். புலிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணத்தில் பிறந்து துப்பாக்கி இயக்குனரான விமானப்படை சார்ஜன்ட் ஹத்த கபுராலகே ஜயரட்ண என்பவர் காலிலும் நெஞ்சிலும் துப்பாக்கிச் சூடுபட்டுக் காயமடைந்தார். அதனையடுத்து உலங்குவானூர்தி திரும்பிச் சென்றது. காயமடைந்த விமானப்படை வீரர் இன்றும் வாழ்கிறார் (2005). தாக்குதலில் ஒரு கையினையும், காலையும் இழந்த அவரை அன்றைய ஜனாதிபதியின் ஆலோசகர் ரவி ஜயவர்த்தன இஸ்ரேலுக்கு அனுப்பி செயற்கைப் பாகங்களை அவருக்குப் பெற்றுக்கொடுத்தார். அநுராதபுரம் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் கொழும்பை வந்தடைந்தபோது நான் லேக் ஹவுஸ் காரியாலயத்தில் இருந்தேன். சிங்கள பெளத்தர்கள் இச்செய்தியைக் கேட்டதும் கடும் கோபமடைந்தார்கள். தமிழர்கள், தம்மீது சிங்களவர்களால் பழிவாங்கும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அஞ்சிய‌போதும் அப்படி நடக்கவில்லை. அரசாங்கத்தில் உள்ளவர்களால் தூண்டப்பட்டால் ஒழிய சாதாரணச் சிங்களவர்கள் தம்மை கொல்லப்போவதில்லை என்பதை தமிழர்கள் அன்று புரிந்துகொண்டார்கள். நான் உடனடியாக டொரிங்டன் சதுக்கத்தில் இருந்த எனது தொடர்மாடி வீட்டிற்குச் சென்றேன். 1983 ஆம் ஆண்டில் எனது வீடு எரியூட்டப்பட்டதையடுத்து நாம் டொரிங்டனில்த்தான் வாழ்ந்துவருகிறோம். தாக்குதல் குறித்த செய்தி வந்தபோது, வீட்டில் மகன் மட்டும் தனியாக இருந்தமையினால், அவரது பாதுகாப்புக் குறித்த கவலையுடன் நான் வீட்டிற்குக் கிளம்பினேன். நான் எனது வீடிருக்கும் பகுதியை அடைந்தபோது, பொலீஸ் ரோந்து வண்டியொன்று அப்பகுதிக்கு வந்தது. நான் மகனிடம், "பயப்படாதே, இனிமேல் அவர்கள் வன்முறைகளில் இறங்கமாட்டார்கள். அரசாங்கம் இனிமேல் அவர்களைத் தூண்டாது" என்று கூறினேன். சிங்கள மக்கள் அமைதிகாத்து வருவதை தொடர்ச்சியாக சிங்களப் பத்திரிக்கைகள் பாராட்டி எழுதிவந்தன. சிங்கள மக்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்றும் அவை எழுதின. ஆனால், அந்த கருத்துத் தவறானது என்பதை தமிழர்கள் அறிவார்கள். இம்முறை ஜெயவர்த்தன சிங்களவர்களைத் தூண்டிவிடவில்லை, அதனாலேயே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறவில்லை என்பதே உண்மை. சிங்களக் காடையர்களை தூண்டிவிட்டு தமிழர் மீது தாக்குதல் நடத்தினால், தமிழ்ப் போராளிகளும் பதில்த் தாக்குதல்களில் இறங்குவார்கள் என்கிற அச்சம் ஜெயாருக்கு ஏற்பட்டிருந்தது. அதனாலேயே சிங்களவர்களைத் தூண்டிவிடுவதை அவர் இம்முறை தவிர்த்திருந்தார். வழமைபோல சிங்கள ஊடகங்கள் நடப்பதை உணர்ந்துகொள்ள மறுத்துவிட்டன. சிங்களவர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவை உணர மறுத்துவிட்டன. தொண்டைமான் இதனை ஒரு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். 1983 இல் நடத்தப்பட்டது சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட பழிவாங்கற் தாக்குதல்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அது, ஜெயவர்த்தனவினால் நன்கு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட பயங்கரவாதம் என்று அவர் கூறினார். அனிட்டா பிரதாப்புடனான செவ்வியில் பிரபாகரனும் இதனையே கூறியிருந்தார். அநுராதபுரத் தாக்குதலையடுத்து ஜெயார் நிலைகுலைந்துபோனார். லலித்தோ கடுமையான அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தார். சிங்கள மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் நம்பிக்கையினை இத்தாக்குதல் சேதப்படுத்தப்போவதை அவர்கள் நன்கு உணர்ந்துகொண்டார்கள். அநுராதபுரம் மீதான தாக்குதல் உட்பட, வடக்குக் கிழக்கில் பரவலாக போராளிகளால் நடத்தப்பட்ட வந்த தாக்குதல்களின் பின்னால் இந்தியாவின் ரோ இருப்பதாக அவர்கள் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். சிங்கள ஊடகங்களில் தமது சந்தேகங்களை அவர்கள் வெளிப்படையாகவே முன்வைத்து வந்தார்கள்.
  3. 2007 இல் எழுதப்பட்ட கட்டுரை ஆக்கம் :சச்சி சிறீகாந்தா இணையம் : இலங்கை தமிழ்ச் சங்கம் 1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதி, தமிழர் தாயகத்தின் எல்லைகளுக்கு வெளியே புலிகள் முதன்முதலாக நடத்திய தாக்குதலான அநுராதபுரத் தாக்குதலில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அடங்கலாக 146 சிங்களவர்கள் கொல்லப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் கடந்தோடிவிட்டன. புலிகளின் இந்த ஆக்ரோஷம் அண்மைய தமிழ் ஈழ வரலாற்றில் முன்னுதாரண மாற்றமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலின் மூலம் இலங்கைப் பாராளுமன்றம் உதட்டளவில் பேசிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு அர்த்தமற்றுப் போயிருப்பதுடன், சிங்கள இனவாதிகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் நடத்திவரும் அகம்பாவமான பேச்சுக்களும் அடிபட்டுப் போயிருக்கின்றன. துணிவான, சிங்களவர்களின் வாய்வானவேடிக்கைகளுக்குப் பணியாத இளைய‌ தமிழ்த் தலைமுறை ஒன்றிற்கு அவர்கள் தற்போது முகம்கொடுக்கிறார்கள். அநுராதபுரம் மீதான தாக்குதலை இன்றுவரை விமர்சித்து எழுதிவருவோர், இத்தாக்குதலுக்கு முன்னர் தமிழ் மக்கள் மீது மன்னாரில் இலங்கை இராணுவம் நடத்திய நரவேட்டைகள் குறித்துப் பார்க்க மறந்துவிடுகிறார்கள். அவசரமாகவும், முழுமையற்ற தகவல்களைக் கொண்டும் அநுராதபுரத் தாக்குதலை டைம்ஸ் பத்திரிக்கை செய்தியாக்கியிருக்கிறது. டைம்ஸ் பத்திரிக்கை வேண்டுமென்றே தவறவிட்ட சில விடயங்களைப் பார்க்கலாம். முதலாவதாக, "பிரிவினைவாதப் போராளிகள்" என்று பொதுவாக அழைத்ததன் மூலம் அமைப்பின் பெயரை சரியாகக் குறிப்பிட அது மறந்திருக்கிறது. 1985 ஆம் ஆண்டில், டைம்ஸ் பத்திரிக்கை உட்பட்ட சர்வதேச ஊடகங்கள் புலிகளுக்கும், அவர்களின் எதிரிகளான தமிழ் பிரிவினைவாதிகள் என்று தம்மை உரிமை கோரும் அமைப்புக்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. அடுத்ததாக, அநுராதபுரம் நோக்கிக் கடத்திச் செல்லப்பட்ட பஸ் வண்டியில் எத்தனை போராளிகள் இருந்தார்கள் என்பது குறித்தும் டைம்ஸ் பத்திரிக்கை தகவல் எதனையும் வெளியிடவில்லை. மூன்றாவதாக, தாக்குதல் அணியினை வழிநடத்தியது யாரெனும் தகவலும் அச்செய்தியில் குறிப்பிடப் படவில்லை. பின்னர் அவர் ஒரு இந்து என்று டைம்ஸ் அடையாளம் கண்டிருந்தது. இங்கே உண்மை என்னவென்றால், தாக்குதல் அணிக்குத் தலைமை தாங்கியது மன்னார் பன‌ங்கட்டிக்கொட்டுப் பகுதியில் பிறந்தவரும், புலிகளின் மன்னார்ப் பிராந்தியத் தளபதியுமான லெப்டினன்ட் கேணல் விக்டர் என்று அழைக்கப்பட்ட கத்தோலிக்கரான மேர்சிலின் பியூஸ்லஸ் என்பதே உண்மை. 18 மாதங்கள் கழித்து, 1986 ஆம் ஆண்டு ஐப்பசி 12 ஆம் திகதி மன்னார் அடம்பனில் இராணுவத்தினருடனான மோதல் ஒன்றில் விக்டர் வீரச்சாவடைந்தார். புலிகளின் உத்தியோகபூர்வ இதழான விடுதலைப் புலிகளின் தகவல்களின்படி விக்டர் வீரமரணம் எய்தியபோது அவருக்கு வயது வெறும் 23 தான். நான் இத்தகவல்களை இங்கே தருவதற்கான காரணம், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ரொபேர்ட் பேப் போன்றோரின், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த தளபதிகளோ அல்லது கரும்புலி வீரர்களோ புலிகள் அமைப்பில் இருக்கமுடியாது எனும் கருத்தினை உடைக்கத்தான். நான்காவதாக, டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியின்படி, தமிழர்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல்களை முடுக்கிவிடவே அநுராதபுரம் மீது புலிகள் தாக்கினார்கள் என்று பொருள்ப்பட எழுதியிருந்தது. ஆனால், 1985 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் மன்னார் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இராணுவத்தின் அட்டூழியங்களைப் பார்க்கும் பலர் டைம்ஸ் பத்திரிக்கை முன்வைக்கும் கருதுகோளினை பொய்யென்று நிறுவுகிறார்கள். இன்றுவரை, அநுராதபுர தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக எழுதிவரும் புத்தகங்களாகட்டும், இணையத் தளங்களாகட்டும், டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான சிங்களவரின் பார்வையினைப் பிரதிபலித்தே எழுதுகின்றன. ஆனால், புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதியான லெப்டினன்ட் கேணல் விக்டர் அவர்கள் அநுராதபுரம் மீது தாக்குதலை நடத்த அவரைத் தூண்டியது எதுவென்பதை இவர்கள் அனைவரும் பார்க்கத் தவறிவிடுகின்றனர். 1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதிக்கு முன்னர் மன்னார்ப் பிராந்தியத்தில் இராணுவத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அட்டூழியங்கள் குறித்த செய்திகளைப் பார்க்கும் ஒருவரால், இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் மன்னார் மக்களின் அமைதியான வாழ்வும் அவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டு வருவதையும், 1984 ஆம் ஆண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து 1985 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்கள்வரை கையறு நிலையில் வாழ்ந்துவரும் இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்களின் அவலங்களையும் பார்க்காமல் இருக்க முடியாது. குறிப்பு : மன்னார்ப் படுகொலைகள் குறித்து சர்வதேச ஊடகங்களில் வெளிவந்த ஐந்து கட்டுரைகளை சிறீகாந்தா அவர்கள் தனது கட்டுரையில் விபரிக்கிறார். இக்கட்டுரைகளைப் படிக்கும் ஒருவருக்கு விக்டர் தலைமையிலான புலிகள் எதற்காக அநுராதபுரத் தாக்குதலை முன்னெடுத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இத்தொடருடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டபோதிலும், சபாரட்ணம் இக்கட்டுரைகள் குறித்து எதுவுமே குறிப்பிடாததனால், அதற்கான இணைப்பினை மட்டும் இங்கு பதிந்துவிட்டுத் தொடர்கிறேன். https://www.sangam.org/2007/05/Mannar_Massacres.php?uid=2395&print=true
  4. மன்னார்ப் படுகொலைகளே அநுராதபுரத் தாக்குதலுக்கு வழிவகுத்தன‌ : மேரி ஆன் வீவர் எனும் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் 1985 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் மன்னாரில் இலங்கை இராணுவம் ஆடிய கோரத் தாண்டவங்களைச் செய்தியாக்கியிருந்தார். அவரது செய்தியின் தமிழ் வடிவம். அமெரிக்கா வியட்னாம் வீது நேபாம் குண்டுகளை வீசி அப்பகுதிகளை அழித்தபின் கிடந்த அகோரங்களை ஒத்த காட்சிகளை ஒடுங்கி நீண்ட தீவான மன்னாரில் நான் கண்டேன். கண்ணுக்கெட்டிய பகுதியெங்கும் எரிந்து, கருகிக் கிடந்த பனைமரங்களும், தென்னை மரங்களும் அகோரங்களின் அளவைச் சொல்லி நின்றன. மேலும் பல மரங்களை வெட்டிச் சாய்த்திருந்தார்கள். இலங்கையரசாங்கத்தைக் கேட்டால், பனைமரங்களை இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் அழித்துத் துப்பரவு செய்கிறோம் என்று காரணம் சொல்கிறது. ஆனால், மன்னாரில் வாழும் தமிழ் மக்களைக் கேட்டாலோ, இப்பகுதியில் சகட்டுமேனிக்குப் படுகொலைகளிலும், படுபாதகச் செயல்களிலும் ஈடுபட்டு வரும் அரச இராணுவம், புலிகளின் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள இப்பகுதியெங்கிலும் மரங்களை எரித்தும், வெட்டி வீழ்த்தியும் சுடுகாடாக்கி வருகிறது. வனாந்தரமாக்கிவிடப்பட்டிருக்கும் எமது நிலங்களிலிருந்து மண்ணை வாரி இழுத்துக்கொண்டுபோய் மண் அரண்களை அமைத்துப் பதுங்கிக் கொள்கிறது என்று கூறுகிறார்கள். இந்தியாவிலிருந்து வெறும் 22 மைல்கள் தொலைவிலேயே மன்னார் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில்த்தான் ஆறு பிரிவினைவாதப் போராளி அமைப்புக்களின் பயிற்சி முகாம்கள் அமைந்திருக்கின்றன. இந்த தீவில், குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்கில் நம்பிக்கை என்பது மருந்திற்கும் கிடைப்பதில்லை. பிரிவினை கோரிப் போராடும் பையன்களுக்கும், ஒழுக்கமற்ற இலங்கை இராணுவத்திற்குமிடையிலான மோதல்கள் முழு அளவிலான சிவில் யுத்தமாக மாறியிருக்கின்றது. தமிழ் மக்கள் இங்கு தொடர்ச்சியான அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். மார்கழி 4 முதல் தை 27 வரையான இரு மாத காலத்தில் மட்டும் குறைந்தது 160 தமிழ் மக்களை இராணுவம் கொலை செய்திருக்கிறது. ஏறக்குறைய நூறு வீதம் சிங்களவர்களைக் கொண்ட இராணுவம் பிரதிநிதித்துவம் செய்யும் நாட்டின் 75 வீதமான சிங்கள மக்களுக்கும், இந்து மற்றும் கிறீஸ்த்தவ மதங்களைப் பின்பற்றும் 20 வீதம் சனத்தொகையினைக் கொண்ட தமிழ் மக்களுக்கும் இடையிலான இனரீதியான பிளவென்பது மீளமுடியாத ஆளத்திற்குச் சென்றுவிட்டது போலத் தெரிகிறது. மன்னார் நோக்கிச் செல்லும் வீதியின் ஓரத்தில் காணப்பட்ட எல்லா வீடுகளும், கடைகளும் தீயில் கருகிப் போய்க் கிடக்கின்றன. பாழடைந்துபோன நிலையில் ஒரு வைத்தியசாலையும் கிடக்கிறது. வீதிகளில் அதீத பதற்றத்துடனும், அகம்பாவத்துடனும் நிற்கும் இராணுவத்தினர் வீதியில் வரும் பஸ்களையும், ஏனைய வாகனங்களையும் மறித்து போராளிகளுக்கான ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று சல்லடை போடுகிறார்கள். மார்கழி 4 ஆம் திகதி இராணுவத்தால் நடத்தப்பட்ட படுகொலையின் ஆதாரங்கள் எம்மைச் சுற்றி எங்கும் கிடக்கின்றன. அதிகாலை வேளையில் மூன்று இராணுவ வாகனங்கள் கண்ணிவெடியில் அகப்பட்டதைத் தொடர்ந்து இப்படுகொலைகள் ஆரம்பித்தன. இத்தாக்குதலில் ஒரு படைவீரர் கொல்லப்பட்ட இன்னும் மூன்று படைவீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து சுமார் 30 பேர் அடங்கிய இராணுவ அணியொன்று மன்னார் பகுதியெங்கும் படுகொலைகளில் இறங்கியது. ஆறு மணித்தியாலங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட அட்டூழியங்களில் முதலாவதாக அவர்கள் மன்னார் மத்திய வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தினார்கள். வீதியால் வந்துகொண்டிருந்த வாகனங்களை மறித்து உள்ளிருந்தோரை வெளியே இழுத்துச் சுட்டுக் கொன்றார்கள். தபால் நிலையத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களை வரிசையில் நிற்கவைத்துத் துப்பாக்கியால் சுட்டு, அவர்களில் எண்மரைக் கொலை செய்தார்கள். வயல்களில் வேலைசெய்துகொண்டிருந்த மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அருகிலிருந்த கன்னியாஸ்த்திரிகள் மடத்தினுள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களிடமிருந்த கைக்கடிகாரங்கள், தங்கச் சிலுவைகள், சங்கிலிகள் என்பவற்றை அறுத்துச் சென்றார்கள். அன்று மட்டுமே நடத்தப்பட்ட படுகொலைகளில் 150 தமிழர்களை இராணுவம் கொன்றது. இன்னும் 20 தமிழர்களை தமது முகாம்களுக்கு இழுத்துச் சென்றது. இதுவரை அவர்கள் குறித்து எந்தச் செய்தியும் வெளியே தெரியவில்லை.
  5. பிற்சேர்க்கை: அநுராதபுரம் பெளத்த வழிபாட்டுத் தலம் மீதான புலிகளின் தாக்குதல் பெருமளவு அவப்பெயரினை எமக்கு ஏற்படுத்தியது. இலங்கையரசுகள் ஆண்டாண்டுகளாக சர்வதேசத்தில் எம்மைப் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்யவும், எமக்கெதிரான இனவழிப்பு யுத்தத்திற்கு பலம் சேர்க்கவும் இதனைப் பெருமளவில் பாவித்து வந்தன. ஆனால், இத்தாக்குதலுக்கான மூல காரணம் என்னவென்பதை சர்வதேசமோ அல்லது விமர்சகர்களோ ஒருபோதும் உணர்ந்துகொள்ளவில்லை. எம்மில்ப் பலரும் இதுகுறித்த விமர்சன‌ங்களைக் கொண்டிருக்கிறோம். ஆகவே. இத்தாக்குதலுக்கான முகாந்திரங்களை விளக்க இதனைச் சந்தர்ப்பமாகப் பாவிக்கிறேன். கீழ்வரும் சம்பவங்கள் அநுராதபுரத் தாக்குதலுக்கு முன்னர் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றவை. அதனைப் படித்தவாறே அநுராதபுரத் தாக்குதல் குறித்துப் பார்க்கலாம்.
  6. இதை சரியென்று என்னால் உணரக் கஷ்ட்டமாக இருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றால், அமெரிக்கா இலங்கையில் தலையீடு செய்தது ஜெயவர்த்தனவின் முதலாவது பதவிக்காலத்தின்போது. 80 களின் ஆரம்பத்தில். இரணவில வொயிஸ் ஒப் அமெரிக்கா, திருகோணமலைத் துறைமுகம் மீதான அதிகாரம் என்று இரு பிரதான நோக்கங்களுக்காகவே இலங்கையில் அமெரிக்கா தலையிட்டது. இதற்கு முக்கியமான காரணம் அப்போதிருந்த இந்திய அமெரிக்க பூசல். ஆகவே, இந்தியாவை வேவு பார்க்கவே இலங்கையில் அமெரிக்கா கால்பதித்தது. அடுத்ததாக, இந்தியாவினால் பயிற்றப்பட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களை அடக்குவதற்கு அமெரிக்கா தானே முன்வந்து உதவியது. சோசலிசம் பேசிய சில போராளி அமைப்புக்களின் செயற்பாடும், அலன் தம்பதிகளைக் கடத்திச் சென்று இந்தியாவைப் பின்புலமாக வைத்து பத்மநாபா பேரம் பேசியதும் எம்மைச் சோசலிசவாதிகள் என்று அமெரிக்கா நம்பக் காரணமாகியது. உண்மையில் அமெரிக்கா போராளிகளை அணுகியது என்பதை நான் அறியேன், இப்படிக் கூறுவதால் அது நடக்கவில்லை என்று அர்த்தமில்லை, நான் அறியவில்லை, அவ்வளவுதான். மற்றும்படி, அமெரிக்க மாநிலம் ஒன்று எமக்கான அங்கீகாரத்தைத் தந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதனால் கிடைத்த பலனும் எதுவுமில்லை. அமெரிக்கா தனது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்கிறது. ஆட்சியதிகாரத்தில் எவர் இருக்கின்றாரோ அல்லது எவரது கைகளில் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களைக்கொண்டே தனது நலன்களை அடைய முனையும். அதற்காக அந்த ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவுதான் ஜனநாயக விரோதிகளாக இருந்தாலும் அமெரிக்கா உதவும். இது உண்மைதான். நாம் செய்த சில விடயங்கள் இதன் அடிப்படியிலேயே அமைந்திருந்தன. இல்லை. அதிகாரமும், ஆட்சியும் எம்மிடம் இருந்தால், நாம் அமெரிக்காவின் நண்பர்கள்.
  7. ஜெயாரின் கடிதத்தை புறக்கணித்த ரஜீவும், வடக்குக் கிழக்கில் போராளிகள் தீவிரப்படுத்திய தாக்குதல்களும் ஆனால், ரஜீவுக்கு ஜெயார் அனுப்பிய இக்கடிதம், பங்குனி 1 ஆம் திகதி அவர் அனுப்பிய கடிதத்திற்கு ஒத்த பயனைக் கொடுக்கவில்லை. பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள், தமிழ்நாட்டிற்கு வந்து குவிந்த அகதிகள், பேச்சுவார்த்தைக்கான அட்டவணை குறித்து ரோ மற்றும் இந்திய உயர்ஸ்த்தானிகருடனான பேச்சுக்களின்போது ஜெயவர்த்தனவும், லலித்தும் காட்டிய அசமந்தம் ஆகியவை ஜெயார் மீது ரஜீவ் காந்தி வைத்திருந்த மதிப்பினை மழுங்கடிக்கத் தொடங்கியிருந்தன. இராணுவ முஸ்தீபுகளைக் கைவிட்டு விட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீவொன்றினை எட்டுவதற்கான அழுத்தத்தினை ஜெயார் மீது கொடுக்க ரோ முயன்றுகொண்டிருந்தது. அதன்படி, வைகாசி 10 ஆம் திகதி, ரோவின் கட்டளையில் கொக்காவிலில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைத் தொலைக்காட்சிச் சேவையின் பரிவர்த்தனைக் கோபுரத்தின் மீதும், அருகிலிருந்த ராணுவ முகாம் மீதும் டெலோ அமைப்புத் தாக்குதல் நடத்தியது. நான்கு நாட்கள் கழித்து புலிகள் நடத்திய தாக்குதலில் வழிபாட்டிற்குச் சென்றவர்கள் உட்பட 148 சிங்களவர்கள் அவர்களின் புனித நகரான அநுராதபுரத்தில் கொல்லப்பட்டனர். கொக்காவில் தாக்குதலில் ஒரு டசின் இராணுவத்தினரை டெலோ போராளிகள் கொன்றார்கள். ஆனால், அவர்கள் தரப்பிலும் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள். இராணுவத்தினரின் கனரக ஆயுதப் பாவனையிலேயே டெலோவின் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இந்தியா தமக்கு வழங்கியிருக்கும் ஆயுதங்களின் ஊடாக விடுதலையினை வென்றெடுப்பது சாத்தியம் இல்லை என்பதை போராளி அமைப்புக்கள் உணரத் தலைப்பட்டன. ஆனால், புலிகள் இயக்கம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே, தமக்கு வழங்கும் ஆயுதங்களின் மூலம் தமது இராணுவ வல்லமையினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்தியா முனையும் என்பதை பிரபாகரன் நன்கு உணர்ந்தே இருந்தார். ஆகவேதான் அமெரிக்காவிடமிருந்தும், இங்கிலாந்திடமிருந்தும் இலங்கையரசு தருவித்த ஆயுதங்களுக்கு நிகரான அல்லது அவற்றை விடவும் திறமையான ஆயுதங்களைத் தனது அமைப்பிற்காக அவர் தருவித்துக்கொண்டார். தலைவருடன் மன்னார்த் தளபதி விக்டர் மறுநாள் மூன்று வெவ்வேறு இடங்களில் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தினர். வைகாசி 11 ஆம் திகதி விக்டர் தலைமையில் புலிகள் மன்னார் பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி அதனை நிர்மூலம் செய்தனர். பல பொலீஸார் கொல்லப்பட்டதுடன் பெருமளவு ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் தானியங்கித் துப்பாக்கிகளும், உப இயந்திரத் துப்பாக்கிகளும் அடங்கும். வைகாசி 12 ஆம் திகதி, சந்தோசம் தலைமையிலான புலிகளின் அணியொன்று திருகோணமலையில் நடத்திய தாக்குதலில் ஜீப்பொன்றில் பயணம் செய்த நான்கு பொலீஸார் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குள்ளான பொலீஸாருக்கு உதவிக்கு வந்த விசேட அதிரடிப்படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் மேலும் பத்து விசேட பொலீஸ் கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். அதேநாள் யாழ்ப்பாண மாவட்ட‌த்தில் புலிகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் மேலும் 13 இராணுவத்தினல் பலியானார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கில் அன்று நிலவிய சூழ்நிலையினை இந்தியா டுடே பின்வருமாறு பதிவுசெய்திருந்தது, "இலையுதிர்கால இலைகள் போல இலங்கை நடுங்கிக் கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்குக் கிழக்கில் நீளத்திற்கும், அகலத்திற்கும் இலங்கை இராணுவத்தை போராளிகள் தொடர்ச்சியாகத் துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். கொழும்பை மண்டியிட வைக்க மிகவும் திட்டமிட்டு அவர்கள் செயற்படுவதுபோலத் தெரிகிறது".
  8. அதனால்த்தானே பேச்சுவார்த்தைக்குப் புலிகள் வந்தார்கள். ஆனால், நாம் கேட்ட எதனையும் சர்வதேசம் கொடுக்க விருபவில்லை, இடைக்கால நிர்வாக அலகைக் கூட. அதேவேளை அமெரிக்காவே முன்னின்று சர்வதேச வலைப்பின்னலை பின்னியது. இலங்கை அரச படைகளைப் பலப்படுத்த முன்னின்று உதவியது. புலிகளை சர்வதேசமெங்கும் தடைசெய்து செயலிழக்கப் பண்ணியது. உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகள் பங்கேற்பதையே தடை செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகளைத் தடை செய்தது. இவை யாவுமே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதுதானே? சமபல நிலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இறுதியில், புலிகள் தரமிறக்கப்பட்டு, வேண்டப்படாதவர்களாக, தீண்டப்படாதவர்களாக மாற்றப்படும்வரை நடந்தது. மீதி நீங்களும் நானும் அறிந்தது. எமக்கான உண்மையான தீர்வில் சர்வதேசத்திற்கு அக்கறையிருந்தால் இன்று அதனைத் தரலாம், ஆனால் செய்ய மாட்டார்கள். அது எப்போதுமே அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை.
  9. ரஜீவ் காந்திக்கு ஜெயார் அனுப்பிய கடிதம், காங்கிரஸ் தலைவருக்கு, காங்கிரஸ் கட்சியின் நூறாவது நிறைவுநாளை நீங்கள் கொண்டாடும் இத்தருணத்தில், இக்கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1940 ஆம் ஆண்டு பீகாரில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின் ராம்கத் மாநாட்டில் நானும் ஒரு இளைஞனாகக் கலந்துகொண்டிருந்தேன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட இறுதி நிகழ்வு அது. இந்தியக் காங்கிரஸ் வழியில் நாமும் எமது சுதந்திரத்தை அடைந்துகொள்ள இலங்கை தேசிய காங்கிரஸ் எனும் அமைப்பின் சார்பில் நாங்கள் அன்று கலந்துகொண்டிருந்தோம். இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அனுபவங்களைக் கற்றுத் தெளிந்துகொள்ளுமாறு எங்களை அன்றைய தலைவர் மெளலானா ஆசாத், மகாத்மா காந்தி மற்றும் பண்டித் நேரு ஆகியோர் அழைத்திருந்தனர். இருவருடங்கள் கழித்து 1942 ஆம் ஆண்டு மும்பாயில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய உயர்குழுக் கூட்டத்திலும் நான் கலந்துகொண்டிருந்தேன். அக்கூட்டத்திலேயே மகாத்மா காந்தி, "இந்தியாவை விட்டு வெளியேறு" எனும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அப்போராட்டம் இந்தியா சுதந்திரம் அடையும்வரையில் தொடர்ந்தும் நடந்து வந்தது. அப்போராட்டத்தினை ஒத்த போராட்டம் ஒன்றினூடாகவே எமது நாட்டின் சுதந்திரத்தையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்று உறுதிபூண்டோம். உங்களின் மிகப்பெரும் தலைவர் மகாத்மா காந்தி புத்தரின் போதனையான அகிம்சையில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தவர். உங்களது நாட்டின் அயலில் வாழும் நாம் அதே புத்தரின் போதனைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டு எமது வாழ்க்கையினை முன்னெடுத்து வருகிறோம். புத்தரின் போதனைகள் ஊடாக உங்கள் நாடு அடைந்திருக்கும் மகத்தான வெற்றிகளை நாம் எப்போதும் பெருமையுடன் நோக்குகிறோம். ஆகவேதான், பண்டித் நேருவின் பேரனான உங்களுக்கு இந்நேரத்தில் நான் அனுப்பும் வாழ்த்து சரியான சந்தர்ப்பத்தில் அனுப்பப்பட்டதாக அமைகிறது. உங்களின் தலைமையின் கீழ், இந்தியாவும், அதனைச் சுற்றியுள்ள மக்களும் என்றுமே நலமுடன் வாழ்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் எனது கடிதத்தினை நிறைவு செய்கிறேன். ஜே.ஆர்.ஜெயவர்தன‌ ஜனாதிபதி, இலங்கை சோசலிசக் குடியரசு
  10. இல்லை வலவன், அப்படி நினைத்து எழுதவில்லை. உங்களின் தேசியத்தின் மீதான பற்று நான் அறியாதது அல்ல. பரிசில் இளைஞர்கள் நடந்துகொண்டவிதம் உணர்வு சம்பந்தப்பட்டது. இயல்பாகவே வரும் கோபத்தினால் உந்தப்பட்டது. அவர்களைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று நீங்கள் விழித்திருக்கத் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. ஏனென்றால், நீங்கள், நான், நாம் எல்லாமே புலிகளின் ஆதரவாளர்கள் தான். ஏற்றுக்கொள்கிறேன், முழுமையாக.
  11. எமது விடுதலை எம்மால் மட்டுமே சாத்தியமாகும். அதனை 2009 வரை அடைய முடியாமல் அழித்தவர்களும், இன்றுவரை எம்மால் எந்த முயற்சியையும் எடுக்கவிடாமால் தடுப்பவர்களும் அவர்களே.
  12. இப்படியொரு தனிப்பட்ட குழுவினர் இருக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் யார்? உங்களை இந்த "புலிகளின் ஆதரவாளர்கள்" குழுவினருடன் நீங்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை போலத் தெரிகிறது. தனது இனத்தின்மீதும், விடுதலைக்கான போராட்டத்தின்மீதும், தாயின்மீதும் ஒருத்தி வசைபாடும்போது இயல்பாக எழும் கோபம் "புலிகளின் ஆதரவாளனாக" இருந்தால் மட்டுமே தான் வரவேண்டுமா?
  13. இராணுவத்தின் பழிவாங்கற்படுகொலைகளும், போராளிகளின் எதிர்வினையும் தம்மீதான தாக்குதல்களுக்கு இராணுவத்தினரிடமிருந்த ஒரே பதில் பொதுமக்கள மீது தாக்குதல் நடத்துவதுதான். இது மேலும் மேலும் தமிழ்மக்களை இந்தியாவிற்குத் தப்பிப் போக உந்தியது. பொதுமக்கள் மீதான தாக்குதல்களும், அதனால் ஏற்படுத்தப்பட்ட அகதிகள் பிரச்சினையும் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலைமையினை ஏற்படுத்தியது. இவ்விரு பிரச்சினைகளும் வைகாசி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்கப்பட்டன. கீழ்ச்சபையில் பேசிய பிரதமர் ரஜீவ் பின்வருமாறு பதிலளித்தார். "இலங்கைத் தமிழர்கள் குறித்து நான் கவலைப்படுகிறோம். இது வெறுமனே தென்னிந்திய மக்களின் கவலை மட்டுமல்ல, மொத்த இந்தியாவினதும் கவலையாகும். இங்கே அகதிகளாகத் தஞ்சம் கோரி வந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தமது நாட்டிற்குப் பாதுகாப்பாகத் திரும்பி, கெளரவத்துடனும், சுய மரியாதையுடனும், சுதந்திரத்துடனும், தமது அன்றாடச் செயற்பாடுகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். இதுகுறித்த எமது நிலைப்பாட்டினை பலமுறை நாம் எடுத்துக் கூறியிருக்கிறோம்" ராஜ்ய சபாவில் பேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குர்ஷிட் அலாம் கான், "இலங்கையில் நடைபெற்று வருவது மனித நேயத்திற்கு முரணானது, குரூரமானது, வருந்தத்தக்கது" என்று கடுமையான தொனியில் பேசினார். மேலும், தமிழ்ப் பிரதேசங்களில் "இராணுவத்தினரை அகற்றிவிட்டு சாதாரண பொலீஸாரைக் கடமையில் ஈடுபடுத்த இலங்கை அரசாங்கம் முயல வேண்டும்" என்றும் கூறினார். அலாம் கானின் ராஜ்ய சபாப் பேச்சு ஜெயவர்த்தனவைச் சினங்கொள்ள வைத்திருந்தது. ஆகவே, தனது அரச ஊடகங்களைக் கொண்டு அலாம் மீது கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைக்கத் தொடங்கினார். ஆனால், ரூபவாகினி, லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் இயக்குநர்களைச் சந்தித்த ஜெயார், அவர்களது விமர்சனங்களின்போது ரஜீவ் காந்தியைத் தாக்குவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பணித்தார். அனுபவ முதிர்ச்சி அற்றவரான ரஜீவுடன் நட்புப் பாராட்டுவதன் மூலம் தமது திட்டங்களை இலகுவாக நடைமுறைப்படுத்திவிடலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் எண்ணினார்கள். ஆனாலும், பார்த்தசாரதியின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட சவுத் புளொக்கின் தமிழர் சார்பு நிலைப்பட்டிற்கெதிரான விமர்சனங்களைத் தொடர்ந்தும் கைக்கொள்ள ஜெயார் விரும்பினார். ஐக்கியதேசியக் கட்சியின் திட்டமிடல்ப் பிரிவு இந்தியாவுக்கெதிரான பிரச்சாரத்தில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கியது. தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் தொடர்ச்சியான பழிவாங்கற் தாக்குதல்களும், இந்தியாவுக்கெதிராக அரச ஊடகங்களினால் முடுக்கிவிடப்பட்டிருந்த கடுமையான பிரச்சாரங்களும் போராளி அமைப்புக்களின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதுடன், அநுராதபுரம் போன்ற இடங்களில் தாக்குதல்களை முன்னெடுக்கவும் உந்தித் தள்ளியிருந்தது என்று கூறலாம். வைகாசி 4 ஆம் திகதி (1985), ஊர்காவற்றுரையில் அமைந்திருந்த கடற்படை முகாம் மீதும், குருநகர் இராணுவ முகாம் மீதும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புத் தாக்குதல் நடத்தியிருந்தது.கடற்படை முகாம் மீதான தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் திருகோணமலை மாவட்டத் தளபதி மோட்டர் உந்துகணையினை வடிவமைத்திருந்தார். அவர் ஏவிய மோட்டார்க் குண்டுகள் கடற்படை முகாமினுள் வீழ்ந்து வெடித்தபோது முகாமினுள் இருந்த கடற்படையினரிடத்-தில் அச்சமும், பதற்றமும் பற்றிக்கொண்டது. மோட்டார்த்தாக்குதலையடுத்து கடற்படையினர் முகாமின் பின்புறத்திற்குச் சென்று நிலையெடுத்துக் கொண்டனர். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கவசவாகனமொன்றை ஓட்டியவாறே ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தாக்குதற்பிரிவு முகாமினுள் நுழைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சின்னவன் மோட்டார் செலுத்தியினுள் நுழைத்துக்கொண்டிருந்த மோட்டார்க் குண்டு உள்ளேயே வெடித்ததனால், அவர் அவ்விடத்திலேயே உடல் சிதறி மரணமானார். இதனைக் கண்ணுற்ற கடற்படையினர், முன்னேறி வந்து தாக்குதலை ஆரம்பித்தனர். கடற்படையினரின் தாக்குதலில் 22 ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் கொல்லப்பட, மீதமானோர் தாக்குதலைக் கைவிட்டு விட்டுப் பின்வாங்கிச் சென்றனர். தாக்குதல் அணியின் முக்கிய தளபதிகளான வேலு மற்றும் கணேஷ் ஆகியோரும் கொல்லப்பட்ட போராளிகளில் அடங்குவர். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு இத்தாக்குதல் முயற்சி பெரும் பின்னடை-வாக மாறியது. கடற்படை முகாம் மீதான தாக்குதலின்போது குருநகர் இராணுவ முகாமிலிருந்து உதவிகள் கிடைப்பதைத் தடுக்கும் நோக்குடனேயே குருநகர் முகாம் மீதான திசைதிருப்பும் தாக்குதலை ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இன்னொரு அணி மேற்கொண்டது. கிட்டுவும் போராளிகளும் யாழ்ப்பாணம் 1987 வைகாசி 7 ஆம் திகதி வல்வெட்டித்துறை இராணுவ முகாமைத் தாக்கிய புலிகள் ஐந்து இராணுவத்தினரைக் கொன்றனர். இரு நாட்கள் கழித்து, வைகாசி 9 ஆம் திகதி இராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு மேஜரும் இன்னும் ஐந்து இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். தம்மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்க பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். கரையோரக் கிராமங்களைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், வீடு வீடாகச் சென்று இளைஞர்கள் அனைவரையும் இழுத்துச் சென்றனர். கைகள் பின்னால் கட்டப்பட்ட இளைஞர்களில் பல பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். பன்னிரு இளைஞர்களை பொதுக்கிணறு ஒன்றின் முன்னால் வரிசையில் நிற்கவைத்த இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். வீடுகளில் இருந்த இளைஞர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். ஆனால், அன்று நடந்த படுகொலைகளில் மிகவும் கொடூரமான கொலைகள் ஊரணி எனும் வல்வெட்டித்துறையின் சிற்றூரில் நடைபெற்றது. சுமார் 25 இளைஞர்களை இழுத்துச் சென்ற இராணுவத்தினர் அவர்கள் அனைவரையும் சனசமூக நிலைய அறையொன்றினுள் அடைத்து அவ்வறையினைக் குண்டுவைத்துத் தகர்த்தபோது உள்ளிருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். அன்று மட்டும் கொல்ல-ப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 75. பொதுமக்கள் மீதான படுகொலைகள் பிரபாகரனையும், வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் மிகுந்த கோபத்திற்குள் ஆழ்த்தியிருந்தது. இராணுவத் தீர்வில் சென்றுகொண்டிருக்கும் ஜெயாரை சமாதான வழிகளுக்குத் திரும்பவைத்து, பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான அழுத்தத்தினைக் கொடுக்கவேண்டியதன் அவசியத்தை இப்படுகொலைகள் குறித்து நிற்பதாக ரஜீவின் அரசு கூறியது. தனது இராணுவம் தமிழர்களைப் படுகொலை செய்து கொண்டு வந்தபோது, தனது குள்ளநரித்தனமான அரசியலைத் தொடர்ச்சியாகச் செய்துவந்த ஜெயார், புது தில்லியின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டினைப் பலவீனமாக்கியும், அதேவேளை ரஜீவுடன் நட்புப் பாராட்டியும் நடந்துவந்தார். இந்தியக் கொங்கிரஸ் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்கட்சியின் தலைவராகிய ரஜீவ் காந்திக்கு கடிதம் ஒன்றினை ஜெயார் எழுதினார்.
  14. மேற்குலகு என்பவர்கள் யார்? அவர்கள் இதுவரை எங்களுக்காகச் செய்தது என்ன? 1. 80 களில் இருந்து எம்மைச் சோசலிசவாதிகள் என்று அழைத்து எமது போராட்டத்தை அழிக்கத் துணைபோனவர்கள். 2. எமக்கெதிரான இனக்கொலைக்கு 80 களின் ஆரம்பத்திலிருந்தே ஆயுதமும், பயிற்சியும், ஆலோசனையும், கூலிப்படைகளும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள். 3. உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாம் மேற்கொண்ட உயிர்ப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று அழைத்து உலகெங்கும் எம்மை முடக்கியவர்கள். 4. 2009 வரை இனக்கொலைக்கான சகல உதவிகளையும் செய்து, தமிழர்களின் போராட்டம் முற்றான அழிவையும், தமிழ் மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்படுவதையும் உறுதிப்படுத்தி, தமிழர்களின் இறையாண்மையினை தமது பிராந்திய நலன்களுக்காகவும், சர்வதேச நலன்களுக்காகவும் விருப்பத்துடனேயே எப்பம் விட்டவர்கள். 5. இனக்கொலை முடிவிற்கு வந்தபின்னரும் தமது நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக இனக்கொலையினையும் போர்க்குற்றங்களையும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதைத் தடுத்தும் அல்லது அவற்றை மிகவும் பலவீனமாக்கி, ஈற்றில் நீர்த்துப் போகச் செய்து போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள். 6. இன்றுவரை எமக்கு நடக்கும் அநீதிகளும், எம்மீதான அடக்குமுறையும், எம்மீதான திட்டமிட்ட இனழிப்பும் நடப்பது நன்கு தெரிந்தும், அதனை அமோதித்து வருபவர்கள். 7. எம்மைப்போன்றே விடுதலைக்காகப் போரிடும் இனங்கள் மீதான அடக்குமுறைகளை, படுகொலைகளை ஆதரித்து, உதவிசெய்து, சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி வருபவர்கள். ஆக, இவர்களிடமிருந்துதான் நாம் நற்சான்றிதழ் பெறக் காத்திருக்கிறோம். நற்சான்றிதழ் கிடைத்தவுடன், எமக்கான விடிவும், சுதந்திரமும், எமது தாயகத்தின் விடுதலையும் எமக்குத் தங்கத் தட்டில் கொண்டுவந்து தரப்படும். பிணந்திண்ணிப் பேய்கள். நீங்கள் எழுதுங்கள். உங்கள் உணர்வுகளை அப்படியே எழுதுங்கள், மேற்குலகிடம் இறைஞ்சும் ஜனநாயக மேதாவிகளின் பிதற்றல்களை ஓரத்தில் போட்டுவிட்டு எழுதுங்கள். எமக்கான விடுதலையும், மீட்சியும் எமது கரங்களில் இருந்தே வரவேண்டும். மேற்குலகு ஒன்றும் இறைவர்கள் அல்ல, மிக மோசமான பிணந்திண்ணிக் கழுகுகள். மேற்குலக அக்கிரமப் பிசாசுகளின் விருப்பங்களும், எண்ணங்களும், நோக்கங்களுமே அவர்களின் பணத்தினால் நடத்தப்படும் ஊடகங்களில் வெளிவருகின்றன. சர்வதேச ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டே தமது படுகொலைகளை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆகவே, இவர்களின் ஊடகங்களில் நாம் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டால், நாம் அவர்களுக்கும், அவர்களின் நலன்களுக்கும் எதிரானவர்கள் என்று பொருள். ஆகவே, தொடர்ந்து நடவுங்கள். மேற்குலக ஜனநாயகப் பிணந்திண்ணிகளின் அலோசனைகளை அப்படியே தனது பத்திரிகைக் கட்டுரையில் வரையும், எமது வாழ்தலுக்கான போராட்டம்பற்றிய எதுவித தெளிவும் அற்ற ஒருவன் எழுதும் கருத்துக்களை நாம் பொருட்படுத்த‌த் தேவையில்லை.
  15. வணக்கம் நொச்சி, இங்கு சேரமான் என்ற பெயரில் பேசுவதும், துவாரகா உயிருடன் இருக்கிறார் என்று பேசும் சேரமானும் ஒன்றா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், இந்தக் காணொளியில் இவர் குறிப்பிடும் விநாயகம் என்கிற புலிகளின் முன்னாள் புலநாய்வுப் போராளி இராணுவப் புலநாய்வுத்துறையினால் வழிநடத்தப்படுவதாக இவர் கூறுகிறார். ஆனால், விநாயகம் என்பவர் இன்றும் தேசியத்தின் பால் நிற்பதாகவே வேறு செய்திகள் கூறுகின்றன. விநாயகம் மீது சேறடிக்கவே சேரமான் இப்பெண்ணையும் விநாயகத்துடன் இணைத்துப் பேசுவதாக எனக்குப் படுகிறது. அதாவது விநாயகமும் இராணுவ உளவாளி, இவளும் இராணுவ உளவாளி எனும் கருத்தினூடாக. இப்பெண் இராணுவத்துடன் பணிபுரிபவளாக இருக்கலாம், ஆனால் சேரமான் சந்தில சிந்துபாட விநாயகத்தையும் இதற்குள் இழுத்து விட்டிருக்கிறார்.
  16. அண்ணை, நாங்கள் கண்ணியத்தோட நடந்துகொண்டு சாதிச்ச சில விடயங்களைப் பாருங்கோ, 1. 76 வருட கால இரண்டாம் தர குடிமக்கள் என்கிற உன்னத நிலை 2. 76 வருட கால அடக்குமுறையும், அடிமைத்தனமும். 3. தொடர்ச்சியாக அரசாங்கத்தாலும் அதன் கருவிகளாலும் உரிமை கேட்டதற்காக எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பழிவாங்கற் படுகொலைகள். 4. எமது தாயகத்தின் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பும், பெளத்த சிங்கள மயமாக்கலும். 5. பயங்கரவாதிகள் என்கிற நாமம். 6. 2009 இல் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலிகொண்ட திட்டமிட்ட இனவழிப்பு கண்ணியத்தோடு நடந்ததற்கே இந்தளவு சாதனைகள் என்றால், கண்ணியமில்லாமல் நடந்துகொண்டால் என்ன நடக்கும்? எமது அடையாளமும் இல்லாமற் போய்விடுமோ? ஆகவே, சத்தம் போடாமல் நடக்கிறதைப் பாத்துக்கொண்டு பேசாமல் இருங்கோ எண்டு சொல்லுறன், விளங்குதே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.