Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியமைக்க அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஃபிரைடு ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பால் தேநீர் மற்றும் பிளேன் டீ ஆகியவற்றின் விலைகளும் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2026/1470523
  2. துபாய்க்கு அருகே பிரம்மாண்டமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்! துபாய் கடற்பரப்பில் திங்களன்று (30) மசகு எண்ணெய் நிரம்பியிருந்த ஒரு கப்பலை ஈரான் தாக்கித் தீ வைத்துக் கொளுத்தியது. இந்நிலையில் ஈரான், ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், அதன் எரிசக்தி ஆலைகளையும் எண்ணெய் கிணறுகளையும் அமெரிக்கா அழித்துவிடும் என்று ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, ஹார்முஸ் வளைகுடா மற்றும் நீரிணையில் ஏவுகணைகள் அல்லது வெடிகுண்டு வீசும் வான் மற்றும் கடல் ட்ரோன்கள் மூலம் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் அண்மைய நிகழ்வு இதுவாகும். ஒரு மாதத்துக்கும் காலமாக நீடித்து வரும் இந்த மோதல், மத்திய கிழக்கு முழுவதும் பரவி, ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து, உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய விலையில் 200 மில்லியன் டொலருக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றிச் செல்லக்கூடிய அந்த எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதல் குறித்து குவைத்தின் அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் சிறிது நேரம் உயர்ந்தன. சேதத்தை மதிப்பிடும் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருவதாகவும், எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கப்பலின் உரிமையாளரான குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் எச்சரித்தது. பின்னர், துபாயில் உள்ள அதிகாரிகள், எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவித்தனர். எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். எண்ணெய் மற்றும் எரிபொருள் விலையேற்றம், அமெரிக்கக் குடும்பங்களின் நிதிநிலையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரம், எரிசக்தி விலைகளைக் குறைத்து அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதாக உறுதியளித்திருந்த ட்ரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சிக்கு நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு அரசியல் தலைவலியாகவும் மாறியுள்ளது. உலகளாவிய விநியோக இறுக்கம் அமெரிக்க மசகு எண்ணெய் விலையை ஒரு பீப்பாயக்கு 101 டொலருக்கும் மேல் உயர்த்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் தேசிய சராசரி சில்லறை பெட்ரோல் விலை, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக திங்களன்று ஒரு கேலனுக்கு 4 டொலரை தாண்டியது என விலை கண்காணிப்பு சேவையான GasBuddy-யின் தரவுகள் காட்டின. இரு தரப்புத் தாக்குதல்களும் தணியும் அறிகுறிகள் தென்படாத நிலையில், ஒரு பரந்த மோதல் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. அண்மைய நாட்களில், ஈரான் ஆதரவு ஹவுத்திகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் வீசி போரில் நுழைந்தனர். மேலும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை துருக்கிய வான்வெளிக்குள் நுழைந்ததாகவும், பின்னர் நேட்டோவின் வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மூன்று ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க இராணுவத்தின் உயரடுக்கு 82 ஆவது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மத்திய கிழக்குக்கு வரத் தொடங்கியுள்ளனர் என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் திங்களன்று ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்தனர். தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் அதே வேளையில், ஈரானிய எல்லைக்குள் படைகளை நிலைநிறுத்துவது உட்பட ட்ரம்பின் விருப்பங்களை விரிவுபடுத்தும் ஒரு வலுவூட்டலின் பகுதியாக இது உள்ளது. உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் குறுகிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு அவர் நிர்ணயித்திருந்த முந்தைய காலக்கெடுவை நீட்டித்த பின்னர், கடந்த வாரம் அவர் நிர்ணயித்த ஏப்ரல் 6 ஆம் திகதி காலக்கெடுவுக்குள் தெஹ்ரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட ட்ரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் பின்னர் கூறினார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக லெவிட் கூறினார். மேலும், தெஹ்ரான் பகிரங்கமாகக் கூறுவதற்கும், அமெரிக்க அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் கூறுவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நீரிணை பெரும்பாலும் மூடப்பட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாகவும், அதை மீண்டும் திறப்பதற்கான சிக்கலான நடவடிக்கையை பிற்காலத்தில் மேற்கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பின்னர் செய்தி வெளியிட்டது. பாகிஸ்தான், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இடைத்தரகர்கள் மூலம் அமெரிக்காவின் சமாதான முன்மொழிவுகளைப் பெற்றதாக ஈரான் திங்கள்கிழமை முன்னதாகத் தெரிவித்தது. போரின் செலவை ஏற்குமாறு அரபு நாடுகளைக் கேட்பது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. ட்ரம்ப் நிர்வாகம் போருக்காக மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதியைக் கோரியுள்ளது. புதிய செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அமெரிக்க காங்கிரஸில் இந்தக் கோரிக்கை கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. https://athavannews.com/2026/1470499
  3. நீருக்கு அடியில்… கசிப்புக் காய்ச்சும் காத்தான் குடிகாரருக்கு ஒரு சல்யூட். 🫡 👏🏻 😂
  4. மத்திய கிழக்குப் போரால்… அதிகம் பாதிக்கப் பட்ட ஆள் என்றால், உக்ரைன் செலென்ஸ்கிதான். தம்பர் கூட… தமக்கு உக்ரைனை விட, ஈரான்தான் முக்கியம் என்று சொன்னதால்… செலென்ஸ்கி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். அங்காலை ரஷ்யன்காரன் ஊமைக்குத்தாக குத்திக் கொண்டு இருக்கிறான் போலுள்ளது. 😂
  5. ஆஹா... வில்லேஜ் விஞ்ஞானிகள், இவர்களின் திறமையை ஊக்குவிக்க வேண்டும். கைது செய்து அவமானப் படுத்தக் கூடாது. 😂
  6. நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட சிரயாதீவு பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்தனர் . இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 8 பரள்களில் 800 லீட்டர் கோடா மற்றும் 160 லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி செய்யும் பெருமளவு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எ.எஸ்.எம்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரள்கள் போத்தல்கள் பலன்கள் என்பனவும் பொலிசாரினர் கைப்பற்றப்பட்டுள்ளன . சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளதுடன், கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1470408
  7. விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை! ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஆசியாவில் திங்கட்கிழமை (30) சந்தைகள் திறக்கப்பட்டபோது எண்ணெய் விலை 115 டொலருக்கும் மேல் உயர்ந்தது. அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 2.9% அதிகரித்து, 115.84 டொலராக உள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்பு, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் சுமார் 72 டொலர் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. கடந்த வாரம், மார்ச் 19 அன்று ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 118 டொலர் என்ற உச்சத்தை எட்டியது. வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, அது 112 டொலருக்கும் சற்றுக் குறைவாக இருந்தது. அதேநேரத்தில் முந்தைய அமர்வில் 5.5% விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.86 டொலர் அல்லது 1.87% அதிகரித்து, 101.50 டொலராக இருந்தது. வார இறுதியில் யேமன் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தங்களது முதல் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் விரிவடைந்த நிலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மோதல் திறம்பட மூடியதைத் தொடர்ந்து, பிரென்ட் மசகு எண்ணெய் விலை இந்த மாதம் 59% உயர்ந்துள்ளது. இதுவே 1990 வளைகுடாப் போரின்போது காணப்பட்ட ஆதாயங்களை விட மிக அதிகமான, மிகப்பெரிய மாதாந்திர ஏற்றமாகும். பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து சனிக்கிழமையன்று (28), ஈரானுடன் இணைந்த ஏமனின் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தங்கள் முதல் தாக்குதல்களைத் தொடுத்தனர். இது அரேபிய தீபகற்பம் மற்றும் செங்கடலைச் சுற்றியுள்ள கப்பல் போக்குவரத்துப் பாதைகள் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. ஹார்முஸ் நீரிணையிலிருந்து செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்குத் திருப்பிவிடப்பட்ட சவுதி மசகு எண்ணெய் ஏற்றுமதி, கடந்த வாரம் ஒரு நாளைக்கு 4.658 மில்லியன் பீப்பாய்களை எட்டியதாக, Kpler என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகள் காட்டின. யான்புவிலிருந்து ஏற்றுமதி தடைபட்டால், சவுதி எண்ணெய் மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் எகிப்தின் சூயஸ்-மத்தியதரைக் கடல் (SUMED) குழாய்வழியை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்று ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வார இறுதியில் இப்பகுதியில் தாக்குதல்கள் தீவிரமடைந்து, ஓமானின் சலாலா முனையத்தைச் சேதப்படுத்தின. அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியதுடன், பேச்சுவார்த்தைகளை நாடிய போதிலும், தரைவழித் தாக்குதலுக்கு வொஷிங்டன் தயாராகி வருவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. இப்பகுதியில் போரை விரைவாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், இஸ்லாமாபாத்தில் நடைபெறக்கூடிய அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதித்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1470391
  8. நீங்கள், இவ்வளவு நாளும் புடுங்கின ஆணியே போதும். இனி... ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். தமிழருக்கு, நீங்கள் தான் பிரச்சினையே.... முதலில்... உங்கள் கட்சியின் பிரச்சினையை தீருங்கள். மிச்சத்தை பிறகு பாப்பம்.
  9. வாழ்நாள் போராளிகள்; முன்னாள் போராளிகள்; இந்நாள் போராளிகள்! நிலாந்தன். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.”போராளிகள் நலன்புரி அமைப்பினால்” ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், “சமகால அரசியலில் போராளிகளின் வகிபாகம்” என்ற தலைப்பின் கீழ் பலரும் உரையாற்றினார்கள். போராளிகள் நலன்புரி அமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2009க்குப்பின் புனர்வாழ்வு பெற்ற,தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட,அல்லது கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக ஜனநாயக நீரோட்டத்தில் பங்கெடுப்பதற்காக வெவ்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வந்திருக்கிறார்கள். இந்த பெரும்பாலான கட்டமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் போராளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.அதேசமயம் அவர்களில் ஒரு பகுதியினர் தங்களை முன்னாள் போராளிகள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள்,என்.ஜி.ஓக்கள்,ஊடகங்கள் என்று எல்லா இடங்களிலும் இந்த முன்னாள் போராளிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உண்டு. இது தொடர்பாக கடந்த கிழமைக்கு முதல் கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.அந்தக் கூட்டம் தமிழகத்தின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம்.நல்லகண்ணுவை தமிழக முதல்வர் “வாழ்நாள் போராளி “என்று அழைத்திருந்தார்.ஆனால் “தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை நாங்கள் முன்னாள் போராளிகள் என்று அழைக்கிறோம்” என்று ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார். முன்னாள் போராளிகள் என்று அழைத்தால் அதன் பொருள் அவர்கள் இப்பொழுது போராளிகள் இல்லை என்பதாகும்.ஆனால் போராளி என்பது ஒரு பதவி அல்ல.அதில் முன்னாள்,இந்நாள் என்று அழைக்கலாமா? ஒரு போராளி கட்டாயம் இயக்கங்களில் இருக்க வேண்டும் என்று இல்லை.ஆயுதம் ஏந்திப் போராடினால் மட்டும்தான் ஒருவர் போராளி என்று அழைக்கப்பட வேண்டும் என்று இல்லை.சமூகத்தின் வெவ்வேறு விவகாரங்களை முன்வைத்துப் போராடும் அனைவருமே போராளிகள்தான்.சமூக விடுதலைபி போராளிகள், பெண்விடுதலைப் போராளிகள்…. என்று சமூகத்தின் சிறுமை கண்டு பொங்கும் அனைவருமே போராளிகள்தான். இதுதொடர்பாக கடந்த 16 ஆண்டுகளாக இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. நல்லகண்ணுவின் கூட்டத்தில் ஐங்கரநேசன் ஆற்றிய உரையை அவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்த உரைக்குக் கீழ் வந்த ஒரு பின்னூட்டத்தில், முன்னாள் ஈ. பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பதில்வினை ஆற்றியிருந்தார். அதில் அவர் ஏனைய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்பொழுதும் அரசியல் செய்கிறார்கள்.அவர்கள் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்வதில்லை.தங்களுடைய கட்சிகள்,அமைப்புகளின் பெயர்களால்தான் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் மட்டும் ஏன் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்வி நியாயமானது.அந்த முகநூல் பதிவில் அதற்குரிய பதில் வந்திருக்கவில்லை.கடந்த 16 ஆண்டுகளாக முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் ஏன் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள் ? 2009க்குப் பின்னரான தமிழ்த் தேசியவாத அரசியல் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் பெருமைகளுக்கு “கொப்பிரைட்” எடுப்பதாகத்தான் காணப்படுகிறது.ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் வீரத்தையும் போற்றி அதன்மூலம் நமது வாக்கு வங்கியைத் திரட்டுவதைத்தான் பெரும்பாலான எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமது தேர்தல் உத்தியாகக் கொண்டிருக்கின்றன.இதில் நினைவு நாட்களுக்கு யார் அதிகம் உரித்துடையவர்கள் என்ற விடயத்தில் அவ்வப்போது மோதல்களும் ஏற்படுவதுண்டு.இவ்வாறு கடந்த 16 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தின் மெய்யான வாரிசுகளாக தங்களைக் காட்டிக்கொள்ள முற்படும் கட்சிகள்,அல்லது ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளைத் தமது தேர்தல்மைய அரசியலுக்குப் பயன்படுத்தும் கட்சிகள்,அல்லது முன்னாள் இயக்கத்தவர்களை தமது உட்கட்சி முரண்பாடுகளுக்கு வசதியாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் போன்ற யாருமே, எந்தப் போராட்டத்தை தமது வாக்குமைய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்களோ, அந்தப் போராட்டத்திற்கு உண்மையாக இல்லை. அல்லது அந்த போராட்டத்தின் இலட்சியங்களுக்கு விசுவாசமாக இல்லை என்ற ஓர் அபிப்பிராயம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு தமிழ்த் தேசியக் கோஷங்கள் பெரும்பாலும் திருடர்கள் எடுத்தணியும் முகமூடிகளாக அப்பொழுதோ மாறிவிட்டன.பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்றவரெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மேலெழுந்து விட்டார்கள். யாரெல்லாம் இறந்த காலத்தில் தமது இனத்துக்காக தியாகம் செய்யப் புறப்பட்டார்களோ,அவர்களெல்லாம் இப்பொழுது கைதிகளாகஅரைக் கைதிகளாக,கைவிடப்பட்டவர்களாக,தடுப்பிலிருந்து வந்தவர்களாக, மதிக்கப்படாதவர்களாக,சந்தேகிக்கப்படுகிறவர்களாகக் காணப்படுகிறார்கள். கடந்த 16 ஆண்டுகளிலும் இலங்கைத் தீவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவினராக(most vulnerable) காணப்படுவது தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள்தான். பயங்கரவாதத் தடைச் சட்டம் எப்பொழுதும் அவர்களுடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. சாதாரண ஒன்றிணைவைக்கூட “மீளுருவாக்கம்” என்ற பெயரில் ஒரு சட்டப் பிரச்சினையாக மாற்றக்கூடிய சட்டச் சூழல் இப்பொழுதும் உண்டு.எனவே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் அதிகம் ஆபத்துக்குள்ளாகக்கூடிய ஒரு பிரிவினராக முன்னாள் இயக்கத்தவர்கள் காணப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எந்த அமைப்பை,எந்தக் கருநிலை அரசைக் கட்டியெழுப்பினார்களோ, அதன் பெருமைகளைக் கொப்பிரைட் எடுக்க முற்படும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை.அல்லது தேவைக்குப் பயன்படுத்திவிட்டு வீசி விடுகிறார்கள். அல்லது அவர்களைச் சந்தேகிக்கிறார்கள். இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,தங்களுடைய இறந்த காலத்தை கொப்பிரைட் எடுக்க முற்படும் கட்சிகளின் மத்தியில்,தாங்கள்தான் அதன் உண்மையான வாரிசுகள்,அல்லது தாங்கள்தான் அந்த போராட்டத்தின் உண்மையான தொடர்ச்சிகள் என்று காட்டவேண்டிய தேவை தங்களுக்கு இருப்பதாக பெரும்பாலான முன்னால் இயக்கத்தவர்கள் நம்புகிறார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆனால் கடந்த 16ஆண்டுகளிலும் அவர்கள் தாங்களாக கட்சியை உருவாக்கியும் அல்லது ஏனைய கட்சிகளோடு இணைந்தும் தேர்தல் கேட்டிருக்கிறார்கள்.எனினும்,தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்பட்டு வருகிறார்கள்.தமது இறந்தகாலத்தைத் தேர்தல் மொழியில் மொழிபெயர்க்க அவர்களால் முடியவில்லை. தேர்தல் மைய அரசியலுக்குத் தேவையான தொழில் திறன்களை,தந்திரங்களைக் கற்றுக்கொண்டு தேர்தல் மேடைகளில் வெற்றி பெற அவர்களால் இன்றுவரை முடியவில்லை. ஆனால் இது தமிழ்த் தேசிய அரசியலுக்கு மட்டுமான ஒரு தோற்றப்பாடு அல்ல. உலகப் பொதுவானது.இலட்சியவாதிகளும் உண்மையான தியாகிகளும் நேர்மையானவர்களும் தேர்தல்மைய அரசியலில் ஒன்றில் இறங்குவதில்லை; அல்லது இறங்கினாலும் மிகக்குறைந்த அளவே வெற்றிகளைப் பெறுகிறார்கள். உதாரணம்,இங்கே முன்னர் குறிப்பிட்ட நல்லகண்ணு.நல்லகண்ணுவைத் தவிர வேறு ஒரு உள்ளூர் உதாரணத்தையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.சில ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்த அமைப்புகள் ஒன்றுதிரண்டு குடைச் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்டன.ஆனால் அந்த கூட்டமைப்பு கட்டுக்காசையும் இழக்கும் அளவுக்கு கேவலமாக சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்டது.ஆனால் அந்தக் கிளர்ச்சிகளின் ஓரத்தில் நின்று அந்தக் கிளர்ச்சியின் கனிகளை தேர்தல் மொழியில் “ஹைஜாக்” பண்ணிய ஜேவிபி இப்பொழுது நாட்டின் ஆளுங்கட்சியாக வந்துவிட்டது. ஜேவிபியை இதயமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியில் இருந்து முன்னாள் இயக்கத்தவர்கள் கற்றுக்கொள்ளலாம்.தேசிய மக்கள் சக்தியின் இனப்பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயுதப் போராட்ட அமைப்பாகிய ஜேவிபி அதன் இரண்டு புரட்சிகளிலும் தோற்கடிக்கப்பட்டது.இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டது.இரண்டு தடவைகள் அதன் தோழர்கள் மிகக்குரூரமான விதங்களில் கொன்று எரிக்கப்பட்டார்கள்,அல்லது புதைக்கப்பட்டார்கள்,அல்லது ஆறுகளில் வீசப்பட்டார்கள்.மொத்தம் 85 ஆயிரத்துக்கும் குறையாத தோழர்கள் அவ்வாறு கொன்றொழிக்கப்பட்டதாக அந்த அமைப்புக் கூறுகிறது. ஆனால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அந்த இயக்கமானது,தன் சொந்தச் சாம்பல் மேட்டில் இருந்து,தன் தோழர்களின் புதை மேட்டில் இருந்து மீண்டு எழுந்தது. தன்னைத் தேசிய மக்கள் சக்தியாக, தேர்தல் கவர்ச்சி மிக்க ஒரு புதிய கட்டமைப்பாக வளர்த்துக் கொண்டது. அதன் பின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் கனிகளை தேர்தல் மேடைகளில் வெற்றிகரமாக ஹைஜாக் பண்ணியது.போராட்டங்களில் பிரதானமாக பின்னணியில் நின்ற அமைப்புக்களால் தமது போராட்டத்தின் வெற்றிகளை தேர்தல் மொழியில் வெற்றிகரமாக மொழிபெயர்க்க முடியவில்லை.ஆனால் தேசிய மக்கள் சக்தி அதைச் செய்தது. இப்பொழுது ஆளும் கட்சியாக எழுச்சி பெற்றுவிட்டது. ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பு எப்படி ஆளுங்கட்சியாக வர முடியும் என்பதற்கு அது ஓர் உதாரணம்.இனப்பிரச்சினை தொடர்பான என்.பி.பியின் நிலைப்பாட்டை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் ஒர் ஆயுதப் போராட்ட அமைப்பு,ஏப்படி தேர்தல் மேடைகளில் வெற்றிபெற முடிந்தது என்ற விடயத்தில் அங்கு கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் உண்டு. இங்கு ஒரு முக்கியமான கள நிலவர வேறுபாட்டை ஒப்பீடு செய்ய வேண்டும். 1980களின் இறுதியில் நசுக்கப்பட்ட பின்னர்,ஜேவிபியின் அரசியலை கொப்பிரைட் எடுப்பதற்கு அங்கிருந்த பெரும்பாலான மேட்டுக்குடி மைய அரசியல் கட்சிகள் முயற்சிக்கவில்லை.முயற்சிக்கவும் மாட்டார்கள். ஏனென்றால் ஜேவிபியின் அரசியல் பாரம்பரியம் வேறு.அவர்களுடைய அரசியல் பாரம்பரியம் வேறு.அதனால் ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களையும் கொப்பிரைட் எடுப்பதற்கு அங்கே வேறு எந்தக் கட்சியும் இருக்கவில்லை.ஆனால் தமிழ்த் தேசிய அரசியலில் அப்படியல்ல. தமிழ்த் தேசிய அரசியலில் ஆயுதப் போராட்டத்தின் நன்மைகளை,உன்னதங்களை கொப்பிரைட் எடுக்க முற்படும் தமிழ்த் தேசியவாத கட்சிகளின் மத்தியில், முன்னாள் இயக்கத்தவர்கள் தங்கள்தான் உண்மையான வாரிசுகள் என்று நிரூபிக்க வேண்டிய அரசியல் தேவை ஏற்பட்டது.ஆனால் அவ்வாறு தங்களை போராளிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டதனால் அவர்கள் தேர்தல் மைய அரசியலில் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்பதை கடந்த16 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் தெரியவரும். எனவே தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு அவர்கள் ஜனநாயக வழியில் வேறு எதையோ செய்ய வேண்டியிருக்கிறது என்பதனை கடந்த 16 ஆண்டுகளும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளன.ஆயுதப் போராட்ட ஒழுக்கம் வேறு.தேர்தல் அரசியல் ஒழுக்கம் வேறு.இரு வேறு அரசியல் களங்கள். இரண்டுக்குமான வெற்றி வியூகங்களும் உத்திகளும் தந்திரங்களும் வேறு வேறானவை.எனவே தேர்தல்மைய அரசியலுக்குரிய ஒழுக்கத்தை,அதற்குரிய தந்திரங்களை,தொழில் சார் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய கால நிர்பந்தம் முன்னாள் இயக்கத்தவர்களுக்கு உண்டு. இப்போதிருக்கும் தமிழ்த் தேசிய மிதவாத அரசியலில் பொய்யர்களும் நஞ்சர்களும் நவஞ்சகர்களும் திருடர்களுந்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று கருதுபவர்கள் நேர்மையான,கண்ணியமான,தமது வாக்காளர்களுக்கு உண்மையான,புதிய மாற்றத்தைக் காட்டவல்ல ஒரு ஜனநாயக அரசியல் வழியைப் பலப்படுத்த வேண்டும்.ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை எப்படி வென்றெடுப்பது என்று சிந்திக்க வேண்டும். இந்தியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் ஆபிரிக்க நாடுகளிலும் முன்னாள் போராட்ட இயக்கங்கள் எப்படி ஜனநாயக நீரோட்டத்துக்குள் தங்களை அடுத்த கட்டத்துக்கு தகவமைத்துக் கொண்டன என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இலட்சியவாதிகளும் நேர்மையானவர்களும் நல்லகண்ணுகளும் தேர்தல்மைய அரசியலில் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்பதையும் ஆழமாக ஆராய வேண்டும். நேர்மையானவர்கள்,கண்ணியமானவர்கள்,உண்மையானவர்கள்,வாக்காளர்களுக்கு விசுவாசமானவர்கள்,தமது வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருப்பவர்கள்…தமிழ்த்தேசிய அரசியலில் அதிகரித்த எண்ணிக்கையில் ஈடுபடுவார்களாக இருந்தால்,தமிழ்த்தேசிய அரசியலிலும் புதிய மாற்றங்களைக் காட்டமுடியும். இப்பொழுது அதுதான் பொருத்தமான போராளித்துவம். https://athavannews.com/2026/1470350
  10. மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது. ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹட்டன் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமாகும். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் இன்று (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அதன் பின்னர் நீதவான் ஊடாக அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1470306
  11. கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை. வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி ((GPS)) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் சட்டரீதியற்ற முறையில் வள சுரண்டல்கள் இடம்பெற்று வருகிறது. அதனால் பல உயிர்கள் கூட காவு வாங்கப்பட்டுள்ளது. கனிய வள கடத்தல்களால் பல விபத்துக்கள் கூட சம்பவித்துள்ளன. இவ்வாறான உயிர்களை காவு வாங்கும் செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கனிய வள திருட்டுக்கள் , சுரண்டல்களை கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமாக கனிய வளங்களை கொண்டு செல்வோர் தொடர்பில் மக்கள் அறிந்து அறிவிக்க முடியும் மக்களின் பங்களிப்பு தான் இந்த விடயத்தில் மிக முக்கியம். எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் எண்ணிய நடைமுறைகள் ஊடாகவே கனிய வள விநியோகம் ஒழுங்குபடுத்தப்படும். அதனூடாக சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1470309
  12. மணல் மாஃபியாக்களுக்கு எச்சரிக்கை. வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வட மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: ‘மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 6 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரைக் கூட அவர்கள் பறித்துள்ளனர். இது ‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த’ கதையாக, பொலிஸாரின் உயிரையே பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மணல் விநியோகத்தை முறைப்படுத்தி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதன் ஊடாக, ஒரு கியூப் மணலை 7, 500 ரூபாவுக்கு வழங்க முடியும். அதன்படி ஒரு டிப்பர் மணலை 23, 000 ரூபாவுக்குப் பெறலாம். யாழ்ப்பாணத்திற்கு அதனைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய செலவுகளைக் கணித்தால், சுமார் 55, 000 முதல் 65, 000 ரூபாவுக்குள் மணலை விநியோகிக்க முடியும். ஆனால் சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மாஃபியாக்கள், ஒரு டிப்பர் மணலை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வரை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறான மாஃபியாக்களின் பின்னால் அரசியல்வாதிகளும் பொலிஸாரும் இருப்பதை நாம் அறிவோம். எமது அரசாங்கத்திடம் இத்தகைய விளையாட்டுகள் செல்லுபடியாகாது. அத்துடன், பொலிஸாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிப்பதாக இருக்கக் கூடாது; அது மாஃபியாக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக அமைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470297
  13. இந்தத் தாக்குதலில்… பல அமெரிக்க போர் விமானங்களும் சேதமடைந்ததாக சில செய்திகள் வருகின்றன. அது என்ன…. ஈரான் தாக்கினால் 10 அமெரிக்க படையினர் காயம், மூன்று இஸ்ரேலியருக்கு மூக்கால் இரத்தம் வடிந்தது என்று செய்திகளை போடுகின்றார்கள். 😂 ஒரு வேளை இவர்கள்…‘‘சாகாத வரம்‘‘ பெற்றவர்களோ… 🤣
  14. பல்முனை தாக்குதல், எந்தப் பெரிய பலசாலியையும் நிலை குலைய செய்யச் கூடிய நிலையை உருவாக்கலாம். அத்துடன்… உறுதிப் படுத்தப் படாத தகவல் ஒன்றின்படி, இஸ்ரேலின் “அயன் டோம்” ஈரானின் ஏவுகணைகளுக்கு முன்பு போல் அல்லாமல் மிகக் குறைந்த அளவிலான எதிர் நடவடிக்கைகளை செய்வதாக கூறுகின்றார்கள். இது… அதன் ஆயுதங்களின் பற்றாக் குறையாக இருக்கலாம் என கூறுகின்றார்கள். உண்மைத் தன்மை தெரியவில்லை.
  15. இலவசமாக திறந்திருந்த ஹார்முஸ் கால்வாயை... அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை ஆரம்பித்து பூட்ட வைத்து விட்டு, இப்போ... பாதையை திறக்க, உலக நாடுகள் எல்லாரும் ஈரானை வற்புறுத்த வேண்டுமாம். சும்மா கிடந்த தேரை இழுத்து, தெருவில் விட்டது யார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.