Everything posted by பிழம்பு
-
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!
குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி பிரதிநிதித்துவப் படம் | மெட்டா ஏஐ ரஷ்யாவின் சில பகுதிகளில் டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தைகளை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ரஷ்யாவின் 10 மாகாணங்களில் இந்தப் புதிய திட்டம் கடந்த சில மாதங்களாகவே அமலில் உள்ளது. இது உள்நாட்டிலும், உலக அரங்கிலும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. ரஷ்ய அதிபரின் உத்தரவின் பேரிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதற்கான எதிர்ப்புக் குரல் உடனுக்குடன் நசுக்கப்பட்டு விடுவதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது. மேலும், ரஷ்ய மக்கள் தொகை குறைந்துவருவதால், அதை ஈடுகட்டவே இந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எப்படிக் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்தத் திட்டத்தின் பின்னணி பற்றி அலசுவோம். பின்னணி என்ன? - கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யா, அதிக குழந்தை பெற்றெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. ஆனால், தாய்மை அடையும் வயதை எட்டிய பெண்களுக்கு மட்டுமே அந்தச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த முறை டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றெடுக்குமாறு ரஷ்யா ஊக்குவித்து, அதற்கு ரூ.1 லட்சம் (இந்திய மதிப்பில்) வரை தருகிறது.ரஷ்ய நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்களின்படி 2023-ல் ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.41 சதவீதமாக இருந்தது. இது மக்கள் தொகை சமநிலையைப் பெறுவதற்கு தேவையான 2.05%-ஐ விட மிக மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.இந்நிலையில்தான் ரஷ்யாவில் டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக்கொள்வது ஊக்குவிக்கப்படுகிறது. இது குறித்து அந்நாட்டில் இயங்கும், மக்கள் மனநிலையை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 43% மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராகவும், 40% மக்கள் இதற்கு உறுதுணையாகவும் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. ஆதரவுக்கும், எதிர்ப்புக்கும் பெரிய வித்தியாசமில்லாததால் இயல்பாக அரங்கேறி வருகிறது இளம் மாணவிகள் தாயாகும் போக்கு. புதினின் பார்வை: ரஷ்ய அதிபர் புதின், மிக வலுவான மக்கள் தொகையே, வல்லரசு வளமாகக் காரணமாகும் என்று நம்புபவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மக்கள்தொகை அதிகமாக இருந்தால், பரந்துபட்ட நிலபரப்பின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும், ராணுவமும் ஆள் பலம் பெறும் என்று புதின் தீவிரமாக நம்புகிறார். அந்த வகையில் ரஷ்யாவின் நிலபரப்பை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே, உக்ரைன் நிலபரப்பை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்ற புதினினும் திட்டமும், நாட்டின் மக்கள் தொகை சுருங்கி வருவதால் ஆபத்தான நிலையில் இருக்கிறது. மக்கள் தொகை சரிவது ஒரு பக்கம், போரில் உயிர்நீத்த ரஷ்ய படைவீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மறுபக்கம் என ரஷ்யா நெருக்கடியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தோராயமாக 2,50,000 ரஷ்ய வீரர்கள் போரில் உயிரிழந்தனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ரஷ்யப் படைகளில் இருந்து சில இளைஞர்கள் உயிர்பிழைத்தால் போதுமென்று தப்பித்தும் வருகின்றனர். ரஷ்யா மட்டுமல்ல... - ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் குறைந்துவரும் மக்கள் தொகை காரணமாக இருந்தாலும் கூட, இது ரஷ்யாவின் பிரச்சினையாக மட்டுமல்லாது உலகின் பரவலான போக்காகவும் இருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில், 2050-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறையும் வாய்ப்புள்ளது என்ற கணிப்புகளும் நிலவுகின்றன. அந்த வகையில் மக்கள் தொகை அதிகரிப்புக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தது புதின் மட்டுமே இல்லை எனத் தெரிகிறது. ‘ப்ரோநேட்டலிஸ்ட் பாலிசீஸ்’ என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ‘குழந்தைப் பேறை ஊக்குவிக்கும் கொள்கைகளை’ வகுத்த நாடுகளில் ஹங்கேரி, போலந்து, அமெரிக்கா இன்னும் சில நாடுகளும் இடம்பெற்றுள்ளன. ஹங்கேரி அரசு மூன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொண்டால் மிக தாராளமான வரிச் சலுகை தருகிறது. போலந்து அரசு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித் தொகை தருகிறது. ஒரு குழந்தைக்கு இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் வீதம் உதவித் தொகை தரப்படுகிறது. தொழில், வேலை முன்னேற்றத்தை தியாகம் செய்து பெண்கள் குழந்தைப்பேறுக்கு சம்மதம் தெரிவிப்பதால் இந்தப் பெரிய சலுகையை வழங்குகிறது. அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ஆக்க வேண்டும் என்ற ‘எம்ஏஜிஏ’ (MAGA) கொள்கையோடு ஆட்சி அமைத்துள்ள ட்ரம்ப், குழந்தைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க 5,000 டாலர் வரை பெண்களுக்குத் தரலாம் என்ற யோசனையை முன்மொழிந்ததும் நினைவுகூரத்தக்கது. ஸ்பெயின் முன்மாதிரி... - குறைந்துவரும் மக்கள் தொகையை மீட்டெடுக்க சில நாடுகள் இதுபோன்ற நிதி, வரிச் சலுகைகளை மட்டுமே அறிவிக்க, ஸ்பெயின் நாடு தனது சற்றே வித்தியாசமான அணுகுமுறையால் சாதித்துள்ளது. ஸ்பெயினும் குழந்தை பெற்றெடுக்க பெண்களை ஊக்குவித்தலும் கூட, அதையும் தாண்டி தனது நாட்டுக்கு குடியேறிகளாக வந்தவர்களுக்கு குடிமக்கள் அந்தஸ்து வழங்குவதை அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக சட்டவிரோதக் குடியேறிகளுக்கும் கூட இந்தச் சலுகையை தாராளமாக வழங்குகிறது. ஸ்பெயினின் இந்த நடவடிக்கைக்கு கைமேல் பலனாக, அதன் பொருளாதாரம் முன்பைவிட வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ப்ரோநேட்டலிஸ்ட் கொள்கைகளில் புதுமைகளையும், தாராளத்தையும் சில தேசங்கள் காட்டினாலும் கூட ஒரு குறிப்பிட்ட சில குழு, இனம் சார்ந்த பெண்கள் அதிகமாகப் பிள்ளை பெறுவதை இந்த நாடுகள் ஊக்குவிக்கின்றன. இவர்களை ‘விருப்பத்தக்குரிய குடிமக்களாக’ அந்த நாடுகள் கருதுகின்றன. அதாவது இனம், மொழி, மதம், பாலின சார்பு சார்ந்து சிலரை அரசாங்கம் விரும்புகிறது. ஸ்பெயின் நாடு குடியேறிகளை தாராளமாக வரவேற்று தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்கினாலும் கூட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் ஸ்பானிஷ் மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. ஹங்கேரி நாடு ஆண் - பெண் (ஹெட்டரோ செக்ஸுவல்) தம்பதிக்கு மட்டுமே இந்தச் சலுகையை தருகிறது. அதுவும் அவர்கள் அதிக வருவாய் ஈட்டும் வர்க்கத்தில் இருக்கிறார்களா என்பதையும் கருத்தில் கொள்கிறது. உலக நாடுகளின் இந்த ‘விருப்பத்துக்குரிய குடிமக்கள்’ போக்கை ட்ரம்ப்பின் செயல்பாடு மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம். பெண்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்காக ஊக்கத் தொகைகளை வழங்கத் தயாராக இருக்கும் ட்ரம்ப், சட்டவிரோத குடியேறிகளை அப்புறப்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் மிகமிக உறுதியாக இருக்கிறார். ட்ரம்ப்புக்கு அமெரிக்க மக்கள்தொகை அதிகமாக வேண்டும். ஆனால் அவர்கள் அமெரிக்கர்களாக இருக்க வேண்டும். ஸ்டாலின் உத்தியை கையிலெடுத்த புதின்: மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவிக்க ரஷ்ய அதிபர் புதின், அந்தக் காலத்தில் ரஷ்யாவின் அடையாளமாக இருந்த ஜோசப் ஸ்டாலினின் உத்தியை கையில் எடுத்துள்ளார். 10 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்க்கு ஸ்டாலின் காலத்தில் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. அதையே இப்போது புதினும் பின்பற்றுகிறார். மேலும், ரஷ்யாவில் குழந்தைப் பேறுக்கு எதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் தடை செய்து சட்டமே இயற்றப்பட்டுள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஒரு பெண் முடிவெடுக்க முடியாது. பெண்களின் கணக்கு: மக்கள் தொகை பெருக்கத்துக்கு உலக நாடுகள் விதவிதமாக, ரகரகமாக கொள்கைகளை வகுக்க, அதை பெண்களின் நலனை அடகுவைத்து மேற்கொள்ளாது, சமூகத் தேவையின் அடிப்படையில் வகுக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானது உழைக்கும் சக்தி. அதனை மக்கள் தொகை பெருக்கத்தினால் மட்டுமே அதிகரிக்க நினைக்காமல், குடியேறிகளுக்கு குடிமக்கள் அங்கீகாரம் வழங்கலாம் என்று பெண்கள் கருதுகின்றனர். அதை விடுத்து, நாட்டிலுள்ள பெண்களை இத்தனை குழந்தை பெற்றெடுங்கள், இந்த மதத்தை, இனத்தை, குலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக குழந்தை பெற்றெடுங்கள் என்று நிர்பந்திப்பது பெண்களின் தனிப்பட்ட உரிமைகளை அத்துமீறுவதாகவும், அரசாங்கம் விரும்பும் வகையில் மக்கள் தொகையை பெருக்கும் ஒருவகையிலான இன அல்லது மதவாதமாகவும் மட்டுமே இருக்கும் என்று கண்டனத்தைப் பதிவு செய்கின்றனர். உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன் குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி | Russia encourages school girls to have children and Shocking background explained - hindutamil.in
-
செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் துப்புரவு நடவடிக்கையில் வெளித்தெரிந்த என்புகள்; செம்மணியில் அடுத்தடுத்து அதிர்ச்சி! செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவாக்கல் பணியின்போது மேலும் சில மனித என்புகள் இனங்காணப்பட்டுள்ளன. மனித என்பு எச்சங்கள் தென்பட்ட பகுதியில் தற்போது அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 47 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11ஆம் நாளான நேற்றும் இரு என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்தநிலையில், ஏற்கனவே அகழ்வு நடைபெறும் பகுதிக்கு வெள்ள நீர் செல்வதைத் தடுக்கும் நோக்கில், அகழ்வு நடைபெறும் இடத்துக்கு அருகில் நேற்றுத் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது அங்கும் மனித என்பு எச்சங்கள் தென்பட்டதை அடுத்து அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. என்பு எச்சங்கள் தென்பட்டதை அடுத்து, ஆய்வுகளின் பின்னர் அங்கும் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவருகின்றது. துப்புரவு நடவடிக்கையில் வெளித்தெரிந்த என்புகள்; செம்மணியில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
-
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை!
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை! வணிக தினம் மற்றும் வணிக வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வணிக பாட ஆசிரியர் சக்திவடிவேல் பிரதீபன் தலைமையில், வணிகப்பிரிவு மாணவர்களால் இந்த வணிக சந்தை திட்டமிடப்பட்டது. நாடாவெட்டி ஆரம்பமான வணிக சந்தையானது தொடர்ந்து மாணவர்கள் உள்ளூர் சார்ந்த உற்பத்திகள், குளிர்பானங்கள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை சந்தைப்படுத்தினர். மாணவர்கள் சந்தைப்படுத்திய உற்பத்தி பொருட்களை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி. வதனி தில்லைச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பார்வையிட்டு அவற்றை கொள்வனவு செய்தனர். வணிகத்துறை சார்ந்து நல்ல ஒரு எதிர்காலத்தை பாடசாலை மட்டத்தில் உருவாக்குவதும், வர்த்தகத் துறை சார்ந்த விடயத்தை கல்வி துறையில் ஒரு உயர்ந்த பகுதியாக மாற்றும் நோக்கிலும் இந்த வணிக தினமும் வணிக வாரமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை!
-
அநுரகுமாரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின், பிமல் ரத்நாயக்க கொள்ளையிட்டுள்ளனர் - சம்பிக்க
06 Jul, 2025 | 05:55 PM (இராஜதுரை ஹஷான்) கோட்டபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ஷ கொள்ளையடித்ததை போன்று அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின் சில்வா, பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள்.இதன் பெறுபேற்றை வெகுவிரைவில் அரசாங்கம் விளங்கிக் கொள்ளும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வெளிநாட்டு கடன் சுமையினால் நாடு நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது.1987 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை காட்டிலும் வெளிநாட்டு கடன் தொகை உயர்வாக காணப்பட்டது. அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாச இதற்கு பொறுப்புக்கூற வேண்டுமா அல்லது மக்கள் விடுதலை முன்னணி நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த வன்முறைகள் பொறுப்புக்கூற வேண்டுமா என்பதை ஆராய வேண்டும். 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதிப்பு பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டுமா அல்லது விடுதலை புலிகளின் தாக்குதலினால் அரச நிர்வாக கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்பு பொறுப்புக்கூற வேண்டுமா என்பதையும் ஆராய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2007 ஆம் ஆண்டு 8.6 சதவீதத்தில் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் போது அதன் பிரதி விளைவை எவரும் ஆழமாக ஆராயவில்லை.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச நிதியே பாரியளவில் மோசடி செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அரசியல் பிரச்சாரமாக்கி கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.கோட்டாவுக்கு வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ஷ கொள்ளையடித்தார். நாடு மிக மோசமான நெருக்கடிக்குள்ளானது, பின்னர் கோட்;டபய ராஜபக்ஷவை நாட்டு மக்கள் விரட்டியடித்தார்கள். அரசியல் கட்டமைப்பின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த வெறுப்பை சாதகமாக பயன்படுத்தி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள்.இதன் பலனை அரசாங்கம் வெகுவிரைவில் விளங்கிக் கொள்ளும். தேசிய மற்றும் சர்வதேச அரசமுறை கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் எவ்விதமான புதிய திட்டங்களும் கிடையாது.சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று நாட்களை கடத்துவதை மாத்திரம் அரசாங்கம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது என்றார். அநுரகுமாரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின், பிமல் ரத்நாயக்க கொள்ளையிட்டுள்ளனர் - சம்பிக்க | Virakesari.lk
-
இந்தியாவுடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் : தேசிய பாதுகாப்பு பாதிப்பு; அரசாங்கத்துக்கு கற்பிக்க தயார் - சரத் வீரசேகர
07 Jul, 2025 | 12:16 AM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு கற்பிக்க தயாராகவுள்ளோம் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமர வைத்து கற்பிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிற்க வைத்து கற்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் முரண்பாடு அதன் விளைவாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுதாக அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் குறிப்பிட முடியாது. பாதாள குழுக்களின் செயற்பாடுகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் குறிப்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவமுள்ளவர்களை பாதுகாப்பு தொடர்பான விடயதானங்களுக்கு ஜனாதிபதி நியமித்திருக்க வேண்டும். அரசாங்கம் இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் இதுவரையில் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவில்லை.இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தேசிய பாதுகாப்பபை உறுதிப்படுத்த அரசாங்கம் சகல அயல் நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.இந்தியாவுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டுக் கொண்டு ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்ள கூடாது.இந்த அரசாங்கம் இந்தியாவை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது என்றார்.இந்தியாவுடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் : தேசிய பாதுகாப்பு பாதிப்பு; அரசாங்கத்துக்கு கற்பிக்க தயார் - சரத் வீரசேகர | Virakesari.lk
-
கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்த சேவையில்!
06 Jul, 2025 | 05:26 PM (நமது நிருபர்) கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார். கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்த சேவையில்! | Virakesari.lk
-
கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொது மைதானம்!
07 Jul, 2025 | 06:03 PM வடமராட்சி கிழக்கு பொது மைதானம் கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். உரிய பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியற்றும் காணப்படும் வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொது மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை கடந்த பல வருடங்களாக காணப்படுகின்றது. இது குறித்து அருகில் அமைந்துள்ள பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் உடனடியாக பொது மைதானத்தின் வேலிகளை சரி செய்து, கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொது மைதானத்தின் தரத்தை பேணுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொது மைதானம்! | Virakesari.lk
-
செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
07 Jul, 2025 | 07:03 PM யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. அந்தவகையில் 07ஆம் திகதி திங்கட்கிழமை 52 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 47 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதிதாக அகலப்படும் குழியிலிருந்து ஒரு மண்டையோடு இன்றைய தினம் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தென்னிந்திய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் குறித்த மனிதப் புதைகுழிக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk
-
பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு... நம்மையும் பறக்க அழைக்கும் ராமின் உலகம்!
சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார். பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன. இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோகுலும் அன்பும் ஒரு சின்ன பைக் ரைடுக்குக் கிளம்புகிறார்கள். இந்தப் பயணத்தில் பெற்றோருக்குள்ளும், அன்புக்குள்ளும் நிகழும் நேர்மறை மாற்றங்களே ராம் இயக்கியிருக்கும் 'பறந்து போ'. தன் வழக்கமான அப்பாவித்தனமான மேனரிஸத்தோடும், ஒன் லைன் கவுன்ட்டர் காமெடிகளோடும் உலாவும் சிவா, ஆங்காங்கே வரும் உணர்வுபூர்வமான தருணங்களையும் முதிர்ச்சியுடன் அணுகி, தன் கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். சிவாவின் கவுன்ட்டர்களைக் கதையிலிருந்து விலக வைக்காத வகையில், நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். மகன் மீதான பாசம், கணவன் மீதான காதல், பொருளாதாரம் கொடுக்கும் அழுத்தம், தங்கை மீதான ஏக்கம் என உணர்வுகளின் வெளியில் பறக்கும் குளோரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் கிரேஸ் ஆண்டனி. இறுதிக்காட்சியில் லூட்டியடித்து சிரிப்பலைகளையும் அள்ளுகிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் சிறிது மீறினாலும், ஓவர்டோஸ் மோடுக்குப் போய்விடும் அன்பு கதாபாத்திற்குத் தேவையான கச்சிதமான நடிப்பை மிதுல் ரயானிடமிருந்து வாங்கியிருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை தாண்டி, எமோஷனல் காட்சிகளிலும் நம் அன்பைப் பெறுகிறார் இந்த அன்பு! அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் குறைந்த திரை நேரத்திலும் கவனிக்க வைக்கிறார்கள். விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். பயணங்களில் நிலவியலையும், எமோஷனல் தருணங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பீல் குட் மீட்டரிலிருந்து விலகாமல் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். இதற்கு மதி வி.எஸ்-ஸின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் 'டிரோன் ஷாட்'களும் இந்தப் பறத்தலுக்குச் சிறகை வீசியிருக்கின்றன. சந்தோஷ் தயாநிதி இசையில் மதன் கார்க்கி வரிகளில் குழந்தைகளின் உலகத்தையும், அவர்களின் பார்வையையும் பேசும் பாடல்கள் குழந்தைகளின் மொழியிலேயே படம் நெடுகிலும் திரைக்கதையோடு பிணைந்து, கதைக்கருவிற்குக் கைகொடுத்திருக்கின்றன. இப்பாடல்களுக்கு இடையில் ஆங்காங்கே தென்படும் மேகக்கூட்டம் போல் வரும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் குறையில்லை. Parandhu Po review | பறந்து போ விமர்சனம் சமகால குழந்தைகளின் உலகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை எமோஷனலாகவும், காமெடியாகவும் பேசியபடி தொடங்குகிறது திரைக்கதை. அச்சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்கள், கிளைக்கதைகளின் உதவியோடு விவாதிக்கிறது திரைக்கதை. பரபரப்பு, திருப்பங்கள் இல்லாமல், நேர்க்கோட்டில் நிதானமாகப் பயணிக்கும் திரைக்கதை, காமெடி, எமோஷன் என மாறி, மாறி வந்தாலும் அழுத்தமாகவே நகர்கிறது.சிறுவனின் சேட்டைகள், அதனால் அல்லாடும் தந்தை எனக் காட்சிகள் வரிசைக்கட்டுகின்றன. இவற்றில், சிறுவனின் சேட்டைகளில் அதீத தன்மை எட்டிப்பார்க்காத வகையில், நியாயமான காரணங்களும் அக்காட்சிகளினூடே இடம்பெற்றிருக்கின்றன. இயக்குநர் ராமின் 'அன்பு சூழ்' உலகமும், மனிதர்களும் திகட்டாத வகையில் கச்சிதமான அளவில் 'நின்றுவிடுவது' படத்திற்குப் பலம். கோகுலின் தந்தை, கோகுல், அன்பு என மூன்று தலைமுறையினருக்குள் நடக்கும் உரையாடல் காட்சி கலகலப்பு! காக்ரோச் எனத் தன்னை அறிமுக செய்துகொள்ளும் குட்டிக் குழந்தையிடமிருந்து பெறப்பட்ட நடிப்பில் க்யூட்னஸ் ஓவர் லோடட்! தண்ணீர் கேன்கள் இருக்கும் கைப்பையை வைத்துக்கொண்டு, அதைத் திறந்துகூடப் பார்க்காமல், தாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவா, ஆண்களின் அவசரகதி உலகைப் பிரதிபலிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் அதே சமயம், சில காட்சிகளில் எதார்த்தத்தை மீறும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியானது அதன் சுவாரஸ்ய எல்லையை மீறி, மலை ஏறிக்கொண்டே போவது அயற்சியை வர வைக்கிறது. இறுதிக்காட்சியில் ஈழைநோய் உள்ள குளோரியிடம், இன்ஹேலரைத் தூக்கிப் போடச் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம். கிராம வாழ்க்கையைப் புனிதப்படுத்துவது போல நீட்டி முழக்கினாலும், இறுதியில் அதையும் விமர்சனத்திற்குள்ளாக்கியது சிறப்பு! நவீன பொருளாதார சூழலும், நகரமயமாக்கலும் தரும் அதீத அழுத்தங்களால் பெற்றோர் மீது திணிக்கப்படும் சுமைகள்... அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் என்ற பிரச்னையை பீல் குட் படமாக உரையாடி, நம்மையும் குழந்தைகளின் உலகில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'பறந்து போ'. Parandhu Po review; பறந்து போ விமர்சனம்; மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் ராம்; பறந்து போ எப்படி இருக்கு?
-
3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி?
சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது. மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் மகன் பிரபு (சித்தார்த்) கல்லூரி முடிந்து ஓர் ஆலையில் வேலைக்கு செல்கிறார். அண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்). இப்படி வாழ்நாள் முழுக்க ‘அட்ஜஸ்ட்’ செய்து வாழும் இந்த குடும்பத்தின் சொந்த வீடு கனவு நனவானதா என்பதே ‘3பிஹெச்கே’ படத்தின் திரைக்கதை. ‘8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷின் மூன்றாவது படம். மிக எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரை அலுப்பு தட்டாமல் பல இடங்களில் நெகிழ வைத்தும், சுவாரஸ்யத்துடனும் தந்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே தேவையற்ற அறிமுகங்கள் இன்றி கார்த்தியின் வாய்ஸ் ஓவரில் ‘சிம்பிள்’ ஆக கதைக்குள் நுழைந்த விதம் சிறப்பு. அடுத்த காட்சிகளில் கதையின் முக்கிய நோக்கம், கதாபாத்திரங்களின் தன்மைகள் ஆகியவை ஆடியன்ஸின் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே படத்துடன் மிக இலகுவாக ஒன்றவைத்து விடுகிறது. லேசாக பிசகினாலும் சீரியல் போல ஆகிவிடக் கூடிய கதைக்களத்தில் கடைசி வரை நெளியவிடாமல் வைத்திருப்பது நடிகர்களின் நடிப்பு. படத்தின் ஹீரோ சந்தேகமே இன்றி சரத்குமார்தான். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக மிக இயல்பான நடிப்பு. சொந்த வீடு கனவை எப்போதும் சுமந்து திரியும்போதும், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கி, பின்னர் காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மாற்றத்துக்கு தயாராகும் காட்சிகளில் மனதை கவர்ந்து விடுகிறார். முதல் முழுக்க சரத்குமார் ஆதிக்கம் என்றால் இரண்டாம் பாதி முழுக்க சித்தார்த்துக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரும் தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் எல்லாம் உடலை குறுக்கி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கிறார். ஒவ்வொரு பருவத்திலும் அவரது முகத்திலும், நடிப்பிலும் காட்டும் வெரைட்டி ரசிக்க வைக்கிறது. ’குட் நைட்’ படத்துக்குப் பிறகு மீதா ரகுநாத்துக்கு இது முக்கியமான கதாபாத்திரம். அண்ணனுக்காக தன்னுடைய தேவைகளை குறைத்து கொள்ளும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார். கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்த சைத்ரா மற்றொரு ஆச்சர்யம். சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். படத்தில் தேவயாணி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே கணவருக்கு ஆறுதல் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். படத்தின் இன்னொரு பலம் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை. நெகிழ வைக்கும் காட்சிகளுக்கு அவரது இசை பெரிதும் கைகொடுத்திருக்கிறது. பாடல்களில் ‘கனவெல்லாம்’, ‘துள்ளும் நெஞ்சம்’ பாடல்கள் சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு நேர்த்தி. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்த வீடு கனவு இருக்கும்தான். ஆனால் அதற்காக சொந்த வீடு இல்லையென்றால் வாழவே முடியாது என்பதைப் போல குடும்பத்தில் உள்ள அனைவரும் அழுது வடிந்துகொண்டே இருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஒரு காட்சியில் தன் தம்பி சுப்பு பஞ்சுவிடம் சென்று வீடு வாங்க கடன் கேட்கிறார் சரத்குமார். அப்போது ஓர் இடத்தில் சொந்த வீடு தான் மரியாதை என்று ஒரு வசனம் வருகிறது. கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவதில் அப்படி என்ன மரியாதை? அதே போல தன்னுடைய கனவை எந்நேரமும் தன் மகன் சித்தார்த் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார் சரத்குமார். இரண்டாம் பாதியில் அதை அவர் உணர்வதை போன்ற காட்சிகளை இன்னும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து படித்து, அந்த துறையிலேயே வேலைக்கு செல்லும் சித்தார்த் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வீட்டிலேயே தனக்கு பிடித்த துறையை படித்து வேலைக்கு செல்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். அந்த காட்சிகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே போவதைப் போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம். மேற்சொன்ன சில குறைகளை தாண்டி எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் மிடில் கிளாஸ் குடும்பங்கள் படும் சிரமங்களை, கனவை நிறைவேற்ற சந்திக்கும் போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இந்த ‘3பிஹெச்கே’வை வரவேற்கலாம். 3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி? | 3BHK Movie review - hindutamil.in
-
பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்!
04 Jul, 2025 | 04:06 PM வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால் இன்று வெள்ளிக்கிழமை (04) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து முன்னமே பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் இன்றையதினம் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான். இதனையடுத்து, வலயக் கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மாணவனை சுற்றுலா அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்! | Virakesari.lk
-
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா தொடக்க நிகழ்வு; மக்கள் அவதானம்!
'சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்கா'வின் பிரமாண்ட திறப்பு விழாவுக்கு டிக்கெட்டுகள் இல்லை ; தனிப்பட்ட அழைப்புகள் மாத்திரமே. 04 Jul, 2025 | 04:11 PM கொழும்பில் 'சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்கா'வின் பிரமாண்ட திறப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில், இந்த திறப்பு விழாவுக்கு போலி டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்காவின் நிர்வாகம் உத்தியோகபூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த திறப்பு விழா நிகழ்வில் தனிப்பட்ட அழைப்பிதழ் வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும். திறப்பு விழா தொடர்பாக டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை என ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். “உத்தியோகபூர்வமற்ற போலி டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், இந்த டிக்கெட்டுகளை வாங்குவதை தவிர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏதேனும் துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள தங்கள் உத்தியோகபூர்வ தொடர்பு வழிகள் ஊடாக அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 'சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்கா'வின் பிரமாண்ட திறப்பு விழாவுக்கு டிக்கெட்டுகள் இல்லை ; தனிப்பட்ட அழைப்புகள் மாத்திரமே | Virakesari.lk
-
எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம்
03 Jul, 2025 | 11:13 AM எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. பொரும்பாலான பயணிகளின் மனதை வென்ற நம்பகமான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை காணப்படுகிறது. LMD வர்த்தக சஞ்சிகையின் விரும்பத்தக்க அதிக தரம் கொண்ட விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை காணப்படுகிறது. சஞ்சிகை ஊடாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து நாடளாவிய ரீதியில் உள்ள பல மக்கள் அறிந்து கொண்டனர். LMD என்பது இலங்கையின் பிரபல வர்த்தக சஞ்சிகையாகும். பயணிகளுக்கு நம்பகமான சேவையை வழங்குவது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை பெருமை கொள்கிறது. ஒவ்வொரு பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை மதித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சேவையை வழங்குகின்றது. ஸ்ரீலங்கன் விமான சேவையானது ஐரோப்பா, இந்திய துணைக் கண்டம், மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் ஓசியானியா ஆகியவற்றிற்கு ஒவ்வொரு வாரமும் சுமார் 300 தடவைகள் விமான சேவைகளை வழங்குகின்றது. இது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் முன்னேற்றம் மற்றும் சேவையை இது எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய ரீதியில் உள்ள பயணிகளின் விரும்பத்தக்க விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை காணப்படுகின்றது. எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம் | Virakesari.lk
-
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் ; சுமார் 67,000 பன்றிகள் பாதிப்பு
03 Jul, 2025 | 02:24 PM நாட்டில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இந்நோய் கொடிய வைரஸ் நோய் தாக்கத்தினால் சுமார் 67,000 பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அராசங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிப் பொருட்களைப் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு முற்றாக தடை தடை விதித்தல் உட்பட கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில்,மேல், ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட பல மாகாணங்களில் இந்த வைரஸ் நோய் வேகமாகப் பரவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வைத்தியசர கொத்தலாவல சுட்டிக்காட்டினார். இந்த நோய் 100 சதவீதம் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை 95 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ச்சியான விழிப்புணர்வு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க பண்ணையார்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். "பதிவு செய்வதன் ஊடாக உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தவும் எதிர்கால இழப்புகளைக் குறைக்கவும் எங்களுக்கு உதவுகிறது" என தெரிவித்துள்ளார். ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் ; சுமார் 67,000 பன்றிகள் பாதிப்பு | Virakesari.lk
-
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர்
03 Jul, 2025 | 04:46 PM இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில்கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்டத் தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட பிராந்திய மீனவர்களின் பாரிய பிரச்சினையாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை காணப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கச்சத்தீவு மீட்பு போராட்டம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் கூறப்பட்ட விடயம் குறித்தும் அதற்கான தக்க பதிலடியை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளார். எமது கடற்றொழில் அமைச்சர் வழங்கிய பதிலை நாங்களும் கூற விரும்புகிறோம். இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்து எமது கடல் வளத்தை நாசப்படுத்துவதும், இராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தச் சொல்வதும் கால அவகாசத்தை கோருவதாகவும் காணப்படுகிறது. இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான கடற்றொழிலையே செய்கின்றனர். இதனை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கும்போது அதற்கான பல்வேறு விடயங்களை இலங்கை விட்டுக் கொடுத்துள்ளது. எமது மீனவர்களின் பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டதாக காணப்படுகிறது. இலங்கை வட பகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது மீனவர்களின் வயிற்றில் அடிக்கிற செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில் கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல், எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர் | Virakesari.lk
-
நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு
03 Jul, 2025 | 05:40 PM நாட்டில் நாய்க்கடி அதிகரிப்பதற்கு, அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கை மற்றும் கால்நடைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பொதுமக்களிடம் புரிதல், போதிய கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இன்மையே முக்கிய காரணம் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க, 2000 ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு ரேபிஸ் வைரஸ் எனப்படும் விசர் நாய் கடி நோயை ஒழிக்க நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விசர் நாய் கடி கட்டளைச் சட்டத்தின் படி, தெருநாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களைப் பிடிக்கவோ அல்லது கருணைக்கொலை செய்யவோ அதிகாரிகள் ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். மனிதர்களுக்கு விசர் நாய் கடி நோய் ஏற்படுவதை தடுக்க சுகாதார அமைச்சு முக்கிய பங்காற்றி வருகிறது என்றாலும் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்ட விசர் நாய் கடி கட்டுப்பாட்டிற்கான பொறுப்பு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் (DAPH) கீழ் வருகிறது. 2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை, அரசாங்கக் கொள்கையின்படி நாய்களைப் பிடிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக, நாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்க சுகாதார அமைச்சு கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஒரு கட்டத்தில், கால்நடை இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த டெப்போ - புரோவெரா ஊசியைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இந்த முயற்சி பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது, சுகாதார அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33,000 நாய்களுக்கு கருத்தடை செய்கிறது. இருப்பினும், நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்த இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு குறைந்தது 100,000 ஆக அதிகரிக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக, சரியான குப்பைகள் அகற்றப்பட வேண்டும். வீதியோரங்களில் குப்பைகளை கொட்டுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கால்நடைகளின் நடத்தை தொடர்பில் குறிப்பாக சிறுவர்களுக்கு பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவை அதிகரிக்க வேண்டும். நாய் கடியில் இருந்து எவ்வாறு தடுப்பது என்பதை பொது மக்கள் கற்றுக்கொள்வதும், நாய்கள் ஏன் கடிக்கக்கூடும் என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம். இது சம்பந்தமாக, கால்நடை பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டங்களில் கல்வி அமைச்சு தீவிர நாட்டம் காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு | Virakesari.lk
-
செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை
03 Jul, 2025 | 05:40 PM செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாக பிரிட்டிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஸ் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் பொறுப்புக்கூறலி;ற்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் செம்மணியில் மனித புதைகுழி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளிற்கான பொறுப்புக்கூறலிற்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உட்பட பலரை சந்தித்து உரையாடியதை நினைவுகூர்ந்துள்ள அவர் இலங்கையில் காணாமல்போனவர்களிpன் உறவுகளுடன் பிரிட்டிஸ் தூதரகம் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது என தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை | Virakesari.lk
-
யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு!
03 Jul, 2025 | 07:14 PM யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களில் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு! | Virakesari.lk
-
பிரபல அரசியல்வாதிகள் இருவர் கைது?
அரசியலில் பிரபலமடைந்த அரசியல்வாதிகளில் இருவர், இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து அதிர்ச்சியான நடவடிக்கைளில் ஈடுபட்ட இருவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும், இலஞ்சம் ஊழல் பற்றி இவ்விருவருக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. Tamilmirror Online || பிரபல அரசியல்வாதிகள் இருவர் கைது?
-
செம்மணிப் புதைகுழி விவகாரம்; செயற்கை நுண்ணறிவால் விசாரணைகள் சீர்குலைவு
செம்மணிப் புதைகுழி விவகாரம்; செயற்கை நுண்ணறிவால் விசாரணைகள் சீர்குலைவு கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புச் சிதிலங்கள் மற்றும் சான்றுப் பொருள்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவுப் படங்கள், குற்றவியல் விசாரணைகளை சீர்குலைக்கின்றன என எச்சரிக்கப்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழியில் சமீப நாள்களாக பல்வேறு மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு நாள்களாக மனிதச் சிதிலங்களுக்கு மேலதிகமாக புத்தகப்பை, வளையல்கள். பாதணிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து செயற்கை நுண்ணறிவின் உதவுடன் போலியானதும் கற்பனையானதுமான படங்களை இணையப் பயநர்கள் உருவாக்குவதுடன் அவற்றை சமூகவலைத் தளங்களில் பரவவும் விட்டுள்ளனர். இந்தச் செயற்பாடுகள் குற்றவியல் விசாரணைகளை சீர்குலைக்கின்றன. அத்துடன், விசாரணைகளின் நோக்கங்களில் அல்லது செல்நெறிகளில் வலிந்து தலையீட்டையும், திசைதிருப்பலையும் ஏற்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது. இதையடுத்தே, இவ்வாறான ஒளிப்படங்களைப் பகிர்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செயற்கை நுண்ணறிவுப் படங்களால் உண்மையாகப் பாதிக்கப்பட்டவரின் உரு அடையாளங்கள் மாற்றப்படும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு ஒளிப்படங்களின் உண்மையை ஆராயாமல் அவற்றை உண்மையென நம்பி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று உரையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. செம்மணிப் புதைகுழி விவகாரம்; செயற்கை நுண்ணறிவால் விசாரணைகள் சீர்குலைவு
-
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 38 எலும்புக்கூடுகளில் குறைந்தது 10 சிறுவர்கள், குழந்தைகளுடையதென சந்தேகம் !
02 Jul, 2025 | 10:02 AM இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு அருகில், நீல நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு செருப்பு கண்டெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 38 எலும்புக்கூடுகளில், குறைந்தது 10, சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் அடங்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது நீதிமன்றத்தால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "ஏற்கனவே ஒரு பையுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு, நாள் முழுவதும் தோண்டப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது," என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் குறிப்பிடுகின்றார். ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 33 மனித எலும்புகளுக்கு மேலதிகமாக ஐந்து மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டாலும், எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தோன்றுவதால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என அவர் மேலும் கூறினார். "முழு நாள் அகழ்வுப் பணியில் சுமார் ஐந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது. குழப்பமாக காணப்படுகிறது." தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் அடையாளம் காணப்பட்டு, மனித எலும்புகள் இருக்கக்கூடிய இடங்களாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணிகள், திங்கட்கிழமை (01) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 1990 களில் செம்மணி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி கிளிபர்ட் பெரேரா அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு, அகழ்வாராய்ச்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் அகழ்வாராய்ச்சி தொடர்பான பழைய தகவல்களைப் பற்றி விவாதித்ததாகவும் சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார். செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு வரையிலான புதைகுழிகள் இருப்பதாக, செப்டம்பர் 7, 1996 அன்று பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தின் நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக்கூண்டில் இருந்தவாறு தெரிவித்திருந்தார். 1999 ஆம் ஆண்டு அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. எஞ்சிய 13 உடல்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வாராய்ச்சிகள் மே 15 ஆம் திகதி தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பமானது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 38 எலும்புக்கூடுகளில் குறைந்தது 10 சிறுவர்கள், குழந்தைகளுடையதென சந்தேகம் ! | Virakesari.lk
-
நிபந்தனைகள் இன்றியே இலங்கைக்கு உதவுகிறோம்; பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை - இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
02 Jul, 2025 | 01:22 PM ரொபட் அன்டனி இந்தியா இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பராகவும், மிகவும் நம்பத்தகுந்த பங்காளியாகவும் உள்ளது என்பதை தெரிவிக்கிறோம். நிபந்தனை இல்லாமல் நாங்கள் உதவிகளை செய்கிறோம். பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை. நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நீடித்த உறவுகளை உருவாக்குவதிலும் இலங்கையின் உதவி மட்டுமே எங்களுக்குத் தேவையாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இன்று நாம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை வந்துள்ள இந்திய பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான வரவேற்பு நிகழ்வு கொழும்பு ஐ.டி.சி. ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டார். இலங்கை வந்துள்ள சஞ்சீவ் பூரி தலைமையிலான இந்தியாவின் பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், வலுசக்தி அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர். இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையில் நல்ல அறிகுறிகளைக் காட்டும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இது வெறும் அரசாங்கம் மட்டுமல்ல. இந்தியாவின் பரந்த சமூகமும், வணிகங்களும் அதன் ஒரு பகுதியாக, ஒரு தேசிய முயற்சியாக எங்கள் முயற்சிகளை ஆதரிக்கின்றன. இந்த பிரதிநிதிகள் குழு மிக விரிவான துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நமது உறவின் கிட்டத்தட்ட அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியிருப்பதற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆறு மாதங்களாக எமது உறவில் நாம் கண்ட மிகப் பெரிய வெற்றிகளின் பின்னணியில்தான் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த டிசம்பரில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்துடன் இது தொடங்கியது. அவர் பதவிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு விஜயம் அதுவாகும். அதைத் தொடர்ந்து ஏப்ரலில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் மிக வெற்றிகரமான இலங்கை விஜயம் இடம்பெற்றது. புதிய அரசாங்கத்தால் இலங்கையில் வரவேற்கப்பட்ட முதல் தலைவர் இந்திய பிரதமர் மோடி என்பது, எமது பார்வையில், இருதரப்பு உறவின் மிக அத்தியாவசியமான தன்மையைப் பிரதிபலிக்கிறது. நாங்கள் 'அண்டை நாடுகள் முதலில்' என்ற கொள்கையைக் கொண்டுள்ளோம். ஆனால் இலங்கை சில விஷயங்களிலாவது 'இந்தியா முதலில்' என்பதை நிரூபித்துள்ளது. இது ஒரு மிக மிக நேர்மறையான அறிகுறியாகும். ஜனாதிபதியின் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை மற்றும் பின்னர் பிரதமரின் விஜயத்தின்போது கையெழுத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் மூலம் எமது உறவை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒரு மிக மிக வலுவான அடிப்படை உள்ளது. இது உறவின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தியுள்ளது. இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு ஆகியவை எமது உறவின் ஐந்து முக்கிய தூண்களாகும். இவற்றில் ஒவ்வொன்றும் முன்னேறியுள்ளன. ஒவ்வொன்றும் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. நாங்கள் இலங்கைக்கு மிக ஆழமாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 13 அல்லது 14 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2022இல் நாங்கள் இலங்கைக்கு வழங்கிய அவசரகால உதவியின்போது வழங்கப்பட்ட கடன்களுக்கான மறுசீரமைப்பு இம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பராகவும், மிகவும் நம்பத்தகுந்த பங்காளியாகவும் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம். நிபந்தனை இல்லாமல் இதை நாங்கள் செய்கிறோம். பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை. நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நீடித்த உறவுகளை உருவாக்குவதிலும் உங்கள் உதவி மட்டுமே எங்களுக்குத் தேவையாகும். இந்த நன்மைகள் இலங்கைக்கு அதிகமாக இருந்தாலும் நாங்கள் பொருட்படுத்தமாட்டோம், ஏனென்றால் இலங்கை எமது சகோதர நாடு, இன்று நாம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்றார். நிபந்தனைகள் இன்றியே இலங்கைக்கு உதவுகிறோம்; பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை - சந்தோஷ் ஜா | Virakesari.lk
-
அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
02 Jul, 2025 | 03:35 PM இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (02) அனுமதி வழங்கியுள்ளது. அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் என்பவரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், “இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்ட காலப்பகுதியில் வைத்தியர் துறையிலிருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்துள்ளார்.” “இதனால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் ” என சட்டத்தரணி அசோக் பரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார். அதன்படி, அவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று சட்டத்தரணி குறிப்பிட்டார். இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது. இதேவேளை, இந்த மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது. எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு | Virakesari.lk
-
தமிழை விட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு: சீமான் ஆவேசம்
சென்னை: “தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவை இந்து நாடாக கட்டமைக்கும் ஓர் முயற்சியாகும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 2014-25 வரையிலான ஆட்சிகாலத்தில் சமஸ்கிருத மொழியை பரப்ப ரூ.2,532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழுக்கு ஓராண்டு சராசரியாக ரூ.13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது. இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் துளியளவும் பயனளிக்காது. மொத்தமாகவே 10 ஆயிரம் மக்கள் கூட பேசாத ஒரு மொழியை வளர்த்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியை அழிப்பதை எப்படி ஏற்பது? நம் நாட்டில் பிரிவினைவாதிகள் என்று யாரும் தனியாக இல்லை. ஒரு மொழியைத் திணித்து, ஒரு மொழியை வளர்ப்பதன் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் ஆட்சியாளர்கள்தான் உண்மையான பிரிவினைவாதிகள். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்று ஒவ்வொன்றாக ஒற்றைமயப்படுத்தி திணிக்கின்ற கொடுமை நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை. எனவே அனைத்து மொழிகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழை விட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு: சீமான் ஆவேசம் | Sanskrit is being allocated more funds than Tamil - Seeman - hindutamil.in
-
சகோதரனின் பாலர் பாடசாலை மகள் துஷ்பிரயோகம்: 68 வயதானவருக்கு 60 ஆண்டுகள் சிறை
தனது சொந்த சகோதரனின் பாலர் பாடசாலை மகளை இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக 68 வயதுடைய ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவிதான 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ. 30,000 அபராதம் விதித்தார், மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு வழங்கவும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். குற்றத்தின் மனிதாபிமானமற்ற தன்மை மற்றும் கொடூரத்தை வலியுறுத்தி, "இது ஒரு குழந்தைக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, மனிதகுலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல்" என்று நீதிபதி கூறினார். என்ன நடக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இளமையாக இருந்த குழந்தை, ஒரு முறை தனது தாயிடம், "அம்மா, அந்த 'ஹோல்மன் பாப்பா'வை மீண்டும் எங்கள் வீட்டிற்கு வர விடாதே" என்று கூறியதாக ஆதாரங்கள் வெளிப்படுத்தின, பின்னர் சாட்சி சாட்சியத்தின் மூலம் ஒரு அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டது. குற்றவாளி குழந்தையின் வீட்டிற்குள் நுழைந்து, யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை தனது சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று குற்றத்தைச் செய்ததாக அரசு தரப்பு வெளிப்படுத்தியது. அதன்பிறகு, அவர் குழந்தையை மிரட்டி, நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும், அப்படிச் சொன்னால், இது மீண்டும் நடக்கும் என்றும் எச்சரித்தார். இந்த மிரட்டலின் விளைவாக, அந்தக் குழந்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளது. அனைத்து ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, அரசு தரப்பு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்கை நிரூபித்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். Tamilmirror Online || சகோதரனின் பாலர் பாடசாலை மகள் துஷ்பிரயோகம்: 68 வயதானவருக்கு 60 ஆண்டுகள் சிறை