Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு - மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு. 31 Mar, 2025 | 05:07 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். மகன் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , மகனின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் மாணவனின் தந்தை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவன், நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர். தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மாணவனுக்கு கட்டாயப்படுத்தி பனடோல் பருக கொடுத்து, தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்டுள்ளனர். பின்னர், குறித்த மாணவன் கூகுள் வரைபட உதவியுடன் தனது பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். தாக்குதல் மற்றும் சித்திரவதைக்குள்ளான நாத்தாண்டியா பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உடலளவிலும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும் கோரியுள்ள தந்தை, பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு - மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Virakesari.lk
  2. 31 Mar, 2025 | 05:17 PM முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த இளைஞனின் கைதுக்கான பல காரணங்களை தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞன் இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களில் கருத்துவெளிப்பாட்டில் ஈடுபட்டான் என தெரிவிக்கின்றனர், இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் என்றால் அது யூத எதிர்ப்பு. இந்த நாட்டில் வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன, அந்த இளைஞன் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கவேண்டும். நான் இவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நம்புகின்றேன் என தெரிவிக்கவில்லை ஆனால் அந்த இளைஞர் அவ்வாறு செயற்பட்டிருந்தால் குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் இந்த விவகாரத்தை கையாண்டிருக்கவேண்டும். வெறுப்பு பேச்சுக்காக மக்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்கின்றீர்கள் என்றால் நாட்டில் அதிகளவான மக்களையும், நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்களையும் இதற்காக கைதுசெய்யவேண்டும். வெறுப்பு பேச்சு என்பது தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நாங்கள் கேள்விப்படாத விடயம் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லீம்கள் எவ்வளவு குரோத பேச்சுக்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்பது எங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அவ்வாறான வெறுப்பு பேச்சுக்களில் ஈடுபட்ட எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது கேள்விக்குரிய விடயம். ஆகவே நாங்கள் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆபத்தினை பார்க்கின்றோம்,அது எவ்;வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எவ்வளவு தூரம் இந்த அரசாங்கத்தினாலும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை காண்கின்றோம். முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது- சுவஸ்திகா | Virakesari.lk
  3. துபாயிலிருந்து வந்தவரின் பணத்தைத் திருடி காதலியிடம் கொடுத்த வாடகை வாகன சாரதி கைது Published By: Digital Desk 2 31 Mar, 2025 | 05:49 PM துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவரின் கைப்பையில் இருந்து ஒன்பது இலட்சத்து நான்காயிரத்து நானூறு ரூபா பணத்தை திருடிய வாடகை வாகன சாரதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவது, கடந்த சனிக்கிழமை (29) துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து வாடகை வாகனம் ஒன்றில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த நபர் தனது மடிக்கணினி அடங்கிய கைப்பையை தவறுதலாக வாடகை வாகனத்திலேயே விட்டுச் சென்றுள்ளார். பின்னர் குறித்த நபர் தனது மடிக்கணினி அடங்கிய கைப்பை தொடர்பில் குறித்த வாடகை வாகனத்தின் சாரதியிடம் கேட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரான வாடகை வாகனத்தின் சாரதி, அந்த கைப்பை தனது காரில் இருப்பதாகவும், அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். பின்னர் குறித்த நபர் இன்று திங்கட்கிழமை (31) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வாடகை வாகனத்தின் சாரதியிடம் இருந்து தனது மடிக்கணினி அடங்கிய கைப்பையை பெற்றுக்கொண்டு அதனை சோதனையிட்ட போது கைப்பையிலிருந்த 904,400 ரூபா பணம் காணாமல்போயிருப்பதை அறிந்துள்ளார். இதனையடுத்து குறித்த நபர் இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வாடகை வாகனத்தின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பணம் வாடகை வாகன சாரதியின் காதலியிடம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சந்தேக நபரான வாடகை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். துபாயிலிருந்து வந்தவரின் பணத்தைத் திருடி காதலியிடம் கொடுத்த வாடகை வாகன சாரதி கைது | Virakesari.lk
  4. ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் யுக்தியிலேயே புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். குடும்பஸ்தனாகக் காதல் மனைவியுடன் சேட்டை, குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வதில் பதற்றம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற இடத்திலும் பயத்தைத் துளிகூட காட்டாத நெஞ்சுரம் எனப் பட்டையைக் கிளப்பி கமர்ஷியல் ரூட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். குறிப்பாக, வசனங்களாகச் செல்லும் காட்சிகளில் அவர் போடும் ‘டேய்’ கூட அப்லாஸ் அள்ளுகிறது. காதல் கெமிஸ்ட்ரியில் ஹார்ட் வாங்கும் துஷாரா, "என்ன நடக்கிறது" என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக் கடத்தி, நடிப்பில் சபாஷ் வாங்குகிறார். சூது, வன்மம், சூழ்ச்சி என ராட்டினம் போலச் சுழலும் கதாபாத்திரத்தை, தன் நடிப்பு எனும் அச்சாணியைக் கொண்டு நிலை நிறுத்தி மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. மகனைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் பிருத்வி, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் சூரஜ் வெஞ்சரமூடு என இருவரும் வில்லனிசத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இவர்களின் குடும்பப் பெண்களாக வரும் கதாபாத்திரங்களும் கோபத்தைத் தூண்டும் அளவில் படு ரியலான நடிப்பைக் கொடுத்து பாஸ் ஆகிறார்கள். பாலாஜி எஸ்.யூவின் குணச்சித்திர நடிப்பும் படத்துக்கு வலு சேர்க்கிறது. நிசப்தமான சூழலில் கேட்கும் கடிகார முள்ளின் ஒலியைப் போல, ‘திக் திக்’ திரில் உணர்வை தன் பின்னணி இசையில் கடத்தி, கதையோடு சேர்ந்து பயணிக்க வைத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். அதிலும் அந்த மாஸ் பி.ஜி.எம்., படம் முடிந்த பின்னரும் மனதில் நிற்கும் அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாடல்கள், திரைக்கதையின் போக்கைத் தொந்தரவு செய்யாமல் கடந்து போகின்றன. இரவு நேரத்தில் நடக்கும் கதைக்கு பக்காவான லைட்டிங், உணர்வுகளைத் துண்டிக்காத சிங்கிள் ஷாட் காட்சிகள் என நேர்த்தியான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அதிலும் திருவிழாக் காட்சிகளில் கலை இயக்குநர் சி.எஸ். பாலசந்தரின் உழைப்பைப் பிரமாண்டமாகத் திரையில் கொண்டு வந்திருப்பது சிறப்பு. வீர தீர சூரன் பாகம் 2 திரைக்கதையின் 'பக் பக்' துடிப்பை முதல் பாதியில் அற்புதமாகக் கடத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே. ஆனால், இரண்டாம் பாதியின் பிளாஷ்பேக் பகுதியில் சற்றே கறாராகக் கத்திரி போட்டிருக்கலாம். ‘பீனிக்ஸ்’ பிரபுவின் துப்பாக்கிகள் தெறிக்கும் சண்டைக் காட்சியின் வடிவமைப்பு, படத்தின் முக்கிய ப்ளஸ்ஸாக அமைகிறது. அதிலும், துப்பாக்கிச் சூட்டில் தொடங்கி, கார் வெடித்துச் சிதறும் இடம் வரை தொடரும் காட்சி, சிறப்பான திரையாக்கத்துக்கு உதாரணம்; படக்குழுவின் உழைப்புக்குப் பாராட்டுகள். ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் யுக்தியிலேயே புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். மனித மனங்களுக்குள் மண்டிக் கிடக்கும் வன்மத்தைப் பட்டாசாக மாற்றி, அதற்கு நீண்ட திரியை வைத்துக் கொளுத்திவிட்டது போல, 'எப்போது வெடிக்கும், எப்போது வெடிக்கும்' என்று எழுதப்பட்ட திரைக்கதை, இருக்கை நுனியில் கட்டிப்போடுகிறது. ஒருவித பதற்றமான சூழலிலேயே வைத்திருக்கும் திரையாக்கம், எந்த இடத்திலும் நம்மைக் கதை மாந்தர்களைவிட்டு விலகாத வண்ணம் பார்த்துக்கொள்கிறது. அதேபோல, நாயகனின் பாசத்தைப் பாடல் காட்சிகளின் மாண்டேஜிலேயே சொன்ன விதமும் ஹைக்கூ டச்! போலீஸ் என்கவுன்ட்டர், கஸ்டடி மரணம் ஆகிய முக்கிய பிரச்னைகளை சற்றே தொட்டிருந்தாலும், அதை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம். வீர தீர சூரன் பாகம் 2 முன்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும் விக்ரமும் ஒரே அறைக்குள் பேசிக்கொள்ளும் இடம், போலீஸ் ஸ்டேஷன் கொலை என இரண்டாம் பாதியின் மாஸ் காட்சிகள் மண்டையில் ஒட்டிக்கொண்டாலும், அதன் நீளம் முதல் பாதியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. பழி வாங்கும் படலத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் டீல் பேசிக்கொள்ளும் போக்கு, ஆரம்பத்தில் திரைக்கதையின் வேகத்தை அதிகரிக்க உதவினாலும், இறுதியில் சற்றே அயர்ச்சியைத் தருகிறது. அதேபோல, இறுதிக் காட்சியில் அத்தனை கொடூரமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க, போலீஸ் காட்சிக்குள் வந்தும் பின்னர் காணாமல் போவது ஏன் என்பது புரியவில்லை.
  5. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்லவின் ஆலோசனையின் பேரில், தரமற்ற மருந்துகளை வழங்குவதற்காக இந்திய மருந்து நிறுவனத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் முன் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் விசாரணைக்காக ஆஃப் கமிட்டியின் முன் அழைக்கப்பட்டபோது இந்த தகவல் தெரியவந்தது. அந்த மருந்துகளுக்கு செவெரிட் நிறுவனத்தைச் சேர்க்க செயலாளர் அறிவுறுத்தியதாகவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல செயலாளருக்கு அறிவுறுத்தியதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் சப்ளையர் தொடர்பில் ஒரு முன்மொழிவை முன்வைத்ததாக தெரிவித்தார். 151 மருந்துகளும் 5278 அறுவை சிகிச்சை கருவிகளும் பற்றாக்குறையாக இருப்பதாக தகவல் உள்ளதா? என்று கோப் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர கேள்வி எழுப்பினார். Tamilmirror Online || தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்ய கோரியவர் கெஹலிய
  6. 28 Mar, 2025 | 03:58 PM யோகட் சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் மரக்கரண்டிகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபய தெரிவித்தார். மில்கோ நிறுவனத்தின் எதிர்கால திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யோகட்டுடன் வழங்கப்படும் கார்ட் போர்டு கரண்டிகளை குழந்தைகள் அதிக நேரம் வாயில் வைத்திருப்பதால் அந்த கரண்டி சிறிது நேரத்தில் உருகி விடுகிறது. அத்துடன் இந்த கார்ட் போர்டு கரண்டிகள் குறித்து வாடிக்கையாளர்கள் பல்வேறு முறைப்பாடுகளை அளித்துள்ளனர். இவற்றை கருத்தில் கொண்டு யோகட்டுடன் மரக்கரண்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நாட்டில் இந்த மரக்கரண்டிகள் போதிய அளவு உற்பத்தி செய்யப்படாமையால், அவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. யோகட் சாப்பிட பயன்படுத்தப்படும் மரக்கரண்டிகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி ? | Virakesari.lk
  7. 28 Mar, 2025 | 05:50 PM பிறப்பாலும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் எங்களுடைய கைகளிலேயே துப்பாக்கிகள் திணிக்கப்பட்டன. அதற்கான காரணக் கதைகளைக் கூறாமல், எம்மை திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரமாக சித்திரிப்பதற்கு முனைகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிரான் ரெஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ஒரு உறுதியான அமைப்பாக கிழக்கு மாகாண அரசியல் சமூக பொருளாதார மேம்பாட்டின் ஆரம்பமாக மிளிர வேண்டும் என்று ஒரு நல்ல சிந்தனையோடு நாங்கள் கூடியிருக்கின்றோம். உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றி என்பது உள்ளூர் தலைவர்களை உருவாக்குவதற்கான வெற்றியாகும். உள்ளூர் அதிகார சபைக்காக போட்டியிடுபவர்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியிலேயே அமைந்திருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மிகவும் கவனமாக செயற்படவேண்டியுள்ளது. கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ் ஹக்கீம் இந்த மண்ணிலே சுமார் 40,000 ஏக்கரை பரிபாலனம் செய்வதற்காக கேட்கின்றார். ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் 70,000 ஏக்கரை நிர்வகிக்க வேண்டும் எனக் கேட்கின்றார். இவ்வாறுதான் பிரச்சினைகள் இருந்துகொண்டிருக்கின்றன. அதிகம் பேர் ஏன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், கருணா அம்மானும் மீண்டும் சேர முடியாது எனக் கேட்டார்கள். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்திருந்தோம். அது இப்போது சாத்தியமாகி இருக்கின்றது. காலம் தாழ்த்திய முடிவாக இருந்தாலும் சாலப் பொருத்தமான முடிவு எனப் பெரியவர்கள் கூறுகின்றார்கள். அதற்காக உழைத்தவர்தான் முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன். கருணா அம்மானை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்திருப்பதானது எம்முடைய தோல்வி அல்ல, அது இந்த அரசாங்கத்தினுடைய இராஜதந்திர தோல்வியாகத்தான் என்னால் பார்க்க முடியும். அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தினுடைய தலைவிதியை மாற்ற வேண்டிய, கிழக்கு மாகாண மக்களை தூக்கி நிறுத்தவேண்டிய விடயங்கள் எல்லாம் எங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டு இருக்கின்ற விடயங்களாக உள்ளன. கருணா அம்மானோ அல்லது ஜூலை கலவரமோ எல்லாவற்றுக்கும் அடித்தளமிட்டவர்கள் யார்? 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுத்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை தேடி கற்றுக்கொள்ளுங்கள். விடப்பட்ட சொல்லாடல்களும் கருத்தாடல்களும்தான் அன்று எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை தலைவர் ஆக்கியது. அவர்கள் பற்ற வைத்த நெருப்பு பெரும் தீப்பொறியாக பல இயக்க தலைவர்களை உருவாக்கி திட்டங்களையும் துவக்குகளையும் ஏந்துகின்ற நிலையை எங்களுடைய காலடிக்கு கொண்டு வந்தது என்றார். துப்பாக்கிகள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டன - பிள்ளையான் | Virakesari.lk
  8. 28 Mar, 2025 | 05:17 PM ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கீரிப்பூனை ஜோடி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திலிருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வன விலங்குகள் சில கொண்டுவரப்பட்டன. இந்த வன விலங்குகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர்களால் சுமார் ஒரு மாத காலமாக பரிசோதனைக்குட்படுத்தட்ட நிலையில் அவற்றில் இருந்த கீரிப்பூனை ஜோடி ஒன்று தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 2 முதல் 6 வயது மதிக்கத்தக்க கீரிப்பூனை ஜோடி ஒன்றே இவ்வாறு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. Meerkat எனப்படும் இந்த கீரிப்பூனைகள் 15 வருடங்கள் உயிர் வாழும் என கூறப்படுகின்றது. இந்த கீரிப்பூனைகள் தென் ஆபிரிக்கா, போட்ஸ்வானா, நமீபியா ஆகிய நாடுகளில் பெரும்பாலும் காணப்படும். தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு புதிய நண்பர்கள் | Virakesari.lk
  9. 28 Mar, 2025 | 05:30 PM 2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 684,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 111,982 ஆகும். மேலும், ரஷ்யாவிலிருந்து 90,255 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 64,711 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 48,129 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 37,268 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 41,449 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 25,513 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk
  10. உண்மை. சிங்களம் தப்பிக்க தமிழர் தரப்பின் மேல் பழியை போடும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சரணடைய வந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளனர். கோத்தா தான் இதற்கு உத்தரவு இட்டது. அத்துடன் பாலச்சந்திரன் இவர்களுடன் சேர்ந்து சரணடைய வரவில்லை. தலைவரின் நெருங்கிய உறவு ஒருவரால் இராணுவம் அனைத்தையும் முழுமையாக கைப்பற்றிய பின் அழைத்துவரப்படும் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர் என்று தான் அறிந்தேன்.
  11. விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்திலுள்ள குரங்குகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டத்தின்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கப் பிரதேசத்தை அண்மித்த தீவுப் பகுதியில் மேற்படி குரங்குகள் கொண்டு போய் விடப்படவுள்ளன. இதற்காக குரங்குகளைப் பிரித்தல், அவற்றை கூடுகளில் அடைத்து எடுத்துச் செல்லல் மற்றும் அவை விடப்படும் இடங்களில் தேவையான மின்சார வேலிகள் போன்றவற்றை அமைத்தல் முதலான பல்வேறு பணிகளுக்காக இந் நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - கே.டி.லால்காந்த | Virakesari.lk
  12. 27 Mar, 2025 | 03:47 PM தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமே கிடையாது என கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்று (26) தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் இணைந்து அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குறிப்பாக, ஒலுவில், கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளுக்கு சென்று மீன்பிடி, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் அபிவிருத்தியின் தற்போதைய நிலைமைகளை அவதானித்தபோது அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் பங்குபற்றலுடன் நேற்று மாலை காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி மேற்கொள்வது தொடர்பாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா இருவரும் ஒலுவில், கல்முனை மற்றும் சாய்ந்தமருது முதலான பகுதிகளுக்கு கள விஜயம் செய்தனர். அவ்விடங்களில் மீன்பிடி, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் அபிவிருத்தி பணிகளின் தற்போதைய நிலைமைகளை பார்வையிட்டனர். இதன்போது, தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமே கிடையாது என்றார் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர். மேலும், நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் கூறுகையில், காரைதீவு மண் மகத்துவம் வாய்ந்தது. சுவாமி விபுலானந்தர் பிறந்த பெருமை உடையது. காரைதீவு என்பது ஒரு வரலாறு. ஒரு வாழ்வியல். இந்த மண்ணில் கால் பதிக்க வேண்டும் என்கிற எனது மிக நீண்ட நாள் அபிலாஷை இன்றுதான் நிறைவேறியுள்ளது. காரைதீவு பிரதேச மக்களின் பிரச்சினைகளை நாம் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். காரைதீவு மண்ணின் தனித்துவம் தொடர்ந்து பேணப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். ஆனால், தமிழர்கள் தமிழர்களாக வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ வேண்டும். சிங்களவர்கள் சிங்களவர்களாக வாழ வேண்டும். இதுதான் அழகு. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாடும் மக்களும் வீழ்ச்சி காண வேண்டியிருக்கும் என்று பீதியை காட்டினார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்த வேலைகளை அர்ப்பணிப்போடு மேற்கொண்டு வருவது கண்கூடு. இந்நாட்டு மக்களின் மனங்களை மாத்திரம் அல்ல. வெளிநாடுகளின் நம்பிக்கையையும் நாம் வென்றிருக்கிறோம். கமிஷன் அரசியல் செய்தவர்கள் நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டுச் சென்றுள்ளனர். நாங்கள்தான் நாட்டை நிமிர்த்திக் கொண்டிருக்கின்றோம். கமிஷன் அரசியல் எங்களிடம் இல்லை. வீண் விரயங்கள் மற்றும் செலவுகள் இல்லை. எமது ஆட்சியில் இலங்கை ரூபாவின் பெறுமதி ரொம்ப ரொம்ப குறைந்து அமெரிக்க டொலரின் பெறுமதி உச்சபட்சமாக அதிகரித்துவிடும் என்று பொய் பரப்பினார்கள். அவற்றை பொய்ப்பித்திருக்கிறோம். மிகக் குறுகிய காலத்துக்குள் நாட்டை சீராக நடத்திக்கொண்டிருக்கிறோம். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சிந்தனையில் மாணவர்கள், தாய்மார், இளையோர், முதியவர்கள் என்று எல்லோருக்குமான நலன்புரி செயற்றிட்டங்களையும் எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. சீனா உட்பட உலக நாடுகள் எமது மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களுக்கு பங்களிக்க முன்வந்துள்ளன. மக்கள் நலனே எமக்கு முக்கியம். கடற்றொழில் துறை மேம்படுத்தப்பட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் பெற வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு நாம் மிகச் சிறந்த கடல் வளத்தை கையளிக்க வேண்டும். கடல் வளம் நாசமாக்கப்படுவதையும் சூறையாடப்படுவதையும் அனுமதிக்க முடியாது. சட்ட விரோத மீன்பிடி நாட்டின் எல்லா இடங்களிலும் இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளது. சட்டவிரோத மீன்பிடியை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் பற்றுறுதியுடன் உள்ளது. இதன் மிக முக்கிய அம்சமாக சட்டவிரோத மீன்பிடியை இல்லாமல் செய்வதற்காக புதிய சட்டம் ஒன்றை விரைவில் கொண்டு வருகிறோம். இப்புதிய சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட முடியும். இப்பிராந்தியத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை நாம் அறிவோம். அவற்றை தீர்த்துத் தர என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவை பொதுமக்கள் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். நான் சொன்னபடி, நடந்துகொள்ளாவிட்டால் என்னை நீங்கள் காறி உமிழ்ந்து சிறுமைப்படுத்தலாம் என்றார். மேலும், மீனவர்கள் உட்பட பொதுமக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கான சந்திப்பினை தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அடங்கலாக கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அமைச்சர் சந்தித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது. தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk
  13. 27 Mar, 2025 | 06:10 PM கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம். ஆகவே, கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இருப்பே கேள்விக்குறியாகும் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார். கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழா கிரான் றெஜி மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒரு முக்கியமான தேர்தலாக பார்க்கின்றோம். முக்கியமாக முதல் முறையாக ஓர் அணியாக திரண்டு ஒரு கூட்டாக களமிறங்கியுள்ளோம். ஆகவே, ஒவ்வொரு வேட்பாளரும் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். தற்போது கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பலர் கலக்கமடைந்துள்ளதுடன் இவ்வளவு காலமும் இல்லாத எதிர்ப்பு உருவாகி கொதித்துக்கொள்கின்றனர். புலம்பெயர்ந்து வாழ்கின்ற படித்தவர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் சிந்திப்பதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை முதலில் தோற்கடிக்க வேண்டும். அவர்கள் போலி தேசியத்தை பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி இலஞ்சம் ஊழல் எல்லாவற்றையும் செய்கின்றனர். உண்மையில் போராளிகளாக இருந்தவர்கள், மாவீரர் குடும்பங்களாக இருந்து வந்தவர்கள் தான் எங்கள் மக்களை ஆளவேண்டும். அவர்களுக்குத் தான் இந்த உரிமையும் மக்களை நடத்தும் திறமையும் இருக்கின்றது. நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கியது உலகம் முழுக்க பேசும் பொருளாக பார்க்கப்படுகிறது. அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் கருணா அம்மானாகிய எனக்கு தடை விதித்தது. நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல்லாத தடை எதற்காக இப்போது விதிக்கின்றனர்? இது ஒரு அரசியலுக்கான நாடகம் தான். பிரித்தானிய அரசாங்கத்தால் நான் 2006இல் கைது செய்யப்பட்டு அங்கு சிறைச்சாலையில் 8 மாதங்கள் இருந்தேன். அப்போது கண்டுபிடிக்காத குற்றச்சாட்டை இப்போது தான் பிரித்தானிய அரசாங்கம் அந்த நேரம் கண்டுபிடித்து கையில் விலங்கை போட்டு கொண்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அரச மரியாதையுடன் கட்டுநாயக்க விமான நிலையம் வரை என்னை பாதுகாப்புடன் கொண்டு வந்தார்கள். அப்படிப்பட்ட பிரித்தானிய அரசாங்கத்துக்கு, இப்பத்தான் கருணா அம்மான் பிழை விட்டுள்ளார் என்று தெரிகிறது. ஆகவே, இதுவெல்லாம் கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கையாகும். காய்கின்ற மரத்துக்கு கல்லெறி விழும் என்ற பழமொழிக்கமைய வெற்றிக் குறி தென்படுகின்ற எம் மீது தான் இலக்கு வைக்கப்படுகிறது. கிழக்கு மாகாண சபையை நாங்கள் கைப்பற்றுவோம். கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் குட்டிச்சுவராகி இருப்பே கேள்விக்குறியாகும் என்றார். பிரித்தானிய தடை ஒரு அரசியல் நாடகம்! - கருணா அம்மான் | Virakesari.lk
  14. தேசியக்கொடியை இறக்கிய யாழ். பல்கலை மாணவர்கள் மீது பாயத்தயாராகிறது ஆணைக்குழு! நிர்வாகத்துக்கும் குடைசல் சுதந்திரதினத்தன்று தேசியக்கொடியை கீழிறக்கி, கறுப்புக்கொடியை ஏற்றிய யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 9 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக மானியங்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் முதற்கட்டமாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இது தொடர்பில் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கேள்வி கேட்டு விளக்கக்கடிதம் ஒன்றும் ஆணைக்குழுவால் அவசரமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் நம்பகரமாகத் தெரியவந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக முன்றலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. ஆயினும் அதனை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கீழிறக்கிவிட்டு, அதற்குப் பதிலாகக் கறுப்புக்கொடியை ஏற்றியிருந்தனர். இது தொடர்பான காணொலி சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் அத்தகையதொரு சம்பவம் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றதா என்பது தொடர்பிலும், இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரியுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒன்பது மாணவர்களின் விவரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வைத்துள்ள பல்கலைக்கழக ஆணைக்குழுத் தலைவர், சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றையும் கோரியிருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புத்தர்ப்பினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமே குறித்த 9 மாணவர்களின் விவரங்களும் ஒளிப்படங்களுடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும், அதனை அடிப்படையாக வைத்தே யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு குடைச்சல் கொடுத்து, அந்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மானியங்கள் ஆணைக்குழு முயல்வதாகவும் இதன்போது தெரிவிக்கப்படுகின்றது. தேசியக்கொடியை இறக்கிய யாழ். பல்கலை மாணவர்கள் மீது பாயத்தயாராகிறது ஆணைக்குழு!
  15. 26 Mar, 2025 | 04:00 AM யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரதேசபை தேர்தல் என்பது கிராம மட்டத்திலேயே உள்ள விடயங்களை கையாள்வதற்கு உரிய தேர்தலாகும் எனவே மக்கள் கிராமத்திலே செல்வாக்குரியவர்களுக்கு வாக்களிப்பார்கள் இது நிச்சயமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து அமோக வெற்றி அடைய செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்நிலையில் எமது வேட்பு மனுக்கள் 09 சபைகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார். யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம் ; 09 சபைகளை நிராகரித்து விட்டார்கள் - சித்தார்த்தன் | Virakesari.lk இதனை நகைச்சுவை பகுதியில் பதியவா என சில நிமிடங்கள் யோசித்தேன்...
  16. வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் 26 Mar, 2025 | 04:10 PM வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையிட்டு கலந்துரையாடினர். வவுனியாவுக்கு வருகை தந்த இந்தியாவின் இராமேஸ்வரம் மாவட்டத்தின் இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப் படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ, மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின், தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ், பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் புதன்கிழமை (26) வவுனியா சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டனர். எல்லை தாண்டியும், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியும் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 வரையான இந்திய மீனவர்களை அவர்கள் பார்வையிட்டதுடன், அவர்களது தற்போதைய நிலமை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர். வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த மீனவர்களை பார்வையிட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு விசேட ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தனர். வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் | Virakesari.lk
  17. 6 Mar, 2025 | 03:16 PM பிரிட்டன் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு அரசாங்கங்களால் அமைப்புகளால் துன்புறுத்தப்படு;ம் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் முன்னாள் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா முன்னாள் இராணுவதளபதி ஜகத் ஜெயசூரிய முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட ஆகியோருக்கு எதிராக போக்குவரத்து தடைகள் சொத்துமுடக்கம் உட்பட தடைகளை அறிவித்துள்ளது. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை காணப்பட்டபோதிலும்,2002 பெப்ரவரி முதல் செப்டம்பர் 2005 வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் 363 கொலைகளில் ஈடுபட்டனர். 2005 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் வாரங்களில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. இவற்றில் மிகவும் பாரதூரமான சம்பவங்களாக டிசம்பர் நான்காம், ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களை குறிப்பிடலாம்,2006ம் ஆண்டுஜனவரி 5ம் திகதிகடற்படை கலத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலையும்,2006ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இராணுவதலைமையகத்திற்குள் இராணுவதளபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் குறிப்பிடலாம். இவற்றிற்கு அப்பாலும் எனது அரசாங்கம் 2006 ஜனவரியிலும் ,ஜூன் மாதத்திலும் ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும், விடுதலைப்புலிகளுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது,எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியது. ஜூன் 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கெப்பிட்டிகொல்லாவையில் பயணிகள் பேருந்தின் மீது மேற்கொண்ட தாக்குதலே எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் மிகவும் முக்கியமான தருணம், இந்த தாக்குதலில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 86 பேர் காயமடைந்தனர்.இவர்களில் பலர் சிறுவர்கள். ஜூலை 2006 இல் மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப்புலிகள் மூடி திருகோணமலை மாவட்டவிவசாயிகளிற்கான நீர் விநியோகத்தை தடுத்ததை தொடர்ந்து யுத்தம் மீண்டும் ஆரம்பமானது.2009 மே மாதம் விடுதலைப்புலிகள் முற்றாக தோற்கடிக்கப்படும்வரை யுத்தத்தை நிறுத்தவில்லை. இராணுவநடவடிக்கைகளின் போது பரந்துபட்ட அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரிட்டன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன். வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்க வேண்டும் : மனித உரிமை குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார் மகிந்த | Virakesari.lk
  18. 26 Mar, 2025 | 04:36 PM இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (26) நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அன்னராசா இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமையினால் தமிழ்நாட்டிலும் வட மாகணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, கடந்த 9 வருடங்களாக நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு இரு நாட்டு மீனவர்களும் 9 வருடங்களுக்கு பின்பு இன்று கலந்துரையாடியுள்ளோம். இந்த கலந்துரையாடல் மூலம் நாம் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளோம். இரு நாட்டிலும் பாதிக்கப்படுவது மீனவர்களே. எனவே, இதனை தீர்க்கவேண்டிய அவசியத்தினையும் அதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் இன்று கலந்துரையாடியுள்ளோம். இதன் அடுத்தகட்டமாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் அதிகாரிகளும் அதேபோன்று இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் இந்த பிரச்சினையை அரசமட்ட பேச்சுவார்த்தையாக கொண்டுசென்று அதனூடாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை இரு அரசாங்கங்களுக்கும் வலியுறுத்தி முன்வைக்கிறோம். அதேபோல தொடர்ச்சியாக இருநாட்டு மீனவர்களும் கலந்துரையாடுவதுடன், இருநாட்டு கடல்வளமும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் இருதரப்பும் இணங்கியிருக்கிறது. அத்துடன் தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுடனும் கலந்துரையாடி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆரம்ப முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்துள்ளது. எனவே, இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வு அரசின் அனுசரணையோடு மிக விரைவில் எட்டப்படும், எட்டுவோம் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. இது மனிதாபிமானத்தோடு கையாளவேண்டிய விடயம். இந்த கலந்துரையாடல் தொடரும் என்றார். அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வேண்டும்! - அன்னராசா | Virakesari.lk
  19. 26 Mar, 2025 | 04:56 PM கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடற்கரை பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக இலங்கை உயிர் பாதுகாப்புக் குழுமம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்பிடி படகுகளில் முதலை மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக கடற்கரை பகுதிகளில் முதலைகள் உலாவி வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு அதிகாரிகளை இலங்கை உயிர் பாதுகாப்புக் குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில் முதலை ; மக்களே எச்சரிக்கை | Virakesari.lk
  20. பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார அமைச்சு 26 Mar, 2025 | 05:06 PM இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுப்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் அறிவித்துள்ள தடைகள் ஒரு தலைப்பட்சமானவை என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சு இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கான பிரிட்டனின் தடைகள் என வெளியிட்ட செய்திக்குறிப்பினை வெளிவிவகார அமைச்சு கருத்தில்கொண்டுள்ளது. பிரிட்டிஸ் அரசாங்கம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது இவர்களில் மூவர் இலங்கையின் முன்னாள் இராணுவதளபதிகள் கடற்படை தளபதி. காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற அர்ப்பணிப்பு என வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பையும் நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த அடிப்படையில் இது குறிப்பிட்ட தனிநபர்களின் சொத்துக்களை முடக்குதல்,போக்குவரத்து தடை ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என நாங்கள் வலியுறுத்தவிரும்புகின்றோம். இவ்வாறன ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவாது மாறாக .இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை குழப்பமானதாக்கும். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பொறிமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது,கடந்த காலத்தின் எந்த மனித உரிமை மீறல்களும் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை ஊடாகவே கையாளப்படவேண்டும். இலங்கையின் இந்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரி;க்கிடம் எடுத்துரைத்துள்ளார். பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார அமைச்சு | Virakesari.lk
  21. 26 Mar, 2025 | 05:29 PM இழுவலைகளை பயன்படுத்தும் மீன்பிடி முறைமையை படிப்படியாக நிறுத்த முடியும் என்று இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்தார். அத்துடன், தொப்புள்கொடி உறவான இந்திய - இலங்கை மீனவர்கள் மீன்பிடித்தொழிலை சுமூகமாக மேற்கொள்வதற்கு இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வவுனியாவில் புதன்கிழமை (26) இடம்பெற்ற இந்திய - இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளது பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தினோம். எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசியதில் எமக்கு மிக்க மகிழ்ச்சியே. அவர்களுடைய கஷ்ட நிலைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய நெருக்கடியான நிலமைகளையும் நாங்கள் கூறினோம். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை இருந்தது. சுமுகமாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த இலங்கை மீனவ சமாசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக இரண்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தியதன் பின்னர் மீனவர் பிரச்சினை குறித்து பேசப்படவில்லை. 9வருடங்களில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுமடி வலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்பதாகும். நாங்கள் இந்த இழுவலையை படிப்படியாக குறைப்பதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் ஊடாக சம்மதிக்கின்றோம் எனக்கூறினோம். அடுத்த கட்டமாக ஏனைய மாவட்ட மீனவ அமைப்புக்களையும் ஒன்றுதிரட்டி இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் உதவியுடன் இப்பிரச்சினைக்கு பேச்சுக்களை முன்னெடுத்து நல்லதொரு தீர்வை அடுத்த கட்டமாக எட்ட முடியும். வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசாங்கம் தமது சட்டத்தின்படி 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் என்று சிறை வைத்துள்ளார்கள். அந்த மீனவர்களை மனிதபிமான முறையில் விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாகவும் தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளோம். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் போது அதனை செய்யலாம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளார்கள். நிச்சயமாக இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இதற்கொரு தீர்வை எட்ட வேண்டும். இந்திய - இலங்கை கடற்பரப்பு மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதால் கடற்பரப்பு குறைவாக உள்ளது. அதனால் தான் எல்லை தாண்டும் பிரச்சினை ஏற்படுகிறது. இதில் இந்திய - இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றோம். நிலமையை கருத்தில் கொண்டு இரண்டு அரசாங்கங்களும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அரசியல் தலைவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது பற்றி எமக்குத் தெரியாது. எங்களுடைய எண்ணம் கச்ச தீவை மீட்பதல்ல. இரு நாட்டு மீனவர்களும் தொப்புள்கொடி உறவாக அப்பகுதியில் மீன் பிடிக்க வேண்டும். இரு பகுதி மீனவர்களும் பாதிக்காத வகையில் இரு நாட்டு அரசாங்கமும் நல்ல முடிவை எடுக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் எடுப்பார்களென நாங்கள் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார். இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா | Virakesari.lk
  22. எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம் - ஐக்கிய மக்கள் சக்தி 25 Mar, 2025 | 09:30 PM (எம்.மனோசித்ரா) இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். இதனை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அதேவேளை அரசாங்கம் இவ்விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம். தேர்தலுக்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். புத்தாண்டு நெருங்குவதால் பிரசார நடவடிக்கைகள் மந்தமாகவே இடம்பெறுகின்றன. புத்தாண்டின் பின்னர் தீவிரமாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்போம். சுமார் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவும் நீதிமன்றமும் இவ்விவகாரத்தில் நியாயம் வழங்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழு சிறு சிறு காரணிகளுக்காக வேட்புமனுக்களை நிராகரிப்பதை விட, தமக்கு தேவையற்றவர்களை நிராகரிக்கும் பொறுப்பினை மக்களுக்கு வழங்க வேண்டும். தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி ரீதியில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார். எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம் - ஐக்கிய மக்கள் சக்தி | Virakesari.lk
  23. கட்சியின் முக்கியத் தலைவர்களோடு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்த வேகத்திலேயே அமித் ஷாவிடமிருந்து ட்வீட்டும் வந்திருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்திருக்கின்றனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, '2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்.' என அமித் ஷா ட்வீட் செய்திருக்கிறார். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்குப் பயணம் செய்திருந்தார். எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தம்பிதுரை போன்ற அதிமுகவின் மூத்தத் தலைவர்களும் எடப்பாடியுடன் இருந்தனர். 'நான் எந்த முக்கிய நபரையும் சந்திக்க வரவில்லை. டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன்.' என காலையில் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அதேநேரத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பு தன்னுடைய கட்சியின் முக்கியத் தலைவர்களோடு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்த வேகத்திலேயே அமித் ஷாவிடமிருந்து, '2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்.' என ட்வீட் வந்திருக்கிறது. டெல்லியில் நடந்திருக்கும் இந்த முக்கிய நகர்வின் மூலம் 2026 க்காக அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறதா என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. Amit Shah: 2026 இல் தமிழகத்தில் NDA ஆட்சியமைக்கும் - எடப்பாடியின் சந்திப்பும் அமித்ஷாவின் பதிவும் - Vikatan
  24. எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும் -அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன் என்று அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன்,ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் உள்ளிட்டவர்களுடன் திணைக்களங்களின் பதவிநிலை அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் மற்றும் பிரதேச அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர். கூட்டம் நிறைவடைந்ததன்பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்துக்கு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்காகவே இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த இக்கூட்டத்தில் சிவன் பூஜையில் கரடி புகுந்ததுபோல சம்பவங்களும் இடம்பெற்றன. தொல்லை தாங்க முடியாமல் எம்.பியொருவர் வெளியேறி சென்றுள்ளார். மேலும் சில அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எவருடைய பேச்சுக்கும் கட்டுப்படாத நபரொருவரால் தான் இப்படி நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மோசமாக நடந்துகொண்டார். தனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை காரணமாக சம்பந்தமில்லாத விடயங்களைக்கூட அவர் குறிப்பிட்டுள்ளார். எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும். அவை உரிய வகையில் முன்னெடுக்கப்படும். ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குள்ள அதிகாரம் இனி முழுமையாக பயன்படுத்தப்படும். சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வரும். நாம் இது பற்றி மக்களிடமே முறையிடுகின்றோம். அவர்கள் பார்த்தக்கொள்வார்கள்- என்றார். எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும்;
  25. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம் | Virakesari.lk யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினார் சிறீதரன். தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது. அதன்போது, வலி.வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடயம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தியதாக மாறியது. குறிப்பாக, இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் நிதி மோசடிகள் முதலான பல விடயங்களை முன்னிறுத்தி அதிகாரிகள் முன்னிலையில் தர்க்கித்துக்கொண்டனர். இந்நிலையில் இந்த வாக்குவாதத்தை இடைநிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார். எனினும், ஒருங்கிணைப்பு குழு தலைவரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்பட்டது. இதனால் அங்கு நிலவிய குழப்பமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினார் சிறீதரன் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.