Everything posted by பிழம்பு
-
இனவாதி அநுரவுக்கு துரோகி சுமந்திரன் வக்காலத்து - தம்பிராஜா ஆவேசம்!
தமிழ் மக்களை இரத்தமும் சதையுமாக கொன்றொழித்த ஜே வி பி அநுரவுக்கு தமிழ் மக்களுக்கு எதிராக துரோகங்களை மேற்கொண்ட சுமந்திரன் வக்காலத்து வாங்குகிறார் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றம் சாட்டினார் . இன்றையதினம் திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணம் வருகை ஜே வி பி என்ற பெயர் மாற்றப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார தமிழ் மக்களை மிரட்டுகிறார் என யாழ்ப்பாணம் வருகை தந்த மற்றும் ஒரு வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். இருவரைப் பொறுத்த வரையிலும் பழைய வரலாறுகளை தேடிப் பார்த்தால் இருவர் சார்ந்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட இனவாதிகள். அவர்கள் தங்களுக்குள் யார் நல்லவர் என்பது தொடர்பில் அடிபட்டு கொள்ளட்டும் தமிழ் மக்களுக்கு அது பிரச்சனை அல்ல. ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்காக ஒருவரால் அநுரகுமார ஜே வி பி பானியில் வடக்கு மற்றும் தெற்கு மக்களை மிரட்டுகிறார் என கூறுகிறார். அநுர கூறுகிறார் தான் மிரட்டவில்லை ரணில் தான் இனவாதத்தை கக்கி வாக்குகளை பெற முயற்சிக்கிறார் என கூறுகிறார். இது இவ்வாறு இருக்க தமிழரசு கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தமிழ் மக்களுக்கு பல துரோகங்களை செய்தவர் அவர் அநுர அவ்வாறு மிரட்டவில்லை என வக்காளத்து வாங்குகிறார். சுமந்திரன் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்பது மக்களுக்குத் தெரியும் தற்போது தென் இலங்கை வேட்பாளருக்கு வாக்காளத்து வாங்குகிறார். ஆகவே தமிழ் மக்கள் இனவாதிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு இனவாதிகளையும் துரோகிகளையும் தேர்தல் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். (ப) இனவாதி அநுரவுக்கு துரோகி சுமந்திரன் வக்காலத்து - தம்பிராஜா ஆவேசம்! (newuthayan.com)
-
10ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள்
10ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் 10ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவானது கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக 9ஆம் திகதிவரை இடம்பெற்றது. இதன்போது 18 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 60ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாளில், தெரிவுசெய்யப்பட்ட திரைப்படங்களின் இயக்குனர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி, சர்வதேச மற்றும் உள்ளூர் திரைப்பட கலைஞர்கள், திரைஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 10ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் (newuthayan.com)
-
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் துரத்திக்கொண்டேயிருக்கும் - வோல்கர் டர்க்
10 Sep, 2024 | 02:22 AM (நா.தனுஜா) தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் ஆட்சிபீடம் ஏறும் புதிய அரசாங்கம் உண்மையையும், பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9) ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணி) பேரiவின் தலைவர் ஓமர் நிபர் தலைமையில் ஆரம்பமானது. கூட்டத்தொடரில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Nவுhல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, கலந்துரையாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து, இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது. அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார். இலங்கை தற்போது மிகமுக்கியமான கட்டத்தில் இருப்பதாகத் தனது உரையில் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படாமையும், அவை மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அவசியமான முழுமையான மறுசீரமைப்புக்கள் பூர்த்திசெய்யப்படாமையும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டார். விசேடமாக கடந்த இரண்டு வருடங்களில் நாடு முகங்கொடுத்திருந்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியை நினைவுகூர்ந்த அவர், அதன்விளைவாக உருவான மக்கள் தன்னெழுச்சிப்போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்ட மறுசீரமைப்புக்கள் இன்னமும் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை எனவும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டின் வறுமை மட்டம் இரு மடங்காக அதிகரித்திருப்பதுடன், பல குடும்பங்கள் கல்வி, சக்திவலு உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் புறந்தள்ளி நாளாந்த உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றன எனவும் கரிசனை வெளியிட்டார். அதேபோன்று அரசாங்கத்தினால் அண்மையில் முன்மொழியப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட அடக்கமுறைச் சட்டமூலங்கள், சட்டங்களை நினைவுகூர்ந்த வோல்கர் டர்க், அவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புத்தரப்பினருக்கு மிகையான அதிகாரங்களை வழங்குவதற்கு வாய்ப்பேற்படுத்தக்கூடியவாறு அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அரச சார்பற்ற அமைப்புக்களைப் பதிவுசெய்தல் தொடர்பான உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சிவில் சமூக இடைவெளி மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன முடக்கப்படக்கூடும் என எதிர்வுகூறிய அவர், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட தரப்பினர் மீதான தொடர் கண்காணிப்புக்கள் குறித்து விசனத்தை வெளிப்படுத்தினார். அத்தோடு முத்தூர் படுகொலை, திருகோணமலை ஐவர் படுகொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை உள்ளடங்கலாகக் கடந்த காலங்களில் பதிவான மிகமுக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வோல்கர் டர்க், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் விவகாரத்திலும் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை என்றார். மேலும் ஆயிரக்கணக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக அவர்களது அன்புக்குரியவர்கள் தொடர்ச்சியாகக் காத்திருப்பதாகவும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யாமல் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார். அத்தோடு தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்ட அவர், எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை அடுத்து ஆட்சிபீடம் ஏறுகின்ற புதிய அரசாங்கம் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தினார். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் துரத்திக்கொண்டேயிருக்கும் - வோல்கர் டர்க் | Virakesari.lk
-
அம்பாறையில் அரியவகை உயிரினம் கண்டுபிடிப்பு
10 Sep, 2024 | 10:10 AM நன்னீர் நாய் என அறியப்படும் உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு நன்னீர் நாய் வழி தவறி சென்ற நிலையில் சனிக்கிழமை (7) பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நன்னீர் நாய் (Smooth-coated Otter) நீர்நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது. மற்ற நீர் நாய்களைவிட இதன் மேல் உள்ள முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் காணப்படுகிறது. இவை ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்குப் போல விரலிடைத் தோல் உண்டு. இவற்றின் பட்டையான நீண்ட வாலானது துடுப்புபோல நீந்தப் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அம்பாறையில் அரியவகை உயிரினம் கண்டுபிடிப்பு | Virakesari.lk
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழ் பொதுவேட்பாளருக்கே ஆதரவு : கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி தீர்க்கமான முடிவு இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது. மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள்,பிரதேசக் கிளைகள் ,மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர். தமிழரசு கட்சியின் மத்திய குழு அண்மையில் கூடி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என தீர்மானம் அறிவித்த நிலையில் பல்வேறு வகையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்துது இந்த நிலையில் கிளி நொச்சி மாவட்டகிளை கூடி பொதுவேட்பாளராக போட்டியிடும் அரியநேத்திரனுக்கே ஆதரவு அளிப்பது என்பதனை ஏகமனதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ் பொதுவேட்பாளருக்கே ஆதரவு : கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி தீர்க்கமான முடிவு | Virakesari.lk
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன் 10 Sep, 2024 | 05:01 PM சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன். எனவே மத்திய செயற்குழு கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் விசேட குழு கூட்டம் தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இன்றைய கூட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 14 ஆம் திகதி நடைபெற இருந்த மத்திய செயற்குழு கூட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு என தெரிவித்ததன் அடிப்படையில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை விடயம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான விடயம் உட்பட பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறை தொடர்பாக சஜித்துடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது என முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த கால வரையறைகள் தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் நான் கலந்துரையாடியதன் பின்னர் அதில் எட்டப்பட்ட தீர்மானங்களை இந்த விசேட குழுவிற்கு அறிவிப்பது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன் | Virakesari.lk
-
போர்க் குற்றவாளிகளை நீதிமன்றங்கள் தண்டிக்கும் - அநுரகுமார
06 Sep, 2024 | 05:24 PM போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும் இப்போதும் உறுதியாகவுள்ளேன். ஆனால், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுரகுமார அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில், போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை. எனவே, போரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த செவ்வியை மேற்கோள் காட்டி, 'இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலைப்பாட்டில் நீங்கள் இல்லையா?' என்று யாழில் இடம்பெற்ற கூட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் வினவினார்கள். இதற்குப் பதிலளிக்கும்போதே, 'இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம். நான் போர்க்குற்றவாளிகளைக் கண்டறிவேன். நீதிமன்றங்கள் அவர்களைத் தண்டிக்கும்' என்று அநுர தெரிவித்துள்ளார்.
-
தமிழ் மக்களுக்கான பொன்னான வாய்ப்பை ரணிலும் தமிழரசுக் கட்சியும் இல்லாமல் செய்துள்ளது - நாமல்
05 Sep, 2024 | 04:38 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாக குற்றஞ்சாட்டிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு பொன்னான வாய்ப்பு காணப்பட்டபோதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினரும் தங்களின் சொந்த அரசியல் காரணங்களுக்காகத் அதனைத் தவறவிட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதுடன் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் இலங்கை தமிழரசுக் கட்சி பிளவடைந்துள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு பொன்னான வாய்ப்பு காணப்பட்டபோதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினரும் தங்களின் சொந்த அரசியல் காரணங்களுக்காகத் அதனைத் தவறவிட்டுள்ளனர். இலங்கைத் தமிழரசுக்கட்சி பல்வேறு தருணங்களில் மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றியும் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்து பற்றியும் அதிகமாகப் பேசுகின்றது, ஆனால் செயற்பாட்டில் வேறுபட்ட நிகழ்ச்சி நிரலை அக்கட்சியினர் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் வெளிப்படுத்தப்படுகின்றது. இந்த உண்மையை நான் சொன்னால், எனக்கு தமிழ் சினிமாத் திரைப்படங்களில் வரும் 'வில்லன்' போன்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால், தமிழ் மக்களின் உண்மையான வில்லன்கள் யார் என்பதை தமிழ் மக்கள் தற்போது புரிந்து கொண்டிருப்பார்கள். ரணிலுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். நான் தமிழ் மக்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை நம்பவைப்பதற்காக பொய்சொல்கிறார். மாகாண சபை முறைமைகள் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மீண்டும் தனது மக்களை தோல்வியடைய செய்துள்ளது. ரணில் மீண்டும் தமிழ் மக்களை முட்டாளாக்கியுள்ளார். இதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் நீண்டகாலமான தலைமைக்கட்சி என்ற பாத்திரத்தினை இனி வகிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது. அந்தக் கட்சியினர் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளதான் காரணமாக உட்கட்சிப் பிளவு வலுவாகியுள்ளது. தமிழ் மக்களுக்கான ஏகோபித்த தலைமையை அந்தக் கட்சியினால் வழங்க முடியாத பரிதாமான நிலைமையை அடைந்துள்ளது என்று மேலும் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான பொன்னான வாய்ப்பை ரணிலும் தமிழரசுக் கட்சியும் இல்லாமல் செய்துள்ளது - நாமல் | Virakesari.lk
-
சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி
(நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது என ஏற்கனவே நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட நிலையில், தற்போது தமிழரசுக்கட்சி ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருக்கும் சஜித் பிரேமதாஸ சமஷ்டி தீர்வு குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமாத்திரமன்றி தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித்தை ஆதரிப்பதென கட்சி பிழையான முடிவை எடுத்து அதன்வழி செயற்படுமேயானால், தானும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதன்வழி பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தாம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை எனவும், மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிப்போம் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சி ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாகவே கடந்த மாத இறுதி வாரத்தில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அவருக்குத் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் குறித்து கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதற்கு மறுதினம் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தார். இது இவ்வாறிருக்க கடந்த மாதம் 29 ஆம் திகதி லண்டன் பயணமான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்ற தினத்தன்று நாட்டில் இல்லாததன் காரணமாக அதில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியதன் பின்னர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வாரா? அல்லது கட்சியின் தீர்மானத்துக்குப் புறம்பாக தொடர்ந்து தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவாரா? என வினவியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர், கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் 7 நாட்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டதாகவும், அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது பற்றி உரியவாறு கலந்துரையாடித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அதேவேளை கட்சியின் கடந்த மத்திய குழுக்கூட்டங்களில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது எனக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறிதரன், அவ்வாறிருக்கையில் சமஷ்டி தீர்வு குறித்து சஜித் பிரேமதாஸ வழங்கியிருக்கும் உத்தரவாதம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். எனவே இவை பற்றிய எந்தவொரு தெளிவுபடுத்தல்களும் இல்லாத நிலையில், தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்துத் தான் மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறிதரன் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென தமிழரசுக்கட்சி பிழையான முடிவை எடுத்துச் செயற்படும் பின்னணியில், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தின் வழியில் பயணிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி | Virakesari.lk
-
“உங்கள் போன் நீங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது” - பிரபல மார்கெட்டிங் நிறுவனம் ஒப்புதல்
வாஷிங்டன்: நம்முடைய ஸ்மார்ட்போன் நாம் பேசும் உரையாடல்களை கவனிப்பதாக, பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் பணியாற்றும் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எதேச்சையாக ஏதாவது ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்திருந்தால் தொடர்ந்து அது பற்றிய விளம்பரங்களாகவே வருவதை கவனித்திருப்போம். இன்னும் ஒருபடி மேலே போய் போனிலோ அல்லது நேரிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று யாரிடமாவது பேசிக் கொண்டிருந்த பிறகு, அது தொடர்பான விளம்பரங்கள் வருவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ஒரு டிவி வாங்குவதை பற்றியோ அல்லது வாடகை வீடு குறித்தோ நீங்கள் பேசியிருந்தால் அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொருட்கள் தொடர்பான விளம்பரங்களே தொடர்ந்து உங்கள் டைம்லைனில் வந்து கொண்டிருக்கும். பல ஆண்டுகளாக வெறும் ஊகமாக இருந்த இந்த விவகாரம் தற்போது உண்மையாகியுள்ளது. டிவி மற்றும் ரேடியோ செய்திகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் காக்ஸ் மீடியா குரூப் (Cox Media Group) தனது முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போது, ஆக்டிவ் லிஸனிங் டெக்னாலஜி (Active Listening technology) என்ற மென்பொருளின் மூலம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மைக் வழியாக நம்முடைய உரையாடல்களை நமது ஸ்மார்ட்போன் கவனித்து அதற்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக பேஸ்புக், அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. நம்முடைய வாய்ஸ் டேட்டாவை சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை அனுப்பவதில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. 470க்கும் அதிகமான மூலாதாரங்களில் இருந்து ஏஐ மூலம் இயங்கும் இந்த மென்பொருள் குரல் தரவுகளை சேகரிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இது நாம் போனில் பேசுவது மட்டுமின்றி நேரில் பேசுவதையும் கவனிக்கிறது. இந்த தகவல்களை 404 மீடியா என்ற ஊடகம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம், காக்ஸ் மீடியா குரூப் நிறுவனம் குறித்து தனது பாட்காஸ்டில் அம்பலப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதன் ஒட்டுக் கேட்கும் தொழில்நுட்பம் குறித்து வெளிக்கொண்டு வந்துள்ளது. அமேசான் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இந்த நிறுவனத்துடன் நேரடி தொடர்பில் இருப்பதால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இரண்டு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொருபுறம் இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் காக்ஸ் மீடியா நிறுவனத்துடன் பணியாற்றும் திட்டமில்லை என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. “உங்கள் போன் நீங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது” - பிரபல மார்கெட்டிங் நிறுவனம் ஒப்புதல் | Company that works with Amazon, Facebook confirms your phone is listening to you - hindutamil.in
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சுமந்திரனின் அறிவிப்பு தென்னிலங்கை மக்களுக்கு சிறந்த செய்தி - அமைச்சர் சுசில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்களை குழப்பும் தீர்மானங்களையே எடுப்பார். அவர் தற்போது அறிவித்துள்ள தீர்மானம் தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்தமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சுமந்திரன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது நிலைப்பாட்டுடன் வேறு குழுவுடனேயே செயற்பட்டு வந்தார். எனவே சுமந்திரன் ஏதேனுமொரு குழுவைத் தெரிவு செய்கின்றார் எனில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெற்கு மக்கள் சிந்திக்க வேண்டும். சுமந்திரனின் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இது மக்களை குழப்பும் செயற்பாடாகும். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுமந்திரமே மக்களை குழப்பிக் கொண்டிருந்தார். எனவே அவரது தீர்மானங்கள் தொடர்பில் வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தெற்கு மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும். சுமந்திரன் ஏதேனுமொரு தீர்மானத்தை எடுப்பாரானால் அது தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என்றாr https://www.virakesari.lk/article/192641
-
சமஸ்டி குறித்து உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டால் தேர்தலை பகிஸ்கரிப்பது என்ற முடிவு குறித்து பரிசீலனை செய்ய தயார் – சஜித்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடிதம்
ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை ஐக்கியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற எமது நிலைப்பாட்டினை பரிசீலனை செய்வது தொடர்பில் நாம் ஆராய முடியும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவை கோரி சஜித்பிரேமதாச அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது. வேட்பாளராகிய நீங்கள் கடந்த 76 வருடங்களாக இலங்கையின் தோல்விக்கு காரணமான ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவதன் மூலம் நாட்டின் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு நீங்கள் மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் தீர்வை காணவிளைகின்றீர்கள் என்பதை இந்த நாட்டு மக்களிற்கு நீங்கள் வெளிப்படுத்தவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேற்படி விடயங்களை தெளிவாகவும் முழுமையாகவும் உள்ளடக்கப்படும் நிலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற எமது நிலைப்பாட்டினை பரிசீலனை செய்வது தொடர்பில் நாம் ஆராய முடியும் எனதமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது சமஸ்டி குறித்து உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டால் தேர்தலை பகிஸ்கரிப்பது என்ற முடிவு குறித்து பரிசீலனை செய்ய தயார் – சஜித்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடிதம் | Virakesari.lk
-
பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் ; யாழ் வணிகர் கழகம்
(எம்.நியூட்டன்) தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிரணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரான பாஅரியநேந்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி உலகமெல்லாம் ஒலிக்க சங்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என யாழ்ப்பாண வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண வணிகர் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக சித்தரித்து அதற்கான முழு வேலைத்திட்டத்தையும் சுதந்திரத்திற்கு பின் 1948 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்திக் கொண்டு வருகிறது. தமிழ் மக்கள் தங்கள் தாயகமான வடக்கு, கிழக்கைப் பாதுகாத்து உரிமையோடு வாழ்வதற்காக கடந்த 75 வருட கால நீண்ட எமது போராட்டம் இன்னும் வெற்றிபெறவில்லை. தமிழ் தலைமைகள் எமது உரிமையை நிலைநாட்டவும், சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கும் எடுத்த முயற்சிகள் அத்தனையும் இன்றுவரை சிங்களத்தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டு உதாசீனப்பட்டுள்ளன. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாமை. பேச்சுவார்த்தை என்ற ரீதியில் காலத்தை கடத்தி தட்டிக்கழிக்கப்பட்டு தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தர் வரை ஏமாற்றியுள்ளார்கள். நாம் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். வடக்கு. கிழக்கு தமிழர்களுடைய தாயகம் நாம் தனித்துவமானவர்கள் எமக்கு சுயநிர்ணய உரிமையுண்டு எமது நிலம், மொழி, கலை, கலாசாரம். பண்பாடு போன்றன பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு பூரண சுயாட்சி அதிகாரம் எமது பகுதிக்கு தேவை என்பதை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக இந்த தேர்தலை எதிர்கொண்டு அதற்கான அங்கீகாரத்தைப் பெறவேண்டும். இதன் மூலம் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் நாம் இன்னும் எமது உரிமைப்போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்பதை அடையாளப்படுத்த முடியும். இந்த ஜனாதிபதித்தேர்தலை தமிழ்மக்களின் விடிவுக்காக ஜனநாயக முறையில் புதிய அணுகுமுறையாக இதை அணுகி எமது உரிமைகளை வென்றெடுக்க புத்திசாதுரியமாக நடந்து இதனை அணுகுவதே சிறந்த தீர்மானமாக அமையும். இந்த முயற்சிக்கு வடக்கு, கிழக்கில் செயற்படும் தமிழ்தேசியம் சார்ந்த அனைத்துக்கட்சிகளும், வடக்கு, கிழக்கில் செயற்படும் அத்தனை பொது அமைப்புக்களும், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் அத்தனை தமிழ் பேசும் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு தங்கள் பேராதரவை வழங்கி வாக்குகளை செலுத்த வேண்டும். அத்துடன் தென்னிலங்கை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும், தென்னிலங்கை வேட்பாளர்களுக்கும், தென்னிலங்கை கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் வடக்கு, கிழக்கை சேர்ந்த கட்சிகளும், தென்னிலங்கை தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பு வைத்துள்ளோர், மாற்றுக்கருத்துள்ளோர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி தமிழ் இனத்தின் விடிவிற்காக தமிழ் மக்களின் ஜனநாயக முறைப்படி நடைபெறும் உரிமைக்கான அங்கீகாரத்திற்கு தங்கள் பேராதரவை வழங்க வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் வேண்டிநிற்கின்றோம் என்றுள்ளது. பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் ; யாழ் வணிகர் கழகம் | Virakesari.lk
-
வாழை விமர்சனம்: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன. இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திரட்டி போராடுகிறார். ஒருவகையில் அதற்கு ஒப்புக்கொள்ளும் முதலாளி, மற்றொருபுறம் ஆபத்தில் சிக்க வைக்கிறார். அது என்ன? சிவனணைந்தானுக்கு வாழை சுமப்பத்திலிருந்து விடுதலை கிடைத்ததா என்பது திரைக்கதை. தன் வாழ்வின் உச்சபட்ச அழுகையின் தருணங்களையும், மகிழ்ச்சியின் நினைவுகளையும் ஒரு சேர கோத்து ‘உணர்வுபூர்வமான’ படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சொற்ப கூலிக்காக, உயிர்கொடுத்து வாழைத்தாரை சுமந்து செல்லும் அம்மக்களின் வாழ்வியலையும், அது சிறுவனின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சமரசமின்றி அழுத்தமாக பதிவு செய்கிறது படம். அதேசமயம் கண்ணீர் மழையை பொழியும் காட்சிகளை உருக்கி உருக்கி வடிக்காமல், வெகுஜன ரசனையை ஈர்க்கும் படத்தின் திரைமொழி கவனம் பெறுகிறது. சிவனணைந்தான் மற்றும் அவனது நண்பனுக்கு இடையிலான நட்பு, ரஜினி, கமல் ரெஃபரன்ஸ், “நம்மூர்ல ரஜினி படம் தான் ஓடுது. கமல் படம் எங்க ஓடுது” என்ற வசனம், அதையொட்டிய காட்சிகள், ‘பூவே உனக்காக’, ‘பிரியமுடன்’ போஸ்டர்கள், கர்சீஃப் காட்சி என ஜாலியாக நகரும் படத்தின் தொடக்கம் ரசிக்க வைக்கிறது. தனக்கு பிடித்த ஆசிரியை மீது அந்தப் பருவத்தில் விளையும் ஈர்ப்பை எந்த வகையிலும், கொச்சையாகவோ, மிகைப்படுத்தியோ சொல்லாமல் மிக கவனமாக நேர்த்தியாக கையாண்டியிருப்பது பாராட்டுக்குரியது. நிகிலா விமலிடம், மாணவன், “நேத்து எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க டீச்சர். இன்னைக்கு அக்கா மாதிரி” என சொல்லும் வசனம் அழகு! இதற்கு மறுபுறம், மற்றொரு காதலையும், மெல்லிய உணர்வுடன் 2 ரெட்ரோ பாடல்களின் வழியே கடத்தியிருந்தது அட்டகாசமான திரையனுபவம். கொத்தடிமை வாழ்க்கை, ஒரு ரூபாய் கூலி உயர்வு போராட்டம், அதனால் ஏற்படும் இழப்பு, இடைத்தரகர்களின் வஞ்சகம், கம்யூனிஸ்ட், அம்பேத்கர் குறியீடுகள் என உழைக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிய வைக்கிறது படம். எல்லாவற்றையும் தாண்டி கட்டிப்போட்டு உலுக்கும் இறுதிக் காட்சியின் தாக்கத்தை படம் முடிந்தும் உணர முடிகிறது. மாரி செல்வராஜின் ‘உருவக’ காட்சிகளின் டச் இப்படத்தில் நிறைந்திருக்கிறது. தேர்ந்த கலைஞர்கள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு, வலி, வேதனை, கண்ணீர், தாயிடம் கெஞ்சி மன்றாடுவது, களைப்பினால் சோர்ந்து வீழும் இடம் என உணர்வுகளை நடிப்பில் வரித்து மிரட்டியிருக்கிறார் சிறுவன் பொன்வேல். உற்ற தோழனாக, டைமிங்கிலும், யதார்த்தமான நடிப்பிலும் ஈர்க்கிறார் மற்றொருவர் சிறுவன் ராகுல். பால்ய கால ஆசிரியரை நினைவூட்டும் நிகிலா விமல், க்ளோசப் ஷாட்களில் முகத்தில் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி, இனம்புரியா உணர்வுகளைக் கொண்ட சிறுவனை ‘ஹேண்டில்’ செய்யும் முறையில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆக்ரோஷமான இளைஞனாக கூலிக்காக போராடும் கலையரசன், வாழைத்தாரை தாங்குவது போல கதாபாத்திரத்தை நேர்த்தியாக தாங்கி கிராமத்து பெண்ணாக ஈர்க்கும் திவ்யா துரைசாமி கச்சிதமான தேர்வு. சிறுவனின் தாயாக நடித்துள்ள ஜானகி இறுதிக்காட்சியில் அட்டகாசமான நடிப்பால் பாரத்தை இறக்கிவிடுகிறார். அவருக்கு தனி பாராட்டுகள்! கமல் குறித்து பேசும் காட்சியில், ‘நாயகன்’ பட இசையை மெல்லிதாக ஓட விடுவது, உருக்கமான காட்சிகளுக்கு உயிரூட்டி உணர்வுகளாக்கியிருப்பது, தேவையான இடங்களில் அமைதியின் வழியே அழுத்தம் சேர்ப்பது என சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மிரட்டுகிறார். ‘தென்கிழக்கு தேன் சிட்டு’, ‘பாதவத்தி’ பாடல்கள் சிறப்பு. கறுப்பு வெள்ளையிலும், ஷில்அவுட்டிலும் காட்சிகளை நனைத்து, மூச்சிறைக்க ஓடும் சிறுவனின் உணர்வுகளை கடத்தி, மாரி செல்வராஜின் நினைவுகளுக்கு உயிரூட்டுகிறது தேனி ஈஸ்வரின் கேமரா. ஒலிக்கலை நேர்த்தி. பொறுமையாக நகரும் கதை தான் என்றாலும் எங்கேயும் அயற்சி ஏற்படுத்தாமல் சுவாரஸ்யமாக கடப்பது பலம். மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் காட்சிகள் சுற்றுவதாக சிலருக்கு தோன்றலாம். வெறும் வலியை மட்டும் திணித்து கடத்தாமல், வெகுஜன ரசனையிலும், திரை அனுபவத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் உன்னதமான இப்படம் இறுதியில் உங்களை ஆட்கொள்ளும். வாழை Review: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன? | mari selvaraj directorial Vaazhai movie review - hindutamil.in
-
கொட்டுக்காளி விமர்சனம்: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு!
கொட்டுக்காளி விமர்சனம்: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு! பி.எஸ்.வினோத்ராஜ் இதற்கு முன்னால் இயக்கிய ‘கூழாங்கல்’ சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற படம். மட்டுமின்றி ஆஸ்கர் வரை சென்று திரும்பிய படம் என்பதால், அவரது அடுத்தப் படமான ‘கொட்டுக்காளி’ முதல் அறிவிப்பிலிருந்தே சினிமா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் ஹீரோவாக தனக்கென ஒரு முத்திரையை பதித்துவரும் சூரி, சிவகார்த்திகேயன் தயாரிப்பு என்பதால் கமர்ஷியல் ரசிகர்கள் மத்தியில் இதன் ட்ரெய்லர் உள்ளிட்ட விஷயங்கள் கவனம் பெற்றிருந்தன. இந்த இரு தரப்பை இப்படம் திருப்திபடுத்தியதா என்பதை பார்க்கலாம். மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். எந்நேரமும் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அவரை, வருங்கால கணவரான பாண்டியும், (சூரி) அவரது குடும்பத்தினரும் ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் நாயகி அன்னா பென்னுக்கு என்ன பிரச்சினை? - இதற்கான விடையே ‘கொட்டுக்காளி’. காலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி மாலையில் இன்னொரு இடத்தில் போய் இறங்குவதுதான் கிட்டத்தட்ட கதை. மொத்தக் கதையையும் ஒரு சின்ன துண்டுச் சீட்டில் எழுதிவிடக் கூடிய மிக மிக சிம்பிளான ஒரு களம். எனினும் தன்னுடைய முந்தைய படமான ‘கூழாங்கல்’ போலவே ஆழமான, அடர்த்தியான ஒரு படத்தை கொடுத்துள்ளார் பி.எஸ்.வினோத் ராஜ். ஓரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடியும் ஒரு சிறிய ஆட்டோ பயணத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் செயல்களை இயல்பை மீறாமலும் எந்தவித சமரசமும் இல்லாமலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். கிராமங்களில் நிலவும் சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகள், பெண் வீட்டார் மீது மாப்பிள்ளை வீட்டார் இந்த காலத்திலும் செலுத்தும் அதிகாரம் என படம் போகிற போக்கில் பல விஷயங்களை வசனங்கள் வழியே தொட்டுச் செல்கிறது. தெருவில் உள்ள ஒரு ஸ்பீக்கரில் பாடும் ‘ஒத்தையடி பாதையிலே’ பாட்டை அன்னா பென் முணுமுணுப்பதும், அதைத் தொடர்ந்து சூரி, அன்னா பென் தொடங்கி மாமியார், மாமனார், அப்பா என அனைவரையும் அடித்து, தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டும் காட்சி இந்த படத்தின் ‘பீக்’ தருணம். அந்த காட்சி முழுவதும் பார்க்கும் நமக்கு பதைபதைப்புடனே நகரும்படி காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. படத்தின் பெரிய பலம் அதன் நடிகர்கள். சூரி, அன்னா பென் தவிர யாரும் தெரிந்த முகங்கள் கிடையாது. எனினும் படத்தில் நடித்த அனைவருமே மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். நடிப்பில் ‘விடுதலை’, ‘கருடன்’ படங்களை காட்டிலும் சூரிக்கு இது மிக முக்கியமான படம். தொண்டையில் பிரச்சினை இருக்கும் நபராக படம் முழுக்க கரகரத்த குரலில் பேசுவதும், குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக அவர் காட்டும் அதிகாரமும் என ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார். அன்னா பென்னுக்கு படத்தில் ஒரே ஒரு வசனம் மட்டும்தான். மற்றபடி வசனமே இல்லாமல் வெறித்து பார்த்தபடி மிரட்டலான நடிப்பை வழங்கி அவரும் ஸ்கோர் செய்கிறார். இவர்கள் தவிர சூரியின் சொந்தக் காரர்களாக பைக்கில் பின்னாலேயே வரும் இருவர், சூரியின் தங்கை மகனாக வரும் சிறுவன் என அனைவரும் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர். படத்தில் இசை கிடையாது. எனினும் கதாபாத்திரங்களை சுற்றி நடப்பவற்றிலிருந்து வரும் சத்தங்களே அந்த குறை தெரியாமல் காப்பாற்றுகின்றன. பின்னணி இசை இருந்திருந்தால் கூட படத்தோடு நம்மால் முழுமையாக ஒன்றியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. சமரசமே இன்றி பின்னணி இசையை கூட சேர்க்காமல் தன்னுடைய திறமை நம்பிக்கை வைத்த இயக்குநரை பாராட்டலாம். குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது சக்தியின் ஒளிப்பதிவு. கிராமத்தில் கரடுமுரடான சாலைகளில் சென்று கொண்டிருக்கும் அந்த ஆட்டோவில் நாமும் பயணிப்பதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. படத்தின் நீளம் வெறும் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் தான். ஆனால் அதில் முக்கால்வாசி நேரத்தை நீள நீளமாக வைக்கப்பட்ட ஷாட்களே நிரப்பியிருக்கும் என்று தெரிகிறது. தேவை இருக்கிறதோ இல்லையோ, கதாபாத்திரங்கள் நடந்து கொண்டே இருப்பதை காட்டுவது, திரையின் ஒரு ஓரத்தில் கிளம்பும் ஆட்டோ மற்றொரு ஓரத்தை அடையும் வரையும், திரையை விட்டு மறைந்த பிறகும் கூட ஷாட் அப்படியே இருப்பது, என அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்ட நீளமான ஷாட்கள் பல இடங்களில் சற்றே சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. எந்தவொரு தீர்வும் இல்லாமல் சூரியின் கோணத்திலிருந்து முடியும் க்ளைமாக்ஸ் ஆடியன்ஸின் பார்வைக்கே விடப்பட்டாலும், திரையரங்குக்கு வரும் பொதுவான பார்வையாளர்களால் அது ரசிக்கப்படுமா என்று தெரியவில்லை. மொத்தத்தில், நுணுக்கமான காட்சியமைப்புகள், கிராமத்தின் வாழ்வியலை மிக இயல்பாக காட்டிய விதம் என ஒரு முக்கியமான சர்வதேச கலைப் படைப்பை எந்தவித சமரசமும் செய்யாமல் கொடுத்துள்ள இயக்குநரையும், இதனை தயாரித்த சிவகார்த்திகேயனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொட்டுக்காளி Review: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு! | Kottukkaali Movie Review - hindutamil.in
-
உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், 20 வயது செவிலியர் வேலை செய்துவந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு 7 மணிக்கு பணிக்குச் சென்றிருக்கிறார் அந்தப் பெண் செவிலியர். அன்று இரவு, மருத்துவமனையின் மற்றொரு செவிலியர் மெஹ்னாஸ், டாக்டர் ஷாநவாஸ் என்பவரை அவரது அறையில் சந்திக்கும்படி, அந்தச் செவிலியரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்தச் செவியிலியர் மறுத்ததால், மெஹ்னாஸ், வார்டு பாய் ஜுனைத் ஆகியோர், மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு வலுக்கட்டாயமாக அந்தச் செவிலியரை இழுத்துச் சென்று அடைத்து வெளியிலிருந்து பூட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து, டாக்டர் ஷாநவாஸ் அந்த அறைக்குள் நுழைந்து, உள்பக்கமாகப் பூட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியில் கூறினால் கொலை செய்வதாக மிரட்டியதாகவும், குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக செவிலியரின் தந்தை மொரதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவுசெய்த காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் கைதுசெய்தது. இந்த சம்பவம் குறித்து மொராதாபாத் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சந்தீப் குமார் மீனா கூறுகையில், ``இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார். செவிலியரின் தந்தை, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், ``என் மகள் பட்டப்படிப்பு தொடர்ந்து வருகிறார். கடந்த பத்து மாதங்களாக உள்ளூர் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்தார். ஆனால் மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது! | nurse raped by doctor in U.P. hospital, 3 held - Vikatan
-
அநியாயம் செய்கிற, கொடூரமாக செயல்படுகின்ற, ஜனாஸாக்களை எரித்த, எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட கூட்டம் இன்று ரணிலுடன் கை கோர்த்துள்ளது ; ரிஷாட் பதியுதீன் !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது.ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை எரித்த எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட அந்த ஜனாதிபதியுடன் கை கோர்த்து உள்ளவர்கள் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். இதனாலேயே நாங்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் முசலியில் நேற்று திங்கட்கிழமை (19) மாலை இடம் பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆதரவு தெரிவித்த நிலையில் முதல் முதலாக இக்கிராமத்திற்கு வருகை தந்து பேசக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் நாங்கள் ஏமாந்து விடாது புத்தி சாதுரியமாக எமது வாக்குகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இக் காலத்தில் நாங்கள் மிக நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் நான்கு வேட்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. அவர்களின் நாங்கள் மூன்று வேட்பாளர்களை நிராகரித்து விட்டு,ஒருவரை மாத்திரம் ஏன் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நீங்கள் சிந்திக்கலாம்.இந்த நாட்டிலே எதிர் காலத்தில் இனவாதம் இருக்க கூடாது என்று ஆசைப்படுகிறோம். ஜனாஸாக்களை எரிக்கின்ற கேடு கெட்ட ஜனாதிபதி இந்த நாட்டிலே மீண்டும் வந்து விடக் கூடாது என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். இவ்வாறு ஜனாஸாக்களை எரிகின்ற போது கைகட்டி பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் ,அமைச்சரவையில் இருந்தவர்கள்,அதற்கு பக்கபலமாக இருந்தவர்கள்,144 உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தை வென்ற ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கு 20 ஆவது திருத்தச் சட்டத்தை வெள்ளச் செய்வதற்காக எமது சமூகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். எமது சமூகத்தை அழிக்க கை உயர்த்திய அர்த கூட்டம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள். இந்த நாட்டிலே ஒரு காலத்தில் ஆயுத கலாச்சாரத்தை தூது விட்டவர்கள்,தற்போது ஜனநாயகத்தை பேசுகின்றவர்கள்,அவர்கள் இன்று எந்த மார்க்கத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை.அவர்கள் நாஸ்திக கொள்கையைக் கொண்டவர்கள். இவ்வாறானவர்கள் உடன் இணைந்து நாங்கள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கொடுக்க முடியுமா?,என்று சிந்திக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை.அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது. ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை எரித்த எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட அந்த ஜனாதிபதியுடன் கோர்த்துள்ளவர்கள் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.இதனாலேயே நாங்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது என்று ஏமாந்து விடாதீர்கள்.அரசாங்கம் என்பது மக்களின் பணம்.அரசாங்கத்தில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்களோ அவர்களினால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும்.எனவே இந்த நாட்டிலே மீண்டும் ஒரு முறை இனவாதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.நான் மட்டுமல்ல சிறுபான்மை தலைவர்களும் சஜித் பிரேம தாசவுடன் கைகோர்த்துள்ளனர். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடிய சட்ட வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர். இனவாதத்திற்கு எதிரான சமூக பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள்.கரைபடியாத உள்ளங்கள் பலர் இருக்கின்ற அணியாகவே சஜித் பிரேமதாச அணி இருக்கின்றன. அந்த அணியை பலப்படுத்துகின்ற கடமை தமிழர்களுக்கும், முஸ்ஸீம்களுக்கும்,மலையக தமிழர்களுக்கும் இருக்கின்றது.இந்த மூன்று சமூகத்தின் வாக்கும் மிகவும் பெறுமதியான வாக்குகளாகவே இருக்கின்றது. எனவே சஜித் பிரேமதாச அவர்களுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளும் அமோக வெற்றிக்கு வழிவகுக்கும். எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் முடிவு வருகின்ற போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருவார். மன்னார் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம்.எனவே அனைவரும் உங்கள் வாக்குகளை சீரழிக்காமல் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். அநியாயம் செய்கிற, கொடூரமாக செயல்படுகின்ற, ஜனாஸாக்களை எரித்த, எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட கூட்டம் இன்று ரணிலுடன் கை கோர்த்துள்ளது ; ரிஷாட் பதியுதீன் ! | Virakesari.lk
-
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி!
20 Aug, 2024 | 05:11 PM தமிழ்நாட்டை சேர்ந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவு பேருரை எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள றிம்பர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே கி. வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி! | Virakesari.lk
-
பாடசாலை மாணவிகள் முதலில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகுவது தங்களது காதலர்களால் !
பெரும்பாலான பாடசாலை மாணவிகள் முதலில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாவது தங்களது காதலர்களால் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவிகளைப் போன்று மாணவர்களும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுகின்றனர். இந்நிலையில், பாடசாலை மாணவிகளை விட மாணவர்களே அதிகளவாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவிகள் முதலில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகுவது தங்களது காதலர்களால் ! | Virakesari.lk
-
ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு புதிய அரசியல் கட்சி !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (20) கொழும்பில் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்த புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். புதிய அரசியல் கட்சிக்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான அரசியலமைப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதால், அந்த அரசியலமைப்பின் படி செயற்படுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு புதிய அரசியல் கட்சி ! | Virakesari.lk
-
இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எவருடனும் இணைந்து பணியாற்ற தயார் - இந்திய தூதுவர்
இலங்கை மக்கள் தெரிவுசெய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். கண்டியில் பௌத்தமத தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கை மக்களின் தெரிவுகளை மதிப்பது குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டையும்,இரண்டு நாடுகளில் எவர் ஆட்சி செய்தாலும் வலுவான இருதரப்பு உறவுகளை பேணுவது குறித்த உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மக்களே தெரிவு செய்யவேண்டி யவர்கள்,இலங்கை தீர்மானிக்கும்,இலங்கை மக்கள் தீர்மானிக்கும் எதனையும் நாங்கள் மதிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் தெரிவுசெய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவோம்,எங்கள் நட்பு என்பது அனைத்து இலங்கைக்கும்,அனைத்து இலங்கையர்களிற்குமானது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,இதற்கு சில காலம் எடுக்கும்,இது நீண்ட திட்டம் ஓரிருவருட திட்டம் இல்லை,எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரிவிக்க முடியாது ஐந்து ஆறுவருடங்கள் நீடிக்கலாம்,இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவதிலேயே இது தங்கியுள்ளது,இதனை பரஸ்பர இணக்கப்பாடு புரிந்துணர்வுடனேயே முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எவருடனும் இணைந்து பணியாற்ற தயார் - இந்திய தூதுவர் | Virakesari.lk
-
மட்டு நகரில் பிரபல உணவகத்தை 22ஆம் திகதி வரை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு
KFC க்கு பூட்டு Janu / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:19 - 0 - 41 சுகாதார சீர்கேட்டை முன்னிட்டு மட்டக்களப்பு KFC விற்பனை நிலையம் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று மூடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய , சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருத்துவ பணிமனையின் அதிகாரிகளால் மட்டக்களப்பு KFC நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது . இதன் போது உணவு பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படாமை, களஞ்சியப்படுத்தப்படாமை, கழிவு நீர் முகாமைத்துவம் சரியாக பேணப்படாமை உணரப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் மேல் நீதி மன்றத்தினால் வழக்கு தொடரப்பட்டு, எதிர்வரும் (22) திகதி வரை தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறு செயற்படும் உணவகங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். எம். எஸ். எம். நூர்தீன் Tamilmirror Online || KFC க்கு பூட்டு
-
வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா லந்தர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றதுடன் அவரின் முதலாவது தேர்தல் பேரணி கம்பஹா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போது வெடிகுண்டு தாக்கப்பட்ட காரையும் அவர் தனது பேரணிக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது . Tamilmirror Online || வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
-
இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஈழத்து வெளியீடு!
இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஈழத்து வெளியீடு! தமிழ்க்கடவுள் முருகனின் வரலாறையும் தற்கால நிகழ்வுகளையும் இணைந்தவாறு குமரி கண்ட குமரன் எனும் பாடல் ஈழத்து இளைஞர்களால் வெளியீடு செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் இணையத்தில் ஈர்த்துள்ளது. புத்தி கெட்ட மனிதரெல்லாம் மற்றும் டக் டிக் டோஸ் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த குழுவிடம் இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்க்கான நிதியினை மக்களிடமிருந்தே சேகரித்துள்ளனர். "குமரி கண்ட குமரன்" என்ற பாடல், தமிழரின் தொன்மையான நிலமையான குமரி கண்டம் நிலவிய காலத்திற்குத் திரும்பி, அவ்வழியிலே பயணிக்கச் செய்கிறது. சமுத்திரத்தில் மறைந்ததாகக் கூறப்படும் குமரி கண்டத்தின் கதை, மற்றும் அதில் வாழ்ந்த தமிழர்களின் போராட்டம், தைரியம் மற்றும் முருகன் எனும் தெய்வத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை ஆகியவை பாடலில் புலப்படுகின்றன . இந்த பாடலின் வரிகள், குமரனின் கதையை, தமிழர் மக்களின் போராட்டம், தைரியம், மற்றும் அவர்களின் புனித ஆற்றலின் அடையாளமாக விளங்கும் முருகனைச் சித்தரிக்கின்றன. அவற்றை கமல் அபரன் மற்றும் சாந்தகுமார் எழுதியுள்ளனர். பூவன் மதீசனின் கருவில் அவரே இசையமைத்துள்ள இந்த பாடல், கோகுலன் சாந்தன் சத்தியன் உள்ளிட்ட பல்வேறு குரல் கலைஞர்கள் இணைந்து பாடியதன் மூலம், ஈழத்தின் இசை வடிவத்தை பிரதிபலிக்கின்றது. இசையின் மேலதிக நுட்பங்களையும் ஒளிச்சமபடுத்தல்களையும் இசை மேம்படுத்தல்களையும் சாயீதர்ஷன் மேற்கொண்டுள்ளார். ராஜ் சிவராஜ் இயக்கிய இந்த வீடியோ, தமிழர் கலாச்சாரத்தின் அழகும் ஆழமும் கொண்ட காட்சிப் பொழிவாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏ கே கமல் அவர்களின் ஒளிப்பதிவு, அருணின் படத்தொகுப்பு மற்றும் குணரத்தினம் வாசிகரன், தாரு மற்றும் சத்யஜித் ஆகியோரின் ஒத்துழைப்புடன், குமரனின் கதையை உயிரோட்டமாக்குகின்றது. வி.எஸ். சிந்துவின் கலை இயக்கமும், முகமது நவீத் ஒழுங்கமைத்த நடனமும், தமிழர் மரபுகளையும், நம் மண்ணுக்கான காலமற்ற இணைப்பையும் பிரமிக்க வைக்கின்றன. முருகனாக வரும் தர்மலிங்கமும் தனது பங்கை செவ்வனே செய்திருக்கின்றார். "குமரி கண்ட குமரன்" தமிழர் கலாச்சாரம், வரலாறு மற்றும் அரசியல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய காணொலி ஆகும். இது நம் எதிர்காலத்தையும் புத்துணர்வுடன் நினைவூட்டுகிறது, நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், கொண்டாடவும், நம்பிக்கையையும், சமூக ஒற்றுமையையும், கலைகளையும் கொண்டாடும் பேராண்மையை மெய்ப்பிக்கிறது. மக்களுக்காக போராடிய தலைவர்கள் தெய்வமாக்கப்பட வேண்டியவர்கள் எனும் தொனிப்பொருளை இது விட்டுச்செல்வதாகவும் இருக்கிறது. (ப) #Eelam #srilanka #jaffna #uthayan #digital #newuthayan #sanjeevi #newupdet இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஈழத்து வெளியீடு! (newuthayan.com)
-
பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் ; ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் - சந்திரசேகரன்
16 Aug, 2024 | 05:36 PM பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் - ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நேற்று (15) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஜனாதிபதி தேர்தலில் 22 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அனேகமாக சுயேச்சை குழு வேட்பாளராக களம் இறங்கியவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் களமிறங்கியவர்கள். தேசிய மக்கள் சக்தி தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அனைவருடைய ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சகித்துக் கொள்ள முடியாத ஏனைய கட்சிகள் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. இவ்வாறான ஒரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளை சந்தித்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தான் கரிசனையாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க 41 வருட காலமாக பாராளுமன்றத்தில் உள்ள நிலையில் ஆறு தடவைக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவராகவும் பிரதமர் மற்றும் தற்போது ஜனாதிபதியாக உள்ளார். தமிழ் மக்களுக்கு காணி போலீஸ அதிகாரத்தை வழங்க வேண்டுமானால் தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கியிருக்க முடியும் ஏன் மீண்டும் ஜனாதிபதி ஆகிய பின்னர் வழங்கப் போவதாக கூறுகிறார். தமிழ் மக்கள் சார்ந்த தேசிய இன பிரச்சனையை தீர்ப்பதற்காக முழு பாராளுமன்றமும் செயற்குழுவாக கூடிய நிலையில் 84 தடவைகள் கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்து எந்த ஒரு முன்மொழிவையும் சமர்ப்பிக்காத ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. தமிழ் மக்கள் கடந்த காலங்களாக பச்சை மற்றும் நீல நிறங்களுக்கு தடுமாறியமைக்கு தமிழ் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் தமது மக்களை சரியான வழியில் வழிநடத்த முடியாதவர்களாக தமிழ் தலைவர்கள் காணப்பட்டதன் காரணமாக மக்களும் பல நிறங்களை ஆதரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவின் அப்பா, தாத்தா மற்றும் பாட்டன் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறுகளே அதிகமாக உள்ள நிலையில் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் ; ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் - சந்திரசேகரன் | Virakesari.lk