Everything posted by பிழம்பு
-
யாழில் குழு மோதல் ; ஐவர் படுகாயம்!
10 Nov, 2025 | 12:17 PM யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் குப்பிளான் சந்தியில் மோதல் இடம்பெற்றது. இதன்போது ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கரவண்டி சாரதியுமென ஐவர் படுகாயமடைந்தனர். குறித்த குழுவினர் மது போதையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். யாழில் குழு மோதல் ; ஐவர் படுகாயம்! | Virakesari.lk
-
முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி
10 Nov, 2025 | 06:47 PM முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் திங்கட்கிழமை (10) ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ், ம.குணசிங்கராஜா மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். அஞ்சலி செலுத்தியதன் பின்னர் இவ்வமைப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, 2025ஆம் ஆண்டுக்குரிய மாவீரர் தினம், கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பல வருடங்களாக இப்பகுதியில் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வரப்பட்டதாகவும், தற்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுற்றுலாத்தளமாக மாற்றமடைந்துள்ளதனால் பிரதேச சபையின் தபிசாளர், செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுமதி கடிதத்தையும் இன்றைய தினம் வழங்கியிருப்பதாகவும் ஏற்கனவே கடந்த மாதம் அனுமதிக் கடிதத்தை பிரதேச சபையின் தபிசாளரிடமும் வழங்கியிருந்தோம். ஏற்பாட்டுக் குழு எனும் வடிவில் இருந்த அமைப்பானது தற்போது கரையோர மாவீரர் நாள் அமைப்பு என பெருந்திரளான மக்களுடன் கூட்டம் கூடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் என்றால் மாவீரர்களுக்குரிய மாதமாகும். அதனால் மாவீரர்களுக்குரிய அனைத்து செயற்பாடுகளையும் தூய்மையான மனத்தோடு செய்ய வேண்டும். அந்த வகையிலே இன்றைய தினம் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். அதனை தொடர்ந்து, ஏனைய பகுதிகளில் எழுச்சிக் கொடிகளை கட்டி ஆரம்பிக்க இருப்பதாகவும், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு கட்சிகள் தலையிடக்கூடாது. கட்சி பேதங்களை கடந்து அனைவரும் அணிதிரண்டு வருகைதந்து மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்றனர். முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி | Virakesari.lk
-
கௌரி கிஷன் விவகாரம்: ``நடிகர், இயக்குநரின் மௌனமும் வன்முறைதான்" - இயக்குநர் பிரேம் குமார்
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயகனுடன் ‘OTHERS’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது. 96 நடிகை கெளரி கிஷன் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் "கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது. அப்போது நடிகை கௌரி கிஷன், ``இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங். ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை. கௌரி கிஷன் இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார். இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். அதைத் தொடர்ந்து 96, மெய்யழகன் போன்ற படங்களில் இயக்குநர் பிரேம்குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவரின் பதிவில், ``நடிகை கௌரி கிஷன் மீது ஏவப்பட்ட வன்மமும் வக்கிரமும் நிறைந்த கேள்விக்கு அவர் கொடுத்த சாட்டையடி பதில் சரியே. ஒரு பெண்ணாக தன்னந்தனியாக தன் தரப்பு நியாயத்தை தைரியமாக நிலைநாட்டியது பாராட்டுக்கு உரியது. OTHERS திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரின் வக்கிரமான பேச்சை அங்கிருந்த மற்ற யாரும் தடுக்கவில்லை. மாறாக அதற்கு கௌரி பதில் தரும்போது, கூட்டமாக கூச்சலிட்டு தடுத்தது கோழைத்தனமான இழிசெயல். செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும். அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன் இந்தச் செயலை செய்தவர்களை நான் பத்திரிகையாளர்களாகவே கருதமாட்டேன். வக்கிரமாக கேள்வி கேட்கும் நீங்களும் இனி கேள்விக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதனால் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆணவம் வேண்டாம். எல்லோரைப் போல நீங்களும் உங்கள் வருமானத்துக்கு ஒரு தொழில்தான் செய்கிறீர்கள். சினிமாவுக்கு இலவச சேவை ஒன்றும் செய்யவில்லை. அது தேவையும் இல்லை. இனியாவது ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உண்மையான அறம் சார்ந்த பத்திரிக்கையாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள். தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை. ஒருவேளை எதிர்த்துப் பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால், அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை. மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும். இயக்குநர் பிரேம் குமார் இந்த இழிசெயலை அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள் கருத்தில்கொண்டு கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நன்றி! இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், Youtubers மட்டும் வரக்கூடிய முறை மற்றும் நிலை வரவேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். Gouri Kishan: ``செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும்" - இயக்குநர் பிரேம் குமார் | Gauri Kishan: ``Action determines our worth'' - Director Prem Kumar
-
அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 06:23 - 0 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.37 க்கு ஆரம்பித்து, மாலை 5.47க்கு நிறைவுசெய்தார். பாராளுமன்ற உரையை ஒரே மூச்சில் வாசித்து முடித்தார். இதில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். Tamilmirror Online || அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
-
தெற்கில் இருந்து இளைஞர்,யுவதிகள் யாழ் வருகை !
யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் தெற்கில் இருந்து இளைஞர்,யுவதிகள் யாழ் வருகை ! தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது . தெற்கிலிருந்து, சகோதர மொழி பேசும் சுமார் 150 இளைஞர்கள் யுவதிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதந்தனர். யாழ். பழைய கச்சேரி பழைய பூங்கா வீதியில் இருந்து கலை, கலாசார முறைப்படி விருந்தினர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட உதவி மாவட்ட செயலர் எஸ்.சிவகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் கே.டி.சி. காமினி, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் யு.சிவகாமி, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ். கபிலன் ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். தெற்கில் இருந்து இளைஞர்,யுவதிகள் யாழ் வருகை !
-
யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு! கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த 46வயதுடைய யோகராஜா மயூரதி என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை 02மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் துன்பங்களை எதிர்கொண்ட தாய், தனது மூன்று குழந்தைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பருத்தித்துறையில் வெள்ளத்தில் மிதந்த மரக்கறி சந்தை!
யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் பருத்தித்துறையில் வெள்ளத்தில் மிதந்த மரக்கறி சந்தை! யாழ். பருத்தித்துறை பகுதியில் மரக்கறி சந்தை வெள்ளத்தில் மிதந்துள்ளது. இதையடுத்து கழிவகற்றல் வாகனத்தின் மூலம் நகரசபை தரப்பில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சந்தையை பார்வையிட்டார். இதன்போது வியாபாரிகள் தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக இருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமை தொடர்பில் தவிசாளரிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மரக்கறி சந்தை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக நவீன சந்தை கட்டடத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தவிசாளர் உறுதிபடத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறையில் வெள்ளத்தில் மிதந்த மரக்கறி சந்தை!
-
செம்மணி மனிதப் புதை குழி அகழ்வில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரியை நீக்கியமை தொடர்பில் ஆராயப்படும் - ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி!
07 Nov, 2025 | 10:45 AM செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையில் இருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் அரசாங்கம் தங்கு தடை இன்றி நீநி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் குறித்த புதைகுழி அகழ்வ பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் ஒருவரை அதிலிருந்து நீக்கி உள்ளனர். பாராளுமன்ற சுகாதார மேம்பாட்டு உயர்மட்ட குழுவில் நான் பங்கு பற்றிய நிலையில் செம்மணி அகழ்வில் மாதிரிகளை சேகரிப்பது ஆராய்வது தொடர்பில் மேலும் ஒரு சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அதன் அடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தி அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு மேலதிகமாக யாழ். தீவகத்தில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி அகழ்வுப் பணிகளில் கடமையாற்றினார். குறித்த வைத்தியர் மூன்று மாதங்கள் மட்டுமே கடமையாற்றியதாக அறியக் கிடைக்கும் நிலையில் குறித்த சட்ட வைத்திய அதிகாரி நீக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி மீண்டும் இணைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். செம்மணி மனிதப் புதை குழி அகழ்வில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரியை நீக்கியமை தொடர்பில் ஆராயப்படும் - ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி! | Virakesari.lk
-
இலங்கையில் எல்லாமே இருக்கு - நடிகர் சரத்குமார் பாராட்டு
07 Nov, 2025 | 10:37 AM நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர் ஆர். சரத்குமார் அந்நாட்டின் சுற்றுலா அபிவிருத்தியைப் பாராட்டியுள்ளார். இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நடிகர் சரத்குமார் புதன்கிழமை (05) இலங்கையை வந்தடைந்தார். கண்டிக்கு நேற்று வியாழக்கிழமை (06) விஜயம் செய்தபோது, அந்தப் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய 07 நட்சத்திர ஹோட்டலைப் பார்வையிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்த ஹோட்டல் குறித்து நடிகர் தெரிவிக்கையில், இது உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்களைப் போன்ற 7 நட்சத்திர ஹோட்டல். “இது மே அல்லது ஜூன் மாதங்களில் திறக்கப்படும். நான் அதைப் பார்க்க வந்தேன். சுகாதாரம் தொடர்பான எல்லா வசதிகளும் இங்கே உள்ளது. கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் சேவைகள் கிடைக்கின்றன,” என அவர் தெரிவித்தார். இலங்கையைப் பாராட்டிய நடிகர் சரத்குமார், இலங்கை அனைத்தையும் கொண்ட ஒரு நாடு என கூறினார். “இங்கே எல்லாம் கிடைக்கிறது. பனிப் பொழிவைத் தவிர்ந்து இலங்கையில் ஏனைய எல்லா காலநிலையும் கிடைக்கிறது,” என அவர் தெரிவித்தார். இலங்கையில் எல்லாமே இருக்கு - நடிகர் சரத்குமார் பாராட்டு | Virakesari.lk
-
இவ் ஆண்டின் இதுவரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.9 மில்லியனைக் கடந்தது
07 Nov, 2025 | 11:33 AM 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.9 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. அதேநேரம், நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மொத்தம் 32,815 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 1,923,502 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர். இந்த காலப்பகுதியில், அதிகபட்ச தினசரி வருகை 7,412 சுற்றுலாப் பயணிகளாக நவம்பர் முதலாம் திகதி பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அதன்படி இந்தியாவிலிருந்து 431,235 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்திலும் (177,167), ரஷ்யா (138,061), ஜேர்மனி (119,415) மற்றும் சீனா (113,619) ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ் ஆண்டின் இதுவரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.9 மில்லியனைக் கடந்தது | Virakesari.lk
-
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா பதில் பிரதம நீதியரசாராக நியமனம்
07 Nov, 2025 | 01:25 PM உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று வெள்ளிக்கிழமை (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ளார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் வரை செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர் ஒருவர் பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்வது இதுவே இலங்கை வரலாற்றில் முதலாவது சந்தர்ப்பம் ஆகும். ஜனாதிபதி சட்டத்தரணி நீதியரசர் எஸ்.துரைராஜா, 1988 ஆம் ஆண்டு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தில் பதிவுபெற்று, 1989 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்றார். இவர் நீதித்துறைக்கு தரமுயர்த்தப்படுவதற்கு முன்னதாக மேலதிக மன்றாடியார் தலைமையதிபதி நிலைவரையில் பல பதவிப்படிகளை கடந்து வந்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் அவரது பதவிக்காலத்தில், அதிகாரமிக்கவர்கள் புரிந்த குற்றங்கள் உள்ளடங்கலாக, பல்வேறு உயர்மட்ட குற்ற வழக்குகளில் வாதாடியுள்ளதுடன் பல விசேட வழக்காடல் குழுக்களுக்கு தலைமையும் தாங்கியுள்ளார். இவர் தனது சட்டமாணி பட்டத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் சட்ட முதுமாணி பட்டத்தினை ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். பாரிஸ்டராகவும் சொலிசிட்டராகவும் உள்ளீர்க்கப்பட்ட இவர் பிஜி குடியரசில் நீதியரசாகவும் பணியாற்ற நியமிக்கப்பட்டார். இலங்கை நீதித்துறையின் பெருமைமிகு வரலாற்றிலேயே, அப்போதைய இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியினால், இந்திய வம்சாவழியினரில் நியமிக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி சட்டத்தரணி இவராவார் என்பதுடன் அவ்வருடமே அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில், இவர் தற்போது அதி சிரேஷ்ட நீதியரசராக பணியாற்றுகின்ற உச்ச நீதிமன்றத்திற்கு பதவியுயர்த்தப்பட்டதுடன் அவருடைய நீதித்தொழிலில் வழங்கியுள்ள பல அதிமுக்கிய தீர்மானங்கள் உள்ளடங்கலாக, 300 இற்கும் மேற்பட்ட தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார். நீதிமன்றங்களுக்கும் அப்பால், நீதியரசர் துரைராஜா அவர்கள் சட்டக் கல்வி மற்றும் புலமைப்பரிசில்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இலங்கை கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்வி பேரவையின் உறுப்பினராக விளங்கும் இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கற்கை மற்றும் கலாநிதி கற்கை நிகழ்ச்சித்திட்டங்களின் விரிவுரையாளராகவும் மதிப்பாய்வாளராகவும் காணப்படுகின்றார். சட்டம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் குறித்து பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சஞ்சிகைகளில் எண்ணிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் நீதித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் புது டெல்லியில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் சட்டமா அதிபர்கள் மற்றும் மன்றாடியார் தலைமையதிபதிகளின் மாநாட்டிற்கு, இந்தியாவின் சட்டமா அதிபரின் ஊடாக இந்திய அரசாங்கத்தினால் விசேட அதிதியாக அழைக்கப்பட்ட மிகஉன்னத கௌரவத்தினையும் நீதியரசர் அவர்கள் பெற்றிருந்தார். இந்நிகழ்வில், இந்தியாவின் சனாதிபதியும் பிரதமரும் முறையே பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளாக கலந்துக்கொண்டிருந்தனர். பொதுநலவாய நாடுகளிடையே சட்டக் கல்வியின் தரத்தினை மேம்படுத்தி வளப்படுத்தும் பொதுநலவாய நாடுகளின் சட்டக் கல்வி சங்கத்தின் போசகராகவும் காணப்படுகின்றார். அண்மையில், இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 1802 ஆம் ஆண்டில் இலங்கையின் மீயுயர் நீதிமன்றங்கள் தோற்றம்பெற்றதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் என இரண்டிற்கும் நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய வம்சாவழித் தமிழர் இவரேயாவார். உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா பதில் பிரதம நீதியரசாராக நியமனம் | Virakesari.lk
-
முல்லைத்தீவில் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த கணவன் உயிரிழப்பு
07 Nov, 2025 | 04:10 PM முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு, கிணற்றில் குதித்து உயிரிழந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதுடைய மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டிருந்தது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (6) இரவு உணவருந்தி நித்திரைக்கு சென்ற கணவன், வெள்ளிக்கிழமை (7) காலை கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கியுள்ளார். அதன் பின்னர், குறித்த கணவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக நேரடியாக பார்வையிட்டதையடுத்து, உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உறவினர்கள் வீட்டிற்கு சென்று மனைவியை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தலையில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த கணவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றுவருகிறது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த கணவன் உயிரிழப்பு | Virakesari.lk
-
தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி
07 Nov, 2025 | 05:13 PM தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி | Virakesari.lk
-
வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் - ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு ஆளுநர் நன்றி
07 Nov, 2025 | 06:55 PM பொருளாதார நெருக்கடி முகம்கொடுத்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்துக்கு 42 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் சுதேச வைத்தியத்துறையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும் 6 பேர் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் கீழும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமன நிலையங்களை வழங்கும் நிகழ்வு பண்ணையிலுள்ள சுகாதாரக் கிராமத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (07.11.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், வேலை இல்லை என்று சொல்லி தங்களுக்கு அரசாங்க வேலை கோருவார்கள். வேலை கிடைத்த பின்னர் வீட்டுக்குப் பக்கத்தில் திணைக்களத்தைக் கேட்பார்கள். நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது. இதுவரை காலமும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் இல்லாமையால் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மிகப் பெரும் சவால்களை நாம் சந்தித்திருந்தோம். இந்த நியமனங்கள் ஊடாக அது சரிசெய்யப்பட்டுள்ளது. சுதேச மருத்துவம் என்பது ஒரு சாதாரண சிகிச்சை முறை மட்டும் அல்ல. அது நமது தொன்மையான பண்பாட்டு மரபின் உயிரோட்டம். நமது மண்ணின் செடிகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் தலைமுறைகளின் அனுபவ ஞானத்தின் அழகிய சங்கமமே இந்த சிகிச்சை முறை. இந்த மரபு தொலைந்து போகாமல் பாதுகாக்கப்படவேண்டும்; புதிய தலைமுறைக்கு உரிய முறையில் பரிமாறப்படவேண்டும்; அதில் நீங்கள் வகிக்க உள்ள பங்கு மிகப் பொறுப்பானதும் பெருமைமிக்கதுமானதாகும். எமது நோக்கம் தெளிவானது — மக்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் சுகாதார சேவை சென்றடைய வேண்டும். நகர மையங்களில் மட்டுமல்ல தொலைதூர கிராமங்களின் கடைசிக் குடியிருப்புகளுக்கும் அது கிடைக்க வேண்டும். இந்தப் பயணத்தில், ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களாகிய நீங்கள் மக்களுக்குச் செல்லக்கூடிய மிக அருகாமையான நம்பிக்கையான மருத்துவ சேவை ஆளுமைகளாக இருப்பீர்கள். உங்கள் சேவை ஒரு மருந்தளிப்பு அல்ல — அது ஒரு ஆறுதல், ஒரு நம்பிக்கை, ஒரு மனிதநேயம். இன்று நீங்கள் பெறும் நியமனம் ஒரு வேலை வாய்ப்பு அல்ல. இது ஒரு மக்கள் சேவைக்கான உறுதி. மக்கள் உங்களை நம்பி வரும்போது, அந்த நம்பிக்கையை நீங்கள் காக்க வேண்டும். இதுவரை பல துறைகளில் மக்கள் சேவை பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் நன்கு அறிவோம். நீங்கள் அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இல்லாமல், அத்தருணத்தை மாற்றும் தலைமுறையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நோயாளியையும் சந்திக்கும் போது, 'இந்த நிலை நான், அல்லது எனது குடும்பம் என்றால் நான் எப்படி அணுகுவேன்?' என்று நீங்கள் உங்களிடம் கேளுங்கள். அந்த ஒரு கேள்வியே உங்களை சிறந்த சேவை வழங்கும் வழியில் நடத்தி செல்லும். வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தை, மக்கள் சேவைக்கு மிக நெருக்கமான, அணுகத்தக்க மற்றும் செயல்திறனான இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாகாண நிர்வாக அலுவலகங்களை யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மட்டுமே வைத்திருக்காமல், மாகாணம் முழுவதுக்கும் அணுகுமுறையை சமமாக்கும் வகையில் பல திணைக்களங்கள் நிலப்பரப்பாகப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. கிளிநொச்சியில் காணித் திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதும், மாங்குளத்தில் நீர்பாசனத் திணைக்களம் செயல்பட்டு வருகின்றதும் அதன் எடுத்துக்காட்டுகளாகும். இதேபோன்று, சுதேச வைத்தியத்துறையையும் மக்களுக்கு அதிகளவில் பயனளிக்கும் மையத்திலேயே நாம் அமைப்போம். நீங்கள் சேவையாற்றத் தயாராகுங்கள் — உங்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கமும் மாகாண நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. உங்களின் சேவையின் தொடக்கம் இன்று. அந்த சேவையின் அர்த்தத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். நீங்கள் அவர்கள் மனதில் நம்பிக்கையின் விளக்காக விளங்கிட வாழ்த்துகிறேன், என்றார். இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி தில்லையம்பலம் சர்வானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் - ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு ஆளுநர் நன்றி | Virakesari.lk
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
கள்ளத் தொடர்பு என ஏன் கொச்சைப் படுத்துகின்றீர்கள் ஐயா.. காலம் தாழ்த்தி வந்த காதல் என்று சொல்லலாமே,...😆
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
அந்த ஊழலின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளியே வரும்போது, நடிகையாக மாறிய அந்த நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, தானாக முன்வந்து சி.ஐ.டி.க்குச் சென்றார். பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன். எனினும், பத்மேவை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். 2022 துபாய் புத்தாண்டு விழாவிற்கு என் சொந்த செலவில் என் குடும்பத்துடன் நான் சென்றேன். அன்று லட்சக்கணக்கான மக்கள் இருந்தனர். அந்த பெயர் கொண்ட நடிகைகளும் இருந்தனர். நான் பத்மேவுடன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பத்மே என்று எனக்குத் தெரியவில்லை. துபாய் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. எனக்கு அங்கு ஒரு தொழில் உள்ளது. பத்மேவைச் சந்திக்க நான் துபாய் செல்லவில்லை. எனக்கு நிறைய பணம் இருக்கிறது. எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நான் கஷ்டப்பட்டு என் பெயரை உருவாக்கினேன். பலர் அந்தப் பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள். நீங்கள் புத்தாண்டு விழாக்களுக்குச் சென்றால், கவனமாக இருங்கள், கவனமாக புகைப்படங்களை எடுங்கள் என்றும் கூறியுள்ளார். பத்மே என்பவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே என்பவராவார். Tamilmirror Online || புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது
-
பசில் ராஜபக்ஷ மீது ரூ.1.03 பில்லியன் பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டு; ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை தொடக்கம்
06 Nov, 2025 | 12:59 AM முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் பொது நிதியில் ரூ. 1.03 பில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் கமந்த துஷார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ததாக விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விரிவாகக் கூறப்பட்டுள்ளது என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருந்தார். 2010-2014 வரையான காலப்பகுதியில் பஷில் ராஜபக்ஷ உள்நாட்டு பயணங்களுக்கு விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, அதில் 'மகா நெகும' திட்டத்திலிருந்து ரூ. 155,451,612 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 14 வாகனங்களை அவர் பயன்படுத்தியதாகவும், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் மூன்று சொகுசு வாகனங்கள் மற்றும் 11 பிற வாகனங்கள் உட்பட, அரசுக்கு ரூ. 612,000,000 இழப்பு ஏற்பட்டதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 64 கடற்படை வீரர்கள் மற்றும் 84 ராணுவ வீரர்கள் அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டதாகவும், ரூ. 264,370ஈ 800 பொது நிதியில் அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விடயங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பொறுப்பான அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் கமந்த துஷார வலியுறுத்தியுள்ளார். இந்த முறைப்பாட்டுக்குரிய ஆவணங்களை கமந்த துஷார 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முன்னிலையாகி ஒப்படைத்துள்ளார். பசில் ராஜபக்ஷ மீது ரூ.1.03 பில்லியன் பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டு; ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை தொடக்கம் | Virakesari.lk
-
திருகோணமலை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
06 Nov, 2025 | 01:04 PM திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலை நேரங்களில் வேலைக்குச் செல்கின்றவர்களும், பாடசாலைக்கு அவசர அவசரமாக செல்கின்ற மாணவர்களும் வீதிகளில் செல்கின்ற கட்டாக்காலி மாடுகளினாலும் அவை வீதியில் போடுகின்ற சாணத்தினாலும் விபத்துகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். எனவே குறித்த கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில் புதன்கிழமை (05) கட்டாக்காலி மாடுகள் பிடித்தல் தொடர்பான அறிவித்தலை மாநகரசபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக முதல்வர் விடுத்திருந்தார் அதில் மாநகர எல்லைக்குள் கட்டாகாலி மாடுகள் பொது இடங்களில் நடமாடுவது அதிகரித்த வண்ணம் உள்ளது மற்றும் மக்கள் பாதுகாப்பிற்கும் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாகிறது. இதனால், மாநகர சபை சார்பில் இத்தகைய மாடுகள் பிடிக்கப்படுவதுடன், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பிடிக்கப்பட்ட மாடுகளை உரிய உரிமையாளர்கள் மூன்று (03) நாட்களுக்குள் வந்து மீட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மாடுகளை மீளப் பெறாவிட்டால், அவை மாநகர சபைக்கு சொந்தமாக்கப்படும். மாடுகளை மீண்டும் பெற விரும்பும் உரிமையாளர்கள், உரிய அத்தாட்சிப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் மாநகர சபையில் நிர்ணயிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்திய பின்னரே மாடுகளை மீண்டும் பெற இயலும். இனி வரும் காலங்களில் தண்டப்பணத் தொகை மேலும் அதிகரிக்கப்படுமென பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று (06) காலை பிரதான வீதி, கடல்முக வீதி, திருஞானசம்பந்தர் வீதி உள்ளிட்ட பல வீதிகளில் பெருமளவான கட்டாக்காலி மாடுகள் திரிவதை படங்களில் காணலாம். திருகோணமலை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் | Virakesari.lk
-
செங்கலடி பகுதியில் காட்டு யானைகளால் ஒரே இரவில் பரவலான சேதம்
06 Nov, 2025 | 02:29 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் 5 வீடுகளையும் ஒரு கடையையும் உடைத்து நாசம் செய்ததுடன், பாலாமடு பகுதியில் விவசாயிகளின் தங்குமிடமாக இருந்த 3 கொட்டகைகளையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. மேலும், பல பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ச்சியான காட்டு யானை தாக்குதலால் உயிர் அச்சத்தில் வாழும் மாவடிஓடை மக்கள், தமது பகுதியில் யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டு யானை பிரச்சினை குறித்து மட்டக்களப்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யானைகளை துரத்துவதற்கான முயற்சிகளில் கூட அதிகாரிகள் பின்வாங்குவதாகவும், மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் யானையின் தாக்குதல் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் கிராமசேவையாளருக்கு அறிவித்தபோதிலும் தாக்குதல் நடந்து இருதினங்களின் பின்னரே குறித்த பகுதிக்கு அவர் வருகைதருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிராமங்களில் நடைபெறும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டிய கிராம சேவையாளரே இவ்வாறான நிலையிலேயே இருந்துவருவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாவடிஓடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்காக உடனடி தீர்வை கோருகின்றனர். செங்கலடி பகுதியில் காட்டு யானைகளால் ஒரே இரவில் பரவலான சேதம் | Virakesari.lk
-
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு
06 Nov, 2025 | 04:59 PM இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருள் ஒன்று, நான்கு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நவம்பர் 3, 2025 திங்கட்கிழமை, யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களில் ஒன்றான செருப்பு 1980 மற்றும் 1995 க்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். "குற்றப்புலனாய்வு பிரிவினரால் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 25ஆவது சான்று பொருளான செருப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அந்த பாட்டா நிறுவனத்தினால் 39 ரூபாய் 90 சதம் என விலை குறிக்கப்பட்ட அந்த செருப்பு, 1980 இற்கும் 1995ஆம் ஆண்டுக்கும் உட்பட்டதாக இருக்கலாம் என அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. " 1986ஆம் ஆண்டு இராணுவ உறுப்பினர்கள் குழுவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமி மீதான விசாரணையின்போது செம்மணியில் பல மனிதப் புதைகுழிகள் இருப்பது முதன்முதலில் தெரியவந்தது. மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், ஒரு பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பை ஆகியவை அடங்கும். 45 நாட்கள் நீடித்த இரண்டாம் கட்ட அகழ்வாய்வு செப்டெம்பர் 6, 2025 அன்று நிறைவடைந்த நேரத்தில், ஒரு குழந்தையின் எலும்பு உட்பட 239 எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்த மேலதிக ஆய்வுகளுக்கான பாதீட்டை, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். "ஏற்கனவே எடுக்கப்பட்ட 240 மனித எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாதீடு இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் அதற்கென பணியாற்றுவதற்காக, சட்ட வைத்திய அதிகாரிகளான செல்லையா பிரணவன், மயூரதன் உள்ளிட்ட 7 நிபுணர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக டிசம்பர் 15ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது." இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக டிசம்பர் 15, 2025 அன்று நீதிமன்றில் விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாண நீதிபதி எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன் மற்றும் ஞா.ரணிதா மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) பிரதிநிதிகள் ஆகியோர் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டனர். மழைநீரால் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள செம்மணி மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வாய்வைத் ஆரம்பிப்பது குறித்த தீர்மானத்தை ஜனவரி 19, 2026 வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, ஒக்டோபர் 13, 2025 அன்று யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம், வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளுக்கான நிதி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்ட 19 மில்லியன் ரூபாய் எங்களுக்குக் கிடைத்துள்ளது." செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு | Virakesari.lk
-
புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு!
புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு! 06 Nov, 2025 | 05:29 PM புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகள், தம்மை தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இம்மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம் தீர்ப்பினை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது. பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (6) உயர்நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்விலேயே இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவியான வித்யா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் அப்போதைய நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் இந்த மரண தண்டனை தீர்ப்பினை அறிவித்திருந்தது. புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு! | Virakesari.lk
-
மட்டு. தாழங்குடா காணியில் மர்மமான குழி - அதிரடிப்படையினர் சோதனை - சஹரான் குழுவின் குண்டுசோதனையை நினைவுறுத்தி தொடர் விசாரணை
06 Nov, 2025 | 06:04 PM காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்ட காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் இன்று வியாழக்கிழமை (6) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பகுதியான தாளங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்டது. இவ்வாறு பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி காணிக்கு அதன் உரிமையாளர் சென்றபோது அங்கு நிலத்தில் பாரியளவில் குழி தோண்டப்பட்டிருப்பதை கண்டுள்ளார். சஹரான் குழு போன்றவர்கள் போல ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட, நேற்று புதன்கிழமை (5) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர். சில தீய சக்திகள் அந்தப் பகுதியில் ஏதாவது வெடிபொருள் அல்லது வேறு ஏதாவது பொருளை புதைத்து வைத்துவிட்டு, அதை தோண்டி எடுப்பதற்காக குழி தோண்டியிருக்கலாம் என்பது போன்ற பல சந்தேகங்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் இன்று, அப்பகுதிக்கு சென்று நிலத்தை கம்பிகளால் குத்தியும் மற்றும் எக்ஸ்ரே இயந்திரம் மூலமாகவும் சோதனையிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். மட்டு. தாழங்குடா காணியில் மர்மமான குழி - அதிரடிப்படையினர் சோதனை - சஹரான் குழுவின் குண்டுசோதனையை நினைவுறுத்தி தொடர் விசாரணை | Virakesari.lk
-
950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு!
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் 950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த சில காலங்களாக கைப்பற்றப்பட்ட 950கிலோ போதைப்பொருள்கள் நேற்று எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் மற்றும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்ற நீதிவான் உசைன் ஆகியோரின் முன்னிலையில் கோம்பயன் மணல் இந்து மாயானத்தின் மின்தகன மேடையில் போடப்பட்டு குறித்த போதைப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன . பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் எடுத்துவரப்பட்ட குறித்த போதைப்பொருள்கள், நீதிவான், நீதிமன்ற பதிவாளர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. 950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு!
-
யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்?
05 Nov, 2025 | 12:53 PM யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். அதேவேளை 2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு வர்த்தக சங்கத்தினர் உறுதியளித்தனர். வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டடத் தொகுதியிலுள்ள பல கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பான நடவடிக்கை கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது பெருமளவுக்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் கவனமெடுத்து விசேடமாக ஆளணியை நியமித்து விரைவாக நிறைவுசெய்வதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு யாழ். மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளரை ஆளுநர் கோரினார். உரிமம் மாற்றத்தை செய்வதன் ஊடாக மாநகர சபைக்கான வருமானம் பல கோடி ரூபாக்கள் வரையில் கிடைக்கப்பெறும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள மலசலகூடம் உள்ளிட்ட நகரப் பகுதியிலுள்ள மலசலகூடங்களின் சீர்கேடுகள் தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர். அவற்றை உரியமுறையில் சீர்செய்வதுடன் தொடர் பராமரிப்புக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கோரினார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பிலும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு சிலைகளை வைப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதுடன், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளை உயிரோட்டமாக தென்படக்கூடியவாறான வர்ணப்பூச்சு வேலைகளையும் முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரினார். யாழ்ப்பாண நகரிலுள்ள கழிவு வாய்க்கால்கள், குப்பைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவற்றை துப்புரவு செய்வதற்கான முயற்சிகள் மாநகர சபை எடுத்துள்ள நிலையில் அதனை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஒழுங்குமுறைகளையும், தண்டங்களையும் அறிமுகப்படுத்துமாறும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மாநகர சபையை அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்? | Virakesari.lk
-
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் தொடரும் அட்டகாசம்
05 Nov, 2025 | 03:37 PM நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகளில் வன்முறை கும்பல்கள் மற்றும் , போதைப்பொருள் வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் , அது தொடர்பில் பிரதேச சபை மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காது இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கொக்குவில் சந்தையில் மரக்கறி வாங்க வந்த நபர் ஒருவருடன் வன்முறை கும்பல் ஒன்று , முரண்பட்டு, அவரை மிக மோசமாக தலைக்கவசங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தால் , சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுவார்கள், மரக்கறி வாங்க வந்தவர்கள் இன்னல்களை எதிர்கொண்டதுடன் , சந்தையில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் , அது தொடர்பில் பொலிஸார் மற்றும் பிரதேச சபைக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கடந்த வாரம் திருநெல்வேலி , சந்தையினுள் சனநடமாட்டம் அதிமாக காணப்பட்ட பகல் வேளை நிறை போதையில் ஒருவர் தனது ஆடைகளை களைந்து , தகாத வார்த்தைகளை பேசி அட்டகாசம் புரிந்த நிலையில் , அது தொடர்பில் பொலிஸார் மற்றும் நல்லூர் பிரதேச சபையினருக்கு அறிவித்தும் , அவர்கள் சம்பவ இடத்திற்கு வராத நிலையில் போதையில் அட்டகாசம் புரிந்தவரின் குடும்பத்தினர் வந்து அவரை அழைத்து சென்று இருந்தனர். அதேபோன்று , கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் , சந்தைக்குள் போதையில் இரு தரப்பினர் , முரண்பட்டு , வாழைப்பழம் விற்பனை செய்யும் கடைக்குள் ஒரு தரப்பு புகுந்து அங்கிருந்த கத்தியை எடுத்து மற்றைய தரப்பின் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர். இரு சந்தைகளிலும் நாளுக்கு நாள் போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருளை வாங்கி பாவிப்பவர்கள் மற்றும் வன்முறை கும்பல்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து செல்லும் நிலையில் , அது அதனை கட்டுப்படுத்த நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் தொடரும் அட்டகாசம் | Virakesari.lk