11 கோடியில் ஸ்டாலின் கட்டித் தந்த கீழடி அருங்காட்சியகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சிவகங்கை: 11 கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம் ஒன்று கீழடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
அதனை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் முதன்மைச் செயலர் உதயசந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
வகைவகையான வடிவத்தில் காட்சியகங்கள்:
சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 10 கட்டடங்களுடன் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முழுப் பணிகளும் ஏறக்குறைய நிறைவை எட்டியுள்ளன. இப்போது வண்ணம் பூசும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. மேலும் தொல்பொருட்களை வைப்பதற்கான மர அலமாரிகளைத் தயாரிக்கும் பணிகள்கூட இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.
இதன் முதல் தளத்தில் நிர்வாக கட்டடம் உள்ளது. 2வது தளத்தில் காட்சிக் கூடமும் 3வது தளத்தில் உலோக தொல்பொருட்கள், நான்கில் மணிகள் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட தொல்பொருட்கள், ஐந்தில் விலங்கு தொல்பொருட்கள், ஆறாவது தளத்தில் சுடுமண் பொருட்கள் என்று தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் தங்கப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், உழவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என காட்சிப்படுத்த தனித்தனி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது செட்டிநாட்டுக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னல் மற்றும் கூரை, கதவு என அனைத்தும் தேக்கு மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. தரை முழுவதும் ஆத்தங்குடி பாணியில் போடப்பட்டுள்ளன.
ஜன்னல்களில் விதவிதமான வண்ணங்களில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்து சாளரங்களும் சூரிய ஒளி உள்ளே புகும்படி நேர்த்தியாக உயரப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த அருங்காட்சியகமானது நல்ல காற்றோட்ட வசதிகளுடன் இயற்கையான ஒளி அமைப்புடனும் காட்சி தருகின்றது.
செழுமையான செட்டிநாட்டு கலாச்சாரம்:
அழகிய கண்ணாடி மாடல் கூரை விளக்குகள், பழங்காலத்து அரிக்கன் விளக்குகள், மரத்தால் செய்யப்பட்ட தாழ்வாரம், அதன் உட்புறம் மானாமதுரை தட்டு ஓடுகள், நான்கு மாடங்களிலும் பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்கக் கூடிய தெப்பக் குளம், அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைப் பற்றிய விளக்க உரையை உட்கார்ந்து கேட்கும் படியான ஒலி மற்றும் ஒளி வடிவிலான காட்சிக் கூடம், பார்வையாளர்கள் உயரே நின்றபடி பார்வையிட, மேல் மாடங்கள் என ஒவ்வொரு வசதிகளையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்துள்ளனர்.
ஒலி மற்றும் ஒளி வடிவிலான காட்சிக் கூடத்தில் 50 பேர் வரை அமரலாம். 15 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவுக்குக் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை அங்கே வரும் பார்வையாளர்களுக்குப் போட்டுக் காட்ட உள்ளனர்.
மேற்புறமாக நின்று இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்கும் போது, நீள வடிவில் மிகச் சிறப்பாகக் காட்சி தருகிறது. அந்த அனுபவம் வியப்பை அளிக்கும்படி உள்ளது. கூடுதலாக இங்கு லிஃப்ட் வசதியும் உள்ளது. மேலும் இங்குள்ள ஒரு சுவரில் ஜல்லிக்கட்டைப் படம்பிடித்துக்காட்டும்படி காளை ஒன்றும் புடைப்புச் சிற்ப பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9 கட்டமாக நடத்தப்பட்ட கள ஆய்வுகளில் இதுவரை நான்கு கட்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்களை மட்டுமே இங்குப் பார்வைக்கு வைக்க உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற 6 மற்றும் 7வது கட்ட அகழாய்வில் பல பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் தங்கத்தால் ஆன காதணிகள், புதிய கற்காலக் கருவிகள், காதில் அணியும் பாம்படம் ஆகியவை கிடைத்துள்ளன.
மேலும் முதன்முறையாக குறுவாள் ஒன்றும் கிடைத்துள்ளது. பெண்கள் அணியும் மணிகள், பானை எழுத்துகளில் தமிழ் எழுத்துகள், அதில் முதன்முறையாக, ஆதன், கதரன் என்ற 13 கொண்ட பானை ஒன்றும் கிடைத்துள்ளது. இவ்வளவு நீளம் கொண்ட எழுத்துகள் உடைய பானை இதுவரை கிடைத்ததில்லை. இந்த இரண்டு கட்ட ஆய்வுகளில் 700 பொருட்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டன.
உலகம் பேசும் தமிழர்களின் நாகரிகம்:
இது குறித்து தொழில் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'வைகைநதி நாகரிகம் என்பது கீழடியிலிருந்து உருவானது என்பதற்கு பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவரை நகர நாகரிகம் கங்கைச் சமவெளியிலிருந்துதான் தொடங்கியது என்ற கருத்தாக்கத்தை இந்த ஆய்வுகள் உடைத்தெறிந்துள்ளன.
கீழடியிலும் அதே காலகட்டத்தில் நகர நாகரிகம் என்பது இருந்துள்ளது. சாதாரண மக்கள் எழுத்தறிவைப் பெற்றவர்களாக இருந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. தமிழர்களின் நாகரிகம் என்பது பழமையான நாகரிகம். இதற்கு முன்பாக இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழ்நாடு அரசின் ஆய்வின் மூலம் இந்த நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என அறிவியல்பூர்வமாக நிறுவி இருக்கிறோம்' என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ' கீழடி 8ம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் கனசதுர (Cubical) வடிவில் மட்டுமே பகடைக்காய்கள் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தால் ஆன பகடைக்காய் கிடைத்துள்ளது.
மேலும் 'ன்' என்ற எழுத்து அசோகனின் பிராமியில் இல்லை. ஆனால் கீழடி அகழாய்வு ஆதன் என்ற இடத்தில் 'ன்' வருகிறது. கீழடி அகழ்வாராய்ச்சியில் உறைக்கிணறு ஒன்றில் அலங்கரிக்கப்பட்ட மீன் சின்னம் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கூடவே 146 செ.மீ. ஆழத்தில் வெள்ளியிலான முத்திரைக் காசு கண்டு பிடித்துள்ளோம். கங்கைச் சமவெளியுடன் பழந்தமிழர் வணிக தொடர்புக் கான மற்றுமொரு சான்று இது' என விளக்கம் அளித்தார்.
சமீபத்தில் தான் முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கைகளை, அதாவது 2014 - 2015 மற்றும் 2015- 2016 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளை ஒன்றிய அரசின் தொல்பொருள் தலைமை இயக்குநரிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.
அதில் 2600 ஆண்டுகள் கீழடி நாகரிகம் பழமையானது என்பது கார்பன் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ஏற்று மத்திய அரசு கால அளவை திருத்தி அமைத்து வெளியிட்டால், தமிழர்களின் நாகரிகம் மேலும் பழமையானது என்பது உலகத்தார் முன் உறுதியாகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து ஒன்றிய தொல்லியல்துறை தென்னிந்திய ஆலய திட்டக் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசும்போது, 'தமிழ்நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட தொல்லியல்துறை சார்ந்த அகழாய்வுகளில் கீழடியில்தான் அதிகமான கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதற்கான இறுதி அறிக்கையை நான் எழுதிய போது எனக்கே வியப்பு ஏற்பட்டது. இவை கி.மு.300க்கு முன்னால் கட்டப்பட்ட கட்டடங்கள். அதில் உள்ள கட்டடங்களை இரண்டு வகையாகப் பிரித்து ஆய்வு செய்துள்ளோம்' என்கிறார்.
'தமிழர் வரலாற்றுப் பெட்டகம் கீழடி வரலாற்றுக் கண்காட்சிக் கூடத்தின் பணிகளைத் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு , முதல்வரின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் இஆப ஆகியோருடன் பார்வையிட்டேன். பல ஆண்டுக்கால கனவு நிறைவேறியுள்ளது' என்கிறார் எம்.பி. சு.வெங்கடேசன்.
மேற்கொண்டு 8 மற்றும் 9ஆம் கட்ட ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின்தான் சில மாதங்கள் முன்பாக தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு அவர் நேரடியாகவே சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பொருட்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
20 ஆயிரம் தொல்லியல் பொருட்கள்:
இதுவரை இங்கு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நான்கு கட்ட அகழாய்விலும் தங்கப் பொருட்கள், தந்த பொருட்கள், சுடுமண் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரும்பு பொருட்கள், பானைகள், எலும்புகள், முதுமக்கள் தாழிகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு வந்த ஞானம் என்ற சுற்றுலாப் பயணி, 'இங்குள்ள பொருட்களை எல்லாம் பார்க்கும்போது நமது முன்னோர்கள் எந்தளவுக்கு நாகரிகமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பது தெரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், நாம் என்ன நினைக்கிறோம். நாம் தான் அவர்களைவிட நாகரிகமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகக் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளோம். ஆனால் அவர்கள் நம்மைவிடச் சுகாதாரமாகவும் நாகரிகமாகவும் வாழ்ந்துள்ளார்கள். அதைப் பற்றிய அறிவு இல்லாமல்தான் நாம் இத்தனை காலம் இருந்துள்ளோம்' என்கிறார்.
'2600 வருடங்களுக்கு முன்னதாகவே இங்கு வாழ்ந்த நமது முன்னோர்கள் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். விவசாயத்தை உறைக்கிணறு வடிவில் அமைத்துச் செய்துள்ளனர். பார்க்கவே வியப்பாக உள்ளது' என்கிறார் உடுமலைப்பேட்டையிலிருந்து கீழடியைப் பார்வையிட வந்துள்ள மாணவி.
திமுக ஆட்சியில் தொல்லியல் கண்டுபிடிப்புகள்:
கீழடி மட்டும் இல்லாமல், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தூத்துக்குடி கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமனல், கங்கைகொண்ட சோழபுரம் என்றும் பூம்புகாரை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான துறைமுகம் ஒன்றும் கடலுக்கு அடியில் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னதாகத் தான் இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணி தொடங்கியது. மின்னல் வேகத்தில் பணிகள் முடிவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.
https://tamil.oneindia.com/news/sivagangai/a-museum-has-been-set-up-at-a-cost-of-11-crore-rupees-at-keezhadi-499620.html