Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியகல்யாணியில் தேடி தேடி ஆயும்போது காலை ஆறு மணி இருக்கும். மதிலுக்கு மேலால் வளர்ந்து நிற்கும் மரத்தை ஆட்டுக்கு குலை குத்தும் கம்பியால் எட்டி கொப்பை வளைக்கும் போது யாழ்ப்பாணத்து காலை பனி தலையில் கொட்டும்….. ப்ச்ச்… ஒரு சின்ன ஒலைப்பெட்டியில் மொட்டு தவிர்த்து பூவை புடுங்கி போட்டுக்கொண்டு அப்படியே செம்பரத்தைக்கு தாவுகிறேன். ஒரே மரத்தில் எத்தனை வகை பூக்கள்? அம்மா இந்த செம்பரத்தை “ஒட்டில்” FRCS செய்தவர்! அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஓடித்து போட்டுக்கொண்டு; தோட்டத்தில் நின்ற கனகாம்பரம், ரோசா, கடதாசிப்பூவில் கை வைப்பதில்லை. பேப்பர் பூ எல்லாம் சாமிக்கு வைக்க கூடாதாம். கனகாம்பரம் கலியாண வீடு, சாமத்திய வீடு ஏதும் வந்தால் கொண்டைக்கு வைக்க தேவை. ரோசா விசிட்டர்ஸ் வந்தால் மணிக்கணக்கில் போறாமைப்படுவதற்கு!

எப்பிடி உங்கட மண்ணில மட்டும் இந்த ரோஸ் வருது?

அது தியத்தலாவையில் இருந்து ஸ்பெஷலா கொண்டுவந்தது, எங்கட கிணத்து தண்ணிக்கு இதெல்லாம் கட கடவெண்டு வளரும்

பதி வச்சு தாறீங்களா?

பிடுங்கினால் அம்மா திட்டுவார். கற்றை கற்றையாய் பூத்து தொங்கும் மஞ்சள் கோன் ப்ளோவர் கொஞ்சத்தை இழுத்துப்போட்டுக்கொண்டே பின் வளவுக்கு சென்றால், அங்கே எக்ஸ்சோரா மரங்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பட்டர் கலர் என்று பல ரகம். கொத்தை அப்படியே அள்ளி, அம்மா செக் பண்ணுகிறாரா? என்று பார்த்து, இல்லை என்றால் அந்த சின்ன சின்ன ஸ்ட்ராக்களில் வரும் தேனை உறிஞ்சி ப்ச்ச்..… தேன் என்னும் பொது தான் ஞாபகம் வருகிறது. வாழைமரங்கள் உள்ள வீட்டுக்காரரா நீங்கள்? காலையில் பின் வளவில் வாழைப்பொத்தியின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் இல்லையா? எடுத்து அதில் சொட்டாய் ஒட்டி இருக்கும் தேன் குடித்த அனுபவம் உண்டா? உண்டு களித்து, தேனினை சொரிந்து புறம்புறத் திரிந்த செல்வத்தை தேடி சுவாமி அறைக்குள் நுழைகிறேன்.

சாமித்தட்டிலும் முன்னுரிமை இருக்கிறது. குடிபூரலுக்கு உள்ளே வந்த கடவுள்கள் தான் முதல் குடியேறிகள்! அவர்களுக்கு பெரிய செம்பரத்தை வேண்டும். பெரிய பிள்ளையாருக்கு செம்பரத்தை கிடைத்தால் சின்ன பிள்ளையார் பாவம் அன்றைக்கு அவருக்கு வெறும் நித்தியகல்யாணி தான். சம உரிமை ம்ஹூம். கணக்கு வழக்கு இல்லாமல் எல்லா பூவையும் கியூவில் முன்னுக்கு நிற்கும் கடவுள்களுக்கு கொடுத்துவிட்டால், பின்னுக்கு சிவனே என்று தானும் தன்பாடுமாய் இருக்கும் குட்டி மரியாளுக்கும், யேசுவுக்கும் புத்தருக்கும் கச்சாமி தான்! ஒரே நந்தியாவட்டையை நாலாய் பிய்த்து வைப்பதுமுண்டு. பவரை காட்டினால் தான் கடவுளுக்கு கூட பூ கிடைக்கும். கன்னத்தை காட்டினால்? சொல்ல மறந்துவிட்டேன். எங்கள் சின்னம்மா ஒரு முறை தஞ்சாவூருக்கு போய் வந்த போது ஒரு குட்டி பிள்ளையார் சிலை வாங்கி வந்தார். முழுக்க முழுக்க சந்தனத்தால் செய்தது. திறந்து வைத்தால் வாசம் போய்விடும் என்று ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள் பிள்ளையார். அவ்வப்போது கொஞ்சமாக மூடியை திறந்து பிள்ளையாரை முகர்ந்து பார்ப்பதுண்டு. அந்த வாசத்துக்காகவே அவருக்கு ஒரு ஸ்பெஷல் மஞ்சள் கோன் பூ தலையில் வைப்பேன். தொப்பி தொப்பி தொப்பி!

பள்ளிக்கூடத்தில் தவணை பரீட்சை வருகிறது என்றால் கடவுள் பயம் பயங்கரமாக வந்துவிடும். புத்தருக்கு கூட செம்பரத்தை பூ கிடைக்கும். முதல் நாள் பரீட்சை “தமிழ்”, அதில் ஓரளவுக்கு நன்றாக செய்துவிட்டால், அடுத்தடுத்த பரீட்சை எல்லாம், அதே சப்பாத்து, அதே சொக்ஸ், பெனியன், ஷர்ட், ஷோர்ட்ஸ் எல்லாமே! “போட” ஆரம்பித்த பருவம் முதல் அதை கூட மாற்றுவதில்லை! மாற்றினால் பரீட்சை பேப்பர் கடினமாகிவிடும் இல்லையா? இதிலே எனக்கென்று தனிப்பட்ட வியாதியொன்றும் இருந்தது. வீட்டிலிருந்து கேட்டுக்கு நடந்துபோய்க்கொண்டு இருப்பேன். அப்போது தான் மனதில் கடவுள் தடுத்தாட்கொள்வார்!

“டேய் குமரன், இன்றைக்கு சரியாக ஐந்தாவதாக இருக்கும் குட்டி சிவலிங்கத்தை தொட்டு கும்பிட மறந்துவிட்டாய். நீ சரியாக “வெளிப்படை உண்மை” நிறுவலும் படிக்கவில்லை. தப்பித்தவறி கஷ்டமான கேள்வியாக வந்துவிட்டால்?”

விறு விறுவென்று மீண்டும் சப்பாத்து, சொக்ஸ் எல்லாம் கழட்டி, சாமியறைக்கு போய் அந்த சிவலிங்கத்தை கும்பிட்டுவிட்டு திரும்புவோம் என்னும் போதுதான், ஏனைய கடவுள்களை கண்டும் காணாமல் போவதை மனம் கேளாது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து “பிள்ளையாரப்பா, லட்சுமி தேவி, முருகப்பெருமானே, வள்ளி தெயவானையே, எலியே, சேவலே, நாக பூசணி அம்மாளே, ஐந்து தலை நாகமே, சிவலிங்க பெருமானே, கங்கா தேவியே, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா … அப்பாடி இப்போது தான் நிம்மதி என்று சாமியறைக்கு வெளியே வரும்போது தான், அடடா ஒன்பது இராவணன் தலைகள் தானே எண்ணினோம். பத்தாவது எங்கே? ஆகா அதை தானே கொய்து வீணை வாசிக்கிறார் தலைவர். அதை விட முடியாதே.. மீண்டும் சாமியறை விரைவு, “இராவணா” .. எண்ணி முடித்து, ஆரம்பத்தில் இருந்து கும்பிட தொடங்க,

“டேய் வெளிக்கிடுடா, விழுந்து விழுந்து கும்பிட்டா சரியா? ஒழுங்கா படிச்சல்லோ இருக்கோணும்?”

அக்கா திட்ட, வெளியே வந்து சைக்கிள் எடுக்க, கீர்த்தி முழிவியலமாய் வந்து நிற்பான். நெற்றி முழுதும் பட்டையும், பத்து சந்தன பொட்டும் ஒன்றன் மேல் ஒன்றாக. அண்ணரின் வீட்டிலும் ஒன்றுக்கு ரெண்டாக இராவணன் படம் இருக்கும் என்பது புரிந்தது!

இப்போது பரீட்சைக்கு போகும் வழி! வழி முழுக்க கொதாரிபிடிச்ச யாழ்ப்பாணத்தார் கோயில் கோயிலாக கட்டி வைத்திருக்க எங்கள் பாடு தான் திண்டாட்டம். முதல் ஸ்டார்டிங் பாயிண்ட் நேர்சிங்கோம் பிள்ளையார் கோயிலடி. வலு விசேஷமான கோயில். எங்கள் வீடு எந்த பொம்மர், ஷெல் அடிக்கும் ஆடாமல் அசையாமல் நின்றதுக்கு அந்த பிள்ளையார் தான் மெயின் ரீசன் என்று எங்கள் குடும்பத்தில் ஒரு நம்பிக்கை. ஒன்றுக்கு மூன்று முறை சுற்றிவிட்டு கையில் இருந்த ஐம்பது சதத்தை உண்டியலில் போடும்போது ஒரு நம்பிக்கை வந்தது. வெளியே வந்து சப்பாத்து போடும்போது கீர்த்தியிடம்,

“எவ்வளவடா உண்டியலில போட்டாய்?”

“ஒரு ரூவாடா .. நீ?”

“ரெண்டு ரூவாடா!”’

அப்படியே திருப்பிகொண்டு சிவன் அம்மன் கோயிலில் சைன் வைத்துவிட்டு, நல்லூர் போகிறோம். இறங்கி உள்ளேபோய், நல்லூரி கோபுர வாசலில், மண்ணை தட்டிவிட்டு, விழுந்து அஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன். “ஸ்ரீகணநாதா கழல் தொழுதேன் அடியேனா” பாட்டு நிச்சயம் மூன்று முறை நல்லூர் முருகன் சந்நிதானத்தில் பாடுவேன். முருகன் கோயிலில் எதுக்கடா பிள்ளையார் பாட்டு? என்று நீங்கள் கேட்கலாம். இந்த பாட்டு கேட்டுவிட்டு போனதால் தான் ஆண்டு ஐந்தில் ஸ்காலர்ஷிப் எக்ஸாம் பாஸ் பண்ணினேன்! அதிலிருந்து எந்த எக்ஸாம் என்றாலும் ஸ்ரீகணநாதா தான். டிரைவிங் உட்பட!

அப்படியே சுற்றிக்கொண்டு கோயில் வீதி பிடித்து, கைலாயபிள்ளையார் கோயிலில் கும்பிட்டு, நாவலர் வீதி தாண்டினால் இனி தேவாலயங்கள் வர ஆரம்பிக்கும். தப்பித்தவறி இயேசு தான் உண்மையான கடவுளாக இருந்துவிட்டால்? ஒவ்வொரு தேவாலயமாக ஏறி இறங்கி, சரியாக தெரியாத சிலுவை குறியை சைகை செய்து வணங்கி, சில “முக்கியத்துவம்” குறைந்த, அதாவது வைரவர், பெண்டிக்கொஸ்தே, கோபுரம் இல்லாத குட்டி ஆலமரத்தடி கோயில்கள், இடையிடையே வந்தால் இறங்கி உள்ளே போகாமல், சைக்கிள் பெடலில் ஸ்டாண்டிங் இல் நின்று வணங்கி சென்ஜோன்சுக்கு போகவும் மணி அடிக்கவும் சரியாக இருக்கும். சகுனம் ஓகே!

1991ம் ஆண்டு இருக்கும் என்று நினைக்கிறேன். நாச்சிமார் கோயிலில் சரஸ்வதிபூசை. அக்காமார் படிக்கும் சங்கீத டீச்சரின் நிகழ்ச்சி. எல்லோரும் ஹாப் சாரியில், பின்னால் கனகாம்பர சடை வைத்து, சாரிக்கு போர்ச் குத்தி, கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து,

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்

அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

என்று மேலடியாக தொடங்கி,

அருள்வாய் நீ இசை தர வா நீ

இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

என்று முடிக்கும் இடத்தில் உயர்ஸ்தாயி எட்டமுடியாமல் திணறி, மூக்கு பிய்ந்து, ஸ்ருதி பிசகி, சங்கீத டீச்சர் முறைத்தது தெரியாமல் நாங்கள் எல்லாம் கைதட்டி ப்ச்ச்…

கடவுள் மீதான எனக்கு இருந்த ஒரு வித obsession க்கு முக்கிய காரணம் தேவார இசையும் எங்கள் ஊர் கோவில்களும் தான். அருமையான மெட்டுகள் அத்தனை தேவாரங்களிலும். “மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே” என்பதை ஒரு முறை கண்கள் மூடி சந்திரமௌலீசன் சேர் வகுப்பில் பாடியபோது என்னை அறியாமல் அந்த மெலடிக்கு கண் கலங்கியது.

“ஆளாயிருக்கும் அடியார் தங்கள்

அல்லல் சொன்னக்கால்,

வாளான்கிருப்பீர் திருவாரூரில்,

வாழ்ந்து போதீரே”

கடவுளை சுந்தரர் கையாண்ட விதம் ஆச்சரியத்தக்கது. “இவ்வளவு சொல்லியும் பேசாமல் இருந்தால் என்ன மனுஷன் நீ! எக்கேடு கெட்டும் போ” என்று கடவுளையே நொந்து கொள்கிறான் அவன்.

சீசீ இவையும் சிலவோ விளையாடி

ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

என்று திருவெம்பாவையில் எள்ளி நகையாடும் விளையாட்டை இறைவன் பெயரில் செய்யும் துணிச்சல். இன்னும் கொஞ்சம் ஆழ்வார் பாடல்களில் இருக்கும் போர்னோகிராபியை பார்த்தால் வாவ். இறைவனை காதலுடனும், ஊடலுடனும், கூடலுடனும் பார்த்த மதம் ஆச்சரியத்தக்கது தான். நம் முன்னோர்களின் இந்த லிபரல் அப்ரோச் இன்றைக்கு இல்லை! இறைவனை அப்படி எழுத முடியுமா? ஆண்டாள் காதல் எல்லாம் முடியுமா? ரஞ்சிதா கேரளாவில் தலைமறைவாக வேண்டும்!

1996ம் ஆண்டு வட்டக்கச்சியில் வசிக்கும்பொது தான் புளியம்பொக்கணை திருவிழா ஆரம்பிக்கிறது. அக்கம் பக்கத்தில் இருப்பவர் எல்லாம், புளிச்சோறு செய்து, மோர்ப்பந்தலுக்குரிய ஆயத்தங்கள், நேர்த்திக்கடாக்கள், சேவல்கள் ரெடி பண்ணி, பெண்கள் அனைவரும் காஞ்சிபுரம், பாவாடை சட்டை, ஆண்கள் வேட்டி, சேர்ட் அணிந்து, மேலிரண்டு பட்டன்கள் போடாமல், வந்தால் வீதியில் ஐந்தாறு ட்ராக்டர்கள் வரிசையாய் நிற்கும். வட்டக்கச்சியில் இருந்து புளியம்பொக்கணை ஒரு மணித்தியால ஓட்டம். அந்த ட்ராக்டர் பயணத்தில் ஆளுக்கு ஆள் அடிக்கும் நக்கல். சத்தம்போடாமல் செய்யும் காதல், “அவள்” … கொட்டம், போய் சிவனே என்று கும்பிட்டுவிட்டு அங்கே அடிக்கும் கூத்து.. ப்ச்ச்! எப்போது அடுத்த புளியம்பொக்கணை திருவிழா? வண்டி கட்டி வேண்டும்!

நயினாதீவில் எங்கள் பூர்வீக வீட்டிலிருந்து “கூப்பிடு” தூரத்தில் ஒரு முருகன் கோயில் இருக்கிறது, ஐம்பது மீட்டரில் கடற்கரை. புழுதியும் கடல் காற்றும், மாலை ஆறுமணிக்கு பின்பு வீசும். அந்த காற்றில் நாதஸ்வரம் ஒருவித ஸ்ஸ்ஸ் சத்தத்துடன் கேட்க, வீட்டில் இருந்து வெறும் காலுடன் நடக்க ஆரம்பிப்போம். போகும் வழியில் பூவரசு மரத்தில் பீபீ செய்து, நான் கானமூர்த்தி, மச்சான் பஞ்சமூர்த்தி, இன்னொரு மச்சான் தவில் தட்சணாமூர்த்தி. வாசித்துக்கொண்டே கோயிலுக்கு போகும்போது, பூவரசு பீபீயால் எச்சில் ஊரும்! சாமி வெளியே வருவார். அவரோடு சுற்றி, முடிய சுண்டலும், பூவரசு இலையில் தரும் புக்கையும், ஐயர் வீட்டு மோதகமும் அந்த கடற்காற்றில் வைத்து சாப்பிடும்போது ப்ச்ச்ச்…

என்னுடைய பதின்ம வயது கடவுள் பக்தியை மீட்டிப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கடவுள் மேல் பக்தியா பயமா என்றால், கொஞ்சம் பயம் தான் அதிகம். அம்மா ஏசினால், அப்பா கம்பெடுத்தால், “எனக்கேன் இப்படி ஒரு அம்மா அப்பாவை தந்தாய் தெய்வமே?” என்பது முதல், கப்டன் வானதி அக்கா ஆனையிறவு அடிபாட்டில் இறந்த செய்தி கேட்டு, “ஏன் சோதி அக்காவை இப்படி கொன்று போட்டாய்?” என எத்தனை புலம்பல்கள். கதிரைக்கால், முதிரை மரம், தெரியாமல் முழங்காலில் பட்டால் உடனே திட்டுவது கடவுளை தான். ஏஎல் பரீட்சை பெறுபேறு கிடைத்தபோது அம்மா செய்த ஒரே விஷயம், நல்ல முடியுள்ள தேங்காயை கையில் தந்து

“ஓடிப்போய் பிள்ளையாருக்கு உடைச்சிட்டு வா, உன்னை குழப்பாம படிப்பிச்சவர் அவர் தான்!”

பதினேழு வயசு வரைக்கும் கடவுள் பாசத்துக்கு குறைவில்லை. ஆனால் அப்புறமாக கம்யூனிஸ்டாக மாறும் பருவம் என்று சொல்வார்கள். எனக்கு எப்படி .. என்ன நடந்தது? “இருவர்” என்று நினைக்கிறேன். மணிரத்னத்தின் வெறித்தனமான ரசிகன். ரோஜாவின் பாதிப்பு, அதில் ஆரம்பித்து அவரின் முன்னரும் பின்னருமான படங்களை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பார்த்து, வவுனியா நெலுக்குளம் அகதி முகாமில் இருக்கும் பொதுதான் இருவர் வெளியானது. தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட காலம், அதன் பின்னரான அரசியல் சுவாரசியம் என்னையும் பிடித்துக்கொள்ள யாழ்ப்பாணம் திரும்பி வந்து, தொடர்ந்து அந்த வரலாறு தான். இந்தியாவில் படித்த சுந்தரம்பிள்ளை அங்கிளிடம் அரித்து அரித்து கேட்டத்தில் பெரியார் பற்றி நிறைய அறிய முடிந்தது.

பெரியார்! எனக்கு முன்னம் பின்னம் தெரியாத நபர். எனக்கென்றில்லை, யாழ்ப்பாணத்தில் திட்டமிட்ட பெரியார் இருட்டடிப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதை இப்போது யாரும் நம்புவாரில்லை. எம்ஜிஆர் க்கு ரசிகர் மன்றம் இருந்தது. காந்திஜி இயக்கம் ஒன்று கூட கொழும்பில் இருந்தது. பெரியாரை சீண்டுவாரில்லை. காரணம் தங்கள் இருப்புக்கு மோசம் வந்துவிடுமோ என்ற கவலை தான். ஈழத்து தலைவர்கள் பெரியாருடன் தொடர்பில் இருந்தாலும், அது ஒருவித ராஜதந்திரரீதியான தொடர்புகளே ஒழிய பெரியாரின் கொள்கைகள் பால் கொண்ட பற்றில் இல்லை. அதற்கு பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். பார்ப்பனிய எதிர்ப்பின் தேவை ஈழத்தில் இருக்கவில்லை. பெரியார் கொள்கைகளின் தேவை உடைய சமுதாயத்துக்கு, பெரியார் என்ற ஒருவர் இருப்பதே தெரியாது. தெரிவிக்கவும் ஆள் இல்லை! அப்படி இருந்தார்கள்!

இப்படியான சூழ்நிலையில் ஒரு தெளிவில்லாத பகுத்தறிவுவாதம் எனக்குள் உருவாகிறது. செலக்டிவ் பகுத்தறிவு. தேவைக்கு கடவுள். பரீட்சை என்றால், இயல்பாக வரும் superstitious எண்ணங்களை என் “பகுத்தறிவால்” மேவ முடியவில்லை. ஒரு சிவப்பு தொப்பியை இருபது வருடங்களாக வைத்திருந்த ஆள் நான். கீர்த்தி இன்றைக்கும் அதை சொல்லி சிரிப்பான்! என் wallet இல் காசு பொதுவாக இல்லாமல் போனாலும் ஒரு வெண்ணை திண்ணும் கண்ணன் என்னோடு சேர்ந்து இடம்பெயர்ந்து வந்தான். ஒவ்வொரு ஆர்மிக்கும் ஐசி காட்டும்போதும் அவனும் பல்லிளிப்பான்! ஆபத்பாந்தவன்! இன்றைக்கும் என்னோடு இருக்கிறான். நான்கு மூலையிலும் பிய்ந்து உக்கி 1992 ம் ஆண்டு கலண்டர். ஏனோ எறிந்துவிட மனம் வரவில்லை. Castaway படத்தில் Tom Hanks அந்த “Wilkinson” என்ற வாலிபாலை வைத்திருப்பார் இல்லையா? என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா? எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா என்ற வைரமுத்துவின் கண்ணன் பாடல் ஞாபகம் இருக்கிறதா?

கொழும்பில் இருக்கும் பொது ஹர்ஷா என்ற சிங்கள நண்பர் கிடைத்தது என் ஆளுமையில் பெரியமாற்றத்தை ஏற்படுத்தியது. வேலை நிமித்தமான வெளிநாடுகளுக்கு சென்றபோது, குறிப்பாக ப்ரூனாய் நாட்டில் தான் அவரும் நானும் ஒருமுறை ஓஷோவை பற்றி மணிக்கணக்காக விவாதித்தோம். “கடவுள் என்று ஒன்றில்லை, அது நீயும் நீ வாழும் வாழ்க்கையும் தான்” என்ற ஓஷோவின் தளம் தான் எங்கள் விவாதப்பொருள். பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்று நான் கேட்க, அது ஏன் தோன்றவேண்டும் என்று நினைக்கிறாய்? என ஹர்ஷா திருப்பி கேட்டபோது திக் என்றது. அது தானே? ஒன்று ஏன் எப்போதுமே இன்னொன்றில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்? எங்களுக்கு எந்த பொருளுக்குமே ஆதியும் அந்தமும் இருக்கவேண்டும். அது இல்லாதது அருட்பெரும் ஜோதியாகிறது! எல்லாமே காரண காரியங்களுடன் நடக்கிறது என்பது இன்னொரு எண்ணப்பாடு. இயற்கை ஏன் முடிவில்லாமலேயே இருக்ககூடாது? அந்த முடிவில்லா இயற்கையின் ஒரு permutation தான் நான். இந்த organic கலவையின் ஸ்பெஷலிட்டியே யோசிப்பது தான். நான் ஏன் இயக்கப்படவேண்டும்? நானே இயல்பானதாக இருக்கமுடியாதா? எண்ணற்ற அனிச்சை செயல்களின் பட்டர்பிளை எப்பெக்ட் நீட்சி தானே நான்? அபூர்வமான இந்த கூறுகள் தங்களுடைய இருப்புக்காக யுகம் யுகமாய் கூர்ப்படைந்து திரிந்து reproducible and recyclable உயிரிகளாக மாறியிருப்பதை அறிந்துகொகொள்ளும் capacity எங்களுக்கு இருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்வேன். எங்கள் capacity க்கு ஓரளவு சிந்திக்கலாம். அதற்கு மேல் சிந்திக்க, சிந்தெடிக் பவர் போதாது. ஒரு கட்டத்தில் இப்படியெல்லாம் ஏன் சிந்திக்கவேண்டும் என்று யோசித்து, சிந்தனைக்கு அப்பாற்பட்ட சக்தியை இறைவன் என்று பெயர் சூட்டி இலகுவாக்கிவிட்டோம். X=1 க்கு நிறுவி, பின் X=n க்கு உண்மை என்றால் X=n+1 க்கு உண்மை என்று assume பண்ணி, உயிரியல் அமைப்புக்கு ஒரு வரைவிலக்கணம் கொடுக்கும் பேதைத்தனம். கணிதத்தில் எட்டா இடத்தை முடிவிலி என்று சொல்லி, கேஸ் க்ளோஸ் பண்ணுவது போல தான் இதுவும். முடிவிலிக்கு ஆஸ்திகம் கொடுக்கும் பெயர் தான் கடவுள். Fight Club என்ற அருமையான ஆங்கிலப்படத்தில் வரும் வசனம் இது.

“Listen up, maggots. You are not special. You are not a beautiful or unique snowflake. You're the same decaying organic matter as everything else”

இது புரிந்தால் வாழ்க்கை இலகுவாகிறது. இறப்புக்கு பின் என்று ஒன்றும் இல்லை, “நான்” என்ற விஷயம் இங்கேயே தொடங்கி இங்கேயே முடிகிறது. இறப்பின் பொது “நான்” என்ற combination சுக்கு நூறாக உடைய, there is nothing after that! என்னோடு உயிர் வாழ்ந்த மற்றைய “நான்” களின் மெமரியில் நான் இருக்கபோகிறேன். அவ்வளவு தான். அது எனக்கு எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. Because I am gone! … yes .. just gone! எங்கேயோ வாசித்தது ஞாபகம் வருகிறது. It’ll bring a great peace in accepting that there is no life after death!

இந்த நம்பிக்கையை, atheism என்பார்கள் இல்லையா? இதை சரி என்று நினைத்து எம்மை சுற்றியுள்ளவற்றை பார்க்கும் பொது ஒருவித அமைதி வருகிறது. ஒருநாள் சமைத்துக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று அருகில் இருந்த பேப்பரில் தீ பற்றிவிட்டது. காஸ் அடுப்பு அது. ஏனோ தெரியவில்லை பதட்டம் கொஞ்சம் கூட வரவில்லை. கவனமாக காஸை நிறுத்தி, கறிச்சட்டியை எடுத்து தூரத்தில் வைத்து, சீலைத்துணியால் அணைத்துக்கொண்டிருக்கும் போது தான் யோசித்தேன். அட எங்கேயிருந்து இந்த நிதானம் வந்தது? இந்த சம்பவத்துக்கும் கடவுள் நம்பிக்கைக்கும்/நம்பிக்கை இன்மைக்கும் சம்பந்தம் இல்லை தான். ஆனால் நான் சொல்லவருவது என்னவென்றால், நாம் எதிலாவது வைக்கும் நம்பிக்கை கொண்டுவரும் அந்த பக்குவம் அபரிமிதமானது. அது கடவுளில் வைத்தால் என்ன? கடவுள் இன்மையில் வைத்தால் என்ன?

ஒருமுறை என் நண்பி அமுதா, எப்போது பார்த்தாலும் athiesm பேசிக்கொண்டு இருக்கிறானே! இவனை ஒரு வழிப்படுத்த(!) வேண்டும் என்று நினைத்து, தன்னுடைய மெதடிஸ்ட் சேர்ச்சில் ஆரம்பிக்க இருக்கும் கிறிஸ்தவ evangelist session இல் இணைய சொன்னார். என்னதான் இருக்கென்று பாரேன் என்று சொல்ல, அப்படித்தான் நீங்கள் ஆரம்பிப்பீர்கள் என்று நான் சொன்னேன். சிரித்துக்கொண்டே “அப்படியெல்லாம் நடக்க நான் விடமாட்டேன், சும்மா வா” என்று திட்டியவாறே இணைய சொல்ல, நானும் சரி என்ன தான் நடக்கிறது என்று பார்க்க போனேன். பதினாலு அமர்வுகள். பாலன் பிறந்ததில் ஆரம்பித்து, சிலுவையில் அறைந்தது, கட்டளைகள் என அந்த போதகருடன்(ஒரு சீன இனத்து வைத்தியர்)உரையாடியபோது நான் விவாதித்த விஷயங்கள் ஞாபகம் வருகிறது. இயல்பாக நடக்கும் விஷயத்தை ஏன் கடவுள் என்று பெயரிட்டுக்கொள்கிறோம்? சில விஷயங்களுக்கு எங்களுக்கு விளக்கம் தெரியாது. அப்போது அதை அற்புதம் என்று நினைத்து, மெருகூட்டி எழுத, யுகங்கள் கடந்து அது உண்மை சம்பவமாக உலாவுகிறது. இதற்கு இலங்கையின் மகாவம்சத்தையும். இராமன் பாலம் போன்ற விஷயங்களையும் நான் விளக்கி கூறினேன். இதனால் தானோ என்னவோ தொழில்புரட்சியின் பின்னர் கடவுள்கள் வருகை இல்லை என்றேன். ஓரளவுக்கு கடவுள்களை இல்லை என்று கண்டறியும் ஆற்றல் மனித குலத்துக்கு வந்ததால், “அற்புதங்களை” radical ஆக காரணப்படுத்த முடிவதால், இன்னொரு அவதாரமும் இறை தூதரும் நம்முள் உலவும் சாத்தியம் இல்லாமல் போயிற்று என்றேன். அமைதியுடன் நான் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த அந்த போதகர், என் பக்கத்தில் இருந்த நபரிடம் அவர் கதையை சொல்லச்சொன்னார். அந்த நபருக்கு புற்று நோய். லிவர் ட்ரான்ஸ்பிளான்ட்டுக்கு காத்திருப்பவர். மனைவியும் அவரும் இறைவன் தம்மை கவனிப்பான் என்ற நம்பிக்கையில் புத்த சமயத்தில் இருந்து கிறிஸ்தவ போதனைக்கு மாறும் எண்ணத்தில் வந்திருந்தனர். அவர்கள் கண்களில் ஒரு நம்பிக்கை. வெளிச்சத்தை அணைத்து இயேசுவை சிலுவையில் அறைந்ததை விவரித்த பொது அவர்களும் விக்கி விக்கி அழுதனர். மூன்றாம் நாள் உதித்தபோது மெலிதாக சிரித்தனர். ஒருநாள் அமர்வு முடிந்து வெளியே நடந்து போகும்போது, போதகர் சொன்னார்,

“ஜேகே உன்னுடைய நம்பிக்கையை நான் மதிக்கிறேன். ஓவ்வொருவருக்கும் அவரவர் மனநிலை சார்ந்து நம்பிக்கை பிறக்கிறது. வாழ்க்கையை எல்லோராலும் இவ்வளவு சிக்கலாக அலச முடியாது. புரிந்துகொள்ள முடியாது. இறைவன் இருக்கும்பொது இந்த புரியாமைகளுக்கு இலகுவில் விடை கிடைக்கிறது. அந்த நம்பிக்கை கிடைக்கிறது. அதை தேடி அவர்கள் வருகிறார்கள். அப்படி வருகிறவர்களுக்கு இறைவனும் அதை கொடுக்கிறான்”

“அதை இறைவன் கொடுக்கவில்லை, அது அவர்களின் மனத்தின் விந்தை” என்ற சொல்ல வாய் உன்னினாலும் பேசாமல் வந்துவிட்டேன். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றும் புரிந்ததால் அதற்கு பிறகு அந்த evangelism த்துக்கு போகவும் இல்லை. அமுதாவும் “உன்னை திருத்த முடியாது” என்று விட்டுவிட்டார்.

ஒருமுறை சிங்கப்பூர் MRT இல், சிரந்த என்ற பௌத்த நண்பன், புத்தரின் போதனைகளை ஓரளவுக்கு இன்டலக்ட்டாக சொல்லகூடியவன். அவனோடு இந்த கடவுள் என்ற விஷயம் பற்றி ஆர்கியூமன்ட் வந்தது. “இல்லை” என்பதால் நீ athiest ஆ? அல்லது “இருக்கிறது” என்று தெரியாததால் நீ Athiest ஆ? என்று கேட்டான். எப்படி கடவுள் இருக்கிறார் என்று நிறுவமுடியாதோ, அதே போல இல்லை என்றும் நிறுவமுடியாது என்றேன். அப்படி என்றால் நீ athiest இல்லை, agnostic என்றான்.

“The view that there is no proof of either the existence or nonexistence of any deity, but since any deity that may exist appears unconcerned for the universe or the welfare of its inhabitants, the question is largely academic”

இதையே என்னோடு சேர்ந்த நண்பர்களும் சொல்லுவார்கள். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது irrelevant. அவர் இருந்தால் நன்மையே அதிகம் என்பதால், இருந்துவிட்டு போகட்டுமே? உனக்கு என்ன வந்தது? என்பார்கள். அக்கா ஒருமுறை, கடவுள் இல்லாமலேயே இருக்கட்டும். வளரும் தலைமுறைக்கு, புரியாத வயதில் தார்மீக நெறிகளை புகட்டுவதற்கு கடவுளும், கடவுள் மீதான பக்தியும் மிகவும் கூர்மையான வழிகள் என்றார். நீ சின்னவயதில், களவெடுத்தால் கடவுள் கோபிப்பார் என்று நம்பியதால் தானே அதை செய்யவில்லை. இப்போது வளர்ந்து உனக்கென தார்மீக நெறிகள் வந்த பின்பு கடவுள் தேவையில்லை என்று சொல்வது என்ன நியாயம்? என் பிள்ளைக்கு நான் என்ன சொல்லி வளர்ப்பேன்? என்றாள். எவ்வளவு உண்மை? நான் படித்த இலக்கியமும், இசையும் அந்த கலாச்சாரமும், நெறியும் கடவுள் சார்ந்த அமைப்புக்களால் வந்தது தானே. அதன் ஆதார விஷயமே இந்த கடவுள் தானே. இல்லாமல் இருக்கும் ஒரு விஷயத்தை கடவுளாக்கி இத்தனை நம்பிக்கையை, ஒரு நாகரீகத்தையே கட்டி எழுப்பும் மனத்தின் விந்தை வியக்க வைத்தாலும், அதன் தேவையை உணர்ந்து செய்த முன்னோர்களின் புத்திசாலித்தனத்தையும் மெச்சத்தான் வேண்டும்.

Theist ஆக ஆரம்பித்து athiest ஆகி அப்புறம் agnostic ஆகிய மாறுதல்களை திரும்பிப்பார்க்கும் போது ஆச்சரியம் தான். சுஜாதா படித்து படித்து சொல்லும் விஷயம், மாற்றம் மட்டுமே நிரந்தரமானது. கொள்கை என்ற விஷயம் எப்போதும் மாறக்கூடியது. மாறவேண்டியது! இருபது வயசில் உன் தேடலும் அறிவும் இன்ஸ்பிரேஷனும் உன்னை ஒரு கொள்கைக்குள் இழுக்கும். போக போக உன் ஆளுமைகளும் சேர்ந்து, உன் தளங்கள் மாறும்போது கொள்கைகளும் மாறும். ஒருவன் முப்பது வருஷமாய் மாறாமல் ஒரே கொள்கையில் விடாப்பிடியாக நின்றால் There is fundamentally something flawed” என்கிறார். ஆளாளுக்கு இந்த கருத்து மாறுபடலாம். எனக்கு இது சரியென்றே படுகிறது. இந்த மாற்றம் தான் என்னை புதுப்பித்துக்கொண்டு இருக்கும். எனக்கு எல்லாமே தெரிந்துவிட்டது என்ற எண்ணமும், எனக்கு தெரிந்தது தான் சரி என்ற எண்ணமும் என்னை அண்டாத வரைக்கும் நான் மாறிக்கொண்டே இருக்கும் சாத்தியமே அதிகம். பார்ப்போம். பத்து வருஷம் கழித்து “கடவுள் இரண்டாம்” பகுதி எழுத இந்த organic compound collapse ஆகாமல் இருந்தால், மீண்டும் மாற்றங்களை அலசுவேன்! யார் கண்டது அப்போது நான் “யாமறியோம் பராபரமே” யோ தெரியாது!

அக்காவுடன் சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவிலுக்கு போகிறேன். அக்காவின் ஐந்து வயது மகன் நான் சின்ன வயதில் செய்தது போலவே ஒவ்வொரு சாமிகளையும் தொட்டு கும்பிடுகிறான். தனக்குள் ஏதோ முணுமுணுத்து பேசுகிறான். “மாசில் வீணையும்” சுருதி பிசகவில்லை. கீழே விழுந்து கிடந்த ஒரு டாலர் நாணயத்தை எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து உண்டியலில் போட சொல்லுகிறான். பூசை முடிந்து பஜனையில் “மூளா தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி” பாடும் சிறுமியின் குரல் பிசிருகிறது. பக்கத்தில் கண்ணை மூடி கேட்டுக்கொண்டிருக்கும் எண்பது வயது பாட்டியின் கண்ணால் கண்ணீர் ஓடுகிறது. துடைக்கும் பிரமை கூட இல்லாத பக்தி.

….

ப்ச்ச்… இருந்துவிட்டு போகட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் அலசி இருகிறீங்கள்.ஆனால் இப்ப இந்த விடையம் வியாபாரம் ஆகிவி்ட்டது.

jk,

உங்கள் மொரட்டுவ பல்கலைகழக புத்தரை விட்டுவிட்டீர்கள். பம்பலப்பிட்டி பழைய புதிய பிள்ளையார்களை கூட கவனிக்க தவறிவிட்டீர்கள். வட்டக்ச்சி மாயவனூர் கிருஷ்ணன், மாவடி எல்லாம் நீங்கள் திரிந்தது கனவிலும் வருவதில்லையா ?

உங்கள் எழுத்தில் இருக்கும் முதிர்ச்சி என்னை வியக்க வைக்கிறது JK . தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சஜீவன் ... அது வியாபாரமானத்துக்கு காரணம் consumers தான் .. அதாவது பக்தர்கள்.... பக்தர்கள் குழப்பமாக இருக்குமட்டும் போலிகளும் நடமாடும் .. என்னளவில் எல்லாமே போலி தான் என்பது வேறுவிஷயம்!

@பகலவன்

மொறட்டுவவில் படிக்கும் போது அவ்வளவாக கடவுள் பக்தியில்லை... Atheist ஆக இருந்த காலம் .. அதனால் கோயில்கள் பற்றி அவ்வளவு nostalgic நினைவுகள் இல்லை!

மாயவனூர் பற்றி ஒரு சிறுகதை இருக்கு தலைவரே .. அதனால் அந்த தகவல்களை இந்த பதிவில் எழுதவில்லை!!

என்னை பற்றி பக்கா தகவல்கள் வைத்திருக்கிறீங்க பகலவன்!!

  • கருத்துக்கள உறவுகள்

;50 வயதை எட்டிய பின்பு அடுத்த மாற்றங்கள் வரும்....நல்ல ஒரு படைப்பு,...

புத்தருக்கு கூட செம்பரத்தை பூ கிடைக்கும்.

எல்லோருடைய வீட்டிலும் புத்தர் சிலை இருக்கும் ஆனால் ஊருக்குள் புத்தர் சிலை  வருகிறது என்றால் போர் கொடி தூக்குவோம் ,இந்தியாவில் இருக்கும் எல்லா சாமிமார்,உலகத்தில் இருக்கும் எல்லா சாமிமாருக்கும்  தமிழனின் ஊரில் இருக்கும் ஆனால் புத்தருக்கு மட்டும்  இடமில்லை...சிங்களவன் புத்தரை வழிபடுவதால் தான் எங்களுக்கு புத்தர் மீது ஒரு வெறுப்பு அவரை பகிரங்மாக வழிபடுவதற்கு ...ஆனால் சாமி அறையில் வழிபடுவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி புத்தன் ..

//;50 வயதை எட்டிய பின்பு அடுத்த மாற்றங்கள் வரும்....நல்ல ஒரு படைப்பு,...//

மாறலாம் ... வரும் என்றோ வராது என்று இப்போது சொல்லமாட்டேன். அப்போது எனக்கிருக்கும் அனுபவங்கள், வாசிப்புக்கள், முதிர்ச்சி அதை தீர்மானிக்கும் என்று நினைக்கிறேன்..

//எங்களுக்கு புத்தர் மீது ஒரு வெறுப்பு அவரை பகிரங்மாக வழிபடுவதற்கு ...ஆனால் சாமி அறையில் வழிபடுவோம் //

புத்தர் மீது வெறுப்பு இல்லை. புத்தரை பகிரங்கமாக வழிபடுவதிலும் சிக்கல் இல்லை. புத்தரை பயன்படுத்தி அரசியல் நகர்வுகளை அவர்கள் செய்யும்போது, எங்கள் இருப்புக்காக இதை செய்யவேண்டி இருக்கிறது. இப்படியான அரசியல் சித்துகள், திடீர் விகாரைகள், புத்தரின் விருப்பமில்லாமல் நடக்கும் சம்பவங்கள் என்பதால் அவர் கூட அதை எதிர்ப்பார் என்றே நினைக்கிறேன் என்று நினைக்கிறேன்!!

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள ஜே.கே,

முழுதாக வாசிக்கவில்லை, ஆனால் இடைக்கிடையே மேய்ந்து பார்த்த போது ஆழமான விடயம் எனத் தெரிகிறது. "இருந்து விட்டுப் போகட்டும்" என்ற அந்தக் கடைசி வரியைப் பார்த்த போது கடவுள் நம்பிக்கையற்றவர்களிடம் காணப்படும் மனிதாபிமானம் உங்களிடமும் இருப்பது புரிகிறது. வார இறுதியில் பூரணமாக வாசித்து விட்டு மேலும் எழுதுவேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. கத்தோலிக்கனாகப் பிறந்ததால் கோவிலுக்குத் தவறாமல் போய் வந்து கொண்டிருந்த வெட்டி நம்பிக்கையாளனாக இருந்த எனக்கு ஒரு ஆழமான தனிப் பட்ட அனுபவம் வழியாகத் தான் உண்மையான நம்பிக்கை வந்தது. கடவுள் மீதான நம்பிக்கை தனிப் பட்டது என்று நினைக்கிறேன். அதனை ஒருவர் இன்னொருவருக்கு மாற்றவோ படிப்பிக்கவோ இயலாது எனவும் நினைக்கிறேன். ஆனாலும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் மனிதாபிமானமே வழி காட்டியாக வாழும் மனிதர்களே கடவுளின் உண்மையான தூதுவர்கள் (அல்லது இரகசிய ஏஜென்டுகள்) என்று நம்புகிறேன். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், தீவிர கத்தோலிக்கரான சன்ரோரம் போன்ற அரசியல் வாதிகள் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் இடைஞ்சல்களை விட பில் மாஹெர் போன்ற நம்பிக்கையற்ற மனிதாபிமான வாதிகளால் கடவுள் உலகில் நிறையச் சாதிக்கிறார் என்று நான் நம்புகிறேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.