Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடனான சந்திப்புக்கு அழைப்பு வந்தபோது முதலில் போவதில்லை என்று தான் முடிவெடுத்தேன். அப்பாவிடம் சொன்னபோது “உனக்கென்ன விசரா? அவர் கருத்தை அவர் வாயாலேயே நேரடியாக கேட்டால் தானே அவரின் நிலைப்பாடு அறியமுடியும். சும்மா பத்திரிகைகள் எழுதுவதை படித்து வியாழமாற்றத்தில விமர்சித்தால் சரியா?” என்று நெத்தியடி தர, சரி போவோம் என்று முடிவெடுத்தேன். முருகன் தானும் வருகிறேன் என்று சொல்ல, வேலை முடிந்து ஏழு மணி சந்திப்புக்கு ஆறரைக்கே போக அங்கே சுமந்திரன் ஏற்கனவே தன் காரில் டிரைவ் பண்ணி வந்திருந்தார்! அப்புறமாக ஒழுங்கமைப்பாளரும் வந்து சேர்ந்தார்.

என்னை அறிமுகப்படுத்தும்போதே, இவர் ஜேகே, வியாழ மாற்றத்தில சிலவேளைகளில் உங்களை பாராட்டுவார். பலவேளைகளில் விமர்சிப்பார்” என்று சொல்லிவைக்க, என்னடா இது லொள்ளா போயிற்று என்று யோசித்தேன். எந்த விஷயத்தில் என்னை விமர்சிக்கிறீர்கள் என்று சுமந்திரன் கேட்ட போது “13ம் திருத்தம் அமுல்படுத்தல் பற்றிய உங்கள் நிலைப்பாடு …” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னமேயே, “புத்திஜீவிகள்” பற்றியும் எழுதியிருக்கிறார் என்று ஒழுங்கமைப்பாளர் அண்ணா சொல்ல சுமந்திரன் “அவனா நீயி” என்ற ரீதியில் என்னை பார்க்க, நல்ல காலம் கதிரை அடுக்கும் வேலை தான் நமக்கு சரி என்று ஜேகே எஸ்கேப்!

அன்றைக்கு காலை தான் சுமந்திரன் லக்பிம பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றை வாசித்திருந்தேன். I was stunned. இப்படி ஒரு துணிச்சலான பேட்டியை அண்மைக்காலத்தில் இவ்வளவு புத்திசாலித்தனமாக, effective ஆக எந்த அரசியல்வாதியும் கொடுத்ததில்லை. சாம்பிளுக்கு ஒன்று,

NW:

Where is your bargaining power?

MAS:

Bargaining power is the democratic wish of our people, nothing else. Otherwise, it’s a very dangerous thing to talk about bargaining power. In proposals made between 1992 and 2006, the government was willing to go much further than this. In fact, the Oslo Communiqué of December 2002 specifically talked about a federal arrangement. That was between the government and LTTE. If they were willing to go that far when the LTTE were around and today they tell the Tamil people you have no bargaining power so don’t even think of anything close to that…that’s a very dangerous message they are giving the Tamil people. They are telling them you come with the gun and we’ll give you more.

Reference :

அதே நேரம் “The Island” பத்திரிகைக்கு அவர் எழுதிய ஆக்கம் ஒன்றில் பொலிஸ் அதிகாரங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதும்போது, இப்படி கருத்தை போகிற போக்கில் எழுதிகொண்டு போகிறார்.

“For our part, we are clear that a durable solution to the ethnic problem must be found within the contours of a united Sri Lanka. That aside, that line of argument ignores that it was disillusioned youth – often unemployed and angry – who have resorted to violence against the State, whether in the North East or in the South.”

Reference :

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டங்களை, தெற்கின் மார்க்சிய சிந்தனை போராட்டங்களின் காரணங்களுடன் பொதுமைப்படுத்தி தவறான சிந்தனையை இந்த பத்தி பரப்புகிறது. இதை சுமந்திரன் வேண்டுமென்று எழுதவேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன். தெரியாமல் தான் எழுதினார் என்றால், சுமந்திரன் மீண்டும் 50களில் நம் முன்னைய தலைவர்கள் செய்த தவறுகள் நோக்கி செலுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரத்தொடங்குகிறார்கள். எல்லாருமே, சேர் பொன் இராமநாதனின் கிளாஸ்மேட் வயசில் இருக்க, டீனேஜர்ஸ் என்று பார்த்தால் நானும் முருகனும் தான்! வெளிநாட்டு இளைஞர்களின் அரசியல் ஆர்வம் லங்காசிறி, facebook இல் காட்டமான இரண்டு கமெண்ட்களுடன் முடிவது கொஞ்சம் அயர்ச்சி! வந்த ஆட்களில் “பல வகையினரும்” இருந்தார்கள். ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், நடுநிலையாளர்கள், படம் காட்டுபவர்கள், அரசியல் அனாதைகள் என்று தமிழ்நாட்டில் சொல்வார்களே அவர்கள், என எல்லா குழுக்களும். எல்லோரையும் ஒரே இடத்தில் கண்டவுடனேயே எனக்கு வயிற்றில் வாஷிங் மெஷின் ஸ்டார்ட் பண்ணிவிட்டது! “தக்காளி, சண்டை தொடங்கினா, நாங்க எதுக்கால ஓடலாம்” என்று முருகனிடம் கேட்க, இருவரும் எமர்ஜென்சி எக்ஸிட் பக்கம் கதிரை போட்டு உட்கார்ந்தோம்!

கூட்டம் தொடங்குகிறது. அரை மணித்தியாலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றியும் அதன் நடவடிக்கைகள் பற்றியும் மேலோட்டமாக பேசினார். அரசியல் போராட்டம், ஆயுதப்போராட்டம் கடந்து இப்போது தமிழர் நடத்துவது அறிவுப்போர் என்று சொன்னார். நாம் புத்திசாலித்தனமாக இயங்கினால்தான் எதையும் செய்யலாம் என்றார். வெளிநாடுகளின் நிலைப்பாடுகள், அவற்றை சமாளிக்க கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகள் என முக்கால்வாசி எமக்கு தெரிந்த விஷயங்கள் தான். தெரியாத விஷயங்களும் சொன்னார். வழக்கறிஞர் என்ற முறையில் தந்திரோபாயமாக அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தங்கள், தமிழர் நலனுக்கு பாதகமாக இருக்குமேயானால் அதற்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டே ஒர்டர், ரிட் மனு என தாங்கள் எடுத்து நிறுத்தி வைப்பதாக உதாரணங்கள் மூலம் சொன்னார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள், ஆவணப்படுத்தப்பட்டு, தேவையான இடங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், சொன்னார். மக்களை கூட்டி அரசியல் செய்யும் நிலைமை கிஞ்சித்தும் இல்லை. இதனால் இராஜதந்திர அரசியல், குறிப்பாக வெளிநாடுகளையே தாங்கள் நம்பியிருக்க வேண்டியிருப்பதால், நிலைப்பாடுகளில் நெகிழ்வுத்தன்மை காட்டவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். தீவிரமான நிலைப்பாடுகளை தற்சமயம் கடைப்பிடித்தால், எங்களின் மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச இருப்பை கூட இழக்கும் அபாயத்தை, குடியேற்றங்கள், கலாச்சார பரம்பல் என்ற பல உதாரணங்கள் மூலம் விளக்கினார். இதை சமாளிக்க வேண்டிய உடனடித்தேவை இருக்கிறது என்றார். நீண்ட கால அரசியல் தீர்வு பற்றி கதைக்கும் நிலை தற்போதைக்கு இல்லை என்ற பொருள் பட பேசினார். இப்படி பொதுவாக நாங்கள் எல்லோரும் அறிந்திருக்ககூடிய விஷயங்களை சர்ச்சை ஏற்படுத்தா வண்ணம் வரிசைப்படுத்தினார். இடைவேளையின் போது பக்கத்தில் இருந்த தாத்தா ஒருவர், இலையான் ஒன்றை வாயில் இருந்து எடுத்து வெளியே போட்டார்!

சுமந்திரன் பேசிய விஷயங்களில் என்னை மிகவும் கவர்ந்தது வெளிநாட்டு தமிழருக்கு அவர் விடுத்த அழைப்பு தான். அரசியல், அரசியல் தவிர்ந்த சமூக முயற்சிகள் ஏராளமாக செய்யவேண்டி இருக்கிறது. அதற்குரிய ஆளணி பற்றாக்குறை இருக்கிறது. வெளிநாட்டு தமிழர்களை, திரும்பி அங்கே வந்து அரசியலையோ அல்லது சமூக வியாபார முயற்சிகளையோ எங்கள் பிரதேசத்தில் நிகழ்த்தவேண்டும். நிரந்தரமாக வர முடியாவிட்டால், ஒரு ஆறு மாசம், ஒரு வருஷத்துக்காவது வரவேண்டும். வருபவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியுமா? அங்கே இருக்கும் மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு உங்களுக்கும் இருக்கும் என்றார். Ouch! எவ்வளவு தான், வாசித்து அறிந்து புரிந்தது வைத்திருந்தாலும், நிலைமையை அங்கே இருந்து கண்டறிவது போல இங்கேயிருந்து அறியமுடியாது. எங்களுக்கு இருக்கும் அழுத்தங்கள், அபாயங்கள் என்பவற்றை வந்து அறிந்துகொள்ளுங்கள் என்றார். உடனே excited ஆகி இலங்கைக்கு டிக்கட் விலை என்னவென்று அப்போதே ஐபோனில் தேடினேன். அடுத்த நிமிஷமே, “வீட்டுக்கு மோர்த்கேஜ் கட்டவேண்டும், பின்பக்கம் பகோலா போடோணும். டாக்ஸ் ரிட்டர்ன் செய்யோணும்” என்ற யோசனை உறைத்தது! என்ன அவசரம் இப்ப? இருந்து இன்னும் ஐஞ்சு வருஷத்துக்கு உழைச்சு காசு சேர்த்துவிட்டு அப்புறமாக போகலாம். அரசியல் வேண்டுமென்றால் இங்க இருந்தும் செய்யலாம்! காசா பணமா?

பல விஷயங்களை மழுப்பலாகவே பேசினார். உத்திகளை வெளிப்படுத்தினால் அரசாங்கம் அதற்கு பதிலடி தயாரித்துவிடும் என்றார். தமிழ் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை விட, அவர்களுக்கு எது நன்மை பயக்குமா அதையே கூட்டமைப்பு செய்யும் என்றார். மக்கள் நலனுக்காகவே போராடுகிறோம். அதற்காக சிலவேளைகளில் புத்திசாலித்தனமாக பேசும்போது அது தவறாக பார்க்கப்படுகிறது. தனக்கு அங்கால பக்கத்தில் இருந்தும் மிரட்டல்கள் வருது. நீங்களும் இப்படி நம்பாமல் இருந்தால் நான் என்ன செய்ய? என்றார். வெளியே சொல்லமுடியாத சூழ்நிலை என்றாலும் நல்லதையே நாங்கள் செய்வோம். அப்படி செய்ய தவறினாலும் கூட ஒரு போதும் துரோகமிழைக்க மாட்டோம், எங்களை நம்புங்கள் என்றார். அன்றைக்கு புதுவருஷம். பலர் கோயிலுக்கு போய்விட்டு வந்து நெற்றியில் வீபூதி, காதிலே பூ எல்லாம் வைத்துக்கொண்டு வந்திருந்தனர். ஒரே பக்திமயமாக இருந்தது.

எனக்கு இதயவலி. என் வலியை போக்குவார் என்று நினைத்து டொக்டரிடம் போகிறேன். எனக்கு என்ன வைத்தியம் செய்யவேண்டும்? ஒப்பரேஷன் தான் செய்யவேண்டும் என்று டொக்டர் நினைத்தால், வலியில் கத்தினாலும் நான் மறுக்கமுடியாது இல்லையா! அவருக்கு என்னைவிட அதிகம் தெரிந்தபடியால் தானே அவரிடம் போனேன். ஆக முடிவை அவரே எடுக்க விடுவது நல்லது தானே! ஆனால் எனக்கு என்ன ஒபரேஷன்? அதை எப்படி செய்யப்போகிறார்? மயக்குவாரா? இதயத்தை வெளியே எடுப்பாரா? எவ்வளவு செலவு? இன்சூரன்ஸ் இருக்கா? என என் வருத்தம் பற்றிய எல்லா தகவல்களையும் எனக்கு அவர் தெரிவிக்கவேண்டிய தார்மீக கடமை டொக்டருக்கு இருக்கிறது. வந்துவிட்டேன் என்பதற்காக, என்னை படுக்கவைத்து வெட்டினால், அவர் லைசன்ஸ் அடுத்தநாளே காலி! இதை தான் சுமந்திரனுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன். உங்களுக்கு என்னை விட அரசியல் தெரிகிறது. சட்டம் தெரிகிறது. ராஜதந்திரம் தெரிகிறது. ஆனால் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று அவர்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய கடமை இருக்கிறது இல்லையா?

கேள்வி நேரம் ஆரம்பிக்கிறது. முருகன் திடீரென்று தன் பாக்கில் எதையோ கிளற ஆரம்பிக்கிறார். ஆகா இண்டைக்கு “ஹே ராம்” சீன் தான் போல! என்று பயந்தபோது தான், ஒரு கட்டு பேப்பர் வெளியே வந்தது. எல்லாமே சுமந்திரன் அண்மைக்காலத்தில் கொடுத்த பெட்டிகளின் தொகுப்பு. கூட்டமைப்பு/அரசு பேச்சுவார்த்தையால் என்ன பிரயோசனம்? என்று கேட்டதுக்கு, அது “அரசு எமக்கு ஒன்றுமே தர தயாரில்லை என்று சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு” என்றார். “ஏன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை இல்லை?” என்ற அறிக்கை என கேட்க, அதற்கு வெளிநாட்டு அழுத்தம் காரணம் என்றார். “தேசியம் சுயாட்சி” என்ற முக்கிய வார்த்தைகள் ஏன் இந்தியாவில் அனைத்து தமிழ் கட்சிகளும் மத்திய அரசாங்கத்துடன் நிகழ்த்திய சந்திப்பில் நீக்கப்பட்டது? என்ற கேள்விக்கு அது ஒற்றுமைக்காக எடுத்த முடிவு. அதற்கு பதிலாக “peoples” என்ற பதம் உலக அரங்கில் பாவிக்கப்படுவதாகவும் அதிலே பெரிய வித்தியாசம் இல்லை என்றும் விளக்கம் தந்தார். “கொழும்பில் வைத்தே நீங்கள் எல்லோரும் தீர்மானித்த அந்த அறிக்கையை, சுதர்சன நாச்சியப்பனும், சில தமிழ் கட்சிகளும் வேண்டாம் என்று சொன்ன காரணத்துக்காக விட்டுக்கொடுத்தது ஞாயமா?” என்ற முருகனின் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. எல்லாமே ராஜதந்திரம் போலும்! இன்னும் பல கேள்விகளை முருகன் கேட்டான். இனி கேட்கமுடியாது என்று பின்னால் இருந்து ஒரு ராக்கட் பாய்ந்ததால், சிங்கம் கூண்டுக்குள் போய்விட நான் கை உயர்த்தினேன்!

ஜேகே கேளுங்க என்றார்கள். வாழ்க்கையில் அரசியல் கேள்வி முதன்முதலில் ஒரு அரசியல்வாதியை நோக்கி கேட்டபோது வயிற்றில் இப்போது வாஷிங்மெசின் ஸ்பின் பண்ண தொடங்கியது.

“அரசாங்கம் சர்வதேசத்தை சமாளிக்கவும், குறிப்பாக இந்தியாவை சமாளிக்கவும் கூடிய சீக்கிரத்தில் வடக்கு தேர்தலை நடத்தப்போகிறது. கிழக்கில் விட்ட தவறு போல வடக்கிலும் கூட்டமைப்பு இந்த தேர்தலை புறக்கணிக்க முடியாது. அது மற்ற சக்திகளிடம் வடக்கை கொடுத்து குட்டிச்சுவராக்கி விடும். அதனால் ஏதோ ஒரு வகையில் தேர்தலில் பங்கேற்கவேண்டும். பங்கேற்று வென்று, மாகாணசபை ஆட்சி தொடங்கும் பட்சத்தில், மத்திய அரசாங்கம் கொஞ்சக்காலத்துக்கு ஆளுனரை அடக்கி வாசிக்க சொல்லி, ஏதோ மாகாணசபைக்கு எல்லா அதிகாரமும் இருப்பது போல பிரமையை கூட ஏற்படுத்திவிடலாம். இது தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வு வந்துவிட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் இல்லையா? இந்த சவாலை எப்படி எதிர்கொண்டு எங்கள் நீண்ட கால அபிலாஷைகளை நிறைவேற்ற போகிறீர்கள்?”

என்று தட்டுத்தடுமாறி ஒரு கேள்வியை கேட்டேன். “முக்கியமான கேள்வி இது முக்கிய விஷயம், முதலில் தேர்தல் அறிவுப்பு வரட்டும், அதற்கு பின் நாங்கள் முடிவுகளை தெரிவிப்போம். இதெல்லாம் யோசிச்சு இருக்கிறோம். ஆனால் இப்போது சொன்னால் அரசாங்கம் எங்கள் உத்தியை கண்டுபிடித்துவிடும்” என்று அவர் பழைய புராணம் பாட, பக்கத்தில் இருந்த முருகன் காதை செக் பண்ணி பார்த்தான். பூ ஏற்கனவே விழுந்துவிட்டது அவனுக்கு!

தொடர்ந்து பல கேள்விகள். காணி நிலம், இராணுவமயப்படுத்தல் போன்ற பிரச்சனைகள். வெளிநாட்டு தமிழர் தங்கள் காணிகளை பயன்படுத்த நில உரிமை எழுதி அங்குள்ள மக்களுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி. கூட்டமைப்பு இதற்கெல்லாம் சேர்ந்தாற்போல ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கபோகிறது என்று சொன்னார். முறையான அறிவிப்பு விரைவில். “தமிழர்களின் செறிவு குறைந்துபோய் இருக்கும் சந்தர்ப்பத்தில், குடியேற்றங்களை வேண்டாம் என்று சொல்ல என்ன தார்மீக காரணம் இருக்கிறது உங்களுக்கு?” என்ற முக்கியமான ஒரு கேள்விக்கு, “இயல்பாக இடம்பெறும் இனப்பரம்பலை நாங்கள் தடுக்க முடியாது, ஆனால் கட்டாயமாக, இன விகிதாசாரத்தை மாற்றும் வகையில் நெறிப்படுத்தப்படும்(orchestrated) குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தில் கூட விரோதமானது என்று எழுதப்பட்டு இருக்கிறது என்று பதில் தந்தார். ஆச்சரியமாக பார்த்தேன்.

சில அசந்தர்ப்ப கேள்விகளும் இல்லாமல் இல்லை. “ஏக பிரதிநிதிகள்”, “தர்மம்/அதர்மம்” விவகாரம் என அண்மையில் சுமந்திரன் கும்மப்படும் பல விஷயங்கள் சராமாரியாக வந்தன. அவர் ஓரளவுக்கு சமாளித்தார் எனலாம். இலங்கையில் இருந்து கொண்டு செய்யும் சில அரசியல் வேலைகளில் அதுவும் அவர் பாணி அரசியலுக்கு சில விஷயங்கள் தவிர்க்கமுடியாதது என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. இங்கே இருந்துகொண்டு அவற்றை தீவிரமாக அலசுவதற்கும் கதைப்பதற்கும், அங்கே பொதுவெளியில் தர்மசங்கடமான சூழ்நிலைகளை இராஜதந்திர ஸ்தானத்தில் நின்று சமாளிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதால் முட்டையில் மயிர் புடுங்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.

எனக்கு அரசியல் அறிவு என்பது, ஓரளவுக்கு அனுபவத்தாலும், வாசிப்பாலும், சமகாலத்து ஏனைய இனப்பிரச்சனைகள் பற்றிய தேடலாலும் மட்டுமே வந்தது. இது தற்சமயம் இருக்கும் விவகாரமான, குழப்பமான, தீவிரமான இலங்கை தள அரசியலை விமர்சிக்க போதாது. அதற்குரிய அனுபவமும் இல்லை. வயசும் இல்லை. என் வயசுக்கு நான் கொஞ்சம் தீவிரமாகவே யோசிப்பேன் என்பதை உணரமுடிகிறது. ஏன் முடியாது? என்று கேட்கும் வயசில் நான் இருப்பதால் அப்படியான கேள்விகளும் சந்தேகங்களும் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் புத்தி சொல்லுகிறது சுமந்திரனை ஒட்டுமொத்தமாக விமர்சிப்பது அழகில்லை. தவிர அது அழிவுக்கே இட்டுச்செல்லும். பல கருத்துக்களில் ஒத்தும்போகும் சுமந்திரன் சில கருத்துக்களில் வேறுபடுகிறார். அது அவர் அனுபவம், வயசு, அறிவுக்கு எட்டிய விஷயம். ஆக்கபூர்வமாக கலந்துரையாடுவதன் மூலம் இவ்வகை வேறுபாடுகளை ஒருவர் மற்றொருவருக்கு புரியவைக்க முடியும். எனக்கு இந்த சந்திப்பில் ஓரளவுக்கு புரிந்தது. எங்களுக்குள் இருக்கும் கருத்தியல் வேறுபாடு புரிந்தது. ஆனால் யார் சரி? என்று புரியவில்லை. இதனால் தான் இலங்கையில் இருந்து இயங்கும் குருபரன், சிறீதரன் போன்ற சக அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களின் கருத்துக்களுடன் சீர் தூக்கி ஆராய்ந்து ஒரு நிலைக்கு நாங்கள் வரவேண்டும். முதலின் நாம் எம்முள் யாரையும் புறக்கணிப்பதை ஓரளவுக்கு தள்ளிவைத்துவிட்டு, ஒருவர் ஒன்றை ஏன், எதற்கு எந்த சந்தர்ப்பத்தில் சொல்லுகிறார் என்று பார்ப்போம். அவர் கருத்துடன் நம் கருத்து மாறுபட்டால் அதை பொறுப்பாக பதிவு செய்வோம். அவர் கருத்தும் மாறாமல், பெரும்பான்மை தமிழர் கருத்தும் அவர் கருத்தாக இல்லாது போகும் பட்சத்தில், ஒன்று அவர் தன் கருத்தை மாற்றுவார். அல்லது மக்கள் ஆளை மாற்றுவார்கள்! இந்த பக்குவத்தை நாங்கள் எல்லோரும் எப்போதாவது அடைவோம் என்ற நம்பிக்கையும், நாம் எல்லோரும் ஒற்றுமையாக எம் பிரச்சனையை தீர்ப்போம் என்ற நம்பிக்கையும் .. பொறுங்கள் .. புது வருஷத்துக்கு கோயிலுக்கு போகோணும்!

குறிப்பு:

இங்கே சுமந்திரனால் மற்றும் ஏனையவர்களால் கொடுக்கப்பட்ட கருத்துக்கள், அவர்கள் சொல்லி அவற்றை நான் எப்படி புரிந்துகொண்டேன்? என்ற அடிப்படையிலேயே எழுதப்பட்டது. அது உண்மையான அவர்களின் நிலைப்பாட்டை தான் குறித்து நிற்கிறதா? என்பது என்னுடைய கிரகிப்பு திறன் சம்பந்தப்பட்டதால், எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை! தவிரவும், இங்கே நான் கொடுத்திருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள், என் அறிவுக்கு எட்டிய விஷயங்களே. அதை இன்னொருவர் மறுத்து விளக்கினால், எனக்கு புரிந்தால் ஏற்றுக்கொள்வேன். என் முயலுக்கு எத்தனை கால்கள் என்று பலவருஷமாக எண்ணிக்கொண்டு இருக்கிறேன்! மூன்று காலா, நான்கா என்று sure இல்லை! அப்படி இருப்பது எண்ணுவதற்கும் இலகுவாக இருக்கிறது!

தனிப்பட்ட முறையில் அவர் சொன்ன சில கருத்துக்கள், மைக்கை பொத்திக்கொண்டு சொன்ன பதில்கள், நாகரிகம் கருதி இங்கே எழுதவில்லை. ஆனால் அவை முக்கியமான கருத்துக்கள் ஆதலால், சந்தர்ப்பம் கிடைக்கும்போது இப்படியான சந்திப்புக்களை தவறவிடாதீர்கள். போட்டோ எடுக்க கூடாது என்பது ஒர்டர். ரேகொர்ட். பண்ண கூடாது என்று கடைசியில் தான் சொன்னார்கள். அழித்துவிட்டேன்!

References :

http://dbsjeyaraj.co...es/4057/mas2512

http://island.lk/ind...ode_title=44922

http://www.thesunday...igy-expression/

http://groundviews.o...ontent=FaceBook

http://www.pongutham...ff-1c0a3ebac99f

மிக முக்கிய குறிப்பு : இது அரசியல் பதிவு இல்லை! எனக்கு அரசியல் ஒரு சதத்துக்கும் தெரியாது!

பதிவு மூலம் : http://www.padalay.c...og-post_17.html

Edited by jkpadalai

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

பதிவுக்கும் தங்களது நேரத்திற்கும்.

தேசியக்கடமை என்பது எல்லாருக்கும் பொதுவானது.

அதை நாம் மறுக்கமுடியாது. அவரவர் தமது கடமைகளை செய்யவும் சொல்லவும் அனுமதிக்கணும். பிழைகள் திருத்தப்படணும். அதற்கு நாம் ஒன்று கூடணும் பேசணும்.

நல்லதொரு முயற்சி தங்களுடையது. வாழ்த்துக்கள்.

உங்கள் தளத்தில் இதனை வாசித்தேன். ஆக்கபூர்வமானதொரு கட்டுரை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி விசுகு

நன்றி தப்பிலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.