Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Scent of a Woman

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Scent of a Woman

நடிகர்கள் – அல் பாசினோ, க்ரிஸ் ஓ டோனல்

இயக்குனர் – மார்டின் ப்ரெஸ்ட்

தயாரிப்பாளர் – மார்டின் ப்ரெஸ்ட்

ஒளிப்பதிவாளர் – டொனால்ட் ஈ.தொரின்

இசை – தாமஸ் நியூமேன்

Scent of a Woman உணர்வுகளின் ஆழங்களைத் தீண்டிச் செல்லும் அற்புதமான ஒரு திரைப்படம்.

a1.jpg

உயர்நிலைப் பள்ளி மாணவனான சார்லஸ் சிம்ஸ் (க்ரிஸ் ஓ டோனல்) ஸ்காலர்ஷிப்பில் பாஸ்டனின் மிகப் பெரிய பள்ளியில் உயர் கல்வி பயில்கிறான். அவர்கள் ஊரில் வார இறுதியில் நன்றி கூறும் தினம் கொண்டாடப்படுகிறது என்பதால் மாணவர்கள் அதற்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். எதாவது பகுதி நேர வேலை செய்தால்தான் சார்லி தன் மற்ற செலவுகளை சமாளிக்க முடியும். பள்ளி நோட்டிஸ் போர்டில் வேலைக்கான படிமம் பார்த்து விண்ணப்பம் அனுப்பியிருந்த ரோஸி என்பவரின் வீட்டிற்குச் சென்றான். அவனை வரவேற்ற ரோஸி தான் வெகு நாள் கழித்து கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் போகவிருப்பதால் பார்வையிழந்த தன்னுடைய மாமா ரிடையர்ட் லெப்டினண்ட் கர்னல் ப்ராங்க் ஸ்லேடை (அல் பாசினோ) பார்த்துக் கொள்வதற்காக ஆள் வேண்டும், உன்னைப் பார்த்தால் நீ இதை நிச்சயம் செய்வாய் என்று தோன்றுகிறது எனச் சொல்கிறாள்.

chrs.jpg

சார்லியை தனி அறையில் தங்கியிருந்த ப்ராங்கிடம் அழைத்துச் செல்கிறாள். பார்வையற்று இருந்தாலும் அவர் யாரையும் சார்ந்து இருக்க விரும்பாதவர், சார் என்று தன்னை யாரும் விளிப்பதை விரும்பாதவர் என்று ரோஸி சொல்லி அவர் அறைக்கு அனுப்புகிறாள். நேர்த்தியாக ஆடையணிந்த நல்ல உருவச் சிறப்புடன் கையில் மதுக்கோப்பையுடன் ப்ராங்க் அமர்ந்திருந்தார். முதலில் அவன் சார் என்றதும் கடும் கோபத்துடன் அவர் கர்ஜிக்கவே ஆடிப்போய் விடுகிறான் சார்லி.

அவரை எப்படி அழைப்பது எனத் திணறி கடைசியில் கர்னல் என்றதும் அமைதியானார்.

அவனுக்கான நேர்முகத் தேர்வு ஆரம்பமாகிறது. உன் பேர் என்ன என்று சிம்மக் குரலில் கேட்கவே, சார்லி சிம்ஸ் என்றான். அம்மா அப்பா என்ன செய்கிறார்கள் என்றதும் அம்மாவும் அவளது இரண்டாவது கணவனும் கிராமத்தில் மளிகை கடை வைத்திருக்கிறார்கள் என்றான். இவ்வளவு பெரிய பள்ளியில் எப்படி படிக்கிறாய் என்றதும் ஊதியத் தொகையில் படிக்கிறேன் என்றான் மென்மையாக. அப்போது அந்த அறைக்கு வந்த பூனையை விரட்டுகிறார். சிறுது நேரம் கழித்து ஜன்னலில் எட்டிப் பார்த்த பேத்தியையும் துரத்துகிறார். மிகவும் தோரணையான அவர் பேச்சும் காரணமற்ற அவரின் கோபமும் சார்லிக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. அவனை இளக்காரமாக பேசுகிறார் கர்னல். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்கிறான் சார்லி. இந்த வேலை கிடைத்தால் சுலபமாக நல்ல தொகையொன்றை சம்பாதிக்கலாம். ஆனால் கர்னல் மிகவும் கடினமானவராக இருந்தால் கஷ்டம்தான் என நினைத்தான். பேட்டி முடிவதற்குள் கர்னல் எரிச்சல் அடைந்து உனக்கு வேலை கிடையாது வெளியே போ எனக் கோபமாக அவனை விரட்டி விட்டார்.

ரோஸியிடம் இதைச் சொல்லிய போது அவர் உன்னிடம் இவ்வளவு பேசியதே உன்னை அவருக்கு பிடித்திருக்கிறது என்று அர்த்தம். வார இறுதியில் மறக்காமல் வந்துவிடு என்கிறாள். கல்லூரிக்கு சென்றதும் அவன் நண்பன் ஜார்ஜ் லைப்ரரியில் இருக்கிறான். பகுதி நேர நூலக காப்பாளான சார்லியிடம் புத்தகம் ஒன்றை இரவல் வாங்கி மறுநாள் தந்துவிடுவதாக சத்தியம் செய்கிறான். இருவரும் இரவு பேசிக்கொண்டே தெருவில் நடந்து கொண்டிருக்கையில் மூன்று மாணவர்கள் லாம்ப் போஸ்டில் ஏதோ விஷமம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து என்ன செய்கிறீர்கள் என்று ஜார்ஜ் கேட்கவே நாளை வரை பொறுத்திருங்கள் என்று சொல்கிறார்கள். அப்போது மேடம் ஹன்ஸேகர் அங்கு வரவே அவர்கள் மூவரும் ஓடிவிடுகிறார்கள். ஜார்ஜையும் சார்லியும் அந்த வேளையில் அங்கு பார்த்த மேடம் ஹாஸ்டலுக்கு போகும்படி கண்டித்துவிட்டுப் போகிறாள்.

boys.jpg

அடுத்த நாள் மாணவர்களுக்குப் பிடிக்காத விரிவுரையாளர் ட்ராஸ்க் தன் காரில் உள்ளே நுழைகையில் ஒலிபெறுக்கியில் அவரைப் பற்றி பெருமையாக ஒரு குரல் ஒலிக்கிறது. இறங்கி என்னவென்று அவர் பார்க்கையில் அவரின் உருவத்தை கேலிச்சித்திரமாக வரைந்திருந்த மிகப் பெரிய பலூன் ஒன்று லாம்ப் போஸ்டில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. பலூனை அவர் எக்கிப் பிடிக்கவும் பலூன் வெடித்து அதில் மாணவர்கள் ஊற்றி வைத்திருந்த சாக்கடை அவர் தலையிலும் காரிலும் கொட்டியது. கோபத்தில் அவர் ரத்தம் கொதித்து அவ்விடத்தை விட்டு அகன்றார்.

சார்லியையும் ஜார்ஜையும் தனி அறைக்கு அழைத்து சம்பவ இடத்தில் நீங்கள் இருவரும் இருந்ததாக மேடம் சொல்லிவிட்டார்கள். இதைச் செய்தது யார் என்று ஒழுங்கு மரியாதையாக சொல்லிவிடுங்கள் என்று மிரட்டுகிறார். இருவரும் தாங்கள் சரியாக பார்க்கவில்லை, யாரென்றே தெரியவில்லை என்று சாதிக்கவும் ஒரு வார அவகாசம் தருகிறார். அடுத்த வாரம் ஒழுக்க நடவடிக்கை மீட்டிங்கில் நீங்கள் உண்மையை சொல்லாவிட்டால் உங்கள் எதிர்காலம் என்னவாகும் என்பதை யோசித்து முடிவு செய்துகொள்ளுங்கள் என்றார். ஜார்ஜை அனுப்பிவிட்டு சார்லியிடம் நீ ஏற்கனவே உதவித் தொகையில் படிப்பவன் இந்தக் கல்லூரியில் படிப்பதற்கு முக்கிய காரணம் என்னுடைய சிபாரிசுதான் தெரியுமா என்கிறார். சார்லி தெரியாது என்கவும், தெரிந்து கொள், யார் எல்லாம் இச்செயலில் ஈடுபட்டார்களோ அவர்களை காட்டிக் கொடுப்பதால் உனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஒரு வாரம் அவகாசம் இருக்கிறது, நன்றாக யோசித்து முடிவெடு எனச் சொல்லி அனுப்புகிறார். இந்தச் சிக்கலை எப்படி சரி செய்வது என ஜார்ஜிடம் புலம்புகிறான் சார்லி. சமாளிக்கலாம் என்று ஜார்ஜ் சொல்கிறான்.

வார இறுதியில் ரோஸியின் வீட்டுக்குச் செல்கிறான் சார்லி. முதலில் வேலை வேண்டாம் என்று அவன் சொல்லவே ரோஸி அவனிடம் கெஞ்சி சம்மதிக்க வைக்கிறாள். தன்னுடைய தொலைபேசி எண்ணை தந்துவிட்டு ப்ராங்கை அதிகம் குடிக்க விடாதே பத்திரமாக பார்த்துக் கொள், உன் வீடு போல சுதந்திரமாக இரு என்று சொல்லிவிட்டு இருவரிடமும் விடை பெற்றுச் செல்கிறாள்.

அவர்கள் கார் கேட்டை தாண்டியதும் பரபரப்பாகிறார் ப்ராங்க். சார்லியிடம் தன்னுடைய உடைகளை பேக் செய்து தரும்படி சொல்கிறார். அவசரமாக சில போன் கால்கள் செய்தபின் அவரும் வெளியூருக்குச் செல்ல தயாராகிவிட்டார். சார்லி குழப்பத்துடன் எங்கே போகிறோம் என்றதும் நாம நியூயார்க் போகிறோம் என்றார் சந்தோஷத்துடன். ரோஸி இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே அவர்களிடம் போன் செய்து கேட்கிறேன் என்றதும் அவள் மறந்திருப்பாள், வாயை மூடிக்கொண்டு கிளம்பும் வழியைப் பார் என்று கத்துகிறார். அவனுக்கும் சேர்த்து ப்ளைட்டில் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்திருந்தார். டாக்ஸி வந்துவிட்டதா என அவனைப் பார்க்கச் சொல்கிறார். டாக்ஸி வாசலில் நின்றிருந்தது. சார்லிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நான் நியூயார்க் வருவதாகச் சொல்லவில்லையே என்றதும், என்ன நீ ஒப்புக்கொண்ட வேலையை மட்டும்தான் செய்பவனா, பேசாமல் வா என்று அதட்டுகிறார். விமான நிலையத்தில் டாக்ஸியிருந்து இறங்கியதும் சார்லி அவருக்கு கை கொடுக்க அதைப் பற்ற மறுத்த கர்னல் நீ என்ன குருடனா உன்னால் தனியாக நடக்க முடியாதா என்று திட்டுகிறார். சாரி என்று அவன் சொன்னதும் பரவாயில்லை ரொம்ப எம்டிவி பார்தால் இப்படித்தான் இருப்பே என்றார் நக்கலாக.

airport.jpg

கர்னல் விமானப் பணிப்பெண்ணிடம் உற்சாகமாக பேசுகிறார். அவளிடம் தனக்குப் பிடித்த உணவு வகைகளையும் மதுவை தருவிக்குமாறு கேட்டுவிட்டு,அவள் அவற்றைத் தந்ததும் ‘நன்றி மிஸ்.டாப்னே என்றார். அவள் அகன்றதும் சார்லியிடம் என்ன அற்புதமான வாசனை என்றார். சார்லி அவர் எப்படி அவள் பெயரை தெரிந்துகொண்டார் என ஆச்சரியமாக இருந்தது. அவள் போட்டிருந்த செண்டின் பெயரைக் கூட அவர் சொன்னதும் திகைத்துப் போனான். எதற்கு நியூயார்க் போகிறீர்கள் என்று அவன் கேட்டதும், சமயம் வரும்போது சொல்லப்படும் என்கிறார். கர்னல் பெணகளின் மீது தீரா விருப்பம் உடையவர் என்பதை சார்லி புரிந்து கொள்கிறான். உலகில் அற்புத பிறவிகள் பெண்கள், பெண்களைப் படைத்த கடவுள் அற்புதமானவன்தான். ஒரு பெண்ணின் கூந்தலில் புதைந்திருக்கிறாயா சார்லி, அதில் ஆயுசு முழுவதும் கழித்துவிடலாம் என்றார். உதடுகளைப் பற்றி சொல்வதானால் அது முதல் முறையாக நீ மதுவை அருந்தும் போது எப்படி ருசிக்கும் அந்த ருசி உதட்டிற்கு உரியது என மேலும் மேலும் பெண்ணின் அங்கங்களை அழகாக வர்ணிக்கிறார் கர்னல். சார்லியிடம் உலகிலேயே ஆகச் சிறந்தவை இரண்டு மட்டும்தான் ஒன்று பெண்கள் மற்றது பெராரி கார் என்றதும் சார்லி புன்னகைக்கிறான்.

நியூயார்கில் ஒரு பெரிய ஹோட்டலில் அறை எடுத்திருந்தார் கர்னல். அன்றிரவு மிகப் பெரிய ஹோட்டலில் வயிறு முட்டக் குடித்து பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். எதற்காக இந்தப் பயணம், இப்படி ஆடம்பரமாக செலவழிக்க ஏது பணம் என்று அவன் மீண்டும் வற்புறுத்திக் கேட்டதும் ’இது என்னுடைய பென்ஷனில் இந்த டூருக்காகவே சேர்த்து வைத்தேன். மூன்றே நாள் என்னுடன் இரு. நான் நியூயார்க் வந்த காரணம் நல்ல உணவை ரசித்து சாப்பிட, என்னுடைய தம்பியை பார்க்க, அழகான பெண்ணுடன் உறவு கொள்ள கடைசியில் என் மூளையை வெடித்துச் சிதறிக்கொள்ள என்று சொல்லி சிரிக்கிறார். அப்படின்னா என்ன என்று சந்தேகத்துடன் கேட்ட சார்லியிடம் பேச்சை மாற்றி அவனுக்கும் புது ஆடைகள் வாங்கி தம்பி வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவருக்கு சரியான வரவேற்புக் கிடைக்கவில்லை, மேலும் தம்பி மகன் அவருடைய பார்வை பறிபோன கதையை கேலியாக பேசி அவமானப் படுத்திவிடுகிறான். கண்களில் நீர் துளிர்க்க அவ்விடத்தை விட்டு சார்லியுடன் கிளம்புகிறார் கர்னல். அவருடைய மனம் என்ன பாடுபடும் என அறிந்த சார்லி அன்புடன் அவர் தோளை அணைத்து காருக்கு அழைத்துச் செல்கிறான். இருவருக்கும் மெல்லியதாய் ஒரு நெருக்கம் உருவாகிறது. கர்னலிடம் தன்னுடைய பள்ளி பிரச்சனையை மனம் திறந்து சொல்கிறான் சார்லி. ஜார்ஜ் உனக்கு உதவமாட்டான் அவன் அப்பா பணக்காரன், அவர்கள் எல்லாரும் ஒரே ஜாதி என்று கர்னல் சொல்லவே தன் நண்பனை விட்டுக் கொடுக்காமல் இல்லை அப்பாவிடம் இந்த விஷயத்தை அவன் எடுத்துப் போகமாட்டேன் என்று சொல்லியிருக்கிறான் என்றான். இருவரும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்ததும் மறுநாள் வருவதாகச் சொல்லி விடைப்பெற்ற டாக்ஸி ட்ரைவர் மானி.

மனம் உடைந்த நிலையில் இருக்கும் கர்னலை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் அவரிடம் போன் செய்ய வெளியில் போகிறேன் என்றான் சார்லி. இங்கேயே பேசு மகனே, உனக்கும் எனக்கும் இடையே என்ன ரகசியம் என்றார். அவன் ஜார்ஜிடம் பேசினான். ஜார்ஜ் அவன் அப்பாவிடம் இந்த விஷயத்தை சொல்லிவிட்டதாகவும் சார்லி எதற்கும் பயப்படவேண்டாம் என்றும் தைரியம் சொன்னான். சார்லி போனை வைத்ததும் நான் சொன்னேன் இல்லியா என்று கர்னலின் பார்வைக்கு பதிலாக அவன் அப்பாவிடம் சொல்லி நிச்சயம் எனக்கும் சேர்த்து உதவுவான் என்றான் அப்பாவியாக. பொறுத்திருந்து வேடிக்கையைப் பார் சார்லி, அவன் அப்பா அவனுக்கு மட்டும்தான் சப்போர்ட் பண்ணுவார், ஏழை மாணவனான உன்னை கண்டுக்க மாட்டார் என்றார். அவர் தன்னுடைய துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவதைப் பார்த்த சார்லி பதட்டத்துடன் எதற்கு இது என்று கேட்டான். நான் ஆர்மியில் இருந்தவன் துப்பாக்கி எனக்கு இன்னொரு கரம் என்று சொல்கிறார். அவனுக்கு இவரின் நடவடிக்கை சந்தேகமாகவே இருக்கிறது. எற்கனவே மறைமுகமாக சாவைப் பற்றி அவர் சொல்லியிருந்த்தால் அவரைக் கட்டாயப்படுத்தி குண்டுகளை வாங்கி வைத்தான். அவனுடைய அன்பால் நெகிழ்ந்தார் கர்னல்.அதற்குள் சார்லியின் பிரச்சனை தீவிரமாகிறது. இன்னும் இரண்டு தினங்களுக்குள் கல்லூரிக்கு போயாக வேண்டும் என்று கர்னலிடம் சொல்கிறான். அவனுடைய விமான டிக்கெட் ரெடியாக இருக்கிறது இன்னும் ஒரே நாள் என்னுடன் இரு என்கிறார் கர்னல். வேறு வழியின்றி சம்மதிக்கிறான் சார்லி.

tango.jpg

அடுத்த நாள் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் போது ஒரு பெண்ணின் செண்ட் வாசனை கர்னலை ஈர்க்கிறது. சார்லியிடம் கேட்டபோது தனியாக ஒரு இளம்பெண் அமர்ந்திருக்கிறாள் என்கிறாள். எப்படி இருக்கிறாள் அழகியா என அவர் கேட்டார். பேரழகி என்றான் சார்லி. உனக்கு அவளைப் பிடித்திருக்கிறதா என்றதும் சார்லி வெட்கப்படுகிறான். இந்த வயதில் இதையெல்லாம் பார்த்து ரசிக்காமல் என்ன செய்கிறாய் நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்லி அவனை அப்பெண்ணிடம் அழைத்துச் செல்லுமாறு சொல்கிறார். தயக்கத்துடன் அவளிடம் அழைத்துச் சென்றான் சார்லி. தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவள் இருக்கைக்கு எதிரில் அமரலாமா என்று கேட்கிறார். தன் காதலனுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் அவன் வரும்வரை நீங்கள் அமரலாம் என்றாள்.

அவள் பெயர் டோனா என்று அறிகிறார்கள். கர்னல் அவள் உபயோத்திருக்கும் சோப் மற்றும் செண்டின் பெயரை சரியாக சொல்லவும் அவள் ஆச்சரியத்தில் உறைந்து போகிறாள். தன்னுடைய பாட்டி தனக்கு பரிசளித்தது என்றாள். உன் பாட்டியை நான் மிகவும் விரும்புகிறேன் என வேடிக்கையாக அவளிடம் சிரிக்க சிரிக்க பேசுகிறார் கர்னல். அவள் பேச்சினூடே தனக்கு டாங்கோ மிகவும் பிடிக்கும் ஆனால் தன் காதலன் ஆட விடுவதில்லை, அதனால் சரியாக கற்றுக் கொள்ளவில்லை என்கிறாள். கர்னல் நீ விரும்பினால் உனக்கு டாங்கோவை இங்கே இப்போதே சொல்லித் தருகிறேன் என்கிறார். அவள் தயக்கத்துடன் எழுந்து தன் கையை அவரிடம் தரவே மென்மையாக, லாவகமாக அவள் இடையையும் கரத்தையும் பற்றி அற்புதமான இசைக்கேற்றவாறு இருவரும் உலகை மறந்து டாங்கோவில் திளைக்கிறார்கள். இசை நின்றதும் அனைவரும் கைத்தட்டுகிறார்கள். வெட்கச் சிரிப்புடன் டோனா கர்னலுக்கு நன்றி சொன்னாள். இளமையும் அழகும் நிறைந்த சார்லியால் கவரப்படாமல் அறிவாற்றலும், பேச்சுத் திறமையும் உடைய கர்னலை அவளுக்கு பிடித்தது. அதற்குள் அவள் காதலன் வரவே இவர்களை அறிமுகப்படுத்துகிறாள். காதலன் வந்ததும் புறப்படு எனச் சொல்லவே அவளுக்கான பில்லை தான் கட்டுவதாகச் சொல்கிறார் கர்னல். ஏன் என்று மறுத்த காதலினடம் பரவாயில்லை அவர் கட்டுவார் என்று சொல்லி பிரியாவிடைப் பெற்றுச் செல்கிறாள் டோனா.

ferare.jpg

அவள் போன பின் வெறுமையாக உணர்ந்த கர்னலை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறான் சார்லி. தூக்கம் வருகிறது என்று படுக்கையை விட்டு எழுந்திருக்காத கர்னலை பிடிவாதமாக வெளியே அழைத்துச் செல்கிறான் சார்லி. பெராரி காரை வாடகைக்கு விடும் இடத்திற்கு வருகிறார்கள். இளைஞனுக்கும் பார்வையற்றவரையும் நம்பி பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை தர ஏலாது என்று மேனேஜர் சொன்னதும் தன்னுடைய அபார பேச்சுத் திறனால் கடும் விவாதத்திற்குப் பிறகு வண்டியைப் பெறுகிறார்கள். கார் வெண்ணையைப் போல தெருவில் வழுக்கிச் சென்றதும் மகிழ்ந்து போகிறார் கர்னல். ஆள் அரவமற்ற ஒரு தெருவில் சார்லியிடமிருந்து வண்டியை வாங்கி அவன் சொல்வதற்கு ஏற்ப வண்டியை திருப்பி வெகு நாள் கழித்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார். அதிவேகத்தில் வண்டியை ஓட்டியதால் மஞ்சள் நிற வாகன டிராபிக் போலீஸ் அவர்களை துரத்திப் பிடிக்கிறது. அதிலிருந்து இறங்கிய ஆபிசரிடம் சார்லியை தன் மகன் என அறிமுகப்படுத்தி அவனுக்காகத் தான் வண்டியை எடுத்தேன் என்று கூறி, சாரி கேட்டு மென்மையாக பேசினார். தான் பார்வையற்றவர் என்பதை அறிந்திடாத வகையில் சாமத்தியமாக பேசினார் கர்னல். இவர்களை எதுவும் செய்யாமல் கண்டித்து அனுப்பிவிட்டார் அந்த ஆபிஸர். கர்னல் ப்ராங்கின் திறமையை பலமுறை பார்த்திருந்த சார்லிக்கு தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தோன்றி வண்டியை அவன் ஓட்ட ஆரம்பித்தான்.

ஹோட்டலுக்கு வந்ததும் தான் மிகவும் களைப்பாக் இருப்பதாகச் சொன்ன கர்னல் சார்லியிடம் தனக்கு சிகரெட் வாங்கித் தரச் சொன்னார். அங்கிருந்து கிளம்பிய சார்லிக்கு அவர் முகம் சரியாக இல்லையென்பதை அறிந்து திரும்பி வந்து பார்த்தான். கர்னல் தன்னுடைய துப்பாக்கியை சரிபடுத்திக்கொண்டிருந்தார். ஒரே ஒரு குண்டு அதில் இருந்தது தான் சார்லியிடம் பொய் சொல்லிவிட்டதை ஒப்புக்கொண்டார். தான் வாழ விரும்பவில்லை தடுத்தால் உன்னையும் சுட்டுப் பொசுக்கிவிடுவேன். இங்கிருந்து ஓடிப்போய்விடு என்றார். அவன் அவருடன் கடுமையாக போராடி அவர் துப்பாக்கியை பறிக்க முயன்றான். ஏன் நான் வாழ வேண்டும் சார்லி, நான் குருடன் எனக்கு இந்த வாழ்க்கை அலுத்துவிட்டது, நான் வாழ ஒரு காரணம் சொல்லு பார்க்கலாம் என ஆத்திரத்துடன் கத்தினார். ஒன்றல்ல இரண்டு காரணங்கள் இருக்கிற்து கர்னல் நீங்கள் வசீகரமானவர் பெண்கள் உங்களைப் பார்த்து இன்னும் மயங்குகிறார்கள், இரண்டாம் காரணம் உங்களை விட அற்புதமாக பெராரியை யாரால் ஓட்ட முடியும் என்றான். அவனுடைய பதிலால் நெகிழ்ந்து போன கர்னல் தன்னுடைய துப்பாக்கியை கீழே போடுகிறார். அத்துடன் அவர் தற்கொலை எண்ணம் முடிவடைகிறது.

gun+scene.jpg

சார்லிக்கு மட்டுமே திரும்பி செல்ல விமான டிக்கெட் எடுத்திருந்தார். தனக்கும் எடுத்துக் கொண்டு மானியின் காரில் ஊருக்கு திரும்புகிறார்கள். நெகிழ்ச்சியுடன் அவனிடம் பிரியாவிடை பெறுகிறார் கர்னல். அவனுக்குச் சேர வேண்டிய சம்பளப் பணத்தை தந்துவிட்டு பள்ளியில் அவனை இறக்கிவிடுகிறார்.

சார்லியின் பள்ளியில் மீட்டிங் தொடங்கியது. ஆயிரம் மாணவர்கள் அமர்ந்திருக்க மேடையில் ட்ராஸ்க் தலைமையில் கமிட்டி மெம்பர்கள் அமர்ந்திருந்தார்கள். மிகவும் பதட்டத்துடன் ஜார்ஜும் அவன் அப்பாவும் அருகருகே அமர்ந்திருக்க சார்லி தனியாக உட்கார்ந்திருந்தான். அப்போது கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது, கர்னல் மானியின் துணையுடன் மேடைக்கு வந்து கொண்டிருந்தார். சார்லி சந்தோஷத்துடன் அவரை மேடைக்கு ஏற்றி தனக்கு அருகில் அமர வைத்தான். யார் இவர் என்று ட்ராஸ்க் கேட்டதும் நான் சார்லிக்காக பேச வந்துள்ளேன். அவனுடைய பெற்றோர்களால் வர இயலவில்லை என்றார். முதலில் மறுத்த ட்ராஸ்க் வேறு வழியில்லாததால் கர்னலை அனுமதிக்கிறார்.

climax.jpg

விசாரணை தொடங்குகிறது. ஜார்ஜ் சம்பவ தினத்தன்று தான் காண்டாக்ட் லென்ஸ் அணியல்லை எனவே யார் அக்காரியத்தை செய்தார்கள் எனத் தெரியவில்லை. தன்னுடன் இருந்த சார்லிக்குத்தான் தெரிந்திருக்கவேண்டும் என போட்டுக் கொடுத்தான். மிகவும் அதிர்ந்து போன சார்லியிடம் டிராஸ்க் சார்லி உனக்கு வேறு வழியே இலலை கடைசி முறையாக கேட்கிறோம் உண்மையைச் சொல் அல்லது உன்னை கல்லூரியிலிருந்து நீக்கிவிடுவோம் என்று அச்சுறுத்துகிறார். சார்லி தயக்கமாக தனக்கு எதுவும் தெரியாது என்கிறான். தண்டனையாக நீ இனி பாஸ்டனில் இந்தப் பெரிய பள்ளியில் படிக்கும் தகுதியை இழக்கிறாய் என அவர் ஆத்திரத்துடன் சொல்ல கோபத்துடன் எழுந்த கர்னல் இந்த அற்புதமான இளைஞனின் படிப்பை ரத்து செய்து அவனுடைய தூய்மையான ஆன்மாவை கொலை செய்கிறீர்கள் டிராஸ்க். அவன் எந்த தவறும் செய்யாமலே இவ்வளவு பெரிய தண்டனைக்கு உள்ளாகும் காரணம் பணக்காரர்கள் சூழ்ந்த இந்தப் பள்ளியில் படிக்கும் ஒரே ஏழை மாணவன் அவன். அது உங்களுக்கெல்லாம் பொறுக்கவில்லை. தவறு செய்த மாணவர்களை நீங்கள் தண்டிக்கவில்லை, அதை நேரில் பார்த்த மற்றொரு மாணவன் அவனுடைய பணக்கார அப்பனின் சட்டைக்குள் ஒளிந்து கொண்டு பொய் சொல்கிறான் அதையும் நீங்கள் கண்டுகொள்ளவில்லை. நேர்மையும், சக மாணவனைக் காட்டிக் கொடுக்காத மன உறுதியும் கொண்ட இந்தப் பிள்ளை சார்லியின் ஆன்மாவை நீங்கள் உங்கள் தண்டனையால் காயப்படுத்திவிட்டீர்கள். உங்களுடைய பாரபட்சமான முடிவை நான் எதிர்க்கிறேன். சார்லியின் வாழ்வை கெடுக்க உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. அவன் வெளியேறிவிட்டால் ஒரு உண்மையான ஆன்மா கூட் இங்கிருக்காது, எக்கேடு கெட்டுப் போங்கள் ஃப்க் யூ என்று உணர்ச்சிவசப்பட்டு நீளமான தன் உரையை முடித்ததும் மாணவர்கள் அனைவரும் கைத்தட்டினார்கள். சைலன்ஸ் என்று ட்ராஸ்க் சொல்லியும் அடங்காமல் நீண்ட நேரம் கைத்தட்டல் நீடித்தது. கமிட்டி மெம்பர்கள் ஒன்று கூடி இரண்டு முடிவு எடுத்தார்கள். ஒன்று இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுவது இனி வரும் காலங்களில் இம்மாதிரியான விஷயங்களை செய்ய கடுமையான கண்டனத்தை தெரிவித்து அடுத்து சார்லியை மீண்டும் சேர்த்துக் கொள்வதாகச் அறிவித்தனர்.

சந்தோஷத்துடன் கர்னலை அணைத்த சார்லி அவரை தோளில் அணைத்தபடி வெளியே செல்கிறான். அவர்கள் அருகில் வந்து நின்ற ஒரு மிஸ் கர்னலை மனதார பாராட்டுகிறாள். அவள் போட்டிருந்த செண்டின் பெயரை கர்னல் சொன்னதும் ஆச்சரியமாகிப் போகிறாள். அவளுடைய பெயரை தெரிந்து கொண்டு நாம் மீண்டும் சந்திக்கலாம் என விடைபெறுகிறார் கர்னல். சார்லி வீடு வரை சென்று அவரை வழியனுப்புகிறான். பேரப் பிள்ளைகளுடன் கனிவாக பேசிக் கொண்டிருந்த அவரை விழிகள் நிறைய கனிவாகப் பார்த்துவிட்டுத் தன் பள்ளிக்குத் திரும்புகிறான் சார்லி. மெல்லிய இசை சூழ திரைப்படம் நிறைவடைகிறது. ஆனால் அல் பாசினோ எனும் அற்புத நடிகரின் ஒன் மேன் ஷோவாக அதன் மணம் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது. செண்ட் ஆப் எ வுமன் திரைக்காவியமாக மனதில் ஆழப் பதிவாகிறது

நன்றி : http://www.thadagam.com/loadDeo.aspx?loadXML=moviereviews/scentofawoman.xml

  • கருத்துக்கள உறவுகள்

விரிவான விளக்கம் . பகிர்வுக்கு நன்றி

al pacino மிகவும் சிறந்த ஒரு நடிகர் .GOD FATHER,SCARFACE,CARLITOS WAY,DOG DAY AFTERNOON,GLEN GARY GLEN ROSE.

இவை மிக சிறந்தவை அதிலும் GLEN GARY GLEN ROSE மிக மாறுபட்ட ஒருபடம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.