Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வழக்கு எண் 18/9’- வித்தியாசமான சினிமா

Featured Replies

காதல் part -2??????

வழக்கு எண் 18/9

vazhakkuennmoviepreview_thumb1.jpg?imgmax=800

சில ஈரானிய படங்களைப் பார்க்கும் போது இது போல தமிழில் படங்கள் வராதா என்ற ஒரு ஏக்கம் சின்னதாய் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். இதோ அதை நிவர்த்தி செய்ய வந்திருக்கும் படம்.

தினமும் தினசரிகளில் பார்க்கும் செய்திதான் படத்தின் கதை. செய்தியாய் பாதிக்காத அக்கதை படமாய் விரியும் போது பகீரென்கிறது. முகத்தில் ஆசிட் ஊத்தப்பட்டு ரணகளமாய் ஆஸ்பத்திரிக்கு வந்து சேரும் வேலைக்கார பெண்ணிடமிருந்து கதை ஆரம்பிக்கிறது. அதே ஏரியாவில் ப்ளாட்பாரக்கடையில் வேலைப் பார்க்கும் வேலுவின் மீது அப்பெண்ணின் அம்மா சந்தேகப்பட, அவனைக் கூட்டி வந்து விசாரணை செய்கிறார்கள். இது ஒரு எபிசோட். இன்னொரு எபிசோட் அந்த பெண் வேலைப் பார்க்கும் வீட்டில் உள்ள பெண் தன்னுடன் ப்ளிரிட் செய்தவனும், ஆபாச வீடியோ எடுத்தவனுமான மேல் வீட்டுப் பையன் தான் செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறாள். இரண்டையும் விசாரித்த போலீஸ் என்ன செய்தது? கோர்ட்டுக்கு போகும் வழக்கு எண் 18/9ன் தீர்ப்பு என்ன என்பதுதான் கதை.

9_20120315_1419389527_thumb1.jpg?imgmax=800

ஸ்ரீ எனும் புதுமுகம் தான் ப்ளாட்பாரக்கடை இளைஞன். சட்டென நாம் எங்காவது பார்த்த முகம் போல ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஓரிரு இடங்களில் அபரிமிதமான அழுகையும், அப்பாவித்தனைத்தையும் தவிர பாராட்டக் கூடிய நடிப்பு. அவரின் நண்பனாய் வரும் கூத்து கலை சிறுவனின் நடிப்பும், அவ்வப்போது கொடுக்கும் பஞ்சுகளும் அட்டகாசம். மிக சீரியஸாய் போகும் படத்தில் கொஞ்சமே கொஞ்ச நேரம் ரிலாக்சேஷன்.

18_CP_still_jpg_954603f_thumb1.jpg?imgmax=800

கதாநாயகிகளாய் வலம் வரும் வேலைக்காரப் பெண் ஊர்மிளாவின் முகமும், அவருடய காஸ்ட்யூமும் அவ்வளவு இயல்பு. ஊர்மிளா வேலை செய்யும் வீட்டுக்கார பெண் மஹிமாவின் நடிப்பு ஓகே. மேல் வீட்டுப் பையனின் நடவடிக்கைகளைப் பார்த்து மயங்கிப் போய் என்ன செய்வது என்று புரியாமல் அவனுடன் ஈ.சி.ஆர்.போய் வரும் காட்சியிலும், தோழிகளுடன் அவனைப் பற்றி பேசும் காட்சியிலும் ஈர்க்கிறார்.

இன்ஸ்பெக்டர் குமரவேல். படத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் படு யாதார்த்தமான நடிப்பு. மனுஷம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அவ்வளவு இயல்பு. அவரது பாடி லேங்குவேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே படு சிறப்பு.

கேனான் 5டியில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஜய் மில்டன். இப்படத்திற்கு இந்த டெக்னாலஜி படு பாந்தமாய் பொருந்துகிறது. கிட்டத்தட்ட நம் பக்கத்து வீட்டில் நடப்பதை கூடவே இருந்து பார்ப்பது போன்றதொரு விஷுவல்கள். வாழ்த்துக்கள் விஜய். ப்ரசன்னாவின் பின்னணியிசை ஓகே. அந்த வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பாடல் மனதை தொடவில்லை.

VazhakkuEnn189MovieStills03_thumb1.jpg?imgmax=800

ஆரம்பக் காட்சிகளில் வரும் விபச்சாரப் பெண், அவளது தோழி, ப்ளாட்பாரக்கடை ஓனர், வேலைக்காரப் பெண்ணின் அம்மா, பணக்காரப் பெண்ணின் தோழிகள், அவளுடய அம்மா, அப்பா, போலீஸ் இன்ஸ்பெக்டர், முகம் காட்டாத அமைச்சர், என்று குட்டிக் குட்டிக் கேரக்டர்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். பல இடங்களில் வசனங்கள் கேரக்டர்கள் பேசுவதை விட வாய்ஸ் ஓவரில் சொல்லும் விஷயங்கள் சூப்பர். உதாரணமாய் இரண்டு விபச்சாரிகளும், பேசிக் கொண்டே நடக்க, அவர்களது பேச்சு எந்த ஏரியாவில் அவர்கள் இன்று நிற்க போவது என்றும் சாந்தி தியேட்டர் சப்வே என்று சொல்வது, இப்படி பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறது வசனங்கள். தற்கால வயது வந்த பெண்களின் ஆட்டிட்டியூடை பட்டவர்தனமாய் வெளிப்படுத்தியிருப்பது சூப்பர். பல இடங்களில் ஹீரோயின்களை விட அவளது தோழிகள் செம அழகாய் இருக்கிறார்கள்.இரண்டு தனித்தனி எபிசோடுகளாய் இருந்தாலும் அதை இணைக்கும் காட்சிகளை வைத்திருக்கும் இடங்கள் அருமை.

VazhakkuEnn189_thumb1.jpg?imgmax=800

படம் நெடுக ப்ள்ஸ்களே நிறைய இருந்தாலும் ஆரம்பக் காட்சியில் தெரியும் லேசான டாக்குமெண்டரித்தனமும், க்ளைமாக்ஸில் வேலைக்கார ஹீரோயின் எடுக்கும் முடிவுக்கான தைரியத்தை எங்கிருந்து பெற்றாள்? ஹீரோவின் ப்ரெண்டு சொன்னதால் உடனே நம்பிவிடுவாளா? எங்கப்பா அப்படி எங்களை வளர்க்கவில்லை என்று சொல்லும் போது தான் அவளுக்கு அப்பா யார் என்ற கேள்வி எழுகிறது. ஒரே ஒரு காட்சியில் அவளுடய அம்மா மத்தவங்களுக்கு உதவி செய்தே இறந்து போனார் என்று புலம்புவதைத் தவிர வேறேதும் காட்சிகள் இல்லாத பட்சத்தில் புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. மற்றபடி தமிழ் சினிமா சந்தோஷமாய், தைரியமாய், திமிருடன் காலரை தூக்கிக் கொண்டு திரிய வைத்திருக்கும் பாலாஜி சக்திவேலுக்கு நன்றிகள் பல. இப்படங்கள் நன்றாக ஓடினால்தான் நல்ல படங்கள் நமக்கு கிடைக்கும்.

வழக்கு எண்:18/9 – அருமை… அருமை.. அருமைய்யா

http://www.cablesank...9.html?spref=fb

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கு எண் 18/9 - சிறப்பு விமர்சனம்

05-vazhakku-enn-movie-preview.jpg

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ், மிதுன் முரளி, முத்துராமன், சின்னசாமி

இசை: பிரசன்னா

ஒளிப்பதிவு: விஜய் மில்டன்

தயாரிப்பு: சுபாஷ் சந்திர போஸ் & ரோனி ஸ்க்ரூவாலா

எழுத்து - இயக்கம்: பாலாஜி சக்திவேல்

சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகிவிடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9.

தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தப் போகிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்காமல், சத்தமின்றி அந்த வேலையைச் செய்யும் மிகச் சில படைப்பாளிகளுள் ஒருவர் பாலாஜி சக்திவேல். படங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதில் நம்பிக்கையில்லாத, ஜீவனுள்ள படைப்புகளைத் தருவதை மட்டுமே பிரதானமாகக் கொண்ட இயக்குநர்.

தனது முந்தைய காதல், கல்லூரி படங்களை விட பல மடங்கு உயர்வான ஒரு படைப்பை தமிழ் ரசிகர்கள் கண்முன் வைத்திருக்கிறார்.

காதலும் அந்த உணர்வும் எல்லாவுயிர்க்கும் பொதுவானது. அந்தஸ்துகளுக்கு அப்பால் உயர்ந்து நிற்பது என்பதையும், சட்டம் ஏழைகளுக்கு எப்படி எட்டாத உயரத்தில் நிற்கிறது என்ற பேருண்மையை வெகு எளிதாகவும் சொல்லியிருக்கிறார்.

கதையின் முடிவில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், ஒரு துயருற்ற மனதுக்கு இளைப்பாறக் கிடைக்கும் சிறு மேடை போல அந்த முடிவு அமைந்திருப்பதால் பலத்த கைத்தட்டலுடன் வரவேற்கிறார்கள் ரசிகர்கள்.

கதை?

ஆசிட் வீச்சில் முகம் வெந்து துடித்தபடி மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள் ஒரு வேலைக்காரப் பெண்ணை. போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டுக்கு எதிரே நடைபாதைக் கடையில் வேலை செய்யும் இளைஞன் மீது சந்தேகம் என்கிறாள் பெண்ணின் தாய். விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணையில் இளைஞனின் கண்ணீர்க் கதையும் அந்த வேலைக்காரி மீதான காதலும் மட்டுமே தெரியவருகிறது.

அப்போதுதான், அந்தப் பெண் வேலை செய்த வீட்டு எஜமானியின் மகள் வருகிறாள். வேறு ஒரு இளைஞனை விசாரிக்க வேண்டும் என அவள் புகார் கொடுக்க, விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணை வேலைக்காரிக்கு நீதியைப் பெற்றுத் தந்ததா என்பது கொஞ்சம் சினிமா, கொஞ்சம் Poetic Justice கலந்த க்ளைமாக்ஸ்!

இரண்டு கோடுகளாய் பயணிக்கும் இந்தக் கதை, ஒரு புள்ளியில் இணைவதே தெரியாமல் இணைகிறது. திரைக்கதையில் அத்தனை நேர்த்தி.

ஹீரோவின் ப்ளாஷ்பேக் தர்மபுரியின் வறட்சி மிக்க கிராமத்தில் தொடங்குகிறது. அந்த மனிதர்கள், அவர்களின் துயர்மிகு வாழ்க்கை, மண்மூடி மறைந்து போகும் அவர்கள் வாழ்க்கை ஒரு கண்ணீர் அத்தியாயம்.

பெற்றோர் இறந்ததைக் கூட மறைத்துவிடும் அந்த முறுக்குக் கம்பெனி முதலாளி, நடைபாதையில் பசி மயக்கத்தில் வீழ்ந்து கிடப்பவனை எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்ல, அவன் பசி தீர்த்து, வேலையும் வாங்கிக் கொடுக்கும் ஒரு செக்ஸ் தொழிலாளி, மெல்ல மெல்ல உயிர் விட்டுக் கொண்டிருக்கும் கிராமத்து கட்டைக் கூத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி வரும் சின்னசாமி, நொடியில் குணம் மாறும் அந்த தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை முதலாளி, மகளைக் காக்க எல்லோர் மீதும் எரிந்து விழும் வயதான வேலைக்காரி... இவர்கள் அனைவரையும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவர்களுக்குப் பின்னாள் உள்ள கதைகள் நமக்குத் தெரிவதில்லை. காரணம் நமது மனிதாபிமானம் என்பதே ஒரு demonstration effect என்பதால்தான். அடுத்தவர் மெச்சிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது மனிதாபிமானங்களின் உள்ளார்ந்த நோக்கம் இல்லையா! இந்த நோக்கம் இல்லாமல் அணுகினால் நம்மாலும் வேலு, ஜோதி, சின்னசாமிகளைக் காண முடியும்!

இவர் நாயகன், அவர் நாயகி என்றெல்லாம் இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை இந்தப் படத்தில். காரணம், ஒரு நிமிடம் வந்து செல்லும் அந்த பஞ்சர் ஒட்டும் பாத்திரம் கூட மனசுக்குள் வந்துவிடுவதுதான். நடித்த அனைவருமே புதுமுகங்கள். ஆனால் அவர்களின் நடிப்பு படத்தையே தூக்கி நிறுத்துகிறது.

நடைபாதை சாப்பாட்டுக்கடையில் வேலை பார்க்கும் வேலுவாக வரும் ஸ்ரீ, வேலைக்காரப் பெண் ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா, பணக்காரப் பையனாக வரும் மிதுன் முரளி, எஜமானி மகளாக வரும் மனீஷா நால்வரையும் பிரதான பாத்திரங்களில் ஜொலிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

கூத்துக் கலைஞனாக வரும் சின்னசாமி அசத்தியிருக்கிறார்.

ஆனால் இவர்கள் அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமன். தமிழ் சினிமாவில் இதுவரை இத்தனை இயல்பாக போலீஸ் வேடத்தைச் செய்ததில்லை.

காட்சிகளை மீறி ரசிகனின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற பிரயத்தனம் துளிகூட வசனங்களில் இல்லை. அந்த பாத்திரம் தன் இயல்பில் பயன்படுத்தும் சொற்களே வசனங்கள்!

சதா சர்வகாலமும் செல்போனை நோண்டிக் கொண்டே இருக்கும் இளம் பெண்கள், இளைஞர்களுக்கு இந்தப் படம் சொல்லும் எச்சரிக்கை செய்திகள் ஏராளம்.

பார்ப்பவருக்கு, இது பக்கத்து தெருவில் நடக்கும் சமகால நிகழ்வு என்பதை உணர்த்தும் அளவு உறுத்தலில்லாத ஒளிப்பதிவு. அதுவும் ஸ்டில் கேமிராவில். விஜய் மில்டன் பாராட்டுக்குரியவர்.

முதல் முறையாக எந்த பாடலுக்கும் பின்னணி இசை இல்லை. வெறும் பாடல் மட்டும்தான். 'ஒரு குரல் கேட்குது பெண்ணே...' மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் ஈரானிய, மெக்சிகன் படங்களை உதாரணத்துக்கு தேடும் அறிவு ஜீவிகளின் வேலையைக் குறைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்!

இந்த வழக்கால் தமிழ் சினிமா தலை நிமிர்ந்தது!

http://tamil.oneindi...iew-153507.html

வழக்கு எண் 18/9

img1120507029_1_1.jpg

வழக்கு எண் 18/9 -ன் ஒருவ‌ரி கதை என்று பார்த்தால் மிக எளிமையானது. முகத்தில் ஆசிட் வீசப்பட்ட வேலைக்கார பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு வருகிறார்கள். அவள் வேலை பார்க்கும் அபார்ட்மெண்டுக்கு அருகில் பிளாட்பார கடையில் வேலை பார்க்கும் வேலு என்பவன் மீது சந்தேகப்படுகிறாள் பெண்ணின் தாய். அவனை அழைத்து விசா‌ரிக்கிறது போலீஸ். அவன் யார், எப்படி சென்னை வந்தான் என்று போகிறது முதல் பாதி.

அப்பெண் வேலைப் பார்க்கும் வீட்டிலுள்ள பிளஸ் டூ மாணவி இந்த வழக்கு தொடர்பாக அதே அபார்ட்மெண்டில் உள்ள இன்னொரு இளைஞனை விசா‌ரிக்க வேண்டும் என்று போலீஸிடம் வருகிறாள். அவள் ஏன் அந்த இளைஞனை சந்தேகப்படுகிறாள் என்பது இரண்டாம் பகுதி. இந்த இரண்டு கதைகளும் கிளைமாக்ஸில் ஒன்றிணைகின்றன.

இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று பார்த்தால், இது ஒரு சினிமா என்று தோன்றாத அளவுக்கு ஒன்ற வைத்த அந்த யதார்த்தம். நடிப்பு, எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் இணைந்து இந்த யதார்த்தத்தை உருவாக்குகின்றன. எல்லோருமே அந்தந்த கதாபாத்திரமாகவே மாறியிருப்பதால் தனித்தனியே நடிப்பு பற்றி சொல்ல ஏதுமில்லை. என்றாலும் இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமன் இன்ப அதிர்ச்சி. டயலாக் டெலிவ‌ரி, பாடிலாங்வே‌ஜிலிருந்து எல்லாவற்றிலும் அட்சர சுத்தம். பின்னிட்டார்.

இதுபோன்ற திரைக்கதையை மிக அபூர்வமாகதான் பார்க்க முடியும். படத்தின் சில சிறப்புகளை பார்க்கலாம்.

1. இரண்டு பேர் இரண்டு கதைகளை சொல்கிறார்கள். முதல் கதையில் முன்னேற்றமில்லாத கிராமம், ‌ரியல் எஸ்டேட்டும், சிறப்பு பொருளாதார மண்டலங்களும் ஏழை விவசாயிக்கு நிலமில்லாமல் செய்து அவனை அடிமையாக்குவது, முறுக்கு கம்பெனியின் கொத்தடிமை முறை, கூத்துக் கலைஞர்களின் ஒளியிழந்த வாழ்க்கை என்று சமூகத்தின் வறுமைமுகம் காட்டப்படுகிறது. இரண்டாவது கதையில் வறுமையே தெ‌ரியாத வர்க்கத்தின் வாழ்வு மீதான கூத்தடிப்புகள். கதையின் தேவையை முன்னிறுத்தி சொல்லப்பட்டவை என்பதைத் தாண்டி இயக்குன‌ரின் சமூகப் பார்வை இந்த இரு கதைகளிலும் வெளிப்படுகிறது.

2. இரண்டு கதைகளிலும் சோகத்தை சாத்துக்குடியாகப் பிழிவதற்கு அதிக வாய்ப்பிருந்தும் முடிந்தவரை அதனை இயக்குனர் தவிர்த்திருக்கிறார். முக்கியமாக கிளைமாக்ஸில். கிளைமாக்ஸை காவிய சோகமாக்கி கண்ணீரை பிழிந்திருந்தால் காதல் போன்றொரு எஃபெக்ட் கிடைத்திருக்கும். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது. எளிமையான படம் என்றொரு கருத்தை இது தோற்றுவிக்கலாம். ஆனால் சோகத்தை பீக்கிற்கு கொண்டு போகாத இந்த எளிமைதான் இந்தப் படத்தின் பலமே.

3. வேலுக்கு உதவும் பாலியல் தொழிலாளி இனி குடிக்கப் போவதில்லை என்பதை அவர் காலி பிளாஸ்டிக் டம்ளரை மிதித்து செல்லும் ஷாட்டில் சொல்லிவிடுகிறார் இயக்குனர். இதேபோன்ற சிம்பாலிக் ஷாட் படத்தில் அதிகமுள்ளது. ‌ரிசார்ட்டில் மனிஷா தனது உடம்பைப் பார்த்துக் கொள்ளும் காட்சிக்கு முன்னோடியாக அவளை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே கண்ணாடி முன் பட்டனை கழற்றி அவள் அழகு பார்க்கும் காட்சியை வைத்திருக்கிறார் இயக்குனர்.

img1120507029_2_1.jpg

அதேபோல் கார் ‌ரிப்பேராகி நிற்க, அந்த நேரத்தில் மனிஷா செல்ஃபோனில் இருக்கும் தனது படத்தைப் பார்க்கிறாள். அவள் பார்ப்பதற்காகதான் கார் ‌ரிப்பேரான காட்சியை இயக்குனர் வைத்தார் என்று தோன்றக் கூடாது என்பதற்காக ஆரம்பக் காட்சியிலேயே கா‌ரின் கண்டிஷனை இயக்குனர் சொல்லிவிடுகிறார். மேலும் வேலுவின் கதையிலேயே அவன் காரைத் தள்ளும் காட்சி வருவதால் இயக்குனர் இதற்காகதான் இந்த‌க் காட்சியை வைத்தார் என்ற எண்ணம் பார்வையாளன் மனதிலிருந்து முற்றிலுமாக துடைக்கப்பட்டு விடுகிறது. இப்படி படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் காரண கா‌ரியங்களோடு பின்னி பிணைந்திருக்கிறது.

4. கூத்துக்கார சின்னசாமி சினிமா ஹீரோவின் டயலாக்கை சரளமாகச் சொல்ல ஹீரோ தடுமாறுகிறார். நிகழ்த்துக்கலை கலைஞர்களின் திறமையையும், சினிமாக் கலைஞர்களின் ஃபாஸ்ட்புட் திறமையையும் இயக்குனர் இதில் சொல்லாமல் சொல்லிச் செல்கிறார்.

5. கிளைமாக்ஸ். அப்பாவி இளம் பெண்ணால் ஆசிட் அடிக்க முடியுமா என்று கிளைமாக்ஸ் விவாதப் பொருளாகியிருக்கிறது. அப்பா எங்களை அப்படி வளர்க்கலை என்று அவள் சொல்வதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஏற்கனவே சொன்னபடி இந்த‌க் கிளைமாக்ஸை காவிய சோகமாக்கியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் தமிழ் சூழலில் கலெக்சன் கம்மியாகியிருக்கும். இது இயக்குன‌ரின் தவறல்ல. இரண்டாவது அவளின் அப்பா அடுத்தவர்களுக்காக உழைத்தவர் என்றொரு வசனம் படத்தில் வருகிறது. மேலும் பாடல் காட்சியொன்றில் அவளது அப்பா படித்த புத்தகங்கள் என்று கம்யூனிச புத்தகங்கள் சில காட்டப்படுகின்றன. இந்த இரண்டு காட்சிகளுமே இந்த கேள்விக்கான ஜஸ்டிபிகேஷனுக்குப் போதுமானவை. அதையும் தாண்டி ஆசிட் பாட்டிலை பொதிந்து எடுத்து வந்த பத்தி‌ரிகையில் எம்எல்ஏ-வை கத்தியால் குத்திய பெண்ணின் செய்தி இடம்பெற்றிருக்கிறது. இது வடக்கே நடந்த உண்மைச் சம்பவம். இதற்குப் பிறகும் ஆசிட்டால் அடிப்பாளா என்ற கேள்வி அர்த்தமற்றது. நாடகீயமாகக் கூடிய ஒரு காட்சிக்கு இதைவிட நுட்பமான ஜஸ்டிபிகேஷனை எப்படி எதிர்பார்க்க முடியும்? (அந்தப் பாடல் காட்சி வேலு கனவு காண்பது போல் எடுக்கப்பட்டிருக்கிறது. அவன் ஜோதியின் வீட்டிற்குள் சென்றதேயில்லை. அப்படியிருக்க ஜோதியின் அப்பா படித்தப் புத்தகங்கள் எப்படி அவனுக்கு‌த் தெ‌ரியும்? அது அவன் கனவில் வர சாத்தியமில்லை என்பது கொஞ்சமே கொஞ்சம் லா‌ஜிக் சறுக்கல்)

5. அற்புதமான வசனம் என்று சொல்லக் கூடிய எதுவும் படத்தில் இல்லை. கதாபாத்திரங்கள் அவர்கள் இயல்புப்படி பேசுகிறார்கள். அதேநேரம் அந்த இயல்பான வசனங்களே அரங்கத்தில் சி‌ரிப்பொலியை கிளப்புகிறது. உதாரணமாக பஞ்சர் ஒட்டுகிறவன், ஏய்... அதான் அவங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் என்று சொல்லும்போது சி‌ரிப்பு அதிர்கிறது.

இதேபோல் படம்குறித்து மேலும் சிலவற்றை சொல்லலாம். இசையில்லாத இரண்டு பாடல்கள், ஒரு கதையின் காட்சிகள் இன்னொரு கதையில் ஊடுருவி நிற்பது, நேர்த்தியான எடிட்டிங், சில நொடிகள் வரும் கதாபாத்திரமும் தனித்தன்மையுடன் சித்த‌ரிக்கப்பட்டிருப்பது, செயற்கை எட்டிப் பார்க்காத கலை இயக்கம்...

பார்வையாளனுக்கு ம‌ரியாதை தந்து எடுக்கப்பட்டிருக்கும் நேர்மையான படம் இது. இன்னும் சில வருடங்களுக்கு தமிழ் சினிமாவின் முகமாக இப்படம் இருக்கும். வெல்டன் பாலா‌ஜி சார்.

http://tamil.webduni...120507029_2.htm

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கு எண் 18/9: மீடியாவைக் கலங்க வைத்த பாலாஜி சக்திவேல்!

08-vazhakku-enn-sucess-meet3-3.jpg

பட்ஜெட்டில் சின்ன படமாக இருந்தாலும், படைப்புத் தரத்தில் இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் பெரிய படமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9.

இத்தனைக்கும் இந்தப் படத்தில் நடித்தவர்களில் ஒருவர் கூட தெரிந்த முகமில்லை. பலருக்கு கோடம்பாக்கமே ரொம்ப புதுசு. சேலத்திலும் தர்மபுரியிலும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த கிராமத்தினரை அழைத்து வந்து வழக்கு எண்ணின் பாத்திரங்களாக உலவவிட்டிருந்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

படத்தைப் பார்த்த அத்தனைபேரும் தங்களையும் மறந்து எழுந்து நின்று கைத்தட்டி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக இந்த மாதிரி படங்களுக்கு பாராட்டுகள் குவியும். பாக்ஸ் ஆபீஸ் நிறையாது. ஆனால் விதிவிலக்காக பாக்ஸ் ஆபீஸிலும் படு திருப்தி. இந்த சந்தோஷத்தை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர் பாலாஜி சக்திவேலும் தயாரிப்பாளர் லிங்குசாமியும்.

இந்த சந்திப்புக்கு, படத்தில் நடித்த அத்தனை பேரையும் வரவழைத்து மேடையில் அமர வைத்தனர். பெரும்பாலும் மிக எளிய மனிதர்கள். சென்னையின் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றின் செய்தியாளர் சந்திப்புக்கு வந்ததே அவர்களுக்கு பெரும் கனவாகத்தான் இருந்திருக்கிறது, மைக் பிடித்து பேசிய பின்னும் கூட!

படத்தைப் போலவே, இந்த சந்திப்பும் உணர்வுப்பூர்வமானதாக, கண்கலங்க வைப்பதாக அமைந்துவிட்டது.

படக்குழுவினர் ஒவ்வொருவருமே "எங்களுக்கு புது வாழ்க்கை அமைத்து கொடுத்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு நன்றி" என்று கண்ணீர் விட, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் பாலாஜி சக்திவேல்.

தன் முறை வந்தபோது, "பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாம் நான் அவ்வளவாக பேசுவது இல்லை. படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம் . உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. இப்போது நான் நன்றி சொல்லும் விதம் தமிழ் மரபுக்கு முரணாகவே இருந்தாலும் கூட... " என்று சொல்லி நிறுத்தியவர்,

"லிங்குசாமி.. எழுந்து அங்கே போய் நில்" என்றார். லிங்குசாமி ஒன்றும் புரியாமல் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் வந்து நிற்க அனைவரது முன்னிலையில், பாலாஜி சக்திவேல் கீழே விழுந்து வணங்கினார். லிங்குசாமியும் பத்திரிகையாளர்களும் திகைத்து திக்குமுக்காடிவிட்டனர். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். " இதற்கு மேல் எனக்கு என்ன செய்வது, சொல்வதென்று தெரியவில்லை" என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டார் பாலாஜி சக்திவேல்.

அறைக்குள் ஒரு சில வினாடிகள் கனத்த மவுனம். சில செய்தியாளர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. மேடைக்குப் போய் அமர்ந்த லிங்குசாமியின் கண்களில் கண்ணீர் (ஒருவகையில் லிங்குசாமிக்கே குரு பாலாஜி சக்திவேல்தான். இவர்தான் லிங்குசாமியை இயக்குநர் வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்த்துவிட்டவர், உலக சினிமாவை அறிமுகப்படுத்தியவராம்!!).

இறுதியாக பேசிய லிங்குசாமி " படம் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்று இருக்கிறது என்றால் அதற்கு பத்திரிகையாளர்கள்தான் காரணம். இயக்குனர்களுக்கு என்று தனியாக ஒரு ஷோ போட்டோம். எல்லா இயக்குனர்களும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

அவர்களை அடுத்து பத்திரிகையாளர்களாகிய நீங்கள் என்ன கூற போகிறீர்களோ என்ற பயந்து கொண்டே, உங்களுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே படத்தினை போட்டு காண்பித்தோம். படம் முடிந்த உடன் நீங்கள் எழுந்து நின்று கை தட்டினீர்கள்.. சிலர் என்னிடம் வரும்போதே அழுதுவிட்டார்கள். அப்போதே எனக்கு தெரிந்து விட்டது படம் கண்டிப்பாக வெற்றி என்று.

'வழக்கு எண் 18/9' படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை மேலும் மேலும் இது போன்ற பல படங்களை தயாரிக்க தூண்டியுள்ளது. கண்டிப்பாக தயாரிப்பேன்.

'வழக்கு எண் 18/9' திரைப்படம் கண்டிப்பாக பல்வேறு விருதுகளை வெல்லும். அதற்கு காரணம், பத்திரிகையாளர்கள் படம் பற்றி எழுதிய எழுத்துக்கள்தான். அத்தனை விமர்சனங்களும் ஒரே பேனாவால் எழுதப்பட்டதைப் போன்று அமைந்திருந்தன. என் வாழ்நாளில் இத்தனை உயர்வான விமர்சனங்களை வேறு எந்தப் படத்துக்கும் படித்ததில்லை. எத்தனை விருது வென்றாலும் அவை அனைத்தையும் நான் இந்த பத்திரிகையாளர்கள் மத்தியில்தான் பகிர்ந்து கொள்வேன்," என்றார்.

எத்தனையோ செய்தியாளர் சந்திப்புக்குப் போயிருக்கிறோம்... ஆனால் இந்த வழக்கு எண் சந்திப்பு, படத்தைப் போலவே 'எமோஷனல்!'

http://tamil.oneindia.in/movies/specials/2012/05/balaji-sakthivel-prostrates-thanks-153649.html

  • 2 weeks later...

நேற்று லண்டனில் இருந்து வந்த பழைய நண்பனுடன் போய் பார்த்தேன் .

கதையும் அதை சொன்ன விதமும் மிக அருமை .இருந்தும் படம் முடிய ஏதோ முற்றுப்பெறாத உணர்வு.

வெளியில் வரும்போது யாரும் பார்க்கா விதத்தில் கண்ணீரை துடைத்துக்கொண்டுவந்தேன் .

பிக் சலுயுட் உங்களுக்கு பாலாஜி சக்திவேல்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பட‌ம் தான் ஆனால் முடிவு தான் சினிமாத் தனமாக அமைந்து விட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.