Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் விட்டுச் சென்ற இடத்திலிருந்து…

Featured Replies

வது மட்டும் தான் நாங்கள், பயணம் மட்டும் தான் எங்களது. ஆனால், எமது பாதையும், அதன் செல்திசையும், அதன் முடிவிடமும் - வேறு ஆட்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது, வேறு ஆட்களால் - வெளி ஆட்களால். 'புதினப்பலகை'க்காக தி. வழுதி.

தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மையை உறுதி செய்வதற்கான போராட்டம் ஒரு தொடர் அஞ்சல் ஓட்டம் போன்றது. அது மிக நீண்ட ஒரு பாதையில் பயணிக்கின்றது.

வகைவகையான புவியமைவுத் தன்மைகளுக்கு ஊடாக, விதவிதமான காலநிலைச் சூழல்களை ஊடறுத்து, பல பத்தாண்டு காலங்களைக் கடந்து, அந்தப் பாதை செல்கின்றது.

எங்களுக்கு முன்னாலும் பலர் இந்தப் போராட்டக் கோலைக் கொண்டு ஓடினார்கள், இப்போது நாங்கள் ஓடுகிறோம்.

தொடக்க ஓட்டக்காரர்களாய் களமிறங்கிய பலர் இப்போது உயிரோடு கூட இல்லை, இப்போது ஓடுகின்ற எங்களில் பலர், ஓட்டம் தொடங்கியபோது பிறந்திருக்கவே கூட இல்லை.

சிறு வயதிலேயே இந்த ஓட்டத்தில் இணைந்து இன்றும் ஓடுகின்றவர்களும் உண்டு, மிக நீண்ட காலமாக ஓரத்தில் காத்திருந்துவிட்டு, பின்னாளில் வந்து இணைந்தவர்களும் உண்டு.

உண்மையான பற்றோடும் திறமையோடும் ஓட்டத்தில் இணைந்தவர்களும் உண்டு, வேறு செல்வாக்குகளோடும் பழம் பெருமைகளோடும்; ஓட வந்தவர்களும் உண்டு.

ஓட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற வேட்கையோடு ஓடியவர்களும் உண்டு, விரைந்து ஓடி களைத்து விழுந்துவிடக்கூடாது என நிதானத்தோடு ஓடியவர்களும் உண்டு.

ஓடிக் களைத்து இடையிலேயே ஓய்விற்குச் சென்றுவிட்ட வீரர்களும் உண்டு, விவேகத்தோடு இன்றும் தொடர்ந்தும் ஓடுகின்ற சான்றோரும் உண்டு.

இது வெல்ல முடியாத ஓட்டம் என எப்போதோ மதிப்பிட்டு ஒதுங்கிக்கொண்டோரும் உண்டு, வெல்லமுடியாதெனினும் ஓடியே தீரும் திடம்கொண்டு இப்போதும் விரைவோரும் உண்டு.

ஓட்டத்தின் நடுவே நுட்பங்களை மாற்றி நின்று நிலைக்கும் தீரர்களும் உண்டு, மாறாத மனதோடு மட்டுமே ஓடி மடிந்து வீழ்ந்து போன மறவர்களும் உண்டு.

கல்லும், சகதியும், கொல்லும் கிருமிகளும் நிறைந்த கடினப் பதைகள் வழியாக, கொடிய வெய்யிலிலும் சிலர் ஓடினர், பசும் புற்தரைகளில், பொன் மாலைப் பொழுதுகளில், இளந் தென்றலின் வருடலோடும் சிலர் ஓடினர்.

அணியின் மீது கொண்ட ஆத்மார்த்த பக்தியினால், தம் அடையாளத்தையே மறைத்து அற்புதங்கள் செய்து ஓடி முடிந்தனர் சிலர், தம் அடையாளத்தைப் பதிவதற்காகவே அணியில் பணிகள் ஏற்று அபிநயங்கள் புரிந்து நிலைக்கின்றனர் வேறு சிலர்.

தமக்குள் ஒருங்கிணைந்து, பொருத்தமான தடங்களைப் பகிர்ந்தெடுத்து, ஒத்திசைவாக ஓடிய உத்தமர்களும் உண்டு, சக வீரர்களின் கால்களையே இடறிவிட்டு, பெருமைகளைத் தாமெடுத்தும் பழிகளைப் பிறர்க்களித்தும் ஓடிய வல்லவர்களும் உண்டு.

ஓட்டத்தின் நடுவே தடம் மாறிப் போய், மாற்று அணி மாறி ஓடிய நண்பர்களும் உண்டு, அவ்வாறு, அணிமாறிய போதும், மீண்டும் எமதணிக்கே வந்து, இப்போதும் ஓடும் நல்லுள்ளங்களும் உண்டு.

முன்னாலே ஓடியோர் கடக்க இயலாதுபோன தூரங்களையும், பின்னாலே வந்த நிவர்த்தி செய்து தாமும் முன்னேறிய வீரர்களும் உண்டு, முன்னாலே ஓடியவர்கள் எடுத்துக் கொடுத்த முன்னேற்றங்களையே பின்னிறங்கச் செய்யும் உத்திகளைக் கைக்கொண்ட சூரர்களும் உண்டு.

ஓரத்தில் நின்று ஓட்ட வீரர்களுக்கு நீர் வார்த்துத் தென்பு தந்த பங்காளரும் உண்டு, ஓட்டத்தையும் வீரர்களையும் நம்பி வாழ்த்துரைத்து ஆசீர்வாதங்கள் தந்த ஆத்மாக்களும் உண்டு.

எங்கள் ஓட்டம் ஒரு மிக நீண்ட பாதையில் பயணிக்கின்றது.

நாங்கள் ஓடி முடிக்காதுவிட்டால் - எங்களது காலத்தில் அது முடியாது போனால் - நாளை வேறு வீரர்கள் ஓடுவார்கள்: இப்போது வெளியில் நிற்பவர்களும் இணையக் கூடும், இன்னும் இந்த மண்ணில் பிறக்காதவர்களே கூடத் தொடரக் கூடும்.

எவர் இருந்தாலும் இல்லாது போனாலும், இந்த ஓட்டம் தொடர்ந்தது, இன்னும் தொடர்கின்றது, ஏனென்றால், இந்த ஓட்டம், எந்த ஒரு காலத்திலும், தனி ஒருவருக்குச் சொந்தமானது அல்ல. தனி ஒருவருக்குச் சொந்தமானதாக எப்போதும் இருக்கப்போவதும் இல்லை. இது எம் எல்லோராலும், எம் எல்லோருக்குமாகவும் நடத்தப்படுகின்ற ஓட்டம். எமக்குப் பின்னாலே வாழப்போகின்றவர்களுக்காகவும் நடத்தப்படுகின்ற ஓட்டம்.

எவர், எங்கே, எப்போது, எவ்வாறு இந்த ஓட்டத்தில் இணைந்திருந்தாலும், முடிவிடத்தை யார் சென்று அடைகின்றார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல, எமது ‘போராட்டக் கோல்’ உரிய முடிவிடத்தைச் சென்று அடைய வேண்டும் என்பது தான் பொருட்டானது.

இது ஒரு நீண்;ட வரலாற்று ஓட்டம். நாம் ஒவ்வாருவருமே இந்த ஓட்டத்தின் நாயகர்கள். அரசியல் - பொருளியல் - சமூகவியல் - சட்டவியல் - ஊடகவியல் எனத் தொடர்ந்து வரிசைப்படும் எந்த இயலை நாம் செய்தாலும் - நாம் ஒவ்வாருவருமே இந்த ஓட்டத்தின் நாயகர்கள்.

இந்த ஓட்டத்தில், எம் ஒவ்வொருவரது பணிநிலைகளையும் வரலாறு தான் தீர்மானிக்கின்றது. எம் ஒவ்வொருவருக்கும் - அவரவரது தன்னியல்பு மற்றும் வல்லமையைப் பொறுத்தும், அவரவர் இருக்கும் சூழல் மற்றும் காலத்தைப் பொறுத்தும், பொருத்தமான பணிகளை வரலாறு வழங்குகின்றது. இனியும் புதுப் பணிகளை அது வழங்கும். புதிய ஆட்களுக்குப் பழைய பணிகளும் வழங்கப்படலாம், பழைய ஆட்களே புதிய பணிகளிலும் அமர்த்தப்படலாம்.

இங்கே - அடுத்தவர்களது பணிகளின் ஆழமான அர்த்த பரிமாணங்களும் மகிமையும் எமது புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கு அப்பாலேயும் இருக்கக்கூடும், அதற்காக, அந்தப் பணிகள் உப்புச்சப்பு அற்றவை என்ற முடிவுக்கோ, அல்லது அந்த ஆட்கள் நம்பகத்தன்மை அற்றவர்கள் என்ற தீர்மானத்திற்கோ எவரும் வந்துவிட முடியாது.

எல்லோராலும் எல்லோரது பணிகளின் தாற்பரியங்களையும் புரிந்துகொள்ள முடியும் என்றும் இல்லை, அவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால், ‘இந்தப் போராட்டத்தில் எனது இடமும் எனக்கான பணிகளும் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு என்னோடு கூட ஓடும் சக போராளிகளின் பணிகளும் இடங்களும் முக்கியமானதாகத் தான் இருக்கும்’ என்பதை ஏற்று மரியாதை செய்யும் பக்குவமும், தேவையான ஒத்துழைப்பை வழங்கும் கூட்டுப் பொறுப்புணர்ச்சியும் எம் எல்லோரிடமும் இருக்க வேண்டும். குறிப்பாக - மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் நாயகர்களிடம் அது இருக்க வேண்டும். ஏனென்றால், கூட்டுப் பொறுப்புணர்ச்சி என்பதுதான், மக்கள் சேவகர்களுக்கு - மக்களின் நாயகர்களுக்கு - இருக்கவேண்டிய அதியுச்ச அடிப்படைத் தகுதி.

இந்த ஓட்டத்தில் - ‘நானா, நீயா முதன்மை?’ என்று புடுங்குப்படுவதற்கு எதுவுமேயில்லை. ஏனென்றால் - நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும், ஏனென்றால் - ஓடுவது மட்டும் தான் நாங்கள், பயணம் மட்டும் தான் எங்களது. ஆனால், எமது பாதையும், அதன் செல்திசையும், அதன் முடிவிடமும் - வேறு ஆட்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது, வேறு ஆட்களால் - வெளி ஆட்களால்.

எமது இனத்தின் அரசியலுரிமைப் போராட்டத்தைச் சூழ்ந்து பிணைந்திருக்கும் அனைத்துலகப் பரிமாணங்களுக்கே நான் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பேன்.

Ra%20-Sampanthan.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியின், இந்த ஆண்டிற்குரிய தேசிய மாநாட்டில் தலைமைப் பேருரை நிகழ்த்திய இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் - ‘தமிழரசுக் கட்சியே தலையாய கட்சி’ எனத் தகுதிப்படுத்தியது தொடர்பில் - மாறுபட்ட கருத்துக்களும், அதனை அவ்வாறு ஏற்றுக்கொள்ளுவது தொடர்பான தயக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், தான் தலைமையேற்றுள்ள கட்சியின் மாநாட்டில், அந்தக் கட்சியைப் பற்றி அவர் கூடக் குறையப் பேசியிருக்கிறார், அப்படித் தான் அங்கு அவர் பேசவும் வேண்டும். அதற்காக நான் நிம்மதியிழக்க முடியாது.

ஆனால், அந்தப் பேருரையில் எனது ஆர்வக் கவனத்தை ஈர்த்துள்ள பகுதி - எமது ஓட்டத்தின் பாதையையும், திசையையும், முடிவிடத்தையும் தீர்மானிக்கும் அந்த வெளி ஆட்கள், இந்தப் பேருரையின் எந்தப் பகுதி மீது அக்கறை காட்டுவார்களோ, அந்தப் பகுதி.

2009, மே 18ஆம் நாளுக்குப் பின்னரான இலங்கைத் தமிழரது வாழ்வில், 2012, மே 27 அன்று, மட்டக்களப்பில் இரா. சம்பந்தன் ஆற்றிய பேருரை ஒரு வரலாற்று ஆவணம் என்பது என் கருத்து. இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் தற்கால அரசியற் கொள்கை நிலைப்பாடு தொடர்பான ஒரு துல்லியமான விளக்கம் அது.

நண்பர் யதீந்திரா குறிப்படுவார் - “செல்வநாயகத்தின் உண்மையான வாரிசு யார் என்று தெளிவாகப் பார்த்தீர்களானால், அது பிரபாகரன் தான்: செல்வநாயகம் விட்டுச் சென்ற இடத்திலிருந்து எடுத்து, அவர் விட்டுச்சென்ற விடயத்தை, நேற்றுவரை விடாப்பிடியாகக் கொண்டுவந்து சேர்த்தவர் அவர்தான்.”

நுட்பமாக வார்த்தெடுத்த சிந்தனைகளை, நுணுக்கமான வார்த்தைகளில் கோர்த்தெடுத்து, மிகக் கவனமாகக் கூர்மைப்படுத்தி - தான் ஆற்றிய பேருரையில் - சம்பந்தன் வெளிப்டையாகச் சொல்லாத, ஆனால், மறைபொருளாகக் குறிப்புணர்த்தும் விடயம் என்னவெனில் --

பழைய உலகச் செல்நெறிக்குள் நகர்த்த முடியாமல் பிரபாகரன் விட்டுச்சென்ற இடத்திலிருந்து, புதிய உலகப் புறச்சூழலுக்கு இசைவாக, ‘போராட்டக் கோலை’ அவர் எடுத்துச் செல்கின்றார் என்பதாகும். அந்தப் போராட்டக் கோல் - ‘தமிழ் தேசியம்’

பிரபாகரன் விட்டுச் சென்ற இடம் என்று நான் குறிப்பிடுவது -- தமிழீழ விடுதலைப் புலிகளாலும், அன்றைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினாலும், 2002ஆம் ஆண்டில், நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில், உலக சமூகத்தின் அநுசரணையுடன் கையெழுத்திடப்பட்ட ஆவணமாகும்.

இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் இறையாண்மைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விவகாரத்தில் - இலங்கைத் தமிழர் தரப்பிற்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் - ஏற்றுக்கொள்ளப்பட்டு, எழுதப்பட்டு கைச்சாத்திடப்பட்ட ஆகக் கடைசி ஆவணம் என்ற வரலாற்றுத் தகுதி - அரசியற் சிறப்பு - உடைய ஆவணம் அதுவாகும்.

‘ஐக்கிய சிறீலங்கா’ என்ற அரச கட்டமைப்பிற்குள், ஒரு ‘சுயாட்சி’ முறைமையை நிறுவுவது தொடர்பான சாதகத் தன்மைகளைக் கண்டறிவதில் தமக்கிருக்கும் விருப்புறுதியை இரண்டு தரப்பினரும் எழுத்தில் பதிவு செய்து ஒப்புக்கொண்ட மிக முக்கிய நிகழ்வு அது.

முப்பது ஆண்டு கால ஆயுதப் போராட்டம் அடைந்த ‘அதியுச்சப் புள்ளி’ அந்த ஆவணம் தான். தமிழர்களுக்குரிய “ஆட்சியலகிற்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முன்னெடுப்பானது - 1987ஆம் ஆண்டு, சிறீலங்காவின் அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தினைவிடவும் மேலே உள்ள ஒரு புள்ளியிலிருந்து” தொடங்கப்பட வேண்டும் என சம்பந்தன் குறிப்பிடும் “புள்ளி,” ஆயுதப் போராட்டம் அடைந்திருந்த அந்த ‘அதியுச்சப் புள்ளி’தான் என்பது எனது அவதானிப்பு.

"தமிழ் பேசும் மக்களாகிய எமக்கு, 'ஒன்றுபட்ட இலங்கை’ என்ற அமைப்பிற்குள், எமது அரசியல் - குடியியல் - பொருளாதார - சமூக - பண்பாட்டு அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய விதமான ஓர் ஆட்சியலகை ஏற்படுத்த இந்தத் தீவின் ஆட்சியாளர்கள் மனப்பூர்வமாக முன்வரவேண்டும். அந்தத் தீர்வானது - தமிழ் பேசும் மக்கள், தமது அபிலாசைகள் தொடர்பான தமது ஜனநாயகத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரச் சட்டத் தகுதி உடையதாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்… இந்த ஆட்சியலகில் -- நமது நிலத்தை நாமே ஆளுகை செய்து, நமது சமூகத்தை நாமே பாதுகாத்து, நமது பொருளாதாரத்தை நாமே வளப்படுத்தி, நமது பண்பாட்டை நாமே செழுமைப்படுத்தும் அதிகாரங்கள், எத்தகைய இடையூறுகளுமற்று உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று சம்பந்தன் குறிப்பிடுவது -- காலச் சூழலுக்கு அமைவாக - உலக சமூகத்திற்கு உணர்த்தும் வகையாக - மறைபொருளாக - அவர் குறிப்புணர்த்தும் ‘தமிழ் தேசிய’ நிலைப்பாடு என்றே நான் கருதுகின்றேன்.

இங்கே - ‘தமிழ் தேசிய நிலைப்பாடு’ என்று நான் குறிப்பிடுவதை, ஒரேயடியாக, தயான் ஜெயதிலக போன்றவர்கள் கற்பிதம் செய்ய முனைவது போல - ‘தமிழீழத் தனியரசு’ என்று அர்த்தப்படுத்திவிடக் கூடாது.

வட்டுக்கோட்டையில், புறவயச் சுயநிர்ணய உரிமையின் [Right to External Self-Determination] அடிப்படையில், ‘தமிழீழத் தனியரசு’ நிறுவும் நிலப்பாட்டை எடுத்த வெல்வநாயகத்திடம் இருந்து போராட்டக் கோலைப் போறுப்பெடுத்த பிரபாகரன், இரண்டரைத் தசாப்தங்களுக்குப் பின்பு - அகவயச் சுயநிர்ணய உரிமையோடு [Right to Internal Self-Determination]> ‘ஐக்கிய இலங்கை’க்குள் சுயாட்சி தேடும் நிலைப்பாட்டுக்கு வந்திருந்தார் [‘மாவீரர் நாள்’ உரை, நவம்பர் 27, 2002].

இப்போது - பிரபாகரனிடமிருந்து போராட்டக் கோலைப் பொறுப்பெடுத்திருக்கும் சம்பந்தன் அவர்கள், அதே போல, அகவயச் சுய நிர்ணய உரிமையோடு ‘ஐக்கிய இலங்கை’க்குள் தீர்வு தேடும் முயற்சியிலிருந்தே தனது பணியைத் தொடங்குகின்றார். இருந்தாலும், மீண்டும், புறவயச் சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்துத் தீர்வு தேட எமது இனத்திற்கிருக்கும் உரிமையையும், வாய்ப்புக்களையும், உறுதிப்பாட்டையும் கூட அவர் மீள வலியுறுத்துகின்றார்.

எனவே - சம்பந்தனின் ‘தமிழ் தேசிய நிலைப்பாடு’ என்று நான் குறிப்பிடுவது, எமது இனத்திற்கு இருக்கும் சுய நிர்ணய உரிமையையே அல்லாமல், அது எந்த வடிவத்தில் இருக்கின்றது, அல்லது எந்த வடிவத்தை எடுக்கப்போகின்றது என்பதை அல்ல.

இந்த நிலைப்பாடு, அவருடையது மட்டும் அல்ல, அது, இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் மட்டும் அல்ல, வேறு முரண்பாடுகள் முதிர்ச்சியுற்றிருந்தாலும், அந்த நிலைப்பாடு - தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தான்.

இப்போது - புதிய சூழல், இனி - புதிய உத்திகள். ‘போராட்டக் கோல்’ இப்போது புதிய நாயகர்களின் கைககளிற்கு வந்துள்ளது - புதிய அர்த்தங்களோடு,

கூட்டமைப்பின் சுமந்திரன் நாடாளுமன்றிலேயே விவரித்தது போல - ‘தமிழர்களைப் புலிகளாக்கி, புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி, ஆகவே, பயங்கரவாதிகளைத் தமிழர்களாக்கிய கோட்பாட்டோடு நிகழ்ந்த “கோத்தா’வின் போர்”’ முடிந்துவிட்டதற்குப் பின்னரான தற்காலச் சூழலில் -

‘தமிழர்களின் அரசியல் விருப்புணர்வுகள் எல்லாம் பாயங்கரவாதக் கொள்கைகள்’ என நிறுவுவதற்கு எந்த வாய்ப்புக்களுமற்ற அரசியற் தளத்தில் இருந்தபடி -

தமிழ் பேசும் மக்களின் உண்மையான அரசியல் நிலைப்பாடு எது என்பதை, வெளிச் சக்திகளுக்கு மட்டும் அல்லாமல், சிங்கள மக்களுக்கும், தனது மக்களுக்கும் கூட சம்பந்தன் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்று நான் கருதுகின்றேன். அந்த நிலைப்பாடு - உரிய தரத்தைப் பெறாத, எமக்கு நிறைவைத் தராத, தமிழ் பேசும் மக்களின் தேசிய அபிலாசைனளைப் பூர்த்தி செய்யாத, அவர்களது சுய நிர்ணய உரிமையை மறுதலிக்கின்ற எந்த ஒரு தீர்வையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கப்போவதில்லை என்பதாகும்.

சம்பந்தன்; அப்பழுக்கற்றவர் அல்ல, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மகிமை பொருந்தியவரும் அல்ல, அவரது தலைக்குப் பின்னால், ஒளிவட்டம் எதுவும் சுற்றவுமில்லை. இன்றைய தமிழ் தலைவர்களில் அநேகருக்கு இருப்பது போல - அவருக்கும், கேள்விக்கு உட்படுத்தப்படக் கூடிய ஒரு பழைய வரலாறு இருக்கலாம். ஆனால், இன்றைய சூழலில், இலங்கைத் தமிழர்களது வாழ்வில், அவர் ஓர் இன்றியமையாத - வேறு ஆட்களால் நிவர்த்தி செய்யப்பட முடியாத மனிதர்.

பிரபாகரனுக்குப் பிறகு, இப்போது - சிங்களப் பேரினவாதத்தின் அறிவுமான்களிலிருந்து பாமரர்கள் வரை, எல்லாக் கூறுகளையும் அச்சுறுத்தும் ஒரே தமிழ் மானிடனாக அவர் மட்டுமே உள்ளார் என்பது சான்று.

கடந்த நாற்பது ஆண்டு கால இலங்கைத் தமிழரது வரலாற்றில் - அன்ரன் பாலசிங்கத்திற்குப் பிறகு, அவருக்கு நிகரான, அல்லது அவரை விடவும் அதிகமான அனைத்துலக அரச இயல் அங்கீகாரம் பெற்ற தமிழ் தலைவராக இரா. சம்பந்தனே ஆகி இருக்கிறார்.

கொழும்பின் தூதுவரக வட்டாரங்களிலும், தென்னாசியா தொடர்பான அனைத்துலக அரசுறவு அரங்கிலும் - தனது இராஜதந்திர மதிநுட்பம் தொடர்பில் - பெரும் மதிப்புக்கும், வியப்புக்கும் உரியவராக அவர் விளங்குகின்றார்.

எல்லாவற்றுக்குமான எமது பலமாக பன்னாட்டுச் சமூகத்தையே நாம் நோக்கியிருக்கின்ற தற்போதைய நிலையில், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட - அவர்கள் செவிமடுக்கின்ற - ஒரே தமிழ் தலைவராகவும் சம்பந்தனே திகழ்கிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் முரண்பாடுகளுக்கும் சீரின்மைக்கும், அதன் தலைவர் என்ற வகையில் சம்பந்தனே பொறுப்பானவராக இருந்தாலும் - தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்வதற்கான போராட்டத்தில் - இன்றைய கால கட்டத்தில் - சம்பந்தன், மாற்றீடு செய்யப்பட முடியாத ஒரு மாபெரும் சக்தி.

எமது போராட்டக் கோல், இன்னொருவரின் கையிற்கும் மாறும் ஒரு நிலை ஏற்பட்டால், அவ்வாறு அது மாறும் வரை - சம்பந்தன், மாற்றீடு செய்யப்பட முடியாத ஒரு மாபெரும் சக்தி.

இருந்தாலும் -

இந்த ஓட்டத்தின் இன்றைய கால கட்டத்தில், வரலாறு தனக்கு அளித்திருக்கும் பாத்திரத்தை - வரலாற்றில் தான் பூண்டிருக்கும் அவதாரத்தை - அவர் சரிவரப் புரிந்துணர வேண்டும். அந்தப் பாத்திரம் - அந்த அவதாரம் -- வெறுமனே ‘இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்’ என்பது அல்ல, அல்லது, தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது மட்டும் அல்ல.

மட்டக்களப்பில் சூட்டிய கிரீடமோ, போர்த்திய பொன்னாடையோ, ஆற்றிய பேருரையோ, சம்பந்தனை விமர்சனத்திற்கு உட்படுத்தலாம், ஆனால், அவை, வரலாற்றில் அவரது இடத்தை கேள்விக்கு உட்படுத்தாது. யாழ்ப்பாணத்தில் அவர் ஏற்றிய சிங்கக் கொடி கூட அவரை மாசுறச் செய்யாது. ஆனால், ‘தமிழரசுக் கட்சி’ என்ற குறுகிய வட்டத்திற்குள் தன்னைச் சுருக்காது, ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெரிய வட்டத்திற்கும் வெளியிலே சென்று, ஒட்டுமொத்தமான தமிழினத்தின் தலைவனாக - தனது புதிய அவதாரத்தில் - அவர் ஆற்றிய கடமை என்ன என்பதைத் தான் வரலாறு நாளை கேட்கும். பிரபாகரன் விட்டுச்சென்ற இடத்திலிருந்து, தமிழ் பேசும் மக்களை அவர் எங்கே அழைத்துச் சென்றார் என்பதைத் தான் வரலாறு நாளை கேட்கும்.

அந்தக் கேள்வியிலிருந்து, அவரை, திருகோணமலையில் அவர் போற்றிய காளித் தாயாலும் காப்பாற்ற முடியாது.

http://www.puthinappalakai.com/view.php?20120604106329

  • கருத்துக்கள உறவுகள்

ஓரத்தில் நின்று ஓட்ட வீரர்களுக்கு நீர் வார்த்துத் தென்பு தந்த பங்காளரும் உண்டு, ஓட்டத்தையும் வீரர்களையும் நம்பி வாழ்த்துரைத்து ஆசீர்வாதங்கள் தந்த ஆத்மாக்களும் உண்டு.

இது எங்களுக்கு பொருந்தும் போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் பதவியை கட்டிப்பிடித்து காலத்தை வீணாக்காமல் இளையவர்களிடம் தமது பதவியை கொடுப்பது தான் தமிழ் மக்களுக்கு தற்போதைய தேவை.தமிழ் மக்களுக்கு ஒரு புதிய ,இளைய தலைமை தேவை.சம்பந்தர் வேணுமானால் ஆலோசகராக இருக்கலாம்.

தமிழரசுக் கட்சியினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பதவிகளை விட்டுக் கொடுப்பார்கள் என்பது பகற்கனா!

வேண்டுமானால் தமது புதல்வர்களைிடம் விட்டுக் கொடுக்கலாம். மாறாக திறமையான இளஞர்களுக்கு வழிவிட அவர்கள் தயாராயில்லை.

அமிர்தலிங்கமும் இதைத் தான் செய்தார். சம்பந்தனும் அதையே செய்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கக்கொடி ஏந்தினாலும் சம்மந்தா் மாசுபடாராம்.பிரபாகரன் விட்ட இடத்திலிருந்து போரட்டக்கோலை எடுத்துச்செல்வாராம்..அடஅட வழுதியும் அப்பப்ப புழுதி கிளப்புவா்.

பதவிக்கு வந்து இரண்டு வருசத்துக்கு பிறகும் ஒரே பல்லவியை பாட அரசியல் வாதியால் மட்டும் தான் முடியும்...

இன்னும் ஆரம்பிக்கவே இல்லை எண்டதை அண்ணை எவ்வளவு தெளிவாய் சொல்லுறார்... அதுக்காகவே பாராட்டலாம்...

தலைவர் 2002ல் ஒருவகையான தீர்வுக்கும் ஒத்துபோகவில்லை. சம்பந்தர், இதுதான் தமிழருக்கு தீர்வு; இதை எங்களுக்கு தாருங்கோ என்று எவ்விடத்திலும் கூறவுமில்லை. ஆமாப்போட்டு வாசிக்கிறவை நிறைப்பேர் இருக்கிறதாலை இந்த ஊடகம் வித்து பிழைக்கிறவர்கள் சுவையாக பலவற்றை எழுதமுடிகிறது.

மகிந்தா தான் என்ன எழுதி அமெரிக்க ராசாங்க அமைச்சுக்கு பீரிசிடம் கொடுத்துவிட்டவர் என்றதை சம்பந்தருக்கு வெளிவிட தாயாரில்லை.சம்பந்தர் பத்திரிகைகளில் அறிக்கைவிட்டால் தங்களை கலந்தாலோசிக்காமல் அறிக்கைவிட்டதற்கு மிரட்ட பார்க்கிறார். இந்த அரசுடன் சம்பந்தர் என்ன தீர்வுத்திட்டத்திற்கு ஒத்துப் போனார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.