Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமிக்காறர் போட்டுக்குடுத்த அம்மாவின் வீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]ஆமிக்காறர் போட்டுக்குடுத்த அம்மாவின் வீடு [/size]

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, July 17, 2012

2010....,

அம்மா வீட்டிலிருந்து நாட்டுக்காக 4பிள்ளைகளைக் கொடுத்தாள். இன்று அம்மாவுக்காக ஒரு பிள்ளையும் அம்மாவோடு இல்லை. அம்மா உழைச்சுக் கட்டிய கனகபுரம் வீடும் போய் இப்ப பரந்தனில் அம்மாவின் முதிசமான அரை ஏக்கர் வயல் நிலத்தில் ஒரு குடிசைதான் அம்மாவின் வசந்தமாளிகை.

7தகரத்தோடும் ஒரு சின்ன உரப்பையோடும் 2நாளாக காணியில் போயிருந்தாள் அம்மா. ஆண்துணையும் இல்லை ஆட்களின் துணையும் இல்லாமல் தன்கையே தனக்குதவியென்ற முடிவில் புல்லைச் செருக்கி ஒரு பாயை விரித்துப் படுத்துறங்கக்கூடிய அளவுக்குத்தான் நிலத்தைத் துப்பரவாக்கினாள். கதியால் இறுக்கி கிடைச்ச தகரங்களைப் போட்டு வீடாக்கி வாழக்கூடிய வல்லமையில்லாமல் கண்ணீரோடு யாராவது உதவுவார்களா என அம்மா காத்திருந்த நேரம் தான் அது நிகழ்ந்தது.

என்னம்மா ? வீடு போடலயா ?

அம்மாவை வந்து பாத்த ஆமிக்காறங்கள் கேட்ட போது அம்மா அழுதாள். எனக்குப் பிள்ளையளுமில்லை புரிசனுமில்லைத் தம்பியவை நான் தனிய எனக்கொருதரும் உதவியில்லை....அம்மாவோடு பேசிய ஆமிக்காரன் நல்லவனா கெட்டவனா என்றெல்லாம் அம்மா யோசிக்கேல்ல. அந்த நேரத்தில் அம்மாவை ஒருவன் அக்கறையோடு விசாரிச்சதுதான் பெரிசாயிருந்தது.

கொஞ்ச நேரத்தில் அம்மாவின் காணிக்குள் ஆறு ஆமிக்காறர் வந்தாங்கள். ஒரு கொட்டில் போடக்கூடியளவு தடியளும் சாமான்களும் கொண்டு வந்தாங்கள். அம்மா பாத்துக் கொண்டிருக்க அம்மாவுக்குக் குடிசை போட்டு முடித்தார்கள் நடக்க இயலாத ஒற்றைக்காலை மடித்துக் குந்திருந்து வேலைகளைச் செய்ய முடியாத அம்மா நின்று சமைக்கவும் ஒரு ஒழுங்கு செய்து குடுத்தார்கள். அம்மாவுக்கு அந்த உதவியைச் செய்த ஆமிக்காறருக்கு அம்மா நன்றி சொன்னாள். அவர்களில் ஒருவன் அம்மாவோடு சரளமாகத் தமிழில் கதைத்தான். அம்மாவின் பிள்ளைகள் பற்றி விசாரித்தான்.

தடுப்பில் இருக்கிற அம்மாவின் மகளைப் பற்றியும் மாவீரராகிவிட்ட 2மகள்களைப் பற்றியும் காணாமல் போன கடைசி மகள் பற்றியும் சொன்னாள் அம்மா. அம்மாவுக்காக மிஞ்சியிருக்கிற தடுப்பிலிருக்கும் மகளை விடுதலை செய்ய அவனை உதவுமாறு கேட்டழுதாள். அம்மாவின் அழுகை அவனைச் சங்கடப்படுத்தியிருக்க வேணும்.

அம்மா நான் ஒரு சிப்பாய்தானம்மா என்னாலை உங்கடை மகளை வெளியில எடுத்துத்தர ஏலாதம்மா....பெரிய இடங்களிலதானம்மா முடிவெடுப்பாங்க....அவன் தனது இயலாமையை அம்மாவுக்கு வெளிப்படுத்தினான். அப்பாவி அம்மா ஒரு சாதாரண சிப்பாயால் தனது மகளை மீட்டுத்தர முடியுமென்று நம்பி அவனிடம் கெஞ்சியழுதாள்.

000 000 000

மார்கழி 2011.....

மண்ணிறுக்கி வெள்ளம் நுளையாமல் போடப்பட்ட குடிசையைச் சுற்றி 2மீற்றர் தூரத்திற்கப்பால் மழைவெள்ளக்காடாய் நிறைந்து கிடந்தது. மலசலம் கழிப்பதென்றாலும் அவ்வளவு நாளும் வெட்டைகளில் போயிருந்த அம்மாவால் இந்த வெள்ளத்துக்கால் எங்கேயும் போக முடியவில்லை. குடிசைத் தாவாரத்தில்தான் 3நாளாக அம்மாவின் இயற்கைக்கடன் கழிப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தது. 50தரத்துக்கு மேலாக அலைந்து யூ.என்.எச்.சி.ஆரிடம் வாங்கிய கட்டிலும் மெத்தையும் போர்வையும் அம்மாவை குளிரிலிருந்து காத்தது.

சுடுதண்ணி வைச்சுக் குடிக்கக்கூட முடியாமல் ஈரமான விறகை மூட்டிப் பார்த்தாள். கண்ணுக்குள் புகைமுட்டி கண்வீங்கினதே தவிர சுடுதண்ணி வைக்க முடியேல்ல. ஈரமான விறகைத்தான் திட்டித்தீர்த்தாள். முந்தநாள் வேண்டி வைச்ச பாணில் மிச்சத்தைச் சாப்பிட்டுத் தண்ணீரைக் குடித்தாள். தனிமையின் கொடுமை பிள்ளைகள் இல்லாத வெறுமை காரணமில்லாமல் அம்மாவின் கண்களை நனைத்துக் கொண்டேயிருந்தது.

அயலட்டைச் சனங்கள் கோவில்களை நாடிப்போய்க் கொண்டிருந்தார்கள். அம்மா அம்மளவையும் வாசலில் நின்று பாத்துக் கொண்டிருந்தாள். முளங்காலுக்கு மேலை நிக்கிற தண்ணியாலை சாமான் சக்கட்டுகளோடை சனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

என்னணை நீயும் வாவன் ? சனமெல்லாம் கொயிலுக்குப் போகுதுகள். இரவைக்கு வெள்ளம் கூடப்போகுதாமெண்டு கதைக்குதுகள்....அங்கினை ஒரு தேண்தண்ணியெண்டாலும் குடிக்கலாம் வாணை....பக்கத்து வளவு புவனேசக்கா கேட்டா.

நீ போணை நான் வரேல்ல. எனக்கென்னணை பிள்ளையோ குட்டியோ கொண்டு போற விதி வெள்ளத்தாலை வந்தா வரட்டுமணை....நீ பேரப்பிள்ளை பிள்ளையளெண்டு சொந்தங்களோட இருக்கிறனீ போணை என்னைப் பாக்காதை....

ஏடியாத்தை வாடி வெள்ளத்தில அடிபட்டியெண்டா ஆனையிறவுக்கைதான் மிதக்கப் போறாய்...சனத்தோடை சனமாப் போவம் வா....புவனேசக்காவின் கெஞ்சலுக்கு அம்மா மசியேல்ல. நீ போணை....சொல்லீட்டு கட்டிலில ஏறிப்படுத்தாள். வாறவெள்ளம் அள்ளிக்கொண்டு போய் ஆனையிறவுக்கடலில போட்டாலும் போடட்டுமெனப் புறுபுறுத்துக் கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள் அம்மா.

இடி முழக்கம் மின்னல் காதைப்பிழக்குமாப்போலிருந்தது. மெல்லிய சங்கீதம் போலிருந்த மழை மேலும் பெலத்து ஊவென்ற பேரிரைச்சலோடு காற்றடித்துக் கொண்டிருந்தது. அம்மாவின் குடிசையின் தகரங்கள் மீது விழுகிற பெரிய மழைத்துளிகளின் சத்தம் துப்பாக்கிச் சத்தங்கள் போலிருந்தது.

இப்படித்தான் ஒரு மழைகாலம் 1989ம் ஆண்டு. சிறுவயதிலேயே தந்தையை இழந்த தனது பிள்ளைகளின் கல்வி மட்டுமே தனது கடைசிக்கனவாக பிள்ளைகளின் கல்விக்கனவில் மூழ்கியிருந்த அம்மாவின் கனவைக் கலைத்துக் கொண்டு போய்விட்டாள் மூத்தவள். வெள்ளைச்சட்டையுடன் காலமை போனவள் வீடு திரும்பவில்லை.

அவளும் அவளுடன் இன்னும் பல பிள்ளைகள் ஊரைவிட்டுக் காணாமற்போயினர். அவர்களோடு அம்மாவின் மூத்தவளும் காடுகள் நோக்கிப் போய்விட்டதாகத் தகவல் வந்தடைந்தது. எங்கை போய் ? யாரைக் கேட்டு ? அம்மாவுக்கு எதுவும் செய்யத் தெரியவில்லை. அவளை நினைத்து அம்மா தினமும் அழுதாள். அவளுக்காக இறைவனைப் பிரார்த்தித்தாள்.

000 000 000

ஓன்றரைவருடம் கழித்து வெள்ளைச்சட்டையுடன் போனமகள் வரிச்சீருடையில் வந்து சேர்ந்தாள். உள்ளுக்குள் பெருமிதமும் வெளியில் கோபத்தையும் காட்டி மகளை வரவேற்றாள் அம்மா. அம்மாவின் பேச்சுக்கு மறுகதை கதைக்காதவள் அம்மாவுக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தாள். போடி நீயும் உன்ரை அரசியலும்...அம்மா சினத்த போதும் அவள் அம்மாவின் மடியில் கிடந்து ஆயிரம் கதைகள் சொன்னாள்.

அந்த முன்னேற்றமில்லாத கிராமம். பெரிய உத்தியோகத்தில் இவள் வருவாளென்ற கற்பனை கலைந்தது அம்மாவின் ஒவ்வொரு பேச்சிலும் ஒட்டியிருந்தது. வந்தவள் வந்தாள் வீட்டில் மிஞ்சியிருந்த பிள்ளைகளையும் தன் வழியில் வருமாறு கோரிக்கை விடுத்துவிட்டுப் போனாள்.

அதற்குப் பிறகு அவள் தனது தோழிகளோடு சயிக்கிளில் வரத் தொடங்கினாள். சில காலங்களில் மோட்டார் வாகனத்தில் வரத்தொடங்கினாள். பின்னொரு நாள் அவளுக்கு பாதுகாப்பணியோடு பிக்கப்பில் வந்திறங்கினாள். அம்மா அப்பாவி ஆனாலும் தனது மகள் பெரிய பொறுப்பாளரானது அம்மாவுக்கு பெருமையாகத்தானிந்தது. அவளைப் பற்றி எங்கும் கதைத்தார்கள்.

அவள் இப்போது தனியே வருவதில்லை. அவளுக்கான காவலாளருடன் தான் வருவாள். அவளது திறமையால் அவள் ஓர் படையணியையே தாங்குகிற வல்லமையைப் பெற்றுக் கொண்டாள். மேடைகளில் அவளது பேச்சுக் கேட்க ஆயிரமாயிரம் பேர் குவிந்தார்கள்.அம்மாவின் மகள் பேரொளி பொருந்திய தலைவனின் கனவை மெய்யாக்கப் புறப்பட்ட மகளீரணியின் மாற்றங்களிலும் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றிக் கொண்டிருந்தாள்.

காலம் தன் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்க ஒருநாள் அம்மாவின் கடைசிச் செல்லம் அக்கா போன இடத்திற்குப் போய்விட்டாளென்று பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய மூன்றாமவள் சொன்னாள். அம்மாவுக்கு அழுகை வரவில்லை. தனது பிள்ளைகளின் தெரிவு சரியானதென்று நம்பினாள். அப்படியே அடுத்தடுத்து ஒவ்வொரு பிள்ளைகளும் அக்காவின் வழியில் போய்விட அம்மா தனித்துப் போனாள்.

ஆனாலும் தனக்கென்றொரு வீடு கட்ட வேணுமென்ற ஆசையை அம்மா தனித்து நிறைவேற்ற வேண்டுமென்ற முயற்சியில் சிறுசிறுகச் சேர்த்த பணத்தில் 2அறையில் ஒரு வீடு கட்டி முடித்துவிட்டு மகள்களை குடிபுக அழைத்தாள். மூத்தவளைத் தவிர மற்றவர்கள் அம்மாவின் குடிபுகுகைக்கு விடுமுறை கேட்டு வந்து அம்மாவின் சந்தோசத்தில் பங்கெடுத்துவிட்டுப் போனார்கள். மூத்தவள் மட்டும் வரவில்லை. உதிப்ப முக்கியமோணை உனக்கு ? என ஒருமுறை கேட்டுவிட்டுப் போனாள்.

ஒருநாள் சின்னவள் வீட்டுக்கு வந்தாள். அம்மாவுடன் ஒரு கிழமை நிற்கப்போவதாகவும் சொன்னாள். அன்று அம்மா அடைந்த ஆனந்தத்தினை இப்போதும் நினைத்துப் பார்ப்பதுண்டு. அம்மாவைப் பிரியும் கடைசி விடையது என்றதை அம்மா அறிந்திருக்காத காலமது. அம்மாவை இருக்க வைத்து வீட்டு வேலைகள் எல்லாம் செய்து அந்த ஒரு கிழமையும் அவள் அம்மாவை மகாராணியாகவே வாழ்வித்தாள். கடைசி நாள் அவளை அழைத்துப் போக வாகனம் வந்து நின்றது. மூத்தவளும் அந்த வாகனத்தில் வந்திருந்தாள்.

என்னணை கடைக்குட்டியைக் கண்டோடனும் என்னை மறந்திட்டா போல....? அம்மா சிரித்தாள். அன்றைக்கு அம்மாவுக்கு அவளுக்க ஒரு பதிலும் சொல்லத் தெரியவில்லை. தங்கையை ஏற்றிக் கொண்டு போய்விட்டாள் மூத்தவள்.

ஒரு மாவீரர் வாரத்தில் வீட்டுக்கு வந்தார்கள் சில போராளிகள். அம்மாவின் கடைக்குட்டி அன்னியத் தெருவொன்றில் தன்னைப் பிச்செறிந்து காற்றாகிவிட்டதாய் அம்மாவுக்குச் சொல்லப்பட்டது. முதல் விழுந்த அடியும் இடியும் அது. செய்தியறிந்து அம்மாவை ஆறுதல்படுத்த வந்த மூத்தவள் சொன்னாள்....அவள் பேர் சொல்ல முடியாத வேர்களோடை தன்னைக் கொடையாக்கீட்டுப் போயிற்றாளம்மா...அவளின்ரை உயிர் எங்களுக்குப் பெரிய வெற்றியைத் தந்ததம்மா....

அம்மாவின் கடைசிக்கனவு கடைசிச் செல்லம் வாய்விட்டுப் பெயர் சொல்லியழ முடியாதவளாய் போய்விட்டாள். கருவறை தீப்பற்றியெரிவது போல அவளது ஞாபகங்கள் அம்மாவைச் சுற்றும் போதெல்லாம் உணர்வுகள் தீயாகும். அவளைப் பார்க்க வேண்டும் போல அவளைக் கட்டியணைக்க வேணும் போல...எவ்வளவோ உணர்வுகள் அம்மாவின் உயிரை இறுக்கி அழுத்தும். அம்மா தொடமுடியாத தூரத்தில் நின்று சிரிக்கிற அம்மாவின் கடைசிச் செல்லத்தின் குரல் மட்டும் தான் அம்மாவுக்கு மிச்சமாய் கேட்கும்.....

5பிள்ளைகளை நாட்டுக்காகக் கொடுத்துவிட்ட அம்மாவின் கொடையை ஊரில் பெருமையோடு சொல்லுவார்கள். ஆனால் ஒண்டெண்டாலும் என்னோடை இருக்கலாம்....என்ற சின்ன வருத்தம் எப்போதும் இதயமூலையில் வலியைக் கொடுத்தபடியே இருந்தது.

000 000 000

2000ம் ஆண்டு அம்மாவும் பி;ள்ளைகள் போன வழியில் மெல்லத் தன்னையும் இணைத்துக் கொண்டாள். 2001 சமாதானக் கதவுகள் திறபடும் அத்தியாயத்தை எழுதிய பெருஞ்சமரில் ஒன்றான வடமுனையை உலகெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்த தீச்சுவாலை நடவடிக்கையில் அம்மாவின் மூத்தவள் காயமடைந்தாள்.

விழுப்புண்ணடைந்த மகளுக்கு மருத்துவம் பார்க்க அம்மாவும் போனாள். அங்கே அவள் போன்ற பல பிள்ளைகள் அம்மாவின் மகள்களாயினர். அம்மாவிற்கு அந்த உலகம் பிடித்திருந்தது. அம்மா செய்யாத செய்யத் துணியாத எத்தனையோ வெற்றிகளைச் செய்துவிட்டு அங்கே அம்மாவின் குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுக்குத் தனது காலங்கள் பற்றியெல்லாம் கதை சொல்லுவாள். ஒரு பெரிய பொறுப்பாளரின் அம்மாவென்ற எண்ணம் ஏதுமில்லாத ஒரு சாதாரண அம்மாவாய் அவர்களோடு அம்மா ஒன்றாகினாள்.

ஆடி 2001 கொழும்பைத் தாக்கிய புலிகளணியின் வெற்றி பற்றி அம்மாதான் பிள்ளைகளுக்கு ஒடியோடிச் செய்தி சொன்னாள். தானே கட்டுநாயக்காவில் நின்று தாக்குதல் செய்தது போலிருந்தது அம்மாவின் ஆரவாரம். அம்மாவின் கடைக்குட்டி கரைந்த தெருவில் ஒருநாள் காலாற நடந்து அவள் கடைசி மூச்சின் வாசனையை நுகர வேணுமென நினைத்துக் கொண்டாள்.

2002 பெப்ரவரி சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டது. எல்லா அம்மாக்களைப் போல அம்மாவும் நம்பினாள். இனிச் சண்டையில்லை சமாதானமென்று. ஒரு பொழுது அன்னியத் தெருவில் காற்றோடு காற்றாய் கலந்த சின்னவள் கடைசியாய் தன்னுயிரை வீசிய தெருவைப் பார்க்க ஆசைப்பட்டாள் அம்மா. அம்மாவின் ஆசையும் ஒருநாள் நிறைவேறியது. சின்னவளை கடைசியாக வழியனுப்பியவன் அம்மாவை அவள் கரைந்த தெருவிற்கு கூட்டிப்போனான்.

அம்மாவின் செல்லக்குழந்தை கரைந்த தெருவில் அன்னியமொழியும் அன்னியப் பழக்க வழக்கங்களும் சிந்திக்கிடந்தது. ஒரு தடையை உடைத்து வெற்றியைக் கொடுத்து பேருமில்லை கல்லறையுமில்லாமல் கரைந்தவளின் நினைவில் கரைந்து ஊர் திரும்பியதிலிருந்து சின்னவள் கலந்த தெருவே அம்மாவை இடைஞ்சல்படுத்திக் கொண்டிருந்தது. அந்த நினைவுகளிலிருந்து விடுபட அம்மாவுக்கு பலமாதங்கள் சென்றது.

சின்னவள் கரைந்த நாளைக்கேட்டு அவளுக்காக அம்மா விளக்கெரிக்கத் தொடங்கினாள். ஊமையாய் அம்மா இரவுகளில் வடித்த கண்ணீர் பகலில் பெண்போராளிகளுடன் புன்னகைத்தபடி வேலையில் நிற்பா.

போராளிகளுடனான அம்மாவின் வாழ்வு முள்ளிவாய்க்கால் வரையாகி 18.05.2009 ஓய்ந்து போனது. கண்ணீரோடு கடைசிவிடை பெற்றுப் போன அம்மா நேசித்த பிள்ளைகளின் பிரிவோடும் துயரோடும் அம்மா அந்தரித்தாள்.

மோனை வாணை நாங்களும் போவம்....நான் வரேல்ல நான் குப்பிடியடிக்கப்போறன்....இவ்வளவு பேரையும் சாகக்குடுத்திட்டு எங்கேயணை வரச்சொல்றீங்கள் ? மூத்தவள் அம்மாவுடன் இப்படித்தான் முரண்டுபிடித்தாள். என்ரை குஞ்சு அம்மாக்கு நீ மட்டும்தானணை மிச்சம்.....வா ராசாத்தி எல்லாரும் தான போகினம் நாங்களும் போவம்......

அம்மாவின் கண்ணீரும் அம்மா நேசித்த அம்மாவின் மூத்தவள் வளர்த்த பிள்ளைகளின் கண்ணீரும் அம்மாவின் மூத்தவளை உயிர் காத்து ஓமந்தையில் நிறுத்தியது.

ஒருகாலம் மூத்தவளை அக்காவென்றவர்கள் அவள் பெயரைச் சொல்லியழைத்து தலையாட்டிகளாய் அவளைச் சிறைக்கனுப்பிய துயரம் அம்மாவால் மறக்க முடியாத துயரமாய் தொடர்கிறது.

ஓமந்தையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மூத்தவள் தான் இப்ப அம்மாவை அதிகம் வாட்டுகிற துயரமாகிப்போனாள். மகள் சிறைவாசம் முடித்து வர அவளுக்கொரு கலியாணம் கட்டி வைக்க வேணுமெண்டது அம்மாவின் கனவு. ஒவ்வொரு முறையும் மூத்தவளைக் காண கொழும்பு போகிறபோதெல்லாம் விடைபெறச் சில நிமிடங்கள் திருமணம் பற்றித்தான் சொல்லியழுதுவிட்டு வருவாள்.

அம்மாவின் மகள் தன்சகபோராளிகள் எத்தனையோ பேருக்கு திருமணம் செய்து வைத்தாள். ஆனால் தனக்கொரு துணையை அவள் தேடாமல் விட்டது பற்றி அம்மாவுக்குச் சரியான கவலை.

எணயம்மா 40வயதாகீட்டுதணை இந்தா பாரணை எத்தின நரைமுடி இனி எனக்கொரு மாப்பிளை தேடி நான் கலியாணங்கட்டி...சும்மா போணை....அம்மாவின் திருமணக்கதை கேட்டால் இப்படித்தான் அலுத்துக் கொள்வாள் மூத்தவள். ஆயினும் மூத்தவளுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டே தான் கண்மூடுவேனெண்ட வைராக்கியத்தோடு அம்மா காத்திருக்கிறாள்.

000 000 000

அன்று சனிக்கிழமை. வெளியில் மழை ஓயாது பேயடையாகப் பெய்து கொண்டிருந்தது. அம்மாவின் வசந்தமாளிகையையும் அள்ளிக் கொண்டு போய்விடுமோ என்ற கணக்கில் வெளியில் வெள்ளக்காடாயிருந்தது.

அம்மாவை மாதம் இருமுறை தொலைபேசியில் அழைத்து சுகம் விசாரிக்கும் மூத்தவளின் தோழி அழைத்திருந்தாள்.

அம்மா ! என்ற அவளது அழைப்புக்கு முன்னம் 'அம்மாச்சி சொல்லணை' என்று அவளை அடையாளம் கண்டுவிட்ட பெருமையில் அம்மா அவளை அழைத்தாள்.

என்னம்மா எப்பிடியிருக்கிறீங்கள் ? இருக்கிறன் செல்லம். என்னம்மா ஒரே மழையாம் உங்கடை பக்கம் ? ஓமடா செல்லம் தெரியும்தான பிள்ளைக்கு அம்மான்ரை நிலமை....ஊத்திற மழை அம்மாவையும் பரந்தனுக்காலை ஆனையிறவிலை கரை சேர்க்குதோ தெரியாது.....!

ஏன் குஞ்சு கனநாள் எடுக்கேல்ல ? அம்மாவோடை மாதம் ஒருக்கால் கதை மோன... என்ரை செல்லம் கதைச்சியெண்டா எனக்கும் ஆறுதலாயிருக்குமெல்லே....

எங்கை ஒரே வேலையம்மா.... அதான் கனநாள் கதைக்கேல்ல....

அவளெப்பிடியம்மா இருக்கிறாள் ? ரெண்டு கிழமை முன்னம் போனனான்....இருக்கிறாள்....சரியா மனசுடைஞ்சு போயிருக்கிறாள்....அவளுக்கு என்ர கவலைதானணை....நான் கிழவி இண்டைக்கோ நாளைக்கோ போயிருவன்.....ஆனா என்ர பிள்ளைதானம்மா தனிக்கப்போறாள்.... அவளை நினைச்சாமல் தண்ணி வென்னியும் இறங்காதாம் மோன....என்ரை பிள்ளையைக் கைவிட்டிராதையணை என அழத்தொடங்கினாள் அம்மா.

அவ்வளவு கெதியில நீங்க போகேலாதம்மா....அவளுக்கு கலியாணங்கட்டி வைச்சு பேரப்பிள்ளையளெல்லாத்தையும் வளத்து விட்டிட்டுத்தான் நீங்கள் போகலாம்....அம்மாவின் கண்ணீருக்கு இப்படித்தான் ஒவ்வொரு முறையும் அம்மாவின் வயிற்றில் பிறக்காத மகள் சொல்லிச் சமாளிப்பாள்.

மழை பெலத்துக் கொண்டிருந்தது. அம்மா 2வாரம் சேர்த்து வைத்து அவளுக்குச் சொல்லியாற நினைச்ச எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினாள். அம்மா கதைத்தவை துண்டம் துண்டமாய் முறிந்து முறிந்து கேட்டுக் கொண்டிருந்தது....

அம்மா நீங்கள் கதைக்கிறது விளங்கேல்ல....பொறுங்கோ கட்பண்ணியெடுக்கிறன்.... மூத்தவளின் தோழியின் தொடர்பு அறுபடுகிறது....தனது கதைகளை அவள் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பில் அம்மா தொடர்ந்து கதைத்துக் கொண்டிருந்தாள்.....

அம்மாவின் குடிசையின் கூரைத்தகரம் ஒரு கரையால் அடித்த காற்றில் எத்துப்பட்டு அம்மா படுத்திருந்த கட்டிலிலை மழைத்துளிகள் நனைத்துக் கொண்டிருந்தது. சுடுதண்ணி வைக்க அம்மா சேமித்து வைத்திருந்த சுள்ளி விறகுகள் ஈரமாகிக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் யுத்த முனைபோல சத்தமும் கண்ணைப்பறித்தெடுக்கும் ஒளியாயும் மாறிமாறிக் கேட்டுக் கொண்டிருந்தது.

அம்மாவிற்கு ஆமிக்காரர் போட்டுக் கொடுத்திருந்த வசந்தமாளிகையை மழைகொண்டு போகத் தொடங்க வெள்ளம் உள்ளே புகுந்தது. அம்மாவின் மிச்சமாய் இருந்த சில பாத்திரங்களும் தேனீர் கேற்றிலும் மிதந்தது. அம்மா தலையிலடித்து அழத் தொடங்கினாள்....

தை 2012

[size=6]http://mullaimann.blogspot.de/2012/07/blog-post_17.html[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]நல்ல பதிவு [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மா இப்ப எப்பிடி இருக்குறா?

[size=4]அம்மா நீங்கள் கதைக்கிறது விளங்கேல்ல....பொறுங்கோ கட்பண்ணியெடுக்கிறன்.... மூத்தவளின் தோழியின் தொடர்பு அறுபடுகிறது....தனது கதைகளை அவள் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பில் அம்மா தொடர்ந்து கதைத்துக் கொண்டிருந்தாள்.....[/size]

[size=4]தனிமையோட கொடுமைக்கு இதுதாங்க உதாரணம் :( ரெம்பவே ஃபீல் பண்றேங்க சாந்தி அக்கா :( உங்க கதைய லைக் பண்றேங்க .[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.