Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை : நவின்.

எனது பெயர் நிக் வியூஜிசிக். (Nick Vujicic) இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.

இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன்.

அப்பப்பா! அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். போதும்! அந்த வலி என்னோடு ஒழிந்து போகட்டும்!

எல்லாத் தம்பதியரையும் போலவே அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரத்தில் தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 04-ஆம் நாள் அதிகாலைப் பொழுதில், இந்தப் பூவுலகில் புதுப் பிறவியெடுத்தத் தன் மகனை, கிறிஸ்தவப் பாதிரியாராக இருக்கும் அந்தத் தந்தை அள்ளி முத்தமிட எத்தனிக்கையில்தான் தெரிந்தது தனது பிஞ்சு மகன் கால்களும், கைகளும், விரல்களும் முழு வளர்ச்சி இல்லாமல் பிறந்திருப்பது. எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்லமுடியாத ஒரு வினோதமான பிறவியெடுத்த அந்தப் பாக்கியசாலி வேறு யாருமில்லை, நான்தான். என்னைப் பார்க்க ஆவலாக இருப்பீர்கள்! இதோ அது நான்தான். இந்த நிக்.

கருவில் இருக்கும்போதே தெரிந்திருந்தால்கூட எனது பெற்றோர் தங்கள் மனதளவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கமுடியும். ஆனால் அனைவருடைய கேள்வியும், "கடவுள் என்பவர் கருணையுள்ளவராக இருந்திருந்தால் கை, கால்கள் இல்லா ஒரு ஜீவராசியைப் படைத்து, இந்தப் பூவுலகில் பரிதவிக்கவிட வேண்டிய அவசியம்தான் என்ன? அதுவும் ஒரு உண்மையான கிறிஸ்தவப் பாதிரியாருக்கு இப்படியொரு தண்டனையா?" என்பதுதான். என்னை மட்டும் இப்படிப் படைத்த அந்த இறைவன் எனக்குப் பிறகு என் பெற்றோருக்குப் பிறந்த தம்பி தங்கையரை அப்படிப் படைக்கவில்லை. இந்த நிமிடத்தில் என் கண்களில் கண்ணீரோடு நான் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். கையும், காலும் ஏன் விரல்கள்கூட சரியாக இல்லாத ஒரு குழந்தையை அந்தப் பெற்றோர் வளர்த்தெடுக்கப் பட்ட வேதனைகள்தான் எத்தனை? அவமானங்கள்தான் எத்தனை? சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கக்கூடியது. நான் நெடுநாள் பிழைக்க மாட்டேன் என்ற ஒரு நம்பிக்கை எனது பெற்றோர் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! நியாயம்தானே! பிறகு நான் என்னதான் வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? எதைத்தான் சாதித்துவிட முடியும்? ஆனால் மருத்துவத் தெய்வங்கள் இது "அசல் ஆரோக்கியமான குழந்தை" என்று அடித்துக் கூறிவிட்டனர்.

குறைபாடுள்ள குழந்தையைக் கொடுத்த கடவுள் கூடவே எனது பெற்றோருக்குத் தன்னம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் கொடுத்திருந்தார். நான் பள்ளி செல்லும் அளவுக்கு வளர்க்கப்பட்டேன் என்று சொல்வதைவிட வார்க்கப்பட்டேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் உடலளவில் குறைபாடு உள்ளவன் என்பதாலும், உருவத்தில் வித்தியாசப்பட்டு இருப்பதாலும் ஆஸ்திரேலிய அரசு எல்லாக் குழந்தைகளோடும் சேர்ந்து படிக்க என்னை அனுமதிக்கவில்லை. இப்போது என் அம்மா அதனை எதிர்த்துப் போராடினார். தன் மகன் படும் வேதனைகளைவிட, ஆயிரம் மடங்கு அதிகம் வேதனை அனுபவித்தவராயிற்றே! அரசுடன் யுத்தமொன்றையே நடத்தினார். ஒரு வழியாக வெற்றியையும் பெற்று, இதோ நான் பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்ன, சமுதாயம் என்றால் என்ன, அதற்குள் எத்தனை போலித்தனம், எது எதார்த்தம், எது உண்மை என்பதையெல்லாம் வாழ்ந்து பார்க்க ஆரம்பித்தேன். நான் பூக்கள் நிறைந்த பல்லக்கில் பயணிக்கவில்லை. நான் அனைத்து மாணவர்களாலும் நிராகரிக்கப்பட்டேன். கேலி பேசப்பட்டேன். சுக்கு நூறாகக் கிழித்தெறியப்பட்டேன். ஒவ்வொருவரும் என்னை முகச்சுழிப்போடு பார்க்கும்போது உயிரோடு என்னைத் தோலுரித்த வேதனையை அனுபவித்தேன். ஊனம், பாவம் என்றெல்லாம் பரிதாபப்படுவது பேச்சளவில்தான். அத்தனையும் போலித்தனமான கண்துடைப்பு என்பதை உணர்ந்தேன். அதை அனுபவிக்கும் பொழுதுதான் அந்த துக்கத்தின் ஆழம் விளங்கும். எத்தனையோ முறை என் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டு "எதற்காக அம்மா என்னைப் பெற்றாய்? பிறந்த அந்த நிமிடத்திலேயே என்னைக் கொன்றிருக்கக் கூடாதா?" என்று கதறியிருக்கிறேன். துடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைக் கட்டியணைத்துக் கண்ணீர்விட மட்டுமே முடிந்த என் அன்னையால் எந்த ஆறுதலும் கூறமுடியவில்லை. ஆறுதல் என்பது அவ்வப்போது போடும் மருந்து போன்றது.

ஆனால் இதுபோன்ற மனவேதனையை அனுபவிக்கும்போதுதான் அதன் வீச்சு என்ன என்பது புலப்படும். காரணம் என்னை அனைவருமே கேலிப்பொருளாகத்தான் பார்த்தார்கள். என் பக்கத்தில் வருவதைக்கூட அவமானமாக நினைப்பார்கள். அருவருத்து ஒதுக்குவதைப் பார்க்கும்போது நான் அப்படியே அணு அணுவாகச் செத்துப் பிழைத்திருக்கிறேன். இவற்றையெல்லாம் என் பெற்றோரிடம் வந்து சொல்லி அவமானத்தால் எத்தனையோ முறை நான் பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கிறேன். இதற்காகவே நான் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி சென்றிருக்கிறேன். பலமுறை நான் தற்கொலைக்குத் துணிந்திருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன், விரக்தியடைந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னை உட்கார வைத்து, பக்குவப்படுத்தி, உற்சாகப்படுத்தி, நான் அழுதால் அழுது, அரவணைத்து, சிரிக்கவைத்து, சிந்திக்கச் செய்து, ஊக்கமூட்டி என்னை, என் வயதுக்காரர்களிடம் பழகவேண்டாம், அப்படிப் பழகினால் மன அழுத்தம்தான் அதிகமாகுமென்று, என்னைவிட வயது குறைந்த குழந்தைகளோடு பழக வைத்து, பேச வைத்துப் பல நண்பர்களை எனக்கு உருவாக்கித் தந்து, என்னை இதோ உங்கள் முன் ஒரு உன்னத மனிதனாக நிற்க வைத்து, நான் பேசும் பேச்சை, தன்னம்பிக்கைச் சொற்பொழிவை ஆயிரமாயிரம் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் கேட்டுப் பிரமிக்கச் செய்த அந்த உள்ளங்கள், மனிதப்பிறவிகள் இல்லை, அவர்கள் என் தெய்வங்கள். என் பெற்றோர்கள் என்பதையும் விட எனது கண்களாய், கைகளாய், கால்களாய் எனக்கு எது வேண்டுமோ அதுவாகவோ ஆகி என்னை உங்கள் முன் நிற்கச் செய்திருக்கிறார்கள். நான் பாக்கியசாலி அல்லவா?

ஆம்! நான் உடலளவில் மட்டுமே உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். எனக்குக் கை, கால்கள் மற்றும் விரல்கள் இல்லையே ஒழிய வேறென்ன இல்லை? உள்ளத்தளவில் உங்களைப்போன்ற அனைத்து உணர்வுகளும் உள்ள ஒரு சராசரி மனிதன்தான் இந்த நிக்.

எனக்குள்ளும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை இதோ! என் இருபத்தைந்து வயதிற்குள் எட்டிப் பிடித்துவிடுவேன். இது சத்தியம்! எனக்கு இப்போது வயது 21. எனது 15 ஆவது வயதில் பைபிளில் ஒரு வசனத்ததைப் படித்தேன். அதிலிருந்து கடவுள், தான் இந்த உலகுக்குச் செய்ய வேண்டியதை ஒரு கண்ணிழந்தவன் மூலமாகவோ, அல்லது என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகவோதான் செவ்வனே செய்து முடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் அந்தப் பாக்கியம் பெற்றுவிட்ட ஒரு பிறவியாகவே நினைத்துப் பெருமிதம் கொண்டேன். என் வாழ்க்கையையே நான் இந்த உலகத்துக்காக ஒப்புக் கொடுத்துவிட்டேன்

நான் இப்படியொரு ஊனமாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன். காரணம் எனது வாழ்க்கையை இந்த உலகத்தோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் எத்தனையோ சகோதர சகோதரிகளை மனதளவில் நல்வழிப்படுத்தியிருக்கிறேன். என் உருவத்தை என்னால் மாற்ற முடியாது. ஆனால் இந்த உலகத்தில் மனதளவில் ஊனப்பட்ட எத்தனையோ பரிதாபத்திற்குரிய என் தோழமைக்குரியவர்களை மாற்றியிருக்கிறேன். மறுவாழ்வு வாழ வைத்திருக்கிறேன். சிலவற்றை மாற்றமுடியாது. அதனால் சிலரையாவது மாற்ற முயல்கிறேன். உதாரணம் என் உருவம். அதை நான் மாற்றமுடியுமா? முடியாது. ஆனால் உங்களை என்னால் மாற்ற முடியும். இதோ! பார்த்தீர்களா? நீங்கள் மாறிவிட்டீர்கள். “கெட்ட நேரமென்ற ஒன்று என்றுமில்லை, நல்லவைகளைத் தொடங்க எல்லாமே நல்லநேரம்தான். இன்றே தொடங்குங்கள்!” உங்களை மறுபடியும் ஒரு மகத்தான பொழுதுகளில் சந்திப்பேன். நன்றி! வாழ்த்துக்கள்!! வணக்கம்!!கடவுளின் படைப்புகள் எப்பொழுதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம் இல்லை வாழ்க்கைதான் நிரந்தரம். நமது வாழ்க்கை என்பது பாலைவனத்தில் பயன்படும் சிறிது நேரச் செருப்புக்கள். அவற்றை பயனுள்ளதாக வாழ்ந்து விடுவோமே! அவமானங்களை, வேதனைகளைத் தூக்கியெறியுங்கள்! நேற்றைய நிகழ்வுகளைச் சந்தித்தவன் நான் இல்லை, அவன் வேறொருவன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் காலை எழும்போது புதிதாகப் பிறந்ததாய் எண்ணிப் புதுப்பயணத்தைத் தொடருங்கள்!சரியான காரணம் என்னவெனில் ஒரு செய்தி இந்த உலகத்துக்குச் சொல்லப்படும்போது, அந்தச் செய்தி எந்த அளவுக்குப் போய்ச் சேருகிறது என்பது முக்கியம். அதே சமயம் அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும், எப்படிப்பட்ட சூழலில் சொல்லப்படுகிறது என்பதும் மிக முக்கியம். அதே வேளையில் ஒரு செய்தி உண்மையான அனுபவத்தோடும், உணர்வுகளோடும் சொல்லப்படும்போது அதன் வீச்சு பல மடங்கு இரட்டிப்பாகும் என்பதால்தான் கடவுள் என்னைப் போன்ற சிலரை உருவாக்கி எங்கள் மூலமாக இந்த உலகத்துக்குச் சில செய்திகளைச் சொல்கிறார். இது நான் அனுபவித்துணர்ந்த உண்மை. இது வேதனைகள் நிறைந்த அனுபவமாக இருப்பினும், அது தரும் முடிவுகள் இந்த உலகத்துக்குப் பயனுள்ளதாக இருப்பதால் நாங்கள் வேதனைப்படவும் தயாராகவும் இருக்கிறோம். அந்த வேதனை அதிலிருந்து கிடைக்கும் பலன்களால் ஆறிவிடப்போகிறது அவ்வளவுதான். யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையா? இந்த அனுபவங்கள் தரும் நல்ல பலன் அந்த வேதனைகளையும், வலிகளையும் புனிதப்படுத்திவிடும்.

முதலில் நான் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிடுவேன். நான் சேவை செய்வதற்கு நானே என் சொந்தச் சம்பாத்யத்தில் நிற்பேன். எந்த உதவியையும் நான் பிறரிடமிருந்து எதிர்பாராது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லக்கூட எனக்கென்று ஒரு வாகனமும், அதை நானே ஓட்டும்படியும் அமைத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளன். பல நிறுவனங்களில் என்னைச் சிறப்புப் பேச்சாளராக அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். எனது வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும், சாதனைகளையும், கடந்து வந்த பாதைகளையும் பேசி முடிக்கும்பொழுது அவர்களின் மனதில் இருக்கும் தாழ்வுமனப்பான்மைகள் தரை மட்டமாவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பிரமித்துப் போயிருக்கிறேன். என் சொற்பொழிவு இந்த உலகம் முழுதும் ஒலிக்கப்பட வேண்டும். எனது வாழ்க்கை முழுதும் ஏழை, எளிய மக்களுக்கும் மனத்தால் ஊனப்பட்டு, மன அழுத்தத்தால் வாடி, தவறான பாதைகளில், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, எதிர்காலம் இருண்டு நிற்கும் ஒவ்வொருக்கும் நான் சேவை செய்வதற்காகக் காத்திருக்கிறேன். இவைதான் என் கனவு, லட்சியம், ஆத்ம திருப்தி எல்லாமே! நான் பிறந்த பலனை முழுமையாக உணர்கிறேன். இவற்றோடு நான் எழுதிக்கொண்டிருக்கும் கை இல்லை, கால் இல்லை, கவலை இல்லை என்ற நூலை வெற்றிகரமாக இந்த ஆண்டிற்குள் முடித்தும் விடுவேன்.

உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை நம்புங்கள்! அதில் கவனம் செலுத்துங்கள்! வெற்றியடைவீர்கள்! என்ன திறமை இருக்கிறதெனத் தேடிப் பார்க்காதீர்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைப்பதைவிடத் தேவையில் நம்பிக்கை வையுங்கள்! அதை எளிதில் அடைவீர்கள்! விரைவில் பெறுவீர்கள்! பிறகு அதுவே திறமையாகவும் மாறிவிடும். நீங்கள் ஏதாவது சாதிக்க நினைத்தால், அதற்காகத்தான் உங்களைக் கடவுள் இங்கே அனுப்பியிருக்கிறார் என்ற நம்புங்கள். அந்த எண்ணம் உங்களுக்குத் தானாக வரவில்லை. அது அவன் ஏற்கனவே எழுதியதுதான். அதனை இன்றே காலம் தாழ்த்தாது செய்துவிடுங்கள்! நாம், காரணமில்லாமல் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கிறோம். அந்தக் கட்டுப்பாடுகள் உங்களின் வேகத்தைக் குறைக்குமே ஒழிய விவேகத்தை ஏற்படுத்தாது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் சாதிக்கப் பிறந்தவைதான். நானே சாதிக்கத் துணிந்துவிட்ட பின் நீங்கள் மட்டும் ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள்! உங்களால் முடியும்! நாம் சாதிப்பதற்கு எல்லை என்பது ஒன்றும் இல்லை. அவை நாம் போட்டுக் கொண்டவை. அவற்றைத் தகர்த்தெறியுங்கள்! இதோ ஒரு ஒளிமயமான பாதை உங்கள் கண்முன் தெரிகிறது. இன்றே! இப்பொழுதே புறப்படுங்கள்!! சாதனையாளர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். தொடங்கும்பொழுது எவரும் சாதனையாளனாகத் தொடங்குவதில்லை, தொடங்கியபின் எவரும் சாதனை படைக்கத் தவறியதுமில்லை! பிறகென்ன தாமதம்? தொடங்குங்கள்!! இதோ களம் காத்திருக்கிறது!

- நவின்

நன்றி : நிலாச்சாரல்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நுணா..

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வரிக்கு வரி, வலிகள் நிரம்பிய கதை!

தன்னை இப்படிப் படைத்து விட்டதற்காக, ஆண்டவனைத் திட்டித் தீர்க்கவில்லை இந்த 'நிக்'

என் சிந்தனைத் தடத்தில், நிரந்தரமாகப் பதிந்திருக்கப் போகும் பதிவை, இணைத்த நுனாவுக்கு, நன்றிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.