Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒளிரும் இந்தியாவின் ஒரு ஒளி கீற்று........

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்பரசிங் பாடீஸ் (Embarrassing Bodies) சானல் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடலில் ஏற்படும் பல்வேறு தர்மசங்கடமான உபாதைகளைப் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சைகள் பற்றியும் விளக்கும் சுவாரசியமான மருத்துவத் தொடர். தொடரின் இறுதியில், ´´ ...

ஒருசிலரை ஒப்புநோக்கையில் நாம் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் தான் ´´ என எண்ணும் அளவிற்கு, சராசரி வாழ்வோடு போராடும் ஒருவரை தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமாக முன்னிருத்துவர்.

இந்த வார உதாரணம், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியைப் பற்றியது. அவர் தனது பருவ வயதை எட்டியிருந்த பொழுது அவரது உடலின் எதிர்ப்புசக்தியே அவரது இரு சிறுநீரகங்களையும் (கிட்னி) தாக்கி அழித்துவிட்டது. உடலில் சேரும் கழிவுகள் நச்சுக்களை உதிரத்தில் இருந்து பிரித்தெடுப்பது சிறுநீரகங்களின் வேலை. சிறுநீரகமே இல்லாத அவர், ஒவ்வொரு நாளும் இரவில் தனது கை ரத்த நாளங்களில் ஊசியைக் குற்றி, குழாய் வாயிலாக உதிரத்தை டயாலிசிஸ் இயந்திரத்திற்குள் செலுத்தி சுத்திகரிக்கிறார். தன்னம்பிக்கையுடன் தனது அலுவலில் நவீனப் பெண்மணியாக அன்றாடம் சுற்றிச் சுழன்று வருகிறார். நிகழ்ச்சி முடிந்தது.

தொலைக்காட்சியை அணைத்ததும் நிசப்தம். நிலவொளி நிறைந்த அறையின் சுவற்றில் மையிருள் கட்டமெனக் காட்சியளித்தது அணைந்துபோன தொலைக்காட்சி. தொலைக்காட்சியை உற்றுநோக்க, அதுவோ ஆழ்மனத்தின் அடியாழத்தில் புதைந்து மறந்து போன நினைவுகளைத் தோண்டி எடுத்து வந்து, திரையில் உமிழத் தொடங்கிவிட்டது.

கிருஷ்ணவேணிக்கு அப்போது ஆறேழு வயது இருக்கும். இரட்டைச் சடை, பூ போட்ட சட்டை, ஊதாப் பாவாடை, கறுப்புப் பொட்டு, சிரித்த முகம், கிராமத்து சிறுமிக்கே உரிய துருதுரு சுபாவம் அவள் அடையாளம். மரக்கிளையில் கூடும் மாலை நேரப் பறவைகளுக்குப் போட்டியாக ஆரவாரம் செய்யும் பத்துப் பதினைந்து சிறுவர் சிறுமியரால் ஊர் மந்தையே கலைகட்டும். கோலிக்குண்டு, பம்பரம், நுங்குவண்டி, டயர், கிட்டிப்புள், ஐஸ்பால், கள்ளன் போலீஸ், தாயம், கரண்டுபாஸ், நொண்டியாட்டம் என யப்பப்பா விளையாட்டுகளுக்குப் பஞ்சமே இருக்காது. ´வீட்டுப்பாடம் எழுதாம எந்நேரமும் விளையாட்டுதானா´ என பெற்றோரால் பிடித்துச் செல்லப்படும் நேரத்தைத் தவிர எந்நேரமும் விளையாட்டுதான்.

ஊரில் இருந்ததோ ரெண்டே ரெண்டு கருப்பு வெள்ளை தொலைகாட்சி. ஒன்று சாலிடர் இன்னொன்று டைனரோ. சாலிடர் வைத்திருந்த மல்லையா எதோ குறுநில மன்னர் போலதான், ஆனாலும் அனைவரையும் அனுமதிப்பார். கிராமத்தில் எது தனிமை (பிரைவசி), சுயநலம் (இன்டிவிசுவளிசம்) எல்லாம். ஒளியும் ஒலியும் முன் பின், வியாழன் ஞாயிறு திரைப்படங்களுக்கு இடையில் வரும் செய்தி இடைவேளை தான் விளையாட்டுக்கு உகந்த நேரம். அப்போதுதான் சிறுவர் குழு முழுதாக இருக்கும். பால் பேதமின்றி விளையாடித் திரிந்த காலத்தில் கூடித் திரிந்த சிலரது முகம் மட்டும் மனதில் நன்றாகப் பதிந்து விடும். எனக்கு அப்படிப் பதிந்த முகம்தான் கிருஷ்ன்வேனியினது.

பின்னாளில் அருகாமையில் உள்ள நகரத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டோம். வருடம் முழுதும் நிலவிய வசந்தகாலம், காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு விடுப்பு என சுருங்கிவிட்டது. ஆண்டுகள் செல்லச் செல்ல விளையாட்டுகளும் குறைந்து விட்டன, கூட்டாளிகளும் குறைந்துவிட்டனர். சிலர் தீப்பெட்டித் தொழிற்ச்சாலை, விவசாயம் எனப் போய்விட்டனர். எனக்கும் விடுமுறை சிறப்பு வகுப்புகள் கணினி வகுப்பு என கிராமத்திற்குச் செல்ல வாய்ப்பு குறைந்துவிட்டது. பலரை மறந்தே போனேன்.

ஆண்டுகள் பல கடந்துவிட்டன. பள்ளிப் பருவம் முடிந்துவிட்ட நிலையில் ஏதோ ஒரு விசேசத்திற்கு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். ஊருக்குச் செல்கிறபோதெல்லாம் ஏற்படும் அன்புத்தொல்லை ஒன்று ´என்னப்பா, எப்ப வந்த?´´ என ஒருவர் விடாது அனைவரும் கேட்பார். பதில் சொல்லியே களைத்துப் போகவேண்டி இருக்கும். ஊர் மந்தைக்கு அருகில் உள்ள அரசமரத்தடியில் நானும் பால்ய நண்பன் தர்மராசும் பேசிக்கொண்டிருந்தோம். புழுதியைக் கிளப்பிக்கொண்டு சீறிப் பாய்ந்து வந்த மஞ்சள்ப் பேருந்து எங்கள் முன்னே நின்றது. எல்லாம் தீப்பெட்டித் தொழிற்சாலைப் பணியாளர்கள். ´´அழகிய லைலா மன்மதப் புயலா´´ எனப் புதுப்பாடல் ஒலிக்க, தூக்குச் சட்டியும் தோளில் துண்டும் பிடித்துக்கொண்டு சிலர் இறங்கினர். இறங்கியதும் அடுத்த ஊரை நோக்கி சீறிப் பாய்ந்தது அதே பேருந்து.

´´ விவசாயத்திற்கு ஆளில்லை என பெருசுகள் புலம்பியது சரிதான் போல. வேகாத வெயிலில களை எடுப்பதை விட அதே சம்பளத்திற்கு நிழலில் அமர்ந்து புதுப்பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வதை எவன்தான் விரும்பமாட்டான்? ´´ என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அடுத்த பேருந்து வந்து நின்றது. ஊதா நிறப் பேருந்து .. அதுவும் தீப்பெட்டி ஆலைப் பேருந்துதான். அதிலிருந்து இறங்கினர் சிலர். பெரும்பாலும் பெண்கள். இறங்கிய பெண்ணில் ஒருவர் எதிரே இருந்த என்னைப் பார்த்துக்கொண்டே இறங்கியது போல் இருந்தது. பரிட்சயமான முகமாக உள்ளதே என நானும் உற்றுநோக்க, அருகில் வந்து ´எப்ப வந்த? நல்லா இருக்கியா? என்னத் தெரியுதா நான் தான் வேணி´என்றதும் தெளிவானது. அதே முகம், முத்துப் பற்கள், கறுப்புப் பொட்டு, வியர்வை வடியும் முகம், ஊதப் பாவாடை, கட்டம் போட்ட சட்டை, மேலே வெள்ளைத் துண்டு, கையில் தூக்குச் சட்டி, பருவயதிற்கே உரிய சில மாற்றங்கள் தென்பட்டன. ´அச்சமில்லை அச்சமில்லை´ படத்தில் வரும் சரிதாவின் முகமும், ´கன்னிப் பருவத்திலே´ படத்தில் வருகிற வடிவுக்கரசியின் முகமும் நினைவில் மின்னி மறைந்தன.

புன்முறுவல் காட்டி ஓரிரு வார்த்தையில் பதில் சொல்லும் முன் அடுத்தடுத்து காலேஜுக்குப் போரியாமுள்ள? வீட்ல சொன்னாக. சரி நான் வாரேன்.. என்று கூறிவிட்டு முன்னே சென்ற தோழிகளை நோக்கி ஓடினாள். இவள் ஏன் இவ்வளவு குறைவாக பேசிவிட்டு அவசரமாக ஓடுகிறாள்? ஒருவேளை வெட்கமா? சமூக அச்சமா? அல்லது தாழ்வு மனப்பான்மையா?... என யோசிக்கத் தொடங்கிய போது, பக்கத்தில் இருந்த தர்மராசின் பெருமூச்சு கேட்டது. ´´ஹ்ஹ்ம்ம் கிருஷ்ணவேணி .. நானும் ரெண்டு வருசமா ரூட்டு விட்டுக்கிட்டு இருக்கேன்... நான் மட்டும்மில்ல .. போட்டிக்கு நம்ம ரங்கநாத்தும், கனகனும் வேற... கண்டுக்கவே மாற்றாலே ! ´´ என்றான்.

இவள் ஏன் தீப்பெட்டி ஆபிஸ் வேலைக்குப் போறா? குடும்பக் கஷ்டமா எனக் கேட்டதும் தர்மராஜ் சொல்லத் தொடங்கினான் ´´ இவ அப்பா வேங்கடசாமி கெணத்துல மோட்டார் மாட்டப் போனான் .. வேலையை முடிச்சிட்டு மேலே ஏறி வந்தவன் கெனத்துக் கரையிலையே பீடி பத்தவசிருக்கான். பத்த வக்கிரதுக்குள்ள லொக்கு லொக்குன்னு இருமலு... ஆமா என்னியேரமும் பீடி குடிச்சுக் கிட்டே தானே இருப்பன் அவன்.. இருமுனவன் ரத்தக் குழாய் வெடிச்சு மயக்கம் போட்டுட்டானாம்.... பேப்பய கெனத்துக் கரையில இருந்து ஒரு நாலடி தள்ளி வந்து நின்ருக்கக் கூடாது? சரிஞ்சு , கெணத்து பெட்டுல அவன் மாட்டுன மோட்டார் மேலேயே விழுந்து ஆள் காலி. ஒத்தப் பொண்ணு, ஆம்பளை இல்லா வீடாயிருச்சு.. என்ன செய்வா? அம்மா மாரியாம்மா வீட்ல தீப்பெட்டி ஓட்ரா, இவ தீப்பெட்டி ஆபிசுக்கு வேலைக்குப் போறா பாவம்.´´ என சொல்லி முடித்தான். ´அடக் கஷ்டகாலமே!´ என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து அதே ஊருக்குச் சென்றிருந்தேன். உறவினர் ஒருவர் வீட்டிற்குச் செல்கையில் கிருஷ்ணவேணியின் வீட்டைக் கடந்து செல்ல வேண்டும். நடந்துகொண்டே தற்செயலாகப் பார்கிறேன், அப்படியே அதிர்ச்சியில் திடுக்கிட்டு உறைந்து போனேன். வீட்டுத் திண்ணையில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டில். அதன் மீது போர்வை போர்த்தி சுவற்றில் அமர்ந்திவைக்கப் பட்டிருந்தது ஒரு உருவம். முகமெல்லாம் வெளுத்து இரண்டு மூன்று மடங்கு வீங்கிப் போயிருந்தது. வெறித்துப் பார்க்கும் கண்களில் ஒளியில்லை, நினைவுகள் இல்லை போலும். கை கால்கள் இரண்டும் யானைக் கால்கள் போல வீங்கி இருந்தது... ஏதோ பேய்ப் படத்தில் பார்ப்பது போல விகாரமான ஒரு உருவம். ஆம், அது கிருஷ்ணவேணிதான்!!

எதிர் திண்ணையில் தாய் மாரியம்மாள் தாள்களுக்கும் பசைகளுக்கும் நடுவே வெடிகளுக்கு காகிதக் குழாய் சுற்றிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டுவிட்டாள், என்னப்பா எப்ப வந்தே என அவள் கேட்டு முடிக்கும் முன் ´´என்ன ஆச்சு´´எனக் கேட்டேன். ´´அத ஏன்ப்பா கேக்குற.. ஏதோ சீக்குன்னு வந்தது.. ஆஸ்பத்திருக்குப் போனா... ரெண்டு கின்னிகளும் அழுகிப் போச்சுன்னுட்டாக... மதுர பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போனா ஒன்னும் செய்ய முடியாதுன்னுட்டாக.. அதுக்கே இருக்குறதெல்லாம் வச்சி செலவுபன்னியாச்சு....பெரிய வைத்தியத்துக்கு ஏழை பாழைக நாங்க எங்க போறது.. என்ன வைத்தியம் பண்ணுனாலும் பொழைக்கிறது கஷ்டம்முன்னுட்டாக... ஒத்தப் பொண்ணு ... கண்ணு முன்னாடியே செத்துக்கிட்டு இருக்கா.. நானும் அனாதப் போனமா போகவேண்டியதுதான் ´´ எனச் சொல்லி தனது சேலைத் தலைப்பால் கண்ண மேடுகளில் உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் தாய் மாரியம்மாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன் கண் முன்னே தனது ஒரே மகள் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்க்குச் சமாதானம் சொல்ல எந்த மொழியில்தான் வார்த்தை உள்ளது?

என்னை மிகவும் பாதித்த சம்பவங்களில் ஒன்று இது. வாழ்க்கை குறித்தும் சமூகம் குறித்தும் அதுவரை நான் கொண்டிருந்த புரிதலைப் புரட்டிப் போட்டது இந்தச் சம்பவம்.

சிறுநீரகம் செயலிழந்து விட்டால் அதற்கு இரண்டு மாற்றுகள்தான் உள்ளன. ஒன்று வேறு சிறுநீரகம் பொறுத்த வேண்டும் அல்லது டயாலிசிஸ் முறையில் ரத்தத்தை சுத்திகரிக்க வேண்டும். உறவினர் அல்லது குடும்பதாறது சிறுநீரகம் பொருந்தி அவர்கள் கொடை கொடுக்க முன்வந்தால் பிழைக்க வாய்ப்புண்டு. அதற்கும் அறுவை சிகிச்சை செலவு அதிகம் ஆகும். எனது நண்பர் ஒருவரின் தந்தை தனது சகோதரனுக்கு சிறுநீரக தானம் செய்துள்ளார். அவர் ஒரு சிறுநீரகத்துடன் இன்று வரை நலமாகத்தான் உள்ளார்.

அடுத்தது டயாலிசிஸ் முறை. வாரத்திற்கு இருமுறை அல்லது மூன்று முறையேனும் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் அதிக செலவாகும். அடிப்படை சுகாதாரமும் மருத்துவமும் ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருக்கும் பொழுது இத்தகைய உயரிய சிகிச்சை எண்ணிப் பார்க்கக் கூட இயலாதுதான்.

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, அங்கே நான் வாழ்ந்த குறுகிய காலகட்டத்திலேயே, மருத்துவ வசதிக்கு வழியின்றி மரணித்துப் போன மூன்று சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன்.

பிரிட்டனைச் சேர்ந்த பெண்மணி வீட்டிலேயே டயாலிசிஸ் செய்துகொண்டு சராசரி வாழ்க்கை வாழ்கிறாள், இங்கே பல கிருஷ்ணவேணி ்க்கள் வாழ வழியின்றி மடிகின்றனர்.

அப்படியானால் ஒருவரது இருப்பை முடிவுசெய்வது இயற்கை கூட அல்ல ... நமக்கு நாமே வகுத்துக்கொண்ட சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புதானே? அரசு மருத்துவமனைக்கு பினாயில் வாங்குவதற்குக் கூட பினாமி பெயரில் கொள்ளையடிக்கும் நிலை நிழவும் சுகாதாரத் துறையிடம் இருந்து வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்? ஒரு நாட்டின் குடிமக்களுக்கு அடிப்படைத் தேவை உணவு, கல்வி, சுகாதாரம். இவை மூன்றின் மீது கட்டப்படும் சமூக மாளிகைதானே மக்களுக்கு நல்வாழ்வு என்னும் நிழல் தரும்? இதற்குக் கூட நமது சமூக அமைப்பில் இடம் இல்லை என்கிற போது நிலவிற்கு விண்கலம் விட்டு என்ன பயன்? சீனாவுக்கு விட ஏவுகணை தயாரித்து என்ன பயன்?

இதில் வேடிக்கை என்னவென்றால் இதற்குப் பெயர் மக்களாட்சி. அதாவது மக்களுக்கான தலைஎழுத்தை மக்களே எழுதிக் கொள்வதாம்! எந்த மக்கள் தன் தலைஎழுத்து இப்படி இருக்க வேண்டும் என எழுதுவர்? நாம் மட்டும்தான் இவ்வாறு எழுதுகிறோம் என்றால் நமது அறிவு அவ்வளவு தூரம் முனை மழுக்கப்பட்டுவிட்டதா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் ஒரு சங்கப் பாடலில் ஒரு பெண் பாடுவது போல வரும் பாடல். ´ பசி இல்லாகுக, பிணி சேர் நீங்குக, வேந்து பகை தணிக´ அதாவது பசி, நோய், போர் இல்லாத நாடு வேண்டும் எனப் பாடிய தமிழ் இனம் , இன்று நம் காலத்தில் ´´ பசி வர அங்கே மாத்திரைகள், பட்டினியால் இங்கே யாத்திரைகள்´´ என்கிற கண்ணதாசன் வரிகளைக் கேட்கும்பொழுது, எட்டாச் சிகரத்தில் வீற்றிருந்த நம் தமிழ் இனம், பின்னோக்கிச் செல்கிறதோ என்கிற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

இதற்கு யார் காரணம்? என்ன தீர்வு? உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

Edited by kanneer

நெஞ்சை சுடும் யதார்த்தம். உண்மையில் இந்த சமூக பொருளாதார வேறுபாட்டை நீக்க இளையவர்கள் விழிப்படைய வேண்டும்.

நன்றி உங்கள் எண்ணங்களுக்கும் பகிர்வுக்கும் கண்ணீர் ..!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆக்கம் கண்ணீர் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மனதை உருக்கும், ஒரு கதை. இது கதையாகவே இருந்து விட்டால், பரவாயில்லை.ஆனால் இது தான் எமது, வாழ்க்கை!

விதியின் பெயரால், இதை அந்த ஏழைகள், ஏற்றுக்கொள்ளப் பழக்கப் பட்டு விட்டார்கள்!

வேறு வழிகள் ஏதும், அவர்களுக்கு விடப்படவில்லை!

நன்றிகள், கண்ணீர்!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துகளை பகிர்ந்துகொண்ட உறவுகளுக்கு நன்றி. இது என்னுடைய ஆக்கம் இல்லை. தமிழ்நாட்டு சகோதரங்களுக்காக இங்கு இணைத்தேன். மாறி மாறி திராவிட கட்ட்சிகளை தேர்தெடுத்து ஈழத்து மக்களை கொன்று ஒழித்து, இங்கு உள்ள சாமானிய மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கி வைத்து இருக்கும் சாதனையை நினைவு ஊட்ட தோன்றியது . ஈழ உறவுகள் இதை ஒரு உண்மை செய்தியாக மட்டும் எடுத்துகொள்ளவும். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.