Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்தாளர் முருகபூபதியின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் முருகபூபதியின் .....

சொல்லமறந்த கதைகள் -14, -- 15

.

கண்ணுக்குள் ஒரு சகோதரி

முருகபூபதி – அவுஸ்திரேலியா

இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின் பணிமனையாக செயற்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு மலேவீதியில் அமைந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தில்தான் இயக்கத்தின் சுவரொட்டிகள் எழுதும் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன.

கொழும்பிலும் அதன் சுற்றுப்பிரதேசங்களிலும் நடந்த பிரசாரக்கூட்டங்களுக்காக தமிழில் சுவரொட்டிகளை எழுதும் பணியிலும் ஈடுபட்டேன். கூடுதலாக சிவப்பு மையே சுவரொட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. ஒருநாள் சுவரொட்டிகளை எழுதிக்கொண்டிருக்கும்போது மைத்துளி ஒரு கண்ணில் விழுந்துவிட்டது. கண்களை கழுவி சுத்தப்படுத்தினாலும் கண்ணெரிவு குறையவில்லை. கண்கள் சிவந்ததுதான் மிச்சம்.

எனது துன்பத்தை அவதானித்துக்கொண்டிருந்த அந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு சிங்கள சகோதரி, மதிய உணவு வேளையின்போது என்னருகே வந்து, “சகோதரரே (சிங்களத்தில் சகோதரயா என்றால் தோழர் என்றும் அர்த்தப்படும்) உங்களுக்கு வீட்டிலிருந்து கண்ணுக்கு ஒரு மருந்து கொண்டுவருகிறேன்.” எனச்சொல்லிவிட்டு புறப்பட்டார்.

நான் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் நீர்கொழும்பிலிருந்து தினமும் வேலைக்கு வருவதனால் மதிய உணவையும் கொண்டுவந்துவிடுவேன். ஏனைய தொழிற்சங்க ஊழியர்கள் மதிய உணவுக்காக வெளியே சென்றுவிட்டார்கள். நான் உணவருந்திவிட்டு உறுத்திக்கொண்டிருந்த கண்களை மூடியவாறு ஆசனத்தில் சாய்ந்துகொண்டேன். அப்படியே உறங்கிப்போனேன். வெளியே சென்றவர்களும் திரும்புவதற்கு குறைந்தது ஒரு மணிநேரமாகும்.

சொற்பவேளையில் தனது வீட்டுக்குச்சென்ற அந்த சகோதரி அலுவலகம் திரும்பியிருந்தார். நான் கண்களை மூடி உறங்குவதைப்பார்த்துவிட்டு, என்னைத்தட்டி எழுப்பினார். கண்களைத்திறக்காமலேயே, “வந்துவிட்டீர்களா?”- என்றேன்.

“ ஆம், உங்கள் சிவந்த கண்ணுக்கு மருந்தும் கொண்டுவந்துள்ளேன். எழுந்து வாருங்கள்” என் கரம்பற்றி அழைத்தார். நான் கண்களை திறக்க சிரமப்பட்டேன். அந்த அலுவலகத்தின் பின்புற அறைக்கு அழைத்துச்சென்றார்.

சுவரொட்டிகளுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த காகிதங்களை தரையில் விரித்து என்னை அதில் படுக்கச்செய்தார்.

தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “ சகோதரயா கண்களை திறவுங்கள். மருந்தை விடவேண்டும்” என்றார்.

“என்ன மருந்து?”- தயக்கத்துடன் கேட்டேன்.

“ முதலில் கண்களை திறவுங்கள். பிறகு சொல்கிறேன்.”

நானும் மெதுவாகத் திறந்தேன். ஒவ்வொரு கண்ணையும் தனது விரல்களினல் இமைகளை விரிக்கச்செய்து ஒரு திரவத்தை விட்டார். கண்கள் குளிர்ந்தன.

“சகோதரயா அப்படியே சிறிதுநேரம் கண்களை மூடியவாறு படுத்திருங்கள். சங்கத்தின் ஊழியர்கள் வந்தால் சொல்லி;க்கொள்கிறேன்.” – என்றார்

“நன்றி”

அவர் எழுந்து தனது கடமைகளை கவனிக்கச்சென்றுவிட்டார். உண்ட களை தொண்டருக்கும் உண்டு என்பதுபோன்று, நான் அந்த குளிர்மையான திரவத்தை கண்களினூடே உள்வாங்கிக்கொண்டு மீண்டும் உறங்கிவிட்டேன்.

வெளியே மதிய உணவுக்குச்சென்றவர்கள் அலுவலகம் திரும்பிய அரவம் கேட்டது. நானும் துயில் களைந்து எழுந்தேன். கண்ணெரிச்சல் சற்று குறைந்திருக்கும் உணர்வு.

அந்தச்சகோதரி அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகே சென்று “ மிக்க நன்றி சகோதரி. அது என்ன திரவம்?”- எனக்கேட்டேன்.

அவர் வெட்கம் கலந்த சிரிப்புடன், “ அது வந்து… தாய்ப்பால்” என்றார்.

அவரது மனிதாபிமானம் என்னை சிலிர்க்கவைத்தது.

“இதோ தாய்ப்பால் கொண்டுவந்த சிறிய குப்பி.”- அவர் அதனை எனக்கு காண்பித்தார். “இன்னும் இரண்டு நாட்களுக்கு விட்டால் கண் சுகமாகிவிடும். நாளைக்கும் வேலைக்கு வாருங்கள். மதியம் தாய்ப்பால் விடுகிறேன்.” என்றார்.

“ அது சரி. எங்கே பெற்றீர்கள்? ”- எனக்கேட்டேன்.

“ எனது அக்காவுக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. பாதிக்கப்பட்டு சிவக்கும் கண்களுக்கு தாய்ப்பால் உகந்தது. சில நாட்களுக்கு நீங்கள் சுவரொட்டிகளை எழுதவேண்டாம். நீங்கள் எழுதியிருப்பதைப்பார்த்து நானே எழுதிக்கொடுக்கின்றேன்.”

“ உங்களுக்கு தமிழில் எழுத முடியுமா.?”

“ எழுத முடியாதுதான், ஆனால் பார்த்து எழுதலாம்தானே. அத்துடன் உங்களிடம் தமிழும் கற்றுக்கொள்ளலாம்.”

அந்தச்சகோதரியை மனதுக்குள் வாழ்த்தினேன்.

வீட்டுக்குத்திரும்பியதும் அம்மாவிடம் நடந்த சம்பவத்தை விபரித்தேன்.

“ சரிதான்…பால்…படிப்பு என்று போய் வேறு எங்கும் போய்விடாதே” என்றார் அம்மா. எச்சரிக்கை உணர்வுடன். அம்மா அம்மாதான்,

அந்த சிங்கள சகோதரி சகோதரிதான்.

காலம் ஓடிவிட்டது. முப்பத்தியைந்து ஆண்டுகளும் கடந்துவிட்டன. அம்மாவும் மேலே போய்விட்டார்கள். எனக்கும் திருமணமாகி எனது குழந்தைகளும் வளர்ந்து திருமணமாகி தனிக்குடித்தனம் போய்விட்டார்கள்.

ஆனால் அந்த சிங்கள சகோதரி இப்போது எங்கேயிருப்பார்?

அன்று அவரால் பாதுகாக்கப்பட்ட கண்களின் உதவியால் இன்று இதனை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

இந்தக்குறிப்புகளை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகிக்கொண்டிருந்த யுகமாயினி இதழில் முன்பொருசமயம் எழுதியிருந்தேன்.

அப்பொழுது தமிழ்நாடு கலைஞர் தொலைக்காட்சியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எனது குறிப்பிட்ட சிங்களச்சகோதரியின் செயலை விதந்து பாராட்டி, இப்படி அனைத்து சிங்கள மக்களுமே மனிதாபிமானிகளாக இருந்திருந்தால் இலங்கையில் இனப்பிரச்சினை இவ்வளவுதூரம் வளர்ந்திருக்காது என்று உரையாற்றியதாக யுகமாயினி ஆசிரியர் நண்பர் சித்தன் எனக்கு தொலைபேசி ஊடாகச்சொன்னார்.

இந்தச்சம்பவத்தை வாசகர்களுக்கு இங்கே பதிவுசெய்கின்றேன்.

கண்ணுக்கு மொழி ஏது? கருணைக்கு இனம் ஏது?

சுமார் ஆறுமாதகாலமாக எனது தலையின் இடதுபுறம் நெற்றிக்குமேலே வலி. எனது குடும்ப டொக்டர் என்னை ஒரு கண்டொக்டரிடம் (ஸ்பெஷலிஸ்ட்) அனுப்பினார். இடது கண்ணுக்கு விசேட சிகிச்சை தேவைப்படுகிறதுபோலும் என்று சொல்லி என்னை மெல்பனிலிருக்கும் அரச கண் மருத்துவமனைக்கு அவர் அனுப்பினார். அங்கே இரத்தம் பரிசோதித்த பின்னர் குறிப்பிட வலி வரும் தலைப்பகுதியில் பயப்ஸி டெஸ்ட் (சிறிய சத்திர சிகிச்சை) எடுப்பதற்காக தலையை விறைக்கவைக்கும் ஊசிமருந்தேற்றி கீறி ஏதோ எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு என்னை வீடு சென்று இரண்டுநாட்களுக்கு ஓய்வெடுக்கச்சொன்னார்கள்.

வீடுதிரும்பியதும் படுக்கையில் கண்ணயர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன்.

ஒரு தொலைபேசி அழைப்பு என்னை துயிலெழுப்பியது. மறுமுனையில் தமிழ்நாடு யுகமாயினி ஆசிரியர் சித்தன்.

“ வணக்கம். முருகபூபதி. ஒரு நல்ல செய்தி.”- என்றார்.

கண்களைத் திறக்காமலேயே “சொல்லுங்க”-என்றேன்.

“ நீங்கள் எழுதியிருந்த ‘கண்ணுக்குள் சகோதரி’ என்ற ஆக்கத்தை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கலைஞர் தொலைக்காட்சியில் வாசித்தார். வாசித்துவிட்டு தமது கருத்தையும் சொன்னார். என்னைப்பொறுத்தவரையில் இது ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்துள்ள வெற்றி.” என்றார்.

“ அப்படியா? தகவலுக்கு நன்றி. அவர் சொன்ன கருத்து என்ன?”- என்று கேட்டேன்.

தமிழரான உங்களது கண்களுக்கு தாய்ப்பால் செலுத்தி சிகிச்சை அளித்த அந்த சிங்கள சகோதரியைப்போன்று தாயுள்ளத்துடன் சிங்கள மக்கள் அனைவரும் இருந்திருப்பின் இலங்கையில் பேரவலம் வந்திருக்காதே என்பதுதான் அவரது ஆதங்கமான கருத்து.

சித்தன் எனது சுகத்தை கேட்டுவிட்டு தொடர்பை துண்டித்தார்.

கண்களை மூடியவாறே யோசித்தேன்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் மூலவேர் எது? தமிழின விடுதலைப்போராட்டம் தொடங்கியதன் பின்னணி என்ன?

சிங்கள மக்கள் அனைவருமே தமிழ் மக்களின் விரோதிகளா? அல்லது தமிழ் மக்கள் அனைவருமே சிங்கள மக்களை வெறுப்பவர்களா?

வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் தமிழ் ஈழக்கோரிக்கையையும் முன்வைத்த தந்தை செல்வநாயகம் (கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் கார்டின்) வீட்டில் வேலைக்காரராக இருந்த ஒரு சிங்களவரை 1981 ஆம் ஆண்டு தந்தையின் புதல்வர் சந்திரஹாசனைப்பார்க்கச்சென்றபோது கண்டு கதைத்திருக்கின்றேன்.

யாரைப்பார்க்க வந்திருக்கிறீர்கள் என சிங்களத்தில் கேட்டுவிட்டு, எனக்காக வாயிலைத்திறந்து உள்ளே அழைத்துச்சென்ற அந்த சிங்களவரின் பெயர் எனக்குத்தெரியாது.

ஆனால் அவர் நீண்டகாலம் அங்கே வேலையாளாக இருந்தார் என்பது மட்டும் தெரியும்.

தமிழர்களுக்கு சிங்களவர்மீது கோபம் வந்தால் முதலில் என்ன சொல்லி திட்டுவார்கள் என்பதும் சிங்களவர்களுக்கு தமிழர்மீது ஆத்திரம் வந்தால் எப்படி அழைப்பார்கள் என்பதும் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

தமிழ்நாடு கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் தாம் படித்தவற்றில் தம்மைக்கவர்ந்த பகுதியை நேயர்களுக்கு வாசித்துக்காட்டும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழ்த்தேசியவாதி. முன்பு நந்தன் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். ஈழத்தமிழ்மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். புலிகளை ஆதரித்த குற்றத்திற்காக பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையிலும் தண்டனை அனுபவித்தவர். வன்னி பெருநிலப்பரப்பில் யுத்தம் உக்கிரமடைந்தவேளையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக பல போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். புலிகளையும் அவர்களின் கனவான தனித்தமிழ் ஈழத்தையும் அளவுகடந்துநேசித்தவர்.

ஒரு சிங்கள சகோதரியின் தாய்மையுணர்வு அவரையும் சிலிர்க்கச்செய்தமையால் குறிப்பிட்ட ஆக்கத்தின் மீது அவருக்கு ஈர்ப்பிருந்துள்ளது. அதனால் கலைஞர் தொலைக்காட்சியில் தமது உணர்வுகளை பகிர்ந்துகொண்டிருப்பதுடன் தமது உள்ளார்ந்த ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கவனிப்புமிகுந்த வாசிப்புக்கும் தகவல் தந்த யுகமாயினி ஆசிரியர் சித்தனுக்கும் நான் நன்றி கூறக்கடமைப்பட்டவன்.

மனிதாபிமானத்தையும் இனவுணர்வையும் பகுத்துப்பார்க்கவேண்டியிருக்கிறது.

வீரகேசரியில் நான் பணியாற்றும் காலத்தில் ஒரு சுவாரஸ்யமான செய்தி வந்தது. கரவெட்டிப்பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டைக்காகவோ ரோந்து நடவடிக்கைக்காகவோ ட்ரக்வண்டியில் சென்றுகொண்டிருந்தபோது யாரோ ராணி ராணி என்று கூக்குரலிட்டுள்ளார். ட்ரக்கில் சென்ற இராணுவத்தினருக்கு அந்த ஒலி ஆமி, ஆமி என்று கேட்டிருக்கிறது. ட்ரக்வண்டி நிறுத்தப்பட்டு இராணுவத்தினர் உஷாரடைந்து துப்பாக்கிகளை ஏந்தியவாறு அந்தப்பிரதேசத்தை சுற்றிவளைத்தனர். ஒரு பெண்ணின் ராணி, ராணி என்ற அவலக்குரல் தொடர்ந்து கேட்கவும் அவ்விடத்துக்கு வந்து பெண்ணை விசாரித்தனர்.

ராணி என்ற ஒரு பெண்குழந்தை கிணற்றில் தவறிவிழுந்துவிட்டதை அறிந்துகொண்ட இராணுவ வீரர்களில் இருவர் உடனே குறிப்பிட்ட கிணற்றில் குதித்து அந்தக்குழந்தையை காப்பாற்றினர்கள்.

தேடுதல் வேட்டையில் பல அப்பாவி உயிர்களுக்கு உலைவைக்கும் அவர்களுக்கு அந்தக்கணம் வந்தது மனிதாபிமானம்.

1986 ஆம் ஆண்டு ஒரு செய்திக்காக யாழ்ப்பாணம் சென்று ஆனையிறவு வழியாக தனியார் பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்தேன். ஆனையிறவில் பஸ் இராணுவத்தினரின் சோதனைக்காக நிறுத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தவிர்ந்த அனைவரும் இறக்கப்பட்டோம். இராணுவ வீரர்கள் பஸ்ஸில் ஏறி சோதனையை முடித்தனர். வெளியே நின்ற இதர பயணிகளின் அடையாள அட்டைகள் உடைமைகள் சோதனையிடப்பட்டன. யாவும் சுமுகமாக முடிந்ததும் பஸ் புறப்படுவதற்கு அனுமதி தரப்பட்டது.

சாரதி பஸ்ஸை மீண்டும் ஸ்டார்ட் செய்தபோது, ஒரு இராணுவ வீரர் முகாமிலிருந்து வேகமாக ஓடிவந்தார். அவரது முதுகில் துப்பாக்கி. பஸ்ஸை நிறுத்துமாறு சத்தமி;ட்டுக்கொண்டே வந்தார். நாம் திகைத்துப்போனோம்.

வந்தவரின் கையில் ஒரு சிறிய திராட்சைக்குலை காணப்பட்டது.

அந்த பஸ்ஸிற்கு வெளியே நின்றுகொண்டே யன்னலூடாக ஒரு குழந்தைக்கு அதனைக்கொடுத்தார். தமிழ்க்குழந்தை பயத்தினால் வாங்க மறுத்தது. பின்னர் குழந்தையின் தாய் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னதும் குழந்தை திராட்சையை பெற்றுக்கொண்டது.

அந்த இராணுவ வீரரின் கண்களைப்பார்த்தேன். கனிவுநிறைந்த அந்தக்கண்கள் ஒருகணம் மின்னியது. பஸ் புறப்பட்டது.

குழந்தை தாயிடம் கேட்கிறது: “ அம்மா அந்த ஆமிக்காரர் எனக்கு ஏன் இதைத்தந்தார்?”

தாய் சொல்கிறாள்: “ அந்த ஆமிக்காரனுக்கு ஊரில் உன்னைப்போல் ஒரு குழந்தை இருக்கலாம்.”

இந்த உண்மைச்சம்பவத்தை பத்திரிகையிலும் எழுதினேன். பல வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா வானொலி ஒன்றிலும் தெரிவித்திருக்கின்றேன்.

மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் எம்மை நெகிழச்செய்யலாம்.

அதற்காக, அந்த ஆமிக்காரர்களைப்போன்று எல்லா ஆமிக்காரர்களும் இருந்திருப்பின் தமிழினப்பேரழிவு ஏற்பட்டிருக்குமா? என்று ஆதங்கப்படலாம். ஆனால் விவாதிக்க முடியுமா?

மனிதாபிமானம் எப்படி உளவியல் சார்ந்ததோ அப்படியே கருணை, பயம், வெறுப்பு, கோபம், பழிவாங்கல் உட்பட பல வேண்டத்தாக குணங்களும் உளவியல் சாரந்ததே.

சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் நான் வசிக்கும் மாநிலத்தில் எமது ஊருக்கு சமீபமாக அமைந்துள்ள இலங்கையிலிருந்து புலம்பெயரந்த பௌத்த சிங்கள மக்களினால் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரையில் கொழும்பில் புற்று நோய்சிகிச்சைக்கு உதவும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது. என்னையும் அதில் கலந்துகொண்டு உரையாற்றுமாறு அழைத்திருந்தார்கள். அச்சமயம். அவுஸ்திரேலியாவில் இலங்கை-ஆஸி கிரிக்கட் போட்டி நடந்துகொண்டிருந்தது. இலங்கையிலிருந்து மகில ஜயவர்த்தன( தற்போது இவர் இலங்கை அணியின் தலைவர்) உட்பட மேலும் சில கிரிக்கட் ஆட்டக்காரர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து உரையாற்றி நிதி சேகரிப்புக்கு உதவினார்கள்.

அவுஸ்திரேலியா உதயம் ஆசிரியரும் எனது நண்பருமான டொக்டர் நடேசனுடன் இந்நிகழ்வுக்குச்சென்றேன்.

நான் உரையாற்றும்போது, “ புற்றுநோய் எவருக்கும் வரலாம். அது சாதி, மதம், இனம், மொழி, நாடு பார்த்து வருவதில்லை. அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எவராகவும் இருக்கலாம். எனவே புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்காக எவரும் உதவலாம். உதவவேண்டும்.” என்றேன்.

தமிழ்நாடு யுகமாயினி ஆசிரியர் சித்தன் என்னுடன் உரையாடியபோது, “ உங்கள் எழுத்து பற்றி கலைஞர் தொலைக்காட்சியில் பேசப்பட்டது படைப்பாளிக்கு கிடைத்த வெற்றி என்றும் சொல்லலாம்” என்றார்.

நான் அப்படி கருதவில்லை.

படைப்பாளி வாசகரின் சிந்தனையில் ஊடுறுவும் விதமாக எழுதினால் பயன் கிட்டும் என்று மாத்திரம் கருதுகின்றேன்.

கண்ணுக்குள் சகோதரி என்ற எனது ஆக்கம் கண் சிகிச்சை சம்பந்தப்பட்டதுதான். அந்த ஆக்கம் தொடர்பாக தொலைபேசி உரையாடல் நடந்தபோதும் கண்ணுக்கான சிகிச்சையுடன்தான் படுத்திருந்தேன்.

என்ன ஒற்றுமை?

அவுஸ்திரேலியாவில் எனது கண்களுக்காக சிகிச்சை அளித்த மருத்துவர் என்னுடன் ஆங்கிலத்தில்தான் உரையாடினார். அவர் வெள்ளை இனத்தவர். ஆனால் அவர் ஆசியரா? ஐரோப்பியரா, அமெரிக்கரா? அவுஸ்திரேலியரா? என்பது தெரியாது.

இலங்கையில் எனது கண்களை தாய்ப்பால் இட்டு சுகப்படுத்தியவர் ஒரு சிங்களப்பெண்.

கவிஞர் கண்ணதாஸன் கர்ணன் திரைப்படத்திற்காக எழுதியிருந்த பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.

கண்ணுக்கு குலம் ஏது? கருணைக்கு இனம் ஏது

நன்றி டமிழ்முரசு அவுஸ்ரேலியாhttp://www.tamilmurasuaustralia.com/2012/10/14-15.html#more

Edited by putthan

முருகபூபதியின் பதிவு 16 தான் சூப்பர் .

பெண்ணாசை ,மண்ணாசை பற்றியது .முடிந்தால் இணைக்கின்றேன் .

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சொல்லமறந்த கதைகள் 16 [/size]

[size=4]மனமாற்றமும் மதமாற்றமும்[/size]

[size=3]- முருகபூபதி – அவுஸ்திரேலியா [/size]

[size=3]மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான். என்று ஒரு திரைப்படப்பாடல் இருக்கிறது. இதனை இயற்றிய கவியரசு கண்ணதாஸன் கூட ஒருகாலத்தில் பகுத்தறிவுப்பாசறையில் வளர்ந்து நாத்திகம் பேசியவர்தான். ஆனால் காலப்போக்கில் ஒரு ஆத்மீகவாதியானார். சொர்க்கத்திற்குச்செல்லும்போது ஒரு கரத்தில் மதுவும் மறுகரத்தில் மாதுவும் இருக்கவேண்டும் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் பேசியும் எழுதியுமிருப்பவர். எனினும் அவர் மறைந்தகாலத்தில் அவரின் ஒரு கரத்தில் அர்த்தமுள்ள இந்துமதமும் மறுகரத்தில் யேசுகாவியமும் இருந்தன. மதநம்பிக்கை என்பது அவரவர் வாழ்வு சம்பந்தப்பட்டது. மனமாற்றம் போன்று மதமாற்றங்களும் தவிர்க்கமுடியாதவைதான். நீதிச்சட்டங்களினாலும் தடுத்துவிடமுடியாது.[/size]

[size=3]மதத்தை அவமதித்ததற்காக தண்டனை பெற்றவர்களும் நாடுகடத்தப்பட்டவர்களும் தலைமறைவாக வாழ்பவர்களும் உலகெங்கும் பேசப்பட்டிருக்கிறார்கள். ஈழத்தில் சங்கிலி மன்னன் காலத்தில் இந்து மதத்திலிருந்து விலகி கத்தோலிக்க மதத்தை தழுவிய குற்றத்திற்காக நூற்றுக்கணக்கானோர் மன்னார் கரிசல் பிரதேசத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டனர். இன்றும் அந்த மறைந்த ஆத்மாக்களுக்காக அங்கே தேவசாட்சிகள் தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெறுகிறது.[/size]

[size=3]கிழக்கிலங்கையில் பள்ளிவாசலில் புலிகளினால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நவாலி தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடந்து பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். யுத்தகாலத்தில் பல வழிபாட்டுத்தலங்கள் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன. ஓப்பரேஷன் புளுஸ்டார் நடவடிக்கையின்போது இந்தியாவில் பஞ்சாப் பொற்கோயில் தாக்குதலுக்குள்ளானது. தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள் சிலவற்றில் இந்துக்கோயில்களும் தீவைப்புக்கு இலக்காகித்தானிருக்கின்றன. ஆனால் இச்சம்பவங்களுக்கான காரணங்கள் வேறு.[/size]

[size=3]இனக்கலவரங்கள் போன்று மதக்கலவரங்களும் உளவியல் சார்ந்ததுதான். கடந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் உலகெங்கும் புதிய புதிய நோய்கள் தோன்றியிருப்பதுபோன்று புதுப்புது சமயங்களும் புதுப்புது சாமியார்களும் தோன்றிவிட்டார்கள். நோயாளிகள் மருத்துவமனைகளுக்கும் சாமியார்கள் நீதிமன்றங்களுக்கும் சென்றுவருகிறார்கள். ஊடகங்கள் செய்திகளை நகர்த்திக்கொண்டிருக்கின்றன. யூ டியூபுகளும் பரப்புரையில் ஈடுபடுகின்றன. அவுஸ்திரேலியாவில் பலவருடங்கள் வெளியான உதயம் ( தமிழ், ஆங்கிலம்) இருமொழி மாத இதழில் ஒரு செய்தி எனது சிந்தனையில் ஊடுறுவியது. செய்தி இதுதான்:-[/size]

[size=3]மெல்பன் மருத்துவமனையில் ஒரு முதிய இந்து தமிழ் அன்பர் நோயுற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். அது அவரது அந்திம காலம். அதனைத்தெரிந்துகொண்ட அவர் தேவாரம் திருவாசகம் தெரிந்த ஒருவரை வரவழைத்து தனக்கு அருகில் இருந்து பாடச்சொல்ல முடியுமா என்று தனது இறுதிவிருப்பத்தை அங்கிருந்த தாதியரிடம் சொல்லியிருக்கிறார். வேற்று மதத்தைச்சேர்ந்த தாதியர் அந்த அன்பரின் விருப்பத்தை நிறைவு செய்ய அவரது குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் தேவாரம் திருவாசகம் பாடத்தெரியாது. இங்கிருக்கும் பிரபல இந்துக்கோயிலுடன் தொடர்புகொள்ளச்சொல்லி தாதியருக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.[/size]

[size=3]தாதியரும் குறிப்பிட்ட பிரபல சிவா-விஷ்ணு கோயிலுடன் தொடர்புகொண்டு தேவாரம், திருவாசகம் தெரிந்த ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார்கள். “ இதுபோன்ற சமூகப்பணிகளில் தங்கள் கோயில் ஈடுபடுவதில்லை” என்ற பதில்தான் கிடைத்துள்ளது. அதனால் தாதியர் மட்டுமல்ல காலம்பூராவும் இந்து சமயத்தில் நம்பிக்கைவைத்து வாழ்ந்துவந்த அந்த அன்பரும் ஏமாற்றமடைந்தார். சில நாட்களில் அவர் இறைவனடி சேர்ந்தார். எனது வாழ்வில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தையும் இங்கு இச்சந்தர்ப்பத்தில் பதிவு செய்யவிரும்புகின்றேன். எனக்கு சிலவருடங்களுக்கு முன்னர் மாரடைப்பு வந்து சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சில நாட்களில், சத்திரசிகிச்சைக்காக நாள்குறித்துவிட்டு வீட்டுக்குச்சென்று ஓய்வு எடுக்குமாறு அனுப்பிவிட்டார்கள்.[/size]

[size=3] ஒருநாள் சிங்கப்பூரிலிருந்து எனது மனைவிக்குத்தெரிந்த ஒரு சாயிபாபா பக்தை மெல்பன் வந்து, என்னையும் பார்க்க வந்தார். எனது உடல்நலக்குறைவு பற்றி அறிந்தவுடன், தனக்கு முன்னே என்னை அமரச்செய்துவிட்டு பிரார்த்தனைசெய்தார். பிறகு சாயிபாபா தனக்குத்தந்த திருநீற்iறை ஒரு சிறியபையிலிருந்து எடுத்து எனது நெற்றியில் பூசிவிட்டு, சுகமாகிவிடும் சத்திரசிகிச்சையே அவசியமில்லை என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்.[/size]

[size=3]இந்த அதியற்புத அதிசய தகவலை எனது மருத்துவர்களுக்கு என்னால் சொல்லத்தான் முடியுமா? உரியநாளில் நானும் சத்திரசிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சத்திரசிகிச்சை திட்டமிட்டவாறு எந்த விக்கினமும் இல்லாமல் நடந்தேறியது. எனக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை அளித்த இருதயசிகிச்சை மருத்துவநிபுணர், தாம் வருடத்தில் சுமார் முன்னூறு பேருக்கு இந்த சத்திரசிகிச்சை செய்வதாகச்சொன்னார். அவரிடம் அந்த சிங்கப்பூர் சாயிபக்தையின் திருநீறு மகத்துவத்தை எப்படித்தான் சொல்வது? [/size]

[size=3]சரி, சிகிச்சை நடந்து மறுநாள் விசேட கண்காணிப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனது உடலில் ஆங்காங்கே ஓடிக்கொண்டிருக்கும் சிறிய குழாய்களும் வயர்களும் எங்கே தொடங்குகின்றன, எங்கே முடிகின்றன என்பதையும் பார்த்து ரசிக்க முடியாமல் விட்டத்தையே பார்த்துக்கொண்டு மல்லாந்து படுத்திருக்கின்றேன். எனது அருகில் மனைவி, என்னையே பார்த்துக்கொண்டு ஓய்வில் இருக்கிறாள். சிலநாட்களுக்கு எனது நச்சரிப்பு அவளுக்கிருக்காது என்ற ஆறுதல் அவளுக்கு இருக்கக்கூடும்.[/size]

[size=3]ஒரு மாலைநேரம்.[/size]

[size=3]எனக்கு முன்னே ஒருவர் தோன்றினார். எனது பெயரை சிரமப்பட்டு விசாரித்துக்கொண்டு வந்திருக்கிறார். அவுஸ்திரேலியாவில் எங்கள் பெற்றோர் சூட்டிய பெயர் பெரும்பாலும் வழக்கத்திலிருக்காது. எனது தந்தையின் பெயரையே ளுரச யேஅந ஆக பாவித்துவிடுவார்கள். அனுமதிக்கப்பட்டிருப்பது லெட்சுமணனா? அல்லது முருகபூபதியா? என்ற கவலையுடன் அவர் ஒவ்வொரு வார்டுகளையும் சுற்றியலைந்துவிட்டு வந்து எனது மனைவியிடம் எனது பெயரைக்கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு எனது கட்டிலருகே வந்தார். வந்தவரை அதற்கு முன்னர் நான் சந்தித்ததில்லை. அவரது கரத்தில் சிறிய வேதாகமப்புத்தகம். எனக்காக ஜெபம் செய்யவந்திருப்பதாகச்சொன்னார். [/size]

[size=3]சரிதான்... வீட்டுக்கு வந்தவர் திருநீறுடன் வந்தார். மருத்துவமனைக்கு வந்திருப்பவர் வேதாகமத்துடன் வந்திருக்கிறார். அடுத்து இனி யார் வரப்போகிறார்கள் என்ற கவலை நெஞ்சை அரித்தது. எரித்தது. எனினும் மீண்டும் மாரடைப்பு வராது என்ற நம்பிக்கையும் பிறந்தது. அவர் கண்மூடி ஜெபம் செய்தபின்பு, “ உங்களை இங்கே யார் அனுப்பியது?” என்று மெதுவாகக்கேட்டேன். எனக்கு நன்கு தெரிந்த ஒரு அம்மணியின் பெயரைச்சொன்னார். எனது சுகத்திற்கு ஜெபம் செய்துவிட்டு வருமாறு அந்த அம்மணிதான் சொல்லி அனுப்பியிருக்கிறார்.[/size]

[size=3] சிலநாட்களில் சுகமாகி வீடுதிரும்பியிருந்தேன். ஒரு நாள் பகல்பொழுது இரண்டு பெண்கள் தாம் ஜகோவாவின் சாட்சிகள் அமைப்பிலிருந்து வந்திருப்பதாக சொல்லிக்கொண்டு உட்பிரவேசிக்க முயன்றார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி திருப்பி அனுப்பிவிட்டேன்.[/size]

[size=3]அவர்கள் சென்றபிறகு மனைவியின் முகத்தைப்பார்த்தேன்.

“ பரவாயில்லை அக்கறையுள்ள பெண் ரசிகர்களை சம்பாதித்துவிட்டீர்கள்...” என்றாள்.

“ இதயச்சிகிச்சையின் பலன் இதயக்கனிகள்தானோ?” என்றேன். [/size]

[size=3]இத்தனை வேடிக்கைகள் வெளியுலகில் நடந்துகொண்டிருக்கையில், இவை எதுவுமே தெரியாமல் மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆய்வு கூடங்களிலும் பல மருத்துவர்கள், நிபுணர்கள் இரவு பகலாக கண்விழித்து சிகிச்சைகள் மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டு அமைதியாகவும் நிதானமாகவும் மனித உயிர்களை காப்பாற்றிக்கொண்டுதானிருக்கிறார்கள். [/size]

[size=3] இந்தச்சம்பவங்களின் பின்னணியில் நம்பிக்கை என்ற சிறுகதையை மல்லிகையில் எழுதியிருக்கின்றேன். அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்பு இங்குள்ள இரக்கமுள்ள அன்பர்களின் ஆதரவுடன் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியம் தொடங்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் வட-கிழக்கில் இந்திய அமைதிப்(?)படை நிலைகொண்டிருந்தது.[/size]

[size=3] வந்திருந்த படையினரில் சிலர் மச்சம் மாமிசம் சாப்பிடாதவர்கள். போரில் மனித உயிர்களை குடிக்கநேர்ந்தாலும் உணவில் மாமிசத்தை தவிர்த்துக்கொள்வதில் ஆச்சரியம் இல்லைத்தான். யூத இனத்தை வேரோடு அழிக்க முனைந்த ஹிட்லர் கூட மச்சம், மாமிசம் சாப்பிடவில்லை. [/size]

[size=3] குறிப்பிட்ட சில சைவபோசன இந்தியப்படையினருக்கு ஒருவேளை உணவு தந்த குற்றத்திற்காக ஒரு இந்துகுருக்கள் குடும்பத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் அச்சுவேலிக்கு சமீபமாக நடந்திருக்கிறது.[/size]

[size=3]அந்த இளம் தம்பதியரின் சில குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அநாதரவானார்கள். அவர்களின் சிறியதாயார் அக்குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்க நேர்ந்துள்ளது. எமது கல்வி நிதியத்திற்கு குறிப்பிட்ட சிறியதாயார் அத்தாட்சி ஆவணங்களை அனுப்புவதற்கு முன்னர் ஒரு ஏரோகிராமில் தங்கள் நிலை குறித்து சுருக்கமாக எழுதி அனுப்பியிருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒரு குழந்தையின் கல்விச்செலவை பொறுப்பேற்பதாகவும் கல்வி கற்கும் பாடசாலை விபரங்களை அனுப்பிவைக்குமாறும் பதில் எழுதியிருந்தேன். அந்தக்கடிதம் அந்த சிற்றன்னையின் கரத்தில் கிடைத்த தருணம் புலிகள்- இந்தியப்படைகளின் மோதல் உக்கிரமடைந்துவிட்டது.[/size]

[size=3]புலிகள் பிரேமாதாஸாவுடன் கொழும்பில் சந்திப்பு தொடங்கியதும், இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையின் இயக்கமும் முடிவுக்கு வந்து, இந்தியப்படைகளுடன் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் குடும்பத்துடன் திருகோணமலையிலிருந்து கப்பல் ஏறிவிட்டார். ஒரு முதலமைச்சரே கப்பல் ஏறும்பொழுது ஏற்கனவே புலிகளினால் பாதிக்கப்பட்ட அந்தக்குழந்தைகளும் சிற்றன்னையுடன் கப்பல் ஏறிவிட்டது அதிசயம் அல்ல. தமிழ்நாடு மண்டபம் முகாமுக்கு இடம்பெயர்ந்த அந்த சிற்றன்னை, மறக்காமல் தன்னுடன் எமது மாணவர் கல்வி நிதிய முகவரியையும் எடுத்துச்சென்று விரிவான கடிதமும் இதர ஆவணங்களும் அனுப்பியிருந்தார். அந்தக்குடும்பத்தில் ஒரு குழந்தையின் கல்விச்செலவை நான் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு ஒருதடவை பணம் அனுப்பிக்கொண்டிருந்தேன். அந்த சிற்றன்னை தங்களின் குடும்பப்பின்னணிகளையும் கடிதங்களில் எழுதிக்கொண்டிருந்தார். கடிதங்கள், கடவுள் துணை, முருகன் துணை, ஓம் சிவமயம் என்றுதான் தொடங்கியிருக்கும்.[/size]

[size=3]எமது கல்வி நிதியம் தொடர்ந்தும் சிறப்பாக இயங்குவதற்கு, தான் தினமும் கடவுளை பிரார்த்திப்பதாகவும் எழுதியிருப்பார். அக்கடிதங்கள் உணர்ச்சியின்பாற்பட்டது. உங்களை அண்ணா என்று அழைக்கட்டுமா? என்றெல்லாம் எழுதுவார். பாதிக்கப்பட்டிருந்தவேளையில் எங்கள் நிதியத்தின் சிறுஉதவி அவருக்கு பெரிதாகப்பட்டிருக்கிறது.[/size]

[size=3]சிலவருடங்களில் அந்தக்குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்துவிட்டது. எமது உதவியும் தொடர்ந்தது. ஒருசமயம் நானும் எனது நண்பர் ஒருவரும் சேர்ந்து அந்த சிற்றன்னைக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கிக்கொள்ள நிதியுதவி செய்தோம். அதன்பிறகு தமிழகம் சென்னைக்கு தலயாத்திரை சென்ற ஒரு குடும்ப சிநேகிதி ஊடாக அந்தக்குடும்பத்தினருக்கு உடுபுடவைகளும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தேன். அந்த சிநேகிதியும் நேரில் சந்தித்து தனது தரப்பிலும் உதவிகளை வழங்கிவிட்டு திரும்பி வந்து தகவல் சொன்னார்.[/size]

[size=3]இறுதியாக அந்தக்குடும்பம் சென்னைக்கு அருகில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்திற்கு சமீபமாக வசித்தார்கள். அக்காலப்பகுதியிலும் கடிதத்தொடர்புகள் இருந்தன. நிதியுதவியும் தொடர்ந்தது. படித்த பெண்ணான அந்தச்சிற்றன்னை தனது சுயமுயற்சியால் ஒரு மரக்காலையில் எழுவினைஞர்- தட்டச்சாளர் வேலையையும் பெற்றுக்கொண்டார். [/size]

[size=3]ஆரம்பத்தில் கடவுள் துணை, முருகன் துணை, ஓம் சிவமயம் என்றெல்லாம் தொடங்கும் கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தவரின் கடிதங்களில் திடீர் மாற்றம் அதிசயமாக நிகழ்ந்தது. இயேசு இரட்சிப்பார் என்று தொடங்கும் கடிதங்கள் வரத்தொடங்கியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இலங்கையில் வடக்கில் அச்சுவேலியில் இந்துக்கோயிலுக்கு பூமாலை கட்டிக்கொடுத்த குருக்கள் சமூகத்தில் வந்த பெண்ணில் ஏற்பட்ட அந்த மாற்றத்தின் பின்னணியை எனது படைப்பாளி, பத்திரிகையாளன் உணர்வு அறியத்துடித்தது. எனக்குக் கிடைத்த ஒரு பதிலில், கருங்கல்லினால் பிள்ளையார் சிலையும் வடிக்கலாம். அம்மிக்குழவியும் செய்யலாம் என்றிருந்தது.[/size]

[size=3]எனக்குப்புரிந்துவிட்டது. ஒரு சமயப்பிரிவினரால் மூளை சலவை செய்யப்பட்டு அவர் மதம் மாற்றப்பட்டிருக்கிறார். ஓடும் நீர் பள்ளங்களில் வந்து நின்று தேங்கிவிடும். பாதிக்கப்பட்டவர்களும் பற்றுக்கோல்களின் துணை நாடிவிடுவார்கள். இலங்கையின் வடக்கில் ஒரு காலத்தில் ஆலயத்திற்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டவர்கள் மதம் மாறிய கதையை நாம் மறந்துவிடமுடியாது. அதற்கு பலகாலத்திற்கு முன்னர் மன்னார் கரிசலில் மதம் மாறிய இந்துக்கள் பலர் சங்கிலிமன்னனின் ஆணைப்பிரகாரம் தங்கள் தலைகளை இழந்த வரலாற்றையும் மறக்க இயலாது. [/size]

[size=3]மதங்கள் புதிதுபுதிதாகத்தோன்றும். மதம்மாறும் படலங்களும் நீடிக்கும். நாத்திகவாதிகளும் பகுத்தறிவுவாதிகளும் ஆத்மீகவாதிகளும் தத்தமது வாதங்களை தொடரத்தான் செய்வார்கள். ஜெயகாந்தன் ஒரு சமயம் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.[/size]

[size=3]பகுத்தறிவுவாதிகளை பகுத்தறிவு காப்பாற்றட்டும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கடவுள் காப்பாற்றட்டும். [/size]

[size=3]thanks to Noel Nadesan[/size]

  • கருத்துக்கள உறவுகள்

விபத்து

xxx2.jpg?w=150&h=137சொல்லமறந்த கதைகள் 17

முருகபூபதி – அவுஸ்திரேலியா

இலங்கையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் இலங்கை வரலாற்றில் இடதுசாரிகளுக்கு படிப்பினையையும் பலத்த அடியையும் கொடுத்தது. அதற்குமுன்னர் 1970 இல் நடந்த தேர்தலின்போது முதலாளித்துவக்கட்சியான யூ.என்.பி.யின் தலைவர் டட்லிசேனாநாயக்கா சகல தேர்தல் பிரசாரக்கூட்டங்களிலும் பேசுகையில் இந்தத்தேர்தலில் இடதுசாரிகள் குத்துக்கரணம் அடிப்பார்கள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆனால் அந்தத்தேர்தலில் இடதுசாரிகள் அவர் சொன்னதுபோன்று குத்துக்கரணம் அடித்து தோல்வியை தழுவவில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அமோக வெற்றியை ஈட்டினார்கள்.

ஸ்ரீமா அம்மையாரை விட்டு 1976 இறுதிப்பகுதியில் விலகியதன் பின்னர் இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) மற்றும் லங்கா சமசமாஜக்கட்சியினர் இடதுசாரி ஐக்கியமுன்னணி என்ற அமைப்பைத்தோற்றுவித்து இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக களத்தில் இறங்கியபோதுதான் டட்லி சேனாநாயக்கா சொன்னதுபோன்று குத்துக்கரணம் அடித்து தோல்வியை தழுவிக்கொண்டார்கள்.

அக்காலப்பகுதியில் எனக்குள்ளும் இடதுசாரி சிந்தனைகள் துளிர்விட்டிருந்தது. நானும் தேர்தல் பிரசாரக்களத்தில் இறங்கினேன். எங்கள் நீர்கொழும்பில் நடந்த பிரசாரக்கூட்டங்களில் கலாநிதிகள் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி சில்வா ஆகியோருடனும் மேடையேறி தமிழில் பிரசாரம் செய்தேன்.

தீபம் எரிந்தாலும் பொங்கல் வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே… என்று ஒரு பாடல் துலாபாரம் படத்தில் வரும். அந்தப்பாடலை மாற்றிப்;பாடி இவ்வாறு பிரசாரத்துக்கு பயன்படுத்தி பாடினேன்.

‘யூ.என்.பி. வந்தாலும் ஸ்ரீலங்கா வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே…இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே….”

இந்த வரிகளை மேடையிலிருந்த தலைவர்களும் ரசித்தனர்.

எங்கள் ஊரில் சமசமாஜக்கட்சி வேட்பாளருக்காக தெருத்தெருவாக அலைந்து சந்திக்கு சந்தி கூட்டம் போட்டோம். தமிழ் பேசும் மீனவர் குடியிருப்பு பகுதிகளில் என்னை பேசவிட்டனர்.

குறிப்பிட்ட வேட்பாளர் தமது பிரசாரப்பணிக்காக ஒரு காரை தினக்கூலி அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தார். அதன் கூரையில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருக்கும். காரின் சாரதியும் இடதுசாரி ஆதரவாளர் என்பதனால் நன்கு ஒத்துழைத்தார். நாம் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் அவரது கார் எம்மை சுமந்து செல்லும்.

நகரின் மத்தியில் பொதுநூலகத்திற்கு முன்பாகவிருந்த மைதானத்தில், பொருளாதாரத்தில் தங்கமூளை என வருணிக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் கலாநிதி என்.எம். பெரேராவுடனும், கொச்சிக்கடை என்னுமிடத்தில் சட்டமேதை கொல்வின். ஆர். டி. சில்வாவுடனும் மேடையில் பேசினேன்.

ஒருநாள் ஏத்துக்கால் என்ற இடத்தில் தெருவோரத்தில் ஒரு சிறிய பிரசாரக்கூட்டத்தை முடித்துவிட்டு கடற்கரையோர வீதி வழியாக திரும்பிக்கொண்டிருக்கின்றோம்.

எதிரே ஒரு வாகனம் எமக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தது. வீதியோரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சில சிறுவர்கள் எமது ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட காரைக்கண்டதும் ஏதோ சினிமாப்பட துண்டுப்பிரசுரம் கிடைக்கப்போகிறதாக்கும் என நம்பிக்கொண்டு குறுக்கே வந்துவிட்டார்கள். முன்னால் சென்ற வாகனத்தில் மோதுண்ட ஒரு சிறுவன் அதன் டயரில் சிக்கிக்கொண்டான்.

எமது கார் சாரதி திடீர் பிரேக்போட்டு நிறுத்தினார்.

நாம் இறங்கி ஓடிச்சென்று அந்தச் சிறுவனை காப்பாற்ற முனைந்தோம். பாவம் அவன். அவனது ஒருகால் டயரின் கீழே பல்லி போன்று துடிதுடித்தான். அந்த வாகனத்தில் ஒரு சிங்களக் கனவானும் அவரது மனைவியும். அவர்கள் பதட்டத்தில் இறங்குவதற்குப் பயந்து வாகனத்துக்குள்ளேயே இருந்தனர். தெருவில் சனம் கூடிவிட்டது.

நானும் எமது வேட்பாளரும் சாரதியும் உடன்வந்த தோழர்களும் அந்த வாகனத்தை தூக்கி சிறுவனை வெளியே எடுத்தோம். அவன் மயங்கிவிட்டான். முழங்காலுக்குக்கீழே நைந்துவிட்டிருந்தது.

எங்கே ஊர்மக்கள் திரண்டு தம்மை அடித்து தாக்கிவிடுவார்களோ எனப்பயந்த அந்தக்கனவான் கிடைத்தது சந்தர்ப்பம் என்று வாகனத்தை மீண்டும் ஸ்டார்ட் செய்து பறந்தார். எமக்கு இது திகைப்பாக இருந்தது. மயங்கிக்கிடந்த சிறுவனையும் தூக்கிப்போட்டுக்கொண்டு அந்த கனவானின் வாகனத்தை விட்டுக்களைத்தோம். எமது வேட்பாளர் திலகம் மைக்கை எடுத்து சிங்களத்தில் உரத்த குரலில் அந்த வாகனத்தை பிடியுங்கள் தடுத்து நிறுத்துங்கள் என்று கத்தினார்.

ஏதோ சினிமாப்படக்காட்சிபோல இருந்தது. வீதியோரங்களில் ஊரே திரண்டு நின்று இந்த வேடிக்கையை பார்த்தது. ஆனால் யாரும் குறுக்கே பாய்ந்து நிறுத்தவில்லை.

கனவான் எங்களைவிட புத்திசாலியாக இரு

க்கவேண்டும். அந்த வீதியில் நேரே சென்றால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் வரும் என்பது அவருக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.

அவரது வாகனம் பொலிஸ் நிலைய முன்றலுக்குள் திரும்பியது.

இனியாவது நாம் புத்திசாலியாக இருக்கவேண்டாமா?

உடன் வந்த தோழர் ஒருவரை அங்கே இறக்கி, நடந்ததை பொலிஸிடம் சொல்லுமாறு கூறிவிட்டு மருத்துவமனைக்கு காரைத்திருப்பினோம்.

விபத்துக்குள்ளான சிறுவனை அரசாங்க மருத்துவமனையில் அனுமதித்தோம். சாரதியும் நானும் அவசர சிகிச்சைப்பிரிவில் நடந்ததை சொல்லிக்கொண்டிருக்கும்போது வெளியே வேடிக்கை பார்க்க வந்தவர்களிடம் எங்கள் வேட்பாளர் திலகம், நடந்ததை விலாவாரியாக தேர்தல் மேடையில் பேசுவதுபோன்றே சொல்லிக்கொண்டிருந்தார். தம்மை தொகுதி வேட்பாளர் என்றும் தவறாமல் அழுத்திச்சொன்னார்.

அந்த மக்களில் எத்தனைபேர் அவருக்கு வாக்களித்தனர் என்பது எனக்குத்தெரியாது.

சாரதியை மெச்சினேன். அவரது கார் ஓட்டம்தான் என்னை அப்படி மெச்சவைத்தது.

சாரதி மீது நான் தொடுத்த புகழாரங்களின் பின்னர் அந்தச்சாரதி சொன்ன தகவல்தான் அவரை மேலும் விழியுயர்த்தி பார்க்க வைத்தது.

அப்படி அவர் என்னதான் சொன்னார்?

“ தோழர்…இந்தக்கார் முன்பு யாருடைய பாவனையில் இருந்தது தெரியுமா? புத்தர கித்த தேரோ என்று ஒரு பிரபல பௌத்த பிக்கு இருந்தாரே…. முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொலைவழக்கில் ஆயுள்சிறைத்தண்டனை அனுபவித்து சிறையிலேயே செத்துப்போனாரே…அவர் பயன்படுத்திய கார்தான் இந்தக்கார். எப்படி ஓட்டம் பார்த்தீர்களா?”

“ஓட்டம்… எப்படி… எனச்சொன்னபோது கண்களை அவர் சிமிட்டினார். அந்தச்சிமிட்டலுக்கு காரணம் கேட்டேன். பண்டாரநாயக்கா கொலை வழக்கில் எதிரியாகவிருந்த அந்த தேரோவுக்கும் பண்டாரநாயக்கா அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவிருந்த விமலா விஜயவர்தனாவுக்கும் இடையே நீடித்த கிசுகிசு பிரசித்தமானது என்பதனால்தான் தான் கண்சிமிட்டியதாகச்சொன்னார்.

காயப்பட்ட அந்தச்சிறுவன் எப்போது குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினான் என்பதும் எனக்குத்தெரியாது.

பொலிஸில் சரணடைந்த அந்தக்கனவானுக்கு பிறகு என்ன நடந்தது என்பதும் எனக்குத்தெரியாது.

ஆனால், அந்த பொதுத்தேர்தலில் அனைத்து இடதுசாரிகளும் படுதோல்வியைத்தழுவி குத்துக்கரணம் போட்டது மாத்திரம் தெரியும்.

வீட்டிலே, என்னைப்பெற்றவர்கள் “ என்ன, உனது இடது எல்லாம் சரிந்துபோச்சுதே…” எனச்சொன்னார்கள்.

“ இதயம் உள்ளவன் இடதுசாரி.” என்றுசொல்லி இடது பக்கத்தில் இதயம் இருப்பதை தட்டிச்சொன்னேன்.

“ ஆமா… உங்களுக்கு மாத்திரம்தானா இதயம் இடதுபக்கத்தில். எல்லோருக்கும் இதயம் இடப்பக்கம்தான் என்பது கூடத்தெரியாத இடதுசாரி” என்று தங்கை எள்ளிநகையாடினாள்.

இடதுசாரி ஐக்கியமுன்னணி தலைவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்துகொண்டது எனக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது. 1977 பொதுத்தேர்தலில் தனித்து நின்றார்கள். பின்னர் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவவை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. அப்பொழுது கலாநிதி என். எம்.பெரேரா இல்லை. மறைந்துவிட்டார். சமசமாஜக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா நிறுத்தப்பட்டார். தமிழ்க்காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார்.

நான் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளனாக இருந்தேன். ஆனால் அந்தக்கட்சி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுவைத்தமையால் வெறுப்புற்று மக்கள் விடுதலை முன்னணியை ஆதரித்தேன். 1977 இல் ரோஹன விஜேவீரா, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட ஏராளமான தோழர்கள் சிறையிலிருந்து வெளியானதும் இவர்கள்தான் இனி உண்மையான இடதுசாரிகள் என நம்பி அவர்களுடன் இணைந்துகொண்டேன். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக தோழர் லயனலிடம் தெளிவிருந்ததும் அதற்குக்காரணம்.

அவர்களின் உத்தியோகபூர்வ பத்திரிகையான செஞ்சக்தியின் ஆசிரியர்குழுவிலும் பணியாற்றினேன். நண்பர் புதுவை ரத்தினதுரையின் சில கவிதைகளையும் செஞ்சக்தியில் பிரசுரித்தேன். சில பிரசுரங்களை மொழிபெயர்த்தேன். ஜனாதிபதித்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் தோழர் ரோகண விஜேவீராவுக்காக மேடை ஏறி பிராசாரம் செய்தேன்.

மீண்டும் அந்தப்பாடலை மேடைகள்தோறும் பாடினேன்.

அந்தத்தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு அநுரா பண்டாரநாயக்கா முன்வரவில்லை. ஆனால் சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணம் வரையும் சென்று பிரசாரம் செய்தார். மச்சானும் மச்சானும் பேசிக்கொள்வதில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது குடியியல் உரிமையை இழந்திருந்தார். அதனால் அவர் மேடையேறவில்லை.

என்னை இலக்கிய எழுத்துலகிற்கு 1972 இல் அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா ( அவர் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்) யாழ்ப்பாணத்தில் விஜயகுமாரணதுங்கவுடன் மேடையேறி ஹெக்டர்கொப்பேகடுவவுக்காக பிரசாரம் செய்தார்.

நான் தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் தோழர் ரோஹணவிஜேவீராவுக்காக பிரசாரம் செய்தேன். நானும் மல்லிகை ஜீவாவும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோது அரசியல் பேசுவதை முற்றாக தவிர்த்து இலக்கியமே பேசினோம்.

அந்த ஜனாதிபதித்தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தனா வென்றார். ஹெக்டர் இரண்டாவது இடம். ரோஹண மூன்றாவது இடத்தில் வந்தார். தேர்தலைத்தொடர்ந்து 1983 ஜூலையில் இனக்கலவரம் வெடித்தபோது, தர்மிஸ்டரின் ஆட்சி, அந்தக்கலவரங்களுக்கு இடதுசாரிகள்தான் காரணம் என்று சொல்லி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவற்றை தடைசெய்தது. ஆனால் கொல்வின் ஆர். டி. சில்வாவின் சமசமாஜக்கட்சி தடைசெய்யப்படவில்லை. அவர் ஜே.ஆரின். சட்டகல்லூரி நண்பர். ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் வெளியானதும் கொழும்பு நகர மண்டபத்தில் ஜே. ஆர். நன்றி தெரிவித்துப்பேசிய பின்னர் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தவர் கொல்வின் ஆர். டி. சில்வா. தேர்தல் மேடைகளில்தான் அவர்கள் எதிரிகள். மற்றும்படி அவர்கள் நல்ல நண்பர்கள். அந்த வலதும் இடதும் அப்படித்தான் தொடர்ந்தும் இருந்தார்கள்.

ஜனாதிபதித்தேர்தலில் ஜே.ஆர். அமோக வெற்றியீட்டியதையடுத்து பிரபல கேலிச்சித்திரக்காரர் விஜேசோமா வரைந்த படம் பிரசித்தமானது.

ஜே.ஆர். கராட்டி வீரராக கறுப்புப்பட்டி அணிந்துகொண்டு கைகளையும் கால்களையும் சுழற்றுகிறார். கொப்பேகடுவ, கொல்வின், விஜேவீரா, குமார் பொன்னம்பலம் ஆகியோர் தரையில் விழுந்து கிடப்பர். ஒரு மரத்தின் பின்னால் ஒரு புலி மறைந்துகொண்டு வேடிக்கை பார்க்கும். என்னால் மறக்கவே முடியாத ஒரு கேலிச்சித்திரம்.

பீட்டர்கெனமனின் தலையீட்டால் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை தளர்த்தப்பட்டது. ஆனால் ரோஹண விஜேவீரா உட்பட பல மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களும் தோழர்களும் தலைமறைவானதனால் அந்தக்கட்சியின் மீதான தடை தொடர்ந்து நீடித்தது.

நான் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தேன். அங்கே மல்லிகைஜீவா வரவேற்றார். அப்பொழுதும் நாம் அரசியல் பேசவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<p>

ஜே.ஆர். கராட்டி வீரராக கறுப்புப்பட்டி அணிந்துகொண்டு கைகளையும் கால்களையும் சுழற்றுகிறார். கொப்பேகடுவ, கொல்வின், விஜேவீரா, குமார் பொன்னம்பலம் ஆகியோர் தரையில் விழுந்து கிடப்பர். ஒரு மரத்தின் பின்னால் ஒரு புலி மறைந்துகொண்டு வேடிக்கை பார்க்கும். என்னால் மறக்கவே முடியாத ஒரு கேலிச்சித்திரம்.

இந்த கேலிச்சித்திரம் அந்த காலகட்டதில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஒன்று....

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.