Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே அந்த சொர்க்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அந்த சொர்க்கம்?

வற்றாத கடல், வாகான பாலம், வாசல் திண்ணை, வளைந்து கொடுக்கும் அப்பா, வாஞ்சையே வடிவான அம்மா, எளிய வாழ்க்கை, எதிர் வீட்டு மனிதர், அமைதியான தெரு, ஆலய மதில்கள், அறிவு புகட்டும் கலைக்கூடங்கள,; அலை உரசும் கடற்கரை, படகுச் சவாரி காலையில் கலகலக்கும் ஊர்ச்சந்தை, சோழகத்தில் சுழன்றாடும் பனைமரங்கள், பூமணத்தைச் சுமந்து வரும் தென்றல், விடலைகள் துள்ளி விளையாடும் கடற்கரை, குமரிகளின் கும்மாளச் சிரிப்பொலி, என்றென்றும் மனதை விட்டகலா மண்ணின் மணம் இவையனைத்தும் இன்று போரின் வடு சுமந்து, புன்னகையின் பொலிவிழந்து, வீதிகளில் வெறுமை படர்ந்து, நீர் வற்றிப்போன குளங்களை விட்டு பறவைகள் விலகிச் செல்வது போல எங்கள் ஊரின் எழில் குலைந்த பின் எச்சங்களாக மிச்சமிருக்கும் ஒரு சிலர். இன்னும் எங்கள் ஊர் இயங்குவதற்கான அடையாளமாக பிரமாண்டமான ஆலயங்கள் நான்கும் புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் நிமிர்ந்து நிற்கின்றன. புhடசாலைகள் சீரமைக்கப்பட்டு பல சவால்களையும் சமாளித்து தலை நிமிர்ந்து நிற்கின்றன.

முன்னொரு காலத்தில் ஈழத்தின் இணையற்ற இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாய் கடல்கடந்து வாணிகம் செய்ய பாதுகாப்பான காரணப்பெயராய் ஊர் காவல் துறை என்று பெயர் பெற்ற எம் ஊர் துறைமுகம் இன்று பூவும் பொட்டும் இழந்த விதவை போல் விரக்தி மண்டிக் கிடந்தது. வெண்மணல் விரிந்து அலை தவழும் கடற்கரை நாம் அன்று கட்டி விளையாடிய மணல் வீடுகளாய் சுவடிழந்து நாம் அணுகமுடியாத தூரத்தில் அதிதியாய் கிடந்தது. உறவுகளைப் பிரிந்து உயிர்மட்டும் சுமந்து வாழ்வதற்காய் வாழும் எம் மண்ணின் மைந்தர்கள் சிலர் இன்றும் எம் வரவு கண்டு பூரிக்கின்றனர்.

அழகும் அமைதியும் அன்பான சொந்தங்களுமாய் எங்கள் வீடு, எங்கள் கோவில், எங்கள் கிணறு, எங்கள் வீதி, எங்கள் வேலி என்று எல்லாமே எங்களதாய் சொந்தம் கொண்டாடி மகிழ்ந்த எங்கள் ஊர் எமக்கு அந்நியமாய் இன்னுமொரு நாட்டின் வதிவிட உரிமையுள்ள பிரஜைகளாய் வாழும் புலத்திலிருந்த வந்து பார்வையாளராக மட்டும் தரித்துச் செல்லும் ஓரு தங்குமடமாக மாறியது கண்டு மனதுக்குள் சொல்ல முடியாத சோகம். ஏதோ வழிதவறி வந்த ஆடுகளைப்போல எப்பொழுது மீண்டும் பண்ணைக்கடல் தாண்டி பத்திரமாய் நாடு திரும்புவோம் என்ற ஆதங்கம் வெளியே சொல்லா விட்டாலும் எம் எல்லோர் மனங்களிலும் மெலிதாக இழையோடிக்கொண்டிந்ததை மறுக்க முடியாது.

நாம் பிறந்து, வளர்ந்து, மண்ணில் புரண்டு, ஓடி ஆடி, விளையாடி, குறும்புகள் பல செய்து, சிறு சோறு சமைத்து, ஊஞ்சல் கட்டி ஆடி, தும்பி பிடித்து, நண்பிகளுடன் மாங்காய் பறித்துண்டு, பெற்றவர்களுடன் முற்றத்தில் நிலாச்சோறுண்டு, பருவத்தில் மலர்ந்து, மணம்வீசி, மணமாலை சூடி, மகவுகள் மடி சுமந்து, வாழ்வின் வட்டத்தில் பாதியைப் படித்து முடித்த எங்கள் ஊர் நினையாத நேரத்தில் எம்மை நெடுந்தூரம் அந்நியமாக்கிவிட்ட அவலம்.

1990களில் கலைக்கப்பட்ட நாம் 2012ல் மீண்டும் ஊர் போகும்போது ஏதோ ஒரு நிம்மதி, சந்தோசம், மனநிறைவு இருந்தாலும் எம் பெற்றவர் சோதரர் சுற்றம் சூழ வாழ்ந்த அந்த சந்தோசங்களை எல்லாம் தொலைத்தவர்களாய் எம் அன்னை தந்தை அன்போடு எம்மை அணைத்து வளர்த்த வீடு இன்று அலங்கோலமாய் நிற்கும் காட்சியைப் பார்க்கும் போது மனம் தாங்க முடியாத பாரத்தில் கனத்தது. “எங்கே எம் தந்தை?” அவர் கல்லறை கனத்தையில். “எங்கே எம் அன்னை?” அவர் கல்லறை கனடாவில். “எங்கே எம் அன்பான உறவுகள்?” ஒவ்வொருவரும் மீள முடியாத தூரத்தில். அனைவரும் முடிச்சவிழ்ந்த நெல்லிக்காய்களாய் திக்குத் திக்காய் திசை மாறிப் போய் விட்டனர்.

ஊருக்குள் உலவிய பொழுது அந்தநாள் ஞாபகங்கள் நெஞ்சில் அலைமோதி எம்மை அலைக்கழித்தது. ஆழியாத கோலங்களாய் எம்மை அலைக்கழித்த நிலையான நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி மீண்டும் மீள முடியாத வசந்தத்தை வாழ்வில் சந்திக்கும் வாஞ்சையுடன் நெஞ்சில் சுமந்த கனவுகளுடனும் கனத்த விழிகளுடனும் காவலூருக்கு கையசைத்து விடை பெற்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும், இந்த வெறுமையை உணர்ந்தேன்!

இடுப்பிலும், தலையிலும், தண்ணீர்க் குடம் சுமந்து, எமது ஊர்ப் பெண்கள், தங்களுக்குள் பேசிச் சிரித்தபடி, நடந்து செல்லும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்!

தண்ணீர் சுமந்து வரும், வண்டில் மாடுகள் கூட, அவர்களைப் பார்த்துக் கண்ணடிக்கும்!

தண்ணீரும் இருக்கிறது! அதைத் தாங்கிச் சென்ற குடங்களும் இருக்கின்றன!

ஆனால், வெறுமையாய், உயிர்த் துடிப்பின்றி, அசைவுகளில், அந்த நடனம் இன்றி..............

வெறுமை மட்டும், பார்க்குமிடமெல்லாம், நீக்கமற நிறைந்திருக்கிறது!

ஏக்கம் தாங்கிய விழிகள், எதிர்பார்ப்புகள் எல்லாம், காற்றில் கரைந்து போய் விட்ட வெறுமை மட்டும்!

மாடுகள் கூட, ஏனோ தானோ என்று புல்லை மேய்வது போல ஒரு மனப்பிரமை........

மருத்துவர் சொல்லிவிட்டார் என்பதற்காக, மனமின்றி குளிசையை விழுங்குவது போல!....வாழ்வு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

;

நீங்கள் சொன்னதுபோல் வெறுமை மட்டும் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

வீதிகளெல்லாம் குறுகலாகி

வீடுகளெல்லாம் வெறுமையாகி

ஊர்நிலை எல்லாம் உருவம்மாறி

காணிகள் எல்லாம் புதர்களாகி

வெறுமை என்றால் அப்படியோர் வெறுமை.

நன்றிகள் புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள் போர்தான உங்களை அங்கிருந்து வெளியேற்றியது?

உங்கள் ஊர் உங்கள் வரவைக்காக காத்திருக்கிறது...விடுமுறைகளைத்தன்னும் அங்கே களியுங்கள். முகப்pu புத்தகத்தில் "கோம்பை" குடிக்கிறவர்கள், அங்கே குடித்தால் ஒருவர் இருவர் காலைச்சாப்பாடு சாப்பாடு சாப்பிட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்குப்பின் உள்ளடங்கியிருந்த உங்கள் எழுத்துக்கள் முகங்காட்டுகின்றன தோழீ

அப்பாவின் கல்லறை கனத்தையிலும் அம்மாவின் கல்லறை கனடாவிலும் ஈழத் தமிழினத்தின் அவலங்கள் கல்லறைகளைக்கூடப் பிரித்துவைக்கின்றன. ஏக்கம் நிறைந்த எழுத்துக்களில் உங்கள் உணர்வின் சிதறல்கள் வெளிக்கிளம்பியிருக்கின்றன. தொடருங்கள். :rolleyes:

போருக்கு அள்ளி அள்ளி காசை கொடுத்துவிட்டு எல்லாம் அழிந்து போய்விட்டது என்பது இப்போ பலரது ஆதங்கம் .

போர் என்றாலே அழிவுதான் .முப்பது வருடமாக நாமே அதை நடாத்திவிட்டு இப்போ முடிந்ததற்கும் மனவருதப்படுகின்றோம் .விடுமுறைக்கு போகின்றவர்களுக்கு அழிவுகளை பார்க்கவே இவ்வளவு கஷ்டமாக இருந்தால் அங்கு வாழ்ந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.