Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்களுமா நுஃமான்? எதிர்வினை: இரவி

Featured Replies

எதிர்வினை

நீங்களுமா நுஃமான்?

biggerfont.png smallfont.png

வெப்பியாரத்துடன்தான் இதை எழுதத் தொடங்குகிறேன். ‘நீங்களுமா நுஃமான்?’ என்ற ஒரு வாக்கியம்தான் என்னுள் எழுகிறது. மானிட விரோதிகள் என்று என்னால் உணரப்படுபவர்கள் எவரின் கருத்துக்கும் நான் எதிர்வினையாற்றுவதில்லை. நுஃமான் சேர் என்றவுடன் என்னால் எதிர்வினையாற்றாமல் இருக்க முடியவில்லை. சொல்லுங்கள் நுஃமான் சேர், முள்ளிவாய்க்கால் துயர் ஒரு துளிதானும் உங்களை அசைக்கவில்லையா? நீங்கள் மக்கள் கவிஞர், மார்க்சீயவாதி என்ற பெயர் எல்லாம் எடுத்தவர். என் ஆதர்சங்களில் ஒருவராக உங்களை நான் வைத்திருந்தேன். நீங்களுமா நுஃமான்? பிழையையாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்று கணக்குப் போடுகின்றீர்களே இதுவா கவிஞரின் வேலை? ஓர் இனம் அதுவும் உங்கள் சக இனம் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது. அது பற்றிய எவ்வித அக்கறையும் அற்று நக்கலடிக்கிறீர்கள். உங்களில் நாங்கள் ஏமாந்து போகிறோம்.

‘நுஃமான் மாமா இல்லாத தமிழீழம் எங்களுக்கு வேண்டாம்’ என்று சொன்னார் கவிஞர் சேரன். ஏதோ ஓர் உரையாடலில் சடக்கென்று வந்து போனது அந்த வாக்கியம். 1991 ஒக்டோபரில் யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். அதனையொட்டியே சேரனிடமிருந்து கசந்துபோன இவ்வார்த்தைகள் வந்தன. பின்னர் சரிநிகர் பத்திரிகை முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் குறித்து ‘தேசியத் தற்கொலை’ என்று எழுதியிருந்தது. எழுதியது சேரனா எஸ். கே. விக்கேஸ்வரனா என்று தெரியவில்லை. தெரியவும் தேவையில்லை. ஏனென்றால் அது எங்கள் எல்லோரினுடைய வாக்கியம்.

அப்போது நான் கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கற்பித்துக்கொண்டிருந்தேன். பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயங்காத அச்சமயம்; கிழமைதோறும் 100 மைல் தூரம் சைக்கிள் உழக்கினேன் - துணைவியாரையும் ஏற்றிக்கொண்டு. அந்நாட்களில் ஓர் இரவு கிளிநொச்சிக்கு நாம் பயணம் செய்தவேளை யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களும் கூட்டம் கூட்டமாக ஓலத்துடனும் ஒப்பாரியுடனும் அப்போது பயணம் செய்தனர். மழைக்காலத்தின் அந்த இரவு மிக மிகக் கொடியது. என் வகுப்பில் எப்போதும் முதல் பிள்ளையாக வருகின்ற பிர்தௌசையும் அந்த நாளின் பிறகு நான் காணவில்லை. அப்போதெல்லாம் என் துயர் கட்டுக்கடங்காமல் போயிற்று.

அந்த நாட்களில் அதிகம் உணரவில்லை என்றாலும், மிகச் சில நாட்களிலேயே அதை உணர்ந்தேன் ‘நுஃமான் சேரும் இனி யாழ்ப்பாணம் வர முடியாது’ என்பதை. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் (அதன் சரியுடனும் தவறுகளுடனும் அது ஒரு விடுதலைப் போராட்டம் என்றே இப்போதும் உளமார நம்புகிறேன்.) நுஃமான் சேரும் சில விலைகளைக் கொடுத்திருக்கிறார்.

1982 ஜனவரி இரண்டாம் நாள் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டருக்கு முன்னாள் உள்ள சித்திரா அச்சகத்தில் வைத்துத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (புளொட்) சேர்ந்த சுந்தரம் என்பவரைத் தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக் கொலை செய்தனர். சுந்தரம் புதிய பாதை என்ற அரசியல் பத்திரிகையை அச்சடிப்பதற்காகவே அங்கு வந்திருந்தார். சக இயக்கப் போராளிமீதான முதலாவது அரசியல் படுகொலை அது. தமிழ்த் தேச உணர்வாளர்கள் இடையே அது ஏற்படுத்திய அதிர்வலை இன்னமும் கூட அடங்க மறுக்கிறது.

ஆனால் அது நடந்து ஒரு கிழமைக்குள்ளாகவே ஒரு சிலரிடம் அது அடங்கிப்போயிருந்தது. அந்த ஒரு சிலர் தங்கள் நலன் கருதித் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்திருந்த தமிழ் புத்திஜீவிகள். அவர்களில் ஒருவரான நிர்மலா (அப்போது நிர்மலா நித்தியானந்தன்) ‘இந்தக் கொலை செய்யப்பட வேண்டியதுதான். ஆனால் அச்சகத்தில் வைத்து அதைச் செய்திருக்கக் கூடாது’ என்று எனக்கும் தோழர் விசுவிற்கும் சொன்னார். இன்னுமொரு தமிழ் புத்திஜீவி ‘துரோகத்தின் பரிசு’ என்று தலைப்பிட்டு அப்படு கொலையை நியாயப்படுத்தி விடுதலைப்புலிகளின் பெயரில் துண்டுப்பிரசுரம் எழுதிக் கொடுத்தார். ஆனால் அதே புத்திஜீவிகள்தாம் ஜனநாயகத்தின் பெயரிலும் கருத்துச் சுதந்திரத்தின் பெயரிலும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தபடி சிங்கள பௌத்த பேரினவாத அரசைக் கட்டித் தழுவிக் கபட நாடகம் ஆடுகின்றார்கள்.

‘அச்சகத்தில் வைத்துச் செய்திருக்கக் கூடாது’ என்று நிர்மலா சொன்னதன் காரணம் அதே சித்திரா அச்சகத்தில் நிர்மலாவின் நண்பரான நுஃமான் சேர் மொழிபெயர்த்த பலஸ்தீனக் கவிதைகள் நூல் அச்சிடப் பட்டுக்கொண்டிருந்தமையே. தமிழ் மக்களின் அரசியலிலும் பார்க்க நுஃமான் சேரின் நட்பு முக்கியப்பட்டிருக்கிறது நிர்மலாவிற்கு. ‘இவர்களும் மனிதர்களே’ என்ற வாக்கியத்துடன் இதைக் கடந்து அப்பால் போவோம்.

நுஃமான் சேர் மொழிபெயர்த்த பலஸ்தீனக் கவிதைகளின் பல வரிகள் அப்போதைய போராட்டத்தில் இணைந்த பலருக்கு உந்துவிசையாக அமைந்தன. சில கவிஞர்களை உரு வாக்கியதும் பலஸ்தீனக் கவிதைகள் என்பது என் தற்துணிபு. நாங்கள் அப்போது யாழ்ப்பாணக் கிராமங்கள் தோறும் நடாத்திய ‘கவிதா நிகழ்வின்’ பெரும்பரப்பைப் பலஸ்தீனக் கவிதைகள் ஆக்கிரமித்திருந்தன. எம்மை அக்கவிதைகள் நெருங்கியமைக்குக் காரணம் ‘பலஸ்தீன மக்களின் துன்புற்ற ஆன்மாவின் உண்மையான குரலாக இவை ஒலிப்பதே’ என்பேன். நம் ஈழதேச மக்களை அதில் நாம் இனம் கண்டோம்.

இன்னொன்றையும் இதில் குறித்துக் கொள்ளல் சாலும். 1985இல் யாழ். குடா நாடு எங்கும் பரவலாக மேடை ஏற்றப்பட்டுச் சில இலட்சம் பார்வையாளர்களைத் தம்முள் ஈர்த்துக்கொண்ட மண் சுமந்த மேனியர் (பிரதி: குழந்தை. ம. சண்முகலிங்கம், நெறியாள்கை. க. சிதம்பரநாதன்) என்ற நாடகத்தில் பலஸ்தீனக் கவிதையின் வரிகள் இடையிடையே வந்துபோயின. அந் நேரம் பார்வையாளர் அக்கவிதைகளைத் தம்மீது எழுதப்பட்ட வரிகளாகப் பார்த்துக்கொண்டனர். அந்நாடகத்தில் இடம்பெற்ற முகமட் தர்வீஸ்ஸின் கவிதை வரிகள் இவை.

‘எனது கண்கள் இருக்கும்வரை, எனது கைகள், எனது உதடுகள் இருக்கும்வரை எனது தன்னுணர்வு இருக்கும்வரை விடுதலைக்கான பயங்கரப் போரை எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன; சுதந்திரமான மனிதர்கள் பெயரால் தொழிலாளர்கள், மாணவர்கள், கவிஞர்கள் பெயரால் நான் பிரகடனம் செய்வேன்’

நுஃமான் சேர் மொழிபெயர்த்த இக்கவிதைகளை நான் இப்போது உச்சாடனம் செய்கின்றபோது என் உடல் சிலிர்ப்புக்குள்ளாகிறது.

நாம் ‘கவிதா நிகழ்வு’ நடாத்திய கிராமங்களில் மக்கள் ஒரு கவிதை கேட்டு உருகி நின்றனர். அவ்வாறு உணர்வு தெறித்துக்கிடந்தது அக் கவிதையின் மொழிபெயர்ப்பு. முகமட் தர்வீஸ் எழுதிய கவிதை அது.

‘இரங்கற்பா’ என்பது தலைப்பு

கண்ணீரை, சோகத்தை கஷ்டங்களைவிடப் பெரிய காயத்தைத் தரும் கவிதை அது. இப்படி முடிகிறது அக்கவிதை.

‘நான் எனது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன். குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன். அன்புள்ள நண்பனே, அவன் எப்போது வருவான் என்று கேட்காதே மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள் என்று மட்டும் கேள்.’

இவற்றையெல்லாம் நான் சும்மா எழுதவில்லை. ஏன் எழுதுகிறேன் என்றால் நுஃமான் சேர் தொடங்கிய இடம் எது, இப்போது வந்து சேர்ந்திருக்கும் இடம் எது என்பதைப் புரிய வைக்கவே.

சுந்தரம் படுகொலையின் பிறகு சித்திரா அச்சகத்தைச் சோதனையிட வந்த சிங்களக் காவல் துறை பலஸ்தீனக் கவிதைகள் நூலைக் கைப்பற்றுகிறது. கவிதைகளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து வாசித்த பின்னர் நுஃமான் சேரை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது. நுஃமான் சேர் தான் தமிழ்ப் போராளிகளின் வழிகாட்டி என்பது சிங்களக் காவல் துறையின் பார்வை. நான் நம்புகின்றேன் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கவிதை என்னும் ஆயுதத்தைக் கையில் வைத்திருந்ததாகக் கைதுசெய்யப்பட்ட முதல் போராளி நுஃமான் சேராக இருக்கும் என்பது. முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டபோது இந்த நுஃமான் சேர் இனி யாழ்ப்பாணம் வர முடியாது என்று எண்ணிச் சாம்பிப்போனோரில் நான் முக்கியமானவன்.

தமிழ்ப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் காலச்சுவடு நேர்காணலை கண்டுற்றபோது நான் அடிபெயர்ந்தேன். சடசடவெனச் சில மறுக்கப்பட முடியாத, கசப்பான உண்மைகள் என்னில் ஏறின. இலங்கை முஸ்லிம்களுள் பெரும்பான்மையோர் அடிப்படைவாதிகள் என்பது உறுதிப்பட்டது. அதற்கு நுஃமானும் விதிவிலக்கு அல்ல. அல்லாவின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாதிருக்கக்கூடும். மாசேதுங்கைப் பெரும் மார்க்க அறிஞராகக் கருதவும் கூடும். ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து அவரால் விலகி நிற்க முடியவில்லை

.

‘புலிகள் மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டு நந்திக்கடலில் குதித்துவிட்டனர்’ என்று நுஃமான் எழுதுகின்றபோது அது வஞ்சகன் ஒருவனின் வார்த்தையாக எனக்குப் பட்டது. நுஃமான் சேரிடம் நான் இதை எதிர் பார்க்கவில்லை. நானும் பூதக்கண்ணாடி வைத்துத் தேடிப் பார்த்தேன். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டோர்மீது ஒரு துளிக் கண்ணீராவது நுஃமான் சிந்துகிறாரா என்று. நுஃமான் செய்தது பிழையை யாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்பதைத்தான். இதுவே பலஸ் தீனத்தில் நடந்திருந்தால் என்னவாக இருக்கும்? பலஸ்தீனக் கவிதைகள் இன்னொரு பாகம் வந்திராதா?

‘எழுதிக்கொள் இதனை நான் ஓர் ஈழத்தமிழன் தொழிலாளர்களுடன் கற்களை உடைக்கிறேன் கற்பாறைகளை கசக்கிப்பிழிகிறேன் ஆயினும் கருணை கேட்டு நான் இரந்திடமாட்டேன் உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ் முழந்தாளிட்டு நான் பணிந்திடமாட்டேன் எழுதிக்கொள் இதனை நான் ஓர் ஈழத்தமிழன்.’

இதை முகமட் தர்வீஸ் எழுதுகிற போது இரசித்து சிரித்து மகிழ்கிற உங்களால் ஈழத் ததமிழர் இவ்வாறு நிமிர்கின்றபோது கோபம் வருவது எதனால்?

நம்புங்கள் நுஃமான், பலஸ்தீனக் கவிதை என நீங்கள் மொழிபெயர்த்த அத்தனை வரிகளுடனும் ஈழத் தமிழர் வாழ்வும் போரும் வேதனையும் ஒன்றாகிப்போயின. ஆனால் நீங்களும் உங்களைப் போன்ற மார்க்சீயர் சிலரும் ‘அட்டூழியம் செய்யும் எலிகளை அழிப்பதற்காகப் பட்டடையில் இன்னமும் படுத்துக்கொண்டிருக்கின்ற பூனைகளாக’ இருக்கிறீர்கள். எங்கள் போரில், எங்கள் இயக்கத்தில், எங்கள் நெறி முறையில் சிற்சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். உங்கள் பார்வையில் மோசமான பயங்கரவாதச் செயலாகவும் அது அமைந்திருக்கலாம். பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திலும் சிற்சில தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. இஸ்ரேலின் பார்வையில் அவை மோசமான பயங்கரவாதச் செயல் என வாசிக்கப்படும் தேவையும் உண்டு. அத்தேவை உங்களுக்கு ஏன் வந்தது என்பதை என்னால் புரிய முடிகிறது.

ஈழவிடுதலைப் போராட்டத்தைக் குறுகிய கண்ணோட்டத்திலும் கொச்சைப்படுத்தும் நோக்கிலும் ‘யாழ்ப்பாண மையவாதச் சிந்தனை’ என்கிறீர்கள். உங்களளவு எனக்கு அரசியல் பார்வை கிடையாது. நீங்கள் மார்க்சையும் மேவி மாவோயிசப் பார்வை கொண்டவர். ஆயினும் என் சிற்றறிவுக் கெட்டியவரை சொல்கிறேன், கிழக்கு மாகாண எல்லைப்புறக் கிராமங்களுக்கே தமிழீழம் அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்பட்டது. அங்குதான் தமிழ் மக்கள் தம் அடையாளத்தை இழக்கின்றனர். தம் நிலத்தைப் பறிகொடுக்கின்றனர். இப் போதும் பாருங்கள் இராஜதுரையோ கருணாவோ பிள்ளையானோ யாவரும் எவ்வளவோ பிரதேசவாதம் பேசிய போதும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தில் உறுதிபட நிற்பதனைத் தேர்தலில் அவர்கள் இடும் புள்ளடிகள் நமக்கு அறிவிக்கின்றன. தமிழீழக் கோரிக்கையை யாழ்ப்பாண மையச் சிந்தனை என்று கூறுவதன் மூலம் நீங்கள் யாருக்குச் சேவகம் செய்ய முனைகின்றீர்கள் என்பது எமக்குப் புரியாத ஒன்றல்ல.

மேலும் ஒன்று கூறுகின்றீர்கள், தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தின் தோற்றுவாய், தரப்படுத்தல் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வன்முறையை நோக்கி அவர்களை ஆற்றுப்படுத்தினர் என்றும் கூறினீர்கள். இதனூடாகக் காலாதிகாலமாக இலங்கையின் இடதுசாரிகள் ஊதும் வாக்கியம் இன்னமும் உங்களை விட்டுப் போகவில்லைபோல் தெரிகிறது.

தந்தை செல்வா முயன்றெடுத்த அகிம்சை வழிப் போராட்டம் தோல்வியுற்று ‘தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கை விரித்ததையும் நீங்கள் அறியாவிட்டாலும் காலம்அறியும். நிலத்தை இழந்து பின் மொழியை இழந்து பின் பண்பாட்டையும் இழந்த பின்னர்தான் எதிரிக்கு எதிரான பயங்கரப் போரைத் தமிழ் மக்கள் பிரகடனம் செய்தனர். மேலும் அகிம்சைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாகப் பரிணமிக்கவைத்த சிவகுமாரன், பிரபாகரன், தங்கத்துரை, உமா மகேஸ்வரன், குட்டிமணி போன்றோர் பல்கலைக்கழகம்புக கியூவில் நின்று, பின்னர் அது கிடையாமையால் ஏமாந்து கலைந்துபோனவர்களாகவும் நான் அறியேன். விசாரித்தளவில் இவர்களில் ஒருவரும் க. பொ. த. உயர்தர வகுப்புகூடக் கற்கவில்லை. மேலும் அப்போது சிங்களச் சிறைகளை நிரப்பிய தமிழ் இளைஞர்களான காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், புஷ்பராஜன், சந்ததியார், கலாவதி போன்ற நூற்றுக்கணக்கானோரும் பல்கலைக்கழக அனுமதியில் ஏமாந்தோர் அல்லர். மேலும் கிழக்கு மாகாண, மலையகத் தமிழ் இளைஞர்களும் இத்தரப்படுத்தலால் சாதகமடைந்தனர் என்று நுஃமான் வாக்குமூலம் தருகிறார். அப்படியாயின் கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவினரும் மலையகத்திலிருந்து சிறு அளவிலேனும் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்ததன் காரணம் என்ன? அரசியல் தெரியாமல், நுஃமான் இதைக் குறித்தார் என்பதை நம்ப முடியவில்லை.

‘தேசைக் கடை, மசால் வடை, அப்பிட்ட எப்பா’ (தோசைக்கடையும், மசால் வடையும் எங்களுக்கு வேண்டாம்) என்று கொட்டு முழக்கிட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம் இவர்கள். இவர்களால் முப்பது ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தின் விளைவைப் புரிந்துகொள்ள முடியாது என்று அல்ல, ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் இந்த முப்பது ஆண்டுக் கால ஆயுதப் போராட்டத்தைத் தம் வாழ்விலிருந்து அழித்துவிடவே முயல்வர். ஆனால் வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது.

நமது தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் (நமது தேசியத் தலைவர் என்று சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் கிடையாது பெருமையே உண்டு) தமிழ்த் தேசியத்தின் ஓர்மமான உச்சமான ஓர் குறியீடு. மக்கள் முட்டாள்கள் அல்லர். அதை நமக்குச் சொல்லித் தந்தது மார்க்சியம். ஆனால் மக்களை வழிநடாத்துகிறோம் என்று சொன்ன மார்க்சீயர் பலர் முட்டாள்களாக இருந்ததை நாம் வரலாறு நெடுகிலும் காண்போம். முட்டாள்கள் அல்லாத, உலகத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் பிரபாகரனைத் தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டதை நாம் அறிவோம்.

ஆனால் அவர் தவறே விடமாட்டார்; தவறே செய்யாதவர் என்று அல்ல. ஒரு செயலும் செய்யாதவர்தாம் தவறு விடும் சந்தர்ப்பத்துக்கு ஆட்படுவதில்லை. ஆனால் பெருங்காரியங்கள் நிகழ்த்துபவர்கள்தாம் பற்பலத் தவறுகள் விடும் சந்தர்ப்பம் உண்டு. நம் தேசியத் தலைவர் காலத்தைச் சரிவரக் கணிக்கவில்லையோ எனும் சம்சயம் எனக் குண்டு. ஆயினும் அதை உறுதிபடக் கூற முடியவில்லை.

ஆனால் அவர் இழைத்த தவறுகளில் மகாத்தவறு என்று யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதைத்தான் கூறுவேன். வேறு சக்திகள் அதன் பின்னணியில் இருந்தன என நான் அறிகின்றேன். ஆயினும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் பிரபாகரன். அதேசமயம் அத்தவறுகளுக்காகச் சில காரியங்கள் ஆற்றி பிரயாச்சித்தம் தேடிக்கொண்டவர் பிரபாகரன் என்றும் நான் அறிகிறேன். ஆயினும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் படுகொலையை இதனுடன் என்னால் ஒப்பிட முடியாது. ‘பிழையை யாருக்குப் பிரித்துக் கொடுப்பதல்ல’ என் நோக்கம். அப்படுகொலைகளுக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களும் பொறுப்பேற்க வேண்டும். நுஃமானின் நேர்காணல் காலச்சுவடில் வந்த சமயம் எழுத்தாளரும் நண்பருமான உமாவரதராஜன் லண்டனில் தங்கியிருந்தார். என்னிடம் மிகுந்த கவலையுடன் ஒன்றைக் குறிப்பிட்டார். ‘காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைகளைப் பற்றி எல்லாம் இவர்கள் பேசுகிறார்களே சரிக்குச் சமமாக முஸ்லிம் ஊர்க்காவல் படை யாலும் முஸ்லிம் காடையர்களாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றி நுஃமானால் ஏன் பேச முடியாமல் போயிற்று?’ உமா வரதராஜன் கிழக்கு மாகாணக் கல்முனை நகரில் வசிக் கின்ற தமிழன் இதற்கு மேலும் நான் எதைக் கூற?

ஒன்றை நம்புங்கள் நுஃமான். முப்பது வருட ஆயுதப் போராட்டம்தான் ஈழத்தமிழர் இன்னல்களை உலகெங்கும் பேசுபொருளாக்கி இருக்கிறது. சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் அட்டுழியங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றது. உன்னதத் தலைமை ஒன்றினால்தான் அது சாத்தியமாகியிருக்கிறது.

தமிழ் மிதவாதிகளாலேயோ உங்களைப் போன்ற இடதுசாரிகளாலேயோ அல்ல. தமிழ் மிதவாதிகளாவது தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்று ஒப்புக்கொள்கின் றார்கள். இடதுசாரிகள் அதைக்கூட ஒப்புக்கொள்ளவில்லை. உலகத் தொழி லாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்திலிருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை. என்றாலும் கேட்கின்றேன். ஈழத்தமிழர்களுக்குரிய தீர்வாக நீங்கள் காட்டும் மார்க்கம் என்ன? ஏனென்றால், இவ்வளவு அரசியல் பேசுகின்றீர்கள் இதையும் பேசத்தானே வேண்டும்.

சிரிப்பின் வஞ்சக அரசியல்

‘எங்கள் மத்தியில் இன்னுமோர் கும்பல் எஞ்சியுள்ளது அவமானத்தை அது சாப்பிடுகின்றது தலைகுனிந்து நடந்து செல்கின்றது அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள் எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனை எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்? ’

ரஷித் குசைன் எழுதி நுஃமான் மொழிபெயர்த்த இப்பலஸ்தீனக் கவிதை வரிகள் இப்பொழுது என் நினைவில் அடிக்கடி மின்னுகின்றது. ஆனால் சிரிப்பு வரவில்லை.

‘வன்னிக்குள் காலச்சுவடு வந்த கதை’ சொல்ல முற்பட்டபோது ஓயாது சிரித்ததனால், கருணாகரனால் கதை சொல்லி முடிக்கவே முடியாமல் போயிற்று. மீதிக் கதை எங்கே என்று நாங்கள் பக்கங்களைப் புரட்டியதுதான் மிச்சம். கதை தொடங்கக்கூட இல்லை. கதை சொன்னாரோ இல்லையோ? கருணாகரன் ஒன்றில் வெற்றி கண்டுவிட்டார். ஜோர்ஜ் ஓவெல்லின் 1984 நாவலின் கதைக்களத்தை வன்னிக்கு இடம் மாற்றி இருந்தார். ஆனால் ஓயாத சிரிப்பின் வஞ்சக அரசியல்தான் என்னிடம் சில கேள்விகளை மிச்சம் வைக்கின்றன.

ஈரோஸ் இயக்கத்திலிருந்து விடு தலைப்புலிகளுடன் இரண்டறக் கலந்தவர் இந்தக் கருணாகரன். 1992ஆம் ஆண்டு (என்று நினைக்கிறேன்) ஈரோஸ் இயக்கத்தைக் கலைத்துவிட்டு விடுதலைப் புலிகளுடன் சேருமாறு அழைப்பு வருகிறது. நாக்குளிப் புழுவை (மண்புழு) இரண்டு துண்டாக வெட்டினால் எப்படி இரண்டு துண்டுகளும் இயங்குமோ அவ்வாறு சிங்களப் பிர தேசத்திலிருந்த ஈரோஸ் இயக்கத்தினர் சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து கொள்கின்றனர். தமிழ்ப் பிரதேசத்திலிருந்த ஈரோஸ் இயக்கத்தினர் விடு தலைப்புலிகளுடன் இணைந்துகொள்கின்றனர். அப்படி விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டவர்களில் ஒருவர் கருணாகரன். என் கேள்வி என்னவென்றால்? கருணாகரன் விடு தலைப்புலிகளுடன் இணைந்து கொண்ட வேளை விடுதலைப்புலிகள் சுத்த ஐனநாயகபூர்வமான, கருத்துச் சுதந்திரம் மிக்க இயக்கமா? யாவற்றையும் தெரிந்துகொண்டுதானே கருணாகரன் இணைந்தார்.

இணைந்துகொண்டவர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து செல்கிறார். விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடான வெளிச்சம் சஞ்சிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கிறார்.

அப்போதாவது விடுதலைப்புலிகளிடம் ஜனநாயகம் மலர்ந்திருந்ததா? கருத்துச் சுதந்திரம் மிகுந்திருந்ததா? இடையில் புதுவை இரத்தினத்துரைக்கும் கருணாகரனுக்கும் இடையே பூசல் வருகிறது. ‘வெளிச்சத்திலிருந்து’ விலகிய கருணாகரன் சிறிது காலத்திலேயே விடுதலைப்புலிகளின் ஒளி ஊடகமான நிதர்சனம் தொலைக்காட்சி சேவையின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தார். அப்போது விடுதலைப்புலிகளிடம் இவர் ஊதியம் பெற்றார். இவருக்கு ஒரு வாகனம் கொடுக்கப்பட்டிருந்தது. வாகனத்திற்கான எரி பொருளும் விடுதலைப்புலிகளினுடையதே. அப்போதும் விடுதலைப்புலிகளிடம் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மிகுந்திருந்ததா?

வெளிச்சம் ஆசிரியராக இருந்த சமயமும் விடுதலைப்புலிகளிடம் ஊதியம் பெற்றிருப்பார் என்றுதான் நம்புகின்றேன். அதாவது விடுதலைப் புலிகள் மீது வஞ்சகச் சிரிப்பை உதிரவிட்டு அவர்களிடமிருந்து ஊதியம் பெற்றுக்கொண்டிருந்திருக்கிறார்.

என் மேலான கேள்வி என்னவென்றால் அதாவது அநாமதேயன், விதுல் சிவராசா, கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் என்று பல புனைபெயர்களில் பல்வேறு கருத்து நிலை கொண்ட ஊடகங்களில் அந்தந்த ஊடகங்களுக்கு ஏற்றவாறு தனக்குத்தானே முரண்பட்டு ஊதியங்களுக்கு ஏற்றவாறு கட்டுரை எழுதிக்கொடுக்கிறார். இப்போது கருணாகரனுக்கு வருகின்ற சிரிப்பை எங்கே, எப்பொழுது, எந்த ஊடகத்தில் பதியப்போகின்றார்? அறிய ஆவலாக உள்ளேன்.

காலச்சுவடு வன்னிக்கு வருவது ஒன்றுதான் கருணாகரனின் பிரச்சினை. எதிரிகள், ஏகாதிபத்தியங்கள், சூழ்ந்த ஒரு தேசத்தில் விடுதலைப் போர் நிகழ்த்துகின்ற வலி விடுதலைப் புலிகளினுடையது. அதனால் வருகின்ற இடர்ப்பாடுகளைப் புரிய முடியாமல் இப்போது வஞ்சகச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்க முடியாது. இப்படியான எழுத்துக்களை வாசிக்கின்றபோது மிகுந்த கசப்பு வருகின்றது.

இதே கருணாகரன் முக்கிய உறுப்பினராக இருந்த ஈரோஸ் இயக்கம் செய்யாத அராஜகமா? என் நண்பன் செல்லத்துரை (வழி சஞ்சிகை ஆசிரியர்) ஈரோஸ் இயக்கத்துக்குள் கேள்வி கேட்கின்றார் என்று மனநோய் மருத்துவமனைக்கு அவரைப் பலாத்காரமாகக்கொண்டு போய்விடுகிறது ஈரோஸ் இயக்கம். நானும் செல்வியும் (மறைந்த கவிஞர்) செல்லத்துரையைப் பார்க்கப் போயிருந்த சமயம் அவர் கதறி அழுதார். ‘என்னை மீட்டு விடுங்கோ எனக்கு இனித்தான் பைத்தியம் பிடிக்கப்போகிறது’ என்றார்.

தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் கந்தசாமி ஐயாவைக் காணாமல்போகச் செய்தது ஈரோஸ் அமைப்பு. அதைவிடக் கொடூரம் ‘சர்வோதயம்’ கதிரமலைநாதனின் கொலை. யாழ்ப்பாணம் நகரம் முழுவதும் கதிரமலைநாதனை ஊர்வலமாக நடாத்திக் கூட்டிச் சென்று அவருக்கான சவப்பெட்டியையும் கூடவே எடுத்துச் சென்று சனங்களின் முன்னிலையில் கதிரமலைநாதனைச் சுட்டுக்கொன்று அந்தச் சவப்பெட்டியில் கிடத்தியது. இதைச் செய்தது ஈரோஸ். அப்போது ஈரோஸில் முழுநேரப் பணியாளராக இருந்தவர் கருணாகரன். அப்போதெல்லாம் ஈரோஸை விட்டுக் கருணாகரன் விலகியதாகத் தெரியவில்லை. அப்போதெல்லாம் கருணாகரனுக்குச் சிரிப்பு வந்ததா? அதுவும் தெரியவில்லை.

2009 மேவரையான காலப் பகுதியையும் அதனுள் கருணாகரனின் இருப்பையும் நான் விளங்கிக்கொள்கிறேன். ஆனால் அப்போது விடுதலைப் புலிகளிடமிருந்து ஆண்டு அனுபவித்துவிட்டு அத்தனை சுகங்களையும் பெற்றுவிட்டு அதிகாரத்தில் இருந்துவிட்டு விடுதலைப்புலிகளே இல்லையென்றான பின் காலச்சுவடில் அனாமதேயமாகக் கட்டுரை எழுதுவது ஒரு போக்கிரித்தனமான வேலை என்றுதான் சொல்வேன்.

எல்லாமும்தான் போகட்டும். கருணாகரன் இப்போது உங்களது அரசியல் நிலைப்பாடுதான் என்ன?

ஒன்றை உணருங்கள் நண்பர்களே! தமிழ்த் தேசியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு கலை இலக்கியத்திலும் அக்கறை கொண்ட எவரும் இப்படியான ‘புறணி’களுக்கு எதிர்வினையாற்றுவதில்லை. இதை வினைக்கெட நேரமும் இல்லை. அவர்கள் செய்வதற்கு இன்னும் பல காரியங்கள் உள்ளன.

‘அங்கிடு தத்தி அரசியல் செய்வோரால் மாத்திரமே இவற்றுடன் மினக்கெட முடியும். இந்த எதிர்வினைக்குக் கூட மறுத்தாலன் அடிகள் நிறைய வரலாம்.’ நாம் ஒரு சிலர் யோசித்து முடிவெடுத்து இப்படியே எழுதினோம். இனிமேல் எதிர்வினை எதுவும் ஆற்றப்போவதில்லை, ஆக்கபூர்வமான எதிர்வினையைத் தவிர.

அ. இரவி

இலண்டன்

http://kalachuvadu.com/issue-155/page72.asp

[size=4](தொடர்பட்ட முன்னைய திரி )[/size]

[size=5]“மக்களை நடுக்கடலில் விட்டுவி[/size]ட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்” - நேர்காணல்: எம். ஏ. நுஃமான்; காலச்சுவட்டில் இருந்து

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107881

[size=4]மிகவும் அர்த்தம் பொதிந்த பதில் கட்டுரை. [/size]

[size=4]

[/size]

[size=4]நமது தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் (நமது தேசியத் தலைவர் என்று சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் கிடையாது பெருமையே உண்டு) தமிழ்த் தேசியத்தின் ஓர்மமான உச்சமான ஓர் குறியீடு. மக்கள் முட்டாள்கள் அல்லர். அதை நமக்குச் சொல்லித் தந்தது மார்க்சியம். ஆனால் மக்களை வழிநடாத்துகிறோம் என்று சொன்ன மார்க்சீயர் பலர் முட்டாள்களாக இருந்ததை நாம் வரலாறு நெடுகிலும் காண்போம். முட்டாள்கள் அல்லாத, உலகத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் பிரபாகரனைத் தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டதை நாம் அறிவோம்.

ஆனால் அவர் தவறே விடமாட்டார்; தவறே செய்யாதவர் என்று அல்ல. ஒரு செயலும் செய்யாதவர்தாம் தவறு விடும் சந்தர்ப்பத்துக்கு ஆட்படுவதில்லை. ஆனால் பெருங்காரியங்கள் நிகழ்த்துபவர்கள்தாம் பற்பலத் தவறுகள் விடும் சந்தர்ப்பம் உண்டு. நம் தேசியத் தலைவர் காலத்தைச் சரிவரக் கணிக்கவில்லையோ எனும் சம்சயம் எனக் குண்டு. ஆயினும் அதை உறுதிபடக் கூற முடியவில்லை.

ஆனால் அவர் இழைத்த தவறுகளில் மகாத்தவறு என்று யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதைத்தான் கூறுவேன். வேறு சக்திகள் அதன் பின்னணியில் இருந்தன என நான் அறிகின்றேன். ஆயினும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் பிரபாகரன். அதேசமயம் அத்தவறுகளுக்காகச் சில காரியங்கள் ஆற்றி பிரயாச்சித்தம் தேடிக்கொண்டவர் பிரபாகரன் என்றும் நான் அறிகிறேன். [/size]

[size=4]ஆயினும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் படுகொலையை இதனுடன் என்னால் ஒப்பிட முடியாது. ‘பிழையை யாருக்குப் பிரித்துக் கொடுப்பதல்ல’ என் நோக்கம். அப்படுகொலைகளுக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களும் பொறுப்பேற்க வேண்டும். நுஃமானின் நேர்காணல் காலச்சுவடில் வந்த சமயம் எழுத்தாளரும் நண்பருமான உமாவரதராஜன் லண்டனில் தங்கியிருந்தார். என்னிடம் மிகுந்த கவலையுடன் ஒன்றைக் குறிப்பிட்டார். ‘காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைகளைப் பற்றி எல்லாம் இவர்கள் பேசுகிறார்களே சரிக்குச் சமமாக முஸ்லிம் ஊர்க்காவல் படை யாலும் முஸ்லிம் காடையர்களாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றி நுஃமானால் ஏன் பேச முடியாமல் போயிற்று?’ உமா வரதராஜன் கிழக்கு மாகாணக் கல்முனை நகரில் வசிக் கின்ற தமிழன் இதற்கு மேலும் நான் எதைக் கூற?

[/size]

சந்திரனை பார்த்து நாய் குலைத்த கதை போல கிடக்கு .

  • தொடங்கியவர்

சந்திரனை பார்த்து நாய் குலைத்த கதை போல கிடக்கு .

ஓம் சரியாகச் சொன்னீர்கள்,

தமிழ் மக்களின் போராட்டத்தைப் பார்த்து முஸ்லிம் அடிப்படைவாதியான நுஃமான் சேர் சொன்னதை பார்த்து நீங்கள் சொன்னது முழுக்க முழுக்க சரி.

அவரவர் தமது நிலைப்பாட்டை மட்டும் நியாய படுத்தியே கதை ,கட்டுரை ,வரலாறு என எழுதி தள்ளுகின்றார்கள் .

ஆனால் அந்த எழுத்துக்களிலும் ஒரு வித உண்மையும் நியாயமும் இருந்தால் மட்டுமே எம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடிகின்றது .நுகுமானுடன் சில இடங்களில் முரண்பாடு இருந்தாலும் பல இடங்களில் உண்மையும் நியாயமும் இருந்தது .

ஆ.ரவியின் கட்டுரை எதையும் சொல்லவில்லை .வெறும் காழ்ப்பு மட்டுமே .ரவியை விட நுகுமானுக்கு தக்க பதிலை பலரால் கொடுக்கமுடியும் .அவர்கள் கொடுக்கவில்லை .ரவியின் கட்டுரை உப்பு சப்பு அற்ற வெறும் சப்பை கட்டுரை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]ஒரு தன் மானத்தமிழனின் கட்டுரை./ எதிர்வினை [/size][size=1]

[size=4]தொடர்ந்து எழுதுங்கள் .உண்மை பலருக்கு தெரிய வேண்டும்.[/size][/size][size=1]

[size=4]நன்றிகள் [/size][/size]

தங்கள் வழியே சரியென்று இறுக்கமாக இருப்பவர்களால் ஜீரணிக்க முடியாவிட்டாலும், பெரும்பாலும் பல உண்மைகளை சுட்டிக் காட்டிச் செல்லும் கட்டுரை.

[size=4]

அவரவர் தமது நிலைப்பாட்டை மட்டும் நியாய படுத்தியே கதை ,கட்டுரை ,வரலாறு என எழுதி தள்ளுகின்றார்கள் .[/size]

[size=4]ஆனால் அந்த எழுத்துக்களிலும் ஒரு வித உண்மையும் நியாயமும் இருந்தால் மட்டுமே எம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடிகின்றது .நுகுமானுடன் சில இடங்களில் முரண்பாடு இருந்தாலும் பல இடங்களில் உண்மையும் நியாயமும் இருந்தது .[/size]

[size=4]ஆ.ரவியின் கட்டுரை எதையும் சொல்லவில்லை .வெறும் காழ்ப்பு மட்டுமே .ரவியை விட நுகுமானுக்கு தக்க பதிலை பலரால் கொடுக்கமுடியும் .அவர்கள் கொடுக்கவில்லை .ரவியின் கட்டுரை உப்பு சப்பு அற்ற வெறும் சப்பை கட்டுரை .

[/size]

[size=4]

நுஃமான் சேர் என்றவுடன் என்னால் எதிர்வினையாற்றாமல் இருக்க முடியவில்லை. சொல்லுங்கள் நுஃமான் சேர், முள்ளிவாய்க்கால் துயர் ஒரு துளிதானும் உங்களை அசைக்கவில்லையா?[/size]

[size=4]நீங்கள் மக்கள் கவிஞர், மார்க்சீயவாதி என்ற பெயர் எல்லாம் எடுத்தவர். என் ஆதர்சங்களில் ஒருவராக உங்களை நான் வைத்திருந்தேன். நீங்களுமா நுஃமான்? பிழையையாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்று கணக்குப் போடுகின்றீர்களே இதுவா கவிஞரின் வேலை? ஓர் இனம் அதுவும் உங்கள் சக இனம் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது. அது பற்றிய எவ்வித அக்கறையும் அற்று நக்கலடிக்கிறீர்கள். உங்களில் நாங்கள் ஏமாந்து போகிறோம்.

[/size]

[size=4]இந்த வரிகள் உங்களுக்கும் பொருந்தக்கூடாது ![/size]

ரவி அண்ணா!

இது வரை நீங்கள் எழுதிய கட்டுரைகளில் (எதிர்வினை) என்னை மிகவும் கவர்ந்தவற்றில் இதுவும் ஒன்று.....

பலருடைய வெப்பியாரத்தை நீங்கள் எழுத்தாக்கியிருக்கிறீர்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.