Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 18( பயணம் முடிந்தது)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பானியர்களால் அடிமை கொள்ளப்பட்ட தென் அமெரிக்கப் பழங்குடிமக்களின் துயரம்கள் பெருகி வழிகிறது படிக்கும்போது..நன்றி அபராஜிதன் பகிர்விற்கு...தொடர்ந்து இணையுங்கள்.;.

  • தொடங்கியவர்

மறைந்த வரலாறு

மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 14

 

 

 

Sacsayhuaman_pixinn.net_-225x300.jpg

Sacsayhuamán

 

 

இன்கா மக்களின் தலைநகரமாக இருந்த குஸ்கோ (Cusco) பெருவில் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நகரம். யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக 1983ல் அறிவிக்கப்பட்ட குஸ்கோ, தற்போதைய பெருவின் வரலாற்றுத் தலைநகரமாகவும் திகழ்கிறது.

முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்நகரை வந்தடைந்த எர்னஸ்டோ முதல் பார்வையிலேயே தன் மனத்தை பறிகொடுத்துவிட்டார். ‘பல யுகங்களின் மாயப் புழுதி’ படிந்த தெருக்களில் உற்சாகமாக நடைபோட்டார் எர்னஸ்டோ. இன்கா மக்களின் படைப்புக் கடவுள் விராகோச்சா தனது மக்களுக்காகப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்த பகுதி என்று இது நம்பப்படுகிறது. டவான்டின்சுயு (Tawantinsuyu)) என்னும் பெயரால் குறிக்கப்பட்ட இன்கா சாம்ராஜ்ஜியம், புதிய எல்லைகளைத் தேடி தன் பரப்பை அதிகரித்துக்கொண்ட போது, குஸ்கோவும் அதன் ஒரு பகுதியாக மாறியது.

 

 

12ம் நூற்றாண்டில் குஸ்கோவில் வசித்த மேய்ச்சல் நிலப் பகுதி மக்கள், மான்கோ கபாக் (Manco Capac) என்னும் தலைவரால் ஒன்றிணைக்கப்பட்டனர். குஸ்கோ அப்போது உருவான ஒரு நகரம். 1438ல் சாபா இன்கா என்பவர் (பூமியை உலுக்குபவர்) ஆட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினார். அவரும் அவருடைய மகன் டுபாக் என்பவரும் இணைந்து பெரும்பாலான ஆந்திய மலைப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

‘பல யுகங்களின் மாயப் புழுதி’ என்று எர்னஸ்டோ வர்ணித்திருந்ததற்குக் காரணம் அதன் பழைமை மட்டுமல்ல, பழைமையின் எச்சங்கள் இப்போதும் காணக்கிடைத்ததுதான். உலகத்தின் மையமாக, பூமியின் தொப்புளாக குஸ்கோ திகழ்வதாக மாயன் மக்கள் கருதினார்கள். கோட்டை, கொத்தளங்கள் கட்டி தங்கள் பேரரசை உருவாக்கினார்கள். பின்னாள்களில் வந்த ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களால் குஸ்கோ வசப்படுத்தப்பட்டது. அப்போது மாயன் மக்கள் உருவாக்கிய அடையாளங்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட நாகரிகங்கள் அனைத்தும் இப்படிப்பட்ட அழிவை உலகம் முழுவதிலும் சந்தித்துள்ளன. அனைத்து நவீன நகரங்களின் காலடியின்கீழும் முந்தைய தலைமுறைகளின் வரலாறு புதைந்திருக்கிறது. குஸ்கோவின் சோகக்குரல்‘சூறையாடப்பட்ட சிதிலமடைந்த கோயில்களிலும், கொள்ளையடிக்கப்பட்ட அரண்மனைகளிலும், மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்ட இந்தியர்களிடத்திலும்’ ஒலிக்கிறது என்கிறார் எர்னஸ்டோ.

 

 

தங்கள் நகரத்தைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு மாபெரும் கோட்டையை (Sacsayhuamán) இன்கா பழங்குடிகள் உருவாக்கியிருந்தார்கள். நாடோடிகளாகத் திரிந்துகொண்டிருந்த பழங்குடிகள் நிலையான ஓரிடத்தில் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொள்ள முடிவு செய்தபோது பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்தக் கோட்டையை உருவாக்கியிருக்கவேண்டும். ஆக்கிரமிப்பாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அமைக்கப்பட்ட கோட்டையாக அது இருக்கமுடியாது என்கிறார் எர்னஸ்டோ. ‘ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்ட சுவர்களைப் பார்த்தால், எதிரிகள் தாக்கும்போது, அவர்ளை எதிர்த்து மூன்று புறங்களிலிருந்தும் திருப்பித் தாக்கமுடியும் என்பதும் இந்தப் பாதுகாப்பையும் உடைத்துக்கொண்டு எதிரிகள் உள்ளே ஊடுருவினால், இதே போன்ற இன்னொரு சுவரையும், அதற்கப்பால் மூன்றாவதாக ஒரு சுவரையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதும் நன்கு புலனாகிறது. தற்காப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய யுக்திகளை மேற்கொள்வதற்கும் எதிர்த்தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கும் இது உதவும்.’

 

 

கொச்சுவா பழங்குடிகள் கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று ஆச்சரியம் கொள்கிறார் எர்னஸ்டோ. இன்கா நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்பது அவருடைய கருத்து.

குஸ்கோ மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வேறு வழியின்றி கோட்டையைவிட்டு வெளியேறி பள்ளத்தாக்கை நோக்கி மக்கள் நகர்ந்திருக்கவேண்டும். ‘தங்களுடைய பெருமைக்குரிய நிகழ்காலத்தைப் பற்றிய உணர்வு மிக்கவர்களாக விளங்கிய அவர்கள் தங்கள் மேலாதிக்கத்துக்குக் கடந்த காலத்தில் விளக்கம் தேடத் தொடங்கினார்கள். எனவேதான், அந்தப் பிரதேசத்தில் அவர்களை வலிமை மிக்கவர்களாக மாற்றிய சர்வ வல்லமை பொருந்திய கடவுளைப் போற்றுவதற்காக கோயில்களையும் பூசாரிகளையும் அவர்கள் உருவாக்கினார்கள். கொச்சுவாக்களின் மேன்மைமை அவர்கள் வடித்த சிற்பங்களில் காணலாம். ஆகவேதான் குஸ்கோவின் தோற்றத்தால் கவரப்பட்ட ஸ்பானிய வீரர்கள் படிப்படியாக அதை வென்றார்கள்.’

ஸ்பானிய படையெடுப்பு இன்கா நாகரிகத்தின் பெருமிதங்களைத் தேடித்தேடித் தகர்த்தது. கோயில்கள் இடிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் கட்டியமைத்த கோட்டைகள் உறுதியாக நின்றன. ‘துயரமான இன்கா மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கும் இக்கடவுளுக்குப் பதிலாக, மகிழ்ச்சியான மக்களின் துயரமான கடவுள் சிலையை நிறுவுவதில் இவர்கள் குரூரமான மகிழ்ச்சி அடைந்தார்கள்… இன்கா மக்களின் நிலத்தைப் பறித்தவர்களுடைய கட்டடங்களுக்கு எத்தகைய பேரழிவு ஏற்பட்டபோதிலும், சூரியக் யோயிலின் ஒரு கற்பாளம்கூட அசையவில்லை.’

 

 

இன்கா ரோகா அரண்மனையைக் கட்டிய இந்தியர்களின் உழைப்பை நினைத்து பார்க்கிறார் எர்னஸ்டோ. ‘தனது கடவுளர்களின் பயங்கரமான பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருந்த இந்தியனோ, பெருமைக்குரிய கடந்தகாலம் ஒன்று இருந்ததற்கான தடயங்களை அழித்துவிட்டு புற்றீசல்கள் போல கிறிஸ்தவத் தேவாலயங்கள் உயர்ந்தெழுவதைக் கண்டான். காலனியாதிக்க வெற்றியாளர்கள் தங்கள் அரண்மனைகளின் அடித்தளங்களைப் பயன்படுத்திய இன்கா ரோகா அரண்மனையின் ஆறுமீட்டர் உயரச் சுவர்கள், தோல்வியடைந்த வீரர்களின் வேதனையையே அற்புதமாகப் பிரதிபலிக்கின்றன.’

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரதேசத்தை எர்னஸ்டோ ஆர்வத்துடன் சுற்றி வந்தார். வரலாற்றுப் பக்கங்கள் அவர் கண்முன்னால் உயிர்பெற்று எழுந்து நின்றன. குஸ்கோ இனியும் பூமியின் தொப்புள் அல்ல, அது ஒரு புள்ளி மட்டுமே. ‘அதன் புதையல்கள் கடல்வழியாகப் புதிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வேறு பேரரசர்களின் அரண்மனைகளை அலங்கரிக்கின்றன.’ ஆக்கிரமிப்புகளும் சூறையாடல்களும் குஸ்கோவைத் தொடர்ந்து அச்சுறுத்தின. பின்னாள்களில் தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்கள் குஸ்கோவில் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும், குஸ்கோ இன்றளவும் சுரண்டப்படும் ஓரிடமாகவே இருந்ததை எர்னஸ்டோ கண்டார்.

 

 

மலைத்தொடர்களுக்கு நடுவே குஸ்கோவின் வெளிச்சம் தொலைந்துபோனது. சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் மங்கிய ஓர் அடையாளமாக அது மாறிப்போனது. ‘பெருவில் இருந்த வெளியேறிய செல்வங்கள்மீது இடைத்தரகர்கள் விதித்த வரிகளின்மூலம், லிமா என்னும் புதிய நகரம் குஸ்கோவுக்குப் போட்டியாக பசிபிக் கடற்கரையில் வளர்ச்சியடைந்தது. இந்த மாற்றத்தில் புரட்சிகரத் தன்மை எதுவும் இல்லாவிட்டாலும்கூட, இன்கா மக்களின் அற்புதமான தலைநகரம் படிப்படியாக கடந்த காலத்தின் நினைவுச்சின்னமாக மாறிப்போனது.

ஸ்பானியர்களால் அடிமை கொள்ளப்பட்ட தென் அமெரிக்கப் பழங்குடிமக்களின் துயரம்கள் பெருகி வழிகிறது படிக்கும்போது..நன்றி அபராஜிதன் பகிர்விற்கு...தொடர்ந்து இணையுங்கள்.;.

 

 

நன்றி சுபேஷ் உங்களின் ஊக்கத்திற்கு :)

தொடருங்கள் அபராஜிதன் . தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றேன் .

 

  • தொடங்கியவர்

மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 15

 

 

பயணங்களின் உந்துசக்தி

 

 

 

இன்கா நாகரிகம் குறித்து அவ்வளவாக பரிச்சயற்றிருந்த தனக்கு இந்தப் பயணம் கண்டுகளிப்பதாகவும் வரலாற்றை போதிப்பதாகவும் அமைந்திருந்தது என்கிறார் எர்னஸ்டோ. குஸ்கோவில் பதினைந்து தினங்களைக் கழித்தார் எர்னஸ்டோ. அங்கிருந்த அருங்காட்சியகம் தொலைந்துபோன குஸ்கோவின் செல்வங்களைச் சுட்டிக்காட்டும் நோக்கில் இருந்தன. ‘குஸ்கோவில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகம் சிறப்பானதல்ல. அங்கிருந்து கடத்தப்பட்ட செல்வங்களின் அளவு எப்பேர்ப்பட்டது என்று அதிகாரிகள் உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டது.’

 

ஹுவாம்போ என்னும் நகரில் உள்ள தொழுநோய் மருத்துவமனையையும் ஹுவாங்கராமா என்னும் நகரையும் காணும் நோக்கில் பயணம் தொடர்ந்தது. வழியில் நடைபெற்ற ஓர் உள்ளூர் திருவிழா எர்னஸ்டோவின் கவனத்தைக் கவர்ந்திருந்தது. ஆன்மிகப் பற்றோ கடவுள் பற்றோ அற்றிருந்த எர்னஸ்டோவுக்கு அங்கிருந்த பாதிரி ஒருவர் உரத்த குரலில் ஆற்றிக்கொண்டிருந்த மதப்பிரசாரம் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே காட்சியளித்தது.

‘பரிதாபத்துக்குரிய அந்தப் பாதிரியார் மூன்று மணி நேரங்கள் உரை நிகழ்த்தவேண்டியிருந்தது. ஆனால் ஒன்றரை மணி நேரம் பாக்கியிருந்த நிலையில், அவரால் தனது பயனற்ற உரையைத் தொடரமுடியவில்லை. உடனே, ‘கவனியுங்கள் கவனியுங்கள்! தேவன் வந்துவிட்டார். தேவன் நம்மோடிருக்கிறார். தேவனின் ஆன்மா நம்மை வழிநடத்துகிறது’ என்றார்.’ எப்போதெல்லாம் உரைக்கான வாசகங்கள் சிக்கவில்லையோ அல்லது எப்போதெல்லாம் பார்வையாளர்களின் கவனம் திசைதிரும்புகிறதோ அப்போதெல்லாம் தேவனை அவர் பூலோகத்துக்கு அழைத்து வந்து காட்டினார். ‘ஐந்தாறுமுறை பரிதாபத்துக்குரிய கிறிஸ்துவின் பெயர் உச்சரிக்கப்பட்ட பிறகு, எங்களால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. நாங்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பினோம்.’

 

தொழுநோயாளிகளின் காலனி பரிதாபகரமாகக் காட்சியளித்தது. நீண்ட குதிரைச் சவாரிக்குப் பிறகு இங்கு வந்து சேர்ந்தார்கள். பொதுவில் யாரும் செய்யாத, பாராட்டத்தக்க பணிதான் என்றாலும் மருத்துவமனையின் தோற்றம் மோசமாக இருந்தது. முப்பத்தோரு நோயாளிகள் இருந்தார்கள். பெரு நாட்டு மக்களின் மனநிலையும் இதற்குக் காரணம் என்று எர்னஸ்டோவுக்குத் தோன்றியது. எது எப்படியிருந்தாலும் தொடர்ந்து வாழ்க்கையை முன்னகர்த்திச் செல்பவர்களாக அவர்கள் இருந்தார்கள். அசுத்தமும் நோயும் ஏழைமையும் வாட்டி வதைத்தபோதும், வாழவேண்டும் என்னும் வேட்கை அவர்களை விட்டகலவில்லை. அல்லது, இப்போதிருக்கும் நிலையைவிட உயர்வான ஒரு நிலையை அடையும் வழி அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.

‘அறுவை சிகிச்சைக்குத் தேவையான கருவிகள் அங்கே இல்லை. ஒரு பெரிய அறுவை சிகிச்சையைக்கூட அங்கிருந்த மருத்துவர் சமையலறை மேஜையில்தான் செய்யவேண்டியிருந்தது.’ புதிய மருத்துவமனைக்கு வந்து பாருங்கள் என்று அழைத்துச் சென்றார்கள். ஆனால் அதுவும் கிட்டத்தட்ட முந்தையதைப் போலவே இருந்தது.

அந்தப் பகுதியில் இருந்ததில் எர்னஸ்டோவுக்கு ஆஸ்துமா அதிகரிக்க, உடனே அங்கிருந்து கிளம்பினார்கள். பல கிராமங்களைக் கடந்து சென்றார்கள்.

 

உணவுக்கும் தங்குமிடத்துக்கும் பல கதைகளையும் சால்ஜாப்புகளையும் அவர்கள் சொல்லவேண்டியிருந்தது. பொதுவாக அவர்கள் கடைபிடிக்கும் வழி ஒன்று உண்டு. மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் சத்தமாக இப்படிப் பேசுவார்கள். இன்று என்ன தேதி? என்பார் ஆல்பர்ட்டோ. எர்னஸ்டோ அப்போதுதான் தேதி நினைவு வந்தது போல் கொஞ்சம் யோசித்து சொல்வார். உடனே ஆல்பர்டோ துள்ளுவார். அடடா என்ன இது எர்னஸ்டோ, போன வருடம் இதே நாள் நம் சாகசப் பயணத்தைத் தொடங்கினோம். இன்றோடு ஓராண்டு பூர்த்தியாகிறது. பெரிய விஷயம்! ஆனால் என்ன செய்வது, கொண்டாட நம்மிடம் பணம் இல்லையே. உடனே அருகில் இருப்பவர் இவர்களை நெருங்கி, நான் வேண்டுமானால் சிறிது தருகிறேனே என்று சொல்வார். அதெப்படி, முன்பின் தெரியாத உங்களிடம் உதவி வாங்குவது என்று இருவரும் பலமாக மறுப்பார்கள். பிறகு அரைச் சம்மதத்துடன் பெற்றுக்கொள்வார்கள்.

பெருவின் தலைநகரம் லிமாவை வந்தடைந்தபோது பயணத்தின் மிக முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. ‘எங்களிடம் சல்லிக்காசுகூட இல்லை. உடனடியாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழியும் இல்லை. எனினும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.’ இந்த விநோமான உணர்வுதான் இருவரின் பயணத்தைத் தொடங்கிவைத்தது. இந்த விநோதமான உணர்வுதான் அவர்களை இந்த நிமிடம் வரை உயிர்ப்புடன் வைத்திருந்தது

.

அழகிய குடியிருப்புகளும் அகன்ற தெருக்களும் கடற்கரையோரத்து வீடுகளும் கொண்ட நகரமாக இருந்தது லிமா. குஸ்கோவை ஒப்பிடும்போது லிமா, தனது காலனியாதிக்க நினைவுகளை கொஞ்சம் மறந்துவிட்டது போலவும் புதிதாகத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டுவிட்டது போலவும் எர்னஸ்டோவுக்குத் தோன்றியது. லிமாவில் உள்ள தொல்லியல் மற்றும் மானுடவியல் அருங்காட்சியகம் எர்னஸ்டோவை அதிகம் கவர்ந்தது. கோட்டைகள், தேவாலயங்கள் என்று லிமாவின் கட்டடக்கலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் பகுதிகளில் சுற்றி வந்தார்கள். ஸ்பானிய காலனிகளில் இருந்ததைக் காட்டிலும் இங்குள்ள தேவாலயங்கள் ஊசி போல் மெல்லிதாக காணப்பட்டன. தங்கத்தாலான சிற்பங்கள் இருந்தன. ‘இப்படிப்பட்ட மாபெரும் செல்வத்தின் காரணமாகவே ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் ராணுவப் படைகளை எதிர்த்து இறுதி வரையில் போராடினர். ஒரு காலனியின் நிலப்பிரபுத்துவ நிலைமையை இன்னும் கடந்திராத பெருவின் முழுமையான பிரதிநிதியாக லிமா விளங்குகிறது. ரத்தம் சிந்தப்படும் ஒரு உண்மையான விடுதலைப் புரட்சிக்காக அது இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.’

 

 

நோவில்லாடா என்று அழைக்கப்படும் காளைச் சண்டையை ஒரு ஞாயிற்றுக் கிழமை இருவரும் கண்டு களித்தார்கள். அருங்காட்சியகம், காவல் நிலையம் (உணவுக்கு), தபால் அலுவலகம் என்று ஒவ்வொரு நாளும் ஓரிடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. எங்கு செல்வதாக இருந்தாலும் மறக்காமல் அவர்கள் காணும் ஓரிடம் தொழுநோய் மருத்துவமனை. முறைப்படி அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையையும் சுற்றி வந்து, மருத்துவர்களிடம் பேசி, தெரிந்துகொண்ட விஷயங்களைத் தனது நோட்டு புத்தகத்தில் பதிவு செய்வது எர்னஸ்டோவின் வழக்கம். அனைத்து மருத்துவமனைகளிலும் இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொழுநோய் மருத்துவமனையைச் சென்று பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் வேறு யார் இருக்கமுடியும்? அவ்வாறு செல்லும் இடங்களிலெல்லாம் மருத்துவர்களையும் மருத்துவமனை ஊழியர்களையும் நோயாளிகளையும் நண்பர்களாக்கிக்கொள்வது எர்னஸ்டோவின் வழக்கம்.

 

 

லிமாவிலும் அதுதான் நடந்தது. ‘மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் எளிமையாக எங்களை வழியனுப்பி வைத்தபோதிலும், லிமாவிலேயே எங்களை மிகவும் பாதித்த விஷயம் அதுதான். அவர்கள் எங்களுக்காகப் பணம் சேர்த்து ஒரு மிகப் பெரிய பாராட்டுக் கடிதத்துடன் சேர்த்து அன்பளிப்பாக வழங்கினார்கள். அதன் பிறகு அவர்களில் சிலர் எங்களிடம் தனிப்பட்ட முறையில் வந்து விடைகொடுத்தார்கள். நாங்கள் இங்கே வந்ததற்காகவும், அவர்களுடன் நேரத்தைக் கழித்ததற்காகவும், அவர்கள் அளித்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டதற்காகவும் எங்களுக்கு நன்றி கூறினார்கள். அப்போது சிலரின் கண்களில் கண்ணீர் ததும்பியது. தொழுநோயைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்யும்படி எங்களை உத்வேகளிக்கக்கூடிய ஒன்று உண்டென்றால், அது நாங்கள் போகிற இடங்களிலெல்லாம் எங்கள்மீது நோயாளிகள் காட்டும் அன்பாகத்தான் இருக்கமுடியும்.’



தொடருங்கள் அபராஜிதன் . தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றேன் .

நன்றிகள்..:)

  • கருத்துக்கள உறவுகள்

பெருவின் தலைநகரம் லிமாவை வந்தடைந்தபோது பயணத்தின் மிக முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. ‘எங்களிடம் சல்லிக்காசுகூட இல்லை. உடனடியாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழியும் இல்லை. எனினும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.’ இந்த விநோமான உணர்வுதான் இருவரின் பயணத்தைத் தொடங்கிவைத்தது. இந்த விநோதமான உணர்வுதான் அவர்களை இந்த நிமிடம் வரை உயிர்ப்புடன் வைத்திருந்தது

 

வாழ்க்கையின் இரகசியம், இங்கு தான் மறைந்திருக்கின்றது என நினைக்கிறேன்!

 

நன்றி, அபராஜிதன்! :D

  • தொடங்கியவர்

மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 16

 

 

மறக்கமுடியாத அத்தியாயம்

DSC_4965CA-750x500-300x200.jpg

 

 

பெரு பயணம் நெடுகிலும் எர்னஸ்டோவை இம்சித்த இரு விஷயங்கள், கொசு மற்றும் ஆஸ்துமா. ‘எருதின் நீண்ட அலறலைப் போன்ற இளைப்பு நோயிலிருந்து’ விடுபடுவது சவாலான காரியமாக இருந்தது. ஒரு நாளைக்கு நான்கு முறை அட்ரினலின் ஊசி தனக்குத் தானே செலுத்திக்கொண்டபிறகும் மூச்சு வாங்குவது நிற்கவில்லை. சில சமயம் நாள் முழுவதும் படுக்கையில் பொழுதைக் கழிக்கவேண்டிய நிலை. சில சமயம், எழுந்து சிறிதளவு உண்ண முடியும், ஆனால் வெளியில் எங்கும் சுற்றிவரமுடியாது. குளிர்ந்த காற்று உடலில் படும் ஒவ்வொரு முறையும் உடல் நடுக்கம் கண்டது. நடுங்கும் உடலை கொசுக்களுக்கும் அர்ப்பணம் செய்யவேண்டியிருந்தது. ‘ஆஸ்துமாவும் கொசுக்களும் என் சிறகுகளைத் துண்டித்தன. (ஆனால்) இயற்கையின் அனைத்து ஆற்றல்களும் எனது வேட்கையை அதிகரித்தன.’

 

 

வறியவர்கள், நோயாளிகள், பழங்குடிகள், செல்வந்தர்கள், சீட்டுக்கட்டு விளையாடும் சீமான்கள், பாலியல் தொழில் செய்பவர்கள், பணக்காரர்கள், சுற்றுலாப் பயணிகள், மருத்துவர்கள், சாமானியர்கள் என்று பலரையும் தன் பயணத்தில் எர்னஸ்டோ எதிர்கொண்டார். இந்த மனிதர்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை எர்னஸ்டோவுக்கு ஏற்படுத்தினார்கள்? பெருவில் ஒரு கப்பல் பயணத்தின்போது தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பதிவு செய்யும்போது ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. ‘சாதாரண மாலுமிகளுடன் எங்களால் நன்றாகப் பழக முடிந்தது. ஆனால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடன் — அவர்கள் பணக்காரர்களோ இல்லையோ – எங்களால் பழக முடியவில்லை.’

 

 

ஏன் முடியவில்லை? ‘கையில் காசின்றிப் பயணம் செய்யும் இருவரிடம் (எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும்) கவனத்தைச் செலுத்துவதைக் காட்டிலும் தங்கள் பழைய கதைகளைப் பேசுவதிலேயே அவர்கள் கவனமாக இருந்தார்கள். எல்லோரையும் போலவே அவர்களும் அறியாமை நிறைந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் வாழ்க்கையில் அவர்கள் பெற்ற சிறுசிறு வெற்றிகள்தான் அவர்களுடைய சிந்தனையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. இவற்றால் அவர்கள் ஆதாயமடைந்ததால் ஏற்பட்ட மூர்க்கத்தனத்தின் விளைவாகவே அவர்கள் கீழான கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.’

 

ஜூன் 1, 1952 அன்று பெருவில் இக்யுடோஸ் (Iquitos) என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்து ஆறு தினங்கள் ஆஸ்துமாவால் தொடர்ந்து அவதிப்பட்டார் எர்னஸ்டோ. சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டதும் சான் பாப்லோவை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். கப்பலில் இரு தினங்கள் பயணம் செய்யவேண்டியிருந்தது. இந்தப் பயணத்தின்போதும் எர்னஸ்டோவைவிட்டு ஆஸ்துமா அகலவில்லை.

 

எர்னஸ்டோவுக்கு ஒரு வருத்தம் இருந்தது. புதிய இடங்களையும் புதிய மனிதர்களையும் காண முடிந்தது என்றாலும் நாகரிகத்தின் சுவடுகள் அற்ற பழங்குடிகளை அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சென்று காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சில பழங்குடிகளை வழியில் காணமுடிந்தது என்றாலும் அவர்களுடைய இருப்பிடத்துக்கே நேரில் சென்று அவர்களோடு இயல்பாக பழகமுடியவில்லை. ஜூன் 4 அன்று தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தன் வருத்தத்தை அவர் பகிர்ந்துகொண்டார். போதுமான உணவில்லாமல் காட்டுப்பகுதிகளுக்குச் செல்வது ஆபத்தானது, குறிப்பாக ஆஸ்துமா தாக்குதல் அச்சுறுத்திக்கொண்டிருக்கும்போது இப்படிப்பட்ட பயணங்கள் சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.‘ஆற்றைப் பின்பற்றிக் காடுகளுக்குச் சென்றால் அவ்வளவு நாட்களுக்கு உண்ண உணவின்றி எங்களால் இருக்கமுடியாது. இத்தகைய இடங்களுக்குச் செல்வது அபாயகரமானது என்பது அல்ல காரணம். பணம் சேமிக்கவேண்டும். இப்படிச் சேமிக்கும் தொகை பின்னால் எனக்கு உதவிகரமாக இருக்கும்.’

 

 

ஒரே ஒரு திருப்தியும் இருந்தது. அது, தொழுநோய் மருத்துவமனைகளைச் சென்று பார்த்தது. ‘தொழுநோய் மருத்துவமனை ஊழியர்களைப் பொருத்தவரை எங்கள் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறிவிட்டது. வருகை புரியும் இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு உரிய மரியாதையோடு அவர்கள் எங்களை நடத்துகிறார்கள். தொழுநோய் மருத்துவத்தில் எனக்கு உண்மையிலேயே ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இந்த ஆர்வம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.’

 

எர்னஸ்டோ தொடர்கிறார். ‘எங்களுடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும்படி எங்களுக்கு உத்வேகமளிப்பதற்கு, லிமா மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பியதே போதுமானது… எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது அவர்களில் பலருடைய கண்களில் கண்ணீர் அரும்பியது. நாங்கள் மருத்துவர்க்குரிய முழு உடைகளையோ கையுறைகளையோ அணியவில்லை.

 

எல்லோருடனும் கைகுலுக்குவது போலவே அவர்களுடனும் கைகுலுக்கினோம். அவர்களோடு உட்கார்ந்து எதைப் பற்றியாவது பேசிக்கொண்டிருப்போம். அவர்களோடு கால்பந்து விளையாடினோம். அவர்கள் எங்களைப் பாராட்டுவதற்குக் காரணம் இதுதான். இதெல்லாம் அர்த்தமற்ற துணிகரச் செயல்களாகக் கருதப்படலாம். ஆனால் எப்போதும் மிருகங்களைப் போலவே நடத்தப்பட்ட இந்தப் பரிதாபத்துக்குரிய மக்கள் சராசரி மனிதர்களாக நடத்தப்படுவதன் மூலம், அவர்களுக்குக் கிடைக்கும் மனநிறைவு அளவிட முடியாதது.’ இந்த மனநிறைவைவோடு ஒப்பிட்டால் நாங்கள் சந்தித்த ஆபத்துகளும் சிக்கல்களும் துன்பங்களும் ‘புறக்கணிக்கக்கூடிய அளவுக்கு மிகவும் சிறியவை’ என்கிறார் எர்னஸ்டோ.

 

சான் பாப்லோவிலும் தொழிநோயாளிகள் குடியிருப்பைக் காண்பதில்தான் எர்னஸ்டோ முதலில் ஆர்வம் செலுத்தினார். தொழுநோயாளிகளை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி ஓரிடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்த சமயம் அது. ஐந்து முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான மத்திய காலகட்டத்தில் ஐரோப்பாவில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. பல பகுதிகளில் அதற்குப் பிறகும் இவ்வாறு தனிமைப்படுத்தும் வழக்கம் தொடர்ந்தது. இப்படிப்பட்ட குடியிருப்புகளை கிறிஸ்தவத் துறவிகள் தலைமை தாங்கி நடத்துவது வழக்கம். தொழுநோய் குறித்து பல தவறான நம்பிக்கைகள் அப்போது இருந்தன. உடலை உருக்கி சிதைக்கும் கொடூரமான நோய் என்றும், எளிதில் பரவக்கூடிய வியாதி என்றும் இதனைக் குணப்படுத்தவே முடியாது என்றும் அவர்கள் நம்பினார்கள். எனவே சமூகத்தில் இருந்து தொழுநோயாளிகள் பிரித்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான குடியிருப்பை லாசரஸ் என்னும் புனிதரின் பெயரால் லாசர் வீடு என்று அழைத்தனர்.

 

இப்படிப்பட்ட குடியிருப்புகள் பொதுவாக மலைப்பாங்கான இடத்திலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்திலும் அமைக்கப்பட்டன. இந்தக் குடியிருப்புகளை நடத்த பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்பட்டன. இங்குள்ள நோயாளிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து வேதனையளிக்கும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தோல் வியாதிகள் கொண்டவர்களையும்கூட தொழுநோயாளிகள் என்று அழைத்து இப்படிப்பட்ட குடியிருப்புகளில் அடைத்துவிடும் வழக்கமும் இருந்திருக்கிறது.

 

சான் பாப்லோவில் உள்ள தொழுநோயாளிகளின் குடியிருப்பை நிர்வகித்து வந்தவரும் ஒரு கன்னியாஸ்திரிதான். நோயாளிகள் பிரிவு என்று அழைக்கப்பட்ட பகுதியில் குடிசைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தைப் பற்றிய எர்னஸ்டோவின் முதல் விவரிப்பு இது. ‘காட்டுக் குடிசைகளில், தாங்கள் விரும்பியதைச் செய்தபடி, சில தனித்தன்மைகளோடு தனக்கே உரிய ஒரு வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஓர் அமைப்பில் தாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட வேலைகளில் ஈடுபட்டபடி, சுதந்தரமாக ஏறத்தாழ அறுநூறு நோயாளிகள் வசிந்து வந்தார்கள்.’

 

 

அந்தக் குடியிருப்புப் பகுதியில் ஒரு ஊராட்சித் தலைவரும் நீதிபதியும் காவல்துறை அதிகாரியும் இருந்தனர். டாக்டர் பிரெஸ்ஸியானி என்பவருக்கு அங்கே நல்ல செல்வாக்கு இருந்தது. நோயாளிகளின் உடல் உபாதைகளைக் கவனித்துக்கொள்தோடு அவ்வப்போது அவர்களுக்குள் எழும் சண்டை, சச்சரவுகளையும் தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. பிரெஸ்ஸியானியுடன் எர்னஸ்டோ விரிவாக உரையாடினார். நோயின் தீவிரம் குறித்தும் அளிக்கப்படும் சிசிச்சை முறைகள் குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டார். சான் பாப்லோ அவர் வாழ்வில் மறக்கமுடியாத ஓர் அத்தியாயமாக மாறவிருந்தது.

  • தொடங்கியவர்

வாழ்க்கையின் இரகசியம், இங்கு தான் மறைந்திருக்கின்றது என நினைக்கிறேன்!

 

நன்றி, அபராஜிதன்! :D

 

:)

  • தொடங்கியவர்
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 17 காடுகளும் மனிதர்களும்

220px-CheOnRaft1952.jpg

 

 

டாக்டர் பிரெஸ்ஸியா சேகரித்து வைத்திருந்த ஆய்வுத் தகவல்கள் தனக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக எர்னஸ்டோ குறிப்பிடுகிறார். நானூறு நோயாளிகளைத் தொடர்ந்து பரிசோதித்து சிகிச்சை அளித்து வந்ததன் காரணமாக அவர் மருத்துவ அறிவு ஆழமடைந்திருந்தது. சான் பாப்லோ குடியிருப்பில் உள்ள பெரும்பாலான தொழுநோயாளிகளுக்கு நரம்பு மண்டலம் பாதிப்படைந்திருந்தது. குடியிருப்பில் வசித்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கும்கூட ஆரம்பக்கட்ட நரம்பியல் கோளாறுகள் இருக்கின்றவா என்பதை மருத்துவர்கள் பரிசோதித்துக்கொண்டிருந்தனர்.

 

எர்னஸ்டோ முன்பு கண்டிருந்த தொழுநோய் குடியிருப்பைப் போலவே இங்கும் அடிப்படை வசதிகள் காணப்படவில்லை. மின்சார விளக்குகள் இல்லை. குளிர்சாதனப் பெட்டி இல்லை. ஆய்வுக்கூடம் என்று சொல்லும்படி எதுவும் இல்லை. ஒரு நல்ல நுண்ணோக்கி இல்லை. உதவியாளர்கள் போதுமான அளவுக்கு இல்லை. நரம்பு மண்டலப் பிரச்னைகள் அதிகம் இருந்தபோதிலும் இங்கு அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமில்லை.

 

மீன் பிடிப்பதற்கும் நீச்சலடிப்பதற்கும் இடையில் நேரம் கிடைத்தது. கால்பந்து விளையாடவும் மருத்துவரோடு சீட்டு விளையாடவும்கூட முடிந்தது. என்றாலும், எர்னஸ்டோவின் கவனம் திரும்பத் திரும்ப தொழுநோயாளிகளைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

 

சான் பாப்லோவையும் தொழுநோயாளிகள் குடியிருப்பையும் எர்னஸ்டோவால் மறக்கமுடியாமல் போனதற்கு இன்னொரு காரணம் அவருடைய பிறந்தநாள். ‘இன்னும் சிறுவனாகவே இருந்த எனக்கு 1952 ஜூன் 14ம் தேதி சனிக்கிழமை அன்று இருபத்து நான்கு வயது நிறைவடைந்தது.’ வாழ்வு தன்னை அந்த அளவுக்கு மோசமாக நடத்தியிருக்கவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றியது. வாழ்வின் கால் நூற்றாண்டின் சிகரம். இதுவரை செய்திருப்பது என்ன? இனி செய்யவிருப்பது என்ன?

 

டாக்டர் பிரஸ்ஸியானியின் வீட்டில் எர்னஸ்டோவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மிகுந்த அன்புடன் நடத்தப்பட்ட விருந்துபசாரத்தைக் கண்டு நெகிழ்ந்துபோனார் எர்னஸ்டோ. அங்கு அவர் சிறியதாக உரையாற்றினார்.

‘நாங்கள் ஏராளமான இடையூறுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் தற்போதைய நிலைமையில், எங்களால் வழங்க முடிந்ததெல்லாம் வார்த்தைகள்தான். எனவே அவற்றைப் பயன்படுத்தி என்னுடைய, என் நண்பனுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

எங்களைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது என்றபோதும் அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல் என் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடித் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்… இன்னும் சில நாள்களில் நாங்கள் பெருவில் இருந்து கிளம்பிவிடுவோம். எனவே எனது உரை உங்களிடமிருந்து விடைபெறுவதாகவும் அமைகிறது. முதன்முதலாக நாங்கள் பெரு நாட்டின் டாக்னா என்னும் நகருக்குள் அடியெடுத்து வைத்தபோது எங்களிடம் தங்களுடைய விருந்தோம்பல பண்பையும் அன்பையும் வெளிப்படுத்திய இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ’

 

 

தனது பயணங்கள் வாயிலாகத் தான் கண்டுணர்ந்த சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார் எர்னஸ்டோ. ‘அமெரிக்கக் கண்டம் பல நாடுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தப் பிரிவினைகள் நிலையற்றவை, மோசடியானவை. போலி நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய இந்த நம்பிக்கையை நாங்கள் மேற்கொண்ட பயணம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

 

எனினும் இத்தகைய மேன்மையான லட்சியத்தின் பிரதிநிதிகளாக விளங்கக்கூடிய தகுதி எங்களுக்குக் கிடையாதுதான். நாம் அனைவரும் ஒரே மெஸ்டிஸோ இனத்தைச் சேர்ந்தவர்கள். மெக்ஸிகோவிலிருந்து மெகல்லன் நீர்ச்சந்தி வரையில் தனிச்சிறப்பான இனவரைவியல் ரீதியான ஒத்த தன்மைகள் நம்மிடம் இருக்கின்றன. எனவே, குறுகிய மனப்பான்மை கொண்ட பிரதேசவாதங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கான ஒரு முயற்சியாக, பெருவுக்கும் ஒன்றுபட்ட அமெரிக்கக் கண்டத்துக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’

 

யாகுவா பழங்குடி மக்களைக் காண்பதற்காக ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிளம்பினார்கள். அது ஒரு குடிசைப் பகுதி. வைக்கோல், பலகைகள் இரண்டையும் கொண்டு இருப்பிடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. எர்னஸ்டோ சந்தித்த பழங்குடி மக்கள் நவீன உடைகளையே உடுத்தியிருந்தனர். குழந்தைகளின் வயிறு பெருத்து காணப்பட்டது. ஆனால் வயதானவர்கள் குறைபாடுகள் இன்றி இருந்தனர். வாழைப்பழம், தென் அமெரிக்க நாடுகளில் விளையும் யக்கா எனப்படும் கிழங்கு வகை, ஈச்சம்பழம், விலங்குகள் ஆகியவை இந்த மக்களின் முக்கியமான உணவு வகைகள்.

 

சான் பாப்லோ தொழுநோய் குடியிருப்பைத் தொடர்ந்து சென்று பார்வையிட்டு வந்தார் எர்னஸ்டோ. மருத்துவர்களிடமும் தொழுநோய் நோயாளிகளிடமும் நெருங்கி பழகினார். அங்கேயே அவருக்குத் தங்குமிடம் வழங்கப்பட்டது. மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து தன்னால் இயன்ற அளவு உதவிகள் செய்தார். பிரார்த்தனை கூடத்துக்கு வருபவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்று கன்னியாஸ்திரிகள் வலியுறுத்தியிருந்தனர். குடியிருப்பை நிர்வகிப்பவர்கள் அவர்கள்தாம் என்பதால் அவர்கள் இட்டதுதான் கட்டளை. எர்னஸ்டோவுக்கு தேவாலயம் செல்ல விருப்பமில்லை என்பதால் அவருக்கு உணவு வழங்கப்படவில்லை என்றபோதும் வேறு வழியில் நண்பர்கள் தொடர்நது உணவு அனுப்பிக்கொண்டிருந்தனர்.

 

‘இந்தச் சின்ன பனிப்போரைத் தவிர வாழ்க்கை மிக மிக இனிமையாகக் கழிந்தது.’

பிஸ்கோ என்னும் ஒருவித போதை அளிக்கும் மது வகையையும் எர்னஸ்டோ விட்டுவைக்கவில்லை. அமெரிக்க ஒற்றுமை குறித்து அவர் நிகழ்த்திய உரைக்கு இந்த பிஸ்கோவும் உரிய பங்களிப்பு செய்திருந்தது.

தங்கியிருந்த இடத்திலிருந்து மருத்துவமனை செல்ல மிதவைகள் பயன்படுத்தப்பட்டன.

 

திடீரென்று அமேசான் நதியை நீந்தி கடக்கவேண்டும் என்னும் ஆவல் ஏற்பட, இரண்டு மணி நேரம் நீந்தி கரையேறினார் எர்னஸ்டோ. வழக்கம் போல் இங்கும் நோயாளிகள் எர்னஸ்டோவைக் கண்கலங்க விடைகொடுத்து அனுப்பிவைத்தார்கள்.

‘நாங்கள் கிளம்பவேண்டிய நாளான வெள்ளிக்கிழமையன்று நோயாளிகளிடம் விடைபெறுவதற்காகச் சென்றோம். சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்… மூன்று மணிக்கு அனைவரிடமும் விடைபெற்றோம். மூன்றரை மணிக்கு மம்போ டாங்கோ என்று பெயரிடப்பட்ட மிதவையுடன் கிளம்பினோம்… நெஞ்சை நெகிழவைக்கும் விதத்தில் உரை நிகழ்த்தினார்கள். எங்களை வழியனுப்பும் விதமாக படகுத்துறையில் ஒரு இசை நிகழ்ச்சியையும் நடத்தினார்கள்…’

 

 

இந்த இசை நிகழ்ச்சி குறித்து தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் எர்னஸ்டோ மேலும் விவரித்தார். ‘வலது கையில் ஒரு விரல்கூட இல்லாமல் அவற்றுக்குப் பதிலாக சில குச்சிகளைத் தனது மணிக்கட்டில் கட்டிக்கொண்டு அக்கார்டியன் வாசிக்கும் ஒரு கலைஞன்’ எர்னஸ்டோவை கவர்ந்துவிட்டான். பாடகனுக்குக் கண்பார்வை கிடையாது. இவை போக, நரம்பு மண்டல நோய் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலர் அங்கே குழுமியிருந்தனர். அவர்கள் முகம் விகாரமாக இருந்தது. ‘ஆற்று நீரில் பிரதிபலிக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில், ஒரு திகில் படத்தில் வரும் காட்சியைப் போல இருந்தது அது.’

 

அனைத்துக்கும் அடித்தளத்தில் அன்பு நிரம்பியிருந்தது. நோயும் ஏழைமையும் நிறைந்திருந்த அந்தப் பகுதியில்தான் அளவிட முடியாத வளங்களும் காணக்கிடைத்தன. ‘ஆற்றின் நடுப்பகுதி வரையில் எங்களைக் கொண்டு வந்தவர்கள் (டாக்டர் பிரெஸ்ஸியானி உள்ளிட்டோர்) இனி எங்கள் பயணத்தை நாங்களே மேற்கொள்ளும்படி விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.’ இப்போது அவர்கள் வெனிசூலாவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட பயணத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தார்கள். ‘… சில பெசோக்கள் பற்றாக்குறையோடு வெனிசூலாவை நோக்கி கிளம்பிக்கொண்டிருக்கிறேன்… ’

 

 

ஜூலை 2, 1952. கொலம்பியாவில் உள்ள போகோடா (Bogata) என்னும் பகுதியை வந்தடைந்தபோது தனது பயணங்கள் குறித்து எர்னஸ்டோ தன் அம்மாவுக்கு விரிவாக எழுதினார். இந்தப் பயணம் தனது கனவைப் பலப்படுத்தியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. காட்டின் வளங்களும், இயற்கை அழகும் எர்னஸ்டோவை வசீகரித்திருந்தன என்றால் உதவி தேவைப்படும் மக்களின் நிலை அவரை மிகவும் பாதித்திருந்தது. ‘வழி நெடுகிலும் மருத்துவம் செய்துகொண்டே பராகுவே நதியிலிருந்து அமேசான் நதிவரை நீர் வழியாக மேட்டோ ரிõஸ்ஸோ பிரதேசத்தைக் கடக்கவேண்டும் என்று கனவு காணும்படி எங்களைத் தூண்டுபவை இவைதான்… என்றேனும் ஒரு நாள் வீடு கட்டவேண்டும் என்பதைப் போன்ற கனவு இது.’

 

 

கொலம்பியாவில் நிலவிய அரசியல் சூழலை எர்னஸ்டோ தனது கடிதத்தில் பதிவு செய்தார். ‘நாங்கள் இதுவரை சென்ற எல்லா நாடுகளையும்விட இங்கேதான் தனிமனித சுதந்தரம் தீவிரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறது. போலிசார் துப்பாக்கிகள் ஏந்தியபடி தெருக்களில் வலம் வருகிறார்கள். அடிக்கடி பயண ஆவணங்களைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு படிக்க முயல்கிறார்கள்.

 

பதற்றமான சூழல். புரட்சி வெடிக்கலாம். கிராமப்புறங்களில் கலகங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றை அடக்குகின்ற வலிமை ராணுவத்துக்குக் கிடையாது. பழைமைவாதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அவர்களிடம் ஒற்றுமை இல்லை… சுருங்கச் சொன்னால், மூச்சுத் திணறவைக்கும் சூழல் இது. கொலம்பியர்கள் இந்தச் சூழலைச் சகித்துக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு வாழ்த்துகள்.

 

  • தொடங்கியவர்

 

மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 18

 

Che-Guevara-9322774-1-402-300x300.jpg

 

 

 

நீண்ட நெடிய கேள்விகளும் விசாரணைகளும் ஆவணங்கள் பரிசீலனைகளும் முடிந்தபிறகு ஜூலை 14 என்று முத்திரை குத்தி எர்னஸ்டோவையும் ஆல்பர்டோவையும் அதிகாரிகள் அனுப்பிவைத்தார்கள். கொலம்பியா, வெனிசூலா இரு நாடுகளுக்கும் எல்லையாகத் திகழ்ந்த பாலத்தின் வழியாக இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். சிடுசிடுப்பிலும் கடுமையிலும் கொலம்பிய அதிகாரிகளுக்கும் வெனிசூலா அதிகாரிகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கவில்லை.

 

மேற்கொண்டு முன்னேறுவதற்கு அனுமதி கிடைக்கும்வரை சான் அன்டோனியா டி டாச்சிரா என்னும் பகுதியில் இருவரும் காத்திருந்தார்கள். இங்கு அனுமதி என்பது அரசாங்க அனுமதி அல்ல. அதிகாரம் கையிலிருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே அனுமதி வழங்கவும் மறுக்கவும் உரிமை பெற்றிருந்தார்கள். அவர்கள் சந்தேகிக்கும் நபர்களை அவர்களால் திருப்பியனுப்பமுடியும். சுங்கச்சாவடியில் பைகள் சோதனை செய்யப்பட்டன. எர்னஸ்டோ தனது ரிவால்வரை அழுக்கு மூட்டையில் வைத்திருந்ததால் அதிகாரிகள் அதைத் தீண்டவேயில்லை. ஆனால் மிகவும் சிரமப்பட்டு எர்னஸ்டோ பாதுகாத்த கத்தி சிக்கிக்கொண்டது.

 

வெனிசூலாவின் தலைநகரம் காரகாஸை அவர்கள் அடைந்தாகவேண்டும். தான் செல்லவிருந்த பகுதி குறித்து ஓரளவுக்கு அடிப்படையான தகவல்களையாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில் எர்னஸ்டோ ஆர்வமாக இருந்தார். அவ்வாறே அருகிலிருந்த நூலகத்துக்குச் சென்று வெனிசூலா குறித்து படிக்க ஆரம்பித்தார். இந்த முறையும் ஆஸ்துமா மீண்டும் தலைதூக்கியதோடு அதிகப்படியான சிரமத்தையும் அளிக்க ஆரம்பித்திருந்தது. பேருந்தில் மூன்று நாள் பயணமா அல்லது சிறிய ஊர்தியில் இரு நாள்களா என்னும் கேள்வி வந்தபோது பேருந்தை நிராகரித்தார் எர்னஸ்டோ. ஆஸ்துமாவை உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டியிருந்தது.

 

கையிருப்பு குறைவாக இருந்ததால், அடிக்கடி சாப்பிடவேண்டாம் என்று முடிவு செய்தார் எர்னஸ்டோ. ஒரு நிறுத்தத்தில், அனைவரும் வண்டியிலிருந்து இறங்க எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் மட்டும் வண்டியில் மூட்டைகளோடு அமர்ந்திருப்பதைக் கண்டு மனம் இறங்கிய ஓட்டுநர் இருவரையும் வரவேற்று தன் செலவில் நல்ல உணவு வாங்கிக்கொடுத்தார். தன்னிடம் இருந்த கடைசி மாத்திரைகளையும் விழுங்கிவிட்டு மூச்சு விடச் சிரமப்பட்டுக்கொண்டு எப்போது காரகாஸ் வரும் என்று காத்திருந்தார் எர்னஸ்டோ.

 

பொழுது புலரத் தொடங்கியபோது காரகாஸ் வந்து சேர்ந்தார்கள். களைப்பின் உச்சத்தில் இருந்தார் எர்னஸ்டோ. ‘அரை பொலிவார் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்த அறையிலிருந்த படுக்கையில் விழுந்தேன். ஆல்பர்ட்டோ எனக்குப் போட்ட அட்ரினலின் ஊசியின் துணையுடன் ஒரு பிணத்தைப் போல் தூங்கினேன்.’

காரகாஸில் எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் பிரிய வேண்டியிருந்தது. எர்னஸ்டோ தன் மாமாவின் கார்கோ விமானத்தைப் பயன்படுத்தி மியாமிக்குச் செல்ல விரும்பினார். அங்கிருந்து பியூனஸ் ஏர்ஸ். ஆல்பர்ட்டோ காராகஸில் சிறிது காலம் தங்கியிருந்து, அருகிலுள்ள தொழுநோய் மருத்துவமனையில் பணியாற்ற விரும்பினார்.

 

பயணம் என்பது புதியனவற்றைக் கண்டுகொள்வது மட்டுமல்ல பயணம் என்பது விடைபெறுவது, விடைகொடுப்பது. மோட்டார் சைக்கிள் பயணம் தொடங்குவதற்கு முன்பு தன் காதலியிடம் இருந்தும் பயணத்தின்போது தனது மோட்டார் சைக்கிளிடம் இருந்தும் இறுதிகட்டத்தில் தன் நண்பனிடம் இருந்தும் எர்னஸ்டோ பிரியவேண்டியிருந்தது. ‘ஆல்பர்ட்டோ என்னுடன் இல்லாதது மிகுந்த வேதனையைத் தந்தது. ஒரு கற்பனையான தாக்குதலில் என் இடுப்பு ஒடிந்துபோனது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவனிடம் ஏதேனும் சொல்வதற்காக அடிக்கடி திரும்பினேன். அவன் அங்கே இல்லாததை பிறகுதான் என்னால் உணரமுடிந்தது… நாங்கள் இருவரும் இரண்டறக் கலந்திருந்து, ஒரே மாதிரியான நிலைமைகளில் ஒரே மாதிரியாகக் கனவு கண்டு வந்த பழக்கம் எங்களை மேலும் நெருக்கமானவர்களாக ஆக்கியிருந்தது.’

 

முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்டுகொண்டே செல்லும் ஏதாவதொரு அம்சம் வாழ்வில் உண்டா? வீட்டுக்குப் போயாகவேண்டும். படிப்பைத் தொடரவேண்டும். பட்டம் பெற்று, மருத்துவத் தொழிலை மேற்கொள்ளவேண்டும். சேகரித்த அனுபவங்களின் துணைகொண்டு தொழுநோய் மருத்துவத்தில் சாதனை படைக்கவேண்டும். ‘எனினும் விடைபெறுவது என்ற எண்ணமே எனக்கு மகிழ்ச்சி தரவில்லை.’

 

காரகாஸ் மலைகளின்மீது ஏறி சிறிது நேரம் நடந்தார் எர்னஸ்டோ. நினைவுகளை உதறித் தள்ளிவிட்டு தெளிவாக எதிர்காலம் குறித்து சிந்திக்க முயற்சி செய்தார். மலைகளில் கல் வீடுகளைக் காணமுடியவில்லை. திரும்பும் திசையெங்கும் குடிசைகளே நிறைந்திருந்தன. ஒரு குடிசைக்குள் நுழைந்து பார்த்தார். ஏழைமையின் பிடியில் சிக்கியிருந்த ஒரு குடும்பம் அங்கே வசித்துக்கொண்டிருந்தது. உங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று எர்னஸ்டோ கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். படம் எடுத்ததும் எங்களுக்கு அதை முதலில் கொடுப்பதாக இருந்தால் சம்மதிக்கிறோம் என்றார்கள். அது சாத்தியமில்லை, கழுவிய பிறகே படம் கிடைக்கும் என்று எர்னஸ்டோ சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. மறைந்திருந்து ஒரு குழந்தையைப் படமெடுக்க முயன்றார் எர்னஸ்டோ. அந்தக் குழந்தை பயத்துடன் தடுமாறிவிழுந்துவிட, கண்டபடி திட்டியபடி அவர்கள் எர்னஸ்டோவைத் துரத்தத் தொடங்கினார்கள்.

 

கிரானாடோவிடம் இருந்தும் வெனிசூலாவிடம் இருந்தும் விடைபெற்றுக்கொண்டு எர்னஸ்டோ ஒரு சரக்கு விமானத்தில் ஜூலை 27, 1952 அன்று மியாமி சென்று சேர்ந்தார். ஒரு நாள் அங்கிருந்துவிட்டு, திரும்பவும் காரகாஸ் சென்று, பிறகு அங்கிருந்து அர்ஜென்டினா வந்து சேர்வதுதான் அந்த விமானத்தின் பயணத்திட்டம். ஆனால் விமானத்தின் எஞ்சின் ஒன்று பழுதடைந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் சரிசெய்யப்படும்வரை மியாமியில் இருந்து விமானம் கிளம்பவில்லை.

 

முடிவடையவிருந்த பயணத்தின் திடீர் நீட்சி என்று கொள்ளலாம்தான். ஆனால் எர்னஸ்டோவிடம் இருந்தது ஒரு டாலர் மட்டுமே. ஒரு சிறிய விடுதிக்குச் சென்று, ஊருக்குச் சென்றதும் பணம் அனுப்புகிறேன் என்று மன்றாடி ஓர் அறையைப் பிடித்துக்கொண்டார். மற்ற விஷயங்களை வீடு திரும்பியதும் தன் தந்தை எர்னஸ்டோ குவேரா லிஞ்சிடம் பகிர்ந்துகொண்டார். இனி வருபவை எர்னஸ்டோ சீனியரின் குறிப்புகள்.

 

‘பணம் எதுவும் இல்லாமல் எப்படி நாள்களைக் கழித்தான் என்று வீடு திரும்பியதுமே அவன் எங்களிடம் கூறினான்… ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் அவன் நகரத்தின் மையத்திலிருந்த தனது விடுதியில் இருந்து சுற்றுலாத் தலமான கடற்கரைக்கு நடந்து சென்றான். அவன் அந்த வழியாகச் சென்ற வாகனங்களில் அரிதாகவே ஏற்றிக்கொள்ளப்பட்டான். இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் பதினைந்து கிலே மீட்டர் என்பதாக எனக்கு நினைவு. ஆனால் அவன் தன்னால் இயன்ற அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தான். அமெரிக்காவை, அதன் ஒரு சிறு பகுதியைத்தான் என்றபோதும், அறிந்துகொள்ள முயன்றான்.’ எர்னஸ்டோவின் பயணங்களுக்கு உந்து சக்தி இந்த இரு அம்சங்கள்தாம். இயன்ற வரை மகிழ்ச்சியாக இருப்பது. புதிய சூழலை முடிந்தவரை தெரிந்துகொள்ள முயன்றது.

 

எர்னஸ்டோவின் பயணத்தில் கடைசி கட்டம்வரை சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஒரு மாத காலத்தை மியாமியில் கழித்துவிட்டு, எஞ்சின் பழுது பார்க்கப்பட்ட பிறகு விமானத்தில் ஏறி, அது பறக்கவும் தொடங்கிவிட்டது. உறக்கத்தில் இருந்த எர்னஸ்டோவை ஒரு சிறுவன் அவசரமாக எழுப்பினான். ஆபத்து, சக்கரங்கள் வெளியில் வர முடியாதபடி விமானத்தின் அடிப்பகுதி செயலிழந்துவிட்டது, எழுந்திருங்கள்! எர்னஸ்டோ அதை ஒரு வேடிக்கையாக நினைத்து, மீண்டும் தூங்கப்போய்விட்டார். பயணிகள் என்று பார்த்தால் பைலட் போக, எர்னஸ்டோவும் அந்த சிறுவனும்தான் (அவன் குதிரை லாயத்தைச் சேர்ந்தவன்) விமானத்தில் இருந்தனர். மற்றபடி பழக்கூடைகள் கொண்ட பெட்டிகளே அதிகம் நிறைந்திருந்தன.

 

விழிப்பு வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது லாரிகளும் கார்களும் தீயணைப்பு வண்டிகளும் விமானத்தைச் சுற்றி நின்றுகொண்டிருப்பதை எர்னஸ்டோ பார்த்தார். விமானத்தின் அடிப்பகுதி மெய்யாகவே செயலிழந்திருந்தது. ஆனால் எப்படியோ ஆபத்து எதுவுமின்றி விமானம் தரையிறக்கப்பட்டது.

பெரிய இடைவெளிக்குப் பிறகு தன் மகனைக் கண்ட அந்தத் தருணத்தை எர்னஸ்டோ சீனியரின் வார்த்தைகளில் பார்ப்போம்.

 

‘மியாமியிலிருந்து வரும் சரக்கு விமானம் ஒன்றில் எர்னஸ்டோ மாலையில் வரப்போவதாக ஒரு நாள் காலையில் பியூனஸ் ஏர்ஸிலிருந்து எங்களுக்கு கடிதம் வந்தது. எட்டு மாதங்களாக, தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சென்று பயணம் முடிந்து கடைசியில் அவன் வீடு திரும்புகிறான்.

‘எஸேய்ஸா விமான நிலையத்தில் அவனை வரவேற்பதற்காகக் குடும்பத்தினர் அனைவரும் சென்றோம். அன்று பிற்பகலில் மழை வரும்போல் இருந்தது. மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் வெளிச்சமே இல்லை. சரக்கு விமானம் பிற்பகல் இரண்டு மணிக்கு வருவதாக இருந்தது. நாங்கள் இரண்டு மணி நேரம் முன்னதாகவே காத்திருந்தோம். விமானம் வந்து சேராததால் நாங்கள் எல்லோரும் பதற்றமடைந்தோம். கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் ஏதும் வரவில்லை. சரக்கு விமானங்கள் எப்போதும் குறித்த நேரத்துக்கு வருவது கிடையாது என்றும், அவற்றை யாரும் எதிர்பார்க்காதபோதுதான் ஓடுபாதையில் அவை இறங்குவது வழக்கம் என்றும் கூறி, அவர்கள் எங்களைச் சமாதானப்படுத்தினார்கள்.

 

‘அன்றும் அதுதான் நடந்தது. அந்த டக்ளஸ் விமானம் திடீரென்று தோன்றியது. மேகங்களினூடாகத் தாழ்வாகக் பறந்தது. விமான நிலையத்தை வட்டமிட்டுவிட்டு எந்தப் பிரச்னையும் இல்லாமல் தரையிறங்கியது. சில கணங்களுக்குப் பின்னர், மழைத் துளியில் நனைந்து விடாதவாறு மழைக்கோட்டு அணிந்தபடி, எர்னஸ்டோ விமானத்திலிருந்து வெளியில் வந்து, ஓடுபாதையின் எல்லையை நோக்கி ஓடிவந்தான். நான் மேல்தளத்தில் நின்றுகொண்டிருந்தேன். என் கைகளை வாயருகில் குவித்து, என்னால் முடிந்த அளவுக்கு உரக்கக் கத்தினேன். அந்த சப்தம் அவனுக்குக் கேட்டது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. பிறகு மேல்தளத்தில் நாங்கள் நின்றுகொண்டிருப்பதை அவன் கண்டுகொண்டான். எங்களைப் பார்த்து கையசைத்தபோது புன்னகையுடன் காட்சியளித்த அவனுடைய முகம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அது 1952ம் ஆண்டு செப்டெம்பர் மாதம்.’

 

                                                        * முடிந்தது *

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு பயணப் பகிர்வுக்கு,மிக்க நன்றி, அபராஜிதன்!

 

ஒரு எளிமையான வாழ்க்கை தரும் மகிழ்ச்சியைப் பலரும் அனுபவிப்பதில்லை.

 

எனினும் மகாத்மா காந்தி, விவேகானந்தர்,நெல்சன் மண்டேலா, சேகுவேரா போன்றவர்களின், வாழ்க்கையில் என்னைக் கவர்ந்ததே, அவர்களது எளிமையான வாழ்க்கை முறை தான்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.