Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெறிச்சோடிப்போன தமிழர் அரசியலும் ஜெனிவா நம்பிக்கையும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெறிச்சோடிப்போன தமிழர் அரசியலும் ஜெனிவா நம்பிக்கையும்

- யதீந்திரா

 

 

2009 இற்கு முன்னர் தமிழர் அரசியல், போர் செய்திகளின் வழியாக நகர்ந்து சென்றது. படித்தவர் தொடங்கி பாமரர் வரை, அசைபோடுவதற்கு ஏதாவதொரு செய்தி கிடைத்த வண்ணமேயிருந்தது. திகிலும், சாகசங்களும் நிரம்பியதாக அப்போதைய தமிழர் நாட்கள் கழிந்திருந்தன. 2009இற்கு பின்னர் எல்லாம் வெறிச்சோடிப் போய்விட்டது. ஆனாலும் நாட்களை வெறுமனே கடத்துவதற்கான அரசியலை தமிழர்கள் இன்னும் இழந்துவிடவில்லை. அந்த வகையில் தமிழ் அரசியல் தலைவர்கள் அதிஸ்டசாலிகளே! அவ்வப்போது, சர்வதேச அழுத்தம், பிரேரணை, அமெரிக்கா, ஜெனிவா போன்ற சொற்களுக்கு ஊடாக, ஒரு மாதிரியாக நமது அரசியல் தலைவர்கள் தப்பிப் பிழைத்துக் கொள்கின்றனர். இப்பொழுது தென்னாபிரிக்கா என்னும் சொல்லும் தமிழ் அரசியல் அகராதியில் புதிதாக சேர்ந்திருக்கிறது. மீண்டும் ஜெனிவா பற்றிய விவாதங்களும் தொடங்கியிருக்கின்றன.

 

2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க அனுசரணையில், ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே! அப்பிரேரணையை இந்தியாவும் ஆதரித்திருந்த நிலையில், அது வெற்றிபெற்றது. சமீபத்தில் இலங்கை வந்துசென்ற மூவர் அடங்கிய அமெரிக்க குழுவினர், இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின்போது, தாம் மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக அறிவித்துச் சென்றிருக்கின்றனர். இதன் மூலம் அமெரிக்கா மீண்டும் தமிழர் அரசியலை உடுக்கடித்து எழுப்பியிருக்கிறது. 2012இல் அமெரிக்கா அடித்த உடுக்கையில், கடந்த ஒரு வருடமாக தலைகால் தெரியாமல் ஆடிக்கொண்டிருந்த நமது தலைவர்கள், களைப்புற்று சற்று கண்ணயர முற்பட்ட வேளையில்தான், மீண்டும் அமெரிக்கா உடுக்கடித்து எழுப்பியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் நமது தலைவர்கள் என்போரும் தலைகால் தெரியாமல் ஆடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் மார்ச் 2014 வரையில், அரசியல் ஆட்டத்தை தொடருவதற்கான ஒரு வாய்ப்பு நமது தலைவர்கள் என்போருக்கு வாய்த்திருக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தமிழ் மக்களின் தலைவர்கள் கூட்டமைப்பினரா அல்லது அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்களா என்பதே, தெளிவில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் கூட்டமைப்பினர் பேச வேண்டிய அனைத்தையும் தற்போது அவர்கள்தான் பேசி வருகின்றனர்.

 

இம்முறை அமெரிக்கா என்ன வகையானதொரு பிரேரணையை கொண்டுவரலாம் என்பது வெளிவராத நிலையில், அதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு பெரியளவில் நெருக்கடிகள் வரலாம் என்னும் ஆய்வுகள் வெளிவந்த வண்ணமிருக்கிறன. ஆனாலும் அரசாங்கம் தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் செயற்பட்டுவருவதாக தெரிகிறது. கொழும்பிலுள்ள சில அரசுசாரா நிறுவன புத்திஜீவிகள் சொல்வது போன்றெல்லாம், அரசாங்கம் தடுமாறிவிடவில்லை. வெளித்தோற்றத்தில் பார்த்தால், அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை உதாசீனம் செய்வது போன்று தென்பட்டாலும், உண்மையில் அவ்வாறுதான் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதா, என்பது பிறிதொரு கேள்வியாகும்.

 

இங்கு பொதுவாக சர்வதேச அழுத்தம் என்று நாம் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் சர்வதேசம் என்பது அமெரிக்காவையே குறித்து நிற்கிறது. எனவே இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தம் என்பது அடிப்படையில் அமெரிக்க அழுத்தமாகும். இந்த பின்புலத்தில், அமெரிக்காவை பகைத்துக் கொள்வதன் நீண்டகால ஆபத்துக்களை இந்த அரசாங்கம் உணராமல் செயற்படுவதாக ஒருவர் கணிப்பிடுவது சரியான ஒன்றாக அமையாது. அமெரிக்காவின் மென்மையான அழுத்தங்களின் எல்லைக் கோடு, எதுவரையென்னும் துல்லியமான மதிப்பீட்டுடனேயே அரசாங்கம் செயற்பட்டுவருவதாக தெரிகிறது. இதில் தான் எதுவரை இறுக்கமான நிலைப்பாடொன்றை காண்பிக்க முடியுமென்னும் கணிப்பும் அரசாங்கத்திடம் இருக்கும். ஏனெனில் அமெரிக்கா தனது மென்மையான அழுத்தங்களை தாண்டிச் செல்லுமளவிற்கு, இலங்கை ஒரு முக்கியமான நாடல்ல. தவிர தனது மூலோபாய பங்காளியான இந்தியாவின் ஆர்வங்களை மீறி, அமெரிக்கா இலங்கை விடயத்தில் எதுவும் செய்யப் போவதில்லை. உதாரணமாக 2012இல் அமெரிக்காவிற்கு பதிலாக பிறிதொரு நாடு குறித்த பிரேரணையை சமர்ப்பித்திருக்குமானால், இந்தியா ஆதரித்திருக்காது. இவ்வாறான விடயங்கள் அனைத்தையும் துல்லியமாக மதிப்பிட்டே அரசாங்கம் தனது நிழ்ச்சிநிரலை அமுல்படுத்தி வருகின்றது எனலாம்.

 

இம்முறை அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையில், 2012இல் முன்வைக்கப்பட்டிருந்த விடயங்கள் மீது மேலும் சில பொறுப்புக்களை வலியுறுத்துவதாக அமையலாம். அமெரிக்காவின் 2012 பிரேரணையில் பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஒன்று, அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை (constructive recommendations) அமுல்படுத்துவதுடன், மேலும் அரசால் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் ஏதேனும் வன்முறைகள் இடம்பெற்றிருக்குமிடத்து, அதனை துரிதகதியில் விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரண்டு, மனித உரிமைகள் பேரவையின் 20வது கூட்டத் தொடருக்கு முன்னதாக, மேற்குறிப்பிட்ட விடயங்களை அமுல்படுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டத்தை (comprehensive action plan) அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இறுதியாக - மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (Office of the High Commissioner for Human Rights) ஆலோசனைகள், தொழில்துட்ப உதவிகளை பெற்று செயலாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

 

2012இல் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் இடம்பெற்றிருந்த விடயங்கள் இவ்வளவே! மேற்படி பிரேரணை 24 நாடுகளின் ஆதரவில் வெற்றி பெற்றிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஏதோ பெரிதாக நடைபெறப்போவதான கருத்துக்களை நமது அரசியல் தலைவர்கள் வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் இது பற்றி எவரும் பெரியளவில் கேள்வி எழுப்பப்போவதில்லை என்பதால், தொடர்ந்தும் சர்வதேசக் கதைகளை சொல்லுவதில் பெரிய பிரச்சனைகள் ஏதும், அவர்களுக்கு இருக்கப் போவதில்லை.

 

இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது - இலங்கையின் மீது எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும், இலங்கை அரசாங்கத்துடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர். எனவே எத்தகைய சர்வதேச அழுத்தங்கள் இருப்பினும், இறுதியில் கூட்டமைப்பு அரசாங்கத்துடனேயே பேச வேண்டிவரும். ஆனால் அரசாங்கத்துடன் முழுமையாக பகைத்துக் கொண்டு, கூட்டமைப்பால் பேச முடியுமா என்னும் கேள்வியும் இந்த இடத்தில் அவசியப்படுகிறது. கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லிவருவது போன்று, இலங்கையின் இனமுரண்பாட்டு அரசியலில் ஒரு மூன்றாம்தரப்பின் தலையீட்டுக்கான வாய்ப்பு இல்லை. அவ்வாறானதொரு தலையீட்டை அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் ரி.என்.ஏ என்பதன் அர்த்தம் தமிழ் தேசிய இராணுவம் அல்ல.

 

அரசாங்கத்தின் விருப்பத்தை மீறி, ஒரு அந்நிய சக்தி இலங்கையில் தலையீடு செய்வதற்கு இலங்கை ஒரு சிரியாவும் அல்ல. ஆனால் இவற்றையெல்லாம், கருத்தில் கொண்டு ஒரு வேலைத்திட்டத்தை வகுக்கும் எந்தவொரு செயற்பாடும் கூட்டமைப்பிடம் இல்லை. கடந்த மூன்று வருடங்களாக கூட்டமைப்பினால் முன்னிறுத்தப்படும் அரசியல் சொற்களை கவனிப்போமாயின், ஒரு வகையில் அவை பாட்டிவடை சுட்ட கதையை நினைவூட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

 

இன்றைய உலக ஒழுங்கில் பலம்பொருந்திய நாடுகளின் தலையீடுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும். எனவே இலங்கை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவை நிகழ்ந்தே தீரும். இவ்வாறான தலையீடுகள் எப்போதும் அரசை மையப்படுத்தியிருக்குமே தவிர, குறிப்பிட்ட நாட்டில் வாழும் இனங்களை மையப்படுத்தியல்ல. இவற்றை சரியாக விளங்கிக் கொண்டால்தான், இவ்வாறான பிரேரணைகளின் ஆயுள் என்னவாகலாம் என்னும் கேள்விக்கான பதிலையும் நாம் கண்டடையலாம். ஐக்கிய நாடுகள் சபையானது, பிரேரணைகளை காண்பது இதுதான் முதல் தடவையல்ல. ஐக்கிய நாடுகளில் பொதுச்சபையில், இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை 100இற்கு மேற்பட்ட பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதில் 40இற்கு மேற்பட்ட பிரேரணைகளை அமெரிக்காவும் ஆதரித்திருக்கின்றது. ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக எதனையும் செய்ய முடிந்ததா என்று வினவினால் பதில் பூச்சியமாக இருக்கும். எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு சிந்திப்போமாயின், நமது தலைகால் தெரியாத ஆட்டங்களெல்லாம் அர்த்தமற்றவையாகலாம். சிந்தித்து செயல்படுவதே அவசியம். கடந்த எழுபது வருட கால தமிழர் அரசியலில், சிந்தித்து செயலாற்றுதல் என்னும் ஒரு சொற்தொடர் இருந்திருக்கிறதா?

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=c1272c55-5695-474c-9369-bb3f772baeb2

 பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தமிழ் மக்களின் தலைவர்கள் கூட்டமைப்பினரா அல்லது அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்களா என்பதே, தெளிவில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் கூட்டமைப்பினர் பேச வேண்டிய அனைத்தையும் தற்போது அவர்கள்தான் பேசி வருகின்றனர்.

 

 

நாட்டிற்கு வந்த மூவர் குழு முதலில் கூட்டமைப்பை சந்தித்தனர் என்பது சிங்களத்திற்கு கடுப்பேத்தும் செயல், காரணம் அது இராசதந்தர ரீதியாக சிங்களத்தை அவமானப்படுத்தும் செயலே.



 வெளித்தோற்றத்தில் பார்த்தால், அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை உதாசீனம் செய்வது போன்று தென்பட்டாலும், உண்மையில் அவ்வாறுதான் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதா, என்பது பிறிதொரு கேள்வியாகும்.

 

அமெரிக்கா ஒரு தீர்மானத்தை இரண்டாவது தடவையாக கொண்டுவருவது என்பது அரசாங்கம் நிலைமையை புரிந்துதான் செயலப்டுகின்றது என காட்டி நிற்கின்றது  :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் சர்வதேசம் சுயாதீன போர்க்குற்ற விசாரணையைச் செய்யவேண்டும் என்ற தமிழர் தரப்பின் வேண்டுகோளை அமெரிக்காவும் இதர நாடுகளும் பெரிதாக கண்டுகொள்ளும் என்று சொல்வதற்கில்லை.

 

சிங்கள மக்களின் ஆதரவுடன் இருக்கும் மகிந்தவின் கடும்போக்கு மேற்கு நாடுகளுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், மகிந்த அரசுமேல் கடுமையான அழுத்தத்தைப் பிரயோகிக்காமல் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் மெல்லிய அழுத்தங்களை கொடுக்க முன்வரலாம். அடுத்த அடுத்த ஆண்டுகளில் இவை பற்றிய அக்கறைகள் காணாமல் போகவே சாத்தியம் அதிகம் தெரிகின்றது.

 

தமிழர்களின் அடுத்த கோரிக்கையான தாயகத்தை சிங்கள காலனியாதிக்கத்தில் இருந்து பாதுகாத்தல் என்பதற்கும் சர்வதேச நாடுகள் அதிகம் ஆதரவைக் காட்டாததால், சிங்கள்க் குடியேற்றங்கள் தமிழர் தாயகப் பகுதியில் வேகமாக தொடர்ந்து நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தமுடியாத நிலைதான் உருவாகியுள்ளது.

 

தமிழ்த் தலைமைகள் தமக்கு முன்னேயுள்ள தெளிவான அரசியல்  பிரச்சினைகளை  கையாள்வதில் தெளிவற்ற போக்கைக் காட்டுவதும், தமிழர்களின் மேல் தமது செல்வாக்கைக் காட்டுவதில் மாத்திரமே குறியாக இருப்பதும் தமிழர்களுக்கு நன்மை எதனையும் தரப்போவதில்லை என்பதை உணர்ந்து செயற்படவேண்டும். 

இலங்கை சிரியா இல்லை, சிரியாவை விட முக்கியமான இடத்தில் இந்து சமுத்திரத்தில் உள்ளது. இந்த இடத்தை சீனா ஆதிக்கத்திற்குள் கொண்டுவருவதே அதன் இலக்காக உள்ளது.

 

இஸ்ரேலுக்கு எதிராக பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதும் உண்மை அவற்றை மீறி பாலச்தீனம் இன்று ஒரு முழு நாடாக அங்கீகரிக்கபப்டும் நிலைக்கு வந்துள்ளதும் உண்மை.

 

 

இலிபியாவில் சீன ஆதரவையும் தாண்டி ஐநா பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை வெற்றிகரமாக கொண்டுவரப்பட்டது.

எனவே அமெரிக்கா  என்று இல்லாமல், நவநீதம் பிள்ளை ஐ.நா. சார்பாக பாதுகாப்பு சபையில் பொருளாதார தடை உட்பட பல நெருக்குவாரங்களை கொண்டுவருவது - ஆரோக்கியமானது.

 

 ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தல், ஐ.நா. அமைதிப் படையை நிலைநிறுத்தல், இராணுவ ரீதியான அழுத்தங்கள் வழங்கல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

ஆயினும் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் சீனாவும், ரஷ்யாவும் "வீட்டோ' அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவர இயலாது என்று மூத்த அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116712

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.