Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாத உப்பில் ஊறிய மிளகாய் சிவக்காது – நடராஜா குருபரன்

Featured Replies

முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் அவர்களுக்கு பகிரங்கக்கடிதம் 2 -

இனவாத உப்பில் ஊறிய மிளகாய் சிவக்காது – நடராஜா குருபரன்

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிதாமகரும் ஜே.வீ.பீயின் முன்னாள் அரசியற்குழு – மத்திய குழு – செயற்குழு உறுப்பினரும் அக்கட்சியின் இயந்திரம் என அழைக்கப்பட்டவருமான குமார் குணரட்ணத்திற்கு நான் எழுதிய முதலாவது பகிரங்கக் கடிதம் பல வாதப் பிரதி வாதங்களை தோற்றுவித்திருக்கிறது.

அந்தப் பகிரங்க மடல் முகப்புத்தகத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியதுடன் என்மீது தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படவும் ஏதுவாகஅமைந்தது. எனது முதலாவது மடலில் நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதில் முன்னிலை சோசலிசக் கட்சியையும் அதன் முன்னணியான சம உரிமை இயக்கத்தையும் ஆதரிப்பவர்கள் என்மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைத்திருந்தார்கள்.

பொது வாழ்வில் இருக்கிற எவரும் அவர்மீது வைக்கப்படுகிற தனிப்பட்ட விமர்சனங்களுக்குப் பொறுப்பான பதில்களையும் வெளிப்படையான சுயவிமர்சனத்தையும் வைக்கப்பின்னிற்கக்கூடாது என்று நம்புகிறேன். இதனடிப்படையில் முகப்பக்கத்தில் என்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கான பதிலைஅங்கேயே கொடுத்திருக்கிறேன். எனது உடலும் மனமும் ஒத்துழைத்து எனது மௌனம் கலைகிறது தொடரை எழுதி முடிக்கும் போது எனது தனிப்பட்ட வாழ்வு முழுவதுமாகப் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுவிடும்.

இத்தகைய சூழலில் சோசலிச முன்னணிக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக முற்றுப்பெறாது தொடரும் விவாதத்தில் அந்தக் கட்சியின் முன்னணி அமைப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பழ ரிச்சாட் எனது கேளிவிகளுக்கான பதிலை வழங்குவதாகக் கூறிப்பல நாட்கள் கடந்தாலும் அவர் பதிலளிப்பார் என்ற நம்பிக்கை இன்னும் தொடர்கிறது.

எனினும் முகநூலில் தொடரும் பல விவாதங்களை பார்க்கும் போது ஏற்படுகின்ற வேதனைகளால் இந்த இரண்டாவது பகிரங்க மடலையும் வரைய வேண்டி ஏற்பட்டுள்ளது.

எனினும் முகநூலில் தொடரும் பலவிவாதங்களை பார்க்கும் போது ஏற்படுகின்ற வேதனைகளால் இந்த இரண்டாவது பகிரங்கமடலையும் வரையவேண்டி ஏற்பட்டுள்ளது.

பாரிசில் உள்ளஎனது நீண்டகாலச் சிங்கள நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போதுபோதுஅவர் “ மச்சான் குமாரின் ஆதரவாளர் ஒருவர் உன்னைப் புலிஎன்று கூறினார்”என்றார். பாரிசில் இடம் பெறும் கூட்டத்தைப்பற்றிய சிறிய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த அந்தத்தமிழ் அன்பரிடம் சிறுவாதம்புரிந்த எனது சிங்களநண்பர் “குருபரன் எழுதியகட்டுரையைப் படித்தாயா?” எனக் கேட்டதற்கு குருபரன் புலியாயிற்றே என முன்னிலை சோசலிசக்கட்சியின் அந்த ஆதரவாளர் தெரிவித்திருக்கிறார். உடனே அதற்கு பதிலளித்த என்சிங்களநண்பர், அப்படியானால் உங்களுக்கு குமார் குணரத்தின் முன்னிலை சோசலிசக்கட்சி மிகப் பொருத்தமானதுதான். அந்தக்கட்சியில் இணைந்துதான் நீங்கள் வேலை செய்யவேண்டும் என்றுகூறினாராம். இந்த இடத்தில் முன்னாள் புலிகள் பலர் இந்த அமைப்பில் இணைந்து வேலை செய்வதாக பலர் சொல்லித் திரிவதையும் நினவிற் கொள்ள வேண்டும்.

முதலாவது மடலில் முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் அதன் முன்னணியான சமவுரிமைக் கட்சி தோற்றம் பெறுவதற்கு முன்னரான ஜேவீபியில் அங்கம் வகித்தவர்களின் அரசியற் செயற்பாடுகள் குறித்த பல முக்கியமான தகவல்களைத் தவிர்த்திருந்தேன்.

ஜேவீபியின் பிரதான சக்கரங்களாக இருந்த இவர்கள் கடந்த கால்நூற்றாண்டாக என்னென்ன செயற்பாடுகளைச் செய்தார்கள் என்பதை அறியாதவர்களின் முன் இவர்கள் மீண்டும் வந்து தங்களை உண்மையான இடதுசாரிகளாகவும் புரட்சியாளர்களாகவும் வெளிப்படுத்த முனைகின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்குப் பின்னால் இருந்த பிழையான அரசியலையும் அங்கு ஆதிக்கம் செலுத்திய தனிமனிதக் குணாம்சங்களையும் ஒரு பத்திரிகையாளனாக கேள்விக்குட்படுத்த வேண்டிய பொறுப்பை நான் செய்யும் போது என்னைப் புலி என்றோ தமிழ்த்தேசியவாதி என்றோ கூறி இலகுவாகக் கடந்து சென்றுவிட முனைகிறீர்கள்.

இந்தப்பண்பு உண்மையான இடதுசாரிகளுக்குரிய பண்பல்ல என்பதை எல்லோரும் அறிவார்கள். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் விமர்சிக்க விட்டால் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்து விடுவீர்கள். ஆனால் உங்களை விமர்சிக்க வெளிக்கிட்டால்....

மக்கள் நலன் சார்ந்து தொழிற்படுபவர்கள் கட்சி அரசியலை முன்னெடுப்பவர்கள் மக்களுக்கும் தமது கட்சிகளுக்கும் தலைமை தாங்க முற்படும் தனிநபர்கள் எல்லோரும் தமது கடந்த காலங்களை இதய சுத்தியுடன் மீளாய்வு செய்வது இன்றியமையாதது.

நீங்கள் கடந்த காலங்களில் கட்சியாகவும் தனி நபர்களாகவும் வெளிப்படுத்திய குணாம்சங்கள் ஆபத்தானவை. இடதுசாரி குணாம்சத்தைக் கொண்டிராதவை. இவற்றை வெளிக்கொண்டுவராவிட்டால் வராவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது

உங்களுக்கு இலங்கையின் சிறுபான்மை இனங்களின் நலன்களில் உண்மையான அக்கறை இருக்குமென்றால்... அட விடுங்கள் அடிப்படையான மனித உரிமைகள் பற்றிய அக்கறை இருக்குமென்றால் எனது கேள்விகளுக்கு இதய சுத்தியுடன் பதிலை வைத்து மக்களின் முன் வாருங்கள் வரவேற்போம்.

இந்த அடிப்படையில் இந்த 2 ஆவது பகிரங்க மடலை முன்னிலை சோசலிசக் கட்சி – அதன் முன்னணியான சம உரிமைக் கட்சி – அவற்றின் பிதாமகரான குமார் குணரட்ணம் உள்ளட்டவர்களை நோக்கி வரைகிறேன்.

குமார் குணரட்ணம் அவர்களே கட்சியின் முக்கியஸ்த்தர்களே!

1995 யூன் மாதம் சந்திரிக்கா அரசாங்கம் தனது யுத்த முன்நகர்வின் போது நடத்திய நவாலி தேவாலையம் மீதான விமான தாக்குதலை தெற்கில் புத்திஜீவிகள் மனித உரிமைவாதிகள் உள்ளிட்ட மனிதாபிமானம் கொண்டவர்கள் அனைவரும் கண்டித்ததனர்.

இந்தக் கொடூர தாக்குதல் குறித்தும் அதில் பலியானவர்கள் குறித்தும் வடக்கில் தயாரிக்கப்பட்ட ஒரு ஒளிப்படக்காட்சியை எப்படியோ பெற்றுக் கொண்ட தற்போதய நாடாளுமன்ற உறுப்பினரும் அப்போதைய மாணவர் தலைவர்களில் ஒருவருமான சுனில் ஹந்தும்நெத்தி யூன் 20ல் ஜேவீபியின் மாணவரமைப்பு ஜெயவர்தன பல்கலைக் கழகத்தில் நடத்துகின்ற மாவீரர்கள் தினத்தில்(heros day) ஒளிபரப்ப எடுத்த முயற்சியை நீங்கள் நேரடியாக தடுத்தீர்கள்.

ஜெயவர்தனபுரப் பல்கலைக்கழக மாணவரமைப்பின் உள்ளக மட்டத்தில் பார்வையிடப்பட்ட இக் கொடூர நிகழ்வைப் பகிரங்கமாக அனைவரும் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்ட போது மாணவரமைப்புக்குப் பொறுப்பாக இருந்த குமார் குணரட்ணமாகிய நீங்கள் “பைத்தியக்கார வேலை பாக்காதே” (பிசுவேட கரண்ட எப்பா') எனக் கூறி அதனைத் தடுத்தீருந்தீர்கள்... ஏன் தோழரே? ஒரு அரசு தன் சொந்த மக்களைக் கொலை செய்ததைப் பகிரங்கப்படுத்தி அதனை மக்களின் முன்கொண்டு சென்று அவர்களுக்குக் காட்டி அறிவூட்ட வேண்டிய பணி ஒரு இடதுசாரியினுடையதல்லவா?

இல்லை கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்ற அரச பிரசாரத்தை வலுப்படுத்த விரும்பிய இனவாதியாக இருந்தீர்களா?

அல்லது சிங்கள மக்களின் மென்மையான மனங்கள் இந்தக் கொடூரமான காட்சிகளைப்பார்த்து கலங்கிப்போய்விடும் என்ற உயரிய எண்ணத்தில் தடுத்தீர்களோ?

“பிஸ்சு வேட”(பைத்தியகார வேலை) செய்தது யார் என்று இதனை வாசிப்பவர்களுக்குத் தெரியும்.

1995 நடுப்பகுதியில் உங்கள் மாணவரமைப்பில் இருந்த மாணவர்களிடையே ஒரு பொது உணர்வு ஏற்பட்டு இருந்தது .1989 – 1987 காலப்பகுதியில் ஜே.வி.பிக்கு எதிராக பிறேமதாஸ அரசாங்கம் மேற்கொண்ட களையெடுப்பு யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டன்ர் இதனால் நாடு எதிர்கொண்ட அவலங்கள் குறித்து ஒரு பொது உணர்வு ஏற்பட்டிருந்தது. இதன்வழி கற்றுக்கொண்ட பாடங்கள் யுத்தத்திற்கு எதிரான உணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன. இதனால் 'ஜனகாத்தனய யுத்தய நவத்தண்ட' (மக்களைக் கொல்லுகிற அல்லது அவர்களை வதைக்கிற அல்லது மக்களுக்கு எதிரான யுத்தம் வேண்டம் அதனை நிறுத்துக) என ஸகீறீன் பிறிண்டில் சுவரொட்டிகளை அவர்கள் தயாரித்து இருந்தார்கள். ஆனால் அவற்றை ஒட்டவிடாது உங்களது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்திருந்தீர்கள். குமார் சகோதரயா அவர்களே இதனை இல்லை என மறுப்பீர்களா?

அன்றைக்கு யுத்தத்திற்கெதிரான விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த முன்னின்று ஒரு உண்மையான இடது சாரியாக நீங்கள் உழைத்திருந்தால் சிலவேளை 2009 இல் ஒன்றறை இலட்சம் மக்களின் இரத்தத்தை ராசபக்ஸ் குடும்பம் குடிக்க வாய்த்திருக்காது

இவ்வாறு சுவரொட்டிகளை தடுத்தது மட்டும் அல்லாமல் ஒரு படி மேலே போய் “வியாச்யயயுத்தய நவத்தண்ட” ( பொய்யான அல்லது போலியான யுத்தத்தை நிறுத்து) என சந்திரிக்கா அரசாங்கத்தை விமர்சித்து சுவரொட்டிகளை அச்சிட்டு நாடு பூராகவும் ஒட்ட உத்தரவிட்டீர்களே ! ஐயகோ இதுவோ இடதுசாரித்தனம்.?

நீங்கள் அன்று இலக்கண மொழியில் சுவரோட்டியில் நாடெல்லாம் பரப்பியதைப் பின்னர் சம்பிக்க றணவக்க 'பொறுயுத்தய கரண்டப்பா' (பொய்யான யுத்தத்தைச் செய்யாதே) எனப் பேச்சு மொழியில் சொன்னார்.

இப்போது ஒருவிடையம் தெளிவாகிறது. இணையத்தில் சோசலிசம் பரப்புபவர்கள் உங்களை இடதுசாரி என்கிறார்கள். ஆக சம்பிக்கவும் இடது சாரியாகிறார்

2000 ஆண்டின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் உங்கள் கட்சி அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தது. நிட்டம்புவவில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது உங்கள் மானசீகத் தலைவர் சோமவன்ச அமரசிங்க பேசிய உரையின் சிறு பகுதியைத் தருகிறேன்.

'இந்த அரசாங்கம் எப்படி யுத்தம் செய்வது என்று தெரியாத அரசாங்கம். சரியான யுத்தம் புரிவது இப்படி அல்ல. சரியான யுத்தத்தைப் புரிவதானால் ஆப்கானிஸ்த்தானில் இடம்பெறும் யுத்தம் போன்று மலைகளைத் தகர்த்தெறிந்து யுத்தம் புரிய வேண்டும். (கந்து கடாகன யுத்த கரண்டஓன)

எவ்வளவு கொடூரமான வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளை உங்கள் போலி இடதுசாரிக்காதுகள் கேட்டுக்கொண்டுதானே இருந்தன. இந்தக் காலப்பகுதியில் நீங்களும் உங்களுடன் இன்று பிரிந்து வந்துள்ள பெரும்பான்மையான மத்திய குழு உறுப்பினர்களும் ஜேவீபியில்தானே இருந்தீர்கள்.

இது தவிரவும் உங்கள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தென்பகுதிக் கிராமங்களில் நடத்திய கூட்டங்களில் இலங்கை இராணுவத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் இணைய வேண்டும் புலிகளை அழிக்க நாடு ஒன்றுபட வேண்டும் எனப் பிரச்சாரம் செய்ததோடு சிங்களக் கிராமங்களின் எல்லைகளைப் படையினரால் பாதுகாக்க முடியாவிட்டால் அவர்களை கலைத்து விடுங்கள். நாம் அவற்றை பாதுகாப்போம் என முழங்கினாரே!

அப்போது நீங்கள் உண்மையான இடதுசாரியாக இருந்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும். அப்பாவிச் சிங்களப் பாட்டாளிகளும் ஏழை விவசாயிகளும் இந்த முதலாளித்துவ இனவாத யுத்தத்திற்குப் பலிக்கடாவாக்கப்படுகிறார்களே தமிழ்ப்பாட்டாளிகளும் ஏழை விவசாயிகளுக்கும் இணைவதை இந்த யுத்தம் தடுக்கிறது எனக்கூறி சோமவன்சவுக்கு எதிராகத் தொழிற்பட்டிருக்க வேண்டும் அவ்வாறு உங்களைச் செய்யவிடாது தடுத்தது என்னவென்று கேட்பதற்கு எனக்கு உரிமையில்லையா?

இந்த முழக்கங்களின் போதெல்லாம் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தலைமை தாங்கப் புறப்பட்ட நீங்கள் எல்லாம் கெமுணு என்ற பெயரிலும் குமார என்ற பெயரிலும் ஜேவீபியின் தீர்மானிக்கும் சக்தியாகத் தானே இருந்தீர்கள்? இதயத்தில் இனவாதமும் வார்த்தையில் இடதுசாரித்தனமும் இருப்பதை நான் கேள்வி கேட்கக்கூட்டாது... என்னையா நியாயம்.... இனவாத உப்பில் ஊறிய மிளகாய் சிவக்காது.

விமல் வீரவன்ச மக்களுக்குத் தெரிந்த இனவாதி. அவரது தலைமையில் இயங்கிய தேசத்தை பாதுகாக்கும் இயக்கம் (தேசிய கிதேசிய இயக்கம்) யுத்தத்தை ஆதரித்து நாடு தழுவிய போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் நடாத்திப் பச்சை இனவாதத்தைக் கக்கியது. விமல் பிரிந்து சென்றவுடன் மீண்டும் அதனைத் தம்பல அமரதேரர் தலமையில் உருவாக்கியவர்களில் நீங்களும் முக்கியமானவராயிற்றே... பொய்யோ...?

இனி உங்கள் முன்னைய ஜேவீபி கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான லங்கா பத்திரிகைக்கு வருவோம். ஏற்கனவே முதலாவது கடிதத்தில் பல விடயங்கள் அதுபற்றி தெரிவித்திருக்கிறேன். எனினும் அந்தப் பத்திரிகையில் வெளிவந்த மூன்றாம் தரமான எழுத்துகள் பற்றி மேலும் இங்கு பார்க்க வேண்டும் என்பதற்காகவும், அது பற்றிப் பலர் தெரிந்து கொள்வதற்காகவும் இங்கு சில குறிப்புகளைத் தருகிறேன்.

அந்தப் பத்திரிகையில் வந்த விடயத்திற்கு தாம் பொறுப்பல்ல என தற்போதைய ஜேவீபீ கூறினால் கூட ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இப்போதுள்ள முன்னிலை சோசலிசக் கட்சி பொறுப்பல்ல என நீங்கள் கூறினால் ஒத்துக்கொள்ள முடியாது. காரணம் அந்தப் பத்திரிகையின் முதுகெலும்பாக இருந்த ஆசிரியர் சந்தன சிறிமல் வத்த தற்போது உங்களுடன் தான் இருக்கிறார். ஜேவீபியை உடைத்து வெளியேறிய போது லங்கா பத்திரிகையின் முழுக் கட்டுப்பாடும் உங்கள் வசமே வந்தது. குமார் குணரட்ணம் என்ற மத்திய குழு உறுப்பினரும் முன்னிலை சோசலிசக் கட்சியில் தற்போதுள்ள முன்னைய ஜேவீபியின் மத்திய குழு உறுப்பினர்களும் அந்தப் பத்திரிகையை எவ்வாறு கையகப்படுத்தியிருப்பார்கள் என்பதனை நான் சொல்லித்தான் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை.

சந்திரிக்கா அரசாங்கத்தை ஆதரித்ததில் தொடங்கி அடிப்படை மனித உரிமைகளை, அடிப்படை யுத்தவிதிகளை, அடிப்படை சனநாயக உரிமைகளை, மதியாத மகிந்தவின் காட்டுமிராண்டி யுத்தத்தை அடிநிலை சிங்கள மக்களிடம் கொண்டு சென்று அதற்கு ஆதரவு திரட்டியதுவரை லங்கா பத்திரிகைக்கு பாரிய பொறுப்புள்ளது. யுத்தத்திற்கு சிங்கள அடிமட்ட மக்கள் மத்தியில் கோட்பாட்டு ரீதியான விளக்கத்தை கொடுத்து துளி கூட இடதுசாரித்தனமற்று இனவாதக் கருத்துக்களை விதைத்தவர்கள் இன்றைக்கு தோசையைப் புரட்டிபோட்டால் தெரியாதென்பது போல நடக்கிறார்கள்.

இலங்கையில் 2003 ஒக்டாபர் 28 29ஆம் திகதிகளில் சிங்கள தமிழ் காலசாரவிழா நியூ ரவுண் கோலில் இடம்பெற்றிருந்தது. அதனையொட்டி நவம்பர் முதலாம் திகதிக்குரிய லங்கா பத்திரிகையில் ஒரு முழுப்பக்கக் கட்டுரை பிரசுரித்திருந்தீர்கள்.

அக்கட்டுரையில் நியூரவுண்கோல் கொரிடோரில் ஆயுதங்கள் சகிதம் புலிகளின் கலாசார விழா நடந்தேறியது என விபரித்திருந்தீர்கள். பேராசிரியர் சிவத்தம்பி உள்ளிட்ட வடக்கின் கலைஞர்கள் பலர் அன்றைக்குச் அங்கு சமூகமளித்திருந்தனர். தெற்கில் இருந்து சுட்சரித கம்லத் தர்மராஜபத்திரண, தர்மசிறி பண்டாரநாயக்க, அசோக கந்தகம உள்ளிட்ட மிகப் பிரபல்யமான கலைஞர்களும் சமூகமளித்திருந்தனர்.

தமிழ்க் கலைஞர்களும் சிங்களக்கலைஞர்களும் கலந்து கொண்ட ஒரு விழாவை இனங்களின் சுயாதீனத்தை ஏற்றுக் கொண்டு ஏற்படும் புரிந்துணர்வின் ஒரு முதற்படியாகப் பார்க்க முடியாமல் போனதற்கு காரணம் உங்களிடம் இருந்த இடதுசாரிப்பார்வையே காரணம் என்று நான் கூறமாட்டேன்.... ஏனேனில் உண்மையான இடதுசாரிப்பார்வை அன்றைக்கே உங்களிடம் இருக்கவில்லை.....

2003 ஒக்டாபர் 28 29ஆம் திகதிகளில கொழும்பு கம்பல் பாக்கில் இடம்பெற்ற மாபெரும் ஊர்வலத்தின் பின்னான கூட்டத்தில் அல்லே குணவன்ஸ தேரருடன் சேர்ந்து கொண்டு கொழும்புக் கலாசார விழாவையும் அதில் கலந்து கொண்டவர்களையும் புலிகள் என்று கூறியதுடன் அந்த விழாவில் ஆயுதங்களுடன் புலிகளும் இருந்தனர் எனவும் கூறினீர்களே 1983 கலவரத்தின் முக்கிய பங்காளிகளில் அல்லே குணவன்ஸ தேரர் முக்கியமானவர் என்பது நீங்கள் உண்மையான இடதுசாரிகளாக இருந்திருந்திருந்தால் தெரிந்திருக்கும்.

2004 ஏப்ரல் மாதம் இலங்கையில் தேர்தல் நடைபெறவிருந்தது. தேர்தலுக்கு 3 மாதத்திற்கு முன்பே பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட ஜே.வி.பி தேர்தலில் 29 நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியில் (யு.பீ.எவ்.ஏயில்) இடம்பெற்றது. பின்னர் 3 அமைச்சரவை அந்தஸ்த்துள்ள பதவிகளையும் பெற்றுக்கொண்டது.

மேற்குறித்த தேர்தலின் போதும் றணில் பிரபா கூட்டு நாட்டுக்கு வேட்டு என்று முழங்கினீர்கள். சமாதானப் பேச்சை தகர்த்தெறிந்து நாட்டைக் காப்பாற்றியதும் ஜேவீபீயே என்றும் பிரகடனப்படுத்தினீர்கள். இவையெல்லாம் மிக மோசமான இனவாத நடத்தைகள் இத்தகைய நடத்தைகளை வெளிப்படுத்திய நாங்கள்... நாங்களேதான்!! இன ஐக்கியம் பற்றிக் கதைக்கும் அளவுக்குத் திருந்திவிட்டோம் என சிறுபானமை இனங்களுக்கு முன் வந்து நின்று அவர்களின் இரத்தம் ஒழுகும் முன் மண்டையில் அடித்துச் சத்தியம் செய்யப்பார்க்கிறீர்கள் நம்புவார்கள்...

அது மட்டும் அன்றி அன்றைய அரசாங்கத்தையும் குமார் அவர்களே முழுமையாக நீங்கள் ஏற்றுக்கொண்டுதானே இருந்தீர்கள். உங்கள் கட்சியின் சந்திரசேன விஜயசிங்க மீன்பிடித் துறை அமைச்சராக இருந்தபோது மீன்பிடித் துறை அமைச்சின் உயரதிகாரிக்கு உரிய உத்தியோகபூர்வ அடையாள அட்டையை நீங்கள் வைத்திருந்தீர்கள்தானே. இது என்ன வகையான உட்கட்சிப்போராட்டம்? இன்றைக்கு வாசுதேவ நாணயக்கார செய்யும் உட்கட்சிப்போராட்டத்தை விட அது நகைச்சுவையாகவல்லவா இருந்திருக்கிறது. முதலாளித்துவ அரசாங்கங்களுடன் கூட்டாட்சிக்கு சென்றதை எதிர்த்து மீன்பிடி அமைச்சின் உயரதிகாரிக்குரிய அடையாள அட்டையை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தியதாக நீங்கள் சொல்ல நாங்கள் நம்பவேண்டும் போங்கள்.... உங்கள் கட்சியின் சுயவிமர்சனத்தில் எங்காவது ஒரு வசனம் சுந்திரிக்காவுடன் கூட்டுக்கு போனமை குறித்து உள்ளதா?

2005 மே 28 . வெள்ளிக்கிழமை இரவு சிவராம் கொல்லப்பட்டார். 29ஆம் திகதி அவரது சடலம் எடுக்கப்பட்டது. 2005 மே 8ம் திகதி வெள்ளிக்கிழமை லங்கா பத்திரிகை பக்கம் 3ல் சிவராம் பம்பலப்பிட்டியவுக்கு சென்றது கொழும்பில் குண்டு வெடிப்பொன்றைச் செய்வது குறித்து திட்டமிடுவதற்காக என எழுதியிருந்தீர்கள்.

2008 மார்ச் மாதம் 16ஆம் திகதி வெளிவந்த லங்கா பத்திரிகையின் 10ஆம் பக்கத்தில் எழுதப்படும் “வன்னி வீழ்கிறது” என்ற தொடர் பத்தியில் எஸ் திஸ்ஸநாயகம் குறித்து என்ன எழுதியிருந்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா?

கொழும்பு கொட்டகேனாவில் புலிகள் கைது என்ற தலையங்கத்தில் புலிகளின் ஊடக வேலைகள் செய்யும் இடம் சுற்றிவளைக்கப்பட்டு கைதுகள் இடம்பெற்றதாக எழுதியிருந்தீர்கள். அதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ் திஸ்ஸநாயகம் கொழும்பு கிருளப்பனைக்கு வந்து வீடு வாங்கி இருந்துகொண்டு புலிக்கு வேலை செய்தார் எனக் குறிப்பிட்டு இருந்தீர்கள். திஸ்ஸநாயகம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் அல்ல அவர் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் தெற்கில் என்பது தெரிந்தும் அவரை புலியாக சித்தரிப்பதற்காக யாழப்பாணத்தில் இருந்து வந்தவர் என எழுதினீர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவர்கள் எல்லாம் புலிகள் என்ற விம்பத்தைக் கொண்டிருந்த நீங்கள் இன்றைக்கு நவாலி தேவாலையத்தில் மடிந்தவர்களின் பிள்ளைகளிடமும் நீங்கள் எதிர்பார்த்த படியே மலைகளுக்குப்பதிலாக மனித உடல்களைத்தகர்த்து எறிந்து சென்ற உண்மையான யுத்தத்தின் பலிக்கடாக்களின் முன்பும் யாழ்ப்பாண மக்களின் முன்பும் வந்து நிற்கிறீர்கள்... எந்த முகத்தோடு... இடதுசாரி முகத்தோடு....

போலி இடதுசாரிகளை இனம் காண பிற்போக்கான தமிழ்த் தேசியவாதிகளுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் மக்களுக்கும் எங்களுக்கும் தெரியும்...

திவயினபத்திரிகை கூட உங்கள் லங்கா பத்திரிகை யுத்தகாலத்தில் எழுதிய மூன்றாம் தர எழுத்துகளைப் போல் எழுதவில்லை. ஒக்ஸ்பாமில் வேலை செய்த திஸ்ஸநாயகத்தின் மனைவி கண்ணிவெடி அகற்றலில் வரும் கண்ணிவெடிகளை புலிகளுக்கு வழங்குபவர் எனக் குறிப்பிட்டு எழுதியிருந்தீர்களே! அதே பேனாவைத்தான் இப்போதும் வைத்திருக்கிறீர்களா?

2008 மார்ச் 23ஆம் திகதி வெளிவந்த லங்கா பத்திரிகையின் 8 ஆம் பக்கத்தில் குகநாதனின் டான் ரீவியைக் கூட புலிகளது பிரச்சார ஊடகம் எனத் தெரிவித்திருந்தீர்கள். குகநாதன் அரசாங்கத்தின் அனுமதி பெற்று அரசாங்கத்தின் ஆதரவாளராக இலங்கையில் சேவையை தொடங்கியவர் என்பதும் அவர் புலிகளுடன் கடுமையாக முரண்பட்டவர் என்பதும் உலகறிந்த விடயமாக இருந்தும் அவர் புலம்பெயர் தமிழர் என்பதால் அவரைப் புலியாக உங்கள் ஊடகம் சித்தரித்தது. உங்கள் கட்சியும் உங்கள் பத்திரிகையும் எத்தனை சிங்களப் புத்திஜீவிகளை, மனித உரிமைவாதிகளை, ஊடகவியலாளர்களை, புலிகளாகச் சித்தரித்திருந்தன என்பதையும் அதனால் அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தார்கள் என்பதையும் அறிவீர்களோ? இவற்றுக்கான கூட்டுப் பொறுப்பு உங்களுக்கு இல்லை என்று சொல்லுவிர்களோ? நீங்கள் புலிகளாக சித்தரித்த பலரை அவர்கள் புலிகள் அல்ல என இலங்கைப் பாதுகாப்பு தரப்பினரும் இலங்கையின் நீதித் துறையும் பின்னர் விடுதலை செய்தமையையும் இங்கு நினைவுகூரவேண்டும்.

ஓட்டுப்பொறுக்குவதற்காக, அன்றைக்கு இனவாத சொற்களை சுட்டுக்கொண்டு (முள்ளிவாய்க்காலில் சரத்பொன்செகாவும் கோத்தபாயாவும் சகட்டு மேனிக்கு சுட்டதுமாதிரி) திரிந்த நீங்கள் இன்றைக்குத் திருந்திவிட்டீர்கள் என்பதை... சிங்கள மக்களுக்கும் மிக உரத்துச் சொல்லுங்கள். வாக்குகள் கிடைக்குமோ தெரியாது...

2009ல் யுத்தம் முடிந்தவுடன் சோமவன்ச கூறியதை தருகிறேன். 'யுத்தத்தை எப்படிச் செய்ய வேண்டும் என நாம்தான் இந்த அரசாங்கத்திற்கு சொல்லிக் கொடுத்தோம். இந்த யுத்தத்தை நடத்தச் சொல்லியது நாம். இந்த அரசாங்கத்திற்கு யுத்தம் புரிய விருப்பம் இல்லை. 'நாயைக் குளிப்பாட்டக் கூட்டிச் செல்வதைப் போல்தான் அரசாங்கம் யுத்தம் செய்தது' என்றார் அவர். அரசாங்கம் மக்களை இரத்த வெள்ளத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது நீங்களும் முன்னிலை சோசலிசக் கட்சியினரும் பெரும்பான்மை பலத்துடன் ஜேவீபியில்தானே இருந்தீர்கள். மூச்சே விடவில்லையே!!

எல்லாவற்றிற்கும் மேலாக 2012 ஜனவரிமாதம் ஐலன்ட் பத்திரிகைக்கு செவ்வி வழங்கிய உந்துள் பிரேமரட்ண 'யுத்தத்தினால் வந்த ஒட்டுமொத்தப் பிரதி பலன்களை நாம் வரவேற்கிறோம். குறிப்பாக புலிகளை இல்லாது ஒழித்தமையை வரவேற்கிறோம். ஆனால் சர்வதேச அளவில் புலிகள் இன்னும் பலமாக இருக்கின்றனர். அதனால் அரசாங்கம் நினைத்தது முழுமையாக முடியவில்லை. அதேவேளை புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்ததன் மூலம் பிரச்சனை முடிந்து விட்டதென அரசாங்கம் நினைப்பதும் தவறு. நாம் கடுமையாக வடக்கில் தொழிற்படுகிறோம். ஏனென்றால் புலிகளின் ஆதிக்கவாதம் மேலும் வளரக் கூடாது என்பதனை மையமாக வைத்து நாம் வேலை செய்கிறோம்' எனக் கூறியிருந்தார்.

உந்துள் பிரேமரட்ணவிடம் நேரடியாக நான் எமது வானொலிக்கு செவ்விகளை எடுத்திருக்கிறேன். நேரில் முகம் பார்க்காவிட்டாலும் பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிமையானவர். ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாடு கேள்விக்குட்படுத்த வேண்டியது.

உந்துள் பிரேமரட்ண தலைமையேற்றுப் பல போராட்டங்களை வடக்கில் நடத்தி இருக்கிறார். அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவப் பிரசன்னம், மனிதர்கள் காணாமல்போதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறார். சிறைச்சாலைகளுக்கு சென்று கைதிகளை தமிழ்க் கைதிகளைச் சந்தித்து இருக்கிறார். ஆனால் இவற்றின் பின்னால் இருக்க வேண்டிய அரசியற் தெளிவுகுறித்தே நாங்கள் அச்சம் கொள்கிறோம்…

இங்குள்ள முரண் நகை எனவென்றால் யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுககளை வரவேற்பதாகக் ஐலன்ட்டுக்கு கூறிவிட்டு அதே யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளான தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சனை, கடத்தல் காணமல் போதல், இராணுவப் பிரசன்னம் போன்ற பிரச்சனைகளுக்கெதிராக பின்னர் போராட்டம் நடத்துகிறார். அவரே கூறியது போல தமிழ்மக்கள் மத்தியில் மீண்டும் புலிகள் தலையெடுக்கக்கூடாது என்பது மட்டுமே உங்களின் நோக்கம். இலங்கை அரசின் நோக்கமும் இதுதான்... இலங்கைச் சிங்கள இனவாதிகளின் நோக்கமும் இது தான். புலிகளின் தோற்றத்திற்கு காரணமான மூலக்கூறுகளை தேடி அவற்றுக்கு தீர்வு தேடும் பண்பைக்காண முடியவில்லையே! சிறுபான்மை இனங்களின் உண்மையான பிரச்சனைகள் குறித்த உண்மையான அரசியற்தெளிவில் இருந்தோ அதற்கான உண்மையான தீர்வைத் தேடும் அக்கரையில் இருந்தோ உங்கள் நடத்தைகள் வரவில்லை என்பதை ஒத்துக்கொள்ள விரும்பாவிட்டால் மக்கள் முன் வெளிப்படையாக வந்து உங்கள் முன்னாள் முகத்தைக்காட்டி சுயவிமர்சனம் செய்யுங்கள்.

நீங்கள் மட்டுமல்ல கடந்த காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட எல்லா அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் அரசியற்கட்சிகளும் போராட்ட அமைப்புக்களும் வெளிப்படையாக மக்களின் முன்வந்து சுய விமர்சனம் செய்யக் கடமைப்பட்டவர்கள். ( இதற்கு முன்னாள் இன்னாள் புலிகளும் விதிவிலக்கல்ல.) தமது பழைய சனநாயக மறுப்புக் கொள்கைகளுடனும் தமது கடந்த காலம் பற்றிய சுயவிமர்சனங்கள் இன்றி விடுதலைப்புலிகள் கூடத் தலையெடுக்க முடியாது என்பதை யாரும் அறிவார்கள். மக்கள் அவர்களைப்பற்றியும் அறிந்தே இருக்கிறார்கள்.

முன்னிலை சோசலிசக் கட்சி உருவாக்கப்பட்டு 3 மாதங்களின் பின் த ஐலண்டுக்கு மேற்குறித்த பேட்டியை வழங்கிய உந்துள் பிரேமரட்ண வேறு யாரும் அல்ல உங்கள் கட்சியின் மிகமுக்கியமான தூண்களில் ஒருவர்.

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மேற்கொண்ட இறுதி யுத்தம் குறித்து உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை இலங்கையிலும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் 3 மொழிகளிலும் ஒரே கருத்தை துணிவிருந்தால் வெளியிடுங்கள்...

மீண்டும் 1987 -1989 காலக்கட்டத்திற்கு செல்வோம். உங்கள் இரண்டாவது புரட்சியை அப்போதைய ஜனாதிபதி றணசிங்க பிரேமதாஸா கொடூரமாக அடக்கினார். அப்போது அரசாங்கப் படையினருக்கு எதிராக ஆயுதம் தாங்கிய தாக்குதல்களை நீங்களும் மேற்கொண்டீர்கள்.

அன்றைய அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஏறத்தாள 60 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவிச் சிங்கள இளைஞர்யுவதிகளை இலங்கையின் ஆட்சியாளர்கள் கொன்றார்கள் .

அதேவேளை நீங்கள் அங்கம் வகித்த ஜே.வி.பியும் ஏறத்தாள 6000 பேரைக் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தில் கெமுணு என்ற பெயரில் நீங்கள் ஜேவீபியின் திருகோணமலை மாவட்டத்தின் இராணுவப் பொறுப்பாளராகவும் மத்திய குழு உறுப்பினராகவும் தொழிற்பட்டீர்கள். உங்கள் அண்ணன் றஞ்சிதம் குணரட்ணம் 80களில் இருந்து மத்திய குழுவின் உறுப்பினராகவும் மாணவர் அமைப்பின் தலைவராகவும் தொழற்பட்டார். (1989ல் கைதான உங்கள் அண்ணன் கொடூரச் சித்திரவதைக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டார்.)

இந்தக் காலத்தில் உங்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 6000 பேரில் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைவாதிகள், குறிப்பாக பழம்பெரும் இடதுசாரிகள் என சமூகத்தின் பலதரப்பட்டவர்களும் அடங்குவார்கள். அவர்களின் 89 வரையிலான பெயர்பட்டியல் எனது கணனியில் இருந்தது. ஆனால் அது அழிந்து விட்டது. ஆயினும் ஞாபகத்தில் உள்ள முக்கியமான பெயர்களை இங்கே தருகிறேன். உங்களை ஆதரிக்கும் புலம்பெயர் இடதுசாரிகளின் ஆத்மாக்களுக்கு இந்தப்பெயர்கள் சமர்ப்பணம் .

என் இடதுசாரி நண்பர்களே இவர்களைத் தெரியுமா என்று முன்னிலை சோசலிசக்கட்சியின் உறுப்பினர்களைக் கேளுங்கள்.. இவர்களின் இரத்தம் அவர்களின் முகங்களில் தெறிக்கவிலையா எனக்கேளுங்கள்... அந்தக்கறைகளை எந்தக்கங்கையில் கழுவினீனார்கள் என்றும் கேழுங்கள்.. இலங்கைக்கு சுற்றுலா போகும் போது அந்தக் கங்கைக்கரைகளில் நின்று ஒருகணம் கண்ணீர் விடுங்கள்.

எங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் என்றும் இடதுசாரிகளுக்கும் இடதுசாரி அமைப்புகளுக்கும் எதிரானவர்கள் என்றும் கூறுகிறீர்கள் . ஆனால் இடதுசாரிகளைக் கொன்றவர்களை அரவணைக்கத் துடிக்கிறீகள். என் இரண்டு கடிதங்களையும் நான் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட இடதுசாரி ஆத்மாக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். முடிந்தால் குமார் அவர்களே நீங்களும் உங்கள் சோசலிச முன்னிலைக்கட்சியும் உங்கள் சுயவிமர்சனங்களை அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யுங்கள். அவர்கள் ஆத்மா சாந்தியடையும்...

உங்களால் கொல்லப்பட்ட இடதுசாரிகள் சிலர்:

1 ஜோர்ஜ் ரட்ணாயக்க George Rathnayaka - Teachers union leader/Communist Party

– ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர் - கம்யூனிஸக் கட்சி –

2.ஜே ஈ குணசேகர J.E.Gunasekara - CP/ writer-translator

கம்யூனிஸ கட்சி – பிரபல எழுத்தாளர் - மொழிபெயர்பாளர் - ரஸ்ய விஞ்ஞான துறையின் மொழபெயர்ப்பாளர்.பிறைவேற் மெடிக்கல் பக்கல்டிக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டிருந்த ஜேவீபி மாணவரமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்கியவர்.

3. மகிந்த பாகு லங்கா சமசமாஜக் கட்சியின் முக்கியஸ்த்தர் – NSSP - Mahindabahu / Peasant leader - campaigned against Monaragala sygar plantation – விவசாய சங்கத்தின் பிரதான தலைவர் மொனராகலை சீனித் தொழிச்சாலையை பிரித்தானிய கம்பனிக்கு விற்க முற்பட்டபோது அதனை எதிர்த்தவர்

5. ரீபீ விஜயசுரிய விவசாய தொழிற்சங்கத் தலைவர்- T.B.Wijesooriya - Peasant leader/northwesteran province வடமேல் மாகாணத்தில் மேட்டுக் குடி சிங்களவர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியவர். இடம் இல்லாத மக்களுக்கு இடம் இருக்கும் செல்வந்தர்களின் இடத்தை எடுத்துக்கொடுத்தவர். அவ்வாறு அடிநிலை மக்களை குடியமர்த்திய போராட்டம் ஒன்றிற்கு இவரது வீட்டில இருந்த உணவு தயாரித்து எடுத்துச் செல்கையில் உங்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

6-நந்தன மாறசிங்க யெனெயயெ அயசயளiபொந - nandana marasinghe - ex JVPer/ cultural activist கலைஞர் பாரம்பரியமான இடதுசாரி – அனுராதபுரச் சந்தையில் செருப்பு விற்றுத் தனது குடும்ப வாழ்வை நடத்தியவர். செருப்பு விற்றுக் கொண்டிருந்த இடத்தில் உங்களால் கொல்லப்பட்டவர்.

7.யாமிஸ் அத்துகல Jamis Athugala - - விவசாய தொழிற்சங்கத் தலைவர்

8.விஜயகுமார ரணதுங்க – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் கணவர்.

இந்த இடது சாரிகளை வலதுசாரிகள் எவரும் சுடவில்லையே பாட்டாளிவர்க்கப் புரட்சி செய்யப் புறப்பட்ட நீங்கள் தானே கொன்றீர்கள்.

உங்களால் கொல்லப்பட்ட புத்திஜீவிகள் சிலர்:

1.கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரான்லி விஜயசுந்தர stanley wijesundara

2.கட்டுப்பத்த பல்கலைக்கழக துணைவேந்தர் - பட்டுவத்த விதான patuwathavithana –

3.பிரேம கீர்த்தி டீ அல்விஸ் Premakeerthi d Alwis - பிரபல பத்திரிகையாளர்.

4.ஐரீஎன் தேவிஸ் குருகே. – ஐரீன் பணிப்பாளர்.

இடதுசாரி அன்பர் ஒருவர் தமிழ்த் தேசியவாதிகள் சரத்பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்தமை எவ்விதத்தில் நியாயமாகும் எனக்கேட்டிருந்தார். (சரத்பொன்சேகாவை ஆதரித்தவர்களின் அரசியல் வறுமையை நான் சொல்லியா தெரியவேண்டும்?) முன்னிலை சோசலிசக்கட்சியை நீங்கள் ஆதரிப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேக்காவை ஆதரித்து போன்ற ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்று இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் என்கிறீர்களா?

நண்பரே உங்களுக்கும் சில கேள்விகள் ...

1971ல் புரட்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஜே.வி.பி இளைஞர் யுவதிகளை காடுகளில் கொன்று புதைத்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சந்திரிக்காவுடன் தான் பின்னாளில் அமைச்சரவையை ஜேவீபீ பகிர்ந்து கொண்டது. சந்திரிக்காவும் தனது கணவர் விஜய குமாரறணதுங்கவைக் கொன்றது ஜே.வீ.பீ என்பதைத் தெரிந்து கொண்டும்தான் அதிகாரத்தை தக்க வைக்க அவர்களுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டார். ( அரசியல்ல இதேல்லாம் சகஜமப்பா என்று ஒரு உண்மையான இடதுசாரி சொல்ல மாட்டான்!)

1987 – 1989 காலத்தில் தனது உடன்பிறந்த அண்ணனை சித்திரவதை செய்து கொன்ற அதே படையினரையும் அதே அதிகாரிகளையும் அவர்கள் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தைக் கொடூரமாக நடத்திய போது வீர புருசர்களாகக் காட்டி பிரச்சாரம் செய்தார் திரு குமார் குணரட்ணம் அவர்கள். இதென்ன அரசியல்?

1988இல் உங்கள் 2ஆம் கிளர்ச்சிக் காலத்தில், இரத்தினபுரியில் உங்கள் ஆதரவாளரும் மருத்துவபீட மாணவியுமான திரிமா வித்தாரண Threema Vithana உள்ளிட்ட மூவரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்து அவர்களின் தலையில் மிகப்பெரிய ஆணியை அடித்து கொலை செய்து வெள்ளவாயவில் தொங்கவிட்டிருந்தனர். இதில் பிரதான சந்தேக நபர் மகிந்தவின் அரசில் அமைச்சராக உள்ள முன்னாள் ஐக்கியதேசியக் கட்சியின் பிரமுகர் சுசந்த புஞ்சிநிலமே. இவர் கட்சி தாவி அங்கத்துவம் வகித்த சந்திரிக்கா அரசில் அமைச்சரவையில் நீங்கள் வீற்றிருந்தீர்கள். பின்னர் மகிந்தவின் வலதுகரமாக மாறிய சுசந்த புஞ்சிநிலமே இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும் மகிந்தவையும் கூட ஜே.வி.பி ஆதரித்தது. திரிமா விதாரனவினதும் என்னைய இருவரினதும் அவலக்குரல்கள் இந்தக்காலங்களில் உங்கள் நினவுகளில் இருந்து எப்படி அழிந்து போனது...?

சரி விட்டுவிடுங்கள் - 1989ல் மாத்தளை மாவட்டத்தின் இராணுவ இணைப்பதிகாரியாக கோத்தாபய ராஜபக்ஸ இருந்தார். மாத்தளை விஜய மகாவித்தியாலையம் மற்றும் ரெஸ்கவுஸிலுமே அக்காலத்தில் முக்கிய சித்திரவதை முகாம்கள் இருந்தன. சித்திரவதைக்குப் பின்னான பெருமளவு கொலைகள் இங்கு நடந்தேறின. இப்போ இந்தப் பகுதிகளில் இரும்புகள் ஆணிகள் அடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் மீட்கப்படுகின்றன. இந்தப் பாதுகாப்பு அமைச்சரைத் தானே யுத்தவீரனாக உங்கள் கட்சி சித்தரித்தது. இவரின் அண்ணனைத் தானே ஜனாதிபதியாக்க அல்லும்பகலும் உழைத்தீர்கள்.

சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட சுனாமிக்கு பின்னான மீள்கட்டுமான நிர்வாக அமைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று அதனை செயலிழக்க வைத்தீர்கள். பின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையான வடக்கு கிழக்கு இணைப்பை உச்ச நீதிமன்றம் சென்று பிரித்தீர்கள். இப்போ ஐக்கியப்பட்ட போராட்டம் என்று புறப்பட்டு இருக்கிறீர்கள்...

இவறையெல்லாம் நியாயப்படுத்திய தந்திரோபாயம் என்ன மூலோபாயம் என்ன? இதற்கெல்லாம் மார்க்சிசத்தையும் சோசலிசத்தையும் இழுத்து அவற்றை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள். என்னைப்போல ஒரு தேசியவாதியாக இருந்துவிட்டுப்போங்கள்... மார்க்சிசத்தை வாழவிடுங்கள்....

ஜேவீபியில் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியில் இணைந்த மத்திய குழு உறுப்பினர்கள்- FSP எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

At least until August 2011,JVP had 23 member Central Committee who were elected to the central committee in 2010 Party Convention. The members were:

1. Somawansa Amarasinghe

2. Tilwin Silva

3. Nihal Galappatti

4. S.K.Subasinghe - FSP

5. Dimuthu Attigalle - FSP

6. Ramalingam Chandrasekar

7. Lakshman Nipunaarachchi

8. Duminda Nagamuwa - FSP

9. Bimal Ratnayake

10. Chameera Koswatte - FSP

11. Mahinda Jayasinghe

12. Ajith Kumara - FSP

13. Nalinda Jayatissa

14. Waruna Rajapaksa - FSP

15. Sunil Handunetti

16. Samantha Vidyaratne

17. K.D. Lalkantha

18. G. Kularatne - FSP

19. Vijitha Herath

20. Anura Kumara Dissanayake

21. Dimuthu Abeykoon - FSP

22. Pubudu Jagoda - FSP

23. Jinadasa Kitulegoda

(But there were four others whose names were not publicized.)

1. Premakumar Gunaratnam - FSP

2. Senadheera Gunathilaka - FSP

3. Marlon - FSP

4. Asoka - FSP

Out of these members, Political Bureau was elected and that included. But only the first 9 names were officially announced:

1. Somawansa Amarasinghe - Chairman

2. Tilvin Silva - General Secretary

3. Anura Kumara Disanayake

4. Vijitha Herath

5. Sunil Handunnetti

6. K.D.Lalkantha

7. Pubudu Jayagoda - FSP

8. Dimuthu Attigala - FSP

9. G. Kularathne - FSP

10. Premakumar Gunaratnam - FSP

11. Senadheera Gunathilaka - FSP

12. Marlon - FSP

13. Asoka - FSP

நன்றி குரு: http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88476/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.