Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் மகனும்..அவனும் வேறல்ல

Featured Replies

14821_10151771941424128_1181478650_n.jpg
பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்


பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின்
பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே
கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன்
பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும்,
கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம் சிக்குண்ட சிறு
முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில்
கனிந்திருக்கும் கருப்பேறிய அந்த துளைகளில் இருந்து வெளியாகி, உலகம்
முழுக்க பரவிக் கொண்டிருக்கும் தணியாவெப்பம் இனி நடு நிசிகளில் விழிகளை மூட
விடாத மூர்க்க புழுக்கமாய் பற்றி எரியும். உறக்கமும், விழிப்புமாக
அலைகழித்த என் கனவின் நினைவில்.. பாலச்சந்திரன் மார்பின் மீது எதிரியின்
குண்டுகள் பாய்ந்தன. அந்த ஒலியில்,வலியில் என்னருகே படுத்திருந்த என் மகன்
பகலவன் ஓங்காரமாய் அழத் துவங்கினான். திடுக்கிட்டு விழித்த என் கழுத்தின்
ஓரத்தில் வன்ம விலங்கொன்றின் பற்களின் தடம் ரத்தமாய் கசிந்து
கொண்டிருந்தது. என் அருகே படுத்திருக்கும் என் மகனும், தாய்நிலத்தில்
வீழ்ந்திருக்கும் பாலச்சந்திரனும் வெவ்வேறானவர்கள் அல்ல என என் ஆதி அறிவு
உணர்கிறது. மகனை இழந்த வலியில் தளர்ந்த தந்தையாய் கணிணி திரை முன்
அமர்கிறேன்.

எனக்கு முன்னால் ஒளி விடும் அந்த கணிணி திரையில்
பாலச்சந்திரன் அசையாமல் அமர்ந்திருக்கிறான். சற்றே சரிந்து
அமர்ந்திருக்கும் அவனது முறை அவனது தந்தையை நினைவுப் படுத்துகிறது. அவனது
விழிகளில் இருந்து அந்த நொடியில்..அவன் விழிகளின் எதிரே நிகழ்ந்த,
நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை நான் அப்படியே வாசிக்க முயன்று
தோற்கிறேன். சலனமற்ற விழிகளை அவன் அவனின் தந்தையிடமிருந்து பெற்றுள்ளான்.
புகைப்படங்களில் பார்க்கும் போது கூட துளியளவும் வஞ்சகம் பேசாத
நேர்மையாளனின் கண்கள் அவை . களங்கமற்ற அந்த விழிகள்
உண்டு,படுத்து,முயங்கி,வாழும் சராசரி மானுட இனத்திற்கு உரித்தானவை அல்ல.
மாறாக மானுட பாவத்தை செரித்து தன் உடலின் குருதியாய் கசிய விட்ட தேவனுக்கு
உரித்தானவை.

வரலாற்றில் எப்போதாவது தோன்றும் ஒரு
மகத்தான மன்னனுக்கு மகனாக பிறந்ததை தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை
அவன். ஒரு தேசிய இனத்தின் மரபியல் அடையாளமாக அந்த குடும்பம்
வாழ்ந்திருக்கிறது என்பதற்கு பாலச்சந்திரன் சாட்சியாக இருக்கிறான் .
வரலாற்றின் நதி முடிவிலியாக கால ,தேச,தூரங்களின் கரைகளை தழுவி ஓடிக்
கொண்டிருக்கிறது. ஆனால் அது தன் பயணத்தில் இப்படிப்பட்ட ஒரு இளவரசனை
சந்தித்ததே இல்லை. வீழ்த்தப்பட்ட நிலமொன்றின் மன்னனாக இருக்கும் அவனது
தந்தை ஒரு நொடி நினைத்திருந்தால்.. தன் மகன்களை,தன் மகளை,தன் மனைவியை
பாதுகாப்பான தேசமொன்றில் அரண்மனை ,பணியாளர்களோடு ஆடம்பரமாக வாழ
வைத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படியல்ல. உயிருடன் உருக்கும் போதே
உதட்டிற்கு அருகேயே மரணத்தை தொங்கப் போட்டு திரிந்த மனிதர் அவர்.
மரணத்தையும், வாழ்வினையும் செய்கின்ற செயல்களை வைத்து எடை போடும் உளவியல்
அவருக்கானது. அவர் மரபு சிதையாத ஆதித் தமிழனின் நேரடி பிள்ளை. தமிழ்
தொல்குடியின் ஆதித் தொழிலான விவசாயத்தினை போலவே விடுதலையையும் விதைத்து
அறுத்து விடலாம் என எண்ணினார் அவர். அலை அலையாய் விதைகளை நிலமெங்கும்
வீசித் திரிந்த அவரது கரங்கள் ஒரு போதும் சோர்ந்ததே இல்லை. தாய்ப் பெரு
நிலத்தில் முளை விட்ட விடுதலை பசுமையை மூர்க்கமாய் பேரினவாத வல்லூறுகள்
தாக்க பறந்து வருகையில் தாய்ப் பறவையாய் தன் இறகை விரித்து காத்து நின்றார்
அவர். விதைகள் தீர்ந்த நாள் ஒன்றில், இறுதியாய் அவர் தேர்ந்தெடுத்து
தூவியது தன் மகனை..
விதையாய் விழுந்து கிடந்த மகனின் சற்று
திறந்திருந்த விழிகளில் ..சிறுவயதில் அவனை தூக்கி கொண்டாடிய
தளபதிகள்,வீரர்கள் ஆகியோர் மங்கலான தோற்றத்தில் தெரிந்திருக்கவும் கூடும்.


ஒரு இளவரசனாக பிறந்த அவன் எப்போதும் இளவரசனாக வாழ்ந்ததில்லை.மண்ணின்
விடுதலை ஒன்றே மகத்தான இலக்காக நினைத்து இயங்கும் அவனது தந்தை மிகவும்
கறாரானவர். வயதான தன் தாய் தந்தையரை பொதுமக்களோடு மக்களாய் அனுப்பி
வைத்தவர் . தனது மூத்த மகனை போர்க்களத்தில் நிற்க வைத்து சகப் போராளிகளோடு
சாவினை தழுவச் சொன்னவர். தன் மகளை சீருடை அணிய வைத்து படையணியில்
முன்னணியில் நிறுத்தியவர். நம் நிலம் போல மூத்த மகனுக்கு மத்தியில்
பதவி,இளைய மகனுக்கு மாநிலத்தில் பதவி ,மகளுக்கு பாராளுமன்றத்தில் பதவி
என்றெல்லாம் நினைத்துப் பார்க்க அவர்களில் யாருமே இல்லை. கொல்லப்பட்ட
பாலச்சந்திரனின் மரணத்தை விட நமக்கு அதிர்ச்சியூட்டுவது தன் குடும்பம்,தன்
மகன்,மகள் குறித்து அவனின் தந்தை கொண்டிருந்த மதிப்பீடுகளே. கண் மூடுவதற்கு
முன் தன் மகனுக்கு அரசியல் அரியணையில் முடி சூட்டி விட வேண்டும் என்கிற
கணக்குகளும்,பிணக்குகளும் மலிந்திருக்கின்ற மண்ணில் இருக்கின்ற நம்மால்
விடுதலை வேட்கையின் பால் எழுந்து விட்ட ஆழமான பற்றுறுதியை புரிந்துக் கொள்ள
முடியவில்லை.

பாலச்சந்திரனின் மரணத்தை வீரமரணம்
என்றெல்லாம் வார்த்தை மெழுகு பூசி செழுமைப்படுத்திக் கொள்ள என்னால்
முடியவில்லை. அந்த பாலகனின் கொலை இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை உரத்து
அறிவிக்கிறது. அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு சிறுவனை கொலை
செய்யும் உளவியல் உலவும் உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்கிற செய்தி.
பார்த்த உடனேயே அள்ளிக் கொள்ள தோணும் அச்சிறுவனின் மென்மையான உடலை துளைக்க
பேரினவாத பயங்கரவாதத்திற்கு மட்டுமே வலு இருக்க இயலும். விடுதலை கோரி
குருதி தோய்க்கும் அந்த ஈரப் பெரு நிலத்திற்கு மட்டுமே பாலச்சந்திரன்களை
உருவாக்க,சுமக்க,விதைக்க,முளைக்
க வைக்க இயலும்.


இதையெல்லாம் காண உலகிற்கு எத்தனை மனவலிமை உண்டோ, அதே சதவீதத்தில் ஒரு
தேசிய இனமே ஆழ்மன வன்மத்தோடு அமைதியாய் காத்திருக்கிறது. எந்த எதிரி என்
பிள்ளையை கொன்றானோ, அந்த எதிரியை எம் கண் முன்னால் சிவப்பு கம்பளம்
விரித்து அழைத்து உபசரிக்கும் இந்தியாவின் இரண்டக எள்ளலையும் பார்த்துக்
கொண்டு காத்திருக்கிறது. என்னடா முடியும் உங்களால் என எதிரி உதிர்க்கும்
எகத்தாள அறைக்கூவலை கனவிலும் செவியெடுத்துக் கொண்டு கவனமாக
காத்திருக்கிறது. கண்களில் வெடிக்கும் அழுகையை கழுத்திலேயே தேக்கி ..கண்
சிவந்து காத்திருக்கிறது...காத்திருக்கி
றது...கணக்குத் தீர்க்கும் கவனத்தோடு. மெளனமாக..

கனன்று எரியும் கண்களில்
நிழலாய் நிற்கிறாய்..
வடித்தெடுத்த வார்த்தைகளில்
எதிரிகளின் மீது
உமிழும் வன்மமாய் மிஞ்சுகிறாய்..
பால்யம் சுமக்கும் உன் விழிகளை
ஒத்த குழந்தைகள் மீண்டும்
இம் மண்ணில் பிறக்க கூடும்..
அவற்றில் ஏதேனும் ஒன்று
ஏக்கமாய் என்னை பார்க்கும்
தருணத்தில் உன்னை
என்னுள் தருவித்து கொள்வேனடா..
என் மகனே...பாலச்சந்திரா..

-மணி செந்தில்

 

http://www.manisenthil.com/2013/02/blog-post.html

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்விற்கு நன்றி 

விதையாய் விழுந்து கிடந்த மகனின் சற்று
திறந்திருந்த விழிகளில் ..சிறுவயதில் அவனை தூக்கி கொண்டாடிய
தளபதிகள்,வீரர்கள் ஆகியோர் மங்கலான தோற்றத்தில் தெரிந்திருக்கவும் கூடும்.

 

உங்கள் வீர குடும்பம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதில் பெருமையும் கவலையும் கொண்டே வாழ்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மட்டுமல்ல  மணி....உலகத்தமிழர் அனைவ்ருக்கும் அவன் செல்லக் குழந்தை .....

  • கருத்துக்கள உறவுகள்

.

என்னடா முடியும் உங்களால் என எதிரி உதிர்க்கும்
எகத்தாள அறைக்கூவலை கனவிலும் செவியெடுத்துக் கொண்டு கவனமாக
காத்திருக்கிறது. கண்களில் வெடிக்கும் அழுகையை கழுத்திலேயே தேக்கி ..கண்
சிவந்து காத்திருக்கிறது...காத்திருக்கிறது...கணக்குத் தீர்க்கும் கவனத்தோடு. மெளனமாக..

 

 

 

இன்றல்ல நாளையல்ல இன்னும் பல

ஊழிகள் கழிந்தாலும் காத்திருக்கும் எம்மினம்


கடைசித் தமிழன் உலகின் ஒரு மூலையில் 

இருக்கும் வரை காத்திருப்பான் தன்  விடுதலைக்காய்....

  • கருத்துக்கள உறவுகள்
நிச்சயமாக ஒவ்வரும் அப்படிதான் நினைக்கின்றார்கள்,
எங்களின் துயரில் பங்கு கொண்டதற்கு நன்றி மணி செந்தில். 
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், தமிழீழன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.