Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவு சபேசன் எழுதிய கருணாநிதி குறித்த ஒரு பார்வை

Featured Replies

கலைஞர் பற்றிய ஒரு பார்வை!
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்கஇ மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர்.
 
 
இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள்.
 
 
ஆனால் தற்பொழுது கலைஞரை தமிழினத் தலைவர் என்று போற்றுபவர்களின் முகங்களில் கலைஞரே கரியைப் பூசி விட்டார். ஈழத்தில் நடக்கின்ற தமிழினப் படுகொலை குறித்து முறையிட சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கலைஞர் சந்திக்க மறுத்தது மாத்திரம் அன்றிஇ இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பதையும் மறைமுகமாக தடுத்து விட்டார். ஆனால் இதற்குப் பிறகும் சில ஈழத் தமிழ் அமைப்புக்கள் கலைஞரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கும்படி மிகவும் பணிவாகவும் நயமாகவும் வேண்டுகோள்களை அனுப்பியபடி இருக்கின்றன. இப்பொழுதும் இவர்கள் கலைஞர் மீது நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியமான ஒன்று.
 
 
ஆனால் இவர்கள் நம்புகின்ற தமிழினத் தலைவரும்இ தமிழ் தேசியவாதியும் ஆன கலைஞர் தற்பொழுது இல்லை என்பதுதான் உண்மை. தனித் தமிழ்நாடும்இ பின்பு திராவிட நாடும் கேட்ட கழகத்தில்இ கட்சியில் இருந்த கலைஞர் இன்று முற்று முழுதாக இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார். இன்றைக்கு கலைஞர் தமிழ்நாட்டிற்கு சுயாட்சி வழங்குவது குறித்துக் கூட பேசத் தயார் இல்லை. இந்தக் கலைஞர் தமிழீழம் குறித்து பேசுவார் என்பது வெறும் கனவாகவே இருக்க முடியும்.
 
 
இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்ட கலைஞர் இந்திய வெளியுறவுத்துறைக்கோஇ அல்லது புலனாய்வுத்துறைக்கோ எதிராக ஒரு போதும் நடக்க மாட்டார்.
 
 
இதற்கு சில உதாரணங்களை சொல்ல முடியும்.
 
90 ஆம் ஆண்டில் பத்மநாபாஇ ராஜீவ்காந்தி அழிப்புக்கு முன்பு தமிழ்நாட்டிலே பழ.நெடுமாறன்இ சுபவீ போன்றவர்கள் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்திய படுகொலைகள் பற்றிய கண்காட்சி அது. அப்பொழுது தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் மீது தடை எதுவும் இருக்கவில்லை. கண்காட்சியும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் பற்றியதுதான். ஆனால் ஆட்சியில் இருந்த கருணாநிதி அக் கண்காட்சியை தடை செய்தார். பழ.நெடுமாறன்இ சுபவீ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகைப்படங்கள்இ ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக் கண்காட்சி இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு விரோதமானது என்று கலைஞர் இதற்கு விளக்கம் வேறு சொன்னார்.
 
 
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் வேட்டை ஆடப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்தும் கச்சதீவை மீட்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் பல குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் கலைஞர் கச்சதீவு குறித்து ஜெயலலிதா அளவிற்கு கூட குரல் கொடுப்பது இல்லை. சிறிலங்கா கடற்படையினர் மீனவர்களை தாக்குகின்ற விவகாரமும்இ கச்சதீவு விவகாரமும் இந்திய வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்பதால் கலைஞரின் குரல் இவ் விடயங்களில் மிகவும் ஈனமாக ஒலிக்கின்றது.
 
 
அதே போன்று தற்பொழுது தமிழ்நாட்டில் சில ஒட்டுக்குழுக்கள் செயற்படுவது கலைஞருக்கு தெரியாத விடயம் அல்ல. ஈழத்திலிருந்து அகதிகளாக ஓடி வருபவர்களில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா என்று கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தால் கூட மற்றவர்களிடம் இருந்து பிரித்து சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி கடுமையாக நடக்கின்ற கலைஞர் அரசு இந்த ஒட்டுக்குழுக்கள் விடயத்தில் பாராமுகமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் அவ் ஒட்டுக்குழுக்கள் விவகாரம் இந்திய புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்டது. தற்போதைய சிறிலங்கா மீதான இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு அங்கம் இந்த ஒட்டுக் குழுக்கள்.
 
 
ஈழப் பிரச்சனையில் இந்திய அரசின் கொள்கைதான் மாநில அரசின் கொள்கையும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லி வருவதும் இதன் ஒரு வெளிப்பாடே. இன்னொரு நாட்டில் நடக்கின்ற ஒரு விடுதலைப் போராட்டம் குறித்து இந்திய வெளியுறவுத் துறையே தனது கொள்கைகளை வகுத்துக் கொள்ளும். இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்ட ஒரு மாநில அரசு இக் கொள்கைகளுக்கு மாறாக தனிக் கொள்கைகளைக் கொண்டிருக்க முடியாது. இதையே கலைஞரும் சொல்கிறார்.
 
 
இவ்வாறு இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்ற கலைஞர் ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
 
 
இவைகளை விட கலைஞர் ஈழத் தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக நடப்பதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. அது அவருடைய பதவி சம்பந்தப்பட்டது. முதல்வர் ஆவதற்கும்இ தொடர்ந்து முதல்வராக இருப்பதற்கும்இ தனக்குப்பின் தனது மகன் ஸ்டாலின் முதல்வராக வருவதற்கும் அனைத்து விதமான "ராஜதந்திர" வழிகளையும் கையாளக் கூடியவர் கலைஞர்.
 
 
அறிஞர் அண்ணாவிற்கு பிறகு கலைஞர் முதன்முறையாக முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் அறிஞர் அண்ணாவிற்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியனே முதல்வராக வருவார் என்றே அப்பொழுது பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அறிஞர் அண்ணாவிற்கு அடுத்த தலைவராகவும் நாவலர் நெடுஞ்செழியனே இருந்தார். அறிஞர் அண்ணா மறைந்ததும் அப்பொழுது இடைக்கால அரசின் முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். ஆனால் சில நாட்களில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று கலைஞர் முதல்வரானார். இந்த சில நாட்களுக்குள் நடந்த மாற்றங்கள் குறித்து பலரும் பலவிதமாக சொல்வார்கள். நாவலர் நெடுஞ்செழியன் பெரிதும் வருத்தமுற்று கலைஞரைக் கண்டித்து அறிக்கை விட்டார். இரு வருடங்கள் அமைச்சரவையில் சேராதும் இருந்தார். அறிஞர் அண்ணாஇ கலைஞர்இ எம்ஜிஆர்இ ஜெயலலிதா என்று அனைவரிடமும் இருந்த நாவலர் நெடுஞ்செழியனால் சாகும் வரை இரண்டாம் இடத்திலேயே இருக்க முடிந்தது.
 
 
எம்ஜிஆர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று கலைஞருக்கு போட்டியாக வளர்ச்சி கண்ட பொழுதுஇ எம்ஜிஆரை கட்சியில் இருந்தும் மக்கள் மத்தியில் இருந்தும் ஓரங்கட்டுவதற்கு கலைஞர் பல வழிகளில் முயன்றார். எம்ஜிஆருக்கு மறைமுகமாக பல தொல்லைகளை கொடுக்கத் தொடங்கினார். இதை உணர்ந்து கொண்ட எம்ஜிஆரும் ஒரு பொதுக்கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது போன்று பேசி திமுகவில் இருந்து தன்னை வெளியேற்றச் செய்தார். அதன் பிறகு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல்வராக இருந்தார். இறக்கும் வரை தோற்கடிக்கப்படாது முதல்வராக இருந்து சாதனை படைத்தார்.
 
 
எம்ஜிஆருக்குப் பிறகு திமுகவில் கலைஞருக்கு போட்டியாக வந்தவர் வைகோ. கலைஞருக்கு மட்டும் அல்ல. கலைஞருடைய வாரிசான ஸ்டாலினுக்கும் போட்டியாக வைகோ உருவெடுத்தார். கடைசியில் கொலைப் பழி சுமத்தப்பட்டு வைகோவும் வெளியேற்றப்பட்டார்.
 
திமுகவில் இருந்து சிவாஜிகணேசன் வெளியேறிதும் கலைஞரின் கைங்கர்யமே என்ற ஒரு கருத்தும் சிலர் மத்தியில் உண்டு.
 
 
இப்படி தனது கட்சியிலும் வெளியிலும் தன்னை மீறி யாரும் வரக் கூடாது என்பதில் கலைஞர் மிகவும் கவனமாக இருப்பார். 1969ஆம் ஆண்டில் கலைஞர் முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியதில் இருந்து இன்று வரை தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதிலும்இ ஆட்சி கவிழாமல் காப்பதிலும்இ கட்சிக்குள் எதிரிகளை வளரவிடாது தடுப்பதிலுமே பெரும்பாலும் கவனம் செலுத்தி வருகிறார். கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொள்கையில் உறுதியும் துடிப்பும் கொண்ட கலைஞர் அதிகாரத்துக்கு வந்தவுடன் காணாமல் போய்விட்டார்.
 
 
கலைஞர் முதன் முறையாக முதல்வரான பொழுது புதுடெல்லியில் பதட்டம் சூழ்ந்து கொண்டது. ஒரு தீவிரவாதியான கலைஞரை எப்படி சமாளிப்பது என்று புதுடெல்லியில் உள்ளவர்கள் கலவரம் அடைந்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இருக்கவில்லை. கலைஞரோடுஇ அவரது குடும்பம்இ கட்சி என்று அனைவரையும் மிசா சட்டத்தில் சிறையில் அடைத்து கொடுமை செய்த இந்திராகாந்தியை சில ஆண்டுகள் கழித்து "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!" என்று கூட்டணி அமைத்துக் கொண்ட பொழுதுஇ போராளி கருணாநிதி மறைந்து அரசியல்வாதி கருணாநிதி மட்டுமே எஞ்சியிருப்பது புலனாகியது.
 
 
இவ்வாறு அதிகாரத்தைக் காப்பதற்கு அனைத்தையும் செய்கின்ற கலைஞரின் ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. ஒரு முறை ஊழல் என்றும்இ மறுமுறை விடுதலைப்புலிகளின் ஊடுருவல் என்றும் காரணம் காட்டி கலைக்கப்பட்டது. இரண்டாம் முறை ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் உண்மையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை கலைஞர் நன்கு அறிந்திருந்த போதும்இ அதிகாரத்தின் மீது வைத்திருக்கும் ஆசை காரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து கலைஞர் தள்ளி நிற்கவே விரும்புகிறார்.
 
 
முதல்வர் பதவி எந்த நேரத்திலும் பறி போகக்கூடியது என்பது கலைஞருக்கு தெரியும். ஆனால் அவர் நிரந்தரம் என்று நம்பியஇ மிகவும் விரும்பிய பதவி ஒன்று உண்டு. கலைஞருடைய தமிழாற்றலாலும்இ தமிழ் மொழியைக் காக்க ஆரம்ப காலங்களில் அவர் நடத்திய போராட்டிங்களினாலும் "உலகத் தமிழினத் தலைவர்" என்று அவரை அவரது தொண்டர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். கலைஞரை வாழ்த்துகின்ற யாரும் இப் பட்டத்தைக் குறிப்பிடாமல் வாழ்த்துவதில்லை. கலைஞர் தன்னை இப்படிக் குறிப்பிடுவதை மிகவும் ரசிக்கிறார் என்பதை வாழ்த்துபவர்கள் உணர்ந்து கொண்டதாலேயேஇ அவர்களும் அவ்வாறு வாழ்த்துவார்கள். ஆனால் இன்று "உலகத் தமிழினத் தலைவர்" என்ற பதவி அவரிடம் இல்லை. முன்பு கூட அதற்கான தகுதி அவரிடம் இருந்ததில்லை. "தமிழினத்தைக் காப்பாற்றுங்கள்" என்று கலைஞரிடம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலையில் கலைஞர் இருக்கிறார் என்பதுஇ அவர் தலைவரும்இ அல்ல தமிழரும் அல்ல என்று சொல்லத் தூண்டுகிறது. " தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைப்பதற்கு தொடர்ந்து போராடி வரும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களே "உலகத் தமிழினத் தலைவர்" என்று அழைக்கப்படுவதற்கு முற்று முழுதாக தகுதியானவர் என்பதை இன்று உலகத் தமிழினம் ஏற்றுக் கொண்டுள்ளது.
 
 
ஏற்கனவே விடுதலைப்புலிகள் எம்ஜிஆருக்கு முன்னுரிமை கொடுத்தது குறித்த கோபம் கலைஞருக்கு உண்டு. தற்பொழுது பட்டம் பறி போய்விட்ட கடுப்பும் சேர்ந்து விட்டது. கலைஞருடை குணவியல்புகளை ஆராய்கின்ற பொழுதுஇ அவர் தமிழீழ விடுதலைப் போரட்டத்தின் வெற்றி குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவாரா என்பது கூட கேள்விக்குறியாகவே இருக்கிறது.
 
 
நன்றி : வெப்ஈழம்
 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

வெப் ஈழம்.. வி.சபேசனும்.. ஒரு பேப்பர் சபேசன்(ஜேர்மனி) உம் ஒன்றா..????????????????!

 

http://webeelam.blogspot.co.uk/search?updated-min=2006-01-01T00:00:00-08:00&updated-max=2007-01-01T00:00:00-08:00&max-results=21

  • தொடங்கியவர்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சபேசன் எழுதிய இந்தக் கட்டுரை கருணாநிதி குறித்த உண்மை முகத்தை எடுத்தியம்புகிறது.

 

இன்னமும் கருணாநிதியே ஈழத் தமிழர்களுக்கு விமோசனத்தைப் பெற்றுத் தருவார் என்ற எண்ணத்தைப் பரப்பும் ஒருசிலருக்கு சாட்டையடியாக அமைந்துள்ள  அதேவேளையில் இந்தக் கட்டுரை தமிழக அரசியல் குறிப்பாக வாரிசு அரசியல் நடத்தும் கருணாநிதியின் நயவஞ்சகத் தனத்தை சரியாக அடையாளப்படுத்துகிறது.

 

தமிழ் மக்களை சரியான முறையில் வழிநடத்தும் இது போன்ற கட்டுரைகள் காலத்தின் தேவை. வாழ்த்துக்கள்..... 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள சபேசனும்... மேற்படி சபேசன்களும் ஒன்றா..! புகலிடத்தில் உலவும் பல சபேசன்களால் யாருக்குப் பின்னாடி யார் ஒளிந்திருக்கிறார்கள் என்று தெரிவதில் சிரமம் உள்ளது..! :lol:

  • தொடங்கியவர்

வெப் ஈழம்.. வி.சபேசனும்.. ஒரு பேப்பர் சபேசன்(ஜேர்மனி) உம் ஒன்றா..????????????????!

 

http://webeelam.blogspot.co.uk/search?updated-min=2006-01-01T00:00:00-08:00&updated-max=2007-01-01T00:00:00-08:00&max-results=21

 

ஒருவர் தான் 

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

யாழ் கள சபேசனும்... மேற்படி சபேசன்களும் ஒன்றா..! புகலிடத்தில் உலவும் பல சபேசன்களால் யாருக்குப் பின்னாடி யார் ஒளிந்திருக்கிறார்கள் என்று தெரிவதில் சிரமம் உள்ளது..! :lol:

 

 

அந்தக் காலப்பகுதியில் பல சபேசன்கள் கட்டுரைகளை பல பத்திரிகைகளிலும் இணையத் தளங்களிலும் எழுதிக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் இந்தக் கட்டுரையை  வெப்ஈழம் இணையத்தளத்தில் இருந்து எடுத்தேன். எனவே இது யாழ் கள சபேசனுக்கு உரியதே.

 

தீர்க்கதரிசனமாக கருணாநிதியைப் புரிந்து கொண்டு எழுதப்பட்ட கட்டுரை என்பதால் காலத்தின் தேவை கருதி களத்தில் இணைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மணிவாசகன்..!

 

அவர் இப்ப வந்து.. வடிவேல் பாணியில்.. அது அப்ப.. இது இப்ப என்று சொல்லுவார்..! மேலும்.. அவரில் இனங்கண்ட ஒன்று.. காலத்திற்கு ஏற்ப தன்னை வித்தியாசமாக இனங்காட்டிக் கொண்டிருப்பதில் அவர் ஈடுபாடுகொண்டவராக இருக்கிறார். யதார்த்தத்தை உணர்ந்து எழுதுபவர் என்று சொல்லக் கூடிய அளவிற்கு அவரின் எழுத்துக்கள் பல இப்போ.. அமைவதில்லை..!

 

அவர் சிறீலங்காவுக்கு ஊருலா போனதோடு ஒரு மார்க்கமாவே தான் இருக்கிறார். :lol:

Edited by nedukkalapoovan

மணிவாசகன்! இதே கட்டுரையை நான் சில வாரங்களுக்கு முன்பு மீள இணைத்திருந்தேன். பார்க்கவில்லையா?

  • தொடங்கியவர்

நன்றி சபேசன்!

 

காலத்தின் தேவை கருதி நீங்கள் செய்த காரியத்திற்கு மிகவும் நன்றி

 

காரணம் கருணாநிதி குறித்த மாயை இன்னமும்  சில தமிழர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை அகற்றுவதற்கு இது போன்ற கட்டுரைகள் உதவும்.

 



குறிப்பாக கருணாநிதி தலைவரும் அல்ல தமிழரும் அல்ல என்று சொல்லத் தோன்றுகிறது என்ற வசனத்திலேயே ரத்தினச் சுருக்கமாக கருணாநிதியை எங்களுக்கு அறியத் தந்து விட்டீர்கள். மீண்டும் நன்றி...

மன்னிக்கவும்! சில வாரங்கள் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அதை மீள இணைத்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106642

அப்படியே இதையும் படியுங்கள்! அன்றைக்கு ஈழத் தமிழர்கள் ஜெயலலிதாவை எதிர்த்த காலத்தில் நான் கூறிய சில கருத்துக்கள் இருக்கின்றன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14484

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் தீர்க்க தரிசனத்தில் எனக்குப் பிடித்த தரிசனம் இதுதான். இது நடந்திராட்டி முள்ளிவாய்க்கால் நடந்திராது. சபேசனும் இப்ப மாற்று அரசியல் செய்யும் நிலை தோன்றி இருக்காது தானே. நல்ல சுய பிழைப்புத் தரிசனம்.. :lol:

 

 

Posted 28 September 2006 - 02:44 PM              
               
ஜெயலலிதாவே தமிழ்நாட்டுக் முதலமைச்சராக வருவது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்பதே என் கருத்தாக இருந்தது.

ஆனால் தற்பொழுது கலைஞரும் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்துவருகிறார். அந்த வகையில் என்னுடைய இந்தக் கருத்து தற்பொழுது மாறியிருக்கிறது.

தமிழை கட்டாய பாடம் ஆக்கியது, திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு, ரௌடிகளை உள்ளே தள்ளியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வேகம் போன்றவைகள் வரவேற்கத் தக்கவைகள்.

இப்பொழுது கேட்டால் கலைஞர் முதல்வராக வந்தது தமிழ்நாட்டிற்கு நல்லது என்பேன்.

ஆகவே தேர்தல் சமயத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எப்பொழுதும் என்னுடைய கருத்துக்களாகவே தொடர்ந்து இருக்கும் என்ற சொல்ல முடியாது.


அதே வேளை ஈழத் தமிழர் நிலைப்பாட்டில் கலைஞரிடம் மாற்றம் காணாத வரை, கலைஞர் பற்றிய என்னுடைய மற்றைய கருத்துக்கள் மாறாது.

 

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான்! உங்கள் கருத்து எனக்கு சரியாக விளங்கவில்லை. தேர்தல் நடந்து கொண்டிருந்த பொழுது "ஜெயலலிதா வருவது நல்லது" என்று எழுதியிருந்தேன். ஆனால் கலைஞர்தான் வெற்றி பெற்றார். அவர் வந்தவுடன் செய்த சில திட்டங்களை இந்தக் கருத்தில் பாராட்டியிருக்கிறேன். தேர்தல் வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றி தமிழ்நாட்டை பொறுத்தவரை சரியான முறையில்தான் அவர் ஆட்சியை தொடங்கியிருந்தார். அதையே கூறியிருக்கிறேன்.

ஆனால் தமிழீழத்திற்கு அவர் சரியானவர் அல்ல என்பதையும் கூறியிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! உங்கள் கருத்து எனக்கு சரியாக விளங்கவில்லை. தேர்தல் நடந்து கொண்டிருந்த பொழுது "ஜெயலலிதா வருவது நல்லது" என்று எழுதியிருந்தேன். ஆனால் கலைஞர்தான் வெற்றி பெற்றார். அவர் வந்தவுடன் செய்த சில திட்டங்களை இந்தக் கருத்தில் பாராட்டியிருக்கிறேன். தேர்தல் வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றி தமிழ்நாட்டை பொறுத்தவரை சரியான முறையில்தான் அவர் ஆட்சியை தொடங்கியிருந்தார். அதையே கூறியிருக்கிறேன்.

ஆனால் தமிழீழத்திற்கு அவர் சரியானவர் அல்ல என்பதையும் கூறியிருக்கிறேன்.

 

கலைஞர் 2011 தேர்தலில் தோற்கும் வரை.. தோற்ற பின்னும்.. நேற்று வரை பெரிசாக எதனையுமே தமிழீழம் தொடர்பில் மாற்றவில்லையே..??! டெசோ கூட தமிழீழத்தை உச்சரிப்பதைக் கைவிட்டு விட்டதே..??!

 

ஆனால் நீங்கள்...??!

 

நீங்கள் தமிழ்நாட்டுக்கு ஜெ வருவதை விரும்புவதாகச் சொன்னீர்கள்.. ஆனால் அவர் தமிழ் நாட்டைக் கடந்து ஈழத்தமிழர்கள் பாலும் ஏதோ கலைஞரை விட துணிச்சலாக சிலவற்றைச் செய்கிறாரே. ஜெ துணிச்சலான செயல்களைச் செய்பவர் என்பது அவர் கலைஞரை தூக்கி உள்ள வைச்சதில் இருந்து சின்னப் பிள்ளைக்கும் தெரியும்..! அதெல்லாம் உங்கட தீர்க்க தரிசனப் பார்வை என்று சொல்லப்படாது. :lol:

 

ஆனால் நீங்கள் இப்போது.. கலைஞரை.. முன்னிலைப்படுத்தி.. ஜெ யை.. பற்றி அடக்கி வாசிக்கிறீர்களே..??!

 

ஆக நீங்கள் எழுதியவை எதுவும் தீர்க்க தரிசனம் கிடையாது. random.. இப்போதும் அதையே செய்கிறீர்கள். நாளை இதிலும் ஒன்றிரண்டு.. 5 வருசத்திற்குப் பின்னாடி ஏதோ ஒரு வகையில் ஒத்துப்போவது போல சூழ்நிலை தோன்றினால்.. கொணர்ந்து காட்டுவீர்கள்..!!

 

சபேசன்.. உங்களின் எழுத்தின் சுத்துமாத்துகளுக்கு நீண்ட காலம் பழக்கப்பட்டவர்கள் நாங்கள்..! :lol::D

Edited by nedukkalapoovan

ஜெயலலிதாவின் அதிரடியான செயல்கள் என்றைக்காவது தமிழர்களுக்கு பயன்படும் என்று அந்த நாட்களில் நான் பலமுறை வாதிட்டிருக்கிறேன். இந்த திரியில் இருக்கின்ற கூட்டமைப்புச் சம்பந்தப்பட்ட விடயத்திலும் அவர்களை ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு வரச் செய்யும்படி பல இடங்களில் தொடர்பு கொண்டு வேண்டியிருக்கிறேன்.

நான் இனி உட்காந்து இருந்து எங்கெங்கே இது பற்றிய பதிவுகளை செய்திருக்கிறேன் என்று தேடிக் கொண்டிருக்க முடியாது.

தமிழ்நாட்டு அரசியலில் என்றைக்குமே நான் ஜெயலலிதா சார்பானவனாகவே இருந்திருக்கிறேன். அவர் அமைச்சர்களை காலில் விழச் செய்வதைக் கூட புகழ்ந்து எழுதிய ஞாபகம் இருக்கிறது. ஜெயேந்திரனை தூக்கிப் உள்ளே போட்டதும் அவரை வியப்பதற்கு ஒரு காரணமாக இருந்தது.

வைகோ கலைஞரோடு சேர வேண்டும் என்று "உதயன்" நாழிதள் எழுதிய காலங்களில் அதைக் கண்டித்து எழுதியிருக்கிறேன். ஐவகோ ஜெயலலிதாவோடே இருக்கட்டும் என்று வாதிட்டிருக்கிறேன்.

நான் எதிர்வுகூறல்களை செய்யவில்லை. தீர்க்கதரிசனமா தற்செயலா என்கின்ற ஆராய்ச்சி இதில் தேவையில்லை. அரசியல் தலைவர்களின் இயல்பு பற்றிய கணிப்பையே மேற்கொண்டிருந்தேன்.

அதன் அடிப்படையிலேயே தற்போதைய கலைஞர் மீதான எமது அகோரமான எதிர்ப்பு நல்லது அல்ல என்று சொல்கிறேன். கலைஞர் நல்லவரா கெட்டவரா என்பது அல்ல பிரச்சனை. அவர் மீதான எதிர்ப்பு எமக்கு நல்லதா கெட்டதா என்பதுதான் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் அதிரடியான செயல்கள் என்றைக்காவது தமிழர்களுக்கு பயன்படும் என்று அந்த நாட்களில் நான் பலமுறை வாதிட்டிருக்கிறேன். இந்த திரியில் இருக்கின்ற கூட்டமைப்புச் சம்பந்தப்பட்ட விடயத்திலும் அவர்களை ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு வரச் செய்யும்படி பல இடங்களில் தொடர்பு கொண்டு வேண்டியிருக்கிறேன்.

நான் இனி உட்காந்து இருந்து எங்கெங்கே இது பற்றிய பதிவுகளை செய்திருக்கிறேன் என்று தேடிக் கொண்டிருக்க முடியாது.

தமிழ்நாட்டு அரசியலில் என்றைக்குமே நான் ஜெயலலிதா சார்பானவனாகவே இருந்திருக்கிறேன். அவர் அமைச்சர்களை காலில் விழச் செய்வதைக் கூட புகழ்ந்து எழுதிய ஞாபகம் இருக்கிறது. ஜெயேந்திரனை தூக்கிப் உள்ளே போட்டதும் அவரை வியப்பதற்கு ஒரு காரணமாக இருந்தது.

வைகோ கலைஞரோடு சேர வேண்டும் என்று "உதயன்" நாழிதள் எழுதிய காலங்களில் அதைக் கண்டித்து எழுதியிருக்கிறேன். ஐவகோ ஜெயலலிதாவோடே இருக்கட்டும் என்று வாதிட்டிருக்கிறேன்.

நான் எதிர்வுகூறல்களை செய்யவில்லை. தீர்க்கதரிசனமா தற்செயலா என்கின்ற ஆராய்ச்சி இதில் தேவையில்லை. அரசியல் தலைவர்களின் இயல்பு பற்றிய கணிப்பையே மேற்கொண்டிருந்தேன்.

அதன் அடிப்படையிலேயே தற்போதைய கலைஞர் மீதான எமது அகோரமான எதிர்ப்பு நல்லது அல்ல என்று சொல்கிறேன். கலைஞர் நல்லவரா கெட்டவரா என்பது அல்ல பிரச்சனை. அவர் மீதான எதிர்ப்பு எமக்கு நல்லதா கெட்டதா என்பதுதான் பிரச்சனை.

 

கலைஞர் மீதான எதிர்ப்பு.. ஜெ மீதான எதிர்ப்பும்.. தான் அவர்களை மக்கள் மாற்றி யோசிக்க வைத்திருக்கிறார்கள். இன்று நீங்கள் கடிந்து கொண்டு திரியும் சீமானும் இந்த மாற்றங்களின் பின்னால் இருந்திருக்கிறார். கலைஞரை எதிர்க்காது விட்டிருந்தால்.. மக்களும் அவரை எதிர்திருக்கமாட்டார்கள்.. கலைஞரும் தான் செய்வதெல்லாம் சரியே என்ற திமிர்த்தனத்தில் இப்பவும் தீவிர குடும்ப அரசியல் செய்து கொண்டிருந்திருப்பார். அதேபோல் தான் ஜெயும்..!

 

2009 இல் மத்திய அரசின் வழியில் தான் நான் நடக்க முடியும்.. எம் கைகள் கட்டப்பட்டிருக்கு என்று சொன்ன கலைஞர்.. யுத்தம் என்றால் மக்கள் இறக்கத்தான் நேரிடும் என்று அறிக்கை தந்த ஜெ யும் உங்கள் கணிப்பின் பிரகாரம் மாறவில்லை. தமிழக மக்களிடம் பிற சிறிய அமைப்புக்களும் கட்சிகளும்.. இன்று மாணவர்களும் ஏற்படுத்திய சிந்தனை மாற்றத்தின் விளைவு தான்..அவை. அதில் நாம் தமிழர் சீமானின் பங்களிப்பு அளப்பரியது. வைகோ.. நெடுமாறன் ஐயாக்களினதும் பங்களிப்பும் அளப்பரியது. மே 17 இயக்கம்.. மற்றும் அணு உலை எதிர்ப்புப்போராட்டக் குழுமம் என்று பலரின் ஆதரவும் கிடைக்கப்பெற்றதும் ஒரு காரணம். நாடு கடந்த தமிழீழ அரசின்.. சில புலம்பெயர் அமைப்புக்களின்.. தமிழக தலைவர்களுடனான நெருக்கமும் இதற்குக் காரணம். இவை எல்லாம் உங்கள் கணிப்பின் பலன்கள் அல்ல..! எழுந்தமான நிகழ்வுகளும் அல்ல..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
கலைஞரின் முடிவு நியாயமா?
 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வதற்கான கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்ய மாட்டார்கள் என்பது போன்ற செய்திகள் வருகின்றன. இது பல ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை சற்றுக் கவனித்துப் பார்த்தால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வது நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமமு பதவிகளை ராஜினமா செய்தால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை ஒரு குறிப்பிட்டளவிற்கு அனுமதித்துள்ள கலைஞரின் ஆட்சி இல்லாமல் போவதோடு, கலைஞரையும் இந்தத் தள்ளாத வயதில் சிறையில்தான் நாம் பார்க்க வேண்டி ஏற்படும்.

 

இதை நாம் சற்று விளக்கமாகப் பார்க்க வேண்டும். முதலில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அனைத்துக் கட்சி மாநாட்டில் தீர்மானம் எடுத்தார்கள். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வருகின்ற பொழுது, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், பாமக, இரண்டு கம்யூனிசக் கட்சிகள், மதிமுக என்று அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கில் வருவார்கள்.

 

ஆனால் இரண்டு நாட்களிலேயே காங்கிரஸ் கட்சி மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டது. டெல்லியைக் கேட்டுத்தான் முடிவு சொல்ல வேண்டும் என்று கூறி விட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைத்துக் கட்சி மாநாட்டில் எடுத்த முடிவிற்கு ஏற்றபடி தொடர்ந்தும் இருந்திருக்குமாயின் நிலைமை வேறு மாதிரி போயிருக்கும். உண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கலைஞரின் முதுகில் குத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

காங்கிரஸ் கட்சியை எதிர்த்துக் கொண்டு, கலைஞரால் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, காங்கிரஸின் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தால், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களும் கலைஞரின் அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்று, கலைஞரின் ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியால் கலைஞரின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது போனாலும் கூட, மத்திய அரசு மீண்டும் விடுதலைப் புலிகளைச் சாட்டியே கலைஞரின் அரசை கலைத்து விடும்.

 

இந்திய அரசின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அது கவிழ்ந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி பெரிதாக கவலைப்படப் போவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் 2011இல்தான் வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் கலைஞரின் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், அது கலைஞருக்கு பெரும் இழப்பாக இருக்கும். விரும்பத்தாகத பல விளைவுகளும் ஏற்படும்.

 

தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், மீண்டும் கலைஞரால் ஆட்சிக்கு வரமுடியாதா என்ற கேள்வி சிலருக்கு எழுலாம். அதனுடைய பதில் இன்றைய நிலையில் இல்லை என்பதே.

 

தமிழ்நாடு மக்கள் ஒரு போதும் ஈழத் தமிழர் விவகாரத்தின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிப்பது இல்லை. தமிழீழ மக்களுக்கு ஆதரவு கொடுத்தாலும், தமிழ்நாட்டை ஆள்வதற்கு யார் பொருத்தமானவர்கள் என்ற விடயத்திற்கே முன்னுரிமை கொடுப்பார்கள். தமிழீழத்தையும் தமிழ்நாட்டு அரசியலையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.

 

இப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் கலைஞரின் தலைமையில் நடக்கும் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை திமுகவை சேர்ந்தவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் இருப்பதற்கு மின்வெட்டும், விலைவாசி உயர்வும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

 

தமிழ்நாடு முழுவதும் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. பல இடங்களில் 12 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக சொல்கின்றார்கள். திடீர் திடீரென்று மின்சாரம் இல்லாமல் போகின்றது. எப்பொழுது மீண்டும் மின்சாரம் வரும் என்று தெரியாத நிலை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பல விதமான அசவுகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இது மக்களை அரசின் மீது கடும் கோபம் கொள்ளச் செய்திருக்கின்றது.

 

மின்வெட்டுக்கு திமுக அரசு மட்டும் காரணம் அல்ல. இதே நிலை கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருக்கின்றது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்றபடி மின்உற்பத்தி அதிகரிக்கப்படுவதற்கு முன்னைய மத்திய மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். முன்பு இருந்த அதிமுக ஆட்சி மின்சாரத்தை சேமித்து வைத்திருந்திருக்க வேண்டும். அதே போன்று திமுகவும் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரத்தை சேமிக்க தொடங்கியிருக்க வேண்டும். யாரும் பெரிதாக அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. தவறு அனைவர் மீதும்தான்.

 

ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது திமுக ஆட்சியில் இருப்பதால், அவர்கள் மீதே மக்களின் கோபம் திரும்புகின்றது.

 

கலைஞர் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவது பற்றியும் இன்றைக்கு எதிர்மறையான விமர்சனங்களே இருக்கின்றன. அனைவரும் தொலைக்காட்சி பார்ப்பதால்தான் மின்சாரம் போதவில்லை என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அத்துடன் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில் பல குளறுபடிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

 

விலைவாசி உயர்வும் மக்களைப் பாடாய்ப்படுத்துகிறது. ஒரு ருபாய்க்கு அரிசி வழங்கியும், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து போய் நிற்கின்றது. இவைகள் எல்லாம் திமுக அரசு மீது மக்களை கடும் அதிருப்தி கொள்ளத் செய்திருக்கிறது.

 

இந்த நிலையில் திமுக அரசு கவிழ்ந்தோ, அல்லது கலைக்கப்பட்டோ தமிழ்நாட்டிற்கு தேர்தல் வந்தால், ஜெயலலிதாவின் அதிமுகவே அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்கின்ற நிலைமை இருக்கிறது. ஜெயலலிதா முதல்வரானதும் அவர் செய்கின்ற முதல் வேலையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டில் கலைஞரை கைது செய்து உள்ளே தள்ளுவதாகவே இருக்கும். அப்படியே திருமாவளவன், பாரதிராஜா, ராமநாராயணன் என்று எல்லோரும் உள்ளுக்குப் போக வேண்டியதுதான். ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒரு மூச்சு விடக் கூட முடியாத நிலை தமிழ்நாட்டில் தோன்றும்.

 

(இப்படி ஒரு நிலை தோன்றினால் அதை எதிர்த்து உறுதியோடு போராடுவதற்கு திமுக போன்ற பெரிய கட்சிகள் தயாராக இல்லை என்பது இதில் ஒரு வேதனையான விடயம். ஈழத் தமிழர்களின் பொருட்டு சிறை செல்வதற்கு வெகு குறைவானவர்களே தயாராக இருப்பார்கள். அதுவும் "தேசிய பாதுகாப்புச் சட்டம்" பாயும் என்றால், சிறை செல்வதற்கு யார்தான் தயாராக இருப்பார்கள்?)

 

தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்தும் அரசியல் கணக்குப் போடுவதில்தான் இன்றைக்கு மும்மரமாக நிற்கின்றன. அது தேவையானதும் கூட. இன்னும் ஆறு மாதத்தில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசின் மீது மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை எப்படிச் சமாளிப்பது என்று திமுகவும் காங்கிரசும், மக்களின் அதிருப்தியை எப்படி வாக்குகள் ஆக்குவது என்று அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளும் கணக்கப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

 

இன்றைக்கு தமிழ்நாட்டின் கட்சிகள் பல வினோதமாதன நிலைப்பாடுகளை எடுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். காங்கிரஸ் முதுகில் குத்தியும் கலைஞர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என்கிறார். ஜெயலலிதாவின் அறிக்கையால் வைகோ சிறைக்கு செல்லவேண்டி வந்ததன் பின்பும், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று மதிமுக சொல்கிறது. அனைத்தும் தேர்தல் படுத்தும் பாடு.

 

ஜெயலலிதா முதலில் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, திடீரென்று தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டதற்கும் இதுதான் காரணம். கலைஞர் பேசாது இருந்த பொழுது, சிங்கள அரசையும் இந்திய அரசையும் கண்டித்து அறிக்கை விட்டார். கலைஞரும் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியதும், அவருடைய மூளை வேறு கணக்குப் போடத் தொடங்கி விட்டது.

 

தமிழ்நாட்டு மக்களின் திமுக அரசு மீதான அதிருப்தியால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மத்தியில் அமையப் போகின்ற ஆட்சிக்கு அதிமுகவின் தயவு தேவைப்படும் நிலை ஏற்படலாம். அப்பொழுது அதைப் பயன்படுத்திக் கொண்டு கலைஞரின் அரசைக் கலைக்கச் சொல்லி மிரட்டலாம். விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டது என்று மீண்டும் மத்திய அரசை நச்சரிக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டு விட்டு, தன்னுடைய சுதியை மாற்றிக் கொண்டார்.

 

திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான் வைகோவும் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருப்பது நல்லது என்று நினைக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மதிமுகவிற்கு ஒதுக்கும் நான்கு ஐந்து இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப் போடுகிறார். கலைஞரும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை பகைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் எதுவும் கிடைக்காமல் அல்லாட வேண்டியிருக்கும் என்று விட்டுக் கொடுத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்.

 

கலைஞர் காங்கிரஸ் கட்சியைப் பகைத்து, அதனால் ஆட்சி கவிழ்ந்து, அவரும் சிறைக்கு செல்வதை யாரும் இன்றைய நிலையில் விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதால்தான் ஓரளவு என்றாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் இந்தப் பரப்புரையை தொடர்வதற்கு வாய்ப்பும் இருக்கின்றது. இது மிக முக்கியமானது.

 

இதுவரை நடந்த போராட்டங்களினால் கலைஞருக்கும் தமிழீழ மக்களிற்கும் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. விலகிச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுடன் சற்று நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறது. அத்துடன் இரண்டு வாரங்கள் மின்வெட்டுப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பேசவில்லை. தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு கிடைத்திருக்கிறது. சிங்கள அரசையும் சற்று எரிச்சல்படுத்த முடிந்திருக்கிறது.

 

தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவை பெறுவதற்கான பரப்புரைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதுதான் தற்போது உள்ள அவசியமான ஒரு செயற்பாடு. இன்று இல்லாவிட்டாலும் நாளை இதனால் பல நன்மைகள் ஏற்படலாம். ஆகவே கலைஞரை வெறுமனே திட்டித் தீர்ப்பதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

 

- வி.சபேசன் (27.10.08)

http://webeelam.blogspot.co.uk/2008/10/blog-post_27.html

இதை இணைத்ததற்கு நன்றி நுணாவிலான். கலைஞரை ஈழத் தமிழர்கள் கண்மூடித்தனமாக ஆதரித்த பொழுது அவரைப் பற்றிய எச்சரிக்கையை என் போன்றவர்கள் விடுத்தோம். பலர் கேட்கவில்லை. நம்பிக் கெட்டார்கள். இன்றைக்கு குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு திரிகிறார்கள்.

நாங்கள் தெளிவாக இருந்தோம். கலைஞர் ஆதரிக்க மாட்டார். ஆனால் அவரால் என்ன நன்மையோ, அதை பெற முனைந்தோம். இன்றைக்கு அவர் ஆதரவை விலக்கியும் மத்தியில் ஆட்சி கவிழவில்லை. இதைத்தான் நீங்கள் இணைத்த கட்டுரையிலும் சொல்லி இருக்கிறோம். மத்தியில் ஆட்சி கவிழ்வதற்கு பதிலாக கலைஞரின் ஆட்சிதான் கவிழந்து போயிருக்கும். கலைஞர் குடும்பம் சிறைக்கு போயிருக்கும்.

கலைஞரால் இந்தப் போரை நிறுத்த முடியாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். எனக்கு எந்தவிதமான முட்டாள்தனமான எதிர்ப்பார்ப்பு இருக்கவில்லை. அதனால் புதிதாய் கோபங்கள் எதுவும் வரவில்லை.

இன்றைய ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அரசியல்நலன்கள் சார்ந்ததே. கலைஞர் தயங்கி தயங்கி செய்ய நினைப்பதை ஜெயலலிதா அதிரடியாக செய்வார். எங்களுக்கு தமிழ்நாட்டில் பேராதரவ எழுந்தது நாம் முற்றுமுழுதாய் அழிந்ததன் பிற்பாடுதான்.

இந்தக் கட்டுரையில் ஜெயலலிதா மாறி மாறி செயற்பட்டதை சொல்லியிருக்கிறேன். இதுதான் அவர். விடுதலைப் புலிகள் பற்றிய குற்றச்சாட்டில் கலைஞரையும் அவர் குடும்பத்தையும் தூக்கி உள்ளே போட முடியும் என்றால், அவர் இன்றைக்கும் அதை செய்வார்.

ஜெயலலிதாவின் அதிரடியான செயற்பாடுகள் எமக்கு ஆதரவாக மாறுவதற்கு ஏற்றபடி அவரோடும் ஈழ ஆதரவுச் சக்திகள் இருக்க வேண்டும் என்று பல முறை பல இடங்களில் வாதிட்டிருக்கிறேன்.

இதை நீங்கள் சரியான முறையில் புரிந்த கொள்ள வேண்டும். ஜெயலலிதா எமக்கு ஆதரவானவர் இல்லை. ஆனால் எங்களுடைய எதிரி அவருக்கும் எதிரி ஆகின்ற பொழுது அவர் அதரடியான அடி ஒன்றை கொடுப்பார். இதை நாம் பயன்படுத்த வேண்டும். இதைத்தான் நான் முன்பிருந்து பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். அது இன்றைக்கு நடைபெறுகிறது.

எப்படி அன்றைக்கு ஜெயலலிதாவோடும் ஈழ ஆதரவு சக்திகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேனோ, அதே போன்று இன்றைக்கு கலைஞரோடும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கலைஞரோ, ஜெயலலிதாவோ யாரையும் காலகாலத்திற்கும் நாம் எதிரிகளாக முடிவெடுத்த செயற்படக் கூடாது. இருவரின் ஊடாகவும் என்ன நன்மை என்று பார்த்து காய் நகர்த்த வேண்டும்.

நான் கலைஞர் ஆதரவாளன் இல்லை. நான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாளன். அவர்களுக்கு பாதகமான எதற்கும் நான் ஆதரவாக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த, நாளைக்கு மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய, எமக்கு ஆதரவான பல இலட்சம் கொண்ட தொண்டர்கள் உள்ள ஒரு கட்சியின் தலைவரை இப்படி எதிர்ப்பது எமக்கு பாதகமானது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஆகவே எதிர்ப்பை பலவீனமாக்கும் கருத்துக்களை சொல்லி வருகிறேன். தேவைப்பட்டால் நாளை ஜெயலலிதாவிற்காகவும் இதே வேலையை செய்வேன், ஏற்கனவே செய்தது போல.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி அன்றைக்கு ஜெயலலிதாவோடும் ஈழ ஆதரவு சக்திகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேனோ, அதே போன்று இன்றைக்கு கலைஞரோடும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கலைஞரோ, ஜெயலலிதாவோ யாரையும் காலகாலத்திற்கும் நாம் எதிரிகளாக முடிவெடுத்த செயற்படக் கூடாது. இருவரின் ஊடாகவும் என்ன நன்மை என்று பார்த்து காய் நகர்த்த வேண்டும்.

நான் கலைஞர் ஆதரவாளன் இல்லை. நான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாளன். அவர்களுக்கு பாதகமான எதற்கும் நான் ஆதரவாக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த, நாளைக்கு மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய, எமக்கு ஆதரவான பல இலட்சம் கொண்ட தொண்டர்கள் உள்ள ஒரு கட்சியின் தலைவரை இப்படி எதிர்ப்பது எமக்கு பாதகமானது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஆகவே எதிர்ப்பை பலவீனமாக்கும் கருத்துக்களை சொல்லி வருகிறேன். தேவைப்பட்டால் நாளை ஜெயலலிதாவிற்காகவும் இதே வேலையை செய்வேன், ஏற்கனவே செய்தது போல.

 

நீங்கள் மட்டுமல்ல.. எல்லா தமிழங்களும்.. ஜெயலலிதா.. கருணாநிதியை எதிர்க்கனுன்னு எதிர்த்துக்கிட்டு இருக்கல்ல. அவங்க தமிழங்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழங்களுக்கூ ஆதரவா நகரனும் என்று தான்.. எதிர்ப்பை பதிவு செய்யுறாங்க. தமிழக மக்களும் சரி ஈழத்தமிழங்களும் சரி உலகத்தமிழினம் முழுவதும் இந்த நிலைப்பாட்டில தான் இருக்குது. நீங்க ஒன்னும் புதிசா சொல்லல்லையே. அப்படிச் சொல்வதா நினைச்சுக்கிறீங்க..! அவ்வளவு தான். :):lol:

 

நெடுக்காலபோவான்! நீங்கள் சொல்வது சரி. ஆனால் கலைஞர் இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏதாவது செய்கின்ற போதும், "நாடகம்", "சதி" அது, இது என்று எம்மவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது எவ்வகையான நகர்வு? கலைஞரை மேலும் உற்சாகப்படுத்தி சரியான பாதையில் நகர்த்த வேண்டுமா? அல்லது ஒரேயடியாக அவரை முடக்குகின்ற அரசியலை செய்ய வேண்டுமா? நாங்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு கவுன்சிலராக ஆவாரா என்பதே சந்தேகம் என்கின்ற நிலையில் இருக்கின்ற சீமான் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆகி விடுவார் என்கின்ற கணிப்பின் அடிப்படையில்தான் இன்றைக்கு ஈழத் தமிழர்களின் அரசியில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! நீங்கள் சொல்வது சரி. ஆனால் கலைஞர் இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏதாவது செய்கின்ற போதும், "நாடகம்", "சதி" அது, இது என்று எம்மவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது எவ்வகையான நகர்வு? கலைஞரை மேலும் உற்சாகப்படுத்தி சரியான பாதையில் நகர்த்த வேண்டுமா? அல்லது ஒரேயடியாக அவரை முடக்குகின்ற அரசியலை செய்ய வேண்டுமா? நாங்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு கவுன்சிலராக ஆவாரா என்பதே சந்தேகம் என்கின்ற நிலையில் இருக்கின்ற சீமான் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆகி விடுவார் என்கின்ற கணிப்பின் அடிப்படையில்தான் இன்றைக்கு ஈழத் தமிழர்களின் அரசியில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

 

கருணாநிதியின் பல்டியை பல்டி என்று தான் சொல்லனும். இல்ல அதைத் தியாகம் என்று முரசொலி கணக்கில சொன்னா முரசொலிக்கும் மக்களுக்கும் என்ன வித்தியாசம்.

 

நீங்கள் கட்சி அமைத்து 5 வருடங்கள் கூட ஆகாத... சீமானுக்கு எதிராக முன்னெடுக்கும் பிரச்சாரங்களைப் போல கூட மக்கள் கருணாநிதிக்கு எதிராக செயற்படவில்லை.. 50 வருடங்களுக்கு மேலாக.. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் உள்ள கருணாநிதிக்கு மக்கள் பாடம் எடுக்க வேண்டியதில்லை.

 

மக்களின் விருப்பை கருணாநிதி உணரும் வகையில் மக்கள் தமது எதிர்ப்பை அவருக்கு எதிராக பதிவு செய்கின்றனர். காரணம் கருணாநிதி தெரிந்து கொண்டே தவறு செய்பவர். சீமான் அப்படியல்ல.. அவர் வளர்ந்து வரும் ஒரு தமிழன். அவரை பங்குவமாக அணுகி பண்படுத்த வேண்டியது பற்றியும் மக்கள் அறிவார்கள்..!

 

கருணாநிதி எப்படிப்பட்டவர்.. என்னென்ன வேளைகளில் என்னென்ன வேலைகள் செய்வார்.. அவரின் நரித்தனங்கள் எங்கே வெளிப்படும்.. அவற்றை வெல்ல எங்கே எவ்வாறு..என்ன செய்ய வேண்டும் என்பதும் மக்களுக்குத் தெரியும்..!

 

கருணாநிதியின் தவறுகளை விட்டிட்டு.. அவரைப் புகழ்ந்து கொண்டிருப்பது எல்லாம் மக்கள் ஆட்சியின் பண்பும் அல்ல..! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! நீங்கள் சொல்வது சரி. ஆனால் கலைஞர் இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏதாவது செய்கின்ற போதும், "நாடகம்", "சதி" அது, இது என்று எம்மவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது எவ்வகையான நகர்வு? கலைஞரை மேலும் உற்சாகப்படுத்தி சரியான பாதையில் நகர்த்த வேண்டுமா? அல்லது ஒரேயடியாக அவரை முடக்குகின்ற அரசியலை செய்ய வேண்டுமா? நாங்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு கவுன்சிலராக ஆவாரா என்பதே சந்தேகம் என்கின்ற நிலையில் இருக்கின்ற சீமான் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆகி விடுவார் என்கின்ற கணிப்பின் அடிப்படையில்தான் இன்றைக்கு ஈழத் தமிழர்களின் அரசியில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

 

 

 
 கலைஞரை மாற்றுவது கல்லில் நாருரிப்பதற்கு ஈடானது.  அவரின் 50 வருட அரசியலில் தமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் செய்த துரோகங்கள் நன்மைகளை விட அதிகம். இனியும் ஒரு வேளை மாறினாலும் அவரிம்  தமிழ் மக்களுக்கான துரோகம் வரலாற்றில் பதியப்பட்டு விட்டது.
 
இன்னும் எமது சக்தியை செலவளித்து குறிப்பிட்ட தலைவர்களை புடம் போட வேண்டுமெனில் சீமான் வை.கோ போன்றவர்களிடம் அச்சக்தியை செலவளிக்கலாம்.
 
இப்போ கருணாநிதி தமிழ் மக்களுக்கு ஏதோ செய்வது போல் நடிப்பது தனது இழந்து போன வாக்கு பலத்தை மீண்டும் தூக்கி நிறுத்தவே அன்றி வேறொன்றும் இல்லை.ஆனாலும் கலைஞருக்கு இன்னும் தமிழ் ஆதரவாளர்கள் உண்டு.அவர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிப்பவர்கள்.அவர்களை அரவணைக்க வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்க்கு தன்னுடைய சொந்த மகள் கனி மொழி மற்றும் சொந்த கட்சியின் அமைச்சர் ராஜாவையே சிறைக்கு சென்றதை காப்பாற்ற முடியவில்லை இதுக்குள்ள ஈழத்தமிழரை காப்பாற்ற போகின்றாரா? போங்கப்பா போய் வேலை இருந்தா பாருங்க....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.