Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளில் ஒரு சேலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளில் ஒரு சேலை          

%20b56.jpg

விமலி! என்ன பிள்ளை நீ செய்யுற வேலை? முதலிலே போய் அவரின்ரை காலிலே விழுந்து கும்பிடு மோனை. அப்பா இல்லாத இடத்திலே ஒரு தகப்பனுக்குத் தகப்பனாக இருந்து உன்னை வளர்த்து இப்படியொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தந்த மனுசன். ஓடி வந்து என்ரை காலிலே விழுகிறாய்! போ போ பிள்ளை. 

அம்மா இப்படித்தான் சொல்லுவாள் என்று விமலிக்குத் தெரியும். அப்படியிருந்தும் அம்மாவின் காலிலே தான் முதலில் விழுந்து கும்பிட்டாள். அவர் அவரென்று அம்மா சொல்வது அக்காளின் கணவனை. அவளின் அத்தானை. 

 

அத்தான்! அவர் அக்காளுக்கு மட்டும் அத்தானாக நடக்க நினைத்திருந்தால் வாய் குளிரக் கோடி முறை அத்தான் அத்தானென்று விமலி கூப்பிட்டிருப்பாள். அம்மாவுக்கு முன்பு அவரின் காலிலேதான் விமலி விழுந்து கும்பிட்டிருப்பாள். ஆனால் பெற்ற பிள்ளையாக நடத்தப்பட வேண்டிய தன்னை அதுவும் பெற்ற அப்பாவாக கூடப் பிறந்த அண்ணனாக எண்ணி நடந்த தனக்கும் அவர் அத்தானாக நடக்க முற்பட்டதை அவளால் இன்னமும் மறக்க முடியவில்லை. 

திருமணம் செய்து கொண்ட புனிதமான நாளில் போயும் போயும் இந்த நாயின் காலிலே விழுந்துதான் முதலில் கும்பிட வேண்டுமா? என்ற எண்ணத்தில் அம்மாவின் காலிலேயே விழுந்து விட்டாள். அதைக் கண்டு அம்மா சொன்ன வார்த்தைகள் தான் அவை. அம்மா பதறித்தான் இருப்பாள்.

சுற்றுப்புறமும் பிறத்தி மனிதர்கள். பக்கத்திலே கணவன். முன்னாலே தோழியான கணவனின் அக்கா. அண்ணன் பிள்ளைகள். கதவோரம் கண்கள் கலங்கத் தன்னையே பார்த்துக் கொண்டு நிற்கும் அபலையாக அக்கா விசாலி. அவளுக்காக அவளின் நல்ல குணத்துக்காக என்றாலும் இவனின் காலிலே விழத்தான் வேணும். 

கண்களை இறுக மூடிக் கொண்டு எவ்வளவோ காலத்திற்குப் பின்பு விமலி இன்றுதான் கிட்டப் போனாள். கடவுளே என்னைக் காப்பாற்று. கிடைச்சுது சான்ஸ் என்று இந்த மனுசன் என்னைத் தொட்டுத் தூக்கிப் போடுதோ தெரியாது. கடவுளே ஒரு பத்து நிமிசம் என்னைக் காப்பாற்று. நான் என்னுடைய அவரோடு ஓடிவிடுகிறேன். இனிமேல் அவரை விட்டுப் போட்டு இந்தப் பக்கம் தனிய வர மாட்டேன் சாமி. தேகம் குளிர்ந்து நடுங்கியது. 

அழகிய பட்டு வேட்டி, பொன் நிறத்திலே சட்டை, இடுப்பிலே வரிந்து கட்டிய சால்வை, நெற்றியிலே பெரிய சந்தனப்பொட்டு, மடியிலே குழந்தை என்று அமர்க்களமான கோலத்தில் இருந்து கொண்டு வீடியோ எடுத்தது சரியில்லை என்று யாருடனோ குறைப்பட்டுக் கத்திக் கொண்டிருந்த அத்தானின் முன்பு குனிந்தாள். முதுகுப் புறத்திலே எதையாவது பார்க்குதோ இந்த மனுசன். உடம்பு நெளிந்தது. 

என்னம்மா இதெல்லாம்? அம்மா காலிலே விழுந்தால் காணும். விசாலி! இங்கே வாருமப்பா. இவள் பிள்ளையைப் பாரும். விமலி! எழும்பம்மா. 

அக்காளின் கண்ணிலே பொல பொல என்று கண்ணீர். அவளின் கண்ணீர் நியாயமானது. அப்பழுக்கில்லாதது. தனது குடும்பத்தில் உள்ளவர்களை நல்லாக்கி விட வேண்டும் என்ற இலட்சியத்தை மற்றவர்களை இம்சிக்காமல் கடைப்பிடிக்கும் தாயுள்ளம் படைத்தவள் அக்கா. அவளுக்காக எத்தனையோ சாக்கடைத் துன்பங்களை இவ்வளவு காலமும் சகித்து விட்டுப் போகிறாள் விமலி. 

தன்னுடன் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் தெருவிலே தொல்லையென்று ஓடியோடி வீட்டுக்குச் செல்ல தான் மட்டும் வீட்டிலே தொல்லையென்று தெருவிலே நேரத்தைக் கடத்திய காலங்களை அவள் மனம் எண்ணிப் பார்க்கின்றது. ஒவ்வொரு இரவும் படுக்கும் போது அக்கா விடிய உனக்கு வேலையோ என்று கேட்டு ஏங்கிக் கொண்ட நாட்களை அவள் மனம் எண்ணிப் பார்க்கின்றது. அவள் கண்களிலும் கண்ணீர். தன்னைத் தூக்கி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழும் அக்காளின் பிடியைத் தளர்த்திக் கொண்டு நடந்தாள். நடக்க முடியவில்லை. சந்தோச நாளிலும் மனம் கனத்தது. 

அவள் மனதிலே அந்தப் பழைய நாட்கள். அவலத்தின் விளிம்பிலே அதுவும் ஆருக்கும் சொல்ல முடியாத அசிங்கத்தின் பிடியிலே தவிர்த்த நாட்கள் படமாக ஓடுகின்றன. 

விமலி! உன்னையும் அம்மாவையும் கூப்பிட முப்பதாயிரம் முடிஞ்சுது. இவருக்குத் தெரிஞ்ச பொடியன் ஒன்று பொன்சர் பண்ணித் தந்தபடியால் தான் உந்தளவிலே முடிஞ்சுது. இல்லாட்டில் இன்னும் கூட முடிஞ்சிருக்கும். 

மெய்யே பிள்ளை முப்பதாயிரம்  டொலர் யாழ்ப்பாணத்திலே கனக்கவோ மோனை? 

பத்து லட்சத்துக்கு மேலே அம்மா. 

மோனை நான் கேட்கிறன் என்று குறை நினையாதே. நீ உவ்வளவும் செய்ய உன்ரை அவர் ஒன்றும் சொல்லலையே? 

சீ! அவர் நல்லவரம்மா. அவர்தான் ஓடியாடி எல்லா அலுவலும் பார்த்தது. நீங்கள் பிளேன் ஏறி விட்டியள். அந்த இரவு முழுக்க அந்த மனுசன் விசாலி அதைச் சமை, இதைக் காச்சு என்று கொண்டு நின்றது. என்னை ஒரு கண் நித்திரை கொள்ள விடவில்லை என்றால் பாரன். 

அத்தான் பாவம் அக்கா.  

அந்த மனுசன் நல்ல குணமானது என்றபடியால் இவ்வளவு காசையும் கட்டி எங்களை இங்கே கூப்பிட்டது. இல்லாட்டில் அந்தச் செல்லடியிலே ஊர் ஊராக அலைஞ்சு அன்னந் தண்ணி இல்லாமல் செத்திருப்பம். எனக்கு இவள் விமலியாலே தானே மோனை ஒரு கண் நித்திரையில்லை. ஒரு நாள் இந்தியன் ஆமி ஊரோடை சுற்றி வளைச்சு சோதிக்கத் தொடங்கி விட்டான்கள். இரண்டு ஆமிக்காரர் வந்து இவளை அறைக்குள்ளே வா சோதிக்க வேணும்  என்று நிற்கிறான்கள். எல்லாரும் குளறிக் கூத்தாடித்தான் தப்பினது. இல்லாட்டில் அன்றைக்கே இது நாசமாய்ப் போயிருக்கும். நான ் வந்ததல்ல இதைக் கொண்டு வந்து சேர்த்தது தான் பெரிய நிம்மதி மோனை. 

அம்மா அக்காவுக்கு நிம்மதிப் பெருமூச்சுடன் அப்படிச் சொல்லும் போது விமலிக்கும் அது சரியாகவே பட்டது. ஆனால் எண்ணெய்க்குத் தப்பி அடுப்பில் வீழ்ந்த கதை போல இந்தியன் ஆமியை விடக் கேவலமான ஒரு அத்தானின் குகைக்குத் தான் வந்திருக்கிறேன் என்பதை உணர அவளுக்கு மூன்று மாதங்கள் பிடித்து விட்டன.   

அவள் உணர்ந்து கொள்ளத்தான் மூன்று மாதங்கள் எடுத்தனவே ஒழிய அந்த வலை விரிப்பு வேலைகள் தான் வந்தவுடனே ஆரம்பமாகிவிட்டன. என்று இப்பொழுது அவளுக்கு நன்றாகப் புரிகின்றது. 

தற்செயல் நிகழ்ச்சிகள் என்று அன்று ஒதுக்கி விட்ட எத்தனையோ விசயங்கள் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட நாடகங்கள் என்று இன்று புரிகின்றது. 

அன்று ஒரு சனிக்கிழமை. அக்காவுக்கு உடம்பு சரியில்லை. அக்காவின் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு அம்மா வீட்டில். வீட்டுக்கு சமையல் பொருட்கள் வாங்குவதற்காக அத்தானுடன் காரில் புறப்பட்டாள் விமலி. மெல்லிய குளிர். அத்தானிடம் கொண்டிருந்த கள்ளமற்ற அன்பு பின் சீட்டில் ஏற வேண்டும் என்ற உணர்வு தரவில்லை அன்று. இப்போது எல்லாம் பின் சீட்டில் ஏறுவது மட்டுமல்ல கண்ணாடியில் தன்னைப் பார்த்து விடாதபடி இருக்கவும். அவளுக்குத் தெரியும்.  

விமலி! எப்படி ஸ்கூல் எல்லாம் போகுது? 

பரவாயில்லை. நல்லாகப் படிக்கிறேன் அத்தான். ஆனால் இங்கிலீஸ் தான் கொஞ்சம் பிரச்சினை. இங்கே எல்லாரும் வேறு மாதிரி உச்சரித்துக் கதைக்கினம். 

இங்கே எல்லாமே வேறு மாதிரித்தான் விமலி. எங்களின்ரை சனங்களே எவ்வளவு முன்னேறி விட்டுதுகள். 

நீங்கள் சொல்லுவது உண்மைதான் அத்தான். என்னுடைய ஸ்கூலிலேயே அதுகள் போட்டுக் கொண்டு வாற ஜீன்ஸ்சும் அட்டகாசமும். பொம்பிளைப் பிள்ளைகள் இப்படியெல்லாம் இருக்கும் என்று நான் நினைச்சுக் கொண்டு வரவில்லை. 

கொஞ்ச நாள் போனால் நல்ல குளிர் வந்து விடும். நீரும் ஜீன்ஸ் போடத்தானே வேணும். 

சீ! போங்கோ அத்தான். நான் செத்தாலும் போட மாட்டேன். 

அப்படிச் சொல்லாதையும் விமலி! ஏன் சொல்லும் பார்ப்பம் என்று தொடங்கிக் கனடா காலநிலைகள் பற்றியும் உடுப்புக்கள் பற்றியும் அத்தான் சொன்ன புதிய பல செய்திகளை ஆவலோடு கேட்டாள் அவள். உம்முடைய உடம்பு இப்படி என்றபடியால் நீர் இப்படிப்பட்ட  உடுப்புப் போட்டால்தான் வடிவு என்று அத்தான் உள்ளாடைகளைப் பற்றிச் சொன்ன போது ஒருபுறம் வெட்கமாக இருந்தாலும் உடம்பெல்லாம் என்னவோ பரவுவது போல உணர்ந்தாள் விமலி. இதையெல்லாம் ஏன் கதைக்கிறார்? எதற்குப் பாதை போடுகிறார்? என்ற விளக்கம் அப்போது அவளுக்கு இல்லை. அவர்தானே வாங்கித் தர வேணும். அதனால்தான் கதைக்கிறார், கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டாள். கடை கண்ட இடமெல்லாம் கை நிறையப் பொருட்கள், சாப்பாடுகள். 

ஒரு கேள்வி அம்மாவும் அக்காவும் கூட வராத சமயத்தில் ஏன் இப்படிக் கதைக்கணும்? ஏன் இதையெல்லாம் செய்யணும்? என்ற  கேள்வி பிறக்க அப்போது அவள் இதயம் பெண்ணுக்கு சிந்தனை என்ற கணவன் கிடைக்கவில்லை. அதனால் சந்தேகக் குழந்தையும் பிறக்கவில்லை. 

தொடரும் கார்ப் பயணங்கள். அதிலும் திட்டமிட்ட தனிப் பயணங்கள். பக்கத்தில் வாங்கக் கூடிய பொருட்கள் எல்லாம் பல மைலுக்கு அப்பால். அப்பொழுது எல்லாம் எத்தனையோ காது கூசும் கதைகள். கேள்விகள். ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் அக்கா சரியில்லை. நீர்தான் நல்ல பிள்ளை என்ற முனைப்பு. 

அன்றும் விமலி அத்தானுடன் சென்று கொண்டிருந்தாள். இப்பொழுது எல்லாம் செல்ல விருப்பம் இல்லைத்தான். அக்காவின் சொல்லுக்காகக் கூடப் போனாள். 

விமலி ஒன்று சொல்லுறன் கோவிக்க மாட்டேன் என்று சொல்லும்? 

இல்லைச் சொல்லுங்கோ அத்தான். 

உம்முடைய வடிவையும் நல்ல குணத்தையும் பார்க்க அக்காவை கட்டாமல் உம்மைக் கட்டியிருக்கலாம் என்று இருக்குது. எவனுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கப் போவுதோ என்று பொறாமையாக இருக்குது விமலி. 

கட்டியிருக்கலாம் என்று படுகுதோ? கட்டலாம் என்று படுகுதோ? சும்மா விசர்க்கதை ஒன்றும் என்னோடை கதைக்க வேண்டாம் சொல்லிப் போட்டன். 

நீண்ட மௌனம். போய்த் திரும்பும்வரை அவள் கதைக்கவேயில்லை. தான் இவ்வளவு நாளும் கதைத்த கதைகள் எதுக்குமே உள்நோக்கம் இல்லை என்பது போல எத்தனையோ கதைகள். எதுக்கும் விமலி காது கொடுக்கவில்லை. அழுது கொண்டிருந்தாள். காது வெந்துவிடும் கதைகளை மட்டும் கேட்டுப் பழகிப் போன காரில் கோயில் கதைகள், பாசக் கதைகள். பழைய அசிங்கங்களுக்குப் பலகை போட்டு மறைக்கும் முயற்சி. கிட்டாதாயின் வெட்டென மற என்ற தத்துவ அரங்கேற்றம். விமலி தலை கவிழ்ந்து இருந்தாள். 

விமலிக்கு அழுகை மட்டுமல்ல, ஆத்திரமாகவும் இருந்தது. என்ன இப்படியும் சனங்கள் வெளி நாட்டிலே இருக்குதுகளோ? இருக்கும் இடங்கள் சிறியதாய்ப் போனதாலே இதயங்களும் சிறுத்து விட்டனவா? குளித்து விட்டு வரும் போது இடிபடும் சிறு ஓடைகள் காரணமா? இவன்களின் அளவுக்கு மீறிய ஆசைக்கு அலைவுக்கு என்னதான் காரணம்? 

தனது கோபத்தைக் காரின் கதவிலே காட்டிவிட்டு வீட்டுக்குள் நுளைந்தாள் அவள். 

என்னடி ஒரு மாதிரி வாறாய்? ஏன் சாமான் ஒன்றும் வாங்கலையோ? 

எனக்குத் தெரியாது அத்தானைப் போய்க் கேள். 

என்னப்பா? ஏன் இவள் சீறிக்கொண்டு போனாள். இது அக்கா. இப்ப உள்ள பிள்ளைகளுக்கு நல்லதுக்கு ஏதாவது சொன்னால் பிடிக்காதே. எவ்வளவு அழகான பதில். பாவி முழு விசயத்தையும் அக்காவுக்குச் சொன்னால் இதுதான் உன்னுடைய கடைசி உறவாக இருந்திருக்கும் போ. 

கண்டறியாத பள்ளிக் கூடத்துக்குப் போய்த்தான் சீர் கெட்ட பழக்கங்கள். மட்டுமரியாதை இல்லாத கதைகள். தன் பங்கிற்கு அம்மா கத்தினாள். அக்காவைப் போல அதுக்கும் வெள்ளை மனசு. அப்படித்தான் சத்தம் போடும். 

அறைக் கதவைப் பூட்டிவிட்டு படுக்கையில் இருந்தாள். எப்படியும் நாளைக்கு கதவுக்கு உட்பக்கம் கொக்கி போட வேணும். கைகள் நடுங்கின. இவ்வளவு காலமும் நடந்த நிகழ்ச்சிகள் சங்கிலித் தொடராக மனதில் ஓடின. 

ஒரு நாள் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தாள் அவள். திடீரென்று அறைக் கதவைத் திறந்து கொண்டு அக்காளின் கணவன். என்ன? என்னத்தான்?? அதிர்ந்து போய்க் கேட்டாள். அதற்குள் மார்பைப் பொத்திக் கொண்டு எத்தனையோ அதிரடி நடவடிக்கைகளைக் கைகள் எடுத்து விட்டன. நல்ல காலம் ஒரு நிமிடம் முந்தியிருந்தால்? நினைத்துப் பார்க்கவே வெட வெடத்தது உடம்பு. 

அடடே! நீர் நிற்கிறீரா? நீர் குளிர்க்கிறீர்  என்று நினைச்சேன். 'அயன் பொக்ஸ்' உங்கே இருக்கா? 

இல்லை இல்லை நான் எடுக்கவில்லை. 

எங்கன்ரை ரூமிலும் காணவில்லை. உரையாடல் நீண்டதே ஒழிய வெளியே போக வேண்டும் என்ற எண்ணத்தைத் துளியும் காணோம். 

அன்று இந்த நிகழ்ச்சி குற்றமாகத் தெரியவில்லை விமலிக்கு. சர்வ சாதாரணமாக ஒதுக்கி விட்ட அந்த நிகழ்ச்சிக்கு ஆயிரம் அர்த்தங்கள் பிறந்து அவளை இன்று ஆத்திரத்தில் துடிக்க வைத்ததி. அக்காவுக்குத் தெரியாமல் அத்தான் வாங்கித் தந்த  எத்தனையோ பொருட்கள். அக்கா கேட்ட போதெல்லாம் 'வெல்வெயர்' காசிலே  வாங்கியது என்று பொய் சொன்ன உடுப்புக்கள் எல்லாம் அவமானச் சின்னமாக அறை முழுவதும் பரவிக் கிடப்பது போன்ற ஒரு உணர்வு விமலிக்கு. 

அத்தான் அத்தான் என்று பாசத்தோடு நடந்த எனக்கு அந்த மனுசன் காட்டிய ஆதரவு போதும்.  அக்காவுக்கு சொன்னால் வீணாக அந்தக் குடும்பத்தில் பிரச்சினை. அம்மாவுக்கு சொல்லலாம் கடைசிக்காலம் அது தெய்வம் சாமி என்று எண்ணி சமைத்து சாப்பாடு எல்லாம் கொடுத்து ஏந்தி வைத்திருக்கும் இவனைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டு சாகும்? வெளியாலே யாருக்காவது சொன்னாலும் எங்கள் குடும்பத்துக்குதானே  தலைக்குனிவு. போகட்டும் எல்லாமே எனக்குள் புதைந்து போகட்டும். இந்த நய வஞ்சகங்கள் என்னோடு மறையட்டும். 

யார் செய்த பாவமோ தெரியாத் தனமாக அம்மா, அக்கா, நான் என்ற நூலால் நெய்யப்பட்ட எங்கள் குடும்பம் என்னும் சேலையை அத்தான் என்ற உறவோடு வந்த ஒரு முள் மரத்திலே போட்டு விட்டோம். இனி என்ன செய்வது? என்னுடைய அவசரத்துக்காக இழுத்தெடுத்தால் கிழிந்து தும்பு தும்பாகத்தானே போகும்? அக்கா என்ன பாவம் செய்தது?  கூப்பிட்டதுக்கு நன்றியாய் என்னுடைய குடும்பத்தை சீரழிச்சுப் போட்டாள் என்றுதானே நினைக்கும்? இனி என்ன அவசரப்படாமல் எங்கள் குடும்பம் என்னும் சேலையில் இருந்து என்னுடைய அளவையாவது விடுவிக்க வேண்டியதுதான். விமலி முடிவு செய்து கொண்டாள். 

அந்த விடுவிப்புப் போராட்டத்தில் தான் எத்தனை அடக்கு முறைகள். என்னப்பா உன்னுடைய தங்கச்சி கண்டபடி திரியுறாள் என்பதில் தொடங்கி ஒவ்வொரு அசைவிலும் குற்றம். நிராயுத பாணியாக நிற்கும் அவள் மீது எத்தனையோ வார்த்தை ஆயுதங்கள். அக்காவையும் , அம்மாவையும் எனக்கு எதிராகத் திருப்பி என்னைத் தனிமைப் படுத்தி பணிய வைக்கும் தந்திரங்கள். கண்ணீர், கவலை, சாப்பாடு இருந்தும்  சாப்பிட மனசு பிடிக்கா நாட்கள். உடம்பிலே தண்ணீர் ஊற்றும் ஒவ்வொரு கணமும் ஆயிரம் தடவைகள் கதவுப் பூட்டைப் பார்த்து நடுங்கும் அவலம். தனக்கு கிடைக்காத ஒன்று எப்படியோ சீரழிந்து போகட்டும் என்ற கீழ்த்தர உத்திகள். அந்த மனுசனாலே தான் நீ கனடா வந்து இப்படி நல்லாய் இருக்கிறாய் என்கிறதை மறந்து போகாதே என்ற அம்மாவின் செல்வீச்சுக்கள். போடி போ நீ இப்ப என்னுடைய தங்கச்சி விமலி இல்லை என்ற அக்காவின் ஏவுகணைகள். எல்லாத் தாக்குதலையும் பொறுமை என்னும் பங்கருக்குள் கிடந்து கடந்தாயிற்று. இனி அந்த முள்ளிலே விமலி சிக்க மாட்டாள். அந்த அதிகாரம் இனி அவளை எதுவும் செய்து விடாது. 

நல்ல காலம் எனக்கும் ஒரு தங்கச்சி இல்லை. இருந்தால் நாளைக்கு என்ரை மனுசனும் அவளுக்கு என்ன செய்யுமோ தெரியாது. கடவுளுக்கு உண்மையிலே நன்றி. 

சரி நேரமாவுது. அக்காவும் தங்கச்சியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றால் என்ன மாதிரி? வெளிக்கிடுவோம். மாப்பிள்ளை வீட்டாரின் அழைப்புக் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள் விமலி. 

அக்கா போட்டு வாறன். அத்தான் போட்டு வாறன். அம்மா போட்டு வாறன்.  

தலைகுனிந்து நடந்தாள் அவள். அவளின் வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்கள்.

 

http://www.sampanthan.com/shortstories/48-mulliloruselai.html

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நுணா!

 

இப்படியானவர்கள், வெறும் சபலங்களின் உந்துதல்களால் தான் இப்படி நடக்கிறார்கள் என்று எண்ணவில்லை!

 

இயலாமையில் இருக்கும் ஒரு பெண்ணை, அனுபவித்து விடுவதை, யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற எண்ணமே, காரணம் என நினைக்கின்றேன்!

 

வெறுமனே, திருமணங்களுக்குப் புனிதம் பூசுவதை விட்டுப் பெண்கள் துணிந்து வெளியே வரும்வரை, இப்படியான ஈனர்களின் செயல்களைத் தடுக்க முடியாது என்றே எண்ணுகின்றேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.