Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிடிப்போம், படிப்போம்: நியூட்ரினோக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 
 
பிடிப்போம், படிப்போம்: நியூட்ரினோக்கள்
 



 
மிழ்நாடு தேனி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடக் கட்டுமான செய்தி, கூடங்குளம் பரபரப்பினால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது. சமீபத்தில், ‘ஹிக்ஸ் போசான்’என்கிற கடவுள் துகள் கண்டுபிடித்தார்களே, சுவிட்சர்லாந்தில் CERN என்ற ஆய்வுக்கூடத்தில்? அதுபோன்றதொரு ஆய்வு மையம், நம் தமிழகத்தில், மதுரை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து பூமிக்கடியில் அமைக்கப்படவுள்ளது.

சுமார் 1350 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள இந்த ஆய்வகம், இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகுந்த பெருமை சேர்க்கும். அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியாவுக்கும் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தரும். ”இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்” (Indian Neutrino Observatory)  என்கிற இந்த ஆய்வகத்தின் பணிகளில், இந்தியாவிலுள்ள 25 ஆய்வு மையங்கள், அனைத்து ஐ.ஐ.டி.க்கள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் இணைந்து பணியாற்றப் போகுமளவு முக்கியத்துவம் வாய்ந்த, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆய்வகமாக இது அமையும்.

என்ன சிறப்பு இந்த நியூட்ரினோவில்?


யற்கையாகவே அண்டத்தில் காணப்படும் துகள்களே “நியூட்ரினோ” என்பவை. இவை சூரியக்கதிர்களிலும் காணப்படும்; தவிர நட்சத்திரங்களின் பிறப்பு-இறப்பு, விண்வெளியில் நடக்கும் சூப்பர்நோவா போன்ற நட்சத்திர வெடிப்புகள் போன்ற எல்லா அணுவெடிப்பு – அணுசேர்ப்பு (nuclear fission/ fusionநிகழ்வுகளிலும் நியூட்ரினோக்கள் உருவாகும். பூமியில் நடக்கும் அணு நிகழ்வுகளிலும் இவை உருவாகும். ஒரு நொடியில், பல கோடி நியூட்ரினோத் துகள்கள் பூமியை வந்தடைகின்றன. இவற்றைப் “பிடித்து” ஆராய்ச்சி செய்தால், பிரபஞ்ச உருவாக்கத்தைக் குறித்த பல ரகசியங்களையும் அறிந்துகொள்ளலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவை பிரபஞ்சம் உருவான காலந்தொட்டே இருக்கின்றன. அண்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டபொழுதிலும், நியூட்ரினோ துகள்களில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்பட்டதில்லை. நியூட்ரினோக்கள், எந்த ஆபத்தும் இல்லாதவை. எதையும் ஊடுறுவும் திறன் கொண்ட இவை, ஒளியின் வேகத்தில் செல்லும். ஒரு நொடியில், டிரில்லியன் கணக்கான நியூட்ரினோக்கள் நமது உடலையும் ஊடுருவிச் சென்று வருகின்றன. இவற்றிற்கு எடை கிடையாது; கதிர்வீச்சும் இல்லை; மின்னூட்டமும் (electric charge) கிடையாதென்பதால், பூமியின் மின்காந்த புலங்கள் உட்பட, எவற்றாலும் பாதிக்கப்படுவதில்லை. ஏன், மலைமுழுங்கி மகாதேவன்களாகிய ”கருந்துளைகள்”கூட (black holes), இவற்றை ஒன்றும் செய்வதில்லை!! ஆகையால் பூமியை வந்தடையும்போது எந்த மாற்றமும் இல்லாமல், தோன்றியது போலவே வந்தடையும். இப்படி ”என்றும் மார்க்கண்டேயனாக” இருக்கும் இந்தப் பண்பே, விஞ்ஞானிகளுக்கு இதனை ஆராயும் ஆவலைத் தூண்டுகிறது.

என்ன ஆய்வு மையம் அது?

லகில், கனடா,  ஜப்பான்,  அண்டார்டிக்காஸ்விட்சர்லாந்து போன்ற மிகச்சில இடங்களில் மட்டுமே நியூட்ரினோ ஆய்வகங்கள் உள்ளன. தற்போது நம் நாட்டில் ஒன்று புதிதாகக் கட்டப்படவுள்ளது. நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் நமக்கொன்றும் புதிதல்ல. 1965-லேயே, கோலார் தங்கவயலின் சுரங்கத்தில் விஞ்ஞானி பாபா தலைமையில் ஆய்வுகள் நடந்தன. பின்னர் அது மூடப்பட்டுவிட்டது. தற்போது கொல்கத்தாவில் ஒரு சைக்ளோட்ரான் ஆய்வகத்தில் இதன் ஆராய்ச்சியும்  மிகச்சிறிய அளவில் நடைபெற்று வருகிறது.


இப்போதைய புதிய ஆய்வுக்கூடம், தமிழ்நாடு-கேரளா எல்லைக்கருகில், தேனி மாவட்டத்தில், பொட்டிப்புரம் என்ற ஊரில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்குக்கீழ் அமைக்கப்படவுள்ளது. மலைப்பாங்கான இடம் என்பதே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம். அண்டக் கதிர்களில் (cosmic rays)  உள்ள நுண்ணிய நியூட்ரினோத் துகள்களை வடிகட்டிப் பிடிப்பதற்கு, அடர்த்தியான கற்களைக் கொண்ட மலைப்பிரதேசமாக இருத்தல் அவசியம். அதே சமயம், மழைப்பொழிவு இல்லாத இடமாகவும் இருக்க வேண்டும். பொட்டிப்புரத்தில் உள்ள பொட்டிதட்டி மலை என்கிற குன்று இதற்குத் தோதாக உள்ளதாக விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

நியூட்ரினோக்கள் அண்டத்தில் அதிகமதிகம் காணப்படுபவை என்றாலும், எதனோடும் வினைபுரியாத அவற்றைப் பிடிப்பதுதான் மிகவும் சிரமமான செயல். அதற்காகத்தான் சிறப்புக் கருவிகளோடான ஆய்வுக்கூடங்கள் அவசியமாகின்றன. பூமிக்கடியிலும் தடையின்றி ஊடுருவிச் செல்லக்கூடிய நியூட்ரினோக்களை, 1 கி.மீ.க்கும் கூடுதலான ஆழத்தில் பிடிப்பது சற்றே இலகு என்பதாலேயே, இதற்கான ஆய்வுக்கூடங்கள் பெரும்பாலும் நிலத்தடியில் அமைக்கப்படுகின்றன.


Schematic view of the detector at INO தேனியில் அமையப்படவுள்ள ஆய்வுமையமும், மலையைக் குடைந்து, சுமார் 2 கி.மீ. ஆழத்தில்தான் கட்டப்படவுள்ளது.ஆய்வகத்தை முக்கிய சாலையுடன் இணைப்பதற்கு, 2 கி.மீ. நீள சுரங்கப்பாதையும் அமைக்கப்படும். ஆய்வகத்தில் 50,000 டன் எடைகொண்ட காந்தம் பயன்படுத்தப்படும். ஸ்விட்சர்லாந்தில் உள்ள CERN ஆராய்ச்சிக்கூடத்தில் இருப்பதைவிட இது நான்கு மடங்கு பெரிது!! மட்டுமல்ல, உலகிலேயே பெரிய காந்தமும் இதுவே.
நியூட்ரினோ துகளைப் பிடித்தும் ஆராய்ச்சி செய்வது மட்டுமல்லாமல், பிற்காலத்தில் உலகிலுள்ள மற்ற ஆய்வுக்கூடங்களுடன் நியூட்ரினோ கற்றைகளை நிலத்தடிவழியே பரிமாற்றம் செய்து கொள்ளும் திட்டமும் உள்ளது.

சரி, இந்த ஆய்வுகளால் என்ன பயன்?

* முன்பே சொன்னதுபோல, பூமி பிறந்த காலம்தொட்டு மாற்றமேதுமின்றி, ‘அழியாமை’ கொண்ட நியூட்ரினோக்களை ஆராய்ந்தால் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த உண்மைகளை அறியலாம்.

*சூரியனிலிருந்து தோன்றும் நியூட்ரினோக்களை ஆய்வதன்மூலம், சூரியனின் மையம் (core) குறித்த தன்மைகளை அறியலாம்.

* சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் குறித்தும் முன்னறிவிப்புப் பெற இயலுமா என்ற முயற்சியும் இருக்கும்.

* மிக முக்கியமாக, நியூட்ரினோக்களை கதிர்வீச்சு உள்பட எதுவும் பாதிக்காது என்பதால், கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிகள் கிடைக்கலாம்.

* ஆய்வுமையத்தால் தமிழ்நாடு – தேனி உலக அளவில் விஞ்ஞான முக்கியத்துவம் பெறும். வேலைவாய்ப்பு பெருகும். உலக அரங்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு சிறப்பு.

யன்கள் என்ன என்று கேட்கும்போதே, அப்போ தீமைகளும் உண்டோ என்ற சந்தேகம் எழுகிறதல்லவா?

முன்பே கூறியதுபோல, நியூட்ரினோக்கள் எந்த ஆபத்துமில்லாதவை. நேரிடையாக நியூட்ரினோக்களால் அசாதாரணங்கள் எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்றபோதும், பரிசோதனைக் கூடங்களாலும், முறைகளாலும் சுற்றுப்புறத்திற்கு மறைமுகமாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஆய்வுக்கூடக் கட்டுமானப் பணியின்போதுதான் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆய்வுக்கூட பணிகள் ஆரம்பித்த பின்னர், கதிர்வீச்சு போன்ற ஆபத்துகள் இல்லை என்ற போதும், பலத்த அதிர்வுகள், அதிகத் தண்ணீர் பயன்பாடு, மின்சாரப் பயன்பாடு, தொடர் வாகனப் போக்குரத்து போன்றவற்றால் சூழல் பாதிக்கப்படக்கூடும்.  
 
1.  மலையுச்சியிலிருந்து சுமார் 2 கி.மீ. ஆழத்தில் அமையவிருக்கும் ஆய்வகத்திற்குச் சென்றுவர சுரங்கப்பாதையும் அமைக்கப்படும். இந்தப் பணிகளுக்காக, மலையைக் குடைந்து சுமார் இரண்டேகால் லட்சம் கனமீட்டர் கல் வெட்டி எடுக்கப்படும்போது, காற்றில் தூசி பரவும். இதைத் தடுக்க, சரியான தடுப்பு பணிகள் செய்யப்படாவிட்டால் தூசு மண்டலம் சூழ வாய்ப்புள்ளது.

 
வெட்டி எடுக்கப்பட்ட கற்களும் அவ்விடத்திலேயே சிறிதுகாலம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என்பதும், அது காற்று அதிகம் வீசும் இடம் என்பதும், தூசு பரவுவதை அதிகரிக்கச் செய்யும்.  சிறிய அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படும் குவாரிகளினால் ஏற்படும் தூசி பாதிப்பே சுற்றுப்புற மக்களைப் பெருமளவு பாதிக்கிறது. பெரிய மலையை வெட்டி எடுக்கும்போது வரும் பெரிய பாதிப்புகளைக் குறைக்க – முழுமையாகத் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

 2.  இந்த இடத்திலிருந்து சுமார் 40கி.மீ. தொலைவில் இடுக்கி அணையும், 100 கி.மீ. தொலைவில் முல்லைப் பெரியாறு அணையும் இருக்கின்றன. மலையைக் குடையும்போதும், சுரங்கப்பாதைகள் அமைக்கும்போதும் ஏற்படும் அதிர்வுகள் அவற்றைப் பாதிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இதைச் சுட்டிக்காட்டி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
3.  ஆய்வகம் அமையவிருப்பது மரங்கள் நிறைந்த ஒரு மலைப்பிரதேசம். கட்டுமான பணிகளுக்காகவும், சாலைகள் அமைப்பதற்காகவும், இங்கிருக்கும் மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டும். பசுமை அழியும். இதன் பின்விளைவுகளாய், ஏற்கனவே குறைந்த அளவே மழைப்பொழிவு கொண்ட தேனியில்  மேலும் மழை குறையும். வறட்சி ஏற்படும்.
 
4.  மரங்கள் வெட்டப்பட்டு, வாகனப் போக்குரத்தும், மனித நடமாட்டமும் அதிகரிக்கும்போது, இங்கு வாழும் பிராணிகள் தம் இருப்பிடத்தை இழக்க நேரிடும். தொடர்ச்சியாக அவற்றின் எண்ணிக்கை குறையும்; உயிர்ச்சூழலியல் பாதிக்கப்படும்.
 
5.  கட்டடப் பணிகளுக்கும், பின்னர் ஆய்வகப் பயன்பாட்டிற்கும், ஐம்பதாயிரம் டன் எடையுள்ள காந்தத்தைக் குளிர்விக்கவும், அதிகளவு தண்ணீர் தேவைப்படும். இந்த நீர் வெளியிலிருந்து டேங்கர்கள் மூலம் கொண்டுவரப்படும் என்று சொல்லப்பட்டாலும், அது எவ்வளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. அங்கிருந்தே நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், 
மரங்களும் வெட்டப்பட்ட சூழ்நிலையில் வறட்சி பெருகும்.
 
6.  மின்சாரத் தேவையும் அதிகளவில் இருக்கும். மின்சாரத் தட்டுப்பாட்டில் தவிக்கும் தமிழகத்தில், வழக்கம்போல மக்களை இருளில் மூழ்க விட்டு, பன்னாட்டு ஆலைகளும் ஆய்வகங்களும் மட்டும் ஒளிமயமாக இருக்கும்.
 
7.  வாகனப் போக்குவரத்துகள் அதிகரிப்பதனால் ஏற்படும் மாசு, இயற்கைப் பிரதேசத்தைப் பாதிக்கும். வனச்சூழல் அழிந்து, நகரமயமாக்குதல் நடக்கும். ஏற்கனவே காடுகளைப் பெருமளவு இழந்துவருகிறோம்.
 
8. கட்டுமானப் பணியின்போதும், ஆய்வகப் பணிகளின்போதும் ஒலி மாசும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.
 
9. கழிவு மேலாண்மை – ஆய்வகக் கழிவுகள், சுற்றுப்புறத்திற்குப் பாதிப்பின்றி உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டியதும் அதிஅவசியம். நீர்மப்பொருட்கள், பேட்டரிகள், வேதிப்பொருட்கள், வேதிவாயுக்கள் எனப் பல்வேறு விதமான கழிவுகளோடு, மிகச் சிறிய அளவில் கதிர்வீச்சுக் கழிவுகளும் வெளியேற்றப்பட வாய்ப்புண்டு என்று CERN சுற்றுச்சூழல் வலைத்தளம் தெரிவிக்கிறது. இத்தாலியில் உள்ள க்ரான் ஸாஸ்ஸோ என்கிற நியூட்ரினோ ஆய்வகத்திலிருந்து ஒருமுறை தவறுதலாக pseudocumene என்கிற ஒரு வேதிப்பொருள் வெளியேறிய காரணத்தால், ஆய்வகம் சிலகாலம் மூடப்பட்டது.

றிவியலும் வாழ்க்கையும் பிரிக்க முடியாதவை. அறிவியலே இவ்வுலக வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. அறிவியல்சார் ஆராய்ச்சிகள்தான்,  இன்றைய பல நவீன முன்னேற்றங்களுக்கும் காரணம் என்பதை மறுக்கமுடியாது. எனினும், ஆராய்ய்சிகளால் தடுக்கவியலாப் பக்க விளைவுகள் உண்டு என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும்போது, ஆராய்ச்சிகளின் முடிவுகள் மட்டும் மக்களின் நலனுக்காக என்றில்லாமல், ஆராய்ச்சிகளின்போது வரும் விரும்பத்தகாத விளைவுகளையும் தடுத்து, மக்களைப் பாதுகாப்பதுதான் முழுமுதல் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதுவும் இந்தியா போன்ற நாடுகளில், மக்கள் நலன் என்பது இரண்டாம்பட்சமாகவே உள்ளது. மக்கள் நலன் முன்னிலைப்படுத்தப்படும் சூழ்நிலையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாக இருக்க வேண்டியதுபோய், தம் குறைந்தபட்ச அடிப்படை உரிமைகளுக்காகவும்கூட மக்களே போராட வேண்டிய சூழல் உள்ள நம் இந்தியத் திருநாட்டில், தொடங்கவிருக்கும் நியூட்ரினோ ஆராய்ச்சிப் பணிகளிலும் நம் நலனை நாமே உறுதிசெய்துகொள்வோம்.

வெளிநாடுகளில் இதுபோன்ற ஆய்வகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றிலெல்லாம் சூழல் பாதிப்பு வரவா செய்கிறது என்று கேள்வி எழலாம். அங்கிருப்பதுபோல மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் அரசுவிதிகளும், கடுமையான தரக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு முறைகளும் இங்கு இல்லை என்பதுதான் பிரச்னையே. மேலும், “வெளிப்படைத்தன்மை” (transparency) என்பது துளியளவும் இங்கு இல்லை என்பது நாம் அறிவோம்.

சுவிட்சர்லாந்தின் CERN ஆய்வகத்தில் ஏற்படக்கூடிய மாசுகளைக் குறித்து தனி தளமே வைத்து விளக்கமளிக்கிறார்கள். இது போன்றதொரு வெளிப்படைத்தன்மையை இங்கு நாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்த ஆய்வகத்திற்காக, டார்ஜிலிங், நீலகிரி பகுதிகளை முதலில் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நீலகிரியில் யானை உட்பட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படக்கூடும் என்கிற அபாயத்தால், கடும் எதிர்ப்புகள் எழுந்தமையால் அதைக் கைவிட்டு, இறுதியில் தேனிப் பகுதியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஆய்வகக் கட்டுமானப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. திட்டப்படி, இந்த வருடமே ஒன்றிரண்டு மாதங்களில் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. கூடங்குளம் அணுநிலையத்தைப் போல, தலைக்குமேல் வெள்ளம்போய், நிலைமை கைமீறியபின் போராடாமல், வருமுன் காக்க இப்போதே விழித்துக் கொள்வோம்.


 


மேல்விபரங்களுக்கு:
http://www.facebook.com/ino.neutrino
http://uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2412
http://siragu.com/?p=1733
http://www.sinthikkavum.net/2012/01/blog-post_19.html
http://www.poovulagu.net/2012/02/blog-post_21.html
http://www.ino.tifr.res.in/ino/faq.php
http://en.wikipedia.org/wiki/India-based_Neutrino_Observatory
http://www.newscientist.com/article/dn19620-indian-neutrino-lab-to-boast-worlds-biggest-magnet.html
http://www.imsc.res.in/~ino/OpenReports/minirep.pdf
http://www.thehindu.com/opinion/lead/a-controversy-we-can-do-without/article3975090.ece


பண்புடன்” இணைய இதழில் April 4, 2013 அன்று வெளிவந்த கட்டுரை.

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்ந்தமைக்கு நன்றி நுணா. நன்மையிலும் தீமைதான் அதிகம்போல் இருக்கே.???

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்ந்தமைக்கு நன்றி நுணா. நன்மையிலும் தீமைதான் அதிகம்போல் இருக்கே.???

 

நன்மையிருந்தால், அது தேனீக்கு ஏன் வருகுது? :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.