Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ZeroG: எடையற்ற நிலையை உணர பூமியில் இருந்து எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விண்வெளி நிலையம் [international Space Station- ISS] 

 
 
flickr-405288960-hd.jpg
 iss.jpg

 

சர்வதேச விண்வெளி நிலையம் ISS: எடையற்ற நிலையில் உயிரினங்கள் எவ்வாறு படிவளர்ச்சியுறுகின்றன [Evolve], நிலவுக்கும், செவ்வாய் போன்ற தூர கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் போது நீண்ட காலம் எடையற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டியிருப்பதால், அது என்னவித மாற்றங்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது உள்ளிட்ட பல ஆராய்ச்சிகளை  மேற்கொள்ள அமரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்ப்பட்ட நாடுகளின் பன்னாட்டு கூட்டு முயற்சியால் 1998 ஆம் ஆண்டு  பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் நிறுவப் பட்டதே ISS ஆகும்இதன் எடை 450 டன், பரிமாணம் [size]: 108 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம் [கால்பந்து மைதானம் அளவிற்குப் பெரியது], 10 மீட்டர் உயரமுள்ளது.  மணிக்கு 27,700 கி.மீ. வேகத்தில் ஒரு நாளைக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது.  இதில் 6 பேர் வரை சுழற்ச்சி முறையில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும்.  இதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள், மாற்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி வீரர்களுக்கான உணவு, நீர் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் கருவிகள் முதலானவற்றை அமெரிக்காவின் ஷட்டில், ரஷ்யாவின் சோயூஸ் உள்ளிட்ட பல விண்கலங்கள் சுமந்து செல்கின்றன.  இதை இரவில் வெறும் கண்ணாலேயே வானில் ஊர்ந்துசெல்லும் பிரகாசமான வெண்புள்ளியாகப்  பார்க்கமுடியும். ISS 2028 வரை செயல்படக்கூடும்.

 

iss031e084674.jpg ISS உள்ளே விண்வெளி வீரர்கள்:எங்களுக்கு தரை, கூரை சுற்றுச் சுவர் என்று எந்த பேதமும் கிடையாதுங்கோவ்..........!!

 

தொலைக்காட்சிகளில்  சர்வதேச விண்வெளி நிலையத்தைக் காட்டும்போது ஒரு விஷயத்தை நாம் கவனித்திருப்போம்.  அங்குள்ள விண்வெளிவீரர்கள் எடையற்ற நிலையில் மிதந்து கொண்டு தங்கள் பணிகளை மேற்கொள்வது, காற்றில் நீச்சலடித்து இடம் பெயர்வது, அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள், உணவுகள் அத்தனையும் காற்றில் மிதப்பது, காற்றில் ஊற்றப் பட்ட நீர் அவர்கள் அதைக் கவ்வி விழுங்கும் வரை முழு கோள வடிவில்  [spherical shape] மிதந்து கொண்டே இருப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.  இதெல்லாம் பார்த்து நம்மில் பலர் ஒரு முடிவுக்கு வந்திருப்போம் அது வானவெளியில் ISS இருக்கும் உயரத்தில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்யாது!!  அது உண்மையா?

 

 

ISS பூமியில் இருந்து, 400 கிமீ உயரத்தில் இயங்குகிறது, ஆனால் பூமியில் இருந்து நிலவு உள்ளதோ 384,400 கிமீ தூரத்தில்.  நிலவு பூமியின் ஈர்ப்பு விசையால்தான் அதைச் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.  அப்படியானால், நான்கு லட்சம் கிமீ தூரத்தில் உள்ள சந்திரன் மீது பூவி ஈர்ப்பு விசை செயல்படுகிறதென்றால், வெறும் 400 கிமீ தொலைவில் உள்ள ISS மற்றும் அதில் உள்ள விண்வெளி வீரர்கள் மீது புவிஈர்ப்பு விசை இல்லாமல் போகுமா? நிச்சயம் இருக்கவே செய்யும்!!  இத்தோடு விஷயம் முடியவில்லை.  15 கோடி கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று நாம் ஆரம்பப் பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம்.  நியூட்டனின் மூன்றாம் விதிப்படி எந்த ஒரு விசைக்கும் எதிர் விசை உண்டு.  அதாவது, ஆப்பிளை பூமி ஈர்க்கிறதென்றாலே, அதே விசையோடு ஆப்பிளும் பூமியை ஈர்க்கிறதென்று அர்த்தம்.  பூமி சைஸ் ரொம்ப பெரிதாக இருப்பதால் ஆப்பிள் நகர்வது மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது.  அதைப் போலவே, சூரியன் பூமியை ஈர்க்கிறதென்றால் பூமியும் சூரியனை அதே விசையோடு ஈர்க்கிறதென்று அர்த்தம்.  அப்படின்னா 15 கோடி கிமீ தொலைவிலும் புவிஈர்ப்பு விசை இருக்கவே செய்கிறது!!  ஆனால் வெறும் 400 கிமீ தொலைவிலுள்ள ISS  -ல் அது இருப்பது போலத் தெரியவில்லையே!! என்ன ஆச்சு??!!
 

 

பூமியின் ஆரம்  [Radius ]  6371 கி.மீ ஆகும், ISS புவியின் மையத்தில் இருந்து 6371+400 கி.மீ தொலைவில் உள்ளது. நியூட்டனின் பொருளீர்ப்பு விசை சமன்பாட்டின் படி [universal Law of Gravitation]  புவி ஈர்ப்பு முடுக்கம் g- யின் மதிப்பை தொலைவைப் பொறுத்து கணக்கிடலாம்.

 

NEWTONS+lAW+OF+GRAVITATION.png இரு நிறைகளுக்கிடையே உள்ள பொருளீர்ப்பு விசையை [Gravitational Force] காட்டும் நியூட்டன் விதி.  M பூமியின் நிறை, m பொருளின் நிறை, r புவியின் மையத்தில் இருந்து பொருளின் தூரம், G மாறிலி.  இவ்விதி எந்த இரண்டு பொருளுக்கும் பொருந்தும், நிறைகள், தொலைவு ஆகியவற்றை உள்ளீடு செய்து அவற்றுக்கிடையே உள்ள பொருளீர்ப்பு விசையைக் கணக்கிடலாம்.
அவ்வாறு கணக்கிட்டுப் பார்க்கும்போது, g யின் மதிப்பில் புவியின் மேற்பரப்பிற்கும்  ISS -க்கும் இடையே வேறுபாடு அதிகம் இல்லை, வெறும் 10% மட்டுமே குறைவாக உள்ளது.  அதாவது பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒருவர் ISS -ல் 63 கிலோ எடையுடன் இருப்பார். மேலும் இந்தச் சமன்பாட்டின் படி தூரத்தைப் பொறுத்து [r] புவி ஈர்ப்பு விசை குறைந்துகொண்டே போகிறதே தவிர ஒரு போதும் பூஜ்ஜியம் ஆவது இல்லை. அப்படின்னா, டிவியில் அவங்க எடையே இல்லாமல் காற்றில் மிதப்பது மாதிரி காண்பிக்கிறாங்களே அது நிஜம் தானா?  சந்தேகமே வேண்டாம் நிஜம் தான்!!   எப்படி?!!

 

sunita-williams.jpg இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் [ஏதோ ரிப்பேர் செய்யுறாங்க போலிருக்கு!!]

 

தடையற்ற வீழ்ச்சி [Free fall]  

 

எடையற்ற தன்மையை உணர்வதற்கு நீங்கள் எங்கும் போகத் தேவையில்லை, ஒரு உயரமான அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மேலே லிப்டில் சென்று லிப்டின் கையிற்றை அறுத்துவிட்டால் போதும், கீழே பூமியைத் தொடும் வரை நீங்கள் எடையற்றத் தன்மையில் இருப்பீர்கள். [தயவு பண்ணி யாரும் இதை முயற்சி பண்ணிடாதீங்க!!].  இதை கலிலியோ முதலில் கண்டுபிடித்துச் சொன்னார்.  அதாவது, எந்த எடையுள்ள பொருளானாலும் சரி, உயரத்தில் இருந்து விடும்போது காற்றின் தடை இல்லாவிட்டால், ஒரே சமயத்தில் பூமியை வந்தடையும்.  [வேக அதிகரிப்பு இருக்கும், அந்த மற்றம் எல்லாப் பொருளுக்கும் சமமாக இருப்பதால் ஒரே நேரத்தில் தரையைத் தொடும்].  அதனால லிப்டின் கயிறை அறுத்து விட்டால்,  கையில் உள்ள பொருளை விட்டு விட்டாலும், லிப்ட் தரையில் மோதும் வரை அப்படியே மிதக்கும்.  நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் எடையற்ற தன்மையை இவ்விதம் உணரும்.  இந்த நிலை தடையற்ற வீழ்ச்சி [Free fall] எனப்படும்.

 

 
 
lift.png ஒரு எடைபார்க்கும் மெஷீன் மேல் ஏறி நின்றுகொண்டு லிப்டில் நீங்கள் சென்றால், லிப்ட் நின்று கொண்டிருந்தாலோ, லிப்டின் வேகம் சீராக இருந்தாலோ உங்கள் சரியான எடையை அது காண்பிக்கும். லிப்ட் மேலே புறப்படும்போது தங்கள் எடை கூடுதலாகவும், மேலிருந்து கீழே இறங்கும் போது சற்று குறைவாகவும் காண்பிக்கும். [லிப்டின் வேகம் சீரான பின்னர் மீண்டும் சரியான எடையைக் காண்பிக்கும்].  லிப்டின் வடத்தை அறுத்துவிட்டால், அது கீழே விழுந்து நொறுங்கும் வரை உங்கள் எடை மெஷீன் உங்கள் எடையை பூஜ்ஜியம் என்று காண்பிக்கும்!! இதுதான் எடையற்ற நிலை!!  ISS -ல் இதுதான் நடக்கிறது!!
 
நீச்சல்  குளத்தில் உள்ள டைவிங் போர்டில் இருந்து குதித்தால் தண்ணீரைத் தொடும் வரை நீங்கள் எடையற்ற நிலையில் தான் உள்ளீர்கள்.  [வேணுமின்னா அடுத்த முறை எடை பார்க்கும் மெஷீனை காலில் கட்டிக்கிட்டு குதிச்சுப் பாருங்க, தண்ணீரைத் தொடும்வரை அது பூஜ்ஜியத்தையே காண்பிக்கும்!!]  எந்த ஒரு பொருளையும் வீசியெறியும்போது, எந்த திசையில் என்ன வேகத்தில் எரிந்தாலும், கையில் இருந்து விலகிய பின்னர் தரையைத் தொடும் வரை எடையற்ற நிலையில் தான் உள்ளது. மேற்கண்ட அத்தனையும் தடையற்ற வீழ்ச்சி [Free fall] என்று சொல்கிறோம். 
 
நம் மீது எப்போதும் புவிஈர்ப்பு விசை செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது, விசை செயல்பட்டாலும் நாம் எங்கும் நகர்வதில்லை, என்ன காரணம்?  நாம் எதன் மீது நிற்கிறோமோ அல்லது அமர்ந்திருக்கிறோமோ அது நம் உடலின் மீது சப்போர்ட் செய்து நம்மை தடுக்கிறது.  உதாரணத்திற்கு, எடை பார்க்கும் எந்திரத்தின் மீது நிற்கும் போது, புவிஈர்ப்பு விசை நம்மை கீழ் நோக்கி இழுக்கிறது அதை எந்திரத்தின் பலகை தடுக்கிறது, ஆகையால் அதன் ஸ்ப்ரிங் அழுத்தப் பட்டு எடையாகத் தெரிகிறது.  நாற்காலியில் உட்கார்ந்திருக்கும்போது நமது ஆசனப் பகுதியில் பலகையின் அழுத்தத்தை நாம் உணர்கிறோம்.  இவ்வாறு புவிஈர்ப்பு விசைக்கு எதிர்விசை நம் மீது எப்போதும் செயல்படுவதால் நம் மீது செயல்படும் நிகர விசை பூஜ்ஜியமாகி நாம் ஒரு இடத்தில் நிலையாக இருக்கிறோம்.  எதிர் விசையை இல்லாமல் வெறும் புவி ஈர்ப்பு விசை மட்டும் செயல்படும் நிலை ஏற்பட்டால் அதற்குப் பெயர் Free fall, அந்த நிலையில் நாம் எடையற்ற தன்மையை உணர்வோம். 
           

இந்த முறையில் ஏற்ப்படும் எடையற்ற தன்மையும் உண்மையிலேயே எந்த ஈர்ப்பு விசையும் இல்லாத ஒரு இடத்திற்குச் சென்று அங்கே ஒரு விண்வெளி மையத்தை அமைத்தால் அங்கு உணரப்படும் எடையற்ற தன்மையும் ஒரே மாதிரிதான் இருக்கும், அதனுள் இருப்பவர்களால் இந்த இரண்டு சூழ் நிலைகளில் எதில் இருக்கிறார்கள் என்று வித்தியாசம் காணவே முடியாது, இரண்டும் ஒரே மாதிரியே தான் இருக்கும்!!   [சிறு வேறுபாடு உண்டு, இப்போது நாம் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்!!]

 

ISS -ல் எடையற்ற நிலை எப்படி ஏற்படுகிறது?

 

உயரமான இடத்தில இருந்து விட்டுட்டாலே போதும் நாம் எடையற்ற தன்மையை உணர ஆரம்பித்து விடுவோம் என்று மேலே பார்த்தோம்.  கையில் உள்ள பொருளை எப்படி வீசினாலும் அது நிலத்தை அடையும் வரை எடையற்ற நிலையில் தான் இருக்கும் என்றும் பார்த்தோம்.  ISS  நானூறு கிமீ. உயரத்திற்கு கொண்டு செல்லப் பட்டு, கிடை மட்டமாக [Horizontal direction ] மணிக்கு 27,700 கிமீ வேகத்தில் வீசி எரியப் படுகிறது.  அது பூமியை அடையும் வரை எடையற்ற நிலையில் இருக்கும், அதில் உள்ளவர்களுக்கும் எடையற்றே இருப்பார்கள்.  விண்வெளி மையத்தை அப்படியே விட்டு விட்டால், அது பூமியை நோக்கி விழும், அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறைந்து கொண்டே வரும், அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தால் உயிர் தப்புமா? எனவே, அது பூமியை நோக்கி விழுந்தாலும் அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  விழனும் ஆனா விழக்கூடாது!! இதென்னடா கொடுமையா இருக்கு!! அது  எப்படி சாத்தியம்?   

earth+curvature.png பூமி கோள வடிவில் இருப்பதால் அதன் மேற்ப்பரப்பு சமதளமாக இருக்காது, ஒவ்வொரு எட்டு கி.மீ தொலைவு செல்லும்போதும் நேர்கோட்டில் இருந்து 5 மீட்டர் விலகி இருக்கும்.   உயரத்தில் இருந்து எந்த ஒரு பொருளை விட்டாலும் முதல் வினாடியில் 5 மீ கீழே இறங்கியிருக்கும்.  இவை இரண்டையும் சேர்த்துப்  பார்த்தால்  ஒரு விஷயம் புலனாகிறது!!  அது, ஒரு பொருளை பக்க வட்டில் வினாடிக்கு எட்டு கிமீ வேகத்தில் எறிந்தால் அது ஒருபோதும் தரையைத் தொடாது!!    

 

newton+freefall.png ஒரு உயரமான மலை உச்சியின் மேல் சென்று ஒரு பொருளை எறிந்தால் அது குறிப்பிட்ட தூரம் போய் விழும்.  வேகமாக எறிந்தால் முன்பை விட இன்னமும் கொஞ்சம் தூரம் தள்ளிப் போய் விழும்.  அப்படியே எறியும் வேகத்தை அதிகரித்துக் கொண்டே போனால், ஒரு கட்டத்தில் அது பூமியையே சுற்றிக் கொண்டு நீங்கள் எறிந்த இடத்துக்கே வரும்.  இந்த நிலை ஏற்ப்பட்ட பின்னர் அது தொடர்ந்து பூமியைச் சுற்றிக் கொண்டே இருக்கும், ஒருபோதும் தரையைத் தொடாது.   இது நியூட்டனின் சிந்தனயில் உருவான ஒரு யோசனை!!  ஆனால் இது எப்படி சாத்தியப் படும் என்பதை அப்போது ஒருவரும் அறிந்திருக்க வில்லை. ஏனெனில், அவ்வளவு விசைக்கு எங்கே போவது என்பது ஒருபுறமிருந்தாலும், பூமியின் மேற்ப்பரப்பில் இவ்வளவு வேகத்தில் எறிந்தால் அது காற்றின் உராய்வால் ஏற்ப்படும் வெப்பத்தாலேயே எரிந்து சாம்பலாகிவிடும். தற்போது செயற்கைக் கோள்கள் ISS ஆகியவற்றை பூமியில் இருந்து பலநூறு கிலோ மீட்டர்கள் மேல் காற்று மிகக் குறைவாக உள்ள உயரத்திற்கு கொண்டு சென்று வினாடிக்கு எட்டு கி.மீ வேகத்தில் கிடை மட்டத்தில் எறியப் படுகிறது, அவை நியூட்டன் சொன்னபடியே பூமியைச் சுற்றி வருகின்றன!! நியூட்டன் மறைந்து முன்னூறு வருடங்கள் ஆன பின்னர்  அவருடைய இந்த விளக்கத்தை வைத்தே இன்றளவும் ஒவ்வொரு விண்கலமும் விண்ணில் செலுத்தப் படுகிறது!!  எப்பேர்பட்ட சிந்தனையாளர் அவர்!!      

 
   

புவியின் மேற்பரப்பில் நாம் [g=9.8 மீ/வி^2] எந்த ஒரு பொருளையும் கையில் இருந்து விட்டுவிட்டால் முதல் வினாடியில் 5 மீ தொலைவு கீழே விழுந்திருக்கும்.  பூமி கோள வடிவில் இருப்பதால், தூரம் செல்லச் செல்ல படத்தில் உள்ளவாறு நேர்கோட்டில் இருந்து விலகும்.  நேர்கோட்டில் இருந்து இதே 5 மீ விலக எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கணக்கிட்டு விண்வெளி மையத்தை பூமியின் மேற்ப்பரப்புக்கு இணையாக [Horizontal direction]  ஒரு வினாடியில் அதே தூரம் செல்லுமாறு செய்து விட்டால்,  ஒரு வினாடியில் ISS கீழே விழுந்த தூரத்துக்கும், பூமி நேர்கோட்டில் இருந்து விலகிய தூரத்துக்கும் சரியாய்ப் போய்விடும். தற்போது ISS -க்கும் பூமிக்கும் உள்ள தொலைவு மாறாது!!  பூமியின் மேற்ப்பரப்பு 5 மீட்டர்  விலகுவதற்கு எட்டு கி.மீ தூரம் ஆகிறது.  எனவே Horizontal direction -ல் வினாடிக்கு எட்டு கி.மீ வேகத்தில்  ISS நகர்ந்தால் போதும், ஒரு வினாடியில் அது பூமியை நோக்கி விழும் 5 மீட்டர் தூரத்துக்கும், பூமி நேர்கோட்டில் இருந்து விலகிய 5 மீட்டர் தூரத்துக்கும் சரியாகப் போய்விடும், ISS க்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி குறையவே குறையாது!!

எனவே, ISS மணிக்கு 27,700 கி.மீ வேகம் செல்லுமாறு ஏவப் பட்டுள்ளது.  இந்த வேகம் குறையுமா?  குறையாது, ஏனெனில் நியூட்டனின் முதல் விதிப்படி  புறவிசை [External Force ] எதுவும் செயல்படாத வரையில் நிலையாக உள்ள பொருளோ, சீரான வேகத்தில் இயங்கும் பொருளோ தத்தமது நிலைகளைமாற்றிக் கொள்ளாது.  எந்த ஒரு கட்டத்திலும் புவிஈர்ப்புவிசை இந்த வேகத்திற்கு செங்குத்தான திசையிலேயே செயல்படுவதால் அது ISS  வேகத்தின் திசையை மாற்றுமே தவிர அதை கூட்டவோ குறைக்கவோ செய்யாது. வேறெந்த புரவிசையும் ISS மீது செயல்படாததால் அதன் வேகம் ஒருபோதும் மாறாது. [ஆனாலும் விண்வெளியில் சிறிது காற்று உள்ளதால் வேக இழப்பு இருக்கவே செய்கிறது, அந்த இழைப்பை அவ்வப்போது சிறிய ராக்கெட் பூஸ்டர்கள் மூலம்ISS-ஐ உந்தித் தள்ளி  சரி கட்டுகிறார்கள்.]  இன்னொரு கேள்வி, மணிக்கு 27,700 கிமீ வேகத்தில் ISS செல்கிறதே, அதை உள்ளே இருப்பவர்களால் உணர முடியாதா?  முடியவே முடியாது.  நீங்கள் விமானத்தில் செல்லும்போது அது மணிக்கு 400 கிமீ வேகத்தில் சென்றாலும், உள்ளே உட்கார்ந்திருப்பவர்களுக்கு சாதாரணமாக வீட்டில் உட்கார்ந்திருப்பது போலவேதான் இருக்கும், அதன் வேகம் அதிகரிக்கும் போதும், குறையும் போதும் மட்டுமே வித்தியாசத்தை உணர முடியும்.  [விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் மட்டுமே  சீட் பெல்ட்டை கட்ட வேண்டியிருக்கும்!!] அதே மாதிரி சீரன வேகம் மணிக்கு அது எத்தனை ஆயிரம் கிமீ ஆக இருந்தாலும்  உள்ளே இருப்பவர்களால் அதை உணரவே முடியாது. வீட்டில் உட்கார்ந்திருப்பது போலவேதான் இருக்கும்.

newton+height.png

மனிதன் செலுத்தும் செயற்கை கோள்கள் மட்டுமல்ல, சந்திரன் பூமியைச் சுற்றுவது, மற்ற கோள்களின் சந்திரன்கள் அவற்றைச் சுற்றுவது, கோள்கள் சூரியனைச் சுற்றுவது எல்லாம் இதே அடிப்படையில் தான் நடக்கின்றன.   ஒரு வித்தியாசம் அந்தந்த கோள்களின் நிறை/சூரியனின் நிறை மாறுபடுவதாலும், கோள்கள்/சூரியனில் இருந்து சுற்றுவட்டப் பாதையின் தூரத்தைப் பொருத்தும்  இந்த வேகமும், ஒரு முழுச் சுற்றை சுற்றி  முடிக்க ஆகும் காலமும் அதற்கேற்றவாறு மாறும்.  [நன்கு கவனிக்க, கோள்களின் நிறை, சுற்று வட்டப் பாதையின் அளவைப் பொறுத்து மட்டும் தான் வேகமும் காலமும் மாறும், ஏவப் பட்ட பொருளைப் பொறுத்து அல்ல!!  உதாரணத்திற்கு சந்திரனின் பாதையில் ஒரு கிலோ கல் மட்டும் பூமியைச் சுற்றுவதனாலும் சந்திரன் சுற்றும் அதே [மணிக்கு 3700 கி.மீ.] வேகத்திலும், ஒரு முறை சுற்றி வர அதே 27 நாட்களும்தான் பிடிக்கும்!!]

       

 

எடையற்ற நிலையை உணர லிப்ட் கயிறை அறுத்தல் [உசிரு போய் விடும்] அல்லது ஷட்டிலில் ஏறி விண்வெளிக்குச் செல்லுதல் [நடக்கிற காரியமா இது!!] அல்லாது வேறு நடைமுறைக்கு ஏற்ற வழி ஏதேனும் இருக்கிறதா?  
 இருக்கிறது.  இரண்டு லட்சம் செலவாகும், பரவாயில்லையா?

 

zerog2.jpg Zero G விமானம். ZeroGplane.jpg மேலெழும்பும் நிலை.....

 

Hawkin.jpg Zero G விமானத்தில் ஸ்டீபன் ஹாகிங்!! சும்மா ஒரு தடவை பார்க்கலாம்னு போனவர் நிறுத்தாம எட்டு தடவை ZeroG க்கு ஓட்டச் சொல்லி பார்த்திருக்காருன்னா  பாருய்யா!! [வலப்பக்கம் இருப்பவர்தான் இந்த விமான நிறுவன ஓனர் !! ]

 

apple.jpg யோவ்.....அதென்னா ஆப்பிளு..!!  ஏன்னா, ஆப்பிளுக்கு பேர்போன நியூட்டனின் சேர்ல இவர் இப்ப உட்கார்ந்திருக்காரு இல்லியா அதான்...............!!

 

 

 

ZeroG.png விமானம் பரவளையப் பாதையில் மேலே உள்ளவாறு செல்லும்.  இதுபோல 15 முதல் நாற்ப்பது முறை மேலும் கீழுமாக விமானம் பறந்து செல்லும். முகட்டை அடையும்போது ஒவ்வொரு முறையும் ஒரு விதமான எடையை உணரும் வண்ணம் விமானத்தை செலுத்துவார்கள்.  எடையற்ற தன்மை மட்டுமல்ல, செவ்வாய் கிரகம், நிலவு ஆகியவற்றில் நிலவும் ஈர்ப்பு விசையையும் உணரும் வண்ணம் விமானம் செலுத்தப் படும்.

ஜீரோ G விமானம் எப்படி செயல்படுகிறது?

 
   
 
    கையில் இருந்து எதை தூக்கிப் போட்டாலும் தரையைத் தொடும் வரை எடையற்ற நிலையில் இருக்குன்னு பார்த்தோம்.  குழந்தையை தூக்கி கொஞ்சாதவங்க யாரும் இருக்கவே மாட்டங்க.   சில சமயம் குழந்தையை அப்படியே மேலே தூக்கிப் போடுவோம், அது அப்படியே அரை வினாடி குதூகலத்தோடு நம் தலைக்கு மேலே கையையும் காலையும் வீசியவாறு கொள்...என சிரித்து கீழே இறங்கும், அப்படியே பத்திரமாக கைகளில் தாங்கிக் கொள்வோம்.  குழந்தையை தூக்கி மேலே போடும்போது நார்மலாக இருப்பதை விட கொஞ்சம் கூடுதலான பலம் கொடுப்போம், அது அப்படியே கையை விட்டு விலகி மிதக்கும், அப்புறம் திரும்பவும் நம் கையில் வந்தடையும்போது கொஞ்சம்  பலத்தைக் கொடுத்துதான் அதை நிறுத்துவோம்.  இதேதாங்க Zero G விமானங்களில் நடக்குது.  நீங்க மேலே பார்க்கும் படத்தில் மஞ்சள் நிறமுள்ள நிலைகளில் உங்கள் எடையை விட இருமடங்கு அதிகமாகும்படி விமானம் வேகமாக மேலெழும்பும், நீல நிறப் பட்டையில் உச்சியை அடையும் போது முப்பது வினாடிகளுக்கு எடையற்ற தன்மையை உணர்வீர்கள், மீண்டும் கீழே இறக்கும்போது உங்கள் எடை மீண்டும் இரட்டிப்பாக உணர்வீர்கள்.  இது போல நாற்ப்பது முறை வரை செய்வார்கள்.  ஒவ்வொரு முறையும் ZeroG, சந்திரன், செவ்வாய் என வெவ்வேறு ஈர்ப்பு விசைகளை உணரும்படி விமானம் செலுத்தப் படும்.

http://jayadevdas.blogspot.com/2012/10/zerog.html

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொரு பதிவு பெருமாள்.
நீண்ட கட்டுரையாக உள்ளதால்... நிச்சயமாக‌ ஆற, அமர இருந்து வாசிக்க வேண்டும்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் பிரயோசனமான பதிவு.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொரு பதிவு பெருமாள்.
நீண்ட கட்டுரையாக உள்ளதால்... நிச்சயமாக‌ ஆற, அமர இருந்து வாசிக்க வேண்டும்.

 

 

உங்களது நேரத்திற்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமான இணைப்பு .. நன்றி பெருமாள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.