Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்காணல்: நீதி எங்கள் பக்கம் - இரா. சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல்: நீதி எங்கள் பக்கம் - இரா. சம்பந்தன்

நேர்கண்டவர்: இளைய அப்துல்லாஹ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சட்டத்தரணி இரா. சம்பந்தன் (80) 1977இல் இருந்து இலங்கைப் பாராளுமன்ற அரசியல் தொடர்பாக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜயதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க, மகிந்த ராஜபக்ச போன்ற ஜனாதிபதிகளின் அரசியலை கண்டவர் அவர். இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வரவேண்டும் என்று பாடுபட்டு வருகிறார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு இலங்கை அரசாங்கம் இந்தியாவின் 13 ஆவது திருத்தத்தை கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால் இந்திய அரசோடும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளோடும் இலங்கை அரசாங்கத்தோடும் அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளோடும் பேசக்கூடிய ஒரே தமிழர் தலைவராக இரா. சம்பந்தன் இப்பொழுது இருக்கிறார்.

sambandhan.jpg

‘‘இனி ஈழத் தமிழர்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’’ என்று தந்தை செல்வா கூறியிருந்தார்.

ஆனால், துன்பப்படும் ஈழத் தமிழர்களுக்கு நல்லதொரு அரசியல் தீர்வு வரும் என்று சம்பந்தன் நம்பிக்கையோடு தெரிவித்தார். இந்த எண்பதாவது வயதிலும் அவர் ஈழத் தமிழர்களுக்காக சளைக்காது உழைத்து வருகிறார். அண்மையில் லண்டன் வந்த சம்பந்தன் அவர்களை காலச்சுவடிற்காகச் சந்தித்தேன்.

இலங்கைத் தமிழர் மீதான அக்கறை இப்பொழுது வெளிநாடுகளில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் ஓர் அவதானத்தை ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவில் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது விமோசனம் கிடைக்குமா?

ஈழத் தமிழர்களுடைய போராட்டம் நீண்டகாலப் போராட்டம். பல சந்தர்ப்பங்களில் சீராகக் கூடிய சந்தர்ப் பங்கள் இருந்தன. ஆனால் அவை கைகூடவில்லை. தற்பொழுது ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. காரணம் என்னவென்றால் சர்வதேச சமூகத்தினுடைய ஆதரவும் அவர்களுடைய அங்கீகாரமும் அவர்களுடையப் பங்களிப்பும் இப்பொழுது மிக அதிகமாக இருக்கின்றன. அது ஈழத் தமிழர்களுக்கு சார்பான ஒரு விடயம். ஆனால் அதே சமயம் முதல் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு நியாயமான அரசியல் தீர்வு தமிழர்களுக்குக்கிட்டக்கூடாது என்ற விடயத்தில் தீவிரமாகச் செயல்படடு வருகிறது. மிகவும் பிடிவாதமாக இருக்கிறது. நியாயமற்ற வகையில் நடந்து கொள்கிறது.

இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு கண்டாக வேண்டிய தேவையை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனபடியால் மகிந்த ராஜபக்சவினது எதிர்ப்பு எந்த அளவிற்கு இருந்தாலும் பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அந்த முடிவு வருவதற்கு, தாமதமில்லாமல் வருவதற்கு எம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். நாங்கள் மிகவும் நிதானமாக மிகவும் பக்குவமாகச் செயற்பட வேண்டிய காலகட்டம் இது. புலிகள்தான் தமிழர் இனப்பிரச்சனை தீர்வுக்கு இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்று இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வந்தன. இப்பொழுது புலிகள் அழிக்கப்பட்டதன் பின்பும் தமிழர்களுக்கான தீர்வைக்கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.

 

இந்தியாவின் பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பான பேச்சுக்களை இந்தியாவே கைவிட்டு விட்டதா? தீர்வு விடயத்தில் இலங்கைக்கு இந்தியா ஏதாவது நெருக்கடி கொடுக்குமா?

ஈழத் தமிழர்கள் விடயத்தில் இந்தியாவினது பங்களிப்பு முக்கியமானது. 13ஆவது அரசியல் சாசனத்தை விட முக்கியமானது இந்திய இலங்கை ஒப்பந்தம்.

அந்த ஒப்பந்தத்தின் கீழ் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்று எல்லா இன மக்களுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அந்தத் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் அந்த இரண்டு மாகாணங்களும் இணைந்து ஓர் அரசியல் ரீதியாக வரலாம் என்ற கருத்தும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இந்திய இலங்கை ஒப்பந்தம்தான் எமது அரசியல் தீர்வுக்கு ஓர் அடிப்படையாக அமைந்தது. பின்னர் இந்திய சமாதானப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாகவும் அதைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட காரணத்தின் நிமித்தமும் இந்தக் கசப்பான அனுபவங்களினால் இந்தியா பல வருடங்களாக ஒரு பார்வையாளராக ஒதுங்கி இருந்தது. அவர்கள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் அக்கறை எடுக்கவில்லை. ஆனால் முழுவதுமாகக் கைகழுவியும் விடவில்லை.

ஆனாலும் தொடர்ச்சியாக இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழர் தலைவர்கள் என்ற முறையில் நாங்கள் இந்திய அரசுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வந்தோம். ஏனெனில், இந்தியாவை முழுமையாக புறந்தள்ளமுடியாது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.

புலிகளுடனான யுத்தம் முடிந்த பிறகு இந்தியா இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அக்கறை எடுத்து வருகின்றது. அந்த அடிப்படையில்தான் 13ஆவது அரசியல் சாசனத்தின் மீது ஒர் அரசியல் தீர்வு கட்டி யெழுப்பப்பட்டு அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு வேண்டுமென்று ஏற்றுக் கொள்ளப்பட்டு இலங்கை அரசாங்கமும் இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுத்தது.

பதின்மூன்றாவது திருத்த சட்டம் அமுல்படுத்தப்பட்டு அது முழுமையாகப் பின்பற்றப் படவேண்டும்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி மூன் யுத்தம் முடிந்த 2009 மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது அவருடன் நடந்த இலங்கை அரசின் பேச்சுவார்த்தையின் பின்னர் முழுமையான அரசியல் தீர்வைத் தமிழர்களுக்குக் கொடுப்பதாக இலங்கை அரசு பான் கி மூனிடம் கூறியிருக்கிறது.

2006 ஜூலை மாதம் சர்வ கட்சி மகாநாட்டைக் கூட்டி சர்வ கட்சிகளிலும் உள்ள சிறந்தவர்களைக் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதன் ஆரம்பக் கூட்டத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகத் தெளிவாகப் பேசினார்.

அதிகப்படியான அதிகாரப் பகிர்வுடன் தீர்வு காணப்பட வேண்டும். வெவ்வேறு இன மக்களுடைய அதிகாரம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்தந்த மக்கள் தாங்கள் வாழுகின்ற பிரதேசங்களில் தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானிக்ககூடிய வகையில் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்.

sambandhan1.jpg

உலகத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு சாசனங்களில் இவ்விதமாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இருக்கின்ற அதிகாரப் பகிர்வு முறை தொடர்பாகவும் மகிந்த ராஜபக்ச சர்வகட்சி மகாநாட்டின் ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தார்.அந்த நேரம் அமைத்த சர்வகட்சிக் குழு நல்லதொரு அறிக்கையை மகிந்த ராஜபக்சவிடம் கொடுத்தது. சர்வதேச சமூகம் இந்த விடயத்தை நன்கு புரிந்திருக்கிறது. 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் கூட அரசியல் தீர்வு சம்பந்தமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையில் நல்லிணக்கம் புரிந்துணர்வு ஏற்படவேண்டுமானால் இந்த இன மோதலுக்குக் காரணமானப் பிரச்சனை முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குப் பரிகாரம் காணக்கூடிய அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே இன்றைய உலக ஒழுங்குக்கு வெளியே இலங்கை அரசு தப்பியோட முடியாது. இந்த இனப்பிரச்சனை தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் உதவிகளை தமிழர்களாகிய நாங்கள் பெற்றுக் கொள்ள மிகவும் அவதானமாகச் செயல்பட வேண்டும்.

உங்களுடைய அரை நூற்றாண்டு அரசியல் வாழ்வில் பல இலங்கை ஜனாதிபதிகளைக் கண்டுள்ளீர்கள். மகிந்த ராஜபக்சவோடு பல தடவை பேசி இருக்கிறீர்கள். அவருடைய மனநிலையில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வில் நாட்டம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆரம்பத்தில் மகிந்த ராஜ பக்சவுக்கு தமிழர்களுக்கு ஒரு சுபீட்சமான தீர்வு கொடுக்க வேண்டும் என்ற மன நிலை இருந்தது எனக்குத் தெரியும். ஆனால் இப் பொழுது அப்படி இல்லை. சிங்கள மக்களின் வாக்குகளால்தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன் என்ற மனநிலைக்கு அவர் வந்திருக்கிறார்.

சிங்கள மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள தமிழர்களுக்குத் தீர்வு கொடுப்பதை அவர் மனதளவில் விரும்பவில்லை என்றே நான் இப்பொழுது நினைக்கிறேன்.

ஏற்கனவே இந்தப் பிழையைத்தான் பல சிங்களத் தலைவர்கள் செய்திருக்கின்றனர். துவேசமான நிலையில் செயல்பட்டால் தனது அரசியல் குறிக்கோளை அடைவதற்கு அது உதவும் என்று ராஜபக்ச நினைக்கின்றார். இது மோசமான சிந்தனையாகும். கணிசமான சிங்கள மக்கள் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் மகிந்த ராஜபக்ச குறுகிய மனப்பான்மையின் அடிப்படையில் சிந்திக்கின்றார். ஆகவே தன்னிச்சையாக தமிழர்களுக்கான நியாயமான தீர்வை வைக்கக் கூடியவராக அவர் இல்லை.

சிங்கள மக்களுக்குத் தமிழர்கள் தரப்பின் நியாயமான கோரிக்கைகளை எடுத்துச்சொல்ல உங்களைப் போன்றவர்கள் தவறவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்களா?

ஆம், உண்மைதான். இந்த விடயம் தொடர்பாக திட்டங்களைத் தீட்டி நாங்கள் செயல்படவேண்டும். செயல்பட்டிருக்கிறோம். ஆனால் போதாது. தற்போது அரசியல் தீர்வு சம்பந்தமான இந்தப் பிரச்சனை மிகவும் முக்கியமான விடயமாக நாட்டில் கருதப்பட்டு ஏனைய விடயங்களும் இந்தப் பிரச்சனையுடன் தொடர்பு படுத்தப்படவேண்டும். அதாவது மனித உரிமைகள், அடிப்படை உரிமை, ஜனநாயகம், நீதித் துறையின் சுயாதீனம், ஊடக சுதந்திரம், மக்கள் சுதந்திரம் போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் படவேண்டும்.

தற்போது நாடு போகிற போக்கில் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் அது பேராபத்தாக இருக்கிறது. முஸ்லிம் மக்களும் பேரினவாத சிங்கள கடும்போக்குவாதிகளால் தாக்கப்படுகிறார்கள். அது மற்றுமொரு பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இது ஆபத்தான போக்காகும்.

சிங்கள, முஸ்லிம் தலைவர்களுக்கும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் இலங்கை நிலவரத்தை விளங்கப்படுத்த வேண்டிய நிலை இப்பொழுது வந்துவிட்டது. சிங்கள தனி ஆதிக்கத்தை அடக்கவேண்டிய சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.

தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஏற்கனவே பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதனை களைவதற்கு தமிழ் தலைவர் என்ற முறையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஜனாப் அஸ்ரப் இருந்த காலம் தொட்டு முஸ்லிம் காங்கிரஸுக்கும் எங்களுக்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை இடம்பெற் றிருந்தது. சில முடிவுகளைக்கூட எடுத்திருந்தோம்.

ஏனெனில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களுக்குத் துரோகம் செய்தோ, முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்தோ எந்தத் தரப்பும் எதையும் அடையப்போவதில்லை. தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் எவரையும் வெறுக்கவில்லை. எல்லோரையும் ஒன்றுபடுத்த வேண்டும்.

sambandhan2.jpg

தமிழ், முஸ்லிம் மக்களுடைய காணி, தொழில், கலாச்சாரம், கல்வி, சமயம், பொருளாதாரம் சம்பந்த மான பிரச்சனைகள் தமிழ், முஸ்லிம் மக்களின் பொதுப் பிரச்சனைகள் ஆனபடியால் இதற்கு நியாயமான தீர்வைக் காணக்கூடிய வகையில் இரு இனங்களும் ஒன்றாகச் சேர்ந்து பேசவேண்டும்.

அது சிங்கள மக்களுக்கும் நாட்டிற்கும் எதிராக அல்ல, நாடு இன்னும் முன்னேறி இன்னும் பலமடையக்கூடிய வகையில் எமது பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வைக் காண வேண்டிய தேவை எமது மக்கள் எல்லோருக்கும் இருக்கின்றது. அதை நாங்கள் முனைப்புடன் செய்வோம்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக எந்தவித கரிசனையும் கொள்ளவில்லை என்றா சொல்கிறீர்கள்?

இதுவரையில் இருந்த ஜனாதிபதிகள் உள்நாட்டில் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தார்கள். ஆனால் மகிந்த ராஜபக்ச சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. சர்வதேசத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றவில்லை. இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறி இருக்கிறார். போர் குற்றங்களையும் நடத்தியிருக்கிறார்.

சர்வதேச ரீதியாக நிலைமைகள் வேறு மட்டத்திற்குப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் கடமைகளும் செய்யவேண்டிய விடயங்களும் தற்பொழுது கடுமையாக இருக்கின்றன. ஆகவே மகிந்த ராஜபக்சவை நோக்கி சர்வதேசம் நெருக்கடி கொடுக்கும் என்று நம்பலாம்.

சர்வதேசம் எந்தளவிற்கு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும்.? மனித உரிமை மீறலுக்காக சர்வதேச சமூகம் இலங்கையை குறி வைத்திருக்கிறதா?

ஆம்! ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி மூன் வெளியிட்ட அறிக்கையில் பொறுப்புக்கூற வேண்டிய விடயம் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அரசாங்கம் தன்னுடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தருஸ்மான் தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை இலங்கை தொடர்பாக அறிக்கையிடுவதற்கு பான் கி மூன் நியமித்திருந்தார். அந்த அறிக்கையில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

சர்வதேச ரீதியாக பக்கச் சார்பற்ற சுதந்திரமான விசாரணை செய்யப்படவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இலங்கை தொடர்பான அந்த அறிக்கையை செயலாளர் நாயகம் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கடந்த வருட அமர்வில் இலங்கையைக் கடுமையாக விமர்சித்தது. சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் அரசாங்கம் இராணுவத்தினரைக்

கொண்டு ஏதோ விசாரணையை நடத்தி இருக்கிறது. அது ஒரு சுயாதீனமான விசாரணையுமல்ல, சுதந்திரமான விசாரணையுமல்ல, ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணை யுமல்ல. சர்வதேச சமூகம் அதனை நிராகரித்து விட்டது. ஆகவே, சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தை கையில் எடுத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

உங்கள் நீண்டகால இலங்கை அரசியல் வாழ்க்கையில் எப்பொழுதாவது மனம் சலித்துப் போனதுண்டா?

இல்லை. நான் அப்படி எந்தச் சந்தர்ப்பத்திலும் எண்ணவில்லை. எங்களுடைய மக்களுடைய கோரிக்கை நியாயமானது. எமது தலைவர் தந்தை செல்வநாயகத்துடன் நாட்டினுடைய இரண்டு பிரதமர்கள் எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா 1957ஆம் ஆண்டிலும், டட்லி சேனநாயக்கா 1965ஆம் ஆண்டிலும் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அவர்கள் நிறைவேற்றவில்லை.

தந்தை செல்வா தீவிரவாத முறையில் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்று முயற்சி செய்யவில்லை. நியாயமான முறையில் பிரச்சனைகளைத் தீர்க்க யோசித்தார். இந்த ஒப்பந்தங்கள் முறைப்படி நிறைவேற்றப்பட்டிருந்தால் நிலைமை இந்த அளவிற்கு மோசமாகப் போயிருக்காது. தந்தை செல்வா சலிப்படையவில்லை. அமிர்தலிங்கம் சலிப்படையவில்லை.

அதற்காக அவர்கள் கடினமாக உழைத்தார்கள். இப்பொழுது மிதவாதக் கட்சிகள் மாத்திரமல்லாது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வைக்காண முயலுகிறோம். சலிப்புக்கு இங்கு இடமில்லை.

தந்தை செல்வா தன்னால் முடியாமல் போன தருணத்தில் ‘‘இனிமேல் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அப்படித்தான் நீங்களும் சொல்வீர்களோ?

ஓம், கடவுளின் உதவி எங்களுக்கு இருக்கிறது என்று நான் சொல்லுவேன். நீதி எங்கள் பக்கம் இருக்கிறது. நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது. இந்தப் பிரச்சனையை நியாயமாக தீர்க்கவேண்டும் என்ற உணர்வை சிங்கள மக்கள் மனதில் கடவுள் போடுவார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. எமது மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும்.

இந்துக் கோயில்கள், தமிழர் கலாச்சார பண்பாட்டுத் தலங்களை சிங்கள அரசாங்கம் அழித்து வருவதாகச் சொல்லப்படுகிறதே, அது உண்மையா?

ஆம், அது முழுவதும் உண்மை. வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் கலாச்சார விழுமியங்களை அழிப்பதற்கு அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. சிங்கள மதத்தினுடைய, இனத்தினுடைய ஆதிக்கத்தை அதிகரிப்பதற்குப் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலமாக பல விடயங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒருபுறம் மத்திய அரசின் காணி விடயங்கள் சம்பந்தமான பிரச்சனை. மறுபுறம் இராணுவத்தின் அட்டூழியம்.

தமிழர் பிரதேசங்களில் சுதந்திரமான சிவில் நிர்வாகம் இல்லை. தமிழ் மக்கள் இராணுவத்திற்குப் பயந்து ஒடுங்கி வாழவேண்டி இருக்கிறது. இது தொடர முடியாது. உலகம் இது விடயம் சம்பந்தமாக தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தை முக்கியமாகப் பார்க்கலாம். ஆனால் அது மட்டுமே எமது சமூகத்திற்கான விடிவு என்று முழுமையாகப் பார்க்க முடியாது. நாம் அதற்கும் மேலே பல விடயங்களைச் செய்யவேண்டும். தமிழர்களை மகிந்த ராஜபக்ச உதாசீனம் செய்ய முடியாது.

யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்திற்கான உதவியை சர்வதேசம் இலங்கை அரசுக்குச் செய்தது. பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முனைப்பாக உதவி செய்தன. இப்பொழுது எப்படி இந்த நாடுகள் தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்று நம்பிக்கை கொள்ளமுடியும்?

யுத்தத்திற்கு முதலே பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தன. லக்ஸ்மண் கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் மனித உரிமை அமைப்புகள் புலிகளுக்கு எதிராக விடுத்த அறிக்கையை எடுத்துக்கொண்டு நாடுநாடாகச் சென்று பிரச்சாரம் செய்தார். அதற்குப் பிறகு உளவியல் ரீதியாக, ராணுவ ரீதியாக, பொருளாதார ரீதியாகப் பல நாடுகள் இலங்கைக்கு உதவின.

ஆனால் சர்வதேச சமூகத்தின் பார்வை இப்பொழுது மாறி விட்டது. சர்வதேச சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக் களின் விசுவாசமான சக்தியாகப் பார்க்கின்றது. சர்வதேச சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி ஒரு நியாயமான அரசியல் தீர்வைக் காணவேண்டும். இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது. புதிய நிலைமைகளை அவதானித்து அந்த நிலைமைக்கு ஏற்ற வகையில் நாங்கள் செயல்படுகிறோம்.

புலிகளின் இராணுவப் பலத்தோடு சமமாக அரசியல் பலமும் சேர்ந்திருந்தால் இந்தப் பிரச்சனை எப்பொழுதோ தீர்ந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நான் உங்களுக்கு ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். அண்மையில் நாங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தோம். அங்கே அரசியல் தலைவர்கள் மற்றும் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரை சந்தித்துப் பேசினோம். அவர்கள் எங்களுக்குக் கூறிய முக்கியமான விடயம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆயுதப் போராட்டத்தை அந்நேரம் முன்னெடுத்தது. அதே நேரம் அரசியல் போராட்டத் தைதான் அதிகமாக நம்பிக்கையோடு செய்தது. ஆனால் இலங்கையில் புலிகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அதில் அரசியல் பார்வை மிக மிகக் குறைவாகவே இருந்தது. அதுதான் இலங்கையில் போராட்டம் தோற்றதற்கான முக்கிய காரணி என்று தென்னாப்பிரிக்கத் தலைவர்கள் கூறியதை இங்கு நான் நினைவுபடுத்துகிறேன். ஜனநாயகம், மனித உரிமைகள் மதிக்கப்பட்டிருந்தால் புலிகளின் நிலை இப்படி வந்திருக்காது என்றுதான் நான் கருதுகிறேன்.

நீங்கள் எப்பொழுதாவது பிரபாகரனை சந்தித்திருக்கிறீர்களா? அவருக்கு அரசியல் பாதை பற்றிச் சொல்லியிருக்கிறீர்களா?

ஆம், நான் பல தடவைகள் அவரைச் சந்தித் திருக்கிறேன். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு அவரைச் சந்தித்த பொழுது அவரிடம் அரசியல் பாதை பற்றிச் சொன்னேன். அவர் என்னோடு தமது (புலிகளின்) இராணுவப் பலத்தை பற்றிப் பேசினார். தனது இராணுவப் பலத்தின் காரணமாகத்தான் இலங்கை அரசாங்கம் தங்களோடு சமாதான ஒப்பந்தத்திற்கு வந்திருக்கிறது என்று சொன்னார். அவருடைய கருத்தை கேட்டு விட்டு நான், ‘‘ஓம், உங்களுடைய இராணுவ பலம்தான் இலங்கை அரசாங்கத்தை உங்களோடு பேச வைத்திருக்கிறது. ஆனால் உங்களுடைய இராணுவ பலம் தமிழ் மக்களுடைய தீர்வாக அமையாது. உங்களுடைய இராணுவ பலம் தமிழ் மக்களுடைய அரசியல் பலமாக அமைய வேண்டும். அது நடப்பதாக இருந்தால் நீங்கள் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். மனித உரிமையை மதிக்கவேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் மதிக்கத் தவறினால் உங்களுடைய இராணுவ பலம் எங்களுடைய மக்களின் இராணுவ பலமாக மாறாது" என்று சொன்னேன். மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறினேன். எனது விடயத்தை அவர் கேட்டார். ஆனால் செயல்படுத்தவில்லை.

புலிகளின் போராட்டம் தவறான திசையில் போய் முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நான் யாரிலும் குற்றம் சொல்ல மாட்டேன். குற்றங் கள் ஏற்பட்டிருந்தால் அதற்குப் பல காரணங்கள் உண்டு.

இலங்கை அரசு விசுவாசமாக எப்பொழுதும் நடக்கவில்லை. எங்களுக்கும் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு இருக்கவில்லை. குற்றங்கள் பல பக்கங்களில் இருந்திருக்கலாம். இந்தப் புதிய சூழலில் எப்படி விடயங்கள் அமைய வேண்டும் என்று யோசித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் விடுதலைப் புலிகள் இலங்கையில் இருக்கிறார்கள் என்றும், வெளிநாடுகளில் இருந்து செயல்படுகிறார்கள் என்றும் புலிகள் மீண்டும் போராட்டத்துக்குத் தயாராக இருக்கிறார்கள். அதே பாதையில் உங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பும் செல்கிறது என்றும் இலங்கை அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறதே?

இலங்கை அரசு இனப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியில் மட்டுமே தீர்வு காண விரும்புகிறது. இராணுவ வெற்றியின் பின்பு தமிழர் பிரச்சனையைப் பற்றிப் பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று அரசாங்கம் நினைத்திருக்கிறது. ஆனால் நிலைமை அப்படி இல்லை.

எமது தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கக் கூடிய அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். அது கைகூடவில்லை. இன்னும் புலிகள் இருக்கிறார்கள் அவர்களுடைய செயல்பாடு இன்னும் முழுமையாக ஓயவில்லை என்று கூறுவதும் அதன் அடிப்படையில்தான். தங்களுடைய ராணுவ விரிவாக்கத்தை ஏற்படுத்துவதை நியாயப்படுத்துவதற்கும் புலிகள் இருக்கிறார்கள் என்று சொல்வது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்தக் காரணம்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் இன்று அந்தப் பிரச்சாரம் சர்வதேச சமூகத்தில் எடுபடவில்லை. சர்வதேச சமூகம் நாலா பக்கங்களிலிருந்தும் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்து இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வை முன் வைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

http://www.kalachuvadu.com/issue-162/page59.asp

  • கருத்துக்கள உறவுகள்
 
 
சர்வதேசம் தீர்வை எடுத்து தரும் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது என சம்பந்தர் ஐயா நன்றாக ஆராய வேண்டும்.உலகின் பல நாடுகளின் அரசியல் தீர்வுகள் சர்வதேசத்தால் தீர்க்கப்படவில்லை. அதற்கு அப்பால் தீர்வு தேவைப்படும் மக்களின் போராட்டங்களால் தான் நிரந்தர தீர்வு கிட்டியுள்ளது.சர்வதேசம் தேவையெனில் உறுதுணையாக இருக்கும் என்று சொல்லாம்.
 
தமிழர் நிலம் பறிக்கப்படும் இவ்வேளையிலாவது அம்மக்களுடன் சேர்ந்து கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.இரண்டாம் பட்சம் தான் வெளிநாடுகளுக்கு அச்செய்தியை சொல்வது.

நீங்கள் எப்பொழுதாவது பிரபாகரனை சந்தித்திருக்கிறீர்களா? அவருக்கு அரசியல் பாதை பற்றிச் சொல்லியிருக்கிறீர்களா?
 
ஆம், நான் பல தடவைகள் அவரைச் சந்தித் திருக்கிறேன். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு அவரைச் சந்தித்த பொழுது அவரிடம் அரசியல் பாதை பற்றிச் சொன்னேன். அவர் என்னோடு தமது (புலிகளின்) இராணுவப் பலத்தை பற்றிப் பேசினார். தனது இராணுவப் பலத்தின் காரணமாகத்தான் இலங்கை அரசாங்கம் தங்களோடு சமாதான ஒப்பந்தத்திற்கு வந்திருக்கிறது என்று சொன்னார். அவருடைய கருத்தை கேட்டு விட்டு நான், ‘‘ஓம், உங்களுடைய இராணுவ பலம்தான் இலங்கை அரசாங்கத்தை உங்களோடு பேச வைத்திருக்கிறது. ஆனால் உங்களுடைய இராணுவ பலம் தமிழ் மக்களுடைய தீர்வாக அமையாது. உங்களுடைய இராணுவ பலம் தமிழ் மக்களுடைய அரசியல் பலமாக அமைய வேண்டும். அது நடப்பதாக இருந்தால் நீங்கள் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். மனித உரிமையை மதிக்கவேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் மதிக்கத் தவறினால் உங்களுடைய இராணுவ பலம் எங்களுடைய மக்களின் இராணுவ பலமாக மாறாது" என்று சொன்னேன். மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறினேன். எனது விடயத்தை அவர் கேட்டார். ஆனால் செயல்படுத்தவில்லை.
 
 

 

 

தமிழர் பிரச்சனை புலிகள் இயங்கம் தொடங்க முன்பே இருந்தது.அப்போது பல அரசியல் தலைவர்கள் அரசியல் போராட்டங்களை செய்தனர். ஆனால் புலிகளின் காலத்திலேயே நோர்வே , அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்,யப்பான் ,இந்தியா போன்ற நாடுகள் தமிழர்கள், சிங்களைவர்களை ஒரு மேசையில் அமர்த்தி பேச்சு வார்த்தைகளை நடாத்தினர்.இதில் புலிகள் முழு பங்கு வகித்தனர்.இது புலிகளின் அரசியல், ஆயுத போராட்டத்தால் தான் சாத்தியமானது.இன்றைய கூட்டமைப்பின் வெளிநாடுகளினுடனான பேச்சுவார்த்தைகளும் அதன் தொடர்ச்சியே.
 
இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் கூட புலிகள் மற்றும் ஆயுத போராட்ட குழுக்களினுடன் தான் இந்தியா பேசியது.
 
 
தனிய அரசியல் மூலம் இப்படியான பேச்சு வார்த்தைகள் அரசியல் பழங்கள் கூட்டமைப்பு அல்லது தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி காலத்தில் ஏற்படவில்லை. தனிய அரசியல் பேசிக்கொண்டு இருந்தால் சிங்களம் எப்போதோ தமிழர் நிலத்தை அபகரித்து இருக்கும்.இப்போ அதனை தமிழர்களிடம் ஆயுதம் இல்லாத போது தொடங்கி உள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல்: நீதி எங்கள் பக்கம் - இரா. சம்பந்தன்

நேர்கண்டவர்: இளைய அப்துல்லாஹ்

நீங்கள் எப்பொழுதாவது பிரபாகரனை சந்தித்திருக்கிறீர்களா? அவருக்கு அரசியல் பாதை பற்றிச் சொல்லியிருக்கிறீர்களா?

ஆம், நான் பல தடவைகள் அவரைச் சந்தித் திருக்கிறேன். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு அவரைச் சந்தித்த பொழுது அவரிடம் அரசியல் பாதை பற்றிச் சொன்னேன். அவர் என்னோடு தமது (புலிகளின்) இராணுவப் பலத்தை பற்றிப் பேசினார். தனது இராணுவப் பலத்தின் காரணமாகத்தான் இலங்கை அரசாங்கம் தங்களோடு சமாதான ஒப்பந்தத்திற்கு வந்திருக்கிறது என்று சொன்னார். அவருடைய கருத்தை கேட்டு விட்டு நான், ‘‘ஓம், உங்களுடைய இராணுவ பலம்தான் இலங்கை அரசாங்கத்தை உங்களோடு பேச வைத்திருக்கிறது. ஆனால் உங்களுடைய இராணுவ பலம் தமிழ் மக்களுடைய தீர்வாக அமையாது. உங்களுடைய இராணுவ பலம் தமிழ் மக்களுடைய அரசியல் பலமாக அமைய வேண்டும். அது நடப்பதாக இருந்தால் நீங்கள் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். மனித உரிமையை மதிக்கவேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் மதிக்கத் தவறினால் உங்களுடைய இராணுவ பலம் எங்களுடைய மக்களின் இராணுவ பலமாக மாறாது" என்று சொன்னேன். மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறினேன். எனது விடயத்தை அவர் கேட்டார். ஆனால் செயல்படுத்தவில்லை.

இன்னும் விடுதலைப் புலிகள் இலங்கையில் இருக்கிறார்கள் என்றும், வெளிநாடுகளில் இருந்து செயல்படுகிறார்கள் என்றும் புலிகள் மீண்டும் போராட்டத்துக்குத் தயாராக இருக்கிறார்கள். அதே பாதையில் உங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பும் செல்கிறது என்றும் இலங்கை அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறதே?

இலங்கை அரசு இனப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியில் மட்டுமே தீர்வு காண விரும்புகிறது. இராணுவ வெற்றியின் பின்பு தமிழர் பிரச்சனையைப் பற்றிப் பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று அரசாங்கம் நினைத்திருக்கிறது. ஆனால் நிலைமை அப்படி இல்லை.

:(  :(  :(

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.