Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட போர்க் கால மீறல்களை உள்ளடக்கி பிரித்தானியாவின் சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட காணொலிகளை கலும் மக்றே [Callum Macrae] தயாரித்திருந்தார்.

இவர் சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்நாட்டுப் பாதுகாப்புப் படைகளால் இழைக்கப்பட்ட குற்றங்களை ஆவணப்படுத்தி தனது முதலாவது காணொலியை வெளியிட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் அதிகம் பேசப்படும் ஒருவராக மாறியுள்ளார்.

'சிறிலங்காவின் கொலைக் களங்களில்' இடம்பெற்ற மீறல் குற்றச்சாட்டுக்களை முதன்மைப்படுத்தி, 'சிறிலங்காவின் கொலைக் களங்கள் - தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' எனும் தலைப்பில் கலும் மக்ரேயின் தயாரிப்பில் சனல் 04 தொலைக்காட்சி சேவையால் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், இவற்றை சிறிலங்கா அதிகாரிகள் மிகத் துணிச்சலுடன் மறுத்துவருகின்றனர். இந்நிலையில், தற்போது கலும் மக்றே தனது மூன்றாவது காணொலியான 'போர் தவிர்ப்பு வலயம் 'No Fire Zone’ என்ற தலைப்பில் 93 நிமிட நேர காணொலி ஒன்றைத் தயாரித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கமானது 'சிறிலங்காவின் கொலைக் களங்கள்' என்ற காணொலியில் உட்சேர்க்கப்பட்ட ஆவணங்களின் மூலப் பதிவுகளைத் தருமாறு தனது கட்டளையின் கீழ் செயற்படுபவர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளாது, சனல் 04 தொலைக்காட்சி சேவையிடம் கேட்பதற்கான காரணம் என்ன என Ceylon Today ஊடகம் மேற்கொண்ட நேர்காணலின் போது, கலும் மக்றே கேள்வியெழுப்பியுள்ளார்.

கலும் மக்றேயுடன் Ceylon Today ஊடகத்திற்காக Sulochana Ramiah Mohan மேற்கொண்ட நேர்காணலின் விபரம் வருமாறு: [புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி]

கேள்வி: சனல் 04 தொலைக்காட்சி சேவையானது தொடர்ந்தும் சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக முதன்மைப்படுத்தி வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது. இந்நிலையில் தங்களால் குற்றம் சுமத்தப்படும் அரசானது தொடர்ந்தும் இந்தக் குற்றங்களை மறுத்து வரும் நிலையில், நீங்கள் எவ்வாறு இதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்?

பதில்: இதற்கான சாட்சியங்களை நாங்கள் மட்டும் முன்வைக்கவில்லை. பல்வேறு அமைப்புக்களும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை முன்வைத்துள்ளன. ஐ.நா சுயாதீன வல்லுனர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இறுதியில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் குற்றங்களைப் புரிந்ததாகவும் ஆனால் 'போர் தவிர்ப்பு வலயங்களில்' மக்கள் அதிகம் கொல்லப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சுக்களே காரணம் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நாம் மிகக் கடுமையாக இந்தக் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் ஆதாரங்களைப் பரிசீலித்து விசாரணை மேற்கொண்டோம். எமது தொலைக்காட்சி சேவையால் ஒளிபரப்பப்பட்ட போர் ஆதாரப் பதிவுகள் தொடர்பாக நூறுக்கும் மேற்பட்ட சிறிலங்கா அரசாங்க ஆதரவாளர்கள் பிரித்தானிய சுயாதீன ஒலிபரப்பு அதிகார அமைப்பான 'தொடர்பாடல்களுக்கான செயலகத்திடம் Office of Communications - OFCOM' முறையீடு செய்தனர். இந்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றும் மிக ஆழமாக, தனித்தனியாக ஆராயப்பட்ட பின்னர் இவை மறுக்கப்பட்டன. எம்மிடம் கிடைக்கப் பெற்ற போர்க் குற்ற ஆதாரங்களை நாம் மிக ஆழமாக, துல்லியமாக ஆராய்ந்தோம். இவை தொடர்பாக நாம் பத்திரிகைத் துறைசார் ஆராய்ச்சி மற்றும் குறுக்குச் சோதனைகளையும் மேற்கொண்டோம்.

ஐக்கிய நாடுகள் சபையால் இப்போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பெற்றி தலைமையிலான வல்லுனர் குழுவானது முதலாவது குழுவை விட வேறுபட்டதாகும். இக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில், பல்வேறு போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அமெரிக்க இரகசிய செய்திக் குறிப்புக்கள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றால் வழங்கப்பட்ட ஆதாரங்களும், செய்மதி ஒளிப்படங்களில் எறிகணை வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டதை ஆதாரப்படுத்தும் சான்றுகளும் சிறிலங்கா அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுக்களை மேலும் வலுப்படுத்துகின்றன.

சிறிலங்கா அரசாங்கமானது, போரின் இறுதிக்கட்டத்தில் தன்னால் 'பூச்சிய பொதுமக்கள் இழப்புக்கள்' என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டதாக கூறுவதானது முற்றிலும் நம்பமுடியாததாகும். சிறிலங்கா அரசாங்கமானது போரின் போது 7000 வரையானவர்கள் மரணித்ததாக தற்போது அறிவிக்கும் இந்நிலையில், போரின் இறுதி நாளின் போது 'போர்த் தவிர்ப்பு வலயத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தற்போது அரசாங்கப் படைகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்' என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவித்ததை நம்பமுடியாதுள்ளது. இதேபோன்று போரின் போது தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை எனவும் அரசாங்கம் அறிவித்தது. ஆனால் சிறிலங்கா அரச தொலைக்காட்சி செய்திகளில் கனரக ஆயுதங்கள் காண்பிக்கப்பட்ட அதேவேளையில், போர் தீவிரம் பெற்றிருந்த போது தாம் அதனைப் பயன்படுத்தவில்லை என சிறிலங்கா அரசாங்கம் கூறும் நியாயத்தை ஏற்கமுடியாது.

போர் தீவிரம் பெற்றிருந்த போது கனரக ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கப் படைகள் பயன்படுத்தவில்லை என்றால், புதுமாத்தளன் பகுதியில் அறிவிக்கப்பட்ட போர் தவிர்ப்பு வலயத்தில் தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவுகொண்ட இனப்படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 'ராங்கி' ஒன்றின் அருகில் நின்றவாறு சவீந்திர சில்வா நேர்காணல் ஒன்றை வழங்குவது ஏன்? போரின் இறுதி நாளன்று முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் பலகுழல் துப்பாக்கிகள் உள்ளடங்கலாக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களைக் கொன்றொழித்தது. போரில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்றால் இது எவ்வாறு சாத்தியமாகும்?

இவ்வாறு கூறுவதற்கு என்னை மன்னிக்கவும். ஆனால் எங்களாலும், ஐ.நா, மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளடங்கலான பல்வேறு அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிள் முடிவானது எம்மால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துகின்றன.

கேள்வி: சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் சபை கலந்துரையாடும் போது மட்டுமே சனல் 04 தொலைக்காட்சி சேவையானது சிறிலங்கா மீதான போர்க் குற்ற ஆதாரங்களை முன்வைக்கின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில்: நான் ஒரு ஊடகவியலாளன். நான் தற்போது விவாதிக்கப்படும் பிரச்சினைகளையே ஆவணப்படுத்துகிறேன். இதற்கான ஆதாரங்களைத் தேடி, எனது ஆவணத்தை மேலும் வலுப்படுத்துகிறேன். ஆகவே, முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறும் போதே நான் இவ்வாறான சாட்சியங்களைத் தயார்ப்படுத்துகிறேன். இது சதி நடவடிக்கையல்ல. இதுவே ஊடகத்துறையின் பணி.

அரசாங்கங்கள் விடும் தவறுகளுக்கு அவை பொறுப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்களின் சொந்த மக்களிடமிருந்தும், அனைத்துலக சமூகத்திடமிருந்தும் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு இதயசுத்தியுடன் பதிலளிக்க வைக்கவேண்டிய மிகப் பெரிய கடப்பாட்டை ஊடகவியலாளர்கள் கொண்டுள்ளனர். இதன் காரணத்தாலேயே, பல ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டதுடன், காணாமற் போயுள்ளதுடன், படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது.

கேள்வி: சிறிலங்கா இராணுவத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவானது, சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் போலியானவை என அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஆணைக்குழுவின் விசாரணை முடிவை தவறென்று நிரூபிப்பதற்கு எவ்வாறான ஆதாரத்தைக் கொண்டுள்ளீர்கள்?

பதில்: எமது காணொலி ஆதாரங்கள் இராணுவத்தால் விசாரணை செய்யப்பட்டு, போலியானது எனக் கூறுவது தொடர்பில் நான் அதிர்ச்சி கொள்ளவில்லை. எமது ஆதாரங்கள் 'போலியானவை' அல்ல. காணொலிப் பதிவுகள் ஒவ்வொன்றும் அறியப்பட்ட சம்பவங்கள், திகதிகள் மற்றும் சம்பவ இடங்கள் போன்றன மீண்டும் மீண்டும் ஆராய்ந்து சரிபார்க்கப்பட்டு, குறுக்குச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டே எம்மால் வெளியிடப்பட்டன. படுகொலைகள், இதன் பின்னரான பாலியல் சித்திரவதைகள், தொந்தரவுகள் போன்றன மிகக் கவனமாக ஆராயப்பட்டு, தடயவியல் வல்லுனர்கள் மற்றும் ;டிஜிற்றல்' ஒளிப்பட ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நாம் அவற்றைப் பயன்படுத்தினோம்.

இந்த ஒளிப்படங்களின் தொழினுட்பத் தரவுகள், மற்றும் இதன் ஒளித்திசை என்பனவும் தடயவியல் வல்லுனர்களால் ஆராயப்பட்டன. இந்த ஒளிப்படங்கள் எந்த விதமான தொலைபேசிகளிலிருந்து அல்லது ஒளிப்படக் கருவிகளின் மூலம் எடுக்கப்பட்டன என்பதையும் எம்மால் கூறமுடியும். பல்வேறு வகையான ஒளிப்படக் கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட ஒரேவிதமான ஒளிப்படக் காட்சிகளை நாம் ஒப்பீடு செய்தோம். இவற்றுக்கிடையில் எவ்வித வேறுபாடுகளும் காணப்படவில்லை.

எம்மால் வெளியிடப்பட்ட அனைத்து காணொலிப் பதிவுகளையும் மிகப் பிரபலமான தடயவியல வல்லுனர் ஒருவர் ஆராய்ந்து உண்மையானவை என உறுதிப்படுத்தியுள்ளார். குருதி சிந்தப்பட்ட முறை போன்ற பல்வேறு விடயங்களையும் இவர் ஆராய்ந்துள்ளார். இவை போலியானவை என்பதை நிரூபிப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் தடயவியல் வல்லுனர் தெரிவித்துள்ளார். இதற்கப்பால், "இந்தக் காணொலியில் காண்பிக்கப்படும் பதிவுகள் உண்மையானவை. இந்தப் பதிவுகள் போலியாக எடுக்கப்பட்டவையல்ல. மக்கள் படுகொலை செய்யப்படுவதை இந்தக் காணொலி எவ்வித ஏமாற்றுதலுமின்றி நிரூபிக்கின்றது" என ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்திருந்தார்.

கேள்வி: சிறிலங்காத் தீவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் சனல் 04 தொலைக்காட்சி சேவையானது திட்டமிட்ட ரீதியில் தனக்கு எதிரான காணொலியை வெளியிடுவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது. இந்நிலையில் தங்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நீங்கள் ஏன் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை?

பதில்: நான் இங்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சிறிலங்காவுக்கு எதிராக ஒன்றுதிரளவில்லை. நான் எனது காணொலியின் ஊடாக போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்களை முன்வைத்து அவற்றை விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளேன்.

ஈராக்கில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்கின்ற ஆவணப்படங்களை வெளியிட்டது போன்றே தற்போது நான் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர் மீறல்களை விசாரணை செய்கின்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளேன். இதில் எவ்வித வேறுபாடுகளும் காணப்படவில்லை. இது எனது தொழில். பிரித்தானியா அரசாங்கத்தால் அல்லது சிறிலங்கா அரசாங்கத்தால் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளால் என எந்தத் தரப்பினரால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நான் அவற்றை விசாரணை செய்வேன்.

ஆனால் பொய்யான சில கூற்றுக்களுக்கு நான் பதிலளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதை எப்போதும் எதிர்க்கிறேன். எடுத்துக்காட்டாக, சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை ஆவணப்படுத்தி நான் ஆவணப்படங்களை வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் தந்ததாக மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்படுகிறது.

எனது காணொலிகள் எவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன என்பதை நீங்கள் நினைவுபடுத்த முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன். அதாவது பயங்கரவாத போர்த் தந்திரோபாயங்களை இவர்கள் பயன்படுத்தியதாகவும் சிறுவர்களைப் படையில் இணைத்தமை மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டமை போன்றவற்றை புலிகள் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட மீறல்களாக நான் சுட்டிக்காட்டியுள்ளேன். என்னால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள போர் தவிர்ப்பு வலயம் என்கின்ற காணொலியில், பொது மக்கள் வாழ்ந்த இடங்களில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பயங்கரமான தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான பதிவுகளை இணைத்துள்ளேன். அத்துடன் 'போர் தவிர்ப்பு வலயங்களுக்கு' தப்பிச் செல்ல முயன்ற தமிழ்ப் பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டமை தொடர்பாக நான் தற்போது தயாரித்துள்ள ஆவணத்தில் குற்றம் சுமத்தியுள்ளேன்.

இந்நிலையில் இவ்வாறான விடயங்களை நான் ஆவணப்படுத்துவதற்கு புலிகள் எனக்கு பணம் தந்தார்கள் என இன்னமும் சிறிலங்கா அரசாங்கம் உண்மையில் நம்புகிறதா? இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை என்பது தெளிவாகும். இதனாலேயே நான் இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களைத் தட்டிக்கழித்துள்ளேன்.

கேள்வி: சிறிலங்கா அரசாங்கமானது சனல் 04 தொலைக்காட்சி சேவையிடம் தன் மீதான குற்றங்களை நிரூபிக்கும் காணொலிகளின் மூலப்பதிவுகளைத் தருமாறு கோரியுள்ளது. இதனை நீங்கள் நிறைவேற்ற விரும்புகிறீர்களா?

பதில்: போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை சான்றுபடுத்தும் காணொலிப் பதிவுகளை சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் சிறிலங்காப் பாதுகாப்பு படை வீரர்கள் சிலரே எடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆவணங்களை சிறிலங்கா அரசாங்கம் ஏன் தனது வீரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாது? எல்லா காணொலிகளிலும், சிறிலங்காப் படை வீரர்கள் மீறல் சம்பவங்களை தமது தொலைபேசிகளில் பதிவேற்றுவதைக் காணலாம். கேணல் றமேஸ் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், அடையாளங் காணக்கூடிய ஒரு இராணுவ வீரர் ஒருவரால் கேணல் றமேஸ் படுகொலை செய்யப்பட்டதைக் காணலாம். இதேபோன்று நிர்வாணமாக்கப்பட்ட புலி வீரர்கள் பின்னர் படுகொலை செய்யப்படும் காட்சியை பதிவாக்கிய போது அதில் இராணுவ வீரர்கள் நடமாடுவதையும் அவர்கள் இவற்றை தமது தொலைபேசிகளில் பதிவாக்குவதையும் காணமுடியும். இக்காணொலிப் பதிவுகளில் சில இராணுவ வீரர்கள் கதைப்பதைக் கேட்க முடிவதுடன், அவர்களில் சிலரை அடையாளம் காணமுடிகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், தமது கட்டளையின் கீழ் செயற்படும் இராணுவ வீரர்களிடம் சிறிலங்கா இராணுவ ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு, காணொலிகளைப் பெற்றுக் கொள்ளாதது ஏன்? இதைவிடுத்து இவர்கள் ஏன் பிரித்தானிய படத் தயாரிப்பாளர் ஒருவரிடம் காணொலிகளைத் தருமாறு கோருகிறார்கள்?

இந்த காணொலிகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் என்னிடம் இதன் மூலப்பிரதிகளைத் தருமாறு கோரவில்லை. மாறாக இந்த இரகசியங்களை வெளியிட்டவர்களைப் பின்தொடர்வதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் மூலப்பிரதிகளைக் கேட்கிறது. இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையானது இதன் பதிவுகள் சிலவற்றை சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது. பெரும்பாலான பதிவுகளை தற்போது இணையத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி: பொதுமக்களின் பார்வைக்காக காணொலி ஆவணங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலைப் பெறாது வெளியிட்டதன் மூலம் நீங்கள் ஊடகத்தர்மத்தைப் பேணத் தவறிவிட்டதாக சிறிலங்கா அதிகாரிகள் அறிவித்திருந்தனர். நீங்கள் வெளியிட்ட ஆவணமானது பாரபட்சமானது, ஏற்றுக் கொள்ள முடியாதது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்து. இதற்கான உங்களின் பதில் என்ன?

பதில்: நாங்கள் தொலைக்காட்சிக்கான ஆவணப்படங்களையும் தயாரித்த போது, சிறிலங்கா அரசாங்கத்திற்கு குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விபரத்தை அனுப்பியிருந்தோம். இது தொடர்பில் நேர்காணல் ஒன்றை வழங்குமாறும் அதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது அதன் தரப்பு நியாயத்தைக் கூறமுடியும் எனவும் கேட்டிருந்தோம். ஆனால் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு இதற்கு மறுத்துவிட்டது. "சிறிலங்கா அரசாங்கமானது சனல் 04 அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் விதமாக நடக்காத வரை, எந்த வேளையிலும் இதனுடன் தொடர்பைப் பேணாது" என சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்திருந்தது.

இவ்வாறிருப்பினும் கூட, நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதித்துவத்தை மிகத் தெளிவாக பிரதான குற்றச்சாட்டுக்களின் போது இணைத்திருந்தோம். நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் அதன் பதிலைக் கோரிய போதும் அவர்கள் அதனை எமக்குத் தர மறுத்தனர் என்பதே உண்மையாகும்.

கேள்வி: நேர்காணல் வழங்கியவர்கள் கூறிய விடயங்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்காத் தூதர் பி.எம்.அம்சா தெரிவித்திருந்தார். எடுத்துக்காட்டாக, 'அதாவது ஆஸ்பத்திரிக்கு எய்ம் பண்ணித்தான் அடிச்சிருப்பினம்' என நேர்காணல் வழங்கிய ஒருவரால் தமிழில் கூறியதானது 'அவர்கள் குறிவைக்கப்பட்டு, மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம்' எனத் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு காணொலியில் கூறப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாகவே இவ்வாறான தவறான மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது என்கின்ற குற்றச்சாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்களது மொழிபெயர்ப்பாளர்கள் யார்? நீங்கள் ஏன் மொழிபெயர்ப்பை உறுதிப்படுத்தி வெளியிடவில்லை?

பதில்: ஐ.நா மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றில் 'போர் தவிர்ப்பு வலயம்' என்கின்ற காணொலியைத் திரையிடுவதற்கு முன்னர், நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் இச்சந்திப்பில் அவர்கள் தரப்பு விடயங்களைக் கூறுமாறு அழைத்திருந்தோம். ஐக்கிய நாடுகள் சபையின் சந்திப்பில், இத்திரைப்படம் திரையிடப்பட்ட பின்னரே சிறிலங்காத் தூதுவர் அங்கு வந்ததுடன், திரைப்படத்தில் குறிப்பிடாத விடயங்களை அறிக்கையாக வாசித்தார். பின்னர் இது தொடர்பில் எவரும் பதிலளிக்க முன்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

ஐரோப்பாவில் நாங்கள் திரைப்படத்தை திரையிட்ட போது சரியான நேரத்தில் அதற்கு சமூகம் தராத அம்சா திரைப்படம் முடிந்த பின்னர் அங்கு வந்ததுடன், சில கேள்விகளைக் கேட்ட பின்னர் அவற்றுக்கு எவரும் பதிலளிக்க முன்னர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இந்நிலையில் அம்சா அங்கு வந்ததன் நோக்கம் என்ன என்பதை என்னால் உணரமுடியவில்லை.

அம்சா குறிப்பிட்ட தமிழ் வசனமானது உண்மையில் என்னால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் உள்ளடக்கப்படவில்லை. இந்தக் கூற்றுக்கள் உண்மையில், தொலைக்காட்சி ஆவணங்களில் காணப்படுகின்றன. நாங்கள் தவறான எவரையும் பணியில் அமர்த்தவில்லை. நாங்கள் சில மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்தினோம். மீண்டும் மீண்டும் பலதடவைகள் அவர்கள் மொழபெயர்ப்புக்களை சரிபார்த்தார்கள். மருத்துவமனையைக் குறிவைத்து சிறிலங்கா அரசாங்கம் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் இளைய மகனான 12 வயதேயான சிறுவன் படுகொலை செய்யப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சிறிலங்காவின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதர் மறுத்துள்ளார். இச்சிறுவன் பதுங்குகுழி ஒன்றில் வைத்து சுடப்பட்டுள்ளதாக தடயவியல் வல்லுனர் கூறுவதால் இவனை சிறிலங்கா இராணுவம் கொல்லாது அவனது சொந்தப் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட மெய்க்காவலர்கள் இச்சிறுவன் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்படுவதற்கு முன்னரே கொல்லப்பட்டிருக்கலாம் என்பது சாத்தியமான குற்றச்சாட்டாகும் என வலியுறுத்தியிருந்தார். ஏன் இந்தச் சாத்தியப்பாடான கருத்து ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை?

பதில்: இந்த விவாதத்தில் நான் ஏன் ஈடுபடத் தயக்கம் காண்பிக்கிறேன் என்பதை நீங்கள் அவதானிக்க முடியும். இந்தச் சிறுவனை ஐந்து தடவைகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தமது கண்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தச் சிறுவனின் மெய்க்காவலர்கள் எவ்வாறு தமது கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில், தமது தலைகளின் பின்புறத்தே தாமே சுட்டிருப்பார்கள் என்பதை அம்சா மிகத் தீவிரமாக ஆராயவில்லையா?

கேள்வி: சிறிலங்காவின் கொலைக்களங்களின் தொடர்ச்சியாக நீங்கள் வேறு திரைப்படங்களை வெளியிடவுள்ளீர்களா?

பதில்: இது தொடர்பாகக் வேறு ஏதாவது சாட்சியங்கள் கிடைத்தால் இது சாத்தியப்படும்.

கேள்வி: நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் பங்கு பெறும் உச்சி மாநாட்டில் சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? இது உங்களது அடுத்த கட்ட வாதிடும் களமாக உள்ளதா?

பதில்: நிச்சயமாக, கடந்த தடவை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாட்டில் ஊடக உறுப்பினர் என்ற வகையில் நான் பங்குபற்றியது போன்று நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பிரசன்னமாக ஆவலாக உள்ளேன்.

சிறிலங்கா அரசாங்கம் என்னை வரவேற்பார்கள் என நாம் நம்புகிறேன். அவர்கள் என்னையும் என் போன்ற அனைத்துலக ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களையும், பொதுநலவாய அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளான மனித உரிமைகள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தின் அடிப்படையில் வரவேற்று, எமக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நான் நம்புகிறேன்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130619108502

  • கருத்துக்கள உறவுகள்
ஏற்கனவே  கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பல முறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில்  விடையளிக்கப்பட்டுள்ளது. சிலோன் ருடே போன்றவற்றுக்கு விடையளிப்பது நேரவிரயம்.
 
அம்சாவின் பிள்ளைகளையும் கையை கட்டி சுட்டால் தான் நம்புவார் போல உள்ளது.
 
"சிறிலங்கா அரசாங்கமானது சனல் 04 அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் விதமாக நடக்காத வரை, எந்த வேளையிலும் இதனுடன் தொடர்பைப் பேணாது" என சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்திருந்தது.

 

 

 
கொலைகளையும் செய்து விட்டு கொழுப்பு கதைக்கு மட்டும் குறைவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.