Jump to content

“ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் பதிவு செய்வது எனது கடமை”


Recommended Posts

உலகின் மிகமுக்கியமான திரைப்படவிழாக்களில் ஒன்றான ‘ஷங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் (Shanghai International Film Festival) விருதுக்கு போட்டியிடும் படங்களில் ஒன்றாக A GUN & A RING என்கின்ற ஈழத்தமிழரின் திரைப்படமும் தெரிவிவாகியிருந்தது. ஈழத்தமிழர் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் லெனின் எம்.சிவம் இயக்கத்தில் TTN ‘படலைக்குப்படலை’ புகழ் மன்மதன் என்கின்ற பாஸ்கர் மற்றும் பலரின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ‘ஷங்காய் திரைப்பட விழா’வில் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்றுத் திரும்பியிருந்த பாஸ்கர் அவர்களை, எமது ஊடக இல்லத்திற்கு அழைத்து நேர்காணல் செய்திருந்தோம். அவர் எம்முடன் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஊடக இல்லம்:- எமது ஊடக இல்லத்தின் சார்பாக உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்று உலகில் உள்ள தமிழர்கள் பெருமை கொள்ளவேண்டிய ஒரு விடயம் நடந்துள்ளது. சீன நாட்டில் ‘ஷங்காய் திரைப்படவிழா’வில் தமிழர்களின் திரைப்படமான A GUN & A RING திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அது பற்றிக் கூறுங்கள்....?

 

பாஸ்கர்:- முதல் முதலாக தமிழ் மொழியில் மற்றும் உலகத் தமிழர்களின் திரைப்படங்களில் இந்த A GUN & A RING திரைப்படம் ‘ஷங்காய் திரைப்பட விழா’வில் விருதுக்குத் தெரிவாகியுள்ளது. 1655 திரைப்படங்களில் 12 படங்கள் தெரிவாகின. அவற்றில் இந்த A GUN & A RING திரைப்படமும் அடங்கும்.

ஊடக இல்லம்:- உலக வரலாற்றிலேயே முதன் முதலாக ஷங்காய் திரைப்படவிழாவில் தமிழர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட பெருமை உங்களைச் சாரும். அது பற்றி எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

பாஸ்கர்:- தனிப்பட்ட முறையில் எனக்கும் ஓர் ஆசையும் கொள்கையும் இருந்தது. இப்படி ஒரு விழாவில் நான் கலந்துகொள்ளவேண்டும். செங்கம்பளத்தில் நடக்கவேண்டும் என்று. இது எங்கள் ஈழத் தமிழ்க் கலைஞர்கள் அனைவருக்கும் உண்டு. அதேநேரம் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் லெனின் எம்.சிவம் அவர்கள் எமது மக்களுக்காக நாங்கள் இப்படிச் செய்யவேண்டும் என்ற கொள்கையாகவே இதை வைத்திருக்கிறார். அதை அவர் இன்று சாதித்துவிட்டார். ஆரம்பத்தில் அந்த செங்கம்பள வரவேற்பில் கலந்து கொள்ளும் போது நான் திகைத்துவிட்டேன். எதையும் அறியாமலே நான் அந்த செங்கம்பளத்தில் நடந்து சென்றேன். அவ்வாறே இயக்குநர் உட்பட அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.

பின்பு விருது அறிவிக்கும் அந்தநாள். அதாவது ‘ஷங்காய் திரைப்படவிழா’வின் இறுதி நாள் அன்று அந்த நிகழ்வை A GUN & A RING திரைப்பட குழுவினர் ஆகிய நாங்களே ஆரம்பித்துவைக்கும் வாய்ப்புக்கிடைத்தது. அந்த செங்கம்பள வரவேற்பைக் கூட நாங்களே ஆரம்பித்துவைத்தோம். அப்போது கூட நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு முன்னால் ஒன்று இரண்டு குழுக்கள் சென்றதாக நினைத்தே நாங்கள் சென்றோம். அங்கு சென்றபோது தான் தெரிந்தது. ஷங்காய் மாநில அமைச்சரும் ஷங்காய் திரைப்படவிழாக் குழுவின் தலைவர், செயலாளர் எங்களைக் கை குலுக்கி வரவேற்று எங்களுக்கு மதிப்பளித்தார்கள். அதற்குப்பின்னர் தான் தெரியும் நாங்கள் முதலாவதாகச் சென்று விழாவை ஆரம்பித்துவைத்தமை. இந்த விடயத்தை இப்பொழுது நினைத்தால் கூட நம்பமுடியாமல் உள்ளது.

ஊடக இல்லம்:- இது பெருமைசேர்க்கக்கூடிய விடயம். உங்கள் கலைப் பயணத்தில் இந்த நிலை உங்களுக்கு எவ்வாறான உத்வேகத்தை அளித்துள்ளது?

பாஸ்கர்:- இதன் பின்னர் எமது திரைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு நான் கூறிய விடயம், அதாவது நாங்கள் எல்லோரும் இதனை ஒரு கடமையாகத் தான் செய்துகொண்டு வருகின்றோம். திரைப்படங்களை வளர்க்கவேண்டும். எமது மக்களின் கதைகளைப் பதிவாக்கவேண்டும் என்று. இருப்பினும் இன்னும் இன்னும் வலுவாக வேலை செய்து, எமது திரைப்படங்களை லெனின் அண்ணா கொண்டு செல்வது போல், திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லவேண்டும். அவ்வாறு கொண்டு சென்றால் எமது கதைகளும் அவர்களைச் சென்றடையும் அதேவேளை, வேறு திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களும் எம்மைத் தேடிவருவார்கள். இன்று வரைக்கும் நாங்கள் தேடிச் சென்று எமக்கு எதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு செய்தால் அவர்கள் எம்மைத் தேடிவருவார்கள் என்பதற்கு லெனின் அண்ணா முழு உதாரணம்.

ஊடக இல்லம்:- A GUN & A RING திரைப்படத்தின் உங்கள் நடிப்புத் திறமை பற்றிப் பேசப்பட்டுள்ளது. அதுபற்றிக் குறிப்பிடுங்கள்?

பாஸ்கர்:- A GUN & A RING திரைப்படத்தைப் பொறுத்தளவில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ‘ஷங்காய் திரைப்படவிழா’வில் நடுவர்களுக்கு தலைமை தாங்கியவர் இலண்டனைச் சேர்ந்த ரொம் குப்பர் என்பவர். அவர் இயக்குநரும் நடிகருமாவார். அவர் இப்போது உள்ள சினிமாத்துறையில் பிரபல்யமானவர். அவருடைய திரைப்படங்கள் ‘ஒஸ்கார்’, ‘கான்’ திரைப்பட விழாக்ககளில் விருதுகள் வென்றவர். அவர் என்னிடம் வந்து உனது நடிப்பு நன்றாக உள்ளது. நன்றாக அமைந்துள்ளது. என்னுடைய தனிப்பட்ட முறையில் உனக்கு சிறந்த பாராட்டுக்கள் என்று கூறி வாழ்த்தினார். விழாவின் இறுதிநாள் நிறைவின்போது என்னை சந்தித்தபோதே அவர் என்னைப் பாராட்டினார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் உடனடியாக எமது இயக்குநரிடம் தெரிவித்தேன் அவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

ஊடக இல்லம்:- உங்களுக்கு அதாவது தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்த திரைப்படமான A GUN & A RING திரைப்படத்தின் கதைபற்றி சொல்லுங்கள்....?

பாஸ்கர்:- அதில் ஆறு கதைகள் பின்னப்பட்டுள்ளன. அதாவது ஆறு விதமான கதைகள். அந்த ஆறுவிதமான கதைகளும் எமது புலம்பெயர்ந்த மக்களின் விடயங்கள் மற்றும் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான விடயங்களாய் உள்ளன. இப்படத்தில் முற்றுமுழுதாக ஈழம் சம்பந்தமான விடயங்கள் தான் தலைதூக்கி நிற்கின்றன. இன்று தனிப்பட்ட முறையில் அதைநான் நினைத்துப் பெருமைப்பட்டது என்னவென்றால் இத்திரைப்
படம் எத்தனை ஆயிரம் மக்களுக்கு மத்தியில் திரையிடப்பட்டது. எத்தனை ஆயிரம் படங்களோடு சேர்ந்து போட்டியிட்டது. மற்றும் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள் எல்லாம் பார்த்து இத்திரைப்படத்தைப் பாராட்டியதொரு உண்மை.

குறிப்பாக தெரியாதவர்களுக்கெல்லாம் எங்களின் நிலைபற்றி லெனின் அண்ணா இப்படத்தின் வாயிலாகத் தெரியப்படுத்தியுள்ளார். இப்படத்தில் எமது மக்கள் படுகின்ற துன்ப துயரம் மற்றும் கனடா வாழ் தமிழ் மக்கள் படும் விடயங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. ஒரு துப்பாக்கியும் மோதிரமும் 6 கதைகளுக்குள்ளும் சென்று வருகின்றது.

ஊடக இல்லம்:- இப்படியான ஒரு படமான A GUN & A RING திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பற்றி நீங்கள் கட்டாயம் இங்கே சொல்லவேண்டும்?

பாஸ்கர்:- ‘ஷங்காய் திரைப்படவிழா’விலேயே எழுதியிருந்தார்கள் இலங்கையின் தலை சிறந்த இயக்குநர் என்று. அதைப் பார்த்தவுடனேயே எனக்குப் பெருமையாகவும் சந்தோசமாகவும் இருந்தது. அப்படி எமது ஈழத் திரைப்படத்துறை சார்ந்த கலைஞர்கள் எல்லாருமே அறிந்திருப்பார்கள் தற்போது எமது லெனின் அண்ணா வந்து ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று. அத்தோடு அவர் எல்லோருக்கும் ஒரு சிறந்த உதாரணமான தலை சிறந்த இயக்குநர் என்று நான் சொல்கின்றேன். அவர் முதல் எடுத்த ‘1999’ திரைப்படம் கனடாவில் இடம்பெற்ற இரண்டு விழாக்களில் 9 விருதுகளை வென்றது. இன்று இந்தத் திரைப்படத்தைத் தமிழர்களுக்கு எல்லாம் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் ‘ஷங்காய் திரைப்படவிழா’விற்குக் கொண்டு சென்றுள்ளார்.

இதன்மூலம் எமது இயக்குநர்களும் இந்த நிலைக்கு வருவினம், இருக்கினம் என்பதற்கு நல்லதொரு உதாரணம். அதேபோன்று இத்திரைப்படத்தைத் தயாரித்த விஸ்ணு முரளிதரன், நல்ல ஒரு ஆர்வம் உள்ளவர். கலையை நேசிப்பவர். கலையைக் கற்றுக் கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு படத்தை இயக்கப்போவதாகப் பல தயாரிப்பாளர்களிடம் லெனின் அண்ணா கதை சொன்னபோது, இந்தத் தயாரிப்பாளர், நான் உங்களை நம்பி இப்படத்தைத் தயாரிப்பேன். நீங்கள் படத்தை ஆரம்பியுங்கள் என்று முன்வந்து இப்படத்தைத் தயாரித்து இந்தளவிற்குக் கொண்டுவந்துள்ளார் என்று சொன்னால் இப்படத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியில் அவரும் ஒருத்தர். அவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஊடக இல்லம்:- இந்த ‘ஷங்காய் திரைப்பட விழா’வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா?

பாஸ்கர்:- லெனின் அண்ணா இத்திரைப்படத்தை எந்த எந்த திரைப்படவிழாவிற்கு கொடுத்திருக்கின்றார் என்ற விடயம் எமக்குத் தெரியாது. அது தயாரிப்பாளர், இயக்குநர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை காரணமாக வெளியே தெரியாது. இருப்பினும் திடீரென அவர் எனக்குக் கூறினார் எமது திரைப்படம் ஷங்காய் திரைப்பட விழாவிற்கு தெரிவாகியிருக்கின்றது என. முற்றுமுழுதான தகவல் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் என்னை கட்டாயம் வரும்படி கேட்டுக்கொண்டார். நான் எனது போக்குவரத்து, வேலை வாய்ப்பு போன்ற சூழ்நிலையைக் காட்டி மறுத்தேன். இருப்பினும் எமது வளர்ச்சிக்கு இவ்வாறான பயணம் அவசியம் எனக் காட்டி சொல்லப்பட்ட நிலையில், அதற்கான வேலைத்திட்டங்களை ஒழுங்கு படுத்திச் சென்றேன். ஆனால், இப்படம் சம்பந்தமான குழுவினர் எவரும் நினைத்துப் பார்க்கவேயில்லை இந்நிகழ்வில் கலந்துகொள்வோம் என்று.

ஊடக இல்லம்:- இந்த ஷங்காய் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட போது உங்கள் மன உணர்வு எவ்வாறு இருந்தது?

பாஸ்கர்:- நாங்கள் அங்கே விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து இங்கு புறப்பட்டு வரும்வரை சிறந்த முறையில் கவனம் செலுத்தப்பட்டது. நாங்கள் ஏற்கெனவே படங்கள் நடிக்கிறோம். ஆனால், யாருமே உச்சத்தை எட்டவில்லை. யாரும் உச்சத்துக்கு போகவுமில்லை. ஆனால் நாங்கள் உச்சத்தை எட்டிவிட்டோம் உச்சத்துக்கு போய் விட்டோம் என்ற மன நிலையை அங்கே திரைப்படவிழாக் குழுவினர் தந்தார்கள். ஏனெனில் நாங்கள் அங்கு சென்றடைந்த நிலையில் இருந்து வரும் வரை தினமும் போக்குவரத்து வசதிகள், தங்குமிட வசதிகள், உணவு வசதிகள் என ஒழுங்குபடுத்தினர். நாம் வெளியில் செல்லும் போது எமக்கு உதவி வழங்க ஆட்களை நியமித்தனர். இவ்வாறான கவனிப்புகளைப் பார்க்கும் போது பெருமையாக இருந்தது. இவ்வாறான ஒரு நிகழ்வில் தமிழர்கள் நாம் கலந்து கொள்கிறோமே என உணரவைத்தது. இதற்கு எமது இயக்குநர், தயாரிப்பாளர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

ஊடக இல்லம்:- உங்களுடைய திரைத்துறையின் ஆரம்ப காலம் பற்றிக் கூறுங்கள்?

பாஸ்கர்:- என்னுடைய திரைத்துறையின் ஆரம்ப காலம் அநேகமாக உங்கள் எல்லோருக்கும் தெரியும். ‘TTN’ தொலைக்காட்சியில் ‘படலைக்குப் படலை’ என்ற தொடரின் ஊடாக சாதாரண ஒரு நடிகனாக வந்து ஆரம்பித்தேன். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நடிப்புத் துறையில் ஈடுபட்டு, ‘நல்லூர் ஸ்தானினால்’ நடத்தப்பட்ட குறும்படப்போட்டிக்கு எனது நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியான என்னுடைய முதல் குறுந் திரைப்படமான ‘நதி’ வெளியானது. இத்திரைப்படம் உலகளாவிய ரீதியில் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் பல விருதுகளை வென்றது. அத்திரைப்படம் ‘கான் (Cannes)’ திரைப்படவிழாவில் விருதுக்குத் தெரிவானது. அங்கே திரையிடப்பட்டது. அதன் பிற்பாடு பல குறும்படங்களை இயக்கி, அவற்றுக் கூடாக பல விருதுகளை வென்று இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஆயினும் இந்த A GUN & A RING திரைப்படத்தில் நான் ஒரு சாதாரண நடிகனாக முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளேன்.

ஊடக இல்லம்:- இதுவரை நீங்கள் நடித்து வெளியாகியுள்ள தமிழ்த் தேசியம் சார்ந்த குறும்படங்கள் பற்றி....?

பாஸ்கர்:- நான் இதுவரை நடித்த குறும்படங்கள் அனைத்துமே தமிழ்த் தேசியம் சார்ந்ததாகவே உள்ளன. அத்தோடு நான் இயக்கிய குறும்படங்களும் தமிழ்த் தேசியம் சார்ந்ததாகவே இருக்கிறது. நான் எடுக்கும் குறும்படங்கள் ஏன் தமிழ்த் தேசியம் சார்ந்ததாக உள்ளது என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். இதுகுறித்து என்னுடைய திரைப்படத்துறையில் உள்ள கலைஞர்களும் ஏனைய கலைஞர்களும் கேலியாகப் பேசியுள்ளனர். அது மட்டு
மல்லாமல், அதுதான் உனக்கு வருமா என்று கூட பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு நான் கூறிய பதில், நாங்கள் முதலில் எமது நாட்டுக்கும் எமது இனத்திற்கும் என் சார்ந்த சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கும் எங்களின் கதைகளைப் பதிவாக்கவேண்டும். எங்களின் மக்களுடைய துன்பங்களை, இன்பங்களை பதிவாக்கிய பின்னரே, நான் பொழுதுபோக்குப் பற்றி சிந்திப்பேன். தற்போது இதனை ஒரு கடமையாகவே செய்ய நினைக்கின்றேன் என்று அவர்களுக்கு கூறினேன்.

ஊடக இல்லம்:- தற்போது நீங்கள் நடித்திருக்கும் முழு நீள திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றி..?

பாஸ்கர்:- இந்த A GUN & A RING திரைப்படத்தில் நடிக்க செல்வதற்கு முதல் எடுத்த முழு நீள திரைப்படம் ‘தீரா நதி’ நீங்களும் அறிந்திருப்பீர்கள். அத்திரைப்படத்திற்கு பின்னர் நான் எடுக்கும் முழுநீளத் திரைப்படம் ‘வஞ்சகம்’. அத்திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் அமைக்கப்பட்டுவிட்டன. அது இன்று முற்றுமுழுதாக முடிந்து படத்தொகுப்பு வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. A GUN & A RING திரைப்படம் வெளியான பின்னர், ஓரிரு மாதங்களில் இந்தத் திரைப்படம் வெளிவரும். அனேகமாக A GUN & A RING திரைப்படம் இன்னும் பல விருது விழாக்களுக்கு செல்ல உள்ளது. அனேகமாக படக்குழுவினரின் தகவல்களை வைத்து சொல்கிறேன். அத்திரைப்படம் வரும் செப்டெம்பர், ஒக்ரொபர் மாதமளவில், மக்களின் பார்வைக்கு திரையிடப்படலாம்.

ஊடக இல்லம்:- நீங்கள் நடித்து வெளியிடுகின்ற குறும்படங்கள் காலத்தின் தேவைகளாக உள்ளன. அதுபற்றி இங்கே குறிப்பிடுங்கள்?

பாஸ்கர்:- நான் முதலில் குறிப்பிட்டதுபோல், பரிஸ், இலண்டன் மற்றும் கனடாவில் நடைபெறுகின்ற குறும்பட விழாக்களை ஒட்டியே நாங்கள் குறும் படங்களை எடுக்கின்றோம். இதன்போது, நான் தினமும் பார்க்கும் விடயங்கள், படிக்கும் தகவல்கள் போன்ற மக்கள் சார்ந்த விடயங்களை பதிவாக்கும் நோக்கொடு எடுத்துவைத்திருப்பேன். பின்னர் அதனை சந்தர்ப்பம் கிடைக்கும் போது படமாக எடுக்கின்றேன். அதை நான் குறும்பட விழாக்கள் மற்றும் இணைய வாயிலாக வெளியில் கொண்டுவருகின்றேன். எனது மக்கள் சார்ந்த விடயங்களை எடுக்கும் உணர்வு தானாக வருகின்றது.

ஊடக இல்லம்:- கலைத்துறையில் உங்களுக்கு எவ்வாறு இந்த ஆர்வம் ஏற்பட்டது?

பாஸ்கர்:- நான் யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவன். எமது ஊரில் நாட்டுக்கூத்து மற்றும் நாடகக்கலைகளை எனது ஊரைச் சேர்ந்தவர்கள் செய்வது வழமை. அப்போது சிறுவயது முதலே இவற்றைப் பார்த்துப் பார்த்து எனக்கு இத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அதற்குரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. பின்னர் இங்கு வந்து தமிழீழ இசைக்குழுவில் இணைந்து ட்ரம் வாத்திய இசைக்கலைஞனாக இருந்தேன். அது தான் இந்த கலைத்துறையில் எனக்கு ஆரம்பமாக இருந்தது. பின்னர் படிப்படியாக நடிப்புத்துறைக்கு அடி எடுத்துவைத்தேன். தற்போது என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துவிட்டுள்ளது. இதற்கு காரணமான ‘படலைக்கு படலை’ குழுவினருக்கும், ‘திரைப்படக்’ குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஊடக இல்லம்:- தாயகத்தில் வாழ்கின்ற கலைஞர்களுடன் உங்களுக்கு தொடர்புகள் உள்ளனவா?

பாஸ்கர்:- ஒரு சிலருடன் தொடர்புகளை வைத்துள்ளோம். ஆயினும் சரியான நேரம் அமையவில்லை. எங்களின் படைப்புக்களில் அவர்களை இணைத்துக் கொள்வதற்கு. தற்போது இசைப்பிரியன் அவர்கள் இந்தியாவில் இருக்கின்றார். எனது நண்பர்கள் இலண்டனில் தயாரித்த ‘வாழ்க்கை’ என்ற திரைப்படத்தில் எனது இசை அமைப்பாளர் கஜிநாத் நடித்திருக்கிறார். ஒரு குடும்பம் நடித்திருக்கிறது. அத்திரைப்படத்திற்கு இசைப்பிரியன் அவர்கள் இசை அமைத்துள்ளார். 5 பாடல்கள் உள்ளன. கடந்தமாதம் தான் அந்தப் படத்திற்கான ஒலிநாடா இலண்டனில் வெளியிடப்பட்டது. இவ்வாறு ஈழத்தில் ஆரம்ப காலத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் வேறு நாடுகளில் இருந்தாலும் எம்முடன் தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.

ஊடக இல்லம்:- ஈழத்துக் கலைஞர்கள் எடுக்கின்ற படைப்புக்கள் பொருளாதார ரீதியில் வெற்றிபெறாமைக்கு நீங்கள் கூறும் காரணம்?

பாஸ்கர்:- ஆரம்பத்தில் எமது படைப்புகளை எமது மக்கள் வந்து பார்க்கவேண்டும் என்று குற்றம் குறை கூறியிருக்கின்றோம். இப்போதும் அவ்வாறுதான் கூறுகின்றோம். ஆனால், தமிழ்நாட்டு மொழியும் தமிழ் மொழியாக இருப்பதனால், எமது மக்களும் தமிழ் சினிமாவை பார்க்கின்றனர். நானும் கூடத்தான் சிறுவயது முதல் தமிழ் சினிமாவைப் பார்க்கின்றேன். அந்தத் தரத்திற்கு எமது படைப்புக்களும் வரவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். எமது ஈழத் தயாரிப்பாளர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் கூடத் தமிழ் நாட்டுக்குச் சென்றுதான் படத்தைத் தயாரிக்கின்றார்கள். ஏன் என்றால் பொருளாதாரத்தை எதிர்பார்த்து. தென்னிந்தியச் சினிமா படைப்புக்களின் தரத்திற்கு எமது படைப்புக்கள் இருந்தால்தான் எமது மக்கள் பார்க்க வருவார்கள்.

அதற்கு முன்வருவதற்கு தயாரிப்பாளர்கள் இல்லை என்றே கூறுவேன். எங்களிடம் பொருளாதார வசதிகள் குறைவு, நான் கூட வேலை செய்துதான் அதில் காசு கொஞ்சம் மீதப்படுத்தி திரைப்படங்களையும் எடுக்கின்றேன். திரைப்படங்களில் எனக்கு காசு வரப்போவது இல்லை. பொழுதுபோக்கிற்காக நான் இதைச் செய்யவில்லை. எமது மக்களின் விடயங்கள் பல பதிவு செய்யப்படவில்லை.

அவற்றை வெளிக்கொண்டுவரும் நோக்கோடு தான் நான் இதைச் செய்கின்றேன். நல்லதோ, கெட்டதோ எமது மக்கள் எமக்கு ஆதரவு தந்து எம்மை வளர்த்துவிடுவார்களாக இருந்தால், காலப் போக்கில் அவர்கள் எதிர்பார்க்கும் திரைப்படங்களை எங்களால் கொடுக்கமுடியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் கூட எமது திரைப்படங்களைப் பார்ப்பார்களாக இருந்தால் எமக்கு மிகப் பெரும் வெற்றி. அப்படியான ஒரு வரவேற்பை எமது மக்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். இது எமது அடுத்த கட்ட நகர்விற்கு எம்மை நகர்த்தும். இதையே புலம்பெயர்ந்த மக்களிடம் நான் கூறவிரும்புகின்றேன்.

ஊடக இல்லம்:- தென்னிந்திய சினிமாவில் நடிப்பதற்கு உங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் பற்றி?

பாஸ்கர்:- ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இங்கு எனது குடும்பச் சூழ்நிலை மற்றும் கடவுச் சீட்டுப் பிரச்சினை காரணமாக வாய்ப்பு கைநழுவிப்போனது. இந்த வாய்ப்பு வந்து அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன் அண்ணா அவர்கள் மூலம் தான் கிடைத்தது. அதற்குப்பின் பி.எல்.
தேனப்பன் அவர்கள் இயக்கிய ‘ஐயானார்’ திரைப்படத்தில் ஆதிக்குத் தம்பியாக நடிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.

அதுவும் கைகூடவில்லை. அதன்பின்னர், எமது ஈழம் தொடர்பான கதையை மையப்படுத்தி ‘இனம்’ என்ற ஒரு படம் வெளிவரவுள்ளது. அத்திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பமும் எனக்கு அமைய வில்லை. இப்படி பலவாய்ப்புக்கள் கிடைத்தும் கைகூடவில்லை. மீண்டும் வாய்ப்புக்கள் கிடைக்கும் இடத்தில் எமது ஈழத்தமிழ் மக்களுக்கு பெருமை சேர்ப்பதற்காக தென்னிந்திய சினிமாவில் இணைந்து நடிக்கக் காத்திருக்கின்றேன்.

ஊடக இல்லம்:- உங்களுடைய கலைப் பயணத்தில் ஊடகங்களின் பங்களிப்பு இன்றி அமையாதது. இவ்வாறான ஊடகங்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பாஸ்கர்:- புலம்பெயர் மண்ணில் செயற்படுகின்ற எமது ஊடகங்களில் சில இத்திரைப்பட விழாக்களின் தரங்கள் மற்றும் நிலைமைகள் அறிந்து, அவர்களாக எங்களை நோக்கிவந்து இதனை வெளிக்கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றன. இதனால் நாங்கள் தான் இப்படி ஒரு விடயம் நடைபெறுகின்றது எனக் கூறி அவர்களிடம் சென்று விடயத்தைக் கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. உதாரணத்துக்கு தமிழ்நாட்டுத் திரைப்படத்துறையில் ஒருவர் சறுக்கி விழுந்தால் கூட ஆயிரம் ஊடகங்களில் வந்துவிடும். ஆனால், நாங்கள் இவ்வளவு தூரம் சென்று வந்துள்ளோம். ஆயினும் எமது ஈழத்தமிழ் ஊடகங்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை. பரிஸில் உள்ள ஊடகங்கள் எமது வளர்ச்சிக்கு ஒத்தாசையாக உள்ளன. அவ்வாறு ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் அதிக ஊடகங்கள் உள்ளன. அவற்றின் ஒத்துழைப்புக்கள் எமக்குப் போதுமானதாக இல்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்திச் சொல்கின்றேன்.

ஊடக இல்லம்:- எமது ஊடக இல்லத்தின் வாயிலாக தாயக மற்றும் புலம்பெயர்ந்த தேசத்து எமது உறவுகளுக்கு நீங்கள் கூறவிரும்புவது என்ன?

பாஸ்கர்:- எமது மக்கள் அனைவரும் எங்களது கலைஞர்களை வளர்த்து விடுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். முள்ளிவாய்க்கால் சம்பவத்தைக் கூட எமது மக்கள் பலர் மறந்து வாழக்கூடிய நிலை உள்ளதை நான் உணர்கின்றேன். அப்படியான விடயங்களை மறக்காமல் இருக்கவேண்டும். எமது இனத்திற்கு நடைபெற்ற அட்டூழியங்களை மறக்காமல் இருக்கவேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கின்றேன்.

மற்றும் எமது மக்கள் எம் கலைஞர்களை ஆதரித்து, கலைஞர்களின் செயற்பாட்டை வரவேற்றால்தான் எங்களின் மக்களுக்கு நடைபெறுகின்ற விடயங்கள் அனைத்தையும் பதிவாக்கிப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். அதற்கு எமது மக்கள் தான் எமக்கு ஆதரவு தரவேண்டும். மற்றும் பிரான்சில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் ஏனைய தமிழ் மக்களும் எமது ஊடகங்களுடனும் இணைந்து நிற்கவேண்டும். என்பதையும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஊடக இல்லம்:- நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் எமது மக்களைச் சென்றடையும். இது வரை நேரமும் எமது அழைப்பை ஏற்று எமது ஊடக இல்லத்திற்கு வருகைதந்து பொறுமையாக பதிலளித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, உங்களுடைய கலைப் பயணம் மேன்மேலும் இவ்வாறான விருதுகளைப் பெற்று வளர எமது ஊடக இல்லத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக்கொண்டு விடைபெற்றுக் கொள்கின்றோம்.

சந்திப்பு : கந்தரதன் - படப்பிடிப்பு : சுதாகர்

- See more at: http://www.tamilkathir.com/news/13492/58//d,full_art.aspx#sthash.KvjRWupR.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.