Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிப்பிள்ளை அம்மையாரின் விஜயம் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவிப்பிள்ளை அம்மையாரின் விஜயம் - நிலாந்தன்

02 செப்டம்பர் 2013

Navi%20with%20Mahi%206_CI.jpg

 

வீட்டுக்கு வரும் ஒரு விருந்தினரை குடும்பத் தலைவர் கனம் பண்ண விரும்பவில்லையென்றால், அந்த விருந்தினர் வரும்வேளை, அவர் வீட்டைவிட்டு வெளியே சென்று விடுவதுண்டு. இதில் உள்ள செய்தி என்னவென்றால் விருந்தாளியை வராதே என்று சொல்லவும் முடியவில்லை. அதேசமயம் அவர் வரும்போது அவரை வரவேற்கவும் விரும்பவில்லை என்பதுதான். ஏறக்குறைய  இதுபோன்றதொரு நிலைமைதான் கடந்த வாரம் இலங்கைத் தீவிலிருந்தது. வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்தின் தலைவர் அந்த வெற்றி பெறப்பட்ட விதம் தொடர்பான அனைத்துலகின் கரிசனைகளை அதிகம் பிரதிபலிக்கும் ஐ.நா.வின் மனித உரிமைகளிற்குப் பொறுப்பான அதிகாரியின் விஜயத்தின்போது நாட்டைவிட்டு வெளியேறி இலங்கைத் தீவைப் போலவே அனைத்துலக நெருக்கடிகளை எதிர்நோக்கும் மற்றொரு நாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்டதன் மூலம் கடும்தேசியவாதிகளை ஓரளவுக்குத் திருப்திப்படுத்த முயன்றிருக்கக்கூடும்.

மேலும் நவிப்பிள்ளை அம்மையாரின் வருகைக்கு முன்பாக கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தும் நோக்கிலான நடவடிக்கையும்கூட தற்செயலானதாகத் தோன்றவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட சிறிலங்கா இதழியலாளர் தொழிற்சங்கத்தின் தலைவியே மேற்படி அச்சுறுத்தலுக்கிலக்கானார். நவிப்பிள்ளை  அம்மையாரின் விஜயத்தையொட்டி ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அதில் ஊடகங்களிற்கிருக்கக்கூடிய வரையறைகளையும் மறைமுகமாக உணர்த்துவதே மேற்படி சம்பவத்தின் உள்நோக்கமாக இருக்கலாம்.

அதாவது, வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒர் அரசாங்கமானது தான் தலைமை தாங்கும் கடும்தேசியவாதிகளிற்கும் அனைத்துலக யதார்த்தத்திற்கும் இடையில் ஏதோவொரு சமநிலையைக் காண விளைகின்றது என்று பொருள்.

கடந்த ஜெனிவாக் கூட்டத்தொடரிலிருந்து இலங்கை அரசாங்கம் படிப்படியாக ஒருவித நெகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகிறது. அது ஒரு கண்துடைப்பு என்று தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் விமர்சிக்கின்றன. ஆனால், அதேசமயம் இலங்கை அரசாங்கமானது அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரிற்கிடையில் வீட்டு வேலைகளை (Home Works)  விரைவாகச் செய்து வருகின்றது. இவ்விதமாகக் கடந்த சில மாதங்களாக அரசாங்கம் செய்து வரும் வீட்டு வேலைகள் வருமாறு:

வீட்டு வேலை 01 – வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த ஒப்புக்கொண்டமை.

வீட்டு வேலை 02 – நவிப்பிள்ளை வருவதற்கிருந்த தடைகளை அகற்றியமை.

வீட்டு வேலை 03 – திருகோணமலை மாணவர்கள் கொலை வழக்கில்  மனித உரிமை ஆர்வலர்களை ஓரளவுக்கேனும் திருப்திப்படுத்தும் விதத்தில் சில நடவடிக்கைகளை எடுத்தமை.

வீட்டு வேலை 04 – காணாமற் போனவர்கள் தொடர்பில் ஒரு விசாரணைக் குழுவை உருவாக்கியமை.

வீட்டு வேலை 05 – வடக்கில் சில படைமுகாம்களை பின்னுக்கெடுத்தமை.

வீட்டு வேலை 06 – பொலிஸ் நிர்வாகத்தை ஒரு புதிய அமைச்சின் கீழ் கொண்டு வந்தமை.

வீட்டு வேலை 07 – கொமன் வெல்த் மாநாட்டுக்கு அனைத்துலக ஊடகவியலாளர்கள் வருவதற்கு எதுவித தடைகளும் இல்லை என்று அறிவித்தமை.

வீட்டு வேலை  08 – வடக்கில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதிகள் உட்பட உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பில் காட்சி மயப்படுத்தப்பட்ட  (Visualized)   வளர்ச்சிகளை ஏற்படுத்திக் காட்டியமை. 

இப்படியாக கடந்த சில மாதங்களாக அனைத்துலக சமூகத்தைக் கவரத்தக்க வீட்டு வேலைகள் பலவற்றை அரசாங்கம் செய்து வருகின்றது.  இத்தகைய பொருள்படக் கூறின்  ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கடந்த நான்காண்டுகளிலும் இந்த ஆண்டு ஒரு குறிப்பிட்டத்தக்க ஆண்டு எனலாம்.

ஆனால், இந்த வீட்டு வேலைகளில் அநேகமானவை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பாற்பட்டவை. அதாவது, உப பாடங்களிற்குரிய வீட்டு வேலைகள் தான். அதேசமயம் பிரதானமான கட்டாயப் பாடங்களிற்குரிய வீட்டு வேலைகள் செய்யப்பட்டுள்ளனவா?

அதென்ன உப பாடங்கள்? கட்டாயப் பாடங்கள்?

கட்டாயப் பாடங்கள் எனப்படுவது அனைத்துலக மற்றும் பிராந்திய அரசியல் யதார்த்தத்திற்கேற்ப தனது வெளியுறவுக் கொள்கையைச் சுதாகரித்துக் கொள்வது ஆகும். இதில் சித்தி பெற்றால்தான் அரசாங்கத்திற்கு இறுதிப் பெறுபேற்றில் சித்தி கிடைக்கும். இதில் சித்தி பெறத் தவறியதால்தான்  அனைத்துலக சமூகமும் இந்தியாவும் அரசாங்கத்தின்  மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. இவ்விதம் அழுத்தங்களைக் கொடுப்பதற்குரிய ஒரு கருவியாகவே தமிழர்களின் அரசியல் கையாளப்பட்டு வருகின்றது. தமிழர்களிற்கு ஒரு கௌரவமான தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது ஒரு உப நிகழ்ச்சி நிரல்தான். அதாவது, உப பாடவிதானம்தான். அரசாங்கம் சீன விரிவாக்கம் தொடர்பில் அனைத்துலக மற்றும் பிராந்திய  மட்டத்திலான கவலைகளைக் கவனத்தில் எடுத்து நெகிழ்ச்சியான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்குமாயிருந்தால் உலகமே ஈழத்தமிழர்களைக் கைவிட்டுவிடும் அல்லது 13ஆம் திருத்தச் சட்டத்துடன் திருப்திப்படுமாறு விட்டுவிடும். இதை  இன்னும் செறிவாகப் பின்வருமாறு கூறலாம். அரசாங்கம்  எவ்வளவுக்கெவ்வளவு மேற்கு நாடுகளிற்கும் இந்தியாவிற்கும் விட்டுக்கொடுக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு ஈழத்தமிழர்களும் கைவிடப்படுவார்கள்.

நவிப்பிள்ளை அம்மையார் இங்கு வந்துதான் நிலைமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.  நாலாங்கட்ட  ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் என்ன நடந்தது என்பது சக்திமிக்க நாடுகள் எல்லாவற்றுக்கும் நன்கு தெரியும். தொழில்நுட்ப  அர்த்தத்தில் அதை முழுக்க முழுக்க சாட்சிகளற்ற  யுத்தம் என்று  கூறமுடியாது. சக்திமிக்க நாடுகளின்  செய்மதிகளிற்  பொருத்தப்பட்ட சக்திமிக்க   கமராக்களிற்கூடாக பெறப்பட்ட தகவல்கள் உண்டு. இது தவிர யுத்த களத்தில் பெறப்பட்ட கைபேசிக் கமராப் பதிவுகள் உண்டு. இவற்றுடன் போரின் முடிவில் கைதிகளும், அதிககளுமானவர்களின் வாக்குமூலங்கள், சாட்சியங்கள் உண்டு. இவையெல்லாம் சக்திமிக்க டயஸ்பொறாவினால் தொகுக்கப்பட்டு  யாருக்குக் கொடுக்கப்பட வேண்டுமோ அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டன. எனவே, நவிப்பிள்ளை அம்மையார் ஏற்கனவே, கிடைக்கப்பெற்ற தகவல்களை நேரில் வந்து உறுதிப்படுத்தினார் என்பதே சரி. இத்தகைய பொருள் படக் கூறின் அம்மையாரின் வருகை ஒரு விதத்தில் குறியீட்டு முக்கியத்துவம் உடையது. நெகிழ மறுத்த ஒர் அரசாங்கமானது ஓரளவிற்கு இறங்கி வருவதை அது காட்டுகிறது.  ஆனால், அந்த நெகிழ்ச்சியானது தமிழர்கள் தொடர்பில் மட்டும் காட்டப்பட்டால் அது உப பாடவிதானத்துடன் சம்பந்தப்பட்ட வீட்டு வேலைதான். பதிலாக கட்டாயப் பாடங்களிலும் அப்படியான வீட்டு வேலைகள் நடந்திருக்கின்றனவா என்ற கேள்வியே இங்கு முக்கியமானது.

கடந்த சில மாதங்களில் இலங்கை அரசாங்கம் இரண்டு பாதுகாப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. முதலாவது சீனாவுடனானது. இரண்டாது இந்தியா மற்றும் மாலைதீவுகளுடனான கடல் சார் முக்கூட்டு உடன்படிக்கை. குறுகிய கால இடைவெளிக்குள் செய்யப்பட்ட உடன்படிக்கைகள் இவை. தவிர, கொழும்பில் சீனாவின் உதவியுடன் ஒரு பிரமாண்டமான கொள்கலன் முனையம் திறக்கப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் உள்ள பெரிய கொள்கலன் முனையமாக அது கூறப்படுகிறது. இவை அனைத்தையும் விட மற்றொரு நகர்வு அதிகம் சந்தடியெழாது நிகழ்ந்திருக்கின்றது. அதுதான் இலங்கைப் படைத்துறைக்கும் அமெரிக்க பசுபிக் பிராந்திய  படைத் துறைக் கட்டமைப்புக்கும் இடையிலான ஒரு பாதுகாப்பு ஒத்திகை ஆகும். ஒரு தென்னிலங்கை ஊடகவியலாளர் கூறினார், இது தொடர்பாக இலங்கை ஊடகங்கள் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்று. அரசாங்கமானது சீன விரிவாக்கத்தின்  ஒரலகாகக் காணப்பட்டபோதிலும் அமெரிக்காவுடனான  அரசுக்கும் - அரசுக்கும் இடையிலான அதன் கட்டமைப்பு ரீதியிலான  உறவுகள் பலமாகவிருப்பதையே இது காட்டுவதாக மேற்படி ஊடகவியலாளர் கூறினார்.சீன விரிவாக்கத்தின் ஓரலகாகக் காணப்படும்   சிறிலங்காவானது  சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்து கொண்டிருந்தாலும் கூட அமெரிக்காவுடன் செய்து கொண்டதுபோல படைத்துறை ஒத்திகையை இதுவரையிலும் சீனாவுடன் செய்ய முன்வரவில்லை என்பதை ஒரு தென்னிலங்கை ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.

மேற்படி வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான நடவடிக்கைகள் யாவும் ஒரு குறுகிய கால இடைவெளிக்குள்  தான் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் இலங்கை பொறுத்து அதன் பிரதான பாட விதானத்துடன் தொடர்புடைய வீட்டு வேலைகள் ஆகும். ஒருபுறம் சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை இன்னொரு புறம் இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் உடன்படிக்கை, ஒருபுறம் அரசாங்கத் தலைவர் சீனாவுக்குப் போகின்றார். சீனாவின் உதவியுடன் கொள்கலன் முனையம் திறக்கப்படுகிறது. இன்னொரு புறம் அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்திகை நடக்கிறது. அதாவது இலங்கைத்தீவில் சக்திமிக்க நாடுகள் எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒன்று கிடைத்திருக்கின்றது.  தென்னாசியாவின் கவர்ச்சிக் கன்னியான இச்சிறு தீவு தனது கேந்திரமுக்கியத்துவம் காரணமாக எல்லாப் பலசாலிகளையும் தனது கண்ணசைவுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.

எனவே, சக்தி மிக்க நாடுகளுடன் ஏதோவொரு எல்லை வரை சுதாகரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை வெளிக்காட்டும் அதேசமயம் தனது கவர்ச்சி கருதி சக்திமிக்க நாடுகள் தங்களுக்கிடையில் ஒருவித நிழல்போட்டியில் ஈடுபட்டத்தக்க நுட்பமான மோதுகளத்தை அரசாங்கம் திறந்து வைத்திருக்கின்றது.  இதன் மூலம் அரசாங்கம் வெளி அழுத்தங்களை  ஓரளவுக்குக் கையாள முடிகிறது.  அதேசமயம் பலசாலி நாடுகளிற்கு ஏதோ கிடைக்கின்றது. ஆனால், வெளியாருக்காகக் காத்திருக்கும் தமிழர்களுக்கு என்ன கிடைக்கும்?

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தவுடன் இலங்கை அரசாங்கம் இந்தியத் தலைவர்களுக்கு 13 பிளஸ் தொடர்பாக சில நம்பிக்கைகளைக் கொடுத்ததாக அறிய முடிகிறது. ஆனால், இப்பொது 13 சயவை விட         13 கிடைத்தாலே போதும் என்ற ஒரு  நிலைக்கு  இந்தியா இறங்கிவிட்டதுபோலத் தோன்றுகிறது.  அண்மையில் அமைச்சர் பீரிஸ் புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது, 13 இலிருந்து முன்னோக்கி நகர வேண்டும்  என்றே இந்திய தரப்பில் கூறப்பட்டது. அதாவது 13 பிளஸ் எனப்படும் தூலமான ஒரு சொற் பிரயோகத்திற்குப் பதிலாக ''முன்னோக்கி' என்று அரூபமாகக் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் மேனன் இலங்கைக்கு வந்தபோது ஊடகங்கள் பெரியளவுக்கு எதிர்பார்ப்புக்களை கட்டியெழுப்பின. சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்யப்பட்டிருந்த ஒரு பின்னணியில் 13ஆவது திருத்தத்தை அரசாங்கம்  நீர்த்துப்போகச் செய்யக் கூடும் என்றவாறான ஊகங்களின் மத்தியில்தான் மேனன் கொழும்புக்கு வரவிருந்தார். ஆனால், அவர் இங்கு வருவதற்கிடையில் அரசுத் தலைவரின் சகோதரர் டில்லிக்குச் சென்றார். அதன் பின் கொழும்பு வந்த மேனன் இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியாவுடனான முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்து வைத்துவிட்டு 13 பிளஸ் பற்றி பெரிதாக எதுவும்  பிரஸ்தாபிக்காது திரும்பிச் சென்றுவிட்டார். இதில் இந்தியாவுக்குக் கிடைத்தது ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை.  ஆனால், ஈழத்தமிழர்கள் இழந்தது 13 பிளஸ் மட்டுமல்ல 13 மைனஸ் கிடைக்காவிட்டால் சரி என்ற ஒரு நிலைக்கு இந்தியா கீழிறங்கியமைதான்.

எனவே, ஜெனிவாக் கூட்டத்தொடரிற்குப் பின் இலங்கை அரசாங்கம் தனது கட்டாயப் பாடங்களிலும், வீட்டு வேலை செய்து வருகிறது. உபபாடங்களிலும் வீட்டு வேலைகள் செய்து வருகிறது. இதன் விளைவாக சக்தி மிக்க     நாடுகளிற்கு உடனடிக்கு நன்மைகள் கிடைக்கக்கூடும். அரசாங்கமும் தன்னை ஓரளவுக்கு சுதாகரித்துக்கொள்ள இது உதவும். ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பராகிய தமிழர்களுக்கு?  தேர்தல் நடந்தால், படைப் பிரசன்னம் குறைந்தால், கொமன் வெல்த் மாநாட்டோடு அனைத்துலக ஊடகங்கள் நாட்டுக்குள் வந்தால் ஒப்பீட்டளவில் இப்போதிருப்பதை விடவும் ஒரு கொஞ்சமாவது ஜனநாயக வெளி அதிகரிக்கும். சிவில் வெளி அதிகரிக்கும். அதற்குமப்பால் நீண்ட கால நோக்கில் கூட்டிக்கழித்துப் பார்த்தால் மெய்யான இழப்புத் தமிழர்களுக்கே. ஏனெனில், அரசாங்கத்தின் நெகிழ்வின்மை தான் தமிழ் அரசியலின் பிரதான பலங்களில் ஒன்று ஆகும். 

அரசாங்கமும் அதன் நண்பர்களும் நம்பிக்கையோடு வீட்டு வேலைகளைச் செய்து வருகின்றார்கள்.  நவிப்பிள்ளையின் வருகையை முன்னிட்டும் வீட்டு வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால், அரசற்ற தரப்பாகிய தமிழர்களோ இறந்தவர்களையும், காணாமற் போனவர்களையும் இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.  வெளியாருக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்நாள் வரையிலும் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட முடியாத அளவிற்கா தமிழர்கள் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்? 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95975/language/ta-IN/article.aspx

நவ்வி பிள்ளை அவர்களின் இலங்கை வருகை எதையும் மாற்றும் அதுவும் உடனடியாக தாக்கம் செலுத்தும் எண்று கருதுவது ஆபத்தானது...  குறிப்பாக ஐநா  தமிழ் மக்களுக்கு எந்த தீர்வையும் பெற்று தரும் என்பது கூட  பிழையானது... 

 

இதுவரையான காலங்களில் ஐநா அப்படி எந்த தீர்வையும் எந்த இன மக்களுக்கு பெற்று தந்தது கிடையாது...  அதிக பட்சமாக  ஐநா நாட்டின் மீது பொருளாதார தடைகள் செய்ய மட்டுமே முடியும்...   

 

இங்கே குற்றச்சாட்டுகள் எவையும் இலங்கை எண்ற நாட்டின் மீது கிடையாது...  ஆழும் அரசின் தலைமை மீது மட்டுமே இந்த அழுத்தங்கள் இருப்பதால் பொருளாதார தடை  கூட சாத்தியம் இல்லை... !  

 

அவை இலங்கை அரசை பொறுத்த வரை அபாயகரமானதுகளாக இருக்க முடியாது...!   ஆனால் தேவை அற்ற தலையிடிகளாகவும்  சமாளிக்க நண்பர்களை தேட வேண்டியும்,  அதுக்காக விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய தேவையையும் இலங்கையை ஆழும் அரச தலைமைக்கு ஏற்படலாம்...  

 

இதில் இருந்து  நல்ல பலனை அடைவது தமிழர்களின் கைகளிலேயே இருக்கிறது...  தமிழர்களை பொறுத்தவரைக்கும் அதற்காக செய்யப்பட வேண்டிய வேலைகள் மிக அதிகமாக  இருக்கின்றன... 

 

இலங்கை எனும் நாடு இராஜபக்சவை தாண்டியும் பயங்கரவாதிகள் என்பதையும் தமிழர்கள் எனும் காரணத்தால் ஆண்டுகளாக மக்கள் பலி கொள்ளப்படுகின்றனர் என்பதையும் சொல்லக்கூடிய சர்வதேச தலைமைகளை நண்பர்களாக்க வேண்டும்... !  

 

ஐரோப்பா அமெரிக்காவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானவையாக இருந்தாலும் இருக்கும் குறை தாயகத்தில் இருந்து ஒரு தலைமை அவைகளில் பங்கு பற்றுவதில்லை என்பதாகும்... 

 

ஐரோப்பாவையும் தாண்டி மக்கள் தொகை அதிகமுள்ள  ஆசிய , ஆபிரிக்க , லத்தீன் அமெரிக்க தலைமைகளின் ஆதரவை இலங்கை அரசு போல தமிழர் தலைமைக்கு வர துடிக்கும் கூட்டமைப்பு பெற முயற்சி செய்தாலோ , அல்லது நல்ல உறவை வளர்த்து கொள்வதின் மூலம் தமிழர்களின் நிலையை மாற்ற முடியும்...  தமிழ் மக்களின் தலைமைகளின் உறவுகள் இந்தியாவையும் தாண்டி செல்ல வேண்டிய காலமிது... ! 

 

இல்லாவிட்டால் இந்த பிரச்சினையையும் இந்திய துணையுடன் இலங்கை அரசு தாண்டிச்செல்லும்... ! 

 

  • கருத்துக்கள உறவுகள்
வீட்டு வேலை 09 :  அனுராதபுரத்தில் புலிகளின் சந்தேக நபர்களுக்கு  மட்டும்  வழக்குகளை தொடர ஒரு நீதிமன்றத்தை திறந்தமை.
 
 
தமிழர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமக்கான வீட்டு வேலைகளையும் அதிகரிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.