Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்தக் களப்பிரர் பாகம் 05 ( களப்பிரர்கள் செய்த தவறு )

Featured Replies

களப்பிரர்கள் செய்த தவறு 

 

 

dscf1391.jpg

 

களப்பிரர்கள் காலம் பற்றி ஆராய்வதற்கு மிகுந்த நேர்மையும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் தேவையாக இருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இலக்கியங்கள் மூலம் பெற்ற தகவல்களும் அவற்றை நேர்மையோடு இணைக்கும் யூகங்களும் தேவைப்படுகின்றன.

களப்பிரர் என்பவர்கள் கருநாடக தேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர் என்பதும் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு.திராவிட இனத்தில் தொடர்வளர்ச்சியில் தமிழ் மொழி உருவாகியதை உலக ஆய்வாளர்கள் யாரும் மறுப்பதில்லை. களப்பிரர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுவதற்கு தமிழர்களின் சரித்திரத்தையும் ஓரிரு பத்திகளில் பார்ப்பது நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.மாந்த இனத்தின் வரலாறு ஏறத்தாழ ஒரு லட்சத்து எண்பது ஆயிரம் ஆண்டுக்கு மேலான தொன்மையுடையது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உலக கண்டங்கள் யாவும் ஆரம்பத்தில் கோக்வாண்டா கண்டமாக இணைந்திருந்து, பல லட்சம் ஆண்டுகளாகப் பிரிந்து மிதக்கத் தொடங்கியிருப்பினும் ஆஸ்திரேலியா பிரிந்து சென்றது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. காரணம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினர். அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பதற்கு அவர்களிடம் மிச்சமிருக்கும் சில ஒலிக்குறிப்புகளும் சில ஆதி நம்பிக்கைகளும் காரணமாக இருக்கின்றன. உதாரணமாக அவர்கள் நாக வழிபாட்டையும் லிங்க வழிபாட்டையும் எருது இலச்சினைகளையும் இன்னமும் பின்பற்றி வருகின்றனர். இன்னமும் அவர்கள் பயன்படுத்தும் ஓரசை, ஈரசைச் சொற்கள் தமிழ் மொழியை ஒத்திருக்கின்றன. தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதைத் தெளிவுபடுத்த இந்த சிறிய உதாரணத்தை முன் வைக்கிறேன்.

இந்தியாவில் பரவலாக வசித்து வந்த இந்த இனம் சிந்து சமவெளியிலும் தென்னிந்தியாவிலும் வசித்து வந்த தடயங்கள் கிடைத்துள்ளன. ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த இனக்குழு ஈரான், ஆப்கானிஸ்தான், மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் யூகம்.

தெற்கே கடல் கொண்டுவிட்ட குமரியில் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பனி உருகல் காலத்தில் சுமார் 300 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்தபோது இலங்கை பரப்பு தனித்துப் போனதோடு, குமரி கண்டத்தின் கடைசி நிலப்பரப்பும் மூழ்கிப் போனது தெரிகிறது. அதற்கு முன்பு உலக கடல் மட்டத்தில் இரண்டு முறை கடல் மட்டம் உயர்ந்திருப்பதை அறிய முடிகிறது. பனி உருகல் காரணமாக ஏற்பட்ட அந்த இரண்டு கடல் ஊழியில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த குமரிப்பரப்பு சுத்தமாகவே அழிந்து போனது. கடல் கொண்டுவிட்ட அந்த நிலப்பகுதியில்தான் முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டதாக அதன் பின்னர் வந்த புலவர்களின் பாக்களில் இருந்து அறிய முடிகிறது. இப்போதும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முகடுகள் கடலில் மூழ்கியிருப்பதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. கடற்கோள், பனி ஊழி, அயலவர் படையெடுப்பு என தமிழினம் ஏராளமான நசிவுகளை காலம்தோறும் சந்தித்தாலும் அது ஸ்பினிக்ஸ் பறவையை உதாரணம் காட்டுவதுபோல மீண்டும் மீண்டும் எழுந்துவந்திருப்பதைப் பார்க்கிறோம். ஐரோப்பிய மொழிகளோ, கிரேக்க, எகிப்து மொழிகளோ இத்தனைச் சிரமங்களை எதிர் கொள்ளாமலேயே மறைந்து போயிருப்பதைப் பார்க்கும்போது தமிழுக்கு இருக்கும் தொன்மையும் பலமும் விளங்கும். இவ்வளவு தொன்மையான மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அதனுடைய பலமாகவும் அமைந்திருக்கிறது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் தமிழர்களின் ரத்தத்தில் ஊறியிருப்பதாகவே சொல்லலாம்.

தமிழ்மொழி சுமார் பத்தாயிரம் ஆண்டுகளில் செழுமையடைந்து, தழைத்து தென்னிந்திய லப்பரப்பில் பிரதான தொடர்பு மொழியாகவும் இலக்கியத்தில் மிக உயர்ந்த லையிலும் செயல்படத் தொடங்கியது. மொழிக்கு இலக்கணம் வகுக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்-டதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. உலகில் வேறெந்த மொழியிலும் இதற்கான ஆதாரங்கள் இல்லை. இங்கு தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை இயம்பப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு தமிழகத்தில் நிலைபெற்றிருந்த ஆட்சியே களப்பிரர் காலம்.

கி.பி. 250க்குப் பிறகும் கி.பி. 550க்கு முன்புமான இக்காலகட்டத்தில் தமிழில் இலக்கியச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் பிராகிருதம், பாலி மொழிகளே நிலைநாட்டப்பட்டன. அதே சமயம் அவர்கள் தமிழை வளர்த்தார்கள் என்று விவாதிப்போரும் உண்டு. நாலடியார், சீவகசிந்தாமணி, காரைக்காலம்மையார் நூல்கள், இறையனார் களவியல் ஆகிய நூல்கள் இக்காலத்தைச் சேர்ந்தவைதான் என்பது ம.சீ.வேங்கடாமி நாட்டாரின் கருத்து. முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இக்காலத்தைச் சேர்ந்தவை என்கிறார் பண்டாரத்தார். ஆனால் இந்த நூல்கள் பலவும் அறத்தை முன்னிறுத்திப் பாடியதாகவே இருந்தன. மு.ரா.நல்லபெருமாள் முதலியார் சொல்வது முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து பார்க்க வைக்கிறது. "களப்பிரர்கள் என்பரோர் தமிழரே. அவர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் தம் ஆதிக்கத்தை இழந்திருந்தனர். அதனால்தான் அந்தக் காலத்தை இருண்ட காலம் என்று சொல்கின்றனர்.' என்கிறார். நாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஆதிசங்கரரும் ராமானுஜரும் தோன்றி சமணத்துக்கு எதிராக சைவத்தையும் வைணவத்தையும் முன்னெடுத்துச் சென்றனர். பதினாயிரம் சமணர்களை கூன்பாண்டியன் கழுவேற்றினான் என்ற குறிப்பின் மூலம் சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டதோடு அவர்களின் சமய நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டன என யூகிக்க முடிகிறது.

பார்ப்பனர்கள் ஆதிக்கம் மீண்டும் உருவானதால் அந்தத் தமிழர் ஆட்சிக்காலம் முற்றிலும் மறைக்கப்பட்டு இருண்டகாலம் என்று ஆகிப்போனது என்பாரும் உண்டு. மயிலை சீனி. வேங்கடசாமி, தேவநேயப் பாவாணர் போன்ற பலர் இந்தக் கருத்துக்கு உடன்பட்டவரே. களப்பிரர் காலத்துக்குப் பிறகு சைவமும் வைணவமும் தழைத்தது என்பது உண்மை. கி.பி. 600க்குப் பிறகு தமிழில் சைவமும், வைணவமும் பக்தி இலக்கியத்தை ஆவேசத்தோடு வளர்த்திருப்பதைப் பார்க்கலாம். வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை களப்பிரர்கள் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலேயே இங்கு நூல்கள் இயற்ற முயன்றதையும் சமண மதத்தை வளர்க்க முற்பட்டதையும் ஆராய்கிறார்.

பாண்டி நாட்டில் சமண கிரந்தர்கள் எண்ணற்றவர்கள் இருந்ததாக சீன பயணி யுவான் சுவாங் எழுதியிருக்கிறார். இவர் கி.பி. 600 நூற்றாண்டு வாக்கில் அவர் தமிழகம் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. களப்பிரர்கள் காலத்துக்கு பின்னர் தோன்றிய திருநாவுக்கரசர் சமணர்களோடு வாதாடியதையும் அவரைச் சுண்ணாம்புக் காலவாயில் போட்டு சித்தரவதை செய்ததையும் தமிழிலக்கியங்கள் விவரிக்கின்றன. ஆக, களப்பிரர்கள் காலம் என்பது சமணர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம் என்பதில் ஐயம் யாருக்கும் இல்லை. அவர்கள் தங்களின் சமய நூல்களையும் தங்களின் மொழியையும் இங்கே பரப்புவதில் பெரும் வேகம் காட்டினர். தமிழகத்தில் சித்தன்ன வாசல் குடைவரைக் கோவில்களும் சிலப்பதிகாரத்தைப் போலவே, சமண, பௌத்த சமயத்தை போதிக்கும் சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய நூல்களில் அச் சமயத்தினர் இங்கே செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.மொழி ஆராய்ச்சியாளர் ப. சிவனடி இக் கருத்தை வலியுறுத்துகிறார். தமிழ் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டிலேயே செழிக்கத் தொடங்கிய சமணமும் பெüத்தமும் பிறகு ஏன் தமிழர்களுக்கு எதிராக மாறியது என்பது யூகிக்க உகந்தது. அவர்கள் சமண சமயத்தைப் புகுத்தினர் என்பது காரணமாகத் தெரியவில்லை. சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ சமண சமயத்தைத் தழுவுகிறார். கவுந்தி அடிகள், மணிமேகலை போன்ற கதாபாத்திரங்கள் சமண சமயத்தைத் தழுவியதாக படிக்கிற நாம் எப்போது அதன் எதிரியாக மாறினோம் என்பது யோசித்தல் முக்கியம்.

அவர்கள் நம் மொழியின் மீது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியதில் இருந்துதான் களப்பிரர்களுக்கும் தமிழருக்குமான முரண்பாடுகள் பெருகத் தொடங்கியிருக்க வேண்டும்.இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது அன்று துவங்கப்பட்ட திராவிட சங்கம். பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ஒன்றை நிறுவினார் (கி.பி. 470). அவருடைய நோக்கமே சமண சமய நூல்களை தமிழில் இயற்ற வேண்டும் என்பதே. பதினென் கீழ் கணக்கு நூல்கள் பலவும் இச் சங்கத்தின் முயற்சியினால் தோன்றியிருக்கலாம் என்பது கே.கே. பிள்ளையவர்களின் வாதம். பாலி பிராகிருத மொழியில் நூல்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் நூல்கள் இயற்றப்பட வேண்டும் என்று தமிழகத்துக்குள் ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டதே தமிழுக்கு நேர்ந்த சோதனைக் காலத்தைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமய மறுமலர்ச்சி தமிழர்களை ஒருங்கிணைக்க முயன்றது. இதனால் தமிழர்கள் தமிழில் தமிழுக்கு நெருக்கமான இறைநூல்களைப் பாடுவதில் இயல்பாகவே ஈடுபட்டிருக்கலாம்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாக சொல்வது உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. அதே போல பக்தி இலக்கியத்தின் காலத்தையும் தமிழ் வளர்ச்சியின் பங்களிப்பாகக் கொள்ள முடியும். சமணத்துக்கு மாற்றாக மட்டுமின்றி பாலி மொழிக்கு மாற்றாகவும் தமிழ் செயல்பட்டது. தமிழர்களுக்கு மொழி மிகவும் முக்கியமானதாக இருந்ததை பல்வேறு கால கட்ட நிகழ்வுகள் மூலம் அறிய முடிகிறது. மொழிக்காக உயிரையும் இழக்கத் துணிந்தவர்களாக அவர்கள் இருந்தனர். சைவம், வைணவ பாடல்களில் தமிழைச் சிறப்பித்துப் பாடுவதை நாம் பார்க்கிறோம்.

 

"மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா அந்தகர்'-என தேவாரத்தில் சமணரைப் பழிக்கிறார் ஞான சம்பந்தர்.

இத் தகவல்களை தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தமிழர் வரலாறு நூலில் பி. இராமநாதன் தெரிவிக்கிறார்.1938 இந்தித் திணிப்பின் போது தாளமுத்து, நடராசன் உயிர்த் தியாகமும், 1965 ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டமும் உயிரிழப்புகளும் தமிழீழத்துக்காக உயிர் நீத்தவர்களும் தமிழர்கள் மொழிமீது அதீத பாசம் கொண்டிருந்ததற்கு சமீபத்திய உதாரணங்கள். இதற்கு முன்னர் சைவர்களும் வைணவர்களும் போட்டி போட்டுக் கொண்டு சமயத்தை வளர்த்ததோடு தமிழையும் வளர்த்ததை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும். சுண்ணணாம்புக் காலவாயில் சுட்டெரித்தபோதும் சைவத்தை மட்டுமின்றி அவர்கள் தமிழையும் நேசித்ததை அறிய முடிகிறது. அதற்கும் முந்தைய காலங்களில் அவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததும் இறைவனையே அதற்கு தலைவனாக்கியதும் இலக்கியம் தரும் தகவல்கள்.

புதிதாக வேறு ஒரு சமயத்தைப் புகுத்தியதோடு மட்டுமின்றி வேறொரு மொழியையும் புகுத்தியதே தமிழர்கள் முற்றாக அவர்களை அழிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன்.களப்பிரர்கள் ஏந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. களப்பிரர்கள் என்பார் கர்நாடகத்திலிருந்து தமிழர் மீது ஆக்ரமிப்பு செய்தவர்கள் என்று பரவலாக அறியப்படுகிறது.

இக்கருத்தில் ஆய்வாளர்கள் பலருக்கும் ஒத்த கருத்து உண்டு. மைசூர் ராச்சியத்தின் பேலூர் கல்வெட்டு ஒன்று அங்கு களப்போரா எனும் பெயரில் ஒரு வம்சத்தினர் வாழ்ந்ததாகத் தெரிவிக்கிறது. (கே.கே. பிள்ளையின் தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் ( பக்.185) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.) களப்பிரர்கள் தெற்கு ஆந்திரப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பார் சிலர். வேங்கடத்தை ஆண்டுவந்த களவர் என்னும் இனத்தவரே பல்லவரின் கை ஓங்கியதாலும் சமுத்திரகுப்தனின் படையெடுப்பினாலும் தென் தமிழகத்துக்கு பெயர்ந்து தமிழகத்தை ஆக்ரமித்ததாக அதே நூல் தகவல் தருகிறது. இது தவிர களப்பிரர் தமிழரே என்ற கருத்து ஒன்று உண்டு. பாவாணர், க.ப. அறவாணன் போன்றோர் இக் கருத்து உடையவர்கள். களப்பிரர் என்ற தமிழர் ஆட்சியில் பார்ப்பனர் செல்வாக்கு இழந்து இருந்ததால் அக் காலகட்டத்தை இருண்ட காலமாக வர்ணிக்கின்றனர் என்கின்றனர். வரலாற்றை யூகிப்பது ஒரு சுவையான அம்சம். எது உண்மையாக இருக்கும் என்று அலசுவதும் தேவை.

 நன்றி  http://www.tamilmagan.in/2011/08/blog-post.html

தொடர்ந்து களப்பிரர்களை பற்றி இணைப்பதற்கு நன்றி கோமகன். பல நாட்களாக படிக்க வேண்டும் என்று வைத்திருந்த பல புத்தகங்களை உங்களது இணைப்பு படிக்க தூண்டியுள்ளது. இந்தக் கட்டுரையில் இரண்டு விடயத்தை தெளிவு படுத்த வேண்டியுள்ளது.

வச்சிரநந்தி என்பவர் கி.பி. 470 இல் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியிருக்கிறார். வச்சிரநந்தி மதுரையில் திராவிட சங்கம் (தமிழ்ச் சங்கம்) ஏற்படுத்தினார் என்பதைச் சிலர் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிச் சங்கம் ஏற்படுத்தினார் என்று கருதுகிறார்கள். இது தவறு. வச்சிரநந்தி ஏற்படுத்தியது சமண முனிவர்களின் சங்கமாகும். இந்தச் சங்கத்தைச் சார்ந்த முனிவர்கள் தமிழ்நூல்களையும் இயற்றியிருக்கக் கூடும். ஆனால், இந்தச் சங்கம் பாண்டியர் நிறுவித் தமிழை ஆராய்ந்த தமிழ்ச் சங்கம் போன்றது அல்ல என்று மயிலை சீனி வேங்கடசாமி தனது நூலில் கூறியுள்ளார்.

மேலும் சங்கம் என்பதற்கு கூட்டம் என்ற பொருள்தான் முன்னாளில் பயன்பட்டு வந்தது. தமிழ்ச் சங்கத்தின் பழைய பெயர் "தமிழ்க் கழகம்". புத்தத்தில் "சங்கம் சரணம் கச்சாமி" என்பதை கேள்விபட்டிருப்பீர்கள். அதில் புத்த கூடத்தை சரணடைகிறேன் என்பது பொருள். ஆகவே வச்சிரநந்தி கூட்டியது சமண முனிவர்களின் கூட்டமாகும்.

 

களப்பிரர்கள் காலத்தில் தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்படவில்லை மாறாக  தமிழ் இலக்கியத்தில் புதுப்புது பாக்கள் இயற்றப்பட்டன. இலக்கியம் செழுமை கண்டது. களப்பிரர்கள் தமிழர்களா அல்லது கன்னடர்களா என்பது இன்னும் வரலாற்று ஆசிரியர்களால் உறுதிப்படுத்த முடியாமல் இருக்கிறது. சமீபத்தில் தமிழ்வேந்தன் இணைத்திருந்த  இணைப்பில் சமணம் தமிழர்களின் மதம் என்று கூறியிருந்தார். அதுவும் நோக்கத்தக்கது. எனவே களப்பிரர்கள் தமிழை அழித்தார்கள் அதனால் அழிந்தார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. அவர்களது வீழ்ச்சி குறித்து இன்னும் ஆராயப்பட வேண்டியது.

கட்டுரை நன்று...கட்டுரையில் நிறைய இடங்களில் சமணர் என்ற பொதுச்சொல் உள்ளது குழப்பமாக உள்ளது...

 

கிபி 8/9 ஆம் நூற்றாண்டில் திவாகர முனிவரால் இயற்றப்பட்ட சேந்தன் திவாகரம் எனும் நிகண்டு நூலில்

'சாவகர் அருகர் சமணர் ஆகும்;
ஆசீ வகரும் அத்தவத் தோரே'

சமணர் - சாவகர், அருகர்(ஜைனர்), ஆசீவகர்

    கி.பி. 8/9ஆம் நூற்றாண்டில் திவாகர முனிவர் இயற்றிய சேந்தன் திவாகரம் என்ற நிகண்டு நூலில், ஜைனரும் ஆசீவகரும் வேறு வேறு என்கிறார். ஆனால், சமணர் என்ற சொல் சாவகர், அருகர்(ஜைனர்), ஆசீவகர் என்ற மூன்று நெறியினரையுமேக் குறிக்கும் பொதுச் சொல் என்கிறார். நாம் ஒப்புநோக்கப்பட வேண்டியதென்னவென்றால், சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். சமணர் எனும் சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கும். அமணர் எனும் சொல் தமிழ் இலக்கியங்களில் ஆசீவகர்கள் என்றப் பொருளில் மட்டுமே ஆளப்பட்டிருக்கும்.

 

அதாவது, இலக்கியங்களில் நாம் இடத்திற்கேற்பவும் காலத்திற்கேற்பவும் பொருள் கொள்ள வேண்டும்.

 

முதலில், சமணர் என்ற சொல்(ஜைன நெறி தோன்றுவதற்கு முன்பு) அமணர்களை மட்டுமே குறித்தது. அதாவது, சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இரண்டும் ஒன்றே என்றப் பொருள் தான்.

இத்திரிபு, பிராகிருத மொழிக்குடும்பம் தோன்றிய பின்பு நடந்திருக்கலாம். அதாவது, அமணம்>ஸமணம்(ஸ்+அமணம்) என பிராகிருதத்தில் திரிந்து பின்பு தமிழில் ஸமணம்>சமணம் என வழங்கப்பட்டிருக்கலாம்.

 

ஜைன நெறி தோன்றிய பின்பு,

                  1. சமணர் - வைதீக(வேத நெறி) எதிர்ப்பாளர்
                                    அமணர் - தமிழரின் ஆசீவக நெறியைச் சார்ந்தவர்கள்
                                    அருகர்/சாதி அமணர்/நிகண்ட வாதி - ஜைன நெறியைச் சார்ந்தவர்கள்
                                    சாவகர்
                                    தாபதர்
                  2. புத்த நெறியினர்

எனப் பொருள் இருந்தது. சமணர் என்றால் அமணர், அருகர்/சாதி அமணர்/நிகண்ட வாதி, சாவகர், தாபதர் ஆகிய எல்லோரையும் சேர்த்துக் குறித்த பொதுச்சொல்லாக குறிப்பது ஆயவேண்டிய ஒன்று.

 

பிறகு, சமணர், அமணர், அருகர் ஆகிய சொற்களின் பொருள்கள் மாறத் துவங்கியதற்கு முதல் சான்று கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கல நிகண்டு நூலில் பார்க்கிறோம். பிங்கல நிகண்டு நூலில் அமணர் எனும் சொல்லின் பொருள் மாறுபட்டுள்ளது.

 

பௌத்தமும் தமிழும் எனும் நூலில் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) அவர்கள் அருணந்தி சிவாச்சாரியார்(கி.பி. 13ஆம் நூற்றாண்டு) இயற்றிய சிவஞான சித்தியார் எனும் இலக்கியத்தில் ஆசீவகத்தை ஜைனத்தின் ஒரு பிரிவாக தவறாக காட்டியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

 

கட்டுரையில், சமணர், அமணர், அருகர்/சாதி அமணர்/நிகண்ட வாதி ஆகிய சொற்களின் பொருள் வேறுபாடுகளோடு கட்டுரையை ஒரு முறை சரி பார்க்க முடியுமா?...

Edited by தமிழ்வேந்தன்

  • தொடங்கியவர்

தொடர்ந்து களப்பிரர்களை பற்றி இணைப்பதற்கு நன்றி கோமகன். பல நாட்களாக படிக்க வேண்டும் என்று வைத்திருந்த பல புத்தகங்களை உங்களது இணைப்பு படிக்க தூண்டியுள்ளது. இந்தக் கட்டுரையில் இரண்டு விடயத்தை தெளிவு படுத்த வேண்டியுள்ளது.

வச்சிரநந்தி என்பவர் கி.பி. 470 இல் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியிருக்கிறார். வச்சிரநந்தி மதுரையில் திராவிட சங்கம் (தமிழ்ச் சங்கம்) ஏற்படுத்தினார் என்பதைச் சிலர் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிச் சங்கம் ஏற்படுத்தினார் என்று கருதுகிறார்கள். இது தவறு. வச்சிரநந்தி ஏற்படுத்தியது சமண முனிவர்களின் சங்கமாகும். இந்தச் சங்கத்தைச் சார்ந்த முனிவர்கள் தமிழ்நூல்களையும் இயற்றியிருக்கக் கூடும். ஆனால், இந்தச் சங்கம் பாண்டியர் நிறுவித் தமிழை ஆராய்ந்த தமிழ்ச் சங்கம் போன்றது அல்ல என்று மயிலை சீனி வேங்கடசாமி தனது நூலில் கூறியுள்ளார்.

மேலும் சங்கம் என்பதற்கு கூட்டம் என்ற பொருள்தான் முன்னாளில் பயன்பட்டு வந்தது. தமிழ்ச் சங்கத்தின் பழைய பெயர் "தமிழ்க் கழகம்". புத்தத்தில் "சங்கம் சரணம் கச்சாமி" என்பதை கேள்விபட்டிருப்பீர்கள். அதில் புத்த கூடத்தை சரணடைகிறேன் என்பது பொருள். ஆகவே வச்சிரநந்தி கூட்டியது சமண முனிவர்களின் கூட்டமாகும்.

 

களப்பிரர்கள் காலத்தில் தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்படவில்லை மாறாக  தமிழ் இலக்கியத்தில் புதுப்புது பாக்கள் இயற்றப்பட்டன. இலக்கியம் செழுமை கண்டது. களப்பிரர்கள் தமிழர்களா அல்லது கன்னடர்களா என்பது இன்னும் வரலாற்று ஆசிரியர்களால் உறுதிப்படுத்த முடியாமல் இருக்கிறது. சமீபத்தில் தமிழ்வேந்தன் இணைத்திருந்த  இணைப்பில் சமணம் தமிழர்களின் மதம் என்று கூறியிருந்தார். அதுவும் நோக்கத்தக்கது. எனவே களப்பிரர்கள் தமிழை அழித்தார்கள் அதனால் அழிந்தார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. அவர்களது வீழ்ச்சி குறித்து இன்னும் ஆராயப்பட வேண்டியது.

 

தமிழ்வேந்தன் ஆசீவக மதத்தில் இருந்தே சமணமதம் தோன்றியதாகச் சொல்கின்றார் . எமது பள்ளி படிப்புகளோ தமிழனது மதம் சைவம் என்று சொல்கின்றது . சமணம் வளர்த்த  இலக்கியங்கள் , இரு மதங்களுக்கிடையிலான போராட்டத்தில் வேண்டுமென்றே அழித்தொழிக்கப்பட்டன . இதனால் பாதிக்கப் பட்டது தமிழர்களின் அழியாச் சொத்துக்களான இலக்கியங்களே . களப்பிரர் காலத்தில் வளர்ந்த தமிழ் அவர்களாலேயே அழிக்கப்பட்டு அவர்களும் அழிந்தார்கள் என்பதை என்னால் தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது . மேலும் சங்கம் என்பது கூட்டம் என்றால் , மூன்று தமிழ் சங்கங்களையும் கூட்டங்கள் என்று பொருள் படுத்தலாமா ??

 

சங்கம் என்பது கூட்டம் என்றால் , மூன்று தமிழ் சங்கங்களையும் கூட்டங்கள் என்று பொருள் படுத்தலாமா ??

 

 

'சங்கம்' என்னும் சொல் சங்க இலக்கியத்தில் எங்கேயும் காணப்படவில்லை.  கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் இலக்கியங்களில் அந்த வார்த்தை காணப்படுகிறது. அவை முன்னாளில் "கழகம்" என்ற பெயரிலே கூறப்பட்டு வந்தது என்பது தமிழ் அறிஞர்கள் கூற்று.

விக்கிபீடியாவில் உள்ள கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.

 

    "நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

    அறங்கரை நாவின் நான்மறை முற்றிய

    அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து...."

    --- (தொல். பாயிரம்)

    பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்  அவையில் மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர் பாடினர்.

    --- (புறநானூறு 72)

    "தொல்லாணை நல்லாசிரியர்

    புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

    நிலந்தரு திருவின் நெடியோன்...."

    --- (மதுரைக். 761-763)

    "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்

    மகிழ்நனை மறுகின் மதுரை...."

    --- (சிறுபாண். 66-67)

    "தமிழ்கெழுகூடல் தண்கோல் வேந்தே"

    --- (புறம். 58)

    "ஓங்கிய சிறப்பின் உயர்ந்தகேள்வி

    மாங்குடி மருதன் தலைவனாக

    உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

    புலவர் பாடாது வரைக என்நிலவரை."

    --- (புறம். 72)

    "நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார்

    புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுதன்றோ"

    --- (கலித். 35: 17,18)

இங்கே சங்கம் என்பது அவை, புணர் கூட்டு, தமிழ்நிலை பெறுதல், புலவர் என்ற பொருளிலே வந்துள்ளது.

கட்டுரையின் மூலம் http://http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

சங்கம் எனும் சொல் அங்கம் எனும் சொல்லின் திரிபே...

 

அங்கு(தமிழ்) = குறுகிய வளைவைக் கொண்ட ஒன்று

ஒப்புநோக்குக:

அங்குசம்

(English என்ற சொல்லே அங்கு என்ற சொல்லிலிருந்து தான் வந்தது...அங்கு(தமிழ்)>Ang(Latin)>Angln(குறுகிய வளைவான பகுதியிலிருந்து வந்தவர்கள்)>Anglish(அவர்கள் பேசிய மொழி)>English...ஆனால், ஆய்வாளர்கள் Ang(Latin) என்பதிலிருந்து தான் English வந்தது எனத் தமிழ் தெரியாமல் கூறுவர். இலத்தீனுக்கு எப்படி இச்சொல் வந்தது என அவர்கள் ஆயவில்லை)

 

அங்கம்(அங்கு+அம்) = குறுகிய வளைவான பகுதியைக் கொண்ட இடம், கூடும் இடம்(இரு நதிகள் கூடும் இடம் குறுகிய வலைவுடையதாக இருக்கும்) - பிறகு இச்சொல், உடலில் உள்ள குறுகிய வளைவான உறுப்புகளைக் குறித்து, பின்பு காலப்போக்கில் உடல் உறுப்பைக் குறிக்கும் பொதுச்சொல்லானது...
 

பிறகு, இச்சொற்கள் இந்தியாவின் வடக்கில் ஆரியர்கள் வாயில் இப்படி மாறியது,

அங்கு(தமிழ்)>ஸங்கு(ஸ்+அங்கு, பிராகிருதம்)>சங்கு(தமிழ்)

அங்கம்(தமிழ்)>ஸங்கம்(ஸ்+அங்கம், பிராகிருதம்)>சங்கம்(தமிழ்)

 

சமஸ்கிருதத்திலும் இதேப்போல நிறைய சொற்கள் உண்டு. ஆங்கிலேயர்கள் வாயிலும் அப்படித்தான் நுழைந்திருக்கிறது. அதனால் தான் ஆங்கிலத்தில் 'S' எனும் எழுத்தில் தொடங்கும் சொற்கள் அதிகம்

குறிப்பு>ஸ்குறிப்பு>Script

இதேப்போல நிறைய சொற்கள் உள்ளன(ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதை இதன்மூலம் கூடக் கூறலாம்).

 

தமிழர், தங்கள் கூட்டத்திற்கு அங்கம் என்று பெயர் வைத்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால், தங்கள் கூட்டத்திற்கு சங்கம் எனப் பெயர் வைக்கவில்லை எனத் தெரிகிறது.

 

ஆதித்ய இளம்பிறையன் கூறுவது சரியே.

சங்கம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் அவையம் என்னும் பொருளில் யாண்டும் இல்லை. சங்கம் என்ற சொல் இல்லை எனினும், அவை, மன்றம், புணர்கூட்டு, தமிழ் நிறை என்றவாறு பல சொற்களும் தொடர்களும் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. ஆனாலும், இவ்வமைப்பு கூடல் என்ற பெயரிலேயே அமையப்பெற்றதாக சில அறிஞர்கள் நம்புகின்றனர்.

 

இதனால் கூட மதுரைக்கு கூடல் நகர் எனப் பெயர் வந்திருக்கலாம். மதுரையைத் தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. பரிபாடல்,
    உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
    புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
    தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்
    நான்மாடக் கூடல் நகர்

எனக் குறிப்பிடுகிறது.

 

சங்க காலத்தில் தமிழ்ப்புலவர்கள் அனைவரும் கூடி இலக்கியப் பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தியதன் காரணமாய் ‘கூடல்மாநகர்’ என்ற பெயராலும், திசைக்கொன்றாய் கோட்டையின் நான்கு வாசற்புறங்களைக்(மாடங்கள்) கொண்டு திகழ்ந்ததால் ‘நான்மாடக்கூடல்’ என்ற பெயராலும் மதுரை அழைக்கப்படுகிறது. ‘கூடல்’ என்னும் பெயர் பொதுவாக இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தைக் குறிப்பதாகும். பழங்கால நகரங்கள் பல இத்தகைய கூடல்களில்தான் அமைந்திருந்தன. அதுபோன்றே மதுரை மாநகரும் கூட, வைகை நதியும் அதன் உபநதியும் சங்கமித்த இடத்தில் அமையப்பெற்றிருக்க வேண்டும். காலப்போக்கில் அந்த உபநதி தன் போக்கை மாற்றியிருக்கக்கூடும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

Edited by தமிழ்வேந்தன்

தமிழ்வேந்தன் ஆசீவக மதத்தில் இருந்தே சமணமதம் தோன்றியதாகச் சொல்கின்றார் . எமது பள்ளி படிப்புகளோ தமிழனது மதம் சைவம் என்று சொல்கின்றது . சமணம் வளர்த்த  இலக்கியங்கள் , இரு மதங்களுக்கிடையிலான போராட்டத்தில் வேண்டுமென்றே அழித்தொழிக்கப்பட்டன . இதனால் பாதிக்கப் பட்டது தமிழர்களின் அழியாச் சொத்துக்களான இலக்கியங்களே . களப்பிரர் காலத்தில் வளர்ந்த தமிழ் அவர்களாலேயே அழிக்கப்பட்டு அவர்களும் அழிந்தார்கள் என்பதை என்னால் தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது . மேலும் சங்கம் என்பது கூட்டம் என்றால் , மூன்று தமிழ் சங்கங்களையும் கூட்டங்கள் என்று பொருள் படுத்தலாமா ??

 

ஐயா,

நீங்கள் கூறுவது சரிதான். பாதிக்கப் பட்டது தமிழர்களின் அழியாச் சொத்துக்களான இலக்கியங்களே.

 

மதம் என்பது உருவாக்கப்பட்டபோது இருந்த நோக்கம் வேறு. ஆனால், மதத்தை பௌத்தர்கள், ஜைனர்கள், சைவர்கள், வைணவர்கள் ஒரு அரசியல் கட்சி/நிறுவனம் போல மக்களிடையே பரப்ப முயற்சித்தது தவறாகும்...அப்படி செய்ததால் தான் அந்நெறிகளுக்கிடையே போட்டி மனப்பான்மை வந்தது...அப்படிச் செய்யாததால் தான் நெறியின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்ட ஆசீவக நெறி அழிந்தது/மக்களிடையே செல்வாக்கை இழந்தது...மதம் எனும் ஒன்று இருப்பதற்கான நோக்கம் மாறியது...ஒரு மதத்தினருக்கு வேறு மதத்தினரைக் கண்டால் பிடிக்காது...சில சமயம் நிறைய பேரைக் கொல்லவும் செய்தனர்...இதற்கு, இலங்கையில் பௌத்தர்களே சான்று...தற்காலத்தில் உள்ள ஒவ்வொரு மதமும் தாங்கள் உருவான உண்மை நோக்கத்தை மறந்து மதம் பிடித்தே அலைகிறது...

 

நாம் ஆயவேண்டியஒன்று என்னவென்றால்,

கி.மு. 2ஆம் நூற்றாண்டின் முடிவில் ஆரியரில் முதல் அரசனான புஷ்யமித்ர சுங்கன் வடஇந்தியாவில் பௌத்ததையே அழித்தான். இதனால், பௌத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் தென்இந்தியாவில் தங்கள் நெறியை வளர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம்.

 

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ஆறு வகையான நெறிகள் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் குறிப்பிடுகின்றன. மணிமேகலை(27. சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை) இவ்வாறு வகையான நெறிகளையும் விளக்குகிறது. இதற்கு பின்பு தான் தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி வருகிறது.

 

களப்பிரர்கள் ஆட்சியில் பாண்டியர்கள், களப்பிரர்களுக்குக் கீழ் ஆட்சி செய்தனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. களப்பிரர்கள் தமிழ் மொழியை அழிக்க நினைத்தார்கள் என்றால், தமிழ் வளர்த்த பாண்டியர்களையும் அல்லவா அழித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இதன்மூலமும், களப்பிரர்கள் ஆட்சியில் எழுந்த தமிழ் இலக்கியங்கள் மூலமும், களப்பிரர்களின் நோக்கம் தமிழ் மொழியை அழிப்பதல்ல எனப் புரிகிறது. களப்பிரர்களின் நோக்கம் சமயம் சார்ந்ததாகவோ அல்லது ஆட்சி அதிகாரம் சார்ந்ததாகவோ இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

 

களப்பிரர் காலத்தில் தான் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டன...இவை அனைத்தையும் இயற்றியவர்கள் ஆசீவக நெறியினர்...ஆனால், தமிழ் ஆய்வுலகமோ அவர்களுக்கு ஜைனர் என முத்திரையிட்டு தமிழர் இலக்கியங்களை ஜைன இலக்கியங்களாக சித்தரிக்கின்றனர்...பதினெண்கீழ்கணக்கு நூல்களின் காலத்தில்(களப்பிரர்களின் காலத்தில்) ஜைன மதமும் புத்த மதமும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு தங்கள் மதத்தை தமிழகத்தில் பரப்பும் நோக்கில் இருந்தன. இதனால், அவர்கள் இயற்றும் இலக்கியங்களில் மற்ற மதங்களின் கோட்பாடுகள் தவறு என்றும், தங்கள் மதத்தின் கோட்பாடுகள் சரி என்றும் எழுதினார்கள். இதற்கு, அவர்கள் இயற்றிய கதை நூல்களான ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறுங்காப்பியங்களுமே சான்று...

 

பதினெண்கீழ்கணக்கு நூல்கள் இந்த மதத்தைத் தான் பின்பற்றவேண்டும் என வற்புறுத்தவில்லை...இதனால், இவை மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் எழுந்த நூல்கள் அல்ல என உணரலாம்...தங்கள் மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் வந்த ஜைனர்களால் இந்நூல்கள் எழுதியிருக்க முடியாது...இந்நூல்கள் எழுந்த காலத்தில் பௌத்தமும் ஜைனமும் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக ஐம்பெருங்காப்பியங்களையும் ஐஞ்சிறுங்காப்பியங்களையும் இயற்றிக்கொண்டிருந்தன...பதினெண்கீழ்கணக்கு நூல்கள் ஜைனர்களால் இயற்றப் பட்டிருந்தால், அவர்களின் கோட்பாடுகள் சரியென்றும் பிற மதத்தினர் கோட்பாடுகள் தவறு என்றேக் கூறியிருப்பர்...மேலும், ஐம்பெருங்காப்பியங்களிலும் ஐஞ்சிறுங்காப்பியங்களிலும் ஜைனர்கள் இயற்றிய நூல்களைப் பார்த்தால், அவர்கள் மற்ற மதத்தினரிடம் வாதம்(Argument) செய்து வெற்றி பெறுவதாகக் குறிப்பிடுவர்...இதன்மூலம், ஜைனர்களிடம் இருந்த போட்டி மனப்பான்மை புலப்படும்...

 

தமிழர்கள் தங்களுக்காக தங்கள் மொழியை வளர்க்கும் நோக்கத்துடன் சங்கம் வைத்தனர்...ஆனால், இந்த திராவிட சங்கத்தின் நோக்கம் என்ன என்று இன்னமும் புரியவில்லை...கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கு மேல் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களையும் ஐஞ்சிறுங்காப்பியங்களையும் பார்க்கும் பொழுது தங்கள் மதத்தைப் பரப்ப சங்கம் வைத்தது போலத்தான் தெரிகிறது...

 

கி.மு. 2ஆம் நூற்றாண்டின் முடிவில் தங்கள் நெறியை வளர்பதற்காக வடஇந்தியாவில் பௌத்ததை அழித்த அதே ஆரியம், கி.பி. 7ஆம் நூற்றாண்டில், தங்கள் நெறியை வளர்ப்பதற்காக, ஜைனம் மற்றும் புத்த நெறிகளுடன் சேர்த்து நம் உண்மையான நெறியையும்(அமணம் - ஆசீவக நெறி) நம் இலக்கியங்களையும் அழித்தனர்...அதில் மிஞ்சியவையே பதினெண்கீழ்கணக்கு நூல்கள் உட்பட சில நூல்கள்...

------------------------------------

குறிப்பு:

சிவனும் திருமாலும் ஆசீவக நெறியின் தெய்வ நிலையை அடைந்த சித்தர்கள்.

ஆனால், எப்படி சைவ நெறி வைணவ நெறி எனப் புதிதாக உருவானதென்பது ஆய்தற்குரியது. தமிழர்களின் சிந்து சமவெளி நாகரிகத்தில் நாம் சிவ வழிபாடைப் பார்க்கிறோம். அங்கிருந்து, ஆரியர்களால் பின்பற்றப்பட்டிருக்கலாம்...ஆனால், ஒரு விடயம் புரிகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமணத்தை(ஆசீவகம், புத்தம், ஜைனம்) அழித்து சைவ நெறியைப் பரப்ப வந்தவர்கள் அனைவரும் சம்ஸ்கிருத ஆதாவாளர்கள்(திருநாவுக்கரசர் தமிழ் ஆதரவாளர் எனக் கூறுகிறார்கள்).

Edited by தமிழ்வேந்தன்

  • தொடங்கியவர்

தமிழ் வேந்தனுக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன் . கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல இந்தப் பதிவுக்கான உங்கள் பதில்கள்  என்னைப் பிரமிபூட்டுகின்றன . நான் மனந்திறந்து சொல்கின்றேன் , உண்மையில் நீங்கள் யாழ் இணையத்திற்கு கிடைத்த ஒரு புதையல் . மிக்கக நன்றி தமிழ் வேந்தன் :) :) .

அறிய விடயங்களை தருகிறீர்கள் தமிழ் வேந்தன். மிக்க நன்றி .

தமிழ் வேந்தனுக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன் . கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல இந்தப் பதிவுக்கான உங்கள் பதில்கள்  என்னைப் பிரமிபூட்டுகின்றன . நான் மனந்திறந்து சொல்கின்றேன் , உண்மையில் நீங்கள் யாழ் இணையத்திற்கு கிடைத்த ஒரு புதையல் . மிக்கக நன்றி தமிழ் வேந்தன் :) :) .

 

நன்றி ஐயா...யாழ் இணையம் தமிழர்க்கு கிடைத்த ஒரு புதையல்...அனைத்து தமிழரும் இங்கு சேர வேண்டும்... :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்காக உயிர் நீத்தவர்களும் தமிழர்கள் மொழிமீது அதீத பாசம் கொண்டிருந்ததற்கு சமீபத்திய உதாரணங்கள்
நன்றிகள் கோமகன்,தமிழ்வேந்தன்......
  • கருத்துக்கள உறவுகள்
இது தவிர களப்பிரர் தமிழரே என்ற கருத்து ஒன்று உண்டு. பாவாணர், க.ப. அறவாணன் போன்றோர் இக் கருத்து உடையவர்கள். களப்பிரர் என்ற தமிழர் ஆட்சியில் பார்ப்பனர் செல்வாக்கு இழந்து இருந்ததால் அக் காலகட்டத்தை இருண்ட காலமாக வர்ணிக்கின்றனர் என்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் தமிழர்கள் அல்ல என்று சொல்லுவது போல அந்த காலத்திலும் பிரச்சனை இருந்திருக்கும்

இதுவரை நமக்கு அறிந்த களப்பிரர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கீழே கொடுத்துள்ளேன். மேலும், செய்ய வேண்டிய ஆய்விற்கு உதவும்.

 

1. களப்பிரர் ஆட்சிக்கு முன்பு தமிழகத்தின் நிலை(கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்)

  • கி.மு. 2ஆம் நூற்றாண்டின் முடிவில் ஆரியரில் முதல் அரசனான புஷ்யமித்ர சுங்கன்(வைதீக நெறி) வடஇந்தியாவில் பௌத்ததையே அழித்தான். இதனால், வடஇந்தியா முழுவதிலும் செல்வாக்குடன் இருந்த பௌத்தம் அழிந்தது. இதனால், பௌத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் தென்இந்தியாவில் தங்கள் நெறியை வளர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம்.
  • கி.பி.1ஆம் நூற்றாண்டிலேயே வைதீக(வேத) நெறி சேர சோழ நாடுகளில் செல்வாக்குப் பெற்றிருந்ததை சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்.
  • கி.பி. 2ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில், கண்ணகி மதுரையை எரித்த நிகழ்வு நடைபெறுகிறது(அப்பாண்டிய மன்னனின் ஆட்சி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், கண்ணகி நீதி கேட்கும் பொழுது மக்களிடம் இருந்த அக்கொந்தளிப்பு கலவரமாக மாறியதை, கண்ணகி மதுரையை எரித்ததாகக் குறிப்பிடுகிறார்கள் எனச் சிலர் கூறுவர்...அப்படி ஏதேனும் நடந்திருந்தால், மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அப்பாண்டிய மன்னன் அப்படி என்ன செய்தான்?...இந்நிகழ்வுக்கு சிலப்பதிகாரத்தில் சிறிது ஆய்வு தேவை...)
  • கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ஆறு வகையான நெறிகள் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் குறிப்பிடுகின்றன. மணிமேகலை(27. சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை) இவ்வாறு வகையான நெறிகளையும் விளக்குகிறது.

2. களப்பிரர் ஆட்சியின் போது தமிழகத்தின் நிலை(கி.பி. 3ஆம் நூற்றாண்டு - கி.பி. 6ஆம் நூற்றாண்டு)

  • களப்பிரர்கள் ஆட்சியில் பாண்டியர்கள், களப்பிரர்களுக்குக் கீழ் ஆட்சி செய்தனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. களப்பிரர்கள் தமிழ் மொழியை அழிக்க நினைத்தார்கள் என்றால், தமிழ் வளர்த்த பாண்டியர்களையும் அல்லவா அழித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இதன்மூலமும், களப்பிரர்கள் ஆட்சியில் எழுந்த தமிழ் இலக்கியங்கள் மூலமும், களப்பிரர்களின் நோக்கம் தமிழ் மொழியை அழிப்பதல்ல எனப் புரிகிறது. களப்பிரர்களின் நோக்கம் சமயம் சார்ந்ததாகவோ அல்லது ஆட்சி அதிகாரம் சார்ந்ததாகவோ இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
  • தமிழகத்தில் பௌத்தர்கள் ஜைனர்கள் செல்வாக்குடன் இருந்தாலும் மேலும் தங்கள் மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு இருந்தன. குறிப்பாக ஜைன மதம். இதற்காக அவை ஐம்பெருங்காப்பியங்களையும் ஐஞ்சிறுங்காப்பியங்களையும் இயற்றின.
  • களப்பிரர்கள் ஜைன பௌத்த ஆதரவாளர்கள் என்பதை விட வைதீக எதிர்பாளர்கள் என்பதே பொருத்தமாக இருக்கும். இக்காலத்தில், தமிழ் மொழியில் வைதீக நூல்களோ வைதீகம் இருந்ததற்கான சான்றுகளோ இல்லை(வைதீகர்கள் பிராகிருதம்/சமஸ்கிருதத்தையே ஆதரித்தனர்). களப்பிரர் ஆட்சிக்குப் பின்பே தமிழில் பக்தி இலக்கியங்கள் எழுந்தன.
  • பௌத்தமும் ஜைனமும் தங்கள் செல்வாக்கை காப்பியங்கள் மூலம் உயர்த்திக்கொண்டிருக்கும் பொழுது, இதேகாலத்தில், மதத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்ட/மதத்தைப் பரப்பாத ஆசீவக நெறி, மற்றும் சில நெறிகள் தங்கள் செல்வாக்கை மக்களிடம் இழந்தன.
  • இதேகாலத்தில், மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் இல்லாத நூல்களான பதினெண்கீழ்கணக்கு நூல்கள் எழுந்தன.
  • இதேக்காலத்தில், வச்சிரநந்தி என்பவர் கி.பி. 470 இல் திராவிட சங்கம் எனும் சமண முனிவர்களின் சங்கத்தை ஏற்படுத்தினார். இச்சங்கத்தின் நோக்கம் தமிழ் மொழியை வளர்க்கவோ தமிழக மக்களிடம் நன்னெறிகளை பரப்பவோ நடந்ததாகத் தெரியவில்லை. அப்படிச் செய்திருந்தால், தமிழகத்தில் உருவாக்கும் சங்கத்திற்கு 'தமிழ்க் கழகம்' என்றே பெயர் வைத்திருக்க வேண்டுமே தவிர இப்படி 'திராவிடச் சங்கம்'(இரண்டு சொற்களுமே) என பிராகிருதத்தில் பெயர் வைத்திருக்கமாட்டார்கள். இதனால், இது பெரும்பாலும் ஜைனர்களின் சங்கமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஜைனர்கள் சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் தங்கள் மதத்தைத் தீவீரமாகப் பரப்பிக்கொண்டிருந்தார்கள் எனப் பார்த்தோம். எனவே, இச்சங்கத்தின் நோக்கம் ஜைன சமயத்தை பரப்புவதற்காகவே உருவாக்கப்பட்டதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • பிற்கால களப்பிரர்களின் ஆட்சியில்(கி.பி.5ஆம் நூற்றாண்டில்), சிவ வழிபாடும் திருமால் வழிபாடும் முருகன் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களும்(குறிப்பாக காவேரிபூம்பட்டினத்தில்) கண்டெடுத்ததாகக் கூறுகின்றனர். இதனால், பிற்கால களப்பிரர்கள் இந்து மதத்தையோ சைவ வைணவ மதத்தையோ ஆதரித்தனர் எனக் கருதுவது தவறாகும். உதாரணமாக, கி.மு. 2500ஆம் ஆண்டுகளில் சிந்து சமவெளி நாகரிகத்தில், சிவன் வழிபாடும் முருகன் வழிபாடும் இருந்ததென்றால், கி.மு. 2500ஆம் ஆண்டுகளில் இந்து மதமோ சைவ மதமோ இருந்ததாகக் கூற முடியாது. ஏனென்றால், கி.மு. 2500ஆம் ஆண்டுகளில் சிவனையும் முருகனையும் எந்த மதத்தினர் வழிபட்டனர் என்பது தெரியாது. முற்காலத்தில் பிள்ளையார் வழிபாடு ஆசீவக நெறியிலிருந்து, ஜைன மதத்துக்கும் புத்த மதத்துக்கும் சைவ மதத்துக்கும் எப்படி வந்ததோ, அப்படி தான் சிவன் வழிபாடும் முருகன் வழிபாடும் சைவ மதத்துக்கு வந்தது. களப்பிரர்கள் காலத்தில் ஆசீவக நெறிக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்தாலும், முழுவதும் அழியவில்லை. களப்பிரர்கள் ஜைன பௌத்த ஆதரவாளர்கள் என்பதை விட வைதீக எதிர்பாளர்கள் என்பதே பொருத்தமாக இருக்கும் எனப் பார்த்தோம். இதன்மூலம், களப்பிரர்கள், சைவ மதத்தில் பிற்காலத்தில் உள்ளிழுக்கப்பட்ட சிவனையும் முருகனையும் விட, ஆசீவக நெறியின் தெய்வங்களான முருகனையும் சிவனையுமே ஆதரித்தனர் என்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.

3. களப்பிரர் ஆட்சிக்குப் பின்பு தமிழகத்தின் நிலை(கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு பின்)

  • கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பக்தி இயக்கம் தொடங்கியது. இக்காலத்தில் தான், தமிழில் பக்தி இலக்கியங்கள் எழுதத் தொடங்கப்பட்டன.
  • கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமணர்(அமணர் - ஆசீவகர், ஜைனர், சாவகர், முதலானோர்) கழுவேற்றம் நடைபெற்றது. இதில், சில சமணர்கள் சைவ நெறிக்கு மாற்றப்பட்டனர். சமண கோவில்கள் அழிக்கப்பட்டன. சில சிவன் கோயில்களாக மாற்றப்பட்டன. தமிழகத்தில் சமண சமயங்கள் மற்றும் பௌத்த சமயம் முழுவதுமாக அழிக்கப்பட்டன/தங்களின் செல்வாக்கை இழந்தன.
  • கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சைவ வைணவ சமயங்கள் தங்கள் செல்வாக்கை மன்னர்களிடம் பெறச்செய்தன.

இக்குறிப்புகளை வைத்துக்கொண்டு நாம் கீழுள்ள கேள்விகளுக்கு விடை தேட வேண்டும்

  • இக்காலகட்டங்களில் தமிழகத்தின் வெளியில் இருந்த நாடுகளின் நிலைமை என்ன?
  • இக்காலகட்டங்களில் தமிழகத்தின் வெளியில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் யாவர்?
  • இக்காலகட்டங்களில் தமிழகத்தில் இருந்த நிலைமை?

இக்கேள்விகள், களப்பிரர்கள் யார்?. களப்பிரர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்.

Edited by தமிழ்வேந்தன்

நன்றி தமிழ்வேந்தன். சில விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

களப்பிரர்கள் ஆட்சியைப் பற்றி விரிவாக ஏதும் கல்வெட்டுகள் இல்லாததாலும், இலக்கியத்திலும் தேவையான தகவல் இல்லாததாலும் களப்பிரர்கள் தமிழகத்திற்க்குள் வரும்போது இருந்த சூழல் என்ன அவர்கள் ஆட்சி வீழ்ச்சி அடைந்தபின்பு இருந்த சூழல் என்ன என்பதை நோக்கினால் கொஞ்சம் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

களப்பிரர்களுக்கு முந்தைய நிலையை சங்க இலக்கியங்கள் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள இயலும்.சங்க இலக்கியங்களின் படி 2 ஆம் நூற்றாண்டின் கடைசியில் தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்கள்

சேர நாடு         -->  கோக்கோதை மார்பன்
கொங்கு நாடு -->  கணைக்கால் இரும்பொறை (சேர அரச வழியினர்)
பாண்டிய நாடு --> தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்  ((சிலம்புக்கு பிந்தைய  நெடுஞ்செழியன்)
சோழ நாடு      -->  சோழன் செங்கணான்
இதற்க்கு பிந்தையவர்களைப் பற்றி இலக்கியத்தில் தகவல் ஏதும் இல்லை. எனவே களப்பிரர்கள் காலம்

* களப்பிரர்கள் காலம் கி.பி 3 முதல் கி.பி 6 வரை

சிலப்பதிகாரம் காலம் கி.பி 2 ஆம் நூற்றாண்டு என பெருவாரியான தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதலால் சிலப்பதிகாரம் களப்பிரர்கள் காலத்துக்கு முன்னால் நடந்தது எனக் கொள்வதே சரியாகும்.

களப்பிரருக்கு அடங்கி குறுநில மன்னராக சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டிருக்கலாம். தெற்காசிய முழுவதும் தன் படையை பரப்பிய ராஜேந்திர சோழன் காலத்திலும் சோழர்களுக்கு கப்பம் கட்டி சேரர்களும், சாளுக்கியர்களும் மற்றும் பல குறுநில மன்னர்களும் ஆண்டனர் என்பது நோக்கத்தக்கது. எனவே பாண்டியர்கள் களப்பிரர்களுக்குக் கீழ் ஆட்சி செய்தனர் என்பதில் பெரிதாக ஏதும் இல்லை. மேலும் வேள்விக்குடி செப்பேட்டில் கடுங்கோன்  என்னும் பாண்டிய மன்னன் களப்பிரர்களை அகற்றி தன் ஆட்சியை அமைத்தான் என்று குறிப்பிடப்படுகிறது. எனவே பாண்டியர்களும் களப்பிரர்கள் காலத்தில் துரத்தப்பட்டார்கள் என்பதே உண்மை.

களப்பிரர்கள் வந்தவுடன் இங்கு இருந்த பாண்டியர்களும், சோழர்களும் 300 வருட காலம் என்ன செய்தார்கள் ?? எங்கு இருந்தார்கள் ??

சோழர்கள் ரேனாட்டுச் சோழர்கள் பெயரில் தெலுங்கு நாட்டையும், பாண்டியர்கள் அனுராதபுரத்திலிருந்து இலங்கையை ஆண்டார்கள் எனவும் தெரிய வருகிறது.

 

ரேனாட்டுச் சோழர்கள்
1. சோழன் நந்திவர்மன்     
2. சோழன் தஞ்சயவர்மன்
3. சோழன் மகேந்திரவர்மன்
4. சோழன் புண்ணியகுமாரர்
5. சோழன் விக்கரமாதித்தன்

 

களப்பிரர்களால் துரத்தப்பட்ட ஒரு பாண்டிய மன்னன் தனது இரண்டு மகன்களையும் ஒரு படையையும் அழைத்துக்கொண்டு இலங்கையை ஆண்டு
கொண்டிருந்த மித்தசேனனுடன் போர் புரிந்து அவனைக் கொன்று அனுராதபுரத்திலிருந்து இலங்கையை ஆண்டான். மன்னர்கள் விபரம் வருமாறு

1. பரிந்தான்
2. இளம் பரிந்தான்
3. திரிதரன்
4. தாட்டியன்
5, பிட்டியன்

 

களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ய அப்போது நிலவிய ஆரிய ஆதிக்கமே காரணம் என்பதை நிறுவ நிறைய சான்றுகள் உள்ளன. அவற்றை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் பின்வரும் நாட்களில் இணைக்கிறேன்.

குறிப்பு:
ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூலகள்
1. களப்பிரர்கள் ஆட்சியில் தமிழகம்
2. அறியப்படாத தமிழ் உலகம்
3. களப்பிரர்கள் ஆட்சியில் தமிழகம் ஒரு பார்வை மார்க்ஸ்

 

 

தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்தாக கீழே உள்ள பாடலைப் பாடுகிறார்

கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே

இங்கு கொடிநிலை, கந்தழி, வள்ளி என மூன்று பற்றியும் தெளிவான விளக்கம் இல்லை. சிலர் இது இயற்கை வழிபாடு எனவும், சிலர் இது "தந்திர வழிபாடு" என்று கூறுகிறார்கள். இது பற்றியும் நோக்க வேண்டும்.

நன்றி ஆதித்ய இளம்பிறையன்...

 

களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ய அப்போது நிலவிய ஆரிய ஆதிக்கமே காரணம் என்பதை நிறுவ நிறைய சான்றுகள் உள்ளன. அவற்றை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் பின்வரும் நாட்களில் இணைக்கிறேன்.

//இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...

 

வேள்விக்குடிச் செப்பேட்டில் 'முதுகுடுமிப் பெருவழுதி' எனும் பாண்டிய வேந்தன், அந்தணர்க்கு வேள்விக்குடிக் கிராமத்தை இறையிலியாக வழங்கினான் என உள்ளது...சங்கத் தமிழ் இலக்கியங்களில் அந்தணர், பார்ப்பார் என்ற சொற்கள் பிராமணர்களை(வைதீக மதம் - ஆரியர்கள்) மட்டுமேக் குறிக்கும் என்று சிலர் தவறாகக் கூறுவர்...பல மதங்கள் தோன்றிய பின்பு, அந்தணர் எனும் சொல் அனைத்து மதத்திலும்(ஆசீவகம், பௌத்தம், ஜைனம், வைதீகம், முதலியன) உள்ள அறம் செய்வோரைக் குறிக்கும் பொதுச்சொல் ஆனது...அது வைதீக பிராமணர்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல...ஒவ்வொரு ஆட்சியிலும்(தான் ஆதரிக்கும் மதத்திற்கு ஏற்றவாறு) அச்சொற்களின் பொருள் வேறுபடும்...அதனால், இங்கு அந்தணர் என்பவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை நாம் நோக்க வேண்டும்...வேள்வி/யாகம் செய்வது வைதீக(வேத) மதத்திற்கே உள்ள தனிப் பழக்கவழக்கம்(ஆரியர்களின் நம்பிக்கைப் படி வேள்வியில் ஒரு பொருளை எரித்தால், அது புகை வடிவமாக வானத்திலிருக்கும் புகை மேகங்களில் உள்ள தேவர்களுக்குச் சேரும் என்பதே). வேள்வி செய்யும் வைதீக நெறியினரின்(ஆரியர்) குடி வாழ தானமாகக் கொடுத்த இடம் என்பதால் அந்த இடத்திற்கு வேள்விக்குடி கிராமம் எனப் பெயர் வந்தது எனலாம். இதன்மூலம், இக்கிராமத்தை முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியன், வைதீக அந்தணர்க்கு இறையிலியாகக் கொடுத்தான் என்பது தெளிவாகிறது...அப்பொழுது, முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியன், வைதீக நெறியை(ஆரியர்) ஆதரித்தான் எனத் தெரிகிறது...இதன்மூலம், களப்பிரர் காலத்திற்கு முன்பே பாண்டிய நாட்டில் வைதீக மதம் மன்னனிடம்(மக்களிடம் என்று கூறவில்லை - இதற்கு ஆய்வுகள் தேவை) செல்வாக்கு அடைந்துவிட்டது எனலாம்...ஏற்கனவே, கி.பி. 1ஆம் நூற்றாண்டிலேயே சேர சோழ நாடுகளில் வைதீக மதம் மன்னனிடம்(இங்கும் மக்களிடம் என்று கூறவில்லை - இதற்கும் ஆய்வுகள் தேவை) செல்வாக்கு அடைந்துவிட்டது எனப் பார்த்தோம்...இது, களப்பிரர்களுக்கு முந்தய காலம்...களப்பிரர்கள் ஆட்சியில் வைதீக மதத்தினருக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட வேள்விக்குடி கிராமம் பிடுங்கப்பட்டது...இதன்மூலம், அவர்கள் வைதீக எதிர்ப்பாளர்கள் என்பதை நாம் உறுதிசெய்யலாம்...

 

ஆனால், களப்பிரர் காலத்தில் வைதீக அந்தணருக்கு நிலதானம் வழங்கப்பட்டது என 'பூலாங்குறிச்சிக் கல்வெட்டு'களில் இருந்த சொற்களான பிரம்மதாயம், மங்கலம், தேவகுலம், கோட்டம் ஆகிய சொற்களை வைத்து சில வரலாற்றாய்வாளர்கள் கூறுவர்...இதனால், களப்பிரர்கள் வைதீக மதத்தினரையும் ஆதரித்தனர் எனவும் கூறுவர்...இக்கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கில் சொற்கள் இருந்தாலும், இந்நான்கு சொற்களைத் தவிர வேறு எந்த சொற்களும் வைதீக நெறிக்கும் தொடர்பு இல்லை. இக்கல்வெட்டுகளைப் படித்த கல்வெட்டறிஞர்களுள் ஒருவரான திரு.நடன காசிநாதன் அவர்கள் கூறியபடி இதேக் கல்வெட்டுகளில் தான் ஜைன மதத்திற்குத் தொடர்புடைய சொற்களான வாசிதேவனார் கோட்டம், தாபதப்பள்ளி போன்ற சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன. இருந்தபோதிலும், இந்நான்கு சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு சில வரலாற்று ஆய்வாளர்கள், களப்பிரர்கள் வைதீக நெறியையும் ஆதரித்தனர் எனக் கூறுவது தவறு...இது ஒரு தவறான கண்ணோட்டமாகும்...இச்சொற்களை, களப்பிரர் காலத்திற்கு முன்பு, தமிழ் மன்னர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் இருந்த வைதீக(ஆரிய) மத ஆதிக்கத்தாக்கத்தின் அளவாக தான் ஆய்வாளர்கள் பார்க்க வேண்டும்...அதாவது, களப்பிரர் காலத்திற்கு முன்பு, மன்னன் வைதீக மதத்தினருக்கு தானமாக கொடுத்த நிலத்தை பிரம்மதாயம் என வைதீக மதத்தினர் அழைத்தனர்...அச்சொல்லாட்சி களப்பிரர் காலத்திலும், நில தானத்திற்குப் பெயராகத் தொடர்ந்திருக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும்...இக்கல்வெட்டுகளின் மூலம் களப்பிரர் ஆட்சிக்கு முன்பு இருந்த வைதீக ஆதிக்கமே தெரிகிறதே தவிர களப்பிரர் ஆட்சியில் வைதீக ஆதரவு தெரியவில்லை எனலாம்...

1. களப்பிரர்கள் பற்றி கூறப்பட்ட வேள்விக்குடி செப்பேட்டை முதலில் காண்போம்.

நெடுஞ்சடையன் பராந்தகன் என்னும் பாண்டிய மன்னன் வீதி உலா வரும்போது நரசிங்கன் என்னும் பிராமணன் பாண்டிய மன்னனிடம் ஒரு முறையீடு செய்கிறான். சங்க கால மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன், கொற்கைக்கிழான் நற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு அவன் செய்த வேள்வியின் பொருட்டு குளிர்ச்சியான மலர்ச் சோலைகள் நிறைந்த பாகனூர்கூற்றத்தில் அடங்கிய வேள்விக்குடி எண்டும் கிராமத்தை அவனது பரம்பரைக்கு தானமாக கொடுக்கிறான். அந்த வேள்விக்குடி கிராமத்தை களப்பிரர் என்னும் கலி அரசர் பறித்துக் கொண்டனர். அதை மீட்டு தன்னிடமே திருப்பித் தரவேண்டும் என்று வேண்டுகிறான். அவன் வேண்டுகோளுக்கு இணங்க அந்தக் கிராமம் நரசிங்கனுக்கே கொடுக்கப்படுகிறது. செப்பேடு இப்படித்தான் ஆரம்பிக்கிறது  

கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால்
நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும்
பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச்
சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத
கொற்கைக்கிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக்
கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து
வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்றப்பதியைச்….


2. இரண்டாவது பாண்டியன் பராந்தக வீரநாராயணன் வெளியிட்ட தளவாய்புரச் செப்பேட்டில் கூறப்பட்ட ஒரு செய்தியை காண்போம்.

பாண்டியன் கடுங்கோன் திருமங்கலம் என்ற ஊரை பிராமணர்கள் பன்னிரண்டு பேருக்கு தானமாக கொடுத்துள்ளான். கழுதூரில்  சித்தி செய்த பாண்டியன் ஒருவன் காடாக சோமயச்சி என்ற பிராமணனுக்கு சொம்மாசி குறிச்சி என்ற ஊரை தானமாக கொடுத்திருந்தான். திருமங்கலம், சோமாசிக் குறிச்சி என்ற இரு ஊர்களின் சாசனங்கள் மறக்கோட்டால் தொலைந்து போயிற்று என்றும், கடத்திருக்கைக் கிழவன் என்பவன் இந்நிலங்களைப் பறித்துக் கொண்டு மதுரதர நல்லூர் என்று பெயரிட்டுக் குடி நிலனாக மாற்றிக் கொண்டான் என்றும் அதைத் தவிர்த்து மேற்கூறிய இரு ஊர்களையும் ஒரே ஊராக்கி எல்லையிட்டு, பிடி சூழ்ந்து சாசனம் செய்து தரவேண்டுமென்று அந்த ஊர்களைச் சேர்ந்த பிராமணர் சார்பாக ஶ்ரீநாராயணன் கேசவன் என்பவன் பாண்டியன் பராந்தக வீரநாராயணனிடம் முறையிட, மன்னன் மீண்டும் அவ்வூர்களைப் தானமாக வழங்கினான்.

3.மாறவர்மன் அரிகேசரி வெளியிட்ட ஒரு செப்பேட்டில் நாரயனபட்டர்  என்பவருக்கு இளையான் புதூர் என்ற ஊரை தானமாக அளித்ததையும், அதை எதிர்த்து கம்பலை என்னும் மறவர் கோட்டம் கலகம் செய்ததையும், அந்த கலகத்தை அடக்கி திரும்ப பிரமனர்களுக்கே அதை திருப்பி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

4. ராஜசிம்ம பாண்டியன் வெளியிட்ட சின்னமனூர் செப்பேட்டில் பராந்தகன் என்னும் பிராமணனுக்கு மந்தரகெளவரவமங்கலம் என்ற ஊரை தானமாக வழங்கியது குறிப்பிடப்படுகிறது.

5. ராஜசிம்ம பாண்டியன் மகன் வீரபாண்டியன் வெளியிட்ட சிவகாசி செப்பேட்டில் வாசுதேவ பீதாம்பரபட்டன்  என்னும் பிராமணனுக்கு வழங்கிய நிலதனத்தை பற்றிக் குறிப்பிடப் படுகிறது.

இதிலிருந்து பாண்டிய மன்னர்கள் காலத்தில் (சங்ககாலத்திலும் அதற்க்கு பின்னும்)  பிராமணர்களுக்கு ஏகப்பட்ட நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.  வழங்கிய நிலங்கள், ஊர்கள் எல்லாம் களப்பிரர்கள் காலத்தில் பறிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில சான்றுகளைக் காணலாம்.....
 

பல்லவர்களின் குரவபாளையம் செப்பேடு, வேலூர்பாளையம் செப்பேடு, ரேயூறு செப்பேடு , நெடுங்கராயச் செப்பேடு , சுராச் செப்பேடு, உருவப்பள்ளி செப்பேடு, உதயேந்திரம் செப்பேடு முதலிய செப்பேடுகளில் திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக கூறப்படும் கலியுக   தேசம் பற்றிய  செய்திகள் இவைதான்.

"கலியுக தோத்தினால் அபகரிக்கப்பட்ட தர்மத்தை தூக்கி நிறுத்த எப்போதும் சன்னத்தனமாக இருப்பவனும்"

"கலியை அடக்குகிற பரமேசுவரன் மனுநீதி முறைப்படி பூமியிலிருந்து கலிநீக்கும்படி அரசு புரிந்தான்"

"கலியுக தோத்தினால் சாய்ந்த தர்மத்தை தூக்கி நிலைநிறுத்துவதில் எப்போதும் தயாராய் இருப்பவனும்"

"கலியுக தோத்தினால் முடிவடைந்த தர்மத்தை நிலைநிறுத்துவதில் எப்போதும் சன்னத்தனமாக  இருப்பவனும்"


பாண்டியர் செப்பேடுகளும் கலி அரசர், கலிப்பகை எனக் கூறுகின்றன. அதனால் கலியுக தோசத்தினை களைவதிலும், சாய்ந்த தருமத்தினை மீட்பதிலும் அக்கறை காட்டி உள்ளனர்.

ஆகவே இங்கே கலி என்பது எதைக் குறிக்கிறது எனது முக்கியமாகிறது.

பாண்டிய, பல்லவ செப்பேடுகளை காணும்போது முன்பு குடி மக்கள் உழுது விளைவிக்கும் நிலங்களை மன்னர்கள் தானங்கள் என்ற பெயரில் அவர்களிடமிருந்து பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்திருக்கின்றனர். களப்பிரர்கள் ஆட்சிக் காலத்தில் பிராமணர்களுக்கு தானமாக கொடுத்த நிலங்களை  பிடுங்கி குடியானவர்களுக்கே திரும்ப கொடுக்கின்றனர். களப்பிரர்கள் தோற்றவுடன், பல்லவ பாண்டிய மன்னர்கள் மீண்டும் குடிமக்களிடம் இருந்து பிடுங்கி பிராமணர்களுக்கே கொடுக்கின்றனர். இதைத்தான் சாய்ந்த தருமத்தினை மீட்பது என்பது பல்லவர்களும் பாண்டியர்களும் மாய்ந்து மாய்ந்து எழுதி வைத்து உள்ளனர்.

இந்தியாவின் மூத்த வரலாற்றறிஞர் ஆர்.எஸ்.சர்மா கலியுகம் பற்றி கூறியதாவது "கலி என்பது ஏற்கனவே நிலைபெற்றிருந்த சமூக ஒழுங்கு நிலையிலிருந்து எப்போதெல்லாம் விலகல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அது கலியுகமாக பார்க்கப்படுகிறது. சடங்கு முறைகளை புறக்கணித்தாலும் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தோர் செல்வாக்கு பெறுவதும், பிராமணர் அல்லாதோர் ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதும் கலி என்பதன் பொருளாகிறது. கலியுகம் என்ற சொல்லுக்கு பிராமணிய சமூக ஒழுங்கை புறக்கணிப்பது எனவும் மக்களின் யுகம் என்பதும் பொருள் என்கிறார்"

ஆர்.எஸ்.சர்மா கூறிய கருத்து தமிழ்நாட்டு வரலாற்றுடன் எவ்வளவு ஒத்து போகிறது !! ஆகவே களப்பிரர்கள் காலம் பிராமணர்களுக்குத் தான் இருண்ட காலமே தவிர தமிழுக்கும் தமிழர்களுக்கு அல்ல.
 
பின் களப்பிரர்கள் என்பவர் எங்கிருந்து வந்தனர் என்ற கேள்வி எழவேண்டும்!! அதையும் ஆய்ந்து விடுவோம்.

  • தொடங்கியவர்

இந்தியாவின் மூத்த வரலாற்றறிஞர் ஆர்.எஸ்.சர்மா கலியுகம் பற்றி கூறியதாவது "கலி என்பது ஏற்கனவே நிலைபெற்றிருந்த சமூக ஒழுங்கு நிலையிலிருந்து எப்போதெல்லாம் விலகல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அது கலியுகமாக பார்க்கப்படுகிறது. சடங்கு முறைகளை புறக்கணித்தாலும் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தோர் செல்வாக்கு பெறுவதும், பிராமணர் அல்லாதோர் ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதும் கலி என்பதன் பொருளாகிறது. கலியுகம் என்ற சொல்லுக்கு பிராமணிய சமூக ஒழுங்கை புறக்கணிப்பது எனவும் மக்களின் யுகம் என்பதும் பொருள் என்கிறார்"

ஆர்.எஸ்.சர்மா கூறிய கருத்து தமிழ்நாட்டு வரலாற்றுடன் எவ்வளவு ஒத்து போகிறது !! ஆகவே களப்பிரர்கள் காலம் பிராமணர்களுக்குத் தான் இருண்ட காலமே தவிர தமிழுக்கும் தமிழர்களுக்கு அல்ல.
 
பின் களப்பிரர்கள் என்பவர் எங்கிருந்து வந்தனர் என்ற கேள்வி எழவேண்டும்!! அதையும் ஆய்ந்து விடுவோம்.
/////

 

கலிக்கு இப்படியொரு அர்த்தத்தை இன்றுதான் பார்கின்றேன் . இதே கருத்துக்களத்தில் மொசப்பத்தேமியா சுமேரியர் எழுதிய சுமேரியரின் ஆய்வுக்கட்டுரையையும் ஒப்பு நோக்கியதில் ஒரு உண்மை எனக்குத் தெளிவாகின்றது , அதாவது களபிரர்களின் ஆதிமூலம் ஏன் மாயர்களின் வளிதோன்றல்களாக இருக்ககூடாது ???

  • கருத்துக்கள உறவுகள்
கி.பி. 1ஆம் நூற்றாண்டிலேயே சேர சோழ நாடுகளில் வைதீக மதம் மன்னனிடம்(இங்கும் மக்களிடம் என்று கூறவில்லை - இதற்கும் ஆய்வுகள் தேவை) செல்வாக்கு அடைந்துவிட்டது எனப் பார்த்தோம்...
சிங்கள சைவ மன்னன் தேவநம்பிய தீசன்....பெளத்தனாக மாற்றப்பட்டான் என்ற கூற்றும் சரியாகின்றது ..ஒரு காலத்தில் மன்னர்கள் மதம் மாற்றப்பட்டு பின்னர் மக்கள் மதம் மாறினார்கள்...மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற கூற்றும் இதிலிருந்து வந்திருக்கலாம்....

கலிக்கு இப்படியொரு அர்த்தத்தை இன்றுதான் பார்கின்றேன் . இதே கருத்துக்களத்தில் மொசப்பத்தேமியா சுமேரியர் எழுதிய சுமேரியரின் ஆய்வுக்கட்டுரையையும் ஒப்பு நோக்கியதில் ஒரு உண்மை எனக்குத் தெளிவாகின்றது , அதாவது களபிரர்களின் ஆதிமூலம் ஏன் மாயர்களின் வளிதோன்றல்களாக இருக்ககூடாது ???

 

களப்பிரர்கள்  மாயர்களின் வழித்தோன்றல்கள்  என்பதாக எந்த கருதுகோளும் நான் அறிந்திருக்கவில்லை. ஆகையால் என்னிடம் பதில் ஏதுமில்லை :)  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.