Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் அறிக்கை 2013 -தமிழீழ விடுதலைப் புலிகள் - தமிழீழம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maveernal%20Urai-2013%201tn.jpg                                         
                                                                                                                                          27.11.2013

மாவீரர் நாள் அறிக்கை 2013

அன்பான தமிழீழ மக்களே !
இன்று மாவீரர் நாள்.
 

வாழையடி வாழையாக எமது முன்னோர்கள் வாழ்ந்து வந்த எமது தாயகமண்ணைக்காத்திடவும் எமது எதிர்காலச் சந்ததியினர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈகம் செய்த புனிதர்களை வணங்கும் நாள்.
பிறப்பு ஒன்று இருக்குமானால் இறப்பு என்பது நிச்சயமானது. இது இயற்கையின் நியதி. ஆனால் எமது மாவீரர்களின் மரணம் இயற்கையின்பாற் பட்டதல்ல. இது ஒரு இலட்சியத்திற்கானது. அர்த்தமுள்ளது. போற்றுதற்குரியது.
 
எமது மாவீரர்கள் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் தம் உயிருள்ளவரை போராடினார்கள். உலகின் பலம் பொருந்திய சக்திகள் யாவும் ஒன்று திரண்டு எதிரிக்குப்பலமாக நின்ற போதும் அஞ்சாது போராடினார்கள். உலகின் எப்பாகத்திலும் நிகழ்ந்திராத ஆச்சரியப்படத்தக்க வீரம்செறிந்த செயற்பாடுகளை அவர்கள் புரிந்தார்கள். இருப்பினும் அவர்கள் தமக்கென எதையும் வேண்டி நிற்கவில்லை. ஏன்? தமக்கென ஒரு புதைகுழியைக் கூடத்தேடாதவர்களும்இ தம்முகம் காட்டாது மறைந்து போனவர்களும் உண்டு.
 
இம்மாவீரர்களோடு விடுதலைப்போரில் ஒன்றாகப்பயணித்து பெரும் இன்னல்களைச்சுமந்து வாழ்ந்து மடிந்துபோன பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் உண்டு. இவர்கள் விடுதலைப் போருக்குப் பக்கபலமாகத் தோளோடுதோள் நின்று உதவியவர்கள். விடுதலை விருட்சத்திற்கு தம் செங்குருதியை நீராக வார்த்தவர்கள். மாவீரர்களோடு இவர்களும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கß இத்தகையோரைப் ©சிக்கும் இந்நாளைத் தனியாக ஒரு வணக்கத்திற்குரிய நாளாக மட்டும் வரையறை செய்து கொள்வது தவறானதாகும். மாறாக இம்மாவீரர்களின் கொள்கைகளைப்போற்றவும் பின்பற்றவும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாளாகவும் கொள்ளுதல் வேண்டும். இதுவே இம்மாவீரர்களுக்கும் மடிந்து போன மக்களுக்கும் நாம் செய்யும் கடமையாக இருக்க முடியும்.
 
2009 மேயில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் இராணுவ ரீதியான பின்னடைவைச்சந்தித்ததைத் தொடர்ந்து தமிழ்மக்களின் தேசிய வாழ்வை அழித்துவிடுதல், தமிழர் தாயகத்தைச் சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் கொண்டு வருதல்இ என்பன சிங்கள தேசத்தால் முனைப்புப்படுத்தப்பட்டது. இதில் தமிழரின் தேசிய வாழ்வை அழித்தல் என்பது ஒருங்கிணைந்துள்ள தமிழர் தாயகத்தைச்சிதைத்தல்இ  தமிழர் தாயத்தில் தமிழரைச் சிறுபான்மையினராக்குதல்இ  தரையிலும் கடலிலும் தமிழர் பொருளாதார வாழ்வாதாரத்தை சுரண்டுதல்இ  மற்றும் இல்லாது ஒழித்தல்  ஆகிய பல்வேறு வழிகளில் நிகழ்ந்து வருகின்றது. 
 
சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் கொண்டுவருதல் என்பது பெருமளவு ஆயுதப்படையினரை நிலைகொள்ள வைத்தல், புதிய இராணுவக் கடற்படைமுகாம்களை நிறுவுதல் விரிவாக்குதல். ஆயுதப்படையினருக்கான குடியிருப்புக்களை நிறுவுதல் என்பனவற்றோடு பொருளாதார அபிவிருத்தி என்ற ரீதியில் உருவாக்கப்படும் பெரும்தெருக்கள் வீதிகள் என்பனவற்றின் மூலம் ஆயுதப்படையினருக்கான விநியோகங்களையும் தொடர்புகளையும் சீர்படுத்துதல் என்பன மூலம் திடப்படுத்தப்பட்டுவருகின்றது.
   
அடுத்து புதிய பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலமும் தமிழர் தாயகத்தில்
புனிதப்பிரதேசங்கள் என்ற ரீதியில் ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள் மூலம் தமிழ் மக்களின் சமய பண்பாட்டு பாரம்பரியங்களை சிதைவுறச் செய்யவும் மழுங்கடிக்கச் செய்யவும் இதில் அரசியல்வாதிகள் இராணுவ தரப்பினர் என்பதற்கு அப்பால் பௌத்த பிக்குகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவற்றோடு தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை சிதைக்கும் வகையில் சமூகச்சீர்கேடுகளை உண்டாக்கத்தக்க வழிவகைகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டப்படுகின்றது. குறிப்பாக தமிழ் இளைஞர் யுவதிகள் மத்தியில் போதைப் பொருள் பாவனைகளைத்தூண்டுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல் பாலியல் ரீதியான ஒழுக்கக்கேடுகளை தமிழ்ச்சமூகத்தை அதன் கலாச்சார விழுமியங்களில் இருந்து பிறழச்செய்;தல் ஆகிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
 
இந்த வகையில் ஒரு நெருக்கடியானதும் பாதுகாப்பற்றதுமான சூழ்நிலையை எமது மக்களும் தேசமும் எதிர்கொண்டு நிற்ப்பதைப்பார்கின்றோம். ஆனால் எல்லாம் முடிந்து விட்டது-இனிச்செய்வதற்கு எதுவுமில்லை என்பதுதான் இல்லை. ஏனெனில் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் ஏற்கனவே பல ஏற்ற இறக்கங்களையும் துன்ப துயரங்களையும் சந்தித்தவர்கள்.இருப்பினும் அவர்கள் என்றுமே தமது சுதந்திரவாழ்விற்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கியதில்லை. தமிழ் மக்களின் சாத்வீகப்போராட்டகாலத்திலும் சரி அதன் பின்னரான ஆயுதப்போராட்ட காலத்திலும் சரி தற்போதைய  அரசியல் சூழ்;நிலையிலும் சரி தமது உரிமை தொடர்பான நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாகவே இருந்து வந்துள்ளனர். இதனை இக்காலப்பகுதிகளில் இடம்பெற்ற அனைத்துத்தேர்தல்களிலும் நிருபணம் செய்துள்ளனர். பெரும் மோசடிகள் அச்சுறுத்தல்கள் என்பவற்றையும் மீறியே அதனைச் செய்துள்ளனர்.
 
அதிலும் குறிப்பாக இறுதியாக நடந்த வட மாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அளித்துள்ள தீர்ப்பானது கொலைகளைக்கண்டோ அச்சுறுத்தல்களைக் கண்டோ தாம் அஞ்சப்போவதில்லை என்பதை மட்டுமல்ல தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்குப் பிரதியீடாக எவையும் இல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்மக்கள் சலுகைக்காக என்றும் வாக்களித்தவர்கள் அல்ல அத்தகையதொரு வரலாறு என்றும் இல்லை. அவர்கள் எப்பொழுதும் கொள்கைக்காகவும், இலட்சியத்துக்காகவுமே வாக்களித்துள்ளனர். இதனை ஒடுக்குமுறையாளர்கள் மட்டுமல்ல-வாக்குறுதிகளை வழங்கித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.
 
வட மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்பார்ப்பையும் மீறியதாக மக்களின் ஆதரவு இருந்துள்ளது. இதனைக் கூட்டமைப்பினரே வெளிப்படுத்தியும் இருந்தனர். இதற்குக்காரணம் இவர்கள் பிரகடனம் செய்த கொள்கைகளில் கொண்டுள்ள பற்றுறுதி என்பதை விட மக்கள் தெளிவும் உறுதியும் கொண்டுள்ளமையாகும்;. ஆகையினால் தேர்தலின் முடிவைக் கொண்டாவது தமிழ்மக்களின் உணர்வைப்புரிந்து அதற்கேற்ப செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
 
 தமிழ் மக்களுக்குச் சிங்கள  ஆட்சியாளர்களுடன், நீண்டதொரு அனுபவம் உண்டு. இதனை அரசியற் தலைவர்கள் சிலவேளை மறந்து போய்விடினும் மக்கள் மறந்து விடுவதில்லை. இதன் காரணமாகவே அபிவிருத்தி பற்றியும் சலுகைகள் பற்றியும் சிங்கள ஆட்சியாளர்களும் சரி ஒட்டுக்குழுக்களும் சரி பேசும்போதும் மக்கள் கேட்பதில்லை. கடந்த காலத்தில் சிங்கள அரசுடன் இணக்க அரசியல் கடைப்பிடிக்க முயன்று பலமுறை ஏமாற்றப்பட்டமையும் மறந்து போய்விடவில்லை. இதனால் தான் விடுதலைப்போரில் பெரும் இழப்பு ஏற்பட்டபோதும் விடுதலைப்போராட்டம் எந்த இலட்சியத்திற்காக நடத்தப்பட்டதோ அதே இலட்சியத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.
 
இந்நிலையில் சிறிலங்கா ஆட்சியாளர்களும் சரி தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றவர்களும் சரி தமிழ் மக்களின் உணர்வுகளை மீண்டும் ஒரு தடவை பரிசோதித்துப்பார்க்க முற்படக்கூடாது. அத்தகையதொரு  பரிசோதனையானது கடந்த காலத்தில் சாத்வீகப்போராட்டத்தில் இருந்து எவ்வாறு மக்களை ஆயுதப்போராட்டத்துக்கு தள்ளியதோ அதே போல் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்துக்குச் இட்டுச்செல்லும் என எண்ணுவது தவறாகாது. 
 
ஆனால், சிங்கள தேசமோ அன்று போல இன்றும் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு  மதிப்பளிப்பதாக இல்லை. தமிழ் மக்களை இரண்டாம் தரப்பினராகவே அது நடத்துகின்றது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழர்கள் சிங்களவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடாகவுள்ளது. பெரும்பான்மை இனத்தினராலோ அன்றி சிறிலங்கா ஆயுதப்படையினராலோ தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் படுகொலைகள் பாலியல்;வன்கொடுமைகள் எதற்கும் பதில் அளிக்க வேண்டியதான அவசியம் தமக்கில்லை என்ற நிலைப்பாட்டையே அது கொண்டுள்ளது. சிங்கள தேசத்தின் இத்தகைய நிலைப்பாட்டினால் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட எத்தகைய வன்முறைக்கும் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை. விசாரணைக்கென உருவாக்கப்பட்ட குழுக்களும் ஆணையாளர் குழுக்களும் கண்துடைப்பிற்கானவையாகவே இருந்தன. சர்வதேச நாடுகளும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதற்குக்காரணம் இலங்கைத்தீவின் கேந்திரமுக்கியத்துவமே ஆகும்.
 
இத்தீவின் அமைவிடமானது இந்து சமுத்திரப்பிராந்திய புவிசார் அரசியலில் முக்கிய பங்காற்றத்தக்கதாகும். இத்தகைய தீவின் ஆட்சி அதிகாரமானது சிங்களவர்கள் கைகளில் இருந்ததினால் சிங்கள ஆட்சியாளர்களுடன் சர்வதேச நாடுகள் குறிப்பாக ஆதிக்க அபிலாசை கொண்ட நாடுகள் அனுசரித்த போக்கையே கடைப்பிடிக்க விரும்பின. இதன் காரணமாகவே சிங்கள ஆட்சியாளரின் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை அவை கண்டு கொள்ளவில்லை. மாறாகச் சிறிலங்காவின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவந்தன.
 
ஆயினும், இறுதியாக நடந்த யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் சிறிலங்கா ஆயுதப்படையினர் புரிந்த மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மனித குலத்திற்கு எதிரானவையென சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றன இக்கொடுரச் செயல்கள் குறித்து உறுதியான ஆவணங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன இது குறித்து தவிர்க்க முடியாது பேச வேண்டிய நிலை உருவாகியது. மேலும் யுத்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை தனது கடமையில் இருந்து தாம் தவறிவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளமையும் ஐ.நா.மனித உரிமைகள் மாநாடுகளில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானங்களும் சிங்கள தேசத்திற்கு நெருக்கடிகளைத் தோற்றுவிப்பனவாக மாறியுள்ளன.  இதனை இலங்கையில் அண்மையில் நடந்த இருவேறு நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருந்தன. முதலாவதாக சிறிலங்காவிற்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை அவர்கள் போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதோடு அவ்வாறு நடத்தப்படாது விட்டால் சர்வதேச விசாரணை கோரப்படும் என அறிவுறுத்தி;யமையாகும். இதற்குச் சிங்கள தேசம் பெரும் எதிர்ப்புக்குரல் எழுப்பியதே தவிர செவிமடுத்ததாக இல்லை.
 
அடுத்ததாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அரசாங்கம் பெரும் பிரயத்தனத்தின் மூலம் நடத்திய பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கு மனித உரிமை மீறல்களைக்காரணம் காட்டி  கனடாப்பிரதமர், மொறிசியஸ்  பிரதமர் ஆகியோர் பொதுநலவாய உச்சி மாநாட்டைப் புறக்கணித்தனர். அதேவேளை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பைத் தொடர்ந்து இந்தியப் பிரதமரும் மாகாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. மாநாட்டிற்கு வருகை தந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சிறிலங்கா அரசின் உபசரிப்புக்களைப் புறக்கணித்ததோடு யுத்த மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணை நடாத்தப்படாது விட்டால் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளருடன் இணைந்து சர்வதேச விசாரணை ஒன்றை பிரித்தானியா கோரும் என உறுதிபடத் தெரிவித்துச் சென்றார்.
 
சிறிலங்கா மீதான மேற்குலகின் அதிருப்திக்குக் காரணம் தனியாக மனித உரிமை மீறல்கள், ஊடகச் சுதந்திரமின்மை, நீதித்துறையில் அரசாங்கத்தின் தலையீடு போன்றவை மட்டும் தான்  எனக்கொள்வதற்கில்லை. போரின்போது சிறிலங்காவிற்கு மேற்குலகம் வழங்கிய பூரண ஆதரவே அது பாரிய மனிதவுரிமை மீறல்களை மேற்கொள்ளும் துணிவைக்கொடுத்தது என்பது மறுப்பதற்கில்லை. ஆகையினால் தற்போதைய இந்நிலைப்பாட்டு மாற்றத்திற்கு மேற்கூறிய காரணிகளோடு சிறிலங்கா அரசு சீனாவுடனும் மேற்குலகிற்கு எதிரான நாடுகளுடனும் கொண்டுள்ள நெருக்கமும் காரணமாக இருத்தல் வேண்டும். சுருக்கமாகக் கூறுவதானால் அத்திலாந்திக்கில் கிÂபா போன்று இந்து சமுத்திரத்தில் சிறிலங்கா ஆகிவிடலாம் என்ற அச்சம் காரணமாகலாம். இதன் காரணமாக மேற்கு நாடுகள் சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் சில மாறுதல்களைச் செய்வதற்கு முற்பட்டிருத்தல் வேண்டும்.
 
ஆனால் இது ஒரு ஆரம்பநிலை மட்டுமே. உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்திற்கும் தமது நலன் என்பதற்குப்  பின்னரே மற்றவை எல்லாம். இதனால் சிங்கள ஆட்சியாளர்களின் அடுத்த கட்ட நகர்வுகளைப் பொறுத்தே தற்பொழுது சுயாதீன விசாரணை கோரும் நாடுகளின் நிலைப்பாடு இருக்கலாம்.
சுயாதீன விசாரணை குறித்த சிறிலங்கா அரசின் நிலைப்பாடானது இதுவரையில் மாற்றம் கண்டதாக இல்லை. சுயாதினமான குழுக்களைக் கொண்டே நல்லிணக்க ஆணைக்குழுக்களை தாம் நியமித்ததாகச் சாதிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் இதற்கு அப்பால் செல்லத் தயாராக இல்லை. இத்தகையதொரு நிலையில் உலகில் மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தமிழ்மக்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். மாறி வரும் சர்வதேசச்  சூழல் எமக்கு தமிழீழத்தைப் பெற்றுத் தந்து விடும் என்பதல்ல.   இச்சூழலைப் பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் முயற்சித்தல் அவசியம்.
 
இன்று தமிழ் மக்களின் போராட்டமானது இரு வேறு தளங்களில் நடைபெறுகின்றது. இதில் ஒன்று தாயகத்திலும்; மற்றொன்று தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுமாகவுள்ளது. எமது போராட்டம் முன்னோக்கி நகர தாயகத்திலுள்ளளோரும் புலம்பெயர்ந்தோரும் ஒன்றுபட்டு பணியாற்றுதல் அவசியமானதாகும். ஆனால் இதில் ஒன்றை மட்டும் கூறிவிட முடியும் தாயகத்திலும் சரி புலம் பெயர் நாடுகளிலும் சரி மக்கள் ஒரே இலட்சியத்துடனும் குறிக்கோளுடனுமேயுள்ளனர. வழிநடத்த முற்படுபவர்களே வேறுபட்ட சிந்தனையுடனும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கத் தவறுபவர்களாகவும் மாறிவிடுகின்றனர். மேற்குறிப்பிட்ட ஈழத்தமிழ் மக்களின் இரு வேறுபட்ட போராட்டத் தளங்களுக்கு அப்பால் மூன்றாவது தளமாகத் தமிழகமும் உண்டு. இன்று தமிழகத்திலுள்ள பிரதான சக்திகள் யாவும் ஈழத்தமிழர் படுகொலை குறித்து சுயாதீனமான விசாரணை கோரிநிற்பதோடு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என வலியுறுத்தியும் வருகின்றன.

தென்னாசியப் பிராந்தியத்தில் பலம்பொருந்திய இந்தியாவின் அரசியலில் இம் மூன்றாவது தளமானது தாக்கம் செலுத்தக்கூடியதாகையால்   இத்தளமும் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாகயாகவுள்ளது. இந்த வகையில் இன்று தமிழர் தாயகச்சிதைப்பைச் சிங்கள இராணுவ மேலாதிக்கம் தமிழர்கலாச்சாரப் பண்பாட்டுச் சீரழிப்பு என்பன ஒருபுறமும் தமிழ் மக்களின் உறுதியான இலட்சியப்பற்று சர்வதேச சூழலில்  மின்மினிகள் போல் தெரியும் சில நற்சமிக்கைகள் இன்னொரு புறமுமாய் தமிழர் வாழ்வு தொடர்கின்றது.
 
விடுதலைப்பாதையில் துரோகிகளையும் குழப்பவாதிகளையும் தடுமாறுவோரையும் சந்திக்கவேண்டிவருவது இயல்பானதே. இவை விடுதலைப் போராட்டவரலாற்றுக்குப் புதியதொன்றல்ல. ஆனால்; தமிழர் தாயகத்திற்காகவும் சுதந்திர வாழ்விற்காகவும் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவில் நிறுத்தி தாயக மண்ணிலும் புலம்பெயர்நாடுகளிலும் உள்ள தமிழீழ மக்களாகிய நாம் ஓரணியில் நின்று மாவீரர் இலட்சியம் ஈடேற உழைப்போம் என உறுதி எடுத்து கொள்வோம்.
 
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தலைமைச் செயலகம்,                                                             /செ///02/13

தமிழீழ விடுதலைப்  புலிகள்

தமிழீழம்.

27/11/ 2013.          

 

அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று மாவீரர் நாள்.

எமது இன விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.

எமது மண்ணையும் மக்களையும் மொழியையும் காக்கவென்று எதிரிப்படைகளை எதிர்த்துக் களமாடி தமது இன்னுயிர்களை எமக்காய் ஈந்த மறவர்களின் நினைவுநாள்.

உலக அரங்கில் தனித்துவமான ஓர் அடையாளத்தை எமது இனத்துக்கும் போராட்டத்துக்கும் பெற்றுத் தந்தவர்கள் இந்த மாவீரர்கள். இவர்களின் அர்ப்பணிப்பாலேயே இன்று உலகின் கண்களில் எமது விடுதலைப் போராட்டம் கவனத்தைப் பெற்று நிற்கின்றது.

வல்லாதிக்கச் சக்திகளின் துணையோடு மிகப்பெரும் பலத்தோடு நிலம்விழுங்க வந்த எதிரியை தமது மனவலிமையால் எதிர்கொண்டு களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களைப் பூசிக்கும் இந்நாளே தமிழரின் எழுச்சி நாளாகும்.

எத்தனையோ இன்னல்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு வளர்ச்சியடைந்து வந்த எமது விடுதலைப் போராட்டம் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் கவனத்தைப் பெருமளவு ஈர்த்தது. பெருமளவான எமது தாயக நிலப்பரப்பை மீட்டு ஓர் அரசகட்டமைப்பை நிறுவி நிர்வகித்துக்கொண்டிருந்த வேளையில்தான் பன்னாட்டுச் சக்திகளின் அழைப்பையேற்று அமைதிவழியில் தீர்வுநோக்கிப் பயணிக்க பேச்சுவார்த்தைக்குச் சென்றோம்.

சிறிலங்கா அரசோடு சமதரப்பாக உலகால் கணிக்கப்பட்டே அப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எமது தாயக நிலப்பரப்புக்கு பன்னாட்டு நிறுவனங்களும் உயரதிகாரிகளும் இராஜதந்திரிகளும் வருகை தந்தனர். எமது சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களும் அரச நிர்வாக நடைமுறைகளும் பெருமளவு பாராட்டைப் பெற்றன. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போதான எமது மீட்புப்பணிகளும் நிர்வாக நடைமுறைகளும் புனர்வாழ்வுக் கட்டுமானப்பணிகளும் உலக அமைப்புக்களாலும் அரசுகளாலும் பெரிதும் பாராட்டப்பட்டன. ஒருவகையில் உலக அங்கீகாரம் எமது நடைமுறை அரசுக்கு வழங்கப்பட்டே இருந்தது.

ஆனால் திட்டமிட்ட வகையில் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் கால இழுத்தடிப்புக்களும் வஞ்சனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்ததோடு எமது போராட்டத்தையும் அமைப்பையும் பலவீனப்படுத்தும் காய்நகர்த்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அமைதிக்கான போர்நிறுத்தக் காலத்தில் எமது போராளிகள் மீதான தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான கொலைகள், எமது மக்கள் மீதான பொருளாதாரத் தடைகள் என ஏராளமான அழுத்தங்களை சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்டபோதும் நாம் பொறுமையாகவே இருந்தோம்.

ஆனாலும் ஒருதலைப் பட்சமாக போர்நிறுத்த உடன்பாட்டை மீறி முழுமையான போரை எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது சிங்களப் பேரினவாத அரசு. இந்த இக்கட்டான நேரத்திலும் நாம் தற்காப்புத் தாக்குதல்களை மட்டும் மேற்கொண்டு வந்தபோதும், போரைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடப்பாடு கொண்டிருந்த உலகநாடுகள் பாராமுகமாகவே இருந்தன. உரிய அழுத்தங்களைக் கொடுத்து போரை நிறுத்த அவை தவறிவிட்டன.

சிங்களப் பேரினவாத அரசின் கடந்தகால வரலாற்றைக் கொண்டு, ‘இறுதிப்போர்’ என்ற பதாகையோடு எம்மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் எவ்வாறு பேரழிவைத் தருமென்பது எவராலும் உய்த்துணரக்கூடியதாகவே இருந்திருக்கும். அவ்வகையிலே புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக உலகின் முற்றத்திலிறங்கி எமது மக்களைக் காக்க வேண்டி அர்ப்பணிப்பான போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் பல்வேறுபட்ட சக்திகளின் உறுதுணையுடன் முன்னெடுக்கப்பட்ட எமது மக்கள் மீதான கொடியபோர் முள்ளிவாய்க்கால் பேரழிவையே எமது மக்களுக்குத் தந்தது. உலகமே பார்த்திருக்க மிகப்பெரிய மானுட அழிவை எமது மக்கள் சந்தித்தனர்.

போர் முடிவடிடைந்ததாகச் சொல்லப்பட்டு நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் எமது மக்கள் மீதான அடக்குமுறைகள் குறையவோ மாறவோ இல்லை. இலங்கைத்தீவில் தமிழினம் மீதான இனவழிப்பு மும்முரமாகத்  தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

வெளிப்பார்வைக்கு இயல்புநிலை திரும்பியதாக ஒரு தோற்றப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் காட்ட முனைந்தாலுங்கூட உண்மைநிலை அதற்கு மாறாகவே உள்ளது. சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வன்முறைகள், கொலைகள், வதைகள் என்பன நாளாந்தம் நிகழ்ந்த வண்ணமேயுள்ளன.

இதேவேளை, ஈழத்தமிழினம் ஒரு தேசியஇனம் என்ற அடிப்படையையும் எமது தாயகக் கோட்பாட்டையும் சிதைக்கும் வகையில் நாசகாரத் திட்டத்துடன் சிறிலங்கா அரசு செயற்பட்டு வருகின்றது. மொழிச்சிதைப்பு, பண்பாட்டுச் சிதைப்பு என்பனவற்றோடு எமது மக்களின் வாழ்விடங்களைச் சிதைப்பதும், வலிந்த சிங்களக் குடியேற்றங்களை நிறுவி எமது மக்களின் வாழ்விடப் பரப்பலைச் சிதைப்பதுமாக கொடிய இனவழிப்பை பேரினவாத அரசு நிகழ்த்திக்கொண்டுள்ளது.

‘வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழரின் தாயகம்’ என்ற தமிழ்மக்களின் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், தனித் தேசத்துக்கு உரித்துடைய எமது அரசியல் உரிமையை மாகாணசபைக்குக் கீழிறக்கி அரைகுறைவழியில் ஒரு தீர்வைத் திணிப்பதுமே சிங்கள தேசத்தின் கனவாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. அந்தக் கனவை மும்முரமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு.

இதேவேளை, உலகநாடுகள் சிலவற்றின் நிலைப்பாடு ஏறக்குறைய சிங்கள தேசத்தின் இன அழிப்புக்குத் துணைபோகக்கூடியவையாக உள்ளமை வேதனைக்குரியது. மாகாணசபையோடு திருப்திப்பட்டுக்கொள்வதும், தாயகம்-தேசியம்-சுயநிர்ணயம் என்பவற்றைப்பற்றி அலட்டிக்கொள்ளாமலிருப்பதும்தான் சில உலகநாடுகள் தமிழ்மக்களுக்கு முன்மொழியும் ஆலோசனைகளாக அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் கடந்தகால வரலாற்றையும், பெரும்பான்மைச் சிங்கள இனம் தமிழ்மக்களை அடக்கியாண்ட விதத்தையும், தமிழினம் எதிர்கொண்ட, எதிர்கொண்டுவரும் இனவழிப்பையும் அறிந்துகொண்ட எவருமே இப்படியான அரைகுறைத் தீர்வை முன்மொழிவது நியாயத்தின் பாற்பட்டதாக இருக்க முடியாது.

எமது இனத்துக்கான சமவுரிமை, பாதுகாப்பு, தம்மைத்தாமே நிர்வகிக்கும் தன்னாட்சியுரிமை என்பவற்றுக்கான உறுதிப்பாடுகளில் எள்ளளவும் அமையப்பெறாத மாகாணசபையை ஒரு தீர்வுத்திட்டமாக எக்காலத்திலும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே வரலாற்றுப்பாடமாக உள்ளது. இந்த உண்மையை விளங்கிக் கொண்டால் தமிழ்மக்களின் இறைமையையும் பாதுகாப்பையும் பகடைக்காயாக உருட்டி விளையாட நியாயமாய்ச் சிந்திக்கும் எவரும் துணிய மாட்டார்கள்.

போர் முடிந்ததாகக் கூறி நான்கரை ஆண்டுகளான பின்பும்கூட இன்னமும் எமது மக்கள் சிறிலங்காப் படையினரால் சூழப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியான இராணுவச் சூழலிற்குள்ளேயே எமது மக்கள் தமது அன்றாட வாழ்வைக் கழிக்கின்றார்கள். மக்களுக்கான சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காப் படையினரின் அல்லது அவர்களோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களின் தலையீடுகளின்றி சிவில் நிர்வாகம் இயங்கமுடியாத நிலையே இன்றும் காணப்படுகின்றது. வடமாகாணசபை அமைக்கப்பட்ட பின்னரும்கூட எமது மக்கள் போராட்டங்கள் சிறிலங்காவின் அடாவடிக் காவற்றுறையால் மோசமாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன. பேரினவாதப் பேய் புழுத்துப்போயிருக்கும் சிறிலங்கா நீதித்துறையாலும், இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆளுநர் நிர்வாகத்தாலும் கட்டுப்படுத்தப்படக்கூடிய இந்த மாகாணசபையானது எம்மக்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பையோ, நல்வாழ்வையோ வழங்க முடியாத ஓர் தீர்வுத்திட்டமாகவே இருக்கும் நிலையில் எவ்வாறு இதை தமிழர்களுக்கான இறுதித்தீர்வாக ஏற்றுக்கொள்வது என்பதை அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டும்.

எனினும் இந்த அடக்குமுறைக்குள்ளும் கொடுமைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும்போதும் எமது மக்களின் தாயகவிடுதலைக்கான தாகம் இன்னும் தணியவில்லை. உலக வரலாற்றின் மிகப்பெரும் மனித அவலத்தைச் சுமந்தபடி இருப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சமூகமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எமது மக்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமது விடுதலைத் தாகத்தை வெளிப்படுத்தியபடியேதான் இருக்கிறார்கள். தமது வாக்குரிமையைப் பயன்படுத்தியும், பொருத்தமான நேரங்களில் மக்கள் போராட்டங்களைத் துணிச்சலாக முன்னெடுத்தும் அவர்கள் தமது விடுதலை வேட்கையை வெளிப்படுத்தியபடியேதான் இருக்கிறார்கள்.

வடமாகாண சபைத் தேர்தலை ஒட்டிய நிகழ்வுகளும் அதன்பின்னர் நடப்பவையும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை உலக அரங்கில் புதிய கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன. தேர்தல் காலத்தில் உலகின் அதிகரித்த பார்வை வடமாகாணசபைத் தேர்தலில் குவிந்திருந்ததும், அதன் பெறுபேறுகளுக்கு உலக அரசுகளும் ஊடகங்களும் கொடுத்த முக்கியத்துவமும் தமிழர் தரப்பின் அரசியற் சிக்கல் மீதான உலகின் கரிசனையை வெளிக்காட்டுகின்றது.

குறிப்பிட்ட தேர்தலில் தமிழ்மக்களின் ஏகோபித்த அரச எதிர்ப்புக்கு உலகம் கொடுத்த முக்கியத்துவமும் எமது விடுதலைப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியே. வடமாகாணசபையைத் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாகக் கருதி அதற்கு முக்கியத்துவமளித்துச் செயற்படும் புதிய ஓர் உலக ஒழுங்கை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இத்தேர்தலின் மூலம் கிடைத்துள்ள கவனயீர்ப்பைப் பயன்படுத்தி எமது விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த எத்தனிக்க வேண்டுமேயொழிய விரிக்கப்படும் வலைக்குட் சிக்குண்டு மாகாணசபையோடு முடங்கி எமது சுதந்திர வேட்கையை நீர்த்துப் போக விடக்கூடாது.

அன்பார்ந்த புலம்பெயர் உறவுகளே,

தீவிர அடக்குமுறைக்குள்ளாகியிருக்கும் தாயகத் தமிழர்களின் செயற்பாடுகளும் போராட்ட முன்னெடுப்புக்களும் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதை நாமனைவரும் அறிவோம். இந்நிலையில் உலக அரங்கில் காத்திரமாகப் போராட வேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் உங்களையே சார்ந்துள்ளது. தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எமது விடுதலை வேட்கையை உலகெங்கும் பறைசாற்றி அதற்குரிய ஆதரவுகளைத் திரட்டும் வேலைத்திட்டமும் புலம்பெயர்ந்த எமது மக்களிடமே உள்ளது. குறிப்பாக பன்மொழி வல்லமையோடும் துடிப்போடுமுள்ள இளைய சமுதாயம் இச்செயற்பாட்டில் முன்னின்று உழைக்க வேண்டும்.

நீங்கள் வாழும் நாடுகளிலுள்ள அனைத்து இன மக்களிடமும் எமது போராட்டத்தின் நியாயத்தைக் கொண்டுசென்று அவர்களின் ஆதரவைத் திரட்டுவதே முதன்மையான பணியாக அமைந்துள்ளது. கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி முழுமூச்சாக எமது விடுதலைக்கான ஆதரவை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களைச் செய்ய வேண்டும்.

பல்வேறு தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் அமைப்புக்கள் எமது இறுதி இலக்கில் ஒன்றுபட்ட கருத்தோடு பணியாற்றுவதோடு, எமது மக்கள் ஒன்றுதிரண்ட சக்தியாகப் பணியாற்ற வேண்டியது அவசியமாகின்றது. உலக முற்றத்தில் தமிழ்மக்கள் தரப்பிலிருந்து வைக்கப்படும் வேண்டுகை எல்லாவிடங்களிலும் எல்லா வேளைகளிலும் ஒன்றாகவே இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

தாயக மக்களின் பாதுகாப்பு மட்டுமன்றி அவர்களின் வாழ்வியல் மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. பல்வேறு வழிகளிலும் தாயகமக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான செயற்பாடுகள் நடைபெற்றே வருகின்றன. அவற்றைத் தொடர்ந்தும் மேம்படுத்திச் செய்துகொண்டிருக்க வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.

அன்பார்ந்த தமிழக உறவுகளே,

தமிழ்த் தேசியப் போராட்டம் என்ற வகையில் ஈழத்தைவிடவும் தமிழகத்தின் போராட்டம் காலத்தால் முந்தியது. மொழிக்கான, இனத்துக்கான போராட்டங்கள், தியாகங்கள் என்று நீண்ட வரலாற்றையும் தொடர்ச்சியையும் கொண்டது தமிழகம். எமது போராட்டம் முளைவிட்ட காலத்திலிருந்தே எமது தாங்கு சக்தியாகத் திகழ்ந்து வந்தது தமிழகம். அன்று மட்டுமன்றி என்றுமே எமக்குரிய பக்கபலமாகத் திகழவேண்டிய பொறுப்பு தமிழகத்துக்கே உண்டு. உள்நாட்டு அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஈழப் போராட்டத்தின்பால் நீங்கள் காட்டிவந்த, தற்போது காட்டிக்கொண்டிருக்கும் கரிசனை அளப்பரியது.

எமது தாயக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில் எமது தாயக மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவல்ல கூப்பிடு தொலைவில் இருப்பவர்கள் நீங்கள்தாம். எமது மக்கள் அபயக்குரல் எழுப்புவதும் முதலில் உங்களிடம்தான். எமது மக்களின் பாதுகாப்பு பெருமளவில் உங்களையே சார்ந்துள்ளது. கடந்த காலங்களைப் போலவே தொடர்ந்தும் எமது மக்களுக்கான கேடயமாக விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமது மக்களுக்குண்டு.

அரசியற்கட்சிகள், மக்கள் இயக்கங்கள் மட்டுமன்றி மாணவர் எழுச்சியும் போராட்டங்களும் எமது விடுதலைப் போராட்டத்திற்கான உந்துசக்திகள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவற்றின் விளைவுகளான தமிழக சட்டமன்றத் தீர்மானங்கள் தொடக்கம் பல்வேறு தாக்கங்கள் ஈழவிடுதலைக்கான பாதையில் மைற்கற்களே.

இன்றைய நிலையில் தமிழகத்தைத் தாண்டி எமது ஈழப்போராட்டத்தின் நியாயத்தையும் அரசியல் வேட்கையையும் இந்தியப் பிராந்தியமெங்கும் பரப்ப வேண்டிய தேவை மிக அவசியமாகவும் அவசரமாகவும் உள்ள பணியாகும். ஏற்கனவே இப்பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்களோடும் இயக்கங்களோடும் அனைவரும் கைகோர்த்துச் செயற்பட வேண்டுமென்பதே எமது அவா.

அன்பான உலகத்தமிழ் உறவுகளே,

 

தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளின் சிறுதுளிகளாவது உலக அரங்கில் பன்னாட்டு ஊடகங்களால் வெளிக்கொணரப்பட்டுக் கொணரப்பட்டுள்ளன. சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்களும் இனப்படுகொலை ஆதாரங்களும் இன்றளவும் தொடர்ந்து வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதவுரிமை அமைப்புக்களின் அறிக்கைகளும் சிறிலங்காவின் பேரினவாத அரசின் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஓரளவாவது  வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டுள்ளன.

 

அண்மையில் கொழும்பில் நடந்துமுடிந்த பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பாக முக்கிய நாடுகள் சில மேற்கொண்ட நடவடிக்கைகள் எமக்கு ஓரளவு ஆறுதலையும் உற்சாகத்தையும் தருகின்றன. மிகக் காட்டமான எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் முன்வைத்த கனடாவும், அதேவேளை, மாநாட்டில் கலந்துகொண்டாலுங்கூட இயன்றளவுக்கு தமது எதிர்ப்பையும் தமிழர் இனச்சிக்கல் தொடர்பான தமது கரிசனையையும் வெளிப்படுத்திய பிரித்தானியாவும் முன்மாதிரிகளாக இருக்கின்றார்கள்.

 

ஊடகங்களினதும் முக்கிய நாடுகளினதும் இக்கரிசனையால் சிறிலங்கா அரசாங்கம் பரப்பிவந்த பொய்கள் ஓரளவாவது உலகமுற்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மனச்சாட்சியுள்ள எவரையும் உலுக்கிப்போடும் உண்மைகள் படிப்படியாக வெளிவந்த வண்ணமுள்ளன. ஆனாலும் சிறிலங்கா அரசாங்கமோ எவரையும் பொருட்படுத்தாமல் திமிர்த்தனத்துடனேயே நடந்துகொண்டு வருகின்றது. அயல்நாடுகளினதும், ஐ.நா நிறுவனங்களினதும், மனிதவுரிமை அமைப்புக்களினதும் கருத்துக்களையோ ஆலோசனைகளையோ செவிமடுக்காமல் தான்தோன்றித்தனமாகவே நடந்து வருகின்றது.

 

உண்மைகள் எப்போதும் உறங்கா. மனிதம் மரணித்துப் போகாதுமானிடவிழுமியங்களை மதிக்கும் சமூகங்களின் மூலம் எம்மக்களுக்கு இழைக்கபப்ட்ட அநீதிகளை முழுமையாக உலகம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளும்.இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுத்த நாடுகளும்அமைதி காத்த நாடுகளும்எம்மக்களின் நியாயமான போராட்டத்தினை என்றோ ஒருநாள் உணர்வார்கள்.அதுவரை உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.

 

சிங்கள அரசானது ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது. போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லிக்கொள்ளும் இந்த நான்கரை ஆண்டுகளிற்கூட உருப்படியாக எந்தத்தீர்வையும் தமிழர்களை நோக்கி வைக்கவில்லை. மாறாக தமிழர்கள் மீதான இனவழிப்பை மும்முரமாமாக மேற்கொண்டே வந்திருக்கின்றது.

இலங்கைத்தீவில் தமிழரும் சிங்களவரும் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை முன்னெப்போதையும்விட மேலும் வலுவடைந்துள்ள இன்றைய நிலையில், தமிழ் மக்களுக்கான  விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

அன்பான தமிழீழ மக்களே,

எமது விடுதலைப் போராட்டத்தை தமது உயிரர்ப்பணிப்பால் செதுக்கிச் சென்ற  மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும். போராட்டப் பயணத்தில் சாவுகளையும், துன்பங்களையும் அழிவுகளையும், கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை சாவுகளும் துன்பங்களும் அடக்குமுறைகளும் சோர்வடையச் செய்துவிடாது. ‘சத்தியத்தின் சாட்சியாக நின்ற மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி’ என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளைச் சிரமேற்கொண்டு, தமிழினத்தின் விடுதலை வேட்கையை தமது வீரத்தாலும் அர்ப்பணிப்பாலும் பறைசாற்றிச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூரும் இந்நாளில், தமிழீழ விடுதலையென்ற எமது உயர்ந்த இலட்சியத்துக்காகத் தொடர்ந்தும் போராட உறுதி கொள்வோமாக.

 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

 

http://viduthalaipulikal.net/ 

 

இதில எது உண்மையானது???

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ இன்னும் ஒண்டு ரெண்டு வரலாம்  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை கேணல். ராமின் அறிக்கையை என்னமும் காணோம்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் எதை நம்புவது என்ற பிரச்சனை இருக்கின்றது ....... இருந்தாலும் தலைமை செயலகத்தினால் கடந்த சில வருடங்களில் நடத்தப்பட்ட மாவீரர் தினம் இம்முறை நிறுத்தப்பட்டது  அறுக்கைகள் மட்டும் வந்திருக்கின்றது ..... குழப்பமாகவே உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்.  
 
  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை அவுஸ்திரெலியா சிட்னியில் நடைபெற்ற மாவீரர் நாளில் 2008ம் ஆண்டு தேசியத்தலைவர் சொன்ன மாவீரர் உரையின் ஒரு பகுதி மட்டும்தான் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரல் வானொலியில் தேசிய தலைவரின் உரை கிடைக்கப்பெற வில்லை என கூறப்பட்டது அந்த நேரத்துக்கான பகுதியில் மாவீரர்களுக்கான் கவிதை ஒன்று இடம் பெற்றது.

எதுவாகினும் எமது மக்கள் ஒற்றுமையாக இருந்தாலே போதுமானது. இந்த மாவீரர் நிகழ்வு போல எதிர்காலத்திலும் இதே ஒற்றுமை இருக்குமேயானால் நன்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.