Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடாத நடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆடாத நடனம்
 

art-copy-300x179.jpg

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது வரும் செல் அழைப்பு எரிச்சல் ஊட்டுகிறது. கதிர்கதறிக் கொண்டிருந்த செல்லின் வால்யூமை குறைத்தான். எதிர் சுவரில் மணி பார்த்தான்.

“ஆறு”. இந்த அதிகாலையில் அழைப்பது யார்? குன்றத்தில் இருந்து மோகன்.

சோம்பலாக எடுத்து “சொல்டா..” என்றான்  ஒரு சின்ன மௌனத்தின் பின் மோ கன்விசும்புவது தெரிந்தது.

“கதிரு….சித்தப்பு இறந்துட்டாப்ளடா..” என்றான். ஒருகணம் தலை சுற்றுவது போல இருந்தது கதிருக்கு.

சித்தப்புவின் சிரித்தமுகம் நிழலாடியது. நாக்கு லேசாய்க் குழறியது.

“என்னடா சொல்றே..? எப்படா..?”

“ கதிரு. . . ரூம்லேருந்து ரெண்டு நாளா இறங்கிவரவே இல்லையாம். ஏதும் உடம்புக்கு முடியலையான்னு கேக்க நேத்து நைட்டு நம்ம டீக்கடை பன்னீரு பார்த்துருக்காரு. கதவு அடைச்சிருந்தாலும் சன்னல் தெறந்திருந்திருக்கு. கொஞ்ச நேரம் கூப்டுப் பார்த்தவரு கதவை இடியிடின்னு இடிச்சும் தெறக்கலைன்னு உஷாராகி போலீசுக்கு சொல்லிட்டாரு. போலீசு வந்து தெறந்து பார்த்தா உறக்கத்துலயே சித்தப்பு இறந்திருந்தாப்ளயாம். ரெண்டு நாளாயிருக்கும் போல. நீ கௌம்பி வாடா.” வைத்துவிட்டான்.

கதிர் மெல்ல எழுந்தான். உடலில் இருந்து நழுவிய கைலியை இறுகக்கட்டினான். இரவின் மிச்சமாக ஒரே ஒரு சிகரட் இருந்தது. கதவை அகலமாய்த் திறந்தான். அதிகாலை எழுந்ததும் திறந்ததுமில்லை.  சில்லென்று மழைக்கு முந்தைய காற்று முகத்தில் அடித்தது. வேறொரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் உடனே குடிக்கவேண்டும் என்று தோன்றியிருக்கும். மெல்லப் புகையை இழுத்து வெளியே விட்டான். ஒரு காலை தரையில் ஊன்றி இன்னொன்றை மடக்கி சுவரில் வைத்திருந்தவன், கண்டு கொண்டிருந்த காட்சியை மெல்ல கண்களில் அரும்பிய நீர்முத்துக்கள் சிதைத்தன. கண்ணீர் உருண்டு கன்னத்தைத் தாண்டி வீழ்ந்தது.

ரெண்டு வருஷம் முன்னால் கதிரின் அப்பா இறந்து அவரது உடலை வீட்டுக்கூடத்தில் கிடத்தியிருந்தனர். வீட்டின் வெளியே வழக்கப்படி கரகாட்டக்காரர்கள் மைக்கில் ஒப்பாரி படித்தபடி ஆடிக் கொண்டிருந்தனர்.

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி அடங்குறமனுஷ வாழ்க்கையில மரணம் ஒரு அங்கம்டா.இது விதியும் இல்லை ஒரு மண்ணும்இல்லை. பொது. ஜஸ்ட் ரியாலிட்டி.

நிறைய கூட்டம் வந்தும் போயும் இருக்க உள்ரூமில் கட்டிலில் உட்கார்ந்து தேம்பிக் கொண்டிருந்த கதிரின் கையைப் பற்றிக்கொண்டு சித்தப்பு பேசினார்:

“இங்கே பாரு கதிரு. நமக்கு இது துக்கம். வெளியே ஆடுறவங்களுக்கு இது பொழப்பு. இந்த ரெண்டுல எது நிஜம்..? ரெண்டும் நிஜம்தான். ரெண்டுமே நிஜமில்லடா. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி அடங்குற மனுஷ வாழ்க்கையில மரணம் ஒரு அங்கம்டா. இது விதியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. பொது. ஜஸ்ட் ரியாலிட்டி. ஒரு இறப்பை புரிஞ்சுக்காதவன் முட்டாள் . மனுஷன் ஒரு செண்டிமெண்டல் அனிமல்டா. அது பொய்யின்னு தெரிஞ்சும் அப்டி இருக்கிறது ஒரு பாவனை. புரியுதா..?”

சித்தப்பு எதற்கும் கலங்கியதே இல்லை. அழுததுமில்லை. யார் அழுதாலும் பிடிக்காது.

தீப்பற்றி எரிந்த தன் மருந்துக்கடையின் வாசலில் அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த சுப்பைய்யாவிடம் “நட்டத்துல சுருண்டு விழுறதுக்குப் பதிலா கையும் காலும் மிச்சம்னு நினைங்க சுப்பையா..நீங்க சம்பாதிச்சது தானே எல்லாமும். இன்னொரு முறை சம்பாதிக்கமுடியாதா..? நம்பிக்கையை விடாதீங்க என்ன?” சித்தப்பு பேசிக் கொண்டிருக்கும் போதுதான் முதன் முதலில் அவரை வித்யாசமாய் கவனித்தான் கதிர். சித்தப்புவைப் பார்த்திருக்கிறான். பழக்கம் கிடையாது.

திருப்பரங்குன்றத்தில் யாரும் யாரையும் தெரிந்துகொள்ளாமல் வாழ்ந்துவிட முடியாது. எவன் உள்ளூர், எவன் வெளியூர் என் பது தொடங்கி எவன் எந்தக் கூட்டம், எந்தக் கட்சி என்பது வரை எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். தமிழ்நாட்டின் முதல்வர் யார், இந்தியாவின் பிரதமர் யார்? என்ற எந்தக் கேள்விக்குமே ஊர் மத்தியில் இருக்கும் கோவிலைக் காண்பிக்கிற ஊர். முருகன் தான் எல்லாம். அவனைத் தவிர வேற எதுமே இல்லை. என்று கொண்டாடும் நகரம்.

சித்தப்புவைத் தெரியும். அவர் பெயர் சந்துரு. ஒருபைப்கம்  பெனியில் தமிழ் நாட்டுக்கும் கேரளத்துக்குமான மேனேஜர். ஒண்டிக் கட்டை. குன்றத்தில் படப்படித் தெருவின் ஆரம்பத்தில் மிலிட்டரிக்காரர் ஒருவர் வீடு இருந்தது. கீழே ஒரு ஆஃபீசுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். அதன் மாடிக்கு சித்தப்பு வந்து சேர்ந்த அடுத்த வருசம்தான் கதிர் மன்னர் காலேஜில் சேர்ந்திருந்தான். கிருஷ்ணன் டீக் கடை பின்னால் ஒளிந்துதம் அடிக்கிற மறைப்பு இருக்கும். அதுதான் க திருக்கும் சினேகிதர்களுக்கும் தினமும் கூடுமிடம். அங்கே சந்துருவும் வந்து பேப்பர் படிப்பார். யாரோடும் பேசாவிட்டாலும் இணக்கமான ஒரு புன்னகையை எல்லோருக்கும் தருவார்.

அதே கடைமறைப்பில் ஒரு நாள் சந்துரு அமர்ந்திருக்கையில் கதிரும்பரணியும் கிசுகிசு குரலில் சதியாலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். விஷயம் இதுதான்.கல்லூரியில் நடந்த ஒரு சிறு பிரச்சினையில் கதிரையும் இன்னும் ரெண்டு பேரையும் வீட்டில் இருந்து ஆளைக் கூட்டிவந்தால் தான் மீண்டும் வகுப்புக்குள் அனுமதிக்க முடியும் என சொல்லியது நிர்வாகம். கதிரின் அப்பா மிலிட்டரிக்காரர். அவர் ஒரு ஆண்காளி. முறுக்கு மீசையின் ஒரு முனையில் கதிரின் உடம் பையும் இன்னொரு முனையில் அவன் தலையையும் செருகிவைத்தாலும் வைப்பார். கூடவந்து மன்னிப்பு கேட்ப தெல்லாம் நடக்காதகாரியம். என்ன செய்வது என தலையை உடைத்துக் கொண்டிருந்தனர்.

சட்டென்று திரும்பித் தன் கையில் இருந்த பேப்பரை மூடிவைத்துவிட்டு “நா வேணாவர்ரேன் கதிர் . . . ” என்றார் சந்துரு. கதிருக்கு அவர் அப்படிக் கேட்டதே ரொம்பப்  பிடித்திருந்தது. பார்க்கிற எல்லாரயும் கவர்கிற தோற்றம் சந்துருவினுடையது. ஒல்லியான தன் தேகத்தில் நேர்த்தியான பேண்ட் சர்ட். கால்களில் ஷூ என மிடுக்காக இருப்பார். கிட்டத்தட்ட ஏழாவது மனிதன் காலத்து ரகுவரனே கொஞ்சம் மாநிறமாக இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார் சந்துரு. சிரித்தால் வசீகரமாயிருக்கும். அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.

“ அண்ணே. . . என்னான்னு சொல்லி வருவீங்க..?” என்றான் கதிர்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.அண்ணென்னு கூப்பிடாதீங்க கதிர். நான் உங்க சித்தப்பா. க்கே..?” என்றார். இளையராஜாவின் பின்னணி இசையுடன் பலவண்ணக் கலரில் சித்தப்பு என டைட்டில் கார்ட் போடப்பட்டது அங்கே தான்.

கதிர் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பின் நடுவே தான் நின்று கொண்டிருக்கும் நிஜம் அவனுக்கு உறைத்தது. சித்தப்புவைப் பார்க்கவேண்டும். அதுதான் முக்கியம் இப்போது. சடசடவென்று ஒரு பையை எடுத்து வேண்டிய துணிமணிகள் நாலைந்தைச் சுருட்டி உள்ளே அடக்கினான். சைட் பீரோவில் இருந்து பர்ஸ் வாட்ச் எனத் தேவையானதை எடுத்துக் கொண்டு அவசரமாகத் தலையைச் சீவினான். மணி ஆறேகால் தான். திருச்சியில் ஆறரைக்கு பஸ் ஏறினால் எட்டரைக்கு மதுரையைத் தொட்டுவிடலாம்.

வெளியே மழை ஒரு தூறலாய்த் தொடங்கியது. திருச்சி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கிளம்பத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறினான். கடைசி சீட் சன்னலோரம் இடம் இருந்தது. அங்கே அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். மழை  வலுவாகப் பெய்துகொண்டிருந்தது. யாரும் ஸ்டாண்டிங்கில் இல்லை. பஸ் மெல்ல ஊர்ந்து கிளம்பியதும் பாட்டுக் கேட்கத் தொடங்கியது. மனசு மீண்டும் சித்தப்பாவின் மீது லயித்தது.

கதிரின் ஹெச். ஓ.டி.யைப் பார்க்க மறு நாள் ஜம்மென்று பிளாக் பேண்ட்  மற்றும் ஒயிட் சர்ட்டில் கிருஷ்ணன் கடையில் காத்திருந்தார் சந்துரு. அவரைப்பார்த்ததும் சந்தோச மானான் கதிர். உடன் வந்த பரணி “நான் பஸ்ஸுல வந்துக்கிறேன். நீ அண்ணன் கூடக் கௌம்புடா.” என்றான். கதிர் சந்துருவைப் பார்த்து.. “கதிரு….மறந்துட்டியா..? நான் உன் சித்தப்பா. அங்கே வந்து அண்ணன்னு மானத்தைக் கெடுத்துப்பிடாத. சித்தப்பான்னு கூப்பிடு என்ன. . ? ” என்று சிரித்தார்.

அவரது புல்லட்டின் பின் சீட்டில் அவனை இருத்திக் கொண்டு காலேஜுக்கு அழைத்துச் சென்றார். வழியெல்லாம் ‘சித்தப்பா சித்தப்பா எனச் சொல்லிப் பார்த்துக்கொண்டே வந்தான் கதிர். நேற்று தன்னை வாங்க போங்க எனப் பன்மையில் விளித்த சந்துரு இன்று காலை இயல்பாக “மறந்துராத…”: என்று ஒருமையில் அழைத்தது அவனுக்குப் பிடித்திருந்தது. சித்தப்பாவிடமிருந்து மெலிதான பான்ஸ் பவுடர் வாசனை வேறு கிளர்த்தியது.

வாத்தியிடம் தன் சித்தப்பா என அறிமுகப் படுத்தினான் கதிர். வாத்தியார் சரியான முசுடு. முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு, “நீங்க டீசியை வாங்கிக்குங்க. அதான் சரி..” என்று சொல்ல. “சரிசார்.” என்ற சந்துரு, யாருமே எதிர்பார்க்காத நேரம் சப்பென்று கதிரின் கன்னத்தைச் சேர்த்து ஒரு அறை வைக்க அவன் கன்னத்தைப் பொத்தியபடி சுருண்டான்.

“என்ன சார். வளர்ந்த பையனை அடிச்சுக்கிட்டு..?” என்று பலவீனமாகக் கேட்ட வாத்தி யாரிடம் “என்ன சார், வளர்ந்தா போதாது சார். பக்குவத்தை வளர்த்துக்க வேணாம்..? எங்கண்ணன் மிலிட்டரிக்காரர் சார். இந்த விசயம் தெரிஞ்சா செத்துருவாரு…இவன் படிச்சே ஆகμம்னு தவம் மாதிரி நினைச்சு காலேஜுக்கு அனுப்பிச்சா…படிக்கிறவன் செய்யுற காரியமா சார். இவனெல்லாம் வீட்டுக்கு வேணாம்சார். ” என ஏற்ற இறக்கமாக மெஸ்மரிசம் கலந்த தன் குரலில் சித்தப்பு பேச உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே வாங்கிய அறை இன்னும் வலித்தால் நடப் பதை அமைதியாகக் கவனித்தபடி நின்றான் கதிர்.

தன் கோபத்தைக் காணாது அடித்து விட்டவராய் “விடுங்க சார். இந்த ஒருமுறை உங்களுக்காக அனுமதிக்கிறேன்.” என்றவர் கதிர் பக்கம் திரும்பி “கேர்ஃபுல்..” என கதிரை வகுப்புக்குப் போகச் சொன்னார். நன்றி சொல்லிக் கைகூப்பிய சித்தப்பு தன் விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு “சரி கதிரு. கிளாசுக்குப் போயி நல்லபடியா படிப்பா. நான் சாயந்திரம் வர்றேன்..” என்று அவன் கன்னத்தைத் தட்டிவிட்டுக் கிளம்பினார்.

“சரி சித்தப்பா..” என்ற கதிருக்கு சந்துரு அன்னியனாகத் தெரியவில்லை. அந்தக் கணத்தில் இருந்து கதிருக்கு சந்துரு சித்தப்பாதான். சித்தப்பு என அவன் அழைக்க ஆரம்பித்தது அவனது நண்பர்கள் பலரும் அப்படியே அழைத்தாலும்கூட பலருக்கும் கதிரின் சொந்த சித்தப்பா என்று தான் தெரியும்.

அன்றைய சாயங்காலம் சித்தப்புவின் அறை அவர்களது கூடுமிடமானது. தன் அறைக்குள் நண்பர்கள் சகிதம் நுழைந்த கதிரிடம் “எப்டிடா மகனே நம்ம பெர்மார்மன்ஸ்..?”என்று கேட்ட  சந்துருவின் தோளிரண்டையும் பிடித்து “கலக்கிட்டீங்க சித்தப்பு” என்று உருகினான்கதிர்.

“சாரிடா.. நெசம்மாவே அடிச்சிட்டேன்ல..? நீ வாத்தி முன்னால அண்ணே நொண்ணேன்னு எதனாச்சும் சொல்லிட்டா உன் மொத்தப் படிப்பும் பாளாயிடும். எனக்கு உன் மேல நம்பிக்கை இல்லை. சிரிச்சி கிரிச்சு வெச்சிட்டா ஆபத்து. அதான் விட்டேன் ஒரு அறை. அப்பறம் முடிக்கிற வரைக்கும் நீ பம்மிட்டேல்ல..?”உன் நல்லதுக்குத் தான்யா..” என்றார்.

சித்தப்பு தான் சகலமும். நல்லது கெட்டது எல்லாமும். இது தானாக ஏற்பட்ட பந்தம். தனி ஆளாகச் செல்வதற்கும் வருவதற்கும் இடமில்லாத ஒருவர் சித்தப்பு.

திருப்பரங்குன்றம் என்னும் ஊருக்குத்தான் வருவோம் என்றோ இங்கே தனக்கென்று ஒரு சொந்தம் கிட்டும் என்றோ நினைத்திருக்க மாட்டார். அவர்கள் அந்த ஒரு நாள் நாடகத்தின் ஒப்பனையைக் கலைக்க மனமில்லாமல் அதை நிரந்தரமாக்கிக் கொண்டனர். உறவாய்க் கனிந்த நட்பின் விசித்திரம். குடிக்கவும் கோயிலுக்குப் போகவும் எந்த வித்யாச முமில்லாமல் இருந்தார்கள்.

ஆயிற்று சித்தப்பாவைச் சந்தித்துப் பதினாறு வருடங்கள். இடையில் எத்தனை பார்த்தாயிற்று, கதிர் தன் உதடுகளில் அரும்பிய புன்னகையை தானே ரசித்தான். பேருந்தின் சன்னல் வழியே எங்கே நிற்கிறது எனப் பார்த்தான். மேலூர் அவுட்டர். இன்னும் அரைமணி நேரம். ‘சித்தப்பா. சித்தப்பா’ என மனம் அரற்றியது. கதிரின் அக்கா கலியாணத்தின்போது ஒரு பிரச்சினை வந்தது.

பத்திரிகையில் சித்தப்பு பேரை பெரியப்பா சித்தப்பாமார்கள் பேர்வரிசையில் போட வேண்டும் என்று அடம்பிடித்தான் கதிர்.” திடீர்னு எவனோ ஊர்ப்பயல கூட்டியாந்து சித்தப்பன்னு எப்பிடிரா போடுறது? சொந்தஞ்சுறுத்து சிரிக்காது?” என்ற கதிரின் அப்பா “நண்பர்கள், வரவேற்பாளர்கள்னு இருக்கிறதுல போடு. என்னைய வெறியேத்தாதே” என்று முறைத்தார்.

கதிர் பேசவேயில்லை. பிரஸ் வைத்திருக்கிற பராங்குசத்திடம் ப்ரூப் திருத்தங்களை கொடுத்து வரச்சொல்லி கதிரை அனுப்பினார் அவன் அப்பா. போதாதா..?

விடுபட்ட பெயர் எனச்சொல்லி சித்தப்பு பேரை எழுதிக்கொடுத்தான். “எவண்டா அவன் புது சித்தப்பன்?” வரட்டும். வகுந்திர்றேன்.” என்ற கதிரின் அப்பாவிடம் பதினோரு ப்ளேயர்ஸும் கோச்சும் மாதிரி இவன் கூட்டாளிகள் புடை

சூழ சந்துருவை அழைத்துச் சென்று “யப்பா… பாக்கμம்னு சொன்னீல்ல..? இவரு தான் சித்தப்பு..” என்று அறிமுகம் செய்துவைத்தான் வீராப்பாக.

“நீங்கதானா அது..?அப்பன்தான் சித்தப் பங்களை பையனுக்கு காமிப்பான். இங்கே புதுசால்ல இருக்கிது. என்னமோ போவட்டும். நல்லது நல்லது..” என்று வெறுப்பு கலந்து சிரித்து வைத்தார் மிலிட்டரி.

பேருந்து ஒத்தக்கடையைத் தாண்டியது. வெளியே வானம் தெளிவாக இருந்தது. நெடுஞ் சாலையில் ஒன்றை ஒன்று முந்தியபடி விரைந்த வாகனங்களைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. மீண்டும் முன்சீட்டின் கம்பியில் முகத்தைச் சாய்த்துக் கொண்டான் கதிர். சென்ற தீபாவளிக்கு மறுநாள். ஊரே டி.வி. பார்த்துக்கொண்டு உண்டு உறங்கிக் கிடக்க ஆளற்றவீதியில் காலார நடந்தார்கள். அப்படி நடப்பது சித்தப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் நடுநிசிகளில் முன்பெல்லாம் அடிக்கடி செல்வார். இப்போது கதிர் ஊருக்கு வந்தால் மட்டும் நடை. நல்ல காற்று வீசிக் கொண்டிருந்தது.

“ சித்தப்பு… திருச்சிக்கு எங்கூட வந்துர்றியா..?”:

சிரித்தவாறு “இல்லடா மவனே. வரப்போக இரு. இதான் கரெக்டு. உன்னையத் தவிர எல்லாரும் கல்யாணம் செஞ்சிட்டானுங்க. நீ ஏன் வேணாங்குறே..?” “நான் கல்யாணம் செஞ்சுக்குவேன்

“33 வயசுடா. இதுக்கு மேலயா ரெண்டு வருசம். என்னமோ போடா” என்று அங்கலாய்த்தவரிடம் சடாரென்று பல நாள் கேள்வியை நீட்டினான் கதிர். “நீ ஏன் ஒத்தமரமா நின்னுட்டே.?”

சித்தப்பு மெல்லிய குரலில் சொன்னார். “கதிரு. நீ கேக்குறதால சொல்லாம இருக்க முடியலை. உன் சித்தி பேரு சூர்யா. எனக்கும் அவளுக்கும் கல்யாணமாகி சரியா நாலாவது நாளு. சினிமாவுக்குப் போயிட்டுவர்ற வழியில லாரி அடிச்சி அவ அந்த எடத்துலயே எறந்துட்டா. நான் கோமால இருந்து பிழைச்சேன். தற்கொலை பண்ண இஷ்டமில்லை.

சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை. எங்க ஊர்ல வாழப் பிடிக்காமத்தான் கௌம்பி வந்தேன் இந்தக் குன்றத்துக்கு. மூணு நாள் ரசிக்க ரசிக்க பேசி சிரிச்சு வாழ்ந்தவளை மறக்க முடியலைங்குறதை விட, மறக்க விரும்பலைடா மகனே. நான் ஒத்த மரமில்லடா. பட்டமரம்.” என்று சொன்ன சித்தப்பு கண்கலங்கி அன்றைக்குத்தான் பார்த்தான் கதிர்.

கதிரைத் தவிர வேறார்க்கும் தெரியாது அவரது கல்யாணக் கதை. இது மட்டும் இல்லை.

கதிருக்குத் தெரியாமல் அவரது எந்த ரகசியமும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லாம் சொல்வார். மாட்டுத் தாவணி வந்துவிட்டிருந்தது. மழையில் கிளம்பி வெயிலில் இறங்கி சித்தப்புவைக் கடைசியாய் பார்க்கிற வழியில் மெல்ல நடந்தான் கதிர்.

ஒரு சிகரட்டைப் பற்றவைத்துக் கொண்டான். அது முடிந்ததும் செல்லை எடுத்தான்.

“பரணி… வந்துட்டியா…?ஆஸ்பத்திரியில தானே இருக்க..? பாடி எப்பக் கிடைக்கும்னு கேட்டியா. . ?” என்றான். தன் குரல் இறுகியிருந்த்தை உணர்ந்தான் கதிர்.

“கதிரு… பன்னெண்டு மணி ஆய்டுமாம்..  முகம் தெரியுறா மாதிரிதான் பேக் பண்ணு வாங்களாம்.

நமக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டரை விட்டு பேசினேன். சரிடா. நீயும் வந்துறு.” என்று வைத்தான்.

ராஜாஜி மருத்துவமனையின் பின்பக்கம் இருந்த அமரர் அறை வாசலில் அன்றைய பிணங்களுக்கு உரியவர்கள் அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தார்கள். குன்றத்தில் இருந்து கதிரின் நண்பர்களும் சித்தப்புவுக்கு வேண்டியவர்கள், அவர் பழகியவர்கள் என நூறு பேருக்கும் மேல் வந்திருந்தனர். நேரே விசுக் விசுக்கென்று வந்து பரணியைத் தேடினான் கதிர்.

கதிரைப் பார்த்ததும் அந்தக் கூட்டமே அவனை நெருங்கியது.

பரணி ஓடிவந்தான். லேசாய்த் தேம்பினான்.

“கதிரு, நம்மளையெல்லாம் ஏமாத்திட்டார்டா சித்தப்பு….”

கதிர் அழவில்லை. அவனுக்கு அழுகை வரவில்லை. அவனுக்குள் சித்தப்புவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான் இருந்தது.அதுவரைக்கும் ஒரு இறப்புச் செய்தியின் கடைசிச் சலுகையாய் அதை நம்ப மறுத்தான்.பரணியின் தோளை ஆறுதலாய் தட்டினான்.

கதிரும் பரணியும் டீக்கடைப் பன்னீரை அழைத்துக் கொண்டு  பின் வாசலுக்கு வெளியே இருந்த டீக்கடைக்கு வந்தார்கள்.  “டீ சாப்பிடுவோம்…” என்று பன்னீர் “மூணு டீ குடுங்க” என்று சொல்லிவிட்டு ஒரு பீடியை எடுத்தார்.

டீ இதமான சூட்டில் தெ £ண்டையை நனைத்தது.

“என்ன பன்னீரண்ணே,.? என்ன செஞ்சிச்சு சித்தப்புவுக்கு..?”

சோகையாய் சிரித்த பன்னீர். “சந்துரு முன்ன மாதிரி இல்லப்பா.. தளர்ந்திட்டாப்ல.. எப்பவாச்சும் நெஞ்சுவலின்னு முனகுவாப்ல….. தூக்கத்துலயே இறந்துட்டதாதான் இன்ஸ் பெக்டர் வரச் சொல்லி வந்து பார்த்த ஆறுமுகம் டாக்டர் சொன்னாரு.. இருந்தாலும் தனிக்கட்டைன்னு தான் எதுக்கும் போஸ்ட்மார்ட்டம் பண்ணிருவோம்னு அனுப்பிச் சிட்டாங்க..”

டீயை முடிப்பதற்குள் பாடி தயார் என்று மகேசு ஓடி வந்து சொல்ல பேப்பர் கப்களை தூர எறிந்துவிட்டு அவசர நடையில் உள்ளே சென்றனர்.

“யாரு? கையெழுத்துப் போட்டு வாங்கிக் குறீங்க..?” என்று கேட்ட ஆஸ்பத்திரி சர்வண்ட்டிடம் “எம்பேரு கதிர். நான் அவருக்கு மகன் முறை. என் சித்தப்பா அவரு..” என்றான். கேட்ட இடங்களில் கையெழுத்துகளை இட்டுவிட்டு தயாராக இருந்த ஐஸ்பாக்சில் வைத்து பன்னீரும் பரணியும் வாங்கி வந்த மாலையை அணிவித்தனர். வேனில் ஏற்றி சூழ்ந்த ஏரியாக்காரர்கள் அனைவருக்கும் கேட்கும் குரலில் பரணி “தத்தனேரி வந்து றுங்க..” என்றான்.

பன்னீர் சித்தப்புவின் கால் பக்கம் அமர்ந்திருக்க, பரணி அடுத்து. கதிரின் பக்கம் சித்தப்புவின் தலைப்பகுதி இருந்தது. அதுவரை அடக்கி வைத்திருந்தவன் தனக்குள் உடைந்து ஒரு சப்தமுமில்லாமல் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான்.

என்ன சொல்வதென்று தெரியாமல் பரணியும் பன்னீரும் திகைக்க சித்தப்புவின் முகத்தையே பார்த்தபடி நான்தான் உனக்குக் கொள்ளி வெப்பேன்னு உனக்குத் தெரியும். நீயும் நானும் இதப் பத்திப் பேசிக்கிட்டதில்லைய்யா. சித்தப்பு…

உனக்கு நான் இருக்கேன்னு தெரியும்யா. மனுஷனாப் பொறந்தா எல்லாரும் ஒரு நாள் இப்பிடிப் போக வேண்டியது தானேன்னு சொல்வே.. அது சரித்தான்.

 

ஆனாலும்…. உன் கூட இன்னும் கொஞ்சம் நேரம் ஸ்பெண்ட் பண்ணிருக்கலாம்னு இப்பத் தோணுது சித்தப்பா. இப்பிடி டக்குன்னு விட்டுட்டுப் போவேன்னு நினைக்கலைளிணியா… அழுதா உனக்குப் பிடிக்காது. இருந்தாலும் என்னால முடியலைய்யா….” கேவினான் கதிர். மனசுக்குள் “மனுஷன் ஒரு செண்டிமெண்டல் அனிமல்டா” என்றார் சித்தப்பு.

-ஆத்மார்த்தி

http://puthiyadarisanam.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.