Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விகடன் மேடையில்.. எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

p19.jpg

 

விகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்
’எப்படியிருக்கு?’
வாசகர் கேள்விகள்...
 
 

 கபிலன், திருத்துறைப்பூண்டி.

'' 'நாட்டியப் பேரொளி’ பத்மினி பற்றி எழுதும்போது மட்டும் உங்கள் எழுத்துகளில் காதல் ததும்புகிறதே... என்ன சங்கதி?''

''அவர் என் கனவுக்கன்னி ஆயிற்றே... காதல் ததும்பாமல் இருக்குமா?!

ரொறொன்ரோவில் என் வீட்டில் சில நாட்கள் பத்மினி தங்கியிருந்தபோது, வாலிபப் பருவத்தில் அவரைப் பார்ப்பதற்காக கொழும்பில் திரை அரங்கத்தின் முன்னே பல மணி நேரம் காத்திருந் ததைச் சொன்னேன். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் சிரித்ததுபோல கலகலவெனச் சிரித்தார்.

அவர் வந்து இரண்டு நிமிடங்களிலேயே அவரும் என் மனைவியும் உற்ற சிநேகிதிகள் ஆகிவிட்டனர். அன்றைய விழாவுக்கு அணியவேண்டிய சேலைகளையும் நகைகளையும் எடுத்து வெளியே வைத்தார். பதக்கம் சங்கிலியா, முத்துமாலையா, மணியாரமா அல்லது நீலக்கல் அட்டிகையா என்று நீண்ட விவாதம் நடந்தது. பொற்சரிகை வைத்த நீலப் பட்டாடையா அல்லது சிவப்பா அல்லது ஊதா கலரா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.

சேலையை எடுத்து இரண்டு கைகளாலும் பிடித்துப் பாதி முகத்தை மனைவிக்குக் காட்டினார். எனக்குக் காட்டி, 'எப்படியிருக்கு?’ என்று கேட்டார். பின்னர், தான் நினைத்ததை அணிந்துகொண்டார். இரண்டு கைகளிலும் வளையல்களை முழங்கை வரை நிரப்பிவிட்டு, அவற்றைத் திரும்பத் திரும்ப எண்ணியபடியே இருந்தார். பத்மினி, நல்லவர்; பெருமை இல்லாதவர்; கருணையானவர். விடைபெற்றபோது கண்கலங்கினார்.

P38.jpgமீண்டும் ஒருமுறை அவரை நியூயோர்க்கில் சந்தித்தேன். சுதா ரகுநாதன்,

'பாற்கடல் அலைமேலே
பாம்பணையின் மீதே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா’ 
என்று பாட, பத்மினி அபிநயம் பிடித்தார். இசை அரசியின் பாடலுக்கு நாட்டிய அரசியின் நடனம். அதுவே அவர் ஆடிய கடைசி நடனம். அவருக்கு 72 வயது. விடைபெறும்போது முத்தம் தந்தார் கனவுக்கன்னி. சில மாதங்களில் இறந்துபோனார்.

இப்போதும் பத்மினியைப் பற்றி நினைக்கும்போது 'மணமகள்’ பத்மினியோ, 'தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியோ நினைவுக்கு வருவது இல்லை. பழைய கால நாடகத்தில் ராஜா மேடைக்கு வரும்போது திரையினால் பாதி முகத்தை மூடியபடி ஆடிக்கொண்டே வருவதுபோல பத்மினி சேலையைக் குறுக்காகப் பிடித்து பாதி முகத்தை மறைத்துக்கொண்டு, 'எப்படியிருக்கு?’ என்று கேட்டதுதான் மனக்கண் முன் வருகிறது!''

அ.ஜெயராஜ், திருமுக்காடு.

''பல எழுத்தாளர்களை நேரில் சந்தித்து இருக்கிறீர்கள். அப்படியான சந்திப்பில் உங்களை ஆச்சரியப்படுத்திய எழுத்தாளர் யார்?''

''ஆச்சரியப்படுத்திய எழுத்தாளர் என்றால்,  அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எந்திரனியல் பேராசிரியராக இருக்கும் கார்ல் இயெக்மென்னா! அவர் ஒரு சிறுகதை ஆசிரியர். ஆனால், அங்கே உள்ள மாணவர்களுக்கோ பேராசிரியர்களுக்கோ, அவர் எழுத்தாளர் என்பது தெரியாது.

முன்பின் வேறு எழுத்தாளர்கள் கையாண்டிருக்க முடியாத கருவை எடுத்து, அற்புதமான முறையில் விருத்திசெய்து சிறுகதையாக்குவார். ஒவ்வொரு வசனமும் பெரும் கவனத்தோடு செதுக்கப்பட்டு கூராக இருக்கும். அதனால் படிக்கும்போது பல வசனங்களை அதன் அழகுக்காகத் திரும்பத் திரும்பப் படிப்பேன். அவரைப்போல இலகுவாக எழுதிவிட முடியும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அது எத்தனை கடினமானது என்பது அவரைச் சந்தித்தபோதுதான் புரிந்தது.

கார்ல் இயெக்மென்னாவின் மேசையில் பல கதைகள் பூர்த்திசெய்யப்படாமல் பாதிப் பாதியாகக் கிடந்தன. ஒரு சிறுகதை எழுதுவதற்கு மூன்று மாதங்கள் தொடங்கி ஆறு மாதங்கள் வரை எடுப்பதாகக் கூறினார். முழுத் திருப்தி கிடைக்கும் வரை செம்மைப்படுத்துவார். 'எழுதுவது ஒரு தவம். நாவல் எழுதுவது, மாரத்தான் ஓட்டம் போல. சிறுகதை 100 மீட்டர் ஓட்டம்போல. உன்னிடம் இருக்கும் அத்தனையையும் கொடுத்து சிறுகதை எழுதவேண்டும்’ என்று சொன்னார். எந்திரனை உருவாக்கும் அதீதக் கவனத்துடன் சிறுகதைகளைப் புனைகிறார் அந்தப் பேராசிரியர்!''

P38A.jpg

 

யூ.ஏ.ஜோசப் ராஜ், பயமறியானேந்தல்.

''சங்க இலக்கியப் பாடல்களில் நீங்கள் ஆச்சரியப்பட்ட பாடல் எது?''

''புறநானூறு (187) ஒளவையாருடைய 'நாடா கொன்றோ; காடா கொன்றோ...’ எனத் தொடங்கும் பாடலைத்தான் என் இணையதளத்தின் (amuttu.net) முகப்புப் பாடாலாக வைத்திருக்கிறேன். கருத்து, மிக எளிமையானது. ஒரு நாட்டின் சிறப்பை அதன் காடுகளோ, சமதரைகளோ, மலைகளோ, பள்ளத்தாக்குகளோ தீர்மானிப்பது இல்லை. அந்த நாட்டு மக்களே அதன் சிறப்புக்குக் காரணம்!

ஆனால், உங்கள் கேள்வியைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது புறநானூற்றில் காணப்படும் ஒரு கதைதான். பெண் கேட்டு வந்த அரசன் கோபத்தில் நெற்றி வியர்வையை வேல் கம்பினால் வழித்தபடி நிற்கிறான். பெண்ணின் தந்தை பணியவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை; சாந்தமாக மறுக்கிறார். இதுதான் முடிவு என்றால், கூரிய பற்களும், ஈரமான கண்களும் கொண்ட இந்த அழகியப் பெண், சிறு நெருப்பு பெருங்காட்டை அழிப்பதுபோல தான் பிறந்த ஊரையே அழித்துவிடுவாள்!

புறநானூறு-349.

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.

'நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்
கடிய கூறும் வேந்தே; தந்தையும்
நெடிய அல்லது பணிந்துமொழி யலனே;
இதுஇவர் படிவம்; ஆயின் வைஎயிற்று 
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
மரம்படு சிறுதீப் போல,
அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே..’

பெண்கேட்டு வந்த அரசன் கோபத்துடன் இருக்கிறான். வேல் நுனியினால் நெற்றி வியர்வையை வழிக்கிறான். முதல் வரியிலேயே கிடைக்கும் படிமம் பாடலின் வெற்றியை நிச்சயமாக்கிவிடுகிறது. செக்கோவின் சிறுகதை போல ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை. இதுதான் சங்கப்பாடல்!''

ஆத்தியப்பன், திருக்கோவிலூர்.

''தங்களால் மறக்க முடியாத பயணம்..?''

''அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்துக்கு சமீபத்தில் சென்று வந்தது சுவாரஸ்யமாகப்பட்டது. உலகத்திலேயே ஆதித் திருட்டு, மாட்டுத் திருட்டுதான். 3,000 வருடங்களுக்கு முந்தைய ரிக் வேதம்கூட மாட்டுத் திருட்டு பற்றிச் சொல்கிறது.

புறநானூற்றில் உலோச்சனார் 'காரைப்பழ மது உண்டு, மாமிசம் தின்று தன்னுடைய எச்சில் கையை வில்லிலே துடைப்பவன் மறுபடியும் புறப்படுகிறான். தான் கவர்ந்த ஆநிரைகளை ஊருக்கெல்லாம் தந்துவிடுவான்’ என்கிறார். எதிரி நாட்டின் மாடுகளைக் கவர்ந்து தன்னுடைய குடிமக்களுக்குக் கொடுக்கும் அரசர்கள் இருந்திருக்கிறார்கள் போலும்.

அமெரிக்காவில், ஒருகாலத்தில் மாட்டுக் காவலர்களின் (cowboys) ஆட்சிதான் நடந்தது. அவர்கள் மாடுகளைக் காவல் காப்பதும், திருடர்கள் திருடுவதும், இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடப்பதும் திருடர்களைப் பிடித்துத் தூக்கில் தொங்கவிடுவதும் சகஜம். அந்தக் காலம் முடிந்துவிட்டது என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், இன்றும் திறந்தவெளி மாட்டுப் பண்ணைகள் பல முன்னர் போல இயங்கியதை மொன்ரானாவில் பார்க்க முடிந்தது.

அங்கே வேலை செய்த மாட்டுக்காவலர், விளிம்பு தொப்பியும், நீண்ட பூட்ஸும், இடையில் துப்பாக்கியும் அணிந்து இருந்ததைக் கண்டேன். அவர் சொன்னார், 'சில நாட்கள் முன்னர் திருடர்கள் இரவு பெரிய ட்ரக் வண்டியில் வந்து 50 மாடுகளைக் கவர்ந்து சென்றுவிட்டார்கள்’ என்று. 250,000 டொலர் நட்டம். திருட்டு நிற்கவில்லை; திருடும் முறைதான் மாறி இருக்கிறது!''

கிருத்திகா, திருமழபாடி.

''நீங்கள் பிறந்து வளர்ந்த இலங்கையின் 'கொக்குவில்’ குறித்த உங்கள் பால்ய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

''ஆகச் சிறுவயது ஞாபகம் என்று ஒன்றைச் சொல்லலாம்.

இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டு இருந்தது. எங்கள் கிராமத்தில் உணவுத் தட்டுப்பாடு. பல குடும்பங்களில் ஒரு நேரச் சாப்பாடுதான். எங்கள் குடும்பத்தில் 10 பேர். ஐயாவுக்குக் கவலை, எங்கேயிருந்து தினமும் உணவு கொண்டுவருவது என்பது. அம்மாவின் யோசனை, அன்று என்ன சமைப்பது... எப்படிப் பசி ஆற்றுவது?

ஒரு நாள், ஐயா எப்படியோ ஒரு மூட்டை நெல் சம்பாதித்து வந்து அதைக் குப்பைமேட்டின் அடியில் புதைத்துவைத்தார். தேவைக்கு அதிகமான உணவு வைத்திருக்கக் கூடாது என்பது சட்டம். அடுத்த நாள் அதிகாலை பொலீஸ் வாகனம் வந்தது. ஐந்தாறு பொலீஸ்காரர்கள் குண்டாந்தடியுடன் டப்புடப்பென்று குதித்து வீட்டைச் சோதனை போட்டு, ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினார்கள். அம்மாவின் சேலையைப் பிடித்துக்கொண்டு நடுங்கியபடி நின்ற என் கண்களைப் பார்த்திருந்தால், அவர்கள் இலகுவாக வெற்றி கண்டிருக்கலாம். நான் குப்பை மேட்டைவிட்டு கண்களை எடுக்கவில்லை. அந்தக் கிராமத்தில் 50, 100 என்று நெல் மூட்டைகள் பதுக்கிவைத்திருந்த வியாபாரிகள் இருந்தார்கள். அவர்களை விட்டுவிட்டு எங்கள் வீட்டைச் சோதனை செய்ததுதான் இன்றைக்கும் எனக்கு வியப்பு அளிக்கும் விஷயம்.

அந்த வயதில் வாசிப்புக்காக ஏங்கி அலைந்தது இன்னொரு ஞாபகம். கிராமம் கிராமமாகத் திரிந்து புத்தகங்கள் இரவல் வாங்கினேன். கொஞ்சம் பெரியவனானதும் யாழ் நூலகம் சென்று படித்தேன். கல்கியின் 'மகுடபதி’யை ஒரு முழு நாள் வாசித்தது அங்கேதான். 100,000 புத்தகங்கள் கொண்ட அந்த நூலகத்தைத்தான் சிங்கள அரசு 1981-ம் ஆண்டு மே 31 - அன்று இரவு எரித்தது. சமீபத்தில் அங்கு போன நேஷனல் ஜியோகிராபி புகைப்படக்காரர், புத்தகம் படிக்கும் ஒரு பெண்ணைப் படம்பிடித்து எனக்கு அனுப்பினார். அவர் படிப்பது நான் எழுதிய புத்தகம்தான். திகடசக்கரம்!''

- அடுத்த வாரம்...

dot2.jpg''இன்னும் 100 ஆண்டுகளில் இன்று இருக்கும் 1,000 மொழிகள் வரை அழிந்துவிடும் என்று சொல்லப்படுகிறதே... தமிழின் எதிர்காலம் என்ன?''

dot2.jpg''நேஷனல் ஜியோகிராபி நிறுவனத்தில் உங்கள் மூதாதையர் பற்றிய மரபு தொடர்ச்சியைத் தேடினீர்களே... அதன் சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

dot2.jpg''தமிழகச் சூழலில் எழுத்தாளர்கள் சாதிக்க முடியும்... சம்பாதிக்க முடியுமா?''

அ.முத்துலிங்கத்திடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை - அ.முத்துலிங்கம்’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.

 


http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=91441&r_frm=magazine_related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஒரு செய்தி ஒரு சிறுகதை!
விகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்
வாசகர் கேள்விகள்
 
 

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

''ஓர் அதீதக் கற்பனைதான்... ஆனாலும் பதில் சொல்லுங்களேன்! தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரை 'பாரத ரத்னா’ விருதுக்கு சிபாரிசு செய்யலாம் என்றால், உங்கள் பரிந்துரை யார்?''

''அதீதக் கற்பனை இல்லை. எழுத்தாளர் ஜெயமோகன், அதற்கு முற்றிலும் தகுதியானவர்!''

க.முருகானந்தம், வீரமரசன்பேட்டை.

''உங்கள் கதைகளில் உணவு வகைகளைச் சுவையுற வர்ணிப்பீர்கள். கனடா வாழ் தமிழர்களின் உணவுக் கலாசாரம் பற்றி சொல்லுங்களேன்?''

''ஈழத் தமிழர்களிடையே இட்லி, தோசைக்கு இடம் கிடையாது. எங்கள் உணவு புட்டு, இடியப்பம், அப்பம், சோறு, கறி. சாம்பார், ரசம்கூட வீடுகளில் வருடத்துக்கு இரண்டு முறைதான். இந்திய எழுத்தாளர்கள் யாராவது கனடாவில் எங்கள் வீடுகளுக்கு வந்தால், அவர்களுக்கு விருந்தளிக்க நாங்கள் திணறிவிடுவோம்.

கனடாவில் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். 100 உணவகங்கள் ஈழத்து உணவு வகைகளை, முறுக்கு, அரியாரம், மோதகம், வடை, வாய்ப்பன், பனங்காய் பணியாரம் என்று செய்து தள்ளுகின்றன. ஆனால், உலகில் வேறு எங்கேயும் கிடைக்காத ஓர் அரிய உணவு இங்கே பிரபல மாகி வருகிறது. இதன் செய்முறை மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.

p54b.jpgஇளம் ஆட்டு இறைச்சி, ஒமேகா-3 மீன் எண்ணெய் முட்டை, கூனிறால், வெள்ளைப் பூண்டு, லீக்ஸ் என்று பலவிதமான  கூட்டுப்பொருள்கள் தேவை. ஒலிவ் எண்ணெயில் பொரிக்கப்பட்டு பொன் நிறத்தில் இது கிடைக்கும். ஒருமுறை சாப்பிட்டவர் மீண்டும் கேட்பார். இன்னொரு முறை சாப்பிட்டவர் வாழ்நாள் முழுக்கச் சாப்பிடுவார். சுவையின் உச்சம்.

இன்னொரு விசேஷம், இந்த உணவு, ஈழத்து யுத்தகால அவல நினைவுகளை தலைமுறை தலைமுறையாகக் கடத்தும். யூதர்கள் 3,400 வருடங்களுக்கு முன்னர் எகிப்தைவிட்டு துரத்தப்பட்ட நாளை இன்றும் புளிக்காத அப்பம் உண்டு, விரதம் காப்பதுபோல, இதுவும் எங்கள் எதிர்கால விரத உணவாக மாறலாம். இந்த உணவின் பெயர் 'மிதிவெடி’ (landmine). அதே வடிவத்தில் கிடைக்கும்!''

p54d.jpgபிரவீன்குமார், செம்பறை.

''உலக நியதிகளைக் கவனத்தில்கொண்டு சொல்லுங்கள்... தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுவது அதீத மரியாதையா... அவமானப் புறக்கணிப்புகளா?''

''இப்போதுதான் தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளர்களை மதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது நல்ல காரியம். வருடாவருடம் இலக்கியத் துக்கு எத்தனையோ விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதீத மரியாதை என்று சொல்ல முடியாது; புறக்கணிப்பும் இல்லை. புத்தகச் சந்தையில் புத்தகங்களை வாங்கிவிட்டு ஆசிரியரிடம் கையெழுத்து வாங்க வரிசையில் நின்றதாக நண்பர் ஒருவர் சொன்னார். 20 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு காட்சியைக் கற்பனை செய்ய முடியுமா? வரவேற்கவேண்டிய மாற்றம்!''

சு.கலியபெருமாள், தொண்டராயன்பாடி.

''எழுத்தாளர்களின் வெற்றிக்குப் பின்னணியில் அவர்களுடைய மனைவியின் பங்கும் இருக்கிறதுதானே?''

 ''நிச்சயமாக. என்னை ஒழுங்குசெய்வது என் மனைவிதானே! ஒருநாள் என் மனைவி என் அலுவலக அறைக்கு வந்தார். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு ராணுவத்தைப் பார்வையிட வந்த ஜெனரல் போல இரண்டு பக்கமும் பார்த்தார். பல புத்தகங்கள் திறந்து நிலத்தில் கிடந்தன. நோட்டுப் புத்தகங்கள், பாதி எழுதியபடி சிதறியிருந்தன. கம்ப்யூட்டரில் நான் வேகமாகத் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். மனைவி கேட்டார். 'இதுவெல்லாம் குப்பையாகக் கிடக்கிறதே. ஒழுங்காய் அடுக்கிவைக்க ஏலாதா? அதன் பின்னர் எழுதினால் என்ன?’ நான் சொன்னேன், 'நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்’. மனைவி ஒவ்வொன்றாக அடுக்கிவைக்கத் தொடங்கினார். இது முக்கியமானது. நான் அவர் எங்கே வைக்கிறார் என்று பார்த்தால்தான் மறுபடியும் இழுத்து எடுத்து வேலையைத் தொடரலாம். ஆகவே, நானும் சேர்ந்துகொண்டேன். அன்றைய எழுத்து, முடிவுக்கு வந்தது அப்படித்தான்.

p54c.jpg

எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஜூன் 1815. வாட்டர்லூ போர் நடக்கிறது. இங்கிலாந்து கோமகன் வெலிங்டனின் படைக்கும், பேரரசன் நெப்போலியனின் ஃபிரெஞ்சுப் படைக்கும் இடையில் பெரும் போர். ஒவ்வொரு விநாடியும் 'வாழ்வா... சாவா?’ என்பது போன்ற நிலை. லண்ட னில் இருந்து கணக்காளர்கள் ஓயாது வெலிங்டனுக்கு போர்க்களத்துக் கணக்கு விவரங்களை உடனுக்குடன் எழுதி அனுப்பும்படி தொந்தரவு கொடுக்கிறார்கள். பொறுக்க முடியாமல் கோமகன் வெலிங்டன், லண்டனுக்கு இன்றைக்கும் பேசப்படும் புகழ்பெற்ற கடிதம் ஒன்று எழுதினார். 'இன்றைய கணக்கு விவரங்கள். ஒரு ஷில்லிங் ஒன்பது பென்ஸ் கணக்கில் இடிக்கிறது. ராஸ்ப்பெர்ரி ஜாம் போத்தல் ஒன்றைக் காணவில்லை. மேன்மைதாங்கிய அரசரின் சேவகர்களுக்கு லண்டனில் என்ன வேண்டும்? ஜாம் போத்தலைக் கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது நான் நெப்போலியனை அடித்துத் துரத்த வேண்டுமா?’

இப்போது நான் கேட்கிறேன்... நான் என்ன செய்யவேண்டும்? யாராவது சொல்லுங்கள். அறையைத் துப்புரவாக்க வேண்டுமா? அல்லது எழுதவேண்டுமா?''

க.எழிலரசன், சோழமாதேவி.

''தமிழில் இப்போது 800 பக்கங்கள், 1,000 பக்கங்கள் என்ற அளவில் நாவல்கள் வருகின்றன. இந்தத் திடீர் மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இது வரவேற்கத்தக்கதா?''

 ''அதிகப் பக்கங்கள் கொண்ட நாவல்கள் வருவதற்குக் காரணம் கணினிதான். ஆதியில் எழுதுவதற்கே சிரமப்பட்டார்கள். ஓலையில் எழுத் தாணியால் எழுதினார்கள். பிறகு தொட்டு எழுதும் பேனா, அதைத் தொடர்ந்து பால்பாயின்ட். பின்னர் தட்டச்சு மெசின், இப்போது கணினி. முன்பு அமெரிக்க நூலகங்களில் தட்டச்சு மெசின் இருக்கும் ஒரு துளையில் 10 சென்ட் போட்டால், அரை மணி நேரம் தட்டச்சு செய்யலாம். ரே பிராட்பெர்ரி என்கிற எழுத்தாளர் 10 சென்ட் காயினைப் போட்டுவிட்டு அசுர வேகத்தில் அடிப்பார். அடுத்த நாளும் அப்படியே செய்வார். இப்படி 10 டொலர் செலவழித்து தட்டச்சு செய்து பலநாட்கள் எழுதிய நாவல்தான் 'Fahrenheit 451’. இது 192 பக்கங்கள் மட்டுமே கொண்டது. ஆனால், 100 லட்சம் பிரதிகள் விற்றுத் தள்ளியது.

p54.jpgகணினி வந்த பின்னர், எழுதுவது இலகுவாகிவிட்டது. அடிக்க அடிக்க வார்த்தைகள் வந்துகொண்டே இருந்தன. எதற்கு வீணாக்குவேன் என்று வசனமாக்கினார்கள். அது நாவலாகியது.

சமீபத்தில் வரும் அநேகமான நாவல்கள், சொன்னதையே திரும்பச் சொல்கின்றன. நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய 'கிழவனும் கடலும்’ நாவல் 127 பக்கங்கள்தான். 'யசுனாரி கவபாட்டா’ எனும் ஜப்பானிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவர்தான். புகழ்பெற்ற அவருடைய நாவலான 'தூங்கும் அழகிகள் இல்லம்’ 148 பக்கங்கள் மட்டுமே. நீண்ட நாவல்கள் எழுதுவதில் குறையொன்றும் இல்லை. குறைந்த பக்கங்களில் சொல்ல வந்த விசயத்தை நறுக்கென்று சொல்லிவிடக்கூடிய எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்!''

ச.தேவராஜன், பெருந்துறை.

''சிறுகதைகளுக்கான கருவை எங்கிருந்து எடுப்பீர்கள்?''

''எதில் இருந்தும் கிடைக்கும். ஒரு துண்டு செய்தியில் இருந்துகூட..! சமீபத்தில் நான் வாசித்த செய்தி இது.

என்னுடைய மகன் வசிக்கும் மாநிலத்தின் பெயர் மொன்ரானா. அமெரிக்காவில் அதிகம் கவனிக்கப்படாத மாநிலம் இது. இந்த மாநிலப் போலீஸாருக்கு, வெடிகுண்டு மோப்பம் பிடிக்கும் நாய் ஒன்று தேவைப்பட்டது. பயிற்சி கொடுத்த நல்ல நாய் ஒன்றின் விலை 20,000 டொலர்கள். ஆனால், இஸ்ரேல் நாடு, உபயோகத்தன்மை முடிந்துவிட்ட ஒரு நாயை இலவசமாகத் தருவதாகச் சொன்னது. போலீஸாரும் அதை வாங்கிவிட்டார்கள். ஆனால், அதை வாங்கிய பின்னர்தான் ஒரு பிரச்னை ஆரம்பித்தது. அந்த நாய்க்கு ஆங்கிலம் தெரியாது. ஹீப்ரு மொழியில் ஆணை கொடுத்தால்தான் செய்யும். ஒரு போலீஸ்காரர் மெனக்கெட்டு ஹீப்ரு வார்த்தைகளைப் பாடமாக்கி ஆணை கொடுத்துப் பார்த்தார். அப்போதும் நாய் திரும்பிப் பார்க்கவில்லை.

மொன்ரானாவில் யூதர்கள் மிக மிகக் குறைவு. ஹீப்ரு மொழி பேசும் ஒருவரை அங்கே அபூர்வமாகவே காண முடியும். அதிர்ஷ்டவசமாக யூத பாதிரியார் ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஹீப்ரு மொழியில் ஆணை கொடுத்ததும், வெடிகுண்டு நாய் துள்ளித் துள்ளி அவர் கட்டளைகளை நிறைவேற்றியது. போலீஸாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு ஞாயிறும் ஒரு போலீஸ்காரர் பாதிரியாரிடம் சென்று ஹீப்ரு வார்த்தைகளின் சரியான உச்சரிப்புகளை படித்துக்கொண்டார். மூன்று மாதங்களில் நாய் போலீஸ்காரரின் ஹீப்ரு கட்டளைகளை பட்பட்டென்று நிறைவேற்றியது.

மொன்ரானா மக்களுக்கு தங்கள் மாநிலத்துக்கு ஒரு வெடிகுண்டு நாய் கிடைத்ததில் மிகவும் சந்தோசம். போலீஸ்காரருக்குக் கட்டளைகள் கொடுப்பதில் சந்தோசம். நாய்க்குக் கட்டளைகளை நிறைவேற்றுவதில் சந்தோசம்.

இந்த விவகாரத்தில் ஆகச் சந்தோசப்பட்டது யூத பாதிரியார்தான். அந்தப் பெரிய மாநிலத்தில் இவ்வளவு நாளும் பாதிரியாருக்கு ஹீப்ரு பேசுவதற்கு ஒரு நாயும் இருக்கவில்லை. இப்போது இருந்தது!

இது ஒரு கச்சிதமான சிறுகதைக்கான கரு அல்லவா!''

- இன்னும் கதைக்கலாம்...

dot2.jpg''விமர்சனங்கள், ஓர் எழுத்தாளனை எப்படிப் பாதிக்கிறது?''

dot2.jpg''இலக்கியவாதிகள் ஏன் அரசியல் பேசுவதில்லை?''

dot2.jpg'' 'நெருக்கடிகள்தான் கலைகளை உருவாக்குகின்றன என்றால், நெருக்கடிகளும் வேண்டாம் கலையும் வேண்டாம்’ என்று சொல்லியிருப்பார் சுந்தர ராமசாமி. நீங்கள் சொல்லுங் கள்... இவைதான் கலையின் ஊற்றுக்கண்களா?''

http://www.vikatan.c...agazine_related

 

 

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

''ஓர் அதீதக் கற்பனைதான்... ஆனாலும் பதில் சொல்லுங்களேன்! தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரை 'பாரத ரத்னா’ விருதுக்கு சிபாரிசு செய்யலாம் என்றால், உங்கள் பரிந்துரை யார்?''

''அதீதக் கற்பனை இல்லை. எழுத்தாளர் ஜெயமோகன், அதற்கு முற்றிலும் தகுதியானவர்!''

 

இவர் அவருக்கும், அவர் இவருக்கும் ஆளாளுக்கு முதுகு சொறிவதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார் முன்னர் இருந்தவர் முத்துலிங்கம் .கணையாழி ,திகட சக்கரம் காலம் அது. பல நாடுளில் வேலை செய்த அனுபவம் அதற்கு பெரும் உதவியாக இருந்தது .

.பின்னர் தானும் இளம் எழுத்தாளார்கள் போல எழுத முயற்சிக்க வயது போக சிவாஜியின்  நடிப்பு ,சவுந்தரராஜனின் பாடல்கள் எப்படி ஆயிற்றோ அதே மாதிரி இவர் எழுத்தும் ஆகிவிட்டது .

குமுதம் ,விகடன் இவர்  கனடாவில் இருப்பதால் இப்பவும் தூக்கி பிடிக்கின்றன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரனுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு!
விகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்
வாசகர் கேள்விகள்
 
 

குணசீலன், திருப்பூர்.

''விமர்சனங்கள், ஓர் எழுத்தாளனை எப்படிப் பாதிக்கிறது?''

''விமர்சனங்கள் முக்கியமானவை. வாசகர்கள் ஒரு புத்தகத்தை 'ஆஹா’ என்று புகழும்போது... விமர்சகர், ஆசிரியர் தலையில் சின்னத் தட்டுத் தட்டி உண்மையைச் சொல்கிறார். இது தேவையான பணிதான். ஆனால், சில விமர்சகர்கள் ஒரு நூலைப் படிக்கும் முன்னரே அதன் ஆசிரியரைப் பற்றி முன்முடிவு எடுத்து விமர்சனம் எழுதிவிடுகிறார்கள்.

ஒருமுறை பிரபல எழுத்தாளர் நோர்மன் மெய்லருடைய புத்தகத்தை 'டைம்’ பத்திரிகை நிருபர், விமர்சனம் என்ற பெயரில் மோசமாகத் தாக்கியிருந்தார். நோர்மன் மெய்லர், அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

'ஐயா, நீங்கள் எழுதிய அதே பத்திரிகையின் பின்பக்கத்தைப் பாருங்கள். அங்கே ஆகஅதிக விற்பனைப் பட்டியலில் முதலில் ஒரு புத்தகம் இருக்கிறது. அதை எழுதியது நான்தான். என்னுடைய பெயர் நோர்மன் மெய்லர்.’

p60.jpgஎழுத்தாளர்கள், விமர்சனம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளக் கூடாது. ஆங்கிலத்தில் சொல்வார்கள், 'முன்னுக்கு ஓடும் நாய்தான் பின்பக்கம் கடி வாங்கும்’ என்று. இன்னொன்றையும் நினைவில் வைக்கவேண்டும். எழுத்தாளர்களுக்கு சிலை வைப்பார்கள். விமர்சகர்களுக்கு எந்த நாட்டிலும் சிலை கிடையாது!''

எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.

 ''சமீபமாக இலக்கியவாதிகள் ஏன் அரசியல் பேசுவது இல்லை?''

''தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் இலக்கியத்தையும் அரசியலையும் பிரித்துப்பார்க்க முடியாமல் இருந்தது. அறிஞர் அண்ணா, கண்ணதாசன், ஜெயகாந்தன், ராஜாஜி எல்லோருமே இரண்டு தளங்களிலும் தீவிரமாக இயங்கினார்கள். இப்போதெல்லாம் ஓர் எழுத்தாளர் தன்னை ஒரு கட்சியோடு அடையாளப்படுத்தத் தயங்குகிறார். காரணத்தை நானே ஓர் எழுத்தாளரிடம் கேட்டேன். அவர், 'ஒரு நாவல் எழுதினால் அது எத்தனை திறமான நாவலாக இருந்தாலும், எதிர் அணி அந்த நாவலைத் தாக்கிப் புத்தக விற்பனையைக் கெடுத்துவிடும்’ என்றார். உலக அளவில் பார்த்தால் உயர் இலக்கியம் படைத்தவர்கள் அரசியலில் இருந்திருக்கிறார்கள். அரசியலில் இருந்து இலக்கியம் படைத்தவர்களும் உண்டு. மா சே துங் கவிதைகளை உலகத்து எந்த நாட்டுக் கவிதைகளுடனும் ஒப்பிடலாமே. சே குவேராவின் 'மோட்டார் சைக்கிள் டைரி’ இன்று உலக இலக்கியமாகிவிட்டது. வின்ஸ்டன் சர்ச்சில், இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்!''  

p60a.jpgரா.பிரசன்னா, மதுரை.

'' 'நெருக்கடிகள்தான் கலைகளை உருவாக்கு கின்றன என்றால், நெருக்கடிகளும் வேண்டாம் கலையும் வேண்டாம்’ என்று சொல்லியிருந்தார் சுந்தர ராமசாமி. நீங்கள் சொல்லுங்கள்... இவைதான் கலையின் ஊற்றுக்கண்களா?''

''நெருக்கடிகள்தான் கலையின் ஊற்றுக்கண்கள் என்றால், இன்று உலகை நிறைத்து பேரிலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் ஏழைப் புலவர்கள் ஊர் ஊராகப் போய் பாடி யாசிப்பார்கள். ஒளவையாரின் 'வாயிலோயே... வாயிலோயே...’ என்ற பரிதாபமான பாடல் சான்று. அவர்கள் ஏழ்மையின் நெருக்கடியில் படைத்தார்கள் என்று நினைக்கலாம். ஆனால் அரசர்களும் பாடியிருக்கிறார்களே! பாரதியும் புதுமைப்பித்தனும் பல நெருக்கடிகளிலும் அருமையான படைப்புகளைத் தந்தார்கள். அவர்களுக்கு வசதி வந்திருந்தால் படைப்பதை நிறுத்தியிருப்பார்களா?

ரவீந்திரநாத் தாகூர் செல்வந்தர் வீட்டில் பிறந்து, சுகமான வாழ்க்கையை அனுபவித்தவர். அவர், இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெறவில்லையா? உலக இலக்கியத்தின் உச்சியில் இன்றும் போற்றப்படும் தோல்ஸ்தோய், பிரபு குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய கடைசிக் காலத்தைத் தவிர, அவருக்கு நெருக்கடிகளே கிடையாது என்று சொல்லலாம். அவர் படைத்த இலக்கியம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

உண்மையான எழுத்தாளருக்கு நெருக்கடிகள் ஆயுதமாகின்றன. அவர் அதைத் தாண்டி எழுதுகிறார். சார்லஸ் டிக்கென்ஸ் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். வாழும்போதே எழுத்து ஊதியத்தினால் அதி செல்வந்தர் ஆனவர் இவர் ஒருவர்தான். வசதி வந்த பின்னர் அவருடைய எழுத்து கூர்மைப்பட்டதே ஒழிய, தரம் குறையவே இல்லை!''

மணிமாறன், திருவாடானை.

 ''பிரபாகரன் குறித்து?''

''என்னுடைய மேசையில் உலக வரைபடம் ஒன்று ஒட்டப்பட்டிருக்கிறது. இது 60 வருடங்களுக்கு முந்தைய உலகப்படம். இந்த வரைபடத்துக்கும் இன்றைய உலகத்துக்கும் சம்பந்தம் கிடையாது. படத்தில் காணப்படும் நாடுகள் பல இப்போது கிடையாது. இன்றைய நாடுகள் பல அப்போது இல்லை. உதாரணமாக, கொசோவோ, சேர்பியா, கிழக்கு திமோர், எரித்திரியா, தெற்கு சூடான் ஆகிய எல்லாமே புதிய நாடுகள். இன்னொரு நாட்டில் இருந்து பிரிந்து தனி நாடானவை.

1995-ம் ஆண்டு கனடாவின் மாகாணமான கியூபெக்கில் நடந்த வாக்கெடுப்பைப் பார்த்து நான் அதிசயித்தது உண்டு. 'கியூபெக், தொடர்ந்து கனடாவில் அங்கமாக இருக்க வேண்டுமா அல்லது பிரிந்துபோக வேண்டுமா?’ இதுதான் கேள்வி. 50.58 சதவிகிதம் மக்கள் 'பிரியக் கூடாது’ என்று வாக்களித்தார்கள். 49.42 சதவிகிதம் பேர் 'பிரியவேண்டும்’ எனும் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். இந்தத் தீர்ப்பின் பிரகாரம், கியூபெக் மாகாணம் இன்றும் கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர்கிறது. மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் கியூபெக் பிரிந்துபோக முடியவில்லை.

இப்படி ஒரு நாட்டிலிருந்து பிரிவதற்கு வழி, பொது வாக்கெடுப்பு. இரண்டாவது, சமாதானப் பேச்சுவார்த்தை. மூன்றாவது... போர்.     30 ஆண்டுகளாக வடக்கு அயர்லாந்தில் அடக்குமுறையை எதிர்த்துப் போர் நடந்தது. இறுதியில் பேச்சுவார்த்தையில் வெற்றி கிட்டியது. அதற்குப் பாடுபட்ட ஜோன் ஹியூம் என்பவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராஃபத், பாலஸ்தீனத்தை மீட்பதற்காகப் போராடினார். 1993-ம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு இவர் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். 1994-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

p60b.jpg

நெல்சன் மண்டேலாவை எடுப்போம். இவர் வெள்ளையர் அடக்குமுறையை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடினார். சிறையில் அடைத்தார்கள். தன் வழியை மாற்றி அகிம்சைப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவர் விடுதலையாகி தென் ஆப்பிரிக்காவின் தலைவர் ஆனார். அவருக்கு 1993-ல் சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. ஒரு புது நாடு, பேச்சுவார்த்தை மூலம் உண்டாகலாம். கனடாவில் செய்ததுபோல பொது வாக்கெடுப்பதும் ஒரு வழி.

இலங்கையில் பிரபாகரன் அடக்குமுறையை எதிர்த்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. உலக நாடுகள் பெரிதும் அக்கறை காட்டாததால், சமாதானம் தள்ளிப்போனது. அதில் வெற்றி கிட்டியிருந்தால், இன்று அமைதி நிலவியிருக்கும். பிரபாகரனுக்கு நோபல் சமாதானப் பரிசு சாத்தியமாகியிருக்கும். ஒரு புது நாடும் கிடைத்திருக்கும்! ஹும்ம்.. என்ன செய்வது!?''

குமரேசன், சென்னை.

 ''நான் உணர்ந்த வரை உங்கள் கட்டுரைகளின் சிறப்பம்சம், மிக மிக சுவாரஸ்யமான உதாரணங்கள்/உவமைகள். சொல்ல வந்த விஷயத்தை லகுவாக்கும். அந்த உவமைகள் பெரும்பாலும் சம்பவங்களாக இருக்கின்றன. வரலாறு, அரசியல், சமகாலம் என்று பலவாரியாக இருக்கும் அந்த உவமைகளை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?'' 

''சங்க இலக்கியங்களில் இருந்துதான். என்னுடைய நண்பர் பேராசிரியர் சொல்வார், 'சங்க இலக்கியங்களில் இல்லாத உவமைகளை வேறு எங்கேயும் காண முடியாது’ என்று. புறநானூறு 193 'சேற்றில் அகப்பட்ட மான்போல தப்ப முடியாத வாழ்க்கை...’ என்று சொல்லும். இன்னொரு பாடல் 'ஈசல்போல ஒருநாள் வாழ்வு...’ என்று உவமை காட்டும். குறுந்தொகை 'அணில் பல் போல முட்கள்...’ என்று அழகான உவமை தரும். 'முல்லைப் பற்களைக் காட்டிச் சிரித்தாள்...’ என்று பழைய இலக்கியம் வர்ணிக்கும். ஆனால், அதை அப்படியே சமகாலத்தில் எழுத முடியாது. காலத்துக்கு ஏற்ப மாற்றம் வேண்டும். 'உறையிலிருந்து உருவிய குறுந்தகடுபோல பளீரென்று சிரித்தாள்’ என்று சொல்லலாம்!''

சித்திரவேலு, கருப்பம்புலம்.

 ''உங்கள் குடும்பத்தினர் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்!''

''என் குடும்பத்தைப் பற்றிப் பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. அம்மா அப்பாவுக்கு நாங்கள் ஏழு பிள்ளைகள். ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள். நான் ஐந்தாவது. அம்மாவுக்கு இதிகாசங்களில் பரிச்சயம் உண்டு. அவர்தான் சிறுவயதில் எனக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டியவர். நான் மணமுடித்த பெண்ணின் பெயர் கமல ரஞ்சனி. காதல் திருமணம். என் மனைவி, ஆரம்பத்திலிருந்தே என் எழுத்து வேலைக்கு உறுதுணையாக இருக்கிறார். மகன் பெயர் சஞ்சயன். சூழலியல் விஞ்ஞானி. பி.பி.சி., டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி, பி.பி.எஸ். போன்றவற்றுடன் இணைந்து சூழலியல் ஆவணத் திரைப்படங்கள் பலவற்றில் பங்காற்றியவர். மகள் வைதேகி. சொந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருடைய மகள் அப்ஸரா. இவ்வளவுதான் என் இனிமையான குடும்பம்!''

சண்முகப்பாண்டியன், சின்ன சேலம்.

 ''நீங்கள் நாவல் பக்கம் கவனம் செலுத்துவதே இல்லையே! வருங்காலத்தில் ஏதேனும் நாவல் எழுதும் உத்தேசம் உண்டா?''

 ''சிறுகதை எழுதுவது என்றால் ஒரு மாதம் போதும். நாவலுக்கு குறைந்தது இரண்டு வருடங்களை ஒதுக்கவேண்டும். இதுதான் நாவல் எழுதுவதில் உள்ள பிரச்னை. டேவிட் ஜேம்ஸ் டங்கன் என்கிற நாவலாசிரியரைச் சந்தித்தேன். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு நாவல் எழுதுகிறார். இந்த ஐந்து வருடமும் அவருக்கு வருமானம் இல்லையென்று சொன்னார். கட்டுரை, கதைகள் எழுதினால் அவ்வப்போது பணம் கிடைக்கும். பலர் நாவல் எழுதாததற்கு இதுதான் காரணம்!

முன்னர் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற நாவல் எழுதியிருக்கிறேன். இப்போது 'கடவுள் தொடங்கிய இடம்’ என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதி வருகிறேன். 200 பக்கங்களுக்கும் குறைவாகவே இருக்கும். இலங்கையில் இருந்து அகதியாகப் புறப்பட்ட ஒருவனின் கதை. ஏற்கெனவே பலர் எழுதிய பின்புலம்தான். ஆனால், இது கதையிலும் சொல்முறையிலும் வித்தியாசப்படும்!''

எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.

 ''அன்று கலைக் கல்லூரியில் படித்த எங்கள் கையில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன்.. எழுதிய புத்தகங்கள் இருக்கும். ஆனால், இன்று பாடப் புத்தகத்தைத் தவிர இளைஞர்கள் கையில் எந்தப் புத்தகமும் இல்லையே?! ஏன் இந்த நிலை?''

''இப்போதைய இளைஞர்கள் கைகளில் செல்பேசிகள் உள்ளனவே, கவனிக்கவில்லையா? அவற்றில் உலகத்தையே தரவிறக்கம் செய்யலாம். இணையதளங்களில் அறிவியல் கட்டுரைகளும் இலக்கியமும் நிறைய கிடைக்கின்றன. மின்நூல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்துவிட்டன.

வெளியே புறப்படும்போது என் செல்பேசியில் குறைந்தது இரண்டு ஆங்கில நூல்களும் இரண்டு தமிழ் நூல்களும் இருக்கும். நீங்கள் நினைப்பதுபோல இலக்கியம் படிக்கும் தமிழ் வாசகர்கள் அருகிவிடவில்லை. உலகமெங்கும் நிறைந்திருக்கும் அவர்களின் அளவும் தரமும் வெகுவாக உயர்ந்திருக்கிறது. இது எனக்கு எப்படித் தெரியும்? அவர்களிடமிருந்து வரும் கேள்விகளை வைத்து ஓரளவுக்கு அனுமானிக்கலாம்.

நான் வசிக்கும் ஒன்ராறியோ மாகாணத்தின் அடையாள மலர் ரில்லியம். அதைப் பறிக்கக் கூடாது என்பது சட்டம். எப்படித் தெரியும்? செல்பேசியில் வந்த செய்திதான்.

தன் நிழலைக் கண்டு பயந்தோடும் விநோதமான பிராணி கனடாவில் உண்டு. அதன் பெயர் நிலப்பன்றி. இதுவும் செல்பேசித் தகவல்தான். ஆகவே, கையிலே கதைப் புத்தகத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு அலைந்த காலம் எப்பவோ மறைந்துவிட்டது!''

- இன்னும் கதைக்கலாம்...

dot3(1).jpg''சிறுகதைகளுக்கான தேவை இன்னமும் மிச்சம் இருக்கிறதா?''

dot3(1).jpg''ஓரினச்சேர்க்கை சார்ந்த உலக இலக்கியங்கள் இருக்கிறதா?''

dot3(1).jpg''சினிமாவில் எழுத் தாளர்கள் மீது நாயகிகள் மையல்கொள்வது போல காட்சிகள் வருகின்றன. நிஜத்தில் அதுபோல உங்களுக்கு ஏதேனும் நடந்திருக்கிறதா?''

அடுத்த வாரம்..

 

http://www.vikatan.c...agazine_related.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1,60,000 வருடங்களுக்கு முந்தைய ஆதித் தாய்!”
விகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்
வாசகர் கேள்விகள்
 
 

கு.ஜெயசீலன், சுங்குவார்சத்திரம்.

''இன்னும் 100 ஆண்டுகளில் இன்று இருக்கும் 1,000 மொழிகள் வரை அழிந்துவிடும் என்று சொல்லப்படுகிறதே... தமிழின் எதிர்காலம் என்ன?''

''1,000 வருடங்களாக மொழி அழிவதும், புது மொழி உண்டாவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில வருடங்கள் முன்பு அந்தமான் தீவில் வயதான பெண்மணி ஒருவர் இறந்துபோனார். அவர் பேசிய 'போ’ மொழியும் அவருடன் அழிந்துபோனது. அந்த மொழி தெரிந்த கடைசி ஆள் அவர். '65,000 வருடக் கலாசாரம் துண்டுபட்டது’ என்று பத்திரிகைகள் எழுதின. 100 வருடங்கள் முன்பு ஹீப்ரு மொழி, அழிவின் வாசலில் நின்றது. இன்று 9 மில்லியன் மக்கள் அந்த மொழியைப் பேசுகிறார்கள். அவர்களுக்கு 'இஸ்ரேல்’ என்ற ஒரு நாடு கிடைத்ததுதான் காரணம். 50 வருடங்கள் முன்பு, ஹவாய் மொழி அழிவு நிலையில் இருந்தது. இன்று அதை மீட்டெடுத்துவிட்டார்கள். நவீனத் துருக்கிய மொழியின் வயது 80. இந்த மொழியில்தான் ஓர்ஹான் பாமுக் நாவல் எழுதி நோபல் பரிசு பெற்றார்.

தமிழுக்கு அழிவு வெளியே இருந்து வரப்போவது இல்லை. தமிழர்களால்தான் வரும். போலந்தில் பிறந்த ஒருவர் போலந்து மொழியில் படிப்பார். ரஷ்யாவில் பிறந்த ஒருவர் ரஷ்ய மொழியில் படிப்பார். டென்மார்க்கில் பிறந்த ஒருவர் டேனிஷ் மொழியில் படிப்பார். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் தமிழ் படிக்காமலேயே மேல்படிப்பு படித்து வேலை தேடிக்கொள்ளலாம். இந்த நிலைமை தமிழ்நாட்டில் இருந்தாலும், புலம்பெயர் சூழல் ஆரோக்கியமானதாக இருக்கிறது.

p30c.jpg'அறிவகம்’ என்ற அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் பாடத் திட்டத்தின் கீழ், 3,000 புலம்பெயர் தமிழ்ச் சிறார்கள் ஆண்டுதோறும் தேர்வு எழுதுகிறார்கள். இதனால் ஒரு லாபமும் அவர்களுக்குக் கிடையாது. ஆர்வம்தான் காரணம்.

வைதேகி ஹெர்பர்ட் எனும் அமெரிக்கப் பெண்மணி, 12 சங்க நூல்களை ஆங்கிலத்தில் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். 2,000 வருடங்களாக ஒருவரும் செய்திராத சாதனை இது. அமெரிக்கத் தமிழர் குமார் சிவலிங்கம், குழந்தைப் பாடல்களையும் குழந்தைக் கதைகளையும் அச்சு/ஒலி புத்தகங்களாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகான படங்களுடன் உலகத் தரத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழின் எதிர்காலம் ஒருபக்கம் பிரகாசமாகவும், இன்னொரு பக்கம் இருள் நிறைந்ததாகவும் உள்ளது. எந்தத் திசையைத் தமிழர்கள் தேர்வு செய்வார்கள் என்பது ஊகம்தான்!''

மகிமைராஜன், துவாக்குடி.

''நேஷனல் ஜியோகிராபி நிறுவனத்தில் உங்கள் மூதாதையர் பற்றிய மரபுத் தொடர்ச்சியைத் தேடினீர்களே... அதன் சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!''

''சில வருடங்களுக்கு முன்னர் National Geographic ïìˆFò The Genographic project-ல் பங்குபெற விரும்பி, நான் என்னுடைய உமிழ்நீரை இரண்டு குப்பிகளில் அடைத்து, 99 டொலர் காசோலையுடன் அவர்களுக்கு அனுப்பிவைத்தேன்.  நான் கேட்டது தாய் வழித் தேடல். உங்கள் தாயில் ஆரம்பித்து, உங்கள் தாயின் தாய், அவரின் தாய் அப்படி ஊற்றுக்கண்ணைத் தேடிக்கொண்டே போய் முதல் தாயாரைக் கண்டுபிடிப்பார்கள். 1,60,000 ஆண்டுகளுக்கு முன்னர், கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஓர் ஆதித் தாயில் இருந்து இன்று உலகில் வாழும் அத்தனை மனிதர்களும் தோன்றினர். மற்ற தாய்களுக்கு என்ன நடந்தது? இவர்களில் இருந்து தொடங்கிய சந்ததிச் சங்கிலி எங்கேயோ அறுபட்டுவிட, ஒரேயரு தாய் மட்டும் எஞ்சினார். விஞ்ஞானிகள் எப்படி அந்தத் தாயைக் கண்டுபிடித்தார்கள்?

நாலாம் வகுப்பில் சோதனை எழுதிய ஒரு மாணவன் 'சைபீரியா’ என்று எழுதுவதற்குப் பதிலாக 'கைபீரியா’ என்று எழுதிவிட்டான். அவனைப் பார்த்து காப்பியடித்த இன்னொரு மாணவனும் 'கைபீரியா’ என்றே எழுதினான். அடுத்த மாணவனும். அதற்கு அடுத்தவனும். இப்படி எழுதியதை வைத்து ஆசிரியர் முதல் பிழையை யார் செய்தது என்பதைக் கண்டுபிடித்தார். அதே போல ஆதிமனித மரபணுவில் ஏற்பட்ட ஒரு பிறழ்வு, வழிவழியாகத் தொடர்ந்தது. அதை வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது எல்லா வழிகளும் 1,60,000 வருடங்களுக்கு முந்தைய ஒரு தாயில் போய் முடிந்தது.

இந்த ஆதித் தாயில் இருந்து பல குழுக்கள் பிரிந்து ஆப்பிரிக்காவின் சகல பகுதிகளுக்கும் பரவின. 60,000 வருடங்களுக்கு முன்னர் இரண்டு குழுக்கள் உண்டாகி,  ஒன்று  வடக்குப் பக்கமாக நகர்ந்து ஐரோப்பாவுக்கும், அடுத்த குழு கடல் கடந்து அரேபியாவைத் தாண்டி ஆஃப்கானிஸ்தான், இந்தியா, பர்மா, மலேயா, ஆஸ்திரேலியா ஆகிய தூர இடங்களுக்கும் பரவியது. என்னுடைய மூதாதையர், இந்தக் குழு வைச் சார்ந்தவர்கள்தான். ஆராய்ச்சி முடிவு எனக்குக் கிடைத்த அன்று 1,60,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் என் சந்ததியைத் தொடங்கி வைத்த ஆதித் தாயை மானசீகமாக நினைத்து வணங்கிக்கொண்டேன்!''

p30.jpgசி.கணேசமூர்த்தி, திருப்பூந்துருத்தி.

''பணி நிமித்தமாக உலகம் முழுக்கச் சுற்றி வந்தவர் நீங்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில் சொல்லுங்கள். எந்த நாடு வாழச் சிறந்தது... ஏன்?''

''உலகத்தில் உள்ள 196 நாடுகளில், நான் எந்த நாட்டிலும் பிறந்திருக்கலாம். இலங்கையில்  பிறந்தது தற்செயல். இதை மாற்ற முடியாது. ஆனால், 196 நாடுகளில் நான் கனடாவைத் தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் சொல்கிறேன். 'பிறப்பினால் எல்லோரும் சமம்’ என்பது கனடாவின் அடிப்படைக் கொள்கை. அப்படியானால் ஏன் படித்தவர்களும் படிக்காதவர்களும் இருக்கிறார்கள்? ஏன் ஏழைகளும் பணக்காரர்களும் இருக்கிறார்கள்? காரணம், இங்கு வாய்ப்புகள் எல்லோருக்கும் சமம். வறிய ஆதிக் குடியில் பிறந்த ஒருவர் கனடியப் பிரதமர் ஆகலாம். ஐந்து வயதில் அகதியாக ஈழத்தில் இருந்து கனடா வந்த ராதிகா சிற்சபைஈசன் (32), இன்று கனடிய நாடாளுமன்ற உறுப்பினர். இவரே கனடா நாடாளுமன்றம் சென்ற முதல் தமிழர்.

கனடாவில் மருத்துவ வசதியும் அனைவருக்கும் சமம்; அத்துடன் இலவசம். மாற்றுச் சிறுநீரகத்துக்குக் காத்திருக்கும் வரிசையில் தினக்கூலிக்காரர் முன்னாலும் மந்திரி பின்னாலும் நிற்பது சர்வசாதாரணம். ஒரே பிரச்னை அதிபயங்கரக் குளிர். இதை நான் எழுதும்போது வெளியே பனி கொட்டுகிறது. இந்த வருடம் நயாகரா அருவி உறைநிலைக்குச் சென்றுவிட்டது. முன் எப்போதும் இல்லாதமாதிரி மரங்களில் ஐஸ்கட்டிகள் குலக்குக் குலக்காகத் தொங்கியது கண்கொள்ளாக் காட்சி!''

உமா, சென்னை.

 ''வழக்கமான கேள்விதான். இருந்தாலும் சொல்லுங்கள் எழுதத் தொடங்கும் கத்துக்குட்டிகளுக்கு நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் என்ன?''

''20 வயது வரை கையில் கிடைத்ததை எல்லாம் படியுங்கள் முக்கியமாக ஆயிரக்கணக்கான தகவல்களைத் தரும் இணையதளங்களை. 20 முதல் 40 வரை தேர்ந்தெடுத்த இலக்கியங்களை, அறிவுநூல்களைப் படியுங்கள். 40-க்குப் பிறகு படிப்பதைக் குறைத்து சுயமாகச் சிந்திப்பதற்கு அவகாசம் கொடுங்கள். வாழ்நாள் முழுக்கப் பிறர் எழுது வதையே படித்தால், உங்கள் சிந்திக்கும் திறன் மழுங்கி விடும்!''

ஹோ சி மின், ஆப்பிரிக்கா.

''உங்களைத் தூங்கவிடாமல் செய்த மூன்று படைப்புக்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

''நான் படித்த இலக்கியங்களில், பல சிறந்த இலக்கியங்கள் உள்ளன. ஆனால், நீங்கள் கேட்டது, என்னைத் தூங்கவிடாமல் மனதை உளையவைத்தவை.

1. சினுவா ஆச்சிபி என்கிற நைஜீரிய எழுத்தாளர் எழுதிய 'Things Fall Apart’. தமிழில் என்.கே.மகாலிங்கம் மொழிபெயர்ப்பில் 'சிதைவுகள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. இரண்டையுமே படித்தேன். ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததாலோ என்னவோ, இந்த நூல் என்னை அமைதியிழக்கச் செய்தது. சிறந்த இலக்கியம் ஒன்றை இவ்வளவு எளிமையாகப் படைக்கலாம் என்று இது கற்றுத்தந்தது. ஆங்கில மொழியமைப்பில் புகை படிந்ததுபோல ஒட்டியிருக்கும் ஆப்பிரிக்கக் கலாசாரம் வாசிப்பு அனுபவத்தைப் புதுமையாக்கியது.

2. ரஷ்ய எழுத்தாளர் ஃபிடோர் டோஸ்ரொவ்ஸ்கியின் 'The House of the Dead’. இது 'மரண வீட்டின் குறிப்புகள்’ என தமிழில் வி.எஸ்.வெங்கடேசன் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் நாடகமாகவும் இதை எழுதியிருக்கிறார். நாலு வருடங்கள்  சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த ஆசிரியர் தன் அனுபவங்களைக் கற்பனையுடன்  கலந்து எழுதிய நாவல். ஒவ்வொரு வரியும் வலியை எழுப்பும். நீங்களே சிறையில் இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கும்.

3. ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’. புது உலகத்தை இந்த நாவல் தரிசிக்கவைத்தது. படித்து முடிந்த பின்னர் மூன்று நாட்கள் தூங்காமல் அலையவைத்தது!''

p30b.jpgஜெ.வி.பிரவீன்குமார், தேவகோட்டை.

''இணைய எழுத்தாளர்களின் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?''

''எதிர்காலத்தில் இணைய எழுத்தாளர்களிடம் இருந்து, நல்ல இலக்கியங்கள் பிறக்கும். ஏற்கெனவே சில எழுத்தாளர்கள் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இணையத்தில்  உடனுக்குடன் எதிர்வினைகள் கிடைப்பதால், தாமதம் இன்றி எழுத்தைத் திருத்தி மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. பத்திரிகையில் எழுதுபவருடைய ஐந்து வருட வளர்ச்சியை, இணையத்தில் ஒரு வருடத்தில் அடைந்துவிடலாம். ஆனால், பிரச்னையே தரமற்றவையும் இணையத்தில் உலவுகின்றன என்ற முறைப்பாடுதான். அதனால் ஒரு பாதகமும் கிடையாது. 100 படைப்புகளில் 10 நிச்சயம் தேறும். வலியது வாழும். நான் தொடர்ந்து இணையதள எழுத்துகளைப் படிக்கிறேன். அவற்றின் எதிர்காலம் பிரகாசமானதாகவே இருக்கிறது!''    

எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை.

''புலம்பெயர்ந்து வாழ விதிக்கப்பட்ட வாழ்வின் பிரதிபலிப்பாக, 'என் பேரனுக்காய் எவன் வைப்பான் பழத் தோட்டம்..?’ என்று வினா எழுப்புகிறது வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதை. புலம்பெயர்ந்த மனிதர்களின் வாழ்வுக்கான பரிதவிப்பை நெஞ்சில் அறைந்து சொல்பவை உங்கள் கதைகள்... நீங்கள் வைக்கும் பழத் தோட்டமாக எதைச் சொல்வீர்கள்?''

''ஒரு காலத்தில் தான்சேனியா நாட்டு அதிபர் ஜூலியஸ் நைரெரே சொன்னார். 'இந்தப் பூமியை நாங்கள் மூதாதையரிடம் இருந்து பெறவில்லை. எதிர்வரும் தலைமுறையினரிடம் இருந்து கடன் வாங்கியிருக்கிறோம். எங்கள் கடமை, பூமியையும், கலையையும், செல்வங்களையும், இலக்கியங்களையும் எதிர்வரும் சந்ததியினருக்குக் கடத்துவது. ஏனென்றால், இவை அவர்களுக்குச் சொந்தமானவை. அவற்றைப் பாதுகாத்துக் கொடுப்பது எங்கள் கடமை. மோனாலிசா ஓவியத்தைப் பார்க்கும்போது, லியனார்டோ டாவின்சியை நினைக்கிறோம். நல்ல இசையைக் கேட்கும்போது, அதை இயற்றியவர் நினைவுக்கு வருகிறார். எங்கள் நினைவுகளை இலக்கியமாக்கி, எங்கள் சந்ததியினருக்கு விட்டுச்செல்வது முக்கியம்.

வரலாற்றைப் படிப்பது என்பது கடினமான செயல். வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு இலகுவான வழி, நவீனங்களைப் படிப்பது. அமெரிக்க உள்நாட்டுப் போரைப் பற்றி தெரிந்துகொள்ள, Gone With the Wind படிக்கலாம். நைஜீரியாவின் பயஃப்ரா போர் ஏற்படுத்திய அழிவு பற்றி அறிய, சிமமண்டா எழுதிய Half of a Yellow Sun படித்தால் போதும். இலங்கையில் அவலமான போர் முடிவுக்கு வந்திருக்கிறது. எழுத்தாளர்கள் அதைப் பதிவு செய்யவேண்டியது கடமை. அவைதான் நாம் எங்கள் சந்ததிக்கு விட்டுச்செல்லும் சொத்து. எழுத்தாளரைத்  தாண்டி எழுத்து வாழும். நான் ஒரு பழமரம் வைப்பேன். மற்றவர்களும் வைக்கவேண்டும். ஒரு பழமரத் தோட்டத்தையே எம் சந்ததிக்கு விடுவோம்!''  

- அடுத்த வாரம்...

dot2.jpg''ஓர் அதீதக் கற்பனைதான்... ஆனாலும் பதில் சொல்லுங்களேன்! தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரை 'பாரத ரத்னா’ விருதுக்கு சிபாரிசு செய்யலாம் என்றால், உங்கள் பரிந்துரை யார்?''

dot2.jpg''உங்கள் கதைகளில் உணவு வகைகளை சுவையுற வர்ணிப்பீர்கள். தமிழகத்தில் இட்லி, தோசை போல கனடாவில் புழக்கத்தில் இருக்கும் உணவு என்ன? கனடா உணவுக் கலாசாரத்தைப் பற்றியும் சொல்லுங்களேன்..!''

dot2.jpg ''உலக நியதிகளைக் கவனத்தில் கொண்டு சொல்லுங்கள்... தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுவது அதீத மரியாதையா... அவமானப் புறக்கணிப்புகளா?''

- இன்னும் கதைக்கலாம்...

அ.முத்துலிங்கத்திடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:  'விகடன் மேடை - அ.முத்துலிங்கம்’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை - 600002. இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.

p30a.jpgன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.