Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஒரு பெண்! சிந்திக்க சில நிமிடங்கள்...ப்ரியா தம்பி

Featured Replies

நான்... நான் ஒரு பெண்; நான் ஒரு மகள்; நான் ஒரு தாய்; நான் ஒரு தங்கை; நான் ஒரு மனைவி; நண்பர்களுக்கு நான் ஒரு தோழி; வேலை செய்யும் இடத்தில் நான் மேலதிகாரி. 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்று என் வாழ்க்கை இல்லை. பொருளாதாரத்தில் நான் தனித்து நிற்கிறேன். விரும்பிய உடைகளை அணிகிறேன். ஆனால், எங்கேனும் ஒப்பனைகள் இன்றி நான், நானாக இருக்க முடிகிறதா?

நண்பர்களே... சில நிமிடங்கள் நான் பேசுவதைக் கேட்கிறீர்களா? சில நிமிடங்கள் போதும்... கொஞ்ச நேரத்துக்கு உங்கள் காதுகளையும் மனதையும் திறந்து அமைதியாகக் கேளுங்கள் போதும்!

'என்னது பொம்பளைப் பிள்ளையா?’ என்ற அலறல்கள் வீடுகளில் இன்று கேட்பது இல்லை. 'ஒரே ஒரு குழந்தை, அதுவும் பெண் குழந்தைதான் வேணும்’ என்று ஆசைப்பட்டு பலர் பெற்றுக் கொள்கிறார்கள். எப்போதும் பெண்ணின் அன்பில் திளைத்துக்கொண்டே இருக்க விரும்பும் ஆண் மனதுக்கு... மகள் இன்னுமொரு தாய். ஒரு தந்தைக்கு ஒரு மகளிடம் ஆயிரம் எதிர்பார்ப்புகள் உண்டு. ஒரு மகளாக நாங்கள் என்ன எதிர்பார்ப்போம் என உங்களுக்குத் தெரியுமா?

எங்களுக்குத் தேவை உங்கள் அதிகாரம் அல்ல... அன்பு; அரவணைப்பு; தோழமை. தந்தையைத் தோழனாக அமையப் பெற்ற எந்தப் பெண்ணும் தன்னம்பிக்கையோடு முதல் அடியை இந்தச் சமூகத்துக்குள் எடுத்துவைக்க முடியும். அப்பாவின் அதிகாரத்துக்குள், அவர்களின் மிரட்டலில் வளர்க்கப்படும் பெண்கள்... பார்க்கும் ஆண்களிடம் தந்தைமையைத் தேடி ஏமாந்துபோகும் உளவியலை அறிவீர்களா? ஒரு தலைகோதலில், 'நான் இருக்கேன்’ என்று ஆண் சொல்லும் வார்த்தைகளில், எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணாகதி அடையும் சில பெண்களைப் பார்த்து ஆச்சரியம் வரலாம். ஆனால், இதன் பின்னணியில் வீட்டில் அப்பாவிடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன ஒரு மகளின் மனது இருக்கிறது.

p84d.jpg

ன்றைக்குக் காதலைச் சொல்வதற்கு முன்புபோல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியதே இல்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள், எல்லாவற்றையும் சாத்தியம் ஆக்கியிருக்கிறது. ஆனாலும் இன்றும் பெண்கள் தங்கள் காதலை உணர்வதுபோல் சொல்லிவிட முடிவது இல்லை. பெண்கள் என்றால் மாநகர மால்களில் நவீன உடைகளில் நடமாடுகிற பெண்கள் மட்டும் அல்ல... கிராமங்களில் கல்யாணத்துக்கு முன்பு ஒரு டிகிரிக்காகக் கல்லூரி போகும் பெண்களையும் நினைவில் கொள்ளவும்.

காதலை மறுக்கவாவது பெண்களுக்கு உரிமை இருக்கிறதா? சமீபத்தில் மட்டும் எத்தனை ஆசிட் வீச்சுக்களைப் பார்த்தோம். தங்களை வேண்டாம் என்று நிராகரிக்க, தனக்குப் பிடித்த ஆண்களைக் காதலிக்கும் உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்பதை ஏன் மறந்துபோனோம்? அலுவலகத்தில் உடன் வேலைசெய்யும் பெண் காதலை மறுத்தால், திரும்பத் திரும்ப வற்புறுத்துவதும், அந்தப் பெண்ணைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவதும் என்ன மாதிரியான மனநிலை நண்பர்களே?

ஆம்! காதலில்கூட இங்கு பாரபட்சம்தான். காதலனுக்குத் தன்னைப் பிடிக்கவைக்க என்ன செய்வது, காதலனின் வீட்டுக்குப் பிடிக்க எப்படி நடிப்பது என்ற பாசாங்குகளில்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது பெரும்பாலோரின் காதல்.

அவளது கனவுகளை, ஏமாற்றங்களை, பகிரப்படாத துயரங்களைப் பேச அவளை அனுமதித்தது உண்டா? கண்களில் சந்தோஷம் மினுங்க உங்கள் பால்யம் பற்றி நீங்கள் பகிரும்போது, அந்தக் கண்களில் முத்தமிட அவள் விரும்புவாள் என்பது தெரியுமா? அணைத்தலோ, முத்தமிடுதலோ ஆண் தரும்போது பெற்றுக்கொள்ள வேண்டியவளாகத்தானே பெண் இருக்கிறாள். ஒரு பெண் தானாக வந்து முத்தமிட்டால், உடனே அவளது இயல்பை, கேரக்டரை எல்லாம் சந்தேகப்படுவது ஏன்? உங்களுக்கு வந்தால் அன்பு, அதுவே எங்களுக்கு வந்தால் தீண்டத்தகாத பொருளா?

திகாலையில் நடக்கும்போது இருளடைந்த வீடுகளில் சமையல் அறையில் மட்டும் விளக்கு எரிவதைப் பார்க்கலாம். அந்த ஜன்னலை எட்டிப்பார்த்தால், அதற்குள் நிற்கிற பெண்ணுக்கு 20 முதல் 70 வயதுக்குள் இருக்கலாம். அவள் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண்ணாக இருக்கலாம்; புதிதாகத் திருமணம் ஆன பெண்ணாக இருக்கலாம்; இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கலாம். மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவளாக இருக்கலாம்; வங்கி ஒன்றின் உயர் அதிகாரியாக இருக்கலாம்; பணி ஓய்வுபெற்ற ஒரு டீச்சராக இருக்கக்கூடும்; துணிக்கடை ஒன்றில் 12 மணி நேரம் நின்று மரத்துப்போன கால்கள் அவளுக்கு இன்னமும் வலிக்கக்கூடும்; இங்கே வேலைகளை முடித்துவிட்டு வேறு வீடுகளுக்கு அவள் வேலைக்குச் செல்பவளாகவும் இருக்கலாம்; கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இரவுப் பணியில் களைப்படைந்து தூங்கச் சொல்லிக் கெஞ்சும் கண்களையும் அந்த முகத்தில் நீங்கள் பார்க்கக்கூடும்.

p84c(1).jpg

அப்படியே கொஞ்சம் அந்த வீட்டின் படுக்கை அறையில் எட்டிப் பாருங்கள். அங்கே ஒரு கணவன் உறங்கிக்கொண்டு இருக்கிறான். அந்தப் பெண்ணின் காதல் கணவனாகக்கூட அவன் இருக்கக்கூடும். திருமணத்துக்குப் பிறகு சொர்க்கத்தைக் காட்டுவேன் என்று வாக்குக் கொடுத்தவனாகக்கூட இருக்கலாம். வீட்டின் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகும், அவர்களது வேலைகளைப் பகிர்ந்துகொள்வதில் நாம் ஓர் அடியாவது முன்னே எடுத்துவைத்திருக்கிறோமா? காதல் என்பது எல்லாவற்றையும் பகிர்வதுதானே?

பெண்கள் திருமணமானால், குடும்பத்தைத் தவிர வேறு எதையுமே சிந்திக்க முடியாது. திருமணமான ஓர் ஆணின் வாழ்க்கையும், பெண்ணின் வாழ்க்கையும் இங்கு ஒரேமாதிரிதான் இருக்கிறதா என ஒப்பிட்டுப் பாருங்கள். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தால் லேப்டாப், மொபைல் போன் கதி என்று கிடக்கும் கணவர்கள்... அதே நேரத்தில் சமையல், வீடு, குழந்தைகள் எனப் போராடிக்கொண்டிருப்பதைக் கவனிக்க மறுக்கும்போது பெண்களுக்குக் கோபம் வருவது இயல்புதானே!

திருமணத்துக்குப் பிறகு எல்லா சுதந்திரங்களும் தொலைந்துபோனதாக ஆண்கள்தான் சதாசர்வகாலமும் புலம்புகிறார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் அவர்களால் தொடர்ந்து இயங்க முடிகிறது; கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா செல்ல முடிகிறது; வெளியாகிற எல்லாத் திரைப்படங்களையும் பார்க்க முடிகிறது... இப்படியான எல்லா ஆசைகளும் பெண்களுக்கும் இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா?

p84b.jpg

ஆறு நாட்கள் வேலைக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஓய்வு எடுக்கிற பாக்கியம் எத்தனை பெண்களுக்கு இங்கே கிடைக்கிறது? ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆடோ, கோழியோ, கொக்கோ வாங்கிக் கொடுப்பதோடு கடமை முடிந்த பாவனையில் டி.வி-யில் மூழ்கியிருக்கும் கணவனுக்கு, தன் மனைவிக்கும் அப்படியானஇளைப்பாறுதல் தேவைப்படுகிறது என்று புரியாமல்போவது ஏன்? எங்கள் பாட்டிகளின் ஞாயிற்றுக்கிழமைகள் விறகு அடுப்பில் போனதென்றால், எங்களின் கிழமைகள் கேஸ் ஸ்டவ் முன் கழிகின்றன. அடுப்பின் வெக்கையில் மட்டும்தானே வித்தியாசம்? இப்படி அதிகப்படியான வேலைகளில்கூட நாங்கள் மனம் சோர்ந்துவிடுவது இல்லை. அந்த வேலையை நீங்கள் அங்கீகரிக்க மறுக்கும்போதுதான், மனம் கசந்துபோகிறது.

அது எப்படி கணவன்களே... டி.வி-யில் மொக்கைப் படங்களைக் கண் இமைக்காமல் பார்க்கும் உங்களால், மனைவி பேச ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்தில் தூங்கிவிட முடிகிறது? அது எவ்வளவு பெரிய புறக்கணிப்பும் அவமானப்படுத்துதலும் என்று ஏன் புரியவில்லை?

ரு குடும்பத்தில் தான் தூங்கும் நேரத்தையாவது பெண்ணால் தேர்வுசெய்ய முடிகிறதா? கணவன் தூங்கும் நேரத்தில் மனைவியும் தூங்கியாக வேண்டும். ஒருவேளை அவள் தூங்கத் தாமதமானால், பாத்திரம் கழுவுதல், மறுநாளைக்கு அயர்ன் செய்தல்... என ஏதேனும் காரணங்கள் இருக்கக்கூடும். மாறாகத் தனக்காக அவள் வாசிப்பதையோ, தனக்குப் பிடித்த ஒரு படத்தைப் பார்ப்பதையோ, தனக்காக அவள் நடனமாடுவதையோகூட நம் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

படுக்கையறையில்கூட ஒரு பெண் தன் விருப்பங்களைச் சொல்லவோ, மறுக்கவோ அவளுக்கு வாய்ப்பு இருக்கிறதா? அவளுக்கு இதெல்லாம்தான் பிடிக்கும்... என நீங்களாக முடிவுசெய்து ஏதேதோ செய்கிறீர்கள். அவளுக்கு அது நிஜமாகவே பிடிக்கிறதா என்பதையேனும் ஒருநாள் கேட்டுப் பாருங்களேன்.

ஒரு பெண், வயதுக்கு வருவதில் இருந்து இறந்துபோவது வரை அவளது உடல் எத்தனையோ மாற்றங்களைச் சந்திக்கிறது. அவளுக்கு என்றே இயற்கை தந்த ஏராளமான வலிகளும் அவஸ்தைகளும் உண்டு. அவள் அருகே உட்கார்ந்து அவள் உடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றி, அப்போதைய அவள் வேதனை பற்றிப் பேச வேண்டும் என்று ஒவ்வொரு மனைவியும் எதிர்பார்க்கிறாள் தெரியுமா? ஆப்பிளின் புதிய போன் சந்தைக்கு வருவதற்கு முன்பே அதன் பயன்களை இணையத்தில் தேடி அப்டேட் செய்பவர்களால், மெனோபாஸ் நேரத்தில் பெண்கள் சந்திக்கும் மனக்குழப்பங்கள் பற்றிய கட்டுரையைப் படித்தால், மனைவியின் சிடுசிடுப்புக்குக் காரணம் அறிய முடியுமே. தேவை, நேரம் அல்ல... கொஞ்சம் அக்கறை!

ம் சமூகத்தில் ஒரு பெண் தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் எனில், அவள் திருமணம் ஆகாதவளாக இருக்க வேண்டும். இல்லை எனில், திருமண உறவை முறித்துக்கொண்டு வந்தவளாக இருக்க வேண்டும். குடும்ப அமைப்பில் இருந்துகொண்டு தனக்குப் பிடித்த துறையிலும் முழுமையாக ஈடுபடுவது என்பது பெரும்பாலும் இங்கு பெண்களுக்குச் சாத்தியம் இல்லாத ஒன்றாகிப் போனது.

அலுவலகத்தில் தாமதமாக ஒரு பெண் வந்தால், ஒரு நாள் விடுமுறை எடுத்தால், ஒரு மாலையில் அவள் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று கோரினால், 'இந்தப் பொம்பளைங்களை வேலைக்கு வெச்சாலே இப்படித்தான். எப்பப் பாரு வீடு, பிள்ளைங்கனு புலம்பிக்கிட்டு...’ என்று எவ்வளவு எளிதாகச் சொல்லிவிடுகிறோம். 'ஸ்கூல் மீட்டிங்குக்கு எனக்கு நேரம் இல்லை. நீயே போய்க்கோ’ என்று காலையில் மனைவியிடம் உத்தரவிடும் போது, இதேபோன்ற ஒரு சலிப்பான வசவை அவள் வேறு ஏதோ ஒரு மேலதிகாரியிடம் வாங்க வேண்டியிருக்கும் என்பது ஏன் நினைவுக்கு வருவது இல்லை?

p84a.jpgஒரு பெண் மேலதிகாரியாக இருந்துவிட்டால், தனித்த ஆளுமையோடு செயல்பட்டால், கார் வாங்கிவிட்டால், வேகமாக வண்டி ஓட்டிவிட்டால், பதவி உயர்வு கிடைத்தால்... என ஒரு பெண் தன் வாழ்க்கையில் ஒரு படி முன்னால்வைக்கும்போது அலுவலகங்களில் ஏன் அவளைப் பற்றி அத்தனை ஒப்பாரிகள்? ஆணுக்கு இங்கே சாதாரணமாகக் கிடைக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் பெண் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது தெரியுமா?

சில நாட்களுக்கு முன்பு அலுவலக வளாகத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு பெண் கொலைசெய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த பிறகும் அந்த அலுவலகத்தில் எந்தப் பெண்ணும் வேலையைவிட்டுச் சென்றுவிடவில்லை. இங்கே ஆணுக்குப் படிப்பு, வேலை எல்லாம் இயல்பாகக் கிடைக்கும் விஷயங்கள். ஆனால், ஒவ்வொரு பெண்ணும் அதற்காகக்கூட இன்னமும் இங்கே போராடியாக வேண்டியிருக்கிறது. ஓர் அடி பின்னால் எடுத்துவைத்தால்கூட மீண்டும் முன்னால் வருவதற்கு ஆண்டுகள் ஆகும் என்பதை அவள் அறிந்தே இருக்கிறாள்.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் முன் எப்போதையும்விட உச்சத்தில் இருக்கும் நேரம் இது. வேறு எந்தக் குற்றத்திலும் பாதிக்கப்பட்டவர் மீதே பழி சுமத்துவது நடக்குமா எனத் தெரியவில்லை. பாலியல் குற்றத்துக்குத் தீர்வு சொல்லும் அனைவருமே பெண்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பது என்றே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் அலுவலகத்தில் வண்டி கேளுங்கள் என்று சொல்லிவிடலாம். வாணியம்பாடியில், நாகர்கோவிலில், விழுப்புரத்தில், தேனியில் ஒரு துணிக் கடையில் கால் கடுக்க வேலை செய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும் பெண்களுக்கு? தவிரவும்... வேலை செய்கிற இடங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானது என்பது போலவும், ஆபத்துகள் வெளியே இருந்து வருவதுபோலவுமே பேசுவதே எவ்வளவு முரணாக இருக்கிறது?

நாங்கள் உங்களைப் போலவே இந்த உலகுக்கு வந்தோம் நண்பர்களே. உங்களைப் போலவே இந்த உலகம் எங்களுக்கானதும்கூட என நம்பினோம். கடலும்-காற்றும், வானும்-சூரியனும், இரவும்-பகலும் அனைவருக்கும் பொதுவானவை என்றே நினைத்தோம். ஆனால், அப்படி இல்லை என்று மறுக்கிறீர்கள். 'ராத்திரியில் உனக்கென்ன வேலை, தனியா நீ ஏன் அங்கே போகணும், உன்னை யாரு பஸ்ல போகச் சொன்னது, நீ எதுக்கு அந்த ஊருக்குப் போகணும்?’ என எல்லாக் கேள்விகளையும் எங்களிடமே கேட்கிறீர்கள்.

எங்கும் எப்போதும் ஓர் ஆணைச் சார்ந்திருக்கவே நிர்பந்திக்கிறீர்கள். கூடவே, 'எதையும் தனியாச் செய்யத் தெரியாது. எல்லாத்துக்கும் ஓர் ஆள் வேணும்’ என சலித்துக்கொள்கிறீர்கள். அப்பா, அண்ணன், கணவன் எல்லோரிடமும் அந்தச் சலிப்பு தெரிகிறது. முடியாத கட்டங்களில், 'எதுக்கு நீ வெளியே போகணும்?’ என மீண்டும் வீட்டுக்குள் உட்காரச் சொல்கிறீர்கள். வேலை நிமித்தமாகத் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள், தனியாக வாழும் பெண்கள் என்ன செய்வது நண்பர்களே?

நாங்கள் உங்களைச் சார்ந்திருக்கும் நிர்பந்தங்களை உருவாக்கிவிட்டு, நாங்கள் சுமை என்று சொல்வது நியாயமே இல்லைதானே?

p84.jpgசுமைகளைக் கொஞ்சம் இறக்கிவையுங்கள். முதுகில் ஏறி உட்கார்ந்து இருப்பது எங்களுக்கும் சிரமமாகத்தான் இருக்கிறது. நீங்களும் கொஞ்சம் ஓய்வு எடுங்கள். எங்களின் பிரச்னைகளை நாங்களே எதிர்கொள்கிறோம். அண்ணனாக, அப்பாவாக, காதலனாக, கணவனாக... உங்களின் பயம் எங்களுக்குப் புரிகிறது.

பெண்களை வன்புணர்வு செய்பவனும் ஏதோ ஒரு பெண்ணுக்கு மகன், கணவன், காதலன், அண்ணன்தான் இல்லையா? தன் வீட்டுப் பெண்களைப் பத்திரமாகப் பூட்டிவைத்துவிட்டு, பிற பெண்களை மோசமாகக் கிண்டல் செய்யும், அவமதிக்கும் எல்லோரும்தான் இதில் குற்றவாளிகள் இல்லையா? அதற்கு இன்னும் எங்களால் பழி ஏற்க முடியாது.

பொழுதுகள் எங்களுக்குச் சொந்தமும் இல்லை; நேரங்களை நாங்கள் ஆள்வதும் இல்லை. 'மாலைப் பொழுதில் காலாற நடக்க விரும்புகிறேன். அது எனக்குப் புத்துணர்ச்சியைத் தரும்’ என்பது எங்கள் தேவை. ஆனால், இப்படிக் கேட்டால் அது மறுக்கப்படும் என்று அறிந்தும் தயக்கத்துடன் கேட்பது பரிதவிப்பு. இந்த நூலிழை வித்தியாசம் எப்படிப்பட்ட இரும்புச் சங்கிலியாக பெண்களின் கால்களை நடக்க முடியாமல் சுற்றியிருக்கிறது என்பதை ஒரு விநாடி யோசித்துப் பாருங்கள்.

ருந்தும்கூட இன்றைக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள், கண்களில் நம்பிக்கை ஒளிர வீடுகளில் இருந்து தினம் தினம் கிளம்பிக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்களைப்போல் நாங்கள் மௌனமாகச் சிந்திப்பது இல்லை. பதிலாக, பேசும்போதுதான் சிந்திக்கிறோம். சிந்திப்பதற்காகத்தான் பேசுகிறோம். அதேபோல் ஒருபோதும் எங்கள் கண்ணீரைத் துடைக்க விதவிதமான விரல்களுடன் எங்கள் முன்னால் வராதீர்கள். எங்களிடமே விரல்கள் இருக்கின்றன. பேசவிடுங்கள் அது போதும்.

ம் சமூக அமைப்பில் பெண்கள் இரண்டாம் பட்சம்தான் என்ற தாழ்வுமனப்பான்மை பெண்களிடமும் இருப்பதுதான் வேதனை. இதை உணரும் சில பெண்கள், ஆண்களை ஆதிக்கம் செலுத்துவது என்ற பழிவாங்கும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இதுவும் ஆபத்தானதே. அடங்குவது அல்லது மீறுவது என்ற இரண்டுக்கும் இடையில் இணைந்து வாழ்வது என்ற இடத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதைப் பெரும்பான்மை பெண்கள் உணர்ந்தே இருக்கிறோம்.

நாங்கள் எங்கள் மகள்களுக்கு இந்த உலகை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுத்தருவோம். கூடவே... எங்கள் மகன்களுக்கு பெண்களை எப்படி நடத்துவது என்பதையும் நாங்களே சொல்லித்தருவோம். இந்தச் சமூகம் மாறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=92845

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்லதோர் இணைப்பு அபராஜிதன்.

 

உண்மையில் நுணுக்கமான அதே நேரம் எல்லோரையும் நின்று ஒரு கணமேனும் தம் நிலையைச்சிந்திக்கத்தூண்டும் கட்டுரை. இதனை இணைத்த அபராஜிதனுக்கு நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்


http://www.youtube.com/watch?v=QYYOQsVCrH0

Edited by முதல்வன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.