Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்துக் கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக்கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள்.

"உலகமயமாக்கல் என்றப் பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டின் படி நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. நம்புவதற்கு கடினமாக இருக்கின்றது அல்லவா...ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்து இருக்கும் நிறுவனங்களா எங்களை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா...!!! அங்கே தான் அந்த நிறுவனங்களின்...உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டின் வெற்றி அடங்கி இருக்கின்றது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்துக் கொண்டு உலாவும் அவைகளின் உண்மையான முகங்களை காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விடயம் அல்ல தான். ஆனால் உலகம் இன்று மிக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது அதற்கு காரணியாக இருக்கும் 'உலகமயமாக்கல்' என்னும் கோட்ப்பாட்டின் முகமூடியை கிழித்து அதன் உண்மையான முகத்தினை உலகிற்கு காட்ட வேண்டிய சூழலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகமாக இருக்கின்றது." இதுவே ஜான் பெர்கின்ஸ் அவர்களின் கருத்தாகும். இந்நிலையில் அப்படிப்பட்ட முகத்திரையை கிழிக்கும் ஒரு முயற்சியாகவே இந்தப் புத்தகம் வெளி வந்து இருக்கின்றது. இப்பொழுது இந்தப் புத்தகம் கூறும் கருத்தினை நாம் பார்த்து விடலாம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திரமான நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன. ஒரு சில பெரிய நாடுகளின் கீழேயே உலகின் பல்வேறு நாடுகள் அடிமைத் தளையில் கட்டுண்டு கிடந்தன. அந்த பெரிய நாடுகளும் தமக்கு கீழே இருந்த நாடுகளின் இயற்கை வளங்களையும் சரி மனித வளங்களையும் சரி கேட்பார் யாருமின்றி கொள்ளையிட்டுக் கொண்டு வந்தன.

அவ்வாறு கொள்ளையிட்டுக் கொண்டு வந்த நாடுகளின் இடையே நிலவிய பொறாமை போட்டி போன்ற காரணிகளினாலேயே உலகம் அதுவரை கண்டு இராத இரு மாபெரும் யுத்தங்கள் நிகழப் பெற்றன. அவற்றின் முடிவில் அதுவரை அடிமைத்தளையில் கட்டுண்டு கிடந்த நாடுகள் பலவும் சுதந்திரம் அடைய ஆரம்பித்தன. "எங்கள் நாடு இது...எங்களை நாங்களே ஆண்டுக் கொள்கின்றோம்...அந்நியர்களான நீங்கள் வெளி ஏறுங்கள்" என்ற முழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் கேட்க ஆரம்பிக்க, வேறு வழியில்லாது அந்த நாடுகளை விட்டு விருப்பமில்லாது வெளியேற ஆரம்பித்தன மற்ற நாடுகள்.

அவைகள் வெளியேறியதற்கு முக்கியமானதொரு காரணம், அவைகள் வெளியேற மறுத்தால் மீண்டும் ஒரு போர் வெடிக்கலாம்...அந்த போர் எவ்வித முடிவுகளைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது...ஏற்கனவே சப்பானில் நிகழ்ந்த அணுக்குண்டு தாக்குதலின் தாக்கத்தினை உலகம் கண்டு இருந்தது. மேலும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகம் இரண்டு அணிகளாக பிரிந்து இருந்தது. ஒரு அணி சோவியத் யூனியனின் கீழ் பொது உடைமைக் கொள்கைக்காக திரண்டு இருந்தது. மற்றொரு அணி அமெரிக்காவின் கீழ் முதலாளித்துவக் கொள்கைக்காகத் திரண்டு இருந்தது. இந்நிலையில் எந்த ஒரு நாட்டின் மேலும் மற்றொரு நாடு நேரடியாகத் தாக்குதல் நடத்தினால் மீண்டும் ஒரு மாபெரும் யுத்தம் வெடிக்கும் அபாயம் இருந்துக் கொண்டே இருந்தது. எனவே நேரடியான யுத்தம் என்பது அனைத்து நாடுகளினாலும் இயன்ற அளவுத் தவிர்க்கப்பட்டே வந்து கொண்டு இருந்தது.

ஆனால் இங்கே தான் நாம் ஒரு விடயத்தினை காண வேண்டி இருக்கின்றது. பல நாடுகள் விடுதலைப் பெற்று விட்டன. விடுதலை என்றால்... அந்த நாடுகளை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே ஆண்டுக் கொள்ளலாம்...அந்த நாடுகளின் வளங்களை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே பயன் படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு அந்த நாட்டின் மீதோ அல்லது அந்த வளங்களின் மீதோ யாதொரு உரிமையும் கிடையாது. இப்படி இருக்க அது வரை அரசுகளின் உதவியோடு அந்த நாட்டு வளங்களைச் சுரண்டி கொள்ளை இலாபம் ஈட்டிக் கொண்டு வந்த பெரு நிறுவனங்களுக்கு இத்தகைய ஒரு சூழல் இக்கட்டினைத் தரும் தானே.

அந்தந்த நாடுகளே அவைகளின் வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் இந்த நிறுவனங்கள் எந்த வளங்களைச் சுரண்ட முடியும்? பின்னர் எவ்வாறு கொள்ளை இலாபத்தினை ஈட்டிக் கொள்ள முடியும்? முடியாதல்லவா...அங்கே தான் அந்த நிறுவனங்களுக்கு பிரச்சனை தொடங்குகின்றது. எக்காரணத்தினை முன்னிட்டும் அவைகளுக்கு அவைகள் ஈட்டும் இலாபத்தினையும் சரி அவைகளுக்கு உள்ள அதிகாரத்தினையும் இழக்க மனம் கிடையாது. ஆனால் அனைத்து நாடுகளும் சுதந்திரம் அடைந்தப் பின்பு இவர்களால் அந்த நாட்டின் வளங்களின் மேல் பழையக் காலம் போல் உரிமைக் கொண்டாட சட்டப்படி வாய்ப்பு இல்லாது போய் விட்டது. இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்கள் மேல் தாங்கள் செல்வாக்கினைப் பெற வேண்டுமானால்,

1) அந்த நாடுகளை மீண்டும் அடிமைப்படுத்த வேண்டும். அல்லது
2) அந்த நாட்டினை ஆள்பவர்கள் அவர்கள் நாட்டின் வளங்களை எடுத்துக் கொள்வதற்கு இந்த நிறுவனங்களுக்கு அனுமதியினை வழங்க வேண்டும்.

இவ்விரண்டு வழிகள் மூலமாக மட்டுமே அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்களை அடைய முடியும்.

ஆனால் நாம் முன்னர் கண்டதுப் போல நாடுகளை நேரடியாக யுத்தத்தின் வாயிலாக அடிமைப்படுத்துவது என்பது இயலாத ஒரு காரியமாகவே இருந்தது. காரணம் ஒரு சிறு இராணுவ நடவடிக்கைக் கூட ஒரு மாபெரும் போரினை தொடங்கி வைக்கக் கூடிய வல்லமைப்பெற்று இருந்தது என்று நாம் கண்டோம். அப்படி இருக்க ஒரு நாட்டினை மீண்டும் நேரடியாக அடிமைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியமாகவே இருந்தது.

இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளின் வளங்களை அடைய வேண்டும் என்றால் அந்த நாட்டினை ஆள்பவர்களே அந்த நிறுவனங்களுக்கு அவர்கள் நாட்டின் வளங்களைத் தர வேண்டும்...ஆனால் கூறுவதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியப்பட கடினமான ஒன்றாகும். காரணம் அந்த நிறுவனங்களின் தன்மையைக் குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களும் நன்றாக அறிந்து வைத்து இருந்தனர். எனவே அந்த நிறுவனங்களுக்கு மீண்டும் அவர்களின் நாட்டினுள் அனுமதி அவர்கள் வழங்குவது என்பது எளிதில் நடவாததொரு காரியமே ஆகும்.



PEOPLE-DON%27T-WANT-WARS.-POLITICIANS-BA

நிலைமை இப்படி இருக்க யுத்தங்கள் இல்லாது அந்த வளங்களை அந்த நிறுவனங்கள் அடைய வேண்டும் என்றால் வளம் உள்ள அந்த நாடுகளை ஆள்பவர்கள் இந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்களாக இருக்க வேண்டும்...அவ்வாறு இல்லாவிடின் அந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்கள் அந்த நாடுகளின் தலைவர்களாக கொண்டு வரப்பட வேண்டும். இந்த வழிமுறையினைத் தான் அந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டன. இந்த வழிமுறையினை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனங்கள் அவற்றின் அரசின் உதவியோடு இரு வழிகளைப் பெருன்பான்மையாக கடைபிடித்து இருக்கின்றன என்பதனை வரலாற்றில் இருந்து நாம் காண முடிகின்றது.

1) மக்களால் தேர்ந்து எடுத்த தலைவர்களை கொன்றோ, அல்லது ஒரு இராணுவ புரட்சியினையோ கலகத்தையோ தோற்றுவித்து தமக்கு வேண்டாத தலைவர்களை நீக்கி தமக்கு உரித்தான தலைவர்களை ஆட்சியில் அமர வைத்தோ, அந்த நாடுகளின் மேல் தங்களின் பிடியினை அந்த நிறுவனங்கள் உறுதி செய்துக் கொள்கின்றன.

2) ஒரு நாட்டிற்கு அதனால் திருப்பித் தர இயலாத வண்ணம் கடனினை வழங்கி, அதனைக் கடன்கார நாடாக்கி பின்னர் அந்த நாட்டில் இருந்து உரிமையாக வளங்களையும் இன்ன பிற சலுகைகள் மற்றும் உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்றன.

மேலே உள்ள இரு வழிமுறைகளில் நாம் முதலாவது பற்றி ஓரளவு அறிந்து இருப்போம். அதாவது ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள் இவற்றைப் பற்றி செய்திகளில் எப்பொழுதாவது செய்திகள் வந்து இருக்கும்...நாமும் கண்டு இருப்போம். ஆனால் அந்த இரண்டாவது வழிமுறைதான் சற்று புதிதாக இருக்கின்றது. கேட்பதற்கு நம் நாட்டில் விளங்கும் கந்து வட்டி முறையினை போன்று தோன்றினாலும் அதெப்படி ஒரு நிறுவனம் ஒரு நாட்டிற்கு கடனினை வழங்கி அந்த நாட்டினை கடன்கார நாடாக்க முடியும்? ஒரு நாட்டினால் அதனால் ஒரு கடனைத் திருப்பித் தர இயலுமா அல்லது இயலாதா என்று அறியாத நிலையிலா கடனினை வாங்க முடியும்? போன்றக் கேள்விகள் எழத் தான் செய்கின்றன.

இக்கேள்விகளுக்குத் தான் ஜான் பெர்கின்ஸ் அவரது நூலில் விடையினைக் கூறுகின்றார்.

அவரின் கூற்றுப்படி இன்று எந்த ஒரு பேரரசும் மற்ற நாடுகளின் மீது நேரிடியாக தங்களது ஆதிக்கத்தை இராணுவத்தின் மூலம் வெளிப்படுத்த இயலாது இருக்கும் நிலையில், அந்த பேரரசுகள் அவைகளின் வணிக நிறுவனங்களின் மூலமே அவற்றின் செல்வாக்குகளைப் பெருக்கிக் கொள்கின்றன. அதாவது மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளைக் கொள்வதில் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களும் அந்த நாடுகளின் அரசுகளும் ஓரணியில் நின்றே செயல்படுகின்றன. அவற்றிற்கு துணையாக உலக வங்கியும் செயல்படுகின்றது என்பதும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் முன் வைக்கும் வாதம் ஆகும். அதாவது அரசும் வணிக நிறுவனங்களும் தனித் தனியாக இயங்கிய நிலை மாறி இரண்டுமே ஒன்றாக இயங்கும் ஒரு நிலையே இன்றுக் காணப்படுகின்றது என்று அவர் கூறுகின்றார். வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலில் பதவிகள் வகிப்பதும், அரசில் பதவியில் இருப்பவர் வணிக நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பதும், அவர்களே உலக வங்கியிலும் இருப்பதும் அவர்களின் இந்த இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது என்றே அவர் கூறுகின்றார்.

இத்தகைய நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குச் சென்று தங்களால் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு "உங்கள் நாட்டினில் நீங்கள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சி இத்தனை வருடங்களில் இத்தனை சதவீதமாக உயரும்...மேலும் இந்த திட்டங்களுக்கு உங்களுக்கு கடன் கொடுக்க உலக வங்கியும் தயாராக இருக்கின்றது...இத்திட்டங்களை உங்களுக்காக உருவாக்கிக் கொடுக்கவும் எங்களது நாட்டு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன" என்ற வாக்கு உறுதிகளைத் தந்து அந்த நாடுகளை கடன் வாங்க வைக்கின்றன. வளரும் அந்த நாடுகளும் அந்த புள்ளிவிவரங்களை நம்பி கடன் வாங்க ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கடன் பெற்றுத் தொடங்கிய அந்தத் திட்டங்களால் கணிக்கப்பட்ட அளவு வளர்ச்சி கிட்டாததால், வாங்கிய கடனை திருப்பித் தர இயலாது வெறும் வட்டியினை மட்டுமே கட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளும் நிலைக்கு அந்த நாடுகள் வருகின்றன என்றும் அந்த நிலையினை பயன்படுத்தி வளர்ந்த நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக் கொள்ள தொடங்குகின்றன என்றும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறுகின்றார்.

இன்றைய உலகில் நிகழும் நிகழ்வுகளையும், இவர் இவரது நூலினில் குறிப்பிட்டு இருக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் சற்றுக் கவனிக்கும் பொழுது இவரின் இந்தக் கூற்றானது சரியானதான ஒன்றாக இருக்கக் கூடும் என்றே நாம் எண்ண முடிகின்றது. நிற்க

இன்றைய நிலையில் உலகமயமாக்கல் என்றப் பெயரில் என்ன நடந்துக் கொண்டு இருக்கின்றது என்று விரிவாக அறிய விரும்புவோர் நிச்சயமாக இந்த புத்தகத்தினைப் படிக்கலாம். உலகை நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு கோணத்திற்கான சாளரத்தினை இந்தப் புத்தகம் திறந்து வைத்தாலும் வைக்கலாம்.

சில குறிப்புகள்:



operation-green-hunt-naxal-politicians-b

1) இந்த நூலினில் இவர் அரசியல்வாதிகளும் பெரு நிறுவனத்தின் அதிகாரிகளும் இணைந்துக் கொண்டு வளங்களைக் கொள்ளைக் கொள்கின்றனர் என்றுக் கூறுகின்றார். இதற்கு ஓர் சான்றாக அவர் என்ரான் என்ற அமெரிக்க மின்னாற்றல் நிறுவனத்தின் பங்குதாரராக அமெரிக்க அதிபரான புஷ் இருந்ததையும், அதன் காரணமாக அந்த நிறுவனம் எட்டிய அசுர வளர்ச்சியையும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதே என்ரான் நிறுவனம் இன்னும் சில அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு 1991 இல் இந்தியா எப்பொழுது உலகமயமாக்கல் என்றக் கொள்கையின் வாயிலாக உலக நிறுவனங்களுக்கு தனது கதவினைத் திறந்ததோ அப்பொழுது இந்தியாவிலேயே மிகப் பெரிய மின்சாரத் திட்டத்தினை நிறுவ மகாராஷ்டிராவில் நுழைந்தது.

ஆனால் அந்தத் திட்டம் (தாபோல் மின்சாரத் திட்டம் -Dabhol Power plan) மாபெரும் தோல்வியான ஒன்றாக முடிந்தது. மக்களுக்கு எதிரான வன்முறைகள், திரைமறைவு ஒப்பந்த நடவடிக்கைகள், மின்சாரத்துக்கு அதிகமான விலை நிர்ணயித்தல், சுற்றுச் சூழலை மாசு படுத்தியது உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு என்ரான் நிறுவனத்தின் இந்தத் திட்டம் உள்ளாகி பின்னர் பல கோடி உருபாய் செலவிற்கு பின்னர் கை விடப்பட்டது.

2) திடீர் என்று வளர்ந்த அந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் மோசடிக் குற்றச்சாட்டுகளினால் திவால் ஆனது.

3) அந்த நிறுவனத்திற்காக இந்தியாவில் வாதாடியவர் நமது நாட்டின் நிதி அமைச்சரான ப.சிதம்பரம் அவர்கள்.

4) வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியல்வாதிகளாக மாறி வணிக நிறுவனங்களுக்காக பாடுப் படுகின்றனர் என்று ஜான் பெர்கின்ஸ் கூறுகின்றார். நம் நாட்டில் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் ஒருவராக இருந்தவர் தான் நமது நாட்டின் நிதி அமைச்சரான ப.சிதம்பரம் அவர்கள்.

5) அவரே உள்துறை அமைச்சராக இருந்தப் பொழுது, 'வேதாந்தா' நிறுவனத்திற்கு இலாபம் தரும் கனிம வளங்களை உடைய மலைகளை தருவதற்கு தடையாக இருந்த பழங்குடி மக்களுக்கு எதிராக 'பச்சை வேட்டை'  என்னும் இராணுவ நடவடிக்கைகளை நடத்துவதற்கு ஆதரவு தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலகமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகள் மூலமாக உலகின் உள்ள வளங்களை எல்லாம் ஒரு சிலத் தனிமனிதர்கள் சுரண்டுவதற்கு அரசியலை வணிக நிறுவனங்கள் பயன் படுத்திக் கொண்டு இருக்கின்றன என்றே நாம் அறிய முடிகின்றது.

இதற்கு நாம் என்ன செய்ய போகின்றோம் என்ற கேள்வியே நம்முடைய தலைமுறையினரை நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கின்றது.

என்ன செய்யப் போகின்றோம் நாம்?

http://vazhipokkanpayanangal.blogspot.co.uk/2012/12/blog-post_25.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்தகத்தை வாசிச்சிட்டு அதில உள்ளதை யார்கிட்டயாவது சொன்னா...

...நம்மள ஒரு வேற்றுகிரகவாசி மாதிரி பார்க்கிறார்கள்...

 

ஏற்கனவே இதுபற்றி ஒரு திரியில் எழுதியது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127049

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் பார்த்தேன் செங்கொடி உங்களின் திரியை நிர்வாகம் தற்போது தொடங்கிய இத்திரியை முன்னர் தொடங்கிய திரிக்கு நகர்த்தினால் மிகவும் நல்லது.

 

இப்புத்தகம்   இந்தியா எனும் பல்லாயிரம் கோடி சந்தை அமெரிக்க வெறுப்பான காங்கிரஸ் 60களில் இந்நாளில் அமெரிக்காவின் கைத்தடியாய் இருப்பதற்க்கான  காரணத்தை நீக்கமற கூறுகின்றது.தற்போது நவீன அடிமைபட்டு போன தேசமாய் காட்ச்சியளிக்கின்றது இந்தியா பல்லாயிரம் கோடி சந்தையில் சிந்தாமல் சிதறாமல் லாபத்தை எடுப்பதற்க்கு நாம் ஆகுதியாக்கபட்டுள்ளோம் விடயம் இதுவே.


அத்துடன் தானொரு அரசியல் ஆய்வாளன் என்பவனும் ஏன் நாம் தோற்றோம் என்று விடை தெரியாமல் இருப்பவர்க்கும் இரைனைமடு குளத்தால் யாழ்பாணத்திற்க்கு தண்ணீர் வழங்கலை மேற்கொள்ளவேணும் என்று ஒற்றைகாலில் நிற்க்கும் அரசியல் அறிவிழிகளுக்கு இப்புத்தகம் விடையழிக்கும் என நம்புகின்றேன்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரகாந்தியை ஒரு அமெரிக்க பிரதிநிதி சந்திக்கின்றார். 70 அமெரிக்க தொழிலதிபர்கள் டெல்லியில் 30 பில்லியன் டொலர் பெறுமதியான வியாபார திட்டங்களுடன் வந்திறங்கியுள்ளனர். சில மணி நேரத்திற்குள் நீங்கள் (இந்திரா காந்தி) சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) 30 பில்லியன் கடன் வாங்குவதற்கு சம்மதித்தால் அமெரிக்க தொழிலதிபர்கள் உங்கள் நாட்டில் 30 பில்லியன் டொலர் வியாபரா திட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள். 

இந்திரா காந்தி அந்த அமெரிக்க பிரதிநிதியை அடுத்த நாள் தனது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்திக்கின்றார். தாம் இப்பொழுது தான் 2 பில்லியன் கடனை சிரமப்பட்டு திருப்பிய செலுத்தியதாகவும் எனவே மீண்டுமொரு நெருக்கடியை தாம் சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்தார். 

இதற்கு சாட்சியாக இருந்த ஒருவர் இப்படி சொல்கிறார்: 
"இந்திர காந்தியின் இந்த முடிவிற்கு அவர் கொடுத்த விலை, அவரது உயிர்".

-John Perkins, Bekenntnisse eines Economic Hit Man-

(ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலத்தின் ஜேர்மன் வடிவம்)

 

இது தமிழ் மொழியாக்கத்தில் விடுபட்டுள்ளது (அல்லது மறைக்கப்பட்டுள்ளது) என்றே நினைக்கின்றேன். German மொழியில் மேலே குறிப்பிட்டுள்ளது வந்துள்ளது. 

 

இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதியும் தமிழில் வெளிவந்துவிட்டது. அதில் முக்கியமாக அரபு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தலைவரின் பல அனுகுமுறைகளிற்கு இந்த புத்தகத்தில் விடை கிடைக்கும் என நம்புகின்றேன். 

Edited by செங்கொடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இது தமிழ் மொழியாக்கத்தில் விடுபட்டுள்ளது (அல்லது மறைக்கப்பட்டுள்ளது) என்றே நினைக்கின்றேன். German மொழியில் மேலே குறிப்பிட்டுள்ளது வந்துள்ளது. 

 

இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதியும் தமிழில் வெளிவந்துவிட்டது. அதில் முக்கியமாக அரபு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தலைவரின் பல அனுகுமுறைகளிற்கு இந்த புத்தகத்தில் விடை கிடைக்கும் என நம்புகின்றேன். 

தமிழ் மொழியாக்கத்தில் இந்திராகாந்தியின் விடயத்தை மறைக்காதுவிடின் தற்போதுள்ள காங்கிரஸ் மோட்டு கூட்டம் தமிழாக்கம் செய்தவனை உயிரோடு கொளுத்திபோடுவாங்கள்.

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இப்புத்தகத்தால் tna யில் தமிழர் நலன்விரும்பும் திறனாளிகள் இருக்க மேற்குலகு இந்தியாவின் விருப்பபடி சுமத்திரன் தரவளி ஏன் அவசர அவசரமாக பின்கதவால் முன்னுக்கு கொன்டுவரபட்ட காரணங்களும் வந்தவுடன் உடணடியாய் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்க அதை விடுத்து தன்னார்வ அமைப்புக்களின் தாளத்திற்க்கு பரத நாட்டியம் ஆடும் விக்கி சுமத்திரன் சம்மந்தன் வகையறாக்களின் மர்மமும் விளங்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பொருளாதார அடியாள்களும் -

சில புதுப் பார்வைகளும்

 

பழனிவேள்
 

விடியல் பதிப்பகத்தின் வெளியீடாகத் தமிழில் வந்திருக்கும் ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்னும் சுயசரிதை நூல் சமீபத்தில் வெளிவந்துள்ள அரசியல் புத்தகங்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. இந்திய அரசியல்வாதிகளில் பலரும் இத்தகைய வாக்குமூலங்களை அளிப்பதற்குத் தகுதியானவர்கள்தாம். ஆனால், மிஸ்டர் கிளீன்களாகவும் தியாகிகளாகவும் மாவீரர்களாகவும் தம்மைக் கற்பனைசெய்துகொண்டிருக்கும் அவர்களுக்கு இது போன்ற ஒரு புத்தகத்தை எழுதுவதற்கான மன உறுதியும் சமூகப் பொறுப்பும் குற்ற உணர்வின் உறுத்தல்களும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஐரோப்பியர்களின் நீண்டகாலச் சுரண்டலில் இந்திய உடல்களும் விளைச்சல்களும் மட்டுமே கொள்ளையிடப்பட்டன. ஆனால், அமெரிக்கர்கள் நமது மூளைக்குள் குடியேறி நம் இருப்பை, எதிர்காலத்தைப் பேரம்பேசி எடுத்துக்கொள்கின்றனர். இது ஒருவகை அரூபத்திருட்டு. இதை யார் எங்கே, எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதையெல்லாம் யாராலும் தெளிவாக உணர முடியாது. ஆனால், இது நடந்துகொண்டே இருக்கும். நம்மை விற்பதைப் பரவசத்தோடு நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்; ஊக்குவித்துக்கொண்டிருக்கிறோம். இது வினோதமானதல்ல. நம் ரத்தத்தில் ஊறிக்கிடக்கும் அடிமைக் குணத்தின் இயல்பான செயல்பாடு என்றே இதை எடுத்துக்கொள்ளவேண்டும். இது சராசரி இந்தியனுக்கு மட்டுமல்ல, அறிவுஜீவி எனக் கூறிக்கொள்ளும் பல தமிழ் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக ஊதிப்பெருக்கப்பட்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் பணவீக்க விகிதம் உயர்ந்துகொண்டே போகிறது. இது இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தையும் நுகர்வுப் பொருள்களின் வணிகத்தையும் இலக்காகக்கொண்டது. விவசாய வளர்ச்சியானது தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்றால், நம் பணத்தின் யோக்யதையை அணுசக்தி ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்பட்ட பிறகு பார்க்கலாம். தெற்காசியாவில் அமெரிக்க மேலாண்மையைக் கேள்விகளே இல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

இந்த அமெரிக்கமயப்படுத்துதல் மத்தியில் உள்ள காங்கிரஸின் சுதந்திரத்திற்கு முந்தைய தேசம் - தேசியம் என்னும் கருத்தாக்கம் திரிந்துபோனதன் அடையாளமே. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் தேசம் - தேசியம் குறித்த அக்கட்சியின் நிலைபாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தனியே பரிசீலிக்கப்பட வேண்டியவை. முந்தையது விடுதலை வேட்கை யூட்டப்பட்ட இந்தியச் சாமான்ய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தது என்றால், பிந்தையது முதலாளித்துவத்தின் வளர்ச்சியால் பலவீன முற்றிருந்த நிலக்கிழார்கள், ஜமீன்கள், முடிதுறந்த மன்னர்கள், சிவில் புரோக்கர்கள் போன்றவர்களின் மீது அக்கறைகொண்டது எனச் சொல்லலாம். இன்னும் கூர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இவர்கள் அம்பேத்கரை எங்கே கழட்டிவிட வேண்டும் என்பதை அறிந்த புத்திசாதுர்யம் மிகுந்தவர்கள்.

91இல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளவாதத்தின் பாதிப்புகள் மிக வெளிப்படையானவை. ஒருபுறம் 'இழவு வீட்டின் நாட்டாமை'யான நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசின் பெரும்பான்மை அரசு அதன் உயர்சாதியினரிடையிலான அதிகாரப் போட்டிகளில் சிக்கித் திணறிக்கொண்டிருந்தது. அப்பொழுது அதிகார பீடங்களில் வீற்றிருந்த அர்ஜுன் சிங், சரத்பவார் போன்ற ராஜஸ்தான் ஜமீன்தார்கள், ராஜபுத்திரர்கள், மத்தியப் பிரதேசக் குறுநில மன்னர்கள், பீகாரிய அடிமை வியாபாரிகள், முன்னாள் உலக வங்கி மானேஜர், செட்டிநாட்டு ராஜா எனப் பரம்பரைக் கொழுப்பேறிகள் சேர்ந்துகொணர்ந்த புதையல்தான் 91இன் தாராளவாதம். ஆனால், காங்கிரஸின் அமெரிக்கச் சார்பு நிலையே, தாராளவாதம் இங்கே அனுமதிக்கப்படுவதற்கு முக்கியமான ஒரே காரணம்.

நரசிம்மராவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசுகள் தாராளவாதத்தை அமல்படுத்துவதற்கான அடித்தளங்களை ஐந்தாண்டுத் திட்டங்களின் வடிவில் படிப்படியாக உருவாக்கி வைத்திருந்தன. குறிப்பாகப் பசுமைப் புரட்சி. இருபத்தைந்தாண்டுப் பசுமைப் புரட்சி இந்திய விவசாயிகளுக்கும் நிலத்திற்குமான உறவை ஆட்டங்காணச் செய்துவிட்டது. "பேராசைமிக்க பிச்சைக்காரர்களான" மிடில் கிளாஸ் வர்க்கத்தினரை உருவாக்குவதில், அவர்களை நிர்வகிப்பதில், ஓட்டுவங்கியாக்கி அதிகாரத்தைத் தக்கவைப்பதில் மின்சாரத்தின் பங்கு அளப்பரியது. மின்சாரம் பரவலாக்கப்பட்ட பின் அதன் உற்பத்தியையும் விநியோகத்தையும் கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் மூலம் சுரண்டலை நிரந்தரமாக்குதல் இவைதாம் பொருளாதார அடியாள்களும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள். பின்தங்கிய நாடுகளுக்குள் ஆலோசகர்களாகவும் நலம்விரும்பிகளாகவும் ஊடுருவுவது, மின் உற்பத்தி மற்றும் எண்ணெய் வளங்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிவது, அவற்றின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் பொய்யான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பேராசைகளை மூட்டுவது, ஒப்பந்தக்காரர்களை அடையாளங்காட்டுவது, கடன் பெற்றுத்தருவது பிறகு அந்நாடுகளை மீள முடியாத கடனில் மூழ்கடித்துத் தம் சுரண்டலுக்கான வேட்டைக்காடாக்குவது போன்றவைதாம் பொருளாதார அடியாள்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்குமிடையேயான உறவின் வலைப் பின்னல்.

தெளிவாகவும் எளிமையாகவும் இவ்வலைப் பின்னலை விளக்கியிருக்கிறார் ஜான் பெர்கின்ஸ்.

உள்கட்டுமானங்கள், தங்கநாற்கரச் சாலைகள், மேம்படுத்தப்பட்ட எரி சக்தித் திட்டங்கள், பிரதமர்களின் யோஜ்கார்கள், எல்லோருக்கும் செல்போன் எனப் பாமரனுக்கும் அந்த ஆசைகளை மூட்டுவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள். இந்தியாவில் இதற்கான அடித் தளங்களை உருவாக்கித் தந்ததில் பிஜேபி போன்ற வலதுசாரிகளுக்கும் அடல்பிகாரி வாஜ்பாய் போன்ற 'விவேக'மான தலைவர்களுக்கும் பெரும் பங்குண்டு. இன்று நுகர்வுச் சந்தையைக் கைப்பற்றுவதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் தமக்குள் அசுரத் தனமான போட்டிகளில் இறங்கியுள்ளன. அவர்களுக்கு ஏதுவாக இந்தியா முழுமையும் பொருளாதார தாதாக்களின் ஆட்சி செவ்வனே நடைபெறுகிறது. இதில் இந்தியக் கம்யூனிஸ்டுகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை மேற்குவங்கத்தில் பார்க்கலாம்.

இத்தகைய சூழலில் பெருமுதலாளிகளும் முதலீட்டு மாமாக்களும் பொலி காளைகளிடம் உயிரணுச் சேகரிப்பது போல, நுகர்வு என்றும் சுயபுணர்ச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும்போதே, இப்புத்தகத்தை வாசிப்பது தனிமனிதனுக்குத் தன் சுயநிர்ணயத்தில் பாரிய மன உளைச்சலை உருவாக்குகிறது. பல உடைப்புகளை ஏற்படுத்தும் சாத்தியமுள்ளது என்றாலும், இது தமிழ்ச் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டிவிடும் என்றெல்லாம் கருத முடியாது. ஆனால், குறைந்த அளவிலாவது பலவித இருண்மைகளிலிருந்து சமூகத்தின் மைக்ரோயூனிட்டான தனித்தன்னிலையை வெளி யேற்றிக்கொள்ள உதவும். இல்லையெனில் மீடியா, தொழில், குடும்பம் என்பவற்றின் மட்டகரமான சமூக விலங்காக மாறிப் போலி வெறி இன்பத்தில் மூழ்கும் திறனற்ற மூடனாகவோ அல்லது கடவுளுக்கு நிகர்த்தவனாகவோ மாற்றிவிடக்கூடும். இது இந்த ஒரு புத்தகத்தால் நேரக் கூடியதா என்று வியக்க வேண்டாம். மேம்படுத்தப்பட்ட பல புத்தகங்களின் ஒரு நிலை.

தனிநபராகத் திறனற்ற இந்தியக் கும்பலானது ஒருமித்து மோசமான வன்முறை சம்பவிக்கையில் அது தற்காலிக அதிகாரப் பரப்பாக மாறுகிறது. இந்தக் கூட்டெழுச்சி அறங்களின் பாலானதாக அமைவதில்லை. மாறாக எதிர்ச்செயல் ஊக்கியாகவே வினையாற்றுகிறது. இதற்குப் பல உதாரணங்களை அடுக்க முடியுமென்றாலும், சேதுக் கால்வாய் நல்ல சான்று. ஒருபுறம் வடக்கில் சிதறுண்ட இந்துத்துவவாதிகளை மீண்டும் ஒருங்கிணைக்க ஒரு வாய்ப்பாகவும் அதுவே தமிழகத்தில் காலாவதியான திராவிடக் கனவுகளைத் திரட்டி எழுச்சியடையச் செய்யும் வாய்ப்பாகவும் அமைந்தது. சேதுக் கால்வாய் பீட்டர்ஸ் சாலை மேம்பாலம்போல உதவாக்கரையான ஈகோ மாத்திரமே. நமது திராவிட உடன்பிறப்புகள் சொல் குறித்தோ 'மால்'வணிகம் குறித்தோ அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்தோ ஆசன வாயைக்கூடத் திறப்பதில்லை. ஏனென்றால், கல்வித் தந்தைகளாக அமெரிக்காவிற்கு உருப்படிகள் தயாரிக்கும் குடிசைத் தொழிலை நிர்வகிப்பவர்களில் பெரும்பான்மையான இவர்கள் நம்மை வழிநடத்தும்போது, நமது தனித்தன்னிலைகளை மீட்டுக்கொள்வதற்காக இது போன்ற புத்தகங்களில் பதுங்கிக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. ஏனென்றால், பணத்திற்கு வேலைபார்த்துக் காட்டிக்கொடுக்கும் ஜான் பெர்கின்ஸிற்கு இருக்கும் தெளிவோ அணுசக்தியைவிட மற்ற ஆற்றல்கள் தொழில்நுட்பரீதியில் உயர்ந்தவையாகவும் சிக்கனமாகவும் இருப்பதாகக் கூறும் தைரியமோ நமது ராசாக்களுக்கும் மானேஜர்களுக்கும் இல்லையென்பது நியாயங்கள் நிறைந்ததே.

இந்தியரீதியில் அறிவுத் துறையில், தொடர்புச் சாதனத்தில் பொருளாதார அடியாள்கள் நிரம்பி வழிகின்றனர். பொருளாதார அடியாள்களின் கை அரசியல் சூது, எண்ணெய் வளம், மின்சாரம், நுகர்வுப்பொருள் என்னும் அளவிலிருந்து இன்று பல நிலைகளுக்குத் தாவிவிட்டது. குடும்பச் சட்டம், தெய்வ வழிபாடுங்கூட அமெரிக்காவிற்குக் கட்டுப்பட்டுள்ளன. இருபதாண்டுகளுக்கு முந்தைய எம்.எஸ். உதயமூர்த்தி என்ற நபரை இன்னும் மறந்திருக்கமாட்டோம். தேவைப்படாத ஒன்றைப் பேசி அது தேவை என்னும் அவசியத்தை உருவாக்கி அமெரிக்காவிற்கு ஆள்பிடித்த நபர் அவர். இன்று இதுமாதிரி ஆள்கள் உள்மறைவாகச் செயல்படுகின்றனர். அமெரிக்கா இந்திய எண்ணெய் வளத்திற்காகவோ மின் நுகர்வுப் பொருள் விற்பனைக்காகவோ இல்லாவிட்டாலும் இந்தியாவின் அபரிமிதமான மனித வளத்திற்காகவும் மூளை உழைப்பிற்காகவும் (குறைந்த செலவினம்) தொடர்ந்து கலாச்சாரரீதியாகத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முயலும்.

புனைகதையாளனுக்குரிய சிரத்தையோடு ஜான் பெர்கின்ஸ் விவரிக்கும் நேர்த்தியில் சுரண்டல் குறித்த, கடனாளியாகும் தேசம் குறித்த துயரம் கவிகிறது. ஈக்வடர், கொலம்பியா, இந்தோனேஷியா, பனாமா, ஈராக், சவுதி, ஆப்கானின் நிலக்காட்சிகள், தேசங்களுக்குத் தரப்படும் மறைமுக நிதியுதவி ஆகியன ஒரே சீராக விவரணை செய்யப்படுகின்றன. லாப நோக்குமிக்க அரசியல்வாதிகளும் அவர்களால் அபாயத்தை உணராத அப்பாவி மக்களும் அடுத்தடுத்து வருகின்றனர். ராஸி, பிடல் போன்ற வெகுளி நண்பர்களும் அவர்களிடம் ஜானின் நடத்தையும் "மெய்ன்" சகாக்களோடு அவரது உறவும் அவரது இரட்டை வாழ்வின் பதிவுகள். கமலாங் இசையும் தலாங் பொம்மலாட்ட விவரிப்பும் பனாமாக் காமக்கிழத்திகளின் நடனமும் புஷ் பற்றிய (பக்: 115,116,117) குறிப்புகள், ஈக்வடர், பனாமா அதிபர்களின் மறைவு பற்றிய குறிப்புகள் தேர்ந்த எழுத்தாளனின் சமரசமற்ற பார்வையோடு உள்ளன. சவுதிகளின் பலியாட்டுத் தன்மை, ஓசாமாவின் நகர்வு, வியட்நாம் தோல்விக்கும் ஈராக் தோல்விக்குமான ஒற்றுமை, பல தேசங்களின் புவியியல், சூழலியல், அரசியல் பார்வையை அவரால் தரப்படுத்த முடிவது அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களிலேதான். உலகத்தின் பிராந்தியக் கூறுகள் மற்றும் வரலாறு, இனவிவரம் போன்றனவெல்லாம் அமெரிக்க நூலகங்களுக்குக் கிடைக்கின்றன. பணத்திற்கு வேவு பார்க்கும் உள்ளூர் அறிவுத்திருடர்கள் நம்மோடு கமுக்கமாக இருக்கின்றனர் என்பதையே இது வெளிச்சமிடுகிறது.

இந்தப் புத்தகம் சார்ந்து நான் முன் வைத்துள்ளது ஒரு வாசிப்பு. இதன் பல வாசிப்பு முறைகள் விவாதத்திற்குள்ளாகும்போது, மேலும் பல விஷயங்கள் தெளிவுபெறும். இப்புத்தகம் தமிழில் விவாதத்திற்குரிய வரவாக வெளி வந்துள்ளது.

http://www.kalachuvadu.com/issue-97/page30.asp
பொருளாதார அடியாள் என்பதை விட பொருளாதார "தாக்குதாரி" எனது பொருத்தமாக இருக்குமோ..??
 
ஜோன் பெர்கின்ஸ் சொல்லும் விசயம் ஒரளவிற்கு பழைய விசயம் என்று தான் கூறவேண்டும்.
 
ஜோர்ஜ் "புஸ்" காலத்திலேயே இந்த மாதிரியான அமெரிக்க நரிப் பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப் படவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
 
கடந்த 5  - 10 ஆண்டுகளில் உலகம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது.
 
குறிப்பாக சீனாவின் அதீத பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.
 
தொடர்ந்தும் பழைய வண்டிலில் அமெரிக்கா பயணம் செய்ய முடியாது. அமெரிக்கா விடும் ஒவ்வொரு பிழையும் சீனாவல் பாவிக்கப்படும்.
 
அதே நேரம் அமெரிக்காவினுள் இந்தியாவின் பொருளாதார செல்வாக்குகள் வளர்வதையும் கவனிக்க வேண்டும்.
 
இறுதியாக.. இந்த உலகமயமாதலிற்கு பெரும் விலையைக் கொடுத்தவர்கள் யார் என்றால் மேற்குலகத்தவர்கள் தான். பெரும் பேறு பெற்றவர்கள் யாரென்றால் சீனர்கள்.
 
பல மாற்றங்கள் அமெரிக்க கொள்கைகளில் நடக்கின்றது. அமெரிக்க ஓநாய்கள் அதை எதிர்க்கின்றன. ஒபாமா படும் பாடுகளை கவனித்தால் அது புரியும்.

"குறிப்பாகப் பசுமைப் புரட்சி. இருபத்தைந்தாண்டுப் பசுமைப் புரட்சி இந்திய விவசாயிகளுக்கும் நிலத்திற்குமான உறவை ஆட்டங்காணச் செய்துவிட்டது."

இதை ரொக்கர்பெலர் சொல்ல இந்திரா காந்தி, சுவாமி நாதன் என்னும் கொலைக்காரர் ஊடாக செய்தார்.

உலகத்திற்கு விவசாயம் செய்து காட்டிய பூமியே பல இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்யும் பூமியானது.

இப்போது பில் கேட்ஸ்,வரன் பப்பே, ரொக்கர் பெளர் சேர்ந்து ஆப்ப்ரிக்காவில் தொடங்கியிருக்கிறார்கள்.

என்ன தான் இயற்கை உணவை பற்றி கத்தினாலும் ஆட்டு மந்தைகளுக்கு ஏறாது.

கறுமாதி கறுமங்கள்!

 

ஒவ்வொருவருசமும், நோபல் பரிசை அமெரிக்காகாறன் தட்டுகிறான். அவனை விட பிரேரிக்கபட்டவர்கள் வேறு. அதற்கு மேலாக உலகின் பல பெரிய நிறுவனங்களை நடத்தும் தலைவர்கள் வேறு. எல்லோருமே புத்தகம் எழுதிகிறார்கள். சென்றவருட நோபல் பரிசு பெற்ற கருத்துகோளை விளங்கப்படுத்த சொன்னால் முடியுமா?ஆரோ ஒன்று கோமாளிதனமாபெதோ புரட்சி வாதம் எழுதுகிறதாம் அதை மட்டும் போட்டு பினாத்துகிறார்கள்.

 

தென் அம்ரிக்காவாலிருந்து இந்தியாவுக்கு எண்ணை ஏற்றுவதால் ஒரு பழம் குடி அழிகிறாதாம். வேற்று கிரகத்தில் இருந்து இங்கே ஒருவன் வந்தானாயின் அவனுக்கு பூலோக மனிதனை விட மூளை இருக்கும். சிங்கள மோடைய தேர்தலில் மகாவம்ச பேச்சை கேட்டதுகள் மாதிரி பினவழத்தை தூக்கி அடிக்கும் கோமாளிகளுக்கு வேற்றுகிரகவாசிகளை பற்றி சொல்லி என்ன விளங்க போகுது. மூடனும் மந்தியும் கொண்டமை விடா.

 

இவர்களின் கருத்துக்களுக்கும் இந்த புத்தகத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். முடிந்தால் என்ன தொடர்பு சொல்லட்டும் முதலில் பார்ப்பம்.

 

இந்த பழங்கதையை பிரேரணை நேரம் கொண்டுவந்து ஆலாத்தி எடுப்பதின் நோக்கம் சம்பந்தை தாக்கமட்டுதான் என்றும் தமே மோடையாக்கள் மாதிரி வெக்கம் கெடஎழுதுகிறார்கள். வளைத்து நெளித்து சம்பந்தரை இதற்குள் இழுக்கும் அரச அடிவருடிகள் தங்களை மறைக்க இயலாமல் துடிக்கிறார்கள். 

 

சம்பந்தர் இந்தியாவுடன் என்று கூறி எதிர்க்கிறாகள். பின்னர் அமெரிக்கா இந்தியாவை அழித்துவிடபோவத்தாக கூறி குப்பைக்குள் கிடக்கும் ஒரு புத்தகத்துடன் ஓடிவருகிறார்கள். அமெரிக்கா இந்தியாவை அழித்தால் நல்லதா? இல்லையா? அதற்கான ஒரு விவாத்தை ஆரம்பிக்கட்டும். அப்போ இவர்கள் இந்தியா பக்கமா? அமெரிக்க? பக்கமா என்றாவது தெரியும். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமே எதிர்தான் என்றால் ஏன் இந்த புத்தகம்? கேடிகள் ஒருவரை ஒருவர் அடித்தொள்ள நாமா விலக்கு பிடிக்க வேண்டும்? நோக்கமே பில்லத்த பிழைப்பு வாத ப்ரதேசிகள்.

 

எந்த தென் அமெரிக்க நாடு பழங்குடிகளை அழித்து இந்தியாவுக்கு எண்ணை அனுப்புகிறது? பொறுளாதாரம்தான் தெரியாது, தங்களுக்கு பொது அறிவு இல்லை, இதை படிக்கிறவன் எதையாவது பதில் என்ன சொல்லலாம் என்றுதன்னும் யோசித்து பார்க்க முடியாது. அந்த கூகோ சேவாவின் நாடு வெனிசியூலா அமெரிக்காவில் எண்ணை விற்கிறது. அதே நேரம் அமெரிக்கர்களுக்கு எண்ணை தானமாகவும் கொடுக்கிறார்களாம். பகிடி என்ன என்றால் இரவுபகலாக அமெரிக்காவை எதிர்ப்பது, பின்னர் அமெரிக்கா இல்லாவிட்டால் எண்ணை விற்க முடியாது. இந்தியா அழிந்தால் எண்ணை ஏற்றும் தென் அமெரிக்காவின் பலகுடிகள் தப்பும். சம்பந்தர் போக இடமில்லாமல் இவர்கள் கேட்கும் அரசியல் செய்ய வேண்டி நேரிடும். அப்போ ஏன் அமெரிக்கா இந்தியாவை அழிப்பதை பற்றி இந்த அசட்டு பேதைகள் கவலை கொள்கிறார்களோ?

சீனா கடன் கொடுக்கும் நாடுகளில் எந்த நாட்டில் சிறுபான்மையினர், பெண்கள் தப்பியிருக்க முடிகிறது. ஈரான்,லிபியா, மியன்மார், பாகிஸ்தான், இலங்கை, நையீரியா.....

சீனா கடன் கொடுக்கும் நாடுகளில் எந்த நாட்டில் சிறுபான்மையினர், பெண்கள் தப்பியிருக்க முடிகிறது. ஈரான்,லிபியா, மியன்மார், பாகிஸ்தான், இலங்கை, நையீரியா.....

உண்மை. உகண்டாவில் இந்தியா தங்கம் எடுக்க செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா சர்மா: மரணத்தில் மறைந்திருக்கும் கொடுக்கு !

மலேசிய விமான விபத்துக் குறித்த செய்திகளை உலகம் அனுதாபத்துடன் கவனித்து வருகிறது. இந்த செய்திகளை தமிழக ஊடகங்களில் படித்தபோது ஒரு செய்தி மட்டும் துருத்திக் கொண்டு தெரிந்தது.

லேசிய விமான விபத்துக் குறித்த செய்திகளை உலகம் அனுதாபத்துடன் கவனித்து வருகிறது. இந்த செய்திகளை தமிழக ஊடகங்களில் படித்தபோது ஒரு செய்தி மட்டும் துருத்திக் கொண்டு தெரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில், சென்னையைச் சேர்ந்த பெண் உள்பட 5 இந்தியர்கள் பயணம் செய்ததாக ஊடகங்கள் எழுதின. இப்படி குறிப்பிடுவது வழக்கமானதுதான் என்றாலும், அந்த சென்னை பெண் பற்றிய தகவல்கள் சற்றே கவனிக்க வைத்தன.

chandrika-sharma.jpg

சந்திரிகா சர்மா

அவர் பெயர் சந்திரிகா சர்மா. 51 வயது. சென்னை வேளச்சேரியில் கணவருடன் வசிக்கும் இவர் மீனவர் நலன்களுக்காக பணிபுரிந்து வருகிறார் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக மங்கோலியா செல்லும் வழியில் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டு விட்டார் என்றும் செய்திகள் தெரிவித்தன. ஓர் உயிரின் இழப்பு என்பது நிச்சயம் வருந்தத் தக்கதுதான். இதன்பொருட்டு அவரது குடும்ப உறுப்பினர்களின் மன உணர்வுகளை நாம் மதிக்கிறோம். ஆனால் இச்செய்தி இந்த பரிதாபத்துடன் மட்டும் முடிந்து விடுவது இல்லை.

சென்னை வேளச்சேரியில் உயர்வர்க்க பணக்கார குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் சர்மா பெண் ஒருவருக்கும் மீனவர்களுக்கும் என்ன தொடர்பு? அவர் உள்ளூர் மீனவர்களின் சிக்கல்கள் குறித்து பேச மங்கோலியாவுக்குச் செல்கிறார் என்றால் அது மிகவும் வினோதமாக இருக்கிறது. ஹரியானாவை சொந்த ஊராகக் கொண்ட இந்தப் பெண்மணி, மும்பை டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் படித்துள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் மேற்படிப்புப் படித்து டெல்லியில் பணிபுரிந்துள்ளார். இதில் எதுவுமே மீனவர் வாழ்க்கையுடன் பொருந்தவில்லை. மீனவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை கேள்வி ஞானத்தில் கூட அறிந்திருக்க வாய்ப்பற்ற இவர் எப்படி மீனவர் போராளியானார்? பத்திரிகை செய்திகளைப் படித்தபோது இன்னும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது.

International Collective in Support of Fishworkers (ICSF – மீன்பிடி தொழிலாளர்களுக்கு ஆதரவான பன்னாட்டு கூட்டமைப்பு) என்ற தன்னார்வக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளார் சந்திரிகா. இந்தியா, லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் இந்த என்.ஜி.ஓ.வில் (தன்னார்வ தொண்டு நிறுவனம்) கடந்த 19 ஆண்டுகளாக இவர் பணிபுரிந்துள்ளார். சென்னையில் இருந்தபடியே உலக நாடுகளுக்குப் பறந்துள்ளார். அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளான்மைக்கான அமைப்பு  மங்கோலியாவில் நடத்தும், ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளின் மண்டல மாநாட்டுக்குச் செல்வதற்காக அவர் மலேசியா வழியே பெய்ஜிங் சென்றுள்ளார். அப்போதுதான் விபத்து நடந்துள்ளது.

சென்னையில் இவருடன் பணிபுரிபவர்களும், நண்பர்களும் ‘‘சந்திரிக்காவின் இழப்பு மீனவ சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு’’ என்று பேட்டிக் கொடுத்துள்ளனர். உலகளாவிய அளவிலான மீனவர் சிக்கல்கள் தொடர்பான செய்திகளை உள்ளூர் மீனவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் இவர் முக்கியப் பங்காற்றி உள்ளாராம். மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான பல சர்வதேச கருத்தரங்குகளில் கலந்து கொண்டாராம்.

‘‘அவர் மிகவும் எளிமையாக பழகுவார்’’ என்கிறார் தேசிய மீனவர் பேரவையின் அகில இந்தியத் தலைவர் இளங்கோ. தேசிய மீன்பிடித் தொழிலாளர் பேரவையைச் சேர்ந்த எம்.ஜே.விஜயன், ‘‘ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு அமைப்புகளான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு… ஆகியவற்றின் கொள்கை முடிவுகளின் மீது செல்வாக்கு செலுத்தும் நபராக சந்திரிகா இருந்தார்’’  என்கிறார்.

இந்தப் பின்னணியில் இதை இரண்டு விதமாக நாம் பார்க்கலாம். ஒன்று, உண்மையிலேயே மீனவர்கள் மத்தியில் சந்திரிகா அப்படி என்னதான் பணியாற்றினார்? இரண்டு, அவர் கலந்து கொள்வதற்காகச் சென்ற மங்கோலியா கருத்தரங்கில் என்ன விவாதிக்கப்படுகிறது? இதில் முதல் கேள்விக்குப் பதில் தேடினால் கடும் அதிர்ச்சி. சந்திரிகா சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலாளர்களின் நலன்களுக்காக பணிபுரிந்ததாக எல்லா ஊடகங்களும் எழுதுகின்றன. ஆனால் உண்மையில் அவர் சிறிய மீனவர்களை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியை அப்பட்டமாக செய்துள்ளார். மேலும், கடல்வாழ் உயிரினங்களின் அழிவுக்கும், கடற்கரை சீரழிக்கப்பட்டதற்கும் சிறிய அளவிலான மீன்பிடித் தொழில்தான் காரணம் என்று அவரது தன்னார்வ நிறுவனம் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. அவரது ஐ.சி.எஸ்.எஃப். நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘மீன்பிடிக் குறித்து உயிர்ச்சூழல் அணுகுமுறை’ என்ற பிரசுரத்தைக் கவனியுங்கள். இது மிகவும் வழக்கமான என்.ஜி.ஓ. வகை மாதிரி துண்டு பிரசுரம்தான். ஆனாலும் மிகவும் அப்பட்டமாக மீனவர்களை கடலுக்கும், மீன்வளத்துக்கும் எதிரிகளாக சித்தரித்துள்ளனர்.

  • ‘பெரிய விசைப் படகுகள் மட்டுமல்ல… நாம் பயன்படுத்தும் வலைகள் கூட பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்’ என்று ஒரு மீனவர் சொல்வதாகக் கருத்துப்படம்.
  • ‘இந்த அசுத்தமான மீன்பிடிப் படகுகளால் சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுகிறது’
  • புவிவெப்பமயமாதலில் நமக்கு என்ன பங்கிருக்கிறது என்று மீனவர்கள் சிந்திப்பது…

என்று முழுக்க, முழுக்க மீனவர்களுக்கு எதிராக இருக்கிறது இந்த பிரசுரம். கடலோரத்தில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்தி, மொத்த கடலோரத்தையும், கடற்பரப்பையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடத் துடிக்கும் கடற்கரையோர மேலாண்மை சட்டத்தைக் குறித்து இந்த தொண்டு நிறுவனம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களால் ஒட்ட சுரண்டப்படும் மீன்வளம் பற்றியும் மௌனம் காக்கின்றனர். மொத்தத்தில் பெரும் நிறுவனங்களின் வேட்டைக்காடாக இருக்கும் கடற்புரத்தில் இருந்து மீனவர்களை அடியோடு விரட்டியடித்துவிட்டு, இடையூறு இல்லாத ஏகபோக சந்தையை உத்தரவாதப்படுத்திக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனர். இதையும் சுற்றுச் சூழலோடு இணைத்து மீனவர்களை குற்றவாளிகளாக்கி இயற்கை ஆர்வலர் வேடம் போடுகிறார்கள் இந்த கபடதாரிகள்.

துண்டு பிரசுரத்திலிருந்து சில பக்கங்களின் படங்கள் [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

fishing-brochure-01-150x150.jpg fishing-brochure-02-150x150.jpg fishing-brochure-03-150x150.jpg fishing-brochure-04-150x150.jpg

fishing-brochure-05-150x150.jpg fishing-brochure-06-150x150.jpg fishing-brochure-07-150x150.jpg fishing-brochure-08-150x150.jpg

fishing-brochure-09-150x150.jpg fishing-brochure-10-150x150.jpg fishing-brochure-11-150x150.jpg fishing-brochure-12-150x150.jpg

fishing-brochure-13-150x150.jpg fishing-brochure-15-150x150.jpg fishing-brochure-14-150x150.jpg

இந்த லட்சணத்தில் அந்தப் பெண் மீனவப் போராளியாம். அவரது இழப்பு தாங்க முடியாத துயரமாம். என்.ஜி.ஓ. போராளியின் மரணத்திற்காக ஊளையிடும் ஊடகங்கள் இந்த உண்மைகளை ஆய்வு செய்வதோ, பரிசீலிப்பதோ இல்லை.

சரி, இவர் கலந்துகொள்ளச் சென்ற மங்கோலிய மாநாட்டில் அப்படி என்னதான் பேசப்படுகிறது? மங்கோலியாவின் உல்லன்பட்டார் என்ற இடத்தில் மார்ச் 10-ம் தேதி துவங்கி நடைபெற்றுவரும் இந்த மாநாடு 14-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. ஆசிய, பசிபிக் மண்டலங்களைச் சேர்ந்த 46 நாடுகளின் விவசாய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் கணிசமான அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்து நாடுகளைச் சேர்ந்த தன்னார்வக் குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்தரங்கின் முதல் நாளில், ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான சிக்கல்கள் ஆராயப்படும் என்றும், முக்கியமாக இந்த பிராந்தியங்களில் மேற்கண்ட துறைகளில் முதலீடுகள் மற்றும் மானியங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்றும் சொல்கின்றனர். அதாவது ஆசிய, பசிபிக் நாடுகளில் உள்ள ஏழை மக்களின் உணவை உத்தரவாதப்படுத்துகிறார்களாம். எப்படி? விவசாயத் துறையில் முதலீடு செய்வதன் மூலம். அப்படியான முதலீட்டுச் சூழலுக்குரிய வாய்ப்புகள் தங்கள் நாடுகளில் எப்படி இருக்கிறது, எப்படி உருவாக்கலாம் என்பது குறித்து உரையாற்றவே பல்வேறு நாடுகளின் தன்னார்வக் குழுவினர் அங்கு சென்றுள்ளனர். பச்சையாக சொல்வதானால் தங்கள் சொந்த நாட்டை காட்டிக் கொடுக்கும் புரோக்கர் வேலையைப் பார்ப்பதற்காக இவர்கள் அங்குச் சென்றுள்ளனர்.

‘ஆசிய, பசிபிக் நாடுகளின் விவசாயிகளிடையே போட்டித் திறனை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதுக் குறித்து’ இந்தக் கூட்டத்தில் விவாதிக்கிறார்களாம். ஆசிய நாடுகளின் அரிசி உற்பத்தி, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் நிலையில், அது சூழல் பாதிப்பு உள்ளிட்ட சில எதிர்விளைவுகளையும் உருவாக்குகிறதாம். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசப்படுமாம். மொத்தத்தில் விவசாயத்தின் மீதான விவசாயிகளின் இறையாண்மையை இல்லாதொழிக்க வேண்டும். அதுதான் இவர்களின் நோக்கம். அதை ஐ.நா. சபை வழியே வேறு, வேறு வார்த்தைகளில் இழுத்துப் பிடித்துச் சொல்கின்றனர். இன்றைய விவசாயி எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகளை இவர்கள் மருத்தளவுக்குக் கூட பேசாதது மட்டுமல்ல…  இருக்கும் விவசாயிகளைத் துரடித்தியடித்துவிட்டு சிறப்பு வேளாண் மண்டலம் அமைக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் சிந்திக்கின்றனர்.

நாம் சந்திரிகா சர்மாவில் பேசத் துவங்கினோம். அது இறுதியில் இங்கு வந்து நிற்கிறது. மீனவர் நலன், மங்கோலிய மாநாடு, விவசாய நலன், அரிசியால் சூழல் கேடு என்று இது யூகிக்க முடியாத வட்டமாக இருக்கிறது. தன்னார்வக் குழுக்களின் அரசியல் கண்ணி இப்படித்தான்… நாம் அறிய முடியாத ஆழங்களிலும், காண முடியாத தூரங்களிலும் படர்ந்துள்ளன.

தன்னார்வக் குழுக்கள்,வெளித் தோற்றத்தில் சேவையையும், உள்ளே ஏகாதிபத்தியங்களுக்கு தேவையான சதிகார நடவடிக்கைகளையும் கொண்டுள்ளன. இவர்களுக்கு கொடுக்குகள் வெளியில் இருப்பது இல்லை. உள்ளே இருக்கின்றன!

-    வழுதி

http://www.vinavu.com/2014/03/11/chandrika-sharma-work-for-fisher-ngo/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.