Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெற்றோர் கற்க வேண்டியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஸ் வி வேணுகோபாலன்

ame-300x277.jpgமொகலம்மா என்ற பெண்மணியைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தபோது கல்வியின் பெருமை குறித்த புதிய பரிமாணம் எனக்குக் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த இந்தப் பெண், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரால் சிறப்பிக்கப்பட்டார். ஹர்ஷ் மெந்தர் எழுதிய அந்தக் கட்டுரை, எந்த இடத்திலிருந்து அந்தப் பெண் இந்தப் பெருமைக்குரிய இடத்தை வந்தடைந்தார் என்பதை தி இந்து நாளிதழில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. பிறந்த முதலாம் ஆண்டிலேயே காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மொகலம்மா நடக்க முடியாத குழந்தையாக வளர்ந்தார். பல குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், மொகலம்மாவுக்கான எதிர்காலம் அவரது கல்வியில் இருக்கிறது என்று சிந்தித்தார்…கடுமையாகப் போராடி முதல் வகுப்பில் சேர்த்துவிடப்பட்ட மொகலம்மா பிறகு திரும்பிப் பார்க்க நேரவே இல்லை…கல்லூரிப் படிப்பையே அழகாக முடித்துக் காட்டினார். அசையவும், நகரவும் இயலாத ஒரு பெண் பிறகு எத்தனை பேரை அசைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதில் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன.

ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மொகலம்மாவின் தாய் போராடி வந்தார். ஒரு கட்டத்தில் மொகலம்மா தனது தாய் முடியாது என்று நினைத்த படிக்கட்டுகளிலும் ஏறத் தொடங்கியது முக்கியமானது. தனது சிற்றூரின் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வரவு செலவு கணக்கு எழுதுவது முதல், எத்தனையோ விதங்களில் தனது படிப்பின் பயனை வழங்கிக் கொண்டிருக்கிறார் மொகலம்மா.

பெற்றோரின் பங்கு

தமது குழந்தைகளுக்கான கல்விக்குப் பாடு எடுப்பதில் பெற்றோர் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கல்வி பெறுதல் சவால் மிகுந்ததாக மாற்றப்பட்டிருக்கிற இன்றைய சூழலில் பெற்றோர் செய்யும் தேர்வு, பெற்றோர் மேற்கொள்ளும் அணுகுமுறை, பெற்றோர் எடுக்கும் முடிவுகள் மிக மிக முக்கியமானவை.

குழந்தைகளின் மீதான எதிர்பார்ப்பு, குழந்தைகளது எதிர்காலம் குறித்த கலக்கம் போன்றவை பெற்றோர் உள்ளத்தில் ஆதிக்கம் கொள்கின்றன. இதன் பிரதிபலிப்பாக, குழந்தைகள் அவர்களாக என்ன விரும்புகின்றனர், என்ன தேவையில்லை என்று கருதுகின்றனர் போன்றவை குறித்தெல்லாம் பெற்றோர் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனரா என்ற கேள்வியும் எழுகிறது. உளவியல் ரீதியாக இரண்டு பக்கங்களிலும் இதனால் நேரும் அதிர்ச்சியும், அதன் தொடர் நிகழ்வுகளும் அதிகம் பேசப்படாது போகின்றன.

பெற்றோர் பொறுப்பில் நுட்பமான மாற்றங்கள்

பெற்றோர் பொறுப்பு என்ற அம்சத்தில் கடந்த பத்து இருபது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் நுட்பமான மாற்றங்கள் ஒரு தனி ஆய்வுக்கு உரியவை. புதிய தாராளமய காலத்தின் தாக்கம் இதிலும் இருக்கும் என்பதை விளக்க வேண்டுமா? அது மட்டுமின்றி, ஐம்பதுகள், அறுபதுகளுக்குப் பின்னர் அடுத்தடுத்த தலைமுறை பெற்றோர் அவர்களும் கல்வி பெற்று முன்னேறியவர்களாக மாறுகையில் தங்களுடைய குழந்தைகளது கல்வி விஷயத்தில் அவர்களது ஈடுபாடு என்பதன் தன்மை முந்தைய தலைமுறை பெற்றோர் கொண்டிருந்த ஈடுபாட்டின் தன்மையிலிருந்து மாறுபட்டு வந்திருப்பதில் வியப்பில்லை. நாம் இங்கே விவாதிக்க இருப்பது, அந்த ஈடுபாடு என்பது வழிகாட்டுதல்-ஒத்துழைப்பு-பேருதவி என்ற வகையிலிருந்து குறுக்கீடு-தலையீடு-முட்டுக்கட்டை என்கிற இன்னோர் எல்லை வரை பயணம் செய்வது பற்றியதுதான்.

இன்னும்கூட சிற்றூர்களிலிருந்து முதல் தலைமுறை மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கும், உயர்கல்விக்கும் இன்றும் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சமூகத்தின் தட்டுக்களில் அடுத்த முனையில் உயர் கல்வி பயின்ற மூன்று நான்கு தலைமுறைகளைக் கடந்துவிட்ட குடும்பங்களையும் பார்க்கிறோம். இந்த முரண்பாட்டின் எதிரொலியும் இப்போதைய பெற்றோர் நடவடிக்கைகளில் தென்படுவதைப் பார்க்க முடியும்.

கல்வி எதற்காக?

கல்வி என்பது சமூக மதிப்பீடு என்ற காலம் ஒன்று இருந்தது. அது தேவையில்லை, வாழத் தெரிந்தால் போதும், சொத்து இருந்தால் எதையும் சமாளிக்க முடியும் என்ற நிலவுடைமை சமூகத்தின் மிச்ச சொச்ச சிந்தனைகளோடு முட்டி மோதி கல்வியின் வளர்ச்சி ஏற்படவே செய்தது. கல்வி நாகரிகத்தின் அடையாளம் என்ற வரையறையை முன்வைத்தாலும், சமூக பாகுபாடுகளின் தாக்கத்தின்முன் கல்வி பெற்றவர்களும் தங்களை ஒப்புக் கொடுத்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. படிப்பு என்பது வேறு, கால காலமான சமூக வழக்கம் என்பது வேறு. அந்த சமூக வழக்கத்தில் ஊறிய சிந்தனைகளைத்தான் நெஞ்சில் பதித்துக் கொள்ளவேண்டும் என்ற தேர்வு தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலம் கடத்தப்படுகிறது. ஆனால் கல்வி இதற்கான ஒரு வேகத் தடையை நிச்சயம் ஏற்படுத்தவே செய்கிறது. அது விரிந்த விவாதத்திற்கு உட்பட்ட பொருள்.

இந்தப் பின்புலத்தில் பெற்றோரின் இயங்குதல் வெவ்வேறு முறைகளில் அமைகிறது.

எந்த மாதிரியான ஊடாட்டம் ஆரோக்கியமானது?

குழந்தைகள் வளர்ச்சியில் பெற்றோர் என்ன மாதிரியான முறையில் ஊடாட வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் பலர் ஏராளம் சொல்லியிருக்கின்றனர். மருத்துவ உலகம்-குறிப்பாக உளவியல் மருத்துவம் அருமையான அம்சங்களை சமூக போக்கிலிருந்தும், தனித் தனி அனுபவங்களின் வெளிச்சத்திலிருந்தும் படிப்பினைகளாகவும் கூட வழங்கிக் கொண்டே இருக்கிறது.

அதற்கெல்லாம் வெகுமுன்பே கலீல் கிப்ரான், அதிரடியாகச் சொன்ன கவிதை மொழியை உலகம் இன்னும் கற்க மறுக்கிறது.

உங்கள் குழந்தைகள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் வாழ்க்கையின் புதல்வர்களும் புதல்வியரும் ஆவர். அவர்கள் உங்கள் மூலம் வந்தவர்களே அன்றி உங்களிடமிருந்து தோன்றியவர்கள் அல்ல.

உங்களோடு இருப்பதனானேலேயே அவர்கள் உங்களுக்கானவர்கள் ஆகிவிட மாட்டார்கள்.

உங்கள் அன்பைச் செலுத்தலாம் நீங்கள், உங்கள் எண்ணங்களை அல்ல.

ஏனெனில் அவர்களுக்கே உரித்தான எண்ணங்கள் அவர்களுக்கு உண்டு….

என்று விரியும் அந்தக் கவிதை குழந்தைகளின் தனித் தன்மைக்கு குந்தகம் விளைவிக்காத உதவிகளையே பெற்றோர் செய்யக் கேட்டுக் கொள்கிறது.

நடைமுறையில் ‘சொன்னா சொன்ன பேச்சைக் கேட்கணும் இல்லையென்றால் எக்கேடும் கெட்டுப் போகட்டும்’ என்பதான அணுகுமுறை பெற்றோரிடம் ஆதிக்கம் செய்கிறது. நொடிக்கு நொடி தலையீடு செய்வதும் சரி, கண்டு கொள்ளாமலே விட்டு விடுவதும் சரி ஒரு புள்ளியில் இணைந்து குழந்தைகளின் வளர்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

கல்வியைக் குறித்த மட்டில் ஏற்படும் பிரச்சனைகளை மட்டும் இங்கே சற்று காண்போம். இப்போதைய கல்வி முறையின் வேகத் தன்மை, போட்டி உலகம், சம வயதில் உள்ள குழந்தைகளை ஒப்புநோக்கும் பிரச்சனை இவையே அதிகம் கவனிக்கத் தக்க விஷயங்களாக உருப்பெற்று வருகின்றன.

சலவை எந்திர உளவியல் போக்கு

பள்ளியில் தொடக்கநிலை வகுப்பில் சேர்த்ததும், இனி அடுத்தடுத்த வளர்ச்சியை இந்த நிறுவன ஏற்பாடே கவனித்துக் கொள்ளும் என்று கருதுகிற தன்மை அதிகமாகி வருகிறது. அவ்வப் பொழுது எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ அதனைச் செலுத்தி வருவது; நன்கொடையோ, புத்தகங்களோ, இதுவோ, அதுவோ என்ன கேட்டாலும் கொட்டிக் கொட்டிச் செய்துவிட்டு பள்ளி இறுதி வகுப்பு, பிளஸ் 2, பின்னர் உயர் கல்விக்குத் தகுதியாக வெளியேறி விட்டால் போதும் என்கிற மனப்பான்மை அது! அங்கே என்ன நடக்கிறது; என்னவிதமான கல்வி கிடைக்கிறது; குழந்தையின் பன்முகத் தேடலுக்கு ஊக்கம் பிறக்கிறதா, முடங்கிப் போகிறதா என்ற எதையும் பெற்றோர் அக்கறை எடுத்துப் பார்ப்பதில்லை.

மேற்கண்ட அணுகுமுறையை ‘சலவை எந்திர உளவியல்‘ (WASHING MACHINE PSYCHOLOGY) என்ற பெயரால் அடையாளப்படுத்தலாம். துணிமணிகளை தனித்தனியாக எடுத்து, தண்ணீரில் அழுக்கு போக அலசி, சலவைக் கட்டியைப் பயன்படுத்தித் துவைத்து, வெளுத்து, அலசிப் பிழிந்து உலர்த்திய காலம் இப்போது மாறிவிட்டது; பொறுப்பை ஓர் எந்திரத்திடம் ஒப்படைத்து தண்ணீர், சலவைப் பொருள், வெப்ப அளவு, துவைக்க வேண்டிய துணிக்கேற்ற வேக அளவு இவற்றை மட்டும் சரி பார்த்து விசையை அழுத்திவிட்டு நாம் வேறு வேலையைப் பார்க்கப் போய்விடலாம். எந்திரம் அதன் வேலையை முடித்தபின் துணியை எடுத்து உலர்த்தினால் போதும். அதிநவீன எந்திரம் கிடைத்தால் அதுவே துணிகளை உலர்த்தியும் கொடுத்துவிடும்.

இப்படி பட்டும் படாத தன்மை குழந்தைகளை ஆரம்ப நிலையில் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டு உயர் கல்விக்குப் போகும் நேரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான பழியை அவர்கள் மீதே சுமத்துவதில் முடிகிறது. காசு கொடுத்தால் போதும்; அதோடு என் கடமை முடிகிறது என்ற போக்கு. குழந்தைகளது நலனில் உண்மையான பாத்திரம் வகிக்க விடுவதில்லை. மாணவர்களிடம் தோன்றும் முரட்டுத் தனம், தகாத சேர்க்கை, தவறான பழக்க வழக்கங்கள், எந்தத் தீய செயலுக்கும் ஆட்பட்டுவிடும் அபாயம் இவற்றுக்கு இந்த அணுகுமுறை பெரிதும் காரணமாகிறது. அருமையான குழந்தைகள் முடங்கிப் போவதும் நேர்கிறது.

அர்ச்சனா எத்தனை மதிப்பெண் வாங்கினால் எனக்கென்ன?

இன்னொருபுறம் ஓயாத தலையீடு, ஒப்பு நோக்கல் பிரச்சனை. மதுரை எஸ் பி ஓ ஏ மாணவர் கார்நியோ நிமலன் (தி இந்து: திறந்த பக்கம்:மார்ச் 11, 2012) எழுதியிருந்த கட்டுரையில், “தேர்வுகளில் எனது மதிப்பெண் பற்றிப் பேசுங்கள் என் தந்தையே, அர்ச்சனா எவ்வளவு வாங்கி இருக்கிறாள் என்று எதற்குக் கேட்கிறீர்கள்?” என்று பொரிந்து தள்ளி இருந்தார். போட்டி எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இருப்பதில் தவறில்லை. என் பெற்றோருக்கும் அவள் பெற்றோர்க்கும் எதற்கு போட்டி என்று மேலும் எழுதுகிறார் அந்த மாணவர்.

மதிப்பெண் பட்டியல் பெறுவதற்குப் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர், 99 மதிப்பெண்கள் வாங்கினாலும் தனது மகள் ஏன் நூற்றுக்கு நூறு வாங்கவில்லை என்று வாதம் செய்கின்றனர். இது ஏதோ பத்தாம் வகுப்பு காலத்தில் அல்ல, ஏழாம் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கே இந்த சோதனை. கொண்டாட வேண்டிய குழந்தைகளை ஓயாது துரத்தித் துரத்தி வெறுப்படைய வைப்பது மோசமான உளவியல் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது.

மைதானமே இல்லாத பள்ளிக்கூடங்கள்

குழந்தைகளுக்கு பாடத்தின் மீது மட்டுமே கவனம் வேண்டும் என்ற வகையில், விளையாட்டு நேரத்தை அவர்களுக்கு மறுப்பது அவர்களை வேறு வகையில் தங்களது கேளிக்கைகளைத் தேர்வு செய்து கொள்ளத் தூண்டுகிறது. வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப்படும் பிள்ளைகள் கடைசியில் அலைபேசி, கணினி மூலம் விளையாடும் விளையாட்டுக்களில் மூழ்கி தங்களது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கும் அலைக்கழிப்புகளுக்கு உள்ளாகின்றனர். நல்ல மதிப்பெண்களுக்காக விளையாட்டு மைதானமே இல்லாத பள்ளிகளில் சேர்க்கக் கூட தயங்குவதில்லை பெற்றோர்.

மதிப்பெண்கள் குறித்த பெற்றோரது பதட்டத்தின் மிகப் பெரிய சோக வெளிப்பாடுதான் பெருகிவரும் ‘போர்டிங்’ பள்ளிகள். பல மைல் தொலைவுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர் மாணவர்கள். குழந்தைகளை ஜெயிலில் போட்டு, பின்னர் பெயிலில் எடுத்துப் பார்த்துவரும் பெற்றோர் என்று இதைத் தான் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா சோகமாக வருணிக்கிறார்.

கல்வி என்பது மூளைக்கான விஷயம் என்ற பெற்றோரின் தவறான புரிதலால் குழந்தைகளுக்கான கல்வி பலவித வாழ்க்கை அம்சங்களையும் உள்ளடக்கியது என்பது பிடிபடாமலே போகிறது. துள்ளாட்டமான கல்விப் பயணம் வாடி வதங்கிய களைப்பான நகர்த்தலாக மாறிவிடுவதில் பெற்றோரின் வருந்தத் தக்க பங்களிப்பு சேர்ந்திருக்கிறது. அவர்களது போதாமை அல்லது அவர்களது பிடிவாதம் அல்லது அவர்களது பரிதாபத்திற்குரிய குழப்பம் இதற்கு காரணமாகிறது. வறுமை, பொருளாதார நெருக்கடி இவை ஏற்படுத்தும் சிக்கல்கள் தனியே விவாதிக்க வேண்டியவை.

கசங்கிப் போகும் மலரின் இதழ்களாய்

unnamed.jpgதங்களைப் பெருமைப்படுத்தும் குழந்தைகளின் பெற்றோராக எல்லோரும் இருக்க விரும்புகிறோம். சங்கடமான எந்த இடைச் செருகலையும் நாம் கடந்து போகத் துடிக்கிறோம். பதட்டமான அன்றாட வாழ்க்கை குழந்தைகளின் மீதான சந்தேகமாக வெளிப்படுகிறது. பிள்ளைகள் எந்த விஷயத்தைப் பேச வரும்போதும், நாம் குறுக்கிட்டுக் கேட்கும் அவர்களது தேர்வுகள், மதிப்பெண்கள் குறித்த கேள்விகள் அவர்களது முகத்தில் படரும் வெளிச்சத்தை ஊதி அனைத்துவிடுகிறது. மற்ற குழந்தைகளின் குறும்புகள், வகுப்பறையில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு, சேட்டைகள் பற்றியெல்லாம் காதுகொடுத்து கேட்பதற்கு அனுமதிக்காத வேகமான வாழ்க்கைமுறை ரசனை மிக்க பருவத்தின் அத்தனை இதழ்களையும் ஈவிரக்கமின்றிக் கசக்கிப் போடுவதாகிறது.

கண்கள் விரிய விரிய அவர்கள் புதிதாகக் கற்ற செய்திகளை பகிர்ந்து கொள்ளவரும்போது எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்ற பதிலடி அவர்களது உளவியலைச் சிதைக்கிறது. இதன் பிரதிபலிப்பு அவர்கள் பள்ளி இறுதி வகுப்பில் அல்லது உயர் கல்விக்கான தயாரிப்பில் இருக்கையில் பெற்றோர் ஏதாவது கேட்டால் பதில் சொல்லாமல் எரிந்து விழுவதில் காணப்படுகிறது.

வேற்று உலக ஜீவராசிகளா?

பத்தாம் வகுப்பு எட்டுகிற குழந்தையின் பெற்றோர் அந்த நாளிலிருந்து பதட்டமான உடைகளை அணிந்து, வேகமான உணவுவகைகளை ருசித்து, தடுமாற்றமான சாலைகளில், நெரிசல் மிக்க நேரங்களில் நடையாய் நடந்து, குழப்பமான கனவுகளுக்குப் பயந்து தூங்காமலே விழித்திருந்து வேறு ஓர் உலகத்தின் ஜீவராசிகள் மாதிரி நடந்து கொள்ளத் தொடங்குகின்றனர்.

பள்ளிகளும், நண்பர்களும்,உறவினர்களும் இந்தப் பெற்றோரை வாட்டி எடுப்பது சொல்லி மாளாது. ஹால் டிக்கெட்டை கோவிலுக்குச் சென்று வைத்து அருச்சனை செய்வதிலிருந்து, பெற்றோருக்கு பாத பூஜை செய்வது, தேர்வு நாளன்று பள்ளி வாசலில் கும்பலாகத் திரண்டு சென்று வாழ்த்தோ வாழ்த்தென்று சொல்லி உருட்டி மிரட்டி அனுப்புவது என நடப்பு காலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுக் காலங்களில் பெற்றோர் படும் பாடும், அவர்கள் பிள்ளைகளைப் படுத்தி எடுக்கும் பாடும் சித்திரவதை.

ஒரு காலகட்டம் வரை பட்டப் படிப்புதான் முன்னுரிமை பட்டியலில் இருந்தது. எல்லாரும் பி ஏ, பி எஸ் சி என்று அலைந்தனர். தொண்ணூறுகளின் இறுதியில் எல்லா பெற்றோர்க்கும் பொறியியல் தேவதை கனவில் வரத் தொடங்கினாள். மருத்துவ அம்மன் ஆட்டிப் படைத்தாள். இலக்கியம், சமூக அறிவியல், வரலாறு, அரசியல் அறிவியல் போன்ற பாடப் பொருள்கள் எதற்கும் விளங்காது போனவர்களுக்கு என்று சொல்லாமல் சொல்லப்பட்டது.

தனி அனுபவங்களும் பொதுவான படிப்பினைகளும்

இதன் அவஸ்தைகளும் பெற்றோர்-குழந்தைகள் விவாதத்தில் பெருத்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நிறைய பிள்ளைகள் பாதியில் கல்லூரிப் படிப்பிலிருந்து நின்றுவிடுவது, திணறுவது, தோல்வியடைந்து நொறுங்கிப் போவது என்ற பல பாதிப்புகளை பொது விவாதங்களில் நாம் பேசுவது கிடையாது. அது தனித் தனி நபரது அனுபவம் போலவும், அவரவர் விதி என்பதாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது.

கல்வி குறித்த புரிதலில் ஏற்படும் அடிப்படை குழப்பங்களே இத்தனை பிரச்சனைகளுக்கும் தோற்றுவாய். சமூக மனிதர்கள் நாம் என்பதும், கல்வி என்பது மனித குல வளர்ச்சியின் முன்னேற்றப் படி என்பதும், சொந்தத் திறன்-தேடல்-பேரார்வம் கொண்டிருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் தங்களை வெளிப்படுத்த முடியும் என்பதும், யாரும் யாரோடும் ஒப்பிடத் தக்கவர் இல்லை என்பதும் நமக்குப் பிடிபட்டு விடுமானால் சமூகத்தின் தோற்றம் அதிசயிக்கத் தக்க விதத்தில் உருமாறும்.

மொகலம்மா அவரது தாய்க்கு ஒற்றைக் குழந்தை அல்ல. ஆனால், படிப்பு வாசனை அற்ற அந்தத் தாய், மற்ற குழந்தைகளைக் காட்டிலும், உடல் ஊனமுற்றிருக்கும் மொகலம்மாவுக்குத் தான் கல்வி முக்கியம் என்று கண்டறிந்தார். இன்று அந்தக் குடும்பத்தை மொகலம்மா தனது ஊதியத்தைக் கொண்டு பொறுப்பேற்று நடத்தும் நிலைக்கு வந்துவிட்டார். கல்வியற்ற தாய்க்கு அவரது அடிப்படை மனித இயல்பு உரமூட்டியது. புறக்கணிப்பு, விதி, சாபம் என்ற எல்லா ஊழையும் உப்பக்கம் கண்டு உழைவின்றித் தாழாது முயற்சி மேற்கொண்டு முன்னேறும் துணிவை மொகலம்மாவுக்கு அவரது கல்வி புகட்டியது. இதுவே வாழ்க்கையின் வலிமிகுந்த ஆனால் சுவாரசியமிக்க நம்பிக்கை வழிப் பயணம்.

 

http://www.vallamai.com/?p=46176

 

  • கருத்துக்கள உறவுகள்

பயன் தரும் பகிர்வுக்கு நன்றி உடையார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி உடையார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.