Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரிச்சம்பழக் குற்றவுணர்வு....

Featured Replies

ஒஸ்லோவில் சில வருடமாக  சிவைன் எரிக் எண்டு ஒரு வயதான, மென்மையான, அதிகம் அதிர்ந்து பேசாத,தனிமையாக வாழ்ந்த  நோர்வேயிய நண்பர் உண்மையாகவே எப்பவும்  நண்பராக இருந்தார், அடிக்கடி ஒரு குறிப்பிட்ட பப்பில், குறிப்பிட்ட சில நாட்களில்,வேறு சில குறிப்பிட்ட நண்பர்களுடன் அவரைச் சந்திப்பேன். என்னைப் போன்ற வந்தேறுகுடி பல்லின கலாச்சார மக்களை அவர் எப்பவும் நேசிப்பார்,நெறய கீளைதேய சமய நம்பிக்கை,தத்துவ விசியம் அவருக்கு எங்களை விட நல்லா தெரியும், இர்க்கு வேதத்தில் வரும் கபோடோநிதசம் எல்லாம் விளக்கமாத்  தெரியும். ப்றேடிறிச் நிட்சேயின் யாரதுஸ் டிரா  தத்துவ புத்தகத்தை சப்பித்  துப்புவார்.முக்கியமா அவரைச் சந்திப்பது, புத்தகங்கள் வாசிக்க சோம்போறியான என்னோட மூளையில், பல புத்தககங்கள் வாசித்த அவருடன் பேசிப்  பல விசியங்களை அறிந்து, முடிந்த வரை அதை என்னோட மூளையில் ஏற்றுவதுக்கு. இந்தக் கதை சிவைன் எரிக் என்ற மனிதரின்  அறிவு வீச்சு பற்றியதல்ல, அவரின் முடிவு பற்றியது...

 

சிவைன் பென்சன் எடுக்கிற வயதில் தான் சென்ற வருடம் இருந்தார், நோர்வேயில், சுவாரசியமே இல்லாத புள்ளிவிபர திணைக்களத்தில் ,புள்ளி விபரம் எடுத்து அதை அறிக்கையாக தயாரித்து திட்டமிடும் குழுக்களுக்கு அனுப்ப,அந்தக் குழுக்கள் அவர் அறிக்கையின் படி, நிதி வழங்குவதில், எதில் வெட்ட வேண்டும்,எதில் இன்னும் அதிக உதவி கொடுக்க வேண்டும்,எதை நிரந்தரமா நிற்பாட்டி வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எண்டு முடிவு எடுபார்கள் எண்டு அவரே சுவாரசியமாகச்  சொன்னார் தன்னோட வேலையை. சிவைன் சுவாரசியமே இல்லாத புள்ளி விபர திணைக்களத்தில் வேலை செய்தாலும் அவர் மாஸ்டர் டிகிரி படித்தது கிரேக்க தத்துவம்,சோகிரடிஸ்,அறிச்டோடல்,பிளேடோ , மார்க்ஸ் அரேளியசின் மேடிடேசன் புத்தகத்துக்கு நோர்வே மொழியில் விளக்கம் எல்லாம் அருமையா சொல்லுவார், எல்லாம் அத்துப்படி அந்த மனுஷனுக்கு. நான் அவரிடம் இருந்து நிறைய குழப்பம் உள்ள விசியங்கள் கேட்பேன்,அவர் குழம்பாமல் மிகத் தெளிவாகப் பதில் சொல்லுவார்.

 

ஒரு முறை "சிவைன் நீங்க இவளவு தெரிந்தும் ஏன் ஒரு ஆசிரியரா இருக்காமல் எப்படி அளடிக்கொள்லாமல் புள்ளி விபரம் எடுகிற வேலை செய்யுரிங்க,அதைவிட என்னைப்போல அரை அவியல்களுடன் இயல்பாக பேசுறிங்க ,எப்படி முடிகிறது  " எண்டு கேட்டேன், அவர் அதுக்கு பதில் தெரியாத மாதிரி இருந்தார், கொஞ்ச நேரத்தில் கிரிக் மொழியில் ,"Pensa como pensam os sábios, mas fala como falam as pessoas simples" எண்டு மென்மையாக பதில் சொல்லி போட்டு இருந்தார். இதுக்கு என்ன அர்த்தம் எண்டு கேட்டேன், ஜோசிச்சுப் போட்டு அதன் அர்த்தத்தை நோர்வேயிய மொழியில் சொன்னார்,எனக்கு அந்தளவு தத்துவ நோர்க்ஸ் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் சொல்ல சொன்னேன்,அவர் இப்படி சொன்னார்,"Think how they think the wise, but talk like simple people talk" இதை யார் சொன்னது எண்டு கேட்டேன், அறிச்டோடல் சொன்னார் என்றார், சிவைன்ஸ் இப்படிதான்,கேள்வி கேட்டால் வள வள எண்டு பதில் சொல்ல மாட்டார்,ஆனால் குடைஞ்சு குடைஞ்சு கேட்டால் ஒரு பல்கலைக்கழக பேராசியர் அளவுக்கு விளக்கமா சொல்லுவார்.

 

சிவைனிடம் " ஏன் வருசத்தில் ஒரே ஒரு முறை குளிக்கும் சோக்கிரடிசுடன் ஒரு அழகான திராட்சைப்பழம் போன்ற இளம் பெண் விரும்பி வந்து வாழ்ந்தா, அதை விட தன்னோட வாழ்நாள் முழுவதும் பெண்களைக் கிண்டல் பண்ணிய சோக்கிரடிஸ்,அவரோட அழகான, மண்டரின் ஒரேஞ் கலர் இளம் மனைவியைக் கலியாணம் கட்டியவுடன் பல்டி அடிச்சு ஏன் பல முரணான கருத்துக்களைச் சொன்னார் " எண்டு கேட்டேன், சிவைன் அதுக்கு வாயைத் திறக்காமல் சிரித்தார். இதுக்கும் கிரீக் பாசையில் ஏதாவது சொல்லுவாரோ எண்டு நினைக்க, நோர்வே பாசையில் நேரம் வரும் போது சொல்கிறேன் எண்டு சொன்னார்,சிவைன் ஒரு நாள் கட்டாயம் சொல்லுவார் ஆனால் அந்த நாள் எந்த நாள் எண்டு அவருக்கு மட்டுமே தெரியும். அதுதான் நான் அவரை அந்த பப்பில சந்தித்த கடைசி நாள் எண்டு இப்ப நினைக்கிறன்.

 

கொஞ்ச நாள் லீவு கிடைக்காததால்  சிவைனயும் ,அவர் நண்பர்களையும் சந்திக்கவில்லை,ஒருநாள் சிவைன் இன் நண்பர் மார்டின் போன் பண்ணி " சிவைன் உள்ளிவாள் சிக்குஸ் என்ற ஆசுபத்திரியில் இந்தா அந்தா எண்டு படுத்து கிடகுறார் " எண்டு சொன்னார். நான் அடுத்தநாள் அவரைப் பார்க்கப் போனேன், ஒரு அறையில் கட்டிலில் படுத்து கிடந்தார்,சில வயர்கள் முகம் முழுவதும் கொழுவிக் கிடந்தது, என்னைக் கண்டவுடன் வாயில செருகி இருந்த வயரை இழுத்து எறிஞ்சு போட்டு, அவரை நான் நலம் விசாரிக்க முதல் என்னை நலம் விசாரித்தார், " எப்படி நான் வாசலில் நிக்குறது தெரியும் " எண்டு கேட்டார், " எந்த வாசல் " எண்டு கேட்டேன் ,சிரித்தார். அவரின் கட்டிலுக்கு அருகில் இருந்த ஜன்னலைக் காட்டி ,எட்டிப் பார்க்க சொன்னார்,எனக்கு கொஞ்சம் பயம் வந்திடுது. இந்தாள் ஜென்னலால பாஞ்சு தற்கொலை செய்யப்போகுது போல இருக்கே எண்டு ஜோசித்தாலும் சிவைன் சாவுக்கு அர்த்தம் விளங்கிய மனுசன் அப்படி எல்லாம் கோழையாக முடிவு எடுக்க மாட்டார் எண்டு நினைத்து கொண்டு எட்டிப் பார்த்தேன்,

 

ஜன்னலுக்கு மிக அருகில் பழைய சவுக்காலை இருந்தது,  உள்ளிவாள் சிக்குஸ் என்ற ஆசுபத்திரி நோர்வேயின் ,ஒஸ்லோவில் மிகப் பழைய ஆசுபத்திரி, ஒரு காலத்தில் அங்கே சிகிச்சை பெற வநதவர்கள்,மறு படி வீடு திரும்பி போக உத்தரவாதம் இல்லாததால் ஒரு வேளை அருகிலேயே சவுக்காலை வைத்து அடக்கம் செய்து இருந்து இருக்கலாம் போல,இப்ப அப்படி இல்லை ஒரு சிலரைத் தவிர் பலர் நல்லபடியா வீட்டுக்கு போவதை நவீன அறிவியல் சாத்தியம் ஆக்கி இருக்கு. நான் சவுக்காலையைப் பார்த்து கொண்டு ஒண்டுமே பேசமால் நின்றேன், சிவைன் ," நான் பிறந்த தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன் சான்ட் சின்னக் கிராமத்தை விட ,உங்களைப்போன்ற வெளிநாட்டு மக்களுடன் வாழுந்த ஒஸ்லோவில் , நான் இறந்தால் என்னோட சில உறவினர்கள் அருகில் இந்த சவக்காலையில் புதைக்கும் படி சொல்லி இருக்றேன், எண்டு சொல்லி கொஞ்சநேரம் மவுனமா இருந்தார். " சவுகாலையில் கிடங்கு வேன்டினவன் பொம்பிளைப் பேயைக் கலியாணம் கட்டின ஜோக் தெரியுமா " எண்டு சாதரணமா கேட்டார். ஆச்சரியமாகி தெரியாது என்றேன் ,,சொன்னார். 

 

சவுக்காலையில் இறந்த ஒரு பிரேதத்தை தாக்க இரண்டு பேர் அந்த நாளில் கிடங்கு வெட்டிக் கொண்டு இருந்தாங்களாம் ,ஒருவன் கிடங்குக்கு உள்ளுக்க நிண்டு வெட்ட, மற்றவன் வெளிய மேல நிண்டு மண்ணை வேண்டி எடுத்துக் கொட்டிக்  கொண்டு நிண்ட நேரம்,ஒரு அழகனா இளம் பெண் அந்த யாருமற்ற சவச்சாலையில் நடந்துவர ,மேல நிண்டவன் கீழ நின்டவனுக்கு "  ....... " என்றானாம்,,,,கீழ நிண்டவன் அதைக் கேட்டு மேல நின்டவனுக்கு " ............." என்றானாம், இதைக் கொஞ்சம் நிண்டு கேட்ட அந்த இளம் பெண்,,,மேல நின்டவனிடம் " ......... " எண்டு கேட்டாளாம்,,,அதுக் மேல நிண்டவன், " பொறு வாறன் என்னோட நண்பனைக் கேட்டு சொல்லுறேன் " எண்டு கீழ நின்டவனிடம் "  ..... " எண்டு கேட்க...கீழ நிண்டவன் " பொறு வாறன் " எண்டு மேல ஏறி வரமுதல்,மேல நிண்டவன்,,,,,போக வெளிக்கிட ,,இதுக்கு மேல சொல்ல முடியாது, அவளவு கொசப்பு ஜோக் அது...கடைசில சிவைன் அந்த ஜோக்கை முடித்த விதத்தில் நான் கெக்கே பிக்கே எண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்,சிவைன் சிரிக்கவே இல்லை முகத்தை இறுக்கி வைச்சுக்கொண்டு நான் சிரிப்பதை சின்னக் குழந்தைகள் போல ரசித்துக்கொண்டு இருந்தார் .

 

ஒரு வெள்ளை நேர்ஸ் வந்து எட்டிப் பார்த்து " இது ஆசுப்பத்திரி கெக்கே பிக்கே எண்டு விழுந்து விழுந்து சிரிக்கக்  கூடாது " எண்டு சிரிக்காமல் சொன்னாள், அவள் சொன்னதை சிவைன் கேட்டார்,அவள் போன வுடன கதவை இறுக்கி சாத்தச் சொன்னார், சாத்தினவுடன் சிவைன், வயர் எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு, " இது ஆசுப்பத்திரியாம், இங்கே கெக்கே பிக்கே எண்டு சிரிக்கக்  கூடாதாம், இது ஆசுப்பத்திரியாம், இங்கே கெக்கே பிக்கே எண்டு சிரிக்கக்  கூடாதாம்" எண்டு உயிர் உள்ளவரை  கடைசியா சிரிக்கிற மாதிரி  விழுந்து விழுந்து சிரிச்சார். அவர் சிரிக்க சிரிக்க வாயாலும், மூக்காலும் ரத்தம் வந்தது,நான் திசு பேப்பர் எடுத்து துடைக்கப் போனேன், " துடைக்க வேண்டாம் " எண்டு சைகை காட்டினார், நான் நேர்சைக் போய்க் கூடிக்கொண்டு வந்தேன்,கொஞ்ச நேரத்தில் அவள் சிவைன் முகம்,ரத்தம் எல்லாம் துடைத்து வயர் எல்லாம் கொழுவி முடிய, " சிவைன் நான் போகப் போறேன்,உங்களுக்கு ஒண்டும் வராது,நான் சில நாளில் மறுபடி வாரன்,உங்கலோடு பேச  டெலிபோன் நம்பர் இங்கே வேண்டிக்கொண்டு போறேன் " என்றேன், " வரும் போது பேரீச்சம்பழம் வேண்டிக்கொண்டு வருவியா " எண்டு கேட்டார்,நான் கட்டாயம் வேண்டிக்கொண்டு வாறன் எண்டு சொல்லிப்போட்டு வெளிய வந்து நேர்சிடம் " சிவைனுக்கு என்ன வருத்தம் " எண்டு கேட்டேன் லுக்கேமியா என்ற ரத்தப் புற்றுநோய் எண்டு சொன்னாள், நான் வீட்டை உடைந்து போய் வந்திட்டேன்.

 

பின்னேரம் அன்று வேலையில் நிறையக் குழப்பமா வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்  எண்ணங்கள் ஓடியது, வாயாலும் மூக்காலும் ரத்தம் வாறது கொஞ்சம் கை விட்ட கேஸ் எண்டு கேள்விப்பட்டு இருக்றேன். சிவைன் லுக்கேமியாவால் பல வருடம் அவதிப்படுவதை  எனக்கு சொல்லவே இல்லை. அவர் தனி மனிதர் எந்தப் பெண்ணையும் கலியாணம் கட்டாமல் வாழ்ந்தவர்,அதுக்கு காரணம் அவர் சொல்லி இருக்குறார்,தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன் சான்ட் இல பிறந்த சிவைன் ,சின்ன வயசில் தன்னோட அம்மாவை அவரின் அப்பா எப்பவும் அடிச்சு நொறுக்குவது எண்டும், அதால இளவயதில் ஒஸ்லோ வந்து தனிய இருந்து படிச்சு, அதில இருந்து அவர் திருமணத்தில் ஆர்வம் அற்று,வேறு சில காரணங்களாலும் தனியா வாழ்ந்தார். தான் இறந்தால் தன்னுடைய வீட்டை தன் சகோதரிக்கும் ,சொத்துகளை தன் சகோதரியின் பிள்ளைகளுக்கும் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தார், தென் மேற்கு நோர்வேயின் கிர்ச்தியன்சான்ட் இல வசிக்கும் அவரின் ஒரே ஒரு சகோதரி தன்னை கடந்த இருவத்தைந்து வருடமா ஒஸ்லோ பார்க்க வரவில்லை எண்டும்,தன்னையும் ஒரு நாளும் அங்கே அழைத்தது இல்லை எண்டும்  ஆசுபத்திரியில் வைத்து சொன்னார். எப்படியோ,நானும் வேலை பிசியில் வேலை,வெட்டி,சோலி,சுரட்டு அதிகமாக் கொஞ்ச நாள் சிவைனை மறந்திட்டேன்,

 

ஒருநாள் முஸ்தபாவின் துருக்கி கடையில் ஆட்டு இறைச்சி வேண்டப் போன நேரம், அவனின் மேசையில் பேரிச்சம் பழம் பெட்டியில்  அடைச்சுக் காட்சிக்கு வைச்சு இருந்தான். அதைப் பார்க்க சிவைன் நினைவு வர, சடார் எண்டு போனை எடுத்து அவர் தொடர்பு கொள்ள சொன்ன இலக்கத்தைக் குத்தினேன்,மறு முனையில் ஒரு பெண் குரல் கேட்டது,நான் " சிவைனின் ப்ரென்ட் கதைகுறேன் ,சிவைனுடன் பேச முடியுமா " எண்டு கேட்டேன்,கொஞ்ச நேரம் அந்த லைன் மவுனமாகி, மீண்டும் உயிர் பெற்று, " அப்படியா,நீங்க சிவைனின் ப்ரென்ட் எண்டு சொல்லுரிங்க, சிவைன் மேல போய்ச் சேர்ந்து ஒரு கிழமைக்கு மேல ஆகி விட்டதே,ஒரு நண்பன் இறந்தது தெரியாமல், நண்பன் எண்டு அவரைச்  சொல்லுறிங்களே,நீங்க என்ன விதமான நண்பன் எண்டு எனக்கு விளங்கவில்ல " எண்டு என்னோட மனசாட்சிக்கு சொல்லுற மாதிரி  சொன்னாள்,நான் சுருக்கமா சொன்னேன் நான் யார் எண்டு,

 

அவள் மவுனமாக இருந்த சின்ன காலமற்ற இடைவெளியில், கொஞ்சம் ஜோசிதேன்,சிவைன் வயதானவர்,அவர் வியாதிக்கு மருந்தும் இல்லை, அவரே சாவை தனிப் பாடல் திரட்டில் சொன்ன மாதிரி  "..நரை கோட்டிளங்கன்று நல்வளநாடு நயந்தளிப்பான் விரையூட்டு தார்ப்புயன்வெற் பீழமன்னனெ தேவிரும்பி " பயப்பிடாமல் எதிர் கொள்ளும் மன நிலையில் இருந்தார் , அவரோட நேரத்தில் அவர் விடை பெறுவது ஒண்டும் கவலையான விசியம் இல்லை போல இருந்தாலும் சிவனைப் பார்க்க பேரிச்சம்பழத்தோடு வாறன் எண்டு சொல்லிப்போட்டு போகாமல் விட்டது குற்றவுணர்வு போல இருந்தது.

 

அந்தப் பெண் தொடர்ந்து  தான் சிவைனின் சகோதரி எண்டும்,சிவைன் இறந்த நாலாம் நாள் அவரை அடக்கம் செய்து,தான் இப்ப ஒஸ்லோவில் அவரின் வீட்டில் நிற்பதாகவும் சொன்னாள்.என்னோட நோர்க்ஸ் உச்சரிப்பை வைத்து என்னை ஒரு வெளிநாட்டு வந்தேறு குடி எண்டு கண்டு பிடித்து, " சிவைனுக்கு நிறைய வேற்று இன மக்கள் நண்பர்களாக இருந்து இருக்குறார்கள்,பலர் போன் பண்ணினார்கள், அவர் அவர்களுடன் சந்தோசமா இருந்து இருக்குறார், அவர் இந்த வீட்டை என்னோட பெயரில் எழுதி வைச்சு,அவரின் வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் என்னோட இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளின் பெயரில் பகிர்ந்து எழுதி இருக்குறார், நான் அவரின் ஒரே ஒரு சகோதரி பல வருடமா அவருடன் அன்பாக ஒரு வார்த்தை பேசவில்லை என்பதை நினைக்க கவலையாக இருக்கு " என்று அழுதாள் கடைசியாக " அவருடன் ஆசுபத்திரியில் இருந்த போது சில நிமிடங்கள் டெலிபோனில் பேசினேன்,ஒரு ஸ்ரீ லங்கா தமிழர்  ஒருவர்  மட்டுமே தன்னை ஆசுபத்திரியில் வந்து பார்த்ததாகவும்,அதை தான் மிகவும் பெரிய ஒரு விசியமாக நினைபதாகவும் சொல்லி இருந்தார்,அது யார் எண்டு உனக்கு  தெரியுமா,அவரை நான் சந்திக்க முடியுமா " எண்டு கேட்டாள்.

 

நான் அதுக்கு பதில் சொல்லவில்லை, " சிவைனின் ஆத்மா சாந்தி அடையப் பிராதிக்குறேன் " எண்டு சொல்லிப்போட்டு வைச்சிட்டேன்,முஸ்தப்பா வந்து " என்னப்பா பேரிச்சம்பழப்  பெட்டியப் பார்த்துக் கொண்டு டெலிபோனில யாரோட வைச்சு அறுக்கிறாய், காசில்லாட்டியும் பரவாயில்லை ரெண்டு பெட்டிய கொண்டு போ பிறகு காசைத் தா, இன்று இரவு பொப் மார்லியின் பாடல்களை இசைக்கும் இசை நிகழ்ச்சி  பிஸ்லெட் அரினாவில நடக்குது கும்மாளம் போடலாம்,இளம் பெட்டையள் மயக்கத்தில நிப்பாளுகள்,மடக்கலாம் வாரியா, " என்றான், " இனிக் கொண்டு போய்ப் பிரிஜோசனம் இல்லை  " எண்டு சொல்லிப்போட்டு , பேரிச்சம்பழ பேட்டிய உற்றுப் பார்த்தேன் ,அதில ஒரு படம் போட்டு இருந்தது , ஒரு பேரிச்ச மரத்தை சுற்றி சில ஒட்டகங்கள் நிக்க, அதுக்கு அருகில் யாழ்பாணத்தில செய்த வீட்டில ஆட்கள் குந்தி இருக்கிற மாதிரி சில அரபுக்கள் குந்தி இருந்தார்கள். அவர்களோடு என்னோட குற்ற உணர்வும் சேர்ந்தே குந்தி இருந்தது.....

 

நாவுக் அரசன் ஒஸ்லோ 05.08.14

10518975_10204088151345268_9083372697182

 

 

முகநூலிலிருந்து

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இவர் (நாவுக் அரசன்) எழுதும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன்!

 

மிகவும் எளிமையாகவும், அதே வேளை சொல்ல வந்த விடயத்தை ஆணித்தரமாகவும், எழுதும் நடை இவருடையது!

 

அண்மையில் தந்து முன்னாள் மனைவியை, ஒரு பிரபலமான உணவுச் சாலையில் சந்தித்ததைப் பற்றி எழுதியிருந்தார்!

 

அப்போது வந்த அலுவலைப் பாத்தமா... இரண்டு பியரைக் குடிச்சமா எண்டு வந்த அலுவலைப் பாத்திட்டு, வாலைச்சுருட்டிக்கொண்டு போயிட வேணும் என்று முன்னாள் மனைவி கூறுகின்றார்!

 

அப்போது ''வாலை மட்டுமல்ல, எல்லாவற்றையும் இப்போது சுருட்டித் தான் வைத்திருக்கிறேன்' என்ற இவரது பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! :D

 

இணைப்புக்கு நன்றிகள்... ஆதவன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.