Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி வீரன் - ஷோபாசக்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி வீரன்

ஷோபாசக்தி

சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் இத்தகைய சம்பவம் எங்களது போராட்ட வரலாற்றில் வெகு அபூர்வமாகவே நிகழ்ந்த ஒன்று. இயக்கங்களின் கைகளில் சிக்கியவர்கள் மீண்டதான நிகழ்வுகள் வெகு அரிதே. குறிப்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்பாக அத்தண்டனை விலக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். நான் கண்டி வீரனைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்தே இது எப்படி நடந்திருக்கக் கூடும் என யோசித்து வந்திருக்கிறேன். கண்டி வீரனின் கதையை எழுத வேண்டும் என்பதில் நான் வெகு ஆர்வமாயிருந்தேன். ஆனால் இது எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை.

அண்மையில் நான் லியோ டால்ஸ்டாய் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்தேன். ‘யானையைக் கட்டி யாரால் தீனி போட முடியும்” என்றொரு நீளமான தலைப்போடு அந்தக் கதையை ஆக்கூர் அனந்தாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தக் கதை அய்ரோப்பாவில் 1897-ல் நடந்த கதை. ஆனால் அந்தக் கதை போலத்தான் 1984-ல் சிலோனில் நடந்த கண்டி வீரனின் கதையும் இருந்திருக்க முடியும் என எனக்குத் திடீரெனத் தோன்றியது. வேறெப்படித்தான் கண்டி வீரன் சாவிலிருந்து தப்பித்திருக்க முடியும் சொல்லுங்கள்!

எனவே நான் ஆசிரியர் டால்ஸ்டாயின் அந்தக் கதையை வாங்கி அதற்குள் கண்டி வீரனின் சரித்திரத்தைப் புகுத்திச் சொல்வதற்கு நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்

சிலோனில் 1984 காலப் பகுதியில் பெரிதும் சிறிதுமாக முப்பத்தேழு தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்ததாக ஒரு கணக்கு. அந்த முப்பத்தேழு இயக்கங்களிலும் ஆகச் சிறிய குட்டி இயக்கத்திற்குப் பெயர் ‘சோசலிஸத் தமிழீழப் புரட்சிகர இயக்கம்’ ( ஆர்.ஓ.எஸ்.ரி.ஈ). சுருக்கமாக ‘ரோஸ்டி’ என அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

அந்த இயக்கத்தில் ஆறு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தார்கள். எல்லோருக்கும் இருபதிலிருந்து முப்பது வயதுகளிற்குள்தானிருக்கும். அந்த இயக்கத்தின் புரட்சிகர நிறைவேற்று மத்திய குழுவில் அந்த ஆறுபேருமே இருந்தார்கள்.

ரோஸ்டி இயக்கம் ஒரு தீவிர இடதுசாரி இயக்கமாகத் தன்னைச் சொல்லிக்கொண்டது. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டி தொடர்ச்சியான கெரில்லாத் தாக்குதல்களை இலங்கை இராணுவத்திற்கு எதிராக நடத்தி சோசலிஸத் தமிழ் ஈழ நாட்டை அமைப்பதே அவர்களது அரசியல் வேலைத்திட்டம். அந்தக் காலத்தில் பல ஈழத் தமிழ் இயக்கங்களிற்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சி கொடுத்து வந்தது. எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் போட்டி போட்டுக்கொண்டு இயக்கங்களிற்கு நிதி வழங்கினார்கள். ஆனால் ரோஸ்டி இயக்கம் இந்தியாவைச் சார்ந்து இருக்கக் கூடாது எனக் கொள்கை முடிவு எடுத்திருந்தது. மற்றைய இயக்கங்களைப் போல தமிழகத்தைப் பின்தளமாக உபயோகிக்கக் கூடாது என்றும் ஈழ நிலத்திலிருந்தே தங்களது இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒவ்வொரு மாதமும் மத்திய குழுவில் தீர்மானம் போடுவார்கள்.

என்னதான் ஆறுபேர்களை மட்டுமே கொண்ட குட்டி இயக்கமானாலும், தமிழீழத்திற்காகச் சரியான பாதையில் போராடும் சித்தாந்தப் பலமுள்ள இயக்கம் தமது ரோஸ்டி இயக்கம் மட்டுமே என்பதில் அவர்களிற்கு பலத்த நம்பிக்கையிருந்தது. மற்றைய இயக்கங்களிற்கு சளைக்காத வகையில் ரோஸ்டி இயக்கமும் அவ்வப்போது அறைகூவல் அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. மற்றைய இயக்கங்களை சித்தாந்த விவாதத்திற்கும் அழைத்தது. மற்றைய இயக்கங்கள் நடத்தும் இராணுவத் தாக்குதல்கள் தோல்வியுற்றால் அவை இராணுவரீதியாக எவ்வாறு தோல்வியாக அமைந்தன என ரோஸ்டி இயக்கம் ஆராய்ச்சி செய்து துண்டுப் பிரசுரம் வெளியிட்டது. துண்டுப் பிரசுரத்தின் கடைசியில் ‘புரட்சிகர ரோஸ்டி இயக்கத்தின் மக்கள் படை, இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கும்போது அது வெற்றிகரமான இராணுவச் சாதனைகளைச் செய்யும்’ என்றும் மறக்காமல் குறிப்பிடுவார்கள். ஆனாலும் மக்களது ஆதரவு துப்பரவாக ரோஸ்டி இயக்கத்தினருக்குக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரோஸ்டி இயக்கத்தினர் சாப்பாட்டிற்குக் கூடக் கஸ்டப்பட்டார்கள்.

யாழ் நகரத்திலிருந்து எட்டுக் கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஒரு சிற்றூரில் ரோஸ்டி இயக்கத்தினர் முகாமிட்டிருந்தனர். உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட பாழடைந்த பெரிய கல்வீடொன்றுதான் முகாம். அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் அமெரிக்காவில் இருந்தார்கள். எனவே எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி அந்த வீட்டை ரோஸ்டி இயக்கத்தினர் கையகப்படுத்திக்கொண்டார்கள். அந்த ஊரில் ஒரு சிறிய கடைவீதியும் நான்கு பெட்டிக் கடைகளுமிருந்தன. சனங்கள் எப்போது பார்த்தாலும் அந்தக் கடைத் தெருவில் கூடிநின்று அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள். அங்கேயிருந்த கடைகளில் ரோஸ்டி இயக்கம் வரி வசூலித்தது. வியாபாரிகள் பல இயக்கங்களுக்கும் வரி செலுத்த வேண்டியிருந்ததால் ரோஸ்டி இயக்கத்தினருக்கு மிகக் குறைவான பங்கே கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் அவர்கள் அரைப் பட்டினி கிடந்தும், ஒருவருக்கு ஒருநாளைக்கு நான்கு சிகரட்டுகள் மட்டுமே என்ற சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டும் கடைத்தெருவில் கிடைக்கும் இரண்டு ரூபா, அய்ந்து ரூபா வரிகளிலிருந்து சிறுகச் சிறுகச் சேமித்து வந்தார்கள். அந்தப் பணத்தில் ஒரு புரட்சிகர அரசியல் பத்திரிகையைத் தொடங்குவது அவர்களது திட்டமாயிருந்தது. அந்த வகையில் இப்போது ரோஸ்டி இயக்கத்தினரிடம் இரண்டாயிரம் ரூபாய்கள் சேமிப்பு இருந்தது.

ஒருநாள் மாலையில் அவர்கள் கடைத்தெருவில் வரி வசூலித்துக்கொண்டிருக்கையில் சனங்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஒரு திருடனைப் பிடித்துவைத்து உதைப்பதைக் கண்டார்கள். அந்தத் திருடன் உயரமான, வாட்டசாட்டமான தோற்றத்தைக் கொண்டவன். பனைமரத்தைப் போல நிறமுடையவன். அவனுக்கு முழிக் கண்கள். அவை சிவந்திருந்தன. வெள்ளைச் சாரமும் ஊதா நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தான். எவ்வளவுதான் அடித்தாலும் அந்தத் திருடன் அசையாமலும் ஒரு சொல் பேசாமலும் நின்றிருந்தான்.

ரோஸ்டி இயக்கத்தினர் தலையிட்டு அந்தத் திருடனை மக்களிடமிருந்து விடுவித்தனர். அவனது சட்டையைக் கழற்றி அதனால் அவனது கண்களைக் கட்டினர். ஒரு கடையில் சணற்கயிறு வாங்கி அதனால் அவனது கைகளைப் பின்புறமாகக் கட்டினர். உண்மையில் அந்தக் கடைத்தெரு மக்கள் அன்றுதான் ரோஸ்டி இயக்கத்தினர் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவதை முதற் தடவையாகக் கண்டனர். இதனால் ரோஸ்டி இயக்கத்தினருக்கு சனங்களிடம் சற்றுச் செல்வாக்கு உயர்ந்திருப்பது அடுத்தநாள் வரி வசூலிக்கச் சென்றபோது தெரிந்தது.

ரோஸ்டி இயக்கத்தினர் மேலதிக விசாரணைகளிற்காக அந்தத் திருடனை வீதியால் நடத்தி தங்களது முகாமை நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போது பெரிய இயக்கம் பச்சை நிற வண்டியில் அங்கு வந்தது. அந்த இயக்கத்தின் பொறுப்பாளன் “என்ன பிரச்சின?” என்று கேட்டான். அதற்கு ரோஸ்டி இயக்கத்தில் ஒருவன் “தோழர் இந்த பிரச்சினைய நாங்க பொறுப்பெடுத்திருக்கிறம், நாங்கள் பார்த்துக்கொள்ளுறம்” என்று விறைப்பாகச் சொன்னான்.

முகாமுக்கு அழைத்து வரப்பட்டதும் மத்திய குழுவுக்கு மத்தியில் தரையில் திருடன் உட்கார வைக்கப்பட்டான். அவனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரணை நடத்தப்பட்டது. முழு விசாரணையும் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டது.

அந்தத் திருடன் கண்டியைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. அவனுடைய பெயர் காந்திராஜன். ரோஸ்டி இயக்கத்தினருக்கு முதலில் அந்தப் பெயரே பிடிக்கவில்லை. எனவே அவர்கள் அந்தத் திருடனை அவனது ஊர்ப் பெயரைக் குறிப்பிட்டு ‘கண்டி’ என்று அழைத்தார்கள். அவ்வாறே விசாரணைக் குறிப்பேட்டிலும் பதிவு செய்தார்கள்.

கடைத் தெருவில் அவ்வளவு அடி வாங்கியும் வாயே திறவாத காந்திராஜன் இங்கே மத்திய குழு முன்னிலையில் தாராளமாகப் பேசினான். அவனுக்கு ரோஸ்டி இயக்கத்தினரின் கட்டுப்பாடும் நாகரிகமான விசாரணை நடைமுறைகளும் பிடித்திருந்தன. அவனைச் சூழவரயிருந்து அவனது கதைகளை ரோஸ்டி இயக்கத்தினர் வாய் பிளந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.

சிவகங்கைச் சீமையிலிருந்து சிலோனுக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் வம்சாவழியில் கண்டியிலுள்ள ஒரு தோட்டத்தில் பிறந்த காந்திராஜன், தனது பத்து வயதில் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டுக்கு வேலைக்காரனாகக் கொண்டுவரப்பட்டான். இதிலொரு ஆச்சரியம் என்னவென்றால் அவனை வேலைக்கு வைத்திருந்த வீட்டுக்காரர்களும் அவனைக் ‘கண்டி’ என்றே அழைத்தார்களாம்.

காந்திராஜன் தனது பதினைந்தாவது வயதில் எசமானி அம்மாவின் மண்டையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு கொஞ்சப் பணத்தையும் திருடிக்கொண்டு கண்டிக்கு ஓடியதிலிருந்து அவனது குற்ற வரலாறு ஆரம்பிக்கிறது. அதற்குப் பிறகு அவன் கொழும்பு, காலி, வவுனியா என்று போகாத ஊரில்லை. செய்யாத குழப்படியில்லை. போடாத சண்டையில்லை. படுக்காத பரத்தையரில்லை. பொலிஸிடம் வாங்காத அடியில்லை.போகாத மறியல் வீடு இல்லை.

கடைசியாக அவன், கண்டியிலிருந்த சில்லறைப் போதைப்பொருள் வியாபாரியான குடு பாஸிடம் அடியாளாக இருந்திருக்கிறான். கண்டி ரயில் நிலையத்திற்குப் பின்புறம் போதைப்பொருள் சில்லறை விற்பனை நடக்கும்போது அங்கே அவன் நின்றிருப்பான். பொலிஸ் வருகிறதா, போதைப் பொருள் தடுப்பு நார்க்கொட்டிக் பிரிவினர் மாறுவேடத்தில் அங்கு நடமாடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதுதான் அவனது வேலை. குடு பாஸின் ஆட்களிற்கும் இன்னொரு போதைப் பொருள் வியாபாரியான சிவம் நானாவின் ஆட்களிற்கும் இடையில் மோதல் எற்படும் போதெல்லாம் குடு பாஸின் தரப்பில் முதல் ஆளாக அடிதடியில் காந்திராஜன்தான் குதிப்பான். ஒரே அடியில் ஒருவனைச் சாய்க்கும் அளவுக்கு அவனுக்கு உடல் வலிமையிருந்தது.

கண்டியிலும் ஒரு சிறிய புரட்சிகரக் கட்சியிருந்தது. அந்தக் கட்சிக்கு ஒரு சிறிய யூனியனுமிருந்தது. அந்த யூனியனுக்கு லீடராக ரணசிறி என்பவன் இருந்தான். அவனைச் சற்று மிரட்டி வைக்குமாறு குடு பாஸிடம் தனபாலசிங்கம் முதலாளி சொல்ல, யூனியன் லீடரை மிரட்டுவதற்கு குடு பாஸ் காந்திராஜனை அனுப்பிவைத்தான். காந்திராஜனும் தட்டத் தனியனாக யூனியன் லீடரின் வீட்டுக்குப் போய் கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு வந்தான். அப்படி அவன் கொலை மிரட்டல் விடுத்ததற்குப் பல சாட்சிகளுமிருந்தன. இரண்டாம் நாள் இரவே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட யூனியன் லீடர் ரணசிறியின் உடல் தெருவில் கிடந்தது.

யூனியன் லீடரைத் தான் கொல்லவில்லை என்று குடு பாஸிடம் காந்திராஜன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். குடு பாஸ் கெட்ட கெட்ட வார்த்தைகளால் காந்திராஜனைத் திட்டினான். பின்பு குடு பாஸ் தலைமறைவாகிவிட்டான். காவற்துறை காந்திராஜனைத் தீவிரமாகத் தேடத் தொடங்கியது. காந்திராஜன் யாழ்ப்பாணத்திற்கு ஓடி வந்துவிட்டான். யாழ்ப்பாணத்தில் இலங்கைக் காவற்துறையின் அதிகாரம் செல்லாது. காவற்துறை இயக்கங்களிற்குப் பயந்து யாழ்ப்பாணத்திலிருந்த காவல் நிலையங்களை மூடிக்கொண்டிருந்த காலமது. மிகச்சில இடங்களில் மட்டும் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் நடமாட்டம் இருந்தது. அவர்களும் அவ்வப்போது இயக்கங்களால் சுட்டுக் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது காந்திராஜன் யாழ்ப்பாணத்தில் சிறு சிறு திருட்டுகள் செய்து காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறானாம்.

காந்திராஜனின் ஒப்புதல் வாக்குமூலம் முழுவதையும் ரோஸ்டி இயக்கத்தினர் எழுத்தெழுத்தாகப் பதிவு செய்துகொண்டனர். அந்த முகாம் வீடிருந்த காணிக்குள் பின்பக்க மதிற் சுவரையொட்டி தனியாக ஓர் அறை இருந்தது. வேலைக்காரர்கள் தங்குவதற்காக அந்த அறை கட்டப்பட்டிருக்கலாம். அந்த அறைக்குள் காந்திராஜனைச் சிறைவைத்து அறைக்கு வெளியே காவலுக்காக தனது ஓர் உறுப்பினரையும் ரோஸ்டி இயக்கம் நிறுத்தி வைத்துவிட்டு, அந்த இரவில் ரோஸ்டி இயக்கத்தின் மிகுதி அய்ந்து பேர்களும் காந்திராஜனின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஆராய்ந்து விவாதித்தார்கள்.

வன்முறை, திருட்டு, அடிதடி, கட்டற்ற பாலுறவுகள், போதைப்பொருள் வியாபாரம், திட்டமிட்ட கொலை எனப் பல குற்றங்கள் காந்திராஜனுக்கு எதிராகவே இருந்தன. அவனொரு லும்பன் - சமுகவிரோதி என்பதில் ரோஸ்டி இயக்கத்தினருக்குச் சந்தேகமே இருக்கவில்லை. எனவே அன்றிருந்த இயக்க வழமைகளின்படி ரோஸ்டி இயக்கம் காந்திராஜனுக்கு மரணதண்டனையைத் தீர்ப்பளித்தது. அவனை கடைத் தெருவிலுள்ள விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்துச் சுட்டுக்கொல்வதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை அவர்கள் காந்திராஜனுக்குச் சொன்னபோது அவன் ” இது ஞாயமில்லைங்க சாமி, செய்யாத கொலைக்கு தண்டனை கொடுக்கலாமுங்களா” எனக் கேட்டான். எனினும் அவனுக்கு மரணதண்டனை வழங்கும் ரோஸ்டி இயக்கத்தின் முடிவில் மறுபரிசீலனைக்கு இடமே இருக்கவில்லை. பொதுவாக அவர்கள் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு தீர அலசி ஆராய்வார்கள். முடிவை எடுத்துவிட்டால் அந்த முடிவில் உறுதியாக இருப்பார்கள்.

ஆனால் மரணதண்டனையை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கலிருந்தது. காந்திராஜனைச் சுட்டுக் கொல்வதற்கு ரோஸ்டி இயக்கத்தினரிடம் துப்பாக்கியே இல்லை. எனவே ஆயுதப் புழக்கமுள்ள இன்னொரு இயக்கத்திடம் உதவி கேட்பதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் அந்த இயக்கத்திடம் ஒரு துப்பாக்கியை ஒருநாள் வாடகையாகவும் அதற்கான இரண்டு சன்னங்களை விலையாகவும் பெறுவதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டு ஆளனுப்பினார்கள்.

அதற்கு மற்ற இயக்கமோ துப்பாக்கியை வாடகைக்குத் தர முடியாதென்றும் வேண்டுமானால் துப்பாக்கியோடு தங்களது தேர்ச்சி பெற்ற உறுப்பினர் ஒருவர் வந்து கச்சிதமாகக் காரியத்தை முடித்து வைப்பாரென்றும் அதற்கான கட்டணமாகப் பத்தாயிரம் ரூபாய்களைத் தாங்கள் அறவிடுவார்களென்றும் சொல்லி அனுப்பினார்கள்.

இதைக் கேட்டதும் ரோஸ்டி இயக்கத்தினர் அதிர்ந்து போய்விட்டனர். இந்தக் கண்டிக் கொலைகாரனுக்காக நாங்கள் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்வதா? முதலில் பத்தாயிரம் ரூபா நம்மிடம் எங்கேயிருக்கிறது? குறைந்த செலவில் காரியத்தை முடிக்க முடியாதா என்றெல்லாம் அவர்கள் புலம்பிக்கொண்டே விவாதித்தனர்.

தாங்கள் முதலில் உதவி கேட்டு அணுகிய இயக்கம் ஒரு முதலாளித்துவச் சிந்தனையுள்ள இயக்கம் என்பதால்தான் அவர்கள் அதிகமாகப் பணம் கேட்பதோடு, பொதுவாகவே ரோஸ்ட் இயக்கத்தை அவர்கள் மதிப்பதுமில்லை என்றெல்லாம் ரோஸ்ட் இயக்கத்தினர் பேசிக்கொண்டார்கள். எனவே இடதுசாரிச் சித்தனையுள்ள ஓர் இயக்கத்திடம் நாம் உதவி கேட்கலாம். அவர்களிடம் நமது பேச்சுக்கு மதிப்பிருக்கும் என்று ரோஸ்டியின் மத்திய குழு தீர்மானித்தது. அதன்படி அவர்கள் ஆயுதப் புழக்கமுள்ள இடதுசாரி இயக்கமொன்றிடம் உதவி கேட்டார்கள்.

குறிப்பிட்ட இடதுசாரி இயக்கம் துப்பாக்கியோடு தோழர் ஒருவரை அனுப்பிவைப்பதென்றால் அய்ந்தாயிரம் ரூபாய்கள் செலவாகுமென்று சொன்னார்கள். தனியே துப்பாக்கியை மட்டும் வாடகைக்குக் கொடுப்பதென்றால் வாடகை மூவாயிரம், வைப்புப் பணம் ஆறாயிரம் என்றார்கள். அதுவும் ரோஸ்டி இயக்கத்தினருக்குக் கட்டுப்படியாகாது. நமது மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் இந்தக் கண்டிக் கொலைகாரனுக்காக நாங்கள் இவ்வளவு பணம் செலவு செய்வதா? அவ்வளவு பணமிருந்தால் நாங்கள் தங்கமாக நமது பத்திரிகையை ஆரம்பிக்கலாமே என்றவாறெல்லாம் அவர்கள் சிந்தித்தார்கள். எவ்வாறு தங்களிற்குக் கட்டுப்படியாகும் வண்ணம் குறைந்த செலவில் மரணதண்டனையை நிறைவேற்றலாம் என அவர்கள் மறுபடியும் நுணுக்கமாக ஆராய்ந்தார்கள்.

இந்தத் துப்பாக்கி எடுப்புச் சாய்ப்பில்லாமல் வேறு வழியில் மரணதண்டனையை நிறைவேற்றினால் என்னவென்று அவர்கள் யோசனை செய்தார்கள். கத்தியால் வெட்டிக் கொல்லலாமா? என்றொரு யோசனையை ஒருவன் முன்வைத்தபோது அது மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டி கால வழமை என மத்திய குழுவில் பெரும்பான்மை ஆட்சேபித்தது. கைதியை அடித்தே கொல்வதற்கு இயக்க உறுப்பினர்கள் யாருக்கும் மனத் தைரியமில்லை என்பதைவிட அடித்தால் சாகுமளவிற்கு காந்திராஜன் பலவீனனாகத் தெரியவில்லை. அவன் உருக்கைப் போன்ற உடல்வாகு கொண்டவன். நஞ்சூட்டிக் கொல்லலாம் என்ற யோசனையும் மத்திய குழுவின் பெரும்பான்மையால் நிராகரிக்கப்பட்டது. அது சதிகாரர்களின் பாணி. ஒரு புரட்சிகர இயக்கம் ஒருபோதும் அதைச் செய்யலாகாது.

கடைசியில், நாமே சொந்தமாக இரண்டாம் கையோ ஓட்டை ஒடிசலோ ஒரு மலிவு விலைத் துப்பாக்கியை வாங்கி வந்து அதனால் காந்திராஜனின் கதையை முடித்துவிடுவது என்று மத்திய குழு உறுதியான முடிவுக்கு வந்தது. விசாரித்துப் பார்த்ததில் என்னதான் பண்டாரவன்னியன் காலத்துப் பழைய துப்பாக்கியாக இருந்தாலும் நான்காயிரம் ரூபாய்களுக்குக் குறைய விலைக்குக் கிடைக்காது என்பது தெரிந்தது. அவ்வளவு பணத்திற்கு ரோஸ்டி இயக்கத்தினர் எங்கே போவார்கள்! அந்தச் சிறிய கடைத்தெருவில் வாங்கும் வரியைப் பட்டினியாகக் கிடந்து அப்படியே சேர்த்து வைத்தாலும் நான்காயிரம் ரூபாய்களைச் சேர்க்க இரண்டு வருடங்களாகுமே. அதுவரை இந்தக் கண்டிக் கொலைகாரனைக் கட்டி அவிழ்க்க முடியுமா.

சிறை வைக்கப்படும் கைதிக்கு மூன்று வேளை உணவும் இரண்டுவேளை தேநீரும் வழங்க வேண்டுமென்பது ரோஸ்டி இயக்கத்தின் சட்ட விதிகளிலொன்று. கிழமைக்கு ஒருமுறை எண்ணைக் குளிப்புமுண்டு. கைதிக்கு நாளொன்றுக்கு நான்கு சிகரெட்டுகள் முதலில் வழங்கப்பட்டன. பின்பு கைதியின் கோரிக்கையை ஏற்று சிகரெட்டுகளிற்குப் பதிலாக ஒரு கட்டு பீடிகள் நாள்தோறும் கைதிக்கு வழங்கப்பட்டன.

முகாமில் சமைக்கப்படும் உணவு, காந்திராஜன் சிறைவைக்கப்பட்டிருந்த அறைக்கு நேரம் தவறாமல் போய்க்கொண்டிருந்தது. இந்த ஒரு மாதத்திற்குள் உட்கார்ந்த இடத்திலிருந்தே நன்றாக மூன்று வேளையும் சாப்பிட்டதில் காந்திராஜன் ஒரு சுற்றுப் பெருத்தேவிட்டான். அவனது மேனியில் ஒருவகையான மினுமினுப்பும் வந்தது. அவன் சுகமாகத் தூங்கிக் கழித்தும் தூங்காத நேரங்களில் ஆனந்தமாகப் புகை பிடித்துக்கொண்டும் குஷாலாக இருந்தான். ஒரு மாத முடிவில் மத்திய குழு கணக்கு வழக்குப் பார்த்தபோது கைதியைப் பராமரிக்க மட்டும் ஆயிரத்துச் சொச்சம் ரூபாய்கள் செலவாகியிருப்பது தெரியவர மத்திய குழு கதிகலங்கிப் போய்விட்டது.

இந்த இழப்பை எப்படி ஈடுகட்டுவதென்றும், எப்படி மிகக் குறைந்த செலவில் கைதியைப் பராமரிப்பதென்றும் அவர்கள் மீண்டும் மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொண்டார்கள். எங்கேயிருந்தோ வந்த கண்டிக் கொலைகாரன் நமது மக்களின் வரிப்பணத்தைச் சாப்பிட்டுக் கொழுப்பதா என்று மத்திய குழு குமுறியது. பேசாமல் கைதியை விடுதலை செய்துவிடலாமென்று கூட யோசித்தார்கள். ஆனால் சமூகவிரோதி ஒருவன்மீது விதிக்கப்பட்ட மரணதண்டனையை தகுந்த காரணமில்லாமல் விலக்கிக்கொள்வது கொள்கைப் பிறழ்வு என்றபடியால் மத்திய குழு கொஞ்சம் தயங்கியது.

அப்போது ஓர் உறுப்பினன் ஒரு நல்ல ஆலோசனையை முன்மொழிந்தான்.

“இப்ப, நாங்கள் ஆள் மாறி ஆள் இரவு பகலாக் கைதிக்கு காவல் நிக்கிறம். இனி அவனுக்கு காவல் போடத் தேவையில்ல“

” காவல் இல்லாட்டி அவன் தப்பி ஓடிப் போயிருவானே“

“ஓடிப் போகட்டும்! அதோட எங்களப் பிடிச்ச சனியன் துலையட்டும்..அவன் ஓடினால் எங்களுக்கு என்ன நட்டம்? இயக்கத்துக்கு செலவு மிச்சம்தானே.”

அடுத்த நாளிலிருந்து காந்திராஜனின் அறைக்கு முன்னால் போடப்பட்டிருந்த காவல் விலக்கப்பட்டிருந்தது. கதவும் திறந்து விடப்பட்டிருந்தது. சாப்பாட்டு நேரமாகியும் சாப்பாடு வராததால் காந்திராஜன் சத்தம் போட்டுக் கூப்பிட்டான். யாரும் வருவதாகத் தெரியவில்லை.

காந்திராஜனுக்குப் பசி பொறுக்க முடியவில்லை. அவன், சிறைவைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மெதுவாக வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்துவிட்டு முகாமுக்கு நடந்துபோய் உணவு கேட்டான். உணவு கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் சிறை அறைக்குள் புகுந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டான். அடுத்துவந்த நாட்களில் இந்நிகழ்ச்சி தவறாமல் நிகழ்ந்தது. மூன்று வேளையும் முகாமுக்குப் போய் சாப்பாட்டையும் தேனீரையும் பீடிக் கட்டுகளையும் பெற்றுக்கொண்டு கைதி மறுபடியும் வந்து சிறைக்குள் புகுந்துகொண்டு சுகமாகக் காலத்தைக் கழித்தான். அவனுக்குத் தப்பித்துச் செல்லும் நோக்கமே இருப்பதாகத் தெரியவில்லை.

“இந்தச் சனியனை எத்தனை நாள்தான் கட்டிக்கொண்டு மாரடிப்பது” என மத்திய குழுவிற்குள் அபிப்பிராய பேதங்கள் கிளம்பலாயின. காவலை விலக்கிக்கொள்ள ஆலோசனை சொன்ன உறுப்பினனே இம்முறையும் இந்தப் பிரச்சினையைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். “நாங்கள் அவனாய் ஓடிப்போவானெண்டு பார்த்துக்கொண்டிருந்தால் அது நடவாது, என்னமும் தந்திரம் செய்துதான் அவனைக் கிளப்ப வேணும்” என்றான் அவன்.

அவன் சும்மா பராக்குப் பார்ப்பது போல கைதி சிறைவைக்கப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றான். அறைக்குள் சம்மணம் கட்டி வசதியாக உட்கார்ந்திருந்து கைதி இன்பமாக பீடி புகைத்துக்கொண்டிருந்தான். ரோஸ்டி உறுப்பினன் வருவதைக் கண்டதும் கைதி புகைத்துக்கொண்டிருந்த பீடியை தரையில் தேய்த்து அணைத்து, துண்டு பீடியைக் காதுக்குள் செருகிவிட்டு மரியாதை நிமித்தம் எழுந்து நின்றுகொண்டான். வந்தவன் கைதியிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான்.

“என்னடாப்பா உன்ர முகம் இண்டைக்கு சரியா வாடிக் கிடக்கு, பொஞ்சாதி பிள்ளையள நினைக்கிறாய் போல“

“அதுங்க கெடக்குது சாமி கழுதைங்க“

“என்னடாப்பா இப்பிடிச் சொல்லுறாய் ..உன்னைக் காணாமல் அதுகள் தவிச்சுப் போய்க் கிடக்குங்கள்“

” நா அங்கிட்டு இருந்தேன்னா அதுங்களுக்கு செரமம் தான் பாருங்க..இப்பதான் அதுங்க நிம்மதியா கெடக்குங்க“

“எனக்கென்னவோ உன்னைப் பார்க்க பெரிய பாவமாக் கிடக்கு..நீ இப்பிடிச் சொன்னாலும் உன்ர உள் மனதில பொஞ்சாதி பிள்ளையளப் பார்க்க வேணுமெண்டு ஆசை கிடக்கும்தானே. இப்பதான் இஞ்ச உனக்கு காவல் ஒண்டும் இல்லையே. நீ வேணுமெண்டால் ஓடிப் போ. பஸ்சுக்கு காசு வேணுமெண்டால் நான் தாறன். எங்கிட தோழர்மார் உன்னைத் தேடாமல் நான் சொல்லிச் சமாளிக்கிறன்.”

எழுந்து நின்ற கைதி மறுபடியும் சம்மணம் போட்டு சிறை அறையின் நடுவாக உட்கார்ந்துகொண்டான். பின்பு அவன் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு பேசினான்.

“அது தப்புங்க சாமி.. என்னைய நீங்க எவ்வளவு நம்பியிருந்தா காவலை எடுத்திருப்பீங்க. நான் துரோகஞ் செய்யலாங்களா.”

“இதுல ஒரு துரோகமுமில்ல கண்டி, நீ ஓடினால் நாங்கள் கவலைப்படமாட்டம்“

“நா எங்கிட்டு சாமி ஓடிப்போவ முடியும்? நீங்க நமக்கு தூக்குத் தண்டன கொடுத்திருக்கீங்கன்னு ஊரு ஒலகம் பூராவும் தெரிஞ்சுபோச்சு. இனி யாரு எனக்கு வேல கொடுப்பாங்க? நான் எப்பிடி பொழைப்பேன் சொல்லுங்க?”

ரோஸ்டி உறுப்பினனுக்கு வெறுத்துப் போய்விட்டது. அவன் திரும்பி நடந்தான். அப்போது கைதி கூப்பிட்டுச் சொன்னான்:

“சாமி காம்பரா கதவ மூடிட்டுப் போயிடுங்க“

கைதிக்கு அங்கிருந்து வெளியேறும் எண்ணம் கிடையவே கிடையாது என்பது மத்திய குழுவுக்குத் தெளிவாகிவிட்டது. அவர்கள் மீண்டும் தங்களது மண்டைகளைக் கசக்கிப் பிழிந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். எப்பாடு பட்டாவது எவன் தலையை அடகு வைத்தாவது உடனடியாக ஒரு துப்பாக்கியை வாங்கி அதனால் கைதிக்கு மரணதண்டனையை நிறைவேற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்பதுதான் அந்த முடிவு.

அந்தக் காலத்தில் இயக்கங்கள் பரவலாக வங்கிக் கொள்ளைகளை நடத்திவந்தன. எனவே ரோஸ்டி இயக்கமும் ஒரு வங்கியைக் கொள்ளையிட்டு கொள்ளைப் பணத்தில் முதல் வேலையாக துப்பாக்கி ஒன்று வாங்கி கைதியைப் போட்டுத் தள்ளிவிடுவது என்று முடிவு செய்தது.

கொள்ளையிடுவதற்காக ஒரு சிறிய கிராமிய வங்கி இலக்குவைக்கப்பட்டு திட்டங்கள் செம்மையாக வகுக்கப்பட்டன. திட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. அந்தக் கிராமிய வங்கியில் ஒரேயொரு காவலாளி மட்டுமே இருக்கிறான். காலை பத்துமணிக்கு முன்பு அந்த வங்கியிலும் அந்த வங்கியிருக்கும் தெருவிலும் பெரிதாக ஆள்நடமாட்டம் இருக்காது. அந்த வங்கியின் கம்பிக் கதவு எப்போதும் மூடப்பட்டுத்தானிருக்கும். கம்பிக் கதவுக்குப் பின்னால் நீண்ட கழியொன்றை கையில் வைத்துக்கொண்டு காவலாளி நின்றிருப்பான். அவன் வங்கிக்கு வருபவர்களை விசாரித்துவிட்டு கதவைத் திறந்து ஒருவரை மட்டும் உள்ளே அனுமதித்துவிட்டு மறுபடியும் கதவை மூடிக்கொள்வான். உள்ளே போனவர் திரும்பிய பிறகுதான் அடுத்தவரை வங்கிக்குள் நுழைய காவலாளி அனுமதிப்பான்.

ரோஸ்டி இயக்கத்தினர் சிவில் உடைகள் அணிந்த புலனாய்வுத் துறையினர் என்ற தோரணையில் காலை ஒன்பது மணிக்கு ஒரு காரில் அந்த வங்கிக்குச் செல்ல வேண்டும். ‘வங்கியில் வேலை செய்பவர்களில் ஒருவர் பயங்கரவாதச் சந்தேகநபர், அவரைக் கைது செய்ய வந்திருக்கிறோம்’ என்று சொல்லி வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க வேண்டும். இதுதான் திட்டம்.

ஆனால் இந்தத் திட்டத்திலிருந்த பிரதான குறைபாடு என்னவெனில் புலனாய்வு அதிகாரியென்றால் சிங்களத்தில் வங்கிக் காவலாளியிடம் பேசினால்தான் காவலாளி ஏமாறுவான். ஆனால் ரோஸ்டி இயக்க உறுப்பினர்கள் யாருக்குமே சிங்களம் பேசத் தெரியாது. மத்திய குழு ஒருநாள் முழுவதும் கடுமையாக விவாதித்த பின்பு தங்களது கொள்ளைத் திட்டத்தில் ஒருவனாக கைதி காந்திராஜனையும் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தது. ஏனெனில் காந்திராஜனுக்கு சுத்த சிங்களம் பேசத் தெரியும். தவிரவும் அவனது உயரத்தையும் உடற்கட்டையும் பார்க்கும் எவருக்கும் அவனைப் புலனாய்வு அதிகாரி என நம்புவதில் பிரச்சினையிருக்காது. அவனது தோற்றப் பொலிவுக்கு முன்னால், பசியாலும் பஞ்சத்தாலும் அடிபட்டிருக்கும் ரோஸ்டி இயக்க உறுப்பினர்கள் ஏப்ப சாப்பைகளாகவே தெரிந்தனர்.

சம்பவம் நடத்தப்பட்ட அன்று ஒரு வாடகைக் காரைக் கடத்திக்கொண்டு ரோஸ்டி இயக்கத்தினர் அந்தக் கிராமிய வங்கிக்குச் சென்றனர். மிடுக்கான உடையணிந்திருந்த காந்திராஜன் முன்னே செல்ல மூன்று ரோஸ்டி உறுப்பினர்கள் பின்னால் சென்றார்கள். ஒருவன் காரிலேயே சாரதி இருக்கையில் தயாராக உட்கார்ந்திருந்தான்.

காந்திராஜன் தனது வாழ்நாளில் எத்தனை விசாரணைகளையும் விசாரணை அதிகாரிகளையும் பார்த்திருப்பான்! எனவே அவன் கச்சிதமாக ஒரு பெரிய புலனாய்வு அதிகாரியைப் போல பிசிறில்லாமல் பாவனை செய்தான். வங்கியை நெருங்கும்போதுதான் தெரிந்தது, அந்த வங்கிக் காவலாளி துப்பாக்கி வைத்திருக்கிறான்.

காந்திராஜனுக்குப் பின்னால் சென்ற ரோஸ்டி உறுப்பினர்கள் தடுமாறினார்கள். அவர்களது கால்கள் பின்னிக்கொண்டன. திரும்பி ஓடிவிடலாமா என்பது போல ஆளை ஆள் பார்த்து முழித்தார்கள். அவர்கள் அந்த வங்கியைக் குறித்து சேகரித்து வைத்திருந்த தரவுகள் துல்லியமானவைதான். அங்கிருந்த காவலாளி நேற்றுவரை துப்பாக்கியில்லாமல் கையில் வெறும் கழிதான் வைத்திருந்தான். ஆனால் வடபகுதியில் வங்கிக் கொள்ளைகள் அதிகமும் நடப்பதால் அரசாங்கம் நேற்று முதல் கிராமிய வங்கிக் காவலாளிகளிற்கும் ஒப்புக்கு ஒரு பழைய ‘ரிப்பீட்டர்’ துப்பாக்கியை வழங்கியிருந்தது அவர்களிற்கு எப்படித் தெரியும்.

ஆனால் காந்திராஜன் துப்பாக்கியைப் பார்த்த பின்பும் கம்பீரமாக முன்னே நடந்து போனான். அவன் காவலாளி முன்னால் போய்நின்று தனது வலது கையை தனது மார்பு வரை விசுக்கென உயர்த்திய மாத்திரத்திலேயே காவலாளி பதறிப்போய் சல்யூட் செய்தான். காவற்துறை உயரதிகாரிகள் தங்களிலும் கீழான அதிகாரிகளிற்கு காந்திராஜன் செய்ததுபோலத்தான் கையை மார்புவரை மட்டுமே உயர்த்தி சல்யூட் அடிப்பதுபோல அரைகுறையாகப் பாவனை செய்வார்கள். காந்திராஜன் சிங்களத்தில் அதிகாரமாக இரண்டு வார்த்தைகள் பேசியதுமே கம்பிக் கதவு அகலத் திறந்தது. உள்ளே நுழைந்ததுமே, காந்திராஜன் இடது கையால் காவலாளியின் துப்பாக்கியைப் பற்றிப் பிடித்து இழுத்தவாறே வலது கையால் காவலாளியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை கொடுத்தான். காவலாளி தலைசுற்றி மயங்கி விழுந்தான். காந்திராஜன் கைகளில் ஏந்திய துப்பாக்கியுடன் ரோஸ்டி இயக்கத்தினரை உள்ளே வருமாறு அழைத்தான். அவர்கள் குடுகுடுவென்று ஓடி வந்தார்கள். காந்திராஜன் தலைமைதாங்கி துப்பாக்கியை நீட்டியபடியே முன்னே செல்ல ரோஸ்டி உறுப்பினர்கள் பின்னால் போனார்கள்.

அந்த வங்கியில் ஒரு மயிருமில்லை. துழாவித் தேடிப் பார்த்ததில் நூறு ரூபாய் சொச்சம் மட்டுமே சில்லறையாகச் சிக்கியது. அந்தச் சில்லறைகளைப் பொறுக்கிக்கொண்டு ரோஸ்டி இயக்கம் காரில் தப்பிச் சென்றது. காரின் முன்னிருக்கையில் காந்திராஜன் துப்பாக்கியோடு கம்பீரமாக இருந்தான். ஆள் நடமாட்டமில்லாத கடற்கரையோரமாக வண்டியைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து நடந்துபோய் முகாமை அடைந்தார்கள். முகாமுக்குப் போனதும் காந்திராஜன் துப்பாக்கியோடு போய் தனது சிறை அறைக்குள் புகுந்துகொண்டான். பார்த்துக்கொண்டிருந்த ரோஸ்டி இயக்கத்தினருக்கு பகீரென்றது.

துப்பாக்கியைக் கவர்ந்து வந்தது காந்திராஜனின் முழு முயற்சியே ஆகும். அதில் ரோஸ்டி இயக்கத்தினருக்கு எந்தப் பங்கும் கிடையாது என்ற உண்மை அவர்களைச் சுட்டது. சொல்லப்போனால் துப்பாக்கியைப் பார்த்ததுமே ரோஸ்டி இயக்கத்தினர் திரும்பி ஓட நினைத்ததுதான் உண்மை. எனவே நியாயப்படி அந்தத் துப்பாக்கிக்கு உரித்துள்ளவன் காந்திராஜன்தான்.

ஆனால் அந்தச் சமூகவிரோதியின் கையில் துப்பாக்கியிருப்பது சமூகத்திற்கு ஆபத்தானது என ரோஸ்டி இயக்கம் நினைத்தது. தவிரவும் அவனுடைய கையில் துப்பாக்கி இருக்கும்போது இவர்கள் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும். நித்திரைப் பாயில் வைத்தே வரிசையாகச் சோலியை முடித்துவிடமாட்டான் என்பது என்ன நிச்சயம். தவிரவும் இப்போது ரோஸ்டி இயக்கத்தினருக்கு அவசரமாக அந்தத் துப்பாக்கி தேவையாகவுமிருந்தது. அந்தத் துப்பாக்கியால்தான் அவர்கள் காந்திராஜனுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டிய நிலையிலிருந்தார்கள். எனவே அந்தத் துப்பாக்கியை காந்திராஜனிடமிருந்து பறிமுதல் செய்வதென மத்திய குழு முடிவெடுத்தது.

மத்திய குழுவின் ஆறுபேர்களும் சேர்ந்து எதற்கும் தயாரான நிலையில் சிறை அறையை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் அங்கே சென்றபோது காந்திராஜன் தரையில் குந்தி உட்கார்ந்துகொண்டு துப்பாக்கியைப் பாகம் பாகமாகப் பிரித்து தரையில் வைத்திருந்தான்.

” இது மிச்சம் பழைய தோக்கு சாமி. வேலைக்காவாது. கொஞ்சம் எண்ணய கிண்ணய போட்டு ரிப்பேர் பண்ணாத்தான் எதுனாச்சும் செய்யலாம்“

” என்ன கண்டி, உனக்கு துவக்கெல்லாம் கழட்டிப் பூட்டத் தெரியுமே?”

“ஆ தெரியுங்க சாமி. கூட்டாளிமாரோட வேட்டைக்கு போயிருக்கேன்“

மத்திய குழு அமைதியாகத் திரும்பி முகாமுக்கு வந்தது. அந்தத் துப்பாக்கி தரையில் அக்குவேறு சுக்குநூறாகக் கிடந்த கோலத்தைப் பார்த்ததுமே அதைவைத்துச் சுட முடியும் என்ற நம்பிக்கையை மத்திய குழு முற்றிலும் இழந்துவிட்டது. அன்று விடிய விடிய மத்திய குழு நித்திரையில்லாமல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, அதிகாலை நான்கு மணிக்கு மற்றொரு இயக்கத்தால் சுற்றி வளைக்கப்பட்டது.

அந்த மற்றைய இயக்கம் ஒரு பெரிய இயக்கம். அந்த இயக்கத்திற்கு தங்களைத் தவிர வேறுயாரும் செயற்படுவது பிடிக்கவே பிடிக்காது. அப்படிச் செயற்படும் இயக்கங்களை தருணம் பார்த்துத் தாக்கி அழிக்க அது திட்டம் போட்டிருந்தது. ரோஸ்டி இயக்கம் ஒரு வங்கியைக் கொள்ளையிட்டதை அந்தப் பெரிய இயக்கத்தால் தாங்கிக்கொள்வே முடியவில்லை. எனவே ரோஸ்டி இயக்கத்தினரை தடைசெய்துவிடுவது என்ற முடிவோடு அவர்கள் ரோஸ்டி இயக்கத்தினரின் முகாமுக்கு வந்திருந்தார்கள். ரோஸ்டி இயக்கத்தினரின் ‘பலம்’ குறித்து அவர்களிற்குத் தெரிந்திருந்ததால் வெறும் நான்கு பேர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். அவர்களில் இருவர் நவீனரகத் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள்.

அந்த நிலையில்கூட ரோஸ்டி இயக்கத்தினர் பெரிய இயக்கத்தோடு பேச்சுவார்த்தைக்குத் தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால் பெரிய இயக்கத்தின் பாணியே வேறு. அவர்கள் ரோஸ்டி இயக்க மத்திய குழுவின் ஆடைகளைக் களைந்து அவர்களை வெறும் உள்ளாடைகளோடு சுவரோரமாக முழந்தாள்களில் நிறுத்தி வைத்திருந்தார்கள். தூஷணத்தால் மட்டுமே அவர்கள் ரோஸ்டி இயக்கத்தினரோடு பேசினார்கள். ஒரு ரோஸ்டி உறுப்பினனுக்கு கன்னத்தில் அடியும் விழுந்தது. அப்போது அந்த உறுப்பினன் வலியால் அலறியது அந்த ஊருக்கே கேட்டது. கடைசியாக ரோஸ்டி இயக்கத்தின் மத்திய குழு ஒருமித்த குரலில் ஒன்றைச் சொன்னது:

“அண்ணே, எங்களத் தடை செய்யுறதெண்டா தடை செய்யுங்கோ, இப்பிடி மரியாதை கெடுத்தாதேயுங்கோ“

இதைக் கேட்டதும் பெரிய இயக்கத்தினர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்களிற்கும் இவர்களைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருந்தது. அப்போது இடிமுழக்கம் போல அடுத்தடுத்து இரண்டு சத்தங்கள் அந்த வீட்டை அதிரச் செய்தன. துப்பாக்கிகளை வைத்திருந்த பெரிய இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்களிற்கும் அடுத்தடுத்து நடு நெற்றியில் வெடி விழுந்தது. அவர்கள் மல்லாக்க விழுந்தார்கள். எங்கிருந்து சூடு வருகிறதென்று தெரியாததால் பெரிய இயக்கத்தின் அடுத்த இரண்டு உறுப்பினர்களும் மின்னலாக இருளிற்குள் மறைந்தார்கள். அவர்களது பயிற்சி அப்படியானது.

வீட்டிற்கு வெளியே இருளுக்குள்ளிருந்து சன்னலுக்குள்ளால் குறிபார்த்துச் சுட்ட காந்திராஜன் நீட்டிய துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்தான். இன்னும் சில நிமிடங்களிலேயே பெரிய இயக்கம் வந்து இந்த வீட்டை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிடும் என்பது ரோஸ்டி இயக்கத்தினருக்குத் தெரிந்திருந்தது. இந்த நாட்டின் எந்த மூலைக்குச் சென்று ஒளிந்துகொண்டாலும் பெரிய இயக்கம் தேடிப் பிடித்து அவர்களை அழித்தொழித்துவிடும்.

காந்திராஜன், ரோஸ்டி இயக்கத்தினரை உடைகளை அணியச் சொன்னான். அவர்கள் மறுபேச்சுப் பேசாமல் அவனது சொற்களிற்குக் கீழ்ப்படிந்தனர். கையில் ஏந்திய துப்பாக்கியுடன் அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புற வழியால் காந்திராஜன் வெளியேறினான். தோட்ட வெளிகளிற்குள்ளால் அவர்கள் புகுந்து ஓடி ஒரு மீனவக் கிராமத்தைச் சென்றடையும்போது நிலம் வெளிக்கத் தொடங்கியிருந்தது.

காந்திராஜன் தோளில் தொங்கவிடப்பட்டிருந்த துப்பாக்கியோடு சென்று மீனவர்களிடம் உதவி கேட்டான். தாங்கள் போராளி இயக்கமெனவும் அவசரமாகத் தங்களிற்கு விசைப்படகு தேவையாயிருக்கிறது என்றும் சொன்னான். மீனவர்கள் உற்சாகத்துடன் உதவ முன் வந்தார்கள். உடனடியாக ஓட்டி தயாரானான். அய்ம்பத்தைந்து குதிரை வலுவுடைய இரண்டு இயந்திரங்களோடு விசைப்படகும் தயாரானது. ரோஸ்டி இயக்கத்து மத்திய குழுவையும் காந்திராஜனையும் சுமந்துகொண்டு படகு வேகமாகக் கரையிலிருந்து மறைந்தது.

கரை கண்ணுக்கு மறைந்த பின்புதான் ரோஸ்டி இயக்கத்தினருக்கு நெஞ்சுக்குள் கொஞ்சம் தண்ணி வந்தது. விசைப்படகு அலைகளில் குதித்துக் குதித்துப் போய்க்கொண்டிருந்தது. கடல் நீர் விசிறியடித்ததில் எல்லோருமே நனைந்திருந்தார்கள். ஈரமாகியிருந்த பீடியொன்றைப் பற்ற வைக்கும் முயற்சில் காந்திராஜன் முனைப்பாயிருந்தபோது ரோஸ்டி இயக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவன் காந்திராஜனிடம் ” கண்டி, இப்ப நாங்கள் எங்க போய்க்கொண்டிருக்கிறம்?” என்று கேட்டான்.

“சிவகெங்க பக்கம் போயிடலாங்க சாமி. அங்கிட்டு நம்ம சொந்தகாரங்க கொள்ளப்பேரு கெடக்காங்க. ஒண்ணும் பெரச்சனயில்ல” என்றான் காந்திராஜன்.

(இம்மாத ‘அம்ருதா‘ இதழில் வெளியாகியது.)

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1216

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை.. இணைப்பிற்கு நன்றிகள் கிருபன்.. :D

**சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது.**

தெரியாது என்றுவிட்டு கண்டிவீரனின் கதையை அக்குவேறாக ஆணிவேறாக எழுதியுள்ளார்.. அப்படிப் பார்க்கப் போனால் ரோஸ்டி இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்திருப்பார் போல.. :lol:

நகைச்சுவை மிக்க நல்லதொரு கதை. வாய் விட்டு சிரிக்க தொடங்கிவிட்டேன். ஷோபாவின் கற்பனைத் திறன் அபாரம்!

  • கருத்துக்கள உறவுகள்

ரோஸ்டி சரியான காமடி கோஸ்டி 

 

"சிலோனில் 1984 காலப் பகுதியில் பெரிதும் சிறிதுமாக முப்பத்தேழு தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்ததாக ஒரு கணக்கு"

 

இது எந்தளவு உண்மையோ தெரியவில்லை. ஈழதமிழர்களின் ஒற்றுமக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

ரோஸ்டி சரியான காமடி கோஸ்டி 

 

"சிலோனில் 1984 காலப் பகுதியில் பெரிதும் சிறிதுமாக முப்பத்தேழு தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்ததாக ஒரு கணக்கு"

 

இது எந்தளவு உண்மையோ தெரியவில்லை. ஈழதமிழர்களின் ஒற்றுமக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

 

32 என்று கேள்விப்பட்ட ஞாபகம் உள்ளது.

 
நான் அங்கிருக்கும்போது கேள்விப்பட்ட ஒரு இயக்கத்தின் பெயர் ப்ரொடெக் (PROTEG). Protection of Tamil Eelam from Genocide. :o:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.