Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றத்தின் பின்னும் தொடரும் மறைந்தவர்களைத் தேடும் அவலம்

Featured Replies

Selvanayagam1-e1421696586539-300x211.jpg

 

நேரடி ரிப்போர்ட் ஜெரா

நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்தது காலம். என் அயல்வீடுகளில் கேட்டுக்கொண்டிருந்த பட்டாசுச் சத்தங்கள் உழவர் திருநாளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. மிகுந்த கோலாகலத்துடன் சூரியனை வரவேற்றுக்கொண்டிருந்தனர் மக்கள். நான் பேஸ்புக்கில் கடும்பிசி.

 

அப்போதுதான், 077705……. என்று ஆரம்பிக்கும் என் தொலைபேசியில் பதிவிடப்படாத இலக்கமொன்றிலிருந்து அழைப்பு. பிறகென்ன வாழ்த்துச்சொல்ல தொடங்கீட்டாங்கள், நினைத்துக்கொண்டே, “ஹலோ”..

“நான் மாலினி, நினைவிருக்கா உங்களுக்கு”..

“எந்த மாலினி……….” என்று வசனத்தை இழுத்துக் கொண்டிருந்த இடைவெளியில் அந்தக் குரலை இதற்கு முதல் எங்கே கேட்டேன் என்பதை நினைவுக்குள் கொண்டுவர முயற்சித்தேன். “ஆ என்னோட பள்ளிக்கூடத்தில படிச்ச மாலினி தானே“ – முயற்சி வீண்போகவில்லை. “ ஓம்“ – இந்த ஒற்றைச் சொல்லுடன் அமைதியானாள் என் பாடசாலைக் காலத் தோழி. சிறுவயதில் நண்பர்களாக இருந்த இருவர், நீண்டகாலத்தின் பின்னர் சந்திக்கும்பொழுது தொற்றிக்கொள்ளும் உற்சாகமான நட்பு எனக்குள்ளும் விழித்துக்கொண்டது. “ஏய் நீயா இது. இவ்வள காலம் எங்க போன, எப்பிடி இருக்கிற, கலியாணம் எல்லாம்.. எங்களோட படிச்ச அவள் எங்க? இவன் எங்க?“ – இப்படியாக  ஆயிரத் தெட்டுக் கேள்விகளைக் கேட்டுத் தொலைத்தேன். என் குதூகலமான பேச்சு பட்டாசு சத்தங்களை மிஞ்சியிருந்தது. இந்தச் சந்திப்பிலும், மறுநாள் கொண்டாட்டத்திலும் அவள் எந்தத் தொடர்புமற்றவளாக இருந்தபடி சிரிப்பற்ற இறுக்கமான பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

அவளின் வீட்டுத் தைப்பொங்கல் ஊரிலேயே பிரமாண்டமானதென்பதும், பல நாள்கள் நீடிப்பதென்பதும் சிறுவயதிலே நான் அறிந்துவைத்திருந்த விடயம். ஏனெனில் அவளின் அப்பா செல்வநாயகம் ஊரில் பெரிய விவசாயி. சேட்டைக் கழற்றி காவல்கொட்டிலில் மாட்டிவிட்டு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வயலில் இறங்கினால் பல தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கக்கூடிய வரம்புகளைக் கட்டி நிமிரக்கூடியவர். “ கமத்தில (விவசாயத்தில) இளம்பெடியங்களெல்லாம் அந்தாளிட்ட பி்ச்சதான் வாங்கோணும் “ என்று பலரும் பார்த்து வியக்கும் விலாசமான விவசாயி அவர்.

 

நான் அவளது குடும்பத்தின் கடந்தகாலத்தை நினைத்து பார்க்கும் முன் அழத் தொடங்கியிருந்தாள்.

 

“ என்ன மாலினி, என்ன நடந்தது?” அப்பா காணாமல் போயிட்டார்”

 

…………………………………………………………….நான். “உன்னட்ட சொன்னா மீடியாவில எழுதியாவது கண்டுபிடிச்சிரலாம் எண்டு எங்களோட படிச்ச அவன் (இன்னொரு நண்பன்) சொன்னவன். அதுதான் கோல் பண்ணினன்”.

 

Selvanayagam6-e1421696461931.jpg

“சரி, நான் காலம நேரில வாறன், அழாத”- உப்புச்சப்பற்ற அந்த ஆறுதலைச் சொல்லிவிட்டுக் காலை, 5.30க்கு முல்லைத்தீவுக்குப் பயணிக்கும் பேரூந்தில் தொற்றிக்கொண்டேன்.

“புதுக்குடியிருப்புக்குப் போகத் தேவையில்ல. கைவேலியில (பரந்தன் -முல்லைத்தீவு சாலையில் புதுக்குடியிருப்புக்கு முதல் வரும் கிராமம்) இறங்கி, திம்பிலிக்குப் போற றோட்டடியில இறங்கி உள்ளுக்கு நடந்து வரணும்.” அவள் முகவரியைச் சொல்லிமுடிக்க முன், “அப்ப முதல் இருந்த வீடு?” “வித்திட்டம்”.

 

உலகம் முழுதும் தமிழர்களின் திருநாள் பிறந்திருந்த வேளையில் அவளும் நானும் பேசி முற்றுப்பெற்ற வார்த்தைகளில் மிஞ்சிய முகவரியில் பேரூந்து நின்றது.

 

கிரவல் பாதை. இருமருங்கும் மக்கள் தைப் பொங்கல் கொண்டாட்டத்திலும், புதிதாக வீடுகளைக் கட்டிக்கொள்திலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அந்த வீதி விடுதலைப் புலிகளின் காலத்தில் பிரபலமானது. புதுக்குடியிருப்புக்குள் இருந்த அவர்களின் முகாம்களுக்கு இலகுவாகப் பயணம் செய்யக்கூடிய சுருக்கப் பாதையாக அது இருந்தது. புலிகளின் திருமண மண்டபம் அந்த வீதியின் முடிவில் இருந்ததால் எப்போதும் மங்களகரமானதாக அது காட்சிதரும். ஆரவாரங்களுக்கும் பஞ்சமில்லை. விமானத்தாக்குதல் எப்போதும் நடக்கலாம் என்ற அச்சத்துக்கும் அந்தவீதியில் பயணிப்போரிடம் பஞ்சமிருப்பதில்லை. அந்தக் கட்டடங்கள் எல்லாம் நடந்து முடிந்த போரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

 

அதனையெல்லாம் கடந்து, குறுக்கு, நெடுக்கு மணல், முட்பற்றைத் தெருவெல்லாம் சுற்றி அவளின் வீட்டை அடைந்தேன். கிட்டத்தட்ட 6 கிலோமீற்றர்கள்.

 

நீங்கள் வாசித்த, சினிமாவில் பார்த்த வறுமையினதும், வெறுமையினதும் மொத்த அங்க அடையாளங்களையும் அவளின் வீட்டின் மீது பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள். அவள், அம்மா, தங்கை, தம்பி, அண்ணன் ஆகியோர் என்னைச் சூழ்ந்துகொள்கின்றனர்.

 

Selvanayagam4.jpg

 

”பச்சபுல்மோட்டைக்குள்ளதான் காணாமல் போனவர். ஆனந்தபுர பொக்ஸ் அடிக்குள்ள அவர் மாட்டிட்டார். ஆள் சரியான பயந்த சுபாவம். சின்ன வெடிச்சத்தம் கேட்டாலே பங்கருக்குள்ள ஓடிடுவார். அந்த ஷெல்லடிச் சத்ததுக்குள்ள தடுமாறிப் போனார். எங்க போறதெண்டு தெரியேல்ல. கலியாணம் செய்த மற்ற மகள் ஆக்களோட ஆமிட்ட போகப் போறம் எண்டு வெளிக்கிட்டிட்டார். நான் பிள்ளையளோட மாத்தளன்ல இருக்கேக்கத்தான், பொக்ஸ் அடிக்குள்ள சிக்கிட்டினம். அதுக்குள்ள நிண்டு, இந்த ஷெல் எல்லாம் எங்க விழுகுது எண்டு கேட்டாராம். யாரோ உங்கட வீட்டுக்காரர் இருக்கிற பக்கம்தான் விழுகுது எண்டு சொல்லியிருக்கினம். உடன ஆமிக்காரர் அவர ட்ராக்கட்டர்ல ஏத்திக் கொண்டு போயிட்டாங்களாம். அவரின்ட ஐ.சி, மோதிரம், சேட் எல்லாத்தையும் கழட்டி மகளிட்ட ஆமிக்காரர் குடுத்திருக்கிறாங்கள்.“

 

அவரைச் சூழ அமர்ந்திருக்கும் எல்லா பிள்ளைகளும் மிகுந்த அமைதியாக இருந்து அம்மா சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். யாருடைய கண்ணிலும் உயிரில்லை. செயலில் சலசலப்பில்லை. இறுதிப் போர்க்கதையை நினைவுபடுத்தும்போது ஏற்படும் மனஉறைவை அப்படியே பிரதிபலித்தபடி இருக்கின்றனர்.

 

”அண்டையிலயிருந்து நாங்கள் தேடாத இடமில்லை. புல்மோட்டைக்குப் போனம். கந்தளாய் போனம். மட்டக்களப்பு போனம். கொழும்பில இருக்கிற ஜெயில் எல்லாம் போய் பாத்தம் எங்கயுமே அப்பா இல்ல. ஆனா காணாமல் போனவர் பட்டியலில அப்பாவின்ர பேரும் வந்திருக்கு. செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை ஆணைக்குழு, விசாரணைக்குழு எல்லாத்திட்டயும் குடுத்தம். எல்லாரும் தேடிக்கொண்டிருக்கிறம், இருந்தா சொல்லுவம் எண்டுதான் சொன்னவ” – மன உறைவை உடைத்து அனைவரையும் நடப்பு உலகத்துக்கு இழுத்துவந்தாள் மாலினி.

 

Selvanayagam8-e1421694842855.jpg Selvanayagam7-e1421694769726.jpgSelvanayagam91-e1421695098731.jpg Selvanayagam10-e1421695733315.jpg

 

“ஓம் தம்பி, தேடித் தேடிக் களைச்சுப் போயிட்டம். எந்த முடிவும் இல்லாமல் அலைஞ்சு களைச்சுப் போய் இருந்திட்டம். இந்த ஒரு மகனின்ர உழைப்பில பிள்ளையள், சாப்பாடு, அவரையும் அலைஞ்சு தேடுறதெண்டால்… வார்த்தையை முந்திக்கொண்டு கண்ணீர் விழுகிறது. அம்மாவின் அழுகை பிள்ளைகளின் கண்ணிலும் பிரதிபலிக்கிறது. அழுவதற்கான அமைதி. எந்தக் கேள்வியைக் கேட்பது? என்ன ஆறுதல் சொல்வது? சிந்திப்பில் மூழ்கினேன்.

 

அழுகை வெளியை முடிவுக்குக் கொண்டு வர மூத்த ஆண்மகன் கதையைத் தொடங்குகிறார்.

 

“அண்டைக்கு தேர்தல் பிரச்சாரம் நடந்தது. அதுக்கு இந்த இடங்களிலெல்லாம் மஹிந்தவின்ர ஆக்கள் நோட்டீஸ் குடுத்தவங்கள். நான் வாங்கேல்ல. விட்டிட்டு வந்திட்டன். சித்தப்பா (காணாமல் போனவரின் தம்பி) றோட்டால வரேக்க அந்த நோட்டீஸ் ஒண்டில அப்பாவின்ர படம் இருக்கிறத கண்டிட்டார். அங்க அங்க கிழிஞ்சு கிடந்ததெல்லாம் எடுத்து ஒண்டாக்கி பாத்த நோட்டீஸ்ல எங்கட அப்பா தோட்டத்துக்குத் தண்ணி பிடிச்சிக் கொண்டிருக்கிறார். பிறகு இங்க எல்லா இடமும் திரிஞ்சி வேற கொஞ்ச நோட்டீஸ்களையும் வாங்கி எல்லாத்தையும் பார்த்தா அது அப்பாவே தான். எங்கயோ பண்ணையில அப்பாவ வச்சி வேலை வாங்குகினம். வேலை செய்யேக்க சேட் போடமாட்டார். இதிலயும் அப்பிடியேதான் இருக்கிறார். பாருங்கோ அதே சுருள் தலைமுடி”.

 

Selvanayagam11.jpgSelvanayagam5.jpg

மகன் சொல்லி முடிக்க முதல் அம்மா அந்த நோட்டீஸ், அதிலிருப்பதுபோலவே தலையை சரித்தபடி அவர் வீட்டிலிருந்த காலத்தில் இருந்த எல்லா புகைப்படங்களையும் எடுத்துவந்து பொருத்திக் காட்டுகிறார். சாயல் ஒரே மாதிரியிருக்கிறது. வயதுக்கேற்ற முதிர்ச்சி அவரில் தெரிவதாக மாலினி படத்தைப் பார்த்து விளக்கமளிக்கிறாள்.

 

”நாங்கள் இதை எடுத்துக்கொண்டு செஞ்சிலுவ சங்கத்திட்டயும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிட்டயும் போனம். அவை இந்த நோட்டீஸ் அடிச்ச இடத்த எங்கள கண்டுபிடிக்கட்டாம். அதை நாங்கள் எப்பிடி கண்டுபிடிக்கிறது? இங்க அந்த நோட்டீஸ் குடுக்க பொறுப்பா இருந்தவர் தேர்தல் தோல்வியோட வீட்டவிட்டே எங்கயோ போயிட்டார். நோட்டீஸ்ல இருக்கிறவ எல்லாம் பெரிய அரசியல்வாதியள். அவையள நாங்க எங்க தேடிப் பிடிக்கிறது?” கேள்வியோடு முடித்துக்கொள்கிறார் மூத்த மகன்.

 

நான் என்ன சொல்வேன் என்று என்னை எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். என்னால் என்ன செய்யமுடியும். “நான் எழுதுறன். பாப்பம்” அவர்களிடமிருந்து புறப்படத் தயாராகிறேன். எல்லோரும் வாசல் வரை வந்து நிற்கின்றனர். அம்மா படலையடி வரைக்கும் வருகிறார். ”இளையவளுக்கு கெம்பஸ் கிடைச்சிருக்கு. போகவே காசில்ல. எனக்கெல்லாம் ஏன் கெம்பஸ் கிடைச்சது? இந்த சந்தர்ப்பம் வேறயாருக்கும் கிடைச்சிருக்கலாம் எண்டு அழுகிறாள் தம்பி. எப்பிடியாவது அவர கண்டுபிடிச்சித்தாங்கோ” இயலாமையும், ஆற்றாமையும் அந்த அம்மாவின் முகத்தில் குரூரமாகத் தோன்றி நிற்பதைப் பார்க்கிறேன். எந்த ஆறுதலையும் சொல்ல முடியவில்லை. அந்த முள் பற்றை தெருவுக்கு வருகிறேன். மூத்தமகன் என்னைத் தொடர்கிறார்.

 

Selvanayagam2.jpg

 

“அப்பாவ எப்பிடியாவது கண்டுபிடிச்சிடுங்க அண்ண” – அவருக்கு சொல்லவும் என்னிடம் பதில் இல்லை. எதைத்தான் சொல்லமுடியும்? நீங்களாக இருந்தால் எதைச் சொல்லியிருப்பீர்கள்? படங்களைத் தாங்கியபடி தொலைந்தவர்களைத் தேடியவர்கள் இன்று பிரச்சார நோட்டீஸ்களையும் காவியபடி தொலைந்தவர்களைத் தேடத் தொடங்கியிருக்கின்றனர்.

 

எனவே மலர்ந்துவிட்டதாக சொல்லப்படும் ஜனநாயகத்தை இந்த வழியாலும் வரச்சொல்லுங்கள் என்று யாருடமாவது கெஞ்சவேண்டும் என்று யோசித்தபடியே நடந்து அவர்களிடம் இருந்து மறைகிறேன். இந்த இடத்தில்தான் முள் பற்றைக்காடுகள் அழகானவையாகத் தெரிகின்றன.

 

குறிப்பு – ஆனந்தபுரம் பொக்ஸ் அடி-  இறுதிப் போர் வேளையில் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் இடைப்பட்ட ஆனந்தபுர கிராமத்தில் பெரும் சண்டை நடந்தது. இராணுவம் செய்த மிகப்பாரிய சுற்றிவளைப்புத் தாக்குதல் அது. இந்தத் தாக்குதல் புலிகளுக்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்தது. அதனையே மக்களின் மொழியில் “ஆனந்தபுர பொக்ஸ் அடி“ என நினைவுவைத்திருக்கின்றனர். பொக்ஸ் அடி புலிகளின் போரியல் மொழி. புலிகளின் தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் உருவாக்கிய சண்டைமொழி)

 

http://www.colombomirror.com/tamil/?p=3042

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50,60 வருடங்களாக சிங்களத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது வழமையானதொன்று.
ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் அவலம் மட்டும் இன்றுவரை மாறாது இருக்கின்றது.

Sos Tamil உங்க பேரை sOs sumnthiran என்று பொருத்தமான பெயருடன்வந்திருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.