Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவுரவக் கவசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவுரவக் கவசம்

– றொமிலா ஜெயன்

கட்டிலில் சோம்பல் முறித்தபடி புரண்டு கொண்டிருந்த, தேவகியின் காதுக்குள் “அம்மா…. அவளைக் காணயில்லை” என பதட்டத்துடன் ஓடி வந்து கிசு கிசுக்கிறாள் மகள் தனுஷா.

திடுக்கிட்டுப்போகிறது தேவகியின் மனம் திகைப்புடன் மகளின் முகத்தைப்பார்க்கிறாள்.

“வடிவா வளவு முழுக்க தேடிப்பாத்தனீயே பிள்ளை”

“கிணத்தடி, கக்கூசடி எல்லா இடத்தையும் தேடிப்பாத்திட்டன். கனதரம் கூப்பிட்டும் பாத்திட்டன், அவவின்ர ரூமுக்குள்ள போயும் பாத்தனான், போட்டுக் கொண்டு வந்த சல்வாரும், அவா கொண்டு வந்த சின்ன பாக்கையும் கூட காணயில்லை.”

“என்ன பிள்ளை சொல்லுறாய்” என்றவாறு தனது பெருத்த தேகத்தை புரட்டி, கட்டில் சட்டத்தை பிடித்தவாறு எழும்பிக் குந்தினாள் தேவகி.

சுவா் மணிக்கூட்டின் முள்ளு ஆறு மணியைத் தொட்டிருந்தது.

இன்னமும் குறட்டையை இழுத்து விட்டுக் கொண்டு பின்பக்க விறாந்தைக்கட்டிலில் மல்லாந்து கிடக்கும் கணவனைப் பார்க்கிறாள்.

“கொப்பரை எழுப்பு பிள்ளை வெளியாலை போய் எங்கையாவது தேடிப்பாக்கட்டும், கடவுளே இதென்ன கரைச்சல்” புலம்பியபடியே தலைமாட்டில் கிடந்த செல்போனை எடுத்து மகனின் நம்பரை தெரிவு செய்தாள். கோல் பட்டனை அழுத்த முற்பட்ட போது சிந்தனையில் திடீர் மின்னலடித்தது.

“ம்….”தனக்கு தானே தலையசைத்துக் கொண்டவள் போனை கட்டிலில் வைத்துவிட்டு நிமி்ர்ந்தாள்.

மகள் உலுப்பிய உலுப்பில் திடுக்கிட்டெழும்பி அலங்க மலங்க முழித்துக் கொண்டு கட்டிலில் குந்தியிருந்தார் பொன்னம்பலம். இன்னும் அவருக்கு நித்திரை முறியவில்லை. பெரிய சத்தமாக கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார்.

“என்னப்பா இன்னும் உங்களுக்கு விடியேல்லலையே, ஒரு அந்தர அவசரத்திக்கு உங்களையும் எழுப்ப ஏலுமே, போத்தில் போத்திலா கள்ளை விட்டுக் கட்டிப் போட்டு சாத்துவாய் ஊத்துறது தெரியாமல் கிடவுங்கோ”

விடியற்காலமையே தொடங்கி விட்ட மனைவியின் மந்திர ஒலியில் பொன்னம்பலத்தாரின் புலன்கள் நன்றாகவே தெளிந்து விட்டன. கட்டிலை விட்டு எழுந்து நின்றபடி,,

“எ..என்னப்பா… என்ன பிரச்சனை”

என்றவாறு இடுப்பில் நழுவிய சரத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டார்.

கணவரையும் மகளையும் கிட்ட வரும்படி கையைக்காட்டி அழைத்தவள். சுற்று முற்றும் அயலவா்கள் எவராவது நிற்கிறார்களா என ஒரு நோட்டம் பார்த்துக் கொண்டாள். இரகசிய குரலில் அழுத்தமாக பேசத்தொடங்கினாள்.

“நான் சொல்லுறத அப்பரும் மகளும் வடிவா கேளுங்கோ, அந்தப் பெட்டையை காணயில்லை அது எங்கயெண்டாலும் போயிட்டுப் போகட்டும் அது எங்களுக்கு பிரச்சனையில்லை. இதோட விட்டது சனியன் என்றிருப்பம். எக்காரணம் கொண்டும் நாங்களாக இந்தக் கதையை மாறனுக்கு சொல்லக்கூடாது. அவன் வந்தாப்பிறகு நான் சொல்லிக் கொள்ளுறன். கோல் எடுத்தானென்டால் நான் கதைக்கிறன். நீங்கள் இரண்டு பேரும் மூச்சுக் காட்டக்கூடாது. இஞ்சாருங்கோப்பா…. நீங்கள் கடை தெருவுக்கு போற மாதிரி போய் வெளியால எங்கையும் நிற்கிறாளோ எனப்பாத்து வாருங்கோ, எங்கையும் தூரமா போட்டுது என்டால் பிரச்சனையில்லை, செத்துக்கித்துத் துலைச்சாத்தான் பிரச்சனை. கடவுளே எனக்கெண்டால் இது நல்லதுக்கு போலத்தான் படுகுது” என மேலும் கீழுமாக மூச்சு வாங்க சொல்லி முடித்தவள் அங்கிருந்த பெரிய கதிரையில் அமா்ந்து கொண்டாள்.

மகள் தனுஷா தோள்களை குலுக்கி உதடுகளை பிதுக்கிக் கொண்டு“ ஐயோ எனக்கிருக்கிற பிஸியில இதுகளுக்கெல்லாம் கவலைப்பட நேரமில்லை, நான் ரீ போடப்போறன்” அலட்சியமாக குசினிக்குள் நகா்ந்து விட்டாள்.

பொன்னம்பலம் பேயறைந்தவா் போல அப்படியே நின்றார். மனைவியின் முகத்தை பார்க்கவே வெறுப்பாயிருந்தது. ’சீ என்ன பொம்பிளை இவள், அந்தப்பிள்ளைக்கு உறவுகளே இல்லை, சின்ன வயசு, ஊரும் புதுசு , எங்க போவாள், உயிருக்கு ஏதாவது நடந்திட்டாள் கடவுளே அந்தப்பாவம் இந்தக் குடும்பத்தை சும்மா விடுமா, எல்லாத்தையும் விட மகன் இதை கேள்விப்பட்டால்……’

தனக்குள் சற்று துணிவை வருவித்துக் கொண்டவராக, தொண்டையை செருமிக் கொண்டார், கெஞ்சலான தோரணையில் மனைவியின் முகத்தைப்பார்த்துக் கொண்டே “ தேவகி…இஞ்சேரப்பா…இது சரியில்லை, நாங்களும் பொம்பிளைப் பிள்ளையள பெத்தனாங்கள்……..” என அவா் பேசத் தொடங்கியது தான் தாமதம்,

தேவகியின் முகத்தில் கோபம் தீயைப்போல கொழுந்து விட்டது. கண்களை இறுக்கமாக மூடித்திறந்தவள், பெரிதாக மூச்சு விட்டவாறு கணவனை நோக்கி கை நீட்டிச் சொன்னாள்

“ நிப்பாட்டுங்கோ உங்களிட்டை ஒரு வியாக்கியானமும் நான் கேக்க வரயில்லை, நான் சொல்லுறத மட்டும் செய்யேலுமெண்டா செய்யுங்கோ, இல்லாட்டில் இன்னும் ரெண்டு போத்தில் கள்ளு வாங்கி குடிச்சுப் போட்டு பேசாமல் படுத்து நித்திரையைக் கொள்ளுங்கோ, என்ர புத்தியில நடந்தபடியாலதான் இண்டைக்கு ஊருக்குள்ள இந்தக் குடும்பம் இப்பிடியிருக்குது எனக்கு ஆரைப்பற்றியும் கவலையில்லை என்ர குடும்ப கௌரவம்தான் முக்கியம்”

தளர்ந்து போனவராக பொன்னம்பலம் துாணைப்பிடித்துக் கொண்டார். இனி இவளோடு கதைச்சுப் பிரயோசனம் இல்லை. என நினைவுடன். தலையை தொங்கப் போட்டவராக கிணற்றடியை நோக்கி நடக்கத் தொடங்கினார். கால்களை துாக்கி வைக்கவே முடியாமல் தளர்ந்து போய் இடறுப்பட்டது அவரது நடை, போதையினால் அல்ல, குடும்ப வாழ்வில் பட்ட காயங்களால் நொருங்கிப் போன அவரது மனதும் உடலும் இப்போது அதிகமாகத் தள்ளாடுவது போலிருந்தது.

கள்ளமில்லாத அந்தப்பிள்ளையின் புன்னகை முகம் நினைவுக்கு வந்தது. கசிந்த விழிகளை தண்ணீரினால் அடித்து கழுவத் தொடங்கினார் பொன்னம்பலம்

00000 0000000

குடை பரப்பி நின்ற பெரிய மாமரமொன்றின் நிழலில் அன்றைய கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அது கடல் நடவடிக்கையில் ஈடுபடும் போராளிகளுக்கான சந்திப்பு, பல முக்கிய விடயங்கள் கதைத்து முடிந்தாகிவிட்டது, இறுதியாக..

“இனி உங்கட பிரச்சனைகளை கதையுங்கோ” என கூறினார் பொறுப்பாளர்.

அதற்காகவே காத்திருந்தவன் போல மாறன் சட்டென எழுந்து நின்றான்.

“அண்ணே என்ர படகுக்கு ஒரு மெக்கானிக் வேணும். இவ்வளவு நாளும் நிண்ட பொடியன் காயப்பட்டு போன பிறகு அந்த இடத்திற்கு இன்னும் வேற ஒருத்தரையும் நியமிக்க இல்லை”

“ஓ…அப்பிடியா…” எனக் கேட்ட பொறுப்பாளா் யோசனையுடன், தனது அருகிலே அமர்ந்திருந்த பெண்களின் அணி பொறுப்பாளரை நோக்கினார்.

“தங்கச்சி.. அந்த இடத்தை நிரப்புறதுக்கு உங்கட பக்கத்தால ஒரு பிள்ளையை அனுப்பமுடியுமோ”

“ம்….. ” என சில கணங்கள் அவள் யோசித்துவிட்டு

“ஓமோம் முடியும், காயம் சுகமாகி ஓய்வில நிண்ட பிள்ளைகள் சிலபோ் நேற்று அனுப்பப்பட்டிருக்கினம், அதில ஒரு மெக்கானிக் பிள்ளையும் வந்திருக்கிறாள். நான் ஒழுங்கு படுத்தி அனுப்பி விடுறன்.” என்றாள்.

“ சரிதானே மாறன் வேற என்ன” என்றார் பொறுப்பாளா்.

“வேற எதுவுமில்லையண்ணா”

“அப்பியெண்டால் சரி, கதைச்ச விசயங்கள் ஞாபகமிருக்கட்டும், கூட்டத்தை நிறைவு செய்வம்”

அனைவரும் கலைந்து செல்லத் தொடங்கினா்.

மாறன் பெண்கள் அணிப் பொறுப்பாளரை அணுகினான்.

“எப்ப அவாவ அனுப்புவிங்கள் அக்கா”

“ நீங்கள் எப்ப அறிவிக்கிறிங்களோ அப்ப அனுப்புவன். மற்றும்படி அவவின்ர தொடா்பு என்ர இடத்திலதான் இருக்கும்”

மாறன் தமது நடவடிக்கையின் நேரத்தை குறிப்பிட்டான்

“நல்லது. குறிப்பிட்ட நேரத்தில் அவ அங்கே நிற்பா”

“நன்றியக்கா” புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டான் மாறன்.

சிரிப்பும் பகிடியுமாக மாறனின் அணியினா், தமது இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனா். மாறன் அமைதியாகவே முன்னுக்கு நடந்து கொண்டிருந்தான். சராசரிக்கும் அதிகமான உயரம், கூர்மையான விழிகள், எப்போதாவது சிரிக்கும் போது அழகாக நெளியும் உதடுகள். நடவடிக்கை நேரங்களில் தனது அணியினரிடம் காட்டும் கடுமையைத் தவிர அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாத குணம். மாறன் எல்லோருக்கும் பிடித்தவனாகவே இருந்தான்.

மாறனுக்கு கடல் கட்டளைத் தலைமையகத்திலிருந்து வந்திருந்த உத்தரவுக்கமைய, அன்று மாலை அவா்கள் குறிப்பிட்டிருந்த நேரத்தில், மேற்கொள்ளபடவுள்ள அந்த நடவடிக்கைக்கு உதவியாக அவனது படகையும் கடலிலே செலுத்துவதற்கு அவனது அணி தயாராகிக் கொண்டிருந்தது.

அவா்களது அணியில் இணைந்து கொள்ளுவார் எனக் கூறப்பட்ட பெண் போராளி வேகமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. துள்ளிப்பாயும் நடையுடன் உற்சாகமான சிரிப்பை உதிர்த்தவாறு அவள் மாறனுடைய அணியுடன் வந்து சோ்ந்து கொண்டாள்.

“வணக்கம், நான் வானிலா, என்ஜின் மெக்கானிக்.”

ஓ… வணக்கம் வாங்கோ ,உங்களைத்தான் பாத்துக் கொண்டிருக்கிறம், நான் மாறன் இந்த படகின் கட்டளையதிகாரி இவா்கள் இந்த படகுக்குரிய……” என்றவாறு அவரவா்களின் பெயர்களையும் பணிகளையும் கூறினான் மாறன். அவா்களைப்பார்த்து சிரித்தமுகமாக தலையசைத்து அறிமுகமாகிக் கொண்டாள் வானிலா.

படகு கடலுக்குள் இறக்கப்பட்டது. அலைகளுடன் போராடிய படகின் இயந்திரம் சீராக இயங்கத் தொடங்கியது. ஒரே துள்ளலில் தானும் படகினுள் ஏறி நின்றாள் வானிலா. ஒவ்வொருவரும் தத்தமது செயற்பாடுகளுக்குரிய பொருட்களை சரிபார்த்தவாறு, தமது நிலைகளில் பொருந்திக் கொண்டனா்.

அலைகளை கிழித்தவாறு அந்த சண்டைப்படகு விரையத் தொடங்கியது. மாறன் அனைத்து நிலைகளையும் சரிபார்த்துக் கொண்டான். இது ஒரு கடினமான நடவடிக்கை என சொல்லப்பட்டிருந்தது. எந்த நேரமும் எப்படியான நெருக்கடிகளையும் சமாளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். தனது அணியின் செயற்பாடுகளில் அவனுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. அதேவேளை புதிதாக வந்த மெக்கானிக்கை எடைபோடும் விதமாக அவனது பார்வை வானிலாவை நோக்கியும் திரும்பியது.

காற்றின் எதிர் திசையில் படகு சென்று கொண்டிருந்தது. கெல்மெட், ஜக்கெட் சகிதம் கம்பீரமாக அவள் கால்களை ஊன்றி நிலையெடுத்திருந்த விதம் அவளின் கடந்த கால கடல் நடவடிக்கைகளின் அனுபவங்களையும் திறமையையும் சொல்லியது. அவள்மீது படிந்த பார்வையை மீட்டுக் கொண்டவனுடைய மனதில் என்னவோ ஒரு ஆறுதல் பரவியதைப் போல உணர்ந்தான்.

இதற்கு முதலும் பல பெண்கள் அவனது அணியில் இடம் பெற்றிருந்தனா். அவா்களிலிருந்தும் இவள் எதிலோ வித்தியாசப்படுவதாக உள்ளுணா்வு சொல்லியது. அது என்னவென்பது அவனுக்கு புரியவில்லை. அதைப்பற்றி சிந்திப்பதற்கான அவகாசமும் கிடைக்கவில்லை. படகின் பயணப்பாதையையும், கடலின் நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கினான் மாறன். வேலையோடு வேலையாக பகிடிக்கதைகளை பேசியபடி அவனது அணியினா் சிரித்துக் கொண்டிருந்தனா். தனது வட்டக்கண்களைச் சுருங்கி, தெத்துப்பல் தெரிய வானிலாவும் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்..

00000 000000000

போர் முடிவுக்கு வந்திருந்த இறுதி நாட்கள். முல்லைத்தீவு மைதானம். கடல் போன்ற சனப்பிரவாகத்தினுள் திக்கற்றவளாக வானிலா நின்று கொண்டிருந்தாள். அவளை அறிந்தவா்கள் அறியாதவா்கள் என பலா் அவளைக் கடந்து சென்று கொண்டேயிருந்தனா். முதன்முதலாக தனக்கென எவருமில்லையே என்பது நெஞ்சில் உறைத்தபோது உயிரோடு வந்தது தவறு எனதோன்றியது. அப்போதுதான் மிகவும் அறிமுகமான அந்தக் குரல் காதருகில் ஒலித்தது. திரும்பியவள் திகைத்து நின்றாள். மாறன் அவளுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான். சாரம் உடுத்தியிருந்தான். தோளுக்கு குறுக்காக பாக் ஒன்றை மாட்டியிருந்தான். ஒருவரையொருவா் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நின்றனா். அறிமுகப் புன்முறுவலொன்றினை கூட, வெளிப்படுத்த வேண்டும் போல இருவருக்குமே தோன்றவில்லை.

“யாரோட போறிங்கள் வானிலா” மாறன் அக்கறையுடன் விசாரித்தான்.

“யாருமில்லை தனியத்தான் போகவேணும்” வெறெங்கோ பார்த்தவாறு விட்டேத்தியாக பதிலளித்தாள் வானிலா, உள்ளத்திலே எரிமலையே குமுறிக் கொண்டிருந்தது. .

மாறனின் மனது நுணுக்கற்றது. “எங்க போகலாமென்டு நினைக்கிறிங்கள்”

“தெரியேல்லை” இப்போது குரல் தளர்ந்து விசும்பல் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. அந்தப்பெரிய கண்களுக்குள் வங்கக் கடலே திரண்டு நிற்பது போல மாறனுக்கு தோன்றியது. எக்ஸ்ரே எடுப்பவன் போல அக் கண்களையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். நெற்றியை சுருக்கியவாறு ஆழமாக யோசி்க்கத் தொடங்கினான், பின்பு தீா்க்கமாக விழிகளால் அவளை ஆழமாகப் பார்த்தபடி கேட்டான்

“என்னோட வாறிங்களா வானிலா”

எதிர்பாராத அவனது கேள்வி அவளை துாக்கி வாரிப் போட்டது. ஆனாலும் அவளின் உள்மனமோ ’இவனை விட இங்கு யாருமே நம்பிக்கையுமில்லை பாதுகாப்பில்லை’ என்பதை தெளிவாக கூறிக் கொண்டிருந்தது.

“வாறன்” என்று அவள் சொல்லிய மாத்திரத்திலேயே, அந்த கூட்ட நெருசலில் தவறிவிடாதிருக்க, அவளின் வலது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கியிருந்தான் மாறன்.

வவுனியா ஓமந்தை அரச படையினரின், காவலரண் முன்பு இருதரப்புக்குமுரிய எல்லையாக கருதப்பட்ட அந்த இடத்தில்தான், சரணடைந்த போராளிகளை இராணுவத்தினா் பதிவு செய்து கொண்டிருந்தனா்.

வரிசையில் மாறனும் அவனுக்குப்பின்னால் வானிலாவும் நின்றிருந்தனா் மனம் படபடத்துக் கொண்டிருந்தது. அவா்களின் முறை வந்தபோது முன்னால் நகர்ந்தனா்.. ஒருதடவை அவா்களை ஏற இறங்கப்பார்த்துக் கொண்ட இராணுவத்தினன் ஒருவன்.

“ம்….முழுப்பெயா் சொல்லுங்க” என்றவாறு இவர்களின் விபரங்களை எழுதத் தொடங்கினான்

“பொன்னம்பலம் மாறன். மாறன் வானிலா” இருவரின் பெயா்களையும் மாறனே சொல்லி விட்டான்.

சட்டென வானிலாவில் ஒரு அசைவு தென்படுவதை உணா்ந்த மாறன், இன்னமும் தனது பிடியிலேயே இருந்த அவளின் கைகளை மெலிதாக இறுக்கினான். தனது திகைப்பை வெளிக்காட்ட முடியாத நிலைமையில் அமைதியாகவே நின்று கொண்டிருந்தாள் வானிலா.

உங்கட மனைவியும் இயக்கமா”

“ஓம் ஒரே பிரிவுதான்”

“சரி எல்லா விபரங்களையும் இங்க கொடுங்க, நீங்கள் வெவ்வேறு புனா்வாழ்வு நிலையங்களுக்குத்தான் அனுப்பப்படுவிங்கள்”

பதிவுகள் முடிந்து வாகனத்தில் ஏற்றப்படும் வரை பேசிக் கொள்ள அவகாசமிருந்தது. மாறனின் திடீா் நடவடிக்கைகள் வானிலாவுக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. அவனது முகத்தை நிமிர்ந்து “நீங்கள் எதை நினைச்சும் குழம்ப தேவையில்லை வானிலா, இதில ஒரு பிரச்சனையும் உங்களுக்கு வராது. இப்ப உள்ள நிலைமையில இதுதான் உங்களுக்கு பாதுகாப்பு”

ஆண்களும் பெண்களும் வெவ்வேறாக வாகனங்களில் ஏறிக் கொள்ளும்படி கூறப்பட்டது. தனது பாக்குடன் எழுந்து செல்ல ஆயத்தமான வானிலா தயக்கத்துடன் மாறனுடைய முகத்தை ஏறிட்டாள். கனிவான பார்வையுடன் அவளை நோக்கி தலையசைத்து விடை கொடுத்தான். எதுவும் பேசத் தோன்றாதவளாக தான் ஏற வேண்டிய வாகனத்தை அடையும் வரை தனது விரிந்த கண்களால் மாறனை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தாள். அவனையும் இன்னொரு வாகனத்தில் ஏற்றி வேறு முகாமுக்கு கொண்டு போனார்கள், அந்த வட்டக் கண்கள், மாறனது நெஞ்சிலேயே ஒட்டிக் கொண்டு வருவதைப் போல இருந்தது.

0000 0000000000

புனா்வாழ்வு முகாமில் திருமணமானவா்களுக்கான சந்திப்பு நடைபெறும் தினங்களில் மாறன் தவறாது வானிலாவைப்பார்க்க பெண்களின் புனர்வாழ்வு முகாமுக்கு வந்து விடுவான். அவளுக்கு தேவையான பொருட்களை தனது வீட்டாரிடம் சொல்லி எடுத்துக் கொண்டு வருவான். அங்கிருந்த பலரும் புதிதாக திருமணம் செய்து கொண்ட குடும்பமாகவே இவா்களையும் நினைத்துக் கொண்டார்கள். ஆரம்பத்தில் தயக்கமாக தொடங்கிய இந்த சந்திப்புக்கள் நாள் போகப் போக நட்புடன் தொடர்ந்தது. பொதுவான விடயங்களைப்பற்றியதாகவே அவா்களது உரையாடல்கள் பெரும்பாலும் முடிந்து விடுவது வழக்கம்.

அண்மைய நாட்களாக தமது இதயங்களில் கனிந்துவரும் ஒரு வித நுட்பமான உணா்வுகளை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் இருவரின் விழிகளுமே தவிப்புடன் தழுவிக் கொள்ளத் தொடங்கியிருந்தன. வார்த்தைகள் தோற்றுப் போய் நிற்கும் இப்படியான சந்திப்புக்கள் தொடர்ந்த ஒரு நாளில்……

“மாறன் எங்கட உறவுக்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறிங்கள்” எனக் கேட்டுவிட்டு உதட்டைக்கடித்துக் கொண்டவளாக தலைகவிழ்ந்து கொண்டாள் வானிலா,

அழகான தனது குறுஞ் சிரிப்புடன் அவளையே அளந்து கொண்டிருந்தவனான மாறன்...

“நீ என்ன அா்த்தம் என்று நினைக்கிறாய் வானிலா” எனக்கேட்டான்.

தனது கேள்வியை தன்னை நோக்கியே திருப்பி விட்டவனின் முகத்தை குழப்பத்துடன் ஏறிட்டு நோக்கினாள். அவனது விழிகளில் வழிந்த ஏதோ ஒரு உணா்வு, வானிலாவின் மனதிலும் உடலிலும் ஓராயிரம் மின்னதிர்வுகளை ஏற்படுத்துவது போலிருந்தது. தொடா்ந்து அவனது கண்களை எதிர்கொள்ளத் திராணியற்றுத் தலை குனிந்து கொண்டவளின் இதயத்தில், அவள் என்றுமேயறியாத அனுபவித்தறியாத புதுவகை நாணம் சூழ்ந்து நின்று வதைக்கத் தொடங்கியது.

இருவரின் உள்ளங்களுமே பேரலைகளாக கொந்தளித்துப் புரளும் தமது உணா்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளுவதற்கான வார்த்தைகளைத் தேடித் தவித்துக் கொண்டிருந்ததன.

“வானிலா” காற்றோடு கரைவது போலிருந்தது மாறனின் குரல்.

“ம்….” மொழி வெளியே வராமல் பிசிறியது வானிலாவுக்கு,

“உனக்கு என்னை பிடிக்குமா நிலா“ தொண்டைக்குள் சிக்கித் திணறியது அவனின் வார்த்தைகள்.

“ம்….ம்ம்” என்றவாறு தலையை மேலும் கீழும் அசைக்க மட்டுமே முடியுமாயிருந்தது. ,தனது புலன்கள் செயற்படும் தன்மையை இழந்து விட்டது போலவே தோன்றியது வானிலாவுக்கு

“எப்பவும் என்னோடயே இருப்பியா நிலா” ஏக்கத்துடன் வானிலாவை நோக்கி நீண்டது மாறனின் கரம்.

பனிக்கட்டிச்சிற்பம்போல உறைந்து போயிருந்தவள் தனக்கு முன்பாக நீண்டிருந்த வலிமையான அவனின் கரத்தினுள் தனது கரத்தையும் இணைத்துக் கொண்டாள்.

அவன் அறிமுகமான நாளிலிருந்து அவனது அருகாமை தனது ஆத்மாவுக்குள் ஏற்படுத்தும் நிம்மதியின் அர்த்தம் இப்போதுதான் வானிலாவுக்குப் புரிவது போலிருந்தது.

அன்றைய பார்வையாளா் நேரம் முடிந்தாக அறிவிக்கப்பட்டது. அந்த வட்டக்கண்களில் முதன் முதலாக நா்த்தனமிடுகின்ற வெட்கத்தின் அதிசயத்தை, கண்டு ரசித்துக் கொண்டிருந்த மாறன். அவளின் அழகுப் புன்னகையை நெஞ்சு நிறைய அள்ளிக் கொண்டு விடை பெற்றான். தன் உயிரே போவது போல அவன் போன பாதையில் விழி பதித்து நின்றிருந்தாள் வானிலா.

00000 0000000000

“ நீ ஒண்டுக்கும் யோசியாமல் எல்லா ஒழுங்குகளையும் செய் பிள்ளை, அவன் நான் சொன்னா கேப்பான்,வலிய வாற சீதேவிய எட்டி உதையலாமே, இதென்ன சாதியோ, கருமமோ மாத்திப் போட உடுப்பும் இல்லாமல் வந்து நிற்குது. நான் அவன்ரை மனம் குழம்பக்கூடாது என்றிட்டு பேசாமல் இருக்கிறன், பொம்பிளையின்ர படத்தை அனுப்பச் சொல்லு, இப்ப அவனுக்கு காட்டேலாதுதான். மருமகளை முதலில நான் பார்க்கவேண்டாமே, எல்லாம் சரியா வரும் நானெல்லோ அவனை அனுப்பிவைக்கிறது. சரி நான் போனை வைக்கிறன் ஓ.கே.

வெளிநாட்டிலுள்ள தனது மகளுடனான தேவகியின் தொலைபேசி உரையாடல் வானிலாவின் காதுகளிளும் தெளிவாகவே விழுந்தது. உச்சக்கட்ட சகிப்புத்தன்மையுடன் உணா்வுகளை கட்டுப்படுத்தும் அவளது முயற்சி தோற்றுப் போக மடிந்து அமர்ந்தபடி வாயை துணியொன்றினால் அடைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள் வானிலா. நெஞ்சு பயங்கரமாக அவளுக்கு நோகத் தொடங்கியது.

’குழம்பக்கூடாது குழம்பக்கூடாது இங்கு நடக்கும் எவையுமே என் மாறனுக்கு தெரியக்கூடாது. அவன் தனது உறவுகளுடன் சந்தோசமாக வாழ வேணும். என் உயிரான மாறனுக்கு என்னால எந்தக் கஸ்டமும் ஏற்படக்கூடாது’. கண்களை மூடிக் கொண்டு தனக்குத்தானே திரும்பத்திரும்ப சொல்லத் தொடங்கினாள் வானிலா. தலையே வெடித்துவிடுவது போல இடிக்கத் தொடங்கியது. இங்கு வந்த நாளிலிருந்து இதுவொரு புது வருத்தமாக ஆரம்பித்திருக்கிறது. சுவாசத்தை எடுத்து விடவே கடினமாக இருந்தது .சற்று வெளிக்காற்றை தேடியவளாக, அவளது இருப்பிடமாயிருந்த அந்த சிறிய அறையின் ஜன்னல்களுக்கூடாக வெளியே பார்க்கிறாள் அங்கே…..

முகத்தில் மலா்ச்சியுடன் தனது புதிய மோட்டார் சைக்கிளை அழகு பார்த்துக் கொண்டிருக்கிறான் மாறன்.

“என்னடா தம்பி சைக்கிள் பிடிச்சுதே” தாயின் குரல்

“ம்.. நல்ல சைக்கிள் அம்மா”

“இவ்வளவு நாளும் உன்னைப்பற்றித்தான் அண்ணணுக்கு கவலை, இப்பதான் அவனுக்கு நிம்மதி. தம்பி என்ன கேட்டாலும் வாங்கிக் குடுங்கோ எண்டு நீ வெளியால வந்தவுடனேயே காசு அனுப்பிப்போட்டான்”

எதுவுமே பேசாமல் மாறன் புன்னகைத்துக் கொண்டான்.

தேவகி தொடர்ந்தாள் “உன்னையும் தன்னோட எடுக்கத்தான் அவனுக்கு விருப்பம்”

முதலில தனுஷாவின்ர கலியாண அலுவல்கள் முடியட்டும் பிறகு பாப்பம்” என்தலை நிமிராமலே பதிலளித்தான் மாறன்.

“ஆனால் உன்ர அக்கா நிக்கிறாள் தம்பியை நான் எடுக்கப் போறன் என்று”

“இப்பத்தானே அம்மா வெளியால வந்திருக்கிறன் உடன எங்கையும் போக ஏலாது, கொஞ்சக்காலம் போகட்டும் பாப்பம்”

அவனது பட்டென்ற பதில்களில் அம்மாவுக்கு திருப்தியில்லாதிருந்தது.

அதைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காதவனாக திடீரென எதையோ நினைவு படுத்திக் கொண்ட மாறன் வீட்டுக்குள் பிரவேசித்து வானிலாவின் அறைக்குள் நுழைந்தான்.

சட்டென தன்னை சுதாகரித்துக் கொண்ட வானிலா முகத்தில் புன்னகையே வரவழைத்துக் கொண்டு அவனைப்பார்த்தாள். அவளது மனமோ அந்த மார்பினில் புதைந்து கொண்டு கதறியழ வேண்டும் போல அந்தரித்துத் துடித்துக் கொண்டிருந்தது.

“ செல்லம் இண்டைக்கு ஐயா என்ர குட்டியோட ஒரு ரவுண்ட் அடிக்கப்போறார் கெதியா வெளிக்கிடுங்கோ ”குழைவான குரலில் ஆசையோடு கூறிக் கொண்டிருந்தான்.

“ஐயா ஹட் குவாட்டசில பெமிசன் எடுத்திட்டாரோ” குறும்பாக அவனது தாய் நின்ற திசையை சுட்டிக்காட்டிக் கேட்டாள் வானிலா,

“என்ர ஹட்குவாட்டஸ் இங்கேதானேயடா இருக்குது” என தன்னை நெருங்கி வந்தவனை விலக்கி நகர்ந்தாள் வானிலா.

“மாறன் மாறன்” அம்மாவின் குரல் உரப்புடன் அழைத்தது, சலிப்புடன் சினந்தபடியே வெளியேறிப் போனான்.

“எங்கேயும் வெளிக்கிடப் போறியோ மகன்”

“ஓமம்மா வந்ததிலயிருந்து வானிலாவும் வீட்டுக்கயே அடைஞ்சு கிடக்கிறாள். வெளியால கூட்டிக்கொண்டு போய் வருவமெண்டு…….”

அவனை முடிக்கவிடாமல் தாயின் குரல் ஓங்கியது.

“தம்பி அம்மா சொல்லுறத கேள் ராசா ஊருலகத்தில கலியாணம் எண்டது பெரிய விசயம், ஏதோ நீயும் கேட்டுப் போட்டாய், அதுகும் இனசனமில்லாத பிள்ளை எண்டு போட்டுத்தான் நீங்கள் கலியாணம் romila-2செய்த மாதிரி அவனை இவனை பிடிச்சு கடிதம் எடுத்து குடுத்து அந்தப்பிள்ளையை வெளியால எடுத்து விட்டனான். நீ இந்த விசயத்தில அவசரப்படக்கூடாது, உனக்கு ஊரரிய கலியாணம் செய்து பாக்க அம்மாவுக்கு எவ்வளவு ஆசை தெரியுமே, அதுவரை கொஞ்சம் பொறுமையாயிரு மாறன்.

உள்ளுக்கு ஏமாற்றம் வாட்டினாலும் வானிலாவுடன் ஊரறிய திருமணம் என்ற நினைப்பு சந்தோசத்தை ஏற்படுத்தவே மகிழ்வுடன் அமைதியாகிப் போனான் மாறன்.

அவனது அன்புள்ளத்தை மாத்திரமே வானிலா உயிராக காதலித்தாள், அவனது குடும்பத்தின் பணமும் செல்வாக்கும் இங்கு வந்த அன்றிலிருந்தே அவளுக்கு பயத்தை ஊட்டத் தொடங்கியிருந்தது.

சமையலறைக்குள் கூட வானிலாவை மாறனின் தாய் அனுமதிக்க விரும்பவில்லை “பிள்ளை நீ இங்கயெல்லாம் வராதை வேற ஆக்கள் சமைக்கிறது எனக்கு ஒத்துக் கொள்ளாது.”

திறந்த வீட்டுக்குள் நுழைந்த ஒன்று எட்டியுதைக்கப்பட்டுவிட்டதைப் போன்ற அவமானம் அவளைத் தின்றது. தாய் தகப்பனின்றி வளா்ந்தாலும் தலை நிமிர்ந்து வாழ பழக்கப்பட்டிருந்தவள். மனதிற்குள் சுருண்டு போனாள்.

”இது குமா்பிள்ளை இருக்கிற வீடு . நாலு பெரிய மனுசா் வந்து போற இடம், உன்னை ஆரெண்டு கேப்பினம், வெளியால கண்டபடி தலையைக்காட்டாமல் உள்ளுக்கு இரு, மாறனோட அளவுக்கதிகமா கதை வைச்சுக் கொள்ளாத, உனக்கு ஏதேனும் வேணுமென்டால் என்னட்ட கேள், நானும் இப்பிடி இல்லாததுகள் எத்தினையோ பேருக்கு உதவி செய்திருக்கிறன், என்ர குணந்தான் மகனுக்கும் மற்றும்படி வேற மாதிரி கற்பனை பண்ணிக் கொள்ளாத பிள்ளை, எனக்கு குடும்ப கௌரவம்தான் முக்கியம்.

மாறனின் தங்கை தனுஷாவோ தன்னிடம் ஒரு புன்னகை சிந்துவதே கேவலமெனக் கருதி ஒதுங்குவது போலிருந்தது வானிலாவுக்கு, “அம்மா இதை உங்களிட்ட குடுக்கச் சொன்னவா” என்றபடி தான் பாவித்த சில உடுப்புகளை அந்த அறையினுள் வைத்துச் சென்றவளை இடைமறித்த தேவகி “ என்ன பிள்ளை நல்லதுகளைக் கொண்டே குடுத்திட்டாய் போல” என்பதும், “ச்சீ…அதெல்லாம் பாஷன் போட்டுது அம்மா” என்ற தனுஷாவின் பதிலும் வானிலாவின் உள் மனதுக்குள் வரட்சியான சிரிப்பையே வரவழைத்தது.

0000000 00000000

ஒருநாள் மாலையாகி விட்டதன் பின்பு சற்று வெளியே வந்து, வீட்டின் பின் முற்றத்தில் நின்று கொண்டிருந்தாள் வானிலா, பகல் முழுவதும் வீட்டிலேயை காணக்கிடைக்காத மாறனின் தந்தை, நிறைந்த போதை மயக்கத்துடன் அவளைக் கடந்து போய்க் கொண்டிருந்தார் அவளை வெளியே கண்டதும், சட்டென நின்றபடி “பிள்ளை “ என்றழைத்தார். அந்த வீட்டில் தன்னை அன்புடன் அழைத்த அவரது குரல் அவளுக்கு மிகுந்த ஆறுதலளிப்பது போலிருந்தது. “மாறன் சரியான நல்ல பொடியன், நீ அவனோட சந்தோசமா வாழவேணும் பிள்ளை” நிலத்தில் காலுான்றி நிற்க முடியாத தள்ளாட்டத்துடன் அவா் நடந்து சென்று தனது கட்டிலில் படுத்துக் கொள்ளும்வரை பார்த்துக் கொண்டேயிருந்தாள் வானிலா. முகமே தெரியாத தனது தந்தையின் நினைப்பு நெஞ்சைத் தழுவி விழிகளினுாடாக கசிந்து வழியத் தொடங்கியது. .

திடீரென தனது அறையிலிருந்து தனுஷா தாயை கூவி அழைப்பது தெளிவாகக் கேட்டது. “என்ன பிள்ளை இதிலதானே இருக்கிறன் சொல்லன்” என அலுத்துக் கொண்டாள் தேவகி. “அம்மா படம் ஒண்டு என்ர மெயிலுக்கு அக்கா போட்டிருக்கிறாள். மாறன்னாவுக்கு பாத்த அண்ணியின்ர படம். ச்சூ…என்ன வடிவம்மா ஸ்டைலான ஆளாத்தான் அக்கா பாத்திருக்கிறாள், மாறன்னாவுக்கு ஏற்ற சோடி, சூ…ப்பரம்மா சினிமா நடிகை மாதிரி இருக்கிறா”.

இந்த வார்தைகள் வானிலாவின் இதயத்தில் நெருப்புத் தணலை அள்ளிக் கொட்டியது போலிருந்தது. மறுகணமே ஓடிச் சென்று கண்ணாடி முன் நின்றவளாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“செல்லம் உன்ர கண்கள் காந்தக் கண்களடா, இப்பிடி கறுப்புமில்லாத சிவப்புமில்லாத ஒரு கலரை நான் காணவேயில்லைக்குட்டி, என்ர மெழுகுச்சிலையடா…நீ.” மாறனின் குரல் அவளது காதிற்குள் தீராத காதலுடன் கிசுகிசுப்பாக கொஞ்சுவது போலிருந்தது.

அவளுக்கு நன்றாகவே தெரியும் தன்னைத்தவிர இன்னொரு பெண் மாறனின் இதயத்தில் இடம் பிடிப்பது முடியாத காரியம் என்பது, ஆனால் காசு, பணம் இப்படி எதுவுமே இல்லாத என்னிடம் எப்படியான சந்தோசத்தை மாறன் அனுபவிக்க முடியும். இது சரிவராது. என்னைப் பிரிவது என்பது மாறனுக்கு எப்பவுமே இயலாத காரியம் நானாகவே மாறனை விட்ட விலகிச் சென்று விட்டால், ஒ….அதுதான் சரியானது.

துாரத்திலே ஒரு உறவினா் வீட்டிற்கு அவனை தாய் ஏதோ வேலை காரணமாக அனுப்பியிருக்கிறாள். அவன் வரும் போது நானிருக்கக்கூடாது. திடமான இந்த தீா்மானத்தை நெஞ்சிலே எடுத்தவளாக. தன் காதல் மனதை கல்லாக்கிக் கொண்டு எழுந்தாள். அவளின் உயிரானவன் கொடுத்த காதல் நினைவுகளை மாத்திரமே நெஞ்சம் முழுவதும் நிரப்பிக் கொண்டு, எவருமறியாதவாறு அந்த அதிகாலைப் பொழுதில், வானிலா மாறனின் வீட்டை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினாள்.

000000 00000000000000000000

மாலை மயங்கத் தொடங்கியிருந்தது. மாறன் தனது வேலைகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். மனமோ வானிலாவைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அவள் தனக்குக் கிடைத்தது பெரிய அதிஸ்டமென்பதே அவனது எண்ணமாக இருந்தது. மாறனால் தாங்கிக் கொள்ளவே முடியாத எத்தனையோ காயங்களை ஆற்றும் அருமருந்தாக அவளிருந்தாள். உயிருக்குயிரான தனது நண்பர்கள் எத்தனையோ போ்கள் இல்லையென்றாகிப்போன பின்பும் தனது வானிலாவை இழந்து போகவே கூடாது என்ற திடசங்கல்ப்பத்துடனேதான் அவளுடனான காதலை தன் நெஞ்சிலே கட்டிவளா்க்கத் தொடங்கியிருந்தான் மாறன்.

ஆனாலும் வீடுவந்த நாளிலிருந்தே அதிகநேரத்தை அவளுடன் கழிக்க முடியாத துயரம் வேதனையளித்தாலும் மிக விரைவில் திருமணம் முடித்து ஒன்றாகி விடலாம் என்ற ஆறுதலுடன் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டிருந்தான்.

ஊரின் வீதி வளைவில் பொன்னம்பலத்தார் மாறனுடைய பாதையை மறித்து நின்றபடி, கைகாட்டிக் கொண்டிருந்தார். மாறனுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. ’அப்பா ஏன் இந்த நேரத்தில் இங்க நிண்டு என்னை மறிக்கிறார்.’ மோட்டார் சைக்கிளை அவரருகில் நிறுத்தி விட்டு இறங்கினான். “என்னப்பா… ஏன்… இங்க……”

பொன்னம்பலத்தார் தாமதிக்காமல் மகனது கையைப்பற்றி பேசத் தொடங்கினார். மாறன் மிக அதிசயத்தோடும், கவனமாகவும் அவர் சொல்லப் போவதை கேட்கத்தயாரானான். அதிகம் பேசாத தகப்பன் எப்போதாவதுதான் பேசுவார். அந்தப் பேச்சில் ஏதாவது ஆழ்ந்த அா்த்தங்கள் பொதிந்திருப்பதை மாறன் எப்போதுமே அவதானித்து வந்திருக்கிறான்.

“தம்பி மாறன் அப்பாவுக்கு ஒரு உண்மை சொல்லவேணும்“ போதையின் வாசனையே இல்லாமல், முகத்தில் துயரத்தின் ரேகைகள் பதிந்தவராக அப்பா மிகுந்த நிதானமாக இருந்தார். இது மாறனை குழப்பத்தின் உச்சத்திற்கே கொணடு சென்றது.

“சொல்லுங்கப்பா” என்றவாறு தந்தையின் பாசத்தோடும் பணிவோடும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ மாறன் நீ அந்த பிள்ளையை உண்மையா விரும்புறியோ”

“அப்பா ” என வீரிடலாக தனை மறந்து கதறியே விட்டான் மாறன்.

அவனது முகத்தையே உற்றுப்பாரத்தவாறு தகப்பன் தனது பதிலுக்காக காத்திருப்பது புரிந்தது.

“என்ர அப்பா மேலே ஆணையா சொல்லுறன், என்ர உயிருக்கு மேலாக வானிலாவை விரும்புறன் அப்பா” அவனது குரல் உணா்ச்சியுடன் தழு தழுத்தது.

“ம்… அப்பிடியெண்டா நான் சொல்லுறத கேள்” என அழுத்தமான குரலில் மகனிடம் சொல்லத் தொடங்கினார் தேவகியின் திட்டத்தையும், வானிலாவுக்கு மேற் கொள்ளப்பட்ட புறக்கணிப்பையும் இறுதியில் வானிலா தற்போது வீட்டிலில்லை என்பதையும்கூறி, அவனை விரைவுபடுத்தினார்.“போ….போய் அவளைக் கண்டு பிடிச்சு கூட்டிக் கொண்டு வந்து கொம்மாவுக்கு முன்னால இவள்தான் என்ர பெண்சாதியெண்டு நிப்பாட்டு கெதியா போ… மாறன்.

உன்ர அப்பா ஊருக்குள்ள நல்ல பணக்காரன், ஆனால் மனசுக்குள்ள நிம்மதியில்லாத பிச்சைக்காரன். நீயெண்டாலும் நல்லாயிரு போடா போ… கொப்பா இனித்தான்ர குடிக்கப்போறன்.“ என்றவாறு கள்ளுக்கடை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

மாறனுக்கு உலகமே இருண்டு விட்டது போலிருந்தது.

“வானிலா யார் என்ன சொன்னாலும் செய்தாலும் நீ எனக்கு என்ன செய்து போட்டாய்” மனம் அலறியது.

அவனது சர்வாங்கமும் சோர்ந்து சுருண்டது. சக்தியே இல்லாமல் மோட்டார் சைக்கிளை இயக்கினான் ’ எங்கே போவன் எப்படி தேடுவன், என்னைத் தவிர உனக்கு உலகமில்லையெண்டு சொல்லுவியே நிலா என்னையே விட்டு போனியோ எங்க போனாய், எப்பவும் என்னோட இருப்பன் எண்டுதானே சொன்னாய்.. ஓலமிடும் மனதுடன் வீடு நோக்கி புயல் வேகமெடுத்துப் பாய்ந்தது உந்துருளி.

மோட்டார் சைக்கிள் வந்ததையும், மாறன் வேகமாக அறைக்குள் நுழைந்ததை நோட்டமிட்டுக் கொண்டிருந்த தேவகி, வேகமாக தேனீா் தாயாரித்து எடுத்தவாறு அவனை நெருங்கினாள். சாரமும் பழைய தனது பாக்குமாக மீண்டும் எங்கோ போகும் ஆயத்தத்துடன் வேகமாக அவன் வெளியில் வருவது தெரிந்தது. விரலில் அணிந்திருந்த தங்க மோதிரமும். கழுத்தின் பவுண் சங்கிலியும் கண்ணாடி மேசையின் மீது கழட்டியெறியப்பட்டுக்கிடப்பது தெரிந்தது. தேவகியை மனதில் குழப்பம் சூழத் தொடங்கியது.

“தம்பி தேத்தண்ணீ“ என மெதுவாக குரல் கொடுத்தாள்,

“சரத்தோட எங்கையப்பன் வெளிக்கிடுறாய்” இதமான குரலில் கதை கொடுத்துப் பார்த்தாள்.

“தேத்தண்ணீ குடிச்சுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லையம்மா, நிலா எங்க போனாளோ நான் அங்க போறன்.“

“ஐயோ நீ நான் பெத்த பிள்ளையடா……“ என நீண்ட தாயின் புலம்பலை செவிமடுக்காதவனாக “அம்மா உங்களுக்கு மற்ற பிள்ளைகள் இருக்கினம், நிலாவுக்கு நான் மட்டும் தானம்மா இருக்கிறன், அவளுக்கு இடமளிக்காத இந்த வீட்டில எனக்கென்னம்மா இடம், கவலைப்படாதேங்கோ உங்கட குறிக்கோளுக்கு ஏற்ற விதமா என்னால வாழ முடியாதம்மா, உங்கட ஒரு பிள்ளை யுத்தத்தில செத்துப்போச்சுது எண்டே நினைச்சுக் கொள்ளுங்கோ.

அதற்குப்பிறகு அவன் எதற்காகவும் காத்திருக்கவில்லை, தேவகியின் அழுகையும், புலம்பலும் செவிகளில் உக்கிரமாக ஒலித்துக் கொண்டிருக்க, அவன் முற்றத்தில் நிப்பாட்டி விட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் விலத்திக்கொண்டு வீதியில் இறங்கினான்.

அக்கணத்தில் வானிலாவின் குரல் காதுக்கருகில் ஒலிப்பது போலிருந்தது. “எனக்கு தெரிஞ்ச ஒரேயோரு இடம் முதன்முதலாக நாங்கள் சந்திச்சுக் கொண்ட இடம்தான் மாறன்”

அவனது உள்ளத்தில் பலமான நம்பிக்கை வெளிச்சம் உதயமாகத் தொடங்கியது., ’நிலா…என்ர நிலா…உன்ர மாறனாக மட்டுமே உன்னட்டை வாறன்’ அவனது மனம் வேகப்படகு போல சீறிப்பாயத் தொடங்கியது. . முல்லைத்தீவுக்குப்போகும் கடைசி பேரூந்தை பிடிப்பதற்காக மாறன் ஓடத்தொடங்கினான்.

0000000

http://eathuvarai.net/?p=4506

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.