Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் இரட்டை வேடம்

Featured Replies

ஈழப் பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடமிடுகிறது- முதல்வர் கருணாநிதி துணை போக வேண்டாம்: மூத்த ஊடகவியலாளர் சோலை

(புதன்கிழமைஇ 22 நவம்பர் 2006 19:45 ஈழம்) (புதினம் நிருபர்)

ஈழப் பிரச்சனையில் இந்திய அரசாங்கம் இரட்டை வேடமிடுகிறது என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி புரிந்து கொண்டு துணை போகக்கூடாது என்று தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சோலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மூத்த ஆலோசகரும் மூத்த ஊடகவியலாளருமான சோலை (வயது 75) குமுதம் குழுமத்தின் றிப்போர்ட்டர் வாரம் இருமுறை இதழில் எழுதியுள்ள கட்டுரை:

"இலங்கை இனச் சிக்கலில் தனது நிலையை மைய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று முதல்வர் கலைஞர் தெரிவித்தார். பிரதமரைச் சந்திக்க மைய அமைச்சர் டி.ஆர். பாலுவையும் அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கலைஞருக்குஇ பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருக்கிறார். இலங்கை வடக்குஇ கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் சூழல்களைக் கருத்தில் கொண்டுஇ இந்திய அரசு 5,200 மெட்ரிக் தொன் அரிசியும்இ 1,500 மெட்ரிக் தொன் சர்க்கரையும் (சீனி) 300 மெட்ரிக் தொன் பால் பவுடரும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பை தமிழகம் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றது. ஈழத் தமிழர்களைத் தங்கள் உடன்பிறப்புக்களாகக் கருதும் தமிழ் மக்கள் மகிழ்ந்து போனார்கள். ஆனால், அதன் பின்னணியை அவர்கள் திரும்பிப் பார்க்க மறந்து விட்டார்கள்.

கொழும்பு - யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை கடந்த ஐந்து மாதங்களாக, சிங்கள அரசு மூடிவிட்டது. அதனால், ஈழத்தில் குந்தியிருக்கின்ற ஒரு லட்சம் சிங்களத்துருப்புகளுக்கு, உணவுப் பொருள் செல்ல வழியில்லை. இந்தியாவிலிருந்து தமிழகக் கடற்கரையிலிருந்து உணவு செல்வதுதான் எளிது.

எனவே, இந்த உணவுப் பொருள்களை அனுப்பி உதவும்படி,சிங்கள அரசு இம்மாதத் தொடக்கத்தில் இந்தியாவைக் கேட்டுக் கொண்டது.

இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தியாளர், நக்மா மல்லிக் இம்மாதம் 6 ஆம் தேதியன்று கொழும்பில் கூறியதை அப்படியே தருகிறோம்.

"இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய இந்தியா சம்மதித்துள்ளது. இந்திய அரசு நேரடியாக ஈடுபடாமல், தனியார் வர்த்தகர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்தியாவிலிருந்து பருப்பு மற்றும் சர்க்கரை ஏற்றுமதி செய்யத் தடை இருக்கிறது. இந்தத் தடை, இலங்கைக்கு உதவும் பொருட்டு விலக்கிக் கொள்ளப்படும். எனினும் சரக்குக் கப்பல்களின் பற்றாக்குறையால், இந்த ஏற்றுமதி தாமதமாகிறது!" இப்படி கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

இதில் முன்னேற்றம் என்ன தெரியுமா? இந்தியாவிலிருந்து இலங்கையின் தனியார் வர்த்தகர்கள் வாங்குவதாக இருந்தது. தனியார் விற்பனை செய்வதை, மைய அரசு அனுமதிப்பதாக இருந்தது. கலைஞர் விடுத்த அறிக்கை, மைய அரசிற்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகி விட்டது. இனி சிங்கள அரசின் கோரிக்கையை ஏற்று, உணவுப் பொருள்களை இந்திய அரசே ஏற்றுமதி செய்யும் அல்லது அதற்கு வழி வகுக்கும்.

பசியாலும் பட்டினியாலும் செத்து மடியும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவுவதாக இருந்தால், பிரதமர் மன்மோகன் சிங் என்ன செய்திருக்க வேண்டும்? "மூடிக் கிடக்கும் யாழ்ப்பாண சாலையைத் திறந்து விடு" என்று சிங்கள அரசை வலியுறுத்தியிருக்க வேண்டும். இப்போது சிங்கள அரசின் கோரிக்கையை ஏற்று, உணவுப் பொருள்களை அனுப்புவதன் மூலம், யாழ்ப்பாணச் சாலை மூடப்பட்டதை நியாயப்படுத்துகிறார்களா ?

யாழ்ப்பாணம் சாலை மூடப்பட்டதை எத்தனையோ நாடுகள் கண்டித்துவிட்டன. எத்தனையோ மனிதாபிமான அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துவிட்டன. ஆனால், இன்றுவரை இந்திய அரசு வாயே திறக்கவில்லை.

அண்மையில் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கொழும்பு சென்றார். அளவளாவினார். "யாழ்ப்பாணச் சாலையைத் திறந்து விடுங்கள்" என்று வற்புறுத்துவதற்காகத்தான் அவர் கொழும்பிற்குப் பயணித்தார் என்று, நமது பேதை மனம் கற்பனை செய்தது.

கொழும்பிலிருந்து டெல்லி திரும்பினார். மத்திய அமைச்சரவை கூடியது. கூட்டத்தின் முடிவை சிதம்பரமே அறிவித்தார்.

மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு கேட்கும் மைசூர் பருப்பும் பாசிப் பயறும் தொன் கணக்கில் (தடைநீக்கி) அனுப்பப்படும் என்று அறிவித்தார்.

தமிழ் நெஞ்சங்கள் அதிர்ந்து போயின. மனிதாபிமானத்தைத் தூக்கிலிட்டு, யாழ்ப்பாணச் சாலையை மூடிவிட்ட சிங்கள இனவாத அரசிற்கு, மனிதாபிமான அடிப்படையில் பருப்பு அனுப்புவது என்ற முடிவு விமர்சனத்திற்குள்ளானது. எனவே, நிதி அமைச்சகம் அடுத்த நாள் ஒரு வித்தார விளக்கம் தந்தது. மைய அரசு அனுப்பாது. தனியார் அனுப்புவார்கள் என்றது. யார் அனுப்பினால் என்ன? சிங்கள அரசின் கோரிக்கையை மைய அரசு ஏற்றுக் கொண்டது.

யாழ்ப்பாணத்திற்கென்று இந்திய அரசு அனுப்பும் உணவுப் பொருள்கள் எங்கே போய் இறங்கும்? ஈழத்தில் சிங்கள ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் போய் இறங்கும். மைய அரசு தெரிவித்திருக்கிறது.

இப்போது இருக்கின்ற நடைமுறை என்ன? யாழ்ப்பாணப் பகுதியில் இறக்கப்படும் உணவுப் பொருள்களில், 80 சதவிகிதத்தை சிங்கள ராணுவம் எடுத்துக் கொள்கிறது. ஆமாம். ஒரு லட்சம் துருப்புக்களுக்கு 80 சதவிகித உணவுப் பொருள்கள். ஐந்தரை லட்சம் மக்கள்தொகை கொண்ட யாழ்ப்பாணத்திற்கு 20 சதவிகித உணவுப் பொருள்கள். வேடிக்கையான_வேதனையான பங்கீடு. இதுதான் சிங்கள அரசின் நியாயம். எனவே, அங்கே ஒரு கிலோ அரிசிஇ 235 ரூபாய். ஒரு தீப்பெட்டிஇ 250 ரூபாய்.

இந்த உண்மை விரைவில் வெட்ட வெளிச்சமாகும். இது தெரியாமல், ஏதோ யாழ்ப்பாண மக்களுக்குத்தான் இந்திய அரசு உணவுப் பொருள்களை அனுப்புகிறது என்று நம்பி, அதனைச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் விநியோகிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.

இலங்கையில் ஈழப் பரப்பில்தான், ஆழிப்பேரலைகளின் அழிவுகள் அதிகம். எனவே, சர்வதேச சமுதாயம் சுனாமி நிவாரண உதவி அளிக்க முன்வந்தது. ஆனால் சர்வதேச சமுதாயம் அனுப்பிய உதவியில், ஒரே ஒரு பொட்டலம் கூட, ஈழம் வந்து சேரவில்லை.

ஜனதா விமுக்திப் பெரமுன (ஜே.வி.பி) என்ற சிங்கள இனவாதக் கட்சி அதனைத் தடுத்துவிட்டது. ஈழத்திற்கு அனுப்பினால் ஆட்சி கவிழும் என்று அச்சுறுத்தியது. கலவரங்களைத் தூண்டக் காத்திருந்தது.

அந்தக் கட்சி, ராஜபக்சேக்களின் தோழமைக் கட்சி. அந்தக் கட்சியும் இன்னொரு சிங்கள இனவாதக் கட்சியும் அவரைத் தங்கள் கைதியாக வைத்திருக்கின்றன. அவருடைய சிம்மாசனம் நிலைக்க அந்த இனவாதக் கட்சிகளின் ஆதரவு அவருக்குத் தேவை. இந்தியாவை ஏகாதிபத்திய நாடாகச் சித்திரிப்பது அந்தக் கட்சிகளின் அரசியல். உலகம் அளித்த உதவியையே ஈழத்திற்கு வழங்க மறுத்தவர்கள், எப்படி இந்தியப் பொருள்களை மட்டும் அப்படியே யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவார்கள்?

இலங்கை இனச் சிக்கலில் இந்திய அரசு தமது நிலைமையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று, முதல்வர் கலைஞர் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய உணர்வுதான் ஆறு கோடித் தமிழ் மக்களின் உணர்வு. அதுவே உலகத் தமிழர்களின் வேண்டுகோள்.

வாஜ்பாய் பிரதமராக இருக்கும்வரை, சிங்கள அரசிற்கு ஆயுதங்கள் அளிக்க மறுத்தார். இராணுவ உடன்பாடு காண மறுத்தார். தமிழகத்தின் உணர்வுகளுக்கு அவர் மதிப்பளித்தார். அந்த வகையில், அவர் உயர்ந்த மனிதர். மனிதாபிமானி, அரசியல் ஞானி என்பதனை மெய்ப்பித்தார்.

மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றது. ஏற்கெனவே நடைபோட்ட பாதையிலிருந்து எல்லா வழிகளிலும் இந்தியா நழுவத் தொடங்கியது. ஈழப் பிரச்னையிலும் இடறி விழுந்தது. சிங்கள இனவாத அரசிற்கு டெல்லியில் மரியாதை கூடியது. அதன் பிரதிநிதிகள் ஏதோ மாமியார் வீட்டிற்கு வந்து செல்வது போல் வந்து செல்கிறார்கள்.

ஈழத்தை மயான பூமியாக்க, எந்த ஆயுதத்தையும் இந்தியா சிங்கள அரசிற்கு அளிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பரதன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பிரதமரைக் கேட்டுக் கொண்டனர். சரி என்று அவரும் சொன்னார். பிரணாப் முகர்ஜியும் சொன்னார். நமக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சி.

இப்போது இந்தியக் கடற்படைத்தளபதி அருண்பிரகாஷ், அதிர்ச்சி தரும் செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

''இலங்கையின் இறையான்மை. பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்திருக்கின்றன. எனவே, சிங்களக் கடற்படைக்கு ராடார்கள், தளவாடங்கள்இ துப்பாக்கிகள் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்'' என்கிறார். அந்த முடிவு செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் அவர்களே, இதுதான் மன்மோகன் சிங் அரசின் ஈழத்துக் கொள்கை. உங்கள் ஆட்சிக் காலத்தில் ஈழத்து மக்களுக்கு விடிவு ஏற்படவில்லையென்றால், அங்கே தமிழ் இனமே அழியும். தயவு செய்து நீங்கள் அதற்குத் துணைபோய் விடாதீர்கள் என்று தனது கட்டுரையில் சோலை தெரிவித்துள்ளார்.

நன்றி : புதினம்.கொம்

ஈழத்திலிருந்து ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.