Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆராதனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆராதனா

- அனோஜன் பாலகிருஷ்ணன்.

 

images (4)

அபத்தமான தருணங்களில் ஒன்று பஸ் பயணம்.அதுவும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருவது மகா எரிச்சலை கிளப்பியது.மெல்ல மெல்ல தன்னிலை இழந்து அரைத்தூக்கத்தில் இருந்தேன். ஏஸி பஸ்க்கு ஆசைப்பட்டதின் விளைவாக குளிர் தாங்காமல் அவதிப்பட்டு குல்லா சகிதம் சில கிழவர்கள் குறட்டை விட்டு பஸ் எஞ்சின் சத்தத்தை முறியடித்தனர். சுற்றிப்பார்த்தேன் கவனிக்கத்தக்கவகையில் ஒரு இளமை ததும்பிய பெண்களையும் காணவில்லை.

என் பின்னால் சுவட்டருடன் இருந்த ஒரு கிழவர் என் பிராணத்தை வேண்டனும் என்ற நோக்கத்தில் இருந்தார்போலும்,என்னால் சீட்டை பின்னால் மடிக்க முடியவில்லை.கொஞ்சம் மடித்தால் “கால் வைக்க முடியவில்லை தம்பி..கொஞ்சம் நிமித்திரியலே……”

சம்பந்தம் இல்லாத சத்தங்கள்,முகங்கள். இறங்கும்போது பக்கத்து ஸீட் காரரின் சினேகமான புன்னகையுடன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன்.

ஒருவாரத்தில் கலியாணம் எனக்கு.பொறுமையாக லீவு போட்டுட்டு புதிதாக தோன்றிய சில படபடப்புடன் வந்து சேர்ந்திருந்தேன்.

ஆராதனாவின் பெயர்தான் என்னை முதலில் கவர்ந்தது.பாழாப்போன செவ்வாய் தோஷத்தினால் ரொம்ப அவதி,அப்படி ஒரு பெண்ணை நிமிஷங்களுடன் நிமிஷமாய் கரைந்து தேடி ஆராதனாவை கடைசியில் கண்டுபிடித்தார்கள்.நூற்றுக்கு எண்பத்தைந்து வீதம் பொருத்தமாம் நம்ம ஜோசியரே சொல்லிடாரே அப்படின்னு குடும்பமே மகிழ்ச்சியுடன் ஆதங்கப்பட்டு அம்மா போன் பண்ணி சொன்னாள். தம்பி பத்திரமாக அவள் போட்டோவை வேண்டி ஜாக்குரதையாக ஸ்கேன் செய்து ஈமெயில்லில அனுப்பி வைத்தான்.

ஆராதனாவை போட்டோவில் பார்த்தேன்.அநாவசியத்துக்கு சிரித்துகொண்டு இருந்தாள்.மொத்தம் மூன்று படங்கள் இருந்தது.

இவளா? இவளா?

மெலிதாக சிவப்பு நிறத்தில் அவள் அணிந்து இருந்த சேலையில் அவள் என்னை கவர்ந்தாள். சில மைக்ரோ செக்கன்களில் நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தின் ஸ்தரத்தை நிர்ணயிக்கின்றன.

அவளுடன் பேச கிடைத்த சந்தர்ப்பம் சொல்லிக்கொள்ளும் படியாக மிக நீண்டதாக இருக்கவில்லை.ரொம்ப வெறுப்பில் அக்காவிடம் கேட்டேன்.

“அக்கா…… ஆராதனாவோடு என்னால் சரியா கதைக்க முடியுதில்லை பொஷுக் பொஷுக் என்று ஓடி விடுகுறாள் போனில்…. ஒவ்வொரு முறை ஒவ்வொரு காரணங்கள் அடுப்பில் பால் பொங்குது,குக்கர் விசில் அடிக்குது,பிரிச் கதவு மூடவில்லை இப்படி ஸில்லி ரீசன்ஸ்…என்னக்கா இது??”

அக்கா சிரித்தாள்.

“டேய் அவள் ரொம்ப சென்சிட்டிவ்டா இதுதான் அவங்க குடும்பத்தில முதல் கலியாணம்… நீ இப்படி தாம் தூம் என்று போனில் விரட்டினால் அவள் என்ன பண்ணுவா…..”

“அப்ப எப்படி கதைக்கிறது ?”

“இன்னும் ஒருவாரத்தில் கலியாணம் அப்புறம் சகவாசமாக கதைத்துக்கொள்….”

“ஹிஹிஹி….”

“ஏன் இளிக்குற?”

“உனக்கு வெட்டிங் பிக்ஸ் ஆன புதுசுல அத்தானோட ராவுராவா கள்ளமா கதைப்பியாம் அம்மா சொல்லி சிரிக்கிறவா இப்பவும்….”

“ஓய்ய்…..”

“அத்தான் எப்படி உன்னுடன் கதைத்தார்? ஹிஹிஹி…….”

“போடா….டேய்” அக்கா முகம் சிவந்தது.

ரொம்ப உன்னதமான தருணங்களில் ஒன்று திருமணம், மற்றொரு வகையில் அவஸ்தையின் விளிம்பு. மூன்று மணிக்கு எழும்பி அக்கா, அம்மா, கோகுலாஅக்கா, சுமதிமாமி தட்டுக்கள் மற்றும் இதர சமாசாரங்களுடன் ஆராதனா வீடுநோக்கி படை எடுத்தார்கள். அந்த குளிரில் அவளை குளிப்பாட்ட.

என்னையும் குளிப்பாட்டி பட்டுவேட்டி உடுத்தி என்னையும் வெட்கப்பட வைத்து நாலு பேர் படைசூழ மண்டபத்தில் கொண்டுபோய் விட்டார்கள்.மாப்பிள்ளைதோழன் என்று அவளின் குட்டிதம்பியை பக்கத்தில் இருத்தினார்கள். எக்சிபிஷனில் காணாமல் போன பையன்போல் முழித்துகொண்டு ஐயர் சொன்ன சமஸ்கிருத இஸ்..புஸ்..லாஸ் களை ஹோம புகைமூட்டத்தில் கண்ணீர்வர ஒப்பிவித்துக்கொண்டு இருந்தேன்.

ஒருவழியாக ஆராதனாவை கொண்டுவந்து மணவறையில் இருத்தினார்கள்.புதுவித உணர்வு என்னவள் என்னவள் எனக்கு மட்டும் உரியவள் என் அருகில் முதல்முறை! அடி வயித்தில் பட்டாம் பூச்சி வினோத சத்தத்துடன் பறந்தது. நிறைய வாசனை மகத்துவமாக நிறைந்திருந்தது ஊதுபத்தி,பழங்கள்,கற்பூரம்,கரும்பு.. வாசனை வாசனை……விதம் விதமாக நிறையவாசனை.

ஆனால் அந்த விநோத உணர்வுமட்டும் ஒரு சுகம்தந்தது. எல்லாம் முடிந்து வீடுவர ஆராத்தி என்று கொன்றார்கள். ரொம்பக் களைத்தது. மாமிமார்கள் சளைக்காமல் வானில் இருந்து இறங்கி மார்பில் சரிந்த புடவையை சரி செய்துகொண்டு சிரித்துபேசினர். மாலை ரெஜிஸ்டேஷன். வந்தவர்கள் சளைக்காமல் பைன்ஆப்பிள் ஜூஸ் குடித்தார்கள். சிரிக்க சிரிக்க பேசினார்கள். எங்களை நிக்கவிட்டு பிளாஷ்கள் மின்ன போட்டோ எடுத்தார்கள்.

எல்லாம் சில சில்மிஷங்களுடன் முடிவுக்கு வந்தது. அடுத்தவாரமே பம்பலப்பிட்டி பிளாட்டுக்கு வந்து சேர்ந்தோம். ஒருவரை ஒருவர் அறியாத தயக்கம் கலந்த பயம் இருந்தது. எதிர்பார்ப்புக்கள் திரண்டு இருந்தது. புதுப்பொண்டாட்டி மோகத்தில் குதுகலமாகவிருந்தேன்.

நிறைய வில்சிமித்,ஜெனிர் ஆச்சர் புத்தகங்களை அலுமாரியில் இருந்து தூசுதட்டி அவள் கண்ணில் படும்படி வைத்தேன். அவள் கண்டுகொள்ளவில்லை, ஏறேடுத்தும் பார்க்கவில்லை.

“ஜென் கவிதைகள் வாசிச்சு இருக்கியா???”

“இல்லயே…”

“ரொம்ப மிருதுவான கவிதைகள்….”

“தெரியாதே…”

“தஸ்தாயெவ்ஸ்கி புக்ஸ் படிச்சியா?”

“இல்லப்பா….”

“அவரின் நாவல்கள் குற்றமனப்பாங்கினையும் அடக்கப்பட்ட உணர்ச்சிகள் கொண்ட மனிதர்களின் உளச்சிக்கல்களையும் பேசும்..நிறைய விஷயம் அவரின் நாவலினூடு நுட்பமாக சொல்லுவாரு..அவரு என்ன சொல்லுறாரு எண்டா…….”

“ஹையோ…ஆளவிடுங்கப்பா….பிரேக்ப்வஸ்ட்கு என்ன செய்ய?” முடியை வாரி முடிந்து கொண்டு கிளம்பினாள். ரொம்ப சிலிர்த்தது.

என் கனவின் அடிவிம்பத்தில் என் மனைவிக்கு நிறைய புத்தகங்கள் தெரிந்து இருந்தது, நிறைய ஹைக்கூகவிதைகள் எழுதுவாள், சிரிக்க சிரிக்க கதைப்பாள் ரொம்ப நேரம் நானும் அவளும் இலக்கிய நுணுக்கங்களை ஆராய்வோம். ரொம்ப நன்றாக நீந்துவாள் அந்த நீலகடலில் நீலம் கருநீலமாக ஆக ஆக ரொம்ப ரொம்ப ஆழமாக ஆழமாக…..

இவள் அப்படி இல்லையோ!

என் தனி பிளாட்டில் அவளை தனியாக விட்டுவிட்டு வந்தேன் வேலைதளத்துக்கு. என் மனதின் ஓரத்தில் அவள் ஹெட்போன் போட்டுகொண்டு மிக மிக இனிமையாக யஸ்ரன் பீபர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

வேலைத்தளத்தைவிட்டு திரும்பியதும் அவளிடம் கேட்டேன்.

“கோல்பேஸ் போவம்…..”

“எதுக்கு?”

“எதுக்கா? ஹஹ…. வந்து பாரேன்…கடல் காத்து ரொம்ப நல்லா இருக்கும்..சூரியன் மறையக்க பாத்து இருக்கியா? அடிவானம் டீப் சிவப்பாக இருக்கும்..ஓரேஞ்சு கலர்ல ரொம்ப விசித்திரமாக ஸ்பரிசமாக இருக்கும். தூரத்துல கொக்குகள் எல்லாம் பறக்கும் அப்பக்க….”

“போதும்பா…அறுக்காதிங்க…..இப்ப வரனுமா?”

அவளுக்கு என் ரசனை புரியவில்லை.என்னுடைய தர்க்கங்கள் அவளுக்கு புரியவில்லையே. ச்சே ச்சே.

கோல் ரோட்க்கு நடந்து போய் பஸ்ஸில் ஏறி அவசரங்கள் காட்டாமல் போனோம். வயதுவந்த சிறுவர்கள் பட்டம் உற்சாகமாக விட்டுகொண்டு இருந்தார்கள்.கடலை பார்க்க விடாமல் எக்கச்சக்க குடைகள்தான் மறைத்தது. இளம்பெண்கள் தத்தம் காதலர்களுடன் சொல்ல முடியாத சில்மிஷங்கள் செய்துகொண்டு இருந்தார்கள். சிமென்ட் ப்பேஞ்சில் நிறைய பெண்கள் விபரீத ஆசைகளுடன் புதுப்புது ஆண் நண்பர்களுடன் அவசரத்தில் இருந்தார்கள்.

ஆராதனா பிரமித்தாள். என்னிடம் ஏதும் அவள் கேட்கவில்லை. கடலை பார்க்காமல் சின்ன பிள்ளைகள் பட்டம் விடுவதை ஆர்வமாக பார்த்துகொண்டு இருந்தாள். ஐஸ்கிறீம் வேண்டிக் கொடுத்தேன்.

“இந்த கடலை பார்த்தால் என்ன தெரிது?”

“ரொம்ப நீலம்தான் தெரிது…”

“அதை கேக்கவில்லை…அங்க பாரு அடில சூரியன்,மெல்லிய சிவப்பு நீல மேகத்தோட அதன் வளைவுகள் கலக்கின்றது, அந்த நாரை பறந்துபோவதனை சேர்த்துப்பார்க்க மொடர்ன்ஆர்ட் மாதிரி இல்ல..?”

“இல்ல”

“இல்லையா?”

“ஐயோ…எனக்கு இதப்பத்தி தெரியாது” என்றாள் சுவாரசியம் இன்றி. எனக்கு வெறுப்பு எஞ்சி தகதகத்து ரீங்காரமிட்டது.

“நான் நல்லா ஸ்சுவிமிங் பண்ணுவன்….”

“அப்படியா?”

“நீ செய்யமாட்டியா?”

“இல்லப்பா.. அப்பா சில சமயம் பீச் கூட்டிட்டு போய் இருக்கார் கஷோரினா.குட்டி குட்டி அலை வரும் பார்க்க அழகா இருக்கும்.கால நனைச்சுடு ஓடு வந்துடுவம்…அது ரொம்ப நல்லா இருக்கும்.” என்று சிரித்தாள்.

“அதுக்கு பீச் போகாம வீட்ட இருந்து மூக்குமுட்ட இருக்கிட்டு நல்ல நித்திரை கொண்டு இருக்கலாம்.”

“ஹ்ம்ம்……”

“என்ன?”

“ம்ம்”

“என்ன ம்ம்?”

“ஒன்றும் இல்லை”

“நீ புக்ஸ் ஒன்றும் வாசிக்க மாட்டியா?”

“ரமணிசந்திரன் கதைகள் வச்சு இருக்கன்…”

என் மனதில் அடித்துக் கொண்டேன். அவளுக்கு ஒரு குறுகிய வட்டம்தான் தெரிந்து இருந்தது. என் ரசனையில் பாதி கூட அவளுக்கு இல்லை….ஹீம்ம்ம்….

“மியூசிக் கேப்பியா?”

“ஓ..கேப்பனே…”

“யஸ்ரன் பீபர், ஏகோன்…கேட்டு இருக்கியா??”

“யாரு அவங்க?… நான் ரேடியோல சமையல் முடிச்சுட்டு தமிழ் பாட்டு கேப்பன்.”

“ஹீம்ம்ம்….. போவோமா…?”

“ம்ம்….இருட்டுது போவோம் ரொட்டி சுடணும் டைம் ஆச்சு” என்றாள்.

மெலிதாக சிவப்பு நிறத்தில் அவள் அணிந்து இருந்த சேலையில் அவள் என்னை விலகிப்போனால். அவளிடம் விஷேசமாக எதுவும் இல்லை. நான் எதிர்பார்த்த பெண் இவள் இல்லையா?. நாள் முழுவதும் ஓபீஸ்ல இருந்துட்டு எக்கௌன்ஸை கிளியர் பண்ணிவிட்டு கற்பனைகளில் மூழ்கும் என் தாகங்களை புரிந்து கொள்ள முடியாத என் ரசனைகளின் வாசம் அறியாத நுகராத பெண்ணாக இருந்தாள்.

அவளிடம் பேச்சு குறைந்தது. எல்லா வேலையும் அவள் நன்றாக செய்தாள். நேரத்துக்கு சாப்பாடு தேத்தண்ணி,தைலம் எல்லாம் கிடைத்தது. ஆனால் என் ஓரத்தில் என் கனவு விம்பங்கள் அவளை கொண்டாடவில்லை. அவளை புறக்கணித்தது.

சுவாரசியம் இல்லாத பக்கங்கள் போல் ஒவ்வொரு இரவும் கழிந்தது.

சனிக்கிழமை அவள் தீவிர யோசனையில் இருந்தாள். சாய்வாக விழுந்த வெளிச்சத்தில் அவள் கொஞ்சம் குண்டாகத் தெரிந்தாள்.

“உங்களிட்ட ஒன்று சொல்லணும்…”என்று தயங்கினாள்.

“என்னடி?” என்றேன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்து.

“எனக்கு இந்த முறை ப்பீரியட்ஸ் வரவில்லை. கன்சிவ்வாகி இருக்கலாம் என்று தோனுது..”

முதல் ரெண்டு செக்கண்ட் அவள் சொன்னது புரியவில்லை.

“ஹோ…. செக்கப்பண்ணிடலாம்”

கன்சிவ் நிஜம் என்றால்? நான் அப்பா ஆக போறனா? மனதில் ஒரு ஆரோக்கியமான சந்தோஷம் வீரிட்டது.

நீயுடெல்மென்ட் கொஸ்ப்பிட்டலில் செக்கப் தொடர்ந்தது. கன்சிவ்தான் ஊர்ஜிதமாக சொன்னார்கள். ரொம்ப இனிமையாக உணர்ந்தேன். அம்மாவிடம் சொன்னேன்.ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

“உன் ஜாதகத்தில இப்ப கிரகநிலை நல்லா இருக்கு…நான் சனீஸ்வரனுக்கு விளக்கு ஏத்தினதுக்கு பலன் கிடைச்சுட்டு.” இது அம்மா

“அட…. கோன்கிராயுலேஷேன். பார்றா நாலு மாதத்தில்ல ஆள…ஹ்ம்ம்…எப்ப டொக்டர் டேட் சொன்னாரு?” இது அக்கா

“என்ன அண்ணா அப்பா ஆகபோறியாம்….ஹிஹிஹி” இது தம்பி

“மாப்பிள..சந்தோஷம்….எப்ப யாழ்ப்பாணம் வாறிங்க?” இது அவள் அப்பா.

எல்லாரும் விதம் விதமாக விசாரித்தார்கள்.சுவாரசியமாக இருந்தது. வழமைக்கு மாறாக அவள் அம்மா ரொம்ப நேரம் கதைத்தாள் ஆராதனாவுடன்.அவள் கன்னங்கள் சிவந்து இருந்தது.

அவளின் செய்கையில் இன்னும் சில மென்மைத் தன்மைகளை அவதானித்தேன். என்னுடைய உயிர் அவளின் கருப்பையினுள் இருக்கிறது.அதை நினைக்கையில் ஒரு பெருமிதம். மூன்று மாதத்தில் வயிறு பழையமாதிரி இல்லை.அவளின் ஆடைகள் சிரமப்பட்டது.

“என்ன இன்றைக்கு லேட்..?.”

“உனக்கு டிரெஸ் வேண்டினான்…..இந்த போட்டு பாரு அளவா என்று..” அவள் குசினியில் மினக்கட்டு கொண்டு இருந்தாள்.

“என்ன செய்யிறாய்?” என்றேன்.

“ரெட்டிக்கு மா குழைக்குறன்”

“என்ன அடிக்கடி ரொட்டியா இருக்கு?”

“உங்களுக்கு தான் ரொட்டி ரொம்ப பிடிக்குமாம்….”

“அட யாரு சொன்னது?”

“உங்க அக்கா தான்…”

“அதான் அடிக்கடி ரொட்டியா?…நான் நினைச்சன் உனக்கு ரொட்டி பிடிக்கும் அதான் என்று…”

“ம்ம்ம்ம்… எனக்கு வெள்ளைப்புட்டு தான் பிடிக்கும்…”

மௌனம் ஆனேன்.

அவள் புதிதாகவேண்டிய அடிகளை எடுத்துப் பார்த்தாள்.

“என்ன எல்லாம் ஒரே சிவப்பா இருக்கு எல்லா நைட்டியும்….”

“ஏன் என்ன ஆச்சு???”

“எனக்கு லைட்கிரீன் பிடிக்கும், நாளைக்கு வேண்டலாம் என்டு நினைச்சு இருந்தன். நீங்க வேண்டிடீங்க. ஹா…பரவாயில்லை” என்றாள்.

அப்போதுதான் கவனித்தேன் அவளின் அனேக ஆடைகள் மெல்லிய பச்சை என்று. பின் மண்டையில் யாரோ அடித்தது போன்று இருந்தது. இது வரை அவளுக்கு என்ன பிடித்தது என்று நான் கேட்டனா மடையா? பரிபூர்ண நிசப்தமா இருந்தது.

சுவாரசியமாக ஒவ்வொருநாளும் நிதானிப்பதிற்குள் ஓடியது. ஆராதனா ரொம்ப அமைதியாக இருந்தாள்.அவளின் அமைதி படிப்படியாக எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.

“கோயில் போவமா பிள்ளையார் கோயில்..” ?” என்றாள்

“ஒ எஸ்..போலாமே…

புன்னகைத்தாள்.

“ஒன் மினிட்.. உனக்கு யாரு பிடிக்கும்?” என்றேன்

“முருகன், கிருஷ்ணர்….”

“அப்ப முருகன் கோயில் போலாமா என்று கேட்டு இருக்கலாமே?”

“உங்க புக்ஸ்ல ஓம் கணபதி என்று போட்டு இருக்கீங்க…அப்பவே உங்களுக்கு பிள்ளையார் பிடிக்கும் என்று தெரிஞ்சுகிட்டன்.அதான் அப்படி கேட்டன்.”

மௌனம் கலந்த புன்னகையுடன் அவளை பார்த்தேன்.

அவள் அமைதியை அதிகம் விரும்புவளாக இருந்தாள்.அதிகம் கதைப்பது இல்லை என் தேவைகளை அவள் குழப்பியது இல்லை.அவள் என்னை ரொம்ப அவதானித்து செயல்படுவது புரிந்தது. அடுத்தநாள் லீவு போட்டுட்டு அவளுடன் இருக்க என்னை ஆசுவாசப்படுத்தினேன்.

மெல்ல அவளை கவனித்தேன்.அவள் நடையில் ஒரு தயக்கம், நிதானம் இருந்தது.சமைப்பது துவைப்பது மறுபடி சமைப்பது என்று ஒரு குறுகிய வட்டத்தில் இருந்தாள். ஏழு மாதம் பரிபூர்ணமாக முடிந்து இருந்தது. தீர்மானித்தேன்.

அவளை யாழ்ப்பாணம் கொண்டுபோய் அவள் வீட்டில் விட்டுவிட்டேன். அவள் குடும்பம் சின்னதாக அழகாக இருந்தது.நிறைய சிற்பங்கள்.சோப்பில் செய்த கிளி, யானைகள் உற்சாகமாய் மேசையில் நின்றன.அவள் தங்கையை கேட்டேன்.

“இது எல்லாம் நீ செய்ததா? அழகா இருக்கு…”

அவள் சிரித்தாள். “ஐயோ…இது அக்கா செய்தது…”

“அக்காவா???”

“ஆமா ஹோம் சயின்ஸ் படிச்சாங்கல்ல இது எல்லம் அக்கா படிக்கேக்க பண்ணினது.”

“அப்படியா?”

ச்சே…என்ன கணவன் நீ என்றது போல் அவள் பார்வை இருந்தது.

நிதானமாக யோசித்தேன். அவள் ஆசைகள் அபிலாசைகளை நான் புரிந்து கொள்ளவில்லையோ .என் கனவு விம்பத்தை அவளிடம் எதிர்பார்த்து அவஸ்த்தைப் பட்டுக்கொண்டிருக்கின்றேன்போல.

கொஞ்சம் ரமணிசந்திரன் புத்தங்களை வேண்டிகொண்டு போனேன்.அவள் பரிசோதனைக்கு போயிருந்தாள் தங்கையுடன். அவள் அம்மா இருந்தாள். இன்று இரவு நான் புறப்படுறன் மறுபடியும் அவசரம் நிறைந்த மம்பலபிட்டியவுக்கு.

“ரொம்ப நாளா அவளை வரச் சொல்லி கேட்டுட்டிருந்தம்” என்று அவள் அம்மா சிரித்தாள்.

“அப்பிடியா? என்கிட்ட அவள் அப்படி நீங்க கூப்பிட்டாத சொல்லல..”

“ஓஒ….நாலாவது மாசத்தில் இருந்து கூப்பிடுறம்…”

என் பாக்கில் ஆடைகளை நிதானமாக அடுக்கிக் கொண்டு இருந்தாள்.

“அம்மா முதலே உன்னை கூப்பிட்டாங்களாம் நீ சொல்லவே இல்ல…”

புன்னகைத்தாள்.

“இப்படி சிரிச்சு மழுப்பாத…..ஏன் சொல்லவில்லை?”

“அந்த குட்டி பிளாட்ல இருந்து என்ன தனிய செய்ய போறிங்க..உங்களுக்கு உங்க ஷூ ஷோக்ஸ் ஐயே தேடி எடுக்கத் தெரியா..அப்புறம் எப்படி? நான் இல்லாட்டி நிச்சயம் நீங்க பிரேக்ப்வஸ்ட் சாப்பிட மாட்டீங்க அதுக்கு டைம் கிடைக்காது அதான்…..இப்ப போய் என்ன செய்ய போறீங்க என்று பயமா இருக்கு….பாண் ஈவினிங்வேண்டி ப்ரிஜ்ல வையுங்க..அப்புறம்..ஜாம் முதல் வேண்டினது புதுசாக இருக்கு…………..” அவள் சொல்லச்சொல்ல ஏதோவொன்ருக்கு கட்டுப்பட்டு மிக அமைதியாக நின்றேன்.

 

http://malaigal.com/?p=6860

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு படைப்பு. நிஜமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.