Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வைகறைக்கனவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைகறைக்கனவு (சிறுகதை) – தமிழினி ஜெயக்குமாரன்

 

லரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள்.

 

ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாராங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக் கூறு போடுமாப் போல மரணவலி கிளர்ந்து எழும்பியது. கண்களைத் திறக்க முடியாதபடி இமைகள் ஒட்டிக் கொண்டுவிட்டன போல அந்தரிப்பாயிருந்தது. நாசி நிறையக் குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து கொஞ்சமாவது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றவளுக்கு ‘குப்’ பென்று நுரையீரல் வரை நிறைந்த இரத்த வெடில் நாற்றம் அடி வயிற்றில் குமட்டியது.
“இங்க ஒரு பிள்ளை சத்தியெடுக்கிறா என்னண்டு கவனியுங்கோ”
“அவாக்கு இப்பத்தான் மயக்கம் தெளிஞ்சிருக்குது”
“தங்கச்சி… இப்ப உங்களுக்கு என்ன செய்யுது, அப்பிடியே ரிலாக்ஸா படுத்திருங்கோ. உங்களுக்கு பெரிசா ஒரு பிரச்சனையுமில்லை, கையை ஆட்டிப் போடாதேங்கோ மருந்து ஏறிக் கொண்டிருக்குது.” கழுத்தில் ஸ்டெதஸ்கோப் கொழுவியிருந்த போராளிப் பெண் அவளது தலையை இதமாக தடவி விட்டார். அவளுக்கு சட்டென அந்தக் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. நெஞ்சு விம்மலெடுத்துக் குலுங்கியது.

thamilini

 

இவளுக்கு அருகிலிருந்து இன்னொரு தீனக்குரல் எழுந்தது.
“தண்ணீ….. தண்ணீ.. தண்ணி தாங்கோவன்” பலத்த காயடைந்த இன்னொரு ஆண் போராளி குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தான்.
தாழ்ந்த குரலில் ஒரு மருத்துவ போராளி கூறிக் கொண்டான்.
“இவருக்கு இப்ப தண்ணீ குடுக்கேலாது, நெஞ்சுக் காயம், இன்னும் ஒப்பிரேசன் தியேட்டருக்கு எடுக்கயில்லை”
“அடே… தம்பியா கொஞ்சமெண்டாலும் தாவனடா இண்டைக்கு காலைல இருந்து சென்றில நிண்டனடா தண்ணியே குடிக்கயில்லையடா” மிகவும் தீனமான குரலில் அந்தப் போராளி தண்ணிக்காக கெஞ்சிக் கொண்டிருந்தான். அவனது உதடுகள் வரண்டு பாளங்களாக வெடித்துக் கிடந்தன.

“தங்கச்சி ஒரு துணியை எடுத்து தண்ணில நனைச்சு அந்த அண்ணையின்ர சொண்டை மட்டும் துடைச்சு விடுங்கோ”

 

அப்போதுதான் தான் காயமடைந்து பின்னணி மருத்துவ தளத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. இயலுமானவரை தலையை திருப்பி சுற்று முற்றும் பார்த்தாள். காயங்கள்…. காயங்கள்… பிய்த்தெறியப்பட்ட தசைக் கோளங்கள். அலறல்களும் அனுங்கல்களுமாக அவல ஒலி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருந்தது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அந்த அவசர மருத்துவ தளம் மக்கள் கைவிட்டுச் சென்றிருந்த பெரியதொரு வீடாக இருந்தது. வெறும் நிலத்தில் காயப்பட்ட போராளிகள் கிடத்தப்பட்டிருந்தனர். நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்த சற்று பெரிய பதுங்கு குழி சத்திரசிகிச்சை கூடமாக இயங்கிக் கொண்டிருந்தது. மருத்துவப் போராளிகள் சுற்றிச் சுழன்று வேகமும் நிதானமுமாக கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். மலரினி கண்களை மூடிக் கொண்டாள்………..

மனம் ‘மைதிலியக்கா… மைதிலியக்கா…’ அரற்றத் தொடங்கியது. நினைவுகள் ஒரு படம் போல விரியத் தொடங்கின. கூர்மையான இரண்டு கண்கள் மனசுக்குள் வந்து தனக்கேயுரிய கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்துப் போனது. மலரினி தாங்கொணாத வேதனையில் கண்களை மூடிக் கொண்டாள்.

அன்றைய காலைப்பொழுது வழக்கத்தை விட அதிக குளிரானதாக இருந்தது. இன்னமும் விலகாதிருந்த பனிப்புகாரினைத் தழுவியபடி மெதுவாக அசைந்து கொண்டிருந்த தென்றலின் தொடுகையால் அவள் அணிந்திருந்த இராணுவச் சீருடையின் தடிப்பையும் மீறி உடலின் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன. தலையை மூடியிருந்த சாக்குத் தொப்பியை இழுத்து காதுகளையும் மூடும்படியாக சரிசெய்து கொண்டாள். கூடாரம் போல சடைத்து வளர்ந்திருந்த வேப்ப மரத்தின் உயரமான கிளையில் அமைந்திருந்தது அந்த காவல் பரண்.
கண்ணுக்கெட்டிய துாரமெங்கணும் விரிந்திருந்த இராணுவ முகாமின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மாத்திரம் கண்காணிக்கக் கூடிய வகையி்ல் அந்த காவல் பரண் உயரமான வேப்ப மரமொன்றில் அமைக்கப்பட்டிருந்தது. இருள் கலைவதற்கு முன்னதாகவே மலரினி தனது நிலைக்குச் சென்று கடைமையை தொடங்கியிருந்தாள். இரவிரவாகப் பெய்திருந்த பனியில் நனைந்து ஊறிப்போயிருந்த மரத்தைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறிப் போவது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. அதிகமாக வழுக்கியது எவ்வளவுதான் மரக்கிளைகள் அலைப்புறாமல் அவதானமாக நகர்ந்திருந்தாலும் இலைகளில் படிந்திருந்த பனித் தண்ணீரில் தொப்பலாக நனைந்திருந்தாள். தேகம் நடுங்கியது. பற்கள் கிடுகிடுத்தன. துப்பாக்கியின் சுடுகுழலும் கூடக் குளிர்ந்து போய்க் கிடந்தது. தனது இரு கைகளையும் கரகரவெனத் தேய்த்து கன்னங்களில் வைத்துக் கொண்டாள். அந்த சூடு மிகவும் இதமாக இருந்தது. இப்படியான குளிருக்கு சூடான ஒரு தேனீர் கோப்பையை நினைத்துப் பார்க்க மட்டும்தான் முடிந்தது.

 

வைகறையின் மெல்லிருள் கலையத் தொடங்கியபோது மலரினி தனது தொலை நோக்கி ஊடாக இராணுவ முகாமின் செயற்பாடுகளை நோட்டமிடத் தொடங்கியிருந்தாள். உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அரணை ஒட்டி அண்ணளவாக முப்பது மீற்றர் இடைவெளிகளில் காவலரண்களின் தொடர்ச்சி நீண்டு கொண்டே சென்றது.

காவலரண்களின் சுடும் ஓட்டைகளுக் கூடாக இரும்புத் தொப்பிகளின் அசைவுகள் மங்கலாகத் தென்பட்டன. துப்பாக்கிகளின் சுடு குழல் வாய்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு காவலரணிலும் காணப்பட்ட இரும்புத் தொப்பிகளின் எண்ணிக்கையையும், துப்பாக்கிக் குழலின் வடிவத்தைக் கொண்டு அதன் ரகத்தையும் ஆராய்வதற்கு முயன்று கொண்டிருந்தாள் மலரினி. அந்த இராணுவ முகாமின் இன்றைய அமைதியான தோற்றம் அவளின் மனதிற்குள் கடுமையான சந்தேகத்தை எழுப்பியது. தொலை நோக்கியின் துாரத்தை சரிப்படுத்தியபடியே தனது பார்வையை கூர்மைப் படுத்தியவளாக, இராணுவ முகாமினுள் வித்தியாசமான அசைவுகள் ஏதாவது தென்படுகின்றதாவென துருவித்துருவி ஆராயத் தொடங்கினாள்.

 

அந்த இராணுவ முகாமைக் குறுக்கறுத்துத் செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் அமைந்திருந்த காவலரண்களின் பின்ணணியில் புதிதாக ஏதொவொரு அம்சத்தை அவளால் அவதானிக்க முடிந்தது. துணுக்குற்று நிமிர்ந்தாள். மிகவும் சாதுரியமாக உருமறைப்பு செய்யப்பட்டிருந்த அது நிச்சயமாக துாரவீச்சு பீரங்கி பொருத்தப்பட்ட யுத்த டாங்கி என்பது புரிந்தது. தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தும் தொலை நோக்கிக்கூடாக பார்வையை விரித்தாள்.

அப்படியாயின் ஒரு வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு அவர்கள் தயாராயிருக்கிறார்கள். உடனடியாக தனது அவதானிப்பு செய்தியை சங்கேத குறியீடுகள் மூலம் கட்டளைப் பணியகத்திற்கு அனுப்பினாள். ‘இண்டைக்கோ நாளைக்கோ இந்தப்பகுதியில் ஒரு பெரிய சண்டை நடக்கலாம். சிலவேளை நடக்காமலும் போகலாம். இப்படித்தான் போன கிழமையும் டாங்கிகளை கொண்டுவந்து முன்னுக்கு விட்டிட்டு இடைக்கிடை பீரங்கியால சுட்டுக் கொண்டிருந்தவங்கள். டாங்கியின்ர என்ஜினை ஓட விட்டிட்டு ரேஸ் பண்ணி ரேஸ் பண்ணி சத்தம் காட்டினவங்கள்’. ‘எங்கள உளவியல் ரீதியா பயப்பிடுத்தத்தான் இப்பிடிச் செய்யிறாங்கள்’ எண்டு மைதிலியக்கா சொன்னதை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். உண்மைதான் ‘டாங்கி இரையிற சத்தத்தைக் கேட்டாலே வயித்துகுள்ள ஏதோ செய்யிற மாதிரி கிடக்குதடி’ என்று கோதையும் சொல்லியிருந்தாள்.

 

‘சென்றி நேரம் முடிந்ததும் முதலில றைபிள் கிளீன் பண்ணவேணும். கிடைக்கிற நேரத்தில் ஓடிப்போய் நிறையத்தண்ணியில வடிவா தலைக்கு முழுகிட்டு வரவேணும்‘ என நினைத்துக் கொண்டாள். தொலை நோக்கியின் துாரத்தை கைகளால் சரி செய்தபடி இராணுவ முகாமின் நடமாட்டங்களை நுட்பமாக அவதானித்துக் கொண்டிருந்தன அவளது விழிகள்.

 

வயிறு வெறுமையாக இருப்பதாகப்பட்டது. “கிர்…புர்..” சத்தம் வேறு கேட்கத் தொடங்கியது. இந்தக் குளிருக்கு நேரத்துடன் பசியெடுப்பது போலவும் இருந்தது. இந்தப் பொஸிசனுக்கு காலைச் சாப்பாடு வர எப்பிடியும் எட்டு ஒன்பது மணியாகும். முன்னணிக்காவல் நிலைகளுக்கும் சற்று முன்பாக வேவு நடவடிக்கைக்காக இந்த உயரமான காவல் பரண் அமைக்கப் பட்டிருந்தது. ‘இண்டைக்கு எப்பிடியும் மைதிலி அக்காவைக் கொண்டு முருங்கைக்காய் கறி வைச்சுச் சாப்பிடவேணும்‘ என நினைத்துக் கொண்டாள். வீட்டில அம்மா வைக்கிற முருங்கைக்காய் கறியும் புட்டும் அந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து நாக்கில் உமிழ்நீர் சுரந்தது.

 

சட பட வென ஐம்பது கலிபர் துப்பாக்கி பொழிந்து தள்ளும் சத்தம் இராணுவ முகாமின் பக்கத்திலிருந்து எழும்பியது. தொலைநோக்கியில் பார்வைப் பொருத்திக் கொண்டு ஆராய்ந்தாள். எந்தக் காவலரணில் இருந்து அந்த ஆயுதம் இயக்கப்படுகின்றது என்ற விபரம் அவளுக்குத் தேவையாக இருந்தது. சத்தம் இவளுக்கு நேரெதிராக இல்லாமல் சற்று பக்கவாட்டுத் துாரத்திலிருந்து வந்திருக்க வேண்டும். அந்தப்பகுதியில் ஆண் போராளிகளின் படையணியொன்று நிலைகளை அமைத்திருந்தது.
இடையிடையே ஒரு சில நாவல், மஞ்சவுண்ணா, வேம்பு ஆகிய மரங்களையும் மண்திட்டிகளையும் தவிர பரந்த வயல் வெளி காய்ந்து வரண்டு போய்க்கிடந்தது. வயல்வெளிகளுக்கிடையே ஏராளமான மண் பாதைகள் டாங்கிகளை நகர்த்தி சண்டையிடுவதற்கான சாதகத்தன்மையை இராணுவத்தினருக்கு ஏற்படுத்தியிருந்தது.

 

திடீரென காதருகில் கீச் மூச் சென்ற குருவிகளின் சத்தம். மெதுவாக திரும்பினான் சடைத்துப் போயிருந்த மரக் கிளைகளின் இன்னொரு அந்தத்தில் கூடை போன்ற வடிவத்தில் ஒரு குருவிக்கூடு தென்பட்டது. சட்டென அவளது முகத்தில் மலர்ச்சியும் மனசுக்குள் இனம் புரியாத மகிழ்ச்சியும் பரவியது. ‘ஐயோ இந்த இடத்தில் சண்டை நடந்தால் இந்தக் குருவிகள் கூட எவ்வளவு பாவம்‘ என நினைத்துக் கொண்டாள். சாம்பலும் கறுப்பும் கலந்த நிறத்தில் அழகான இரண்டு நீட்டுவால் குருவிகள். கூட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. அவைகளின் அழகான கூட்டுக்குள் அடைமுட்டைகளும் இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள்.
துாரத்தே இராணுவ முகாமின் மைதானத்தில் பயிற்சி நடவடிக்கையில் படையினரின் ஒரு சிறிய அணி ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. இடைக்கிடை இப்படி அவர்கள் பயிற்சி செய்வது வழக்கம்தான். இருப்பினும் அந்தச் செய்தியையும் உடனடியாகவே உரிய இடத்திற்கு அறிவித்து விட்டு நிமிர்ந்தாள்.
இப்போது அந்த குருவிகள் இரண்டும் இன்னொரு கொப்பில் ஊஞ்சலாடியபடியே மிக நெருக்கமாக அமர்ந்து தமது அலகுகளை உரசிக் கொண்டிருந்தன. ‘ஐயே.. லுாசுக் குருவியள்’ சொல்ல முடியாத நாணத்தின் கீற்றுக்கள் ஒரு கணம் அவளது நெஞ்சுக்குள் இழைந்தது. மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். எதேச்சையாக சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தன்னை உற்றுப் பார்ப்பது போலத் தோன்றும் இனியவனின் கண்கள் சம்பந்தமேயில்லாமல் நினைவுக்குள் எட்டிப் பார்த்தது. ‘சே..‘ என்றவாறு மனதைச் சிலிர்த்துக் கொண்டவள் மீண்டும் தொலை நோக்கி ஊடாக இராணுவ முகாமை ஆராயத் தொடங்கினாள்.

 

திடீரென போராளிகளின் முன்னணி காவலரண் பக்கமாக இராணுவத்தினரின் குறுந்துார எறிகணைகள் தொடர்ச்சியாக விழுந்து வெடித்தன. ஆறெழு எறிகணைகள் வெடித்ததன்பின்பு நிலமை அமைதியானது. முன்னணிக் காவலரண்களை திருத்தியமைக்கும் வேலைகளும் தொடர் பதுங்கு குழிகளை அமைக்கும் வேலைகளும் நடை பெற்றுக் கொண்டிருந்ததால் இராணுவத்தினருக்கு போராளிகளின் நடமாட்டங்கள் ஏதாவது தென்பட்டிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
இராணுவத்தினரின் பலமான வலிந்த தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் எமது நிலைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தபடியால் இராணுவத்தினர் மீதான எமது தரப்பு எறிகணைத் தாக்குதல்களையும் வேறு கனரகத் தாக்குதல்களையும் ஓரிரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, பகுதி கட்டளைத்தளபதி அனைத்து அணித்தலைவர்களுக்கும் அறிவித்திருந்தார்.

 

தனது கடமை நேரம் முடித்து பொறுப்பை தோழி கோதையிடம் ஒப்படைத்து விட்டு மரத்திற்கு கீழே சற்று துாரத்தில் அமைக்கப்பட்டிருந்த தமது காவலரணுக்கு வந்த நேரத்திலிருந்து மனதிற்குள் ஒரு விதமான சலனம் தொற்றிக் கொண்டிருப்பதை மலரினியால் உணர முடிந்தது. காலையுணவாக வந்திருந்த பார்சலில் பெரிய பெரிய புட்டுக் கட்டிகளுடன் ஏதோ ஒரு இனம்புரியாத குழம்பு கொஞ்சமாக இருந்தது. தண்ணிப் போத்திலையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு வயிற்றுப் பசியை போக்கிக் கொண்டாள்.
மூன்று பேரை மட்டுமே கொண்ட அவர்களின் சிறிய அணியின் தலைவியான மைதிலி நிலத்தில் அமர்ந்தபடி ஒருகாலை நீட்டியவாறு இராணுவ முகாமின் வரைபடத்தில் ஏதோ எழுதிக் கொண்டும் குறித்துக் கொண்டுமிருந்தாள். மைதிலியக்கா ஒரு வேலைக்குள் மூழ்கி விட்டாலென்றால் குழப்ப முடியாது. தன்னை விட மூன்று வயதுகள் மட்டுமே அதிகமாயிருந்த மைதிலியை இவளுக்கு மிகவும் பிடிக்கும். அதிகமாகப் பேசாத மைதிலி கடமை தவிர்ந்த நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகத்தில் மூழ்கியிருப்பாள். அல்லது வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடப்பாள். மலரினிக்கும் புத்தகம் வாசிப்பதற்கு விருப்பமாகத்தான் இருக்கும் ஆனால் ஓரிரண்டு பக்கங்கள் போனதும் கண்ணைச் சுழற்றியபடி உறக்கம் மொய்த்துக் கொண்டுவிடும்.
“மலரினி இன்னும் கொஞ்ச நேரத்தில் குளிக்கப் போகவேணும். கோதையின்ர சென்றி முடியிறதுக்கிடையில் திரும்பி வரவேணும். மெயினுக்கு அறிவிச்சிருக்கிறன் அங்கயிருந்த ரெண்டு பேர் வருவினம். அவையள் வந்தவுடன வெளிக்கிடுவம் என்ன” என்றபடி வரைபடத்தை சுருட்டத் தொடங்கினாள் மைதிலி. காவல் நிலைகளைக்கடந்து ஒரு கிலோ மீற்றர் வரையான துாரம் குளிப்பதற்காக போய்வர வேண்டியிருந்தது.

 

“ஓமக்கா அதுக்கிடையில எனக்கொரு வேலையிருக்கு” என்றவளாக தனது துப்பாக்கியின் பாகங்களை பரபரவெனக் கழற்றி எண்ணெய் போட்டு துடைக்கத் தொடங்கினாள் மலரினி. எலும்புக்கூடு மாதிரித் தெரிந்த துப்பாக்கியின் சுடுகுழலில் ஒரு கண்ணை பொருத்திக் கொண்டு பார்த்தாள். அதன் சுரி குழல் வெள்ளிப்பாளம் போல தக தக வென்று மின்னியது. வேகமாக அதன் பாகங்களை மீண்டும் பொருத்தினாள். அது எப்போதுமே அவளது தோளிலும் மார்பிலும் தொங்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கி.
பள்ளிக்கூடம் போய்வரும் காலத்தில் இயக்க அண்ணன்மாரும், அக்காமாரும் காவிக் கொண்டு திரியும் விதவிதமான துப்பாக்கிகளைப் பார்க்கும் போது இவளுக்கும் அவற்றைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல ஆசையாசையாக இருக்கும். ஆனால் பயமாகவும் இருக்கும். றெயினிங் எடுத்தால் பயமெல்லாம் போய் விடுமென்பதாக கேள்விப்பட்டிருந்தாள்.
இப்போதென்றால் இயக்கத்தினுடைய பயன்பாட்டில் இருக்கும் எல்லா துப்பாக்கிகளைப் பற்றியும் மலரினிக்கு தெரிந்திருந்தது. பயிற்சி முகாமில் குறிபார்த்துச்சுடுதல் போட்டியில பரிசுகளும் வாங்கியிருக்கிறாள். ஆனால் இப்போது ‘எப்பவடா கொஞ்ச நேரம் இந்த துவக்கை கழற்றி வைச்சிட்டு இருப்பன்’ என்று நினைப்பாள். ஆனால் அது இல்லாத போது தன்னுடைய உடலில் ஒரு பாகம் இல்லாதது போல உணருவாள். ‘எங்கட உயிரிலும் மேலானது ஆயுதம்’ என்று மூத்த போராளிகள் அடிக்கடி சொல்லுவார்கள். ஆயுதத்துடன் நடந்து போகும்போது தன்னையறியாத ஒரு கம்பீரம் மனசுக்குள் பரவியிருப்பதை அவள் உணர்ந்திருக்கிறாள்.

 

மலரினியும் மைதிலியும் சேர்ந்து குளிப்பதற்காக போன போது மரத்தில் கொள்ளையாக காய்த்து தொங்கிக் கொண்டிருந்த முருங்கைக் காய்களை கண்டதும் நடை சற்று பின் தங்கியது. அந்தப்பகுதியில் மக்கள் தமது வீடு வாசல்களை விட்டு வெளியேறியிருந்தனர். மரங்கள் காய்த்தும் பூத்தும் வெறுமனே கொட்டிக் கொண்டிருந்தன. மரங்களுக்கிடையே தாவித்திரியும் குரங்குகளைக்கூட இப்போது காணமுடிவதில்லை. காய்ந்து விழுந்த தேங்காய்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன.
மலரினியின் வேண்டுதல் மைதிலியின் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
“இண்டைக்கு கறி வைச்செல்லாம் மினக்கெலேடாது மலரினி நிலமை டென்சனாயிருக்கிறது தெரியும்தானே”
“ம்… சரியக்கா பிறகு ஓரு நாளைக்கு கட்டாயம் வைப்பம் என்னக்கா”.
கைவிடப்பட்டிருந்த வீடுவாசல்களையும் சிதறிக்கிடக்கும் பொருட்களையும் பார்க்கும் போதெல்லாம் ‘பாவம் சனங்கள்’ என மனசுக்குள் வேதனை பரவிக் கொள்ளும். ‘நானும் செத்துப் போனனெண்டால் என்ர அம்மாவை எப்பிடிக் கண்டு பிடிச்சு பொடி குடுக்கப்போயினம்’ பெருமூச்சொன்று முட்டிக் கொண்டு வெளியேறிச் செல்லும். ‘நான் மட்டுமே என்னைப் போல எத்தினை பேர்’. கோதையை நினைத்துக் கொள்வாள் ‘அவளின்ர இடம் மட்டக்களப்பு, ஊருக்கே பொடி போகாது .பாவம் கோதையின்ர அம்மாக்கள்’ இப்படி அவள் நிறைய விடயங்களில் நாட்டுக்காகத்தானே என்ற நினைவுடன் சமாதானமாகிக் கொள்வாள்.

 

மக்கள் கைவிட்டுச் சென்ற உடமைகளில் உணவுப் பொருட்களை மாத்திரம் போராளிகளின் தேவைக்கு எடுத்துக் கொள்வதற்கான அனுமதியிருந்த காரணத்தால் சில தேங்காய்களையும், உப்பு முதலாக கறிவைக்கத் தேவையான சில மளிகைப் பொருட்களும் ஒரு அலுமினியச் சட்டியும் மலரினியால் சேகரிக்கப்பட்டு அவர்களது காவலரணிலிருந்தது.
திடீரென குனிந்த மைதிலி ஒரு புத்தகத்தைப் பொறுக்கியெடுத்தாள். அவசரத்தில் பொருட்களை கட்டிக்கொண்டு ஓடும் போது யாரும் தவற விட்டதாயிருக்கலாம். சட்டென எட்டி அதன் பெயரைப் பார்த்தால் மலரினி. ‘அக்கினிச் சிறகுகள்’ கீழே ‘அப்துல்கலாம்’ என்றிருந்தது.
‘இவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?’ என்றாள் மைதிலி
‘என்னக்கா சொல்லியிருக்கிறார்’ என அப்பாவியாகக் கேட்டாள் மலரினி.
‘கனவு காணச் சொல்லியிருக்கிறார். வாழ்க்கையில் எதை அடைய வேணுமென்று நினைக்கிறோமோ அதைப் பற்றி’
“ஓகோ… அதுதான் மைதிலியக்கா அடிக்கடி மோட்டைப் பாத்துக் கொண்டு காணுறவ போல”
இருவரும் உரத்துச் சிரித்துக் கொண்டனர்.

 

“எனக்கும் ஒரு கனவு அடிக்கடி வருமக்கா. அமெரிக்கா ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை மரியன் ஜோன் மாதிரி நானும் வெளி நாட்டு ஆக்களுக்கு முன்னால பெரிய மைதானத்தில ஓடி முதலாவதா வாற மாதிரி எனக்கு சின்ன வயதில இருந்தே அப்பிடி ஒரு ஆசை”
“பிறகெப்பிடி இயக்கத்திற்கு வந்தனி”
thamil“எங்கடை பள்ளிக்கூடத்தில இயக்கத்தின்ர பரப்புரைக் கூட்டம் அடிக்கடி நடக்கும். கன பிள்ளைகளுக்கு போக விருப்பம், ஆனா றெயினிங்கை நினைச்சா பயம் எனக்கு றெயினிங் எடுக்க விருப்பமாயிருந்திச்சு கூட்டத்திலயே எழும்பி வந்திட்டன்”
“எங்கடை றெயினிங் காம்பில கடைசி வட்டம் ஓடும் போது மாஸ்ரர் அக்கா ‘லாஸ்ட் அன்ட் பாஸ்ட்’ எண்டு சொல்லக்கை நான்தான் நெடுகலும் முதலாவதா ஓடி முடிப்பன், சிறப்புத்தளபதி எனக்கு விசேட பரிசு தந்தவா” அந்த நினைவுகள் தனக்குள் ஆனந்தமாகக் கிளருவதை சுகமாக அனுபவித்தாள் மலரினி. பாராட்டாக முதுகில் படிந்த மைதிலியின் கரங்களை பற்றியவாறு கண்களால் நன்றி கூறிக் கொண்டாள். அந்த நிமிடங்கள் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாகப்பட்டது.
குளிக்குமிடத்தில் வேறு பெண் போராளிகள் நாலைந்து பெரும் அவசர அவசரமாக தமது அலுவல்களில் மூழ்கியிருந்தனர்.
“ஷெல் அடிப்பான் கெதியா குளிச்சு முடியுங்கோ” என அவர்களில் ஒருத்தி அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள்.
“இரவு எங்கட பொசிசனுக்கு முன்னால ஆமின்ர றெக்கி வந்து போயிருக்குது”
பிரதான வீதிக்கு பக்கத்திலிருக்கும் காவலரண் போராளி கூறிக் கொண்டாள்.
“விடியப்புறம் நாலு மணியிருக்கும் வடிவா உத்துப் பாத்துக் கொண்டிருந்தன், தோட்டத்தில வாழை மரங்கள் அசைஞ்சு திரியிற மாதிரிக்கிடந்தது. நல்லா விடிஞ்சப்பிறகு கிளியறிங் போகேக்கதான் பாத்தனாங்கள் அந்த வாழைத் தோட்டத்துக்கிள்ள ஆமிக்காரரின்ர சாப்பாட்டு பக்கற்றுகள் கிடந்தது” கண்களை அகல விரித்துக் கொண்டு அவள் தனது சென்றிக் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்.
“சரி சரி நிப்பாட்டடி உன்ர ஆந்தை முழியை பாத்தாலே ஆமிக்காரனும் பயந்து ஓடிருவான்” எனக் கலாய்த்தாள் மலரினி. அந்தத் தோழி கோபத்துடன் இன்னும் விழிகளை அகலமாக விரித்தபடி இவளது முகத்தில் தண்ணீரை விசிறியடித்தாள். அனைவரும் கொல்லெனச் சிரித்துக் கொண்டனர்.

 

இப்போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது. மைதிலி கடமைக்குச் செல்லத்தயாராகினாள். அவளது முகம் வாடியிருப்பது போலப்பட்டது. “என்ன மைதிலியக்கா ஒரு மாதிரியிருக்கிறிங்கள்”
“அடி வயித்துக்க நோகிற மாதிரிக்கிடக்கு”
மலரினிக்கு புரிந்தது “நான் போகட்டே நீங்கள் இண்டைக்கு றெஸ்ட் எடுங்கோ”
“இல்லையில்லை நானே போறன் நீதானே காலமையும் சென்றில நிண்டனி இண்டைக்கு சண்டை வந்தாலும் வருமெண்டு அலேட் பண்ணியிருக்குது அவதானமா இருங்கோ” பதிலை எதிர்பார்க்காது துப்பாக்கியின் ரவைக் கூட்டுத்தாங்கியை மார்புடன் சேர்த்து இறுக்கமாக் கட்டிக்கொண்டு வெளியேறிச் சென்றாள் மைதிலி.

 

மலரினி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று முன் முழுகிய ஈரக்கூந்தலை இறுக்கமாகப் பின்னி வளைத்துக்கட்டியிருந்தாள். சுருளான கேசயிழைகள் காதோரம் புரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. அமைதியான மைதிலியின் அழகு இன்று அதிகமாக ஜோலிப்பது போலிருந்தது. கோதையும் மலரினியும் தமது காவலரணை செப்பனிடுவதில் மூழ்கியிருந்தனர். வழமைக்கு மாறான இராணுவ முகாமின் நீண்ட அமைதி தம்மைச் சுற்றிலும் அமானுஷ்யமான பயங்கரம் சுற்றி வளைத்திருப்பதைப் போன்ற உணர்வை மலரினிக்கு ஏற்படுத்தியது.
“அக்காமார்…. தங்கச்சிமார்…” குரல் வந்த திசையில் ஆண் போராளிகள் சிலர் நின்றிருந்தனர். “நாங்கள் இந்தப் பாலத்திற்கு சக்கை தாக்கப் போறம் உங்கட சென்ரிக்கு சொல்லி விடுங்கோ என்ன” என்றவாறு வீதிக்கரையாக வேலியை அண்டி நகர்ந்து கொண்டிருந்தனர்.
“அருமந்த பாலம் என்ன செய்யிறது ஆமின்ர டாங்கி வராமல் நிப்பாட்ட வேணுமே” அவர்கள் கதைத்துக் கொண்டு செல்வது கேட்டது.
அவர்களில் தீர்க்கமான ஒரு சோடிக் கண்கள் மலரினியின் விழிகளை கவ்விச் செல்வதை உணர முடிந்தது. இனம்புரியாத படபடப்புடன் தலையைக் கவிழ்ந்து கொண்டு வேலைக்குள் மூழ்கினாள். மீண்டும் அந்தக் கண்களைக் காண வேண்டும் போலவொரு தவிப்பு உள்ளுக்குள் புரண்டது. இதுவரை ஒரு வார்த்தையாவது பேசியறியாத இனியவனின் கதிர்வீச்சுப் பார்வை இவளுக்குள் இனம்புரியாத கலவரத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. காலையில் பார்த்த குருவிக்கூடு நினைவுக்கு வந்தது. என்றுமில்லாதவாறு மகிழ்ச்சியும் துயரமுமான உணர்வுக்கலவை மனதுக்குள் பிசைந்தது. நாயொன்று அருவருக்கும்படியாக ஊளையிட்டு அடங்கியது.
“ச்…சீக் இந்த சொறி நாயள் பகலிலயும் தொடங்கீட்டுதுகள்”
கோதை வெறுப்போடு திட்டிக்கொண்டாள்.

 

அந்தக் கணம் படீரென்ற சத்தத்துடன் இவர்களது தலைக்கு மேலாக எறிகணை வெடித்தது. ‘சட பட வென மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இவர்களது காவல் பரண் அமைந்திருந்த வேப்ப மரம் நிலத்தில் சரிந்து புகைந்தது. அதன் குழைகள் சகிக்க முடியாத நாற்றத்துடன் கருகியெரிந்தன. “மைதிலியக்கா…..” கீரீச்சட்டபடி இருவரும் வெளியே பாய்ந்தனா். முறிந்த மரக் கொப்பில் தலை சிதறிய இரத்தக்கூளமாக தொங்கிக் கிடந்தாள் மைதிலி.
பரவலாக கேட்ட அதிர்வுகள் அந்தப்பகுதியில் சண்டை தொடங்கி விட்டதை உணர்த்தியது. மலரினியின் தாடைகள் இறுகியது. மைதிலியின் வோக்கி டோக்கியை எடுத்து கட்டளை பணியகத்துடன் துரிதமாகத் தொடர்பை ஏற்படுத்தினாள். இருவரது துப்பாக்கிகளும் சுடத்தயாரான நிலையில் ரவையேற்றிக் கொண்டன. விசைவில்லின் மீது விரல்களை வைத்தபடி இருவரும் தமது நிலையை சுற்றி நிலமையை அவதானித்தனர். கோதையை காப்பு நிலையில் இருக்கும்படிக் கூறிய மலரினி மைதிலியின் அருகே ஓடிச் சென்றாள். முகம் இருந்ததற்கான அடையாளமே இல்லாபடி சிதைந்திருந்தாள். மலரினி அந்த உடலை அப்படியே இழுத்து தன் தோளிலே போட்டுக் கொண்டாள். மைதிலியின் குருதிச்சூடு இன்னமும் தணியாமல் இருப்பதை உணர முடிந்தது.
கோதையையும் கூட்டிக்கொண்டு முன்னணிக் காவலரனை நோக்கி பாய்ந்தோடத் தொடங்கினாள் மலரினி. மைதிலியின் உடலை காவலரணுக்குள் சாய்த்துக்கிடத்தியவள் துப்பாக்கியை தோளோடு இழுத்து அணைத்தவளாக தாக்குதலுக்கான தயார் நிலைக்கு சென்றாள்.

 

எறிகணைகள் மழையாகப் பொழிந்தன. டாங்கிகளின் இரைச்சல் காதைக் கிழித்தன. போராளிகளும் எதிர்தாக்குதலை பலப்படுத்தியிருந்ததால் வயல் வெளியில் சன்னங்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. மரங்களும் வரம்புகளும்கூட காயப்பட்டுச் சிதறின.
“ஹலோ….மலரினி…. மலரினி… என்னண்டால் உங்கட பக்கத்தால தான் டாங்கி வெளிக்கிடுது. பாலத்தை உடைக்கப் போறம், சில வேளை வயல் வேலியோட இருக்கிற மண் ஒழுங்கைக்குள்ள இறங்குவார். அதை மறிக்கிறதுக்கு ஆர்.பி.ஜி யோட இனியவன் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு அந்த பாதை தெரியாது. நீதான் ஆர்.பி.ஜி யைக் கூட்டிக் கொண்டு அந்த இடத்திற்கு வேகமா ஓடிப்போகவேணும் விளங்குதா….கோதையை நான் பக்கத்து பொசிசனோட இணைக்கிறன், நீ கெதியா ஓடிப் போக வேணும்”
அந்தக்கட்டளை அவளுக்கு தெளிவாக விளங்கியது. நிலைமையை கோதைக்கு தெரியப்படுத்திவிட்டு வேகமாக எழுந்தாள். உடல் முழுவதும் இரத்தமும் புழுதியும் அப்பிக் கிடந்தது. முகத்திலும் குருதித் தீற்றல்கள். தோளில் தயாராக ஆர்.பி.ஜி யை சுமந்தவாறு இனியவன் ஓடிவந்து கொண்டிருந்தான். மலரினி அவனுக்கு முன்பாக அந்த மண் பாதையை நோக்கி பாய்ந்தோடத் தொடங்கினாள். டாங்கியின் இரைச்சல் மிக அருகில் கேட்டது.
அந்தப் பிரதேசத்தையே அதிரப்பண்ணியவாறு பிரதான வீதியிலிருந்த அந்தப் பெரிய பாலம் வெடித்துச் சிதறியது. மிகுந்த துாரம்வரை அதன் துண்டுகள் எழும்பிப் பறந்தன.டாங்கியின் நகர்வு தடுக்கப்பட்டதால், அதில் பொருத்தப்பட்டிருந்த வீரியம் கூடிய பீரங்கியின் வாய் குமுறத் தொடங்கியது. தனக்குப் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த இனியவனின் கதறல் கேட்டுத் திரும்பினாள் மலரினி. மார்பை பொத்திப் பிடித்தவாறு அவன் நிலத்திலே துடித்துக் கொண்டிருந்தான். துாரத்தில் வீசப்பட்டுக்கிடந்த ஆர்.பி.ஜி இன் எறிகணை வெறுமனே வெடித்துச் சிதறியது.

 

தன்னிடமிருந்த குருதித் தடுப்பு பஞ்சணையை அவனது நெஞ்சிலே வைத்து அழுத்தினாள். அவளது கை புதைந்து போகுமளவுக்கு அந்த இடம் Zonnebeke 1918 by Sir William Orpen 1878-1931கிடங்கு போலாகியிருந்தது. அவனது உடல் உதறி உதறித் துடித்தது. மூச்சு தாறுமாறாக ஏறியிறங்கியது. வாயை ஆவெனத் திறந்து காற்றை உள்ளுக்கு இழுத்தான். டாங்கியின் தாக்குதல் உக்கிரமாகத் தொடர்ந்தது. அந்த இடத்தை விட்டு வேகமாக நகரும்படி கைகளால் மலரினிக்கு சைகை செய்தான். எவ்வளவு முயன்றும் அவனால் ஒரு வார்த்தையேனும் பேச முடியாமலிருந்தது. அவனை எப்படியாவது அங்கிருந்து இழுத்துக் கொண்டு செல்லுவதற்காக மலரினி துடித்தாள். இனியவனின் கண்கள் ஏக்கத்துடன் மலரினியின் முகத்தை ஊடுருவியது. அடுத்த கணமே அந்தக் கண்மணிகள் அசைவற்றுப் போயின. அவனின் இதயத் துடிப்பு அந்தப் புழுதி வயலுக்குள்ளேயே அடங்கிப் போனது.
சிலையாகச் சமைந்து போன மலரினியை வோக்கி அழைத்தது. “மலரினி நீ அந்த இடத்தை விட்டு வேகமா வெளியேறு… கெதியா…” அவளுக்கு அசையக் கூட முடியாதிருந்தது. அப்போதுதான் தனது கால்களில் குருதி கொப்பளிப்பதை உணர்ந்தாள். எழும்பி ஓடிச்செல்ல முடியாதபடி வேதனையோடு சரிந்தவள் நிலம் அதிருவதை கண்டு பதைத்தாள். டாங்கியின் இரும்புச் சக்கரங்கள் அந்தப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தன.

 

துப்பாக்கியின் பட்டியை வாயில் கௌவிப் பற்றியவாறு தனது சக்தி அனைத்தையும் திரட்டியவளாக வயல் வெளியில் ஊர்ந்து ஊர்ந்து நகரத் தொடங்கினாள் மலரினி. பீரங்கிக்குண்டுகள் வயலை இடைவெளியில்லாமல் உழுவது போல விழுந்து கொண்டிருந்தன. எத்தனை நேரமாக அப்படி நகர்ந்தாளோ தெரியாது வரம்பு ஒன்றினை கடந்து புரண்டவள் மயங்கிச் சரிந்தாள்.
மருத்துவ முகாமின் வேதனை ஒலங்களின் மத்தியில் விழிகளைத்திறந்த போதுதான், இன்னும் தனது உயிர் உடம்பில் ஒட்டிக் கொண்டிருப்பதை மலரினி உணர்ந்தாள். உடன் பிறந்த சகோதரியாகவே நேசித்த மைதிலியின் காதோரத்தில் சுருண்டு அலைந்த கேச இழைகளும், அக்கினிச்சிறகுகள் புத்தகமும் நெஞ்சுக்குள் அப்படியே நின்றன.
தனது கண்களோடு கலந்து போன இனியவனின் சுவாசத்தை இனி இந்தக் காற்று வெளியில் எப்படித் தேடப் போகிறாள் அவளின் மனது தள்ளாடியது. முதிராத அந்த நேசத்தின் மொட்டு மலரினியின் இதயத்திற்குள் இதழ் விரித்துக் கிடந்தது.
“இண்டைக்கு பகல் பரந்தன் பகுதியில நடந்த சண்டையில இராணுவம் ஐநுாறு மீற்றர் முன்னுக்கு வந்திருக்காம். எங்கட தரப்பில இருபது பேருக்கு மேல உயிரிழந்திருக்கினம். கன பேருக்கு காயம்.”

 

யாரோ தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மலரினி எழும்ப முயற்சித்தாள். ஒரு கால் இரும்பாகக் கனத்தது. ஓ….மற்றைய கால் அது தொடைக்கு மேலே வெள்ளைத் துணிப்பந்தமாகக் கிடந்தது. நிலை குலைந்தவளாக பிடரியடிபடப் படுக்கையில் விழுந்தாள். எல்லை கடந்த அதிர்வுகளை உணரந்து கொள்ள முடியாத புலன்களைப் போல அவளது உணர்வுகள் இறுகிக் கொண்டது. மேகங்களுக்கு போட்டியாக காற்றிலே பறந்த வேகக் குதிரையின் கால்களில் ஒன்று காணாமல் போயிருந்தது. இப்போது மலரினிக்கு எந்த வலிகளும் இல்லை. கனவுகளும் இல்லை. நாசியில் சுவாசம் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது.

http://eathuvarai.net/?p=4796

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 எமது போராளிகளின் கதைகள் என்று வரும் பொழுது நிஜத்தையும் , கற்பனையையும் பிரித்தறிய முடிவதில்லை...!

பகிர்வுக்கு நன்றி சாத்திரி...!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி தனது அனுபவங்களைத்தான் எழுதுகின்றார் என்று கருதுகின்றேன். கற்பனையையும் மிஞ்சிய உண்மையான சம்பவங்களால் நிறைந்ததுதானே தமிழர்களின் விடுதலைப் போராட்டம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போரும் போரின் நிமித்தமும் : அனுபவங்களைச் சொல்லுதல் / கதைகதையாம் காரணமாம்.3. / அ.ராமசாமி

 

images (6)

 

எதுவரை இணைய இதழில் (http://eathuvarai.net/?p=4796) வந்துள்ள வைகறைக் கனவு கதையை எழுதிய தமிழினி ஜெயக்குமாரன் என்ற பெயரை இணையத்தில் தான் பார்த்திருக்கிறேன். தமிழின் அச்சிதழ்களிலோ, தொகுப்புகளிலோ அவர் எழுதிய கதைகள் எதையும் வாசித்ததில்லை. கதையை வாசித்து முடித்தபின் கதை எனக்குள் எழுப்பிய வினாக்கள் பலவிதமானவை.

20 ஆண்டுகளுக்கு முன்னால் -1990 களின் மத்தியில் தமிழ்ச் சிற்றிதழ்களில் எழுப்பப்பட்ட விவாதங்கள் முதலில் நினைவுக்கு வந்தன. தலித் இயக்கங்கள் அரசியல் தளத்தில் வீச்சாக எழுந்த தொடக்கநிலையில் அந்த விவாதம் எழவில்லை. ஆனால் நிலைபெற்றுவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டபோது “தலித் எழுத்தைத் தலித்துகள் தான் எழுதவேண்டும்” என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தலித்தியத்தின் தொடர்ச்சியாகப் பெண்கள் தங்கள் அனுபவங்களை/ சிக்கல்களை/ மன உணர்வுகளைத் தன்மைக்கூற்றில் சொல்லும்விதமாகக் கவிதைகளாக ஆக்கியபோது இந்த விவாதம் இன்னும் உறுதியாக மாறியது. பெண்களின் எழுத்தை மதிப்பிடுவதற்கு ஆண்களுக்கு ஏது உரிமை என்ற குரல்கள் இப்போதும் கேட்கவே செய்கிறது. என்றாலும் ‘பாத்திரமாக ஆதல்/ பாத்திரங்களை உள்வாங்கி உருவாக்குதல்’ (Being a character/ Building a a character ) போன்ற ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறைகளையெல்லாம் வாசித்திருந்ததால் இந்த முன்வைப்பை முற்றிலும் சரியானது எனவும் ஏற்கவில்லை மனம்.
இன்னொருவரின் அனுபவத்தைத் தன்னுடைய அனுபவமாக உள்வாங்குதலும் வெளிப்படுத்துதலும் நடிப்புசார்ந்த பயிற்சிகளால் சாத்தியம் என நம்பும் அதே நேரத்தில், சூழலின் நெருக்கடியால் அது இயலாமல் போவதும் சாத்தியமே என்பதும் உண்மைதான். ஒத்திகைகளிலிருந்து விலகிக் கொண்ட நடிகர்களையும் வெளிப்பாட்டில் தோல்வியடைந்தபோது பின்வாங்கிய நடிகைகளையும் அரங்கியல் மற்றும் திரைக்கலை நூல்கள் விவரிக்கவே செய்துள்ளன.

தமிழ்நாட்டில் உருவான தலித் இலக்கியச்சூழல் தந்த நெருக்கடி அப்படியானது. தலித்தல்லாதவர்களின் ஆர்வமும் செயல்பாடுகளும், தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டில் பங்குபெறும் நோக்கம் கொண்டது என்பதான நேரடிக்குற்றச் சாட்டை முன்வைத்துக் குற்றவுணர்வை உண்டாக்கியது அந்த நெருக்கடி. தலித் எழுத்துகளை வாசிப்பதையும் அவை பற்றி எழுதுவதையும் சமூகக்கடமையென நினைத்துச் செயல்பட்ட பலரும் அதனால் தயக்கம் காட்டினர். தலித் கலைவிழாக்களிலும் அரசியல் கூட்டங்களிலும் நிகழ்த்துவதற்காகத் தலித்திய உள்ளடக்கத்தோடு நாடகங்களை இயக்கிய நானும்கூட ‘அந்த முன்வைப்பு’ சரியானது தான் என ஏற்று ஒதுங்கிக் கொண்டேன். இது கடந்தகாலம். இனி நிகழ்காலத்திற்கு …

அனுபவத்தை எழுதுவதுதான் சரியான எழுத்தாக இருக்கமுடியுமோ என்ற மனத்தின் கேள்வி திரும்பவும் இந்தக் கதையை வாசித்தவுடன் தோன்றியது கதையில் இடம்பெற்றுள்ள முக்கியப் பாத்திரங்கள் இரண்டு. மலரினி, மைதிலி. இருவரில் ஒருவரின் நினைவுகளாகக் கதை நிகழ்வுகள் விரிகின்றன. தொடக்கம் இப்படி:
‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள்.


ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிருந்தது.”


பள்ளிக்காலம் தொட்டே ஓடுவதில் விருப்பம் கொண்ட மலரினியின் நினைவுகள் தான் கதை. ஓடியகால்களின் – ஓடிக்கொண்டிருப்பதில் அதீத விருப்பங்கொண்ட மலரினியின் கால்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சொல்லி முடிப்பதுதான் கதை.

யாரோ தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மலரினி எழும்ப முயற்சித்தாள். ஒரு கால் இரும்பாகக் கனத்தது. ஓ….மற்றைய கால் அது தொடைக்கு மேலே வெள்ளைத் துணிப்பந்தமாகக் கிடந்தது. நிலை குலைந்தவளாக பிடரியடிபடப் படுக்கையில் விழுந்தாள். எல்லை கடந்த அதிர்வுகளை உணரந்து கொள்ள முடியாத புலன்களைப் போல அவளது உணர்வுகள் இறுகிக் கொண்டது. மேகங்களுக்கு போட்டியாக காற்றிலே பறந்த வேகக்குதிரையின் கால்களில் ஒன்று காணாமல் போயிருந்தது. இப்போது மலரினிக்கு எந்த வலிகளும் இல்லை. கனவுகளும் இல்லை. நாசியில் சுவாசம் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது.


விவரிப்போடு கதை முடிகிறது. ஒற்றைக் கால் இல்லை என்பதோடு, இப்போது கனவுகளும் இல்லை எனக் கதாசிரியர் கூற்று இருக்கிறது. ஆனால் அவளுக்கு முன்பு ஒரு கனவு இருந்தது. ‘கனவுகாணுங்கள்’ என்று சொன்ன அப்துல்கலாமின் புத்தகத்தைப் படித்துவிட்டு அவள் திரும்பத்திரும்பக் கனவு என நினைத்துக்கொண்ட முன் மாதிரிப் பெண் தான் அவள் கனவு. அந்தப் பெண் மரியான் ஜோன்.

“எனக்கும் ஒரு கனவு அடிக்கடி வருமக்கா. அமெரிக்கா ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை மரியன் ஜோன் மாதிரி நானும் வெளி நாட்டு ஆக்களுக்கு முன்னால பெரிய மைதானத்தில ஓடி முதலாவதா வாற மாதிரி எனக்கு சின்ன வயதில இருந்தே அப்பிடி ஒரு ஆசை”

இந்தக் கனவு மட்டுமே இப்போது அவளுக்குத் தொலைந்துபோகவில்லை. அத்தோடு சேர்ந்து அவள் வயதொத்த தோழியோடு ஆற்றில் மூழ்கிக் குளிப்பதும், முருங்கைக்காயும் புட்டும் செஞ்சு சாப்பிட வேண்டுமென நினைப்பதும், சிட்டுக்குருவிகளின் கிர்புரென ஒலிக்கும் மெல்லோசையைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருப்பதும் கூட நிறைவேறாமல் போய்விட்ட கனவுகளாகிவிட்டன. மலரினியின் இந்தக்கனவுகள் தொலையக்காரணம் யார்? அல்லது எது?


கேள்விக்கான விடையாக வருவதுதான் இயக்கவாழ்வும்,போரின் காலமும். ஈழத்திற்கான கடைசி யுத்தம் -முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எல்லாம் முடிந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் ஈழத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் கிடைக்கும் எழுத்துகள் விடுதலைப்புலிகள் மீதும், அவர்களின் தலைமை மீதும் கடுமையான விமரிசனங்களை வைப்பனவாக வந்துகொண்டிருக்கின்றன. யுத்தத்தையே நினைத்து, யுத்தத்தையே தின்று வாழ்ந்தவர்களாகவும், ‘எங்கட உயிரிலும் மேலானது ஆயுதம்’ என்று கதைத்துத்திரிந்தவர்களாகவும் புலிகள் மீது விமரிசனக் கணைகளை முன்வைக்கின்றன.

தமிழினியின் இந்தக் கதை அப்படியொரு நிலையை எடுக்கவில்லை.கடும் விமரிசனத்திற்கு மாறாகப் பேசும் இந்தக் கதை போருக்கு இயக்கம் மட்டுமே – புலிகளும் அதன் தலைமையும் மட்டுமே காரணம் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறது. மரியான் ஜோன்ஸ் ஆகும் கனவை விட்டுவிட்டு,
“பிறகெப்பிடி இயக்கத்திற்கு வந்தனி” எனக்கேட்கும்போது மலரினி சொல்லும் பதில் இயக்கத்தின் மீதான விமரிசனமோ, எரிச்சலோ அல்ல.


“எங்கடை பள்ளிக்கூடத்தில இயக்கத்தின்ர பரப்புரைக் கூட்டம் அடிக்கடி நடக்கும். கன பிள்ளைகளுக்கு போக விருப்பம், ஆனா றெயினிங்கை நினைச்சா பயம் எனக்கு றெயினிங் எடுக்க விருப்பமாயிருந்திச்சு கூட்டத்திலயே எழும்பி வந்திட்டன்”

“எங்கடை றெயினிங் காம்பில கடைசி வட்டம் ஓடும் போது மாஸ்ரர் அக்கா ‘லாஸ்ட் அன்ட் பாஸ்ட்’ எண்டு சொல்லக்கை நான்தான் நெடுகலும் முதலாவதா ஓடி முடிப்பன், சிறப்புத்தளபதி எனக்கு விசேட பரிசு தந்தவா” அந்த நினைவுகள் தனக்குள் ஆனந்தமாகக் கிளருவதை சுகமாக அனுபவித்தாள் மலரினி.


என எழுதுகிறார் தமிழினி. ஓடுவதில் இருந்த ஆர்வம்தான் அவளை இயக்கப் பரப்புரையின் பால் ஈர்த்தது. போர்ப் பயிற்சியில் ஈடுபடச் செய்கிறது. துப்பாக்கியை உடலின் உறுப்புகளில் ஒன்றாக நினைக்கச் செய்கிறது. இடையிடையே வீட்டின் நினைவுகளும் ஊருக்குத் திரும்புவது இனிச் சாத்தியமில்லை என்ற முடிவுகளும் வரும்போதெல்லாம், போரை யாரும் திணித்ததாக நினைத்ததில்லை. பெண் போராளியாக அவள் செயல்படும் விதத்தில் அவள் காட்டுகின்ற ஈடுபாட்டையும், தீரத்தையும் பாராட்டும்போது-தலைமையிடமிருந்து அதற்கான மரியாதை கிடைக்கும்போது அடையும் குதூகலத்தைத் தன்னியல்பாகவே சொல்கிறாள்.


கதையில் விவரிக்கும் போர்க்காட்சிகள் குறிப்பாகப் பெண் போராளிகளின் பங்கேற்பு, வேலைப்பிரிவினைகள், அவர்களுக்கு இயக்கம் அளித்திருந்த பணிகள், கிடைத்த பாராட்டுகள் என அனைத்தும் மிகுந்த நம்பகத்தன்மையோடு எழுதப்பட்டுள்ளன. இப்படியான நம்பகத்தன்மையான எழுத்தைப் போரில் ஈடுபடாமல் வெளியிலிருந்து எழுதிக்காட்டிட முடியாது என்று சொல்லும் அளவுக்குக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

மலரினியெனப் பெயரிடப்பட்டுள்ள பாத்திரம் தமிழினி தானோ எனச் சந்தேகம் கொள்ளத்தக்க அளவுக்கு நம்பகத்தன்மையோடு எழுதப்பட்டுள்ளது. இந்த நம்பகத்தன்மையோடு கதையின் தொனியில் ஒலிக்கும் மென்மையான சோகமும், சில நினைவோட்டங்களும் கதையை இன்னொரு தளத்திற்குள் நகர்த்துவதையும் கவனிக்க வேண்டியுள்ளது. பின்வரும் நினைவோட்டத்தை வாசித்தால் கதை நகரும் அந்தத்தளம் புரியலாம்.

கைவிடப்பட்டிருந்த வீடுவாசல்களையும் சிதறிக்கிடக்கும் பொருட்களையும் பார்க்கும் போதெல்லாம் ‘பாவம் சனங்கள்’ என மனசுக்குள் வேதனை பரவிக் கொள்ளும்.


‘நானும் செத்துப் போனனெண்டால் என்ர அம்மாவை எப்பிடிக் கண்டு பிடிச்சு பொடி குடுக்கப்போயினம்’ பெருமூச்சொன்று முட்டிக் கொண்டு வெளியேறிச் செல்லும். ‘நான் மட்டுமே என்னைப் போல எத்தினை பேர்’. கோதையை நினைத்துக் கொள்வாள் ‘அவளின்ர இடம் மட்டக்களப்பு, ஊருக்கே பொடி போகாது .பாவம் கோதையின்ர அம்மாக்கள்’ இப்படி அவள் நிறைய விடயங்களில் நாட்டுக்காகத்தானே என்ற நினைவுடன் சமாதானமாகிக் கொள்வாள்.

நிகழ்வுத் தளத்திற்கும் உரையாடல் தளத்திற்கும் மாறாகக் கதையின் நினைவோட்டத் தளம் போரிலிருந்து விலகிய நிலையாக விரிகிறது. அந்த விரிப்பில், போரின் அர்த்தமற்ற நீட்சியின் மீது போராளிகளுக்குச் சலுப்பும், தப்பித்தலற்ற குழியில், மீளமுடியாத சுழலுக்குள் மாட்டிக்கொண்டுவிட்டோம் என்ற புரிதலும் இருந்தது என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தக் கோடிகாட்டுதல் மூலம் தமிழினி ஏற்கத்தக்க விமரிசனம் ஒன்றை வைக்கிறார் என்பதாகப் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்களெல்லாம் வைக்கும் விமரிசனம் ஒரு முடிவெடுத்துப் போரையும் போர்க்காலத்தையும் அறிந்துகொள்ளாமலும் புரிந்துகொள்ளாமலும் ஏற்றுக் கொண்ட ஒன்று எனப் பேசுவதாக இருக்கிறது. ஆனால் தமிழினியின் இந்தக் கதை போரையும், போர்க்காலத்தையும் விரும்பியேற்றவை; தவிர்க்கமுடியாமல் உள்ளிழுத்த சுழற்சி எனப்பேசுகிறது. இந்தப் புரிதலோடு யோசிக்கும்போது இன்னொரு போரை – போரின் சுழற்சியைத் தவிர்ப்பதே தீர்வாகக் கூடும் என்று முடிவைச் சொல்ல நினைத்துச்சொல்லாமல் விட்டுள்ளது என்றும் புரிந்துகொள்ளலாம்.


நல்ல கதையின் அடையாளம் முடிவை வாசகனின் நினைவுக்குள் தள்ளிவிடுவதில் இருக்கிறது.

 

http://malaigal.com/?p=6995

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.